தசமஹாவித்யா 07 : தூமாவதி.
தசமஹாவித்யா 07 : தூமாவதி.
அன்னையின் மிக நுணுக்கமான அம்சமும் வடிவவுமானது இந்தத் தூமாவதி அவதாரம். பத்துச் சக்திகளாகப் பிரிந்து செயலாற்றும் அன்னையின் இந்த வடிவம் மற்ற வகையில் இருந்து முழுக்க மாறுபட்டது, ஆனால் ஆழமான தாத்பரியம் கொண்டது.
தூம் என்றால் புகை, அன்னை புகைவடிவில் எழுந்தவள், மாயத்திரை வடிவில் உருவானவள் என்பதால் இவளுக்கு அந்த நாமம் நிலைத்துவிட்டது, அன்னையின் இந்தத் தோற்றம் பற்றி மூன்று இடங்களில் புராணம் சொல்கின்றது.
முதலாவது, அந்தத் தட்சயாகக் காட்சி. அங்குச் சிவனை அவமதித்து தட்சன் யாகம் செய்ய அந்த யாகத்திற்கு தன் கணவனை அழைக்கச் சொல்லி அவருக்கும் அவிர்பாகம் கொடுக்கச் சொல்லி கணவரான சிவனை மீறி அன்னை சென்று தட்சனிடம் அவமானப்பட்டாள். இப்படிப்பட்ட தட்சனின் மகளாக அவதரித்துவிட்டோமே இந்த உடலால்தானே அவனுக்கும் நமக்கும் பிணைப்பு உண்டு எனக் கொதித்தவள் அந்த உடலையே யாகத்தீயில் இட்டு எரிதாள்.
அப்பொழுது எழுந்த புகைவடிவமே அன்னை தூமாவதி என்பது முதல் செய்தி.
உலகம் மீள படைக்கப்பட்டபோது தேவர்களுக்கும் இதர பிரிவினருக்கும் ஏதும் தெரியவில்லை. எங்கும் ஒரு மாய புகை மேகம் போல் நிரம்பியிருந்தது, அந்தப் புகையில் இருந்து ஒரு காளி வந்தாள். பின், அந்தப் புகையினை அவளே உறிஞ்சினாள். அதன் பின் எல்லாமும் தெளிவாகத் தெரிந்தது, அப்படி தூம் எனும் புகையினை உறிஞ்சியவள் தூம்ரகாளி, அவளே தூமாவதி என்பது இரண்டாம் செய்தி.
பாற்கடலைக் கடைந்தபோது முதலில் ஒரு பெரும் புகை எழுந்தது. அந்தப் புகையே ஒரு அவதாரமாக வந்தது. ஆதியில் தோன்றிய மூத்த தேவி அவளேதான், அதனால் அவள் ஜெயேஷ்டா எனும் ஜேஷ்டா தேவியாக அறியப்பட்டாள், அந்த மூத்த தேவியே மூதேவி என்றும் ஆகிப்போனாள்.
இந்தக் காட்சிகளில் இருந்துதான் தூமாவதி எனும் அந்தப் புகைக்கோல நாயகியின் அறிமுகம் வருகின்றது. அவளுக்கென உருவமோ வடிவமோ இல்லை, அவள் உருவமற்றவள், அவள் ஒரு ஞானநிலையின் உருவகத்தினால் மட்டும் புரிந்து கொள்ளக் கூடியவள்.
அதாவது இந்த அன்னை யாரையும் நம்பி இல்லை யாருடைய இயக்கு சக்தியாகவோ பின்னணியில் இருப்பதாகவோ இல்லை, அவள் தனித்து இயங்குபவள், பெரும் சூட்சும வடிவானவள்.
அவளின் அந்தப் புகைக்கோல வடிவம் சொல்வது எளிதானது. அதாவது, இங்கு எல்லாமே ஒரு மறைத்தலுக்கு உட்பட்டிருக்கின்றது, பல விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன, புகையில் எதையுமே பார்க்கமுடியாது என்பது போல் இங்கு எல்லாம் மறைக்கப்பட்ட நிலையிலே மானிட இயக்கம் நடக்கின்றது.
அன்னையினை அண்டினால் அந்தத் திரை விலகும். அந்தப் புகை விலகும். அன்னையின் பக்தனுக்கு எல்லாமும் விளங்கி எல்லா உண்மையும் எல்லா விஷயமும் தெரியவரும், எல்லா நித்திய உண்மையும் விளங்கும் என்பது.
அன்னையின் மாபெரும் சூட்சுமம் அவள் எல்லாம் கடந்த பெரும் சூனிய நிலை எனும் நிலையில் இருப்பவள், அவள் எல்லாவற்றிலும் உண்டு, அதே நேரம் அவளுக்குள் எல்லாமும் உண்டு, அது இருந்தும் இல்லாத நிலை அல்லது இல்லாமல் இருக்கும் நிலை சுருக்கமாகச் சொல்லப்போனால் எளிதில் காணமுடியா ஞான.நிலை.
அதாவது, வேதாந்தப்படி சொல்வதாக இருந்தால் அதனை இல்லை எனச் சொல்லவும் முடியாது, இதுதான் எனத் தெளிவாகக் காட்டிவிடவும் முடியாது எனும் ஒரு தெளிவற்ற நிலை, இதுதான் புகை சூழ்ந்த நிலை, இந்தத் தெளிவு எப்போது வரும் என்றால் அன்னையினை அண்டி அவள் பாதம் பணிந்து நின்றால் அந்த ஞானத்தில் ஒரு தெளிவு வரும்.
இன்னும் ஆழமாகச் சொல்வதென்றால் இங்கு ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு எல்லாமும் மாறுவதற்கும். புதிதாக தோன்றுவதற்கும், உருமாற்றம் அடைந்து அடுத்தப் படிநிலைக்குச் செல்வதற்கும் தெளிவற்ற உருவற்ற ஒரு நிலையினைக் கடந்தாக வேண்டும்.
இந்த விதி பிரபஞ்சதில் உண்டு, மானுட உடலில் உண்டு, உலக விதியில் உண்டு, அப்படியே ஆன்மீகத்திலும் உண்டு.
ஒன்றுமில்லாத சூனியத்தில் இருந்து எல்லாமும் தோன்றின, அப்படி எல்லாமும் தோன்றி ஒவ்வொன்றாக உருமாறும் போது அங்குத் தெளிவற்ற புகையும் தூசும் உண்டு. இந்த மகாபிரபஞ்சம் அப்படி ஒரு புள்ளியில் இருந்து தோன்றியபோது ஆகாயமெங்கும் புகையும் தூசும் நிரம்பியிருந்தன என்கின்றது விஞ்ஞானம்.
அந்தப் புகையிலும் தூசிலும் இருந்துதான் இந்தக் கோள்கள் விண்மீன்கள் என எல்லாமும் உருவாயின. இனி இந்தப் பிரபஞ்சம் ஊழிக்காலத்தில் சிக்கும் போது அவை மறுபடி அந்தத் தூசு நிலைக்குச் சென்று இல்லாமல் போகும்.
இந்த உலகின் அடிப்படை ஆதாரம் மழை, அதுதான் உலக இயக்கம், அது மேகம் எனும் புகையினை உருவாக்கி அந்தப் புகைதான் நீராகி அந்தச் சுழற்சி நடக்கின்றது.
பொங்கிவரும் காமம் எனும் இனபுரியாத் தெளிவற்ற நிலையில்தான் ஆணும் பெண்ணும் கூடி மானிடப் பிறப்பு வருகின்றது. ஒரு தெளிவற்ற மயக்கத்திலே உருவாகி வரும் அந்தச் சதைபிண்டம் பின் வாழ்ந்து முடித்து சுடுகாட்டில் புகையாக மறைகின்றது.
இந்த உருமாற்றம்தான், ஒன்றுமே இல்லாததில் இருந்து புகைவடிவில் எல்லாம் உருவாகி மறுபடி புகையாகவே சென்றுவிடும் அந்தத் தத்துவமே இந்தத் தூமாவதி அன்னை, எல்லாம் அவளில் இருந்து உருவாகி அவளிலே முடியும் என்பதைச் சொல்வது.
இந்த அன்னைக்கு இந்துக்கள் ஒரு உருவமும் கொடுத்தார்கள், அதன்படி அவள் முதிர்ந்த விதவையாய் காகக்கொடி பறக்க கையில் முறத்தோடு வருவாள், அவளுடன் இன்னும் சில அடையாளமும் உண்டு.
ஏன் அவளுக்கு விதவைக் கோலம் கொடுத்தார்கள் என்றால், அதற்கொரு புராண காட்சியும் உண்டு. அன்னை ஒரு வாக்குவாதத்தில் சிவனையே விழுங்கிவிட்டாள், அவர் அக்னி வடிவம் என்பதால் அவள் சிவனை விழுங்கி புகையினை வெளிவிட்டாள், அவள் தன் கணவனையே விழுங்கியதால் விதவையானாள் என வெள்ளைச் சேலை கொடுத்தார்கள்.
உண்மையில் அதன் அர்த்தம் விதவை அல்ல, சிவன் அவளுள் அடக்கம் என்பதை சூசகமாகச் சொன்னார்கள், அந்தத் தூமாவதியிடம் வேண்டி அறியாமை எனும் புகையினை அகற்றினால் சிவனைக் காணலாம் என்பதைச் சொன்னார்கள்.
சில இடங்களில் அவளுக்கு நீல நிற ஜூவாலையினைக் குறிக்கும் ஆடையினைக் கொடுத்தார்கள். நீலம் என்பது ஆகாய தத்துவம், அவள் பெரும் நிலையில் இருக்கின்றாள், சிவனையே தன்னுள் கொண்டு வாழ்கின்றாள் என்பதைச் சொல்ல நீல நிற ஆடை கொடுத்தார்கள்.
( முன்பு இந்துஅரபில் விதவைகளுக்கு நீல நிற ஆடைகட்டும் வழக்கம் இருந்தது, அதன் பொருள் கணவனை தன்னுள். கொண்டு இப்பெண் வாழ்கின்றாள் என்பது, இந்த வழமை தூமாவதி தேவி வழிபாட்டில் இருந்தே வந்தது)
அவளுக்குக் காகத்தோடு தொடர்பினைச் சொன்னார்கள். காகம் என்பது எமனோடும் சனியோடும் தொடர்புடையது. அதாவது, கருமையோடு தொடர்புடையது. அப்படியே அன்னைக்கு தென்கிழக்கு திசையினையும் வகுத்தார்கள், தெற்கு என்பது எமனின் திசை பித்ருக்களின் திசை அவனோடு அன்னைக்கும் தொடர்பு உண்டு என்பதைச் சூசகமாகக் காக வடிவில் சொன்னார்கள்.
எமனுக்கும் இந்தத் தூமாவதிக்கும் உள்ள ஒற்றுமைகளைக் காகவடிவில் சொன்னார்கள். காகம் என்பது இந்துக்களுக்கு ஞானப்பறவை, அது முன்னோர்களின் அடையாளம் , அதனிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் பல உண்டு.
இந்தக் காகத்தின் முக்கிய குணம் எல்லாவற்றையும் சுத்தப்படுத்தும், தானும் சுத்தமாக இருந்து எல்லாவற்றையும் சுத்தமாக்கபாடுபடும், அன்னை எல்லோரையும் சுத்தமாக்கித் தருவாள், முன்னோர்கள் வழியில் அவளே எல்லோர்க்கும் மூலம், அவள் ஒவ்வொருவரும் அவரவர் கர்மாவினைச் செய்ய. வழிகாட்டி நிற்பாள். தெளிவான மனம் தருவாள் எனும் தத்துவம் அங்கே உண்டு.
அவளுக்கும் மூதேவிக்கும் பல ஒற்றுமைகளும் உண்டு, மூத்தவள் எனும் ஜேஷ்டா தேவியின் திசையும் தெற்கேதான் உண்டு.
மூதேவிக்கும் இந்த தூமாவதிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. அந்தப் பாற்கடலில் முதலில் வந்தவர்கள் எனும் வகையில் ஏறக்குறைய இருவரும் ஒருவரே, இருவரும் கையில் முறம் வைத்திருப்பார்கள்.
முறம் என்பது நல்லது கெட்டதைப் பிரிக்கும், அரிசியையும் கல்லையும் பிரிக்கும். அப்படி இவர்கள் ஒருவரிடம் இருந்து ஆகாதன அத்தனையும் பிரித்து ப் போடுவார்கள்.
மூதேவி என்பது ஒதுக்கப்பட்ட தெய்வம் அல்ல, அவள் இந்துமரபில் கொண்டாடப்பட்டாள், ஜெயஷ்ட தேவி என அவளுக்கு பெரும் இடம் இந்துக்களிடம் இருந்தது.
இந்த ஜேஷ்டா தேவி என்பவள் பற்றி இருவிதமான கருத்துக்கள் உண்டு. ஜேஷ்ட என்றால் மூத்த எனப் பொருள், அவ்வகையில் இவள் சீதேவியின் சகோதரி மூதேவி, தவ்வை எனச் சொல்வாரும் உண்டு.
ஆனால், மூதேவி என்றால் முப்பெரும் தேவி வடிவம் அது மூதேவி எனத் திரிந்தது என்ற கருத்தும் உண்டு.
பொதுவாக, ஜேஷ்டா தேவி மூதேவி மூத்தவள் என்றே கருதப்படுகின்றாள்.
கையில் காகக் கொடியும், துடைப்பமும், காலுக்குக் கீழே கழுதை வாகனமும் இருக்கும். உடன் இரண்டு பிள்ளைகள் இருப்பர். அவளின் அடையாளம் இதுதான்.
மூதேவிக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. வயிறு பெருத்த தாய்மை தெய்வங்களுல் அவளும் ஒருத்தி. இவளது மகன் மாட்டு முகம் உள்ளவன். மாந்தன் அல்லது குளிகன் எனப் பெயர். குளிகன் சோதிடத்தில் நல்ல காலத்திற்கு அதிபதி. மகள் பெயர் மாந்தி.
இந்த ஜேஷ்டா தேவி வழிபாடு முன்பு எல்லா இடத்திலும் இருந்தது. இப்போது வெகுசில இடங்களில் சுருங்கிவிட்டது.
மூதேவி தரித்திரம் தருபவள், சாபம் தருபவள், ஏழ்மையின் அறியாமையின் வடிவம் என்றெல்லாம் ஒரு நம்பிக்கை உண்டு, உண்மை அது அல்ல.
சனீஸ்வரனை வணங்குவது போல சில காரணங்களுக்காக அவளையும் வணங்குதல் அவசியம்.
அவள் தரித்திரம் அருள்பவள் அல்ல, அவள் மூத்தவள் என்பதால் மிக மிக கண்டிப்பான தெய்வம், சனிகிரகம் போல நேர்மையானவள்.
யார் சரியாக உழைக்கின்றார்களோ, யார் சுத்தபத்தமாக தன்னையும் தன் சுற்றுப்புறத்தையும் வைக்கின்றார்களோ, யார் கூடிவாழ்ந்து எல்லோரையும் உயர்த்துவார்களோ யார் சுறுசுறுப்பானவர்களோ அவர்களை அவள் ஆசீர்வதிக்கின்றாள்.
மாறாக மந்த புத்தி, தாம்ச குணம், சோம்பேறிதனம், அழுக்கு ஆகியவற்றை அவள் அறவே வெறுக்கின்றாள்.
அவள் ஒருவனை ஆசீர்வதித்தால் அவன் எல்லா நல்லா அடையாளமும் பெற்றுவாழ்வான். ஒருவனை அவள் சபித்துவிட்டால் அவன் அழுக்கடைந்தவனாக, உடைந்த வறுமையான சூழலில் சோம்பித் திரிபவனாக அறியாமை மிக்கவனாக அலைவான்.
சனிக்கும் அவளுக்கும் ஒரே குணம்.
நல்ல விழிப்பாக, சுத்தமாக, கடுமையாக உழைப்பவர்கள் அவள் அருளுக்குப் பாத்திரமானவர்கள். அதனாலே காகமும், துடைப்பமும், கழுதையும் அவள் அடையாளமாயின.
அவள் தரித்திரம் கொடுப்பவள் அல்ல, அவளை மறந்தால் தாம்ஸ குணமும், தரித்திரமும் வரும் என்பதுதான் தாத்பரியம்.
இவளை வழிபட்டால் எதிரிகள் நாசமாவார்கள் என்பதும் நம்பிக்கை, இதனாலே அந்நாளில் எதிரி மன்னன் சோம்பலடைய வேண்டும், எதிரி படைகள் மயங்கி குழம்பி மந்தநிலை அடையவேண்டும் என இவளுக்குப் பூஜையெல்லாம் செய்யப்பட்ட சான்றுகள் உண்டு.
மிக மிக நேர்மையானவள் இந்த மூத்ததேவி, ஆபத்தில் எப்போதும் உழைப்பாளர்களுக்கும் நேர்மையாளர்களுக்கும் அவள் உதவுவாள்.
கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்தால் மழை என்பதும், வானத்தை நோக்கித் துடைப்பத்தை காட்டினால் மழை பெய்யும் என்பதும் இதனாலே.
உலகில் எந்த இனத்திலும் இல்லாதபடி அவமானடைந்த ஒருவனை அல்லது குற்றம் சாட்டபட்ட ஒருவனைத் துடைப்பத்தால் அடிக்கும் வழக்கம் இந்துக்களிடம் மட்டுமே உண்டு.
அதன் அர்த்தம் ஆழமானது, எல்லா வித குற்றமும் அறியாமை அல்லது மந்த புத்தியில்தான் நடக்கும், விழிப்பானவனும் நல்ல தெளிவான புத்தி கொண்டவனும் குற்றமிழைப்பதில்லை.
அந்த மந்தபுத்தி விலகவும், நல்ல தெளிவும் சுறுசுறுப்பும் வர மூதேவி அருள் பெற துடைப்பத்தால் அர்ச்சிக்கும் வழக்கமே பின்னாளில் அவமானப்படுத்ததலாய் மாறிற்று.
நம்மை அறியாமல் இந்த ஜேஷ்டா தேவி எனும் மூத்தவள் வழிபாடு இந்துக்களிடையே ஆழப் பதிந்துள்ளது.
அதுதான் கழுதை கத்தினால் நல்ல சகுனம், காக்கை கத்தினால் நல்லது, துடைப்பத்தைத் தாண்டி தீயசக்திகள் வராது எனப் பல வகைகளில் இன்றும் இந்துக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
ஏன் அவளை மூத்தவள் என்றார்கள் என்றால் செல்வமும் இதரப் பெருமைகளும் வர அடிப்படை மூத்த அம்சங்கள் முக்கியம்.
தூக்கமற்ற விழிப்பு நிலை, எல்லா வகையிலும் சுத்தம், அதுதான் நல்ல சிந்தனையினைத் தரும், கடும் உழைப்பு, சுறுசுறுப்பு என அடிப்படை நியதிகள் அவசியம்.
அப்படியே நல்ல தூக்கம் தருபவள், நல்ல ஓய்வை புத்துணர்ச்சியினைத் தருபவளும் அவளே, அவளாலே மன இறுக்கம் குறையும், மனம் அமைதிபடும், நல்ல உற்சாகத்தோடு புதிய சிந்தனைகள் தோன்றும்.
இதை அருள்பவள் மூத்தவள், அதனாலே அவள் ஜேஷ்டா தேவி., அவளின் வாகனம் கழுதை அதிலும் அர்த்தம் இருந்தது, கழுதை கடுமையாக உழைக்கும் குறைவாக உண்ணும் எந்தச் சூழலையும் தாங்கும், எதிரே வரும் ஆபத்தை முன்பே உணரும், ஒரு முடிவெடுத்துவிட்டால் என்ன அடிபட்டாலும் நகராது, போராட முடிவெடுத்தால் சிம்மத்தையும் எதிர்க்கும்.
இந்தக் குணம் ஒரு மனிதனிடம் இருந்தால் அவன் பெரும் இடம் அடைவான் என்பதையே அந்தத் தத்துவத்தில் சொன்னார்கள்.
ஆம், தூமாதேவியின் அம்சம் சனியிடம் உண்டு, எமனிடம் உண்டு, இந்த மூத்த தேவி எனும் ஜேஷ்டா தேவியிடமும் உண்டு.
இவர்கள் அமங்கலமானவர்கள், துன்பம் தரகூடியவர்கள், இவர்களை வணங்கினால் எப்போதும் துன்பம் வரும், அதனால் குடும்பத்தில் இவர்களை வணங்க கூடாது எனும் தவறான போதனையும், தேவையில்லா அச்சமும் சிலரிடம் உண்டு. உண்மை அது அல்ல.
இறைவன் திட்டம் என்பது இரு முனைகளில் இருந்து நன்மைக்கும் தீமைக்கும் இடையே ஒரு நடுநிலையினைப் பேணுவது. அது தேவர் அசுரர், கருடன் நாகம் எனப் பல உண்டு, அவ்வகையில் இந்த தூமாவதி தத்துவமும் ஒன்று.
அவளின் சாயலே ஜேஷ்டா தேவி என்பதால் அவள் பாற்கடலில் உருவாகும் போது பகவான் விஷ்ணு என்ன சொன்னார் என்பதைக் கவனித்தால் நல்லது.
யார் சிவநினைவின்றி இருப்பார்களோ, யார் அதர்மம் செய்வார்க்ளோ, யார் அறியாமை இருளில் கிடப்பார்களோ, யாரிடம் அகங்கார குணம் ஓங்கியிருக்குமோ அங்கெல்லாம் அவர்களைத் தண்டிக்கும்படி அன்னை செல்வாள் என்றார்.
இதுதான் சனியின் தத்துவமும் கூட, அதாவது ஒருவரை நல்ல வழிக்கு இழுத்துவரும் சக்தி, சில பாடங்களை சொல்லிக் கொடுத்து அவர்களைத் திருத்திப் பண்படுத்தும் பெரும் முயற்சி.
இதனை ராமாயணத்திலும் மஹாபாரததிலும் காணலாம். ராவணன் பலம் பொருந்தியவனாயினும் இந்த ஜெயேஷ்டா தேவியின் சக்தியாலே ஒவ்வொன்றாய் இழந்து கடைசியில் திருந்தாமல் அழிந்தே போனான்.
மஹாபார்தத்திலும் இக்காட்சி உண்டு, அவளே அதர்மக்காரர்களை அழித்து போட்டாள். அவளின் கொடும்பார்வையில்தான் அவர்கள் அழிந்து ஒழிந்தே போனார்கள், இன்னும் புராணங்களில் இதனை நளன் முதல் பலர் வரலாற்றில் காணலாம்.
சனியோ, ஜெயஷ்டா தேவியோ அக்கிரமிகளைத் தண்டிப்பார்கள். இறைவன்பால் சரணடைந்தவர்களுக்குத் துணை இருந்து அருள் புரிவார்கள், இந்தத் தூமாவதி அப்படியானவள்.
அவள் கையில் முறம் வைத்திருக்கும் காரணம் அதுதான், அது ஒருவனிடம் இருந்து தீய அம்சங்களைப் புடைத்தெடுக்கும் தாத்பரியம்.
இதனாலே அவளுக்கு அன்றைய இந்துக்கள் கோவில் கட்டி வணங்கினார்கள், திருவானைக்கா ஆலயத்தில், தப்பாளம் புலியூர் ஆலயத்தில் அவளுக்கு இன்றும் சந்நதி உண்டு. பல ஆலயங்களில் அவளைக் காணலாம்.
நிஜமாக தூமாவதி என்பவள் ஜேஷ்டா தேவியின் மூலம். அவளை வணங்கினால் வறுமை வருமா என்றால் வராது. மாறாக, இருக்கும் வறுமை ஒழிந்துபோம்.
வறுமை எங்கே வரும் என்றால் அறியாமை, அஞ்ஞானம், அகங்காரம் அவற்றினோடு கர்மவினை என எல்லாம் கலந்த இடத்தில் வரும், அந்த இடத்தில்தான் குப்பை இருக்கும், இன்னும் பல தரித்திர அடையாளம் இருக்கும்.
இந்த அஞ்ஞானம், அறியாமை இன்னும் பல விஷயமெல்லாம் ஒருவனுக்குத் திரைபோல் அறிவினை மறைக்கும், புகை போல் மறைக்கும். அங்கே அன்னையின் அருள் இருந்தால் அவை நீங்கி நல்ல பாதை ஞானமாகத் தெரியும்.
அவளை வேண்டினால் ஓடி வந்து தன் துடைப்பத்தால் எல்லாக் குப்பைகளையும் அகற்றுவாள், முன்னோர் அருளுடன் கர்ம வினைகளைத் தீர்த்துவைப்பாள். அது வரை சிக்கிக் கிடந்த சூழலில் இருந்து மீட்டு, புதிய பாதை காட்டித் தருவாள்.
அவள் கிரகங்களில் கேதுவின் அம்சம், இதுதான் அவளின் முழுத் தாத்பரியத்தையும் காட்டுகின்றது.
அதாவது, அன்னையின் பெரும் சிறப்பு எங்கே ஒருவன் முழுக்க அடைபட்டுக் கிடப்பானோ, எங்கே அவன் திக்கு திசை தெரியாமல் மேககூட்டத்தின் நடுவே சிக்கிய மான்போல் திகைப்பானோ அங்கே அவளை அழைத்தால் அந்த மாயப் புகை நீக்கி, மேகம் நீக்கி அவனுக்கு வழிகாட்டுவாள்.
ஒருவன் எங்கே அடைபட்டு எல்லாத்திசையும் பூட்டப்பட்டுக் கிடந்தாலும் அவள் வந்து அந்தப் பூட்டை திறந்து அவர்களுக்கு விடுதலை தருவாள்.
அவள் எப்படிப் புகை வடிவமாக அதாவது இல்லாததாக இருக்கின்றாளோ, அப்படியே நிழல் கிரகம் அதாவது உருவமாக இல்லாமல் நிழலாக நின்று இயக்கும் கிரஹமான கேதுவினை நாகவடிவில் அவளுக்குக் கொடுத்தார்கள்.
நாகம் என்பது எதிர்முனையில் இருந்து ஞானம் தரும் வடிவம், சூட்சும தத்துவம்.
அன்னை கேது அம்சம் என்பதால் எதெல்லாம் பூட்டப்பட்டதோ அதை எல்லாம் திறந்து தருவாள், எங்கே எல்லாப் பாதையும் அடைக்கப்பட்டு மறைக்கப்பட்டதோ அதையெல்லாம் திறந்து தருவாள், எங்கே ஒருவன் மீளமுடியாமல் முழுக்க முடங்கிக் கிடப்பானோ அங்கே வந்து அறியாமை குப்பை அஞ்ஞான குப்பையினை அகற்றி அவர்களை வாழவைப்பாள்.
இன்றைய உலகில் ஒவ்வொருவரும் மாயத் திரைக்குள் சிக்கி வீழ்ந்து கிடப்பது ஒன்றும் ரகசியமல்ல. அது போதை வஸ்துக்கள், விஞ்ஞான கருவிகள், இல்லை இதர தீய குழப்பங்கள் எனப் பல இருக்கலாம். அது புகைபோல் அவர்களை மூடியிருக்கலாம், எந்த மருந்தும் இதர சிகிச்சையும் அங்குப் பலனற்றுப் போயிருக்கலாம், அந்நேரம் அன்னையினை வணங்கினால் அந்த மாயத் திரையில் இருந்து உங்களுக்குப் பெரும் விடுதலை தந்து அழைத்து வருவாள்.
அன்னை ஒருவகையில் இந்த உலகில் ஐந்தொழிலில் ஒன்றான மறைத்தல் தத்துவம் கொண்டிருப்பவள். இந்த உலகில் பல விஷயங்களை மறைத்தல் நன்று. ஒருவனின் பூர்வ ஜென்மம், விதி, எதிர்காலம், அவனுக்கும் அடுத்தவர்க்குமான ஜென்ம தொடர்பு, அடுத்தவரின் எண்ணவோட்டம், இறை சக்தியின் திட்டம் என எல்லாமும் மறைத்தல் நன்று.
அதனை வெளிப்படுத்தினால் தேவையற்ற குழப்பம் வரும், எங்கும் சண்டையும் சர்ச்சையுமே நிறைந்திருக்கும். அதனால் மறைத்தல் எனும் ஒரு பெரும் காரியத்தை அன்னை செய்வாள், அப்போது அவள் தூமாவதி.
மறைந்திருந்து இயக்கும் அந்த மஹா சக்தியே அவள், எல்லா இடமும் அவள் உண்டு, அவளுக்குள் எல்லாமே மறைந்திருக்கின்றன. அவள் எல்லாவற்றிலும் மறைந்து நின்று இயக்குகின்றாள்.
அவள் தசாவதாரத்தில் மச்ச அவதாரம், எப்படி தேவியரில் அவள் மூத்தவளோ அப்படியே அவள் அவதாரத்திலும் மூத்தவள், எப்படி அவளின் இயல்பு மறைந்திருந்து இயக்குவதோ அப்படியே அந்தப் படகினையும் அவள் மறைந்திருந்த சக்தியாக சுமந்து இயக்கிக் காத்தாள்.
மச்சவதார காலத்தில் எங்கும் பெரும் வெள்ளம் திரும்புமிடமெல்லாம் மழை மேக இருட்டு என எங்கும் மூடப்பட்டிருந்தது. எல்லாமே நீரால் சூழப்பட்டு அதன் மேல் கார்மேக இருளும் திசை தெரியாச் சூழலும் இருந்தன. அங்கே அன்னை சரியாக மனுவின் படகை சுமந்து மீட்டுக் காத்த பகவானின் சக்தியாய் இருந்தாள்.
இந்தப் பிறவி எனும் பெரும் கடலில் அவளை நம்பி நின்றால் அவளை அழைத்து இந்த வாழ்க்கை கடலை கடக்க மன்றாடினால் அவளே மச்சமாக வந்து உங்களைப் பிறவிக்கடலை கடக்க வழிநடத்துவாள்.
வாழ்வின் எந்தப் பெரும் நெருக்கடியிலும் பெரும் வேதனை புகைக்குள் நீங்கள் சிக்கிக் கொண்டு வழித்தெரியாமல் அலைபாயும் சூழலிலும் அவள் உங்களை மீட்டெடுத்து வழிநடத்துவாள்.
எது மூலமோ அவளே தூமாவதி, கடைசியில் எல்லாம் முடிந்து யாரிடம் சரணடைகின்றோமோ அவளே தூமாவதி. அவள் இந்தப் பிரபஞ்சமெங்கும் நிறைந்திருப்பவள், எதெல்லாம் மானிடர்க்கு மறைக்கப்பட்டதோ அதைத் தேடித் தேடி அலைபவர்க்கு அவளே இறங்கிவருவாள், எது அவர்களின் தேடலாய் இருக்குமோ அவர்களுக்கு அதைத் திரையினை அகற்றி வழங்குபவள் அவளே.
ஞானியர்க்கு ஞானம் அவளே, செல்வரின் செல்வம் அவளே, ஆட்சியின் அதிகாரம் அவளே, வறுமைபட்டோரின் வறுமையினைத் தீர்க்க ஓடிவருபவளும் அவளே, அஞ்ஞான இருள் அகற்றி முழு ஞானம் தருபவளும் அவளே.
நீங்கள் வெளிவரமுடியாதபடி எங்கேனும் சிக்கிக் கொண்டால் அவளை அழையுங்கள். வாழ்வில் பல இடங்கள் புரியாவிட்டால் அவளை அழையுங்கள். அவள் உங்களுக்குப் புலப்படாத வழியினை உங்களுக்குப் புலப்படுத்துவாள், புரியாத விஷயங்களைப் புரியவைப்பாள்.
ஆக்ஞா சக்கராவினைத் தெளியவைத்து எல்லாவற்றையும் ஞானக்கண்ணால் கண்டு அதன் உண்மை பொருளை விளங்க வைக்கும் மகா சக்தியும் அவளே.
இந்தப் பிரபஞ்சமும் உலகமும் மனிதனும் ஒன்றுமில்லாச் சூனியத்தில் இருந்து தொடங்கி பின் புகையாய் மறைவார்கள், அந்தப் புகையும் ஆகாயத்தில் கரைந்து மறைந்து போகும், அதாவது எல்லாமே அவளிடமிருந்து வந்து அவளிடமே கரையும்.
எல்லாவற்றின் மூலம் அவளே, எல்லாவற்றின் முடிவும் அவளே. யாக நெருப்பில் முக்கியமானது அதிலிருந்து எழும் புகை. அந்தப் புகையின் சக்தியும் வடிவமும் பலனும் அவளே, அவளே யாகத்தின் முடிவினை ஏற்று வரமும் அருள்கின்றாள்.
இந்துக்கள் மரபில் வழிபாட்டில் தவிர்க்கக் கூடாதது தூபம், அது வெறும் மணத்துக்காக அல்ல, எல்லாம் இங்கு தூபவடிவில் அன்னையால் நடத்தப்படுகின்றது, அன்னையே மறைந்திருந்து எல்லாம் இயக்குகின்றாள், தூபத்தின் தத்துவம் அவளே என்பதைச் சொல்லவே தூபம் மிக முக்கியமாயிற்று.
இந்த இரவு அவளுக்கானது. இங்குக் காணும் எல்லாமும் இருப்பதல்ல, காணாத எதுவும் இல்லாததுமல்ல எனும் பெரிய தத்துவத்தின் தாத்பரியம் அன்னை தூமாவதி, இங்கு எல்லாமே அவளில் தொடங்கி அவளிலே மறையும், எல்லா யுகமும் அவளில்தான் தொடங்கி அவளிலே கரைகின்றன.
இருந்தும் இல்லாத நிலை, இல்லாமல் இருக்கும் நிலை என அந்த மறைந்தும் மறையாமலும் இருக்கும் அன்னையின் பெருமையினைத்தான் பல இடங்களில் பாடினான் பாரதி.
“நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?
பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்க ளெல்லாம் அற்பமாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? –
கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.”
எனப் பாரதி தெளிந்த ஞானத்தில் பாடியது அந்த தூமாவதி தத்துவமன்றி வேறல்ல.
இந்த இரவு அவளுக்கானது, அவள் நிச்சயம் அச்சப்படும் தெய்வம் அல்ல, அவள் விதவைக் கோலத்தில் இருக்கும் அமங்கலியும் அல்ல, அவள் தான் மூத்த தேவி என்பதைத் தன் முதிர்ந்த கோலத்தில் சொல்கின்றாள், அவள் நகைகளற்று அலங்காரமற்று இருப்பதைக் காட்டி தான் எல்லாம் கடந்த ஞான நிலையில் நிற்பதைச் சொல்கின்றாள்.
தன் கணவனான சிவனே தன்னுள் அடக்கம் என்பதைச் சுத்தமாய தத்துவத்தில் சொல்லித் தனித்து நிற்கின்றாள், முன்னோர்க்கு முன்னோர் எனத் தேடினால் எல்லா மூலமும் நானே என்பதை காக்கை கொடியோடு சொல்கின்றாள்.
அவள் கேதுவின் அம்சம் என்பதால் விநாயகரின் யானை தத்துவமும் அவளுக்கு உண்டு. அதன்படி வயதான பெண் யானையே காட்டில் யானை கூட்டத்துக்கு வழிகாட்டும், ஆபத்து முறியடிக்கும் வழியெல்லாம் அறிந்திருக்கும். மிக மிக கோடையான காலத்தில் மறைந்திருக்கும் நீரூற்றினைத் தன் கூட்டத்துக்கு சொல்லி அவர்களை காக்கும் என்பதுபோல் அன்னையே ஒவ்வொருவனுக்கும் முதிர்ந்த ஞானமான தலைவியாக நின்று வழிநடத்திக் காப்பாள் என்பதைச் சொல்கின்றது.
அவள் தேரில் குதிரைகள் இல்லை, வாகனம் ஏதுமில்லை என்பது அவள் நினைத்த இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் வந்து எழுபவள் என்பதைக் காட்டும்தத்துவம்.
தூமாவதி அரசர்களால் வணங்கப்படுபவள், செல்வர்களால் துதிக்கப்படுபவள், அவள் அதர்மம் செய்வோர்க்கும் எதிரிகளுக்குமே துன்பம் விளைவிப்பாளே அன்றி, தன்னை அண்டி நிற்கும் பக்தர்களுக்குத் தன்னை உணர்ந்தவர்க்கு மறைவாய் நின்று எக்காலமும் உதவி வழிகாட்டி காத்து நிற்பாள்.
மனிதனும் இந்த உலகமும் தூசுக்கும் புகைக்கும் சமமானவர்கள். இங்கு எல்லாமே புகையாய் அழியும். மாயை நிலையானது. அன்னையினைத தவிர எதுவுமில்லை, நொடியில் புகையாய் மறையும் உலகமிது என்பதைச் சொல்லி ஆழ்ந்த ஞானம் போதிக்கும். அன்னையினை வணங்கி எல்லா வரமும் பெற்று இந்தப் பூலோக வாழ்வினை நல்லபடியாக வாழ்ந்து செல்ல ஆனந்தமயமாய் வாழ்ந்து செல்ல வரம் வேண்டுவோம்.
“ஓம் தூமாவத்யை வித்மஹே ஸம்ஹாரின்யை தீமஹி
தன்னோ தூமா ப்ரசோதயாத்”
என அவளை வேண்டி மன்றாடுவோம், நம் எல்லாச் சிக்கலையும் புகைபோல் போக்கும் அவளை நாடி “ஓம் தூமாவத்யை நம:” என இரவெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்போம்.
இந்த இரவில் அவளைத் தேடுங்கள், எல்லாவற்றின் தொடக்கமும் முடிவுமான அவள், ஒவ்வொன்றையும் அடுத்தடுத்த படிநிலைக்கும் இன்னொரு நிலைக்கும் மாற்றி மாற்றி உயர்த்தும் அவள், அப்படி மறைவாய் நின்று இந்த உலகை இயக்கும் அவள் உங்களையும் அடுத்தடுத்த படிநிலைக்கு மாற்றி உயர்த்துவாள். இது சத்தியம்.