திருவிளையாடல் புராணம் 47 : விருத்தகுமார பாலரான படலம்.
திருவிளையாடல் புராணம் 47 :
விருத்தகுமார பாலரான படலம்.
விக்கிரம பாண்டியன் மதுரையினை ஆட்சிச் செய்தக் காலத்தில் விருபாஷன் எனும் அந்தணன் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் வேதங்களிலும் அதை ஓதுவதிலும் சிறந்தவன்; சாஸ்திரம் அனைத்தும் அறிந்தவன்; அவன் மனைவி சுபவிரதை எனும் நற்குண மங்கை.
இவர்களுக்கு நெடுநாளாகக் குழந்தை இல்லை. எல்லாச் செல்வமுமிருந்தும் குழந்தைச் செல்வமில்லை. இதனால் இருவரும் மதுரை ஆலவாயன் சந்நிதியில் சோமவார விரதமிருந்து பொற்றாமரையில் நீராடி அவரை வழிபட்டுத் தவமிருந்து ஒரு பெண் குழந்தைப் பெற்றார்கள். அம்பாளின் பெயரான கௌரி எனும் பெயரிட்டு அவளைச் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார்கள்.
அவள் மிகச் சிறந்த சிவபக்தையாக வளர்ந்தாள். எப்போதும் திருநீறு அணிந்து சிவனை நினைந்து வாழ்ந்து கொண்டிருந்தாள். ஆலவாயனை அனுதினமும் தரிசிப்பாள். ஒரு சிவனடியாரையாவது சந்தித்து அவர்களுக்கு உணவிட்டு உபசரித்து வணங்காமல் அவள் நாளை முடித்ததில்லை.
அவளின் ஒவ்வொரு நாளிலும் சிவனடியாரை உபசரித்து ஆசிவாங்குவது வழமையாயிற்று.
அப்படியே அவள் சிறுவயதிலே மிகுந்த ஞானத்தையும் தேடினாள். பிறவிப் பிணியினை எப்படி அறுப்பது என அந்த வயதிலே சிந்தித்தாள். அதனால் அவள் தன் தகப்பனைக் குருவாகக் கொண்டு கேட்டாள், “பிறவிப் பிணியினை அறுக்கும் மந்திரம் எது?” எனக் கேட்டாள்.
அவன் அவளுக்குப் மந்திரத்தை உபதேசித்தான். அது பராசக்தி மந்திரமாய் இருந்தது, அதை முறையாக உச்சரித்து வந்தாள்.
பராசக்தி மந்திரம் என்பது “ஷோடசி” அல்லது “சோடசி” என அழைக்கப்படும் மந்திரம். ஷோடசி என்றால் 16 வார்த்தைகளைக் கொண்ட அம்மன் மந்திரம்.
அதை ஒரு குரு மூலமாகக் கற்க வேண்டும். கௌரிக்கு அந்தக் குருவாக நின்று விருபாஷனனே அம்மந்திரத்தைப் போதித்தான். அவள் அதை அனுதினமும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அப்படியாக அவள் முழுக்கச் சிவனில் வளர்ந்து வந்தாள். அவளுக்குத் திருமணம் செய்துவைக்கும் காலம் வந்தது. விருபாஷன் தன் மகளுக்காக வரன் பார்க்கத் தொடங்கினான். நிறைய இடங்களில் தேடினான், எதுவும் அவன் மனதுக்கு நிறைவாக இல்லை.
இதுப்பற்றி அவன் கவலைக் கொண்டு தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான். சிவனே உன்னையே நம்பியிருக்கும் எங்களுக்கு ஒரு வழி சொல்லமாட்டாயா எனக் கவலையோடு ஏங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு குரல் கேட்டது.
உஞ்சவிருத்திப் பெறும் வைஷ்ணவ அந்தணன் அப்பக்கம் வந்தான். அவனுக்குச் சைவர் வைணவர் எனும் பேதமெல்லாம் இல்லை, மறை ஓதுபவர் அனைவரும் ஒன்றே எனும் தீர்க்கமான கொள்கையில் இருந்தவன், இவர் வீட்டுக்கும் யாசகம் பெற வந்தான்.
அவனைக் கண்டதும் விருபாஷனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அழகான தோற்றம், ஆரோக்கியமான உடல், நல்ல ஞானம், நயமான பேச்சு, கண்களில் ஒரு தீர்க்கம் என நின்றிருந்தவன் திருமணமாகதவன் என்பதை அறிந்த அவன், இவனே சிவன் கொடுத்த வரன் என்பது போல் பெரும் உற்சாகம் கொண்டான்.
சற்று யோசித்த அந்த வைஷ்ணவன் உடனே ஒப்புக்கொண்டான். அந்த உற்சாகத்தில் தன் மகளை, மனைவியினைக் கலந்தாலோசிக்காமல் அவன் கையில் சூரியன் சாட்சியாக நீர் வார்த்துக் கன்னிகாதானம் செய்தான்.
இது அந்தக் குடும்பத்திலும் சொந்தபந்தத்திலும் வருத்தம் ஏற்படுத்திற்று. குலம் எதுவோ, குடும்பம் எதுவோ என விசாரிக்காமல் ஒன்றையும் உறுதி செய்யாமல் பெண்ணை எப்படிக் கொடுக்கலாமென வருத்தம் கொண்டார்கள், அதில் உண்மையும் இருந்தது.
இது கொந்தளிப்பை ஏற்படுத்தினாலும் விருபாஷன் உறுதியாக இருந்தான், மகளை அவனுக்கே கொடுப்பேன் எனப் பிடிவாதமாய் நின்றான்.
சூரியன் சாட்சியாக அவன் கன்னிகாதானம் செய்ததால் வேறு வழியுமில்லை, அந்தணன் கொடுத்த வாக்கை ஒரு காலமும் மீற முடியாது.
இதனால் மகளை அவனுக்கே மணம் செய்து வைத்தான், நிறைய நகைகளும் சீர்வரிசைகள் பல செய்து மகளைக் கணவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அவளும் நிறைவோடுச் சென்றாள். ஆலவாயனைத் தரிசித்து வணங்கிவிட்டு அன்றும் ஒரு சிவனடியார்க்குச் சேவை செய்துவிட்டுத்தான் தன் கணவன் வீட்டுக்குச் சென்றாள், அவள் வாயில் பராசக்தி மந்திரம் ஒலித்துக் கொண்டே இருந்தது.
கணவன் வீட்டில் கால் வைக்கும் போதும் சிவனை நினைந்து கொண்டாள், பராசக்தியினை வேண்டிக் கொண்டு புக்ககம் புகுந்தாள்.
ஆனால், அங்கே மாமியார் மாமனார் நெருப்பாக இருந்தார்கள். ஏதோ மணக்கோலமென்றால் சகித்துக் கொண்டவர்கள் இப்போது அவளின் திருநீற்றையும் உருத்திராட்சமும் கண்டு கொந்தளித்தார்கள், அவர்கள் மிக இறுக்கமான வைஷ்ணவர்கள் என்பதால் இதை ஏற்க முடியவில்லை.
சிவனை வழிபடுவதை நிறுத்தச் சொன்னார்கள். இன்னும் பல நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். அவள் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை, எந்நிலையிலும் அது முடியாது எனத் தொடக்கத்திலே மறுத்தாள்.
வீட்டில் பூகம்பம் வெடித்தது. அவள் மேல் எல்லாக் கொடுமைகளும் சுமத்தப்பட்டன. அவளோ சிவனே என்றபடி எல்லாமும் பொறுத்துக் கொண்டிருந்தாள்.
தினமும் சிவனை வணங்குவதும், அடியார்களைத் தேடிச் சென்று உணவிடுவதுமாக அவள் சிவனில் நிலைத்திருந்தாள்.
மாமனாரும், மாமியாரும் அவளை வார்த்தைகளால் வதைத்தனர். சிவனை வணங்கித்தான் சாபம் பெற்றுக்கொண்டாள், வீட்டுக்கே சாபம் வந்தது என்றெல்லாம் அவளை மனதால் சுட்டார்கள்.
“சுடுகாட்டு ஆண்டி” சிவன், அவனை வணங்கினால் வீடே சுடுகாடாகும் என்றெல்லாம் சொல்லி அவளை மிக மிக மோசமாக வதைத்தார்கள்.
அவளுக்குப் பிறந்த வீடு செல்ல வழியில்லை, புக்ககத்தில் சிறைவாழ்வு, கணவனும் மாமியாருக்கு ஆதரவு எனும் நிலையில் அவள் மனமுடைந்தாள்.
அவளின் ஒரே ஆறுதல் சிவாலயமும், அடியாரைத் தரிசிப்பதும் என்ற நிலையில் அதற்கும் வாய்ப்பில்லை எனும் நிலையில் அவள் மனமுடைந்தே போனாள்.
ஒரு சோமவார நாள் அன்று அவளை வீட்டின் திண்ணையில் விட்டு விட்டு கணவன், மாமனார், மாமியார் என எல்லோரும் வெளியூர் சென்றார்கள், அவள் தன் நிலையினை நினைந்து அழுது சிவனைத் தேடிக்கொண்டிருந்தாள்.
ஒரு குழந்தை இருந்தால் சோகம் தெரியாது, தனக்கு அதுவுமில்லை என மனதால் உடைந்தே போனாள்.
அப்போது வாசலில் ஒரு குரல் கேட்டது, அது ஒரு அடியாரின் குரல்.
“அம்மா, பசிக்கிறது ஏதும் பிட்சையிடுவாயா?”
குரல் கேட்டவள் உருகிப் போனாள், கண்களில் நீர் வழிய கசிந்துருகி நின்றாள். காரணம், அவள் கண்டது சிவனடியார் கோலம்.
வயதான தோற்றம், தலையில் வெண்கொண்டை, நீண்ட வெண்தாடி, கழுத்தெல்லாம் கையெல்லாம் உருத்திராட்சம், இடையில் ஒரே ஒரு ஆடை, நெற்றியிலும் உடலெங்கும் திருநீறு, கையிலோர் திருவோடு என நின்ற அந்தச் சிவ உருவம் கண்டு மண்டியிட்டாள்.
உணர்ச்சியால் மிகுந்து ஐயா வாருங்கள் எனக் கதவை இழுத்தவளுக்கு அதைப் பூட்டியிருக்கும் உண்மை புரிந்தது.
“ஐயா, என் நிலைமையினை நான் எப்படிச் சொல்வேன், எனக்கு உங்களுக்கு உணவிட ஆசை, ஆனால் வெளியில் செல்லும்போது யாரோ கதவைத் தெரியாமல் பூட்டிவிட்டார்கள்” எனத் தன் குலமானம் காத்தபடி சொன்னாள்.
அந்த அடியார் புன்னகைத்தார். “அதனால் என்ன பூட்டில் நீ கை வை” என்றார்.
அவள் கை வைத்ததும் பூட்டு தானே திறந்தது, சித்தர்களுக்கு எல்லாமே சாத்தியம் என அவள் அதை எளிதாகக் கடந்து அவரை உள்ளே அழைத்துக் காலில் விழுந்து வணங்கி திருநீறு பெற்றுக்கொண்டு பூசிக் கொண்டாள்.
நீண்ட தாகத்தில் இருந்தவனுக்குத் தண்ணீர் கிடைத்தது போல் மகிழ்ந்தாள், அவரை உள்ளே அழைத்துச் சென்று பாதம் கழுவினாள், பின் ஆசனத்தில் அமரவைத்துச் சொன்னாள்.
“ஐயா, சில நிமிடம் பொறுங்கள், நான் சமைக்கிறேன்” என்றவள் கொஞ்சம் பழங்களைப் படைத்துவிட்டு சமைக்கச் சென்றாள், மிகப் பவித்திரமாகச் சமைத்தாள்.
அடியார் தியானக் கோலத்தில் அமர்ந்திருந்தார்.
சிவநினைவின் மகிழ்வில் அவள் சமைத்தாள், வீட்டிலோ யாருமில்லை அந்நேரம் ஒரு சிவனடியார் தன் இல்லம் தேடி வந்தது அவளுக்கு மாபெரும் மகிழ்வினைக் கொடுத்தது.
பின் தலைவாழையின் நுனி இலையினை வெட்டி அவருக்கு முன் விரித்து வைத்து உணவுடன் காத்திருந்தாள், அடியார் கண் விழித்ததும் பரிமாறினாள்.
அடியார் உண்ணும்போது அவருக்கு விசிறிவிட்டுக் கொண்டே பரிமாறினாள், அடியார் பெரும் பசியில் இருந்தது போல் உண்டார், அவளுக்கு அது மகிழ்ச்சியாயிற்று.
அவரை அவள் பார்த்துக் கொண்டிருக்க பெரும் அதிசயம் நடந்தது. அந்த இடத்தில் பெரும் வெளிச்சம் சூழ்ந்தது, அந்த வயதான அடியார் மறைந்து இளமையான நபர் தோன்றினார், அவர் உடலெல்லாம் நகைகளும் மாணிக்கமும் ஒளிவீசின.
அவள் அஞ்சி ஒடுங்கினாள், யார் இவரோ எனப் பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாசலில் அவள் மாமியார் வரும் சத்தம் கேட்டது.
“யார் பூட்டைத் திறந்தது, உனக்கு அவ்வளவு திமிரா?” என ஆத்திரத்தில் வந்த மாமியார், அவள் காலடியில் குழந்தை கிடப்பதைக் கண்டு இது யார் குழந்தை என்றாள்.
கௌரிக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை, அவள் சட்டென சுதாரித்து அந்த சிவபக்தனான தேவதத்தன் குழந்தை என்னிடம் கொஞ்சம் கவனிக்கச் சொல்லி கொடுத்தார்கள் எனக் குழந்தையினை எடுத்துச் சமாளித்தாள்.
“சிவனை வணங்கும் குலம் இங்கே வரக்கூடாது, நாங்கள் இல்லா நேரம் கதவைத் திறந்த நீ இங்கே இருக்கக் கூடாது” என ஆத்திரமான மாமியார் கௌரியின் தலைமுடியினைப் பிடித்து வாசலை நோக்கித் தள்ளினாள்.
கையில் குழந்தையுடன் “சிவனே” எனக் கௌரி அலறி, பராசக்தி மந்திரத்தை உரக்கச் சொல்ல அந்தப் பெரும் ஆச்சரியம் நடந்தது, விடைமேல் பார்வதி தோன்றினாள்.
இவள் கையிலிருந்த குழந்தை சிவனாய் மாறி அந்த விடையில் பார்வதி அருகே அமர்ந்தது.
இருவரும் புன்னகைக்க கௌரி அந்த விடை அருகே அழைக்கப்பட்டாள், அதோடு எல்லோரும் மறைந்தனர், கௌரி கைலாயம் அழைத்துச் செல்லப்பட்டாள்.
அவள் மாமியார் நம்பமுடியாத அதிசயத்துடன் இதனைக் கண்டு அப்படியே மயங்கி விழுந்தாள். பின் எழுந்து நடந்ததை எல்லோருக்கும் சொன்னாள். கௌரி மடியில் சிவனே குழந்தையாக வந்து அவளைக் கயிலாயம் அழைத்துச் சென்றதை எல்லோரும் உணர்ந்து அதிசயித்தனர்.
இந்தத் திருவிளையாடல் பல நுணுக்கமான தத்துவத்தைப் போதிக்கின்றது.
முதலில் கல்யாணம் என்பது கர்மா, அந்தக் கர்மத்தில் வரும் துன்பங்களையெல்லாம் சிவனை நினைந்தபடி தாங்கிக் கொண்டாள் அவள், சிவனைக் கொண்டே தன் கர்மத்தைச் சுமந்தாள்.
பராசக்தி மந்திரம் பலன் மிக்கது, அதைச் சொன்னால் நிச்சயம் பிறப்பு அறுபடும்.
ஒருவர்க்கு குழந்தை இல்லை என்பது அவரின் கடைசிப் பிறப்பு, அத்தோடு இந்தச் சுழற்சியில் இருந்து அவர்கள் விடுபடுகின்றார்கள் என்பது இந்துக்கள் நம்பிக்கை, குழந்தையில்லா அந்த கௌரிக்கு இது கடைசிப் பிறவி.
அந்தப் பிறவியில் அவள் பராக்தி மந்திரத்தோடு சிவனைத் தேடியதால் சிவனே ஓடிவந்து அவளைக் கயிலாயம் அழைத்துக் கொண்டார்.
அவளுக்குப் பிள்ளை இல்லாக் குறையினைத் தீர்க்க அவரே குழந்தையாய் வந்து அவளுடன் விளையாடிக் கயிலாயம் அழைத்துச் சென்றார்.
இந்தத் திருவிளையாடல் ஒருவகையில் காரைக்கால் அம்மையார் வாழ்வுக்கு முன்னோடி. சிவன் அம்மா என அழைக்கும் பேறுபெற்ற ஒரே ஒரு பெண் அந்த அம்மையார்தான், அவளுக்கு முன்பே இந்தக் கௌரிக்குக் குழந்தையாகச் சிவன் வந்து அவளைத் தாயாகப் பாவித்தார்.
வீட்டில் அடைபட்டுக் கிடந்த கௌரிக்குச் சிவன் தேடிவந்து தன்னை வெளிப்படுத்தினார் என்பது பிறவிச் சிறையில் கிடக்கும் ஆத்மா தன்னைத் தேடும்போது அதனைத் தேடிவந்து கர்மம் முடித்துச் சிவனே அழைத்துச் செல்கின்றார் என்பதைச் சொல்லும் தாத்பரியம்.
பராசக்தி மந்திரம் எவ்வளவு சக்திவாய்ந்தது, அது அன்னையினைக் கண்முன் இழுத்துவரும் என்பதைச் சொல்லும் திருவிளையாடலும் இதுவே.
உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நல்ல குருமூலம் சோடசி மந்திரத்தைச் சரியான உச்சாடனை மூலம் கற்றுத் தினமும் சொன்னால் நிச்சயம் பிறப்பறுக்கும் வரம் கிடைக்கும். அன்னையே உங்கள்முன் வந்து நிற்பாள்.
நீங்கள் சொல்லமுடியாச் சிறைவாழ்வில் இருக்கலாம், உங்களைப் புரிந்து கொள்ளாமல் எல்லோரும் ஒதுக்கியிருக்கலாம், ஏதோ ஒரு சிக்கலுக்குள் நீங்கள் சிக்கியிருக்கலாம்.
அதெல்லாம் முன் ஜென்ம வினை என்பதை உணர்ந்து மதுரை ஆலயத்துக்குச் சென்று வணங்குங்கள், உங்கள் சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள், பிறவிப் பிணி அகலும்.
குழந்தையில்லாக் கௌரிக்கு எப்படிச் சிவனே கைகளில் சிவனாய்த் தவழ்ந்து அவள் குறையினைத் தீர்த்து வைத்தாரோ அப்படி உங்கள் குறை எதுவாயினும் அந்த ஈசனை, ஆலவாய் நாதனைப் பணிந்து கேளுங்கள். உரிய காலத்தில் நிச்சயம் தீர்த்துவைப்பார். இது சத்தியம்.