திருமுருகாற்றுப்படை : 11
155ம் வரி முதல் 176ம் வரிகள் வரை
“நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவ ராக
ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வர
பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத்
தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கிந்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் .
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று.
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
முதல் சில வரிகள் இப்படி வருகின்றன.
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்”
அதாவது “நூற்றுப்பத்து அடுக்கிய” நூறை பத்துமுறை அடுக்கினால் வரும் ஆயிரம் என பொருள். ஆயிரம் கண்களை உடையவன் எனப் பொருள்.
“நாட்டத்து நூறு பல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து”. அதாவது 100 வேள்விகளை வெற்றிகரமாக முடித்தவனும், பகைகளை வென்றவனும்.
“ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை”. நான்கு கொம்புகளை உடையதும், நடக்கும்போதே அழகான காட்சியினைக் காட்டுவதும், தும்பிக்கை தரையில் புரளும்படி பெரிய உருவம் கொண்டதுமான யானை எனப் பொருள்.
“எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்” என்றால் அந்த யானையின் உச்சியில் அமர்பவன் எனப் பொருள்
இது இந்திரனைக் குறிக்கும் வரிகள். அவன் ஆயிரம் கண்களை உடையவன். 100 யாகங்களைச் செய்து அந்த தேவலோகப் பதவியினை அடைந்தவன், பகை ஒழித்தவன்.
அவன் நான்கு தந்தம் உடைய அழகான நடை நடக்கும் ஐராவதம் எனும் யானையின் மேல் அமர்ந்து வரும் கம்பீரம் கொண்டவன். அந்த இந்திரனும் இப்போது நடந்து வருகின்றான் எனப் பாடுகின்றார் நக்கீரர்.
அடுத்த வரிகள் இப்படி வருகின்றது.
“நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவ ராக
ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வர”
அதாவது “நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய” என்கின்றது.
இந்த உலகை இந்திரன், எமன், வருணன், குபேரன் ஆகிய நால்வரும் முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளில் இருந்து காக்கின்றார்கள். இவர்கள்தான் காவல் தெய்வங்கள்.
இந்த நான்கு பேரும் இப்படி காவல் இருந்தாலும் இவர்களுக்கு மேல் முப்பெரும் தெய்வங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு என உண்டு.
அதை அடுத்த வரியில் சொல்கின்றார் நக்கீரர்.
“உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்” என்கின்றார்.
இந்த மூவரும் மீண்டும் தம் தம் தொழிலைச் செய்யும்படி அதாவது “பலர்புகழ் மூவரும் தலைவ ராக” என்கின்றார் புலவர்.
அதாவது நால்வர் காவல் காக்க மூவர் முக்கிய தொழிலை செய்ய வேண்டும். அந்த மூவருக்கும் கடமை நடக்கும்படி என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்து சொல்கின்றார்.
“ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வர”
அதாவது இன்பமான உலகில் அழகான தாமரையில் தோன்றுபவனும், ஊழிக்காலம் வரை நீண்ட ஆயுள் கொண்டவனும், நான்முகம் கொண்ட ஒருவனைக் கேட்டபடி வருகின்றார்கள் என்கின்றார் புலவர்.
அதாவது உலகை நான்கு தெய்வங்கள் நான்கு பக்கம் இருந்து காப்பார்கள், மூன்று தெய்வங்கள் அதை படைத்து, காத்து, அழிப்பார்கள் இது விதி.
ஆனால் படைக்கும் தெய்வமான பிரம்மன் இல்லாமல் ஒன்றும் படைக்கப்படாது.
அப்படி ஒன்றுமே படைக்கப் படாவிட்டால் திருமால் எதை காப்பார்? சிவன் எதனை அழிப்பார்?
நான்கு திசையிலும் நான்கு தேவர்கள் யாரைக் காப்பார்கள்? ஒன்றும் நடக்காது, பிரம்மன் படைத்தால்தான் எல்லோருக்கும் அவரவர் கடமையும் தொழிலும் செய்ய முடியும்.
அந்த பிரம்மனை முருகப்பெருமான் சிறை வைத்துவிட்டான் அல்லவா? அந்த சிறையில் இருந்து பிரம்மனை மீட்டு அவனால் மற்றவரும் கடமை செய்ய வழிவிடும்படி தேடி வருகின்றார்கள் என்கின்றார் நக்கீரர்.
(பிரம்மனை முருகப்பெருமான் சிறை வைத்தார். அதாவது பிரம்மனுக்கு பிரணவ மந்திரம் மறந்து விட்டது. முருகப்பெருமான் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
தனக்கே சரியாக ஒன்றும் தெரியாத போது அவர் எப்படி படைக்க தகுதியுள்ளவராவார் என வெகுண்டு அவரை சிறை வைத்தான் முருகன் என்பது புராணம்.
அதையே தான் கொடுத்த வேலால் அதாவது எல்லாம் படைக்கும் தன்னால் உருவானது அந்த வேல், சூரனை வதம் செய்த வேல் தன்னுடையது என பிரம்மன் பெருமை கொண்டதால் அவனை சிறையில் அடைத்தார் முருகன் என்பதும் இன்னொரு செய்தி.
எப்படியோ பிரம்மனை முருகன் சிறை வைத்தது நடந்தது. அதனால் படைப்புத் தொழில் தடைப்பட்டது.)
அடுத்து நக்கீரர் தொடர்கின்றார்.
“பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு”
“பகலிற் றோன்றும் இகலில் காட்சி” என்றால் இரு பொருள் கொடுக்கும். முதலில் பகலில் தோன்றும் சூரியன் போல ஒளிரும் இயல்புடையவர்கள். நிழலிருள் கூட இல்லாத ஜொலிப்பினை உடையவர்கள் எனப் பொருள்.
இன்னொன்று தங்களுக்குள் பகுப்பு இல்லாத, பிரிவு இல்லாத கொள்கையினை உடையவர்கள் எனவும் பொருள்.
“நால்வேறு இயற்கைப்” என்றால் நான்கு வகையான தொழில் பிரிவினை கொண்டவர்கள். ஆதித்தர், ருத்திரர், வசுக்கள், மருத்துவர் என்று நான்கு வகையாக தேவர்கள் பிரிந்து தொழில் செய்வார்கள்.
“பதினொரு மூவரொடு” என்றால் மூன்று பதினொன்று அதாவது முப்பத்தி மூன்று எனப் பொருள்.
வசுக்கள் எண்மரும், ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், மருத்துவர் இருவரும் என நால் வகைப்பட்ட முப்பத்து மூவர் எனப் பொருள்.
முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பார்கள். இங்கே கோடிக்கு ஒரு தலைவன் முன்னால் வருகின்றான் என்பது பொருள்.
அடுத்து “ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்” என்கின்றார். “ஒன்பதிற்று இரட்டி” என்றால் பதினெட்டு எனப் பொருள். 18 வகையான பெரிய நிலையில் இருப்போர் வருகின்றார்கள் என்பது வரியின் பொருள்.
தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாராகணம், ஆகாசவாசிகள், போக பூமியோர் எனப் பதினெட்டு சக்தி வாய்ந்த இனத்தவரும் முருகனைத் தேடி வருகின்றார்கள் எனப் பாடுகின்றார் நக்கீரர்.
அடுத்து பாடுகின்றார்.
“மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத்”
வின்மீன் ஜொலிப்பதைப் போன்ற தோற்றத்தை உடையவர்கள். மீன்கள் குவிந்திருக்கும் கடலில் இருந்து எழும் பெரும் புயல் போன்ற வேகத்தில் வருகின்றார்கள் என்பது பொருள்.
அடுத்து “தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட உரும்இடித் தன்ன குரலின”
அணல் பறப்பது போல் பேசுகின்றார்களாம். அதாவது அந்த பெரும் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் சத்தமாகப் பேசிக்கொண்டு வருவது இடியோசை போல, நெருப்புப் பந்தின் உக்கிரம் போல, தீயின் வெப்பம் முன் நின்று பேசுவது போல இருக்கின்றதாம்.
நெருப்பு உணர்ச்சியுடன் விரைந்து வருகின்றார்கள் என்கின்றார்.
அடுத்து பாடுகின்றார்.
“உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கிந்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காண”
இப்படி எல்லா பெரிய தெய்வங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் எல்லோரும் தங்களுக்குள் ஒரே கருத்தைக் கொண்டு எல்லோரும் திரண்டு வருகின்றார்கள் என்கின்றார்.
முருகப்பெருமான் பிரம்மனை சிறையில் அடைத்துவிட்டான். அந்த முருகப்பெருமானிடம் பிரம்மனை விடுவிக்கச் சொல்லக் கோர சிவனும் திருமாலும் மட்டும் வரவில்லை. நான்கு பெரும் தெய்வங்கள் மட்டும் வரவில்லை.
முப்பத்து முக்கோடி தேவர்களும் இன்னும் பதினெட்டு வகை இனங்களும் பலரும் மிகுந்த உணர்ச்சியுடன் வேண்டுதலுடன், ஒரே கொள்கையுடன் நெருப்பு போல ஆரவாரத்துடன், கடல் புயல் போல் வேகத்துடன் வந்து கொண்டிருக்கின்றார்கள்.
பிரம்மனை விடுவிக்கக் கோரி கயிலாயம், வைகுண்டம், தேவலோகம், எமலோகம், யட்சர்கள் உலகம், வருணலோகம் என எல்லா பெரிய இடங்களும், அப்படியே பதினெட்டு லோகங்களின் பெரும் ஆற்றல் வாய்ந்த இனங்களும் ஆர்ப்பரித்தபடி வேகமாக வருகின்றனர் என்கின்றார் நக்கீரர்.
அடுத்து “தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று” என்கின்றார்.
அதாவது கேடு இல்லாத கொள்கைக் கொண்ட பதிவிரதையான தேவசேனையொடு முருகன் அந்த கோவிலில் எழுந்தருளியிருக்கின்றான் எனப் பாடுகின்றார் நக்கீரர்.
முருகப்பெருமான் தேவசேனையோடு எழுந்தருளியிருக்கும் அந்த தலத்தில் அவனை வேண்டி சிவனும் பெருமாளும் செல்கின்றார்கள்.
இந்திரன் உள்பட தேவர்கள் செல்கின்றார்கள். குபேரனும் எமனும் செல்கின்றார்கள். இன்னும் முப்பத்து முக்கோடி தேவர்கள் செல்கின்றார்கள்.
அது மட்டுமன்றி பதினெட்டு உலகத்தவரும் சென்று அலை அலையாய் வணங்குகின்றார்கள். அவர்களுக்கு முருகப்பெருமான் தேவசேனையோடு வரமருள்கின்றான்.
ஏன் பாணனே, நீயும் சென்று வணங்கு. பிரம்மனுக்காக மொத்த தேவலோகமும் வணங்கும் தலம் அது. அப்படியான தலத்தில் மும்மூர்த்திகளும் தேவர்களுமே கையேந்தி நிற்கும் தலத்தில் உனக்கும் நன்மை உண்டாகும் என அவனை பழனிமலைக்கு போகச் சொல்லும் நக்கீரர், அடுத்து அவனை சுவாமிமலை எனும் திருவேரகத்துக்குச் செல்லப் பணிக்கின்றார்.
(ஆவினன்குடி என்பது பழனி மலையின் அடிவாரத்தில் இருக்கும் தலம், மலையின் உச்சியில் இருப்பவர் பழனியாண்டவர். ஆனால் காலப்போக்கில் பழனி என்பது இரண்டையும் குறிப்பதாகி விட்டது.
ஆவினன்குடி என்பதுதான் அந்த தலத்தின் உண்மையான பெயர். நக்கீரர் அதைத்தான் பாடுகின்றார்.
ஆவியர் குடி என அதற்கு முன்பு பெயர். ஆவியர் என்பது ஒரு இனம். புகழ்பெற்ற வள்ளல் பேகன். மயிலுக்கு போர்வை கொடுத்த பேகன் அந்த குலத்தில் வந்தவன்.
ஆவியர் இருந்த இடம் என்பதால் ஆவினன் குடி என்றாயிற்று. அந்த மலையின் பழைய பெயர் பொதினி, அது பழனி என மருவிற்று.
பின் எல்லாமும் பழனி என்றாயிற்று. ஞானப் பழத்துக்கு சண்டையிட்டு முருகன் ஞானக் கடவுளாக நிற்கும் இடம். ஞானப் பழகோலத்தில் நிற்கும் இடம் என்பதால் பழனி என்ற பெயரும் வந்தது என்பதும் புராணம்.)
இந்த பழனிமலை சிறப்பை அங்கு முருகப்பெருமானின் பெரும் அரசாட்சியினை, ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லா பெரும் தெய்வங்களும் வந்து பணியும் சிறப்பைச் சொல்லி போற்றுகின்றார் நக்கீரர்.
அடுத்து சுவாமி மலையினைப் பாடுகின்றார்..
(தொடரும்..)