திருமுருகாற்றுப்படை : 09
திருமுருகாற்றுப்படை : 09 (126 முதல் 137 வரிகள்)
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்.
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புக”
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
நக்கீரர் திருப்பரங்குன்றம், திருச்செந்தூரை அடுத்து திருஆவினன்குடி கோவிலுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றார்.
திருஆவினன்குடி என்பதுதான் பழனி ஆலயத்தின் மலை அடிவாரத்தில் இருக்கும் கோவில், மூன்றாம் படைவீடு அதுதான்.
அந்த ஆவினன் குடியில் காணப்படும் காட்சிகள் ஒவ்வொன்றாய் விவரித்து, முருகப்பெருமானின் அடியார் சிறப்பையும் அப்படியே முருகப்பெருமானின் சிறப்பையும் சொல்லிப் பாடுகின்றார்.
இதோ முதல் வரி.
“சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்”
பழனி முருகனை காணத் துறவிகள், சன்னியாசிகளின் கோலத்தை காட்டுகின்றார் நக்கீரர். அவர்கள் இடையிலே சன்னியாசிகளுக்கான மரவுரி அணிந்திருக்கின்றார்கள். அவர்கள் தலைமுடி தும்பைப் பூ போல வெளுத்து காணப்படுகின்றது.
அந்த வெளுத்த, நரைத்த முடியினை அவர்கள் கொண்டையாகக் கட்டியிருக்கும் கோலம், அள்ளி முடியப்பட்ட நீண்ட வெண்முடிக் கொண்டையும், வெண் தாடியும் பார்க்கும் போது பெரிய வலம்புரி சங்கினைப் பார்ப்பது போல் அவர்கள் முகம் தோன்றுகின்றது என்பது பொருள்.
வலம்புரி சங்கு என்பது தெய்வாம்சமானது, அரிதானது. பார்த்தாலே நலம் பயக்கக் கூடியது. அப்படியான சங்கு போன்றவர்கள் அவர்கள், அபூர்வமானவர்கள், தெய்வாம்சம் நிறைந்தவர்கள் எனச் சூசகமாகச் சொல்கின்றார் நக்கீரர்.
வலம்புரி சங்கு கூட்டமாகக் கிடைக்காது. லட்சம் சங்கில் ஒரு சங்குதான் வலம்புரி எனக் கிடைக்கும். அப்படி அபூர்வமான சங்கைப் போல லட்சத்தில் ஒருவராக வரும் துறவிகள் இங்கே குழுமி வருகின்றார்கள் என்பதைச் சொல்கின்றார்.
அடுத்து அவர்கள் தோற்றத்தைச் சொல்கின்றார்.
“மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர்”
அவர்கள் உடல் ஆஜானுபாகுவாக இல்லை, சதைப் பிடிப்பாக இல்லை. ஆனால் உடலில் ஒரு ஒளிமிக்க தேஜஸ் தெரிகின்றது. அவர்கள் உடல் மெலிந்து எலும்புகள் வெளித் தெரிகின்றன. அந்த எலும்புகள் எண்ணிவிடக் கூடிய அளவில் தெரிகின்றது. அதன் மேல் தாங்கள் தவமிருக்கும் மான் தோலை போட்டிருக்கின்றார்கள்.
சதைப்பிடிப்பு இல்லை என்றாலும் ஒளிமிக்க ஜோதிபோல் பளபளப்பு மேனி கொண்டவர்கள் அவர்கள் என்பது பொருள்.
அவர்கள் உடல் மெலிந்தாலும் ஒளிமிக்க மேனி கொண்டவர்கள், ஊனை வெறுத்து உள்ளொளி பெருக்கியவர்கள் என்பதைச் சொல்கின்றார்.
அடுத்து “நன்பகல் பலவுடன் கழிந்த உண்டியர்” என்கின்றார்.
எப்படி இவர்கள் இந்த ஒளிமிக்க உடலைப் பெற்றார்கள் என்பதைச் சொல்கின்றார் நக்கீரர். அவர்கள் உண்ணாமல் உறங்காமல் இருந்தவர்கள்.
அதற்காக அவர்கள் வறியவர்களா? உணவுக்கு வழியற்றவர்களா? என்றால் இல்லை. அவர்களுக்கு கொட்டிக் கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் உண்டு. ஆலயங்கள் உண்டு, பெரிய பெரிய ஊர்கள் உண்டு.
ஆனால் எல்லாம் இருந்தாலும் இல்லாத நிலையில் ஊனை ஒருத்தி, தூக்கம் தவிர்த்து, தவம் பல இயற்றி இந்த ஒளிமிக்க உடலை வைராக்கியமாகப் பெற்றார்கள் என்கின்றார் நக்கீரர்.
“ஊனினை யுருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்த”
என மாணிக்கவாசகர் பாடுவதைப்போல இவர்கள் சோற்றால் வளரும் உடலை, உணவினை வெறுத்து உடலை குறுக்கி இந்நிலை எட்டினார்கள் என்கின்றார் புலவர்.
இதுவரை இவர்களின் வெளித்தோற்றம் அதாவது வெண்தாடி வெண் கொண்டை, மரவுரி, எலும்பு உடல், ஒளிமிகுந்த தேகம் என அவர்களின் வெளித்தோற்றத்தைச் சொன்ன நக்கீரர் இனி அவர்களின் அகத்தோற்றம், அவர்களின் மனம் எப்படியானது? சிந்தை எப்படியானது? என்பதைச் சொல்கின்றார்.
இங்கே ஒரு சுவாரஸ்யத்தை நக்கீரர் சுட்டிக்காட்டுகின்றார். பொதுவாக மனிதனும் மிருகமும் பசிவந்தால் ஒரே குணத்துக்கு வருவார்கள். பெரும் கோபமும் எரிச்சலும் ஆத்திரமும் காட்டுவார்கள்.
“பசி வந்தால் பத்தும் பறந்துபோம்” என்பார்கள்.
அப்படி பசி வந்த நிலையிலும் அதாவது தவம் விரதம் எனக் கடுமையாக உணவு கட்டுப்பாடு உள்ள நிலையிலும் அவர்கள் கோபப்படுவதில்லை. ஒன்றும் இல்லா நிலையிலும் ஆத்திரமடைவதில்லை என்பதைச் சொல்லியபடி இந்த வரிகளைச் சொல்கின்றார்.
“இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர்”
இவர்கள் மனம் எப்படியானது என்றால் எல்லாம் கடந்த ஞானநிலையில் அன்பு நிலையில் இருப்பவர்கள். இவர்களுக்கு எதிரிகள் இல்லை. அதனால் யாரையும் கோபப்பட்டு சீறவேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்கு எல்லோருமே அன்பர்கள், அன்பு ஒன்றே இவர்கள் மனதில் நிறைந்திருக்கும்.
இவர்கள் இப்படி தவம், தியானம் என இருப்பதால், யாருக்குமே போட்டி இல்லை என்பதால் இவர்கள் கல்லாதாவர்களா என்றால் இல்லை.
இவர்களுக்கு இயற்கையாகவே பிரபஞ்ச ஞானம் கொட்டிக் கிடக்கும். கற்றறவர்களுக்கு ஈடாக அல்ல அவர்களே தலைகுணிந்து வணங்கி தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் அளவு கற்றவர்க்கெல்லாம் தலைமை தாங்கும் அளவு இயற்கை அறிவுடன் ஞானத்துடன் விளங்குவார்கள்.
அவர்கள் மனம் ஞானத்தால் நிறைந்தது என்கின்றார்.
அடுத்து “காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர்” என்கின்றார்.
அதாவது காமம், வெகுளி, மயக்கம் எனும் மூன்றையும் கடந்த நிலையில் இருப்பவர்கள். அப்படியானவர்கள்தான் எல்லோரையும் நிபந்தனையின்றி நேசிக்கும் தெய்வீகமான அன்பு நிறைந்த உள்ளத்தை பெறமுடியும்.
அடுத்து பாடுகின்றார்.
“இடும்பை யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புக”
சிறிதளவேனும் துன்பத்தை யாருக்கும் செய்யாதவர்களும், தானும் உணராதவர்களுமான, எப்போதும் மகிழ்ச்சி இன்பம் நிறைவு மட்டுமே பிறர்க்கு கொடுக்கும் அந்த ஞானியர்கள், விருப்பு வெறுப்பு இல்லாத மனதைக் கொண்ட கண்ணாடி போன்ற மனம் கொண்ட, தெளிந்த மனம் கொண்ட ஞானியர்கள் முன்னே செல்கின்றார்கள் என்கின்றார் புலவர்.
பாடலின் காட்சி இதுதான்.
திரு ஆவினன் குடிக்கு ரிஷிகளும் ஞானியரும் வருகின்றார்கள். அவர்கள் தாடியும் கொண்டையும் வெண்நிறக் கூந்தலினால் வலம்புரி சங்குபோல் தெரிகின்றது. மரவுரி அணிந்த அவர்கள் வற்றிய உடலைக் கொண்டிருந்தாலும் ஒளிமிக்க தன்மையினைக் காட்டி நிற்கின்றார்கள்.
அவர்கள் நூல் பல கற்ற கல்வியாளருக்கும் தலைமை பதவி அடையும் ஞான நிலையில் இருக்கின்றார்கள்.
அவர்கள் மனதால் மாசு அற்றவர்கள். அன்பும் ஞானமும் கொண்டவர்கள். தவத்தால் காமம் வெகுளி மயக்கமெல்லாம் கடந்த ரிஷிகள். எல்லா உணர்வையும் கடந்த தெய்வீகத்தவர்கள்.
அவர்கள் கூட்டம் கூட்டமாக முன்னால் வருகின்றார்கள். பெரிய ஊர்வலத்தின் முன்னால் அவர்கள் வருகின்றார்கள் என்பது இந்தப் பாடலின் பொருள்.
அதாவது ஆவினன்குடி முருகனைக் காண பலர் விண்ணவர் மண்ணவர் என வரும்போது முன்னால் இந்த ரிஷிகள்தான் வருகின்றார்கள் என்கின்றார் நக்கீரர்.
ஏன் ரிஷிகளை முன்னால் அனுப்பினார்கள்?
இங்கேதான் பழனிமலையின் சிறப்பை அதன் ஆதார தாத்பரியத்தை சொல்கின்றார் நக்கீரர்.
ஞானப்பழத்துக்கு சண்டையிட்ட முருகப்பெருமான் பின் ஆண்டிக் கோலத்தில் வந்து நிற்குமிடம் பழனி. அந்த முருகன் சிவன் பார்வதியுடன் சண்டையிட்டு வந்து தங்கிவிட்ட இடம்.
இன்னும் தேவர்களே முருகனிடம் பேச அஞ்சி நிற்கின்றார்கள்.
அந்நேரம் முருகனுக்கு பிடித்தமனவர்கள் இருவர். ஒன்று அவனின் பக்தர்கள். இன்னொன்று இம்மாதிரி ரிஷிகள். அதனால் தவக்கோல ரிஷிகளை முன்னால் அனுப்பி முருகப்பெருமானின் கோபத்தை தணிக்க தேவலோகம் முயற்சிக்கின்றது என்பதை மறைமுகமாகச் சொல்லிப் பாடுகின்றார் நக்கீரர்.
பழனியில் ஆண்டிக்கோலத்தில் நிற்கும் ஞானப்பழமான முருகப் பெருமானை நோக்கி, ஞானம் தேடிக் கொண்டிருக்கும் முனிவர்கள், ஞானம் அடைந்த முனிவர்கள், எங்கள் ஞானத்துக்குத் தலைவனே, தவத்துக்குத் தலைவனே என ஓடி வருகின்றார்கள். கூட்டத்தின் முன்னால் அவர்கள் வந்து தேவலோகத்துடன் முருகனுக்கு ஏற்பட்ட கோபத்துக்கு தூதாக வருகின்றார்கள் என சூசகமாகப் பாடுகின்றார் நக்கீரர்.
அந்தக் கூட்டத்தில் முன்னால் முனிவர்கள் இப்படி வருகின்றார்கள், அடுத்து பின்னால் யாரெல்லாம் வருகின்றார்கள் என்பதை அடுத்து காணலாம்.
(தொடரும்)