திருவிளையாடல் புராணம் 43 : வன்னிமரமும் கிணறும் லிங்கமும் சாட்சி சொன்ன படலம்.
திருவிளையாடல் புராணம் 43 : வன்னிமரமும் கிணறும் லிங்கமும் சாட்சி சொன்ன படலம்.
சோழநாட்டின் நாகப்பட்டினம் அருகே ஒரு வணிகன் இருந்தான். அவனுக்குத் திரண்ட சொத்தும் இருந்தது. ஆனால், பிள்ளை செல்வமில்லை. நெடுநாள் கழித்து அவனுக்கோர் மகவுப் பிறந்தது, அவளுக்கு இரத்னாவளி எனப் பெயரிட்டு வளர்த்தான்.
அவனுக்கோர் தங்கை உண்டு. அவளுக்கு அரதன குப்தன் என்றொரு மகன் இருந்தான். நாகப்பட்டினம் அருகே இருந்த வணிகனுக்கு தன் மகளை, தன் தங்கை மகனுக்குத் திருமணம் செய்துவைக்கும் எண்ணம் முதலிலே இருந்தது.
தங்கையும், தங்கைக் கணவனும் எதிர்பாராமல் இறந்துவிட்டார்கள். வியாபாரத்துக்காகச் சென்ற தங்கை மகன் அரதன குப்தன் மதுரையில் இருந்தான், விதிவசமாக அங்கு ஒரு திருமணத்தையும் செய்து கொண்டான்.
இது அறிந்தும் நாகப்பட்டின வணிகன் தன் தங்கை மகனே மணவாளன் என்பதில் உறுதியாக இருந்தான். வணிகர்கள் வாழ்வில் இதெல்லாம் அக்கால விதிவிலக்குகள்.
இந்நிலையில் எதிர்பாரா விதமாக இந்த வணிகனும் இறந்துவிட்டான், இரத்னாவளி அனாதையாக நின்றாள்.
மதுரையில் இருந்த அரதனகுப்தனோ இனியும் தாமதிக்கமுடியாது என மாமன் மகளைக் காண விரைந்தான். அவன் குடும்பம் மதுரையில் இருப்பதால் அவன் இங்கிருக்கும் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு இரத்னாவளியினைத் தன்னோடு மதுரைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தான்.
அதன்படி எல்லாச் சொத்துக்களையும் தங்கமாக்கிவிட்டு அவளையும் அழைத்துக் கொண்டு மதுரை திரும்பினான். அப்போது திருப்புறம்பியம் எனும் ஊருக்கு வந்தான். அது ஞானசம்பந்தர் ஒவ்வொரு ஊராகச் சென்று சைவம் தழைக்க வைத்துக் கொண்டிருந்த காலம், அப்படி அந்த ஊருக்கும் வந்திருந்தார்.
திருப்புறம்பியம் என்ற அந்த ஊரினை அடைந்தவன் அன்று அங்குத் தங்கிச் செல்ல முடிவெடுத்தான். அங்குள்ள குளத்தில் நீராடிச் சிவனை வணங்கி இரவில் உண்டு விட்டு உறங்கியபோது பாம்புக் கடித்து அவன் இறந்துபோனான்.
குருடாய் இருந்து கண்பெற்றுக் கண் இழந்த நிலைக்கு வந்தவள் சிவனிடம் கதறி அழுதாள். மிக மிக உருக்கமாகக் கதறி அழுதபோது பலர் வந்தார்கள், விஷயம் அறிந்து சம்பந்த பெருமானே வந்தார்.
அவர் அப்பெண்ணின் நிலை கண்டு கலங்கினார். அவள் கண்ணீர் உவந்து சொன்னாள், “சுவாமி, நான் எப்போதுமே அபாக்கியவதி. பெற்றோரை இழந்தேன், என் அத்தை மாமானை இழந்தேன். இப்போது என்னைத் திருமணம் செய்விப்பவரையும் இழந்தேன்.
இனி எனக்கு யார் உண்டு? நானும் சாகப்போகின்றேன், யாருமில்லா நிலையில்தான் இவர் மணமானவர் எனத் தெரிந்தும் சம்மதித்தேன், இவருமில்லை என்றபின் இனி நான் ஏன் வாழவேண்டும்?” எனக் கதறினாள்.
கருணையே உருவான சம்பந்த பெருமான் அவளுக்காய்ச் சிவனிடம் வேண்டினார், “சிவனே, இரு பெண்களின் வாழ்வு இந்தச் சாவால் நாசமாக வேண்டுமா? அமிர்தத்தோடு வந்த ஆலகால விஷத்தை விழுங்கி உலகை காத்தப் பரம்பொருளே, இந்த நாகத்தின் விஷத்தை எடுத்து இக்குடும்பத்தைக் காக்க உனக்கு சில நொடிகளாகுமோ? உம்மால் முடியாதது எதுவுமுண்டோ?” என மன்றாடி திருநீற்றை எடுத்து அவன் உடலில் பூசினார்.
சம்பந்தர் உருக்கமாக வேண்ட அவன் உடலில் இருந்த விஷம் முறிந்து அவன் உயிரோடு எழும்பினான்.
அப்பெண் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தாள். சிவனுக்கும், சம்பந்தருக்கும் நன்றி கூறினாள். அவனுக்கு நீர் கொடுக்கச் சொன்ன பெருமான். பின், கனிவோடுச் சொன்னார்.
“வணிகனே, நீ இப்போது உயிரைத் திரும்ப பெற்றிருக்கின்றாய், அதற்குக் காரணம் இவள் உன்மேல் கொண்ட அன்பு. வாழ்க்கையில் அடுத்தநொடி சிவனைத் தவிர யாரும் அறியமுடியாதது. இந்த இடத்தில் சிவனருளால் மீண்ட நீ இவளைத் திருமணம் செய்வதே, சரி. உடனே செய்” என்றார்.
அவன் மறுத்தான், “மதுரையில்தான் எனக்கு உறவினர்களும் சாட்சிகளும் உண்டு, சாட்சி இல்லாமல் எப்படித் திருமணம் செய்வது?” எனத் தயங்கினான்.
சம்பந்தர் சொன்னார், “மதுரையில் உனக்குச் சூழல் சரியாக அமையாவிட்டால் இப்பெண்ணின் வாழ்வு என்னாகும்? நீ இங்கே திருமணம் செய்” என வலியுறுத்தினார்.
“உங்களைத் தவிர இங்கு என்ன சாட்சி உண்டு? ” என வாதிட்டான் வணிகன்.
“இதோ இந்தக் கிணறும், இலிங்கமும், அந்த வன்னிமரமும் சாட்சி, நீ அவளை மணம் செய்” எனச் சம்பந்தர் சொல்ல அவனும் அவளைத் திருமணம் செய்து கொண்டான்.
சம்பந்தர் அவர்களை வாழ்த்தி சிவனிடம் மன்றாடிவிட்டுத் திரும்பினார்.
மதுரைக்கு அவளை அழைத்துச் சென்று குடியமர்த்தி அவளைத் தன் மனைவி என எல்லோருக்கும் சொன்னான். அவனின் திரண்ட சொத்து, வியாபார அதிகாரம் பெரிது என்பதால் யாரும் முதலில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், உள்ளூர அவள்மேல் வெறுப்புக் கொண்டனர்.
முதல் மனைவியின் உறவுகள் இவள் சொத்துக்குப் போட்டியாக வந்துவிட்டதாகக் கருதிப் பொருமின. சரியான காலத்தில் அவளை அடித்து விரட்டிவிட அல்லது கொன்றுவிட திட்டமிட்டன.
அவளோ உன்னதமான சிவபக்தை என்பதால் அனுதினமும் ஆலவாயன் கோவிலுக்கு வந்து பொற்றாமரைக் குளத்தில் குளித்து ஆலவாயனை வழிபட்டு நின்றாள்.
அந்நேரம் அந்த வணிகன் வியாபாரச் சம்பந்தமாய் வெளியூர் செல்லவேண்டி இருந்தது, அவன் சென்ற நேரம் முதல் மனைவியின் கும்பல் அவளைப் பாடாய்படுத்தத் தொடங்கிற்று.
அவள் கர்ப்பவதியாக இருந்ததால் விடவே கூடாது, வாரிசும் வந்துவிடக் கூடாது எனச் சொல்லி கங்கணம் கட்டி வந்து நின்று மிரட்டியது. “நீ தாலிக்கட்டிய மனைவி என்றால் சாட்சி எங்கே? யார் முன்னிலையில் திருமணம் செய்தீர்கள்? அப்படிச் சாட்சி இல்லாவிட்டால் நீ நெறி தவறியவள், காசுக்கு எதையும் செய்பவள்” என மிரட்டியது.
அவள் தனக்குத் திருமணம் செய்வித்தது சம்பந்தர் என எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள். பதிலுக்குப் பரிகாசமும் ஏளனமும் வந்ததே தவிர, பொய் சொல்கின்றாள் எனும் பட்டம் வந்ததே தவிர அங்கீகாரம் வரவில்லை.
விவகாரம் பஞ்சாயத்தானது. பாண்டிய நாட்டு பஞ்சாயத்தில் அவள் சில நாட்களில் திருமணம் நடந்த சாட்சியினைக் காட்டவேண்டும், இல்லையேல் இது முறையற்ற திருமணமாகும். அவளுக்கும், குடும்பத்துக்கும் தொடர்பில்லை என்றாகிவிடும் எனத் தீர்மானமானது.
அவள் மறுத்து வாதிட்டாள், “எங்கள் திருமணம் திருப்புயம்பிறம் ஆலயத்தில் வன்னிமரமும் அதனடியில் இலிங்கமும் கிணறும் சாட்சியாக நடந்தது, திருஞானசம்பந்த பெருமான் முன்னால் நடந்தது ” என்றாள்.
அவள் மனமுருகி தன் ஒரே நம்பிக்கையாய்ச் சொன்னதை கேட்ட கூட்டம் பரிகசித்து, “ஏனம்மா அவை எல்லாம் சாட்சியாகுமா?சம்பந்தர்தான் இங்கு வரமுடியுமா?” என்றது, அவள் உடைந்தே போனாள்.
அவள் பிறந்து வளர்ந்தது சோழநாடு, இங்கோ அவளுக்கு ஒரே அடைக்கலம் அவள் கணவன், அவனும் இல்லா நிலையில் இவள் தவித்துப்போனாள்.
இவள் அவனுக்கு உறவுமுறை மாமன் மகள் என்பதைக் கூட சோழநாட்டிற்கு ஆள் அனுப்பினால் நிரூபித்துவிடலாம், ஆனால் திருமணத்துக்கான சாட்சி, சம்பந்த பெருமானை எங்கே தேடி எப்படி வரவைப்பது?
அவள் கலங்கிப் போனாள். மதுரை ஆலவாயன் சந்நிதிக்கு வந்து “சிவனே, எனக்கு இங்கு ஒரே ஒரு ஆறுதலும் அடைக்கலமும் நீ, நீ மட்டுமே.
அங்குத் திருப்புயம்பிறத்தில் என் திருமணம் உன் ஆலய வன்னிமரமும், இலிங்கமும், கிணறும் சாட்சியாக வைத்து நடந்தது, நீ மட்டுமே சாட்சி. அந்தச் சம்பந்த பெருமான் சொல்லி அது நடந்தது. ஆனால் அவரை எங்கே தேடுவது?
நடந்த திருமணத்துக்கு நீ சாட்சி, எனக்கு நீ சாட்சி சொல்லவராவிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் நான் வைகையில் குதித்து சாவதைத் தவிர வேறு வழியில்லை என்றவள் சிவன் சந்நிதியில் பெரும் கண்ணீர் வடித்து அழுது அமர்ந்திருந்தாள்.
நீண்ட நேரமாக அமர்ந்தவள் இனி சாவே தீர்வு எனக் கிழக்கு வாசல் வழியாக வெளியேற முயன்றபோது “நில்” எனும் சத்தம் கேட்டது, ஆலயத்தின் வடகிழக்கில் பெரும் மின்னல் வெட்டிற்று.
அந்த மூலையில் சென்று பார் என ஒரு குரல் ஒலித்தது. அப்படியே அவள் அருகில் சென்று பார்த்தாள். அந்த மகா அற்புதம் நடந்திருந்தது.
திருப்புறம்பியத்ததில் அவள் எந்த வன்னிமரத்தடியில் இலிங்கத்தின் முன்னால் கிணற்றின் முன்னால் திருமணம் செய்தாளோ அந்த மரமும் இலிங்கமும் கிணறும் அப்படியே அங்கு வந்திருந்தது.
அவள் சிவனே எனக் கத்தி நன்றிச் சொன்னாள். பெரும் ஆரவாரமாக ஆர்ப்பரித்து நன்றிச் சொன்னாள். ஊர்மக்களும் காவலரும் ஏன் அரசனுமே வந்து நடந்த ஆச்சரியத்தை உணர்ந்தான்.
அவளின் திருமணத்தை ஊர் ஏற்றுக்கொண்டது. அவளுக்கு எல்லா உரிமையும் கொடுக்கப்பட்டன. மதுரையில் அவள் பெரும் செல்வாக்கோடு வலம் வந்தாள். வெளியூரில் இருந்து திரும்பிய கணவனும் நடந்ததை கேள்விப்பட்டு சாட்சிகளை ஆலயத்தில் கண்டு பணிந்தான்.
இதுதான் வன்னிமரமும் கிணறும் இலிங்கமும் சாட்சி சொன்ன திருவிளையாடல். இன்றும் மதுரை ஆலயத்தின் வடகிழக்கில் அந்த கிணறும் மரமும் இலிங்கமும் உண்டு.
இதன் ஆழமும் அர்த்தமும் மிகவும் பெரியது, மகா ஞானமானது. சிவனின் மாபெரும் வல்லமையினைச் சொல்வது.
முதலில், அப்பெண் எந்நிலையிலும் சிவபக்தியினைக் கைவிடவில்லை. அவள் பெற்றோரை இழந்து மாமனாரை இழந்த நிலையிலும் சிவனை நம்பினாள்.
ஒரே அடைகலமான கணவன் பாம்புக் கடித்து இறந்தபோதும் அவள் சிவனிடமே கதறினாள். கணவனைப் பிழைக்க வைத்த சம்பந்தர் சொல்லை சிவன் சொல்லாக நம்பி அங்கே திருமணமும் செய்தாள்.
கடைசியில், பெரும் அவமான ஆபத்தில் சிக்கியபோதும் அவள் சிவனிடமே சென்றாள். வாழ்வா, சாவா எனும் நிலையில் சிவனிடமே நியாயம் கேட்டாள்.
தன் உறுதியான பக்தைக்குச் சிவன் அந்த அற்புதத்தைச் செய்தார்.
இது மரமும் கிணறும் என நகரும் விஷயம் அல்ல. கிணறு என்பது நீரும் காற்றும் கொண்ட தத்துவம்; மரம் என்பது நெருப்பு, ஆகாயம் நிலம் என மூன்றும் கொண்ட தத்துவம்.
பஞ்சபூதங்கள் சிவனின் அம்சம். நாம் செய்யும் ஒவ்வொன்றையும் பஞ்சபூத வடிவமாக சிவன் பார்த்துக் கொண்டே இருக்கின்றார். நம்மிடம் நியாயமும் உண்மையும் இருந்து அவர்மேல் பெரும் பக்தியும் இருந்தால் உரிய நேரத்தில் அவரே எல்லாவற்றுக்கும் சாட்சியாக வந்து நிற்பார் என்பதை இந்தத் திருவிளையாடல் போதிக்கின்றது.
சிவன் பஞ்சபூதமாக எங்கும் இருப்பவர், நடக்கும் எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார். தன் உத்தமமான சீடனுக்குச் சாட்சி இல்லை எனும்போது தானே சாட்சி சொல்ல அவர் வருவார்.
உண்மையான சிவபக்தன் எதற்கும் கலங்குதல் வேண்டா, பஞ்சபூதமாக சிவனே அவனுடன் இருப்பார் என்பதைச் சொல்லும் திருவிளையாடல் இது.
நீங்கள் உங்கள் தரப்பு நியாயத்தைச் சாட்சிகளின்றி நிரூபிக்க முடியாதவராக இருக்கலாம். நியாயம் உங்கள் பக்கம் இருந்தும் உரிய சாட்சியின்றி கண்ணீர்விடும் நிலையில் இருக்கலாம். அப்படிப் பாதிக்கப்பட்டிருந்தால் மதுரை ஆலவாயன் சந்நிதியில் உங்கள் மனக்குமுறலை இயலாமையினைக் கொட்டுங்கள். அந்தச் சிவனே பஞ்சபூத வடிவில் உங்களுக்குச் சாட்சியாக வந்து நியாயம் தருவார். இது சத்தியம்.