திருமுருகாற்றுப்படை : 02

இரண்டாம் பத்து வரிகள்

“மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோபத் தன்ன தோயாப் பூந்துகில்
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்,
கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி
னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச்
சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி,
துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதி”

May be an image of 1 person, temple and text

இனி பாடலின் பொருளைக் காணலாம்.

“மால்வரை நிவந்த சேண் உயர் வெற்பில்” அதாவது வானம் வரை உயர்ந்து வளர்ந்த பெரும் மூங்கில்களை கொண்ட எனப் பொருள்.

அடுத்து “கிண்கிணி கவை இய ஒண் செம் சீறடி”, அதாவது கிண்கிணி ஒலிகள் ஒலிக்கும் சிலம்புகளைக் கொண்ட அழகான சிவந்த பாதங்கள் எனப் பொருள்.

அடுத்து “கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்”, திரண்ட கால்களும் குறுகிய இடையும் பருத்த விரிந்த தோள்களும் எனப் பொருள்.

அடுத்த வரி “கோபத் தன்ன தோயாப் பூந்துகில்”. அதாவது இந்திரகோபம் எனும் பூச்சியின் இயல்பான செந்நிறம் போல செந்நிறமான எனப் பொருள்.

அடுத்து “பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்”, பலவகை மணிகளால் அலங்கரிக்கப்பட்ட அணிகலன்களை இடுப்பில் கட்டிய.

அடுத்து “கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி”, கையால் செய்யப்பட்ட ஆடைகள், அணிகலன்கள் ஒப்பனைகளால் அழகு வராமல் இயல்பான அழகு வரபெற்ற‌,

அடுத்து “நாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச்”, நாவல்பழம் போன்ற நிறத்தில் ரத்தினங்களை பொன்னில் சேர்த்து அணிந்த,

“சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி”, அதாவது தொலைவில் இருந்து பார்த்தாலே ஜொலிக்கின்ற மேனி உடைய‌,

அடுத்து “துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதி”, துணைக்கு இருக்கும் பெண்களெல்லாம் பாராட்டும் படியான நெய் பூசிய கூந்தலைக் கொண்ட எனப் பொருள்.

இக்காட்சி அந்த திருப்பரங்குன்ற மலையின் அழகையும் அங்கே வரும் தேவமகளிர் எனும் சூரர் மகளிரை குறிப்பது.

சூரர் என்றால் அழகைக் கண்டு அச்சப்படும் பெயர், அழகில் மயங்குதல் வேறு இவ்வளவு அழகு கொண்டவர்கள் சாதாரணம் அல்ல என அஞ்சுதல் வேறு.

இந்த தேவலோக பெண்கள் அப்படி அஞ்சும் அழகை கொண்டவர்கள் என்கின்றார் புலவர்.

தேவலோகத்தில் எல்லாம் கிடைக்கும் கற்பகதரு எனும் கற்பக மரத்தின் மலர்கள் கூட கிடைக்கும். ஆனால் அதிசிறந்த அழகான வண்ண குறிஞ்சி மலர்கள் கிடைக்காது.

அந்த தேவலோக பெண்கள் இந்த மலர்களைத் தேடி முருகப்பெருமான் ஆட்சி செய்யும் மலைக்கு வருகின்றார்களாம். முருகப்பெருமானின் மலை வானலோகத்தில் இல்லாத வளங்களை அழகுகளையெல்லாம் கொண்டிருக்கின்றதாம்.

வானலோக பெண்கள் ஒளிமிக்கவர்கள். தெய்வலோக அழகு கொண்டவர்கள். ஆனால் முருகப்பெருகான் அணியும் செங்காந்தள் மலர் போல அழகான மலர்கள் இல்லை என்பதால் அந்த அழகான மலர் தேடி வருகின்றார்களாம்.

அந்தக் காட்சியினை விளக்குகின்றார் நக்கீரர்.

வான்வரை உயர்ந்த மலையில் பெரிய பெரிய மூங்கில்களை கொண்ட மலைகாட்டில் கிண்கிணி என சலங்கை ஒலி இசைக்க, மெல்லிய சிவந்த பாதங்களால் அடியெடுத்து வைத்தபடி அப்பெண்கள் வருகின்றார்கள்.

அவர்கள் தெய்வீக அழகு கொண்டவர்கள் என்பதால் அவர்கள் அங்க அழகுகளும் மேனியும் மிகுந்த வனப்பு கொண்டதாய் இருக்கின்றது.

அவர்கள் வசீகரமான தோற்றம் கொண்டவர்கள், கால் அழகும் சிறுத்த இடையும் விரிந்த தோள்களும் கொண்ட அழகான உருவம் கொண்டவர்கள்.

அவர்கள் எப்படியான உடை அணிந்திருக்கின்றார்கள் என்றால் செக்க சிவந்த உடை, இந்திர கோபம் எனும் பட்டுபுச்சி போல இயல்பாகவே சிவந்த உடையினை அணிந்திருக்கின்றார்கள், செயற்கை சாயம் அல்லாமல் பட்டுப்பூச்சியின் மேனி போல் அது சிவப்பானது.

இடையில் மணிகள் கோர்க்கப்பட்ட உடைகளை அணிவது பெண்கள் வழமை, அந்த அணிகலனான மாலைக்கு மேகலை எனப் பொருள்.

இடுப்பில் அணியும் அணிகலனொடு கூடிய ஆடை பல வகைகள் உண்டு, பல வடிவம் உண்டு எட்டு அடுக்கு கோர்வை, பதினாறு அடுக்குகள் முப்பத்திரண்டு அடுக்குகள் என அது பல வகைப்படும்.

கலாபம், பருமம் எனப் பல வகை உண்டு. ஏழு அடுக்கு கொண்டது மேகலை, இவர்கள் அந்த மேகலையிலை அணிந்திருகின்றார்கள்.

அவை ஏழு அடுக்காக இடுப்பை மறைத்து அழகுற ஏழுவடம் கொண்ட மாணிக்க மாலையாக மின்னுகின்றன. அந்த கோலத்தைக் காணும்போது இவை எல்லாம் கை வண்ணத்தில் செய்யபட்ட அலங்காரம் அல்ல, இயல்பாகவே அப்பெண்கள் உடலோடு வந்த அழகு என்பது போல் தோன்றும்.

இடுப்பில் இப்படி மேகலை அணிந்த பெண்கள் மேலே ரத்தினங்கள் அணிந்திருக்கின்றார்கள். அந்த சிவந்த ரத்தினம் எப்படியானது என்றால், சாம்பூநதம் எனும் சாறால் செய்யப்பட்டது போல தோன்றும்.

சாம்பூநதம் என்பது நாவல் பழங்களின் சாறு ஆறாக ஓடும் காட்சி.

இந்துஸ்தானுக்கு ஜம்பூத்தீவு நாவலந்தீவு என்றொரு பெயர் உண்டு, அந்த பெயர் காரணத்தை சொல்கின்றார் நக்கீரர்.

நாவல் மரங்கள் நிறைந்த இந்த நாடு நவால் தீவு என அழைக்கப்பட்டு வடமொழியில் ஜம்பூ என அதே பொருளில் அழைக்கப்பட்டது.

அந்த அளவு நாவல் மரங்கள் பெருகியிருந்தன‌.

அந்த நாவல் கனிகளின் சாறு ஓடும் ஆறுக்கு சாம்பூநதம் எனப் பெயர். அந்த சாம்பூநதத்தில் செய்தது போன்ற செக்க சிவந்த ரத்தினங்களை அப்பெண்கள் அணிந்திருக்கின்றார்களாம்.

அவர்கள் அழகின் தோற்றம் அருகில் சென்று பார்க்க அவசியமில்லா அளவு எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடியது. அவ்வளவு ஒளிமிக்கவர்கள்.

இப்படி அழகாக ஜொலிக்கும் தேவலோக பெண்களின் கூந்தல் அழகை பற்றி அடுத்து பாடுகின்றார் நக்கீரர். அதனை பின்னர் பார்க்கலாம்.

இங்கே இயற்கை அழகு, மலை அழகு, தேவலோக அழகை காட்டும் நக்கீரர், எல்லாம் சிகப்பு எனும் தொடர்பில் ஒரு தத்துவத்தை விளக்குகின்றார்.

இந்த பத்து வரிகளும் நேரடியாக பொருள் கொள்ள எளிதானவை. இது திருப்பரங்குன்ற மலை அழகினை, வளத்தினை மட்டும் சொல்லவில்லை.

சொர்க்கம் என்பதே முருகன் இருக்குமிடம்தான். முருகப்பெருமான் இருக்குமிடம் சொர்க்கத்தை விட அழகானது, வளமானது, காவல் நிறைந்தது. எல்லாமும் கிடைப்பது. சொர்க்கத்தில் கிடைக்காத விஷயம் கூட முருகப்பெருமானிடம் கிடைக்கும் என்பதே அவர் சொல்ல வரும் விஷயம்.

எல்லாம் கிடைக்கும் சொர்க்கவாசிகளே முருகப்பெருமானைத் தேடி பூமிக்கு வருகின்றார்கள் என்றால் அந்த திருப்பரங்குன்றம் எவ்வளவு சக்தி வாய்ந்தது?

கேட்டதெல்லாம் தரும் கற்பக மரமும், காமதேனுவும் இருக்கும் சொர்க்கத்தை விட திருப்பரங்குன்றமே எல்லாம் நிறைவுற தரும். திருப்பரங்குன்றம் என்பது அள்ளி அள்ளி அருள் வழங்கும் அட்சய ஆலயம் என்பதை குறிப்பால் சொல்கின்றார் புலவர்.

சூட்சுமமாக இன்னொரு விஷயத்தையும் அவர் போதிக்கின்றார்.

சிகப்பு எனும் குங்குமம் இந்துக்களின் வழமையின் அடையாளம். அது பலவிதமான ரகசியங்களைச் சொல்வது.

எதெல்லாம் சுபமோ, எதெல்லாம் ஆசீர்வாதமோ, அங்கெல்லாம் குங்குமம் இருக்கும்.

( அதை சீனர்கள் இன்னொரு வகையில் கையாள்வார்கள். அது சிகப்பு நிறமான பொருட்கள் தங்கள் வீடுகளில் அதிகம் இருக்குமாறு பார்ப்பார்கள், காவி நிறம் அவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம்.

சீன புத்தாண்டின் பொழுது சீனாவெங்கும், சீனர் இருக்குமிடமெங்கும் ரத்த குங்கும நிறத்திலே ஜொலிக்கும். அலங்காரப் பந்து முதல் அன்பளிப்பு வரை அந்த சிகப்பு நிறமே.

அன்று அவர்கள் கொடுத்து மகிழும் ஆரஞ்சு பழமும் காவி நிறமே.

ஆம், குங்குமமும் காவியும் இமயமலையில் இருந்து கிளம்பிய இந்துமதத்தின் அடையாளங்கள். இந்தியர் இந்துவாக அதைத் தொடர்கின்றனர்.

விவேகானந்தர் அந்த காவி உடையில்தான் அமெரிக்காவில் பெரும் அதிசயமாக மிளிர்ந்துவிட்டு வந்தார். அந்த உடை அன்று உலகத்தாரால் வணங்கப்பட்டது.)

குங்குமம் இல்லா ஆலயம் உண்டா? நல்ல இந்துக்கள் நெற்றிதான் உண்டா?

இல்லை இந்துக்கள் வீடுகள்தான் உண்டா?

ஆசியின் ஐஸ்வர்யத்தின் அடையாளமாக அது கருதப்படுகின்றது.

வழிபாட்டில் பிரிக்க முடியாதது அது.

திபெத்தும் சீனமும் மங்கோலியாவும் புத்தனின் எழுச்சிக்குப் பின்னால் தங்கள் கலாச்சாரத்தில் குங்குமமும், காவியும் பிரியாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

போதி தர்மனுக்கே காவி கட்டி அழகு பார்க்கும் நாடு சைனா, அவர்களின் கொடியே குங்கும நிறம்.

தலாய்லாமா இன்னும் அந்த காவி செவ்வுடையிலேயே வருவார், பர்மா இலங்கை என அவர்களின் புத்த துறவி நிறமும் காவியே.

காவி இங்குள்ள ஞான‌ அடையாளம், குங்குமம் செழிப்பின் அடையாளம், வெண்மை தூய்மையின் அடையாளம்.

இந்துக்களின் அடையாளமாக அதுதான் இருந்தது. ஒரு பெண் நெற்றியில் குங்குமமிட ஏன் சொன்னார்கள்? ஒரு பெண் மகிழ்வாய் இருந்தால் வீடே மகிழ்வாய் இருக்கின்றது எனப் பொருள்.

காஞ்சி காமாட்சியும், மதுரை மீனாட்சியும் மங்கல குங்குமத்தின் அடையாளமாய் போற்றப்பட்ட பூமி இது.

சிகப்பு எனும் குங்குமம் இங்கே வளத்தின் அடையாளம் செழுமையின் அடையாளம், முருகப்பெருமான் இருக்குமிடம் செழுமை பெருகும் என்பதைத்தான் மறைமுகமாக சொல்கின்றார்.

இன்னொரு அர்த்தமும் உண்டு.

இந்த உலகில் இயக்கும் சக்திக்கு சிகப்பு நிறம் உண்டு. மானிட குருதி முதல் செம்மண் முதல் ஆகாயத்தை இயக்கும் சிகப்பு கதிர்கள் (அகசிவப்பு) வரை சிகப்புக்கு சக்தி அதிகம்.

சிவப்பு என்பது வளம் மட்டுமல்ல, இயக்கத்தின் நிறமாகவும் அறியப்பட்டது அதனாலேயே சக்தி தேவிக்கு குங்குமக்காரி என்பது பெயராயிற்று.

முருகப்பெருமான் வளம் கொடுப்பவன், இயங்க சக்தி கொடுப்பவன். அவனே உலகை இயக்குகின்றான். அவனிடம் சக்திபெற தேவலோகப் பெண்களே வருகின்றார்கள். தேவர்களே முருகனிடம் கையேந்தி நிற்கின்றார்கள் எனச் சொல்லி பாடலை தொடர்கின்றார் நக்கீரர்.

(தொடரும்….)