திருவிளையாடல் புராணம் 48 :வலைஞன் மகளான வையத்து நாயகி.

திருவிளையாடல் புராணம் 48 :
வலைஞன் மகளான வையத்து நாயகி.

ஒருமுறை கயிலாயத்தில் பார்வதியுடன் தனித்திருந்த சிவபெருமான் அவளுக்கு மிக உயர்ந்த உபதேசங்களைச் செய்து கொண்டிருந்தார். ஆனால், அவள் மனம் போதனையில் லயிக்கவில்லை. மாறாக, எங்கோ எண்ண அலைகளை வீசிக்கொண்டிருந்தாள். அதை உணர்ந்த சிவபெருமான் கடும் கோபம் கொண்டார்.

யாருக்கும் கிடைக்காத அரிய பாக்கியத்தை உனக்குத் தந்தேன் ஆனால் உன் மனம் அதில் லயிக்காமல் பூலோகப் பெண்களின் மனம் போல் ஏதோ எண்ண அலைகளில் சிக்கிவிட்டது, நீ என்னை மதிக்காததாலும் உன் நிலை அறியாததாலும் சாபம் பெறுகின்றாய், பூமிக்கே போ” எனச் சாபமிட்டார்.

நொடியில் பெற்றுவிட்ட அந்தச் சாபத்தினால் பதறிய பார்வதி தேவி கதறினாள், அவள் சிவனிடம் பணிந்து தன்னை மன்னித்துவிடும்படி கெஞ்சினாள்.

கருணையே உருவான சிவபெருமான் அவளுக்கு இரங்கி, “அலையாடும் மனதைக் கொண்டு நீ தவறு செய்ததாலும், பூமியில் கடலாடும் கரையில் பிறக்கக் கடவாய், எந்தச் சாஸ்திரமோ, விரதங்களோ, ஆச்சாரங்களோ இல்லாத மீனவக் குலத்தில் பிறப்பாய். ஆனால், குறித்த காலத்தில் நானே வந்து உன்னை அழைத்துக் கொள்வேன்” என உறுதிக்கொடுத்தார்.

அவள் அப்படி பூலோகம் செல்லக் கயிலாயத்தில் தாய்க்குச் சாபம் கொடுத்த சிவனை நோக்கி அவரின் மகன்களான விநாயகரும், முருகப்பெருமானும் கடும் ஆத்திரம் கொண்டார்கள், நந்தியினை மீறிச் சிவனிடம் வந்தார்கள்.

விநாயகர் நடந்ததைக் கண்டு மனதில் கொதித்து, “இந்த நூல்களால்தானே தாய்க்குத் தண்டனை கிடைத்தது? இந்த நூல்களை உரைக்கும் போதுதான் இந்தக் குழப்பம் வந்தது, இந்த நூல்களே எல்லாவற்றும் காரணம் என அவற்றை கடலில் எறிந்துவிட்டார்

முருகப்பெருமானோ “ஆம், அதேதான் இவைதன் காரணம் எனச் சிவன் கையிலிருந்த சிவஞானபோதம் எனும் நூலை கடலில் எறிந்துவிட்டார்”

இதைக் கண்டு இன்னும் ஆத்திரமடைந்த சிவபெருமான் முருகப்பெருமானை எந்த வாய் சாஸ்திர நூல்களைப் பழித்ததோ அது பூமியில் பேசாதவாயாக பிறக்கட்டும், பின் சாஸ்திரங்களை அறிந்து அதனால் சிறந்து மீளட்டும் எனச் சாபமிட்டார்.

அப்படியே, இருவரையும் தன் அனுமதியின்றி அனுப்பிய நந்தி தேவரை காவலே இல்லாத கடலில் மீனாகப் பிறக்கும்படி சாபமிட்டார்.

அதன்படி முருகப்பெருமான் மதுரை வணிகன் வீட்டில் ஊமையாய்ப் பிறந்தார், அந்த வரலாறு ஊமை, கலகம் தீர்த்த திருவிளையாடலில் ஆழமாக‌ச் சொல்லப்பட்டிருக்கின்றது

நந்தி தேவர் கடலில் சுறாவாகப் பிறந்தார்.

இராமநாதபுரம் உத்திரகோசமங்கை அருகே உள்ள மாரியூரில் ஒரு மீனவன் இருந்தான்; அவனுக்குக் குழந்தையில்லை; நாளெல்லாம் தனக்கோர் மகவு வேண்டி சிவனிடம் வேண்டிக் கொண்டிருந்தான்; அப்படி அவன் வேண்டிக் கொண்டிருக்கையில் கடலோரம் நின்ற தன் புன்னை மரத்தடியில் ஒரு பெண்மகவு அழகாகச் சிரித்தபடி கிடந்ததைக் கண்டவன் ஆசையாய் அதனை வளர்க்கத் தொடங்கினான்.

ஆம், பார்வதி அந்த‌த் தலைவன் மகளாய் அவதரித்தாள். மீனவத் தலைவன் அவளை மிக மிகச் செல்லமாக வளர்த்தான். அந்த ஊரில் அவள் தனிச் செல்வாக்குப் பெற்றவளாய் மிக அழகியாய் அறிவார்ந்தவளாய் வளர்ந்து வந்தாள்.

இந்த இடம் வைகை நதி கண்மாய் பல கடந்து கடலில் விழும் இடமாக இருந்தது, வைகைப் பெரும்பாலும் கண்மாய்க்குள்ளே முடியும் நதி, அது ஆடிமாத வெள்ளத்தில் கண்மாய்களை நிரப்பும் அளவுதான் பெருகிவரும் இதனால் பெரும்பாலும் கடலுக்குச் செல்லாது.

பெரும் வெள்ளம் என்றால் மட்டுமே அது கடல்பக்கம் வரும். இதனால் அந்த இடம் கழிமுகமாக இருந்தது, உப்பளத் தொழிலும் அதிகம் இருந்தது, கலன்களும் வந்து சென்றன‌.

தகப்பனுக்கு உதவியாகப் பணிகளையும் செய்தாள். சங்கு சிப்பிகளும் மீன்களும் உப்பும் முத்தும் இன்னும் பலவற்றோடு வாழும் மக்களைக் கொண்ட அந்தக் கடல்பக்கம் அவர்களோடு அவள் வாழ்ந்தாள், தலைவன் மகள் என்பதால் தகப்பனோடு கண்காணிப்பில் வலம் வந்தாள். அங்கே ஒரு ராணி போல் அவள் நடத்தப்பட்டாள்.

கடலில் விளையாட்டு, படகேறி விளையாட்டு என எல்லாமும் அவளுக்கு அத்துப்படியாயின. கடல்புறத்து மகளிரை போல அவளுக்கு மன தைரியம் இயல்பாய் இருந்தது, தனி அழகும் தைரியமும் கொண்டவளாய் வளர்ந்து வந்தாள்.

அவளைக் குறித்து மீனவத் தலைவனும் மனைவியும் அந்த ஊரும் பெரும் மகிழ்ச்சிக் கொண்டது. காரணம், அவள் சங்கினைக் கொண்டு அழகான அணிகலன் செய்வாள், முத்துக்களைக் கொண்டு பல ஜாலங்களைச் செய்வாள் இன்னும் கடல்சார் பொருட்களில் இருந்து அழகழகான அணிகளும் பலவும் உருவாக்கிப் பெண்களுக்கு கற்றும் கொடுத்தாள். இதனால் ஊரில் வருமானமும் அதிகரித்தது.

மீன்களை மருத்துவ பயன்பாட்டுக்கு எடுக்கும் வித்தைகளைப் பிரித்துச் சொன்னாள். அதாவது, மலையில் மூலிகைகள் எப்படி நோய் தீர்க்குமோ அதே தன்மை கடலின் மீன்களுக்கும் பல தாவரங்களுக்கும் உண்டு, மலை கொண்டிருப்பதை எல்லாம் கடலும் கொண்டிருக்கும்.

அப்படிக் கடலின் மீன்களைக் கொண்டே மருத்துவமும் சொல்லிக் கொடுத்தாள், இன்னும் பல நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தாள்.

அவள் சிவபக்தையாக ஒரு லிங்கம் வைத்து பிரார்த்திக்கவும் செய்தாள், சிவலிங்கத்தைக் காணும்போதெல்லாம் இனம்புரியா மகிழ்வும் ஏக்கமும் அவளில் உருவாகும். கடலோரம் மணலில் லிங்கம் செய்து பூஜிப்பதும், அலை அதை அடிக்க வந்தால் கட்டி அணைத்துக் காப்பதும் அவள் அன்றாட கடமையாயிற்று.

பரதவ குலத்தில் பிறந்த
அவளால் அந்த ஊர் மகிழ்ந்தது. அவள் வளர வளர அங்கு எல்லாமும் வளர்ந்தது. மீனவன் பெரும் செல்வந்தனான். ஊரும் பணக்கார ஊராயிற்று. எங்கிருந்தெல்லாமோ வந்து அந்த ஊரில் வியாபாரம் செய்தார்கள், பெரும் செழுமை உண்டாயிற்று.

சாபம் காரணமாக அவளுக்குத் தான் யார் எனத் தெரியவில்லை. ஆனால், சிவலிங்கத்தைக் காணும்போது தன்னை மறந்து உருகினாள். அதன் காரணம் அவள் அறிந்திருக்கவில்லை.

நாட்கள் சென்றன. மீனவப் பெண்களுக்கே உரிய கொண்டை, கழுத்தில் முத்து மாலை, சங்கு வளையல், காலில் முத்துகளிட்ட தண்டம், பவளத்தில் செய்த அணிகலன்கள் என அவள் அணிந்து, வளர்ந்து குமரியாக நின்றாள்.

தகப்பனின் மிகப்பெரிய கடமை மகளுக்கு நல்ல இடத்தில் வரன் பார்த்து வாழவைப்பது. அந்த மீனவனுக்குள் அந்தக் கவலை உண்டாயிற்று. கரையினைத் தேடி வரும் கலன்கள் போல அவளைத் தேடி பல வரன்கள் வந்தாலும் அவனுக்கு நிறைவில்லை.

அதே நேரம் உரிய காலம் வந்தது. சிவன் பார்வதியினை அழைத்துக் கொள்ள விரும்பினார், அதன்படி கடலில் சுறாவாகத் திரிந்த நந்தி தேவருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி கொம்பன் சுறாவாக வந்தார் அந்த நந்தியம்பெருமான், அக்காலத்தில் கடலில் மூன்றுவகை ஆபத்தான சுறாக்கள் உண்டு. நெட்டைக் கொம்பன் சுறா, குட்டைக் கொம்பன் சுறா, கட்டைக் கொம்பன் சுறா என உண்டு.

இவை கழிமுகம் கடற்பரப்பில் அதிகம் தாக்கும், அங்கே ஆபத்தான நெட்டைக் கொம்பன் சுறா வந்தது.

இது பெயரை கேட்டாலே அலறவைக்கும் ரகம், படகுகளைக் கவிழ்த்துப் போடும், படகில் இருந்தோரைக் கடித்துப் போடும், நீலக் கடலை சிகப்பாக்கிவிடும். மகா ஆபத்தானது.

அப்படி நெட்டைக் கொம்பன் சுறா அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. கடலைக் கலக்கிப் போட்டது, வலைகளை அறுத்துப் போட்டது, கட்டுமரங்களை வாலால் அடித்து உடைத்தது, அதன் அட்டகாசம் பெரிய சிக்கலானது.

கடற்புரத்தில் இதெல்லாம் சாதாரணம். அவ்வப்போது பெரும் சுறாக்கள் இப்படி அட்டகாசம் செய்வதும், பரதவ வீரர்கள் அதனை வலையிட்டுப் பிடிப்பதும், முடியாவிட்டால் ஈட்டி போன்றவைகளைக் கொண்டு வளைத்து நின்று எறிந்து கொல்வதும் வழமை.

இதனைச் சங்ககாலப் பாடலே சொல்லும்.

“அலவனொடு பெயரும் புலவுத்திரை நளிகடற்
பெருமீன் கொள்ளுஞ் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண்சுடர்
முதிரா ஞாயிற்று எதிரொளி கடுக்குங்
கானலம் பெருந்துறைச் சேர்ப்பன்”

எனக் காலம் காலமாக இப்படியான சுறாக்களை வேட்டையாடும் வழமை கடல்புறத்தில் உண்டு. ஆனால், இந்தச் சுறா யாருக்கும் அடங்கவில்லை.

அதற்கு அஞ்சி யாரும் மீன்பிடிக்கச் செல்லமுடியவில்லை. பெரும் கலன்களையே அது அச்சுறுத்தியதில் கடல் கலன்களும் திரும்பி ஓடின‌.

மீனவத் தலைவன் முடிந்தவரை போராடினான், தன் ஆட்களை அழைத்துக் கொண்டு அதனைச் சுற்றி நின்று வலைவீசினான். அது வலையினை அறுத்து ஓடியது.

அப்படிச் சுற்றி நின்று ஈட்டி எறிந்தால் அது மின்னல் வேகத்தில் மறைந்து ஆழமான கடலுக்குச் சென்று சற்று தள்ளி எதிர்பட்டு அவர்களை மிரட்டியது, எந்த முயற்சியும் அதன் முன் வெல்லமுடியவில்லை.

அதனை நடுக்கடலை விட்டு ஆழம் குறைந்த கடல் பக்கம் இழுத்து வந்து பிடிக்கும் முயற்சிக்கும் அது கட்டுப்படவில்லை.

பெரும் பெரும் அட்டகாசங்களை அது செய்ய ஊரே வாடிப்போயிற்று. எல்லோரும் கடலை ஏக்கமாய்ப் பார்க்கும் போதே அது திடீரென துள்ளிக் கடலில் இருந்து பெரும் பாறை எழுவது போல் எழுந்து பெரும் அலையினை எழுப்பி எச்சரித்தது.

மீனவத் தலைவன் சோர்ந்து போனான். இந்தச் சுறாவினை அடக்குபவனுக்கு பெரும் பணம் அன்பளிப்பு என அறிவித்தான். யாரும் வரவில்லை. கடைசியில் இந்தச் சுறாவினைப் பிடிப்போர்க்குத் தன் மகளையே திருமணம் செய்து தருவேன் என அறிவித்தான்.

அதைக் கேட்டு யார் யாரோ வந்து முயன்றார்கள். ஆனால், சுறா போக்குக் காட்டியது. சிலர் மயிரிழையில் உயிர்த்தப்பி ஓடினார்கள்‌

இதுபற்றி எல்லோரும் கவலை கொண்டிருக்கும் போதே ஒருவன் தன் உதவியாளனோடு தொலைவில் நடந்து வந்தான்.

நல்ல சிவப்பான அவன் கரிய துணியினை இடுப்பில் கட்டியிருந்தான்; கை கால்களில் வெள்ளிக் காப்பு தண்டமாகக் கிடந்தது. தலையில் மீனவர்கள் கடல்காற்றுக்கும் தங்கள் அடையாளத்துக்கும் அணியும் கூம்புதுணியினைக் கட்டியிருந்தான். அந்தத் துணிக்குள் கொண்டை மெல்லத் தெரிந்தது, காதில் வளையம் இடப்பட்டிருந்தது.

முறுக்கு மீசை, குறும்பும் நிறைவும் கர்வமும் கொண்ட பார்வை, இதழ்களில் ஒரு சிரிப்பு என நின்ற அவனின் தோளில் சிறிய தூண்டில் இருந்தது.

அவன் அருகே குட்டையான ஒருவன் வலை சுமந்து வந்து கொண்டிருந்தான்.

இருவரும் கடலோரம் கவலையுடன் அமர்ந்திருந்த மீனவத் தலைவனிடம் வந்தார்கள். ஊருக்குப் புதியவர்களான அவர்களை நோக்கிக் கவலையுடன், “யார் நீங்கள்?” என்றான்.

“ஐயா, நாங்கள் மதுரையினைச் சேர்ந்தவர்கள்; வலைவீசி மீன்பிடிப்பது என் தொழில்; எங்குச் சென்றாலும் வேலை இல்லை. எனக்குத் தொழில் தெரியும் ஆனால் படகு இல்லை. அதற்கான வசதியெல்லாம் இல்லை, யாரும் வேலை கொடுத்தால் கடல்தொழில் செய்வேன். இங்குவாய்ப்பு இருக்குமா எனக் காண வந்தேன்” என்றான்.

“உனக்கு வேலை தர ஆசைதான் ஆனால் இந்தக் கடலில் கொடுஞ்சுறா ஒன்று அட்டகாசம் செய்கின்றது, நாங்களே அதை நினைந்து கவலையில் இருக்கின்றோம், அது இன்னும் செல்லவில்லை.

அதனைப் பிடிப்போர்க்குப் பெரும் பணம் எனச் சொல்லியும், என் மகளைத் திருமணம் செய்து தருவேன் எனச் சொல்லியும் யாரும் அந்தச் சுறாவினைப் பிடிக்க முன்வரவில்லை.

இந்நிலையில் எப்படி உனக்கு உதவுவது?” என்றான்.

“நான் முயற்சிக்கின்றேன் ஐயா” என்றவன் தன் உதவியாளன் தலையில் இருந்த வலையினை வாங்கித் தோளில் போட்டுக் கொண்டு கட்டுமரத்தில் ஏறினான், ஏறுமுன் அவனோடு நின்றிருந்த அவன் மகளை ஒரு பார்வை பார்த்தான்.

அவளோ யாரோ அந்நியன் என முகத்தை திருப்பிக் கொள்ள அவன் புன்னைத்துக் கொண்டான்.

எல்லோரும் சேர்ந்து அவனைக் கடலுக்குள் தள்ளினார்கள், அவன் சிரித்துக் கொண்டே வலையினைக் கையில் எடுத்தான், எல்லோரும் என்ன நடக்குமோ என அஞ்சினார்கள்.

அவன் கடலுக்குள் சென்ற உடன் அந்தச் சுறா வெளிப்பட்டது, வெகு ஆவேசமாக தன் முகம் வெளித்தெரிய அவனை நோக்கி வந்தது.

கரையில் நின்றோரெல்லாம் அலறினர், இப்போது அவனைச் சுறா கொன்றுவிடும் என முகத்தை பொத்திக் கொள்ள முனைந்தார்கள்.

அவனோ தன் வலையினை எடுத்து வீசினான், வலையில் சரியாக சுறா சிக்கியது. பின், அதகளம் செய்தது. அவன் தன் பலத்தால் வலையினைச் சுருக்கிப் பிடித்து இழுத்தான். சுறா அவனுக்குக் கட்டுப்பட்டுச் சுருண்டது.

அதுவரை அத்தனைபேர் சேர்ந்தும் அடக்கமுடியாத கொல்லமுடியாத சுறாவினை இவன் தனி ஆளாகப் பந்து போல் கரைக்கு இழுத்து வந்தான், படகில் வலையினைக் கட்டி தானே ஓட்டி வந்தவனைக் கண்டு கடற்கரையில் எல்லோரும் பணிந்தனர்.

சுறாவினை இழுத்துக் கரையில் போட்டான், 50 அடி நீளமுள்ள அந்தக் கொம்பன் சுறா மலை போல் கிடந்தது.

எல்லோரும் நம்பமுடியா அந்த அதிசயத்தைக் கண்டனர், அவனைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினர், பின் மீனவத் தலைவன் முன் சொன்னபடியே தன் மகன் அவளுக்கு எனச் சொல்லி அவள் கரத்தைப் பிடித்து அவனிடம் கொடுத்தான்.

அவள் அவன் சாகசத்தைக் கண்டு மயங்கித்தான் நின்றாள், யாராலும் அடக்கமுடியாக் கொடும் சுறாவினைத் தனி ஒருவனாக அவன் இழுத்து வந்தபோது சொக்கிப் போனாள்.

அப்படியே அவன் கரத்தை அவள் நாணத்துடனும் பெருமையுடனும் பற்றியபோது அந்த அதிசயம் நடந்தது.

இருவரும் சடுதியில் மறைந்தார்கள், அங்கே வெளிச்சம் உருவாகி அந்தரத்தில் விடைமேல் சிவனும் பார்வதியுமாகக் காட்சிக் கொடுத்துச் சொன்னார்.

“அன்பனே, மகவு இன்றி தவித்த உனக்கு உன் புண்ணிய ஜென்ம வரத்தின்படி அம்பிகையே மகளாக வந்தாள், நாமே இங்கு மீனவனாக வந்தோம், சுறாவாக வந்தவர் நந்தியம்பெருமான்.

நீங்கள் உங்கள் பூலோக கடமையினை முடித்துவிட்டு கயிலாயம் வரக்கடவீர்கள்” எனச் சொல்லி மறைந்தார்.

பின் சிவனும் பார்வதியும் உத்திரகோசமங்கை தலம் ஏகினார்கள், அங்கு மீதமான எல்லாச் சாஸ்திர விதிகளையும் சிவன் அன்னைக்கு ஓதினார், அப்படியே அங்கிருந்த அறுபதினாயிரம் அடியார்களுக்கு முக்தி அளித்து மதுரை ஆலயம் திரும்பினார்கள்.

இதுதான் வலைஞன் மகளாக வந்த திருவிளையாடல்.

இந்தத் திருவிளையாடல் மிகுந்த நுணுக்கமான சில போதனைகளைச் சொல்கின்றது.

முதலில், விநாயகப்பெருமானின் மகிமை, பார்வதிக்கும் முருகனுக்கும் சாபமிட்ட சிவனால் விநாயகருக்கு சாபமிட முடியவில்லை, அதாவது விநாயகரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சிவனுக்கே இல்லை.

சிவன் குருவாக நின்று அன்னைக்கு உபதேசம் செய்யும்போது அவள் அசட்டையாக இருந்தாள், குரு உபதேசம் செய்யும் நேரம் முழு விழிப்பு அவசியம், இல்லாவிட்டால் அது சாபமாகும் என்பதையும் இந்தத் திருவிளையாடல் சொல்கின்றது.

நந்திதேவர் தன் கடமையில் சரியாக இல்லாமல் விநாயகரும் முருகனும் உள்ளே செல்ல அனுமதித்தார், கடமை தவறுதல் அதில் சமரசம் செய்தல் பெரும் பாவம் என்பதையும், அது தண்டனைக்குரியது என்பதையும் இந்தத் திருவிளையாடல் சொல்கின்றது.

இன்னும் ஆழமாக நோக்கினால் ஒரு ஞானதாத்பரியத்தையும் அது போதிக்கின்றது.

அதாவது இந்துமரபில் நால்வகை வர்ணங்களில் முதல் மூன்று வர்ணத்துக்கு சாஸ்திர சம்பிரதாயம் அவசியம், ஆச்சாரம், விரதமெல்லாம் அவசியம்.

யார் சூரியன் முன் நாளெல்லாம் நிற்பார்களோ அவர்களுக்கு விரதமில்லை, நோன்புமில்லை, ஆச்சாரமுமில்லை. காரணம், சூரியன் முன் நிற்பவர்கள் கடமையினைச் சரியாக செய்வதால் எதுவும் அவர்களுக்கு அவசியமில்லை, அவர்கள் சூரியனைச் சிலநொடி வணங்கினாலே போதுமானது.

இது மற்ற மூவகை வர்ணமும் பெரிது, கடைசி வர்ணம் கீழானது என்ற நோக்கில் சொல்லப்படவில்லை. மாறாக, அவர்கள் இந்த சாஸ்திர சம்பிரதயாமெல்லாம் கடந்த உயர்நிலைக்குச் சென்றுவிட்டார்கள், அவர்கள் பணியும் வாழ்வும் உழைப்பும் தவமும் உன்னதமுமானது என்பதால் அங்கு அவர்கள் தங்களைப் புனிதப்படுத்த ஏதும் செய்ய அவசியமில்லை.

இதனாலே சூரியன் முன் உழைப்போர்க்கு எந்த நியதியும் இல்லை, விதி இல்லை. காரணம் அவர்களை வழிநடத்த அவசியமில்லை. சூரியன் முன் கர்மா தொலைக்கும் அவர்களுக்குத் சொல்லித்தர எதுவுமில்லை.

அதைத்தான் ஆழமாகப் போதிக்கின்றது இந்தத் திருவிளையாடல்.

கடல், சுறா என இது லௌகீக அடையாளத்தைப் போதித்தாலும் அது ஆழமான தாத்பரியங்களையும் போதிக்கின்றது.

இந்தப் பிறவி எனும் கடலில் மாயச் சுறாக்கள், மாய ஆசைகள் நிரம்ப உண்டு. அவை இந்தப் பிறவியில் நாம் ஈடேறாதபடி அவை மாய்மாலம் காட்டி முடக்குகின்றன, இழுத்துப் போட்டு வீழ்த்துகின்றன‌.

மாயைகள் சுறாக்கள் போல் சுற்றும் இந்தப் பிறவிக் கடலில் ஈசனைத் தொழுதால் அவனை வேண்டினால் ஈடேற்றம் பெறலாம். ஒவ்வொரு ஆத்மாவும் அவரிடம் இருந்தே இங்கு வந்துள்ளது அவரை நாம் தேடும்படி வாழ்க்கை கடலில் ஏகப்பட்ட சிக்கல்களும் வருகின்றன‌.

அந்தச் சிக்கல்களிடையே இருந்து நம்மை மீட்க சிவன் வலையோடு வருவார், நம் மாய மயக்கங்கள் குழப்பங்கள் சிரமமெல்லாம் அவரே வலைபோட்டு அள்ளிச் சென்று நம்மைக் காப்பார் என்பதைச் சொல்லும் திருவிளையாடல் இது.

உங்கள் வாழ்வின் சிக்கல் எதுவாகவும் இருக்கட்டும், நீங்கள் அச்சப்படும் விஷயம் உங்களைப் பயமுறுத்தும் விஷயம் எதுவாகவும் இருக்கட்டும், வாழ்க்கை கடலில் உங்களை பயணிக்கவிடாதபடி மிரட்டுவது எந்தப் பெரிய விஷயாகவும் இருக்கட்டும், அவற்றில் இருந்தெல்லாம் விடுதலை தந்து உங்களைக் காக்க சிவன் உண்டு, நிச்சயம் உண்டு என்பதை இந்தத் திருவிளையாடல் சொல்கின்றது.

இது நடந்த இடம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடலாடி அருகே உள்ள மாரியூரில், ஒரு சித்திரை பௌர்ணமி அன்று இந்தத் திருவிளையாடல் நடந்தது.

அதனால் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் கடலில் வலையிட்டு சுறாபிடிக்கும் காட்சி உண்டு, கடலில் சுறா சிலையினைச் சிவாச்சாரியார் படகில் சென்று வலையிட்டு இழுத்து வருவதும், பின் அங்கிருக்கும் பூவேந்திரநாதர் கோவிலில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருக்கல்யாணம் நடப்பதும் வழமை.

உத்திரகோச மங்கை ஆலயம் செல்லும் போது கடலாடி அருகே இருக்கும் இந்தச் சிவாலயத்தைக் காண மறவாதீர்கள்.

அது மானிடர்களைத் தேடி ஆத்மாக்களைத் தேடிச் சிவனே வந்த புண்ணியபூமி, மாய ஆசைகளைச் சுறாவடிவில் நந்திய பெருமானே வந்து நடித்து தந்த பூமி.

அங்குச் சென்று வணங்குங்கள். உங்கள் வாழ்க்கை பயணத்தில் வரும் எல்லாத் தடைகள் ஆபத்துக்கள் மிரட்டல்களை எல்லாம் சிவனே காத்து உங்களை வழிநடத்தி இம்மையில் பெருவாழ்வும், மறுமையில் மோட்ச பாக்கியமும் தருவார். இது சத்தியம்.