திருவிளையாடல் புராணம் 37 : மாபாதகம் போக்கிய புறந்தொட்டித் தீர்த்தம்.
திருவிளையாடல் 37 : மாபாதகம் போக்கிய புறந்தொட்டித் தீர்த்தம்.
அன்றைய அவந்தி தேசத்தில் ஒரு அந்தணத் தம்பதியர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த அந்தணன் வேத சாஸ்திரங்களில் சிறந்தவன் பெரும் ஞானமும் வேத அறிவும் கொண்டவன். அவன் தர்மவான் அறத்துக்கு உட்பட்ட வாழ்க்கையினை அதுவும் வேதம் ஓதுபவன் வாழவேண்டிய கட்டுப்பாடான வாழ்க்கையினைத் தெய்வத்துக்கு அஞ்சி மிக சரியாக வாழ்ந்து வந்தான்.
அவந்தி என்றால் இன்றைய மத்திய பிரதேச பக்கமுள்ள நாடாக இருந்தது.
அவன் மனைவி பெரும் அழகி. நல்லபடியாக அவர்கள் இல்லறம் தொடங்கி அவர்களுக்கோர் ஆண்மகவும் பிறந்தது. எல்லாப் பெற்றோரையும் போல அந்தக் குழந்தையினையும் அவர்கள் சீராட்டி வளர்த்து வந்தார்கள்.
அவனும் வளர்ந்தான். அவன் வளர வளர அந்தத் தாய்க்கு அவன் மேல் பாசமும் வளர்ந்தது. பாசம் பித்தாயிற்று.
பித்து என்றால் அவனுக்காக எதையும் செய்யும் அளவுக்கு அந்தப் பந்தம் அவளை அவனுக்கு அடிமையாக்கிற்று. தன் கடமை மறந்தாள். தரம் மறந்தாள். எல்லாம் மறந்து மகன் மகிழ்ச்சி ஒன்றே தன் வாழ்வு என வரிந்து கொண்டு அவனுக்குக் காவலாய் நின்றாள்.
மானிட மனம் விசித்திரமானது. அதுவும் குழந்தைகள் மனம் எங்கெல்லாமோ செல்லும் தன்மை உடையது. அதனை உரிய காலத்தில் அடக்கி அல்லது விளக்கி வளர்க்க வேண்டியது தாயின் கடமை.
ஆனால், அவளோ அவனின் சந்தோஷம் முக்கியம் என அவனின் எல்லாச் சின்ன சின்ன தவறுகளையும் கண்டு கொள்ளவில்லை. மாறாக, ஊக்கப்படுத்தினாள். அதுதான் அவன் மகிழ்ச்சிக்கு வழி என எண்ணிக் கொண்டாள்.
இது சிறிய சிறிய காரியங்களில் தொடங்கி அவன் வளர வளர பெரிய சர்ச்சைகளில் வந்தது. அப்போதும் அவள் பாசம் அவன் மகிழ்ச்சியே பிரதானமாக கருதிற்றே தவிர அவனைத் திருத்த முயற்சிக்கவில்லை.
அவன் துஷ்டன் ஆனான். அவள் அப்போதும் அவனைக் கண்டிக்கவில்லை, நிலைமை எல்லை மீறிச் சென்றிருந்தது.
அவன் காமம், போதை, இன்னும் எல்லாத் துஷ்ட குணங்களையும் கொண்ட பெரும் மரமாக கொடிய மிருகமாக மாறினான். அந்தத் தாயோ அவனுடன் சேர்ந்து அவளும் மிருக நிலையினை எட்டியிருந்தாள்.
இருவரும் சேர்ந்து எல்லாத் துஷ்டகாரியங்களையும் செய்யத் தொடங்கினார்கள். மகனின் மகிழ்ச்சிக்காக அவள் எதையும் ஒரு பொருட்டாக கருதவில்லை.
மானுடம் பொறுக்காத பெரும் இழிவுகளை அவன் செய்ய செய்ய அவளும் அதற்குத் துணையிருக்க எல்லாச் செய்தியும் அந்த அந்தணனை எட்டிற்று.
எப்போதும் கோவில் பூஜை, வேதம் என்றிருந்த அவன் தன் மகனை தன் மனைவி சரியாக வளர்க்கவில்லை, தன் கடமையிலிருந்து தவறி இப்போது அவனின் எல்லாத் தப்புக்கும் அறம்கெட்ட செயலுக்கும் துணையாகின்றாள் என்பதை எண்ணி வருந்தினான்.
மகனைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று கண்டித்தான். செய்யக் கூடாத பாதகங்களை அவன் செய்ததால் மிகுந்த வருத்தமும் ஆத்திரமும் கொண்டு அவனைக் கண்டித்துக் கொண்டிருந்தான்.
தன்னைப் பற்றி எல்லாம் அவர் தெரிந்துகொண்டதால் ஆத்திரமடைந்தான் மகன். போதைக்கு அடிமையான மனம் அதை யார் தடுப்பார்களோ அவர்கள் மேல் பேய் போல் பாயும்.
காமமும், போதையும் அப்படியானது. அதற்கு அடிமையாகிவிட்டால் ஒருவனை அது குருடனாக்கிவிடும் மனதை இரும்பாக்கிவிடும். மிருகத்தின் நிலைக்கு அவனைத் தள்ளிவிடும்.
அப்படி மிருகமான மகன் மண்வெட்டியால் தகப்பனையே அடித்துக் கொன்றான். கொன்றவன் மிகச் சாகவாசமாக தகப்பனை புதைதுவிட்டு தாயிடம் விஷயத்தைச் சொன்னான்.
தாய் அதிர்ந்தாள். அப்போதும் அவளுக்குத் தன் கணவனைப் பற்றி கவலையில்லை. மாறாக, தன் மகனை இனி விசாரணை என காவலர்கள் வந்து பிடித்துவிடுவார்கள், எப்படியும் விஷயம் விரைவில் வெளிவரும் என அஞ்சியவள் தன் மகனோடு நாட்டை விட்டே வெளியேறினாள்.
பொன் பொருளுடன் அவர்கள் வேறு நாடு தேடிச் செல்லத் தொடங்கினார்கள்.
அப்படிச் செல்லும் வழியில் ஒரு கொள்ளைக் கும்பல் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அவர்களிடமிருந்த பொன் பொருள் எல்லாம் அபகரித்துக் கொண்டது. அவன் தாய் அழகானவள் என்பதால் அவளையும் அள்ளிச் சென்றார்கள்.
இவனை அடித்து உதைத்து வீசிவிட்டுச் சென்றார்கள். அவன் மயக்கமனான்.
பிள்ளைகளை நல்ல வழியில் வளர்க்காதவர்கள் அவமானப்படுவார்கள். பிள்ளைகளின் அக்கிரமம் அனைத்துக்கும் துணைசெல்பவர்கள் பின்னாளில் பெரும் அழிவினைச் சந்திப்பார்கள். இது நியதி.
மகாபாரத திருஷ்டிராசனும் காந்தாரியும் பெரும் உதாரணங்கள்.
அப்படி மகனின் எல்லாத் தவறுக்கும் துணை சென்ற தாய், அவன் ஆசைகளை நெருப்பென எரியவிட்ட தாய், கொடிய கொள்ளையரிடம் சிக்கி அவளுக்கான தண்டனையினைப் பெற்றுக்கொண்டாள்.
தாய் இல்லை, தகப்பனும் இல்லை கையில் பொருளுமில்லை எனப் பரதேசி போல் அலைந்து அனாதையானான் அந்த மகன். தகப்பன் வேதம் அறிந்தவன் என்பதால் பிரம்மஹத்தியும் அவனைப் பீடித்துக் கொண்டது.
அவன் சிவாலயம் ஓடினான். அங்கே பிரம்மஹத்தி ஒதுங்கும். ஆனால், அவன் வெளிவந்ததும் பிடித்துக் கொள்ளும். அவன் சரியாக வேதம் படிக்காததால் தந்தையுடன் இருந்து வளராததால் ஆலய பூசாரிகளுடன் சேர்ந்து நிற்க முடியவில்லை.
பரதேசியாக ஒவ்வொரு நாடு நாடாக ஓடினான். நல்ல ஆடை இல்லை, அவனுக்கு உணவு கொடுப்பாரும் இல்லை, அவனை கவனிப்பாருமில்லை. பரதேசியாய் திரிந்து தெருவோர ஜீவன் போல் கிடந்தான்.
காமமும் போதையும் கிடைக்கும் வரை ஒருவனைச் சுகத்தில் வைத்திருக்கும். அது தடைபடும் நேரம் அவன் மிருகநிலைக்குச் செல்வான். மேலும் மேலும் அது தடைபடும் போது அவன் எல்லா ஆர்பாட்டங்களையும் மிக கடுமையாகச் செய்வான்.
ஆனால், இங்கே அவன் அதை வெளிக்காட்டமுடியாது. பரதேசியாக அலைபவன் இவற்றைத் தேடினால் தொலைத்துவிடுவார்கள். இதனால் ஆங்காங்கே பெரும் அவமானம் அடைந்தான், அவனைப் பல இடங்களில் அடித்தும் அனுப்பினார்கள்.
அந்தணனாக அழகுற வளர்ந்தவன் தாடி வளர்த்து, எண்ணெய் இல்லாத் தலையுடன், கந்தல் ஆடையுடன் காணச் சகிக்காக் கோலத்துக்கு வந்திருந்தான்.
மெல்ல மெல்ல அவனுக்குள் பெரும் அவமானம் வந்தது. பெரும் பெரும் குழப்பம் வந்தது. அந்தப் பிரம்மஹத்தியும் அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.
அவனுக்குள் பெரும் மாற்றம் வந்தது. தனக்கு வந்த இந்த இழிநிலைக்குக் காரணம் தன் பெரும் பாதகங்கள் எனக்
கருதி ஒவ்வொரு தலமாகத் தரிசித்து கடைசியில் செத்துவிடுவது என முடிவு செய்தான்.
அப்படிப் பல தலங்களைத் தரிசித்து பிச்சை எடுத்து உண்டு தாங்கமுடியா பிரம்மஹத்தியின் கொடுமைகளும் தாங்கி அவன் வந்து கொண்டிருந்தான்.
அப்படியே தென்னகம் வந்தவன் இராமேஸ்வரம் செல்ல முயன்று மதுரை பக்கம் வந்தான். அவன் ஆலவாயன் சந்நிதி பற்றிக் கேள்விப்பட்டு அந்த ஆலயம் பக்கம் வந்தான்.
வரும் வழியெல்லாம் பொற்றாமரைக் குளத்தின் பெருமையினை ஆலவாயனின் சிறப்பினைக் கேட்டுகொண்டே வந்தவன் அங்கு தன் சாபம் தீரும் எனத் தனக்குள்ளே சொல்லியபடி வந்தான்.
அப்போது சிவனும் மீனாட்சியும் வேடன் வேடுவர் வடிவில் அங்கே சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
எல்லாம் அறிந்த சிவன் அந்தக் கோலத்தில் அமர்ந்திருந்தார். அன்னையும் வேடுவச்சி கோலத்தில் இருந்தார். அவர்களைப் பார்க்க சாதாரண வேடுவர் போலத்தான் எல்லோரும் கருதுவார்கள், அவனும் அப்படியே கருதிக்கொண்டு வந்தான்.
அவனைக் கண்டதும் அவன் யார் என அறிந்த அன்னை மீனாட்சி முகத்தை திருப்பிக் கொண்டாள் “ச்சீ மனிதனா இவன்?” எனும் வார்த்தை மட்டும் அவளிடம் இருந்து வந்தது.
ஆனால், சிவன் அவனை நோக்கி புன்னகைத்தார், அவன் அந்த புன்னகையில் நெகிழ்ந்து போனான்.
உடைந்துபோன உள்ளம், எதிர்காலம் தெரியாமல் கலங்கி நிற்கும் உள்ளம், திக்கற்று கதியற்று பெரும் சோதனையில் யாருமற்று நிற்கும் கலங்கிய மனம் தன்னைக் கண்டு புன்னகைக்கின்றார்களோ அவர்களிடம் வெடித்து அழும்.
யாருமற்ற அந்நிய தேசத்தில் தன் வலியெல்லாம் தாங்கி நின்றவனுக்கு அந்த வேடுவனின் முகபுன்னகை பெரும் ஆனந்தம் கொடுத்தது.
வேடனாகிய சிவன் அவனை நோக்கி “என்னகாரியமாக இங்கு வந்தாய், உன் முகம் மிகுந்த கவலையாய் இருப்பது ஏன்” எனக் கேட்டார்.
அவ்வளவுதான் அவன் வைகை பெருகி ஓடியதை போல் கண்ணீர் கொட்டி அழுதான்.
“ஐயா நான் அவந்தி நாட்டை சேர்ந்தவன். நல்ல பெரும் குலத்தில் அந்தணர் மரபில் வந்தவன். ஆனால், போதையும் காமமும் என் வாழ்வில் இரவும் பகலுமாயின.
என் அன்னையே என் எல்லா பாதகங்களுக்கும் உதவினாள். அதனால் தந்தையினைக் கொல்லும் அளவு வந்து கொன்றும் போட்டேன். பின் தாயினைக் கொள்ளையரிடம் பறிகொடுத்தேன்.
இப்போது யாருமற்ற அனாதையாய் கொடிய பிரம்மஹத்தி தோஷத்துடன் அலைகின்றேன். மரணம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கின்றது, மனம் செத்து நீண்டநாளும் ஆகிவிட்டது.
நான் செய்த பாவமெல்லாம் என்னை மறுபடி பிறக்கவைக்கும். அதையெல்லாம் இப்பிறப்பிலே கழித்துவிட்டு செல்ல சிவாலயம் தோறும் சுற்றுகின்றேன் .
ஐயா, நான் வாழத் தகுதியற்றவன். ஆனால், என் பாவமெல்லாம் தீர்ந்து செத்துவிட விரும்புகின்றேன், நிம்மதியான சாவை விரும்புகின்றேன்” எனக் கதறினான்.
வேடன் அவனை அருகில் அழைத்துச் சொன்னார், வேடுவச்சி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
வேடுவர் சொன்னார், “அப்பனே நீ செய்த பாவமும், பிரம்மஹத்தி தோஷமும் இந்த தலத்தில்தான் தீரும். வேறு எங்கும் தீராது. அதனால் சரியான இடம் தேடி வந்திருக்கின்றாய். உன் பாவத்தை உணர்ந்துவிட்டதால் ஈசன் உனக்கு அருள் செய்வார்.
நீ செய்யவேண்டியது எல்லாம் காலை சூரியனுக்கு முன் எழுவாய், அதிகாலையிலே அருகம்புல் பறித்து பசுவுக்கு இடுவாய்.
பின் ஆலவாயின் அபிஷேகநீர் அந்த நிருமாலிய நீர் விழும் தொட்டியில் இருந்து நீர் எடுத்து நீராடு. காலை, மதியம், அந்தி என மூவேளையும் அதை செய்யக்கடவாய், 108 முறை அங்கப் பிரதட்சணம் செய்து வழிபடு.
நீ பிச்சை எடுக்கவேண்டும். அதுவும் வெறும் கையால் பிச்சை எடுத்து ஒருவேளைதான் உண்ண வேண்டும். சிவனடியார்க்குச் சேவைகள் செய்யவேண்டும், இதனைத் தொடர்ந்து செய்து வா, உன் சாபம் விரைவில் தீரும்” எனச் சொல்லி அனுப்பினார்.
அப்போது அன்னை மீனாட்சி கேட்டாள், “அவன் எவ்வளவு பெரிய பாவி, அவன் ஆசைக்குப் பலியானவன், பஞ்சமா பாதகம் அனைத்தும் செய்தான், காமத்தில் கரைந்து தாயினையே துணைக்கு அழைத்தவன்.
பெற்ற தந்தையினையே கொன்றவன். அதுவும் அந்தணன் என அறிந்தும் தந்தையினைக் கொன்றவன், அவன் சாக வேண்டிய பாவம் செய்தவன், அவனிடம் ஏன் இரக்கம் காட்டினீர்கள்?” என்று சற்றே கோபப்பட்டாள்.
சிவன் சொன்னார், “தேவி, அவன் செய்ததெல்லாம் மகாபாவம் சந்தேகமில்லை. ஆனால், அவன் தன் தவறை உணர்ந்து கொண்டான். அவன் மன்னிப்பு தேடி வரும்போது என்ன செய்யமுடியும்.
புகலிடம் என வந்துவிட்டான் அதனால் மன்னித்துவிட்டோம்” என்றார்.
“உங்கள் கருணையே பெரும் கருணை, எல்லையில்லாப் பெரும் அன்பை கொண்டவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள், கொடிய பாவிகளும் உங்களை அண்டினால் மன்னிப்பு உண்டு அல்லவா” எனச் சொல்லிப் புன்னகைத்தாள்.
அந்தப் பாவி சிவன் சொன்னபடி அவ்வண்ணமே செய்தான். அபிஷேக நீர் விழும் தொட்டியில் மூவேளை நீராடினான், அருகம்புல்லை பசுக்களுக்கு காலையிலே கொடுத்தான், அங்கப் பிரதட்சணம் செய்தான், 108 முறை செய்தான்.
சிவனடியார்க்கு பெரும் சேவைகள் செய்தான், பிச்சை எடுத்து ஒரு யோகி போல் வாழ்ந்தான். அடுத்த மூன்று மாதத்தில் அவன் பாவமெல்லாம் தீர்ந்து நலம் பெற்றான்.
அவன் உடல் பழையபடி ஜொலித்தது. அவன் புதிய பிறவி எடுத்தது போல் புதுவாழ்வு அடைந்தான். அவன் தோஷமெல்லாம் அவனைவிட்டு நீங்கிற்று.
சாபம் தீர்ந்தவன் பெரும் அடியாராக மதுரையில் வாழ்ந்தான். பக்தியின் உச்சத்தில் பல பாடல்களை வடமொழியில் எழுதினான். தீரா அன்புடன் சிவபக்தனாய் வாழ்ந்து அங்கே முக்தி அடைந்தான்.
இந்தத் திருவிளையாடல் லௌகீக தத்துவம், ஆன்மீக தத்துவமும் நிரம்பச் சொல்கின்றது.
அந்தப் பாவி தன் பாவத்தை உணர்ந்து வந்தான். அவன் மனதை கண்ட சிவன் அவனை அவன் வாயிலே பாவங்களை அறிக்கையிட வைத்தார்.
அதுவும் அவர் ஒரு யோகியாக சிவனடியாராக ஏன் சிவனாக வந்து அவனைச் சோதிக்கவில்லை மாறாக ஒரு வேடுவர் கோலத்தில் வந்து நின்றார்.
அதாவது வேடன் என்பவன் கொடுந்தொழில் புரிந்தவன் இழிந்தவன் எனக் கருதப்பட்ட காலமது. ஒரு இழிந்தவனிடமே தன் பாவத்தை கொட்டுமளவு அவன் தன் தவறை உணர்ந்து திருந்தியிருந்தான்.
தன் பாவமெல்லாம் உணர்ந்து அதை கொட்ட வழியின்றி திரிந்தவன் அதை வேடனிடம் கொட்டினான்.
பின் வேடனாக நின்ற சிவன் பரிகாரங்களைச் சொன்னபோது அவன் சந்தேகிக்கவில்லை. கொடும் தொழில் செய்யும் வேடனுக்கு சிவபூஜை, பாவபரிகாரமெல்லாம் எப்படி தெரியுமென சந்தேகிக்கவில்லை மாறாக வேடன் சொன்னதும் அதைத் தீவிரமாகப் பின்பற்றினான்.
எவ்வளவு நாள், எவ்வளவு மாதம் வருடம் என்றெல்லாம் அவன் கேள்வி கேட்கவில்லை, பரிகாரம் சொன்னதும் உடனே செய்தான்.
பாவங்களிலே பெரும் பாவம் செய்தவனையே அன்புமிக்க சிவன் அரவணைத்துக் கொண்ட நிஜம் இது, என்ன பாவம் செய்தாலும் மனம்வருந்தி ஆலவாயனிடம் முறையிட்டால் தீரும்.
இந்தத் திருவிளையாடல் சொல்லும் போதனைப் பல உண்டு.
முதலாவது, எவ்வளவு கொடிய பாவம் என்றாலும் சிவனிடம் மன்னிப்பு உண்டு. ஆனால், பாவத்தை மனமார உணர்தல் வேண்டும் என்பது.
எல்லாப் பாவங்களும் பரிகாரத்தால் தீரும் என்பது அடுத்தப் போதனை.
பசுவுக்கு உணவு கொடுத்தல் பெரு பாவபரிகாரம், காலையில் பசியோடு இருக்கும் பசுவுக்கு அருகம்புல் கொடுப்பது எல்லாப் பாவங்களையும் போக்கும்.
அபிஷேக நீர் என்பது பாவம் சாபம் போக்கும் பெரும் விஷயம். அதனை வீணாக்குதல் கூடாது.
(அபிஷேக நீர் என்பது பெரும் பாவம் போக்கும் மருந்து, அக்காலங்களில் அபிஷேக நீர் கோவில் தீர்த்தங்களில் கலக்கப்படும் இரகசியம் இதுதான், இது சாபம் பாவம் நோய் என எல்லாமும் அன்று தீர்த்தது.
இப்போது அது இல்லை என்பது பெரும் வலி, நிச்சயம் அபிஷேக நீரை ஒரு தொட்டியில் சேர்த்து மக்களுக்கு கொடுத்தலே நன்று.
அன்று அந்த வழக்கம் இருந்திருக்கின்றது, ஒருவனுக்கு சாபம் தீர்ந்திருக்கின்றது.)
பிச்சை எடுத்தல் என்பது கர்மத்தை சாபத்தை ஒழிக்கும் பெரும் வழி. பிச்சை எடுக்க எடுக்க கர்மம் கழியும் கர்வினை அகலும். அதனால் திருப்பணிகளுக்கு உதவி கேட்பது கோவில்களுக்கு நிதி சேகரிப்பது எல்லாம் ஒருவனின் கர்மத்தை கழிக்கும்.
சிவனடியார் சேவை பெரும் புண்ணியம் அதுவும் பாவத்தை அகற்றும். கோவில்களில் அங்கபிரதட்சணம் என்பதும் பாவம் தீர்க்கும் காரியம்.
எந்தப் பாவியானாலும் தன் பாவத்தை உணர்ந்து சிவபாதம் அடைந்து முழு மனதுடன் திருப்பணி செய்தால் முழு வழிபாடு செய்தால் அவன் பாவம் மன்னிக்கப்படும் என்பது இந்தப படலத்தின் போதனை.
கள்ளும் காமமும் ஒரு ஆத்மாவினை அழித்துவிடும். பெரும் பாவத்தில் தள்ளிவிடும். இரண்டுமே மனதையும் உடலையும் தள்ளி ஒருவனை மயக்கிவிடும், பிறப்பை வீணாக்கிவிடும்.
கள்ளும், காமமும் முக்தி அடைவதற்கும் ஞானத்துக்கும் மட்டுமல்ல மனிதனாக ஒருவன் வாழ்வதற்கே பெரும் எதிரிகள். மதுவும் மாதுவும் ஞானியரையே கவிழ்த்துவிடும் ஆபத்து எனும் போது சாமான்யர் நிலைதான் என்ன?
இதைத்தான் மிகுந்த ஞானமாக இந்தத் திருவிளையாடல் போதித்து எச்சரிக்கின்றது,.
இன்னும் ஆன்மீக தத்துவங்களையும் அது சூட்சுமமாகப் போதிக்கின்றது.
ஒரு ஆத்மா மாயைக்கு பிறக்கின்றது, மாயத்தாயின் வழிகாட்டலில் எல்லா மாயைகளிலும் சிக்கி வீழ்கின்றது, அப்படியே மனசாட்சியினைக் கொல்கின்றது.
மனசாட்சியும் கொன்று மாயையில் வீழ்ந்த ஆத்மா மிருகமாகின்றது. எப்போது அது தன் தவறை உணர்ந்து சிவபாதம் வருமோ அப்போது கர்மவினை தீர்ந்து முக்தி அடைகின்றது.
சிவன் அன்பானவர், அவர் எல்லாப் பாவிகளுக்கும் மன்னிப்புக் கொடுக்கின்றார். முழு மனதுடன் எவன் தன் பாவங்களை எண்ணி கலங்கி வந்து அவரிடம் அடைக்கலமாகின்றானோ அவனுக்கு சிவன் முழு அரவணைப்பு தந்து பாவத்தைப் போக்கி நலமருளுகின்றார்.
அந்த அந்தணர் மகன் வழிபட்ட தீர்த்தத் தொட்டி அவன் நீர் எடுத்து நீராடிய தீர்த்தத் தொட்டி இன்றும் மதுரை ஆலயத்தில் உண்டு.
இரண்டாம் பிரகாரத்தின் வடமேற்கு பக்கம் கரியமாணிக்கம் சந்நிதிக்கு முன்னால் உண்டு. திருவிளையாடலின் சாட்சியாக உண்டு.
ஒவ்வொரு மனிதனும் மனதால் உடலால் ஏகப்பட்ட பாவங்களைச் செய்கின்றான். அந்தப் பாவங்களில் பல சட்டத்தால் தண்டிக்கப்படமுடியாததாக இருந்தாலும் அவை மனதில் அழுத்திக்கொண்டிருக்கும்.
ஒவ்வொருவருக்குள்ளும் வெளி சொல்லமுடியா ஓராயிரம் வலிகள் உண்டு, பாவத்தின் ரணங்கள் உண்டு.
ஆலவாயன் சந்நிதி செல்லும் போது அதனை அவனிடம் தெரிவியுங்கள். பாவத்தையெல்லாம் அவன் முன் கண்ணீருடன் கொட்டுங்கள். அவன் சந்நிதிமுன் வீழ்ந்து வணங்கிவிட்டு அபிஷேக தீர்த்தம் வாங்கி தலையில் தெளித்துக் கொள்ளுங்கள்.
அந்தக் கரியமாணிக்கம் சந்நிதி அருகே அமைந்திருக்கும் அந்த அக்கால நீர்தொட்டி நிருமேலி நீர் தொட்டி எனும் அபிஷேக நீர் தொட்டியினைத் தொட்டு வணங்குங்கள்.
அந்த அந்தணனுக்குச் செய்த அத்தனைச் சாபங்களையும் சிவன் நீக்கித் தருவார்.
நீங்கள் மதுவிலோ மாதுவின் ஸ்பரிசத்திலோ வாழ்க்கையினைத் தொலைத்தவர்களாக இருக்கலாம், எல்லாம் இழந்து தெருவோரத்துக்கு வந்தவராக இருக்கலாம்.
எல்லாமும் இழந்து இனி சாவது ஒன்றே வழி எனப் புழுதியில் கிடப்பவராகவும் இருக்கலாம்.
யாராக இருந்தாலும் இந்த மதுரை சிவனை வந்து பணியுங்கள். அவன் சந்நிதியில் எல்லாப் பாவமும் அறிக்கை இடுங்கள், அந்த வல்ல சிவன் தன் அன்பால் உங்களை அரவணைப்பார், உங்கள் பாவம் சாபமெல்லாம் தீரும்.
எல்லாம் அந்நொடி மாறத் தொடங்கும். பின், ஏதாவது ஒரு சிவப்பணியினை எங்கேனும் செய்யத் தொடங்ங்குங்கள். எதையெல்லாம் பாவத்தால் இழந்தீர்களோ அதெல்லாம் பன்மடங்கு மேலாக சிவனருளில் உங்களைத் தேடி வரும். இது சத்தியம்.