திருவிளையாடல் புராணம் 41 : உக்கிரபாண்டியன் வேல் எறிந்த படலம்.
திருவிளையாடல் புராணம் 41 : உக்கிரபாண்டியன் வேல் எறிந்த படலம்.
அப்போது பாண்டிய நாட்டை உக்கிரபாண்டியன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். இவன் எல்லா உலகிலும் வல்லமை பெற்றிருந்தான். ஒருவகையில் சோழ சக்கரவர்த்தி முசுகுந்த சோழனின் சாயலில் இவன் வீரமும் செல்வாக்கும் எல்லா உலகிலும் கொடிகட்டிப் பறந்தது.
தர்மப்படி வேதப்படி மிகச் சிறந்த ஆட்சியினைப் பாண்டியன் கொடுத்துக் கொண்டிருந்தான். சாஸ்திரப்படி எல்லா யாகங்களையும் ஹோமங்களையும் அவன் செய்தான். எல்லா விதமான பூஜைகளும் அவன் நாடெங்கும் நடந்தது.
அவன் தொண்ணுற்றாறு அசுவமேத யாகங்களைச் செய்து பெரும் பலம் பெற்றிருந்தான். இன்னும் சில முறை அந்த யாகங்களை அவன் செய்தால் இந்திரப் பதவியினை அவன் அடையும் வழி இருந்தது.
பாண்டியன் இந்திரபதவிக்கெல்லாம் ஆசைகொள்ளவில்லை. யாகம் செய்வது மன்னனின் கடமை எனக் கடமையினை மட்டும் செய்து கொண்டிந்தான். ஆனால், இந்திரனுக்கோ மனதுக்குள் பெரும் அச்சம் வந்தது.
பாண்டியன் தன் இடத்திற்கு ஆசைகொள்வதாகக் கருதினான். இன்னும் சில காலங்களில் பாண்டியன் தன் இடத்திற்கு வந்துவிடக் கூடும் எனக் கருதியவன் அதைத் தடுக்க பெரும் வழிகளில் சிந்தித்தான்.
பாண்டியனின் பலம் அவனின் வீரம், பக்தி, சேனை இதனை எல்லாம் விட அவனின் தர்ம ஆட்சி. வேதங்களைக் காத்து நின்ற பலம் இவை எல்லாம் அவனைப் பெரும் காவலில் வைத்திருந்தன.
இதனால் அவனை யுத்தத்திலோ வேறு வகையிலோ வெல்லமுடியாதபடி தர்மம் அவனுக்குக் காவல் இருந்தது. வேதபலம் இருந்தது.
எப்படி அவனை வீழ்த்துவது எனச் சிந்தித்த இந்திரன் புன்னகைத்தான். ஆம். ஒரு வழியினை அவன் கண்டுகொண்டான். அது நுணுக்கமான வழி.
அதாவது, யாகங்களை ஹோமங்களைச் சரியாகப் பாண்டியன் செய்ததால் அவன் நாட்டில் மாதம் மும்மாரி பொழிந்தது. அது யாகத்தின் பலனாய்க் கிடைத்தது. இதனைக் குறைக்க தேவர்களாலும் முடியாது.
ஆனால், இதை அதிகப்படுத்தினால் பெரும் வெள்ளம் கொடுத்தால் அது அதீத பலன் என வரும், அந்தப் பலன் பெரும் சிக்கலையும் கொண்டுவரும்.
யாகங்களால் எப்படி மழைபெற்று பாண்டியன் நாட்டைக் காத்தானோ அதே மழையால் பாண்டியனை சிக்கலில் தள்ள திட்டமிட்டான் இந்திரன்.
அதன்படி வருணனை அழைத்துப் பாண்டிய நாட்டை வெள்ளத்தில் மூழ்கடிக்கச் சொன்னான். இந்திரனின் கட்டளைக்கு ஏற்ப வருணன் பெருமாரி பொழிந்தான்.
மழை பெரிதாக கொட்டத் தொடங்கியது. பாண்டியனோ இது வழமையான மழை என நினைந்து அவன் போக்கில் இருந்தான், அந்த இரவில் வைகை பொங்கிற்று. பெரும் வெள்ளம் மதுரையினை சூழ்ந்து கொண்டிருந்தது.
மாபெரும் வெள்ளம் மதுரையினை அழிக்க வந்த நேரம் மன்னன் அதை அறியவில்லை. ஆனால், சிவபெருமான் அதனை அறிந்திருந்தார்.
அவர் சித்தர் வடிவிலே அவன் கனவில் வந்து, “பாண்டியா, பெரும் ஆபத்து மதுரையினைச் சூழ்ந்து அழிக்க இருக்கின்றது. நீ உன் தகப்பன் கொடுத்த வேலுடன் வைகை கரைக்குச் செல்” எனச் சொன்னார்.
கனவினைக் கண்ட பாண்டிய மன்னன் திகைத்து எழுந்தான். உடனே குளித்துத் தயாராகி சிவனை தியானித்து திருநீறு பூசி கொண்டு தன் தகப்பன் கொடுத்த வேலையும் எடுத்துக் கொண்டான்.
அவன் தகப்பனாராகிய சுந்தரபாண்டியன் தேவர்களோடு பெரும் யுத்தம் புரிந்தவர். அதனால் தன் மகனுக்கும் இந்திரன், வருணன், மேருமலை ஆகியவற்றால் ஆபத்து வரும் என உணர்ந்து செண்டு எனும் ஆயுதம் வேல், ஒரு வளை ஆயுதம் என மூன்றையும் கொடுத்துவிட்டே சென்றார்.
அந்த வேலை எடுத்து வைகை பக்கம் வந்த மன்னனுக்குப் பெரும் அதிர்ச்சிக் காத்திருந்தது. காரணம், அங்கே வெள்ளம் கால் வைக்க முடியா அளவு பெருகி ஓடியது, மன்னனை மேடான இடம் ஒன்றில் நிறுத்தினார்கள் காவலர்கள்.
மன்னன் அங்கிருந்து வெள்ளத்தைக் கண்டான். வைகையில் வந்த பெரும் வெள்ளம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் கொட்டும் கனமழை, ஊழிக்கால வெள்ளம் போல சூழ்ந்த பெரும் மேகங்கள் என நிலைமை கடுமையாக இருந்தது.
மன்னன் பார்த்துக் கொண்டிருந்த நேரம் கடல் போல் பொங்கியது வைகை, பெரும் அலைகள் எழ ஆரம்பித்தன, அந்தப் பெரும் அலைகள் மாட மாளிகைகளைக் கூட அசைத்துப் பார்த்தன.
மன்னன் கலங்கி நின்றான். வேல் எதற்குக் கொண்டுவர சித்தர் கனவில் சொன்னார் என அவனுக்குப் புரியவில்லை.
எதிரிகள் என்றால் வேலை ஏவிவிடலாம், இது மழைவெள்ளம் எனும்போது என்ன செய்வது எனத் தெரியாமல் கலங்கி நின்றான்.
அந்நேரம் அவன் கனவில் கண்ட சித்தர் அங்கு வந்தார்,வந்தவர் “மன்னா இந்த வெள்ளம் மதுரையினை அழிக்க வந்த வெள்ளம், இதன் காரணம் நாம் அறிவோம்.
நீ உன் வேலை அந்த வெள்ளத்தின்மேல் எறி என்றார்”, சொன்னவர் வேலை வாங்கி தன் சுருக்கு பையில் இருந்த திருநீற்றை எடுத்து அதன் மேல் பூசி அவன் கையில் கொடுத்தார்.
மன்னன் சிவனை நினைந்து வணங்கி வேலை வீசினான். பெரும் அலைகளை வீசிப் பெரும் இரைச்சலுடன் பொங்கி வேல் வெள்ளத்தின் மேல் பட்டதும் அங்கு பெரும் வெப்பம் தோன்றிற்று.
அதுவரை ஊழிக்கால வெள்ளம் போல் பொங்கிய இடத்தில் ஊழித் தீ போல் பெரும் உஷ்ணம் உருவாயிற்று. அந்த உஷ்ணத்தின் முன் வெள்ளம் ஆவியாகத் தொடங்கியது.
பெரும் வெப்பம் மின்னல் வேகத்தில் நீரை உறிஞ்சியது, ஒரு துளி இல்லாமல் உறிஞ்சிற்று. வெள்ளம் அகன்றது. வானில் கருமேகங்களும் கலைந்தன, வைகையும் வழமையானது.
அந்த நம்பமுடியா அதிசயத்தை கண்டு மன்னன் திகைத்தபடி அந்தச சித்தரை திரும்பிப் பார்த்தான். அவரோ மறைந்துவிட்டார்.
அந்நேரம் வானத்தில் மின்னல் வெடிடிற்று. மறுபடியும் மழையோ என அஞ்சி மன்னன் வானம் பார்த்தான், அங்கே விடைமேல் தேவியுடன் ஈசன் அவனுக்குக் காட்சியளித்தார்.
மன்னன் பெரும் மகிழ்வுடன் ஆனந்தத்துடன் சிவபாதம் பணிந்தான். எல்லையில்லா உவகையுடன் அவரைத் தரித்து ‘எம்பெருமானே” எனக் கதறி வீழ்ந்து பணிந்தான், அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி நின்றது.
இதுதான் உக்கிரபாண்டியன் வேல் எறிந்த படலம். திருவிளையாடலில் இது ஒரு முக்கிய சம்பவம், இது சொல்லும் தத்துவங்கள் ஏராளம்.
முதாலவது, வேதங்கள் செழித்த நாட்டில் யாகங்களும் ஹோமங்களும் செழித்த நாட்டில் மழை தவறாமல் பெய்யும் என்பது. வேதவழி வாழ்வு எவ்வளவு முக்கியம் என்பதை இந்தக் காட்சி சொல்கின்றது.
எல்லாவழியிலும் சரியானதை செய்து முறையாக பக்தியாக கடமை தவறாமல் செய்பவனைச் சோதிக்க வழியின்றி இந்திரன் திகைத்திருக்கின்றான், அவனால் வறுமையினை அனுப்பமுடியவில்லை. வறட்சி தரமுடியவில்லை.
போர் கூட செய்யமுடியவில்லை.
அவன் எது உக்கிரனின் பலமோ அந்தப் பலத்தைக் கொண்டே சோதித்தான். மழை பொழிவது அவன் பலம் என்றால் அந்த மழையினை நிரம்ப கொடுத்து அழிக்க முனைந்தான்.
எது நம் பலமோ அதுவே நம் பலவீனமாகிவிடும், இதிலிருந்து தப்பிக்க எப்போதும் விழிப்பு நிலை முக்கியம்.
இங்கு வரும் ஆபத்தை அறியாமல் மன்னன் அவன் போக்கில் இருந்தான். அவனுக்குப் புரியவில்லை, இப்படியும் ஒரு சதி தனக்கு நடக்கும் என அவன் அறிந்திருக்கவில்லை.
மானிடன் அறியாத எல்லாவற்றையும் சிவன் அறிந்திருக்கின்றார். அவர் தன் பக்தனைக் காக்கின்றார் என்பதையும் காட்சி சொல்கின்றது.
இந்திரன் தன் பக்தனை வெள்ளத்தால் அழிக்க வரும்பொது சிவன் அதனை அக்னியால் வெப்பத்தால் விரட்டினார். வெம்மை அந்த மாய நீரை உறிஞ்சி ஆவியாக்கி பக்தனைக் காத்தது.
இது தீர்க்கமான ஒரு மறை தத்துவம்.
அதாவது, சுந்தரபாண்டியன் ஒரு வளை, ஒரு செண்டு, ஒரு வேல் என மூன்று ஆயுதம் கொடுத்து இந்திரன், வருணன், மேருமலை என மூவரையும் எதிர்க்கச் சொன்னான் என்பது முக்குணங்களையும் மூன்று மலங்களையும் குறிப்பது.
இரஜோ குணம், சத்வ குணம், தாம்ச குணம் எனும் மூன்றும் ஆணவம், கர்மம், மாயை என்பதை ஒழித்து கடைசியில் இரஜோ குணம் தாம்ச குணம் இரண்டையும் சத்வ குணத்தால் ஒழித்து, கடைசியில் சத்வ குணத்தையும் ஒழிப்பதே ஞானமுக்தி நிலை.
இங்கு இந்திரன் வருணனை அனுப்பினான் என்பது மாயையாகின்றது. அதை தாம்ச குணத்துடன் அதாவது ஒருவித மயக்கத்தில் அதை எதிர்கொள்ளாமல் தன் போக்கில் இருந்தான்.
சிவனே வந்து அவன் தாம்ச குணத்தை உடைத்து அழித்து அவனைக் காத்தார். சிவனை நம்பினால் முக்குணத்தை ஒழித்து மும்மலங்களை அழித்து நம்மை காப்பார் ஞானம் தருவார் என்பது திருவிளையாடலின் தத்துவம்.
மிகச் சிறிய காட்சி என்றாலும் இது ஆழமான தத்துவத்தை அழகாகச் சொல்கின்றது.
சிவனை முழுக்க நம்புவோரை அவர் முழுக்க கண்காணிக்கின்றார். தன் பக்தனுக்கு அவனை அறியாமல் வரும் ஆபத்துக்களை அவரே காத்து வருகின்றார்.
சிவனை நம்புவோர் எந்த ஆபத்திலும் சிக்கமாட்டார்கள். எல்லா வகையிலும் சிவனே காத்து நின்று வருவார், உக்கிரபாண்டியன் எனும் பக்தனை அப்படிக் காத்தார்.
ஒரு மன்னன் சரியாக இருக்கும் போது நாடு வாழ்கின்றது, குடும்பத்தில் ஒருவன் சரியாக இருக்கும் போது குடும்பம் வாழ்கின்றது எனும் வகையில் குடும்பத்தில் முக்கியமானவர்கள் சிவனை முழுக்க தேடும் போது முழுக் காவலையும் தருவார்.
யோக வாழ்விலும் இந்தக் காட்சி சூசகமாக வரும்.
மாய ஆசைகள் பெரும் வெள்ளமாய் ஒருவனை சூழும் போது, மாய மாச்சாரங்கள் அவன் பிறவியினை அழுத்தி மாய ஆசைகளில் வீழ்த்தும் போது உடலில் இருக்கும் குண்டலி சக்தியினை எழுப்பினால் அந்த ஞான அக்னியினை எழுப்பினால் இந்த மாயைகள் அற்றுப்போகும், மாய வெள்ள்ம் வற்றிப்போகும் என்பதைச் சூசகமாகச் சொல்லும் காட்சி இது.
சிவன் சிவவடிவில் வந்த தத்துவம் அதுதான்.
இந்திரன் சுகபோகங்களின் குறியீடு, மாயைகள் பெரும் ஆசை மயக்கங்கள் சுகங்களைத் தரும்போது யோக அக்னியினை எழுப்பினால் அந்த மாயைகள் அகலும் என்பதைச் சொல்லும் தத்துவம் இது.
சுழுமுனை நாடி எழும்பி அக்னி எழும்பினால் ஞானம் பெருகும் அங்கே மாயைகள் அகலும் என்பதை இக்காட்சி மூலம் சிவன் போதிக்கின்றார்.
மதுரை சொக்கநாதனை வணங்குங்கள்; தவறாமல் வணங்குங்கள்; அப்போது உங்களுக்கு வரும் ஆபத்துக்களை எல்லாம் நீங்கள் அறியாத வஞ்சகம் சூது இன்னும் எல்லாச் சதிகளிலும் ஆபத்துக்களிலும் இருந்து அவரே உங்களைக் காப்பார். இது சத்தியம்.