தசமஹாவித்யா 08 : பகளாமுகி.
தசமஹாவித்யா 08 : பகளாமுகி.
இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, அதற்கு யுக அளவுகளைப் படைத்து, அந்த யுகங்கள் ஒவ்வொன்றுக்கும் மும்மூர்த்திகளையும் படைத்து, அவர்களுக்குத் துணையாக சகல தேவர்கள் பரிவாரங்களெல்லாம் படைத்து, அவர்களைக் கொண்டு இந்த மகா பிரபஞ்சத்தை இயக்குபவள் அன்னை.
அப்படியான அந்த மகாசக்தி இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் தன்னால் படைக்கப்பட்ட தெய்வமெல்லாம் திணறும் போதெல்லாம் அவளே தன் அம்சத்தில் இறங்கி வந்து எல்லாவற்றையும் காப்பாள்.
அப்படி அவளே வந்து இந்தப் பிரபஞ்சத்தைக் காக்கும் வடிவங்களே தசமஹா வித்யாவின் பத்து வடிவங்கள். அதனில் அடுத்து வரும் இந்தப் பகளாமுகி எனும் வடிவமும் ஒன்று.
இந்த அன்னை மகா சக்தி வாய்ந்தவள், எப்போதெல்லாம் இனம்புரியாத ஆபத்து, எதிர்பாரா ஆபத்து நம்மால் புரிந்து கொள்ளமுடியாப் பெரும் ஆபத்து வருமோ, கண்ணுக்குத் தெரியாத பெரும் துன்பம் வரும்போதோ அன்னை அந்தப் பகளாமுகி வடிவில் வந்து காக்கின்றாள், அவள் எல்லா ஆபத்துக்களையும் முறியடிக்கும் மகா ஞான தெய்வம்.
இவளது பெயர் “வல்ஹம்” “வல்கா” என்ற பெயரில் இருந்து வந்தது. அதற்குக் கடிவாளம் அல்லது தடுத்து நிறுத்துதல் எனப் பெயர், இந்த “வல்ஹம்” எனும் பெயர்தான் பின்னாளில் வங்கம் என மாறிற்று, அப்படியே அதன் ஒரு பகுதி பங்களா, பங்களாதேஷ் என மாறிப் போனது.
இந்தப் பெயர்களின் மூலமே பகளா.
ஆக, அந்த வங்கப் பிரதேசங்கள் பகளாமுகி எனும் தேவியின் இடமாக இன்றளவும் பெயரைத் தாங்கி நிற்கின்றது, எப்படித் திரிபுரா தேவியின் நிலமாக திரிபுரா என ஒரு மாகாணம் இன்றும் இருப்பது போல, அன்று அந்தப் பிராந்தியம் பகளாமுகியினை வழிபட்டு நின்றது என்பது இந்தத் தேவின் பெயரால் அறியப்படும் வரலாறு.
அவளே “பீதாம்பரி” என்றும் அழைக்கப்படுகின்றாள்.பீதாம்பரம் என்றால் மஞ்சள் நிறம் எனப் பொருள். அவளே “பிரம்மாஸ்திர ரூபிணி” எனவும் கொண்டாடப்படுகின்றாள்,
கண்ணால் பார்க்கமுடியாத பிரகாசத்தில் இருக்கும் அவளை “தவளானன சுந்தரி’ என்றும், சந்தர பிம்பம் போன்று இருக்கும் அவளை ‘இந்து பிம்பானனா’ என்றும் சாஸ்திரங்கள் சொல்கின்றன. வேதங்கள் ‘ஹிரண்ய வர்ணாம்’ என இவளைத் துதிக்கின்றன.
அவளின் தோற்றத்தில் இருந்தே அதன் தாத்பரியத்தை உணரலாம்.
அன்னை பகளாமுகி புராணங்களில் பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்றாள், போற்றப்படுகின்றாள், அதில் முதலாவது இடம் அன்னையின் முதல் காட்சி.
அதன்படி பாற்படலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன் ஊழிக்காலம் போன்ற ஒன்றை உணர்கின்றார், பெரும் வெள்ளம் இடி மழை என நிலைமை எல்லை மீறுகின்றது, காக்கும் கடவுளான அவராலே அது ஊழிக்காலமா இல்லை வேறு எதுவுமா எனும் முடிவுக்குவர முடியவில்லை, அவரே குழம்பிப்போனார்.
ஆனாலும், இந்த உலகைக் காக்கும் பொறுப்பு அவருடையது என்பதால் தன் சிக்கலுக்கு வழி சொல்ல மகாதேவனை அணுகினார், அவரும் இந்தக் கடும் நெருக்கடியில் நமக்கு உதவ பகளாமுகி அம்சத்தால் மட்டுமே முடியும் எனச் சொல்லி, அன்னைக்கான மூல மந்திரம் ஒன்றையும் சொல்லி அவளிடம் வேண்டச் சொன்னார்.
அதன்படி விஷ்ணு பெரும் தவம் இயற்றினார், அவரின் தவம் கடுமையாகத் தொடர்ந்தது, அவர் அன்னையின் நாமத்தினை மூலமந்திரத்துடன் ஓதும்போது அது நட்சத்திர மண்டலத்தில் எதிரொலித்து, அந்த அதிர்வின் சக்தி பூமியிலும் பட்டது.
தொடர்ந்து அந்த மந்திரம் விஷ்ணுவால் ஓதப்பட ஒரு மஞ்சள் நிற தேவி நதியில் இருந்து வெளிப்பட்டாள், அவள் வெளிப்பட்ட மறுநிமிடம் எல்லாப் பிரளய மிரட்டலும் அப்படியே ஸ்தம்பித்துப்போனது. மறுநொடி எல்லாமே இயல்பு நிலைக்கு வந்தது.
பிரயள காலத்தையே ஸ்தம்பிக்க செய்ததால் அவள் “ஸ்தம்பினி” எனும் பெயரும் பெற்றாள், அங்கிருந்தே அன்னையின் வரலாறு தொடங்குகின்றது.
கவனியுங்கள், விஷ்ணுவுக்கே அந்தப் பிரளயம் ஏன் வந்தது எனத் தெரியாது, அதற்கான காரணம் புராணத்திலும் சொல்லப்படவில்லை, ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் காரணம் புரியாமல் வந்த அந்த மகா ஆபத்து அன்னையால் ஒரு நொடியில் நிறுத்தப்பட்டது.
இப்படிச் சொல்லும் புராணத்தில் அன்னையின் பெருமை இன்னும் தொடர்கின்றது.
தசமகா வித்யாக்களின் சக்தியும் அம்சமும் அருளும் மும்மூர்த்திகளுக்கும் உண்டு. அவ்வகையில் மாதங்கி மந்திரத்தால் ப்ரம்மதேவனும், தாரா மந்திரத்தால் விஷ்ணுதேவனும், பகளாமுகி மந்திரத்தால் மஹாதேவனும் தேவிபராசக்தியை உபாசிக்கின்றனர் என்பது புராணம் தரும் செய்தி.
இன்னுமோர் இடத்தில் அது தெளிவாக அவளைப் பற்றி சொல்கின்றது. அதாவது, முருகன் அசுரர்களை வெல்லும் விதிமுறைகள் பற்றிப் பரமேஸ்வரனிடம் கேட்டார். பரமன், ‘ப்ரஹ்மாஸ்த்திரம்’ என வழங்கப்படும் பகளாமுகி மந்திரத்தை முருகனுக்கு அருளினார். அந்த மந்திரத்தை உச்சரித்து அன்னையின் அருளை அடைந்தபின்பே முருகப்பெருமான் சூரனை வதைத்துப்போட்டார்.
இப்படியாக அன்னையின் பெருமைகள் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது, அவளின் தோற்றம் ஒரு கையில் முட்கள் பொருந்திய இரும்பு தண்டம் ஏந்தியபடியும், இன்னொரு கரத்தில் வஜ்ராயுதம், இன்னொரு கரத்தில் அபயம் காட்டியபடி, இன்னொரு கரத்தால் அசுரன் ஒருவன் நாவினை பிடித்துக் கத்தியால் வெட்டியபடியும் அவள் காட்சித் தருவாள், அவளின் திருக்கோல காட்சி அதுதான்.
அதன் பொருள் அவள் செய்த இன்னொரு காவலில் இருக்கின்றது.
மதன் என்றொரு அசுரன் இருந்தான், அவன் சில வரங்களைக் கடுமையான வரத்தால் வாங்கியிருந்தான். அதன்படி அவன் என்ன சொல்கின்றானோ அது நடக்கும், அப்படியே அவன் சில மந்திரங்களைச் சொன்னால் உடனே பலிக்கும்.
இதைக் கொண்டு அவன் எல்லாத் தரப்புக்கும் பெரும் இடைஞ்சலைக் கொடுத்தான். அவனால் தேவர்கள் மானிடர்கள் என எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள், யாரேனும் பூஜை செய்ய முயன்றாலும் அவன் தன் சக்தியால் அவர்களைக் குழப்பினான்.
இதனால் எல்லோரும் மிகுந்த இன்னலுக்குள்ளானார்கள், எந்தத் தெய்வத்தாலும் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை, யார் வந்தாலும் தன் சக்தியால் அவர்களைத் தடுத்து நிறுத்தினான், அலறிய அனைவரும் அன்னையிடம் தஞ்சமடைந்தனர்.
அன்னை ஆவேசமாக வந்தாள், எல்லோரிடமும் பலித்த வரம் அவளிடம் தோற்றுப்போனது, எந்த நாவால் அவன் எல்லோருக்கும் தொல்லை கொடுத்தானோ அந்த நாவினை அவள் இழுத்து வைத்து வெட்டிப்போட்டாள், வாய்பேசமுடியாத அவனுக்கு அவன் வரம் பலிக்காமல் போனது, அந்த மதன் எனும் அசுரனை அழித்த அந்தக் கோலத்தில்தான் அன்னை காட்சிக் கொடுக்கின்றாள்.
சுருக்கமாக இதுதான் புராணங்களில் அவளைப் பற்றி சொல்லப்படும் விஷயம், நிறைய உண்டு என்றாலும் அன்னையினை இந்த அடிப்படை காட்சிகளில் இருந்து எளிதாக புரிந்து கொண்டு அவளின் தாத்பரியத்தையும் அபார சக்தியினையும் அறியலாம்.
அன்னை மஞ்சள் நிறத்தில் காட்சியளிப்பவள், அதனாலே அவள் “பீதாமபர தேவி”, இந்த மஞ்சள் நிறம் என்பதன் இந்துமத தாத்பரியம் நுணுக்கமானது.
மஞ்சள் நிறம் காண்போரை எளிதில் அடையாளபடுத்தும், இதனாலே பள்ளிப்பேருந்துகளுக்கு உலகளவில் அந்நிறம் கொடுக்கப்பட்டுள்ளது, எந்தக் கால நிலையிலும் தெளிவாகப் பார்க்க கூடிய நிறம் அதுதான்.
மருந்துகளில் மஞ்சள் நிறத்துக்குத் தனி இடம் உண்டு, எல்லா நோய்களையும் அழிக்கும் மருந்துகள் அந்நிறத்திலேதான் இருக்கும்.
மிக மிக முக்கியமாக எதெல்லாம் முதிர்ந்ததோ அதெல்லாம் மஞ்சள் நிறத்தை பெறும். அது காய்கனியில் உண்டு இன்னும் பல விஷயங்களில் உண்டு, மஞ்சள் என்பது எல்லா வகையிலும் சிறப்பான நிறம். இந்துக்களுக்கு அது ஞானத்தின் அடையாளம்.
முருகப்பெருமான் ஆலயங்களுக்கு மஞ்சள் ஆடை அணிவது, தட்சணாமூர்த்திக்கு மஞ்சள் ஆடை அணிவிப்பது, நவக்கிரகங்களில் குருவுக்கு மஞ்சள் நிறம் என வகைப்படுத்துவது என எல்லாமே இந்த நுணுக்கமே.
அன்னை ஆதிமூலமான சக்தி என்பதும், ஞான சக்தி என்பதும் எல்லாக் காலநிலையிலும் அவள் கைகொடுப்பவள் என்பதும் இதனால் சொல்லப்பட்ட் செய்திகள், மகா முக்கியமாக அவள் மூவகை சக்திகளில் ஞான சக்தி.
அவள் மூன்று பிரிவுகளில் செயலாற்றுபவள். அதாவது, அவள் மூவுலக நாயகி, அப்படியே மூன்று கண்களைக் கொண்டவள், முக்காலமும் உணர்ந்தவள், முத்தொழிலையும் செய்பவள்.
ஞானசக்தியின் வடிவமாக அவள் சொல்லப்பட்டாலும் மூவகை சக்திகளின் மூலம் அவளே என்பதால் அவள் எப்போதும் முப்பெரும் சக்தியாகவே குறிக்கபடுவாள், தசமகா வித்ய வடிவங்களில் மாதங்கி, புவனேஸ்வரி, திரிபுரசுந்தரி, மஹாலட்சுமி என்ற இந்த நான்கு சொரூபங்களும் சத்வ குணத்தைச் சார்ந்த சொரூபங்களாகும்.
மாகாளி, தாரா, பைரவி, சின்னமஸ்தா இவர்கள் ராஜஸ குணம் சார்ந்தவர்கள். தூமாவதி தாமஸ குணம் சார்ந்த சொரூபமாகும்.
இந்த பகளாமுகி தேவி மட்டுமே “சத்வ, ராஜஸ, தாமஸ” என்ற மூன்று குணங்களையும் ஒருங்கே அமையப்பெற்றவள். இதனால் மும்மலங்களையும் ஒழிக்கும் பெரும் ஆற்றல் அவளுக்கே உண்டு.
அவளின் தோற்றமே அவளின் முக்குணத்தையும் வெளிப்படுத்தும். மலர்மாலை சூடி வரத முத்திரையுடன் அவள் வீற்றிருப்பது தேவியின் சத்வ குணத்தை வெளிப்படுத்தும்.
அவள் கைகளில் உள்ள பாசம், வஜ்ராயுதம் ஆகிய ஆயுதங்கள் தேவியினுடைய ராஜஸ குணத்தை வெளிப்படுத்தும். அசுரனின் நாவை இழுத்துத் துண்டித்து அதனைத் தன் கையில் ஏந்தியிருப்பது தாமஸ குணத்தை வெளிப்படுத்தும்.
அன்னை இப்படி முக்குணங்களையும் கொண்டிருப்பதால் பெரும் சிறப்புக்களையும் பலமான பல வரங்களையும் கொண்டிருப்பவள், அவளுக்கு நிகர் அவளே.
இந்த அன்னையின் பெருமை பகவான் நாராயணனோடும் மகாதேவனோடும் இன்னும் அந்த அசுரனோடும் மட்டுமல்ல, அது புராண காலம் தாண்டி, இதிகாசகாலம் தாண்டி இன்றுவரை உண்டு, என்றும் உண்டு.
அவள் ராமாயணத்திலும் உண்டு, மகாபாரத்திலும் உண்டு, இன்னும் பல முக்கியமான சம்பவங்கள் வரலாறுகள் என எல்லாவற்றிலும் உண்டு.
அனுமன் பகளாமுகியினை வழிபட்ட சில காட்சிகள் ராமாயணத்தில் உண்டு. அப்படியே பாண்டவர்கள் பகளாமுகியினைத் துதித்த காட்சிகள் இந்தியக் கோவில்கள் வரலாற்றிலும், பல குறிப்பிலும் சில பிரதிகளின் மகாபாரத்திலும் உண்டு.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி அருகே உள்ள நவ்கேடா என்ற இடத்தில் பகளாமுகிக்கு ஆலயம் உண்டு, இந்தியாவின் மகா தொன்மையான ஆலயங்களில் அதுவும் ஒன்று.
அங்குதான் கண்ணன் ஆலோசனைப்படி அந்த ஆலயத்தில் பாண்டவர்கள் வழிபட்டார்கள், அவர்கள் அங்கு வழிபட்டபின்பே யுத்தத்துக்குச் சென்று அவள் அருளால் வெற்றி பெற்று இழந்த அத்தனையும் மீட்டுக் கொண்டார்கள்.
இந்த வரலாறு அந்த ஆலயத்தின் கல்வெட்டில் இன்றும் உண்டு.
இந்த உஜ்ஜைனி பகுதியினை ஆண்ட மன்னன் விக்ரமாதித்தனின் விருப்பமான ஆலயம் இது, இந்திய அரசர்களில் தலைசிறந்தவனாக அறியப்பட்ட அவன் பகளாமுகியின் உபாசகனாய் இருந்தான். அவனின் பெரும் வாழ்வுக்கும் வரலாற்றுக்கும், வேதாளத்தை தோளில் போட்டு சுமந்த பராக்கிரமத்துக்கும் அன்னை பகளாமுகியே காரணமாய் இருந்தாள்.
ஹிமாச்சல பிரதேசத்தில் அன்னை தண்ட நாதா என்றும், தண்டினி என்ற பெயருடன் கோவில் கொண்டிருக்கின்றாள். இன்னும் பல இடங்களில் அவளுக்கு ஆலயம் உண்டு.
இந்தியத் தமிழகம் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஒரு ஆலயம் அவளுக்காக உண்டு. அகத்தியமுனிவர் தலைமையில் பெரும் முனிவர் கூட்டம் பொதிகை மலையில் வசித்தபோது உருவான மூல ஆலயம் அது.
இப்படி நாடெல்லாம் அடையாளங்கள் கொண்டவள் அன்னை, இவள் பிரபஞ்ச சக்தியினைக் கட்டுப்படுத்துபவள், இவளின் வழிபாடே “பீதாம்பர வழிபாடு” என்றும் பின்னாளில் “அதர்வண வேத”த்தின் ஒரு அங்கமானது.
ஆம், மந்திர தந்திரங்கள் இன்னும் மாந்த்ரீக வழிபாடுகளின் மூலத் தெய்வம் இவளே.
இதனைப் பற்றி விளக்கமாக அறிய முதலில் இந்தச் செய்வினை பில்லி சூனியம் எனப் பல வகையாகச் சொல்லப்படும் இந்தப் பீதாம்பரம் கலைகள் பற்றிய தெளிவு அவசியம்.
இந்த அதர்வண வேதத்தின் ஒரு பகுதியான மாந்த்ரீகம் ஏவல், பில்லி சூனியம் என்பதெல்லாம் உண்மையா என்றால் உண்மை. ஆனால், அதன் தாத்பரியம் எப்படியானது என்றால் நுணுக்கமானது.
உண்மையில் மாந்த்ரீகம் ஒரு கடினமான, மிக இறுக்கமான ஆசான். அது கடும் வழியில் ஒருவனுக்கு ஞானம் வழங்கும், பல கணக்குகளைச் சரியாக்கும்.
மாந்தீரிகத்தால் யாரையெல்லாம் தொடமுடியாது என்றால் தன்னலமற்றவர்கள், துறவியர், அடுத்தவர்க்காக வாழ்வோர், தங்கள் கடமையினைப் பலன் எதிர்பாராது செய்வோர், இறையடியார்கள் எனப் பலரை அதனால் தொடமுடியாது. காரணம் அவர்கள் தங்கள் கர்மாவில் சரியாக இருக்கின்றார்கள்.
யாரை இது தொடும் என்றால் கர்மவினை கொண்டவர்கள், கடவுளைத் தேடாதவர்கள், தன்னலமிக்கவர்கள், கர்விகள், இன்னும் அடுத்தவர் மேல் இரக்கமற்றவர்கள் என்பவர்களையே இது தாக்கும், அதுவும் பாதிக்கப்பட்டோர் உண்மை உணர்ந்து இறைபாதம் அடைந்தால் இது அத்தோடு ஒதுங்கிக் கொள்ளும்.
இந்த மாந்த்ரீகம் செய்து வாழ்வில் பெரும் இடம் அடைந்த யாரையும் உலகில் பார்த்திருக்கமுடியாது. சக்திவாய்ந்தவர்கள் என அவர்கள் தெரிந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அவர்கள் நிலை சிக்கலாவதை அவதானிக்கலாம்.
ஆம், இங்கு அந்தப் பெரும் சக்தி அவர்களுக்குப் பணிவது போல் குட்டிசாத்தான் இன்னும் சில சிறிய சக்திகளை வைத்து விளையாடும், அப்படியே அவர்களை உள்ளிழுத்து வரும், இவர்களும் தங்களுக்குத் தெய்வம் கட்டுப்பட்டதாக நினைத்து ஆடுவார்கள், ஒரு கட்டத்தில் அவர்களை அடக்கி மடக்கி எல்லாமே தெய்வத்துக்குக் கட்டுப்பட்டது, இங்கு எல்லாமே அந்த மகாசக்திக்கு உட்பட்டது எனக் காட்டி அவர்களுக்கு ஞானம் கொடுத்து இறைபாதம் சேர்க்கும்.
அந்த மாந்தீகம் எப்போது பலனளிக்கும் என்றால் அது பொதுநலத்தோடு நோக்கும் போது பலனளிக்கும், உண்மையில் அது ஒருவழிபாடு.
அக்காலத்தில் நாட்டில் மழை இல்லை, விளைச்சல் இல்லை, நோய்நொடி ஆபத்து, எதிரி நாட்டின் அதர்மமான கொலை மிரட்டல் எனும் கொடிய நேரம் இனி வாழவழியில்லை என மக்கள் கதறும் நேரம் இதனைக் கையில் எடுத்து வேண்டுவார்கள்.
அந்த நோக்கம் சரியாக இருந்தால் அந்தச் சக்தி வரம் தரும், நோக்கம் அதர்மமானது என்றால் அந்தச் சக்தி அத்தோடு கைவிட்டுவிடும்.
இந்தச் சக்திதான் பகளாமுகி. மாந்த்ரீகத்தின் மூல அதிபதி அவளே, அதர்வண காளி எனச் சொல்லப்படும் தத்துவம் அவளன்றி வேறல்ல.
இதைத்தான் பாண்டவர் வாழ்விலும் காணலாம். அந்தச் சகுனி, இந்தப் பீதாம்பரக் கலையில் தேர்ந்திருந்தான். அதைக் கொண்டே அவனால் சூதாட்டத்தில் வெல்லமுடிந்தது, சகுனியே துரியோதனை வழிநடத்தினான்.
பாண்டவர்கள் அன்னை பகளாமுகியினை வணங்கியபின்னரே சகுனி எல்லா வகையிலும் தோற்கத் தொடங்கி அழிந்தே போனான்.
விக்ரமாதித்தனைப் போல் மாந்த்ரீகத்தில் தேறிய இன்னொருவன் இல்லை, அவன் அன்னையின் முழுப்பக்தனாய் இருந்தான், இன்னும் சாட்சிகள் ஏராளம்.
ஆம், அவள் அந்த வித்தைக்கு அதிபதி, ஆனால் நோக்கம் சரியாக இருந்தால் அருள்தருவாள், நோக்கம் தவறாக இருந்தால் தண்டித்து அழிப்பாள்.
மதன் எனும் அசுரனின் நாவை அவள் அறுத்துப்போட்டாள் என்பதில் அதர்வண வேதத்தைத் தவறாகப் பாவிப்போரை அழிப்பாள், அந்த மந்திரம் பலிக்க விடமாட்டாள் என்பது மறைபொருளாகின்றது. ஆம், நியாயமான காரணத்துடன் அவளை அண்டினால் அங்கு இந்த மாந்த்ரீகம், பில்லி சூனியமெல்லாம் பலிக்காது.
அந்த வேதம் முழுக்க அவளுக்குப் கட்டுப்பட்டது, அவளால் எல்லாவற்றையும் தலைகீழாய் மாற்ற முடியும், பேசுபவனை ஊமையாக்க முடியும், ஊமையினைப் பாடவைக்க முடியும், பெரும் அரசனை ஆண்டியாக்க முடியும், ஆண்டியினை அரசனாக்க முடியும்.
மாந்த்ரீகத்தில் தேர்ந்தவனை ஒரே நாளில் பைத்தியமாக்க முடியும், ஒன்றுமில்லாதவனை ஒரே நாளில் யோகியாக்கவும் முடியும்.
அவள் தலைகீழ் மாற்றம் தரும் அன்னை, அவளே அதர்வண காளி.
இந்து தர்மத்தில் தாந்த்ரீக மற்றும் மாந்த்ரீக சக்திகளைத் தரும் ஆலயங்கள் அனைத்துமே பெண் தெய்வங்களை மூலமாகக் கொண்ட ஆலயமாகவே உள்ளது கவனிக்கத்தக்கது. அதற்கு மகா சக்திவாய்ந்த தலைவி இவளே, அவ்வகையில் எந்தத் துஷ்ட சக்தியும் மாந்த்ரீகமும் அவளை மீறிச் செல்லாது, அவளே எல்லாமும் கட்டுப்படுத்துவாள்.
நவக்கிரகங்களில் இவள் செவ்வாயின் அம்சம், செவ்வாயின் பலம் எல்லோரும் அறிந்த ஒன்று. பூமியில் ஒருவன் வாழும் நல்வாழ்வுக்கு செவ்வாய்க்கிரஹத்தின் பலன் மிக மிக அவசியம், நவக்கிரகங்களில் அவர்தான் பூமிகாரகன்.
செவ்வாயினை ஏன் பூமி காரகன் எனச் சொல்கின்றார்கள் என்றால் இரு காரணங்களை அதன் இயல்போடு பொருத்திச் சொல்வார்கள். பூமியின் மேல் உள்ள அதிகாரத்தை ஒருவனுக்கு நிலை நிறுத்தும் கிரகம் அது.
செவ்வாய்க்கிரகமே நிலபுலன்களுக்கும் இன்னும் பல விஷயங்களுக்கும் அதிபதி.
இரண்டாவது, பூமி எல்லா உயிரையும் காப்பது போல எல்லா உயிரையும் காக்கும் சக்தி, குணம் கொடுக்கும் கிரகம் செவ்வாய்.
இதனாலே காவல் வீரர்கள், ராணுவம் போன்ற துறைகளில் இருப்போர் இந்தச் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றிருப்பர், செவ்வாயின் அருள் இருப்போர் தன்னலம் அதிகம் கருதாமல் பிறருக்காகப் பெரும் காவலைச் செய்யும் அந்தத் தியாக வீரகுணத்தைத் தருவார்கள்.
வாழ்வில் முக்கிய குணம் தைரியம், எல்லாச் சூழலையும் எதிர்த்து நின்று கடக்கும் தைரியமும், வீரமும் மனோபலமும் கொடுக்கும் கிரகம் இது.
எல்லாம் இருந்தும் தைரியமும் காவலும் இல்லாவிட்டால் எல்லாம் பாழாகும், எது இல்லை என்றாலும் தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் எல்லாமும் கூடிவரும்.
இந்தப் பலத்தைத் தருவாள் அன்னை, எப்படி அவள் பூமியில் வாழ அருள்வழங்கும் செவ்வாயின் அம்சம் கொண்டிருக்கின்றாளோ அப்படியே பூமியினைக் காப்பதில் கூர்ம அவதார சாயலும் கொண்டிருக்கின்றாள்.
இந்தப் பூமியினைக் கூர்மம் எனும் ஆமையாய் வந்து காத்த பகவானிடம் அன்னையின் அம்சம் இருந்தது. அவளே பூமியினைத் தங்குகின்றாள் என்பதால் அவளே பூமியின் ஆதாரத்துக்கும் காவல்.
ஏன் அவளை ஆமையின் சாயலில் இந்து ஞானியர் சொன்னார்கள் என்றால் அர்த்தம் ஆழமானது.
ஆமை எல்லாச் சூழலிலும் வாழக்கூடியது, நீர் நிலம் என எல்லா இடத்திலும் அதனால் ஜீவனம் செய்யமுடியும், அன்னை எல்லாச் சூழலிலும் நிலைத்து நிற்பாள், எல்லாக் காலநேரமும் அவளால் இயங்க முடியும் என்பதைச் சொல்வது.
ஆமைதான் உலகில் மிக நீண்டநாள் வாழும் உயிரினம். அவ்வகையில் அன்னை தலைமுறை தலைமுறையாய் நம்மைக் காப்பாள் எனும் அர்த்தமும் இருந்தது.
எந்த விலங்கிடமும் இல்லாத சூட்சும சக்தி ஆமையிடம் உண்டு. கடலில் வசிக்கும் ஆமை கரைக்கு வந்து மணலில் முட்டையிட்டு மறைத்து வைக்கும், சூரிய ஒளியில் ஏற்படும் மிதமான சூட்டில் மணலே அந்த ஆமை முட்டைகளை அடைகாப்பது போல் காக்கும்.
தாய் ஆமை முட்டையிட்டு எங்கேயோ சென்றாலும் முட்டைகளை மறப்பதில்லை. அதன் நினைவெல்லாம் முட்டைகள் மேலே இருக்கும், சரியாகக் குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளிவந்தபின் தாயினை நோக்கிச் செல்லும்.
சிருஷ்டிகர்த்தா செய்யும் நுணுக்கமான விளையாட்டு இது, தன் நினைவு ஒன்றாலே கடலில் இருந்தும், கரையில் இருக்கும் குஞ்சுகளை மனதால் தொடர்பு கொண்டு மனதால் தன்னை நோக்கி இழுத்துவரும் சக்தி ஆமைக்கு உண்டு.
இன்றுவரை எந்த விஞ்ஞானியும் விளக்கமுடியாத் தொடர்பு இது.
அன்னையானவள் ஆமை தன் குஞ்சுகளை மனதால் நடத்துவது போல் தன் மக்களை நடத்துகின்றாள். மனதால் அவர்களை இயக்கி காக்கின்றாள் என்பதைச் சூசகமாக ஆமை வடிவில் சொன்னார்கள்.
இந்துக்கள் மரபில் ஆமை முக்கியமானதன் பொருள் இதுதான், அது ஐம்புலன்களை அடக்குவதும் மிகக் குறைந்த மூச்சினை விட்டு பல பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதும் இதற்குக் கூடுதல் காரணம்.
அன்னை தன் மக்களை ஆமைபோல் காத்து யோக சித்தி உள்பட எல்லாச் சக்தியும் தருவாள் என்பதையே அவளின் கூர்ம அவதார தொடர்பில் சொன்னார்கள், பூமியில் வாழும் ஒவ்வொருவர்க்கும் அவள் அருள் அவசியம்.
அன்னை எதிரிகளை ஒழிப்பாள், பெரும் ஞானம் தருவாள், எல்லா ஆபத்துக்களிலும் இருந்து நம்மைக் காப்பாள். சூட்சுமச் சக்திகள், கர்ம வினைகள், பில்லி சூனிய ஏவல்கள் என எதுவும் அவளை வணங்குவோர்க்கு பலிக்காது, அவளை வணங்கி இப்பூமியில் செய்யும் காரியம் எல்லாம் ஜெயிக்கும்.
இந்த இரவு அவளுக்கானது.
இந்தப் பூமியில் வாழும் மானிட வாழ்வு மகா சிக்கலானது, மனிதர்கள் எனப் பெயரோடு அவர்கள் வாழ்ந்தாலும் ஒவ்வொரு மனிதனின் மனமும் புரிந்துகொள்ள முடியாதது, எண்ணவோட்டம் அறியமுடியாதது, இதனால் யார் எதிரி, யார் நண்பன், யார் முதுகில் குத்துவார் யாரை நம்புவது? யாரை தவிர்ப்பது எனத் தெரியாத பெரும் ஆபத்து மானிடர்க்கு உண்டு.
பூவுலகில் எதிரிகள் இல்லாதவர் எவருமில்லை, ஒவ்வொருவரும் மூவகை எதிரிகளைச் சந்தித்தே தீர வேண்டும். இது மானுட விதி.
அது உத்யோக சத்ரு, அந்தர் சத்ரு, பஹிர் சத்ரு என மூன்று முக்கியமான வகையில் உண்டு. தொழிநிமித்தம் வரும் எதிரிகள், கூடவே இருந்து பணியால் வரும் எதிரிகள் என்பது உத்யோக சத்ரு.
கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்து தாக்குவோர் அல்லது கூடவே இருந்து வஞ்சகம் செய்வோர் அந்தர் சத்ரு, காரணமே இல்லாமல் திடீரென வந்து தாக்கும் எதிரிகள் பஹிர் சத்ரு.
அன்னை இந்த மூவகை எதிரிகளையும் அடக்கி எதிரிகளே இல்லாத நல்வாழ்வை தருவாள் அன்னை, எதிரிகள் எந்த உருவில் வந்தாலும் அதை அவளே ஒழித்து, தன் பக்தர்களைக் காப்பாள்.
எதிரிகள் வஞ்சகர்கள் இல்லாத வாழ்வுக்கு அவள் அருள் அவசியம், அவளை வணங்குவோர் ஒரு காலமும் துர்மரணம், துரோகம், வஞ்சகம், ஏமாற்றம், பெரும் கொடூரம் என எதையும் சந்திக்கமாட்டார்கள். இது சத்தியம்.
அவள் எதிரிகளை ஸ்தம்பிக்கச் செய்பவள். அவர்களை அடக்கி நல்வாழ்வு தருபவள், அவள் “பிரம்மாஸ்திர நாயகி” என்பதால் நம் கரத்துக்கு சக்திவாய்ந்த ஆயுதமெல்லாம் தந்து நிலைத்து நிற்கச் செய்பவள், எக்காலமும் நம்மை அவமானப்பட விடாமல் காத்து வருபவள்.
செண்பகமலர் போல மஞ்சள் நிறப்பூக்களிட்டு, எலுமிச்சை சாதம் படைத்து வணங்கினாலே பெரும் மகிழ்ச்சியோடு வரம் தருபவள் அவள்.
அவளை முழுக்க இந்நாளில் மன்றாடுங்கள்.
“ஓம் பகளாமுக்யை வித்மஹே ஸ்தம்பின்யை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்”
எனும் அவளுக்கான காயத்ரி முதல் “ஓம் பகளாமுக்யை நம” எனும் அந்த மந்திரம் வரை சொல்லி சொல்லி வழிபடுங்கள், அவள் தானே
இறங்கிவந்து உங்கள் கண்ணுக்குத் தெரிந்த தெரியாத, அறிந்த அறியாத எல்லா எதிரிகளையும் ஒழித்து உங்களுக்கு நல்வாழ்வு தந்து காவலும் இருப்பாள். அவள்மேல் கொண்ட நம்பிக்கை ஒரு காலமும் பொய்த்ததில்லை எனும் அனுபவம் உங்களுக்கும் கிடைக்கும். நீங்களும் அவளுக்குச் சாட்சியாய் வாழ்வீர்கள். இது சத்தியம்.