திருவிளையாடல் புராணம் 44 :கார்த்திகைப் பெண்கள் கற்பாறையான படலம்.
திருவிளையாடல் புராணம் 44 :
கார்த்திகைப் பெண்கள் கற்பாறையான படலம்.
ஒருமுறை கயிலாயத்தில் சிவபெருமான் பார்வதியோடு வீற்றிருந்த நேரம் பல முனிவர்கள், ரிஷிகள் அவரைக் காண வந்தார்கள். பிருங்கி முனிவர், மாகாளர், நான்கு சனகாதி முனிவர் எனப் பலர் வந்திருந்தார்கள். அப்போது கார்த்திகைப் பெண்களும் வந்திருந்தார்கள்.
அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என அவர்கள் அறுவர். இவர்கள்தான் முருகப்பெருமானை வளர்த்தவர்கள், கார்த்திகை நட்சத்திரத்தின் ஆறு நட்சத்திரமாக இருப்பவர்களும் இவர்களே.
இவர்களுக்கு ஒர் ஆசை வந்தது. அது தங்களுக்கும் அஷ்டமா சித்துக்கள் கிடைக்க வேண்டும் என்பது. அது தேவர்களில் சிலருக்கு உண்டு, அனுமனுக்கு உண்டு, ரிஷிகளில் பலருக்கு உண்டு.
இந்தச் சித்துக்கள் எட்டுவகை உண்டு. அவை அசாத்தியமானவை. இதனைத் திருமூலர் பாடுகின்றார்.
“அணு மாதி சித்திகளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே”
அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், வசித்துவம் மற்றும் ஈசத்துவம் என எட்டு வகை சித்துக்கள் உண்டு.
அணிமா என்பது அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா என்பது மலையைப் போல் பெரிதாதல், மண் முதல் சிவம் வரை 36 தத்துவங்களையும் கொண்டு நிறைந்திருப்பது.
இலகிமா என்றால் மலையினைக் கூட காற்றைப் போல் எளிதாக மாற்றுதல்.
கரிமா என்றால் இலகிமாவுக்கு எதிரானது, கனமானது. மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராத்தி என்றால் எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல். பாதாளம் முதல் விண்ணுலகம் வரை எல்லா இடங்களிலும் சுற்றி வருதல்.
பிராகாமியம் என்றால் தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதலும் எல்லாவற்றையும் இருந்த இடத்தில் இருந்தே பெறுவதும் பிரகாமியம் எனப்படும்.
ஈசத்துவம் என்றால் எல்லாத் தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் என்றால் அனைத்தையும் வசப்படுத்தல், முத்தொழிலைச் செய்தல், பிரபஞ்சத்தை ஆட்டுவித்தல், அசுரர் தேவர் என எல்லோர் மேலும் ஆணையினைச் செலுத்துதல், நவக்கிரகங்களை கட்டுப்படுத்துதல் என எல்லாம் வசித்துவமாகும்.
சிவனடியார்கள் எல்லாம் கடந்தவர்கள், ஏதும் விரும்பாதவர்கள். ஆனால், ஈசனில் கலந்த அவர்களுக்கு இந்தச் சித்துக்கள் தானாய் வந்து அமைந்துவிடும் எனினும் அதைப் பெரிதாக அவர்கள் கருதுவதில்லை.
இந்த அரும் சக்திகளைக் கேட்டு சிவனிடம் நின்றார்கள் கார்த்திகைப் பெண்கள்.
சிவன் அவர்களுக்கு இரங்கி சொன்னார், “பெண்களே, என்னோடு இருக்கும் இந்தத் தேவிதான் எல்லாச் சக்திக்கும் மூலம். நீங்கள் கேட்ட சித்துக்களை எல்லாம் மகேஸ்வரியாக பராசக்தியாக திகழும் அவளுக்கு ஏவல் செய்து, நீங்கள் அவளைப் பயபக்தியுடன் வணங்கி வந்தால் அந்தச் சித்துக்கள் உங்களுக்கு வசமாகும்” எனத் திருவுளமிறங்கி அஷ்டமா சித்துக்களையும் உபதேசித்தார், அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.
சிவன் சொன்ன நிபந்தனை அவர்கள் தேவி உபாசனையினைக் மறக்கக் கூடாது என்பது.
ஆனால், தங்களுக்கு எல்லாச் சித்துக்களும் வசமான நிலையில் இந்தக் கார்த்திகைப் பெண்களுக்கு அகங்காரம் கூடிற்று, அந்த அகங்காரத்தில் மெல்ல மெல்ல தேவி உபாசனையினை வழிபாட்டை மறந்தார்கள்.
சிவனுக்கு இது ஆத்திரத்தை உண்டாக்கிற்று. அகங்காரம் அவருக்குப் பிடிக்காது. தேவி உபாசனை செய்யாதவர்களை அவர் விரும்புவதுமில்லை. இதனால் அவர்கள் செய்த இந்தப் பாவத்திற்குரிய தண்டனையினைப் பெற்றே தீரவேண்டும் என்பதால் அவர்களை நோக்கி நீங்கள் கற்பாறையாகக் கிடப்பீர்கள் எனச் சாபமிட்டார்.
கார்த்திகைப் பெண்கள் நடுநடுங்கிப் போயினர். சிவம் வேறு சக்தி வேறு என்றல்ல, இருவரும் இருவேறு சக்தியின் இணைந்த வடிவம் என்பதை உணர்ந்து அவர் பாதம் பணிந்து கதறினர்.
கருணையே உருவான சிவன் அவர்களின் கண்ணீர் கண்டு மனமிறங்கி சாப நிவர்த்தியும் சொன்னார்.
“பெண்களே, நீங்கள் பூமியில் ஆயிரமாண்டு கற்பாறையாக ஆலமரத்தின் அடியில் கிடப்பீர்கள், நான் வந்து உங்களுக்குச் சாப விமோசனம் தருவேன்” என்றுரைத்தார்.
அப்படியே பட்டமங்கலம் எனும் ஊரின் அருகே அவர்கள் ஆலமரத்தடியில் கற்பாறைகளாக வந்தார்கள், ஆயிரம் ஆண்டுகள் அந்தக் கற்பாறைகளாகவே அங்குக் கிடந்தார்கள்.
மதுரையில் மீனாட்சியினை மணமுடிக்க சொக்கநாதராக சிவன் வந்தபோது இந்த ஆலமரத்துக்கு அருகில் வந்து இந்தப் பெண்களுக்கு விமோசனம் தந்தார்.
அப்பெண்கள் பழையபடி எழுந்தனர். அவர்களுக்கு மீண்டும் அஷ்டமா சித்துக்களைக் கொடுத்து விண்ணுலக வாழ்வையும் கொடுத்தார் சிவன்.
இந்த ஆலயம் இன்றும் சிவகங்கை அருகே உண்டு.
இங்குக் கார்த்திகைப் பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசித்த சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக ஆலமரத்தடியில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கின்றார். வழக்கமாகத் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் அவர் இங்குக் கிழக்கு நோக்கி அமர்ந்து சாபம் தீர்க்கின்றார்.
அன்னை காளியின் சந்நிதி இங்கு உண்டு. காளியே அஷ்டமா சித்துக்களுக்கு அதிபதி அவளாலே எல்லாமே சாத்தியம். அந்த அருளை அவளே வழங்குவாள் என்பதைச் சொல்லும் தத்துவமிது.
இத்தலத்தில் சுந்தரேஸ்வரராக சிவனும், மீனாட்சியாக பார்வதியும் உள்ளனர்.
இந்த ஆலயத்தில் பிரசித்தியாக ஐந்து முகங்கள் கொண்ட முருகன் சந்நிதி உண்டு. சிவனின் அம்சம் கொண்டவர் என்பதைச் சொல்லும் தத்துவம் இது.
சிவன் அம்சம் கொண்ட முருகப்பெருமானைக் கார்த்திகை பெண்கள் வளர்த்தனர், அவர்கள் அகங்காரம் கொண்டபோது அன்னையினை மறந்தபோது சாபம் பெற்றனர். காளி வழிபாடு எப்போதும் முக்கியம் என்பதைச் சொல்லும் தத்துவம் இது.
இங்கு இவர்களுக்கு சாபம் போக்கிய தட்சிணாமூர்த்தி மிகப் பிரசித்தி. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியுடன், சந்நிதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து 12 முறை வலம் வந்தால் கல்வி ஞானம் உள்பட எல்லா ஞானமும் கிடைக்கும், நல்ல மணவாழ்க்கையும் குழந்தைப்பேறும் அமையும்.
இங்குத் தல விருட்சமாக ஆலமரமும், தீர்த்தமாக பொற்றாமரைக் குளமும் உள்ளது. இது குருவுக்கான தலமுமாகும்.
இந்தத் திருவிளையாடல் மதுரையினை மையமாகக் கொண்டு இந்தப் பட்டமங்கலத்தில் நடந்தது, மதுரை ஆலயத்தில் வழிபட்டு இங்கு வழிபடுதல் கூடுதல் சிறப்பு.
கார்த்திகைப் பெண்கள் ஞானத்துக்கும் அறிவுக்கும் உதாரணமானவர்கள். அவர்கள்தான் முருகப்பெருமானை ஞானமாக வளர்த்தார்கள். ஆனால், உலகை இயக்கும் மஹா சக்தியான அன்னையினை அவர்கள் மறந்ததால் சாபம் பெற்றார்கள்.
அன்னை தேவி வழிபாடு மகா முக்கியம் என்பதைச் சொல்லும் திருவிளையாடல் இது.
இந்தத் கார்த்திகை பெண்கள் திருவிளையாடல் இரு தத்துவங்களைச் சொல்வது. ஒன்று, இந்தப் பிரபஞ்ச ரகசிய விஞ்ஞானம்.
கார்த்திகை நட்சத்திரம் எல்லோரும் அறிந்தது, நட்சத்திரத்தின் இயல்புப்படி இந்த எட்டு சித்திகளும் விஞ்ஞான ரீதியாக சாத்தியமானவை அல்லது அடிப்படை.
விண்மீன் என்பது விரியும், சுருங்கும், கருந்துளை என எல்லாம் ஈர்க்கும் சக்தியும் பெறும் ஒரு துகளாய்க் கூட மாறும். இந்தப் பூமி மண்டலத்தின் சூரியனும் ஒரு விண்மீனே.
நட்சத்திரங்கள் இந்த எட்டு சக்தியும் கொண்டவை. இவை பிரபஞ்ச விதிக்கு கட்டுப்பட்டவை. அந்த விதியில் சரியாக இருக்கும் வரைதான் அது இந்த எட்டு இயல்பும் கொண்டிருக்கும், விதியில் இருந்து விலகினால் அவை பாறையாகிவிடும்.
இதன் ஆழமான அர்த்தம் சிவசக்தியில் கட்டுப்பட்டு இருக்கும் வரைதான் இங்கு எல்லாம் இயங்கும், சக்தியில் இருந்து விடுபட்டால் அது பயனற்றதாகிவிடும்.
சிவனில் நிலைத்திருத்தலே பிரபஞ்ச பொருட்களின் தத்துவம். அந்தப் பிரமாண்ட இயக்கத்தில் இருந்து விலகினால் அது சக்தியற்று போய்விடும். அப்படியே மானிட ஆத்மா சிவனில் இருந்து விலகினால் பாறைபோல் இயக்கமற்று தனித்து விடப்படும், அதன் சக்தி வெளிப்படாது இயங்குநிலைக்கு வராது.
அப்படியே இந்தக் கார்த்திகைப் பெண்கள் ஆறும் ஆறு சக்கரங்களையும் குறிக்கும். இந்தச் சக்கரங்கள் துலங்கினால் ஒரு ஆத்மா ஞானநிலையினை அடையும். அந்தச் சக்கரங்கள் துலங்காவிட்டால் ஆத்மா பாறைபோல் வீணாக அசைவற்றுக் கிடக்கும் என்பது இதன் தத்துவம்.
அன்னை சக்தி எனும் அந்த மகா சக்தி இந்தச் சக்கரங்களைத் துலக்கினால் அவளின் சக்தி தொடர்ந்திருந்தால் இந்த ஆறுசக்கரமும் துலங்கி அந்த ஆத்மா மகாசக்தியில் நிலைத்திருக்கும். அவளிடமிருந்து இந்தச் சக்கரங்கள் துண்டிக்கப்பட்டால் அவள் தொடர்பு இல்லை என்றால் இவை ஞானமற்றுப் போகும்.
இதைத்தான் இந்தத் திருவிளையாடல் பேசுகின்றது. இறையுடன் தொடர்பற்ற எதுவும் நிலைக்காது பயனற்று போய்விடும் என்பதும் இறையுடன் தொடர்பில் இருக்கும் எல்லாம் வாழும் என்பது இந்த ஆலயம் சொல்லும் ஞானதாத்பரியம்.
மதுரை ஆலயத்தை வழிபடும்போது இந்த ஆலயத்தையும் நினைந்து கொள்ளுங்கள். முடிந்தால் பட்டமங்கலம் சென்று வழிபட்டு வாருங்கள்.
ஒவ்வொரு ஆத்மாவும் இறையிடம் இருந்தே வருகின்றது. ஆனால், அதனுடன் தொடர்பற்று போன காரணத்தால் சில சாபத்தால் ஆத்மா இறை தொடர்பை இழந்திருக்கும், அதனால் ஆன்மா இருளில் சிக்கியிருக்கும்.
சிவனை வேண்டும்போது, சிவனருளை நாடும் போது ஆத்மாவினைச் சூழ்ந்திருகும் இருள் அகலும், ஞான வெளிச்சம் பெருகும். அந்த ஞான வெளிச்சத்தில் ஆத்மா ஜொலித்து இறைவனில் கலக்கும், சாபம் தீர்த்துப் பெரும் வாழ்வினைப் பெறும்.
இந்தப் பட்டமங்கலம் ஆலயத்தில் வழிபட்டால் விட்டுப்போன இறைதொடர்பினை ஆன்மா பெறும், சாபம் தீர்த்து மறுபடியும் இறைவனில் கலந்து அது தன் தெய்வீக இயல்பைப் பெறும். இது சத்தியம்.