திருமுருகாற்றுப்படை : 10
(138 முதல் 154 வரை உள்ள வரிகள்)
“புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர
நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப்
பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க
கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்”
ஆவினன்குடியில் இருக்கும் முருகனைக் காண தேவலோகத்தவர் வரும் காட்சியினை விளக்குகின்றார் நக்கீரர். அதன்படி முதலில் முனிவர்கள், ரிஷிகள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.
முருகப்பெருமான் கயிலாயத்தில் இருந்து கோபத்தில் ஆவினன்குடிக்கு வந்துவிட்டார். அவர் இல்லாத தேவலோகம் என்னாகும்?
அதனால் தேவலோகமே திரண்டு வந்து அவரை சாந்தப்படுத்த முயல்கின்றது. முருகப்பெருமான் தன் அடியார்கள், தன் பக்த ஞானியரிடம் பரிவுள்ளவர் என்பதால் முதலில் அவர்கள் வரிசையாக வந்தார்கள். அதைக் கடந்த பாடலில் கண்டோம்.
இப்போது அவர்களை அடுத்து இனிய இசையுடன் பாடல்களைப் பாடும் கந்தர்வர்கள் வருகின்றார்கள்.
கந்தவர்கள் 18 கணங்களில் ஒரு குலம். இவர்கள் ஆடல் பாடல்களில் வல்லவர்கள். மனித குலத்துக்கும் தேவர் குலத்துக்கும் இணைப்பாய் உள்ளவர்கள். இவர்கள் “கந்தர்வ வேதம்” எனும் இசை, நடனத்தில் ஈடு இணையற்ற திறன் கொண்டவர்கள்.
இவர்கள் அருள் பெற்றவர்களே மானிடரில் இசை, பாடல், நடனம் என கலைகளில் சிறக்க முடியும். அப்படியான வரத்தை கொண்டவர்கள்.
இவர்கள் முருகப்பெருமானின் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு இசை மீட்டிப் பாடிக்கொண்டே வருகின்றார்கள். இனிய இசையும் மென்மொழிப் பாடலும் கோபத்தைத் தணிக்கும் சக்தி கொண்டவை.
இதனால் அவர்கள் முனிவர்களுக்குப் பின்னால் பாடி வருகின்றார்கள். அந்தக் காட்சியினை சொல்கின்றார் நக்கீரர்.
“புகைமுகந் தன்ன மாசில் தூவுடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்”
கந்தர்வர்கள் எப்போதும் அழகான ஆடையினை நல்ல அலங்காரத்தோடு அணிவார்கள். அப்படி இந்த கந்தர்வர்கள் அணியும் ஆடை எப்படியானது என்பதைச் சொல்கின்றார் நக்கீரர்.
அந்த ஆடை வெண்ணிறப் புகையினை ஆடையாக்கியது போல மிக மிக மெல்லிய வெண்ணிற ஆடையாக இருந்ததது என்கின்றார். மெல்லிய ஆடைக்கு அந்த வெண்புகையினை உவமையாகச் சொல்கின்றார்.
அப்படி ஆடை அணிந்தவர்கள் மொட்டு விரிந்த புத்தம் புது மலர்களை அணிந்தவர்களாய் வந்து கொண்டிருந்தார்கள் என்கின்றார்.
அடுத்து பாடுகின்றார்.
“செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர”
காதை அருகே வைத்து சோதித்து யாழின் நரம்புகளைச் சரி செய்து, மனம் முழுக்க ஒன்றி இனிமையான பாடல்களை அழகான இசையோடு பாடியபடி அவர்கள் வருகின்றார்கள்.
யாழ், வீணை போன்ற நரம்பிசை கருவிகளுக்கு அதன் கம்பிகள் எனும் நரம்புகள் முக்கியமானவை. அவை மிக விரைப்பாகச் சரியான அளவில் இருந்தால்தான் இனிய இசை வரும்.
அப்படி இசை சரியாக வருகின்றதா எனக் காதை அருகில் வைத்து சோதித்து நரம்பை திருத்தம் செய்துவிட்டு அழகான இசையினை கந்தர்வர்கள் பாடத் தொடங்குகின்றார்கள்.
இசைக் கருவியான யாழ் மட்டும் சரியாக இருந்தால் போதாது. இசைப்போர் மனம் மிகத் தெளிவாக, சூழல், ராகம், பண், பாடல் பாடும் பொருள் என எல்லாவற்றிலும் கலந்திருக்க வேண்டும்.
அப்படி எல்லாம் கலந்த மனம் ஒருமுகப்பட்ட நிலையில் வேண்டும். அந்த மனநிலையில் கந்தர்வர்கள் இருக்கின்றார்கள்.
இப்போது முருகப்பெருமானை சாந்தப்படுத்தி பாட வேண்டும். அதனால் மென்மொழி அவசியம்.
இப்படி மிக மிகத் துல்லியமான இசை. அதற்கு ராகம் பாடும் மனம், இன்னும் இனிய மொழிகளின் மெல்லிய பாடல் என கந்தர்வர்கள் பாடியபடி வருகின்றார்கள்.
அடுத்து கந்தவர்கள் பாடி வரும்போது அந்த கந்தர்வப் பெண்கள் எப்படி வருகின்றார்கள் என்பதை அடுத்துச் சொல்கின்றார் நக்கீரர்.
“நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப் “
அந்த பெண்களின் உடலை கண்டால் நோய் இருந்த அல்லது இருக்கும் அடையாளமே தெரியவில்லை. அவ்வளவு பொலிவான உடலைக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு உடலுக்கு நோய் இருந்தால் நடையில் தெரியும், பேசுவதில், பார்ப்பதில், கேட்பதில் என அல்லது பார்த்தவுடன் எனப் பல வழிகளில் தெரியும்.
ஆனால் அவர்கள் உடலில் அப்படி ஏதும் தெரியவில்லை. நினைத்தபடி யெல்லாம் அவ்வுடல் வளைகின்றது.
அவர்கள் மாநிறம் படைத்தவர்கள். மாமரத்தின் கொழுந்தின் நிறத்தை உடையவர்கள். அந்த மாநிற மேனியில் அழகானத் தேமல் படர்ந்திருக்கின்றது. அது சூரியப் பொன்னை அரைத்துப் பொடியாக்கிப் பூசியது போல் மினுமினுக்கின்றது.
அடுத்து பாடுகின்றார்.
“பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க”
பருமம் என்றால் இடுப்பில் அணியும் பதினெட்டு வடம் கொண்டப் பட்டி. கழுத்தில் மூன்றுவடம் சங்கிலி அணிவதுபோல் இடுப்பில் பதினெட்டு வடம் வரும்படி அணிந்திருப்பது கந்தர்வப் பெண்களின் அலங்காரம்.
அப்படி இடுப்பில் பதினெட்டு வடம் அணிந்து வரும் பெண்கள் அவர்கள். அந்த வடம் அணியபட்ட இடுப்பானது மேடு பள்ளங்களோடு அழகுறக் காட்சியளிக்கின்றது.
அந்தப் பெண்கள் குற்றமற்றவர்கள். அப்படியே குறையே இல்லா ராகத்தை கந்தர்வர்களோடே பாடியபடி தொடர்ந்து வருகின்றார்கள்.
இப்படி கந்தர்வர்கள், முனிவர்கள் பின்னால் வர, அவர்களை அடுத்து யார் வருகின்றார் என்பதைப் பாடுகின்றார் நக்கீரர்.
முன்னால் முனிவர்கள் செல்கின்றார்கள். அதாவது மெலிந்த தேகமுடைய ஆசையினை வென்ற முனிவர்கள், எளிமையாக மிக மிகக் கடினமான தவ வாழ்க்கை வாழும் முனிவர்கள் செல்கின்றார்கள்.
அடுத்து எப்போதுமே உல்லாசமாய் ஆடிப் பாடி மகிழ்ந்து எல்லோரையும் மகிழ்விக்கும் கந்தர்வர்கள் செல்கின்றார்கள்.
அவர்களை அடுத்து சிவனும், திருமாலும் தேவர்களும் வருகின்றார்கள். பிரம்மன் சிறையில் இருப்பதால் அவன் வரவில்லை.
இந்தக் காட்சியினை அடுத்து சொல்கின்றார் நக்கீரர்.
“கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் “
கொடும் விஷத்தைக் கொட்டும் துளையுடைய வெள்ளைப் பற்களை வைத்திருப்பதும், தன் கொடிய மூச்சுக் காற்றிலே விஷத்தைக் கலந்த நெருப்பை வீசும் சக்தி கொண்டதும், யாரையும் அச்சுறுத்தும் சக்தி கொண்டதுமான சர்ப்பமே அஞ்சி ஓடும்படி அடிக்கும் வல்லமையானதும், வளைந்த கோடுகளைக் கொண்ட இறகுகளைக் கொண்டதுமான கருடனைத் தன் கொடியில் கொண்டவரான செல்வமிக்க திருமால் என்பது பொருள்.
கருடக் கொடி ஏந்திவரும் திருமாலும் அங்கே வருகின்றார் என்கின்றார் நக்கீரர்.
பாம்பிற்கு முன் வாயில் நான்கு பற்கள் வெண்ணிறத்தில் உண்டு. அவற்றின் முன் இரு பல்லில் துளைகள் உண்டு அவை நீண்டவை. பின்னால் இருக்கும் பல் கொஞ்சம் சிறியது.
இந்த பற்கள் இடையேதான் விஷப்பை இருக்கும். அங்கே விஷம் இருக்கும். பாம்பு கடிக்கும்போது இந்த விஷம் பல்லின் துளை வழியாக உடலில் செல்லும்.
அப்படியான கொடுமையான பற்களைக் கொண்ட நாகங்களைச் சொல்கின்றார். இன்னும் சில நாகங்கள் கடிக்காமல் மூச்சுக் காற்றிலேயே விஷத்தை அக்னியாய் பரப்பி விடுபவை. ராஜநாகம் போன்றவை 20 அடிக்கு அப்பால் இருப்போரைத் தன் விஷ மூச்சால் கொல்லும் சக்தி படைத்தவை.
அப்படியான கொடும் நாகங்களை அடிப்பது கருடன். எந்த நாகமென்றாலும் கருடன் அதை அச்சுறுத்தும். கருடனின் நிழலைக் கண்டாலே பாம்பு பதுங்கும். தன் அலகால் கொத்தி அல்ல, தன் இறகால் அடித்தாலே நாகங்கள் சுருளும். அப்படியான கருடனைத் தன் கொடியில் வைத்திருக்கும் பெருமாள் வருகின்றார்.
அடுத்து சிவபெருமான் வரும் காட்சியினைச் சொல்கின்றார்.
“வெள்ளேறு வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்”
வெள்ளைக் காளையினைக் கொடியில் கொண்ட வரும், உமையாளைத் தன் இடபாகத்தில் கொண்டவர் பெரிய தோள்களை உடையவர், மூன்று கண்களைக் கொண்டவரும், மூன்று கோட்டைகளைத் (திரிபுரம்) தன் புன்னகையாலேயே எரித்தவருமான சிவபெருமான் வருகின்றார் என்கின்றார்.
சிவபெருமானின் கொடி ரிஷபம். அந்தக் கொடியினை வலது தோளில் உயர்த்திப் பிடிக்கின்றார். அதாவது அவர் வலிமையானத் தோள்களைக் கொண்டவர். பெரும் அசுரர்களை எல்லாம் அழித்தவர். அப்படியான பலமுடையவர்.
எல்லா தேவர்களின் கண்களும் இமைக்காது. ஆனால் இரு கண்கள்தான் உண்டு. சிவனுக்கு மட்டும் மூன்று கண்கள் உண்டு. அப்படித் தனிச் சிறப்பு வாய்ந்தவர்.
அவரின் இடபாகத்தில் உமையவள் இருக்கின்றாள். அவர் எப்படி வலிமையானவர் என்றால் யாராலும் நெருங்க முடியாத மூன்று பறக்கும் கோட்டைகளைத் தன் புன்னகையாலேயே நொறுக்கிப் போட்டவர். அவ்வளவு வலிமையானவர்.
அந்த சிவபெருமானும் வருகின்றார்.
ஆக இந்த வரிகளில் ஆவினன் குடியில் இருக்கும் முருகனைத் தேடி கந்தர்வர்கள் வரும் அழகையும், அவர்கள் பாடிவரும் காட்சியும் சொல்லி, அவர்களுக்குப் பின்னால் திருமாலும் சிவனும் வரும் காட்சியினைப் பாடுகின்றார் நக்கீரர்.