திருவிளையாடல் புராணம் : 49அகத்தியர் சொன்ன திருஆலவாய்ச் சிறப்புகள்.

திருவிளையாடல் புராணம் : 49
அகத்தியர் சொன்ன திருஆலவாய்ச் சிறப்புகள்.

இந்தப் பாகம் மதுரை எனும் மாபெரும் தலத்தின் சிறப்பு பற்றிப் பேசுகின்றது, அதன் சிறப்பைச் சொல்லித்தான் அதன் மாபெரும் கீர்த்தியினைச் சொல்லித்தான் அகத்திய மாமுனிவர் திருவிளையாடல் புராணத்தை போதிக்கின்றார்.

அவ்வகையில் திருவிளையாடல் புராணம் இங்கிருந்துதான் தொடங்குகின்றது, அந்தப் மாபெரும் புண்ணிய ஷேத்திரத்தின் பெருமையினை அகத்தியப் பெருமான் மொழிகளிலே காணலாம்.

கைலாய மலையில் சிவபெருமான் பார்வதியுடன் வாழும் திருக்கோவில் முன் ஓர் தடாகம் உண்டு, அதன் பெயர் சிவ தீர்த்தம். அதன்கரையில் தேவதச்சன் விசுவகர்மா எழுப்பிய ஆயிரங்கால் மண்டபம் ஒன்று உண்டு.

கயிலாயம் செல்லும் ரிஷிகளெல்லாம் அங்குத் தங்கியிருப்பார்கள், அப்படி இறைவனை தரிசிக்க வந்த‌ சூத முனிவர் அங்கே தங்கியிருந்தார். அந்நேரம் அப்போது சம்புபத்தர், சதானந்தர், உத்தமர், மஹோதார், உக்கிரவீரியர், பிரசண்டர் முதலான மஹரிஷிகளெல்லாம் சிவதீர்த்தத்திலே நீராடி மண்டபத்தில் அமர்ந்து இறைவனைத் தியானித்தனர்.

அவர்கள் அங்கே வீற்றிருந்த சூத முனிவரைப் பார்த்து மகிழ்ந்தார்கள். காரணம், சூத முனிவர் எல்லா ஞானதாத்பரியங்களையும் அறிந்தவர்; சிவனையும் அவரின் தலங்களின் பெருமை எல்லாம் உணர்ந்தவர்; பெரிய மகரிஷி; அதனால் அந்தத் திருகைலாயத்தில் அவரிடம் இன்னும் பல விளக்கங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.

அதனால் கேட்டார்கள், “முனிகளில் மூத்தவரே, தாங்கள் ஈசன் இருப்பிடம் கொண்டிருக்கும் மேருமலை, மந்தரமலை, கைலை மலை, ஸ்ரீ சைலம் முதலான புண்ணியப்பதிகளைப் பற்றிய சிறப்புக்களை எங்களுக்கு முன்பு எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.

அந்தத் தலங்களிலெல்லாம் சிறந்ததாகவும், தீர்த்தங்களுள் மேலானதாகவும், வேண்டிய வரங்களை அளிக்கக் கூடிய மூர்த்தியை உடையதாகவும். இம்மூன்றையும் ஒன்றாய்க் கொண்ட ஆகச் சிறந்த‌ பதியைப் பற்றி எமக்குக் கூற வேண்டும்” என்று வேண்டினார்கள்.

சூத முனிவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். “முனிவர்களே, ஈசன் எழுந்தருளிய தலங்களில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையாலும் சிறந்து விளங்கும் உயர்ந்த பதி ஒன்று உள்ளது. அதைப் பற்றிக் கூறுகிறேன். கேளுங்கள்.

புராணங்கள் பதினெட்டு, அவற்றுள் சிறந்தது கந்த புராணம், அது ச‌னத் குமாரசங்கிதை, குத சங்கிதை, பிரம்மசங்கிதை, விஷ்ணு சங்கிதை, சங்கர சங்கிதை, சூரிய சங்கிதை என ஆறு பகுதிகளைக் கொண் டது.

சிவபெருமான் தேவி முன் எடுத்துக் கூறியது சங்கர சங்கிதை ஆகும். அந்நேரம் முருகப்பெருமான் தாயின் மடியில் வீற்றிருந்து அதைக் கேட்டார். பின்னர், அதை அகத்திய முனிவருக்கு அவர் உபதேசம் செய்தார். அது முதல் அகத்தியசங்கிதை என அது வழங்கப் பெறுகிறது.

அந்தச் சங்கீதையில் அத்தலம் திருவாலவாய் எனச் சொல்லப்படுகின்றது” என உரைத்த முனிவர் மேலும் தொடர்ந்தார்.

“ஒரு சமயம் பிரம்மன் காசி க்ஷேத்திரத்திலே தம் புத்திரர்களோடு பத்து அஸ்வமேதயாகம் செய்தார். அகத்தியர், வியாசர், நாரதர், சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், கௌதமர், பராசரர், வாமதேவர், வால்மீகி, வசிஷ்டர், சூதர் முதலான முனிவர்கள் அந்தப் பெரும் யாகத்துக்கு வந்திருந்தனர்.

யாகங்கள் முடிந்ததும் பிரம்மன் முனிவர்களிடம் விடைபெற்று தன் இருப்பிடமான‌ சத்திய லோகம் சென்றார்.

முனிவர்கள் அனைவரும் காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு அங்கே உள்ள முக்தி மண்டபத்தில் தட்ச‌ணாமூர்த்தி சந்நிதியில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்கள் நாரதமுனிவரைப் பார்த்து, “நாரதரே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் மேலானதாய் விளங்கும் சிவதலத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என‌க் கேட்டனர்.

அவரோ அதன் பெருமையினை என் வாயால் உரைப்பது சிரமம் எனச் சொல்லி அங்கேயிருந்த வியாசரைப் பார்த்தார். வியாசரோ, “இதனைப் போதிக்க‌ முருகப் பெருமானிடம் சகல கலைகளையும் சுற்றுணர்ந்த அகத்தியரே சரியானவர்” எனச் சொல்லி அவரை நோக்கினார்.

அதனால் எல்லா முனிவரும் அகத்தியரை நோக்கி வணங்க அகத்தியர் அவர்கள் மேல் இரக்கம் கொண்டு சொல்லத் தொடங்கினார், அவர் முதலில் தம் மனதில் விநாயகரையும், முருகனையும் தட்சணாமூர்த்தியையும், சோம சுந்தரப் பெருமானையும், அங்கயற்கண்ணி அம்மையையும் தியானித்தார்.

அப்படியே அவர்கள் அமர்ந்திருந்த முக்தி மண்டபத்திலே வந்து உயிரை விட்டு முக்தியை அடைந்த நான்கு கோழிகளையும் தியானித்தார்.

அந்த முக்திமண்டபத்துக்கும், நான்கு கோழிகளுக்கும் தொடர்பு இருந்ததால் அப்படித் தியானித்தார்.

அதாவது, முன்பு காசியிலே மாகநந்தன் என்ற அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் தன் குலதர்மத்தை மறந்து அதனைக் கைவிட்டு கொடிய தொழில் அத்தனையும் செய்தான். அவனால் அந்த மக்கள் பெரும் தொல்லைகளை அனுபவித்தார்கள்.

அதனால் எல்லோரும் கூடி அவனைக் குடும்பத்தோடு விரட்டினார்கள். அவனுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உண்டு. இதனால் அவன் தன் மனைவி மக்களோடு கீகடதேசம் தோக்கிச் செல்லும் போது காட்டிலே கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அனைவரும் உயிரிழந்தார்கள்.

அவர்கள் உயிர்விடும் போது தங்கள் சொந்த ஊரான காசியை நினைத்துக் கொண்டு உயிர் விட்டதால் அவர்கள் கோழிகளாக ஜன்மம் எடுத்தாலும் பூர்வஜன்ம நினைவுடன் இருந்து வந்தார்கள். அந்தணன் சேவலாகவும், அவன் மனைவி பெட்டையாகவும், இரு குழந்தைகளும் இரு குஞ்சுகளாகவும் பிறந்தார்கள்.

பூர்வஜென்ம வாசனையால் அவர்கள் நால்வரும் காசியாத்திரை செல்வோரைப் பின் தொடர்ந்து காசிக்கு வந்து விஸ்வநாதர் ஆலயத்தின் வடக்கு பக்கம் உள்ள மண்டபத்திலே தங்கி அங்கே தங்கள் கர்மம் கழித்து முக்தி அடைந்தனர்.

இதனால் அந்த மண்டபத்துக்கு முக்தி மண்டபம் எனப் பெயர், அங்கிருந்துதான் சொல்ல தொடங்கினார் அகத்திய முனிவர்.

“முனிவர்களே, சிவபெருமான் உமா தேவிக்கு அருளிச் செய்த சங்கர சங்கிதையை முருகப் பெருமான் எனக்கு உபதேசம் செய்தார். அதில் பூலோக சிவலோகம் எனப்படும் திருவாலவாய் என்ற சிவதலத்தை மிகவும் சிறப்பாகக் கூறியிருக்கிறார்.

அந்நகரிலே ஈசன் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்தியிருக்கிறார். அந்நகரின் சிறப்பையும் அத்திருவிளையாடல்களையும் உங்களுக்குக் கூறுகிறேன்.

திருமாலுடைய வடிவம் பூமி என்றால், பாண்டிய‌ நாடு திருமாலின் நாபிக்கமலத்தைப் போன்றது. மலரிலே உள்ள முகடு தாமரை, அந்த முகட்டிலே பிரம்மனைப் போன்று சிறப்பு பெற்றது பொதிகை மலை, அங்குதான் நான் தங்கியிருக்கின்றேன், முத்தமிழை அங்கிருந்தே அருளினேன்.

அந்தப் பொதிய மலை அமைந்திருக்கும் பர்வதங்களில் பல நதிகள் ஓடுகின்றன‌. அதன் ஓடும் ஜாம்பூ நதியைப் போன்ற வேதநதியான வைகைக் கரையிலே சிவலோக வடிவமாகத் திருவாலவாய் அமைந்திருக்கிறது.

பாண்டிநாடு என்ற பெண்ணுக்குத் திருப்பரங்குன்ற‌மும் திருக்கொடுங்குன்றமும் (பிரான்மலை) ஸ்தனங்கள், திருச்சுழியல் என்ற தலம் வயிறு, திருக்குற்றாலம் அவளுக்கு நாபி.

அவள் கைகள் திருவேடகம், தோள்கள் திருநெல்வேலி, திருப்புவனம் அவளுக்குத் திருமேனி.

அப்படியான பாண்டியநாட்டுக்கு மதுரையம்பதியே அழகிய‌ திருமுகம், அப்படியான அந்த மதுரை அன்னையின் யோகபீடமுமாகும், அது சரஸ்வதிக்கு வெண்தாமரை, லட்சுமிக்குச் செந்தாமரை.

அதாவது, கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் அள்ளித் தரும் பதி அது, அந்த நகரமே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையாலும் சிறந்து விளங்கும் திருவாலவாயாகும்.

அந்நகரிலே இறைவன் திருவருளால் ஏழு கடல்களும் (உவர்நீர் கடல், நன்னீர் கடல், பாற்கடல், தயிர்க்கடல்,
நெய்க்கடல், கரும்புஞ்சாற்றுக்கடல், தேன்கடல்) தர்ம‌ வடிவ தீர்த்தமாக வந்து அமைந்துள்ளன.

அந்நகரைச் சுற்றிலும் பெரும் புறக்கடலே வந்தது போல் அகழி அமைந்திருக்கிறது. சோம சுந்தரப் பெருமான் கரத்தில் அணிந்திருக்கும் நாகம் அந்நகரத்திற்குக் காவல் மதிலாக உண்டு.

அந்நகரத்திலே நால்வகை வர்ணத்தவரும் தங்கள் பணிகளை அயராது ஆர்வமோடு செய்து வருவார்கள். மறையவர் வீதியிலே அவர்கள் ஓதும் வேத கோஷங்கள் எழுந்து கேட்பவர் உள்ளத்தை ஆனந்தத்தில் ஆழ்த்தும் வலிமை கொண்டது. அந்நகரின் மையத்திலே கடம்ப மரத்தைத் தன்னகத்தே கொண்டு கோபுரங்களோடு கூடிய சோம சுந்தரப்பெருமானின் திருக்கோயில் அமைந்துள்ளது.

திருவாலவாய்க்கு இணையாக ஒரு தலமும், பொற்றாமரைத் தடாகத்திற்கு நிகரான தீர்த்தமும், சோமசுந்தரப் பெருமான் என அழைக்கப்படும் சிவலிங்கத்துக்கு ஒப்பான சிவலிங்கமும் மூவுலகங்களிலுமில்லை.

புண்ணியம் தரக் கூடியவைகளாக விளங்கும் சிவத்தலங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றுள் கைலாயம், திருக்கேதாரம், ஸ்ரீசைலம், கோகர்ணம், காசி, திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விருத்தாசலம், சிதம்பரம், திருவெண்காடு, திருவாரூர், வேதாரண்யம், மதுரை, இராமேஸ்வரம் என்ற இந்தப் பதினாறும் சிறந்ததாகக் கூறப்படு கின்றன.

அவற்றிலும் சிதம்பரம், காசி, திருக்காளத்தி, மதுரை என்ற நான்கும் மேலானதாம். அந்த நான்கிலும் திருவாலவாய் எனப்படும் மதுரையே மிகவும் உத்தமமானது .

சிதம்பரம் தரிசித்தவர்களுக்கு முக்தியை அளிக்கும். திருக்காளத்தியில் ஈசனைப் பக்தியோடு வழிபட்டால் முக்தி உண்டு. காசியில் தங்கி அங்கே இறப்பவர்களுக்கு முக்தி உண்டு.

ஆனால், மதுரை எனும் பெயரைச் சொன்னாலே போதும் முக்தி உண்டு, மற்றத் தலங்களுக்கு முன்பு சிவன் உருவாக்கிய அற்புதத் தலம் இதுவே, அவர் முதலில் குடியேறிய தலமும் இதுதான்.

மற்றத் தலங்களில் அஸ்வ மதம், வாஜபேயம், ஷோடஸாகம், அக்கினிஷ்டோமம், இராஜகுருயம், யாகங்களைச் செய்வதால் உண்டாகும் பலனும் தரிச பூரணம் முதலான கிரியைகளைச் செய்வதால் ஏற்படும் ப‌லனும், எள், நெய், அன்னம், குதிரை, தேர், யானை, வீடு, வெள்ளி, பசு, பொன், ஆடை, ஆபரணங்கள், விளைநிலம் முதலிய தானங்களைச் செய்வதால் வரும் பலனும், சிவத்தலங்களைத் தரிசிப்பதால் வரும் பலனும், கங்கை, யமுனை, ஸரஸ்வதி, காவேரி, கிருஷ்ணா, துங்கபத்திரை, யாலி, தாமிரபரணி முதலிய புண்ணிய நதிகளில் நீராடுவதால் கிடைக்கக் கூடிய பலனும், மதுரையம்பதியில் வாழ் பவர்களுக்குத் தாமாகவே கிட்டுகின்றன.

பஞ்சமா பாதகங்களைச் செய்த பாவிகள் மதுரையை அடைந்து அங்கே வசிப்பதால் அப்பாதகங்களிலிருந்து விடுபடலாம். மதுரையிலே ஓர் இரவு தங்கி உணவு அருந்துவதால், பிற தலங்களிலே மாதந்தோறும் சாந்திராயண விரதம் அனுஷ்டித்த பலனைப் பெறலாம்.

மற்ற தலங்களிலே ஒருமாதம் உபவாசம் இருப்பதால் பெறக் கூடிய பலனை மதுரையிலே ஒருநாள் உபவாசம் இருப்பதால் அடையலாம். மதுரையிலே கடைப்பிடிக்கும் ஒருநாள் அஷ்டமி விரதம் வேறு தலங்களிலே நான்கு மாதம் விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம், மதுரையில் கடைபிடிக்கப்படும் ஒரு சோமவார விரதம் மற்றத் தலங்களில் ஆறு மாதங்கள் அனுஷ்டிப்பதற்கும் சமம்.

இதர தலங்களிலே ஓராண்டு காலம் உபவாசத்தோடு விரதம் கடைபிடித்து அடையும் பலனை, மதுரையிலே சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் அடையலாம்.

இங்கு அந்தணர்களுக்கு ஒரு பிடி அரிசியும், தபஸ்விகளுக்கு ஒருபிடி அன்னமும் கொடுப்பதானது ஷோடசதானங்களைச் செய்த பலனைத் தரும்.

ஒரு சமயம் பிரம்மன் மதுரையினைத் தராசில் ஒரு தட்டிலும் திருக்கைலாயம் மற்றும் உள்ள எல்லாத் தலங்களையும் மற்றொரு தட்டிலும் வைத்துத் தூக்கிய போது மதுரை இருந்த தட்டு அதிகம் கனத்தது, அது மதுரையின் சிறப்பைச் சொல்லிற்று.

சிவநகரம் கடம்பவனம், ஜீவன் முக்திபுரம், கன்னிபுரம், சமஷ்டிவிச்சா புரம், நான்மாடக்கூடல், துவாத சாந்த தலம் என்றும் அம்மதுரை அழைக்கப்படும்.

இந்தத் தலத்தில் முதலில் குடியேறிய ஈசன் இதனையே தன் இருப்பிடமாகக் கொண்டிருந்தார், இங்கிருந்துதான் தேவியுடனும் தன் பூதகணங்களுடனும் நந்தியுடனும், சகல லோகங்களுக்கும் சென்று வரமருளி வந்தார்.

ஒருநாள் அவர் தன் தேவியோடு அந்த‌ மூர்த்தத்தில் அதாவது அந்தச் சிவலிங்கத்தில் மறைந்து கலந்துவிடத் தயாரானார், அந்நேரம் நந்தி முதலாலோர் அவரிடம் பணிந்து கேட்டார்கள்.

“பெருமானே, தாங்கள் சாந்நித்யம் கொண்டிருக்கும் இந்தச் சிவலிங்கத்திற்கு நாள் தோறும் திருமஞ்சனம் செய்ய நாங்கள் ஆசைப்படுகிறோம். எம்பெருமான் திருப்பணிக்கு உதவவும், நாங்கள் நீராடவும் புண்ணிய தீர்த்தங்கள் ஏதும் இங்கு இல்லை. தாங்கள் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அருளவேண்டும்” என வேண்டினார்கள்.

ஈசன் அக்கோரிக்கையை ஏற்று சிவலிங்கத்தின் கிழக்குத் திசையிலே சூலத்தை பூமியில் ஓங்கி ஊன்றினார். பாதாளம் வரை அது பாய்ந்ததில் ஊற்று நீர் பொங்கி மேலே வந்தது. பின் ஈசன் தம்முடைய திருமுடியில் இருந்த கங்கையில் சில துளிகளை எடுத்து அந்நீரிலே தெளித்து அதை ஒரு புண்ணிய தீர்த்தமாகச் செய்தார்.

பின்னர், அவர்களைப் பார்த்து, “எல்லாத் தீர்த்தங்களுக்கும் முன்னதாக இது உண்டாக்கப்பட்டதால் ஆதி தீர்த்தம் என்றும், மற்ற தீர்த்தங்களுக்கு மேலானதாக விளங்குவதால் பரம தீர்த்தம் என்றும் அழைக்கப்படும்.

இதில் நீராடுபவர்களுக்கு சர்வ மங்களமும் ஏற்படும் என்பதால் சிவ தீர்த்தம் என்றும், ஞானத்தைக் கொடுப்பதால் ஞானதீர்த்தமென்றும், முக்தியைத் தருவதால் முக்தி தீர்த்தம் என்றும் அழைக்கப்படும்.

இதிலே நீராடி பித்ருகளுக்குத் தர்ப்பணம் அந்தணர்களுக்கு தானம் கொடுத்து, பஞ்சாக்ஷரத்தை பக்தியோடு ஜெபிப்பவர்கள் சிவலோகத்தை அடைவார்கள்.

பதினான்கு லோகங்களிலும் உள்ள தீர்த்தங்களால் என்னை அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலனை, இத்தீர்த்தத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வதால் அடையலாம்.” என்று கூறி மறைந்தார்.

நந்திதேவர் முதலானோர் அத்தீர்த்தத்தைக் கொண்டு சிவாகம விதிப்படி அந்த லிங்கத்தைப் பூஜித்து மகிழ்ந்தனர்.

இப்படி உருவானதுதான் அந்தப் பொற்றாமரைக் குளம்.

பொற்றாமரைத் தீர்த்தத்தைத் தரிசித்தால் பாபங்கள் போய்விடும், அதில் நீராடினால் விரும்பிய பொருளெல்லாம் கையில் வந்து சேர்ந்துவிடும். அங்கே விதிப்படி உடலைச் சுத்தி செய்து வருண சூக்த மந்திரத்தை உச்சரித்து நீராடினால் எல்லாப் புண்ணிய தீர்த்தத்திலும் நீராடி அந்தணர்களுக்கு உத்தமமான தானங்களை அளித்த பலனைப் பெறலாம், அத்தீர்த்தத்தைத் தொட்டமாத்திரத்திலே ஒருவர் தீவினை நீங்கப் பெறுவர்.

அங்கு நீராடியவர்கள் மந்திரம் சொல்லி ஸ்நானம் அடைந்த பலனைப் பெறுவர், அதன் கரையிலிருந்து செய்யப்படும் கர்மாக்கள் பல மடங்கு அதிகமான பலனைத் தரும்.

ஒருவன் தன்னுடைய பிறந்த நாளன்று பொற்றாமரையில் நீராடினால் பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவான்.

சித்திரை, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களில் நீராடி பித்ரு களுக்குப் பிண்டம் கொடுத்தால் அவனுடைய முன்னோர்கள் உத்தம லோகத்தை அடைவார்கள். பொற்றாமரைக் கரையிலே இறந்தவருக்கு உரிய கடன்களைச் செய்தால் நரக லோகத்தை அடைந்தவர்கள் சொர்க்கவாசத்தைப் பெறுவார்கள்.

அந்தத் த‌டாகத்திலே நீராடி இறைவனை வழிபடுபவர் அப்பிறவியிலேயே மோக்ஷத்தை அடைவர். அமாவாசை, மாதப்பிறப்பு, கிரகண புண்ணிய காலம், வியதிபாதயோகம் ஆகிய நாட்களில் பொற்றாமரைத் தீர்த்தத்திலே நீராடிச் செய்யப்படும் தோத்திரமும், தர்ப்பணமும், தானமும், ஜபமும் பல மடங்கு அதிகப்படியான பலனைத் தரும்.

சித்திரை மாதப் பிறப்பும், ஐப்பசி மாதப் பிறப்பும் மற்ற காலங்களைவிட அதிக பலனைத் தருகின்றன.

தை மாதப் பிறப்பும், ஆடி மாதப் பிறப்பும் அவற்றை விடக் கூடுதலான பலனைத் தரும். சோமவாரமும், அமாவாசை கூடிய தினத்திலே பொற்றாமரையில் நீராடுவது மிக மிக விசேஷம். அத்தீர்த்தத்தை தரிசிப்பதால் ஞானமும், ஸ்பரிசிப்பதால் செல்வமும், கையில் எடுத்து உட்கொள்வதால் இன்பமும், நீராடுவதால் மோக்ஷமும் கிடைக்கின்றன.

இறைவனுடைய ஜடையிலுள்ள கங்கை நீர் கலக்கப் பெற்றதால் சிவகங்கை என்றும், எல்லாவற்றுக்கும் உத்தமமாய் விளங்குவதால் உத்தம தீர்த்தமென்றும், பொற்றாமரை மலர்வதால் பொற்றாமரைத் தீர்த்தமென்றும்; அறம், பொருள் இன்பம், வீடு என்ற நான்கையும் தீர்த்தமென்றும் தருவதால் அர்த்த தீர்த்தமென்றும், காமதீர்த்த மென்றும், முக்தி தீர்த்தமென்றும் அழைக்கப்படுகிறது.

மதுரையிலே கடம்ப மரத்தடியில் முதன் முதலாகத் தோன்றியதால் மூலலிங்கம் என்று சிவலிங்கம் அழைக்கப்படுகிறது. அச்சிவலிங்கத்திலே சிவபெருமான் உமாதேவியோடு எப்பொழுதும் திருவழகைக் கண்டு தேவர்கள் சோமசுந்தரப்பெருமான் எனச் சாந்நித்தியம் கொண்டிருக்கும் பெருமானை அழைத்தனர். அப்பெருமானைத் தரிசிப்பதால் மற்றதலங்களிலுள்ள சிவலிங்கங்களைத் தரிசித்தப் பலனை அடையலாம்.

மற்றத் தலங்களின் சுயம்பு மூர்த்திகளெல்லாம் நாள்தோறும் வந்து வணங்கிச்செல்லும் பிரதான மூர்த்தம் இது.

பர்வதங்களில் சிறந்தது மேருபர்வதம், விருட்சங்களில் சிறந்தது கற்பகவிருஷம், யாகங்களிலே சிறந்தது அஸ்வமேத யாகம், தானங்களிவே சிறந்தது அன்னதானம், தேவர்களில் சிறந்தவர் சிவபெருமான், விரதங்களில் சிறந்தது அன்னதானம்.

மனிதரில் சிறந்தவர் சிவ பிராமணர், தேவர்களில் சிறந்தவர் சிவபெருமான், விரதங்களில் சிறந்தது சோமவாரவிரதம், மந்திரங்களில் சிறந்தது பஞ்சாக்ஷரம் இரத்தினங்களில் சிறந்தது சிந்தாமணி, தருமங்களில் சிறந்தது சிவதர்மம், முனிவர்களில் சிறந்தவர் சிவபக்தர், பசுக்களில் சிறந்தது காமதேனு.

தீர்த்தங்களில் சிறந்தது பொற்றாமரைத் தீர்த்தம். அப்படி மூர்த்திகளில் சிறந்து விளங்குவது சோமசுந்தர மூர்த்தி.

மதுரையம்பதியில் அப்பெருமானைத் தரிசிப்பதால் சகல பாபங்களும் கரைந்து போகும், அதிகாலையில் அப்பெருமானைத் தரிசிப்பதால் பூமி தானம் செய்த பலன் கிட்டும். உச்சிவேளையில் தரிசித்தால் உத்தமமான வேதியர்களுக்கு ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலன் கிட்டும். மாலையில் தரிசித்தால் கோடி பசுக்களைத் தானம் கொடுத்த பலன் உண்டு, அவரை நடுநிசியில் தரிசிப்பதால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டும்.

அங்கு வழிபடுபவன் முந்தைய ஜன்மங்களில் செய்த வினைகள் நீங்கி சகல போகங்களையும் அனுபவித்து முடிவில் முக்தியையும் அடைகிறான். இங்கு பத்துப் பிறவிகளில் செய்த வினைகள் நீங்குகின்றன.

ஆலவாய் தலத்தில் சோமசுந்தரப் பெருமானின் திருநாமத்தைக் காதில்கேட்டால் பத்து பிறவிகளில் செய்த பாவமெல்லாம் நீங்கும், அவரைத் தரிசிக்க மனத்திலே நினைத்த மாத்திரத்தில் பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கும்.

அப்பெருமானைத் தரிசிக்க வீட்டில் இருந்து கிளம்பும்போதே ஆயிரம் பிறவிகளில் செய்த பாவமெல்லாம் தீரும்.

அவரை உருத்ரசூக்த மந்திரத்தால் துதித்து வழிபட்டால் ஆயிரம் இராஜசூய யாகங்களைச் செய்த பலன் கிடைக்கும், நறுமணம் மிக்க பூக்கள் கொண்டு வழிபட்டால் சுகமான சொர்க்கம் மறுமையில் கிட்டும்.

சோமசுந்தரப்பெருமானை நறுமணமிக்க ஒரே ஒரு மலரைச் சமர்பித்தாலும் அது பொன்னால் செய்யப்பட்ட 100 மலர்களைக் கொண்டு செய்த அர்ச்சனையின் பலனைத் தரும்.

அந்தப் பெருமானுக்குத் தூபம் கொடுப்பதால் மனம், வாக்கு, காயங்களில் செய்த ஆயிரம் குற்றங்கள் மறைந்துவிடும். திருவமுது செய்து நிவேதிப்பவர் ஒரு பருக்கைக்கு ஒரு யுகமாக சிவலோக வாழ்வை அடைவர்.

இந்த ஈசனுக்கு தாம்பூலம் முதலானவை கொடுப்பவர் நூறு கோடி தேவ வருஷங்கள் சிவலோகத்தில் வசிப்பர். ஈசனுக்கு கற்பூர தீபம் இட்டவர் சிவ சொரூபத்தையே அடைவர். அப்பெருமானின் பூஜைக்கு சேவைக்காகத் தேவைப்படும் பொருள்களை அளிப்பவர் தாங்கள் செய்த பாபங்களிலிருந்து விடுபட்டு சுக வாழ்வைப் பெறுவர்.

அப்பெருமானுடைய சந்நிதியில் செய்யப்படும் ஜெபம் முதலானவைகள் எண்ணற்ற மடங்கு திரும்பவரும்.

கற்பூர சுந்தரர், கடம்பவன சுந்தரர், கலியாண சுந்தரர், அபிராமசுந்தரர், சண்பக சுந்தரர், மகுடசுந்தரர், கஸ்தூரி சுந்தரர், பழி அஞ்சிய சுந்தரர், சோமசுந்தரர், ஆலவாய் சுந்தரர், நான்மாடக் கூடல் நாயகர், மதுராபதி வேந்தர், சமஷ்டிவிச்சாபுரநாதர், ஜீவன் முக்திபுரநாதர், பூலோக சிவ லோகாதிபர், கன்னிபுரேசர், மூலலிங்கமூர்த்தி என்று அப்பெருமான் பல்வேறு பெயர்களால் போற்றப்படுகின்றார்”

இதனை எல்லாம் சொல்லி அந்த மதுரையம்பதியின் பெரும் சிறப்பை எடுத்துரைத்து அம்முனிவர்களை சனகாதி முனிவர்கள் உள்ளிட்ட எல்லோரையும் சிலிர்க்க வைத்தே திருவிளையாடல் புராணத்தை அகத்தியர் எடுத்துரைத்தார்.

மதுரை ஆலயம் அப்படியான பெரும் கீர்த்தியினைக் கொண்டது, இந்தக் கீர்த்தியினை மனதில் கொண்டுதான் திருவிளையாடல் புராணத்தை தொடர்தல் வேண்டும்.

இந்த ஆவணிமாதம் அங்கு ஆவணி மூல திருவிழா நடக்கும், அந்நேரம் 10 திருவிளையாடல்கள் நினைவு கூறப்பட்டு கொண்டாடப்படும்.

அந்த விழாவினை அகத்தியம்பெருமான் உரைத்த இந்தப் பெரும் பெருமையோடு கீர்த்தியோடு அதை நெஞ்சார கொண்டு உருகிப் பணிந்து கொண்டாடுவோர்க்கு எல்லாப் பாக்கியமும் கிட்டும், எல்லா வினையும் தீர்ந்து நடப்பவை எல்லாம் நிச்சயம் நல்லதாக நடக்கும்.

அந்தப் பெரும் ஆலயம் அழகிய கல்சிலையும் பிரமாண்ட கல்தூணும் கொண்ட காட்சியகம் அல்ல, கலையும் அழகும் காட்ட கட்டிவைக்கப்பட்ட இடமும் அல்ல, அது சிவனே தன் முதல் தலமாக தேர்ந்து கொண்ட பேராலயம், அங்கு அதன் வரலாற்றை நினைந்து வணங்கினால் எல்லாப் பாக்கியமும் ஐஸ்வர்யமும் பாவம் தீர்ந்து, கர்மம் தீர்ந்து கிட்டும். சிவனோடு நெருங்கிவரும் பெரும் பாக்கியமும் கிடைக்கும். இது சத்தியம்.