திருமுருகாற்றுப்படை : 07
(90 முதல் 103 வரிகள் வரை)
“மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழா
அந்தணர் வேள்விஓர்க் கும்மமே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே.
ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்”
இனி பாடலின் பொருளைக் காணலாம். இந்த வரிகள் முருகப்பெருமானின் ஆறுமுகப் பெருமைகளைச் சொல்கின்றது. முருகப்பெருமான் ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு கோலத்தில் அருள் புரிபவன். பழனியிலே ஆண்டிகோலம், சுவாமி மலையில் குரு கோலம் என நின்றிருக்கும் அப்பெருமான் திருச்செந்தூரில் ஆறுமுகமாக விஸ்வரூபம் காட்டுகின்றார்.
அதைத்தான் இங்கே பாடுகின்றார் நக்கீரர்.
“மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம்”
என்பது முதல் வரி.
இந்த உலகில் இருளே ஆட்சி செய்யும். அந்த இருளை விரட்டத்தான் பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் அக்னி சுடரும் ஒளிதரும்.
இறைவனை சுடரேற்றி வழிபடும் பாரம்பரியம் இந்துக்களுடையது. காயத்ரி மந்திரம் எனும் ஒளிக்கான மந்திரம் சொல்லி வணங்கும் தாத்பரியமும் அவர்களுடையது.
இங்கே இருளை அகற்றும் ஒளி என்பது உலகின் லவுகீக ஒளிமட்டும் அல்ல ஆன்ம இருளை அகற்றும் ஞான ஒளி என்பதும் கவனிக்கத்தக்கது.
சூரியன் பகலில் மட்டும் வரும். சந்திரன் இரவில் வரும். விளக்கு எண்ணெய் தீர்ந்தால் அணைந்துவிடும். அதாவது எல்லாமே ஒரு எல்லைக்கும் கால நேரத்துக்கும் உட்பட்டது.
இதனால் இவை குறைவுள்ளவை. இவற்றுக்கு மூல சக்தி வேண்டும். நிலவின் சக்தி சூரியன், சூரியனின் சக்தி அந்த பரம்பொருள்.
அந்த பரம்பொருள் நித்திய ஒளிகொண்டது. எல்லை இல்லாதது. காலமெல்லாம் ஒளிர்ந்துகொண்டே இருப்பது.
அந்த சக்திதான் முருகப்பெருமானின் ஒரு முகம் என்கின்றார் நக்கீரர். முருகப்பெருமானின் ஒரு முகம் உலகுக்கு ஒளிகொடுக்கின்றது. அதே முகம் அஞ்ஞான இருளையும் அகற்றி ஞான ஒளி கொடுகின்றது. அதனால் அது ஒளிமுகம் என்கின்றார்.
சூரிய ஒளி முதல் ஞான ஒளிவரை அந்த முகமே வழங்குகின்றது. அதனால் அதனை ஒளிமுகம் என்கின்றார் நக்கீரர்.
அடுத்த வரியில் இரண்டாம் முகத்தை பற்றி சொல்கின்றார்.
“ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்”
ஆர்வலர் என்றால் அக்கறையாக, மிக்க கவனமாக தேடுபவர்கள். இடைவிடாமல் ஆர்வத்தில் அன்பில் தேடுபவர்கள் எனப் பொருள். பக்தர்களின் இன்னொரு பெயர் ஆர்வலர்.
முருகப்பெருமான் எப்படியானவர் என்றால் தாய் குழந்தையினை அன்போடு கவனிப்பது போல் தன் அடியாரை அணைத்துக் கொள்பவர்.
அவர் வரம் வேண்டி தன்னிடம் பணியும் பக்தர்களுக்கு பெரும் வள்ளலாக தாய் போல் நின்று வேண்டும் வரங்களை வழங்கிக் காப்பவர்.
அன்பு மிக்கவர்கள் எப்போதும் தங்களைத் தேடுவோரை தங்களை நினைப்போரை கைவிட மாட்டார்கள். அவர்கள் இருக்குமிடம் தேடிச் சென்று உதவி செய்து கஷ்டம் தீர்ப்பார்கள்.
அப்படி முருகப்பெருமான் தன்மேல் காதல் கொண்டு, தீரா அன்புகொண்டு தேடும் அடியார்க்கு பக்தர்க்கு தன் இன்முகத்தை காட்டி இன்னலெல்லாம் தீர்த்து வைப்பார். அப்படி அருள் வழங்கும் முகம் ஒன்று உண்டு.
அந்த அருளை வழங்கும் முகம் இரண்டாம் முகம் என்கின்றார்.
முதல் முகம் உலகுக்கே ஒளி வழங்குகின்றது. எல்லா ஆன்மாவுக்கும் ஞானச் சுடராக ஒளிவழங்க காத்திருக்கின்றது என சொல்லும் நக்கீரர், இரண்டாம் முகம் சிறப்பாக தன் அடியார்க்கு உதவும் முகம் என்கின்றார்.
மூன்றாம் முகம் பற்றி அடுத்து சொல்கின்றார்.
“மந்திர விதியின் மரபுளி வழா
அந்தணர் வேள்விஓர்க் கும்மமே ஒருமுகம்”
இது முருகப்பெருமான் வேள்வியினைக் காப்பவர் எனச் சொல்லும் இடம். அவரின் ஒரு முகம் வேள்விகளை காக்கின்றது என்கின்றார் நக்கீரர்.
இந்துமதத்தில் பல பிரிவுகள் இருக்கலாம். அங்கே சைவம், வைணவம், கௌமாரம், காணாபத்யம், சாக்தம், சூரிய வழிபாடு என பிரிவுகள் இருக்கலாம்.
இன்னும் பல வகை வழிபாடுகள் இருக்கலாம்.
ஆனால் இந்துமதத்தின் பொதுவான பெயர் வைதீக மதம். வைதீக நெறி என்பதுதான் அதன் உண்மையான பெயர். இந்து என்பது பின்னாளில் அந்நியர் அழைத்த பெயர்.
இந்த வைதீக நெறிகள் வேதங்களில் இருந்து வந்தவை. இந்த வேதங்களின் அடிப்படையில்தான் எல்லா இந்துமத பிரிவுகளும் உண்டு என்பதால் அடிப்படையில் அவற்றின் ஒற்றுமை ஒன்றே.
அது யாகம், வேள்விகள் வேதத்தில் கூறியபடி செய்வது. இது இந்துக்களின் எல்லா பிரிவுக்கும் பொருந்தும் ஒற்றுமை. இது அன்றி இந்துமதம் இல்லை.
இந்துமதத்தின் ஆதாரமே வேள்விகளும் யாகங்களும். அது எல்லா இந்துமத பிரிவுக்கும் அடிப்படையானது
இந்த யாகங்கள் உலக நன்மைக்காக செய்யப்படுபவை. இந்த உலகை காக்கும் தேவர்களுக்கும், இறைவனுக்கும் கொடுக்கப்படுபவை. அவிர்பாகம் என தேவர்கள் பெறும் உணவில்தான் இந்த உலகம் இயங்குகின்றது என்பது வேதங்கள் போற்றும் நெறி.
இதனால் இந்துக்களுக்கு யாகம் மகா முக்கியம்.
இந்த யாகத்துக்கு எப்போதுமே தடையாய் வருபவர்கள் அசுரர்கள். அந்த அசுரர்களைத் தடுத்து அழித்து யாகத்தை காப்பவர் முருகப்பெருமான் என அவருக்கு தனிச் சிறப்பு உண்டு.
இதனாலேயே யாகத்தின் போது மும்முறை “சுப்ரம்மண்யோஹம்’ என முழங்குதல் மரபு. மும்முறை முருகப்பெருமானை அழைத்துத்தான் யாகம் செய்வார்கள்.
அந்த யாகத்தை நல்லபடியாக காத்துக் கொடுப்பதால் முருகனுக்கு “ஸ்தோம ரட்சகன்” எனும் பெயரும் உண்டு.
யாகம் செய்தல் அந்தணரின் மகா முக்கிய கடமை. அந்த அந்தணர்கள், வேத ஞானிகளின் கடமையினைச் செய்ய துணையிருப்பதும், இடையூறு செய்யும் அசுரரை ஒழித்து தேவர்கள் அவிர்பாகம் பெற காவல் இருப்பதும் முருகனின் மூன்றாம் முகம்.
அந்த முகத்தாலே யாகங்கள் தடையின்றி நடக்கின்றன. யாகத்துக்கு அருள் வழங்கும் முகம் என மூன்றாம் முகத்தைச் சொல்கின்றார்.
அடுத்து நான்காம் முகம்.
“எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்”
இந்த உலகின் மகா முக்கிய விஷயம் கல்வியும் ஆய்வும். அதாவது அறிவினைப் பெருக்கிக் கொள்வது. ஒரு ஆசிரியரைக் கொண்டு மேதைகள் எழுதிய நூல்களைக் கொண்டு அறிவினை விருத்தி செய்வது உலக வழக்கம்.
இந்த கல்விக்கு எல்லையே இல்லை. என்னதான் மேதை என்றாலும் “கற்றது கைமண் அளவுதான்.” எல்லாம் அறிந்தவன் எல்லா எல்லைகளையும் கடந்தவன் என யாருமில்லை.
மேதைகள் என்பவர்கள் கூட தங்கள் துறையின் சில எல்லைகள் வரை அறிவார்களே அன்றி முழுக்க அறியமாட்டார்கள். இன்னொரு பொருள் பற்றி அவர்களுக்கே தெரியாது.
இந்த உலகில் கல்வியால் விளைந்த விஷயம் விஞ்ஞானம். அது நாளுக்கு நாள் தன்னை மாற்றிக்கொள்ளும். நிலையில்லாதது. ஒவ்வொரு நாளும் அது ஒவ்வொரு வடிவம் பெறும்.
விஞ்ஞான கல்வியாலோ உலகக் கல்வியாலோ எதையும் முழுக்க புரிந்துகொள்ள முடியாது. மானுடன் குறைவுள்ளவன் அவனின் புரிதலும் உருவாக்கமும் குறைவானது.
இந்தக் குறையினை நிவர்த்தி செய்ய அவன் இன்னும் புதிது புதிதாக முயல்கின்றான். ஆனால் அது முற்றுப்பெறாது. மனிதன் கல்விஞானம் குறைவுள்ளது.
இங்கு கண்டறிதல் என்பதும் உருவாக்கம் என்பதும் எல்லைக்கு உட்பட்டது. தன் மிகக் குறைந்த அறிவில் முழுமையில்லாத ஒன்றை உருவாக்கி அதை நிறைவு செய்யத் திணறி, புதிது புதிதாக தேடிக் குழம்பி நிம்மதியில்லாமல் தவிக்கும் அறிவு மனிதனுடையது.
எங்கும் எதிலும் அவன் அறிவினால் முழுமை அடைய முடியாது. அவனின் சிந்தனையினை அறிவை முழுமை அடையச் செய்ய ஒரு குரு அவசியம்.
அந்த குரு ஞானகுருவாக இருத்தல் அவசியம். எல்லாம் அறிந்த முழுமையான குருதான் ஒருவனை முழுமை அடையச் செய்யமுடியும்.
முருகப்பெருமான் சிவனுக்கே குருவானவர். பிரம்மனுக்கும் தேவர்களுக்குமே போதித்தவர். அவர் தன் பக்தர்களுக்கு குருவாய் நின்று போதிக்கின்றார்.
முருகப்பெருமான் ஞானபண்டிதன். அந்த ஞானபண்டிதன் தன் அடியாருக்கு புரியாத பொருளை எல்லாம் புரியவைத்து தெளிய வைப்பவன். அந்த ஞானத்தை அருள்பவன்.
தன் அடியார்க்கு ஞான குருவாக நின்று எல்லாம் புரியவைக்கும், நிறைவாக புரியவைத்து முழுமை அடைய செய்யும் ஞானகுரு முருகப்பெருமான். அவரின் ஒரு முகம் ஞானமுகம், ஞானம் அருளும் முகம் என்கின்றார் நக்கீரர்.
அடுத்து ஐந்தாம் முகம்.
“செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம்”
ஒரு மனதுக்கு இருக்கவேண்டிய முக்கிய குணம் வீரம். அந்த வைராக்கியமே அந்த துவளாத வைராக்கியமும் தைரியமுமே எடுத்த செயலை முடிக்க வைக்கும்.
வீரம் என்பது போர்க்களத்தில் மட்டுமல்ல, வாழ்வின் ஒவ்வொரு அடிக்கும் தைரியம் முக்கியம். துறவிகளுக்கு கூட மனதில் வைராக்கியம் முக்கியம்.
முருகப்பெருமான் அந்த வீரத்தின் அதிபதி. அவர் எப்படியான வீரர் என்றால் சூரனுடனான போரை 18 ஆண்டுகள் செய்தார் என்பது புராண செய்தி.
“உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற் றிரட்டியென்
றியாண்டும் மதியும் நாளும் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள?”?”
என்பது சிலப்பதிகார வரி.
அதாவது பாரதப்போர் பதினெட்டு நாட்களிலும், ராமாயணப்போர் 18 மாதங்களிலும், சூரனுடனான முருகப்பெருமானின் போர் 18 வருடம் நடந்தது என்பார்கள் ஞானியர்.
அப்படி நீண்ட போரை வீரமுடன் வைராக்கியத்துடன் நடத்தியவர் முருகப்பெருமான். அவர்தான் தேவலோகச் சேனைகளின் தளபதி. எந்தச் சூழலிலும் யாருக்காகவும் அஞ்சி பின்வாங்காத தைரியம் அவருக்கு உண்டு.
அப்படிப்பட்ட முருகப்பெருமான் தைரியமும் வீரமும் கொடுக்கும் ஒரு முகத்தினை கொண்டிருக்கின்றார். அச்சமும் பதற்றமும் நிறைந்த மனதுக்கு அவர் தைரியமும் வீரமும் தந்து நடத்துகின்றார். அந்த வீரத்திருமுகம் ஐந்தாம் முகம் என்கின்றார் நக்கீரர்.
அடுத்து ஆறாம் முகம்.
“குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே.”
ஆறாம் முகம் வள்ளியோடு அமர்ந்து இன்புற்று புன்னகைக்கும் முகம் என்கின்றார் நக்கீரர்.
முருகப்பெருமான் யார்? அவர் சிவகுமரன், தேவலோக சேனாதிபதி, தேவர்களைக் காப்பவர், பிரம்மனுக்கே வேதம் சொன்ன ஞானி, ஞானபண்டிதன்.
அப்படியான மகா சிறப்பு மிக்க முருகப்பெருமான் மும்மூர்த்திகளும் இன்னும் முப்பத்து முக்கோடி தேவர்களும் கொண்டாடும் முருகப்பெருமான், அற்ப மானிடரும் மலையில் வாழும் மடமங்கையான வள்ளியினைத் தேடிவந்து அருள் பாலிக்கின்றார் என்றால் அவரின் கருணை எப்படியானது?
வள்ளியினை முருகன் தேடி வந்தான் என்பது மனுகுலத்தின் மேல் அன்புகொண்டு அந்த முருகப்பெருமான் இறங்கி வந்து எல்லா மனிதரும் எல்லா ஆத்மாவும் இன்புற்றிருக்க விரும்புகின்றான். மானுட குலம் இன்பமுற்று வாழ அவன் அருள் செய்கின்றான் எனப் பொருள்.
இந்த பூலோக மாந்தரெல்லாம் நல்வாழ்வு வாழ, எல்லாமும் பெற்று வாழ அருள் செய்யும் முகம் ஆறாம் முகம் என்கின்றார் நக்கீரர்.
குறவருடைய மடமகளும் கொடி போன்ற இடையையுடைய மடமுடைய பெண்ணுமாகிய வள்ளியோடு சேர்ந்து புன்முறுவலைச் சொல்லும் முகம் அது. எல்லா மக்களும் எல்லா உயிரும் இன்புற்று வாழ வழிசெய்யும் முகம் அது என ஆறாம் முகத்தின் பெருமையினைச் சொல்கின்றார்.
ஆக முருகப்பெருமானின் முதல் முகம் ஒளிமுகம், இரண்டாம் முகம் பக்தரை காக்கும் தாய்முகம், மூன்றாம் முகம் ஞானமுகம், நான்காம் முகம் குருமுகம், ஐந்தாம் முகம் வீரமுகம், ஆறாம் முகம் உலகம் வாழ மழைபோல் அருள் செய்யும் இன்பமுகம் எனச் சொல்லி பாடுகின்றார் நக்கீரர்.
இதையேத்தான் தன் பாடலில் பாடுவார் அருணகிரிநாதர்.
“ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும்௮டி யார்கள் வினை தீர்க்குமுகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே.””
ஆம், அருணகிரியாரின் பாடல் நக்கீரர் பாடிய இந்தப் பாடலின் தழுவலே.
அடுத்த வரியாக “ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்” என்கின்றார் நக்கீரர்.
இதன் பொருள் இரு மூன்று முகம் எனும் ஆறு முகம் இப்படி முறையான காரியங்களைச் செய்யும்போது அவரின் கரங்கள் என்னென்ன சிறப்பான செயல்களைச் செய்யும் என்பது.
முருகப்பெருமானின் திருக்கரங்களின் பெருமையினை அடுத்து பாடுகின்றார் நக்கீரர்.
(தொடரும்..)