தசமஹாவித்யா 10 : கமலாத்மிகா.

தசமஹாவித்யா 10 : கமலாத்மிகா.

இந்த அன்னை தசமஹா வித்யாவின் கடைசிப் படிநிலை. அதாவது எல்லா வரமும் பரிபூரணமான நிலையில் எல்லாம் கடந்த முழுநிலையில், ஒருவனைப் பரிபூரணமாக்கும் வரம் தருபவள், எல்லா வகையிலும் நிறைவு தந்து அந்த நிறைவின் அடுத்தக் கட்டமான முழுத் திருப்தியுடன் இந்த உலகில் இருந்து வெளியேறி பிரபஞ்சத்துடன் இணைவிக்கும் அந்தப் பெரு நிலையினைத் தருபவள் அன்னை.

கமலாத்மிகா என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் நாயகி எனப் பொருள், அதாவது தாமரையில் அமர்ந்திருக்கும் நாயகி எனப் பொருள் வரும்.

ஆம், இதுதான் மஹா லட்சுமி தத்துவம். உலகில் நிறைவினை எல்லோருக்கும் தரும் அந்த தேவியின் அம்சம், இதனாலே இந்தச் சக்தியில்தான் அம்பாள் பகவான் விஷ்ணுவின் மனதில் குடியிருந்து இந்த உலகை இயக்குகின்றாள்.

விஷ்ணுவின் மார்பில் இருந்து எல்லா உயிரையும் காத்து அவர்களுக்கு வேண்டியன அருளி காத்து வரும் அந்த மஹாலட்சுமி இந்தக் கமலாம்பிகா.

இவளே தசமஹா வித்யாவின் கடைசிப் படிநிலை, இவளைத் தாண்டிய வரம் இவளைக் கடந்து அடையும் வரம் என எதுவுவில்லை, எல்லா வரங்களும் இவளுக்கு உட்பட்டதே.

இந்தப் பூமியில் ஒரு உயிரோ மானுடனோ வேண்டுவதெல்லாம் நிம்மதி, முழுத் திருப்தி. அதனை அள்ளி அள்ளி தருபவள் இந்த அன்னை, அதில் செல்வமும் ஒன்று என்பதன்றி செல்வம் மட்டுமே அவள் தருவதல்ல‌.

செல்வம் மட்டும் நிம்மதி தராது, அதனை அனுபவிக்க எல்லாச் சூழலும் பொருந்தி ஒரு நிறைவு எல்லாப் பக்கமும் வரவேண்டும். தோணி உறுதியாக இருந்தால் மட்டும் போதாது கடலில் தோதான நிலை வேண்டும் , இதமான காற்றும் வேண்டும், அன்னை இப்படி எல்லாச் சூழலையும் பொருந்த செய்து முழு நிறைவில் வாழ்க்கைப் படகைச் செலுத்துவாள்.

பசியோடு இருப்பவனுக்கு அதைத் தவிர வேறு சிந்தனை இராது, அது வயிற்றுப்பசி என்றல்ல, ஆசைப்பசி உள்பட்ட எல்லாமும் அப்படித்தான். அன்னை அந்தப் பசியெல்லாம் போக்கி முழு நிறைவினை, திருப்தியினை தந்து அவனே இந்த உலகபந்தி போதும் என எழும்பி பகவானுடன் செல்லும்படி ஞானமும் தந்து வழிநடத்துவாள்.

நிறைவு என்பது எல்லோரும் அரசன் என்பதல்ல, எல்லோரும் சுகபோகம் என்பதல்ல, எல்லோரும் ஆள் அம்பாரத்துடன் வாழ்வது அல்ல‌,
மனம் நிறைய மகிழ்ச்சி எனும் உணர்வு, எல்லா வகையிலும் நிறைவு எனும் ஆனந்த நிலை, அந்த ஆனந்தத்தில உற்சாகமாகக் கடமை செய்யும் வழி.

இதனைத் தருபவள் அன்னை.

மஹா லட்சுமி என்பது எல்லா வகையிலும் இங்குப் பூரணத்தினைத் தரும் சக்தி, எல்லா இடமும் நிறைவினைத் தருபவள் அவளே. சொர்க்கத்தில் ஒரு குறையின்றி காப்பவள் சொர்க்க லட்சுமி, பாதாள புதையலை எல்லாம் அருளிக் காப்பவள், அதன் பூரண சக்தியும் நாகலட்சுமி, அரசர்களின் பூரண செல்வாக்கை தருபவள் ராஜ லட்சுமி.

குடும்பத்தில் நிறைவினைத் தருபவள் கிரக லட்சுமி, வீரர்களின் வீரமானவள் கீர்த்தி லட்சுமி, வைசியரின் திறமையானள் வர்த்தக லட்சுமி,
புண்ணியத்தைச் சேர்த்தால் வருபவள் ப்ரீத்தி லட்சுமி, வேதாந்திகளின் தத்துவம் தயாலட்சுமி, எல்லா உயிரையும் காப்பவள் சோமலட்சுமி
என இங்கு எல்லா நிறைவும் அவள் தருவதே.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனின் இயக்கு சக்தி அவளே என்பதால் அந்த அன்னையே உலக உயிர்களுக்கெல்லாம் அச்சம் தவிர்த்து வாழும் வரம் அருள்கின்றாள்.

இந்த அன்னை தேவி தங்க நிறத்தினள். இமயம் போன்று உயர்ந்த நான்கு யானைகளின் துதிக்கையில் உள்ள பொன்மயமான அம்ருத கலசங்களால் அபிஷேகம் செய்விக்கப்படுபவள். நான்கு திருக்கரங்கள் கொண்டவள். ஜொலிக்கும் ரத்னாபரணங்கள் அணிந்து, வெண்பட்டாடை உடுத்தி, மேல் இரு கரங்களில் புத்தம் புதிய தாமரை மலர்களை ஏந்தி, திருக்கரங்களில் அபயம், வரதம் தரித்து அருள் புரிபவள்.
அன்னை சாதுவானவள், ஆனால் மஹிஷாசுரனை அஷ்ட தசபுஜ துர்க்கையாக மாறி, கொன்றவள் அவளே என்பது தேவி மஹாத்மியம் சொல்லும் சாட்சி.

இந்த அன்னையினை லட்சுமி, ஸ்ரீகமலா, கமலாலயா, பத்மா, ரமா, நளினீ, யுக்மகரா, மா, க்ஷீரோதஜா, அம்ருதா, கும்பகரா, விஷ்ணுப்ரியா எனும் பன்னிரண்டு நாமங்களினால் துதிப்பவரின் எல்லா கஷ்டமும் தரித்திரமும் குறையும். நொடியில் நீங்கும்.

ஒரு வீட்டில் பிச்சை வாங்கச் சென்ற ஆதிசங்கரர் அங்கே தனக்கு நெல்லிகனியினைத் தவிர தர வேறொன்றுமில்லா வறுமையில் அவளின் நிலை கண்டு மனமிறங்கி கனகதாராஸ்தவம் எனும் ஒரு துதியைப் பாடி பொன்மழை பொழியச் செய்தார்.

இந்தத் துதிதான் “கனகதாரா ஸ்தோத்திரம்” என்றானது, இந்த அதிசயத்தைச் செய்தவளே மகாலட்சுமி, அவளே கமலாத்மிகா.

ஏழை பெண் திருமணத்துக்கு வழியின்றி கலங்கிய நிலையில் இருந்ததைக் கண்டார் ஸ்ரீமன்நிகமாந்த மகா தேசிகன். அப்போது அவர் ஸ்ரீ ஸ்துதி எனும் அரிய துதியைப் பாடி மகாலட்சுமி அருளால் பொன் பெற்று அந்த ஏழைக்கு வழங்கினார்.

இவளின் அருள் இருந்தால் தகரமும் தங்கமாகும், ஒன்றுமில்லாததெல்லாம் உயர்வானதாகும். அவள் அருள் நீங்கப்பெற்றால் எவ்வளவு உயர்ந்ததாயினும் அது மதிப்பிழக்கும், செல்வாக்கு இழந்து மிதிபடும்.

ஒரு மனிதன் எவ்வளவு பெரிய திறமையுள்ளவன், ஆற்றல் உள்ளவன் என்றாலும் அவனுக்குத் தேவை நுணுக்கமான அறிவு, அந்த அறிவினைத் தந்து பல உயர்வுகளைத் தருபவள் கமலாத்மிகா.

யாராக இருந்தாலும் லட்சுமியின் கடாட்சம் பெற்றால்தான் ஒரு அடையாளம் அடைய முடியும் என்பதை வெங்கடாத்ரீ என்ற மகான் தன் லக்ஷ்மி ஸஹஸ்ரம் எனும் நூலில் உறுதியாகக் கூறியுள்ளார்.

அன்னை “ஹரிவக்ஷஸ்தலவாஸினி’ என்று வடமொழியில் இத்தேவி அழைக்கப்படுகிறாள். இவளின் பெருமைகள் ஸ்ரீஸூக்தத்தின் பதினைந்து ரிக்குகளிலும் போற்றப்படுகிறது.

அன்னையின் வரம் இருந்தால் முடியாத காரியம் எதுவுமில்லை, எந்த எல்லையும் எட்டமுடியும். அதையே ‘துராதர்ஷாம்’ என்ற சொல் விளக்குகின்றது. அவள் பதினாறு வகை செல்வத்தை வழங்குபவள், செழுமையான வாழ்வுத் தருபவள் என்பதை ‘நித்யபுஷ்டாம்’ எனும் மந்திரம் எடுத்துரைக்கிறது.

பகவான் நாராயணனின் திருமார்பில் உறையும் இவள், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தன்னை உபாசிப்பவர்களுக்கு அருள்கிறாள். திருமால் ராமனாக வந்தபோது சீதையாகவும், கண்ணனாய் வந்தபோது ருக்மணியாகவும், ஸ்ரீநிவாஸனாய் வந்தபோது பத்மாவதியாகவும் அவதரித்தவள் இவளே.

இவள் பூலோகத்தில் தங்கும் இடம் எது தெரியுமா? பசுவின் பின்பாகம். அதை ஒரு புராணக் கதை சொல்கின்றது.

பசுவின் தேகத்தில் எல்லாத் தேவர்களும் தங்கினார்கள். அப்போது லட்சுமியனாவளும் வந்து, ‘‘உன் தேகம் முழுதுமே பவித்ரம். அதனால் உன்பின்பக்கமாகிய பிருஷ்ட பாகத்திலேயே நான் தங்குகிறேன்’’ எனக்கூறி அங்கே இடமும் பிடித்தாள். அதனால் அங்கிருந்து வரும் கோமியம், பசுஞ்சாணம் போன்றவை புனிதமாகிறது.

இதன் தாத்பரியம் என்னவென்றால் அன்னை கடாட்சம் பெற்றதால் பசுவின் கழிவுகளெல்லாம் கூட பெரும் புண்ணிய இடம் பெற்றது. அவளின் சக்தி அப்படியானது என்பது.

இதனாலே கோமியத்தைக் கொண்டு மெழுகப்பட்ட இடம் பவித்ரமானதும் லட்சுமி கடாட்சம் பெற்றதாகவும் ஆகிவிடுகிறது.

இந்த அன்னையின் அவதாரம் பற்றி பெரிய சாட்சியும் புராணமும் உண்டு. அன்னையின் மங்கா இடம்பெற்ற அருள்தலமாக விளங்கும் மராட்டியத்தின் கோலாப்பூர் அவளின் பெரும் சக்திக்கு சாட்சி, அவளின் அவதாரமும் மகா சக்தியும் நுணுக்கமான தாத்பரியத்தையும் போதிக்கும் ஆலயம் அன்றும் இன்றும் என்றும் இந்த மகா லட்சுமியின் தலைமையிடமாக இருந்து அவளின் ஆட்சியில் சாட்சிச் சொல்கின்றது.

இந்த ஆலயம் தோன்றிய வரலாறு அற்புதமானது. அக்காலத்தில் பிரம்மனின் மனதில் இருந்து வந்த கயா, லவா, கோஹ்லா எனும் மூன்று மானச புத்திரர்களும் மூன்று இடங்களை ஆண்டு வந்தார்கள், பின்னாளில் அவர்களின் துர்குணம் அதிகமாகி தாங்களே பெரியவர்கள் என ஆட்டம்போட விஷ்ணு வந்து கயாவினை வீழ்த்தினார், அந்த இடம் விஷ்ணு கயா என்றானது.

அப்படியே லவன் விழுந்த இடம் விதர்ப்ப நாடானது, இந்தக் கோஹ்லா அல்லது கோலா என்பவன் மட்டும் அந்நேரம் பிரம்மனிடம் சரணடைந்து தந்திரமாகத் தப்பிக்கொண்டான், பின் தன் ஆட்சியினை மகன்களிடம் கொடுத்துவிட்டு காட்டுக்குத் தவம்புரியச் சென்றான்.

ஆனால், அவன் பிள்ளைகளான கரவீரன் முதலியோர் தங்கள் பெரியப்பனைக் கொன்றவர்கள் பெரும் தெய்வங்கள் என அவர்கள் மேல் கடும் ஆத்திரத்தில் இருந்தார்கள், அந்தத் தெய்வங்களைப் பழிவாங்க அவர்கள் வழிபாட்டை நிறுத்தினார்கள், யாகங்களைத் தடுத்தார்கள், தெய்வங்களைப் பழித்தார்கள்.

இந்நிலையில் அவர்களுக்கும் தெய்வங்களுக்கும் யுத்தம் உண்டானது. அங்கே எல்லா மக்களும் கொல்லப்பட்டார்கள். கரவீர புரம் எனும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்ட கரவீரனும் கொல்லப்பட்டான்.

தன் சகோதரர்கள், தன் மகன்கள் என எல்லோரையும் இழந்த அந்தக் கோலாசுரன் இந்தத் தெய்வங்களை வெல்ல ஒரே வழி மகாலட்சுமி வழிபாடு என்பதை உணர்ந்து அவளை நோக்கி தவமிருந்தான். அவன் தவத்துக்கு இறங்கி வந்தாள் அன்னை.

“அன்னையே என் நாட்டில் 100 வருடம் நீ இருக்க கூடாது, அந்த வரம் வேண்டும்” எனக் கேட்டான். அன்னை அதனை அருளினாள்.

அன்னை அவன் நாட்டை நீங்கவும் எல்லாத் தெய்வங்களும் தெய்வ சக்தியும் அங்கிருந்து அகன்றன. அதன் பின் அவன் நாட்டில் அசைக்க முடியாச் சக்தியான கோலாசுரன் எல்லா இடமும் சென்று போர்புரிவது, வம்பிழுப்பது என அடாதன செய்துவிட்டு தன் நாட்டுக்குள் வந்துவிடுவான். அங்கே அன்னை இல்லாததால் எந்தத் தெய்வத்தின் சக்தியும் செல்லாது.

100 ஆண்டுகளுக்குள் அவன் பல வரம் பெற்று இன்னும் இன்னும் சக்தியுடையவனாகியிருந்தான். அன்னை 100 ஆண்டு கழித்து வரும்போது அவளையே எதிர்க்கத் துணிந்தான்.

அன்னை தனக்குரிய தலம் அவளுக்கு வேண்டும் என்றாள். அவன் மறுத்தான்.

அந்த கரவீரபுரத்தில்தான் அவள் அருள்பாலித்துக் கொண்டிருந்தாள். அங்கு அவள் தவம் செய்ய வந்து முன்பு குடி கொண்டிருந்தாள், அதுவும் ஒரு புராண வரலாறு.

கலிகாலத்தில் யார் உலகைக் காப்பார்கள், யாருக்கு அந்தப் பொறுமை உண்டு எனத் தேவர்கள் குழம்பியிருந்தார்கள். அவர்கள் குழப்பத்துக்கு விடை சொல்ல வந்தார் பிருகு முனிவர், வந்தவர் சிவனுக்கும் பிரம்மனுக்கும் அதிக பொறுமையில்லை என்பதை உணர்ந்து விஷ்ணுவிடம் வந்து அவரைக் காலால் மார்பில் மிதித்தார்.

அப்படி மிதிக்கும்போதும் விஷ்ணு “முனிவரே! என் மார்பு பலமானது ஆனால். உம் கால் பலவீனமானதல்லவா? வலிக்கின்றதா?” எனச் சொல்லி அவர் காலை பிடித்து வருடிவிட்டார், முனிவரோ இவரே கலிகாலத்தின் தெய்வம் என உருகிச் சொன்னார்.

ஆனால், அன்னையோ தான் இருக்கும் மார்பினை எட்டிமிதித்த முனிவன் காலை இவர் பிடிப்பதா எனக் கோபத்தில் பூலோகம் சென்றார், பின் தவமிருந்து பகவானை அடைந்தார், அவர் தவமிருந்த இடம் இது.

அந்த இடத்தை தரமறுத்தான் கோலாசுரன். பின், பெரிய யுத்தம் நடந்து அவனை அன்னை வதம் செய்யும்போது அவன் ஒரு வரம் கேட்டான்.

கருணையே உருவானவள் அதைத் தர சம்மதித்தாள். அதன்படி தன் பெயரில் இந்த ஊர் விளங்கவேண்டும், தன்னை ஆட்கொண்ட அன்னை அதே உன்னத ரூபத்தில் இங்குக் காட்சித் தந்து நிலைத்து இங்குப் பக்தர் கேட்கும் அனைத்தும் அருள வேண்டும் என மன்றாடினான்.

அன்னை அப்படியே அருளிளாள், அதன்பின் அந்த இடம் கோஹ்லாபூர் என்றாகி கோலாப்பூர் என்றானது. அந்த மகாலட்சுமி கோலாப்பூர் மகாலட்சுமி என்றானாள்.

மஹாலட்சுமியினை வணங்காமல் ஒரு காரியம் முழுமை அடையாது. புத்தி முக்தி இரண்டும் ஒருசேர அருள்பவள் அன்னை என்பது அவளுக்கான சிறப்பு. அவளே பூமாதேவி எனும் வகையில் பூமியில் பிறந்துவிட்ட எல்லோரும் அவளை வணங்காமல் முழுப் பலன்களை அடைந்துவிடமுடியாது, இந்தப் பூலோகம் அவளுக்கானது.

அப்படியான அன்னை மஹாலட்சுமிக்கு இத்திருநாட்டில் பல பெரும் ஆலயங்கள் உண்டு. அதில் முக்கியமானது கோலாப்பூர் மஹா லட்சுமி ஆலயம், மராட்டிய மாகாணத்தில் பிரசித்தியான பன்ஹாலா கோட்டை அருகே அது அமைந்துள்ளது. அந்த அருள்மிகு ஆலயம். இது சக்தி பீடமும் கூட.

இன்றுவரை இந்தியத் திருநாட்டில் தனித்து நிற்கும் ஆலயம் அது, தமிழக திருவரங்கம் போல் அதற்கும் தனிவரலாறு உண்டு, யுகம் யுகமாகத் தனித்து நிற்கும் அந்த ஆலயம் பகவானுடன் தொடர்புடையது.

இன்றும் நவராத்திரி போன்ற முக்கிய விழாக்களில் திருப்பதியில் இருந்து இந்த ஆலயத்துக்குச் சீர் வரிசை செல்லும், திருப்பதியினைத் தரிசித்து, இந்த அன்னையினையும் தரிசித்தாலே முழுப் பலனும் கிடைக்கும் என்பதால் வட மாகாண மக்கள் அதனைத் தவறாமல் செய்வார்கள்.

அன்றுமுதல் இன்றுவரை இந்துமதத்தைக் காப்பது அவளே, தொடக்கத்தில் துஷ்டர் தெற்கே நிரம்பிய காலத்தில் அகத்திய முனி தெற்கே வந்தார். அவர் வரும்போது இந்த அன்னையினைப் பாடி வணங்கிவிட்டே வந்தார்.

அதனை அதிவீரராம பாண்டியர் தமிழ்ப்படுத்தினார். அதுதான் “திருமகள் துதி”, அகத்தியர் பொதுவாக சிவனைத் தவிர பாடாதவர், அவரே அன்னையினைப் பணிந்து துதித்துவிட்டுத்தான் வந்தார்.

பின்னாளில், எல்லா மன்னர்களும் அவளைத் துதித்தார்கள். பாண்டவர், ராமர் என எல்லாப் பெரிய பிம்பங்களும் அவதாரங்களும் வணங்கிய ஆலயம் அது.

பின்னாளில் ஆப்கானியர், போர்ச்சுகீசியர் காலங்களில் இந்து மதத்துக்குப பெரும் ஆபத்து வந்த நிலையில் இந்த அன்னையின் பக்தையே அதனைக் காத்து மீட்டாள்.

ஆம், மொகலாய மற்றும் பிஜப்பூர் சுல்தான்கள் ஆட்சியில் இந்த ஆலயம் திருவரங்கம் போல் பாழ்பட்டு போனது. அதன் விக்ரகத்தை மட்டும் இந்துக்கள் மறைத்து வைத்து தவித்தனர்.

இந்த ஆலயத்தில் வேண்டி நின்ற ஒருத்தி இந்துக்களுக்கு ராஜ்ஜியம் இருந்தால் இதெல்லாம் சரியாகும் எனத் தவமிருந்தாள், அந்த அன்னை அருளாலே ஒரு மகனைப் பெற்று அவனை சத்ரபதி சிவாஜி என்றாக்கினாள்.

அந்தச் சிவாஜி இக்கோவிலை மீளக்கட்டி பெரும் அடையாளமாக மாற்றினார், சிவாஜிக்கு பின் சரிந்த இந்து ராஜ்ஜியத்தை மீட்ட அவன் மருமகள் தாரபாய் இந்தக் கோலாப்பூரை இந்து நாட்டின் தலைந்கராக மாற்றினாள்.

இன்றும் அந்த மண்ணில் இருந்துதான் பெரும் பெரும் இந்து எழுச்சி எல்லாம் வருகிறது. அந்த மண்ணில் இருந்துதான் வியாபாரம், அரசியல், கலை என எல்லாப் பக்கமும் இந்துக்களின் கை மேலோங்கிற்று, அந்த வரத்தை கொடுத்து நிற்பவள் கோலாப்பூர் மகாலட்சுமி.

இந்த மகா லட்சுமியே சிவ தலங்களில் கமலாம்பிகா என்றும் கமலவல்லி, கமலதாயார் என்றும் அழைக்கப்படுகின்றார். புராதன சிவாலங்களில் அவளுக்கோர் இடம் உண்டு, அப்படி திரு ஆரூர் எனும் அந்தத் தலம் அன்னைக்கானது “திரு” என்பதே அன்னைக்கான அடைமொழி.

அங்கு அன்னைக்கும் ஒரு பெரிய சந்நதி இருந்தது. நெல்லையில் காந்திமதி, மதுரையில் மீனாட்சி என்பதுபோல் திருவாரூரில் கமலாம்பிகையாக அவள் இருந்தாள். பின்னாளில், எல்லாம் மாறிற்று என்றாலும் அவளின் அடையாளமக “கமலாயக் குளம்” மட்டும் எஞ்சியிருக்கின்றது.

ஆம், இந்த அன்னை எல்லா இடத்திலும் உண்டு. விஷ்ணுவுக்கு மகாலட்சுமியாய் இருப்பவளே, சிவனுக்கும் ஒரு சக்திவடிவமாய் சக்தி தருகின்றாள், இதனாலேதான் கோலாப்பூர் மகாலட்சுமி ஆலயத்தில் சிவ பார்வதி சந்நதி மேலே உண்டு.

நவக்கிரகங்களில் இவள் சுக்கிரனின் அம்சம்.

புதிய புதிய சிந்தனைகள், காலத்துக்கு ஏற்ற சிந்தனைகள், எல்லோரும் ஏற்கும் ரசனைகள், ஈர்ப்பான விஷயங்கள், அது கலையோ தொழிலோ எதுவோ என்றாலும் அந்தச் சிந்தனைகளைக் கொடுத்து நல்ல பலன்களைக் கொடுப்பது சுக்கிரபகவானே.

இந்தப் பூமியில் வாழ சில விஷயங்கள் அவசியம், மானுடன் தனித்துச் சிந்திக்க வேண்டும், தன்னை நிலை நிறுத்த வேண்டும், தன்னால் பிறருக்குப் பயன்படும்படி வாழவேண்டும்.

யார் ஏராளமான மக்களுக்கு பயனுள்ள காரியங்களை ஏதோ ஒரு வகையில் செய்கின்றானோ, ஏராளமான மக்களால் கவனிக்கப்பட்டு, ஈர்க்கப்பட்டு கொண்டாடப்படுவானோ அவன் தனிவெற்றி பெறுவான்.

அந்தச் சக்தியினை ஆற்றலை வழங்குபவர் சுக்கிரன்.

நல்ல குடும்பச் சூழலை, நல்ல வாய்ப்பை, வசதிகளை நிம்மதியினை ஆனந்தத்தைத் தருபவரும் அவரே.

போகத்துகுரியவன் என அவரை எளிதில் தள்ளிவிட முடியாது, சுக்கிரன் என்றால் உற்சாகம், சுக்கிரன் என்றால் விடாத உழைப்பு, சுக்கிரன் என்றால் புதிய புதிய சிந்தனை, சுக்கிரன் என்றால் எல்லாவற்றையும் நிறைவாகக் கடந்து செல்ல உதவும் நிலை,
வாழ்வின் முடிவில் தன் ஒவ்வொரு பக்கத்தையும் திரும்பிப்பார்க்கும் மனிதன், எல்லாம் நிறைவாய் உணர்ந்தான் என்றால் அதுதான் சுக்கிரனின் ஆசி.

ஒருவன் முழுமையான வாழ்வு வாழ சுக்கிரனின் அருள் மிக அவசியம்.

இந்த முழுமைதான், இந்த நிறைவுதான் வாழ்வின் அடுத்தக்கட்டத்தில் இறைவனை நோக்கி மனதைத் திருப்பச் சொல்லும், அந்த நிறைவுதான் கடைசியில் இறை ஞானத்துக்குச் சாவியாகி வாசலைத் திறக்கும்.

எதையும் அனுபவிக்காமல் எல்லாவற்றின் மேல் ஏக்கம் கொண்டிருப்பவனுக்கு ஞானம் வாய்க்காது, அப்படியே மனதை அடக்கி ஞானத்தைத் தொடமுயன்றாலும் இறைவனை அறிய முயன்றாலும் அடக்கி வைத்த ஆசைகள் பிரமாண்டமாய் எழுந்து மிரட்டி வீழ்த்தும்,
பலர் பாதியிலிலே திசைமாறிச் செல்வது இப்படித்தான்.

அவித்த நெல் முளைக்காது என்பதுபோல் ஆசைதீர அனுபவித்துவிட்டபின் அந்த எண்ணம் எழாது. வெறுமையே மிஞ்சும்.

இதனாலே எல்லாம் அனுபவித்துக் கடந்தபின் வரும் ஞானம் நிலைக்கும், கெட்டபின்பு ஞானி என்பது அதனாலேதான்.
பட்டினத்தாரும், பத்ருஹரியாரும் அதற்குப் பெரும் சான்றுகளாய் நின்றார்கள், ரிஷிமூலம் பார்க்காதே என இந்துக்கள் சொன்னதன் காரணமும் அதுவே.

ஆம், சுக்கிரன் வாழ்வினை மகிழ்வாய், ரசனையாய், நிறைவாய், ஆனந்தமாய், சுகமாய் வாழசெய்யும் கிரஹம், அதன் பலன் மிக அவசியம்.
நிறைவான வாழ்வே பின் நிலையான ஞானத்தையும் வீடுபேற்றையும் கொடுக்கும்.

இந்த வரத்தைத் தருபவள் அன்னை, அவள் வெறும் பொருள் மட்டும் தருபவள் அல்ல. அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு வகையினையும் தருபவள். முக்தி பேற்றையும் அருள்பவள்.

இதனாலேதான் அவள் நான்கு யானைகள் புடைசூழ நிற்கின்றாள். அவை குல்குலு, தமகன், குரண்டகன், சலன் என நான்கு யானைகள். இவை அன்னையினை அண்டுவோர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கையும் தருபவை என்கின்றது ” மங்கள ஸம்ஹிதை”

ஆம், இந்த அன்னையே சுக்கிரனின் அம்சத்தில் எல்லாமும் தந்து முக்திபேறு எனும் மோட்சவீட்டையும் தருவாள்.

யோக சக்கரத்தில் இவள் குல சக்கரம் அதாவது மூலாதாரத்துக்கு முந்தைய சக்கரம் ஒன்று உண்டு அதுதான் எல்லாவற்றின் அடிப்படை ஆதாரம். அன்னை தாமரையில் அமரும் தத்துவம் அவள் எல்லாவற்றின் ஆதாரமாய் இருக்கின்றாள் என்பது.

தசாவதாரத்தில் இவள் வாமன அவதாரத்தின் சாயல். அவளைச் சரணடைந்து இடம் கொடுத்தால் விஸ்வரூபம் கொண்டு நம்மை ஆக்கிரமிப்பாள், கோலாப்பூர் மகாலட்சுமி அந்தத் தத்துவமே.

லக்ஷ்மீ, ஸ்ரீ, கமலா, வித்யா, மாதா, விஷ்ணு ப்ரியா, ஸதீ, பத்மாலயா, பத்மஹஸ்தா, பத்மாக்ஷி, லோகசுந்தரீ, பூதானாம் ஈச்வரீ, நித்யா, ஸத்யா, ஸர்வகதா, சுபா, விஷ்ணு பத்னீ, மஹா தேவி, க்ஷீரோததனயா, ரமா, அனந்தா, லோகமாதா, பூ, நீலா, ஸர்வ சுகப்ரதா, ருக்மிணீ, சீதா, ஸர்வா, வேதவதீ, ஸரஸ்வதீ, கௌரீ, சாந்தி, ஸ்வாஹா, ஸ்வதா, நாராயணீ என எல்லா நாமங்களிலும் போற்றப்படுபவள் அவளே.

அன்னையினை நினைந்து அவளை மன்றாடி வேண்டுவோர்க்கு பூமியில் எதுவும் குறைவுபடாது. எல்லாமே நிறைவாகும். அந்த நிறைவில் ஒருவன் தெய்வத்தைத் தேடி உணர்ந்து மோட்சபாக்கியமும் அடைவான்.

கோலாப்பூரில் மட்டுமல்ல விஷ்ணுவின் ஆட்சி நடக்கும் கயாவிலும் அவளே நாயகி, இதனாலேதான் புத்தன் போன்றவர்கள் அங்கிருந்தே அரசபோகத்தில் திளைத்து கடந்து ஞானத்தைப் பெற்றார்கள், இன்னும் பலர் அழியாப் பெருநிலை அடைந்தார்கள்.

அந்த அன்னையினை அவளுக்குரிய காயத்ரி சொல்லி வணங்குவோர்க்கு அவள் அருள் பூரணமாக உண்டு.

“ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்”

எனச் சொல்ல சொல்ல குறையெல்லாம் முழுமையாகும். “ஓம் கமலாத்மிகாயை நம:” என அவளைத் துதிக்கும் நாளெல்லாம் வெற்றி. அதுவும் பூரணமாக வெற்றி ஒன்றே வசமாகும். அவளை வேண்டி நிற்கும் எல்லா நாளும் அவள் வரமருளும் எல்லா நாளும் விஜய தசமி நன்னாளே, வெற்றி, வெற்றிமேல் வெற்றி தருவாள் அந்த மகாலட்சுமி. இது சத்தியம்.