திருவிளையாடல் புராணம் 35 : ஊமை, சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்.

திருவிளையாடல் 35 : ஊமை, சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்.

அப்போது மதுரையினை ஆண்ட வரகுண பாண்டியனுக்கு ஒரு ஆசை வந்தது, அது பெரும் ஆசையானது.

அதாவது, வடமொழியில் முருகப்பெருமான் அருளிய “கெளமார வ்யாகரணம்” நூல் உண்டு. அப்படி ஒன்று தமிழுக்கும் வேண்டும் என விரும்பினான் மன்னன்.

ஆலவாய் நாதனிடம் அதுபற்றி வேண்ட செப்புத் தகட்டில் எழுதப்பட்ட சூத்திரத்தை சிவன் கொடுத்து மறைந்தார். இதற்கு யாரை வைத்து பொருள் எழுதுவது, சிறந்த புலவர் யார் என்பதில் குழப்பம் கொண்டான் மன்னன்.

மதுரை தமிழ்ச்சங்கம் 48 புலவர்களுடன் மிகத் தீவிரமாக இயங்கி வந்தது. புலமை கொண்ட மனம் பொன் பொருள் நாடாது; பெரும் வீடு சொத்துக்கள் தேடாது; அதிகாரம் தேடி ஓடாது.

அது எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு அங்கீகாரம், ஊரறிய உலகறிய அங்கீகாரம். தன் படைப்பு என்பதை மிக மிகக் கம்பீரமாகச் சொல்லி அதுதான் தன் ஒரே அடையாளம் என மகிழ்ந்து அதனை எல்லோரும் கொண்டாடும்போது கிடைக்கும் மனநிறைவு.

ஒவ்வொரு புலவனும் எதிர்பார்ப்பது அதுதான். அவனுக்கு மற்றவரும் சபையாரும் உலகாரும் தங்கள் பாடலைக் கொண்டாடும்போது அவன் தெய்வத்தைக் கண்ட பக்தன் நிலைக்கே சென்றுவிடுவான். அவன் வாழ்வில் அதைவிடப் பெரிய நோக்கமுமில்லை. எந்தவித எதிர்பார்ப்புமில்லை.

அதுவும் சக புலவன் தங்கள் பாடலை ஒப்புக்கொள்வது என்பது அவர்களுக்குப் பெரும் சாதனை. எல்லா இலக்கணமும் அடிப்படையும் அறிந்தவர்கள், பாடலின் சுவைபும் பொருளும் முழுக்க அறிந்தவர்கள் அதன் அடியாழம் வரை உணர்ந்து இப்படிப் பாட என்னென்ன திறமையும் அறிவும் இருக்கவேண்டும் என்றெல்லாம் உணர்ந்து புலவர்கள் பாராட்டுவது அவர்களுக்குப் பல்லாயிரம் கோடி பொன் பரிசுக்குச் சமம்.

இதனால் எங்கே இருந்தாலும் கவிஞர்களுக்குள் ஒரு போட்டி வரும், யார் சிறந்த புலவர் எனும் வலுத்த வாதம் வரும். இது இயல்பு.

எல்லாத் துறைகளிலும் மானுடர்க்கு இருக்கும் இந்த உத்வேகமும் போராட்டகுணமும் அங்கும் இருந்தது.

யார் பாடல் சிறந்தது எனப் பலரும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். தங்கள் பாடல்தான் சிறந்தது எனப் பறைசாற்றி நின்றார்கள். மற்றவர் பாடல்களில் குறைகள் இருப்பதாகப் பெரிதாகக் குற்றம் சாட்டினார்கள்.

அந்த அவை எப்படி மோதிக்கொண்டது என்றால் சிவபெருமான் பாடலிலே பிழை இருப்பதாக வாதிட்ட நக்கீரனைக் கொண்டிருந்தது, சிவன் பாடலே சரியில்லை எனச் சொன்ன அவை எப்படியானதாக இருந்திருக்கும்?

அந்தச் சபை கடுமையாக மோதிக்கொண்டபோது மன்னனும் திகைத்துப் போனான். இது இராணுவ சேனை சண்டை என்றால் மோதச் சொல்லிப் பார்த்துவிடலாம், சொத்துச் சண்டை என்றால் பொருள் வைத்து கணக்கிடலாம். ஆனால், இது அறிவுச்சண்டை, புலமைச் சண்டை, யார் அதிகம் அறிந்தவர், அறிந்ததை சரியான இலக்கணத்துடன் தாள வகையுடன் சரியாகச் சொல்லத் தெரிந்தவர் எனும் சண்டை.

மன்னன் குழம்பினான். இவர்கள் 48 பேரும் சாதாரணமும் அல்ல, மகா திறமைசாலிகள், சாட்சாத் சரஸ்வதியின் அம்சமாகப் பிறந்தவர்கள். 48 பேருமே தங்கம் என்றால் நல்ல தங்கத்தை எப்படி அறிவது?

நல்லபாடல் எது என்பது முடிவு செய்ய கடினமான அந்நேரம் மன்னன் எல்லாப் புலவர்களையும் அழைத்துக் கொண்டு ஆலவாயன் சனனதிக்குச் சென்று மன்றாடினான்.

“பரம்பொருளே, தமிழ்தந்து அவையும் தந்த செம்மலே, நீர் கொடுத்த தமிழுக்காய் இயங்கும் இந்த அவையில் பெரும் குழப்பம் வந்திருக்கின்றது, இங்கே சரியான பாடல் எதுவெனத் தெரியாமல் குழம்புகின்றோம், எல்லாப் புலவர்களின் பாடலுமே மிக அற்புதமாய் இருப்பதால் மிக நல்ல பாடலைத் தேர்வு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்.

எம்பெருமானே, நீரே இந்தச் சிக்கலில் எங்களுக்கு வழிகாட்டி அரும்பெரும் நூல்கள் பல வெளிவர அருள்புரிவீராக” எனக் கெஞ்சினான்.

ஆலவாயன் சன்னதியில் அசரீரி கேட்டது, “நடப்பதை நாமும் அறிவோம், நீங்கள் இந்த மதுரையில் வணிகர் தெருவில் இருக்கும் தனபதி என்பவன் வீட்டிற்குச் செல்லுங்கள், அந்தத் தனபதியும் அவன் மனைவி குணசாலினியும் ஒரு மகனைப் பெற்று வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள், அவன் பெயர் உத்தம ஜென்மன். ஆனால், அவனோ பிறவி ஊமை.

ஊமை என்பதால் அச்சம் வேண்டாம், அவனுக்கு எல்லாமே சாத்தியம், அவன் மனம் எல்லாக் கலைகளிலும் நிரம்பியது, அவனுக்குத் தெரியா இலக்கணமில்லை, நீங்கள் அவனிடம் உங்கள் பாடலைக் காட்டுங்கள். அவனே உங்களுக்கு நல்ல தீர்ப்பு சொல்வான்” என ஒலித்தது.

மன்னனும் அவையோரும் மிக மகிழ்ந்தார்கள். சிவன் சொன்னபடியே தனபதி வீட்டுக்குச் சென்று நடந்ததைச் சொன்னார்கள்.

தனபதி நம்பமுடியா ஆச்சரியத்தில் இருந்தான், குணசாலினி கண்ணீர்விட்டாள்.

காரணம், அது அவர்களுக்கு ஒரே குழந்தை, அற்புதமான அறிவோடு பிறந்த குழந்தை. ஆனால், கண் இல்லா சித்திரம் போல் அவனுக்குப் பேச்சு வரவில்லை.

பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதே மழலையின் சொல், அந்த இன்பமும் பரவசமும் குழந்தையால் பெற்றோர் பெரும் அரும் பேறு. ஆனால், இந்தக் குழந்தை பேசாமல் இருப்பதால் அவர்களும் பெரும் கவலையுற்றுக் கொண்டிருந்தார்கள்.

ஆலவாயன் சன்னதியில் அனுதினமும் அழுதுக்கொண்டிருந்தார்கள். ஆனால், மகன் பேசவில்லை.

பேச்சுவரவில்லை என்றாலும் அவனுக்கு இதரக் கலைகள் எல்லாம் வந்தது, அழகாக எழுத வந்தது. இன்னும் எல்லாத் திறமையும் இருந்தது, அதனால் கல்வி எல்லாம் கற்க வைத்திருந்தார்கள்.

ஆனாலும், வாயில்லாப் பிள்ளையின் எதிர்காலம் குறித்து அடிக்கடி ஆலவாயனிடம் அழுதுவந்தார்கள். அப்படியான பெற்றோர்களுக்கு அரசனும் பெரும்சங்கப் புலவர்களும் தங்கள் வீடு தேடிவந்தது பெரும் பாக்கியமாய் இருந்தது.

ஆலவாயனை நோக்கி தொழுது கண்ணீர்விட்டார்கள். அந்த உத்தம ஜென்மன் பல்லக்கில் ஏற்றப்பட்டான், பெரும் மேளதாளத்துடன் தமிழ்ச்சங்கம் நோக்கி அழைத்துவரப்பட்டான். அரசரும் அவையோரும் முன் செல்ல அவன் பெரும் ஆரவாரத்துடன் அழைத்துச் செல்லபட்டான், நம்பமுடியா அதிசயமாக இதைக் கண்ட பெற்றோரும் பின் தொடர்ந்தார்கள்.

அவன் பொற்றாமரைக் குளத்தில் நீராட வைக்கப்பட்டான். பின் பட்டாடையும் பெரும் நகைகளும் பாண்டிய நாட்டிற்கே உரிய முத்துமாலையும் அணிவிக்கப்பட்டு அவன் ஆலவாயன் சன்னதிக்கு அழைத்துவரப்பட்டு பூஜையில் அமரவைக்கப்பட்டான்.

பின் பூஜை முடிந்து தலைமை அந்தணர் நீறுபூசி மாலையிட்டு வாழ்த்தியபின் அவன் தமிழ்ச்சங்கம் அழைத்துவரப்பட்டான், அவனை எல்லோரும் அழைக்க அவன் தலைமை ஆசனத்தில் அமரவைக்கப்பட்டான்.

அவன் முன்னால் எல்லாப் புலவர்களும் வந்து ஒவ்வொருவராகப் பாடினார்கள். அந்த ஊமை சிறுவன் கேட்டுக் கொண்டே இருந்தான்.

பாடலின் சொற்சுவை, பொருள்சுவை இருந்தால் தலையாட்டுவான்; சொற்கட்டும் தாளகட்டும் சரியாக இருந்தால் புன்னகைப்பான்; பாடல் இலக்கணச் சுத்தமாக இருந்தால் மெல்லப் புன்னகைப்பான்.

அதே நேரம் பாடல் சரியில்லை என்றால், இலக்கணப் பிழை, சொற்கட்டு சரியில்லை, தாளகட்டில் லயமில்லை என்றால் உடனே முகம் கடுத்துவிடுவான்.

மிக மோசமான பாடல் என்றால் தலையினைத் திருப்பிக் கொள்வான், நல்ல பாடல் என்றால் தலையாட்டி இரசிப்பான்.

அப்படிப்பட்டவன் சில புலவர் பாடல்கள் பாடியபோது எழுந்து ஆர்ப்பரித்தான், கைக்கொட்டி கொண்டாடினான், சில பாடல்களுக்கு அழுதான், மண்டியிட்டு அழுதான்.

இப்படி அவன் பேசாமலே தீர்ப்பு சொன்னபடி சில புலவர்களின் பாடல்களே மிகச் சரியான பாடல்களாகத் தேர்வு செய்யப்பட்டன, அவர்கள் சிறந்த புலவர்கள் என ஒப்புக்கொள்ளப்பட்டனர்.

அவர்களில் நக்கீரன், கபிலர், பரணர் என மூவரும் கொண்டாடப்பட்டார்கள்.

கபிலரின் பாடல்கள் அழியா வரம் பெற்றவை “குறிஞ்சிக்கோர் கபிலர்” எனக் கொண்டாடப்பட்டு வரலாற்றில் நிற்பவர் அவர்; காளிதாசன் போல அவரின் உவமைகள் சாகா வரம்பெற்றவை; இவ்வளவுக்கும் காளிதாசனுக்கும் மூத்தவர் கபிலர்.

வள்ளல்களால் மன்னர்களால் ஒளவையார் போல் கொண்டாடப்பட்டவர், சிவனைப் பற்றி நிரம்பப் பாடியவர்.

பரணர் இன்னுமோர் பெரும்புலவர். இவர் இயற்கையினை அழகாக அதே நேரம் உருக்கமாகப் பாடுவதில் சிறந்தவர், தமிழ்ச்சங்க கால புலவர்களில் தவிர்க்க முடியாதவர்.

நக்கீரர் எல்லோரும் அறிந்த பெரும் புலவர், அவரின் சிவபக்தி இலக்கியமும் திருமுருகாற்றுப்படையும் எல்லோரும் அறிந்த ஒன்று.

ஆக, சர்ச்சையும் சண்டையும் நிரம்பிய அவையில் சிவனே ஒருவரை அடையாளம் காட்டி முடிவினை அறிவித்தார்.

அங்கே இரு தரப்புக்கு ஒரே நேரம் நிம்மதி வந்தது.

முதலில் ஊமைப் பிள்ளையினைப் பெற்றுவிட்டோமே, இது சிவனை வாய்திறந்து பாடுமோ? கற்றவர் அவையில் ஏறுமோ எனக் கலங்கிய பெற்றோருக்கு பெரும் நிறைவு தந்தது.

வாய்பேசமுடியாவிட்டாலும் சங்கப் புலவர்களுக்கே தீர்ப்புச் சொல்லும் வகையில் தன் பிள்ளை அமர்ந்ததைக் கண்டுவிட்ட நிம்மதி, அதைவிட என்னவேண்டும்?

அடுத்து சங்கப் புலவர்களின் கர்வத்தைச் சிவன் அடக்கியது.

இங்கே புலவர்கள் அகந்தையாலே சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள், பாடல் என்பது முறையாக இராகமாக இசைத்தால்தான் முழுமை பெறும்.

இந்தப் புலவர்கள் பாடலிலும் வல்லவர்களாக இருந்தார்கள். அவர்கள் கர்வத்துக்கு அதுதான் காரணம். தங்கள் அளவு பாடல் இயற்றி அழகான முறையில் பாடுவதற்கு யாருமில்லை என மமதை கொண்டிருந்தார்கள்.

வாக்குக் கலையில் தாங்களே வல்லவர்கள் என ஆணவத்தில் வந்தார்கள்.

அவர்களை வாய்பேசமுடியாத சிறுவனைக் கொண்டு கர்வம் அடக்கினார் சிவன். புலவர்களின் பெரும் அகந்தை அங்கே அழிக்கப்பட்டது, ஒரு ஊமைச் சிறுவன் தங்களுக்குத் தீர்ப்பு சொன்ன இடத்தில் சர்வமும் ஒடுங்கிப் போனார்கள்.

இப்படிக் கர்மத்தால் ஊமையான மகனின் நிலைகண்டு அழுத பெற்றோருக்கு நிறைவும் அகந்தையில் ஆடிய புலவர்களுக்கு அடியும் கொடுத்தார் சிவன்.

மன்னன் கபிலர், பரணர், நக்கீரர் மூவரையும் கவனத்தில் எடுத்தான். இந்த மூவரில் நக்கீரரே சிறந்தவர் எனத் தன் திருவிளையாடல் மூலம் சிவன் காட்டினார்.

அந்த நக்கீரர் பாடிய பாடல்களெல்லாம் இந்தச் சூத்திரத்தை, சிவன் மன்னனுக்கு கொடுத்த சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டதே.

திருமுருகாற்றுப்படை வந்ததும் இப்படித்தான்.

இந்தத் திருவிளையாடல் நக்கீரரின் பாடலிலே உண்டு, உத்தன ஜென்மன் அல்லது உருத்திர சருமன் என வந்த அந்த சிறுவன் முருகப்பெருமானின் அம்சம் என்பது பின்னாளில் அறியப்பட்டது.

முருகப்பெருமான் தமிழ்ச்சங்கத்தின் தலைவனும் தெய்வமுமானவர், அவரே அந்த சிறுவன் வடிவில் வந்தார்.

இதைத்தான் தன் திருமுருகாற்றுப்படையில் “நூலறி புலவ” என்கின்றார் நக்கீரர்.

இந்தத் திருவிளையாடல் சொல்வது இரு முக்கிய விஷயம். முதலாவது, என்ன குறை இருந்தாலும் கர்மவினைப்படி எந்தக் குறை இருந்தாலும் சிவனை அண்டினால் அவர்கள் கவலை மாறும்.

அதாவது, ஊமை என்பது பிறப்பால் வந்த குறை. கர்ம பலன். அங்கே சிவன் ஊமையினைப் பேசவைக்கவில்லை. மாறாக, அந்தக் கர்மத்தினைச் சுமக்க வைத்தே இன்னொரு பக்கம் பெரும் உயரம் கொடுத்தார்.

கர்மவினை என்பது சில குறையாக வரலாம். ஆனால், அந்தக் குறை பெரும் பலமாக பெரும் சிறப்பாகச் சிவனருளால் மாறும்.

அப்படியே சிவன் அகங்காரத்தை வெறுக்கின்றார், அகங்காரிகள் ஆணவத்தை அடக்கி அவர் நல்வரம், நல்ல வழி தருகின்றார்.

இங்கே ஆன்மீக தத்துவமும் உண்டு.

அதாவது, இங்கே ஊமை என்பது பேசாமல் பேசும் விஷயம். அதாவது, இந்தப் பாடல்களின் பொருளை மனதால் புரிந்து மனதால் அந்த உத்தம ஜென்மன் என்பவன் மனதால் பேசினான்.

ஆம். சிவம் மனதோடு பேசும் என்பதைச் சொல்லும் தத்துவம் இது.

சிவன் காட்சியில், செவிகளில் இதர வழிகளில் பேசுவதை விட மனதால் பேசுவார், அவர் வார்த்தைகளால் பேசுவதை விட மௌனத்தில் பேசுவார்.

சிவம் என்பது மௌனத்தில் மௌனமாய்ப் பேசும் சக்தி, அது ஆர்ப்பரிப்பதில்லை பெரும் சத்தம் இடுவதில்லை. பெரும் பெரும் ஆரவாரம் செய்வதில்லை.

அது மனதில் மௌனமாக நின்று எல்லாமும் உணர்த்தும் சக்தி, மனதில் நின்று நல்லது கெட்டதைச் சொல்லும் பெரும் சக்தி.

எவ்வளவு பெரிய சிக்கல் என்றாலும் சிவனை நாடி நில்லுங்கள். அகந்தை அழித்து அவர் பதம் நாடி நில்லுங்கள். சிவம் உங்கள் மனதில் இருந்து மௌனத்தில் விடை சொல்லும். சிவன் மௌனத்தில் நின்று உங்களுக்கு ஏற்ற நல்ல தீர்ப்பு தருவார் என்பதைச் சொல்லும் திருவிளையாடல் இது.

இந்த மாபெரும் அண்ட சராசரம் அமைதியில் இயங்குகின்றது. இந்த மாபெரும் அண்டவெளியின் கோள்கள் சந்திரனெல்லாம் மகா அமைதியில் இயங்குகின்றது.

சூரியன் சுற்றும் ஒலி, பூமி சுற்றும் ஒலி யாரும் கேட்டதுண்டோ, வான்வெளி நட்சத்திரங்களின் இயக்கத்தின் பெரும் ஒலி கேட்டதுண்டோ.

இங்கு எல்லாமே மௌனம். சிவமும் அந்த மௌனம், அறிவின் நிறைவு மௌனம், மௌன நிலையே ஞானத்தின் பெரும் வாசல். அதனாலே ஞானியரும் ரிஷிகளும் மௌனத்திலே கரைந்தார்கள். அந்த மௌன ஞான நிலையே சிவநிலை. அந்த மௌனமே மனசாட்சி, மனசாட்சியே சிவனின் ஆட்சி. அடியார் மனதில் மௌனமாக நின்று பேசுவார் சிவன் என்பதை இந்தத் திருவிளையாடல் அழுத்திச் சொல்கின்றது.