திருவிளையாடல் புராணம் 34 : கீரனுக்கு கைதந்து சிவன் கரையேற்றிய படலம்.

திருவிளையாடல் 34 : கீரனுக்கு கைதந்து சிவன் கரையேற்றிய படலம்.

சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து கீரனை எரிக்க அந்த வெம்மை தாளாமல் நக்கீரர் பொற்றாமரைக் குளத்தில் விழுந்தார் என்பதோடு அந்தத் திருவிளையாடலின் அதாவது தருகிக்குப் பொற்கிழி கொடுத்த படலம் முடியும்.

அதன் தொடர்ச்சித்தான் இந்தத் திருவிளையாடல்.

பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்த கீரன் தவித்துப் போய்க்கிடந்தார். அவரால் வெளிவரமுடியவில்லை. குளத்தினைக் கடக்க எழுந்தாலே பெரும் வெப்பம் அவரை வாட்டத் தொடங்கிற்று, இதனால் நீரிலே அமிழ்ந்து கிடந்தார், அவருக்குத் தன்னைச் சூழும் வெப்பம் நீரிலும் மெல்லப் பரவுவதை உணரமுடிந்தது.

இப்படி அவர் தவியாய்த் தவித்தார். புலவர்கள் கரையில் நின்று அவரை நோக்கிக் கை நீட்டி அழைத்தார்கள், கீரன் கையினைக் கொடுக்க உயர்த்தினால் வெப்பம் மிகக் கடுமையாகத் தீ போல் சுட்டது.

அந்த வெம்மை தாளாமல் அவர் தன் கரத்தை நீருக்குள் தாழ்த்திக் கொண்டார், கடும் வெப்பம் அவரை உருக்க நீரை குடித்தபடி உக்கிரம் தாளாமல் அலறி புலம்பிக் கொண்டிருந்தார்.

ஒரு சில புலவர்கள் துணிந்து நீருக்குள் இறங்கி அவர் கையினைத் தொட்டால் மிகக் கடுமையான வெப்பம் தாளாமல் கையினைத் திரும்ப எடுத்தார்கள்.

ஏதும் கயிறு வீசி அவரை வெளிக்கொணரலாம் என்றால் நீரில் இருந்து எழுந்தவுடன் வெம்மையின் கொடுமையால் அலறி நீரில் மீண்டும் ஒளிந்துகொண்டார் கீரர்.

உண்ணமுவியவில்லை. உறங்க முடியவில்லை. நீரிலே கிடந்தால் வரும் சில புண்கள் தோன்ற ஆரம்பித்தன. அவர் நிலை மோசமாகத் தொடங்கிற்று. ஏற்கனவே உடலில் தோன்றியிருந்த வெம்மையின் கட்டிகள் இன்னும் வேதனை கொடுக்கத் தொடங்கின‌.

புலவர்களுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை, நேராக எல்லோரும் ஆலவாயன் சந்நிதிக்கே சென்று மன்றாடினார்கள்.

“கருணைகடலான எம்பிரானே, நீர் எல்லோருக்கும் தகப்பன் அல்லவா? தாயும் நீரல்லவா, பிள்ளைகள் செய்த குற்றத்தை தாய் தந்தை பாராட்டுவார்களோ? நிச்சயம் தண்டிப்பார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அணைத்து கொள்வார்கள் அல்லவா, அப்படி நீரும் இந்தக் கீரனை மன்னித்து அருள வேண்டும்.

நீர் எல்லோருக்கும் குரு, நாங்கள் எல்லோரும் மாணவர்கள, அந்த கீரன் எனும் மாணவன் தவறு செய்தால் அவனைத் தண்டிப்பது சரி, ஆனால் கொல்வது சரியா? அவன் நிலை மோசமாகிவிட்டது, ஐயனே அவன் தவறை மன்னிப்பீர்” எனக் கெஞ்சினார்கள்.

48 புலவர்களும் அப்படி சிவன் முன் நின்று மன்றாடினார்கள்.

அவர்கள் கோரிக்கையினை ஏற்று அங்கே ஒரு அந்தணர் வடிவில் தோன்றினார் சிவன். ருத்திராட்சமாலை நிரம்பிய மார்பின் மேல் வெள்ளை வேட்டியும் மேலே ஒரு வஸ்திரம் போர்த்தியபடியும், காதுகளில் கடுக்கன் மின்ன முகத்தில் ஒரு பொலிவு மின்ன, நெற்றியில் திருநீறு மின்ன தெய்வீகம் தெரியும் கண்ணோடு அருள் புரியும் புன்னகையோடு அவர் கற்பகிரகத்தில் இருந்து வெளிவந்து நடக்கத் தொடங்கினார்.

“ஆலவாயா… சொக்கநாதா” எனக் கண்களில் நீர் வழிய, வாயில் வார்த்தைகளின்றி புலவர் கூட்டம் அவர் பின்னால் ஓடியது.

எல்லோரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள், சிவன் நேரே குளத்துக்குச் சென்று “கீரனே” என அழைத்தார்.

கீரன் உற்று பார்த்தார், முன்பு கண்ட அதே நெற்றிக்கண் இப்போதும் அந்த முகத்தில் தெரிந்தது.

கீரன் உடனே நீரில் இருந்து எழுந்து நின்று கைகளை தலைக்கு மேல் குவித்துப் பாடினார், தன் அடிமனதில் இருந்து சிவனைப் பாடினார்.

அதுதான் “கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி”

அதனைப் பாடி சிவனை அவர் கண்ணீருடன் போற்றி நின்றார், சிவனும் அவரோடு வந்த புலவர்களும் அந்தப் பாடலின் பொருள் அறிந்து புன்னகைத்து நின்றார்கள், சிவன் “கீரனே, வெளியே வா” எனக் கைநீட்டினார்.

அவர் கையினைப் பிடித்து கரையேறிய கீரன் அவர் கால்களில் விழுந்து கதறினார், மண்டியிட்டு அவர் முகம் நோக்கினார்.

கீரன் கண்கலங்கி அழுது சொன்னார், “எம்பெருமானே, உம் பாடலில் எம் அறிவின்மையின் பொருட்டு என் அறியாமையின் பொருட்டு குறைகண்டு நின்ற என்னைத் தண்டித்து இப்போது எனக்கு உதவி செய்யவந்த உம் அன்பை நான் என்னவென்று சொல்வேன், இப்படி ஒரு அன்பை நான் எங்குக் காண்பேன்.

எம்பெருமானே, நீர்யார்மேல் அன்பு கொண்டிருக்கின்றீரோ அவர்களின் ஆணவம் அகங்காரம் இன்னும் எல்லாத் துர்குணங்களும் தீர‌ துன்பம் கொடுத்து நல்வழிபடுத்தி உம் அருகே சேர்த்துகொள்கின்றீர், சோதனை அனுப்பி உம் அன்புக்குப் பாத்திரமானவர்களை இழுத்துக் கொள்கின்றீர்” எனச் சொல்லி உருகி நின்றார்.

அப்போது அவர் பாடியதுதான் கோப பிரசாதம்.

அப்படியே தொடர்ந்து சொன்னார்.

“ஐயனே அன்று அறிவில்லாமல் ஆணவத்தால் யாகம் செய்து, அறவழி நில்லாத‌ தட்சனை அழித்து அவனைத் தண்டித்தாய், அப்படியே அறவழி நின்ற சண்டீஸ்வரனுக்குப் பெரும் பதவி கொடுத்து நின்றாய்.

அன்பின் வடிவமானவனே. உன்னை நம்பி பிடித்து நின்ற மார்கண்டேயனுக்காக எமனை இடதுகாலால் மிதித்து விரட்டினாய், உன் அடியாரான மார்கண்டேயனை சிரஞ்சீவியாக வாழவைத்தாய்.

கொடிய ஜலந்தரனைக கொல்ல சக்கராயுத்தை நிலத்திலே வட்டமிட்டுத் தோற்றுவித்தாய், அதனை உன்னைப் பணிந்து நின்ற மகா விஷ்ணுவுக்கு வழங்கி தேவர்குலம் காத்தாய்.

எம் சிவனே, உன்னை ஆணவத்தில் ஏளனம் செய்த பிரம்மனின் தலையினைக் கொய்தாய், உன்னை வழிபட்ட சிலந்திக்கு மறுபிறப்பில் அரச பிறப்பளித்தாய்.

அண்ட சராசரங்களை மிரட்டி அச்சுறுத்திய முப்புரம் எனும் மூன்று கோட்டைகளையும் மூன்று அசுரர்களையும் நீயே அழித்தும்போட்டாய், உன் தவத்தை கலைக்க வந்த மன்மதனையும் எரித்துப் போட்டாய், பின் இரதியின் கண்ணீர் கண்டு இறங்கி அவனை மீண்டும் உயிர்பித்தும் கொடுத்தாய்.

உன்னை நோக்கி முனிவர்கள் சிலர் ஏவிய வெண்தலை எனும் மண்டையோட்டை உன் தலையில் அணிந்து கொண்டாய், உன் ஆலயத்தில் அணைய இருந்த விளக்கினை தூண்டிய எலியினைப் பெரும் அரசனாகப் பிறக்க வைத்தாய்.

இராவணனைத் தண்டித்த நீயே அவனுக்கு மன்னிப்பும் அருளி பழுதில்லாமல் அனுப்பி வைத்தாய்.

பிரம்மன் விஷ்ணு அகங்காரம் அடங்க நெருப்பு தூணாய் அடிமுடி காணமுடியா அளவு மகாபெரிய உருவாய் நின்றாய்.

கொடிய யானை, புலி, சிங்கம், மீன், ஆமை என அவற்றின் ஆணவத்தை அடக்கினாய், அப்படியே குரங்கு, பாம்பு, எறும்பு, கோழி, நண்டு, கரிக்குருவி என அவைகளுக்கும் அடைக்கலமளித்தாய்.

அப்படித் தங்கள் பாடலில் குற்றம் கண்டுபிடித்த என்னையும் தண்டித்து இப்போது என்னைக் காக்கவும் வந்துவிட்டாய், உம் கருணையே கருணை, அன்பே சிவம் என்பதை முழுக்க அறிந்துகொண்டேன்” எனச் சொல்லிப் பணிந்தார்.

சிவன் புன்னகைத்தபடியே மறைந்தார், கீரன் ஆலவாய் நாதன் சன்னதிக்குச் சென்று பெருந்தேவபாணி, திருவேழு கூற்றிருக்கை எனும் பதிகங்களைப் பாடி உருகி வீழ்ந்து வணங்கினார்.

அந்நேரம் சிவனே வந்து தண்டித்த கீரனை அவரே அணைத்தும் கொண்டது பற்றி வாதங்கள் வந்தன‌. இனி இவரைத் தமிழ்ச்சங்கத்தில் தொடரவைக்கலாமா இல்லை தள்ளி வைக்கலாமா எனத் தங்களுக்குள் புலவர்கள் பேசிக்கொண்டார்கள்.

அப்போது ஒரு அசரீரி ஒலி கேட்டது, “நம் கீரனே, எப்போதும் போல் நீர் தமிழ்ச்சங்கப் புலவராகத் தொடரலாம்” என்றது.

நம் கீரன் என சிவன் அழைத்ததே நக்கீரர் என்றாயிற்று, வேம்பு + மரம் வேப்பமரம் என்றாவது போல் நம்+கீரர் என்பது நக்கீரன் என்றாயிற்று.

நக்கீரர் தொடர்ந்து தமிழ்ச்சங்கத்தில் இருந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பின்பே தருமிக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்பட்டன, அரசனும் அள்ளிக் கொடுத்து தருமியினை அனுப்பினான்.

இதுதான் சிவன் கைக்கொடுத்து கரையேற்றிய திருவிளையாடல்.

இந்தச் சுருக்கமான காட்சியில் ஏகப்பட்ட விஷயங்கள் சுட்டிக்காட்டபடுகின்றன. முதலில், நக்கீரர் பாடிய “கயிலை பாதி காளத்தி பாதி” என்பது.

அதாவது, கயிலையினைப் பற்றி ஒரு பாடல் அடுத்து காளத்தி பற்றி ஒரு பாடல் என இருமலரை அடுத்தடுத்து வைத்து தொடுத்ததுபோல் பாடினார்.

இது சைவதிருமுறையில் 11ஆம் திருமுறைப் பாடலாக உண்டு.

கயிலை என்பது அறவழியில் அதாவது முழு ஆச்சாரவழி பக்தி நிலையில் நின்று பக்தர்கள் அடையும் தலம், காளத்தி என்பது கண்ணப்பர் எனும் வேடன் சிவனை வழிபட்டு முக்தி அடைந்த தலம்.

வேடன் பன்றிகறி வைத்துச் சிவனின் அன்புக்கு ஆச்சாரமான இடம், தன்னை வதைத்து சிவனைப் பற்றிக்கொண்ட இடம்.

ஒன்று சாத்வீக வழி. இன்னொன்று அது அல்லாத வழி.

அதாவது, அறவழி மறவழி என இருவழியிலும், தூய ஆகமவிதி பக்தியோ அது அல்லாமல் பன்றிகறியோ பிள்ளைகறியோ வைத்து மிக மிக இறுக்கமான வழியில் வழிபட்டாலும் சிவன் அருள்புரிவார் எவ்வழியில் நின்றாலும் சிவன் தன் அடியார்களைச் சேர்த்து கொள்வார் என்பது.

நக்கீரரைப் பொறுத்தவரை அவர் சிவனோடு வாதிடும்போதும் சிவன் தவறான ஒரு பாடலை அங்கீகரிக்கக் கூடாது, சிவனுக்கு இழுக்கு வந்துவிடக் கூடாது எனக் கருதிய மனநிலையில் இருந்ததாக நம்பிக்கொண்டார்.

எம்பெருமானின் பாடல் பிழையாக இருந்து அவருக்கு ஒரு அவமானம் வரக்கூடாது என்பதில்தான் நிற்பதாக கருதினார், கிட்டத்தட்ட கண்ணப்ப நாயனாரின் மனநிலையில் இருந்தார்.

அதனாலே, கயிலைபாதி காளத்திபாதி எனப்பாடினார். இன்றும் அது திருமுறையில் ஒன்றாக ஓதப்படுகின்றது.

பிரசாதம் என்பது தெய்வத்தின் அருளைச் சொல்வது, கோவிலில் கொடுக்கும் பிரசாதம் அந்த வார்த்தையில் இருந்தே வந்தது.

இறைவன் கோபப்பட்டால் கூட நமக்கு அருள்தான் செய்வார் என்பதைச் சொல்லும் பாடல் அது, இதுவும் பதினொன்றாம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

“தேவ பாணி” என்பது தேவர்களுக்குப் பாடப்படும் பண், பண் என்பதே பாணி என்றாயிற்று, பெரிய தெய்வமான மகாதேவனுக்குப் பாடபட்ட பாடல் “பெரும் தேவபாணி” என்றாயிற்று.

இதுவும் அந்தாதி போல் 96 வகை சிற்றிலியக்கங்களில் ஒன்று, அப்படியே திருவேழு கூற்றிருக்கை என ஒன்றைப் பாடினார்.

இது ஏழு படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாக ஏறிநின்று அப்படிக்கட்டில் உள்ள எண்களால் தொகையிட்டுப் பாடி ஏறுவதும், இறங்குவதுமாகப் பாடுவது எழுகூற்றிருக்கை.

அதாவது முதல் வார்த்தை 1, அடுத்த வரி 1, 2, அடுத்த வரி 1,2,3 எனச் சென்று 1,2,4,5,6,7 வரை சென்று பின் தலைகீழாகத் திரும்பும்.

இவ்வகை பாடலைச் சம்பந்தர், திருமங்கை ஆழ்வார், அருணகிரி நாதர் என மூவர்தான் நக்கீரரைத் தவிர பாடினார்கள்.

உதாரணமாக சொன்னால் “ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவாகும் செந்தமிழில் மூன்றானவன்” என்பது இவ்வகை பாடலே.

“ஓருடம்பு ஈருரு ஆயினை ஒன்றுபுரிந்
தொன்றி னீரிதழ்க் கொன்றை சூடினை
மூவிலைச் சூலம் ஏந்தினை சுடருஞ் சென்னி மீமிசை
இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை”

எனத் தொடங்கி

“ஏழின் ஓசை இராவணன் பாடத்
தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருத்தினை
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
தேரொடு திசைசெல விடுத்தோன்

நாற்றோள் நலனே நந்தியிங் கிருடியென்
றேற்ற பூதம் மூன்றுடன் பாட
இருகண் மொந்தை ஒருகணங் கொட்ட
மட்டுவிரி அலங்கல் “

என முடிக்கின்றார் நக்கீரர், மிக அற்புதமாக அமைந்த பாடல் இது.

அதாவது, ஏழு பிறப்பும் சிவனுக்குள் அடக்கம் என்பதை இலக்கியநயமாக அவர் பாடிய வகை இது.

இந்தத் திருவிளையாடலில் சிவனின் எல்லா இரக்க குணங்களையும் அவரின் பராக்கிரமங்களையும் பாடி துதிக்கின்றார் நக்கீரர்.

சிவனைப் பற்றிய எல்லாப் புராணச் செய்திகளையும் பாடுகின்றார்.

தட்சன் செய்த யாகத்தில் அவனை அழித்ததையும், மார்கண்டேயனைச் சிவன் காத்ததையும் இரு முரணான சம்பவங்களையும் ஒரே சிவன் செய்த தாத்பரியத்தைச் சொல்கின்றார்.

பக்திக்கும் அன்புக்குமே சிவம் கட்டுப்படும் என்பதைச் சொல்லிப் போற்றுகின்றார்.

திருமாலுக்குச் சக்கராயுதம் வழங்கிய சிவனின் பராக்கிரமத்தைச் சொல்பவர், அப்படியே சிவன் அடிமுடிக் காண முடியா நிலையில் பிரம்மனின் விஷ்ணுவின் அகங்காரம் அடக்கி நின்ற காட்சியினைச் சொல்கின்றார்.

பிரம்மனின் முகத்தைக் கிள்ளி அவன் அகங்காரம் போக்கிய கதையினைச் சொல்கின்றார்.
திரிபுரம் எரித்த காட்சியினைச் சொல்லி அப்படியே தேவர்களின் செருக்கடக்கிய போதனையினைச் சொல்கின்றார்.

மன்மதனை எரித்ததையும் பின் இரதிக்காக அவனை மீட்டதையும் சொல்லி எல்லா ஆசைக்கும் அப்பாற்பட்டவர் சிவன் என்பதைப் பாடுகின்றார்.

தாருகாவன ரிஷிகள் சிவனை நோக்கி மண்டை ஓட்டினை ஏவியதை, சிவன் அதனை தன் முடியில் அணிந்து புன்னகைத்ததையும் “வெண்டலை” எனச் சொல்லி புகழ்கின்றார் நக்கீரர்.

இராவணன் கைலாயத்தை அசைக்கமுயன்று தோற்றுச் சிவனால் மன்னித்து அனுப்பப்பட்ட காட்சியினையும் காட்டுகின்றார்.

ரிஷிகள் ஏவிவிட்ட யானையினைக் கொன்று அதன் தோலை உரித்துச் சிவன் போர்த்திக் கொண்ட காட்சி, புலியினைக் கொன்று தோலை உரித்து உடுத்திய காட்சி எனப் புராணத்தைச் சொல்லும் நக்கீரர், அப்படியே நரசிம்மமாக, மச்சமாக, கூர்மமாக வந்த திருமால் தன் நிலை தவறியபோது வந்து காத்த இடத்தையும் சொல்கின்றார்.

நரசிம்மமாக மகா விஷ்ணு வந்து உக்கிரம் தணியாமல் இருந்தபோது சிவனே அவர் உக்கிரத்தை தணித்தார், அப்படியே மீனாக விஷ்ணு வந்து அசுரனை ஒழித்தபோதும் உக்கிரமாக நின்றபோதும் அடக்கினார். பாற்கடலினைக் கடையும் போது ஆமையாக வந்த விஷ்ணு பின் அகங்காரம் கொண்டபோது அந்த ஆமையின் அட்டகாசாத்தை அடக்கியவர் சிவனே.

அதை எல்லாம் பாடும் நக்கீரர் அப்படியே சிவன் விலங்குகளுக்கு அருள் செய்த காட்சியினைச் சொல்கின்றார்.

தன்னை அறியாமல் வில்வம் இலைப்பறித்து லிங்கம் மேல் இட்ட குரங்கு மறுபிறவியில் முசுகுந்த சக்கரவர்த்தியாகப் பிறந்தது, தீபத்தை ஏற்றிய எலி மகாபலியாக வந்ததைச் சொல்கின்றார்.

பார்வதி சிவனைச் சோதிக்க எறும்பினை அடைத்து வைத்தபோது அதற்கும் படியளந்தது, வாசுகியினைக் கழுத்தில் போட்டுக் கொண்டது, இந்திரனிடம் சாபம் பெற்று நண்டான கந்தர்வன் நண்டுவடிவில் சிவனை வணங்கியபோது அவனைக் காத்து முக்தி கொடுத்தார் சிவன் அதையும் பாடுகின்றார் நக்கீரர்.

நாரைக்கு முக்தி கொடுத்தது, கரிக்குருவியினைச் சக்திமிக்கதாக்கியது, சோழ அரசனின் யானையினை வெல்ல சேவலுக்கு அருள் செய்தது எனச் சிவனின் எல்லா அருஞ்செயல்களையும் பாடுகின்றார்.

அப்படியான சிவன் தன்னையும் மன்னித்து அருளியதை நன்றியுடன் பாடி தன் பணியினைத் தொடங்குகின்றார் நக்கீரர்.

இந்தத் திருவிளையாடல் சொல்லும் காட்சி ஒன்றுதான். அது அறியாமல் செய்யப்படும் பாவங்களைச் சிவன் மன்னிக்கின்றார், சிவன்மேல் அன்புடன் செய்யப்படும் எல்லாமும் சிவனால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது, நம் அறியாமையினைச் சிவன் நீக்கி நம்மை அறிவுடன் தெளிவுடன் நம்மை நோக்கி வரச்செய்கின்றார் என்பது.

சிவன் தந்த பாடலில் தவறான பொருள் இருக்கின்றது. அதனால் சிவனுக்கே இழுக்கு என அவரை காக்க நினைந்து, தானே சிவனைக் காப்பதாக நினைந்து வாதிட்டான் நக்கீரன்.

வந்திருப்பது சிவன் எனத் தெரிந்தும் தன் கடமையில் சிவனுக்கே காவல் இருப்பதாகக் காட்டிகொண்டார். இது அறியாமை.

அந்த அறியாமையினை நீக்க அவரை வெப்பத்தால் வாட்டி பின் அவன் தன்னை உணர்ந்து பொற்றாமரைக் குளத்தில் கிடக்கும் போது சிவன் அவர் அறியாமையினை நீக்கினார்.

அதாவது, எல்லாப் பெண்களின் கூந்தலுக்கும் இயற்கை வாசமில்லை அது அன்னை சக்திக்கே இல்லை எனத தவறாக நினைந்து கொண்டார், ஒரு அறியாமையில் இருந்தார்.

இங்கு எல்லாமே சிவசக்தி மயம் மலர்களின் வாசம் முதல் எல்லாமும் அவள் இயக்கம் என்பதையும் சிவசக்தி தத்துவமே எல்லாவற்றிலும் உண்டு என்பதையும், அப்பாடல் சிவசக்தியின் தத்துவத்தைச் சொல்லும் பாடல் என்பதை அறியாமல் நக்கீரர் வாதிட்ட அறியாமை அங்குப் போக்கப்பட்டது.

ஆம். ஒரு மனிதனின் ஆகப்பெரிய பலவீனம் அறியாமை. அந்த அறியாமையினையே மானுடர் பலர் தங்கள் பிடிவாதமான பலமாக, தங்கள் பெரும் பலமாகக் கருதி நிற்கின்றார்கள், இவர்களால் தெய்வத்தை உணரமுடியாது.

சிவனைச் சரணடையும் போது நம் அறியாமையினை நீக்க சில சோதனைகளைத் தருவார், அச்சோதனையில் அவரை அழைத்தால் நிச்சயம் பெரும் ஞானம் கொடுத்து தெளிவு கொடுத்து தன்னோடு சேர்த்துக் கொள்வார், அவர் அன்பானவர் கருணையானவர் .

விலங்குக்கும் பறவைக்கும் ஊர்ந்து செல்லும் எறும்புக்கும் கூட தனிக் கருணைக் கொண்ட அந்தச் சிவம் முழுக்க அன்பானவர், அவர் கோபம் கூட அன்பால் உருவாவதே , அந்தக் கோபம் உடனே அகன்றுவிடும். ஆனால், அவரின் அன்பு ஒருகாலும் மாறாது. அழியாது. அவர் அன்பின் தெய்வம், அந்த அன்பால் நம் அறியாமை நீக்கி அரவணைத்து நம்மோடு சேர்க்கும் தெய்வம் என்பதை இந்தத் திருவிளையாடல் போதிக்கின்றது.