திருமுருகாற்றுப்படை : 06
78 வரி முதல் 92 வரை
“வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்
கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப
கைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்
மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே”
இனி பாடலின் பொருளை காணலாம், முதலில் திருப்பரங்குன்றம் எனும் அறுபடை தலத்தை பாடிய நக்கீரர், அடுத்து “திருசீர் அலைவாய்” எனும் திருசெந்தூர் பற்றி பாடுகின்றார்.
“வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்” என பாடல் தொடங்க்குகின்றது.
திருச்செந்தூர் ஆலயத்தின் யானையினை கண்டு பாடலை தொடங்குகின்றார் நக்கீரர், எல்லா ஆலயங்களை போலவே திருசெந்தூரிலும் கோவில் யானை உண்டு, அது முருகனை சுமக்க எப்போதும் தயாராக இருக்கும்.
அந்த யானையினை, திருச்செந்தூர் கோவிலில் முருகபெருமானின் வாகனமான யானையினை கண்டு பாடலை தொடங்குகின்றார்.
அதாவது அங்குசத்தால் குத்தி வடுபதிந்திருக்கும் நெற்றியின் மேல் அழகான முகபடாம் எனும் அலங்கார கவசம் அணிவிக்கபட்டிருக்கின்றது, அதோடு அழகுற அசைந்து வருகின்றது அந்த யானை என்கின்றார்.
அந்த யானை “”படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்” என்றபடி வருகின்றதாம்.
அதாவது யானை வருவதை அறிவிக்க அதன் இருபுறமும் உடலில் சங்கிலியில் மணிகட்டி தொங்கவிடுவார்கள், அசைந்தாடி யானை வரும்போது அந்த மணிகள் மாறி மாறி ஒலிக்கும்.
அப்படி இருபுறமும் மணிகள் அசைய அந்த அலங்கார யானை வேகமாக வருவதை சொல்கின்றார்
அடுத்து “கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின் கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு” என்கின்றார்
அந்த யானை எப்படியானது என்றால், அது முருகபெருமான் அமரும் யானை என்பதால் பெரும் வல்லமையுடையது, அதற்கு உவமையாக எமனை மட்டும் சொல்லலாம், யாராலும் தோற்கடிக்கபட முடியாததும் மிக பலமுமானது அந்த யானை
அது எவ்வளவு வேகம் கொண்டதென்றால் காற்றைபோல் வேகமாக கிளர்ந்தெழும் சக்தி கொண்டது, மிக வேகமாக நினைத்த இடத்துக்கு நொடியில் ஓடும் சக்தி கொண்டது
அப்படியான யானையில் வரும் முருகபெருமான் இருக்கும் தலமிது என தொடங்குகின்றார்
இங்கு திருசெந்தூர் ஆலய யானையினை நோக்கி பாடினாலும் நக்கீரர் முருகனின் இன்னொரு வாகனமான பிணிமுகம் எனும் யானையினை நினைந்து பாடுகின்றார்
முருகபெருமானுக்க் இந்திரலோகத்தின் பிணிமுகம் என்றொரு பலமான யானை உண்டு,இந்திரனின் ஐராவதம் போல சக்தி வாய்ந்தது அது
அந்த யானையில் ஏறி தன் அடியார்க்கு ஒரு இன்னல் என்றால் ஓடிவந்து காப்பவன் முருகன், அந்த மிக வல்லமையான முருகபெருமான், யாராலும் வெல்லமுடியாததும் காற்றிலும் வேகமானதுமான பிணிமுகம் எனும் யானையில் வரும் முருகபெருமானின் தலம் இது என சொல்கின்றார்
அடுத்து “ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு ” என்கின்றார்
முதலில் அங்கே முருகபெருமான் வரும் யானையின் அழகை, வலிமையினை, ஆற்றலை சொல்லும் நக்கீரர் அடுத்து முருகபெருமானின் திருவுருவ அழகினை சொல்கின்றார்
முருகபெருமானை உச்சியில் இருந்து பாதம் வரை வர்ணிக்க தொடங்கும் அவர், முருகபெருமான் அணிந்திருக்கும் கிரீடம் பற்றி சொல்கின்றார்
“ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு” அதாவது ஐந்து பிரிவின் பகுதிகள் இணைந்து அந்த மகுடம் செய்யபட்டுள்ளது, அழகான ஐந்துபாகங்களால் இழைத்து இணைக்கபட்ட முடி அது என்கின்றார்
அந்த ஐந்துபாகங்களும் பூவேலைகளும் நுணுக்கமான அலங்காரமும் கொண்டது
அடுத்து ” விளங்கிய முரண்மிகு திருமணி, மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப” என்கின்றார்
அந்த அழகான கிரீடத்தில் ஒன்றுக்கொன்றுமுரணான நிறமுடைய, அதாவது வெவ்வேறு நிறங்களை கொண்ட மணிகள் அழகாக பதிக்கபட்டிருக்கின்றன, வெவ்வேறு நிறங்கள் கொண்ட மணிகள் அழகுற மின்னுமாறு பதிக்கபட்டிருக்கின்றன.
ஐந்து பாகங்களை இணைத்து செய்யபட்ட அந்த மகுடம், அழகான மணிகள் மின்ன ஜொலிஜொலிப்பாய் காட்சியளிக்கின்றது
அந்த அழகான மகுடத்தின் கீழே முருகபெருமானின் முகம் தெரிகின்றது, அந்த முக அழகை அடுத்து சொல்கின்றார்
ஒளிரும் மகுடத்தின் கீழ் ஆறு முகங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் சுடராக துலங்குகின்றன, ஒவ்வொரு முகத்தின் இரு பக்கங்களிலும் காதில் குழைகள் அழகுற தொங்குகின்றன.
அவை அழகுற மின்னுகின்றன.
முருகப்பெருமானின் முகங்கள் சந்திரன் போல் மின்ன, அந்த சந்திரன் அருகே அவை விண்மீன்கள் போல ஜொலிக்கின்றன என்கின்றார்.
நட்சத்திர அதிபதியாக சந்திரனைத்தான் சொல்வார்கள், அதை இங்கே அழகாக சொல்கின்றார் நக்கீர்ரர்
அடுத்து “தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார் மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே”
அந்த முகங்கள் எப்படியானது என்றால் யாருக்கும் கேடும் தீங்கும் நினையாமல் தன்னலம் கருதாமல் இந்த உலக நலனுக்காய் தங்கள் கர்மம் கழியும் பொருட்டு தியானம் செய்வோர் மனதில் எழும் ஒளிபொருந்திய முகங்கள் அவை என்கின்றார்
ஆக மேற்சொன்ன வரிகளில் திருசெந்தூர் முருகனுக்கு முன்னோட்ட அறிமுகம் கொடுத்து அவன் புகழை பாட தொடங்குகின்றார் நக்கீரர்.
அந்த முருகபெருமானின் யானை பிணிமுகம் நன்றாக அலங்கரிக்கபட்து, பல தோரணங்களை சுமந்திருப்பது, அதன் இருபுறமும் பணிகள் உண்டு, முகப்பில் முகபடாம் உண்டு
அந்த யானை எமனுக்கு நிகரானது, வெல்லமுடியாதது காற்றிலும் வேகமாக செல்லும் வேகம் கொண்டது அப்படியான யானையில் வேகமாக வந்து அடியாரை காக்கும் முருகன் செந்தூர் முருகன் என தொடங்குகின்றார்
இங்கே சஷ்டி கவசத்தின் “கீத்ம் பாட கிண்கிணி ஆட” எனும் வரி கவனிக்கதக்கது, மணி ஓசையுடன் வருபவன் முருகன் என்பது அது.
அதாவது முருகபெருமானே வேகமாக வருவான் காற்றிலும் வேகமாக வருவான், அப்படி வரும்போது அவன் மணியோசை முந்தி வந்து முருகன் வருகின்றான் அஞ்சாதிர்கள் என பக்தர்களுக்கு ஆறுதல் சொல்லும்.
மணியோசை முன்னே கேட்டு பக்தர்கள் நம்பிக்கை கொள்ள மணி இசைத்தபடியே வருவான் எம்பெருமான், அவன் யானையும் அப்படியே மணிகளை கொண்டிருக்கின்றது என்பவர் அடுத்து கீரீடத்தின் அழகினை சொல்கின்றார்
ஐந்து பாகங்களால் இணைந்த மகுடம் என்கின்றார்
அது நால்திசைகள் , வானம் என ஐந்து அடங்கிய தொகுப்பு, அந்த முடி அதைத்தான் சொல்கின்றது.
நான்கு திசைகளுக்கும் இந்த ஆகாயத்துக்கும் அரசனாவன் முருகன் அதனால் அவன் மகுடம் ஐந்து பிரிவுகளை
குறிப்பாக கொண்டிருக்கின்றது என்பதை சொல்லும் நக்கீரர், அவை பல மணிகளை கொண்டு ஒளிவீசுகின்றது என்கின்றார்
மணிகள் எல்லா பக்கமும் சுடர் விடுபவை, முருகபெருமானின் அருள் எல்லா இடமும் வீசுகின்றது நான்கு திசை ஆகாயம் என எல்லாமும் அவன் அருள் ஒளியே என்கின்றார்
இப்படி நான்கு திசைகள் ஆகாயத்தின் அதிபதியான முருகனின் ஆறு முகங்களும் ஆறு நிலவு போல் ஜொலிக்கின்றது, அந்த முகத்தின் காதில் தொங்கும் குழைகள் நட்சத்திர கூட்டமாக மின்னுகின்றது என அழகுற பாடி பாடலை தொடர்கின்றார் அதாவது வான மண்டலம் சூரியன் சந்திரன் நட்சத்திரங்களுக்கெல்லாம் அதிபதி முருகப்பெருமான் என பாடி தொடர்கின்றார்.