திருமுருகாற்றுப்படை : 20
301 முதல் 317 வரையான கடைசி வரிகள்.
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை இரியக் கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டு
ஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே”
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
“ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர”
அதாவது அந்த அருவி நீரில் சந்தனமும் அகிலும் தேனும் மட்டுமல்ல இனிப்பான பலா பழங்களும் உதிர்ந்து வீழ்ந்து பலாச்சுளைகளின் சாறும் கலந்திருக்கின்றது. மணம் வீசும் மலர்கள் உதிர்ந்து வீழ்ந்து அந்த நீர் நறுமணம் கொண்டதாகவும் விளங்குகின்றது.
“ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப்”
அந்த அருவியின் சாரலில் அங்குமிங்கும் துள்ளி விளையாடும் கரிய முகத்தை உடைய குரங்குகள் இன்னும் உடலெல்லாம் கரிய நிறமுள்ள குரங்குகளெல்லாம் நனைந்து மெல்ல நடுங்குகின்றன.
பூக்களை போல வெண்ணிறப் புள்ளிகளை தலைமேல் கொண்ட பெண் யானைகளும் அந்த குளிர்ந்த நீர் பட்டு சிலிர்க்கின்றன.
“பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியா”
அந்த மலையில் பெரிய பெரிய தந்தங்களை உடைய ஆண் யானைகள் இறந்து கிடக்கின்றன. அந்த யானைகளின் மண்டையில் முத்து விளையும். அந்த வெண்முத்துக்கள் அழகானவை விலை மதிப்பு இல்லாதவை.
இன்னும் அந்த மலையில் மாணிக்கங்களும் உண்டு.
மழைநீர் இவற்றை அரித்து அருவியில் சேர்க்க, அருவியில் அந்த யானை முத்துக்களும் கொட்டுகின்றன. நல்ல பொன்னும் மணியும் முத்தும் கலந்து கொட்டுகின்றது.
“வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப்”
அந்த அருவி செல்லும் இடமெல்லாம் வளம் கொழிக்கின்றது. பெரிய பெரிய வாழைகள் சரிந்து நிற்கின்றன, பெரிய பெரிய தென்னைகள் கொத்து கொத்தாக இளநீர் குலைகளுடன் நிற்கின்றது. அந்த தென்னையினை சுற்றி நல்ல மிளகு கொடிகள் படர்ந்திருக்கின்றன.
(அக்கால மதுரையின் பழமுதிர்சோலை எப்படி இருந்திருக்கின்றது என்பதை காட்டும் காட்சி இது, பெரும் நீர் வளமும் நல்ல மிளகு விளையும் அளவு வளமானதாகவும் இருந்திருக்கின்றது.
யானைகள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களும் இயற்கை வளமும் மிகுந்த இடமாய் மதுரை இருந்திருக்கின்றது.)
“பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை இரியக் கேழலொடு”
அழகான மேல் தோற்றத்தை கொண்ட, அழகான வடிவங்கள் பொறிக்கப்பட்டது போன்ற தோற்றம் கொண்ட மயில் மெல்ல நடை நடந்து திரிகின்றது, காட்டுக் கோழிகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
“இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டு
ஆமா நல்லேறு சிலைப்பச்”
அங்கே பனை மரத்தின் வெளிப்புரம் போல் கரும் சிராய்ப்புகளை கொண்ட கரடிகள் வளைந்த தடிபோல் கால்களை கொண்டபடி கருநிறத்தில் ஆங்காங்கு உலாவுகின்றன. பெரிய கொம்புகளை உடைய காட்டுப்பன்றிகள் பாறைக்கு பின்னால் பதுங்குகின்றன, காட்டு மாடுகளில் பெண் காட்டுப் பசு நோக்கி காளைகள் எழுப்பும் ஒலியும் கேட்கின்றது.
“சேணின்று இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே”
இப்படி மிகச் செழுமையான வளமான மலையில் ஒலிக்கும் அருவிகளும் அந்த மலை கொடுக்கும் வளத்துடனும் அழகுடனும் இருக்கும் பழமுதிர்சோலை மலையில் இருந்து அருள் வழங்குகின்றான் முருகப்பெருமான் என்கின்றார் நக்கீரர்.
இப்படி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளைப் பாடி தன் திருமுருகாற்றுப்படையில் முருகப்பெருமான் பெருமைகளையும் அவன் குடியிருக்கும் இடங்களின் அழகையும் சிறப்பையும் பாடி எல்லா மக்களையும் அங்கு சென்று வழிபடச் சொல்கின்றார் நக்கீரர்.
(முற்றும்)
இத்துடன் திருமுருகாற்றுப்படை பாடல் முடிந்தது. இன்னொரு பக்தி இலக்கியப் பாடலுடன் மீண்டும் தொடர்வோம்.
முருகப்பெருமானின் பக்தி இலக்கியத்தில் பழமையானதும் நக்கீரர் எனும் மகா கவிஞரால் சிவனடியாரால் பாடப்பட்டது என்பதிலும் இதன் பெருமை அதிகம்.
அறுபடை வீடுகளுக்குச் செல்லும்முன் அல்லது செல்லும்போது இந்த திருமுருகாற்றுப்படை பாடல்களைப் பாடிச் சென்றால் பலன் உண்டு.
அதற்குரிய விளக்கத்தை முடிந்தவரை தந்திருக்கின்றோம். அதனோடு பாடலை உணர்ந்து பாடி முருகப்பெருமான் அருளைப் பெற வாழ்த்துக்கள்.