தசமஹா வித்யா 03 : சின்ன மஸ்தா
தசமஹா வித்யா 03 : சின்ன மஸ்தா.
“தைத்யானாம் தேஹ நாசாய பக்தானாம் அபயாயச” என்ற வாக்கியத்தின் படி தீயவர்களை அழிக்கவும், நல்லோர்களைக் காக்கவும் ஆயுதங்களைத் தாங்கியுள்ளேன் என அன்னை வந்து நிற்கும் கோலம் இது.
இது துஷ்டர்களை அழிக்கும் அன்னையின் உக்கிர கோலங்களில் ஒன்று. ஆனால், மிகுந்த ஆழமான அர்த்தமும், ஞானமும், யோக தத்துவமும் உடையது.
தசமஹா வித்யாவில் அடுத்த தெய்வம் அன்னை சின்ன மஸ்தா, இந்தத் தேவி மாபெரும் தத்துவ தாத்பரியமும் எல்லையில்லாச் சக்தியும் கொண்டவள், இவளின் பெருமையினைப் பற்றி சிவனே உரைத்ததை புராணம் சொல்கின்றது, அவளின் வரலாறும் அங்கிருந்தேதான் தொடங்குகின்றது.
ஆதிமுதல் வாழும் அவளின் தோற்றம் அறிவாறில்லை. அவள் பிறப்பற்றவள், எங்கே அவளின் மாபெரும் தாத்பரியம் வெளிப்பட்டதென்றால் சத்ய காலம் எனும் மகா தொன்மையான காலத்தில் வெளிப்பட்டது.
அசுரனை அழிக்க ஆவேசமாகப் போரிட்டாள் இந்த அன்னை. அப்போது அவளுக்குத் துணையாக அவள் உடலில் இருந்து இடப்பக்கம் டாகினி என்பவளும், வலப்பக்கம் வர்ணினீ என்பவளும் தோன்றிப் போரிட்டார்கள்.
போரில் அசுரனை அவள் முடித்துப்போட்ட பின் அந்த டாகினிக்கும், வர்ணினீக்கும் பசியெடுத்தது. மிகுந்த களைப்பில் அவர்கள் பசியாலும் தாகத்தாலும் வாடியபோது அன்னை வேறு வழியின்றி தன் தலையினையே வெட்டித் தன் ரத்தத்தில் அவர்கள் பசியாற்றினாள். இந்தத் தியாகத்துக்காய்ப் பல வரங்களை ஈசனிடம் இருந்து பெற்றுக் கொண்டவள், மேலும் அசுரரை வதைத்தவள், அதற்கெல்லாம் மூலக் காரணமான ரதி மன்மதனையே மிதித்துப் போட்டு அடக்கி வைத்தாள்.
அவளை வேண்டுவோர்க்கு துஷ்டர்கள் அழிவார்கள், காமம் உள்பட பூலோக மாய எண்ணங்கள் கட்டுப்படும், யோகம் சித்தியாகும் எனப் பல வரங்கள் கிடைக்கும்.
மஸ்து என்றால் தலை, சின்ன என்றால் சின்னாபின்னமாக வெட்டப்பட்ட அடையாளம் கொண்ட எனப் பொருள், வெட்டுண்ட தலையினைக் கொண்டிருப்பதால் அவள் சின்ன மஸ்தா என்றானாள்.
தமிழில் அவள் பெயர் அரிதலை நாயகி.
இந்தத் தேவி பற்றி புராணம் அவளுக்குரிய ஸ்லோகத்துடன் சொல்கின்றது.
“ப்ரத்யாலிடபதாம் ஸதைவ தததீம் சின்னம் சிர:
கர்த்ரிகாம் திக்வஸ்த்ராம் ஸ்வகந்பந்த சோணித
ஸுதா தாராம் பிபந்தீம்முதா நாகபத்த சிரோமணிம்
த்ரிணயனாம் ஹ்ருத்யுத்பலாங்க்ருதாம்
ரத்யாஸக்த மனோபவோபரி த்ருடாம் த்யாயேத் ஜபாஸன்னிபாம்”
அதாவது, “இடது காலை முன்னும், வலது காலை பின்னும் வைத்து நிற்பவளும், வெட்டப்பட்ட தலையையும், கூர்மையான பெரிய கத்தியையும், இரண்டு கரங்களில் வைத்திருப்பவளும், நிர்வாணமாக உள்ளவளும், தலையில்லாத தன் உடலில் இருந்து எழும் ரத்தமாகும் அமிர்தத்தை மகிழ்வுடன் அருந்துபவளும்
பாம்பைக் கயிறு போலாக்கி, தலையில் மணிகளைக் கட்டிக் கொண்டிருப்பவளும், மூன்று கண்களைக் கொண்டவளும், மார்பில் நீலோத்பல மாலை அணிந்திருப்பவளும், செம்பருத்திப் பூவினைப் போன்ற நிறத்தினளுமான ஸ்ரீ சின்னமஸ்தா தேவியை ரதியோடு சேர்ந்த மன்மதன் மேல் நிற்பவளுமான ஸ்ரீ சின்னமஸ்தா தேவியை தியானிப்போம், ஸ்ரீ சின்னமஸ்தா தேவியின் வலது பக்கம் வர்ணினீ தேவியும், இடதுபக்கம் டாகினி தேவியும் இருப்பார்கள். இவர்களும் தேவியின் கழுத்திலிருந்து பீறிடும் இரத்தத்தை அருந்துவார்கள். திகம்பரிகளாகவும், கபால மாலையும் கொண்ட அவர்களோடு அவளை வணங்குவோம்” என்பது பொருள்.
இது மேலோட்டமாகப் பார்த்தால் மிகப் பயங்கரமான காட்சியாகத் தோன்றலாம். ஆனால், அதன் தத்துவமரபினை நோக்கினால் அவளைவிடச் சிறந்த தெய்வமில்லை என்பது விளங்கும்.
அதாவது ரத்தம் என்றால் உயிர்சக்தி எனப் பொருள், இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே ஒருவித உயிர்சக்தியால் இயங்குவது. மழையில் அது உண்டு, பூமியில் உண்டு இன்னும் இந்தப் பிரபஞ்சம் முழுக்க உண்டு.
இந்த உயிர்சக்திதான் பூமியில் தாவரமாக இன்னும் பலவுமாக மழையால் எழுகின்றது. அதனைக் கொண்டு மானுடர் உள்ளிட்டவர்களின் உயிர்சக்தி காக்கப்படுகின்றது, பின் அந்த உயிர்சக்தி இன்னொரு மறைமுக உயிர்சக்தியாகின்றது.
இந்தத் தத்துவம் சூட்சுமமானது, மனிதர்க்குத் தேவையானது உயிரைக் காக்கும் சக்தி, அந்தச் சக்தி இன்னொரு உயிர்சக்தி மூலமே கிடைக்கின்றது, அது மனிதர்க்கு மட்டுமல்ல, தேவர்கள் முதல் எல்லாத் தரப்புக்கும் பொதுவான வகையில் மிக நுணுக்கமாய் நடத்தப்படுகின்றது.
அன்னை அந்த உயிர்சக்தியின் ஆதாரமாய் நிற்கின்றாள், எல்லா உயிரின் இயக்கம் அவளே என்பதை இந்தக் காட்சிச் சொல்கின்றது. ரத்தம் என்பது உயிரைக் குறிப்பது, அன்னை எல்லாவற்றுக்கும் உயிர்கொடுக்கும் சக்தியாய்த் திகழ்கின்றாள் என்பதையே இது முதலில் காட்டுகின்றது.
இங்கு எல்லாமே ரத்தத்தால் வருவது. நெற்பயிரின் ரத்தம் நெல்லுக்குள் பாலாகிக் காய்ந்து அரிசியாகின்றது, பறவைகளில் அது முட்டைக்குள் இடப்படுகின்றது, தாவரங்களில் அது ஒருவித நீராக அவற்றை வளர்க்கின்றது, விலங்குகளில் அது சுரக்கும் பாலாகின்றது, மானுடரில் அது தாய்பாலாகின்றது.
இந்தத் தாய்மை தத்துவத்தைத்தான் எல்லா உயிர்க்கும் அவளே தாய், அவளே ஆதார உயிர்சக்தி என்பதைச் சொல்லும் தாய்மை தத்துவமே சின்ன மஸ்தா.
அங்கே அவள் ஏன் வெட்டுப்பட்ட தலையுடன் நிற்கின்றாள் என்பதில்தான் அவளின் யோக சூட்சுமமும், அவதார சூட்சுமமும் அடங்கியுள்ளது.
அதாவது, உயிர் என்பது மூச்சுடன் தொடர்புடையது. இந்த உயிரும் மூச்சும் கர்மவினையுடன் ஆத்ம பந்தத்துடன் தொடர்புடையது. இந்த ஆத்மா முக்தி அடைய அது சில விஷயங்களை அறிதல் அவசியம்.
மூச்சு, கட்டுப்பட்டால் ரத்தம் கட்டுக்குள் வரும். அப்படி அது கட்டுக்குள் வந்தால் உயிர்சக்தி கட்டுக்குள் வரும், இந்த உயிர்சக்தியினைச் சரியான வகையில் கட்டுப்படுத்தி அதைக் கொண்டு குண்டலினி சக்தியினை எழுப்பி அதைத் தலைக்குக் கொண்டுவந்து உச்சந்தலை சக்கரத்தைத் துலக்கினால், கபால வாசலைத் துலக்கினால், அந்தப் பரமாத்வோடு ஜீவாத்மா இணையும். அந்த வரத்தை அன்னை தருவாள் என்பதே அவள் தலையின்றி நிற்கும் தாத்பரியம்.
நான் எனும் அகங்காரம் அழிந்து, தலைக்கனம் அழிந்தால் முழு ஞானம் கிடைக்கும் என்பதே அவள் தலையின்றி நிற்கும் தத்துவத்தின் தாத்பரியம்.
அன்னையின் இருபக்கம் இருக்கும் இரு பெண்களும் வலது இடது மூச்சினை அதாவது இடகலை, பிங்கலை மூச்சினை, யோக தத்துவத்தில் குறிப்பார்கள்.
இடகலை, பிங்கலை மூச்சினைக் கட்டுப்படுத்தி சுழுமுனை நாடியினைத் துலக்கினால் எளிதாகக் குண்டலினி சக்தி உச்சத்தை எட்டும். உச்சந்தலையினை எட்டும் என்பதைச் சொல்லும் தாத்பரியமே அன்னையின் இந்தக் கோலம்.
இந்தத் தேவிதான் ஞானம் தருபவள்; யோகம் தருபவள்; யோக சித்தி தருபவள். இவளை வணங்கினால் அவள் அருள் பெற்றால் சாகா நிலையினை அடையலாம் என்பதைத் தாண்டி சிவநிலையினை அடையலாம் என்பது ரிஷிகளின் வாக்கு.
ஆம், அவள் ஈசாத்துவ நிலையினைத் தருவாள், அழியா ஞானப் பெருநிலையினைத் தருவாள், என்றும் வாழும் பெரும் வரம் தருவாள்.
அவள் எல்லா உயிர்க்கும் உயிர்சக்தியாக உடலில் உள்ளவள், அவளைச் சரியாக அடையாளம் கண்டு மூச்சடக்கி யோகத்தில் மூழ்கினால் அவள் பெரும் யோகசித்த நிலை தந்து பெரும் ஞானியர் வரிசையில் ரிஷிகள் வரிசையில் தன் பக்தனை அமர்த்துவாள்.
அவளைச் சரணாகதி அடைந்த பக்தன் எல்லா அசுரக் குணங்களையும் வென்று முழுச் சித்தி அடைவான், அவளின் இரு தேவியரும் ரஜோ குணம், தாம்ஸ குணத்தின் அடையாளம்.
அன்னை சத்வகுணத்தின் வடிவம், இவளை அண்டினால் இரு குணங்களையும் தாண்டி அன்னை அருளில் ஆணவ அகங்காரம் மறைந்து முழு ஞானம் வாய்க்கும், மும்மலமும் கரைந்து முழுச் சித்தநிலை வாய்க்கும் என்பதே அவள் வடிவத்தின் தாத்பரியம்.
அவள் ஆடையின்றி நிற்கின்றாளே ஏன்?
அவள் எல்லாம் கடந்த ஞானநிலையினைத் தருவாள். பூலோக மாயைகளான ஆசை, செல்வம், அலங்காரம், அகங்காரம் இன்னும் எல்லாமும் கடந்த ஞான நிலைதருவாள். விருப்பு வெறுப்பற்ற ஆசை, வெறுப்பற்ற மிக உயர்ந்த ஞான மனதை ரிஷிகோலத்தில் தருவாள். அவளே திகம்பரி. எல்லா ஆசைகளையும் பற்றுக்களையும் தன் உடல், தன் மனம், தான் எனும் அகங்காரமெல்லாம் கடந்த ஞானத்தைத் தருவாள் என்பதால் அவள் ஆடையின்றி நிற்கின்றாள்.
அவள் ரதி மன்மதனைக் காலில் போட்டு மிதிக்கின்றாளே ஏன்?
முதலாவது எல்லாத் துன்பத்துக்கும் அடிப்படையான காமம் அவளால் கட்டுப்படும். காமம் என்பது அந்த ஒருசில நிமிட சிற்றின்பம் மட்டுமல்ல, அதனாலேதான் குடும்பம், குலம், சந்ததி, தன் வீடு, தன் குடும்பம் தன் குலம் என ஒவ்வொருவனும் சிக்கிக் கொள்கின்றான்.
எல்லாச் சிக்கலுக்கும் இந்தக் காமமே மூலமாகின்றது. ஒரு பெண் மேல் கொண்ட மயக்கத்தால் எழும் அந்தச் சிக்கல் அவனைப் பந்த பாசம் எனும் பெரும் மாயச்சங்கிலியில் சிக்கவைத்துவிடுகின்றது. அதிலிருந்து வெளிவரமுடியாமல் லௌகீக வாழ்விலே மோகத்திலே மூழ்கி ஆத்மா சிக்கிவிடுகின்றது.
அன்னையினை வழிபட்டால் இந்த மாயையினை விலக்குவாள், பந்த பாசங்களைக் கடந்து அந்த விலங்குகளை வெட்டி, சங்கிலிகளை வெட்டி, ஞானம் தந்து யோகவழியில் எல்லாம் மாயை என உணரவைத்து, யோகசித்தி தருவாள் என்பதைச் சொல்லவே அவள் காலுக்குக் கீழ் ரதி மன்மதனை இட்டார்கள்.
காமம் என்பது கீழான உறுப்புகள் மூலம் அதாவது கர்மேந்திரியம் மூலம் வெளிப்பட்டு வீணாகப் போகாமல், அதை மேல் நோக்கிச் செலுத்தி ஞானேந்திரமான தலைக்குச் செலுத்தி அங்கே உச்சந்தலை சக்கரத்தைத் துலங்க வைத்துப் பற்றற்ற நிலை அடைந்து, பிறப்பற்ற நிலை அடைய வைக்க வேண்டும். அந்த வரத்தை அன்னை தருவாள் என்பதை இந்தக் காட்சியால் சொன்னார்கள்.
அன்னையினை அண்டினால் பூலோகத்தின் எல்லா மாயைகளில் இருந்தும் காப்பாற்றப்பட்டு, எல்லா அசுரக்குணம் கொண்ட எதிரிகளிடமிருந்தும் காக்கப்பட்டு யோகசித்தியும் ஞானமும் அடையலாம் என்பதே அவள் வழிபாட்டின் தாத்பரியம்.
அன்னை யோகியரின் யோகமாக யோக சித்தியாக நிற்கின்றாள். அந்த வரத்தை தருகின்றாள். கீழான காம நிலையில் இருந்து மானுடனை தெய்வநிலைக்கு அழைத்துச் செல்கின்றாள் என்பதே அவள் வடிவம் போதிக்கும் தத்துவம்.
அவள் நவகண்ட யோகம் எனும் உடல் பாகங்களைப் பிரித்து மீண்டும் சேர்க்கும் யோகம் இவளால் சாத்தியம். மிக மிக ஆபத்தானதும், மாபெரும் யோகிகளால் மட்டுமே செய்யப்படும் அந்த யோகம், உடல் உறுப்பைப் பிரித்து மாட்டும் யோகம் இவள் அருளால் சாத்தியம்.
ஜோதிடத்தில் இவள் ராகு தன்மை கொண்டவள். ராகு எனும் கிரஹம் ஒருவனை ஆகச் சிறந்த நிலைக்கும் இட்டுச் செல்லும். அப்படியே எதிர்முனையில் ஆகப்பெரும் வீழ்ச்சியிலும் தள்ளும். இருக்குமிடம் சேருமிடம் பொறுத்து ஒருவனுக்கு அள்ளியும் கொடுக்கும், பெரும் உச்சமும் கொடுக்கும், பெரும் வீழ்ச்சியும் கொடுக்கும்.
அப்படி இந்த உடலில் இருக்கும் உயிர்சக்தியினினைக் கொண்டு நல்லவழியில் பெரும் யோகநிலை, தெய்வநிலையும் அடையலாம். காமம் மற்றும் லௌகீக மயக்கத்தில் சிக்கி வீழ்ந்தும் போகலாம். ஆனால், அன்னையினை அண்டினால் முழுக் காவல் உண்டு, முழு வெற்றி உண்டு என்பது இங்குப் போதிக்கப்படும் தத்துவம்.
ராகு தந்திரகார கிரஹம், அன்னையினை வழிபடுவோர்க்கு அந்த ராகுவால் தொல்லை இல்லை, அவளைப் பணிந்தால் ராகு கிரஹம் நல்லதை மட்டும் செய்யும். ஒருவனுக்கு நல்வழி மட்டும் தரும், அவள் பாம்பைச் சூடியிருக்கும் தத்துவமும் அதுதான்.
அவதாரங்களில் அன்னை பரசுராமர் அவதாரம், அதனாலேதான் தாயின் தலைவெட்டிய காட்சி, அதாவது ரேணுகா தேவியின் தலைவெட்டிய காட்சியும் அன்னை தலையில்லாமல் நிற்கும் கோலமும் சரியாகப் பொருந்துகின்றது.
ரேணுகா தேவி, மாரியம்மன் என வணங்கப்படும் தெய்வமெல்லாம் இந்தச் சின்னமஸ்தா அன்றி வேறல்ல.
ஆழக் கவனியுங்கள், அவளே உயிர்சக்தி, அவளே ஆதார சக்தி. இங்கு எல்லா உயிரின் ஆதாரமாக இருப்பது மழை எனும் மாரி. அந்த மழை கொடுக்கும் உயிர்சக்தியில்தான் இந்தப் பூலோகத்தின் எல்லா உயிர்க்கும் சக்தி கிடைக்கின்றது, அந்த மழைதான் இங்கு எல்லாவற்றிற்கும் உணவூட்டி தாய்போல் நின்று உயிர் காக்கின்றது.
இதனாலேதான் அன்னையினை மாரி என்றார்கள், அந்த மாரியம்மன் சாட்சாத் இந்தச் சின்ன மஸ்தா .
அவளை அண்டினால் நிச்சயம் உயிர்சக்தியானது கீழான மோகம் கொள்ளாமல் மேல் நோக்கிச் சென்று தெய்வநிலையினைத் தரும், உயிர்சக்தியான ரத்தத்தில் இருந்துதான் மோகம் பிறந்து ஒருவனை கீழான நிலைக்குத் தள்ளும், அதே ரத்தத்தைக் கட்டுப்படுத்தி உயிர்சக்தியினை மேல் நோக்கி எழுப்பினால் ஒருவன் தெய்வநிலை அடைவான்.
இன்னும் ஆழமாகச் சொன்னால் ரத்தத்தில் இருந்தே சுக்கிலமும் சுரோனிதமும் இன்னும் எல்லாமும் உருவாகின்றது, அந்தச் சுக்கிலத்தை வீணாகக் காமத்தில் கழிக்காமல் அதைக் கட்டுப்படுத்தி மேல்நோக்கி செலுத்தி அமிர்தமாக்கினால் சாகா நிலை அடையலாம்.
இந்த வரத்தைத் தருபவளே அன்னை, அவளே சின்ன மஸ்தா, இந்த இரவு அவளுக்கானது.
பொதுவாக இரவுநேரமே உயிர்கள் மயங்கும் நேரம், எல்லாவித கீழான சிந்தனைகளும் அந்நேரம் எழும், அப்படியான இரவுப்பொழுதினை அன்னையின் அருளில் புனிதமாக்கினால் சாகா நிலை அடையலாம்.
அன்னையின் அம்சமான ராகு எனும் நாகம் அமிர்தம் உண்டதால் சாகா நிலை அடைந்தது, பரசுராமர் அன்னையின் அம்சம் என்பதால் அவரும் சஞ்சீவிகளில் ஒருவரானார். அதே வரத்தை அன்னை தன்னை அண்டிய பக்தருக்கும் தருவாள்.
எல்லா உயிர்க்கும் உயிர்சக்தி அருளும் அவளே, எல்லா உயிர்க்கும் பசியாற்றும் அவளே காசியில் அன்னபூரணி, இன்னும் பல இடங்களில் பல பெயர்களில் அழைக்கப்படுவாள்.
“அதி சௌம்ய அதி ரௌத்ராயை” என அவளுக்குப் பெயர். அதாவது மிக மிக கருணையானவளும் அவளே, மிக உக்கிரமானவளும் அவளே என்பது பொருள்.
இவளின் பெருமையினை “வித்யா தந்திரம்” எனும் நூல் பெருமையாகச் சொல்கின்றது. பிரசண்ட சண்டிகா என அவளுக்குப் பெயர் சொல்லும் அந்த நூல் அவள் எல்லாத் துஷ்டர்களையும், துஷ்ட சக்திகளையும் துஷ்ட எண்ணங்களையும் அழிப்பாள் என்கின்றது, எல்லா விருப்பமும் அவள் நிறைவேற்றித் தருவாள்.
“மந்திர மாகர்ணவம்” எனும் நூல் அவள் பாவங்களை அழிப்பவள், தாயாக நின்று நம்மைக் காப்பவள், உயிர்சக்தியினை, யோக சக்தியாக மாற்றித் தருபவள் என வணங்குகின்றது.
அன்னைக்கு மிக முக்கியமான தலம் காமாக்யா எனும் அசாமின் மாபெரும் சக்தி பீடம், இன்னும் நேபாளத்தின் காத்மாண்டு, வங்கத்தின் விஷ்ணுபுரம் எனப் பல இடங்களில் முக்கிய ஆலயங்கள் உண்டு.
பௌத்த மரபில் திபெத் பௌத்தத்தில் அவள் “வஜ்ர வாஹினி” என்ற பெயரில் வழங்கப்படுகின்றாள்.
ரேணுகா தேவி எனப்படுபவளும், மாரியம்மா என வணங்கப்படுபவளும் அவளே, தன்னை அண்டியோர்க்குப் பரசுராமர் போல சாகா வரம் தருபவளும் அவளே.
இந்த அன்னைக்கு 12 நாமங்கள் உண்டு, இவை பன்னிரண்டு ராசிமண்டலங்களைக் குறித்து சொல்லப்படுவது.
சின்னக்ரீவா, சின்ன மஸ்தா,சின்ன முண்டதரா, அக்ஷதா, க்ஷோத க்ஷேமகரீ, ஸ்வக்ஷா, க்ஷோணீ சாச்சாதன க்ஷமா, வைரோசனீ, வராரோஹா, பலிதானப்ரஹர்ஷிதா, பலிபூஜித பாதாப்ஜா எனப் பன்னிரண்டு நாமங்கள் உண்டு.
இந்த நாமங்களைத் தினமும் காலையில் சொல்லி அன்னையினை வேண்டுவோர்க்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள் என்பது அன்னை தந்த வாக்கு.
இந்த மூன்றாம் நாள் இரவு சின்னமஸ்தா எனும் தாய்க்கானது, அவளை நினைந்து மனதார சரணடையுங்கள், அவளைத் தஞ்சம் என நம்பி நில்லுங்கள், முழுக்கத் தன்னை நம்பி சரணடையும் பக்தனை அவள் தாயாக நின்று ஏற்றுக்கொண்டு எல்லா வகையிலும் பெருவாழ்வு தருவாள்.
இந்த இரவில் அவளைப் புகலிடமாகக் கொண்டு ஒரு விளக்கை ஏற்றி தூபமிட்டு மலர்கள் தூவி வழிபடுங்கள், அவள் தடுமாறும் குழந்தையினை ஓடிவந்து அணைக்கும் தாய்போல் உங்களை அணைத்து, பெருவாழ்வு தந்து முக்திநிலையும் பெரு ஞான நிலையும் தருவாள். இது சத்தியம்.
அன்னைக்கான காயத்ரி இதோ.
“ஓம் வைரோசின்யை வித்மஹே சின்னமஸ்தாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்”
இதனை 21 முறை சொல்லி வழிபட்டால் அவள் அருள் நிச்சயம் உண்டு. குறைந்தபட்சம் “ஓம் சின்னமஸ்தாயை நம:” என 108 முறை சொல்வோர்க்கு எல்லாக் குறையும் நிறைவாகும், உடலின் ரத்த ஓட்டமும் மூச்சும் சீராகும். அன்னையின் பெரும் அருளில் அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.