தசமஹாவித்யா 06 : திரிபுர பைரவி.

தசமஹாவித்யா 06 : திரிபுர பைரவி.

அன்னையின் அடுத்த தசமஹா வித்யா வடிவம் பைரவி, பைரவி என்றால் பைரவரின் பெண் அம்சம் அல்லது பைரவரின் இயக்கு சக்தி எனப் பொருள். பைரவர் என்பது சிவபெருமானின் தோற்றங்களில் ஒன்று. அதற்குப் பயத்தை நீக்குபவர் எனப் பொருள், அன்னை பைரவரின் அம்சமாகப் பயத்தை நீக்கித் தைரியத்தைத் தருவாள், ஆபத்தை அகற்றி நம்மை அச்சமின்றி வாழவைப்பாள் என்பதால் அவளைப் பைரவி, பைரவரின் இயக்கு சக்தி எனக் கொண்டாடுகின்றது புராணம்.

அந்தப் பைரவியே, வைரவி என்றும் அழைக்கப்படுகின்றாள். மூவுலகிலும் அவள் அச்சம் அகற்றுபவள் என்பதால் அவள் திரிபுர பைரவி என்றுமானாள்.

அவளைப் பற்றி புராணங்கள் இரு இடத்தில் சொல்கின்றது. முதலாவது அந்தகாசுரன் வதம், இரண்டாவது ரத்தபீஜன் வதம். இன்னும் பல இடங்களில் அவள் கொண்டாடப்பட்டாலும் இந்த இரு இடங்களும் முக்கியமானவை.

ஈசன் கண்ணை மூடும் போதெல்லாம் பிரபஞ்சம் இருளில் மூழ்கும். பொதுவாக‌, தேவர்கள் இமையா விழிகளைப் பெற்றிருப்பர். ஒருகணம் கூடக் கண்மூடாது இந்தப் பிரபஞ்சத்தை அவர்கள் இயக்குகின்றார்கள் என்பது அதன் பொருள்.

அப்படிப்பட்ட ஈசனின் கண்ணை மூடினால் என்னாகும் எனப் பார்க்க பார்வதி விளையாட்டாகக் கண்ணை மூட எங்கும் அந்தகார இருள் சூழ்ந்தது, காரிருள் உண்டாயிற்று

அவள் சிலநொடிகள் சிவபெருமான் கண்ணை மூடினாலும் பிரபஞ்சத்துக்கு அது பெரும் நீண்ட கால அளவு, சில ஆயிரம் வருடம் அந்தக் காலம் நீடிக்கும், அப்படிப் பெரும் இருள் சூழ்ந்து தொடர்ந்தது.

அந்த இருளைக் கண்டு பார்வதி அஞ்சினாள், அவள் வியர்வைத் துளி சிவன் மேல் பட்டு வீழ அதில் இருந்து ஒரு குழந்தை உருவானது, அந்தகாரம் எனும் இருளில் பிறந்த அக்குழந்தை பார்வை இல்லாக் குழந்தையாக இருந்தது, அதுதான் அந்தகன்.

அதே நேரம் இரண்யாட்சன் எனும் அசுரன் தனக்கொரு வாரிசு வேண்டி சிவனிடம் தவமிருந்துகொண்டிருந்தான்.

பார்வதியின் கையினைத் தட்டிவிட்ட சிவன் கண் திறக்க எல்லாம் வழமையானது. ஆனால், கண் தெரியாததும், பிரபஞ்சம் இருண்டவேளை வந்த குழந்தையுமான அந்தகனை இரண்யாட்சனிடமே கொடுத்தார் சிவன்.

சிவன் கொடுத்த குழந்தையின் ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் அதனைத் தன் குழந்தையாக வளர்த்தான் இரண்யாட்சன்.

அந்த இரண்யாட்சன் காலத்துக்குப் பின் குருடன் என்பதால் அந்தகனுக்குப் பதவி கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவன் பிரம்மனிடம் தவமிருந்தான்.

சாகா வரமும், பார்வையும், பெரும் அரசப் பதவியும் கேட்டுத் தவமிருந்தான். அப்படித் தவமிருக்கச் சொன்னவர் அசுரகுரு சுக்கிராச்சாரி, தவமிருக்கச் சொன்னவர் வினோதமான வரமும் கேட்கச் சொன்னார்.

அசுரதவம் என்பது உலகறிந்தது
அந்தக் கடும் தவத்துக்கு இறங்கிவந்த பிரம்மன் அவனுக்கு வரம் அருள முனைந்தான்.
சாகாவரம் கேட்டான் அந்தகாசுரன், எல்லாப் படைப்பும் ஒருநாள் அழியும் அது விதி, அதனால் வேறுவரம் கேள் என்றார் பிரம்மன்.

எனக்குப் பார்வை வேண்டும், அசுர குல அரசு வேண்டும், முக்கியமாக எனக்கான அழிவு நான் என் தாயினை மோகிக்கும் போதுதான் வரவேண்டும், அப்படி என் சிந்தை மாறும்போதுதான் நான் அழிக்கப்படவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்.
பிரம்மனும் அதற்கு இரங்கி வரம் அருளினான்.

இந்த வரம் தந்திரமானது, யாரும் தாய்மேல் ஆசைகொள்ளமாட்டார்கள், அதுவும் அசுரன் இரண்யாட்சனின் மனைவிதான் அந்தகனின் தாயாக அறியப்பட்டாள், அவளைத் தெய்வமாக வணங்கியவன் அந்தகன் எனும் வகையில் இந்தச் சூட்சுமமான தந்திர வரத்தைக் கேட்கச் சொன்னார் சுக்கிராச்சாரி.

வரம் கிடைத்த அந்தகன் பார்வையும் பலமும் அரசும் பெற்றான். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினான். மூவுலகை அச்சுறுத்தினான்.
தேவர் உலகைப் கைப்பற்றினான். அசுரக் குலத்தை உச்சிக்கு உயர்த்தினான்.

தேவர்களை அவன் அடிமைப்படுத்தியதில் பிரபஞ்ச இயக்கமே பாதிக்கப்பட்டது. அந்தகனை அடக்கவேண்டி விஷ்ணுவிடம் அடைக்கலமானார்கள் தேவர்களும், எல்லா உயிர்களும்.

விஷ்ணு சிவபெருமானிடம் அவர்களை அழைத்துச் சென்றார். அந்தகாசுரனை அழிக்க இருக்கும் ஒரே தருணம் அவன் தன் தாயினை மோகிக்கும் நேரம், அந்நேரம் மட்டுமே அவனைக் கொல்லமுடியும்.

இதனால் சிவனும் பார்வதியும் முனிவரும் அவர் மனைவியுமாக மாறினார்கள். முனிவரின் மனைவியான அன்னை மிக அற்புதமான அழகைக் கொண்டிருந்தாள், இவர்கள் ஒரு கானகத்தில் தங்கியிருந்தார்கள்.

அந்தகாசுரனோ கடலடியில் கோட்டை கட்டி கரையோரம் ஒரு சிறிய வாசல் மட்டும் வைத்து மிக மிக பெரிய காவலோடு வாழ்ந்திருந்தான். அவனை எதிர்க்க யாராலும் முடியாது என்றாலும் பெரும் காவல் செய்திருந்தான்.

அவன் எல்லா லோகப் பெண்களையும் பிடித்துத் தன் அடிமையாக வைத்திருந்தான். அப்போது இந்த முனிவர் மனைவியின் அழகு அவனிடம் சொல்லப்பட்டது, அப்பெண்ணின் பெரும் அழகைப் பற்றிச் சொல்ல சொல்ல அவளை அடைய திட்டமிட்டான், அவள் யாரெனத் தெரியாமலே அவளைப் பற்றி எண்ணம் கொண்டான்.

அந்நேரம் அவன் அழிவுத் தொடங்கிற்று. அப்பெண்ணைப் பிடித்துவர ஆட்களை அனுப்பினான், முனிவர் வேட சிவபெருமான் அவர்களை வீழ்த்தி விரட்டினார், தன் பலமிக்கப் படைகள் அனைத்தையும் அனுப்பினான், அப்போதும் வெற்றியில்லை.

கடைசியில் அப்பெண்ணை அடைய அவனே போருக்கு வந்தான். உக்கிரமான அப்போரில் சிவபெருமானிடம் இருந்து பிரிந்த 64 பைரவர்கள் கடும் யுத்தம் புரிந்து அவனை வளைத்துக் கொண்டார்கள், ஆனாலும் அட்டகாசம் செய்தான் அந்தகாசுரன்.

அதாவது, ரத்தபீஜன் போல் அவனுக்கும் ஒரு வரம் இருந்தது. அவன் உடலில் இருந்து ரத்தம் தரையினைத் தொட்டால் இன்னொரு அந்தகாசுரன் உருவாகி வருவான், சிவனின் சூலம் அவனை வதைக்கத் தொடங்க அவனில் இருந்து பல அந்தகாசுரன்கள் உருவாகிக் கொண்டே இருந்தார்கள், அதைத் தடுக்காமல் இனி அவனைக் கொல்லமுடியாது எனும் நிலை வந்தது.

அப்போதுதான் அன்னை பைரவி கோலத்தில் பைரவரின் சக்தியாக வந்தாள், வந்தவள் அவன் மீண்டும் மீண்டும் பெருகாதபடி அவன் குருதியினை விழுங்கத் தொடங்கினாள், இதனால் அவன் மிக மிக பலமிழந்தான். அவனால் பெருகமுடியா நிலையில் சிக்கிக் கொண்டான், அப்படி அவன் தப்பமுடியா நிலையில் சிக்கிய அவனைப் பைரவ மூர்த்தி சம்ஹாரம் செய்தார்.

ஆம், அவனை வீழ்த்திப் போட்டவள் அன்னை.

இங்குப் பைரவரின் சக்தியாய் நின்றவள் அன்னை, அவளே அவன் பெற்ற வரத்தின்படி அவனின் வீழ்ச்சியான காலத்தில் சரியாக அவனை அழித்துப் போட்டாள்.

அடுத்தப் புராணம் ரத்தபீஜன் வதம்.

நிம்ப சுதும்பனை வதம் செய்யும் நேரம் அன்னை காளி உருவில் வருபவள் பைரவி, அவளே ரத்தபீஜனின் ரத்தம் தரையில் விழாமல் பருகி அவனை மேலும் பெருகவிடாமல் தடுத்தாள். ரத்தபீஜன் பெற்ற வரத்தின்படி அவனின் ஒவ்வொரு துளி ரத்தமும் தரையில் பட்டால் இன்னொரு ரத்தபீஜனாகும். இந்தப் பெருக்கம் பெரிதாகிக் கொண்டே சென்றபோது அன்னை வந்து அவன் ரத்தம் தரையில் படாமல் காத்து அவனை அழித்துப்போட்டாள்.

அதுதான் இன்னொரு பைரவி கோலம்.

இவளால் மூவுலகிலும் அச்சம் அகன்றது, மூவுலகமும் அவளைப் போற்றியதால் அன்னை திரிபுர பைரவி எனக் கொண்டாடப்படுகின்றாள்.

லலிதா சஹஸ்ரநாமமே அவளைப் “பைரவி” எனப் போற்றுகின்றது.

அபிராமிபட்டர் தன் பாடலில் பாடுகின்றார்.

“பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே”

பைரவி, வைரவி என அன்னையின் இந்த நாமத்தைச் சொல்லி அவள் ரத்த பீஜனை வதம் செய்த காட்சியினைச் சொல்லிப் போற்றுகின்றார். அன்னையின் உக்கிரக்கோலம் அனைத்தும் சொல்லும் பட்டர், அதில் முக்கியான கோலமாக பைரவி கோலத்தைச் சொல்லிப் போற்றுகின்றார்.

இந்த அன்னை ஆபத்து நேரத்தில் கைக்கொடுப்பவள், அச்சமின்றி வாழவைப்பவள், இரு விஷயங்களில் அவளின் மகிமை பிரசித்தியானது.

முதலில் அவள் எல்லா பைரவர்க்கும் சக்தி வடிவம் என்பதால் அவளே கால பைரவி, காலத்தைக் கடந்து நின்று கட்டுப்படுத்துபவள், எல்லாவற்றிற்கும் ஒரு கால நேரம் வகுத்து நிற்பவள். அந்தக் காலநேரம் வரும்போது அவளே வந்து காலதத்துவப்படி தன் கடமையினைச் சரியாகச் செய்பவள்.

இரண்டாவது, எவ்வளவு பெரிய அச்சமென்றாலும் அவளால் நீங்கும், மூவுலகையும் அச்சமின்றி காவல் செய்பவள் அவளே.

பைரவரின் 64 அம்சங்களின் இயக்கு சக்தி அவளேதான், இந்த 64 பைரவர்களின் மிகப்பெரிய பணி காவல், காவல் இருக்குமிடம் அச்சம் என்பது இராது, அன்னை எல்லா அச்சங்களையும் போக்குபவள்.

இந்த அன்னை தசாவதாரத்தில் நரசிம்ம தத்துவம், ஒரு நொடியில் வந்து தன் பக்தனைக் காத்து யாருமே கொல்லமுடியாதபடி மிக நுணுக்கமாக வரம் வாங்கியிருந்த அவனை மிக நுணுக்கமாக அவன் வரத்துக்கு ஏற்ற பலவீனமான கால நேரத்தில் ஒழித்துப் போட்ட தத்துவம்.

அந்த நரசிம்ம மூர்த்தி அம்சமே அன்னை, மிகச் சரியான காலத்தில் சரியான வாய்ப்பில் தன் பக்தனை அவள் ஓடிவந்து காப்பாள், மூவுலகிலும் காப்பாள்.

ஜாதகத்தில் அன்னை லக்னம் எனும் கால நேரத்தின் அதிபதி, லக்னம் எனும் அந்தப் பிறந்த காலகட்டத்தின் ராசி ஒவ்வொருவருக்கும் முக்கியமானது, அந்தக் காலகட்டத்தில் கிழக்கில் வரும் ராசியே லக்னம்.

அந்த ராசி எதுவானாலும் அன்னையினை வழிபடுவோர்க்கு ஒரு ஆபத்தும் வாரா, ஜாதகத்தில் லக்னத்தில் சிக்கல் கொண்டவர்கள் அன்னையினை வழிபடும்போது எல்லாமே மாறும்.

காலத்தைக் கடந்து நிற்கும் அந்த மகாசக்தி, காலமும் நேரமும் கட்டுப்படுத்தமுடியா அப்பெரும் சக்தியிடம் மானுடன் தன்னை அர்ப்பணித்துச் சமர்பிப்பதே ஞானத்தின் தொடக்கம்.

மனிதன் குறைவுள்ளவன், பலவீனமானவன், அவன் காலத்துக்கும் நேரத்துக்கும் கட்டுப்பட்டவன், அவனால் இரவு பகலை மாற்றமுடியாது, அவனால் காலத்தை வெல்லமுடியாது, அவன் காலத்தால் இழுத்துச் செல்லப்படும் தூசு என்பதை உணர்ந்து காலத்தால் நெருங்க முடியாததும், காலத்தை தன் காலடியில் போட்டு எல்லாக் காலத்தையும் தாண்டி நிலைத்திருப்பதுமான பரம்பொருளிடம் சரணடைதலே முழு ஞானம்.

அந்த ஞானவடிவமானவள் அன்னை.

யோக சக்தியில் அன்னைக்கான இடம் மூலாதாரம். அதாவது, எல்லாச் சக்தியின் மூலமும் அவளே, அவளிடமிருந்தே எல்லாம் தோன்றுகின்றது, அவளே எல்லாச் சக்திக்கும் மூல ஆதாரம்.

அன்னை சம்பத் பரா, சைதன்யா, காமேஸ்வரி, அகோரா, ரக்த நேத்ரா, ஷ்டகூடா, நித்யா பைரவி, மிருத சஞ்சீவினி பைரவி, ம்ருத்யுஞ்ஜயா பைரவி, காரினி, கமலேஸ்வரி, சித்த பைரவி என ஏகப்பட்ட அம்சங்கள் உண்டு.

அன்னை திரிபுர பைரவியின் கிராமத்து சாயலே ரத்த காளி உள்ளிட்ட ரத்தம் சம்பந்தமான தெய்வங்கள். கிராமங்களில் ஆடுவெட்டி ரத்தம் குடிக்கும் காட்சியெல்லாம் இந்த அன்னை ரத்தபீஜனை, அந்தகாசுரனை அடக்கிய அந்தக் காட்சியின் வடிவம் அன்றி வேறல்ல‌.

கிராமங்களில் நடக்கும் அந்தக் காவல் தெய்வ வழிபாட்டுக்கான சடங்கில் இந்த அன்னையின் காட்சி நிச்சயம் உண்டு. ஆடு, கோழி என்பவனவற்றின் ரத்தம் ஏன் தெய்வம் பருகப்படும் என்பதில் மருத்துவமும் உண்டு, ரத்தம் அப்படியே கொடுக்கப்பட்டால் சில நோய்களை அது கொடுக்கும், அதனால் அதை உண்ணக்கூடாது.

தெய்வமே அதை ஏற்றுக்கொண்டு மக்களைக் காக்கும் மருத்துவமும் அங்கு உண்டு, கிராம தெய்வ வழிபாடுகளில் இப்படி மிக நுணுக்கமான காட்சிகள் உண்டு, அதனில் அன்னை பைரவியின் காட்சியும் உண்டு.

அன்னையினை வணங்கினால் பயமற்றுப்போகும் மனம் வரும் அதாவது, ஆசைகள் அற்றுப்போய் கடமையினை மட்டும் செய்யும் பெரும் ஞானநிலை பந்த பாசத்தை மீறிக் கிடைக்கும்.

அந்தகாசுரன் அன்னையிடமிருந்து தோன்றியவன், ஆனால் அவனை அந்தப் பாசபந்த மாயைகளை மீறி அழித்தவள் அன்னை என்பதிலே அவளின் பற்றற்ற மனம் புரியும்.

அன்னை ரத்தபீஜனை அழித்தாள் என்பது என்றோ நடந்த விஷயம் அல்ல, புராணத்தில் வந்த காட்சியும் அல்ல, நம் ஒவ்வொருவர் உடலும் ரத்தத்தால் இயங்குகின்றது, அந்த ரத்தவோட்டம் ஓடும் உடலில்தான் ஆசை மேகங்கள் எழுந்து ஆடுகின்றன‌.

ரத்தவோட்டத்துக்கும் ஆசை மயக்கத்துக்கும் நிரம்ப தொடர்பு உண்டு, இதனாலே பசியடக்கி விரதம் இருந்து பல உணவுகளைத் தவிர்த்து மூச்சை கட்டுப்படுத்தி மனதை அடக்கினார்கள் ஞானியர்.

உணவு அதிகமானால் ரத்தவோட்டத்தில் மாறுபாடு வந்து உணர்வுகள் அதிகரிக்கும், அந்த உணர்வுகள் இன்னும் ரத்தத்தைப் பல வகையில் மாற்ற காம, குரோத உணர்வுகள் தலைதூக்கும்.

உணர்ச்சிகளுக்கும் ரத்தவோட்டத்துக்கும் பெரும் தொடர்பு உண்டு, ரத்தம் வேகமாய் பாய பாயத்தான் எல்லா உணர்வுகளும் மானுடரில் தலைதூக்கி சிந்தனையினை அகற்றி உணர்வு எனும் மயக்கத்தில் தள்ளும்.

அன்னை ரத்த பீஜனைக் கட்டுப்படுத்தினாள், அழித்தாள் என்பது ரத்தத்தால் வரும் ஆசைகளைக் கட்டுப்படுத்துவாள் அழிப்பாள் என்பதைச் சொல்வது.

ஆசைகள் ரத்த பீஜனைப்போல் பெருகிக் கொண்டே செல்லும். ஒன்று இல்லையேல் இன்னொன்று வந்து ஆட்டிவைக்கும், அதனை முழுக்க களைத்து போட்டு முழுக்க அழித்துப் போட்டு காவல் தருபவள் அன்னை.

சிவனுக்கு அன்னை காட்டிய பத்து வடிவில் கீழே பாதாளத்தில் நின்றவள் பைரவி, அதன் பொருள் அவள் பாதாளத்தின் காவல் என்பது.

அண்ட தத்துவப்படி அவள் கீழான உலகம் எல்லாவற்றிற்கான கட்டுப்பாட்டை உடையவள், அப்படியே அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்றபடி அவள் ஒவ்வொருவரின் அடிமனதின் ஆசைகளை அடக்கும் வல்லமை கொண்டவள், அவளை வணங்க வணங்க ஆசைகள் அடங்கும்.

அடிமனதில் பெரும் வைராக்கியம் தருபவள் இந்தப் பைரவி, அந்த வைராக்கியத்தால் ஒருவனுக்கு அச்சமற்ற மனம் வாய்க்கும், சிந்தை தெளிவாகும், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். அன்னை அவனுக்கு ஞானமுக்தியும் தருவாள்.

கீழே ஆதாரமாக நின்று பூமியினைத் தாங்கும் அன்னை ஒவ்வொருவர் மனதிலும் ஆதாரமாய்த் தாங்கும் சக்தியாய் நின்று தன் அடியாரைத் தாங்குவாள் என்பதே அவளின் தாத்பரியம்.

அன்னையின் பெருமைகளை “சாரதா திலகம்”, “சித்தேஸ்வரி தந்த்ரம்”, “வாராஹி தந்திரம்” “மகா மந்திரம்” எனப் பல நூல்கள் அன்னையின் பெருமையினைச் சொல்கின்றன‌.

இந்த இரவு அன்னைக்கானது. அவளைப் பணிந்து வணங்க வணங்க நம்மைச் சூழும் ஆபத்து நீங்கும், அச்சமற்ற பயமற்ற நிம்மதியான வாழ்வு கிடைக்கும். அப்படியே மனதின் எல்லா ஆசைகளையும் அவளே உறிஞ்சி எடுத்து பற்றற்ற மனமும் அச்சமற்ற பெரும் ஞானமனமும் தருவாள்.

அவளை இந்த ஸ்லோகத்துடன் வணங்கி அருள் பெறுவோம்.

“ஆதாம்ரார் காயுதாபாம் கலித சசிகலா ரச்மி
தீப்தாம்த்ரி நேத்ராம் தேவீம் பூர்ணேந்து வக்த்ராம்
வித்ருத ஜபவடீ புஸ்தகா பீதியபீஷ்டாம்
பீனோத்துங்கஸ் தனார்த்தாம் வலிகலிதவிலக்னா மஸ்ருக்
பங்கராஜத் முண்டஸ்ரங்கமண்டி தாங்கீம் அருணதரது கூலானுலேபாம் நமாமி”

அதாவது, பத்தாயிரம் உதய சூரியன் ஒளியினள். பிறையின் கிரகணங்களால் பிரகாசிப்பவள். மூன்று கண்களை உடையவள். பூர்ணசந்திரன் போன்ற முகத்தினை உடையவள். கையில் ஜபமாலை, புஸ்தகம், அபயம், வரதம் தரித்தவள். பருத்த நிமிர்ந்த மார்பகத்தினள். மூன்று மடிப்புடைய இடையினள். ரத்தம் தோய்ந்த முண்டமாலையினை அணிந்தவள். மிகச் சிவந்த பட்டாடை அணிந்தவள். இவ்வாறான ஸ்ரீ பைரவீ தேவியை வணங்குகின்றேன் என்பது பொருள்

“ஓம் க்லீம் த்ரிபுராதேவீ வித்மஹே காமேச்வரீ தீமஹி தன்ன: க்லின்னே ப்ரசோதயாத்”

“ஓம் த்ரிபுராயை ச வித்மஹே பைரவ்யை ச தீமஹி
தன்னோ தேவி பிரசோதயாத்”

மூலமந்திரம்

“ஓம் பைரவ்யை நம்”

என அவளை வணங்கும் எல்லோருக்கும் அவள் எல்லா வரத்தையும் அச்சமற்ற மனத்தையும் வைராக்கியத்தையும் கொடுக்கட்டும், தேசமும், மக்களும், வாழ்வோரும், ஆள்வோரும் அச்சமற்ற பெரும் காவல் நிலையினை அவளால் அடையட்டும்.