தன்வந்திரி ஜெயந்தி
உலகின் மிக தொன்மையான் இந்து இனமே ஆக சிறந்த மருத்துங்களையும் தன்னில் கொண்டுள்ளது, இன்று உலகின் மருத்துவம் ஐரோப்பியரின் மாபெரும் வியாபாரம் என மாறிவிட்ட நிலையில் உலகையே தங்கள் மருத்துவ வியாபாரபிடியில் அவர்கள் கொண்டுவந்த நிலையில் நோய்கள் குறைகின்றதா என்றால் இல்லை.
மாறாக கூடிக் கொண்டே செல்கின்றது, ஒவ்வொரு நோயும் தீர்வதாக அவர்கள் சொல்லும் மருத்துவம் பின் ஓராயிரம் புதிய நோய்கள் பக்க விளைவாகவும் அவர்கள் ஆய்வின் பலவீனமாகவும் வரும்போது மவுனம் காக்கின்றது.
ரத்தபீஜனை போல ஒரு நோயினை அழிக்கபோய் ஓராயிரம் நோய்களை உருவாக்கி போராடிக் கொண்டிருக்கின்றது மேல்நாட்டு மருத்துவம்.
இந்துமரபின் மருத்துவம் அப்படி அல்ல, அது மானிட உடல் ஆரோக்கியத்தை சரியாக வைக்க இயற்கை வழிகளை போதித்தது, நோயற்ற வாழ்வு வாழ என்னென்ன போதனை உண்டோ அத்தனையினையும் போதித்தது.
சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் என பலர் மூலமாக அதனை அவதாரம் மூலம் முதலில் சொன்னது.
இந்துக்களின் தெய்வ அவதாரமெல்லாம் ஒரு இனத்துக்கோ ஒருவர்க்கோ வந்தவை வருபவை அல்ல, அப்படி குறுகிய எல்லைக்குள் அவை இருப்பதுமில்லை.
மானிடருக்கும் இந்த உலகுக்கும் என்ன தேவையோ அதனை அந்த அவதாரங்கள் வந்து செய்யும், அவை அவதாரமாக வந்து அதர்மத்தை அழிக்கும், நன்மையினை பெரும் ஞானத்தை போதிக்கும்.
ஒரு சில நேரம் வந்து மானிடருக்கு மருத்துவ அறிவினையும் விட்டு செல்லும், அப்படி ஒரு பெரும் அவதாரமாக பகவான் வந்த நிகழ்வுதான் “தன்வந்திரி ஜெயந்தி”.
புராணங்களின் படி அமிர்தம் எனும் சாகா வரம் தரும் பொருளுக்காக பாற்கடலை கடையும் போது உலகை காக்கும் பல விஷயங்கள் வந்தன.
அப்போது தோன்றியவர்தான் தன்வந்திரி பகவான், ஐப்பசி மாத தேய்பிறை திரையோதசியில் அவர் அவதரித்தார் என்பது ஐதீகம்.
அவ்வகையில் இன்று (நவம்பர் 10) அவரின் ஜெயந்தி, அவர் எப்படி மருத்துவ நூல்களை கொடுத்தார் என்பதை புராணமே சொல்கின்றது.
தனவந்திரி தண்ணீரிலிருந்து தோன்றியதால் அவருக்கு அப்ஜ எனும் பெயர் வந்தது, அவர் கடைசியாக தாமதமாக வந்ததால் அவர் யாகத்தில் பங்குபெற முடியவில்லை.
இதனால் மறுபிறவி எடுத்து வந்து தேவராகி வரும்படி அனுப்பிவைக்கபட்டார், அப்படித்தான் அவர் காசிராஜன் வம்சத்தில் வந்தார்.
அப்போதுதான் “தனவந்திரி சம்ஹிதா” நூலை அருளும்படி செய்தார்.
அதன் பின் விஷ்வாமித்திரரின் மகனான ஸுஸ்ருதன் ஸமேதம் 100 ரிஷி குமாரர்களுக்கும் ஆயுர்வேதத்தை உபதேசித்தார். தனவந்திரி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கொடுத்த ஞான உபதேஷத்தின் அடிப்படையில் பரத்வாஜர், அஷ்வினிகுமாரர், ஸுஸ்ருதன், சரக ரிஷி, ஆகிய ரிஷிமார்கள் ஆயுர்வேதத்தை வளர்த்தனர்.
மருத்துவ விஞ்ஞானத்தை பின்பற்ற முடியாதவர்கள் மந்திர தந்திரத்தின் மூலம் தனது தேகத்தை நோயிலிருந்து விடுவித்து காயகற்பம் செய்து நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழவும் வழி செய்தார் தன்வந்திரி.
ஆம், தன்வந்திரி தனது “தன்வந்திரி சம்ஹிதா” நூலில் நோய்களை தீர்க்க பல மந்திர தந்திர யந்திர பிரயோகங்களை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தன்வந்திரி ஸம்ஹிதா என்னும் நூலில் பல மூலிகை மருத்துவத்தை பற்றி கூறியதோடு பல மந்திரங்களும் யந்திரங்களை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். தனவந்திரி ஒரு ஆரோக்கிய கவசத்தை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார் அது சிவ அம்ருத மந்திரங்களால் பிராண பிரதிஷ்டை செய்து அணிந்து கொண்டால் நோய் குணமாகும் தேகம் ஆரோக்கியம் பெரும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த ஆரோகியாகவசம் தனவந்திரி கவசம் என்று அறியப்படுகிறது.
பலவகையான குறிப்புகளை தன் தோற்றத்திலே கொண்டிருப்பவர் தன்வந்திரி, கையில் சங்கு சக்கரம் அட்டைபூச்சி,அமிர்தம் என நான்கையும் கொண்டிருப்பார்.
இதன் பொருள் கொஞ்சம் சூட்சுமானது.
அதாவது ஒருவனுக்கு நோய் ஏற்பட முதல் காரணம் ரத்த ஓட்டம், அந்த ரத்த ஓட்டத்தின் மாறுபாடே நோய்களை உருவாக்கும்.
ரத்த ஓட்டத்தை கவனித்து கொண்டால் நோய் அண்டாது என்பதை அட்டைபூச்சியினை கையில் வைத்து போதிகின்றது தன்வந்திரி உருவம்.
அக்காலத்தில் நோயுற்றோருக்கு அட்டைபூச்சியினை கொண்டு ரத்தம் எடுத்தலும் அதாவது கெட்ட ரத்தம் எடுத்தலும் பின் அட்டையின் வாயில் உப்பை தடவி அதை அகற்றிவிட்டு நல்ல ரத்தம் ஊறசெய்வதும் சிகிச்சை முறையாய் இருந்தது.
டயாலிசீஸ் சாயலில் இருக்கும் இந்த முறையினை அன்றே செய்தவர்கள் இந்துக்கள் அதற்கு வழி செய்தது தன்வந்திரி போதனை.
ரத்த ஓட்டத்தை கவனி அதுதான் ஆரோக்கியத்தின் மூலம் என்பதை சொல்லி தன் கையில் அட்டைபூச்சியுடன் நிற்கின்றார் பகவான்.
அந்த சங்கு சக்கரம் அமிர்தம் அட்டைபூச்சி எனும் நான்கும் தத்துவ ரீதியாக ஒன்றோடு ஒன்று தொடர்புடயவை, கொஞ்சம் ஆழமாக நோக்க தக்கவை.
சங்கும் சக்கரமும் பகவானின் அம்சம், சங்கு என்பது சீரான வாழ்வின் காவல், சங்கு என்பது ஒரு பூச்சியின் ஓடு, அந்த பூச்சியின் கவசம், அந்த கவசம் நீங்கிடில் பூச்சி அழியும்.
அப்படி தெய்வத்தின் காவல் நீங்கிடில் மானிடனுக்கு காவல் இல்லை அதனால் தெய்வபலம் அவசியம், பூச்சி வளர வளர சங்கும் வளர்வது போல மானுடன் வளர வளர தெய்வ நம்பிக்கையும் வளர்தல் வேண்டும்.
சக்கரம் என்பது இயக்கம், ஒருவன் தெய்வநம்பிக்கையில் இயங்கிகொண்டே இருக்கவேண்டும், அள்ள அள்ள குறையாத பிரபஞ்ச பெரும் சக்தியில் இயங்கி கொண்டே இருக்கவேண்டும் , தெய்வ நம்பிக்கையில் தொடர்ந்து இயங்குதல் வேண்டும் என்பதை சொல்வது.
இதனை இன்னும் ஆழமாக சொன்னால் புரியும்.
மானுடனுக்கு எதுவெல்லாம் உயரியதாக உள்ளதோ,அருங்காரியமாக அமைகிறதோ அவையெல்லாமே மஹா விஷ்ணுவின் அம்சங்களே, அவ்வகையில் மனமும் சிந்தையும் ஆரோக்கியமும் விஷ்ணுவின் அருள் அல்லது அம்சமாக அமைந்துள்ளது.
இங்கு நோய்கள் என்பது இருவிஷயங்களில் உருவாகும்.
ஒன்று வேண்டாததை உண்பது,, இன்னொன்று வேண்டாத சிந்தனைகளை வளர்ப்பது.
எவர் ஒருவருக்கும் வேண்டாத நோய்கள் ஏற்படுவதில்லை.நம்முடைய உணவு மற்றும் எண்ணம் ஒவ்வொன்றிலும் தீராத பல நோய்களும் அடங்கியிருக்கின்றன.
இங்கு நல்லது கெட்டது எல்லாம் சேர்ந்தே கிடக்கின்றது, அது உணவிலும் என்ணத்திலும் கலந்துவிடுகின்றது.
வேண்டாததை தின்றுவிட்டு ஆரோக்கியத்தை கெடுப்பது போலவே, வேண்டா சிந்தனைகளும் சுவாசத்தை பாதிக்கும் அது எண்ணத்தை பாதிக்கும்.
எண்ணம் ரத்தத்தை பாதிக்கும், விளைவு தீரா நோய்தாக்கும்.
அதனா உணவுமுதல் எண்ணங்கள் சிந்தனைகள் வரை மகா முக்கியம் கண்டதையும் தின்றால் ஆகாத அத்தனையும் சிந்தித்தால் அதற்கான எதிர்வினை உருவாகத்தான் செய்யும்.
ஒரு காரியம் எளிமையானதா இல்லை கடுமையானதா என்பது புறத் தோற்றத்திலோ , அணுக எளிமையானது என்பதிலோ நிச்சயமாக இல்லை.அதன் எதிர்மறை விளைவுகளிலேயே அதன் தன்மை அடங்கி இருக்கிறது.வேண்டுதல் ஒவ்வொன்றுமே பிசாசினையும் நிரப்பி வைத்திருக்கிறது.
“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல” என்பதுவள்ளுவன் வாக்கு.
இது வேண்டாம் என்கிற இரு நிலைகளும் இல்லாமல் அவனடி சேர்ந்தார்க்கு ஒரு துன்பமும் இல்லை என்பது இதன் நுணுக்கமான பொருள்.
இந்த பொருள்தான் தன்வந்திரி தத்துவம், இறைவனில் சரணடைந்தோர்க்கு எந்த நோயும் வராது என்பது.
உண்மையில் பல நோய்கள் மானிடர் வருத்தி வேண்டி பெற்றுக் கொள்ளுவதே ஆகும். அச்சமும் பயமும் கவலையும் நோயின் மூல காரணங்கள்.
இந்த பிரபஞ்சம் மிக மிக நுணுக்கமானது ஒருவன் எதை அதிகம் சிந்திப்பானோ அது அவனை தேடிவரும், இந்த இயக்கம் அப்படியானது.
ஞானியர் அப்படி தவமிருந்து தேடி ஞானத்தை பெறுகின்றனர், பொருள் தேடுவோரோ இதர விஷயங்களை தேடுவோரோ அதற்குரிய வழியினை பெறுகின்றனர்.
துஷ்ட ஆவிகள் கூட தேடினால் ஒருவனை அடைகின்றன.
அப்படி அச்சமும் கவலையும் நோய்பற்றிய சிந்தனையும் ஒருவனை எளிதில் நோயாளியாக்குகின்றன.
பிரபஞ்சம் என்பது நல்ல மற்றும் தீய அதிர்வுகளாலும் சக்திகளாலும் நிரம்பியது, ஒருவன் அச்சத்தாலும் கவலையாலும் நோய்பற்றிய கவலையாலும் பாதிக்கபடும் போது அந்த தீய சக்திகள் ஓடிவந்து அந்த உடலை பிடிக்கின்றன.
நோயாளி என்பவன் உருவாகுபவன் அல்ல, அவன் தன் வீட்டை திறந்து நோய்கள் தன்னை தாக்க அனுமதி கொடுப்பவன்.
கவலை எனும்சாவி நம்பிக்கை எனும் பூட்டை அகற்றிவிடும்போது நோய்கள் புகுந்துவிடுகின்றன.
உண்மையில் ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு மனோபாவம்.விஷ்ணுவுக்கு எதிரான மனோபாவம், மானுடரின் சிந்தையிலும் செயலிலும் அச்சமும் கவலையும் அவநம்பிக்கையும் வரும்போது அந்த தெய்வபாவம் குறைந்து விடுகின்றது.
இங்கே தீமைகளின் கரும் இருள் ஆதிக்கம் செலுத்தி அது நோயாகின்றது.
இதைத்தான் இந்த தத்துவத்தைத்தான் சங்கு சக்கரம் அட்டைபூச்சி அமிர்தகலசம் கொண்டு தன்வந்திரி மூலம் விளக்கினார்கள் இந்துக்கள்.
நீ அஞ்சாதே, பூச்சிக்கு சங்கு போல உனக்கு பகவான் உண்டு. பூச்சி வளர வளர சங்கும் வளர்ந்து காவல் கொடுப்பது போல உனக்கும் தெய்வம் எல்லா காலங்களிலும் காவல் உண்டு என்பதை குறிப்பால்சொன்னார்கள்.
சங்கு ஆபத்து காலத்தில் ஊதபட்டு உதவி கிடைப்பதை போல உனக்கும் பகவான் அருள் ஆபத்தில் உண்டு என்றார்கள்.
பிறப்பில் பாலூட்டும் சங்கு சுடுகாட்டில் ஊதபடும் சங்கு என தொடக்கமும் முடிவிலும் வரும் சங்குபோல இறைவனில் தொடங்கி இறைவனில் முடியும் வாழ்வில் அவனிடம் நம்பிக்கை கொள் என்றார்கள்.
மானிடர் மிக மிக அஞ்சும் விஷயம் தொழிலும் வருமானமும் வாழ்வியல் இயக்கமும்.
அதை சக்கரவடிவில் சொன்னார்கள், எல்லாவற்றையும் சக்கரம் போல இயக்கும் சக்தி சூரியன் சந்திர இயக்கம் என சுழற்றும் சக்தி அதை சரியாக சுழற்றும் சக்தி உன்னையும் இயக்கும் என நம்பிக்கை கொள்ள செய்தார்கள்.
உடலில் அடிபட்டாலோ இல்லை இதர நோய்கள் வந்தாலோ ரத்த ஓட்டம் சரியானால் எல்லாம் சரியாகும்,ரத்தத்தை சுத்தமாக வை என்பதை சொல்ல அட்டைபூச்சியினை காட்டினார்கள்.
எண்ணமும் சிந்தையும் செயலும் நம்பிக்கையுடனும் உற்சாகமுடனும் பகவான் மேல் முழு உறுதியுடனும் இருந்தால் ரத்தம் சுத்தமாகும் அது அமிர்தம் போல நீண்ட ஆயுளை தரும் என்றார்கள்.
இதுதான் தன்வந்திரியின் தத்துவம்.
அதுதான் முதல் தத்துவம், அதை அடுத்தே ஒவ்வொரு பருவகாலத்திலும் ஏற்படும் நோய்களுக்கு மருந்துசொன்னார்கள்.
எல்லார் வாழ்விலும் உடல் நோயில் விழும் காலம் உண்டு, மருத்துவனிடம் அவன் செல்லும் காலம் உண்டு, அந்நேரம் இறைவனை நாட வேண்டும் என்பதே.
அந்த உடலுக்கு சில சிகிச்சை முறைகளையும் சொன்னார்கள், உடலுக்கு சிகிச்சை என்பது அவன் கர்மாவினை பொறுத்தது, மேற்கொண்டு செய்ய கர்மா இருந்தால் உடல் கூடு எழும், கர்மா இல்லையேல் கூட்டை உதறிவிட்டு ஆவி பறக்கும்.
கர்மாவினை முழுக்க செய்யும் பொருட்டே மருத்துவம் அவசியம், தன்வந்திரி இந்த ரகசியத்தைத்தான் போதிக்கின்றது.
அவ்வகையில் 100 மரணங்களுக்கான காரணங்களையும் அதனை தடுக்கும் வழிமுறைகளையும் அது சொல்கின்றது.
சிஸ்ருதர் எனும் மகாமுனிதான் அறுவை சிகிச்சையின் முன்னோடியாக கருதபடுகின்றார்.
தன்வந்திரர் அருளிய அனைத்து மருத்துவ குறிப்புக்களை செயலில்காட்டியவர் இவர்தான், அவரின் சுஸ்ருத சம்ஹிதை மகத்தானது.
1120 நோய்கள், 700க்கும் மேற்பட்ட மூலிகைச்செடிகள், 600 மேற்பட்ட அறுவை சிகிச்சை தத்துவங்களையும் போதிக்கின்றார்.
இந்தியரின் வைத்தியமரபு உலகின் ஆதிகால மருத்துவமாகவும் மிக மிக நுணுக்கமான பக்கவிளைவில்லா மருத்துவமாகவும் கொண்டாடபட்டது.
சீன ஜப்பானிய முறை வைத்தியமெல்லாம் இங்கிருந்துதான் சென்றன, கிரேக்கர்கள் இநதுக்களிடம் இருந்தே மருத்துவம் கற்றனர்.
அதுதான் ஐரோப்பாவில் வளர்ந்து சிஸ்ருதரின் அறுவை சிகிச்சை மட்டும் தனி துறையாகிவிட்டது.
எல்லாவற்றுக்கும் மூலம் சிஸ்ருதர், சிஸ்ருதரின் மூலம் அந்த தன்வந்திரி.
இந்திய மருத்துவம் அந்த பகவானே தந்தது, இங்கு மூலிகை மருத்துவம் அறுவை மருத்துவம் மட்டுமல்ல மாறாக சில அதிர்வு மருத்துவமும் உண்டு.
இன்றைய மின்சார சிகிச்சைக்கு ஈடானவ இந்துக்களின் மந்திரங்கள்.
மின்சாரம் எப்படி அதிர்வினை மெல்லியதாக கொடுத்து உடலின் ரத்த ஓட்டத்தை நாடிகளில் சீர்படுத்துமோ அப்படி மந்திர அதிர்வுகளும் உடலின் மெலலிய அதிர்வினை கொடுக்கும்.
ஓம் எனும் வார்த்தை அபப்டியானது, மந்திரம் என சமஸ்கிருத வார்த்தைகளெல்ல்லாம் இந்த நல்ல அதிர்வுகளை கொண்டவையே.
அவற்றை முறையா உச்சரிக்கும் போது 72 ஆயிரம் நாடிகளும் சீராகும், ரத்த ஓட்டம் சீராகும் அந்நேரம் நோய் அகலும்.
இதனாலே தன்வந்திரியில் மந்திர தந்திர வழிபாடுகளும் உண்டு, இவை மாயம் அல்ல மந்திரம் அல்ல முழுக்க உடற்கூறு அறிவியல்.
இதனை என்றோ அறிந்திருந்தவர்கள் இந்துக்கள்.
இபப்டிபட்ட பல நோய்தீர்க்கும் பின்னணிகளை கொண்டதுதான் இந்துக்கள் கொண்டாடும் தன்வந்திரி தத்துவம்.
இன்று அந்த தன்வந்திரி ஜெயந்தி.
பிரதோஷம் என சைவர்கள் விஷம் உண்டு நோய் தீர்க்கும் சிவனை கொண்டாடும் நாளில்தான், விஷ நோய்களை தீர்க்கவந்தவர் என தன்வந்திரியினை கொண்டாடுவார்கள்.
வடக்கே இந்நாள் தந்தேரஸ் நாள் என்றாகும்.
தீபாவளிக்கு இரு நாட்களுக்கு முன் கொண்டாடபடும் இந்நாளில் தான் தீபாவளி லேகியம் எனும் மருந்து தயாரித்து படைக்கும் வழக்கமும் உண்டு.
இந்துக்கள் பல இடங்களில் தன்வந்திரியினை வழிபடுவார்கள், துடைப்பமும் முறமும் வைத்து வழிபடுதல் மரபு.
அதாவது சுற்றுபுரம் தூய்மையாக இருத்தல் வேண்டும், உணவில் கல் மண் கலக்காமல் சுத்தமான உணவை உண்ணுதல் வேண்டும்.
சூழலும் உணவும் சரியாக இருந்தால் நோய்வராது என்பது அதன் தத்துவம்.
தன்வந்திரர் போதித்து சிஸ்ருதர் சொல்லிகொடுத்த ஆரோக்கிய முறை ஆயுர்வேதம், சித்த மருத்துவம் என பலவகையாக பிரிந்தாலும் பின் அந்நியர் படையெடுப்பு காலங்களில் சிதைந்து போயிற்று.
ஆப்கானியரும் பிரிட்டிஷாரும் தொடர்ந்து ஆண்ட காலங்களில் இவை பின்னடைந்தன.
ஆனால் அந்நிய ஆட்சி எட்டிபார்க்கா கேரளத்தில் இதன் சாயல் உண்டு இந்துஸ்தானின் சில இடங்களில் உண்டு.
அவ்வகையில் கேரள பாரம்பரிய வைத்தியம் தன்வந்திரி அருளியதே, இதனால் அங்கு தன்வந்திரிக்கு கோவில் பெரிதாக உண்டு.
அதை தாண்டி தமிழகம் முதல் பல இடங்களில் உண்டு.
இறைவன்பால் நம்பிக்கை வைத்து கடமையினை செய்து உற்சாகமாக வாழ்வதே நோய் தடுக்கும் வழி என்பதையும், கவலை அச்சம் பயம் கலக்கம் இன்றி வாழ்வதுதான் நோயினை தடுக்கும் வழி என்பதும்.
சுத்தமன சுற்றுசூழல் ஆரோக்கியமான உணவு என்பதுமே நோய்தடுக்கும் வழி என்பதை தன்வந்திரி அடிப்படை தத்துவமாக போதிக்கின்றது.
அதை மீறி கர்மபலன் படியோ இல்லை கர்மத்தை தடுக்கும்படி செய்யவோ நோய் வந்தால் அதனில் இருந்து மீள ஆயிரம் வழிகளை சொன்னது தன்வந்திரி போதனை.
நல்ல இந்து நோயினை வரவிடுவதுமில்லை, வந்தால் கலங்குவதுமில்லை அதனை அவர்கள் பாரம்பரியமும் தெய்வமும் சொன்ன வழியில் குணபடுத்துவான்.
பரம்பொருள் கருணை உள்ளவன், அவன் எல்லா நோய்க்குமான தீர்வை பூமியில் சேர்த்தே படைத்திருகின்றான் உரிய நேரம் உரிய ஞானத்துடன் அதை பயன்படுத்தி நோயினை தீர்ப்பான் என நம்புகின்றான்.
அதை தந்தவன் தன் பகவான் தன்வந்திரி என்பது அவன் நம்பிக்கை.
இந்த பாரம்ப்ரிய மருத்துவம்தான் ஒருகாலத்தில் இந்துஸ்தானை நோயற்ற சமூகமாக ஆரோக்கியமான சமூகமாக வைத்திருந்தது.
அதனால்தான் செல்வம் கொழித்தது.
உடலில் வரும் நோய்க்கு தலையில் ஆணி அடித்தால் சரியாகும் என ஐரோப்பா பலரை கொன்று கொண்டிருந்தபோது இந்துஸ்தானம் இந்த தன்வந்திரியின் அருளால்தான் பெரும் வைத்தியங்களை செய்து கொண்டிருந்தது.
பாஹியனும் யுவான்சுவாம்க்கும் இதைத்தான் கற்றார்கள்.
இந்துக்களின் ஒரு பிரிவினர் பவுத்தமாகும் போது சமணராகும் போது இது அவர்களின் மருத்துவமாயிற்று,இன்றும் அவை இருந்தாலும் அதன் மூலம் தன்வந்திரி என்பதில் சந்தேகமில்லை.
ஆப்கானியரும் அந்நியரும் இங்கு ஆட்சியினை கைபற்றியபோது எழுந்த பெரும் போர்களில் இந்துக்கள் வீழாமல் எழ எழ அடிகக் காரணம் இந்த தன்வந்திரி.
விஞ்ஞானம் எவ்வளவும் முட்டி மோதட்டும், அது வலுக்கவலுக்க நோய்களும் வலுக்கும்.
கடைசியில் விஞ்ஞானம் அவற்றிடம் தோற்று தன்வந்த்ரியிடமே சரண்டையும், காரணம் அதுதான் பகவான் ஞானமாக அருளிய மருத்துவம்.
அந்த நாள் வரும்வரை இந்த பாரம்பரியங்களை இந்துக்கள் காத்துவருதல் வேண்டும்.
காரணம் நாளை உலகை காக்கபோகும் சக்தி இந்துமதம் ஒன்றே, உலகம் இந்துக்களிடம் அப்படி சரணடையும் காலத்தில் உலகை காக்க இதெல்லாம் அவசியம், பகவான் அதைத்தான் சொல்லி இந்துக்களுக்கு அருளினார்.
இந்த நாள் அவருக்கானது, நோயில் இருப்போர் இல்லை நோயாளிக்கான் ஆறுதலை தேடுவோர் இந்த மந்திர்த்தை சொல்லலாம்.
நோய் வராமல் போகவேண்டும் என் நினைக்கும் ஒவ்வொருவரும் சொல்லலாம்.
இந்த மந்திரத்தை சொல்லி இன்று இந்துக்கள் அவரை வழிபடுகின்றார்கள், இன்று மட்டுமல்ல அனுதினமும் ஒவ்வொருவர் வழிபாட்டிலும் இது ஒலிக்கட்டும்.
“ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணுவே நம”