திருவாரூர் தேரோட்டம் – ஆரூரா தியாகேசா
உலகளவில் இன்றும் இந்து ஆலயங்களே மிகபெரிய பரப்பளவில் கட்டபட்டவையாக இருக்கின்றன, அவ்வகையில் கம்போடியாவின் அங்கோர்வாட் எனும் இந்து ஆலயத்துக்கு அடுத்து மிக பிரமாண்டமான ஆலயங்கள் தமிழகத்தில்தான் உண்டு
தமிழகத்தில் இது தேரோட்ட காலம், அவ்வகையில் தமிழகத்தின் தனிபெரும் அடையாளம் திருவாரூர் தேர், சிவனின் அதிமுக்கிய தலங்களில் ஒன்றானதும் இன்றளவும் இந்திய ஆலயங்களில் பெரியதுமான திருவாரூர் கோவில் போலவே அதன் தேரும் தனி பிரசித்தியானது
ஒருவகையில் அது உலக அதிசயமும் கூட
சைவத்தின் மிக பெரிய அடையாளமும் மகா மகா புண்ணிய ஷேத்திரமுமானது அந்த ஆரூர்.
சர்வதோஷங்களுக்கும் பரிகார தலம் அதுவே
63 நாயன்மார்களில் அந்த ஆலயம் தொழாத நாயன்மார்கள் மிக மிக குறைவே, அவர்கள் வாழ்வின் அதிசயமெல்லாம் அங்குதான் நடந்தது
கைலாயத்தை அடுத்து சிவனுக்கு பிரசித்தியான இடம் அதுதான் என்ற அளவில் அதன் பெருமை உண்டு, சிவபெருமான் எக்காலமும் வாழும் ஆலயம் அது
“திருவாரூரில் பிறந்தாலே முக்தி” என்பார்கள் ஆன்றோர்கள்
அந்த ஆலயத்தின் பெருமையினை போலவே மிக பிரசித்தி பெற்றது அந்த ஆழிதேர், அதன் வரலாறும் தொன்மையும் பிரமாண்டமானது
இன்றும் உலகின் மிகபெரிய தேர் அதுதான், ஆசியாவின் மிகபெரிய தேர் அது என சொல்வதில் நியாயமில்லை, பாரதம் தாண்டி எங்கே தேரோட்டம் உண்டு? தேர் வழிபாடு உண்டு?
ஆக அந்த தேரினை உலகின் மிகபெரிய தேர் என்றே ஏற்றுகொள்ளலாம் உண்மையும் அதுவே
அந்த தேர் எப்படி செய்யபட்டது என்பதற்கு முன் அந்த திருவாரூரின் பொற்காலம் அறிதல் அவசியம்
ராஜ ராஜ சோழனுக்கு பெரியம்மா செம்பியன் மாதேவிதான் இங்கு செங்கல் ஆலயத்தையெல்லாம் கற்றளி எனும் கல் ஆலயமாக மாற்றினாள், அவள் வழி வந்த ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் அந்த திருவாரூர் ஆலயத்தையே மாற்றி வைத்தார்கள்
அதுவும் ராஜேந்திர சோழன் அந்த கருவறையினையும் கோபுரத்தையும் தங்கத்தாலே அலங்கரித்து மகிழ்ந்தான்
ஆம் தஞ்சை பெரியகோவில் கோபுரம் முழுக்க தங்கத்தால் வேயபட்டது போல் திருவாரூர் கோவிலிலும் இருந்தது
“உடையார் வீதிவிடங்கதேவர் குடத்திலும் வாய்
மாடையிலும் நாலு நாசியிலும் உள் குடத்திலும் பொன்வேய்தான்” எனும் அவன் கீர்த்தி அதை சொல்கின்றது இது கல்வெட்டிலும் உண்டு.
ராஜேந்திரனின் நாயகி பரவை அந்த ஊரை சார்ந்தவள் எனும் வகையில் அவளும் ராஜேந்திரனும் ஏற்றிவைத்த விளக்கு இன்றும் அங்கு உண்டு
உண்மையில் சோழர்களின் வரலாற்றை சொல்வது திருவாரூர் ஆலய கல்வெட்டுகளே, ராஜராஜன் ஐப்ப்சி சதயத்திலும், ராஜேந்திர சோழன் ஆடி திருவாதிரையிலும் பிறந்தான் என்பதை அதுதான் சொல்லிற்று,
அக்கல்வெட்டுகள் இன்றும் அங்கு உண்டு
ஆப்கானிய கில்ஜியின் ஆப்ரிக்க கொள்ளையன் மாலிக்காபூர் காலத்தில் அந்த ஆலயத்தின் தங்கமெல்லாம் சுரண்டபட்டு வெறும் கற்சுவர் மட்டும் இப்பொழுது நிற்கின்றது, சோழர்கள் இப்படி பல ஆலயங்களை பொன்னால் வேய்ந்தார்கள், அதில் இன்று சிதம்பரம் ஆலயம் மட்டும் தப்பி நிற்கின்றது
பெரிதிலும் பெரிது இறைவனுக்கு கொடுத்து வந்த சோழ இனம் அதை தஞ்சை கோவிலில் செய்தது, அங்கே லிங்கத்தில் செய்தது, அப்படியே இங்கே திருவாரூர் தேரிலும் செய்தது
அந்த பழைய தேர் அக்கால பிரமாண்ட வாகனங்களின் சாயலாய் இருந்தது, தஞ்சை கோவிலை கட்டவும் பிரமாண்ட ஆலயங்களை கட்டவும் இப்படியெல்லாம் வண்டி இருந்திருக்கலாம் என்பதை அதுதான் சொல்லிற்று
ஆம் அந்த தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன, இடபுறம் 5 வலபுறம் ஐந்து என பெரிய சக்கரங்கள் இருந்தன
இந்துக்களின் விஷேஷ எண்ணும், சிவ வழிபாட்டில் ஒரு சுழற்சியினை சொல்லும் 108 எனும் எண்ணை குறிப்பதாக 108 அடி உயரம் வரை இருந்தது
மிக உறுதியான மரங்களாலும் இரும்பு உள்ளிட்ட வார்ப்பு பொருட்களாலும் அது மகா உறுதியாய் இருந்தது
சோழநாட்டு இந்துக்களின் சிவபக்தியினை உலகுக்கு சொல்லும் மாபெரும் அடையாளமாய் அதிசயமாய் அது விளங்கிற்று , ஒரு வகையில் அது உலக அதிசயமுமாயிற்று
சுமார் 500 டன் எடையில் 108 அடி உயரத்தில் பத்து சக்கரங்களுடன் வலம் வந்த, பெரும் யானைகளால் இழுக்கபட்ட அந்த தேர் அன்று அதிசயமே
அவ்வளவு பெரும் தேரை எப்படி இழுத்தார்கள், எப்படி திருப்பினார்கள் என்பதெல்லாம் இன்றுவரை அதிசயமே
அரண்மையும் தேரும் என்பது அரச அடையாளம் என கருதபட்ட காலத்தில், அரசனனுக்கெல்லாம் அரசன் சிவனுக்காய் பெரும் ஆலயம் அமைத்த அந்த இந்து அரசர்கள் அந்த தேரினையும் அமைத்தார்கள்
பொதுவாக நகர்வலம் என்பது மன்னன் மக்களின் சுபிட்சத்தை காணவும், நடக்க முடியாதோர் நோயுற்றோர்களுக்கு காட்சி தந்து நம்பிக்கையளிக்கவும் செய்யபட்ட ஏற்பாடு
அதை தெய்வத்துக்கும் கொடுத்தார்கள் இந்துக்கள், கோவிலுக்குள் வரமுடியாதவர்களெல்லாம் தெருவில் வணங்க அதை இழுத்து வந்தார்கள்
அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கோவிலுக்குள் நுழையத்தான் சிலருக்கு சில கட்டுபாடுகள் உண்டே தவிர, தேரில் வரும் தெய்வத்தை வணங்க யாருக்கும் எந்த கட்டுப்பாடும் அன்று இல்லை
தேர் இழுப்பு என்பதை ஊர் ஒற்றுமையாகவும் செய்தமதம் இந்துமதம், ஊர் கூடி தேர் இழுத்தல் என்பது மிகபெரிய உளவியல் மகிழ்வும் மக்களிடம் ஒற்றுமையும் பக்தியும் ஏற்படுத்தும் விஷயமாயிற்று
பெரும் பக்தியும் அப்பகுதி முழுக்க ஒற்றுமை ஏற்படவுமே அந்த பிரமாண்ட தேரை செய்தார்கள் மன்னர்கள், ஆம் சோழநாடே கூடி இழுத்த தேர் அது
“ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடியது அந்த தேரை கண்டே.
மகா உற்சாகமாக அந்த விழா அன்று தொடங்கிற்று, பல காலம் தொடர்ந்தும் வந்தது, சில நூறு ஆண்டுகளில் சோழ வம்சம் வீழ்ந்து டெல்லி சுல்தானிய கொள்ளையர்களால் சில பாதிப்புகள் வந்தன, பின் நாயக்க மன்னர்கள் காலத்தில் அதன் உலா தொடங்கிற்று
பின் வெள்ளையன் காலத்திலும் நடந்தது
சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஓடிய அந்த தேருக்கு முதல் சோதனை 1926ம் ஆண்டு வந்தது, ஆம் ஒரு பங்குனி உத்திரத்தில்தான் வந்தது
அது என்னவோ தெரியவில்லை பல நூறு ஆண்டுகள் எரியாமலும் உடையாமலும் இருந்த இந்து ஆலயங்களெல்லாம் 18ம் 19ம் நூற்றாண்டில் திடீர் திடீரென எரிந்தன
தென்காசி கோவில் முதல் பல கோவில்கள் அப்படி எரிந்தன
எவ்வளவுதான் இந்துக்களை ஒழித்தாலும் கோவிலும் தேரும் அவர்களை மீண்டெழ வைக்கின்றது என சில சக்திகள் கவலைபட்ட காலங்கள் அவை
அந்த கொடிய காலங்களில் தான் 1926ம் ஆண்டு ஒரு தேரோட்டத்தின் பொழுது எரிந்தது, ஆம் முற்றிலும் எரிந்தது
கீழரத வீதிவழியாக கிளம்பிய தேர் தேர் கமலாலயம் கரையில் மாற்றுரைத்த விநாயகர் கோவில் கடந்து சென்ற பொழுது தீ பற்றி எரிய துடங்கியது
அந்த தேர் இரு நாட்களாக எரிந்தது, பெரும் நகரம் தீபற்றி எரிவது போல் எரிந்தது, பல கிமி தொலைவில் இருந்தும் பார்க்கும் படி எரிந்தது
காணகிடைக்காத அந்த தேர் எரியும் பொழுது இந்துக்கள் கண்ணீர் விட முடிந்ததே தவிர அதை காக்க முடியவில்லை, அந்நாளைய பிரிட்டிஷ் அரசும் அதற்கு பெருமுயற்சி எடுக்கவில்லை இன்றுள்ள தொழில்நுட்பமுமில்லை
கிட்டதட்ட 3 நாட்களாக எரிந்து முடிந்தது அந்த கலை பொக்கிஷம், அக்னி தேவனுக்கு அந்த தேரை அவ்வளவு பிடித்து போயிற்று எடுத்து கொண்டான்
இந்துக்கள் மனம் தளரவில்லை, சோழநாட்டு தனவான்களெல்லாம் கூடி மறுபடியும் தேரை செய்தார்கள் 1928ல் தொடங்கி 1930ல் அது முடிந்தது, அதுவும் 10 சக்கரம் கொண்ட தேர்
ஆனால் 1948க்கு பின் அது ஓடவில்லை, இந்தியாவில் நடந்திருந்த அரசியல் மாற்றம், உலக குழப்பம், வறுமையான இந்தியா, அதை தாண்டி அந்த தேரால் ஏற்பட்ட உயிர்பலி என பல விஷயங்கள் அதை நிறுத்தின
அப்பொழுது திருவாரூர் பகுதியில் பரவியிருந்த கம்யூனிச திக கருத்துக்கள் அதை இன்னும் முடக்கின
ஆளில்லா வீடும், ஓடாத கப்பலும் தேரும் வீணாகும் என்பதை போல் பூட்டி வைக்கபட்ட அந்த தேர் 1975 வரை ஓடவிலை பழுதடைந்தது
சுமார் 28 ஆண்டுகாலம் தேர் இல்லாமலே திருவிழா நடந்தது
அதை ஓடவைத்திருக்கலாம், ஆனால் நடக்கவில்லை ஏன் என்றால் காங்கிரஸின் காமராஜரும் நேருவும் ஒரு நாத்திக கோஷ்டி, பசும்பொன் தேவர் போன்றவரெல்லாம் தேரோட்டம் வேண்டுமென்றால் அதை வேண்டுமென்றே தவிர்த்த கோஷ்டி
இதனால் தேரோட்டத்தில் அரச தலையீடும் இல்லை மக்கள் சொன்னாலும் அவர்கள் கேட்கவுமில்லை
இடையே நாத்திக திராவிடம் வேறு வந்து நிலமையினை மோசமாக்கிற்று
“ஏரோட்டும் மக்கள் ஏங்கி தவிக்கையிலே, தேரோட்டம் உனக்கு தேவையா” என திருவாரூர் நாதனையே பேசிய கோஷ்டி, திருவரங்க நாதனையே பீரங்கி வைத்து பிளப்போம் என்ற கோஷ்டி எப்படி ஓடவிடும்
அப்படியே 1970ம் வருடமாயிற்று, திருவாரூர் பக்கம் வடபாதிமங்கலத்தில் தியாகராசர் என்றொரு பக்திமிக்க பணக்காரர் இருந்தார் அவர்தான் இத்தேர் மறுபடி ஓட ஆசை கொண்டார், அப்பொழுது மாநில முதல்வர் கருணாநிதி
அவருக்கும் தன் நாத்திக இமேஜை மாற்றவேண்டும் என்ற ஆசை இருந்தது, கூடவே தன் முன்னோர்கள் வழிபட்ட ஆலயம் எனும் ஒரு பக்தியும் மனதில் இருந்தது
உண்மையில் அவரும் திருவாரூர் தேரின் ரசிகன், தன் வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பல இடங்களிலும் பள்ளி பாடபுத்தகத்திலும் அந்த தேர்படம் வருமாறு கவனமாக பார்த்துகொள்வார்
அவருக்கு தேர் ஓடவேண்டும் எனும் ஆசை இருந்தது, அப்பொழுது திருச்சி பெல் நிறுவணமெல்லாம் தலையிட்டு பிரேக் சிஸ்டமெல்லாம் மாற்றி, 10 சக்கரம் 4 சக்கரமாக குறைக்கபட்டு இன்றிருக்கும் தேர் வந்தது
அதிலிருந்து அது ஓடிகொண்டிருக்கின்றது, நிச்சயம் இது ஆதிகால தேர் அல்ல அது இதைவிட பெரியது. இத்தேர் 96 அடி உயரமும் சுமார் 300 டன்கள் எடையும் கொண்டது
இந்த 3ம் தேரின் தேரோட்டம் இப்பொழுது வருடா வருடம் நடக்கின்றது, ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது
அதாவது ஆகம விதிபடி அந்த தேர் பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் ஓடி 3 நாட்களில் அதாவது பங்குனி உத்திரம் அன்று நிலைக்கு வரவேண்டும் அப்பொழுது உத்திரம் கொண்டாட்டம் நடக்கும்
ஆனால் 30 ஆண்டுக்கு மேலாக அது அந்த முறைபடி நடக்கவில்லை, பக்தர்கள் கத்தினாலும் அரச காதுக்கு எட்டவில்லை
கருணாநிதியோ பார்ப்ண கோரிக்கை என அவர்போக்கில் இருந்தார், ஜெயா அரசும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை
அந்த தேர் அவ்வளவு அழகு, கயிலாயமே அசைந்து ஆடிவருவது போல் வரும் அந்த தேரை காண கண்கோடி வேண்டும், அதுவும் போதாது
அந்த தேரில் சோழர்களும், நாயன்மார்களும், மாபெரும் சிவபக்தர்களும் அது மீண்டெழ காரணமான தியாகராஜ முதலியார் மட்டுமல்ல இன்னொருவரும் தெரிவார்
அவர் பெயர் முத்து கொத்தனார்
கொத்தனார் என்றால் தேரின் மேல் கூரையினை கட்டி அலங்கரிக்கும் கொத்தனார், 1926ல் அவர்தான் அந்த கூரையினை அமைத்திருந்தர்
அந்த கொடிய தீ ஏற்பட்டபொழுது உயிருக்கு அஞ்சாமல் துணிந்து ஏறி புனிதமான தியாகேஸ்வர சிலையினை காப்பாற்றியவர் அவரே
மிக கனமான அந்த சிலையினை நகர்த்தி தனி மனிதனாக அவர் போராடி காத்தது வரலாறு, அந்த தேரின் வரலாற்றில் அவருக்கும் இடம் உண்டு
இன்றும் தேர் கட்டும் பணியினை அவரின் வாரிசுகளே செய்கின்றார்கள்
தஞ்சை கோவில் போல அந்த தேரும் ஒரு கம்பீர அடையாளம். செழித்திருந்த தமிழகத்தில் ஓங்கியிருந்த சைவத்தின் தனிபெரும் அடையாளம்
திருவாரூர் எனும் சிவனின் பிரசித்தி பெற்ற தலத்தின் கம்பீரமுமான அந்த தேரினை தரிசித்து பலன் பெற போகும் பக்தர்களுக்கு வாழ்த்துக்கள்
உலகின் மிகபெரிய தேர் இறைவனை சுமந்து ஆடி அசைந்து வந்து அருள் கொடுக்கபோகும் காட்சியினை ஒவ்வொரு தமிழக இந்துவும் மிக பெருமையாகவும் நன்றியோடும் வணங்குதல் வேண்டும்.
இந்த பெருமை உலகில் எந்த இனத்துக்கும் இல்லை, நம்மை தவிர எவனுக்குமில்லை
ஒரு காலம் வரும் அன்று அந்த தேர் சோழமன்ன காலம் போல 10 சக்கரத்துடனும் 108 அடி உயரத்துடனும் மிக பிரமாண்டமாக மறுபடியும் உலா வரும், நிச்சயம் வரும்
வரலாறு என்பது எப்பொழுதும் சுழல்வது, இந்துக்கள் ஒடுக்கபட்டு தாழ்த்தபட்ட இந்த ஆயிரம் ஆண்டுகளில் அந்த தேர் சுருங்கியிருக்கலாம்
இப்பொழுது நடக்கும் இந்து எழுச்சியில் அந்த தேர் மறுபடி தன் அதிஉன்னத நிலையினை அடைந்தே தீரும் இது சத்தியம்
“ஆரூரா தியாகேசா” என்ற கோஷம் முழங்க உலகின் மிகப்பெரிய தேரும், இந்துக்களின் மிகபெரிய அடையாளமும், தமிழக இந்துக்களின் வரலாற்று பெரும் பெட்டகமுமான அந்த தேர் இன்று அசைகின்றது
அது வெறும் அசைவல்ல, திருவாரூர் நாதன் பவனிவரும் அழகு மட்டுமல்ல, அது இந்து தமிழர் பெரும் வரலாறும் பக்தியும் கண்முன் அசைந்து வரும் பெரும் அடையாள வடிவம், அந்த தேரை வணங்கி உலகில் எவனுக்கும் இல்லா பக்தி கலாச்சார பெருமை எங்களுக்கு உண்டு என கம்பீரமாக சொல்கின்றது பாரதத்தின் தமிழகம்.