திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்

தமிழகம் சிவபெருமானின் விருப்பத்துகுரிய இடம். அவரின் திருவிளையாடல் பல இங்குதான் நடந்தது. அவர் தன் பிரதான சித்தரான அகத்தியரை இங்குதான் அனுப்பி தமிழை உருவாக்கி வளரச் செய்தார்.

தமிழ்சங்க தலைவராக எப்பொழுதும் சிவனேதான் விளங்கினார்.

அந்த சிவன் ஒரு காலத்தில் தமிழகத்தை காக்க முருகனை அனுப்பினார். அகத்தியரை அனுப்பினார். பின்னும் யார் யாரையெல்லாமோ அனுப்பி கொண்டிருந்தார்.

அப்படி வந்தவர்களெல்லாம் பெரும்பாலும் முருகப்பெருமானின் அடியாராக அல்லது அவரின் சாயலிலே இருந்தார்கள். முருகனின் அருள் பெற்றவர்களாகவே இருந்தார்கள்.

ஆம், முருகன் அவர் வராத பொழுதுதெல்லாம் அவரின் அவதாரமாக திருஞானசம்பந்தர் முதல் பலர் வந்து சைவம் காத்தார்கள். சமணர் காலத்தில் அந்த ஞானசம்பந்தர் வந்து சைவம் தளைத்தோங்க செய்து சமணத்தை கருவறுத்தார்.

பின்னாளில் அதே சமணம் 19ம் நூற்றாண்டில் நாத்திகம், திராவிடம், கடவுள் எதிர்ப்பு, தமிழனுக்கு மதமில்லை என முளைத்தபொழுது முருகப்பெருமான் தன் அடியார் ஒருவரை அனுப்பினார்.

அந்த அடியாருக்கு சிறுவயதில் இருந்தே முருகபக்தி அதிகம். அவன் பெயரன்றி எதையும் சொன்னதில்லை. அந்ந சிறுவயதிலே வயலூர் முருகனுக்கு ஆலயப்பணி திருப்பணி செய்து கொண்டிருந்தார்.

வயலூர் என்பது முருகன் அருணகிரியாருக்கு காட்சி கொடுத்த கோவில்.

அப்பொழுது அந்த பக்தனின் கனவில் அருணகிரியார் வந்து உணவு கேட்டார். விழித்த பக்தனுக்கு ஏதோ நைவேத்திய குறைவு எனத் தெரிந்தது. நிதி திரட்டி 4 ஏக்கர் நிலம் வாங்கி குறைவில்லா நைவேத்தியத்துக்கு வழி செய்தார்.

அதன்பின் முருகப்பெருமான் அருணகிரிநாதர் வடிவில் தன்னை ஆசீர்வதித்ததாக உணர்ந்தான் அப்பக்தன். அவர்தான் நமக்கெல்லாம் திருமுருக கிருபானந்தவாரி என அறிமுகமானார்.

May be an image of 1 person, sculpture, temple and statue

ஆம், அந்த முருகனுக்கு ஏகப்பட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள். அவ்வையார், அருணகிரிநாதர், நக்கீரர், குமரகுருபரர் எனப் பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லை.

ஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார்.

பிறவி ஞானி. பக்தி அவர் ரத்தத்தில் இயல்பாக வந்தது. முருகன் அவர் கருவில் இருக்கும்பொழுதே அவரை ஆட்கொண்டான். அதற்கு முன்பே தேர்ந்தும் கொண்டான்.

அந்த பக்தி அவர் வளர வளர வளர்ந்தது. 12 வயதிலே ஆயிரக்கணக்கான பாடல்களை மனப்பாடம் செய்திருந்தார், 16 வயதினிலே அவர் தனியாக உபன்யாசமும், மத விளக்க உரையும் கொடுக்கும் அளவு அவருக்கு ஞானம் மிகுந்திருந்தது.

நிச்சயம் அகில இந்திய அளவு விவேகானந்தர் அளவு வந்திருக்கவேண்டிய மகான் அவர், ஆனால் முருகன் ஆலயம் நிரம்பிய தமிழகத்திலே தன்னை நிறுத்திக்கொண்டார்.

அவர் காலம் தமிழ்நாட்டில் நாத்திக அலை சுனாமியாய் பொங்கிய காலம். நாத்திக கூட்டம் ஒரு மதவாதி விடாமல் கரித்துக் கொட்டி, கருப்பு சட்டையும் கொடியுமாக வலம் வந்த காலத்தில் தனி ஒரு மகானாக அவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார் வாரியார்.

வாரியார் மேல் திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவங்களும் உண்டு. அதை திமுக அரசு அதாவது கருணாநிதி அரசு ரசித்து பார்த்த காலங்களும் உண்டு.

ஒரு கட்டத்தில் காஞ்சி மடத்தை விட்டு கிருபானந்தவாரியார் மேல் முழு கோபத்தையும் காட்டியது திமுக. காரணம் வாரியாரின் விளக்கங்களில் திமுகவின் பொய்மூட்டை அவிழ்ந்து கொண்டிருந்தது.

திமுகவுக்கும் கிருபானந்தவாரிக்குமான மோதல் பின் ராம்சந்தர் திமுகவினை உடைத்து கிருபானந்தவாரியாரை ஆதரித்த பின்பே அடங்கிற்று.

கிருபானந்தவாரியருக்கு தமிழகத்தில் பெரும் அச்சுறுத்தல் திக திமுக உருவில் வந்தபொழுது முருக பக்தரான ராம்சந்தரே வந்து காத்தார்.

இதெல்லாம் முருகப்பெருமானின் விளையாட்டு. தன் கடைசி மூச்சு வரை திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் வாரியார்.

இந்துமதத்தின் கொள்கைகள், உபநிஷத்துகள் உணர கஷ்டம் எனும் நிலையில், பாமர மக்கள் அதை புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிய தமிழில் சொன்னவர் அவர்.

எத்தனையோ இதழ்களை நடத்தினார், ஏராளமான புத்தகங்களையும் எழுதினார்.

சாந்தமான முகம், பார்த்தால் வணங்கத்தக்க தோற்றம், அமைதியான மொழி, அழகு தமிழ், வாய்திறந்தால் எம்பெருமான் எனத் தொடங்கும் அந்த கீர்த்தி எல்லாம் இனி யாருக்கும் வாய்க்காதவை.

எந்த வாதத்திலும் அவரை வெல்ல முடியாது, எந்த சபையிலும் அவர் தோற்றதுமில்லை.

சங்க காலத்திலிருந்து வந்த ஆழ்வார்கள், அடியார்கள், புலவர்கள் வரிசையில் நாம் கண்ட மாபெரும் மனிதர் கிருபானந்தவாரியார்.

அதில் சந்தேகமே இல்லை.

அந்த அற்புதமான அமைதியான அர்த்தமுள்ள ஆன்மீக சொற்பொழிவினை இனி கொடுக்க யாருமில்லை.

முருகன் , ராமாயணம், பாரதம் என இந்து மத பாரம்பரியங்களை அவர் விளக்கினால் பசியின்றி தூக்கமின்றி கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு உருக்கமும் அழகும் வாய்ந்த சொற்கள் அவை.

இன்று அவர் இல்லாவிட்டாலும் அவரின் பெரும் உழைப்பும் அவரின் பேச்சும், எழுத்தும் என்றும் ஆன்மீக உலகில் நிற்கும், நிலைக்கும்.

சாட்சாத் முருகப்பெருமான் அவர் நாவில் இருந்து தமிழ் கொடுத்தான் என்பதை பல இடங்களில் காண முடிந்தது.

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழறிஞர்களில் அவரும் ஒருவர். கண்ணில் ஒற்ற கூடிய அழகு தமிழ் அது. பண்டைய தமிழ் முருக அடியார்கள் எப்படி இருந்தார்கள்? எப்படி எழுதினார்கள்? எப்படி போதித்தார்கள் என்பதை அவராலே தமிழகம் கண்டு கொண்டது.

ஆனால் தமிழ் என்பது தமிழக நாத்திகர்களின் சொத்து அவர்கள் வளர்த்ததே தமிழ் எனும் ஒருவித குருட்டு நம்பிக்கையில் ஆன்மீகவாதியான கிருபானந்தவாரியின் அழகு தமிழ் மறைக்கபட்டாலும் அது சூரியன் போல் மீண்டெழுந்து ஒளிவீசிற்று

நாத்திக எழுத்து நிலைக்குமா இல்லை கிருபானந்தவாரியின் எழுத்தும் பேச்சும் நிலைக்குமா என்றால் அவ்வையார், அருணகிரி நாதர் போல எக்காலமும் நிலைத்து நிற்பார் கிருபானந்த வாரியார்

இன்று அவரின் நினைவு நாள், அந்த ஆன்மீக பெரியவருக்கு பக்தி அஞ்சலிகள்.

இந்துமதத்தின் சிறப்புக்களை, பெருந்தன்மையினை பலாச்சுளையினை தேனில் நனைத்து இனிக்க இனிக்க கொடுத்தவர் அவர்.

முருகப்பெருமானோடு கலந்துவிட்ட அந்த பக்தனுக்கு மீண்டும் அஞ்சலிகள்.

கிருபானந்த வாரியரை நினைக்கும் பொழுதெல்லாம் ஒரு ஆச்சரியமான விஷயம் நினைவுக்கு வரும்.

வாரியார் முருக பக்தர், அவருக்கு முருகனை மனத்தால் வழிபட்ட எம். ஜி. ராமச்சந்திரன் மேல் ஒரு பார்வை இருந்தது.

ராமச்சந்திரன் முருக பக்தரான சின்னப்பா தேவரால் வளர்க்கப்பட்டு முருகனின் அடியார் பசும்பொன் தேவரின் கூட்டத்தால் ஆட்சிக்கு வந்தவர்.

பெரும் நாத்திக இயக்கமும் தமிழ்நாட்டின் ஆன்மீகத்தையே அழிக்க வந்த இயக்கமான தி. மு. க.வின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டவர். இன்றும் அவர் தொடங்கிய கட்சியே கடும் நாத்திகத்துக்கு இங்கு சவால் விடுகின்றது.

இதை மனமார உணர்ந்த வாரியார் ராமச்சந்திரனுக்கு பொன்மன செம்மல் என பட்டம் அளித்தார்.

ஆம் ராமச்சந்திரன் மட்டும் வந்திருக்காவிட்டால் தமிழ்நாடு மாபெரும் சிக்கலை சந்தித்திருக்கும். இங்கு இந்துமதம் பெரும் அழிவினை கண்டிருக்கும்.

அந்த ஆபத்தை தடுக்க முருகன் அனுப்பிய வேலாக ராமச்சந்திரனை தன் மனத்தால் கண்டார் வாரியார். அது மாபெரும் உண்மையும் கூட.

மிகச் சரியான அவதார பார்வை அது..

நடக்கும் காட்சிகளை கண்டால் உங்களுக்கே புரியும். இங்கு நாத்திக திமுகவின் அரசியலை தடுக்கும் சக்தி ராமச்சந்திரனின் கட்சிக்குத்தான் உண்டு.

இதெல்லாம் காலத்தின் கணக்குகள் ..

பண்டைய ஞானிகள், ரிஷிகள் வரிசையின் மீட்சியாக நம்மிடம் வாழ்ந்த மகான் வாரியார் சாமிகள்.

முருகனின் ஏழாம் நட்சத்திரம் அவர், ஆறுமுகத்தானின் ஏழாம் முகம் அவர். நடமாடிய ஏழாம் படை வீடு அவர்.

அவரை ஒரு நாயன்மாராக அறிவிக்கும் யோசனையும் இந்து பீடங்களுக்கு ஒரு காலத்தில் இருந்தது. பின் அந்த வரிசையானது மாணிக்கவாசகர், ராஜராஜசோழன், குமரகுருபரர் என நீளும் வரிசை என்பதால் பின்னாளில் காலம் செய்யும் என விட்டுவிட்டார்கள்.

முருகப்பெருமானின் தமிழ் வடிவாக, ஞானவேல் வடிவாக, அவன் ஏங்கிய ஞானப் பழமாக நம்மிடம் தமிழும் ஆன்மீகமும் கொட்டி கொடுத்தார் வாரியார் சுவாமிகள்.

டெல்லி சுல்தானிடம் சவால்விட்டு நிலைத்த குமரகுருபரருக்கும், தமிழக நாத்திக கோஷ்டியிடம் சரிக்கு சரி நின்ற வாரியார் சுவாமிகளுக்கும் ஒரு வித்தியாசமும் காண முடியாது.

அவரின் படமும் அவரின் போதனையும் எல்லா இந்துக்கள் வீட்டிலும் இருக்க வேண்டும். எல்லா தலைமுறைக்கும் அவரை கொண்டு செல்ல வேண்டும்.

அந்த வாரியார் சாமிக்கு, ஞானப் பெரியவருக்கு, ஆன்மீக கனிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

இந்த நூற்றாண்டில் திராவிடம் எனும் நவீன சமணத்தின் தாக்கத்தில் இருந்து தமிழகம் விடுபட்டு தன் இயல்பான சைவத்தை ஏற்க அரும்பாடுபட்ட அவதாரமான அந்த ஞானப்பெருமகனை இன்று மட்டுமல்ல என்றும் நெஞ்சில் நிறுத்தி வழிபடவேண்டியது இந்துக்கள் கடமை.

முருகப்பெருமானின் ஞானப் பழமாக நம் முன் நடமாடிய அந்த கனிந்த முதியவருக்கு, முருகன் அருளிலே கனிந்தவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.