திருமுருகாற்றுப்படை : 05
60 முதல் 77 வரிகள் வரை
“இருபே ருருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் .
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்
செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
மாடமலி மறுகின் கூடற் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் .
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன். அதாஅன்று . .
இனி இந்த வரிகளின் பொருளைக் காணலாம்.
“இருபே ருருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் . “
சூரபதுமன் குதிரை முகமும் மனித உடலும் கொண்டவன், அவனை ஆறுமுகம் கொண்ட முருகன் எதிர்த்துப் போரிட்டான்.
(அதாவது யார் எதித்து நின்றாலும் அவர்களை விட மும்மடங்கு சக்தி கொண்டவனாக அவர்கள் முன் நிற்பான் முருகபெருமான் என்பது நக்கீரர் சொல்லும் மறைமுக காட்சி)
அசுரரெல்லாம் அந்த சூரபத்மனை தங்கள் தலைவனாக கொண்டு போரிட்டனர் கடைசியில் சூரபத்மன் மாமரமாகி கடலுக்குள் நின்றான்.
அவன் எப்படி நின்றான் என்றால் மரகிளைகள் மண்ணுக்குள்ளும் வேர் மேலே தெரியும்படி தலைகீழாக நின்றானாம்
அதாவது அசுரர்கள் அவ்வளவு பிடிவாதம் கொண்டவர்கள், தலைகீழாக நின்று சாதிப்பவர்கள் என்பதை குறிப்பால் சொல்லும் நக்கீரர், அப்படியான பெரிய முரட்டு பிடிவாதகாரனையும் இரண்டாக பிளந்த வேல் என பொருள்
அப்படியான முருகன் சேய் அதாவது சிவபெருமானின் மகன் என வணங்கபடுகின்றான், அவனின் சிறப்புகளை பெரும்புகழை இவ்வளவு என சொல்லமுடியாதபடி அது பிரமாண்டமானது, அந்த வேலின் புகழ் அதைவிட பெரியது வார்த்தைகளால் விளக்கமுடியாதது என்கின்றார் நக்கீரர்
இப்படியான முருகனை தேடி வந்த ஒருவனிடம் திருப்பரங்குன்ற முருகனின் பெருமைகளை சொல்லும் நக்கீரர் தொடர்ந்து அவனுக்கு ஆறுதல் சொல்லி முருகபெருமானிடம் அனுப்புகின்றார்
அவன் யார் என கேட்கவில்லை, அவன் குலம் குணம் தகுதி என எதுவும் கேட்கவில்லை , மாறாக முருகனை நம்பி செல்கின்றாய் அல்லவா எல்லாம் நலமாகும் என அவனுக்கு ஆறுதல் சொல்லி பாடுகின்றார்.
“சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும
செலவுநீ நயந்தனை யாயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே”
செம்மையான முருகப்பெருமானின் திருவடிகளை பற்றிகொள்ள, நல்ல பக்குவமான பக்தி கொண்ட நெஞ்சத்தோடு வருகின்றாய், புலம்பிரிந்து வருகின்றாய், உன் சொந்த பந்தமெல்லாம் சொந்த மண் இடமெல்லாம் விட்டு வருகின்றாய், உன்னுடைய நல்ல மனம் விரும்புவதை போல எல்லா நலன்களையும் பலன்களையும் நீ அடைவாய் என வாழ்த்துகின்றார்.
அடுத்த வரிகள் இதோ
“செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
மாடமலி மறுகின் கூடற் குடவயின்”
போரை விரும்பி தங்கள் கொடிகளை உயர்த்தி காட்டி , எங்களோடு மோத யாராவது தயாரா என கொடிகளை பறக்கவிட்டு நிற்கும் வீரர்கள் நிரம்பியிருக்கின்றார்கள், அழகான பாவையர் பொம்மைகள் தொங்குகின்றன.
அதாவது எதிரிகள் வருவார்கள் அதனால் போர்பரப்பு உண்டு எனும் அச்சமே இல்லாமல் அழகான பொம்மைகள் தொங்கவிடபட்டு அலங்காரம் செய்யபட்ட மங்கள வாயிலாக அது காட்சியளிக்கின்றது அச்சமற்ற இடமாக இருக்கின்றது என்பது பொருள்.
அப்படி அந்த நகரில் திருமகள் வீற்றிருக்கின்றாள் அங்கிருக்கும் அங்காடிகளில் பொய்யோ மோசடியான தீமைகளோ இல்லை, அப்படியான தெருக்களையும் மாடங்களையும் கொண்ட மதுரை நகருக்கு மேற்கே எனப் பொருள்.
அடுத்து இந்த வரிகள்
“இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் .
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன். அதாஅன்று .
கரிய நிறம் கொண்ட சேற்றினில் முளைத்த தாமரையில் உறங்கி, காலையிலே தேன் ஊறும் நெய்தல் மலரை ஊதி விளையாடி, பகலில் கண்ணை போல விரிந்த சுனைகளின் மலர்ந்த மலர்களில் தன் அழகான இறக்கைகளால் ரீங்காரம் செய்யும் வண்டுகள் நிரம்பிய திருபரங்குன்றத்தில் இருக்கும் முருகன்
இப்படி திருப்பரங்குன்றம் வளங்களை சொல்லி அங்கிருக்கும் முருகனின் பெருமைகளை சொல்லி அந்த முருகனை வழிபடுவோர் அடையும் பெருமைகளையும் சொல்கின்றார் நக்கீரர்
ஒரு பக்தன் எங்கிருந்தோ வருகின்றான் அவனுக்க்கு அந்த திருபரங்குன்ற அழகை மலைவளத்தை பெருமையினை சொல்லி, முருகபெருமானை வணங்கும் வானக பெண்கள், சுடுகாட்டு பேய்கள் மூலம் அவன் பெருமையினை சொல்லி, அவன் வேல் வடிவினை சொல்லி வழிகாட்டுகின்றார் நக்கீரர்
அப்படியே அந்த திருப்பரங்குன்ற முருகனை பணிவோர்க்கு எல்லா நலமும் பலமும் அருளும் வாய்க்கும் என நம்பிக்கை கொடுக்கின்றார்
யாரோ ஒரு புலவனுக்கு அவர் கொடுக்கும் நம்பிக்கை என்பது அவனுக்கானது மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கானது
எல்லோரையும் பிரிந்து அகதியாய் புலம் பெயர்ந்தவனாய் வருபவனை நோக்கி, எல்லாம் விட்டுவிட்டு முருகபெருமானை தேடி வருகின்றாயா? உனக்கு எல்லா நலமும் கிடைக்கும் முருகன் உனக்கு அருளுவான் என்பது எளிதான வரி அல்ல.
யாரெல்லாம் மனதால் எல்லா லவுகீக் பந்தபாசங்களையும் விட்டு, பந்த பாசங்களை கடந்து, தங்களுக்குரிய எலலம் விட்டு முருகனை சரணடைவார்களோ அவர்களுக்கு எல்லா நலமும் கைகூடும், திருபரங்குன்ற முருகன் தன்னை வணங்கும் எல்லோரையும் வாழவைப்பான் என வழிகாட்டுகின்றார்.
வானோரும் பாதாள உலகத்தாரும் வந்து வணங்கும் முருகபெருமானை, சக்தியும் அருளும் பெருமையும் மிகுந்த முருகபெருமானை மானிடரும் வந்து பணிந்து வரம்பல பெற்று வாழ அழைக்கின்றார்
அவர் அருள் பெற்ற்தாலே திருபரங்குன்றம் மிக வளமாய் இருக்கின்றது, மேற்கில் இருந்து முருகபெருமான் பார்வை படுவதாலே மதுரை எதிரிகளற்ற பாதுகாப்பான நகராய் இருக்கின்றது
நான்குமாக்கூடல் எனும் அந்த மதுரை நகரம் எந்த அச்சுறுத்தலுமில்லாமல் எல்லா செல்வமும் கொண்ட கடைவீதிகளும் , அழகும் வளமும் கொண்ட நகருமாய் இருக்கின்றது என்பதை சொல்கின்றார்
திருப்பரங்குன்ற மலையில் இருந்து மதுரையினை நோக்கி அருள்பாலித்து அந்த மாநகரை செல்வமிக்க நகராக, எதிரிகளில்லாத அச்சமில்லாத வளமான நகராக காவல் காக்கும் முருகபெருமான் தன்னை நம்பி வருவோரையெல்லாம் வாழவைக்க திருபரங்குன்றத்திலே வீற்றிருக்கின்றான் என முதலாம் தலத்தை பாடி முடிக்கின்றார்
(தொடரும்..)