திருவிளையாடல் புராணம் 46 : ஐயன் ஐராவதத்துக்கு இரங்கிய படலம்.

திருவிளையாடல் புராணம் 46 : ஐயன் ஐராவதத்துக்கு இரங்கிய படலம்.

ஒருமுறை காசியில் ஈசனை வழிபடச் சென்றார் துர்வாச முனிவர். கங்கையில் நீராடி அன்னை விசாலாட்சியினை வணங்கிவிட்டு காசிநாதன் சந்நிதிக்கு வந்தவர் தன் கையாலே அவருக்குப் பூஜை செய்தார். அந்தப் பூஜையில் மகிழ்ந்த ஈசன் அவர் கைகளில் ஒரு மலரை விழச் செய்தார்.

அது ஈசனின் தலையில் இருந்த பொன்னிறத் தாமரை மலர், அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டு தன் கையோடு வைத்திருந்த முனிவருக்கு அசுரர்களுடனான யுத்தத்தில் தேவர்கள் வென்ற செய்தி எட்டிற்று.

தேவர்களின் வெற்றிக்கு எல்லா முனிவர்கள், ரிஷிகள் போல இவரும் தவமிருந்து வேண்டியிருந்தார் என்பதால் மகிழ்ச்சியுடன் தேவலோகம் சென்றார்.

அங்கு எல்லாத் தேவர்களும் முனிவர்களும் கூடியிருந்தனர். தேவ மைந்தர்கள் அண்ட சராசர அதிபதிகளெல்லாம் வந்து இந்திரனை வாழ்த்திக் கொண்டிருந்தனர். அவன் தன் வெண்ணிறமான ஐராவதம் யானை மேல் வந்து கொண்டிருந்தான்.

வென்றவனை வாழ்த்த பெரும் கூட்டம் வருவது இயல்பு, அப்படி எத்தனையோ ரிஷிகளில் ஒருவராக துர்வாசரும் நின்று தன் தாமரை மலரை அவனிடம் கொடுத்தார்.

ஆனால், வெற்றி மமதையிலும் இன்னும் ஒருவித அலட்சியத்திலும் அதனை வாங்கி தன் யானை மேல் வைத்துவிட்டு துர்வாசருக்கு ஒரு வணக்கம் கூட வைக்காமல் சென்றான் இந்திரன். யானை அசையும் போது அந்த மலர் கீழே விழுந்தது.

அது இந்திரனின் யானை, அறிவும் விவேகமுமிக்கது, அதற்கு யார் மலர் கொடுத்தது எனத் தெரியும். ஆனால், அது தன் துதிக்கையால் முனிவரை தொழவுமில்லை, மாறாக கீழே விழுந்த மலரை எடுக்கவுமில்லை.

மாறாக, துதிக்கையால் அதனைத் தள்ளிக் காலால் மிதித்துப் போட்டு அதன் போக்கில் சென்றது. அது கண்ட முனிவர் கடும் ஆத்திரப்பட்டார்.

அவர் கோபத்துக்குப் பெயர் போன துர்வாசர் அல்லவா? கோபம் வந்தால் தன்னையே மறக்கும் கடும் முன்கோபி என்பதால் முனிவர் ஆத்திரத்தில் கத்தினார்.

“ஏ இந்திரா, வெற்றி மமதையில் என்ன காரியம் செய்தாய்? ஈசன் எமக்களித்த தாமரையினை இப்படி வீசியெறிவாயா? உன் வெற்றிக்கு எம்மைப் போன்ற ரிஷிகளும் மூலக் காரணம் என்பதை மறந்தவனே, இதோ சாபமிடுகின்றேன்.

நீ பூலோகத்தில் ஒரு பாண்டிய மன்னனிடம் தோற்று, உன் தலை அவனின் சக்ராயுதத்தால் சிதறடிக்கப்படும்; எந்த யானைமேல் கம்பீரமாக அமர்ந்திருக்கின்றாயோ அந்த நான்கு கொம்பு கொண்ட ஐராவதம் யானை பூமியிலே காட்டு யானையாகத் திரியும்”

சொன்ன அவர் தன் கமண்டலத்திலிருந்து நீர் எடுத்து வீச முனைந்தார்.

பதறிய இந்திரன் யானை மேல் இருந்து குதித்து அவர் காலில் விழுந்தான். யானையும் கால் மடக்கி அவர் முன் மண்டியிட்டுத் துதிக்கையால் கெஞ்சியது, தன் கால் பட்ட தாமரை மலரை எடுத்து கண்களில் நீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தது.

இந்திரன் சொன்னான், “முனிவரே கூட்டம் அதிகம் என்பதாலும், போரின் களைப்பாலும் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னியுங்கள்” எனக் கெஞ்சினான்.

முனிவர் கண்களை மூடி நின்றார். மெல்ல மனமிரங்கினார். “இந்திரா தர்மம் வாழத் தேவர்கள் வாழவேண்டும், அவர்களைக் காக்க நீ வாழவேண்டும். அதனால் பாண்டியன் உன் முடிமட்டும் வீழ்த்துவான். உனக்கு ஆபத்து வராது.

உன் வாகனமான இந்த ஐராவதம் மூன்று ஆண்டுகள் மட்டும் பூமியில் காட்டு யானையாய்த் திரிந்துவிட்டு உன்னிடம் வந்துவிடும், முனிவன் இட்ட சாபத்தை குறைக்கமுடியுமே தவிர மாற்றமுடியாது” என்றார்.

இந்திரன் கண்ணீரோடு அதை ஏற்றான். ஐராவதம் முனிவரிடம் பணிந்து ஆசி பெற்றது.

“ஈசன் மலரை மிதித்த உனக்கு ஈசனே அருள்புரியட்டும்” எனச் சொல்லி விடைபெற்றார் முனிவர். இந்திரனைத் தழுவிய ஐராவதம் கண்ணீரோடு விடைபெற்றது.

(பாண்டிய மன்னன் உக்கிரபாண்டியன் இந்திரனோடு போரிட்டு அவன் முடியினை வீழ்த்திய ஒரு திருவிளையாடல் நடந்தது, அவ்வண்ணம் முனிவரின் சாபம் நிறைவேறிற்று.)

விண்ணுலகில் மறைந்த ஐராவதம் தன் வெண்ணிறமும் நான்கு கொம்பும் இழந்து கரியநிறக் காட்டு யானையாக மாறி காடெல்லாம் அலைந்தது. என்ன செய்வது ஏது செய்வது எனத் தெரியாமல் தனியே சுற்றியது.

அப்படி எங்கெல்லாமோ சுற்றிய யானை இந்தக் கடம்பவனம் பக்கம் வந்தபோது அங்கிருந்த லிங்கத்தைக் கண்டது. பொற்றாமரைக் குளத்தோரம் இருந்த அந்த லிங்கத்தைக் கண்டதும் இனம்புரியாத ஈர்ப்பு வந்தது.

(இது மிக மிகத் தொன்மையான காலம், அப்போது அந்த லிங்கம் மட்டுமே பொற்றாமரைக் குளத்தின் கரையில் கடம்ப மரத்தடியில் இருந்தது, கோவில் இல்லை.)

உடனே அது பொற்றாமரைக் குளத்தில் நீராடியது. அந்நேரம் அதன் கரிய நிறம் மறைந்து வெண்மை நிறம் வந்தது.

உற்சாகமான ஐராவதம் துதிக்கையால் நீர் எடுத்து லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தது, பின் அங்கிருந்த மரம் செடிகளில் மலர்களைப் பறித்து ஈசனுக்கு இட்டது.

அது ஈசனுக்கு மலர் சூட்டிய நேரம் நான்கு தந்தங்களையும் பெற்றது. தனக்கு, தான் யாரெனக் காட்டிய அந்த ஈசனின் முன்னால் நன்றியோடு படுத்துக்கொண்டது. அடுத்து என்ன செய்வது, எப்படி ஈடேறுவது என்பது அதற்குத் தெரியவில்லை.

அது நகராமல் ஈசன் முன்னால் படுத்துக் கொண்டது. உண்ணவுமில்லை உறங்கவுமில்லை, தான் ஐராவதம் எனத் தெரிந்த யானைக்கு அடுத்து என்ன செய்வது என்பது தெரியவில்லை.

தனக்கு வழிகாட்டும்படி ஈசனிடம் கெஞ்சியது. உண்ணாமல் நோன்பிருந்தது உடல் மெலிந்து கிடந்தது.

ஆனாலும், பூஜை வழிபாடுகளை அது நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் உடல் மெலிந்து முடியாமல் அவர் சந்நிதி முன் விழுந்து கண்ணீர் சொரியக் கிடந்தது.

அப்போது ஈசன் அதன்முன் வந்து, “ஐராவதமே, உன் சாபம் தீர்ந்தது, நீ நினைத்தவுடன் இனி தேவலோகம் செல்லலாம், எனக்குப் பூஜித்த உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்றார்.

அந்த ஐராவதம் சொன்னது, “ஐயனே, உன்னை எட்டு யானைகள் எட்டுத் திக்கிலும் தாங்குகின்றன அல்லவா? ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சர்வபௌமம், சுப்ரதீகம் என எட்டு உண்டு அல்லவா?

நானும் இன்னொரு ஐராவதமாக உன்னை ஒன்பதாம் யானையாகத் தாங்கவேண்டும்” என்றது.

சிவன் புன்னகைத்துச் சொன்னார், “யானையே, எல்லா இடத்திலும் இருப்பவன் நான், இந்திரனிலும் இருப்பவன் நான், அதனால் நீ அவனைச் சுமப்பது என்னைச் சுமப்பது போன்றதே” என்றார்.

ஐராவதம் அவரை வணங்கி நின்றது. சிவன் அதற்கு எக்காலமும் நிலைக்கும் வரம் உள்ளிட்ட பல வரம் வழங்கினார்.

ஐராவதம் எனும் அந்த யானை தன் சாபம் தீர்ந்து தான் யாரென தெரிந்தபின்பும் வானுலகம் செல்லாமல் இங்குத் தான் வழிபட்டதற்காக ஏதும் செய்யத் தீர்மானித்தது.

அதனால் அது கோவிலுக்கு மேற்கே ஒரு தீர்த்தத்தை தன் கொம்பினால் உருவாக்கி அங்கு விநாயகரையும், லிங்கத்தையும் ஸ்தாபித்து பூஜித்து நின்றது, அந்த லிங்கம் ஐராவதேஸ்வரர் என்றானார்.

நடந்ததை அறிந்த இந்திரன் அதனை மேலோகத்துக்கு அழைக்க விரும்பி செய்தி அனுப்பினான், அவன் ஆட்களை அனுப்பிவைத்த ஐராவதம் செல்ல மறுத்து நின்றது.

பொற்றாமரைக் குளத்திற்கு கிழக்கே சற்றுத் தள்ளிச் சென்று இன்னொரு லிங்கத்தை ஸ்தாபித்தது. அங்கே மனமுருகி அது வணங்கிய நேரம் இந்திரனே அதைத் தேடி வந்தான், வந்தவன் ஈசனை வணங்கிய யானையினைக் கண்டு மகிழ்ந்து தானும் அந்த லிங்கத்தை வணங்கினான்.

அந்த லிங்கம் இந்திரன் வணங்கியதால் இந்திரேஸ்வரர் என்றானது.

பின், இந்திரனும் ஐராவதமும் ஆலவாயனைக் கடம்பவனத்திலே வணங்கி தேவலோகம் ஏகினார்கள்.

இன்றும் அந்த ஐராவதம் உருவாக்கிய முதல் தீர்த்தம் கோவிலுக்கு மேற்கே “யானையூரணி” என்றும் “கணபதியேந்தல்” என்றும் அழைக்கப்படுகின்றது.

கிழக்கே இந்திரேஸ்வரர் என ஐராவதம் ஸ்தாபித்த லிங்கம் இன்றும் ஆலயமாக உண்டு. அந்த இடமே ஐராவத நல்லூர் என வழங்கப்படுகின்றது.

மதுரைக்குச் சென்று வைகையிலே நீராடி ஆலவாயனை வணங்கி பின் மேற்கே இருக்கும் ஐராவதேஸ்வரரை வணங்கி, கிழக்கே இருக்கும் இந்திரேஸ்வரரையும் வணங்குவோரின் கர்மவினை எல்லாம் தீரும். அவர்கள் இப்பிறப்பிலே அறம், பொருள், இன்பம் என மூன்றையும் அடைவர். பின் 14 இந்திரன்கள் ஆளும் காலமளவும் தேவலோகத்தில் வாழ்ந்து பின் முக்தி அடைவார்கள்.

ஆம். மதுரைக்குச் செல்லும் போது இந்த ஐராவதேஸ்வரர், இந்திரேஸ்வரர் என இருவரையும் மறக்காமல் தரிசியுங்கள். அப்போது பூமிக்குவந்த சாபம் தீர்ந்து நல்ல கதி நிச்சயம் கிடைக்கும்.

துர்வாசர் இந்திரனுக்கு வழங்கியது இறைவனின் பிரசாதம், அதை மரியாதையாக பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி பெற்றுக் கொள்ள தவறிய இந்திரன் சாபத்திற்கு உள்ளானான் என்பதை இந்தத் திருவிளையாடல் உணர்த்துகிறது. மிகப் பெரும் பதவிகளில் உள்ளவர்களின் கீழே இருப்பவர்கள் மிக அடங்கி நடத்தல் வேண்டும் இல்லையேல் ஐராவதம் பெற்ற சாபம் போல் பெற நேரிடும்.

ஒவ்வொருவரும் முற்பிறப்பின் கர்மம் தீர்க்க வந்த பிறப்பு இது. அந்தப் பிறப்பில் நமது சாபங்கள் நமக்குத் தெரியாது. ஆனால், மனம் ஏதோ ஒன்றைத் தேடும், நிறைவு கொள்ளாது அலையும், வாழ்வு கஷ்டமும் சிரமும் சேர்ந்ததாக மாறும்.

இங்கு வழிபடும் போது அந்தச் சாபமெல்லாம் மாறும், எல்லாக் கர்மமும் தீரும்.

இந்தத் திருவிளையாடல் அழகான தத்துவத்தைப் போதிப்பது. அதாவது, தூய வெண்நிறம் எல்லாம் கடந்த மேல் நிலை, கருமை என்பது கர்மாவின் நிறம்.

இதனாலே இராமன், கண்ணன், யமுனா நதி, எமன் என எல்லோரும் கர்மத்தைச் செய்யும் எல்லோரும் கருப்பு நிறமாகக் கொள்ளப்பட்டார்கள்.

இந்த ஐராவதம் எனும் யானை தூய நிலையில் இருந்து கர்மநிலைக்கு வந்ததை இந்தத் திருவிளையாடல் சொல்கின்றது. அது தன் நிலையில் இருந்து கீழ் நிலைக்கு வந்தது, அது அதன் கர்மமானது.

அந்தக் கர்மத்தைச் சிவனை வழிபட்டே அது தீர்த்து தன் கரியநிறத்தை விட்டு மறுபடி வெண்மை நிறம் அடைந்தது. அதாவது, சிவனை வழிபட வழிபட அதன் கரிய நிறம் கர்மம் மறைந்து அது தன் இயல்பைப் பெற்றது.

ஆம். ஆத்மா கர்மப்பிறப்பில் இருந்து சாபம் பெற்று தூய ஒளிக்குச் செல்லும், சிவனருளால் அது தன் தெய்வீக இயல்பை மீண்டும் பெறும் என்பதைச் சொல்லும் காட்சி இது.

ஆம். இந்த மூன்று லிங்கங்களையும் மதுரையில் தரிசித்தால் ஆத்மா தான் இழந்த தெய்வீக இயல்பைப் பெறும், கர்ம வினை களைந்து முக்தி அடையும், தன் ஒளியினை மீண்டும் அடையும்.

சைவ மரபில் யானையினை ஐம்புலன்களுக்கும் ஒப்பிடுவார்கள். ஐம்புலன்கள் எனும் யானைப் பலம் கொண்டவற்றை அடக்கினால், அவற்றைப் பாகன் யானையினைக் கட்டுப்படுத்துவதைப் போல கட்டுப்படுத்தினால் ஈசனை அடையலாம், முக்தி அடையலாம் எனப் போதிப்பார்கள்.

இந்தத் திருவிளையாடல் அதையும் சூட்சுமமாகச் சொல்கின்றது.

“ஆனைகள் ஐந்தும் அடக்கி, அறிவு என்னும்
ஞானத்திரியைக் கொளுவி அதனுள் புக்கு
ஊனை இருள் அற நோக்கும் ஒருவர்க்கு
வானகம் ஏற வழி எளிதாமே “

என்பதும் அவர் பாடல்.

ஐம்புலன்களும் யானைப் போன்றவை, அவற்றைக் கட்டுப் படுத்துவது சாதாரண மனிதருக்கு எளிது அல்ல. எனினும், முறையான யோகப் பயிற்சியின் மூலம் தவம் இயற்றுவோர் பொறிகள் ஐந்தினை முறைப்படுத்தி அறிவு என்னும் ஞானத்திரியால் விளக்கை ஏற்றி அதனுள் புகுந்து தமது உடம்பினுள் ஊடுருவி உள் ஒளிப் பெருக்கிப் பாச இருளை அகற்றுவோர்க்கு வானகம் செல்ல வழியுண்டாகும் என்கிறார் திருமூலர்.

இந்தத் திருவிளையாடல் அந்தப் பாடலை அப்படியே போதிப்பதைக் காணலாம்.

சுந்தரர் வெள்ளை யானையில் கயிலாயம் சென்றார் என்பது கூட இந்தத் தத்துவத்தின் காட்சியே.

ஆம். மதுரையில் இந்த ஆலயத்தில் வழிபடுங்கள். இந்த லிங்கங்களை எல்லாம் தரிசித்து நில்லுங்கள். முற்பிறவியில் செய்த பாவமெல்லாம் கர்மமெல்லாம் தீரும். அறியாத கர்மமெல்லாம் சாபமெல்லாம் தீரும். உங்கள் ஆத்மா தன் தூய நிலையினை அடையும். இதனால் இம்மையும் மறுமையும் நலமாகும். இது சத்தியம்.