திருமுருகாற்றுப்படை : 08
(104 முதல் 125 வரையான வரிகள்)
“ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை
அங்குசங் கடாவ ஒருகை இருகை
ஐயிரு வட்டமொடு எஃகுவலந் திரிப்ப
ஒருகை மார்பொடு விளங்க ஒருகை
ஒருகை தாரொடு பொலிய, ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக்கொட்ப ஒருகை
பாடின் படுமணி இரட்ட, ஒருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட
ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்ற
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந் திசைப்ப, வால்வளை ஞரல
உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ
விசும்பஆ றாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பேஅதான்று “
இனி பாடலின் பொருளை காணலாம்.
“ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்”
அதாவது முருகபெருமான் அழகான மார்பை கொண்டவன், அந்த மார்பில் தாழ்ந்து தொங்கி கொண்டிருப்பது பல வகை மணியால் முத்துக்களால் ஆன மாலைகள், மாலை சூடிய நெஞ்சினை கொண்டவன் என்பதை “ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்” என பாடுகின்றார் நக்கீரர்
அது எப்படியான மார்பு என்பதை அடுத்து சொல்கின்றார்
“செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்” என்கின்றார்
மூன்று வரிகள் மார்பில் தோன்றி தோளில் முடிய வேண்டும், மிக கட்டுகோப்பை கொண்ட ஆண்மகனின் மார்பில் அந்த வரிகள் பட்டைகள் போல் தோன்றும்
அப்படி மூன்று பட்டைகள் இருந்தால் அது அழகை கூட்டி நிற்கும் என்பது ஆண்கள் அழகுக்கான இலக்கணம், அந்த அழகான மார்பை பெற்றவன் முருகன் என்கின்றார்
“செம்பொறி வாங்கிய” என்பது அதுதான், பொறி என்றால் கோடு என பொருள்
அந்த மார்பு தேவர்களை போல ஜொலிப்பது, பிரகாசமான ஒளிகொண்டது , புகழ் கொண்டது, அந்த தோள் பகைவர் நெஞ்சை பிளந்துபோடும் வலுவினை கொண்டது
அப்படியான தோளினை “வசிந்துவாங்கு நிமிர்தோள்” என்கின்றார், இங்கே வசிந்து என்பது வசியம் என பொருளில் வரும், காண்போரை வசீகரிக்கும் தோள் என பொருள்
ஆக முருகபெருமான் ஆண்மைக்கு இலக்கணமான மூன்று கோடுகளை கொண்ட மார்பன், அழகான் மாலைகள் தாழகிடக்கும் மார்பன், வலிமையான பிரகாசமான ஒளியினை கொண்டவன், அவன் தோள்கள் எதிரிகளை அச்சுறுத்தும் காண்போரை வசீகரிக்கும் என தோள் அழகை பாடுகின்றார்
முதலில் கிரீடத்தின் அழகை பாடிய நக்கீரர் பின் முருகபெருமானின் ஆறு முகங்களை பாடி பின் அவனின் தோள் அழகை பாடினார்
இனி அவனின் பன்னிரண்டு திருக்கரங்களை பற்றி பாடபோகின்றார்
“விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகை”
என தொடங்குகின்றார், அதாவது வானலோகத்தின் தேவர்கள் சூரியன் முதலான தேவர்களை காக்க ஒரு கரம் ஆதவாக நிற்கின்றது , தேவர்கள் தங்கள் கடமையினை செய்ய முருகபெருமானின் ஒரு கரம் காவல் காக்கின்றது என்கின்றார்
தேவர்கள் தங்கள் கடமைகளை செய்யாமல் பூமி இயங்காது வாழாது, அந்த தேவர்களுக்கோ அசுர கூட்டத்தால் எப்போதும் மிரட்டலும் அச்சுறுத்தலும் உண்டு
முருகபெருமானின் ஒரு கை அந்த தேவர்களுக்கு அபயமாக அடைக்கலமாக காவலாக நிற்கின்றது எனும் நக்கீரர், முருகபெருமான் இன்னொரு கையினை தன் இடுப்பில் வைத்திருக்கின்றாராம்
உக்கம் என்றால் இடுப்பு , இடுப்பில் கைவைத்தல் என்பது கம்பீரத்தின் அடையாளம் தேவர்களை காக்கும் கம்பீரமாக இரு கைகள் காட்சியளிக்கின்றன என்கின்றார்
அடுத்து இப்படி பாடுகின்றார்
“நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை
அங்குசங் கடாவ ஒருகை இருகை “
கலிங்கம் என்றால் சிவப்பு துணி என பொருள், முருகபெருமான் சிகப்பு ஆடை அணிபவர் அதாவது போருக்கு செல்லும் போது ஆபத்தில் இருப்போர்க்கு உதவும் போது சிகப்பு ஆடை அணிந்து செல்வார்
(சிகப்பு என்பது உதவி செய்யும் நிறமாக கருதபட்டது இந்துக்கள் மரபில் அது அக்காலமே இருந்தது, சிகப்பு மாலைகள், சிகப்பு ஆடைகள் என தெய்வத்துக்கு சாத்துவது உக்கிர தெய்வங்களுக்கான போர் தெய்வங்களுக்கான வழமை என்றாலும் சிகப்பு என்பது உதவி கோரும் அடைக்கலம் கோரும் நிறமாக கருதபட்டது
பின்னாளில் இதுதான் இங்கிருந்து ஐரோப்பாவுக்கு சென்று செஜ்சிலுவை சங்கம் என மாறிவிட்டது)
முருகபெருமான் செவ்வாடை அணிந்திருக்கின்றார் அந்த சிகப்பு ஆடை கட்டிய தொடையில் ஒரு கரம் இருக்கின்றது, இன்னொரு கையில் யானையினை கட்டுபடுத்தும் அங்குசம் இருக்கின்றது என்கின்றார் நக்கீரர்
தொடையில் கைவைப்பது என்பது எதிரிகளுக்கு சவால்விடும் விஷயம், தன் அடியார்களுக்கு யாராலும் தொல்லை என்றால் முருகபெருமான் தன் பிணிமுகம் எனும் யானைமேல் ஏறி விரைந்து வருவார் அந்த யானையினை கட்டுபடுத்தும் அங்குசத்தை ஒரு கையில் வைத்திருக்கின்றார், தன் அடியார்க்கு நான் உண்டு என் காவல் உண்டு என காட்ட தொடையில் ஒரு கையும் வைத்து வருகின்றாராம்
இனி ஐந்தாம் ஆறாம் கரங்கள் பற்றி சொல்கின்றார்
“இருகை ஐயிரு வட்டமொடு எஃகுவலந் திரிப்ப” என்கின்றார், இரு கைகளில் கேடயமும் வேலும சுழ்லும், வட்டமாக சுழலும் என்கின்றார்
“ஐயிரு வட்டமொடு” என்றால் சூரியனை போல வட்டமான கேடயம் ஏந்தி நிற்கின்றன என்கின்றார்
படைகளில் வலிமையானது யானைபடை அந்த யானைபடையினை தாக்குவது வேல்கள் , வேல் எறியும் வீரம்தான் போர்களத்தில் மிக மிக உக்கிரமான வீரம், ஆபத்தான யானைகளை வேல் எறிந்து கொல்வது சிறந்த வீரம்
அப்படி வேல் எறியும் கை ஒன்று என்றும், வட்ட வடிவமான கேடயத்தை கொண்டு எதிரிகள் வீசும் வேலினை தடுக்கும் கரம் ஒன்று என்றும் பாடுகின்றார் நக்கீரர்
(வேல் என்பது ஞானவடிவமாகவும் கருதபடும், தன் அடியார்க்கு ஞானம் அருள்பவனாகவும், அஞ்ஞானத்தில் இருந்து காக்கும் கேடயமாகவும் முருகபெருமான் விளங்குகின்றான் என்பதும் ஒரு பொருள்)
அடுத்து ஏழாம் எட்டாம் கரங்களுக்கு செல்கின்றார்
“ஒருகை மார்பொடு விளங்க ஒருகை
ஒருகை தாரொடு பொலிய”
மார்போடு விளங்கும் கை என்பது முருகபெருமானின் கரம் ஒன்று சின் முத்திரையினை கொண்டு நெஞ்சோடு அணைத்தபடி இருப்பதையும், இன்னொரு கரம் தார் எனும் மாலையினை கொண்டிருப்பதையும் காட்டுகின்றது
சின் முத்திரை என்பது யோகத்தில் ஒன்று மூன்று விரலை நீட்டி கட்டைவிரலை ஆள்காட்டி விரலோடு மடக்கி வைக்கும் முத்திரை இது மும்மலங்களை அடக்கும் முத்திரை
(இந்துக்களிடம் இருந்து இதனை பவுத்தம் பறித்துகொண்டது)
முருகபெருமான் தன்னை எண்ணி தியானம் செய்வோருக்கு யோகசித்தி அருள்கின்றான் என்பதை இந்த முத்திரை கொண்ட கை காட்டுகின்றது, அப்படியே மாலை விரிந்த மலர்களின் கட்டு, முருபெருமானால் சக்கரங்கள் விரிந்து ஞானம் துலங்கும் என்பதை அக்கரம் காட்டுகின்றது
இனி ஒன்பதாம் மற்றும் பத்தாம் கரம்
“ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக்கொட்ப ஒருகை
பாடின் படுமணி இரட்ட”
ஒரு கை வளையல் அணிந்திருக்கின்றது அந்த வளையலோடு உத்தரவிடும் கோலத்தில் காட்சியளிக்கின்றது, இன்னொரு கரம் மணியினை கொண்டிருக்கின்றது என்பது பொருள்
இங்கே வளையல் என்பது கையில் அணியும் கடகம் எனும் ராஜ முத்திரையினை குறிப்பது, அந்த கரத்தோடு முருகபெருமான் போருக்கு உத்தரவிடுகின்றாராம் அதாவது களவேள்விக்கு உத்தரவிடுகின்றாராம்
அப்படி போர்களத்தில் களவேள்வி செய்யும்போது பேய்கள் பசியாற ஓடிவரும் அல்லவா? அந்த வேள்வியின் ஆகுதியினை பெற காளியும் கொற்றவையும் ஓடிவருவார்கள் அல்லவா?
அந்த கொற்றவைக்கு கெட்டவர்களை வேள்வியில் இட்டு பூஜை செய்யும்போது ஒரு கரம் மணியினை ஆட்டுகின்றதாம்
அடுத்து பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் கரங்களை பற்றி பாடுகின்றார்
“நீனிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட”
ஒரு கை வானத்தில் இருந்து மேகங்களை உடைத்து மழையினை பொழிய வைக்கின்றதாம் இன்னொரு கை மங்கல மாலையினை கொடுக்கின்றதாம்
முருகபெருமானின் ஒரு கரம் அருள்மழை பொழிகின்றது, இன்னொரு கரம் எல்லோரையும் வாழவைக்கின்றது பெண்ணில் இருந்து வரும் எல்லா உயிர்களையும் அது வாழ வழிசெய்து காக்கின்றது என பாடுகின்றார்
இப்படி முருகபெருமானின் 12 கரங்களின் பெருமையினை பாடும் நக்கீரர் தொடர்கின்றார்
அடுத்து சொல்கின்றார்
“ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்ற” என்கின்றார்
அதாவது இப்படி பன்னிரண்டு கரங்களும் அதனதன் வேலையினை பணியினை செய்யும்படி அசைந்து எழுந்தருள என்பது பொருள்
அடுத்து பாடுகின்றார்
“அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந் திசைப்ப வால்வளை ஞரல
உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு”
அதாவது வானத்தில் உள்ள இசைகருவிகள் எல்லாம் முழங்க, உறுதியான கொம்புகள் முழங்க, வெண்மையான சங்குகள் முழங்க, இடிபோன்ற முரசுகள் முழங்க என்கின்றார்
அடுத்து “பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ” என்கின்றார்
அதாவது அத்தகைய இசையோடு பல வரிசையான அழகுகளை பீலிகளாக கொண்ட மயிலும் கத்த என பொருள்
அடுத்து “விசும்பஆ றாக விரைசெலல் முன்னி”
அதாவது இப்படி ஆராவரத்தோடு முருகபெருமான் வானம் வழியாக வரும்
அத்தோடு மயிலும் முழங்க என பொருள்
அடுத்து சொல்கின்றார்
“உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பேஅதான்று”
இப்படி முருகபெருமான் வந்து அருள்பாலிக்கும் அந்த திருச்சீரலைவாய் எனும் திருசெந்தூருக்கு சென்று வழிபட்டு தங்குவதும் நன்று , உனக்கு இன்னும் சொல்வேன் என்கின்றார்
அதாவது திருசெந்தூன் முருகபெருமானின் புகழைபாடும் நக்கீரர் அங்கே முருகபெருமான் எப்படி வீற்றிருப்பான் எனபதை முந்தைய வரிகளில் சொன்னார்
இந்த வரிகளில் முருகபெருனானின் திருகரங்களை பற்றி சொல்லி அவற்றின் செயல்களை பெருமைகளை சொல்லி அப்படியான பன்னிரண்டு கரங்களோடு திருசெந்தூரில் வீற்றிருக்கும் முருகபெருமானை சொல்லி
வானமும் கடலும் இசைக்க விண்ணவரும் மண்ணவரும் இசைக்க பெரும் ஆரவாரத்துடன் அங்கே முருகபெருமான் வீற்றிருக்கின்றான், திருபரங்குன்றம் போல் அங்கு முருகபெருமான் கம்பீரமாக வீற்றிருக்கின்றான் அவனை அண்டினால் எல்லாநலமும் அடையலாம் என பாணருக்கு போதிக்கும் நக்கீரர் அடுத்து பழனி முருகனை பற்றி பாட தயாராகின்றார்
செந்தூர் தலம் சூரசம்ஹார தலம் என்பதால் அந்த பன்னிரண்டு கரங்களையும் சூரனின் பெரும் போருக்கு ஈடாக சொல்லி அந்த சூரனிடமிருந்து தேவரை காதது சூரனையும் அணைத்த அந்த கரங்கள் தன் அடியாரையும் காத்து ஞானம் அருள காத்திருக்கின்றது என்பதை பாடுகின்றார்
(தொடரும்)