திருமுருகாற்றுப்படை 12
177 முதல் 189 வரையான வரிகள்.
“இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று”
நக்கீரர் இப்போது திருவேரகம் எனும் சுவாமிமலையினைப் பற்றி குறிப்பிடுகின்றார். அந்த சுவாமிமலையில் முருகனை வணங்கும் அந்தணர்களைப் பற்றிச் சொல்கின்றார்.
ஏரகம் என்றால் ஏர் + அகம் எனப் பிரிந்து வரும். ஏர் என்றால் அழகு, அகம் என்றால் வீடு. இங்கே அகம் என்பது தெய்வம் வாழும் அகத்தை குறிப்பது.
இந்த ஏரகம் என்பது நாஞ்சில் நாட்டில் உள்ள குமாரக்கோவில் என்பது சிலர் வாதம். அங்கும் அப்படி ஒரு முருகன் கோவில் உண்டு.
ஆனால் அருணகிரியார் தன் வார்த்தைகளால் சுவாமிமலையை உறுதி செய்கின்றார்.
“ஏரக வெற்பெனும் அற்புத மிக்கசு வாமிமலைப்பதி மெச்சிய சித்த” எனும் அவர் வரியில் சுவாமிமலையே திருவேரகம் என்பது தெளிவாகின்றது.
இங்கே நக்கீரர் அதிகம் பாடவில்லை. 13 அடிகள் மட்டும் பாடுகின்றார். அதிலும் 12 வரிகளில் முருகப்பெருமானை வணங்கும் பிராமணர்களைப் பற்றி மட்டும் சொல்கின்றார்.
முருகப்பெருமான் தந்தைக்கு வேதம் சொன்ன இடம் சுவாமிமலை. அந்த வேதத்தை ஓயாமல் ஓதிக்கொண்டிருப்பவர்கள் பிராமண அந்தணர்கள். அதனால் அதிகம் அவர்களைப் பற்றியே அந்த தலத்தில் பாடுகின்றார் நக்கீரர்.
அது வேதம் ஒலிக்கும் தலம் என்பதைச் சுருக்கமாகச் சூசகமாகச் சொல்ல விளைகின்றார். வேதங்கள் ஒலிக்குமிடத்தில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் அருள் புரிவார். அங்கு சென்றால் வேதஞான அருள் கிட்டும் என்பதைப் பாடுகின்றார்.”
இனி பாடலைக் காணலாம்.
“இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை “
“இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது” என்றால் ஆறு (இருமூன்று) தொழில்களை பண்புகளை வழுவாமல் செய்தல் எனப் பொருள்.
பிராமணர்களுக்கு ஆறு கடமைகள் உண்டு. வடமொழியில் அதனை “ஷட்கர்மா” என்பார்கள்.
கற்றல், கற்பித்தல், யாகங்கள் செய்தல், யாகங்கள் செய்வித்தல், தானம் பெறுதல், தானம் செய்தல் என ஆறு கடமைகள் அவர்களுக்கு முக்கியமானவை.
ஒரு பிராமணன் தானும் கற்க வேண்டும், தான் கற்றதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், தனக்காக மூன்று தீ (ஆவஹனியம், தாக்ஷினாக்னி, கார்ஹபத்யம்) வளர்த்து யாகம் செய்ய வேண்டும். பின் மற்றவர்களுக்கும் யாகம் செய்விக்க வேண்டும்.
தானம் பெற வேண்டும், தேவைப் படுவோருக்கு தானமாகக் கொடுத்தலும் வேண்டும்.
இப்படியான ஆறு கடமைகளை வழுவாமல் செய்யும் பிராமணர்கள் நிறைந்த சுவாமிமலை அது எனத் தொடங்குகின்றார் நக்கீரர்.
“இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி” என்பது பிராமணர்க்குரிய சில அடையாளமாகும். கோத்திரம், சூத்திரம் என இரு முக்கிய அடையாங்களைக் கொண்டிருப்பார்கள்.
கோத்திரம் என்பது கெளசிக கோத்திரம், பரத்வாஜ கோத்திரம், காஷ்யப கோத்திரம் எனத் தாங்கள் வழி வழி வந்த குடியின் அடையாளம்.
சூத்திரம் என்பது ஆபஸ்தம்பம், அசுவலாயனம், போதாயனம், திராஹ்யாமனம் என்பன போலத் தாம் செய்யும் யாகங்களை, வேள்விகளைக் குறிப்பது.
இங்கே ஒரே கோத்திரத்தில் பிறந்தவர்கள் அதே கோத்திரத்தில் பிறந்தோரை மணம் செய்யக் கூடாது. இப்படிப் பல விதிகள் உண்டு.
அப்படி இரு அடையாளங்களைக் கொண்டவர்களை, மிக மிகத் தொன்மையான அந்தப் பாரம்பரியங்களைக் காத்து வருபவர்களைப் பற்றி இரு பக்கமும் சுட்டிக் காட்டும் பெருமைகளைக் கொண்ட மிகத் தொன்மையான மரபினர் என்கின்றார்.
அடுத்து பாடுகின்றார்.
“அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை”
நாற்பத்து எட்டு ஆண்டுகள் (ஆறுநான்கு என்றால் இருபத்தி நான்கு, இரட்டி என்றால் அதன் இரட்டிப்பான 48), அதாவது ஒரு பிராமணன் 48 வயது வரை எல்லா வேதங்களையும் கடும் கட்டுப்பாட்டுடன் படிக்க வேண்டும். அப்படி 48 ஆண்டுகள் ஒரு விரதமாக நின்று கற்ற பிராமணர்கள் என்பது வரியின் பொருள்.
ஆம் பிராமணர்களின் வாழ்வு அவ்வளவு கடுமையாக இருந்தது. உபநயனம் முடிந்தது முதல் 48 வயது வரை அவர்கள் ஓயாமல் மந்திரங்களை வேதங்களை அறிந்து கொள்ள வேண்டும். 48 வயதுக்குப் பின்பே வாழ்வை தொடங்குவோராக இருந்தார்கள்.
“மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல”
“மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து” என்பதன் பொருள் இதுதான்.
பிராமணர்கள் வளர்க்கும் மூன்று அக்னிகளும் ஆவஹனியம், தக்ஷினாக்னி, கார்ஹபத்யம் எனப்பட்டது.
இதில் ‘கார்ஹபத்யம்’ – அதாவது இல்லத்தின் அதிபதியான க்ருஹபதிக்கு உரியது. இந்த கார்ஹபத்ய குண்டத்திலே தான் அணையாமல் எப்போதும் நெருப்பு எரிந்து கொண்டிருக்க வேண்டும். இது முழு வட்ட வடிவமாக இருக்கும் என்பது நியதி.
இதிலே ஒரு ஹோமமும் செய்வது கூடாது.
இதிலே இருக்கிற நெருப்பை பித்ரு காரியம் செய்வதற்காகவும், சில தேவதா ஹோமங்களுக்காகவும் இரண்டாவதான ஒரு குண்டத்தில் எடுத்து வைத்துப் பண்ண வேண்டும். இந்தக் குண்டம் தெற்கே இருப்பதால் இந்த அக்னிக்கு ‘தக்ஷிணாக்னி’ என்று பெயர். இது அரை வட்டமாக இருக்கும்.
மற்ற எல்லா தேவதைகளுக்கும் செய்கிற ஹோமங்களை மூன்றாவதான ‘ஆஹவநீயம்’ என்ற கிழக்குப் பக்கமுள்ள குண்டத்தில் பண்ண வேண்டும். கார்ஹபத்ய அக்னியிலிருந்தே கிழக்குக் குண்டத்தில் எடுத்து வைத்து ஆஹவநீய அக்னியை உண்டாக்க வேண்டும். இந்த ஆஹவநீய குண்டம் சதுரமாக இருக்கும். இப்பொழுது செய்யப்படும் பெரும்பான்மை யாகங்கள் இதுதான்.
இதைத்தான் சொல்கின்றார் நக்கீரர்.
அடுத்து “இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல”. பிராமணர்களுக்கு இரு பிறப்பு உண்டு. தாயிடம் இருந்து ஒரு பிறப்பும், பூணூல் அணிந்த பின் அதாவது உபநயனம் முடிந்த பின் இன்னொரு பிறப்புமாக இரண்டு பிறப்பு உண்டு.
அதைத்தான் சொல்கின்றார் நக்கீரர். இதனை “த்விஜர்” என வடமொழியில் சொல்வார்கள்.
“ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து”
இவர்கள் ஒன்பது புரி கொண்ட பூணூலை அணிந்திருக்கின்றார்களாம். பிரம்மசரியர்கள் மூன்று புரி அணிவார்கள். இவர்கள் தேர்ந்தவர்கள் இல்லறவாசிகள் என்பதால் முப்புரி, அதாவது ஒன்பது புரி கொண்ட நூலை அணிந்திருக்கின்றார்கள், பூரணமானவர்கள் எனப் பொருள்.
அவர்கள் விடிந்தும் விடியாத அதிகாலையிலே நீராடி ஈரமான ஆடையினை இடையில் கட்டியபடி கைகளை உச்சிக்கு குவித்தபடி முருகப்பெருமானை வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
“ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் அதான்று”
அப்படி கைகளை உயரக் குவித்த அந்த அந்தணர்கள் ஆறு எழுத்து மந்திரத்தை சொல்லி நிற்கின்றார்கள். பின் மலர்களால் முருகப்பெருமானை அர்ச்சனை செய்து பாடுகின்றார்கள். அப்படியான திரு ஏரகம் அது. அது முருகனுக்குரியது. அது தவிர இன்னும் இடங்கள் உண்டு எனப் பாடலை தொடர்கின்றார் நககீரர்.
இந்த ஆறுஎழுத்து மந்திரம் என்பது பற்றி பல குறிப்புகள் உண்டு. ஷட்ஷர மந்திரம் என்பது “சரவண பவ” என அறியப்பட்டாலும் “நமோ குமாராய” என்றொரு மந்திரமும் உண்டு.
“ந ம சி வா ய” எனும் மந்திரம் ஆறு சக்கரங்களை துலக்கும் அதிர்வினைக் கொடுப்பது போல “ந மோ கு மா ரா ய” என்பதும் ஆறு சக்கரங்களுக்கும் அதிர்வைக் கொடுப்பதை அவதானிக்கலாம்.
“ந” எனும் சப்தம் இருப்பதால் “நமோ குமாராய” எனும் மந்திரமே முருகப்பெருன்னுகுரிய மந்திரமாக அன்று இருந்திருக்கலாம்.
பொதுவாக மந்திரங்களைச் சொல்வதில் மானசம், மந்தம், வாசிகம் என மூன்று முறை உண்டு.
மனதால் சொல்வது மானசம். வாய்க்குள் சொல்வது மந்தம். வாய்விட்டு பிறர் கேட்கச் சொல்வது வாசிகம்.
இங்கே இந்த மூன்று முறைகளிலும் முருகப்பெருமானை பிரார்த்தித்து வணங்கி நிற்கின்றார்கள் அந்தணர்கள் எனத் திருவேரகம் எனும் சுவாமிமலை பற்றி பாடுகின்றார் நக்கீரர்.
இந்தப் பாடலில் அந்த திருவேரகத்தில் எப்படி தவ வாழ்க்கை வாழும் பிராமணர்கள் முருகப்பெருமானை வணங்குகின்றார்கள் எனப் பாடுகின்றார்.
அக்காலத்தில் இந்த இடங்கள் வேதங்களுக்கும் வேத வழிபாட்டுக்கும் பெயர் பெற்றிருந்தன. சுவாமிமலை கும்பகோணம் பகுதிகளில் இன்றும் அந்த அடையாளங்கள் உண்டு.
அங்கு முருகப்பெருமான் வேதம் ஒலிக்க அமர்ந்திருக்கின்றான் என்பதே நக்கீரர் சொல்லும் வரிகள். அதுவும் அந்த அந்தணர்கள் கொஞ்சமும் தம் இயலில் வழுவாத ஆறு தொழில் செய்து, இருபிறப்பு பெற்று 48 வயது வரை வேதம் படித்து, முத்தீ வளர்த்து, இடைவிடாது வேத பாராயணம் செய்து வரும் அந்த அந்தணர்கள், தவம் இருக்கும் அந்தணர்கள் வழிபடும் தெய்வம் முருகப்பெருமான்.
வேதங்களின் அதிபதி முருகப்பெருமான். அந்த வேதமே மற்ற எந்த தெய்வத்துக்கும் இல்லா சிறப்பாக முருகப்பெருமானை மட்டும் மட்டுமே ‘ஸுப்ரஹ்மண்யோம்’ ‘ஸுப்ரஹ்மண்யோம்’ ‘ஸுப்ரஹ்மண்யோம்’ என வேதமே மூன்று முறை வணங்குகிறது.
இதை வேதம் அறிந்தவர்களும் சொல்லி வணங்குவார்கள்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறியாக அவர் உருவானதால் அவர் அக்னி ரூபம். அதனால் அந்தணர்கள் அக்னியாகவே முருகப்பெருமானை தினமும் செய்யும் சம்மிதாதானம், ஔபாஸனம், அக்னிஹோத்ரம், யாகங்களில் முக்கியமாக வழிபடுகிறார்கள்
இந்த வழமை எக்காலமும் உண்டு.
வேதம் ஒலிக்குமிடத்தில் அவன் இருப்பான். அதனால் வேத மந்திரங்கள் ஒலிக்கும் சுவாமிமலையிலும் அமர்ந்திருக்கின்றான் எனப் பாடிப் புகழ்கின்றார் நக்கீரர்.
(தொடரும்..)