திருவிளையாடல் புராணம் 45 : மேருவினைச் செண்டால் அடித்த படலம்.

திருவிளையாடல் புராணம் 45 : மேருவினைச் செண்டால் அடித்த படலம்.

உக்கிரபாண்டியன் மதுரையினைச் சீரும் சிறப்புமாக ஆட்சிசெய்து கொண்டிருந்தான். மனைவி காந்திமதி, மகன் வீரபாண்டியன் என அவன் குடும்பம் மகிழ்ந்திருந்தது. அவனுக்கு எதிரிகள் எனப் பூவுலகில் யாருமே இல்லை, வானுலகிலுமில்லை எனும் அளவு அவன் கீர்த்திக் கொடிகட்டிப் பறந்தது.

அவன் சோமவார விரதத்தைப் பக்தியோடு அனுசரித்துவரும் பக்தன் என்பதால் சிவனுக்கும் அவனுக்குமான பந்தம் உன்னதமாய் இருந்தது, அவன் சிவனுக்குள் எப்போதும் கரைந்திருந்தான்.

அப்படியானவன் ஆட்சியில் மழை பொய்க்கத் தொடங்கிற்று. எங்குத் திரும்பினாலும் பஞ்சமும் இன்னும் பலவும் தலைவிரித்தாடின. தானியங்கள் விலை உயர்ந்தன, மக்கள் பொருளின்றி தவித்தனர்.

மழை பொய்த்துவிட்டால் நாட்டில் விளைச்சல் இராது; விளைச்சல் இல்லாவிடில் ஏற்றுமதி செய்ய முடியாது; ஏற்றுமதி பாதிக்கப்பட்டால் இறக்குமதி இல்லை; பணம் இல்லாமல் இறக்குமதியும் செய்துவிட முடியாது.

இதனால் மன்னன் மக்கள் நிலை அறிந்து மிகக் கலங்கினான். கலங்கியவன் ஜோதிடர்களுடன் ஆலோசித்தான். அவர்கள் “மன்னா, இது கிரஹநிலையால் ஏற்பட்டிருக்கும் கோளாறு. ஒருவருடம் இந்நிலை நீடிக்கும் அதனால் அதுவரை மக்கள் சமாளிக்க பெரும் நிதி வேண்டும்; அதுதவிர வேறு வழியில்லை” எனச் சொன்னார்கள்.

மன்னனிடம் அப்போது நிதிவளம் பெரிதாக இல்லை. அவன் பல்வேறு திருப்பணிகள், இதரப் பணிகளால் நாட்டின் கருவூலம் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது நிதி மிக அவசியம்.

மன்னன் உக்கிரபாண்டியன் என்ன செய்வது எனத் தெரியாமல் ஆலவாயனிடம் சென்று பெரும் கவலையோடு வேண்டி நின்றான். எம்பெருமான் அவனுக்கு அசரீரியாய்ச் சொன்னார், “பாண்டியா, மேரு மலையின் குகை ஒன்றில் திரவியம் நிரம்பியுள்ளது, அக்குகை மறைவான ஒன்று. நீ சென்று அந்தத் திரவியத்தை அள்ளி வந்து பஞ்சத்தைத் தீர்த்துக்கொள். ஆனால், மேரு உனக்கு உடனே தராது. அதன் தலையில் செண்டினால் அடித்தால் அது உனக்குக் கட்டுப்படும்” எனச் சொன்னார்.

முன்பே உக்கிரபாண்டியனுக்கு வேல், வளை, செண்டு என மூன்று ஆயுதங்களைச் சிவன் கொடுத்து முன்னோர் வழியில் அவன் பெற்றிருந்தான்.

( செண்டு என்பது அனுமன் கதை போல சிறிய கொண்டையினைக் கொண்ட ஆயுதம், அந்த முனையில் கொத்தாக ஆணி போன்ற அமைப்பு அல்லது அது இல்லாமல் இதர கொத்து ஆயுதங்கள் இருக்கும். மலர் செண்டின் கொண்டை எப்படி கொத்தாக இருக்குமோ அப்படி ஆணி உள்ளிட்டவைக் கொண்ட கொத்து அது. ‘செண்டு’ என்றால் கொத்து என்றும் பொருள் உண்டு.

இது ஆயுத முனை அல்லது வெறும் பெரிய உருண்டை என்றும் உண்டு. அனுமனின் கதாயுதம் அப்படியானது.

இது இருவகையாகும். ஒன்று இரும்புக் கைப்பிடி கொண்டது. இன்னொன்று கயிறு அல்லது சங்கிலியில் கட்டப்பட்டது.

இதன் அளவைப் பொறுத்து எதிரிகள் மேல் வீசுவது சண்டையிடுவது எனத் தொடங்கி, யானையினை அடித்து வீழ்த்துவது, கோட்டைக் கதவுகளைத் தாக்குவது என இதன் பலன் அதிகம்.

அக்காலத்தில் செண்டு எறிதல் எனும் விளையாட்டே அடிக்கடி உண்டு, வீர விளையாட்டு அது.

இந்தச் செண்டு தெய்வங்கள் கையில் உண்டு. சாஸ்தா கையில் அது உலோக கைப்பிடியோடு உண்டு. சில இடங்களில் மன்னார்குடி இராஜகோபாலன் கையில் சங்கிலி அல்லது கயிற்றால் ஆன செண்டு வளைந்து காணப்படும்.

இந்த இரு வகை செண்டு ஆயுதங்களும் இந்துக்கள் நூல்களில் வரலாற்றில் இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளன‌.

முதலாவது, மகாபாரத்தில் வில்லிபுத்தாழ்வார் சொல்கின்றார்.

“தண்டார் விடலை தாயுரைப்பத்
தாய்முன் னணுகித் தாமரைக்கைச்
செண்டால் அவள்பைங் குழல்பற்றித்
தீண்டா னாகிச் செல்கின்றான்
வண்டார் குழலு முடன்குலைய
மானங் குலைய மனங்குலையக்
கொண்டா ரிருப்ப ரென்றுநெறிக்
கொண்டா ளந்தோ கொடியாளே”

அதாவது, திரௌபதியினை இழுத்து வரும் காட்சியில் இது வரும். திரௌபதி தன் நிலை கலங்கிக் காந்தாரியிடம் சரணடைந்து கதறினாள். அந்நேரம் பெண்களுக்கான தனிநேரமாக அது இருந்தது.

ஆனால், எந்தச் சேனை வந்தாலும் முறியடித்து அவளை பிடித்துவரவேண்டும் என்ற வேகத்தில் இந்தச் செண்டு வகை ஆயுதத்தோடு சென்ற துச்சாதனன் அவளைத் தொடாமல் தலைமுடியினை இந்தச் செண்டு எனும் ஆயுதத்தின் சிறிய கயிற்றால் கட்டி இழுத்துவந்தான் என்கின்றது பாடல்.

பண்டைய அரசுகளில் “செண்டு ஏந்தும் படை” என ஒன்று இருந்ததை இப்பாடல் சொல்கின்றது.

“வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்
கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்
குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
இறையும் பெயரும் தோற்றிநுமருள்”

கரிகால் சோழன் பின்னாளில் இதே ஆயுதம் கொண்டிருந்ததைப் பாடல் சொல்கின்றது.

“கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல்
மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் – கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரிதிரித்த செண்டு” )

பாண்டியன் நல்ல நாள் ஒன்றைக் குறித்துக் கொண்டான். சேனைகளைத் தயார்படுத்தினான். அந்த நாள் அன்று பொற்றாமரைக் குளத்தில் நீராடி ஆலவாயனை வலம் வந்து வீழ்ந்து கிடந்து வணங்கி நெற்றியில் நீறுபூசி கொண்டு கிளம்பினான். வைகையினைத் தாண்டும் போதும் திரும்பி ஆலவாயனை வணங்கி வடக்கு நோக்கிச் சென்றான்.

தொண்டை நாடு, தெலுங்கர் நாடு, எனக் கடந்து சில கொடிய பாலை நிலத்தையும் கடந்து விராட நாட்டைக் கடந்து, ஹேமகூடம், கிம்புருஷம், அரிவருஷம், இளாவிரத வருஷம் என எல்லாம் கடந்து மேரு மலை நோக்கிச் சென்றான்.

இந்த மேருமலை என்பது தனி மலை அல்ல, பல மலை அடுக்குகளைக் காவலாகக் கொண்டு நடுவில் இருக்கும் மலை. அதை அடைய ஹேமகூடம், கிம்புருஷம், அரிவருஷம், இளாவிரத வருஷம் எல்லாம் கடக்க வேண்டும்.

இவற்றைக் கடப்பது என்பது கடினமான ஒன்று. ஒவ்வொரு மலையிலும் ஒரு ஆபத்து உண்டு. உதாரணமாக, இளாவிரத வருஷத்தில் நுழையும் ஆண்கள் பெண்ணாகிவிடுவார்கள். கிம்புருஷம் என்பது பெரும் அரக்கரும், நாகங்களும், வினோத உருவங்களும் கொண்ட மலை.

இவற்றைச் சாமானியரால் கடக்க முடியாது, சிவனருள் இருந்ததால் அதை எளிதாகக் கடந்து சென்றான் உக்கிர பாண்டியன்.

மேருவினை அவன் அடைந்து “மேருவே, சிவன் உத்தரவுப்படி நான் வந்திருக்கின்றேன், எனக்கு திரவியத்தைக் கொடு” என்றான்.

மேரு அவன் குரலுக்கு வரவில்லை.

பாண்டியன் தன் செண்டு ஆயுதத்தை எடுத்தான், அதைச் சங்கிலியில் கட்டினான். வேகமாக அதை தன் பலம் கொண்ட மட்டும் சுழற்றியவன் சூறாவளிபோல சுழன்றவன் சட்டென அந்த மலையின் சிகரம் நோக்கி வீசினான்.

செண்டு அந்தச் சிகரத்தைத் தாக்கி நொறுக்கியது, அது அடிபட்டதும் மேரு ஓடிவந்து பணிந்தான்.

எட்டுத் தோளும், நான்கு கரங்களும் கொண்டவன் ஓடிவந்து பாண்டியன் காலில் வீழ்ந்து சொன்னான், “மன்னா, நான் அனுதினமும் மதுரைக்கு வந்து ஆலவாயனைத் தரிசிப்பேன். இன்று ஒரு பெண் மோகத்தில் சிக்கிக் கொண்டு செல்லவில்லை, அந்தத் தவறுக்கு சிவன் உத்தரவுப்படி அடிவாங்கிவிட்டேன். இதோ நீ கேட்ட திரவியம்” எனச் சொல்லி எல்லாச் செல்வத்தையும் அள்ளி அள்ளி கொடுத்து அனுப்பினான்.

பாண்டியவன் அவற்றை எடுத்து வந்து தன் மக்களின் வறுமை தீர்த்து நாட்டை பஞ்ச காலம் முழுக்கக் காத்து இறைபணியும் செய்து காத்துவந்தான். உரிய காலத்தில் மழை வந்தது. நாடு செழித்தது.

இதன்பின் அவன் தன் மகன் வீரபாண்டியனுக்கு வழிவிட்டுவிட்டு மதுரை சோமசுந்தர பெருமானுடன் கலந்துபோனான்.

இதுதான் மேருமலை செண்டினால் அடிபட்ட திருவிளையாடல்.

இது இரு பெரும் தத்துவங்களைச் சொல்வது. முதலாவது, மேரு அந்தப் பொக்கிஷத்தைக் காக்க வேண்டிய பொறுப்பில இருந்தான். அவனும் சிவனை அனுதினமும் வழிபட்டான்.

ஆனால், ஒருநாள் அவன் மாயைமோகத்தில் சிக்கியதால் செல்லவில்லை. அதற்கான தண்டனையினைச் செண்டால் அடிவாங்கி பெற்றுக்கொண்டான். சிவகாரியத்தில் பொறுப்பும் கடமையும் உறுதியும் அவசியம். அங்கே வீணாக மயங்கினால் அடியும் தண்டனையும் உண்டு.

இரண்டாவது, உன்னதமான பக்தன் வாழ்வில் சோதனைகள் மலைபோல் இருந்தாலும் சிவன் அருளால் அது தகர்ந்து போகும் என்பது.

சிவன் உக்கிரபாண்டியனுக்குக் கொடுத்தவை வேல், வளை, செண்டு என மூன்று ஆயுதம். அவற்றில் வேல் என்பது கடலுக்கு எதிராக அதாவது கடல்போல் வந்த நீருக்கு எதிராக வீசப்பட்டது.

வளையினை இந்திரன் மேல் எறிந்தான் பாண்டியன். இப்போது செண்டு என்பது மலையினை அடித்திருக்கின்றது.

ஆக, ஆழ கவனித்தால் நீர் என்பது ஒருவனை அழுத்த வரும் சோதனை. அதில் நீந்தித் தப்பலாம் மிதக்கலாம் என முயற்சித்தாலும் அது ஒருவனை அமிழ்த்திவிடும். அதாவது, மழை ஆறு என அதுவே பெருகித் தேடி வந்து வளைக்கும்.

அதாவது, மழை என்பது பெருகிக் கொண்டே இருக்கும். அது கொட்டினால் நீரின் அளவு அதிகரிக்கும். அப்போது ஒருவன் நகர்ந்து அல்லது ஓடி தப்ப வேண்டும். ஆசைகள் மாயைகள் பெருகும் போது சிக்கல்கள் பெருகும் போது ஓட வேண்டும். ஆனால், பெருவெள்ளம் வளைத்துவிட்டால் ஓடுவது கடினம்.

அந்நேரம் அவன் செயலற்றவனாகிவிடுவான். இது தாம்ச குணத்தின் சாயல்.

நீர்பெருகி வரும் என்பது மாயைகள் பெருகிவரும், அந்நேரம் தமஸ் எனும் தாம்ச குணத்தில் சிக்கினால் ஒருவன் அழிந்தேவிடுவான், அவனை அதிலிருந்து காக்க சிவனருள் முக்கியம் என்பது.

இந்திரன் என்பது ஆசையின் வடிவம். அதிகாரம், பெரும் இன்பம் எனும் இரஜோ குணத்தின் வடிவம்.

இந்த மலை என்பது சத்வ குணத்தினைச் சொல்வது. சத்வ குணம் என்பது மலைபோன்ற சிக்கல்களைச் சந்திக்கும். மலை எங்கும் செல்லாது ஆனால் பெரும் புதையலைத் தனக்குள் வைத்திருப்பதால் அது மகா உறுதியானது, உலகில் உறுதியானது மலை.

“மல்” என்றால் பலமானது, காவலானது எனப் பொருள். மல்லன், மதில் என்பவை அப்படி வந்த வார்த்தைகள், மலை என்றாலும் அதுதான்.

இரஜோ, தாம்ஸ குணங்களை வெல்வதை விடக் கடினமானது சத்வ குணத்தையும் ஒழிப்பது. அதை உடைப்பது என்பது கடினம். சிவனருள் ஒன்றாலே அதைக் கடக்க முடியும். காரணம் இது தான் முக்தியின் கடைசிப்படி இதை உடைப்பது மகா சிரமம்.

சத்வ குணத்தால் இரஜோ குணம், தமஸ் குணம் என இரண்டையும் ஒழித்துக் கடைசியில் சத்வ குணத்தையும் ஒழித்து என்னை அடையவேண்டும் என்பது கீதா உபதேசம்.

இதைத்தான் மிக சூசகமாக இந்தத் திருவிளையாடல் சொல்கின்றது.

வாழ்வில் நீர்போல் சிக்கல் வரலாம்; கண்காணாக் காற்றுபோல் சிக்கல் வரலாம்; மலை போல் நமக்கு தேவையானதை நோக்கி செல்லும் போது தகர்க்கமுடியாக் கடக்கமுடியாப் பெரும் சிக்கல் வரலாம்.

ஆலவாயனைத் தொழுதால் ஞானமார்க்கமாக முக்குணமும் ஒழியும். லௌகீகமாக எல்லாச் சோதனைகளும் தகரும் என்பதே இதன் தாத்பரியம்.

மதுரை ஆலயத்தில் அந்த ஆலவாயனைத் தொழுவோர்க்கு இந்த வரமெல்லாம் கிடைக்கும். எந்தப் பிரச்சினை சிக்கல் மலைபோல் எழுமோ அது பனிபோல் பணிந்து பெரும் பெரும் புதையலை நல்ல பலனைத் தரும். இது சத்தியம்.