திருபாய் அம்பானி

இந்துஸ்தானம் அக்காலத்தில் இருந்தே வியாபார பூமி, அதன் ஆற்றின் கழிமுகங்களும் துறைமுகங்களும் பண்டைய காலம் தொட்டே வியாபாரத்தில் சிறந்திருந்தன‌

அந்த வணிகத்தில் பல இந்துஸ்தான இனங்கள் முத்திரை பதித்தன, நகரத்தார் எனும் தமிழக செட்டியார்கள் அதனில் முக்கியமானவர்கள், பூம்புகார் அவர்களின் கோட்டையாக இருந்தது அங்கிருந்து கிழக்காசியா, ஆப்ரிக்கா, செங்கடல் என எங்கெல்லாமோ அவர்கள் கப்பல்கள் சுற்றின‌

அந்த இந்துக்களின் ஆதிக்கம் பூம்புகாரின் கடற்கோளுக்கு பின் சுருங்கிவிட்டது, வேறு இடங்களுக்கு வியாபாரம் நகர்த்தபட்டாலும், கிழக்காசிய நாடுகளுடன் பெரும் வியாபார தொடர்பு அவர்களுக்கு இருந்தது அது பிரிட்டிஷ் காலம் வரை தொடர்ந்தது, இன்றும் உண்டு

மேற்கு கடற்கரையில் சூரியாநகர் எனும் சூரத் நகரம் பிரதான வியாபார நிலையமாய் அன்றே ஜொலித்தது, சோமநாதபுரி போன்ற குஜராத்திய இந்து ஆலயங்கள் ஜொலிக்க அவைதான் காரணம்

மேற்கு நாடுகள் அராபியா என பெரும் தொடர்புகளை ராஜஸ்தானிய மார்வாடிகள், குஜராத்திகள் கொண்டிருந்தனர்

தென் ஆப்ரிக்கா பக்கம் தடுமாறிய வாஸ்கோடமாகாவினை இந்தியாவுக்கு அழைத்துவந்ததே குஜராத்திய இநது வியாபாரி ஒருவனேதான்

அப்படியான பெரும் தொழில்முனைவோரும் வியாபாரிகளும் நிரம்பிய பகுதி அது, மொகலாயர்கள் இவர்களை பொன்முட்டை இடும் வாத்துபோல பயன்படுத்தினார்கள், அவுரங்கசீப் இவர்களை ஒடுக்கிவிட்டு இஸ்லாமிய வியாபாரிகள் வளர் வழி செய்தான்

ஆனால் வீரசிவாஜி அதை தடுத்துபோட்டான், தீரா போர்கள் நடந்த காலங்களில் பிரிட்டிசார் மும்பை தீவை வளர்க்க தொடங்கினார்கள், பின் பிரிட்டிஷ் ஆட்சியில் மும்பை வியாபார நிலையமானது

அந்த குஜராத்திய ராஜஸ்தானிய பக்கமுள்ள இந்துக்களுக்கு வியாபாரம் எளிதாக வந்தது எனினும் பிரிட்டிசாரை மீறி அவர்களால் சாதிக்க முடியவில்லை

அராபிய வணிகர்களும் பிரிட்டிசாருமே தொழிலகளை கைவசம் வைத்திருந்தனர், இந்துக்கள் பின் தள்ளபட்டனர்

வீரசிவாஜி காலத்தில் ஓங்கிய இந்து வியாபாரிகளின் கை பின்னால் தாழ தொடங்கிற்று, பிரிட்டிசார் காலத்தில் நிலமை இன்னும் மோசமாயிற்று

சுதந்திரம் என்பது பிரிட்டிஷ் பினாமிகள் ஆளவந்த காலமே தவிர இந்தியர்கள் முழுக்க ஆண்ட காலம் அல்ல, தொழில்கள் பிரிட்டிசார் வசமே இருந்தன‌

அதனை டாட்டா போன்ற பார்சிக்கள் கொஞ்சம் கட்டுபடுத்தினாலும் பெரும்பான்மை தொழில்களில் அந்நிய ஆதிக்கமே இருந்தது

அதை முறித்துபோட்டு புது எழுச்சியினை காட்டியவர் அவர், இந்திய தொழில்துறையில் பாரம்பரிய இந்து மீண்டெழுந்து உலக அரங்கில் மேற்குகரை இந்துக்கள் எப்படியான பாரம்பரியமும் தொழில் முயற்சியும் கொண்டவர்கள் என்பதை நிரூபித்தவர் அவர்

திருபாய் அம்பானி, வீரசிவாஜி கண்ட கனவுபடி இந்துஸ்தான தொழில்கள் இந்துஸ்தான இந்துவிடமே இருக்கவேண்டும், அதுதான் நாட்டுக்கு நல்லது என்ற கொள்கைபடி உருவாகி வந்த ஆச்சரியம்

உண்மையில் அவர் வரலாற்றை திருப்பினார், இந்திய இந்து யாருக்கும் குறைந்தவன் அல்ல என்பதை உலகிற்கு காட்டி பெரும் தொழில் சாம்ராஜ்யம் அமைத்து காட்டி அசத்தினார்

உலகில் எத்தனையோ பிறப்புக்கள் நிகழலாம் ஆனால் அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் செய்யும் வாய்ப்பு மிக சிலருக்கே காலம் வழங்கும். அவர்களுக்கு எல்லா வித சூழலையும் உதவியினையும் காலமே செய்யும்

காலத்தால் முன்போ பின்போ பிறந்தால் அவர்கள் அடையாளமிட மாட்டார்கள் என்பதால் மிக துல்லியமான பிரபஞ்ச கணக்குடன் மிக சரியான நேரத்தில் அவர்கள் பிறப்பார்கள்

உலக சூழலும் அவர்கள் வாழும் சூழலும் அவர்களுக்கு வளைந்து கொடுக்கும் ஏணி தானாக அவர்களை ஏற்றி பறக்க வைக்கும்

உண்மையில் அவர்களே இவ்வளவு பெரும் உயரம் எட்டுவோம் என எண்ணி தொடங்கியிருக்கமாட்டார்கள், அவர்களே நினைக்கா அளவு உயரத்தை அது கொடுக்கும்

அவர்களில் ஒருவர் திருபாய் அம்பானி

குஜராத்தின் நடுத்தர குடும்ப பிறப்பு, பெரும் சொத்தோ பின்புலமோ கிடையாது. ஆனால் உடலில் ஓடியதெல்லாம் வியாபார மூளை அது 16 வயதிலே தெரிந்தது

அது 1948ம் ஆண்டு அரபு நாடுகளில் எண்ணெய் கண்டறியபட்ட காலம், அப்பொழுதுதான் ஏமன் துறைமுகத்துக்கு வேலைக்கு சென்றார், ஏமனில்தான் அவர் வாழ்வு தொடங்கிற்று

வெறும் பொதி சுமக்கும் வேலைதான் அவருக்கு ஆனால் அதில் இருந்துகொண்டே நிர்வாகம் கற்றார், லாப நோக்கம், நெளிவு சுழிவு எல்லாம் கற்று கொண்டார், சுமார் 10 ஆண்டு அந்த பணி நீடித்தது

அம்பானி எப்படிபட்ட வியாபாரி என்றால் அப்பொழுது அந்நாடு வெள்ளி நாணயம் வெளியிட்டது, அதன் மதிப்பு சில காசுகள் என்றாலும் அதன் வெள்ளியின் மதிப்பு அதன் நாணய மதிப்பினை விட உயர்ந்தது

அதாவது 25 பைசாவுக்கு அதை வாங்கி உருக்கினால் 50 பைசாவுக்கு வெள்ளி தேறும், இதை அம்பானி கண்டறிந்து செய்யத் தொடங்கி ஒரு கட்டத்தில் அந்த அரசாங்கம் அந்த நாணயத்தையே நிறுத்திற்று, சந்தையில் இருந்ததையும் திரும்ப பெற்று கொண்டது.

1958ல் இந்தியா திரும்பினார் அம்பானி, அது உலகபோரில் இருந்து மெல்ல உலகம் மீண்டு கொண்டிருந்த காலம், இந்தியாவின் பெரும்பான்மையான தொழில்கள் பிரிட்டிசாரின் இந்திய ஏஜெண்டுகளிடம் இருந்தாலும் அமெரிக்கா உலகில் வளர்ந்துவந்த காலம்

அரேபியாவில் உருவான பெட்ரோல் சந்தை ஆசிய முகத்தை மாற்றிற்று, பெட்ரோல் கழிவுகளில் இருந்து என்னென்னவோ வந்து உலகை புரட்டி கொண்டிருந்தன‌

அந்த நேரம் சூரத் நகரின் முகமும் மாற தொடங்கிற்று பெரும் வளர்ச்சி தென்பட்டத்

இந்த இடத்தில்தான் பாலிஸ்டர் வியாபாரத்தை செய்ய முடிவு செய்தார் அம்பானி தன் உறவினர் சம்பக்லால் தமானியுடன் “மஜின்” என சிறிய கம்பெனி தொடங்கினார், பாலிஸ்டர் நூலை வாங்கி விற்கும் தொழில் அது, அம்பானிக்கும் தமானிக்கும் மோதல் வர தனி ஆளாக அந்த சிறிய கம்பெனியினை நடத்தினார்

அது பாம்பே டையிங் எனு பகாசுர கம்பெனி மும்பையினை ஆட்டிவைத்த காலம், அவர்கள் வைத்ததுதான் சட்டம் அது காங்கிரஸ் பாரம்பரிய வாடியாக்கள், பாகிஸ்தானை உருவாக்கியவர் மகளான தினா வாடியா ஆட்டி வைத்த பெரும் பின்புல கம்பெனி

அந்த கம்பெனிதான் நூல் மற்றும் இந்திய ஜவுளி சந்தையினை கட்டுபடுத்தியது, அம்பானியின் ஆட்டம் அவர்களோடுதான் தொடங்கிற்று.

இன்றுவரை அது அதிசயம், ஒரு பின்புலமும் இல்லா அம்பானி மெல்ல மெல்ல நூல் சந்தையினை கட்டுபடுத்தினார், அவருக்கென ஒரு இடம் உருவாயிற்று.

அடுத்த பத்தாண்டுகளில் ரிலையன்ஸை தொடங்கினார், அதில் அவரின் உழைப்பு ஈடு இணையற்றது மிக வேகமாக வளர்ந்த ரிலையன்ஸ் பாம்பே டையிங்கினை தூக்கி எறிந்தது

கொஞ்சமும் சுணங்காமல் பெட்ரோலிய துறையில் கால்வைத்தார் அம்பானி ஆனால் பக்கவாதம் அவரை தாக்கி ஒரு கையினை முடக்கிற்று

அதையும் மீறி வேகமாக இயங்கினார், இந்தியாவின் நம்பர் 1 இடத்தை எளிதாக பிடித்தார், தொடர்ந்து செல்போன் இன்னும் கணிப்பொறி என காலத்துக்கேற்ற தொழிலில் கால் வைத்தபொழுது இரண்டாம் முறை மாரடைப்பு வந்து இறந்தார்

68 வயதில் இறந்த அம்பானி இந்திய தொழில்துறைக்கு காட்டிய முன்மாதிரிகள் அலாதியானது

முதலில் தமிழக வழக்கபடி அரசியலில் சேர்ந்துதான் சொத்துகுவிக்கமுடியும் என அவர் காட்டவில்லை, காலத்துக்கேற்ற உழைப்பு மனிதனை உயர்த்தும் என நம்பினார்

அம்பானியின் மிகபெரிய பலம் தன் தொழிலை தன் தொழிலாளர்களோடு சேர்ந்து நடத்தியது, கம்பெனியின் வாட்ச்மேன் கூட அவரை எளிதாக சந்தித்து தன் சிக்கலை சொல்லமுடியும், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் கையாண்டார், அவரின் வெற்றிக்கு முழு காரணம் அவர் காட்டிய தொழிலாளர் நலமே

அம்பானி சர்ச்சைகளில் சிக்காதவர், தேவையற்ற சர்ச்சைகளில் தானோ தன் கம்பெனியோ சிக்கிகொள்ள ஒருபோதும் இடமளிக்காதவர்

தன் தொழில் இந்திய மக்களுக்கு நல்ல பலனை கொடுக்க வேண்டும், அவர்களும் வாழவேண்டும் தேசத்தின் பணம் தேசத்திலே சுற்ற வேண்டும், நாமும் பலருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இருந்தது

அவரின் வியாபாரமெல்லாம் மக்கள் சலுகைவிலையில் பல விஷயங்களை பெறவேண்டும் என்ற பொதுநலத்தில்தான் இருந்தது

அவரின் வியாபார இலக்கே அடிமட்ட மக்கள் என்பதால் மிகுந்த கவனமாக அவர்கள் திருப்திக்குத்தான் தொழில் நடத்தினார், அதுவும் அவர்கள் பயன்பெறும் தொழிலை நடத்தினார், அதுதான் அவரை உயர்த்தியது

அம்பானியின் மிகபெரிய சாதனை தான் மட்டும் வளராமல் தன்னை நம்பியோரை சேர்த்து வளர்த்தது, பங்கு முதலீட்டில் தன் கம்பெனி ஆட்கள் முதல் பொதுமக்கள் வரை இழுத்து போட்டு அவர்களையும் உயர்த்தினார்

அவரின் வருமானம் பல்லாயிரம் குடும்பங்களுக்கும் செல்லுமாறு பார்த்து கொண்டார்

எல்லா தொழிலதிபருக்கும் சில சர்ச்சைகள் வரும், வியாபாரம் என்பது அதுதான் ஆனால் நாட்டின் மிக முக்கிய முகமாக உருவாகி ஒரு இந்தியன் உலகளவில் ஆதிக்கம் செலுத்தமுடியும் என நிரூபித்தவர் அம்பானி

அம்பானியின் ரிலையன்ஸை வெறும் கம்பெனி என்றோ, சிலர் வசைபாடுவதை போல அது சுரண்டல் கம்பெனி என்றோ நகர முடியாது

அது ஒரு சரித்திர உண்மையினை தன்னுள் கொண்டிருக்கின்றது

ஆம், இந்தியாவின் பெரும் பலம் இந்நாட்டின் மக்கள் அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் தனதாக இருக்கவேண்டும், இந்திய பணம் தனக்குவரவேண்டும் என்றுதான் பிரிட்டிஷ்காரன் ஆட்சி செய்தான்

இந்தியர்களை கொண்டே தயாரித்து அதற்கு குறைந்த செலவு செய்து பின் அதையே அதிக விலைக்கு விற்று இந்திய செல்வத்தையெல்லாம் லண்டனுக்கு அடித்து சென்றான்

இதில் நெசவுதொழிலையும் அவன் விட்டுவைக்கவில்லை, அவன் வருமானத்தில் பெரும் பங்கு இந்திய ஆடை விற்பனையில்தான் இருந்தது

காந்தி இதற்காகத்தான் கை நெசவு, அந்நிய துணிபகிஷ்கரிப்பு என காரியங்களை செய்தார், ஆனாலும் பிரிட்டிஷ்காரன் இங்கு ஆதிக்கம் செலுத்தினான், சுதந்திரத்துக்கு பின் அவன் அடிமைகள் சில அவன் சார்பாக செய்தன‌

அம்பானி ஒரு இந்தியனாக அதை உடைத்தார், இந்திய ஜவுளிதுறையில் மிகபெரிய புரட்சியினை காட்டினார், சல்லி விலையில் ஆடைகளை அள்ளி எறிந்தார், மிக குறைந்த விலை தயாரிப்பில் அவரால் உருவாக்க முடிந்தது

கிட்டதட்ட அது காந்தியின் கனவுதான், இந்தியர் இந்தியாவின் ஆடைகளை வாங்கினால் என்னாகும் என்ற கனவைத்தான் மெய்பித்தார் அம்பானி

அதில்தான் இன்று இந்தியர் வண்ண வண்ண ஆடை அணிவது முதல் உலகெல்லாம் இந்திய துணிகள் ஏற்றுமதி ஆகும் அளவு நிலை வந்திருக்கின்றது

இந்த புரட்சியினை செய்தவர் அம்பானி, அதை மறுக்கமுடியாது

இன்று அம்பானி என கதறுபவர்கள் அக்கம்பெனி பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுத்து மில்லியன் டாலர் வரி அரசுக்கு செலுத்துவதை சொல்லமாட்டார்கள்

அந்த வரிபணம் இந்நாட்டின் ராணுவ பாதுகாப்பு முதல் கொரோனா ஊசிவரை செலவாகின்றது என்பதையும் சொல்லமாட்டார்கள்

நம்மை நாமே ஆளும் சுதந்திர நாட்டில் இந்தியன் இத்தொழிலை செய்து அந்த பணம் தேசத்திலே சுழன்று அவர்கள் வரிபணமும் அரசுக்கு செல்வது சரியானது

அம்பானியின் சாதனை எது என்றால் அவரின் ரிலையன்ஸ் வந்தபின்புதான் இந்திய ஜவுளி துறையே தலைகீழ் மாற்றம் கண்டது இன்று இந்தியா முழுக்க தடுக்கிய இடமெல்லாம் ஜவுளிகடைஎன்பது அவரின் புரட்சிதான் சந்தேகமில்லை

உண்மையில் அடிமட்ட மக்களின் தேவை அறிந்து அவர் செய்ததுதான் அவரின் வெற்றிக்கு காரணம்

சுதந்திரம் வாங்கி இந்தியா என்ன கிழித்தது என்பதை ஒரே வரியில் சொல்லலாம்

“அன்றெல்லாம் ஆடை பிரிட்டிஷ்காரனிடம்தான் வாங்க வேண்டும், அதுவும் பெரும் தொகை கொடுத்து வாங்க வேண்டும்

வழி இல்லாவிட்டால் அரைமுழ வேட்டியோ 4 முழம் சேலையோடு திரியவேண்டும், அப்படித்தான் இந்திய நிலையினை பிரிட்டிஷ்காரன் ஆக்கிவைத்திருந்தான்

இன்று சுதந்திர இந்தியாவில் நாம் விதவிதமாக அணிகின்றோம், இந்தியர் எல்லா தொழிலையும் செய்யமுடிகின்றது, எல்லா வசதிகளையும் அனுபவிக்கமுடிகின்றது”

அம்பானிகள் ஒன்றும் பெரும் சுரண்டல்காரர்கள் அல்ல, மக்களுக்கு எது தேவையோ அதை சரியாக செய்தார்கள், இன்றும் அவர்களின் ஜியோதான் இணைய புரட்சியினை இந்தியாவில் செய்திருக்கின்றது

ஜவுளிமட்டுமல்ல காலத்தின் அவசியமான இணையமும் உலகிலே மிக சல்லி விலையில் இந்தியாவில் கிடைக்க அவர்கள்தான் காரணம்

இப்பொழுது இந்திய ராணுவத்துக்கான கருவிகளையும் செய்ய தொடங்கிவிட்டார்கள், இது தேசத்துக்கு நல்லது

1958ல் வெறும் நூலை வாங்கி வைக்கும் நிறுவணமாக தொடங்கபட்ட கம்பெனி அடுத்த 30 ஆண்டுகளில் பெரும் ஆலமரமாக வளர்ந்து பல்லாயிரம் பேருக்கு அடைகலம் கொடுத்து நாட்டுக்கு அடையாளமாய் மேகமாய் காவலாய் நிற்பதெல்லாம் சாதாரணம் அல்ல‌

அம்பானி இந்திய தொழில்துறையின் மாபெரும் அடையாளம், கையில் காலணா இல்லாமல் தன்னையும் காலத்தையும் நம்பி களமிறங்கி விடா முயற்சியால் இந்திய அடையாளத்தையே காட்டிய பெரும் பிம்பம்

இந்திய தொழில்துறையில் அவர் வாழ்வும் நிர்வாகமும் எக்காலமும் ஒரு பாடம், அதை கற்காமல் யாரும் அங்கு தேர்ச்சி பெற முடியாது

இன்று (28/12) அம்பானியின் பிறந்த நாள்.

அவருக்கு அதிகபடிப்பில்லை, அவருக்கு அப்பா தாத்தா அரசியலிலும் இல்லை, அவருக்கு டாட்டாக்கள் போல முன்னோர் விட்டுசென்ற கம்பெனியுமில்லை, அரேபிய சுல்தானோ ராக்பெல்லர் போல எண்ணெய் கிணறுமில்லை

ஆனால் அவர் போராடினார், ஒவ்வொரு மக்களுக்கும் கால்த்துக்கு ஏற்ப எது தேவை என சிந்தித்து தொழில்வளர்த்தார், அரசாங்கமும் மக்களும் தன்னால் எப்படி பலன்பெறமுடியும் என சிந்தித்தார் அந்த பொதுநலம்தான் அவரை மாபெரும் சாம்ராஜ்ய சக்ரவர்த்தியாக நிறுத்திற்று

சுதந்திர இந்தியா எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும் நாடு, அதில் திறமை இருக்கும் இந்தியன் முன்னேறுவான் என்பதை நிருபித்த அம்பானியின் பிறந்த நாள் இன்று

உண்மையில் அம்பானியின் வளர்ச்சி பாஜக கட்சி உருவாகும் முன்பே நடந்துவிட்டது, இந்திரா காலத்திலே அவர் உச்சத்தில் இருந்தார், மோடி அரசு இந்திய தொழிலதிபர்களுக்கு இத்தேசம் என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் இந்திரா வழியில் செய்து கொண்டிருக்கின்றது அதில் சர்ச்சைக்கே இடமில்லை

சுதந்திர இந்தியா ஒரு இந்துவினை ,நல்ல இந்துவினை உலக பணக்காரனாகும் அளவு வாய்ப்பினை வழங்கியிருக்கின்றது, இந்த இந்து பெரும்பான்மை தேசத்தில் ஒரு இந்து உலகளாவிய தொழில் சாம்ராஜ்யத்தினை உருவாக்கியிருக்கின்றான் என்பதில் தேசம் பெருமை கொள்கின்றது

உலகின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவன் விநாயக பக்தன் என்பது ஒவ்வொரு இந்துவும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்

தென்னக நகரத்தார் எனும் செட்டியார்களின் குல தெய்வமாக பிள்ளையார்பட்டியில் அருள்பாலிக்கும் அதே விநாயாகர்தான் அம்பானிகளுக்கும் அருள்பாலிக்கின்றார்

இந்துஸ்தானில் எல்லாமே ஒரே தெய்வம், ஒரே குலம், ஒரே வணிகம்…