திருவிளையாடல் புராணம் 50 : இந்திரன் சுமந்த‌ பிரம்மஹத்தி சாபத்தை போக்கிய படலம்.

திருவிளையாடல் புராணம் 50 : இந்திரன் சுமந்த‌ பிரம்மஹத்தி சாபத்தை போக்கிய படலம்.

தேவர்களின் அரசனான இந்திரனுக்கு அடிக்கடி அகந்தை ஏற்படுவது இயல்பு. தேவர்கள் இல்லாவிட்டால் இந்த உலகில் இயக்கமில்லை. சந்திர சூரியன், வாயு, வருணன் எனத் தேவர்கள் இருந்து தங்கள் கடமையினை ஆற்றாவிட்டால் எந்த உயிருமில்லை, எதுவுமில்லை. அப்படியான தேவர்களுக்குத் தலைவன் நான் எனும் அகந்தை அவனை ஆட்டிவைத்தது.

சுகபோகங்களில் மூழ்கிக் கிடந்த அவனுக்கு இது இன்னும் போதையானது. அப்படி அவன் ஒருநேரம் மிகுந்த செருக்கில் இருந்தபோது அவனைத் தேடி வந்தார் தேவர்களின் குரு பிரகஸ்பதி.

அவனோ குருவானவர் அரசனான தனக்குக் கட்டுபட்டவர் எனும் அகந்தையில் அவரை அவமதித்தான், எல்லோர் முன்னாலும் அவமதித்தான். அவமானம் தாங்காத பிரகஸ்பதி கடும் ஆத்திரத்திலும் சாபம் கொடுக்காமல் நிதானமாயிருந்தார். காரணம், தேவர்களின் அரசனுக்கே பெரிய சாபம் தன் வாயால் கொடுத்துவிட்டால் பின் அசுரகுலம் ஓங்கும், இது தன் கடமைக்கு இழுக்கு எனக் கருதியவர் இனி தேவேந்திரன் முகத்தில் விழிக்கமாட்டேன் எனச் சொல்லிவிட்டு காணாமல் போனார்.

முதலில் அசட்டையாக இருந்த இந்திரன் பின் அவரைக் காணாமல் தேடினான். என்னதான் அரசன் என்றாலும் சில விஷயங்களுக்கு அவரின் ஆலோசனை அவசியம் என்பதால் எல்லா இடத்திலும் தேடினான், அவரைக் காண முடியவில்லை.

இதனால் சத்தியலோகம் சென்ற இந்திரன் பிரம்மனின் உதவியினை நாடினான், அவனுக்கு ஒரு இராஜகுரு அவசியமாய் இருந்தது.

பிரம்மன் இந்திரனிடம் சொன்னான், “இந்திரா! உன் அவமரியாதையால் பிரகஸ்பதி அகன்றுபோனார், இனி அவராக வந்தால்தான் உண்டு. அது எவ்வளவு காலத்துக்கு எனத் தெரியவில்லை. இப்போதைக்கு உனக்கோர் குரு வேண்டும் என்றால் துவஷ்டாவின் மகனான விஸ்வரூபனை உன் குருவாகக் கொள்.

மூன்று தலைகளைக் கொண்ட அவன் உனக்கு சிறந்த குருவாக இருக்கமுடியும்” என யோசனை சொன்னார்.

இந்திரன் அதற்குத் தயங்கினான். காரணம், இந்த விஸ்வரூபன் அசுரகுலத்தவனாய் இருந்தான், அப்படியானவனைத் தேவர்களுக்குக் குருவாகக் கொள்ளுதல் நல்லதல்ல என்பதால் தயங்கினான்.

ஆனால், பிரம்மனோ அவன் அறத்துக்கும் தர்மத்துக்கும் கட்டுப்பட்டவன், இப்போதைக்கு இவனை விட சரியானவன் உனக்கு யாருமில்லை எனச் சொன்னதால் விஸ்வரூபனை ஏற்றுக்கொண்டான்.

பின் விஸ்வரூபனுக்குச் செய்தி சென்றது, அவனும் சம்மதிக்க, பெரும் வரவேற்புடன் அவனை அழைத்து இராஜகுருவாக அமர்த்திக் கொண்டான். பிரகஸ்பதி இல்லாவிட்டாலும் தன்னால் தன் அவையினை நடத்தமுடியும் என இந்திரன் பெருமிதப்பட்டுக்கொண்டான்.

சில காலங்கள் சென்றபின் இந்திரன் ஒரு யாகம் செய்ய விரும்பினான், அது தேவர்களின் நலத்துக்கானது. அதன்படி விஸ்வரூபனைச் செய்யச் சொல்லி அருகில் அமர்ந்திருந்தான்.

யாகத்தின் முடிவில், “தேவர்களுக்கு மேன்மை உண்டாகட்டும்” எனச் சொல்லி அதனை நிறைவடையச் செய்யும் வேளையில் விஸ்வரூபனின் மனம் அசுரர்நலத்தை விரும்பிற்று, அவன் சதை ஆடிற்று.

இதனால் மனதுக்குள், “அசுரர்களுக்கு மேன்மையும் கீர்த்தியும் கிடைக்கட்டும்” என அவன் நினைத்து வாயால் தேவர்களுக்கு நன்மை கிடைக்கட்டும் எனச் சொன்னாலும் சில வார்த்தைகள் அவனை மீறி “அசுர” என வெளிப்பட்டுவிட்டது.

ஏற்கனவே அவன்மேல் சில சந்தேகங்களைக் கொண்டிருந்த இந்திரன் இனி இந்த யாகம் நிறைவேறிவிட்டால் அசுரர்கள் பலமாகிவிடுவார்கள் என அஞ்சி அதை தடுக்கும் பொருட்டு விஸ்வரூபனின் மூன்று தலைகளையும் தன் வஜ்ராயுத்தத்தால் தாக்கினான்.

அவனின் மூன்று தலைகளும் அதனால் பாதிக்கப்பட்டு உருமாறி போயின‌.

அவனின் சோமபானம் தயாரிக்கும் முகம் காடை எனும் பறவையாகவும், சுறாபானம் தயாரிக்கும் முகம் ஊர்குருவியாகவும், அன்னபானம் தயாரிக்கும் முகம் தித்திரி பறவையாகவும் பறந்து சென்றன‌.

(சோமபானம், சுறாபானம் என்பதெல்லாம் போதை வஸ்து அல்ல, அவை அறிவை ஞானத்தை வெளிச்சமான சிந்தனையினைத் தரும் வஸ்துக்கள், அமிர்தம் போன்றவை.

சோமபானம் தயாரிப்பதில் விஸ்வரூபன் தகப்பனான துவஷ்டா மிகச் சிறந்த நிபுணராயிருந்தான் என்கின்றது வேதம்)

யாகம் தடைபட்டது என்றாலும் விஸ்வரூபன் ஒரு சிவபக்தன் என்பதாலும் பிரம்ம குலத்தில் வந்தவன் என்பதாலும் இந்திரனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

ஆனாலும், அகங்காரம் கொண்டிருந்த இந்திரன் இந்தப் பிரம்மஹத்தி தோஷத்தை எப்படிப் போக்குவது எனத் தேவர்களுடன் விவாதிக்க அவர்கள் இந்தத் தோஷத்தை மரங்கள், பெண்கள், பூமி, நீர் என நால்வருக்கும் பகிர்ந்து கொடுக்கச் சொன்னார்கள். பூலோக நன்மைக்காக அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

அதன்படி மரங்களுக்கு இந்த தோஷம் பிசினாகவும், பெண்களுக்கு மாதவிலக்காகவும், மண்ணுக்கு உவர்ப்பு தன்மையாகவும், நீருக்கு நுரையாகவும் அவை இருந்து தீரும் எனத் தேவர்கள் உறுதிக் கொடுத்தார்கள்.

இந்த நான்கு பிரிவும் இல்லையேல் பூலோகமில்லை. இங்கு உயிர்கள் வாழ மண், பெண், மரம் (பயிர்கள்), நீர் என நான்கும் அடிப்படை.

இந்தப் பூமியில்லாவிட்டால் மேலோகமில்லை என்றாலும் பூமி வாழ தேவர்கள் அருள் அவசியம் என்பதால் இவர்களும் அதைப் பெற்றுக் கொண்டார்கள். இதனால் மனம் உவந்த தேவர்கள் அவர்களுக்கு சில வரமும் அருளினார்கள்.

அதன்படி மரங்களோ தாவர வகைகளோ வெட்டுப்பட்டாலும் துளிர்க்கும், எந்த வறட்சியில் நெருப்பில் அழிந்துபோனாலும் மீண்டும் வளரும், என்னதான் ஒழித்துப் புதைத்தாலும் மீள எழுந்து வரும்.

பெண்களுக்கு பருவ வயதுவரையில் மட்டும் இந்த மாதவிலக்குகள் உண்டு, அதுவும் கருவுற்றிருக்கும் போது இல்லை, அந்நேரம் அவர்கள் விரும்புவதை செய்யவும் வழி உண்டு.

பூமி தன்னை புதுப்பித்துக் கொள்ளும் சக்தியினைப் பெற்றது, எவ்வளவு பெரிய பள்ளம் பாதாளம் என்றாலும், தன்னை சிதைத்துப் போட்டாலும் தானே மீளும் சக்தியினைப் பூமி பெற்றது.

நீர் தோண்ட தோண்ட ஊறும் சக்தி, பூமியில் எங்கும் ஆதிக்கம் செலுத்தும் பெரும் சக்தியினைப் பெற்றது.

இப்படி இந்த நால்வராலும் பிரம்மஹத்தி சாபத்தில் இருந்து தப்பிய இந்திரன் மறுபடியும் அதே அகங்காரத்துடன் ஆட்சி செய்து வந்தான்.

ஆனால், அப்பக்கம் அசுரர்குலத்தில் விஸ்வரூபனின் தகப்பன் துவஷ்டா தன் மகனைக் கொன்ற இந்திரனை அழிக்க பெரும் கோபத்தில் சபதம் செய்தான், அதன்படி பெரிய யாகம் ஒன்றை இயற்றி சக்திமிக்க அசுரன் ஒருவனை எழுப்பினான்.

பெரிய உருவமும் இரும்பு உலக்கையும் கண்களில் குரூரம் கொப்பளிக்க அந்த அசுர உருவம் எழுந்தது. தன் பெரும் சக்தியெல்லாம் திரட்டி அதற்குக் கொடுத்து தேவர்களை வெல்லும் வரத்தையும் இன்னும் பல சிறப்பு வரத்தையும் கொடுத்து அனுப்பினான் துவஷ்டா.

அந்த அசுரன் விருத்தாசுரன் என்ற பெயருடன் இந்திரனைத் தாக்க விரைந்தான்.

இந்திரன் அவனுடன் பலமாக மோதினான். மேலோகம் மட்டுமல்ல எல்லா உலகமும் அதிர்ந்தது. இந்திரன் முடிந்தவரை போராடினான் ஆனால் வெற்றிக்கிட்டவில்லை. வரம் பெற்றுவந்த விருத்தாசுரன் இந்திரனின் படைகளை நசுக்கிப் போட்டன்.

கடைசியில், நேருக்கு நேரான சண்டையில் தன் வஜ்ராயுதத்தை விருத்தாசுரன் மேல் வீசினான் இந்திரன். ஆனால், அது அவன் மேல் பட்டு பொடிப் பொடியாயிற்று.

பதிலுக்கு இந்திரனை நெருங்கி வந்து தன் இரும்பு உலக்கையால் தாக்கினான் விருத்தாசுரன், இந்திரன் மயங்கிச் சரிந்தான், தேவர்படைகள் அவனைத் தூக்கிக் கொண்டு ஓடின‌.

மயக்கம் தெளிந்த இந்திரன் விருத்தாசுரனை இனி வெற்றிக்கொள்ள முடியாது என அஞ்சி தப்பி ஓடினான், அவனிடம் ஆயுதமுமில்லை, வழிகாட்ட தேவகுரு பிரகஸ்பதியுமில்லை.

அவன் அதனால் பிரம்மனிடம் ஓடினான், பிரம்மன் இனி அவனைக் காக்க நாராயணராலே முடியும் என அவரிடம் அழைத்துச் சென்றார்.

நாராயணனிடம் நடந்ததையெல்லாம் சொல்லி அழுதான் இந்திரன்.

“தேவேந்திரா! இதெல்லாம் தேவகுருவினை நீ அவமதித்ததால் நடந்தது. இதற்கான தீர்வை ஒரு நல்ல ரிஷிதான் தரமுடியும், நீ ததீசி முனிவரை சென்று பார்.

பாற்கடல் கடையப்படும் போது தேவர்களெல்லாம் தங்கள் ஆயுதங்களைத் ததீசி முனிவரிடமே கொடுத்து வைத்தார்கள். பின், யுத்தம் இல்லை என்பதால் மறந்தே போனார்கள்.

அவர் இனி யுத்தமில்லை என நினைந்து அவை இன்னொருவர் கையில் கிடைத்தால் ஆபத்து, உலக ஆபத்து எனக் கருதி அவற்றை கரைத்துக் குடித்தேவிட்டார், யார் கையிலும் அவை சிக்கக் கூடாது என அவர் செய்த ஏற்பாடு அது.

அந்த ஆயுதங்களின் சக்தியெல்லாம் அவரின் முதுகெலும்பின் அடியில் சக்தியாய் உள்ளது, அவர் எலும்புதான் இனி அந்த அசுரனை அழிக்கும் ஆயுதம். மகா சக்திவாய்ந்த அவனை அழிக்க முழுத் தவசியாய் இந்த உலகின் மேல் பேரன்பு கொண்ட அவரின் எலும்பாலே ஒழிக்க முடியும் எனச் சொல்லி அனுப்பினார்.

இந்திரன் ததீசி முனிவரைச் சந்தித்தான். ஆனால். நேரடியாக முனிவரிடம் தன் கோரிக்கையினை அவன் சொல்லவில்லை. மாறாக, “தேவர்களின் ஆயுதங்களெல்லாம் உங்களிடம் உண்டல்லவா? இப்போது நாங்கள் நெருக்கடியில் இருக்கின்றோம்” என மறைமுகமாகக் கெஞ்சினான்.

அவனின் நோக்கத்தை தன் ஞானதிருஷ்டியினால் அறிந்த முனிவர் புன்னகைத்தார், “தர்மம் வாழ தேவலோகம் வாழவேண்டும், அசுரகும்பலிடம் அதிகாரம் சிக்குமானால் அது உலக உயிர்களுக்கு ஆபத்து.

இந்திரா! எனக்கென எதையும் கொண்டிருப்பவன் அல்ல, நல்ல துறவி எதன்மேலும் பற்றுக் கொண்டிருக்க கூடாது, நீ என் எலும்பின் சக்திக்காக வந்திருக்கின்றாய். உலக நன்மைக்காக நானே அதைத் தருவேன், இதை ஏன் மறைமுகமாகக் கேட்கின்றாய்” என்றபடி எழும்பினார்.

உடலில் உப்பைத் தடவி தவக்கோலத்தில் அமர்ந்து கபாலம் வழியாக ஆன்மாவினை விடுவித்தார். பசுக்கள் வந்து அவர் உடலை நாவால் நக்கி எடுக்க சதை பிய்ந்து எலும்பு கிடைத்தது.

(இந்தப் புராண கதையினைத்தான் “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என எழுதினான் வள்ளுவன்.)

முனிவரின் தியாகத்தில் சிலிர்த்துப்போன இந்திரன் கண்ணீருடன் அதைப் பெற்றுக்கொண்டான். அந்த முதுகெலும்பை ஆயுதமாகக் கொண்டு மீண்டும் படைதிரட்டி விருத்தாசுரனுடன் போராட வந்தான்.

இம்முறை இந்திரனை ஒழித்தே தீருவது எனக் கங்கணம் கட்டிய விருத்தாசுரன் முழுப் பலத்தோடு மோதினான். இந்திரனின் படைகளை மீண்டும் சிதறடித்தான். முடிந்தவரை போராடிய இந்திரன் கடைசியில் அந்த முனிவரின் எலும்பால் தாக்கும் போது அசுரனின் இரும்பு உலக்கை முறிந்து பொடிப் பொடியாய்ப் போனது.

தன் மிகப் பலமான ஆயுதம் உடைந்து நொறுங்கிப் போனதில் அசுரன் அதிர்ந்தான். எனினும், அவன் அசுரப்படைகள் அவனைச் சூழ்ந்து காக்க அவன் தப்பிக் கடலுள் புகுந்தான்.

போரில் வென்று மேலோகத்தை மீள இந்திரன் கைப்பற்றினாலும் அந்த விருத்தாசுரன் அவனுக்கு அச்சுறுத்தலாக இருந்தான். ஆனால், அவனை எப்படிக் கடலுக்குள் சென்று பிடிப்பது என அவனுக்குத் தெரியவில்லை.

அவன் மீண்டும் பிரம்மனிடம் சரணடைய, அவர் அவனை அகத்தியரிடம் அனுப்பினார். அகத்திய பெருமான் தன் தவவலிமையால் உளுந்தின் உருண்டை போல் கடலை ஒரு துளியாகச் சுருக்கி கையில் எடுக்க அங்கே ஒளிந்திருந்த விருத்தாசுரன் பிடிபட்டான். அந்நேரம் அவன் கடலடியில் ஒரு மலையில் தவம் செய்து கொண்டிருந்தான்.

அவனை முனிவரின் எலும்பாயுத்ததால் ஒழித்துப்போட்டான் இந்திரன். ஆனால், தவம் செய்த ஒருவனைக் கொன்றதால் சிவனை வேண்டி நின்ற ஒருவனைக் கொன்றதால் மீண்டும் பிரம்மஹத்தி பாவம் இந்திரனைத் தொற்றிக் கொண்டது.

இந்திரனால் அதைச் சமாளிக்க முடியவில்லை. அது அவனை படாதபாடு படுத்திற்று, யாராலும் அந்தச் சாபத்திலிருந்து அவனைக் காக்கமுடியவில்லை. அது அவனை அச்சுறுத்தும், தலையில் அமர்ந்து பிடுங்கும், கண்முன் வந்து சிரிக்கும், இன்னும் பெரும் தொல்லைகளைச் செய்தது.

அவன் எங்கெல்லாமோ ஒடித் தப்ப முயன்றான் ஆனால் முடியவில்லை. கடைசியில், கயிலாயம் அருகே ஒரு தாமரை தடாகம் சென்று அங்கிருந்த தாமரை தண்டினுள் ஒளிந்து கொண்டான்.

அங்குச் செல்லமுடியாப் பிரம்மஹத்தி அவனுக்காய்க் காத்திருந்தது.

இங்கே இந்திரன் இல்லாத தேவலோகம் குழம்பியது, அரசன் ஒருவன் அவசியம் என்பதால் ஒரு தலைவனை அவசரமாகத் தேடியது.

அப்போது பூலோகத்தில் ஒரு அரசன் இருந்தான், அவன் பெயர் நகுஷன், அவனை அழைத்து வந்து தேவர்கள் அரசனாக்கினார்கள்.

அவன் இந்திரனுக்கு சமமான யாகங்களைச் செய்து பெரும் சக்தி கொண்டிருந்ததால் சரியான தேர்வாக இருந்தான். ஆனால், இந்திரனின் ஆசனத்தில் அமர்ந்ததும் அவனுக்குப் பல ஆசை மயக்கம் வந்தது.

அதில் ஒன்று இந்திரன் மனைவி இந்திராணி சசிதேவியினை அடையவேண்டும் என்பது. அதனால் அவளைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி தேவர்களுக்கு உத்தவிரவிட்டான்.

அவள் அஞ்சி நடுக்கி அவனிடம் இருந்து தன்னைக் காக்கும்படி தேவகுரு பிரகஸ்பதியிடம் சரணடைந்தாள். பிரபகஸ்பதி கருணையுடன் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து ஒரு உபாயம் சொன்னார்.

“இந்திராணியே! நீ அஞ்சாதே, நகுஷனுக்கோர் செய்தியினை அனுப்பு, அதன்படி சப்தரிஷிகள் அவனைப் பல்லக்கில் சுமந்துவந்தால் அவனை ஏற்றுக் கொள்வதாக அறிவி, அஞ்சாதே சப்திரிஷிகளின் சாபம் அவன்மேல் பட்டால் அவன் தானாய் அழிவான், அதுதான் அறிவான திட்டம்” என ஆலோசனைச் சொன்னார்.

அவரின் வாக்கினை நம்பிய இந்திராணி அப்படியே அறிவித்தாள்.

சப்தரிஷிகளின் சக்தியினை அறிந்திருந்தும் அவள்மேல் கொண்ட மோகத்தால் அந்தப் பாதகத்தை செய்யத் துணிந்தான் நகுஷன், சப்த ரிஷிகளும் அவன் கோரிக்கைக்கு உடன்பட்டனர்.

அப்படி அவர்கள் ஏழுபேரும் அகத்தியர், ஆங்கீசர், கௌதமர், காசிபர், புலத்தியர், வசிஷ்டர், மார்கண்டேயர் என எழுவரும் அவனைப் பல்லக்கில் சுமந்தனர்.

அகத்தியர் குறுமுனி என்பதால் மெதுவாக நடந்தார். அவரை நோக்கி “சர்ப்ப சர்ப்ப” ( வேகமாக வேகமாக) என மிரட்டினான் நகுஷன். ஆத்திரமடைந்த அகத்தியமுனி “என்னை அதட்டும் அற்பனே நீ சர்ப்பமாகப் போ” என மிரட்ட அவன் சர்ப்பமாகி பூமிக்குத் திரும்பினான்.

பிரகஸ்பதியின் வாக்கு பலித்தது. அவர்பாதம் பணிந்த இந்திராணி தன் கணவனையும் காத்துத் தரும்படி வேண்டினாள், அவரும் மனமிரங்கினார்.

அதன்படி அவர் கயிலாயம் சென்று அதன் எல்லையின் தடாகத்தில் தாமரைத் தண்டில் ஒளிந்திருந்த இந்திரனை வெளிவரச் சொன்னார். பெரும் மன்னிப்புக் கோரியபடியே வெளிவந்தான் இந்திரன்.

அவனை மன்னித்த பிரகஸ்பதி சொன்னார். “இந்திரா! உன் சாபத்துக்கான தீர்வு பூலோகத்திலே உண்டு. நீ என்னுடன் வா, அங்குச் சென்று சரியான இடத்தில் இந்தப் பிரம்மஹத்தியினைத் தொலைக்கலாம்” என அழைத்தார்.

அவன் அவருடன் பூமிக்கு வந்தான், அவன் அந்த எல்லைவிட்டு வந்தவுடன் அவன் தலையில் ஏறிக்கொண்டது பிரம்மஹத்தி, அவன் படாதபாடுபட்டான்.

இந்திரன் கங்கையில் குளித்துக் காசியில் தரிசனம் செய்து, அவன் தன் பயணத்தைத் தொடங்கி வரும்போது பிரம்மஹத்தி அவனை மிகுந்த கொடுமைக்குள்ளாக்கியது. அதன் தொல்லை தாளாமல் சில இடங்களில் தலையின் வலி தாளாமல் படுத்தேவிட்டான் இந்திரன். ஆனாலும், பிரகஸ்பதி அவனைத் தேற்றி அழைத்து வந்தார்.

அவன் ஷேத்திரம் பல கடந்து, நதிகள் பல கடந்து வந்தான். அந்தப் பிரம்மஹத்தியும் கூடவே வந்தது.

அவன் கடம்பவனம் சூழ்ந்த இடத்துக்குள் வந்ததும் அவன் பாரம் நீங்கிற்று, அவன் தான் பழைய பலம் பெற்றதை உணர்ந்தான். தலையில் இருந்து அழுத்திய ஒன்று கழுத்தைக் கட்டிக்கிடந்த ஒன்று தன்னைவிட்டு அகன்றதை உணர்ந்தான்; கண்களை மூடினான்; விழித்தான்; மகிழ்ந்தான்.

அதுவரை தன்னைப் பாடாய்ப்படுத்திய பிரம்மஹத்தி அகன்றுபோனதை மகிழ்ச்சியுடன் குரு பிரஹஸ்பதியிடம் சொன்னான்.

அவர் கண்களை மூடி யோசித்துச் சொன்னார், “எங்கும் அடங்காத உன் சாபம் இந்த எல்லையில் தீர்ந்ததென்றால் இது சக்திமிக்க இடமாக இருக்க வேண்டும். இங்கு ஏதோ ஒரு சக்தி உண்டு, அதைத் தேடுவோம் எனத் தேடச் சொன்னார்.

நாலாப்பக்கமும் அதைத் தேடிய இந்திரனின் வீரர்கள் ஆங்கோர் தடாகத்தின் அருகே கடம்பமரத்தடியில் ஒரு லிங்கம் ஒளிர்வதைச் சொன்னார்கள். இந்திரன் பிரகஸ்பதியோடு அங்கு விரைந்தான்.

அங்கு ஒளிவீசிய லிங்கத்தை கண்டு பணிந்தான், அவன் வீரர்கள் செடி கொடிகளை அகற்றி அவன் வழிபட வழி செய்தார்கள்.

இந்திரன் தடாகத்தில் இருந்து நீர் எடுத்துக் கொண்டு வந்து ஊற்றி அபிஷேகம் செய்தான். தன் பட்டுடையினை அணிவித்து வணங்கினான், அந்தச் சிவனுக்கு அழகிய கருவறை எழுப்ப தேவதச்சனை அழைத்தான்.

தேவதச்சன் நொடியில் எட்டு யானைகள், முப்பத்திரண்டு சிங்கம், அறுபத்தினான்கு பூதகணங்கள் என அழகிய வேலைப்பாடு அமைந்த விமானம் ஒன்றை மிக மிக அழகாகச் செய்து, சொர்க்கலோக தங்கம் முத்துக்களெல்லாம் கொண்டு செய்து சிவனுக்கு அளித்தான், அது அழகாய் மின்னிற்று.

இந்திரன் தன் பட்டாடையினைச் சிவனுக்குச் சாற்றி தன் மணிமாலைகளை கழற்றிவைத்து வணங்கினான், அந்நேரம் சிவனைப் பூஜிக்க அவன் மலர்களுக்குத் தேடியபோது மலர் இல்லை.

எம்பெருமானே! என அவன் குறைபட்டபோது தடாகத்தில் பொன்னிறத் தாமரைகள் மின்னின. மகிழ்ச்சியுடன் அவன் அதைப் பறித்து வந்து வழிபட்டான்.

அக்குளம் அதுமுதல் “பொற்றாமரைக் குளம்” என்றாயிற்று.

மிக மிக உன்னதமான பக்தனாகக் கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்க இந்திரன் பாடினான்.

அங்கணா போற்றி!
வாய்மை ஆரணா போற்றி!
நாககங்கணா போற்றி!
மூலகாரணா போற்றி!
நெற்றிச் செங்கணா போற்றி!
ஆதி சிவ பரஞ்சுடரே போற்றி!
எங்கள் நாயகனே போற்றி! ஈறிலாத முதலே போற்றி!
யாவையும் படைப்பாய் போற்றி! யாவையும் துடைப்பாய் போற்றி!
யாவையுமானாய் போற்றி!
யாவையும் அல்லாய் போற்றி!
யாவையும் அறிந்தாய் போற்றி! யாவையும் மறந்தாய் போற்றி!
யாவையும் உணர்ந்தாய் போற்றி!
யாவையும் பிரிந்தாய் போற்றி!

இடருற பிணித்த இந்தப் பழியினின்று என்னை ஈர்த்து
உன் அடியிணைக்கு அன்பன் ஆக்கும் அருட்கடலே போற்றி!
சேற்க்கண் மடவரல் மணாள போற்றி!
கடம்ப மாவனத்தாய் போற்றி.

சுடர்விடு விமானமேய சுந்தர விடங்க போற்றி.
பூசையும் பூசைக்கேற்ற
பொருள்களும் பூசை செய்யும் நேசனும் பூசைகொண்டு
நியதியிற் பேறு நல்கும் ஈசனுமாகி
பூசையான் செய்தேன் எனும் என்போத வாசனை
அதுவுமான மறை முதலடிகள் போற்றி”

என அவன் கண்ணீருடன் தன்னை மறந்து பாடியபோது சிவன் வெளிப்பட்டார், அவன் கைகள் நடுங்க உள்ளம் சிலிர்க்க நின்றுகொண்டிருந்தான்.

பல்லாயிரம் வருடம் தவமிருப்போர்க்கும் கிடைக்காக் காட்சி அவனுக்குக் கிடைத்தது. அவன் மிகுந்த ஆனந்தத்தில் தயங்கிச் சொன்னான்.

“எம்பெருமானே! தாங்கள் எழுந்தருளியிருக்கும் இத்தலத்தினை நெருங்கியபோது என்னைப் பற்றியிருந்த பிரம்மஹத்தி நீங்கிற்று. தங்களைத் தரிசித்து வழிபடும் பாக்கியம் அடியேனுக்குக் கிட்டியது. நான் நாள்தோறும் இங்கு வந்து தாமரைளைக்கொண்டு தங்கள் திருவடிகளை அர்ச்சிக்க‌ விரும்புகிறேன்” என்றான்.

சிவன் அவனை நோக்கிப் புன்னகைத்தார். “இந்திரா! நீ தேவர்களின் தலைவன்; அறங்களை உலக விதிகளை காக்க வேண்டியவன்; உன் தவறுகள் மன்னிக்கபட்டன; நீ சென்று உன் கடமையினைத் தொடரலாம்; ஒவ்வொரு சித்திரை மாதத்தின் சித்திரை நட்சத்திரம் கூடிவரும் பௌர்ணமி அன்று நீ இங்கு வந்து எம்மை வழிபடு.

அது ஆண்டுமுழுக்க வழிபட்டதற்கு சமம், உனக்கு இனி எல்லாம் ஜெயமாகும்” எனச் சொல்லி மறைந்தார்.

மிகுந்த நன்றியுடன் அவரை விழுந்து வணங்கினான், தன் சாபம் தீர்ந்த நிறைவில் சொர்க்கலோகம் ஏகி நல்லாட்சி செய்தான்.

அன்றுமுதல் ஒவ்வொரு சித்ராபௌர்ணமிக்கும் அவன் வந்து அந்தத் தலத்தில் வழிபடுகின்றான், இன்றும் அது உண்டு.

இந்திரன் வழிபடும் அந்த லிங்கம் இன்றும் இரண்டாம் பிரகாரத்தில், அந்தப் பெரிய விநாயகரின் பின்பக்கம் உள்ள சந்நிதியில் மேற்கு பக்கம் உண்டு. சித்ராபௌர்ணமி அன்று இந்திரன் அதனை வழிபடுவது உண்டு. இப்போதும் உண்டு.

இந்தத் திருவிளையாடல் இந்திரனை மட்டும் குறித்து சொன்னது அல்ல, அவனும் அங்கு பிரம்மஹத்தி நீங்கப்பெற்றான்.

இந்தத் திருவிளையாடல் நுணுக்கமான தத்துவத்தைப் போதிக்கின்றது, குருவினை அசட்டை செய்வதால் வரும் பெரும் ஆபத்து அனைத்தையும் சொல்கின்றது.

குருவிடம் நாம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தத் திருவிளையாடல் மிகப் பெரும் உதாரணம். அழகு, அறிவு, உயர் பதவி என எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் குருவிடம் பணிவுடன் நடந்து கொள்ளவில்லை எனில் இந்திரனைப் போல வழிகாட்ட குருவருளின்றி அல்லல் பட நேரும். இந்திரன் தன் அவை வந்த குருவிடம் பணிவைக் காட்டத் தவறியதால் இந்திரப்பதவியையே இழந்தான்.

வீட்டில் எவரேனும் ஒருவர் குருவை சிக்கெனப் பிடித்துக் கொண்டால் அவர்கள் வாழ்வு வளம் பெறும் என்பதற்கு இந்திராணியே பெரும் உதாரணம். ஆம், அவள் தேவகுரு பிரகஸ்பதியைப் பணிந்து தன்னையும், தன் கணவனையும் காப்பாற்றிக் கொண்டாள். இந்திரன் குருவைப் பணிவோடு பணிந்து அவரைப் பின்தொடர்ந்த போது இந்திரப்பதவியை அடைந்தான். குருவிடம் எவ்வளவு பணிவோடு இருக்க வேண்டும் என்பதற்கு இந்திரன் வாழ்வு ஒர் உதாரணம்.

“பதவி வரும் போது பணிவு வர வேண்டும்” என்பதை நகுஷன் வாழ்வு உணர்த்தும். நகுஷனுக்குக் கிடைத்தற்கரிய இந்திரப்பதவி கிடைத்த போது பணிவில்லாமல் இந்திரனின் மனைவியை அடையத் துடித்தான். அதுமட்டுமின்றி சப்தரிஷிகளிடமும் பணிவின்றி நடந்து கொண்டான். அந்தப் பணிவின்மை நகுஷனை அழித்துப் போட்டது.

குரு என்பது இங்கு மனசாட்சி, இந்திரன் என்பது ஆசைமயக்கம், சுகபோகம். மானிடப் பிறப்பில் மாய சுகபோகங்களுக்கு ஆசைப்பட்டு மனசாட்சியினை மீறிச் செயல்பட்டால் அது பெரும் ஆபத்தை, பாவத்தைத் தரும்.

ஒவ்வொருவரும் மனதால் சிந்தையால் மாய ஆசைகளால் பல பாவங்களைச் செய்கின்றோம். அது இப்பிறப்பு முற்பிறப்பு என எப்போதுமிருக்கலாம். எந்தப் பாவமாக இருந்தாலும் அது பிரம்மஹத்தி போல் நம்மைத் தொடரும்.

மதுரை ஆலயத்தில் அந்தச் சாபம் தீரும். எல்லாக் கர்மவினை, பெரும் சாபம் எல்லாமே தீரும். எது உங்கள் கர்மவினையால் அஜாக்கிரதையால் உங்களை மீறி உங்களுக்கு சாபமாகி தொல்லை தருமோ அதெல்லாம் தீரும்.

மதுரை ஆலயத்துக்குச் செல்லும் போது இந்திரன் பாடிய அந்தத் துதியினைச் சொல்லி சிவனை வணங்குங்கள். அதுவும் இரண்டாம் பிரகாரத்தின் மேற்கு மூலையில் இருக்கும் நாதனிடம் பாடி வணங்குங்கள்.

அதுதான் அந்த ஆலயத்தின் மூத்த சிவன், மதுரை ஆலயம் காலங்காலமாய் யுகம் யுகமாய் மாற்றம் கண்டாலும் இன்றுவரை நிலைத்திருக்கும் ஆதி லிங்கம் அதுதான்.

அந்தச் சிவன் முன் நின்று இந்திரன் பாடிய துதிகளைச் சொல்லி மலரிட்டு மண்டியிட்டு வணங்கி வேண்டுங்கள். எந்தப் பெரிய பெரிய பிரம்மஹத்தி என்றாலும், உங்களை அறிந்தே செய்த பெரும் பாவத்தின் சாபம் என்றாலும் அறியாமல் செய்த சாபத்தின் பாவம் என்றாலும் அது அகன்றே போகும்.

இந்த பூமி, மரம், பெண்கள், நீர் என்பதும் ஆழ்ந்த தத்துவம் கொண்டது. இந்தப் பூமியில் ஒவ்வொரு ஆத்மாவும் சில சாபத்தின் நிமித்தம் கர்மம் தொலைக்க வந்திருக்கின்றது, அந்த ஆத்மா வாழ கர்மம் தொலைக்க பெண்ணிடமிருந்து பிறந்து, நீர், பூமியால், தாவரத்தால் வளர்ந்து கர்மம் தொலைத்துச் சென்றாக வேண்டும், ஒவ்வொரு மானிடனும் சாபமிக்க பிறப்பே.

இந்தச் சாபம் மதுரை ஆலவாயன் சன்னதில் தீரும் என்பதே இந்தத் திருவிளையாடலின் ஆழ்ந்த தாத்பரியம்.

அங்கு வேண்டும்போது அகத்தியர் முதல் சப்த ரிஷிகளையும் நினைந்து, இந்திரனை நினைந்து, மறக்காமல் ததீசி முனிவர் எனும் மாபெரும் மகானை நினைந்து சிவன் முன் நின்று உங்கள் துன்பத்தை முறையிடுங்கள், அதன் காரணம் அறிந்தவர் அந்தச் சிவம் மட்டுமே. அவரே அதற்கான முழுத் தீர்வையும் தந்து உங்களை வாழவைப்பார். நீங்கள் இழந்த எல்லாமும் தருவார். இது சத்தியம்.