திருவிளையாடல் புராணம் 42 :ஏழு கடல்கள் வாவியில் கலந்த படலம்.
திருவிளையாடல் புராணம் 42 :
ஏழு கடல்கள் வாவியில் கலந்த படலம்.
அது மதுரையில் மீனாட்சியும், சொக்கநாதரும் வாழ்ந்து கொண்டிருந்த காலம். அதாவது, தடாதகை பிராட்டியாரோடு மதுரையில் பரிபாலனம் செய்து கொண்டிருந்தார் சொக்கநாதர்.
அவரைக் காணத் தேவர்களும், மாபெரும் ரிஷிகளும் மதுரைக்கு வந்து சென்றார்கள். ரிஷிகள், தவசிகள் ஓயாமல் வந்து கொண்டிருந்தார்கள். அப்படிக் கௌதம ரிஷி வந்திருந்தார்.
அவர் மகரிஷி, எல்லா ஞானமும் பெரும் தத்துவம் அறிந்திருந்தவர். அவருக்குத் தெரியாதது என ஏழு உலகிலும் எதுவுமில்லை. எல்லாரும் தம்முடைய சந்தேகங்களை அவரிடமே கேட்பார்கள்.
அப்படி மீனாட்சியின் தாய் காஞ்சனமாலையே ரிஷிகளுக்குப் பணிவிடை செய்யும் பெரும் காரியத்தை ஏற்றிருந்தார். அவள் சாமானியப்பெண் அல்ல. வரமிருந்து தேவியினை மகளாகவும், சிவனை மருமகனாகவும் பெற்ற பெரும் பாக்கியசாலி.
அவள் கௌதம முனிவரை மிக நன்றாக உபசரித்தாள். அவளின் சேவையில் இரங்கிய கௌதம முனி அவளுக்கு என்ன வேண்டும் என வினவினார்.
அவளோ “சுவாமி பிறவிப் பந்தத்தில் இருந்து இந்தக் கர்ம வினையில் இருந்து விடுபட எந்த வழிபாடு சிறந்தது?” என வினவினாள்.
காரணம், அவள் பலவகையான ரிஷிகளை, வேதாந்திகளை, ஞானிகளை, சாஸ்திரிகளை, வேதம் அறிந்தவர்களை, சித்தர்களை அனுதினமும் கண்டு கொண்டிருந்தாள். ஆளாளுக்கு ஒரு வழியினைப் பின்பற்றினார்கள்.
இதனால் எது சரி என அவரையே வேண்டினாள், அவர் தன் திருவாயினால் உரைத்தார்.
“மகளே, நீ சிவனையே மருமகனாகவும், தேவியினை மகளாகவும் அடைய வரம்பெற்றவள். உன்னைப் போல் வரம் பெற்றவள் யாருமில்லை.
அப்படிப்பட்ட நீயே பந்தப் பாசங்களை அறுக்கும் வழி கேட்பதால் உனக்கு நான் உரைப்பது என் கடமையாகின்றது.
உனக்குத் தவத்தின் மூன்றுவித பிரிவுகளை உனக்குப் போதிப்பேன். அது மானதம், வாசிகம், காயதம் என மூன்று உண்டு; மன அறம், நா அறம், உடல் அறம் என்றும் சொல்வர். இந்த மூவகைத் தவமே பிறவியினை உடைக்கும்.
பிற உயிர்களை நேசித்தல், தான தருமம் செய்தல், இடைவிடாமல் சிவனை மனதில் சிந்தித்தல், ஐந்து புலன்களையும் அடக்குதல், முழு உண்மையுடன் இருத்தல் என வாழ்ந்து இறைவனை மனதால் அடைவது மானதம்.
இடைவிடாது தியானம் செய்தல், மந்திரங்களை உச்சாடனம் செய்தல், வாசி எனும் மூச்சை கட்டுப்படுத்தி யோகத்தில் கலத்தல் என இறைவனை அடைதல் வாசிகம்.
காயம் எனும் உடலால் ஆலய தரிசனங்களைச் செய்தல், நடையாய் நடந்து திருயாத்திரை செல்லுதல், உடலால் திருப்பணி செய்தல், தீர்த்தங்களில் நீராடுதல், முழு வாழ்வையும் இறைவனைக்கு அர்ப்பணித்து வாழ்ந்து காயத்தால் இறைப்பணி செய்து அவனை அடைதல் காயதம்” என மூன்று வழிகளைச் சொன்னவர் அவளை உற்றுப்பார்த்து, “மகளே, நீ உன் உடலால் தடாதகை எனும் மீனாட்சியினைப் பெற்றாய், இந்த உடலே இந்த ஜென்மத்து கர்மா. அதனால் காயதம் எனும் வழி உனக்குப் பொறுத்தமானது. நீ புண்ணியநதிகள் கலக்கும் கடலில் நீராடினால் உன் ஜென்மவினை அகலும்” என்றார்.
அவள் அதை ஏற்றுக்கொண்டாள். அத்தோடு முனிவர் விடைபெற்றார்.
ஆனால், காஞ்சனமாலைக்கு எந்தக் கடலில் எப்படி நீராடுவது என்பது தெரியவில்லை. தன் மகளிடமே தன் விருப்பத்தைச் சொன்னாள். அதைக் கேட்ட சிவன், “தடாதகையே உன் அன்னைக்காக ஏழு கடல்களையும் இங்கே வரவழைக்கின்றேன்” என்றார்.
அதன்படி ஏழு கடல்களும் மதுரை ஆலயத்தின் கிழக்கே ஒரு குளத்தில் வந்து சேர்ந்தன. அவை ஏழும் ஏழு நிறத்தோடு நின்றன. காஞ்சனமாலையின் பெரும் விருப்பம் நிறைவேறிற்று.
இந்த இடம் இப்போதும் “எழுகடல் தீர்த்தம்” என அழைக்கப்படுகின்றது. இன்று அங்கே ஒரு ஆலயமும் காஞ்சனமாலை பெயரில் அமைந்துள்ளது.
நடந்த திருவிளையாடலின் சாட்சியாக அந்தக் காஞ்சனமாலை ஆலயம் தனியே இன்றும் சாட்சிச் சொல்லிக்கொண்டிருக்கின்றது.
இந்துமதம் ஏழு தீவுகளைச் சொன்னது. அவை ஜம்புத்தீபம், சாகத்தீபம், குசத்தீபம், க்ரெளஞ்சத்தீபம், சால்மலித்தீபம், கோமேதத்தீபம் மற்றும் புஷ்கரத்தீபம்.
உவர் நீர்க் கடல் சூழ்ந்தது ஜம்புத்தீபம்; பாற்கடலால் சூழப்பட்டது சாகத்தீபம்; தயிர்க்கடலால் சூழப்பட்டது குசத்தீபம்; நெய்க்கடல் சூழ்ந்தது கிரௌஞ்சத்தீபம்; கருப்பஞ்சாற்றுக் கடல் சூழ்ந்தது சால்மலித்தீபம்; தேன் கடலால் சூழப்பட்டது கோமேதகத்தீபம்; நன்னீர்க் கடலால் சூழப்பட்டது புஷ்கரத்தீபம்.
இப்படி ஏழு கடல்களையும் சொன்னது; உவர் நீர், தேன், நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச் சாறு என ஏழுவகைக் கடலைச் சொன்னது. சப்த சாகரங்களும் தீவுகளும் இவை.
இவை எல்லாம் அந்த யுகத்தில் மானுடர்களால் அடையும் இடமாக இருந்தன. இப்படிப்பட்ட கடல்களைக் கம்பனும் தன் பாடலில் பாடினான்.
“உப்பு தேன் மது ஒண் தயிர் பால் கரும்பு
அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்
துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்,
தப்பிற்று அவ் உரை இன்று ஓர் தனுவினால்”
என்பது அவன் பாடல், இது ஏழு கடலையும் சொல்கின்றது.
இந்த ஏழு கடல்களும் மொத்தமாக கூடிய இடம் இந்தத் தீர்த்தம். அந்த ஏழு கடல்களில் நீராடுவது ஏழு ஜென்ம பாவங்களையும் போக்கும்.
இந்த ஏழு கடல்களும் ஏழு ஜென்ம பாவங்களைப் போக்குபவை.
ஏழு ஜென்மம் என்றால் ஏழு முறை பிறப்பது அல்ல. பிறவி என்பது சுழற்சியானது. இங்கு முடிவில்லாதது. ஏழு ஜென்மம் என்றால் ஏழுவகை பிறப்பு.
தாவரங்கள் ஜென்மம், நீர்வாழ்வன ஜென்மம், பறவைகள் ஜென்மம், ஊர்வன ஜென்மம், விலங்கு ஜென்மம், மனிதர்கள் ஜென்மம் மற்றும் தேவர்கள் ஜென்மம் என ஏழு ஜென்மம்.
இந்த ஏழு ஜென்மத்தில் எந்தப் பிறப்பாகப் பிறந்து கர்மவினைகளைச் சேர்த்திருந்தாலும் இந்த ஏழு கடல்களிலும் நீராடினாலும் கழியும் என்பது போதனை.
தடாதகையின் தாயார் காஞ்சனமாலை இந்த ஏழு ஜென்மத்திலும் செய்த கர்மவினையினை மொத்தமாக இந்த இடத்தில் தீர்த்தார் சிவபெருமான்.
ஆம். இந்த இடத்தில் வழிபட்டால் ஏழு ஜென்ம பாவமும் தீரும். மதுரை செல்லும் போது இந்த காஞ்சனமாலை ஆலயத்தை காணத் தவறாதீர்கள்.
இங்கு வழிபட்டு பின் சொக்கநாதரை சந்திக்கச் செல்லும்போது முழு நலனையும் பெறுவீர்கள். எல்லாமே உங்களுக்குச் சரியாகும். ஏழு ஜென்ம வினையும் தீரும்.
இங்கு ஏழுகடல் என்பது யோக சாஸ்திரத்தில் ஏழு சக்கரங்களையும் குறிப்பது. இந்த ஆலயத்தில் வழிபட்டால் ஏழு சக்கரமும் துலங்கும். இங்கு வழிபட்டு மதுரை ஆலயத்தில் தியானித்தால் ஏழு சக்கரமும் துலங்கி பெரும் ஞான நிலை வாய்க்கும். இறை நிலை வாய்க்கும்.
அப்போது ஏழு வகை ஜென்மத்திலும் செய்த எல்லாப் பாவமும் தீரும் என்பதே இந்தத் திருவிளையாடலின் தாத்பரியம்.
மதுரைக்குச் செல்லும் போது இந்த “ஏழுகடல் தீர்த்தம்” ஆலயத்துக்குச் சென்று காஞ்சனமாலை சந்நிதியில் வணங்கிவிட்டு ஆலவாய் நாதனை தரிசியுங்கள்.
உங்கள் எல்லாப் பாவமும் தீரும். ஏழு வகை ஜென்மத்தில் செய்த எல்லாப் பெரும் கர்மவினையும் தீர்ந்து முழுப் பரிசுத்தமான ஆத்மாவாய் இறைவனை அடையுங்கள்.
மதுரையில் கௌதமர் எனும் மாமுனிவரால் வந்த ஆலயம் இது. அவரைக் கொண்டு சிவன் நடத்திய திருவிளையாடல் இது. அதனால் ஞானம் தேடுவோர் யோகம் செய்து இறைவனை அடைவோர்க்கு இந்த இடம் பெரும் வரம் அருளும்.
இது காஞ்சனமாலை எல்லா ஆலயதீர்த்தம், ஆலய திருயாத்திரை செய்யக் கிளம்பி அடைந்த இடம். அதாவது, பெரும் ஆலய யாத்திரைகள், தீர்த்த யாத்திரைகள், கடல் நதிகளில் நீராடும் புண்ணியங்கள் என எல்லாமும் இந்த இடத்தில் கிடைக்கும்.
நம்பிக்கையோடு வணங்கினால் அந்தக் காஞ்சனமாலைக்குச் செய்த அற்புதங்களைச் சிவன் உங்களுக்கும் செய்வார். எல்லா நதி தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும். ஏழு ஜென்ம பாவமும் போகும். இறைனை அடைதல் எளிதான பாதையாகும். இது சத்தியம்.