தேவி மஹாத்மியம்

தேவி மஹாத்மியம் 01 : மதுகைடப வதம்
மார்க்கண்டேய மஹரிஷி கூறினார்
“எவர் சூரிய குமாரனோ, எவர் ஸாவர்ணி என்கிற எட்டாவது மனுவாக கூறப்பட்டுள்ளானோ, அந்த மனுவினுடைய சரிதத்தை விரிவாகச் சொல்கிறேன், கேட்பீராக. ஸாவர்ணி மனு, மஹாமாயையினுடைய கருணையால் அனைத்து மந்வந்த்ரங்களுக்கும் அதிபரானார்.
முன்பு ஸ்வாரோசிஷன் என்ற மனுவின் கால முடிவில் சைத்ர வம்சத்தில் உதித்த, ஸுரதன் என்னும் அரசன் இப்பூமண்டலம் முழுமைக்கும் தலைவனாயிருந்தான்.
நாட்டு மக்களை தன் குழந்தைகளைப் போல பாதுகாத்து ஆட்சி புரிந்து வந்த பொழுது கோலாவித்வம்சிகள் எனப்பட்ட க்ஷத்திரிய குல எதிரி மன்னர்கள், அவனை போரில் ஜெயித்தனர்.
தோற்ற ஸுரதன் நிறைய இழந்து சிறிய பகுதியில் முடக்கபட்டான். இழந்த பெரும்நாடும் பெரும் வாழ்வும் அவனுக்குள் அலை அலையாய் சோகங்களை கொடுத்துகொண்டே இருந்தன
வேட்டையாட தனித்து கானகத்துக்குச் சென்றான். அந்த கானகத்தில் ஸுமேதஸ் என்ற அந்தணர் ஆசிரமம், வேதம் ஓதும் சிஷ்யர்களாலும், சாந்தமாய் இருந்தது. மன்னன் அங்கேயே சில காலம் வசித்து வந்தான்.
அப்பொழுது ஸுரதன், கலங்கிய மனதோடு தன் நாட்டை பற்றிய நினைவிலிருந்தான். ஒருநாள், ஸமாதி எனும் வைசியனை அந்த ஆசிரமத்தருகில் கண்டு அவன் விசாரித்தான். அவனும் தன் குடும்பத்தால் துரத்திவிடப்பட்ட சோகத்தை சொன்னான்.
அடுத்து, ஸமாதி என்ற வைசியனும், ராஜா ஸுரதனும் சேர்ந்து அம் முனிவரிடம் சென்றனர். அரசன் சொன்னான், நாங்கள் இருவரும் குடும்பத்தால் விரட்டப்பட்டாலும், மனமும் சித்தமும் அவர்கள் பற்றியே சிந்தித்து, வேதனையடைவதன் காரணமென்ன?
மஹரிஷியே! விவேகமுள்ள எங்களுக்கு இந்த மயக்கம் எப்படி ஏற்பட்டது? நானும் இந்த வைசியனும் அறிவிலிகளாக இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
இழந்ததையே நினைந்து அழுது கொண்டிருக்கின்றோமே ஏன்? எவ்வளவு சாஸ்திரம் ஞானநூல்கள் எல்லாம் கற்றும் இப்படி மயகத்தில் இருக்கின்றோமே ஏன்?
இந்த மாயை பற்றி சொல்லுங்கள்.
மஹரிஷி கூறினார். ஓ பாக்யவான்களே! மனிதர்கள் மஹாமாயா தேவியைனுடைய மகிமையால், நான் எனது என்ற அபிமானம் அடைந்து லௌகீக கார்யங்களிலேயே உழல்கின்றனர்.
மஹாமாயை எனப்படுகிற ஆனந்த வடிவான அந்த தேவியானவள், உலகநாதனாகிய ஸ்ரீ மஹாவிஷ்ணுவினுடைய யோக நித்திரையாகிறாள். அந்த மாயையே இந்த பூமியை மோகமடையும்படி செய்கிறாள். அதனால் நீ இவ்விஷயத்தில் வியப்பு அடையத் தேவையில்லை.
மேலும் பலவாறு மஹாமாயை பற்றி ரிஷி சொன்னார். அரசன் கேட்டான்.
மஹரிஷியே! இவ்விடத்தில் மஹாமாயை என்று தாங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? அவள் யார்? அவள் எப்படி தோன்றினாள்? அந்த தேவியினுடைய பணிதான் என்ன? அவள் மகிமை என்ன? அவள் ஸ்வரூபம் எப்படி இருக்கும்? அவள் எப்படி உண்டானாள்? இந்த விவரங்கள் கேட்க ஆவலாயிருக்கிறேன்.
மஹரிஷி சொன்னார். அந்த தேவி நிலையானவளாக இருப்பினும் தேவர்களின் பணியை நிறைவேற்றும் பொருட்டு எப்பொழுது அவதரிக்கிறாளோ அப்பொழுது முதல் இப்பிரபஞ்சத்தில் தோன்றினாள் என கூறப்படுகிறது.
பிரளய காலத்தில் உலகமே நீரில் மூழ்கியிருந்தபொழுது பகவானான ஸ்ரீ விஷ்ணுவானவர் பாம்பனையில் பள்ளி கொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயத்தில் அவரது காது அழுக்கிலிருந்து, மது, கைடபன் என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர் அந்த இருவரும் பிரம்மாவை கொல்ல முற்பட்டனர்.
அந்த நேரத்தில் பிரம்மா ஸ்ரீ விஷ்ணுவை துயில் எழுப்புவதற்காக அவரின் கண்ணின் இமையில் வாசம் செய்பவளும், பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்து இருப்பவளும், உலகை காப்பாற்றுபவளும், இணையற்றவளுமும், ஒளிவடிவான ஸ்ரீ விஷ்ணுவின் யோக நித்திரை வடிவினளும், ஒப்பற்றவளுமான அந்த மஹாமாயையைத் துதிக்கலானார்.
பிரம்மமத்தின் உருவாய் அழியாது நிலைத்திருக்கும் தேவியே! தேவகணங்களுக்கு திருப்தியை உண்டாக்கும், பித்ருக்களுக்கு திருப்தியை உண்டாக்கும் தேவி, உருவோடும் அனைத்து கர்ம பல வடிவான ஸ்வர்கத்தை அடையும் வழியும் நீயேயல்லவா?
இந்த அகிலம் உன்னால் படைத்து, காத்து, அழிக்கப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் உன்னாலேயே இவ்வுலகம் தாங்கப்படுகிறது.
நீயே மஹாவித்யையாகவும், மஹா மாயையாகவும், மஹா புத்தியும், மஹா ஞானியும், மோஹ வடிவானவளும், தேவ சக்தியாகவும், அசுர சக்தியாகவும் இருக்கிறாய்.
ஓ அன்னையே! சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களையும் இயக்குபவளும், அனைத்துப் பொருட்களுக்கும் மூலாதாரமாக விளங்குபவளும் நீயே அல்லவா? பிரளய காலத்தின் இறுதியில் தோன்றும் காலராத்ரியின் உருவாகவும், மஹாராத்ரியின் தோற்றமாகவும், மோஹ ராத்ரியின் ரூபமாகவும் இருப்பவள் நீயே அல்லவோ!
அன்னையே! செல்வத்தின் வடிவான லட்சுமியும், ஈஸ்வரனின் துணைவியும், விஷ்ணுவும், ஸ்திரமான புத்தியும், மன அமைதியும், பொறுமையும், நாணமும், வளர்ச்சியும் சந்தோஷமும் நீயேயல்லவா?
பத்துக் கரங்களிலும் வாள், சூலம், சிரசு, கதை, சக்ரம், சங்கு, வில், பாணம், புஸுண்டி, பரிகம் என்ற ஆயுதங்களோடு இருப்பவளுமான அன்னையும் நீயேயல்லவா!
இவ்வுலகில் என்றும் எங்கும் ரூபமாயும், அரூபமாயுமுள்ள, அணுவளவு சிறிய பொருளிலும் உனது சக்தியன்றோ நிரம்பியிருக்கிறது. அப்படியிருக்கையில் உன்னை எவ்விதம் ஸ்தோத்தரிப்பேன்.
இவ்வாறு ப்ரம்மா தேவியின் பல பெருமைகளைக் கூறி மேலும் துதித்தார்.
உனது அற்புதத்தினால் ஜகந்நாதனாகிய அச்சுதனையும் விரைவில் விழிப்படைய செய்வாயாக! இப்பெரிய அரக்கர்களை சம்ஹரிக்கும் எண்ணத்தையும் தோற்றுவிப்பாயாக!
உறக்கத்தின் உருவாயுள்ள தாமஸீ தேவியானவள் மதுகைடபர்களை அழிப்பதற்கும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் துயிலெழுவதற்கும், அவரின் கண்கள், வாய், மூக்கு, கைகள், ஹ்ருதயம் ஆகிய இடங்களிலிருந்து வெளிப்பட்டு பிரஹ்ம தேவனின் முன் தோன்றினாள்.
உடன், ஸ்ரீ மஹாவிஷ்ணு உறக்கத்தை விட்டு எழுந்திருந்தார். அவர் மது கைடபர்களை நோக்கினார். பிறகு ஐயாயிரம் ஆண்டுகள் தன் கரங்களையே ஆயுதமாகக் கொண்டு அவர்களோடு போரிட்டார்.
அதிகளவு பலமிருக்கும் பெருமையின் காரணமாக ஏற்பட்ட செருக்கினால் அவ்விரு அசுரர்களும், மஹாமாயா தேவியால் அறிவு மயக்கப்பட்டு கேசவனை நோக்கி, ‘எங்களிடம் தேவையான வரத்தைக் கேளும்” என்றனர்.
ஸ்ரீ விஷ்ணு பகவான் கூறினார். “ இத்தருணத்தில் என்னால் மகிழ்ச்சி அடைந்த நீங்கள் இருவரும் என்னால் கொல்லப்பட வேண்டும். எனக்கு தேவைப்படுவது இது தான்.”
இவ்வாறு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவ்விருவரும் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டிருப்பதைப் பார்த்து, ஸ்ரீ விஷ்ணுவிடம் ஜலமே இல்லாத பூமியில் வைத்து எங்களை சம்ஹரிக்கலாம் என்று கூறினார்கள்.
சங்கு, சக்கரம், கதை இவைகளை ஏந்திக் கொண்டிருக்கிற பகவானும் “அப்படியே ஆகட்டும்” எனக் கூறிவிட்டு அவர்களுடைய சிரசுகளை தனது மடியின் மீது இருத்தி சக்கராயுதத்தால் சேதாரம் செய்து அழித்தார்
இவ்வாறு மஹாமாயா தேவியானவள் பிரம்மாவினால் நன்கு ஸ்தோத்தரிக்கப்பட்டு தேவர்களுடைய காரியத்தின் நிமித்தம் தானாகவே தோன்றினாள். இந்த தேவீயினுடைய மஹாத்மியத்தை ஓ ஸுரதனே! மேலும் உனக்கு கூறுகிறேன். நீ கேட்பாயாக.”
இது மஹாமாயி எனும் அந்த ஆதிசக்தி தன்னை வெளிகாட்டும் தருணம் என மார்கண்டேய மஹரிஷியினால் சொல்லபடுகின்றது
ஸ்லோகத்தின் பொருளை கவனியுங்கள்
அந்த அரசனும் , வைஸ்யனும் நிம்மதி தேடி வருகின்றார்கள், தங்கள் மனம் ஏன் இப்படி மயங்கி கிடப்பதை
ரிஷியிடம் கேட்டு நிற்கின்றார்கள், ஏன் இப்படி அறிவு மயங்கி கிடக்கின்றோம் என பரிதாபமாக கேட்கின்றார்கள்
அவர்கள் தெளிவடைய அன்னையின் பெரும் ஆற்றல் ஒன்றுபற்றி சொல்கின்றார் முனிவர்
பிரளய காலத்து வெள்ளத்தில் விஷ்ணு தூக்கம் எனும் மயக்கத்தில் விழுகின்றார் மயங்கிய அவரிடம் இருந்து இரு அசுரர்கள் தோன்றி தொல்லைகொடுக்கின்றார்கள்
படைப்புக்கு அதிபதியான பிரம்மன் ஆதிபராசக்தியினை நோக்கி அழைக்க அவள் வந்து விஷ்ணுவினை விழிக்க வைத்து அந்த அசுரர்களை அழிக்கும் வழி சொல்கின்றாள்
அப்படியே அந்த பிரளய வெள்ளத்தில் இருந்து நிலம் மீட்கபடும் வகையினை சொல்லி, அவர்களை அழிய செய்து பிரம்மனின் படைப்புதொழில் பெருக வழி செய்கின்றாள்
இதுதான் சுருக்கமான பொருள், மது கைபடவன் எனும் அரக்கர்களை கொன்றதாலே அவன் மதுசூதனன்
இங்கே முனிவர் போதிக்கும் தத்துவம் என்னவென்றால் ஒரு மனிதன் மயக்கத்தில் வீழும்போது அவனிடமிருந்து அறியாமை பிறக்கின்றது
அறியாமையால் அவன் பெரும் துன்பங்களை சந்திக்கின்றான், அவன் அடையும் துன்பங்களுக்கெல்லாம் அறியாமை என ஒன்றே காரணமாகின்றது
இந்த அறியாமை சித்தம், புத்தி ஆகியவற்றில் இருந்து உருவாகி செயலில் பிரதிபலித்து பெரும் இன்னல் கொடுக்கின்றது
அன்னையினை வேண்டினால் அவள் இந்த அறியாமையினை வெல்லும் வழி தருவாள்
ஒருவகையில் இதெல்லாம் அன்னையின் விளையாட்டு, விஷ்ணுவினை உறங்க வைப்பதும் அவளே அவனை எழுப்புபவளும் அவளே
மதுகைடபவரை அறியாமையில் வரம்கேட்க சொல்பவள் அவளே, அப்படியே நிலம் உருவாக காரணமும் அவளே
இப்படி அவள் தன் மாயவிளையாட்டால் பிரளய காலத்தில் நீரில் மிதந்த இந்த உலகை மறுபடி இயங்க வைத்தாள்
பிரம்மன் அவளை வேண்டியதால் எதை இழந்தானோ, அதவாது படைப்புதொழில் நிலம் இல்லாமல் இழந்தானோ அதை மீளபெற்றான்
விஷ்ணு தன் சக்தியினை பெற்றான், அன்னையே இங்கு எல்லாவற்றையும் இயக்குகின்றாள் அவள் “மகாமாயி”
ஏ அரசனே, ஏ வைசியனேஅன்னை அப்படியானவள், இங்கு எல்லாமே அவள் இயக்கம் , இந்த உலகை இயக்குபவளே நம்மையும் இயக்குகின்றாள், அவளாலே இங்கு எல்லாமும் நடக்கின்றது
அவள் உங்களுக்கு அறியாமை கொடுத்து என்னை தேடிவர செய்தாள், அறியாமையினால் நீங்கள் மயங்கி கிடப்பதை பற்றி கேள்வி கேட்க வைத்தவளும அவளே
அதனால் தன் சக்தியினை உங்களை அறிந்துகொள்ள செய்தவளும் அவளே
அவளின் ஒவ்வொரு செயலும் அர்த்தமானவை, ஞானமானவை அவளின்றி இங்கு ஏதும் நடப்பதில்லை, அறிவு அறியாமை மாயை வெற்றி ஞானம் என எல்லாமும் அவளிடம் இருந்தே வருகின்றது
அவளே இடத்துக்கு தக்க ஒவ்வொரு குணத்திலும் தன்மையிலும் தன்னை வெளிபடுத்தி இந்த உலகை இயக்குகின்றாள், எல்லாமே அவள் செயல் , எல்லாமே நன்மையினை நோக்கி செல்லும் செயல்
எல்லோரையும் அவளே இயக்குகின்றாள் நன்மைக்காக இயக்குகின்றாள் உங்களையும் இங்கு அவளை பற்றி அறிந்துகொள்ளவே அறியாமை துயரில் தள்ளி அழைத்து வந்துள்ளாள் என சூசகமாக போதிக்கின்றார் முனிவர்
ஆம், அன்னையே எல்லாவற்றிலும் இருக்கும் மகமாயி, நன்மை தீமை அறியாமை அறிவு ஞானம் என எல்லாமும் அவளிடமிருந்தே வருகின்றன
அவள் மானிடரின் அறியாமை மூலம் தன்னை அறியசெய்கின்றாள், அவளை பணிந்து வேண்டினால் எல்லா ந்லமும் வளமும் கிட்டும், தனக்கு விருப்பமனோர் தன்னை தேட அறியாமையினை மாயையினை ஏவும் அவள், அவர்கள் தன்னிடம் வந்தபின் ஞானதெளிவு கொடுக்கின்றாள்
அந்த ஞானமே காளி , அந்த மாபெரும் சக்தியே மகா காளி எனும் “மகாமாயீ” என்பதே இந்த் காட்சியின் பொருளாகும்
இன்று சிந்திக்கவேண்டிய விஷயமும் அதுவே
(உலகம் நீரால் மூடபட்டு பின் நீர் குறைந்து நிலம் மேலேழுந்து இந்த உலகம் மெல்ல மெல்ல உயிர்களால் நிறைய தொடங்கிற்று என விஞ்ஞானம் சொல்வதை இந்த புராணம் மூலம் என்றோ சொன்ன மதம் இந்துமதம்
மது, கைபட அசுரர் என்பது இரு கரும் சக்திகள். அந்த சக்திகளின் அசைவால் மூல சக்தியில் இருந்து இவ்வுலகம் தோன்றிற்று என்பதை, மூல சக்தியில் இருந்து இந்த கருப்ப் விசைகள் எப்படி உருவாகி பின் பூமி உருவானது என்பதை பிரிதொரு நாளில் கருந்துளை ஆய்வு விஞ்ஞானம், இதர வானியல் இயங்கு சக்தி ஆயுவுகளில் சொல்லும், நிச்சயம் சொல்லும்
இந்த வான்வெளி முழுக்க தூசுகள் கொட்டிகிடப்பதை, அந்த தூசுகள் வால்நட்சத்திரம் இதர குறுங்கோள் மேல் படிந்து அவை பல கோள்களில் உயிர்களாகலாமென்பதும் விஞ்ஞான கோணம்
இந்த தூசிகள் பிரபஞ்சத்தின் சில இடங்களில் இறுகி பெரும்பாறைகள் கோள்களானது, இன்னும் ஆகும் என்பது விஞ்ஞான பாடம்
அதாவது கோள்கள் வெடிப்பு, இணைவு , மோதல் என பெரும் தூசுகள் நிரம்பிய அண்டவெளி இது
ஆக அந்த தூசுகளில் இருந்து சில சக்திகள் கோள்கள், உயிர்கள், சக்திமிக்க அலைகள் உருவாவதை விஞ்ஞானமே சொல்கின்றது
மது , கைபடர் எனும் அசுரர்கள் பகவானின் காது அழுக்கில் இருந்து வந்தார்கள் என்பது இந்த தத்துவமே.
இன்றைய விஞ்ஞானம் ஆதாரத்தோடு சொல்வதை அல்லது ஆதாரம் தேடி தேடி அலையும் ரகசியங்களை அன்றே தேவர், அசுரர், பகவான், மஹசக்தி என மானிடர் புரியும்படி சொல்லிதந்த ஞானமதம் இந்துமதம்)
தேவி மாஹாத்மியம் : 02
“தேவி மாஹாத்மியம்” நூலிலிருந்து சாரமான ஏழு ஸ்லோகங்களை எடுத்து “ஶ்ரீ துர்கா ஸப்தஶ்லோகீ ” என வகுத்துள்ளார்கள்.
ஆம், ஸ்ரீ தேவி மாஹாத்மியத்தில் இருக்கும் எழுநூறு ஸ்லோகங்களின் சாரமே, ‘ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகி”. இதை பாராயணம் செய்தால், ஸ்ரீ தேவிமாஹாத்மியம் பாராயணம் செய்த முழுப் பலனும் அடையலாம்.
அதுவும் அன்னைக்கு உகந்த நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். தன்னை ஜபம் செய்வோர்க்கு, ஸ்ரீ துர்க்கா ஸப்த ச்லோகீ விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் தள்ளுவதற்கும் அன்னையின் அருளைப் பெற்றுத் தரும்.
வாசித்து தொழுதால் நிச்சயம் பலன் உண்டு. தேவி மஹாத்மியம் எனும் முழு நூலை படிப்பதும் இந்த சுருக்கத்தை படிப்பதும் ஒன்றே
இதோ அந்த ஸ்லோகம்
“ஓம் அஸ்ய ஶ்ரீ துர்கா ஸப்தஶ்லோகீ ஸ்தோத்ரமந்த்ரஸ்ய நாராயண ருஷி꞉,
அனுஷ்டுப் சந்த꞉, ஶ்ரீ மஹாகாளீ மஹாலக்ஷ்மீ மஹாஸரஸ்வத்யோ தேவதா꞉,
ஶ்ரீ துர்கா ப்ரீத்யர்தம் ஸப்தஶ்லோகீ துர்காபாடே வினியோக꞉
ஓம் ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா |
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி
துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிம்-அஶேஷ ஜந்தோ꞉
ஸ்வஸ்தை꞉ ஸ்ம்ருதா மதிம்-அதீவ ஶுபாம் ததாஸி |
தாரித்ர்ய-து꞉க பய-ஹாரிணி கா த்வத்-அன்யா
ஸர்வோ உபகார கரணாய ஸதா-ஆர்த்ர சித்தா
ஸர்வ மங்கள மாங்கள்யே ஶிவே ஸர்வார்த ஸாதிகே |
ஶரண்யே த்ர்யம்பகே கௌரீ நாராயணீ நமோ(அ)ஸ்து தே
ஶரணாகத தீனார்த பரித்ராண பராயணே |
ஸர்வஸ்ய ஆர்தி-ஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே
ஸர்வ-ஸ்வரூபே ஸர்வேஶே ஸர்வ-ஶக்தி-ஸமன்விதே |
பயேப்யஸ்-த்ராஹி நோ தேவி துர்கே தேவி நமோ(அ)ஸ்து தே
ரோகான-அசேஷான்-அபஹம்ஸி துஷ்டா-ருஷ்டா து காமான் சகலான்-அபீஷ்டான் |
த்வாம்-ஆஶ்ரிதானாம் ந விபன்-னராணாம் த்வாம்-ஆஶ்ரிதா-ஹ்யாஶ்ரய-தாம் ப்ரயாந்தி
ஸர்வ-பாதா-ப்ரஶமனம் த்ரை-லோக்யஸ்ய-அகிலேஶ்வரி |
ஏவமேவ த்வயா கார்யம்-அஸ்மத்-வைரி வினாஶனம்
இதன் தமிழாக்கம் இதோ :
“மகாமாயையான பகவதி தேவி ஞானியரின் சித்தங்களையும் பலவந்தமாக தன் மாயா சக்தியால் இழுத்து மோகத்தில் செலுத்துகிறாள், ஞானியரின ஞானம் நீ அருள்வது, அவர்களின் செயலும் நீ கொடுப்பதே
துர்கே! உனை நினைத்த மாத்திரத்தில் எல்லா உயிரினங்களின் பயத்தையும் போக்குகின்றாய். இன்ப நிலையில் இருந்து கொண்டு ஸ்மரிக்கப்பட்டால் பரம மங்களமான நல்லறிவை நல்குகிறாய். வறுமை, துன்பம், பயம் ஆகியவற்றை நீக்குபவளே! ஸகலருக்கும் ஸர்வ உபகாரங்களையும் செய்வதற்காக சதாகாலமும் காத்திருக்கும், கருணையால் நிரம்பிய நெஞ்சுடையவர் உனையன்றி எவர் உண்டு?
மங்கள வஸ்துக்கள் அனைத்தினும் பரமமங்களமானவளே! மங்களமே வடிவான சிவனின் சக்தியே! சகல புருஷார்த்தங்களையும் சாதித்துத் தருபவளே! சரணாகத நிலையமே! முக்கண் படைத்த த்ரயம்பகியே! வெண்பொற் சோதியாம் கௌரி!! மனிதருக்கெல்லாம் அடைக்கலமாம் நாராயணி! உனக்கு நமஸ்காரம்.
‘சரண்’ என வந்த பலவீனரையும் துன்புற்றோரையும் மிக அருமையாகக் காப்பதையே தொழிலாகக் கொண்ட தேவி! அனைவரின் துன்பங்களையும் நீக்கும் நாராயணி! உனக்கு நமஸ்காரம்.
காணும் உருவனைத்தும் நீயே! அனைத்தையும் ஆளும் தேவி நீயே! சர்வ சக்தியும் ஒன்றிய இடம் நீயே! தேவி துர்கே! உனக்கு வந்தனம்! எங்களை அச்சங்களினின்று ரட்சித்தருள்வாய்.!
(பக்தியினால்) நீ திருப்தியடைந்தால், சகல ரோகங்களையும் அறவே அகற்றுகிறாய். கோரும் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி அருள்கிறாய். உனை அரண் போல பாதுகாப்பாகக் கொண்ட மனிதருக்கு இடர் என்பதே இல்லை. அவர்களே பிறருக்கு காவலாகின்றனர் அன்றோ ?
அகிலாண்டேசுவரி! உன்னால் எமது பகைவர்கள் அழிக்கப் பெற வேண்டும். இவ்வாறே மூவுலகிலும் உள்ளவர்களின் சகல துன்பங்களையும் நீ அடியோடு அகற்றி அருள வேண்டும்.”
துர்கா பூஜையின் இரண்டாம் நாளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி அதன் தமிழாக்கத்தை தியானித்து அன்னையினை வணங்குதல் நல்ல பலன்களை தரும்
இன்றைய நாளினை இந்த வழிபாட்டு துதியுடன் முடிப்பது சால சிறந்தது

தேவி மாஹாத்மியம் : 03
தேவி மஹாமித்யம் சொல்லும் முதல் பகுதி மகா காளிக்கானது, அடுத்த பகுதி மஹா லட்சுமிக்கானது, அந்த மஹாலட்சுமிதான் மகிஷாவர்த்தினியாக அவதரித்து மகிஷனை சங்காரம் செய்தாள்
அவள் ஆவேசமான நிலையில் துர்க்கை,அமைதியான நிலையில் மஹாலஷ்மி, அவள் சிந்திக்கும் நிலையில் சரஸ்வதி என அவளுக்கு பல வடிவங்கள் உண்டு
அமைதியாக இருக்கும் மஹாலட்சுமி எப்படி ஆவேசமாக உருவாகி மகிஷ படைகளோடு மோதினாள் என்பதை மகாமித்தியத்தின் இரண்டாம் பகுதி சொல்கின்றது
இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் எல்லா தேவர்களும் தங்கள் சக்தியினை வழங்கி அவளை உருவாக்கினார்கள் என்பதல்ல, எல்லா தேவரின் வடிவமாக அவர்களுக்கு தன் சக்தியினை கொடுத்த அன்னை அவர்கள் செயலற்றுபோகும் போது அவற்றை தன்னுள் ஏற்று வந்து மகிஷனை அழித்து அவர்களை விடுவித்தாள் என்பது
அன்னை எல்லா சக்தியாகவும் இருக்கின்றாள், அதர்மம் தலைவிரித்தாடும் போது எல்லா சக்தியினையும் ஒன்றாக்கி ஒரே உருவாக்கி வந்து அதர்மத்தை அழிக்கின்றாள்
மகிஷன் ஒரு பெண்ணால் தனக்கு அழிவுவரவேண்டுமென வரம் வாங்கியவன், ஒரு பெண் தன்னை கொல்லமுடியும் என எதிர்பார்க்கவுமில்லை
அன்னை எல்லா சக்தியின் வடிவமானவள், எல்லா சக்தியும் அவளே என்பதை கடைசியில் உணர்ந்து மகிஷன் அழிந்து போகின்றான், அவனின் ஆக்ரோஷ அகங்காரமும் அதர்மமும் அவனோடு அழிந்தது
தானே எல்லோரையும் படைக்கின்றேன், தானே காக்கின்றேன் தானே அழிக்கின்றேன், தன்னை விட பெரும் சக்தி எங்கும் இல்லை என காட்டிநின்றாள் அன்னை
அந்த “தேவி மகாத்மியம்” நூலின் இரண்டாம் பாகத்தின் முதல் பாதி அன்னை மகிஷனின் சேனையினை வதம் செய்யும் காட்சி இதோ
“முன்னொரு காலத்தில் மஹிஷாசுரன் அசுரர்க்கரசனாயும், இந்திரன் தேவர்களுக்கு அரசனாயும் இருக்கையில் நூறு வருஷகாலம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு யுத்தம் நிகழ்ந்தது.
அப்போது மகாவீரியம் படைத்த அசுரர்களால் தேவசைன்னியம் தோற்கடிக்கப்பட்டது. எல்லா தேவர்களையும் ஜயித்து, மஹிஷாசுரன் இந்திரப்பதவி யெய்தினான்.
பின்னர், தோல்வியுற்ற தேவர்கள் பிரம்மாவை முன் னிட்டுக்கொண்டு பரமசிவனும் மகாவிஷ்ணுவும் எங்கு கூடி யிருந்தனரோ அங்கு சென்றனர்.
மஹிஷாசுரனுடைய சேஷ்டையையும் தேவர்களுக் கேற்பட்ட அவமானத்தையும் நடந்தது நடந்த பிரகாரம் விரிவாகத் தேவர்கள் அவர்களிடம் கூறினர்.
சூரியன், இந்திரன், அக்கினி, வாயு, சந்திரன், யமன், வருணன், இன்னும் மற்ற எல்லா தேவதைகளுடைய அதிகாரங்களையும் நடத்திக்கொண்டு அவன் ஒருவனே வீற்றிருக்கிறான். அந்த துராத்மாவான மஹிஷனால் சொர்க்கத் திலிருந்து துரத்தப்பட்டு தேவகணங்களெல்லாம் மனிதர்க ளைப்போல் பூலோகத்தில் அலைந்து திரிகின்றனர்.
தேவசத்துருவின் சேஷ்டையாகிய இது எல்லாம் உங்களிடம் விஞ்ஞாபனம் செய்து கொண்டோம். எங்களுக்கு புகலிடம் நீங்கள். நாங்கள் சரணாகதர்கள். அவனுடைய வதத்திற்குரிய வழியைச் சிந்தித்தருள வேண்டும்.
தேவர்களுடைய இவ்வார்த்தைகளைக் கேட்டு விஷ் ணுவும் சம்புவும் புருவங்கள் நெரிந்து முகங்களில் கடுகடுப்புத் தோன்றக் கோபங் கொண்டனர்.
அப்போது கடுங்கோபம் நிறைந்த சக்ரபாணியின் முகத்தினின்றும், பிரம்மாவின் முகத்தினின்றும் சங்கரர் முகத் தினின்றும் அவ்வாறே வெளிக்கிளம்பிய அந்த மகத்தான ஒளி யொன்று வெளிப்போந்தது.
இந்திரன் முதலிய மற்ற தேவர்களுடைய சரீரங் களினின்றும் அவ்வாறே வெளிக்கிளம்பிய அந்த மகத்தான ஒளி யெல்லாம் ஒன்றாகச் சேர்ந்தது.
அந்தப் பேரொளியின் பிழம்பு மலைபோல் ஜ்வலிக்கவும் திக்கு திசைகளெல்லாம் அதன் ஜ்வாலைகள் வியாபிக்கவும் தேவர்கள் கண்டனர்.
எல்லா தேவ சரீரங்களினின்றும் அங்கு தோன்றிய அவ்வொளி உவமையற்றதாய் விளங்கிற்று. ஒன்று சேர்ந்த அது முவ்வுலகையும் தன் காந்தியால் வியாபிக்கும் ஒரு பெண்ணுருக் கொண்டது.
சம்புவினிடமிருந்து வந்த ஒளி எதுவோ அதனால் அவளுடைய முகம் தோன்றிற்று. யமனுடையதால் கேசமும் விஷ்ணுவின் ஒளியால் புஜங்களும் தோன்றின.
சந்திரனுடைய காந்தியால் இரண்டு ஸ்தனங்களும், இந்திரனுடைய காந்தியால் இடையும் தோன்றின. வருண னுடையதால் துடைகளும் முழங்கால்களும், பூமியின் காந்தி யால் பிருஷ்டபாகமும் தோன்றின.
பிரம்மாவின் ஒளியால் இருபாதங்களும் சூரிய ஒளி யால் கால் விரல்களும், வசுக்களின் ஒளியால் கைவிரல் களும், குபேரன் ஒளியால் மூக்கும் தோன்றின.
பிரஜாபதியின் ஒளியால் அவளுடைய பல்வரிசை கள் உண்டாயின. அவ்வாறே அக்கினியின் ஒளியால் மூன்று கண்கள் உண்டாயின.
ஸந்தியைகளின் ஒளியால் இரு புருவங்களும், வாயு வின் ஒளியால் இருகாதுகளும் உண்டாயின. இவ்வாறாக மற்ற தேவர்களுடைய ஒளியாலும் மங்கள வடிவினளான தேவியின் ஆவிர்ப்பாவம் ஏற்பட்டது.
எல்லா தேவர்களுடைய தேஜஸ்ஸும் ஒருங்கே சேர்ந்து தோன்றிய அவளைக் காணப்பெற்ற அப்போது மஹி ஷனிடம் துன்புற்ற தேவர்கள் ஆனந்தமடைந்தனர்.
பிநாகபாணியான பரமசிவன் தனது சூலத்தினின்று ஒரு சூலத்தைத் தோற்றுவித்து அதை அவளுக்குக் கொடுத் தார். கரியதிருமால் தன் சக்கரத்தினின்று ஒரு சக்கரத்தை உண்டாக்கி யளித்தார்.
வருணன் சங்கத்தையும், அக்கினி சக்தி ஆயுதத்தை யும் அவளுக்குக் கொடுத்தனர். வாயு பகவான் வில்லையும் பாணங்கள் நிறைந்த இரண்டு அம்புறாத்தூணிகளையும் அளித் தார்.
ஆயிரங் கண்களையுடையவனும் தேவராஜனுமாகிய இந்திரன் தனது குலிசத்தினின்று தோற்றுவித்த வஜ்ராயுதத் தையும், தனது யானையாகிய ஐராவதத்தினின்று தோற்று வித்த மணியையும் கொடுத்தான்.
யமன் காலதண்டத்தினின்று தண்டத்தையும், வருணன் பாசத்தையும் அளித்தனர். பிரஜாபதியாகிய பிரம்மா அக்ஷமாலையையும் கமண்டலுவையும் கொடுத்தார்.
அவளுடைய மயிர்க்கால்களில் பிரகாசிக்கும்படி சூரியன் தனது கிரணங்களைக் கொடுத்தான். காலன் கத்தியை யும் நிர்மலமான கேடயத்தையும் கொடுத்தான்,
பாற்கடலரசன் நிர்மலமான ஹாரத்தையும் என்றும் புதிதாயிருக்கும் இரு வஸ்திரங்களையும் கொடுத் தான். அவ்வாறே சூடாமணி, பிரகாசம் பொருந்திய குண்ட லங்கள், கடகங்கள், வெண்மையான
அர்த்தசந்திரப்பிரபை, எல்லாத் தோள்களுக்கும் தோள்வளைகள், நிர்மலமான நூபு ரங்கள், ஒப்புயர்வற்ற அட்டிகைகள், எல்லா விரல்களுக்கும் ரத்தின மிழைத்த மோதிரங்கள் முதலிய எல்லா ஆபரணங் களையும் பிரகாசம் பொருந்திய பரசுவையும் அநேக விதமான அஸ்திரங்களையும், பிளக்கமுடியாத கவசத்தையும் விசுவகர்மா அவளுக்குக் கொடுத்தான்.
வாடாத தாமரை மாலையைச் சிரத்திலணியவும் மிகவும் சோபையுள்ள மற்றொன்றை மார்பி லணியவும் கடலரசன் அளித்தான். ஹிமவான் சிம்ம வாக னத்தையும் பலவித ரத்தினங்களையுமளித்தான்.
குறையாத மது பாத்திரத்தைக் குபேரன் கொடுத்தான். இந்த பூமியைத் தாங்குபவனும் நாகங்களுக்கெல்லாம் அதிபனுமாகிய ஆதிசேஷன் மகாமணிகளால் அலங்கரிக்கப் பெற்ற நாகஹாரத்தைக் கொடுத்தான். மற்றுமுள்ள தேவர் களாலும் அவ்வாறே ஆயுதங்களும் ஆபரணங்களும் அளிக்கப் பெற்றாள்.
அங்ஙனம் பூஜித்துப் போற்றப்பட்ட தேவியானவள் (தேவர்களுக்கு உற்சாகமூட்டுபவளாய்) உரக்க அடிக்கடி அட்டஹாஸம் செய்தாள். அந்த பயங்கரமான சப்தத்தால் ஆகாயவெளி யெங்கும் நிறைந்தது.
அளவிடமுடியாத பெரிய எதிரொலியுங் கிளம்பிற்று. எல்லா உலகங்களும் கலங்கின ; ஸமுத்திரங்கள் கரை புரண்டன.
பூமி அசைந்தது. மலைகள் நடுங்கின. சிங்கவாஹ னத்திலெழுந்தருளிய தேவியை தேவர்கள் ஸந்தோஷத்துடன் ‘ஜய ஜய’ என்று போற்றினர்.
பக்தியின் பணிவே உருக்கொண்டவர்களான முனிவர்கள் இவளைத் துதித்தனர். முவ்வுலகும் நடுக்குற்ற தைக் கண்ட தேவ சத்துருக்கள் சேனைகளைத் திரட்டிக் கொண்டு ஆயுதபாணிகளாய்க் கிளம்பினார்கள். ஆஹா!
இது என்ன !’ என்று கோபத்தால் கூவிக்கொண்டு மஹிஷாசுரன் அசுரர்கள் சூழச் சப்தம் எழுந்த திக்கை நோக்கி விரைந்தான்.
தன் காந்தியால் மூவுலகையும் வியாபித்து நின்ற தேவியை அவன் கண்ணுற்றான்.
பாதங்களின் பாரத்தால் பூமி சலிக்கவும், கிரீடம் வானத்தின் முகட்டைத் தொடவும், வில்லின் நாணொலியால் பாதாள முட்பட எல்லாம் நடுங்கவும், ஆயிரம் புஜங்களும் திக் கெங்கும் வியாபிக்கவும் நின்ற தேவியை (அவன் கண்ணுற் றான்). பின்னர் அந்த தேவியுடன் அசுரர்களின் போர் தொடங்கிற்று.
வெகுவாக விடப்பட்ட சஸ்திரங்களாலும் அஸ் திரங்களாலும் திசைகள் ஜ்வலித்தன. சிக்ஷுரன் என்ற கொடிய அசுரன் மஹிஷாசுரனுடைய சேனாதிபதியாக இருந் தான். அவனும், வேறு சதுரங்க பலங்களுடன் சாமரனும், ஆறாயிரம் தேர்களுடன் உதக்ரன் எனும் மகாசுரனும், கோடித்தேர்களுடன் மஹாஹ்னுவும், ஐந்துகோடித் தேர்களுடன் அஸிலோமா எனும் மகாசுரனும் ஆறுலக்ஷம் தேர்களுடன் பாஷ்கலனும் போர்க் களத்தில் யுத்தம் செய்தனர்.
ஆயிரக்கணக்கான யானைப் படைகளும் குதிரைப்படைகளும் கோடித் தேர்களும் சூழ்ந்த. வனாய்ப் பரிவாரிதன் என்ற அசுரனும் யுத்தம் செய்தான். ஐம்பது கோடி ரதங்களால் சூழப்பெற்ற பிடாலன் எனும் அசுரனும் அந்தப் போரில் யுத்தம் செய்தான்.
மற்ற கணக் கற்ற மகாசுரர்களும் கணக்கற்ற தேர், யானை, குதிரைகள் சூழ, தேவியுடன் அந்தப் போரில் யுத்தம் செய்யலாயினர். ஆயிரம் கோடி கோடித்தேர் யானை, குதிரைகள் சூழ அங்கு யுத்தத்தில் மஹிஷாசுரன் தோன்றினான். தோமரம், பிந்திபாலம், சக்தி முஸலம்,கத்தி,பரசு, பட்டிசம் முதலிய ஆயுதங்களைக்கொண்டு அந்தப் போரில் தேவியுடன் அவன் யுத்தம் செய்தான். சில அசுரர்கள் சக்தி ஆயுதங்களையும், மற்றும் சிலர் பாசங்களையும், பிரயோகித்தனர்.
வாளை வீசிக் கொண்டு அவர்கள் அந்த தேவி யைக் கொல்ல முயன்றனர். அந்தச் சண்டிகா தேவி அப் போது அவ்வஸ்திர சஸ்திரங்களைத் தனது அஸ்திர சஸ்திரங் களைப் பொழிந்து விளையாட்டாகப் பரிஹரித்தாள். தேவர் களும் ரிஷிகளும் துதிக்க மீண்டும் தேவியாகிய பரமேசுவரி சற்றும் ஆயாசமின்றி அசுரர்களுடலில் சஸ்திரங்களையும் அஸ். திரங்களையும் விடுத்தாள்.
தேவியின் வாகனமாகிய அந்தச்சிங்கமும் கோபங்கொண்டு பிடரியை உதறிக்கொண்டு அசுர சேனைகளிடை காட்டுத்தீ போல் பாய்ந்தது. ரணகளத்தில் யுத்தம் செய்யும் அம்பிகை விட்ட பெருமூச்சு எதுவோ அதுவே நூறாயிரக் கணக்கில் அப்போதே சேனாபலமாக ஆயிற்று. பரசு, பிந்திபாலம், கத்தி, பட்டிசம் முதலிய ஆயுதங்களுடன் அவர்கள் போர் புரிந்தனர்.
தேவியின் சக்தியால் பூரித்த அச்சேனைகள் அசுரக் கூட்டங்களை அழிப்பவர்களாய்த் தம்பட்டங்களைக் கொட்டி னார்கள். மற்றும் சிலர் சங்குகளை முழக்கினார்கள்.
அவ்வாறே அந்த யுத்த மஹோத்ஸவத்தில் இன்னும் சிலர் மிருதங்கங்களை வாசித்தார்கள். அதன்மேல் தேவி திரிசூலம், கதை, சக்தி, வாள் முதலிய ஆயுதங்களைப் பொழிந்து கொடிய அசுரர்களை நூற்றுக் கணக்கில் வீழ்த்தி னாள். தனது மணியின் ஓசையாலேயே மதியிழக்கச் செய்து சிலரை வீழ்த்தினாள்.
பாசத்தால் கட்டிச் சில அசுரர்களைப் பூமியில் இழுத்தாள், வேறு சிலர் கூரிய வாள் வீச்சால் இரண்டு துண்டாக்கி வீழ்த்தப்பட்டனர்.
கதையால் தாக்குண்டு சிலர் பூமியில் வீழ்ந்தனர். ரத்தத்தைக் முஸலத்தால் நையப்புடைக்கப்பட்டுச் சிலர் கக்கினர்.
சூலத்தால் மார்பு பிளவுண்டு சிலர் பூமியில் சாய்ந்தனர். சில தேவசத்துருக்கள் அம்புக் கூட்டங்களால் உடலெங்கும் தைக்கப்பெற்று அம்பு மயமாய் (முள்ளம் பன்றி களைப் போல்) காணப்படுபவர்களாய்ப் பிராணனை விட்டனர். சிலருடைய தோள்கள் பிறர் கழுத்து வெட்டுண்டவராயினர்.
சிலருடைய தலைகள் உருண்டன ; சிலர் இடுப்பில் வெட்டுண்டனர்; கால்கள் வெட்டுண்டும் துடைகள் வெட் டுண்டும் சில கொடிய அசுரர்கள் வீழ்ந்தனர்.
ஒற்றைத் தோளும் ஒற்றைக் கண்ணும் ஒற்றைக் காலும் உடைய சிலர் தேவியால் இரண்டாக வெட்டப் பட்டனர். சிலர் தலை வெட்டுண்டு வீழ்ந்த பின்னருங்கூட, அவர்களுடைய தலையற்ற உடல்கள் மீண்டும் எழுந்து ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தேவியுடன் யுத்தம் செய்தன. மற்றும் சில கபந்தங்கள் யுத்தகளத்தில் முரசு முதலிய வாத்தி யங்களின் ஒலிக்கிசைவாகக் கூத்தாடின.
சில மகாசுரர்கள் தலையிழந்தபின்னரும், கத்தியும் ஈட்டியும் கையிலேந்திக்கொண்டு தேவியை நோக்கி “நில் நில்” என்று கூவினர்.
கொடிய யுத்தம் நடந்த இடத்தில் தேர்களும் யானை களும் குதிரைகளும் அசுரர்களும் வீழ்ந்து கிடந்தமையால் பூமி கால் வைக்க இடமில்லாமலிருந்தது.
அங்கு அசுரர்களிடமிருந்தும் யானைகளிடமிருந்தும் குதிரைகளிடமிருந்தும் பாய்ந்த ரத்த வெள்ளம் பெரிய ஆறு களைப் போல் அசுரர் சேனையின் நடுவில் பெருக்கெடுத்தது.
விறகும் புல்லும் பெரிய குவியலாயிருந்தால் எப்படி நெருப்பு எரிக்குமோ அப்படி அம்பிகையானவள் ஒருகணத் தில் அந்தப் பெரிய சேனையை நாசமாக்கினாள்.
அவளுடைய வாகனமாகிய அந்த சிங்கமும் உறக்க கர்ஜனை செய்துகொண்டும் பிடரிமயிரைச் சிலிர்த்துக் கொண்டும் தேவசத்ருக்களின் உடல்களில் உறையும் உயிர்களைத் தேடுவது போல் காணப்பட்டது.
தேவியின் கணங்களால் அசுரர்களுடன் செய்யப் பட்ட யுத்தம் எங்ஙனமிருந்ததெனின், தேவர்கள் வானிலிருந்து புஷ்பமாரி பெய்து துதிக்கும்படி இருந்தது.”

தேவி மஹாத்மியம் : 04
// தேவி மஹாத்மியத்தின் நான்காம் அத்தியாயம் அதாவது மகிஷாசூர வதத்தை படிப்போரின் குடும்ப வினை தீரும், ஜென்ம சாபம் தீரும், பித்ரு சாபம், கடன் தொல்லை, தீரா பரம்பரை சிக்கல் எல்லாம் தீரும், எதிரிகள் அழிவார்கள் என்பது நம்பிக்கை //
அன்னை துதியினை முதலில் சொல்ல வேண்டும், அதனை சொல்லி அவளை வணங்க வேண்டும்
“ஓம்,ஆயிரம் கோடி உதயசூரிய செங்கிரணங்களின் ஒளியால் ஜொலிப்பவளும், தாமரை மேல் அமர்ந்தவளும், அழகிய மாலையாக காட்சிதரும் கேசங்களை உடையவளும், மார்பகத்தில் சிவந்த சந்தன பூச்சுடன் இருப்பவளும், தாமரை போன்ற கரங்களில் ஜபமாலையும், புத்தகமும், அபய வரத முத்திரையுடன் ப்ரகாசிப்பவளும், தாமரை போன்ற அழகிய முகத்தில் முக்கண்களுடன் பிறை சந்திரனுடன் கூடிய ரத்தினங்கள் பதித்த மகுடத்தை தரித்தவளுமான என் தாயை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்”
மகிஷாசுர வதம் தொடர்கின்றது
அந்த மஹாசுரனின் சேனாதிபதியாக இருந்த சிக்ஷுரன் அந்த அசுர சேனையின் அழிவைக் கண்டு கோபமூண்டு அம்பிகையை எதிர்த்துப் போர்புரிய முற்பட்டான்.
மேருமலையின் மீது மேகமானது மழைபொழிவது போல் அவ்வசுரன் அப்போரில் தேவியின் மேல் சரமாரி பெய்தான்.
அவனுடைய அம்புக்கூட்டங்களை விளையாட்டாக வெட்டித் தள்ளிவிட்டு தேவியானவள் அவனுடைய குதிரைகளையும், குதிரைகளை ஓட்டுபவனையும் பாணங்களால் கொன்று வீழ்த்தினாள்.
உடனே அவனுடைய வில்லையும் உயர்ந்து நின்ற கொடியையும் வெட்டினாள். வில்லையிழந்த அவன் உடலை, விரைந்து பாணங்களால் துளைத்தாள்.
வில்லொடிந்து, தேரிழந்து, குதிரையிழந்து, சாரதியும் இறந்து நின்ற அவ்வசுரன் வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு அந்த தேவியை எதிர்த்துப் பாய்ந்தான்.
அந்த சிக்ஷுரன் என்ற அசுரன் தனது கூரிய வாளால் சிங்கத்தை தலையில் தாக்கிவிட்டு மிகுந்த வேகத்துடன் அவன் தேவியையும் இடது கரத்தில் அடித்தான்.
அவளுடைய புஜத்தில் பட்டதும் அவ்வாள் பொடியாயிற்று. கோபத்தால் கண்சிவந்து அவ்வசுரன் அப்பொழுது சூலத்தை எடுத்துக்கொண்டான்.
அடுத்து சிக்ஷுரன் பத்திரகாளியை நோக்கி ஒளியால் ஜ்வலித்துக்கொண்டு ஆகாயத்திலிருந்த சூரிய பிம்பமே பாய்ந்தாற்போல் தோன்றுமாறு அதை எய்தினான்.
பாயும் அச்சூலத்தை நோக்கித் தேவியானவள் தனது சூலத்தை விடுத்தாள். அசுரனுடைய அச்சூலம் அதனால் நூறு சுக்கலாகி சிதறியது. அந்த அசுரனான சிக்ஷுரனும் நூற்றுக்கணக்காக சிதறினான்.
மஹிஷாசுரனுடைய சேனாதிபதியும் மகாவீரியம் பொருந்தியவனுமான அவன் மடிந்ததும் தேவர்களைத் துன்புறுத்தும் சாமரன் எனும் அசுரன் பெரிய யானைமேல் ஆரோகணித்து வந்தான்.
அவன் தேவியின் மேல் சக்தியை விடுத்தான். அதை அம்பிகை விரைவில் ஹுங்காரத்தால் வீரியமற்றதாக்கித் தரையில் வீழ்த்தினாள்.
சக்தி ஒடிந்து வீழ்ந்ததைக்கண்டு கோபமூண்டு சாமரன் சூலத்தை எறிந்தான். அவள் பாணங்களால் அதை வெட்டினாள்.
பின்னர் சிங்கமானது யானையின் மஸ்தகத்தின் மேலேறி வீற்றுக்கொண்டு அந்த தேவசத்துருவுடன் உக்கிரமான கைப்போர் செய்தது.
அங்ஙனம் போர்புரிந்து கொண்டே யானை மீதிருந்து இருவரும் தரைக்கு வந்து இன்னும் அதிகமான ஆவேசத்துடன் கடுமையாய்த் தாக்கிக்கொண்டு யுத்தம் செய்தனர்.
பின்னர் ஆகாயத்தில் கிளம்பிக் கீழே குதித்தபோது சிங்கத்தின் அறையால் சாமரனுடைய தலை துண்டிக்கப் பட்டது.
அப்போது கடும் கொபத்துடன் வந்தான் உதக்ரன் எனும் அசுரன்
மரங்களைக் கொண்டும் கற்களைக்கொண்டு அவனை அழித்தாள் தேவி, மரத்தை பிடுங்கி அவனை அவள் அடித்ததிலே அவன் ஒழிந்தான்
காராளன் எனும் இன்னொரு அசுரன் அன்னையினை நோக்கி பாய்ந்து வந்தான், அவனை தன் வாளின் அடிப்பாகத்தில் இருக்கும் தந்தபிடியால் அடித்து ஒழித்தாள் அன்னை
அவன் வீழ்ந்ததும் உத்தகனும்,பாஷ்லனும் அதி வேகமாக வந்தார்கள். தாமிரன் அவர்கள் பின்னால் வந்தான், அந்தகன் ஆக்ரோஷமாய் வந்தான்
தேவியானவள் கோபித்து உத்ததனைக் கதையாலடித்துப் பொடியாக்கினாள்; பாஷ்கலனை பிந்திபாலத்தாலும், தாமிரனையும், அந்தகனையும் அம்புகளாலும் கொன்றாள்.
அவர்கள் அழிந்தபின் சேனாதிபதிகளான உக்ராஸ்யன், உக்ரவீர்யன், மஹாஹனு என மூவர் வந்தார்கள், அவர்களை தன் திரிசூலத்தின் மூன்று முனைகளால் வதைத்தாள் தேவி
அவர்களுக்கு பின்னும் பிடாலன், துர்த்தரன், துர்முகன் என சக்திவாய்ந்த அசுரர்கள் வந்தார்கள்
கத்தியால் பிடாலனுடைய தலையை உடலினின்று வீழ்த்தினாள். துர்த்தரனையும், துர்முகனையும் அம்புகளால் யமாலயத்திற்கனுப்பினாள்.
தனது சேனை இவ்வாறு நாசமடையக்கண்டு மஹிஷாசுரன் எருமை உருவில் வந்து தேவியின் கணங்களைப் பயமுறுத்தினான்.
முகவாய்க் கட்டையால் தாக்கிச் சிலரையும், குளம்பால் மிதித்துப் பிறரையும், வாலால் அடித்தும் கொம்பால் கிழித்தும் மற்றவர்களையும், இன்னும் சிலரை வேகத்தாலும், சப்தத்தாலும், சுழற்சியாலும், மூச்சுக் காற்றாலும் பூமியில் வீழ்த்தினான்.
மஹாதேவியின் பிரமத கணங்களை வீழ்த்திவிட்டு அவ்வசுரன் சிங்கத்தைக் கொல்வதற்காகப் பாய்ந்தான். அப்போது அம்பிகை கோபங்கொண்டாள்.
மகாவீரியம் பொருந்திய அசுரனும் பூமியைக் குளம்பால் பிளப்பவனாகவும், கொம்புகளால் உயர்ந்த மலைகளைத் தூக்கி யெறிபவனாகவும் கோபத்துடன் கர்ஜித்தான்.
அவனுடைய வேகமான சுழற்சியால் மிதிபட்ட பூமி பொடியாயிற்று; வாலால் அடிக்கப்பட்ட கடல் எங்கும் கரைபுரண்டது.
அவன் கொம்பால் இடிபட்ட மேகங்கள் சிதறடிக்கப் பட்டன. மூச்சுக்காற்றால் தள்ளப்பட்டு மலைகள் வானவெளியில் பறந்தன.
இவ்வாறு கோபாவேசத்துடன் தன்மேல் பாயும் மகாசுரனைக்கண்டு சண்டிகாதேவி அவனைக் கொல்வதற்குக் கோபங்கொண்டாள்.
அவ்வசுரன்மேல் பாசத்தைவீசி அவனைக் கட்டினாள். கடும்போரில் கட்டுண்ட அவன் எருமை வடிவை இழந்தான்.
அப்போதே சிங்க வடிவுகொண்டான். அம்பிகை அவன் தலையை வெட்டியபோது அவன் வாளேந்திய புருஷ வடிவில் காணப்பட்டான்.
உடனே தேவி தனது அம்புகளால் அப்புருஷனை அவன் வாளுடனும் கவசத்துடனும் சேதித்தாள். அப்போது அவன் பெரிய யானையானான்.
யானை வடிவில் அவன் தனது துதிக்கையால் தேவியின் பெருமைமிக்க சிங்கத்தைப் பிடித்திழுத்து கர்ஜித்தான். இழுக்கும்போது தேவியானவள் துதிக்கையை வாளால் துண்டித்தாள்.
பின்னர் அக்கொடிய அசுரன் மீண்டும் எருமையுருக்கொண்டு சராசரங்களுடன் மூவுலகையும் நடுங்கச்செய்தான்.
ஜெகன்மாதா கொஞ்சமும் அசராமல் அட்டகாசமாய் சிரித்தாள்
அவ்வசுரனும் பலத்தாலும் வீரியத்தாலும் கொழுப்புடன் கர்ஜித்தான். கொம்புகளால் மலைகளைத் தூக்கிச் சண்டிகையின் மேல் எய்தினான்.
அவளும் அவனால் எறியப்பட்டவற்றைத் தனது அம்புகளைப் பொழிந்து பொடியாக்கினாள். யுத்த ஆவேசத்தில் அவனை நோக்கிக் கூறலானாள்.
“மூடனே, கடைசியாக நீ கர்ஜிப்பாய், கர்ஜிப்பாய். என்னால் நீ கொல்லப்பட்ட பின் இங்கேயே தேவதைகள் கர்ஜிக்கப் போகின்றார்கள்.
இங்ஙனம் கூறிவிட்டு, அவள் அக்கொடிய அசுரன்மேல் பாய்ந்து அவனை வீழ்த்தி அவன் கழுத்தில் காலால் மிதித்து நின்று கொண்டு சூலத்தால் அவனைத் தாக்கினாள்.
காலின் கீழொடுக்கப்பட்ட அவனும் அப்போது தன் சுய எருமை உருவுடன் தன் வாயினின்று வெளிவர முயன்றான். எனினும் தேவியின் வீரியத்தால் ஒடுக்கப்பட்டு அரைவாசிதான் வெளிவர முடிந்தது.
அரைவாசி தான் வெளிவந்தவனாயினும்கூடப் போரை நிகழ்த்திய அம்மகாசுரன் தேவியின் வாளால் தலை வெட்டுண்டு வீழ்த்தப்பட்டான்.
அதன் மேல் ஐயோ! ஐயோ! என்று அலறிக் கொண்டு அசுரச்சேனை யெல்லாம் மடிந்தது. தேவகணங்க ளெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை யடைந்தார்கள்.
தேவர்கள் தேவலோகத்து மகரிஷிகளுடன் தேவியைத் துதித்தார்கள். கந்தர்வபதிகள் பாடினார்கள். அப்ஸர கணங்கள் ஆடினார்கள்

தேவி மஹாத்மியம் : 05
முப்பத்து முக்கோடி தேவர்களால் சூழப்பட்டவளும், ஜயத்தை விரும்பும் பக்தர்களால் ஆராதிக்கப்பட்டவளும், தனது ஒளியால் மூவுலகங்களிலும் இருளை அகற்றுபவளும், தனது கடைக்கண் பார்வையால் எதிரிகளின் மனதில் அச்சத்தை உண்டாக்குபவளும், தீயனவற்றை தூசு போல சுட்டெரித்து ஒளிர்பவளும், கரங்களில் சங்கு, சக்கரம், வாள், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி, சிரசில் பிறைசந்திரனை சூடியவளும், மூன்று கண்களையுடையவளும், சிங்கத்தின் மீது அமர்ந்தவளுமான ஜயா என்ற பெயருடைய துர்க்கையை நான் தியானிக்கிறேன்”
வீரியம் மிக்கவனாயினும் துராத்மாவாகிய அம்மஹிஷாசுரனும் அவ்வசுரச்சேனையும் தேவியால் அழிக்கப்பட்ட பின் தேவேந்திரனும் தேவகணங்களும் வணக்கத்தால் வளைந்த கழுத்தும் தோளும் மகிழ்ச்சியால் புளகாங்கித மடைந்து அழகிய உடல்களுமுடையவர்களாய் அந்த தேவியைச் சொற்கொண்டு போற்றினார்கள்.
“எந்த தேவி தனது சக்தியால் இவ்வுலகை யெல்லாம் வியாபிக்கின்றாளோ, எல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில் ஒன்று கூடுகின்றனவோ, எல்லா தேவர்களாலும் மகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ அந்த அம்பிகையை நாங்கள் பக்தியுடன் வணங்குகின்றோம். அவள் நமக்கு நலன்களை அருளவேண்டும்.
எவளுடைய ஒப்புயர்வற்ற பெருமையையும் பலத்தையும் மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் சிவனும்கூட வர்ணிக்க இயலாதோ அந்தச் சண்டிகை அசுபத்தினாலேற்படும் பயத்தைப் போக்கி அகில உலகையும் பரிபாலிக்கத் திருவுளங் கொள்ளவேண்டும்.
புண்ணியவான்களுடைய வீடுகளில் ஸ்ரீதேவியாகவும், பாவிகளுடைய வீடுகளில் மூதேவியாகவும், திருந்திய மதியுடையவர்களின் உள்ளத்தில் புத்தியாகவும், நல்லோர்களிடம் சிரத்தையாகவும், நற்குலத்துதித்தோரிடம் வெட்கமாகவும் எவள் தானே விளங்குகின்றாளோ அவளேயாகிய உன்னை வணங்குகின்றோம். தேவியே, உலகனைத்தையும் காத்தருள வேண்டும்.
தேவியே! உனது நினைத்தற்கரிய வடிவையோ, அசுரர்களை அழிக்கும் அளவு கடந்த வீரியத்தையோ, எல்லா தேவகணங்களிடையும் அசுர கணங்களிடையும் நிகழ்ந்த போரில் உனது அற்புதச் செயல்களையோ எங்ஙனம் வர்ணிப்போம்?
உலகனைத்திற்கும் காரணம் நீ ; நீ முக்குண வடிவினளாயினும் குண தோஷங்களுடன் காணப்படுபவளல்ல. ஹரி ஹராதியர்க்கும் எட்டாதவள்; எல்லோருக்கும் புகலிடம்; இவ்வுலகெல்லாம் உன்னுடைய ஒரு அம்சத்தில் தோன்றியுளது; முதன்மையானதும் மாறுபடாததும் உயர்ந்ததுமான மூலப்பிரகிருதி நீ.
தேவி! எல்லா யாகங்களிலும் எந்த உச்சாரணத்தால் தேவர்களனைவரும் திருப்தியடைகின்றார்களோ அந்த ‘ஸ்வாஹா வடிவினளாய் நீயே விளங்குகின்றாய். பிதிருகணங்களின் திருப்திக்கும் காரணம் நீயே; ஆதலாலேயே ஜனங்களால் ‘ஸ்வதா’ எனவும் உச்சரிக்கப் பெறுகின்றாய்.
தேவி ! நீ பகவதி. முக்திக்கு வித்தானதும் நினைத்தற்கரியதுமான மகாவிரதமும், பரவித்தையும் எதுவோ அதுவும் நீ. இந்திரியங்களை யடக்கியவர்களும் தத்துவத்தின் ஸாரத்தைக் கைக்கொண்டவர்களும், மோக்ஷத்தில் நாட்டமுள்ளவர்களும், முழுவதும் மாசற்றவர்களுமான முனிவர்களால் (அப்பியாசம் செய்யப்படுகின்றனை) இடையறாது நாடப்படுகின்றனை.
நீ சப்தவடிவினள், பரிசுத்தமான ரிக் வேதத்திற்கும் யஜுர் வேதத்திற்கும் பாடுதற்கினிய பதங்களுடன் கூடிய உத்கீதத்தால் அழகுபெற்ற ஸாமவேதத்திற்கும் உறைவிடம் நீயே.
மூன்று வேத வடிவான தேவி நீ; நீயே உலகைப் போஷிக்கும் ஜீவனம்; உலகனைத்தின் துன்பத்தைப் போக்கும் பரதேவதை.
சாஸ்திரங்களனைத்தின் ஸாரத்தையுணரும் புத்தி வடிவினள் நீ. கடத்தற்கரிய பிறவிக்கடலைக் கடத்துவிக்கும் பற்றின்மை எனும் படகாகிய துர்க்காதேவி நீ. விஷ்ணுவின் இருதயத்தைத் தனியிடமாகக் கொண்டு விளங்கும் ஸ்ரீதேவி நீ. சந்திரமௌலியிடம் பிரியாதுறையும் கௌரியும் நீயே.
பரிசுத்தமான புன்முறுவலுடன் பரிபூரண சந்திர பிம்பம் போலும் மாசற்ற பொன்போலும் ஒளி வீசிய உனது திருமுகம் காணப்பட்டபோது கோபத்தின் வசமான மஹிஷாசுரனால் விரைவில் அது தாக்கப்பட்டது வெகு ஆச்சரியம்
தேவி! உதயத்தில் சிவந்த சந்திரன் போலவும் கோபத்தால் புருவம் நெரிந்து கடுமையாகவும் விளங்கிய உனது முகத்தைக் கண்டதும் மஹிஷாசுரன் உடனே பிராணனை இழக்காததும் மிக்க விசித்திரமே. கோபங்கொண்ட யமனைக் கண்ட பின்னும் எவரால் ஜீவிக்க முடியும்?
தேவி! அருள் புரிய வேண்டும். உன்னை மீறியவர் எவருமில்லை. நீ கோபங்கொண்டால் (உலகின்) நன்மைக்காக (அசுரர்) குலங்களை அப்போதே அழிக்கின்றாய். மஹிஷாசுரனுடைய பரந்த சேனை நாசமாக்கப்பட்டபோதே அது நன்கு உணரப்பட்டதாயிற்று.
எப்போதும் உயர்வற உயர் நலமளிக்கும் நீ எவர்களிடம் பிரீதியடைகின்றாயோ அவர்களே ஜன ஸமூகத்தில் ஸம்மானம் பெறுகின்றார்கள். அவர்களுக்கே செல்வமும், அவர்களுக்கே புகழும் (உரித்தாகின்றன). அவர்களுடைய தர்மவர்க்கம் குறைவு படுவதில்லை. மனைவிமாரும் மக்களும் பணியாட்களும் நிறைந்து அவர்கள் செல்வவான்களாய் விளங்குவர்.
தேவி! உனதருளால் நல்வாழ்க்கை எய்தியவன் மிகுந்த ஆதரவுடன் நாள்தோறும் இடைவிடாது தருமகாரியங்களை யெல்லாம் செய்கிறான், பிறகு சுவர்க்கத்தையடையகிறான். ஆகையால் முவ்வுலகிலும் பயனையளிப்பவள் நீயே அன்றோ?
கடத்தற்கரிய கஷ்டத்தில் நினைக்கப்பட்டால் நீ எல்லா ஜீவர்களுடைய பயத்தைபும் போக்குகிறாய். இன்பத்தில் நினைக்கப்பட்டால் நலன் மிக்க மதியை அளிக்கின்றாய். ஏழ்மையையும், துன்பத்தையும், பயத்தையும் போக்குபவளே! எல்லோருக்கும் உபகாரம் செய்ய எப்போதும் உருகும் நெஞ்சுடையவர் உன்னைத் தவிர யார் உளர்?
தேவி! (கொடியோராகிய) இவர்கள் கொல்லப்பட்டதால் உலகம் இன்பம் எய்துகின்றது. ‘நரகத்தில் நித்திய வாசம் செய்யக்கூடிய பிரபலமான பாவத்தை இவர்கள் செய்தாலும் செய்யட்டும்! அதனால் போரில் (என்னிடம்) உயிர் துறந்து தேவலோகம் செல்லட்டும்!” என்று எண்ணியே நிச்சயமாக நீ எதிரிகளைக் கொல்கின்றாய் போலும்.
அசுரர்களை யெல்லாம் பார்த்த மாத்திரத்தாலேயே நீ பஸ்மமாக்க முடியாதா? எனினும் எதிரிகள்மேல் ஆயுதங்களைப் பிரயோகிப்பதால் “இவர்கள் சத்துருக்களாயினும் (எனது) ஆயுதங்களால் புனிதமாகி நல்லுலகங்களை அடையட்டும்” என்பதே அவர்களிடமும் மிகுந்த கருணைவாய்ந்த உனது எண்ணமாயிருக்கவேண்டும்.
உனது வாளினின்று போந்த ஒளிக்கற்றையின் மின்னலாலும், சூலத்தின் முனையின்றும் போந்த காந்தியின் பெருக்காலும் அசுரர்களின் கண்கள் அவியவில்லை என்றால் அது அவர்கள் குளிர்ந்த கிரணங்களுடன் கூடிய சந்திரபிம்பம் போன்ற உனது திருமுகமண்டலத்தைக் காணப்பெற்றதால் தான்.
தேவி! கெட்டவர்களின் போக்கை அடக்குவது உனது இயற்கை. உனது உவமையற்ற இவ்வடிவழகு பிறரால் சிந்தித்தற்கரிது. தேவர்களின் பராக்கிரமத்தையபகரித்தவர்களை யழிப்பது உனது வீரியம். இதனால் (இப்போரால்) சத்துருக்களிடமும் உனது தயை பிரகடனம் செய்யப்பட்டது.
இந்த உனது பராக்கிரமத்திற்கு எதை உவமை கூற இயலும்? (அடியார்களை) வசீகரிப்பதாயினும் சத்துருக்கள் மனத்தில் பயத்தை யுண்டாக்கும் இந்த வடிவழகு எங்குண்டு? வரமளிக்குந் தேவி ! சித்தத்தில் (இப்பேர்க்கொத்த) கிருபையும் யுத்தத்தில் கண்டிப்பும் முவ்வுலகிலும் உன்னிடமே காணப்பட்டது.
சத்துரு நாசத்தால் இம் மூவுலகு முழுதும் உன்னால் காக்கப்பட்டது. போர் முனையில் அச்சத்துரு கணங்கள் கொல்லப்பட்டு வானுலக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மதம் பிடித்த தேவசத்துருக்களிடமிருந்து தோன்றிய எங்கள் பயமும் போக்கப்பட்டது. உனக்கு நமஸ்காரம்.
தேவி! சூலத்தால் எங்களைக் காப்பாற்று. அம்பிகே! வாளாலும் காப்பாற்று. மணியோசையாலும் எங்களைக் காப்பாற்று. வில்லின் நாணொலியாலும் காப்பாற்று.
சண்டிகையே ! கிழக்கிலும் காப்பாய், மேற்கிலும் காப்பாய். ஈசுவரி ! அங்ஙனமே உனது சூலத்தைச் சுழற்றித் தெற்கிலும் வடக்கிலும் காப்பாய்.
முவ்வுலகிலும் சஞ்சரிக்கும் உனது அழகிய வடிவங்கள் எவையோ அவற்றாலும், அளவு கடந்த கோரமான வடிவங்கள் எவையோ அவற்றாலும் இப்பூவுலகையும் எங்களையும் காத்தருள்வாய்.
அம்பிகே! வாள், சூலம், கதை முதலிய ஆயுதங்கள் எவை உனது தளிர் போன்ற கரங்களில் ஏந்தப் பெறுகின்றனவோ அவற்றால் எத்திக்கிலும் எங்களைக் காப்பாய்.’
இங்ஙனம் தேவர்களால் துதிக்கப்பெற்றும், தேவலோக நந்தவனத்தில் புஷ்பித்த மலர்களால் அர்ச்சிக்கப் பெற்றும், வாசனைத் திரவியங்களால் பூசப்பெற்றும், திவ்ய தூபங்களால் தேவர்களனைவராலும் ஆராதிக்கப்பெற்றும், அருள் சுரந்த ஜகத்தாத்ரி தன்னை வணங்கி நின்ற தேவர்களனை வரையும் நோக்கிப் பின்வருமாறு கூறினாள்.
“தேவ கணங்களே ! உங்களுக்கு எது விருப்பமோ அதை வரமாக என்னிடம் கேட்கலாம்”
தேவர்கள் கேட்டார்கள்
“எங்கள் சத்துருவான மஹிஷாசுரன் கொல்லப் பட்டதால் வேண்டிய தெல்லாம் பகவதியால் செய்தாகிவிட்டது; இனி வேண்டுவதொன்றுமில்லை. இன்னும் உன்னால் எங்களுக்கு கொடுக்கத்தக்க வரம் உண்டெனில் (அது இதுவே).
நாங்கள் நினைக்குந்தோறும் எங்களுக்கேற்படும் பெரிய விபத்துக்களை நீ நாசம் செய்தல் வேண்டும். மாசற்ற வதனம் படைத்தவளே! எந்த மனிதனாயினும் இந்த ஸ்தோத்திரங்களால் உன்னைத் துதித்தால், அம்பிகே! எங்களிடம் அருள் சுரந்த நீ அவனுக்கும் எப்போதும் குறைவற்ற செல்வமும், பெருமையும், கோதனம் முதலியனவும், நல்ல ஸ்திரீகளும், ஸம்பத்தும் வளர அருள் புரியவேண்டும்.
உலகின் நன்மைக்காகவும் தேவர்களால் போற்றப்பட்ட பத்ர காளி அன்னை பதிலுரைத்தாள்
‘அங்ஙனமே ஆகுக” என்று கூறி மறைந்தருளினாள்.

தேவி மஹாத்மியம் : 06
“தேவீ தூத ஸம்வாதம்
மஹாஸரஸ்வதீ தியானம்”
மணி, சூலம், கலப்பை, சங்கம், உலக்கை, சக்கரம், வில் அம்பு ஆகியவற்றைத் தனது தாமரைக் கைகளில் தரிப்பவளும், மேகத்திடை விளங்கும் குளிர்ந்த சந்திரனைப் போன்ற பிரபையுடன் பிரகாசிப்பவளும், கௌரியின் தேகத்திலுதித்தவளும், மூவுலகிற்கும் ஆதாரமாகியவளும், அபூர்வ வடிவினளும், சும்பன் முதலிய அசுரர்களை நாசஞ் செய்தவளும் ஆகிய மஹா ஸரஸ்வதியைத் தியானிக்கின்றேன்.
முன்னொருகால் சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களால் இந்திரனுடைய மூவுலக ஆட்சியும் யஜ்ஞபாகங்களும் பலத்தாலும் கொழுப்பாலும் அபகரிக்கப்பட்டன.
சூரியன், சந்திரன், குபேரன், யமன், வருணன் முதலியோருடைய அதிகாரங்களை அவ்விருவரே செலுத்தலாயினர்.
வாயுவினுடைய அதிகாரத்தையும் அக்கினியின் தொழிலையும் அவ்விருவரே நடத்தலாயினர். தோல்வியுற்று இராஜ்யத்தையிழந்து நின்ற தேவர்கள் துரத்தப்பட்டனர்.
கொடிய அசுரர்களால் அங்ஙனம் அதிகாரம் அபகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட தேவர்கள் எல்லோரும் எவராலும் வெல்ல முடியாத அந்த தேவியை நினைத்தனர்.
ஆபத்தில் நினைக்கப்பட்டால் உங்களுடைய பெரிய ஆபத்துக்களையும் அக்கணமே போக்குவேன் என்று அவளால் நமக்கு வரமளிக்கப்பட்டுளது என உள்ளத்தில் கொண்டு தேவர்கள் மலையரசாகிய இமயத்தையடைந்து அங்கு விஷ்ணுமாயையாகிய தேவியை நன்கு துதித்தனர்.
எல்லா தேவர்களும் ஒன்று கூடி ஒரே குரலில் துதித்து வணங்கி அவளிடம் சரணடைந்து பாடினார்கள்
“தேவிக்கு நமஸ்காரம்; மஹாதேவிக்கு நமஸ்காரம். சுப வடிவினளுக்கு என்றென்றும் நமஸ்காரம், பிரகிருதிக்கு நமஸ்காரம். அந்த மங்கள ஸ்வருபிணியை நாங்கள் வணக்க ஒடுக்கத்துடன் வழிபடுகிறோம்.
பயங்கர வடிவினளாகிய அவளுக்கு நமஸ்காரம். நித்தியமானவளுக்கு நமஸ்காரம். கௌரியும் உலகைத் தாங்குபவளுமாகிய அவளுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். ஒளி வடிவினளும், சந்திரபிரபை போன்றவளும், இன்பவடிவினளுமாகியவளுக்கு என்றென்றும் நமஸ்காரம்.
சரணடைந்தோர்க்கு எல்லா நலன்களும் தானே ஆகியவளுக்கும், வளர்ச்சியும் வெற்றியும் ஆகியவளுக்கும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம். அரசர்க்கு அலக்ஷ்மியும் லக்ஷ்மியும் ஆகும் சிவபத்தினிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
கஷ்டங்களைக் கடத்துவிக்கும் துர்க்கையாகவும் அனைத்தின் ஸாரமாகவும், அனைத்தையும் ஆக்குபவளாகவும், கியாதி வடிவினளாகவும், கரிய வடிவினளாகவும், புகை வடிவினளாகவும் உள்ளவளுக்கும் என்றென்றும் நமஸ்காரம்.
இனிய வடிவினளாகவும் பயங்கர வடிவினளாகவும் உள்ள அவளுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். ஜகத்தின் ஆதாரமாயும் இயக்கமாயும் உள்ள தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி விஷ்ணுமாயை எனக் கூறப்பட்டுள்ளாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி சைதன்ய வடிவினள் எனக் கூறப்பட்டுள்ளாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி புத்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி நித்திரை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி பசி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி பிரதிபிம்ப வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி சக்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸகாரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி வேட்கை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி பொறுமை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி ஜாதி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி வெட்க வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி சாந்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி ச்ரத்தை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி காந்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி செல்வ வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி ஜீவனோபாய வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி ஞாபக வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம் நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி தயை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி திருப்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி தாய் வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி மாயை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி இந்திரியங்களை `ஆள்பவளாய் எங்கும் எல்லாப் பொருள்களிடத்தும் வியாபித்து நிற்கின்றாளோ அந்த தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
இவ்வுலகனைத்திலும் எவள் சைதன்ய வடிவில் வியாபித்து நிற்கின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
பூர்வத்தில் தங்கள் மனோரதம் பூர்த்தியாவதற்காக தேவர்களால் துதிக்கப்பட்டவளும் அங்ஙனமே நாள் தோறும் தேவேந்திரனால் சேவிக்கப்பட்டவளுமான அந்த ஈசுவரி நமக்கு சுபகாரணத்தையும் சுபகாரியத்தையும் நற்பயனையும் கூட்டுவிப்பவளாகவும் ஆபத்துக்களைப் போக்குவிப்பவளாகவும் ஆகவேண்டும்.
இப்போது கையோங்கிய அசுரர்களால் பீடிக்கப் பெற்ற தேவர்களாகிய நம்மால் எவள் வணங்கப்படுகின்றாளோ, எவளை பக்தியால் வணங்கிய தேகத்துடன் நினைத்த மாத்திரத்தில் அக்கணமே நம்முடைய எல்லா ஆபத்துக்களையும் போக்குவாளோ அவளே நம்மையாளும் ஈசுவரி.”
இங்ஙனம் துதி முதலிய பணிகளில் தேவர்கள் ஈடுபட்டிருக்கையில் அங்கு கங்கையில் நீராடப் பார்வதீ தேவீ வந்தாள்.
வளைந்த புருவங்களுடன் அழகிகுடன் விளங்கும் அவள் தேவர்களை நோக்கி ‘இங்கு யாரைத் துதிக்கின்றீர்கள்?” எனக் கேட்டாள். அப்போது அவளுடைய சரீர கோசத்தினின்று ஒரு மங்கள வடிவினள் வெளிப்போந்து பதிலளித்தாள்.
“யுத்தத்தில் சும்பனால் ஒடுக்கப்பட்டும் நிசும்பனால் ஜயிக்கப்பட்டும் இங்கு வந்து கூடியிருக்கும் தேவர்களால் இந்த ஸ்துதி என்னைக் குறித்துச் செய்யப்படுகிறது”
பார்வதியின் சரீர கோசத்தினின்று தோன்றியதால் அவ்வம்பிகை எல்லா உலகங்களிலும் கௌசிகீ எனப் போற்றப் படுகின்றாள்.
அவள் வெளியில் போந்தபின்னர் ஹிமாசலவாஸினியான அப்பார்வதியும் கரிய வடிவினளாகிக் காளிகை எனப் போற்றப்படுபவளானாள்.
மனதைக் கவரும் சிறந்த வடிவு தாங்கிய அம்பிகையை (கௌசிகீ தேவியை) சும்ப நிசும்பர்களின் பணியாட்களாகிய சண்டனும் முண்டனும் காணப்பெற்றனர்.
அவர்களால் சும்பனிடம் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது. “அரசர் பெருமானே ! ஒரு ஸ்திரீ இருக்கின்றாள். இமயமலையையே பிரகாசிப்பிக்கின்றாள். அளவு கடந்த அழகுடையவள்.
“அசுரர் பெருமானே! அது போன்ற உத்தமமான வடிவம் எவராலும் எங்கும் காணப்பட்டதில்லை. அந்த தேவி யாரென்று தங்களால் அறியப்பட வேண்டும். அடையப் படவும் வேண்டும்.
அசுரர்களின் அரசே! அவள் ஸ்திரீ ரத்னம். அழகிற் சிறந்த அங்கங்கள் படைத்தவள். தனது தேஜஸினால் திசைகளைப் பிரகாசிப்பித்துக்கொண்டு நிற்கின்றாள். தாங்கள் அவளைக் காண முழுதகுதியானவர்
மூவுலகிலும் யானை குதிரை முதலியவைகளோ, வயிரம் முதலிய விலை உயர்ந்த கற்களோ அந்தந்த வகையில் இரத்தினம் எனக் கருதப்படுபவை எவையோ அவையெல்லாம் தற்போது தங்கள் கிருகத்தில் பிரகாசிக்கின்றன.
இந்திரனிடமிருந்து கஜரத்தினமான ஐராவதம் உச்சைசிரவஸ் எனும் குதிரையும், அவ்வாறே இந்த பாரிஜாத விருட்சம் கொண்டுவரப் பட்டது.
இங்கு உமது முற்றத்தில் ஹம்ஸத்துடன் கூடிய இவ்விமானம் விளங்குகின்றது. அற்புதமான இது முன் பிரம்மாவிடமிருந்து ரத்னமானது பற்றி இங்கு கொண்டுவரப் பட்டது.
“மஹாபத்மம் எனும் இந்த நிதி குபேரனிடமிருந்து கொண்டு வரப்பட்டது. சிஞ்ஜல்கிஸீ என்னும் வாடாத தாமரை மாலையை ஸமுத்திரராஜன் தங்களுக்குக் கொடுத்தான்.
பொன்னொளி வீசும் வருணனுடைய குடை உமது கிருகத்தில் இருக்கின்றது. அவ்வாறே முன் பிரஜாபதியினிடம் எந்தச் சிறந்த தேர் இருந்ததோ அதுவும் இருக்கின்றது.
பிரபுவே! ‘உத்கிராந்திதா’ எனப் பிரசித்தி பெற்ற யமனுடைய சத்தி ஆயுதம் உம்மால் கொண்டுவரப்பட்டது. வருண ராஜனுடைய பாசம் உமது சகோதரனுடைய உடைமையாயிருக்கின்றது.
ஸமுத்திரத்தில் விளையும் எல்லாவகை ரத்னங்களும் நிசும்ப மகாராஜனுடையவையாய் இருக்கின்றன. நெருப்பால் பாவனமாக்கப்பட்ட இரண்டு வஸ்திரங்களை உமக்கு அக்கினியும் கொடுத்துள்ளான்.
அசுரர் அரசே ! இவ்வாறாகக் கொண்டுவரப்பட்ட எல்லா ரத்னங்களும் உம்முடையதாய் விளங்குகின்றன. மங்கள வடிவினளான இந்த ஸ்திரீரத்னம் ஏன் உம்மால் கிரகிக்கப் படவில்லை?
சண்டமுண்டர்களுடைய இவ்வார்த்தையைக் கேட்டுச் சும்பன் அதன்மேல் அசுரசிரேஷ்டனாகிய சுக்ரீவனைத் தூதாக தேவியிடம் அனுப்பினான்.
“என்னுடைய வார்த்தைகள் அவளிடம் இப்படி இப்படிச் சொல்லப்பட வேண்டும். எப்படிச் சொன்னால் மிகுந்த பிரீதியுடன் அவள் வந்து சேருவாளோ, எப்படிக் காரியத்தை எளிதில் முடிக்கலாமோ அப்படி உன்னால் செய்யப்பட வேண்டும்”
மலைமேல் அழகுமிக்க எந்த இடத்தில் அந்த தேவி இருந்தாளோ அங்கு சென்று, பின்னர் அவன் அவளிடம் மெதுவும் இனியதுமான சொற்களால் பேசலானான்.
“தேவி , அசுரர்களை ஆள்பவனாகிய சும்பன் மூவுலகிற்கும் மேலாகிய ஈசுவரன். அவனால் அனுப்பப்பட்டு நான் தூதனாக உன்னிடம் இங்கு வந்துள்ளேன், அவன் செய்தியினை உனக்கு அப்படியே தெரிவிப்பேன்.
தேவர்களாய்ப் பிறந்த அனைவரிடமும் எவனுடைய கட்டளை தடையின்றிச் செல்லுகின்றதோ, எவன் எல்லா அசுரப் பகைவரையும் வென்றவனோ அவன் கூறியது எதுவோ அதைக் கேட்பாய்.
மூவுலகு முழுவதும் என்னுடையது; தேவர்கள் என் வசமாய் நடப்பவர்கள்; தனித்தனியே எல்லா யஜ்ஞ பாகங்களையும் நானே அனுபவிக்கிறேன்.
மூவுலகிலுள்ள சிறந்த ரத்னங்கள் குறைவின்றி என் வசத்திலுள்ளன. அவ்வாறே தேவேந்திர வாகனமாகிய (ஐராவத) கஜரத்னம் கொண்டுவரப்பட்டு என் வசத்திலிருக்கிறது.
பாற்கடல் கடைந்ததிலுண்டானதும் உச்சைசிரவஸ் எனப் பெயர் பெற்றதுமான அந்த அசுவரத்னம் தேவர்களால் எனக்கு வணக்கத்துடன் ஸமர்ப்பிக்கப்பட்டது.
சுபவடிவினளே! தேவர்களிடமோ, கந்தர்வர்களிடமோ, நாகர்களிடமோ வேறு தலைசிறந்த பொருள்கள் எவை உண்டோ அவை என்னிடமே இருக்கின்றன.
தேவி! உன்னை உலகில் ஸ்திரீ ரத்னமாய் விளங்குபவள் என நாம் கருதுகிறோம். அப்படிப்பட்ட நீ நம்மை வந்தடைய வேண்டும். நாம் ரத்னங்களையெல்லாம் அடைந்தனுபவிப்பராகின்றோம்.
என்னையாவது, பராக்கிரமம் மிக்க என் தம்பி நிசும்பனையாவது நீ அடையலாம். சலிக்கும் கண்களை உடையவளே ! நீ ரத்னமில்லையா
என்னை ஏற்றுக் கொண்டால் சிறந்ததும் நிகரற்றதுமான ஐசுவரியத்தை அடைவாய். இதை உன் புத்தியைக் கொண்டு நன்கு ஆலோசித்துப் பத்தினியாக என்னை வந்து அடை.
எல்லாமே இங்கு எங்களுக்குரியது என்பதை நினைவில் கொள்”
யாரால் இவ்வுலகு தாங்கப்படுகிறதோ அந்த மங்கள வடிவினளான பகவதீ துர்க்காதேவி இங்ஙனம் கூறியதைக் கேட்டுத் தனக்குள்ளே சிரித்துக் கொண்டு கம்பீரமாகப் பின்வருமாறு கூறினாள்.
“தூதனே. உன்னால் கூறப்பட்டது உண்மை. உன்னால் சொல்லப்பட்ட இதில் சிறிதும் பொய்யன்று. சும்பன் மூவுலகுக்கும் நாயகன். நிசும்பனும் அப்படிப் பட்டவனே.
ஆனால் இவ்விஷயத்தில் ஏற்கெனவே (நான்) செய்துள்ள பிரதிஜ்ஞை யாதொன்றுண்டோ அதைப் பொய்யாக்குவது எங்கணம்? அல்ப புத்தியால் நான் செய்து விட்ட பிரதிஜ்ஞை எதுவோ அதைச் சொல்லுகிறேன், கேள்.
என்னைப் போரில் வெல்பவர் எவரோ என் கருவத்தையடக்குபவர் எவரோ, எனக்கு நிகரான பலமுடையவர் எவரோ அவரே இவ்வுலகில் எனக்கு பர்த்தா ஆவார்(என்பதுதான் பிரதிஜ்ஞை.
ஆகையால் சும்பனோ அல்லது மகா அசுரனாகிய நிசும்பனோ இங்கு வரட்டும். என்னை ஜயித்து, எளிதில் என் கையைப் பிடிக்கலாம். இதில் தாமதிப்பதேன்?
இதை கேட்டதும் தூதன் ஆத்திரமாய் சொன்னான்
“தேவி, நீ கர்வம் பிடித்தவள். என் முன் நீ இவ்வாறு பேசாதே. மூவுலகிலும் சும்ப நிசும்பர்களின் எதிரில் எந்த ஆடவன் நிற்பான்?
“அவர்களைச் சார்ந்த)மற்ற அசுரர்கள் எதிரிலும் போரில் எல்லா தேவர்களுங்கூடினாலும் நிற்கமுடியாது. அப்படியிருக்க நீ ஸ்திரீ, ஒருத்தி, எம்மாத்திரம்?
இந்திரன் முதலான தேவர்களனைவரும் எவர் முன் போரில் எதிர்த்து நிற்க முடியவில்லையோ அந்தச் சும்பன் முதலியவர்களின் எதிரில் ஸ்திரீயாகிய நீ எப்படிச் செல்வாய்?
அந்நிலையிலுள்ள நீ நான் சொல்வதைக் கேட்பவளாய்ச் சும்ப நிசும்பர்களுடைய பக்கத்தில் சேர்ந்துவிடு. அப்போது கூந்தல் பற்றியிழுக்கப்படும் மானக்கேட்டை அடையமாட்டாய்.
தேவி சிரித்தபடியே சொன்னாள்
“ஆம் அது அப்படியேதான், நான் சொன்னது சொன்னதுதான் . சும்பன் பலசாலி. நிசும்பன் வீரியம் மிக்கவன். ஆனால் நான் என்ன செய்வது? முன்னாலேயே ஆலோசிக்காமல் என்னால் பிரதிஜ்ஞை செய்யப்பட்டுவிட்டது.
ஆகையால் நீ திரும்பிப்போ. என்னால் உன்னிடம் சொல்லப்பட்டதை யெல்லாம் ஆதரவுடன் அசுர ராஜனுக்கு எடுத்துக் கூறு. அவர் எது உசிதமோ அதை அவன் செய்யட்டும்.’

தேவி மஹாமித்யம் : 07
(தூம்ரலோசன் வதம்)
தேவி துதி
“நாகங்களின் தலைவனான நாகராஜனை குடையாகக் கொண்டவளும், தனது கொடி போன்ற மேனியில் விலைமதிப்பற்ற நாகரத்தினங்களாலான நாகாபரணங்களை அணிந்தவளும், சூரிய கதிர்களை போல் ஒளிரும் முக்கண்களை உடையவளும், ஜெபமாலை, அமிர்த கலசம், கபாலம் மற்றும் தாமரையைக் கைகளில் ஏந்தியவளும், தலையில் பிறை சந்திரனை சூடியவளும், தர்பையை ஆசனமாக கொண்ட பைரவரின் மடியில் அமர்ந்து காட்சியளிப்பவளுமான பத்மாவதி தாயை நான் தியானிக்கிறேன்”
தேவி சும்பனுக்கு கூரிய பதிலை தூதன் சென்று தெரிவித்தான், தேவி தங்களை போருக்கு அழைத்தது கண்டு அசுரனின் அவை கொந்தளித்தது
அந்த தூதனுடைய அவ்வார்த்தையை அசுரராஜன் செவியுற்றுப் பின்னர் கோபங்கொண்டு சேனாதிபதியாகிய தூம்ரலோசனனிடம் பின் வருமாறு கூறினான்.
“தூம்ரலோசனா! உனது சைனியம் புடைசூழ நீ விரைந்து அந்த துஷ்டையைக் கேசத்தைப் பற்றியிழுத்து விலவிலக்கும்படி பலாத்காரமாய் இங்கு கொண்டுவா.
வேறு யாராவது அமரனோ, யக்ஷனோ, கந்தர்வனோ, எவனாயினும் சரி, அவளைக் காப்பவனாக நிற்பானெனின், அவன் கொல்லப்படவேண்டும்.
அந்த அசுரன் தூம்ரலோசனன் இங்ஙனம் அவனால் கட்டளையிடப்பட்டபின் அறுபதினாயிரம் அசுரர்கள் புடை சூழ விரைவில் சென்றான்.
பனிமலைமேல் வீற்றிருந்த அந்த தேவியை அவன் பார்த்து உரக்க சொன்னான்
“சும்ப நிசும்பர்கள் முன்வந்து நிற்குமாறு உடனே புறப்படு நீ வரமாவிட்டால் , எனது யஜமானனிடம் நீ பிரீதியாக இப்போது சென்றடையாவிட்டால், பின்னர் கேசத்தைப்பற்றி யிழுத்து விலவிலக்க உன்னை பலாத்காரமாய்க் கொண்டு செல்வேன்”
தேவி கூறினாள் “நீ தைத்ய ராஜனால் அனுப்பப்பட்டவன், பலவான், சைனியத்தால் சூழப்பட்டிருக்கின்றாய். பலாத்காரமாக என்னை இப்படியே, கொண்டுபோகப் போகிறாய். அப்படியிருக்க உனக்கு நான் என்ன செய்ய முடியும்?
இங்ஙனம் கூறப்பட்ட அவ்வசுரன் தூம்ரலோசனன் அவளை நோக்கிப் பாய்ந்தான். அப்போது அம்பிகை அவனை ஹுங்காரத்தால் சாம்பலாக்கினாள்.
அதன்பின் கோபத்தால் மூண்டெழுந்த அசுரர்களின் பெருஞ்சைனியம் அம்பிகையின் மேல் கூரிய அம்புகளையும், ஈட்டிகளையும், கட்டாரிகளையும் பொழிந்தது.
பின்னர், தேவிக்கே சொந்த வாகனமாகிய சிங்கம் கோபத்தால் பிடரியைச் சிலிர்த்துக்கொண்டும் பயங்கரமாய்க் கர்ஜித்துக் கொண்டும் அசுர சேனையின் மேல் பாய்ந்தது.
சில அசுரர்களை முன்னங்காலால் அறைந்தும், சிலரை வாயால் (கவ்வியும்), பிறரைப் பின் கால்களால் மிதித்தும் வலிமிக்க அசுரர்களைக் கொன்று முடித்தது.
அச்சிங்கம் சிலருடைய வயிற்றை நகங்களால் கிழித்தது; அவ்வாறே முன்னங்காலால் அறைந்து சிரங்களைத் துணித்து வீழ்த்தியது.
இன்னும் சிலர் அவ்வாறே அச்சிங்கத்தால் தோள்களும் சிரங்களும் இழந்தவர்களாக்கப்பட்டனர். வேறு சிலருடைய வயிற்றினின்று பெருகிய ரத்தத்தைப் பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு அது குடித்தது.
ஒரு கணத்தில் அந்தச் சேனை முழுவதும் கடுங்கோபங்கொண்ட தேவியின் வாகனமும் மகாத்மாவுமான அந்தச் சிங்கத்தால் நாசமாக்கப்பட்டது.
தூம்ரலோசனாசுரன் தேவியினால் கொல்லப்பட்டான் என்றும் சேனை முழுவதும் தேவியின் சிங்கத்தால் அழிக்கப்பட்டதென்றும் கேள்வியுற்று, அசுரராஜனான சும்பன் கோபங்கொண்டு உதடு துடிக்கச் சண்டன் முண்டன் என்ற அசுர சிரேஷ்டர்களை அழைத்துப் பின்வருமாறு கட்டளை யிட்டான்.
“சண்டா ! முண்டா ! பலவகைச் சேனைகள் புடை சூழ அங்கு செல்லுங்கள். சென்று விரைவில் அவளைக் கொண்டுவர வேண்டும்.
கேசத்தைப்பற்றியிழுத்தோ, கட்டியோ (கொண்டு வாருங்கள்). அதில் ஏதாவது ஸம்சயம் ஏற்பட்டால் யுத்தத்தில் எல்லா ஆயுதங்களைக்கொண்டு எல்லா அசுரர்களாலும் அவள் கொல்லப்படலாம்.
அந்த துஷ்டை வீழ்த்தப்பட்டுச் சிங்கமும் வீழ்த்தப்பட்டபின் விரைவில் திரும்பி வாருங்கள். அல்லது கூடுமானால் அம்பிகையைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்.”

தேவி மஹாத்மியம் : 08
(சண்ட முண்ட வதம்)
தேவி துதி
“சிரசில் பிறை சந்திரனை சூடியவளும், நெற்றியில் கலை நுட்பத்துடன் கூடிய திலகம் அணிந்தவளும் மென்மையான மதத்துடன் கூடிய புன்சிரிப்பு தவழும் அழகிய முகம் உடையவளும், உடலோடு ஒட்டிய சிவந்த நிற பட்டாடை, ஆம்பல் பூமாலை தரித்தவளும், கையில் சங்கு பாத்திரத்துடன், தாமரையின் மீது காலை பதித்தபடி கிளிகளின் இனிய மொழியை கேட்டவாறே கைகளால் வீணையை வாசித்துக் கொண்டு, நவரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அம்ருதமயமான ராஜமாதங்கியை நான் த்யானிக்கிறேன்.”
அங்ஙனம் கட்டளையிடப்பட்ட சண்டமுண்டர்கள் முன் செல்லச் சதுரங்க சேனைகளுடன் ஆயுதபாணிகளாய் அசுரர்கள் புறப்பட்டனர்.
மலையரசின் பொன்மயமான பெரிய சிகரத்தில் சிங்கத்தின் மேல் புன்முறுவலுடன் வீற்றிருந்த தேவியை அவர்கள் கண்டனர்.
அவளைக்கண்டு அவர்கள் பரபரப்புடன் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர். வில்லை வளைத்துக் கொண்டும், வாளை உருவிக் கொண்டும் மற்றும் சிலர் அவளை நெருங்கினர்.
அப்போது அம்பிகை அவ்வெதிரிகளை நோக்கிக் கோபத்தின் உச்சநிலையடைந்தாள். கோபத்தால் அவளுடைய முகம் அப்போது மைவண்ணமாயிற்று.
புருவ நெரிப்புடன் கூடிய அவளுடைய நெற்றித் தலத்திலிருந்து விரைவில் பயங்கரமான முகமுடைய காளியானவள் கத்தியும் பாசமும் கைக்கொண்டு வெளிப் போந்தாள்.
விசித்திரமான கட்வாங்கத்தை ஏந்திக்கொண்டு நர மாலையை பூஷணமாயணிந்து, வரிப்புலியின் தோலை ஆடையாய்க்கொண்டு, உடலில் மாம்ஸம் உலர்ந்து மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் நின்றாள்
நாக்குச் சுழல்வதால் பயங்கரமாயிருக்கும் அகன்ற வாயுடன், குழிந்தும் சிவந்ததுமான கண்களுடன், தனது கர்ஜனையால் திக்கு முதலியவைகளை நிரப்புபவளாய் நின்றாள்
அந்த தேவசத்துருக்களின் சைனியத்தில் அவள் வேகமாய்ப் புகுந்து வலிமிக்க அசுரர்களைக் கொன்று அந்தச் சேனையைப் பக்ஷித்தாள்.
யானைப்படையின் பின்புறமிருந்தவர், யானைப்பாகர்கள், போர் வீரர்கள் மணிகள் எல்லாவற்றுடனும் யானைகளை ஒரே கையால் வாரி விழுங்கினாள்.
அவ்வாறே குதிரைப்படைகளையும் குதிரைகள், தேர், ஸாரதிகளுடன் வாயில் போட்டுக்கொண்டு மிகவும் பயங்கரமாகப் பற்களால் மென்றாள்.
ஒருவனைக் கேசத்தால் பிடித்தாள்; மற்றொருவனைக் கழுத்தால் பிடித்தாள்; இன்னொருவனைக் காலால் மிதித்து வதைத்தாள்; மற்றும் ஒருவனை உரத்தால் உந்தி வீழ்த்தினாள்.
அவ்வசுரர்களால் விடப்பட்ட சஸ்திரங்களையும் மகா அஸ்திரங்களையும் தன் வாயில் வாங்கிக்கொண்டு கோபத்துடன் மென்றாள்.
வலியவர்களும் கொடியவர்களுமான அவ்வசுரர்களின் சேனை முழுவதையும், சிலவற்றை அடித்து வீழ்த்தியும் சிலவற்றை எடுத்து விழுங்கியும் அவள் அழித்தாள்.
சிலர் வாளால் கொல்லப்பட்டனர்; சிலர் கட்வாங்கத்தால் தாக்கி வீழ்த்தப்பட்டனர்; பற்களின் நுனிகளில் அரைக்கப்பட்டு அவ்வாறே அசுரர்கள் நாசமடைந்தனர்.
அசுரர்களின் அச்சேனை முழுதும் ஒரு கணத்தில் வீழ்த்தப்பட்டதைக் கண்டு சண்டன் மிகவும் பயங்கர வடிவு கொண்ட அக்காளி தேவியை நோக்கி ஓடினான்.
அம்மகாசுரன் பயங்கரமான பார்வையுடைய அந்த தேவியை மிக்க பயங்கரமான அம்புகளைப் பொழிந்து மறைத்தான். முண்டன் ஆயிரக்கணக்கான சக்கரங்களை எய்தான்
அநேக சக்கரங்கள் அவள் வாயில் புகுந்தது பல சூரிய பிம்பங்கள் மேகத்தினிடை புகுந்தாற்போலிருந்தது.
அப்போது காளி பயங்கரமாய் கர்ஜித்துக்கொண்டு, மிகுந்த கோபத்துடன் பயங்கரமான வாயினுள் பார்க்கக் கூசும்படி ஜ்வலிக்கும் பற்களுடன் பயங்கரமாய்ச் சிரித்தாள்.
தேவியானவள் பெருமை மிக்க சிங்கத்தின் மீது ஏறிக் கொண்டு சண்டன்மேல் பாய்ந்தாள். அவனைக் கேசத்தால் பிடித்து அவன் தலையைத் தன் வாளால் சேதித்தாள்.
சண்டன் விழுந்ததைக் கண்டு முண்டன் அவள்மேல் பாய்ந்தான். அவள் கோபத்துடன் அவனையும் வாளால் வெட்டி பூமியில் வீழ்த்தினாள்.
கொன்றது போக எஞ்சிய சைனியம் சண்டனும் மகா வீரியவானான முண்டனும் வீழ்த்தப்பட்டதைக் கண்ணுற்று பயத்தால் நடுங்கி நாற்றிசைகளிலும் ஓடிற்று.
காளியோ சண்டனுடைய சிரத்தையும், முண்டனுடைய முண்டத்தையும் எடுத்துக்கொண்டு சண்டிகையிடம் உரத்த அட்டஹாஸத்துடன் கலந்த வார்த்தைகளைக் கூறினாள்.
“இந்த யுத்தமாகிய யாகத்தில் சண்ட முண்டர்களாகிய பெரிய பிராணிகள் இரண்டும் என்னால் ( இதோ உன்னிடம் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன, இனி நீயே சும்பனையும் நிசும்பனையும் கொல்லப் போகிறாய்”
அசுர வீரர்களான சண்ட முண்டர்கள் அவ்வாறு கொண்டு வரப்பட்டதைக் கண்ணுற்றுச் சண்டிகையானவள் காளியை நோக்கி “தேவி ! சண்டனையும் முண்டனையும் நீ எடுத்துக்கொண்டு வந்ததால் நீ சாமுண்டா என உலகில் பிரசித்தி அடையப் போகின்றாய்” என மதுர மொழியில் கூறினாள்

தேவி மாஹாத்மியம் :09
(ரக்த பீஜ வதம்)
“செந்நிற மேனி கொண்டு அலை அலையாய் கருணை பொழியும் ப்ரகாசத்துடன் கூடிய மிக அழகான கண்களைக்கொண்டு, கையில் பாசம், அங்குசம், வில், மலர் அம்புகளை ஏந்தி, தன் கிரணங்களாலேயே அனைவரையும் கவர்ந்து, அனிமா, மகிமா போன்ற அஷ்டமா ஸித்திகளை தன்னுள் நிறுத்தி என்னுள் நிறைந்த பைரவியை நான் வணங்குகிறேன்”
சண்டனுங் கொல்லப்பட்டு முண்டனும் வீழ்த்தப் பட்டு, சைனியமும் வெகுவாக நாசமாக்கப்பட்டபின் பிரதாபம் மிக்க அசுர ராஜனான சும்பன் கோபத்தால் மதிகெட்டு, அசுரர் சேனைகள் அனைத்தையும் திரட்ட உத்திரவிட்டான்.
இப்போதே (முக்கிய வீரர்களான) எண்பத்தாறு அசுரர்களும் எல்லாச் சேனைகளுடனும், கம்புகுல வீரர்கள் எண்பத்திநான்கு பேர்களும் தங்கள் சேனைகளால் சூழப் பெற்றும் புறப்படட்டும்.
கோடிவீரர்கள் எனப்பட்ட அசுரர்களின் ஐம்பது குலத்தினரும், எனது கட்டளைப்படி புறப்பட்டுச் செல்லட்டும்’.
மற்றும் காலகர், தௌர்ஹ்நதர், மௌரியர், கால கேயர் என்ற அசுரர்களும் யுத்தத்திற்குத் தயாராக விரைவில் என் கட்டளைப்படி செல்லட்டும்.”
கடுமையாய்க் கட்டளையிடும் அசுர ராஜனான சும்பனும் இவ்வாறு கட்டளையிட்டு விட்டுப் பல்லாயிரக் கணக்கில் பெருஞ்சைனியங்கள் சூழப் புறப்பட்டான்.
மிகவும் பயங்கரமான அந்தச் சேனை வருவதைக் கண்ட சண்டிகை நாணொலியால் பூமியையும் வானவெளியையும் நிரப்பினாள்.
பின்னர் சிங்கமானது மிகவும் உரக்க கர்ஜனை செய்தது. மணியோசையால் அந்த நாதத்தை அம்பிகை மேலும் வளரச் செய்தாள்.
காளிதேவி வாயை அகலத் திறந்து செய்த பயங்கரமான சப்தத்தால் திக்குத்திசைகளை நிரப்புபவளாய் வில்லின் நாணொலி, சிங்கநாதம், மணியோசையாகியவற்றையும் மீறினாள்.
அவ்வொலியைக் கேட்டு அசுர சைனியங்கள் (சண்டிகா) தேவியையும் சிங்கத்தையும் காளிதேவியையும் கோபத்துடன் நாற்புறமும் சூழ்ந்து கொண்டன.
அதே சமயத்தில் தேவ சிரேஷ்டர்களின் நன்மைக்காகவும், தேவ சத்ருக்களின் நாசத்திற்காகவும், பிரம்மா, ஈசுவரன், குகன், விஷ்ணு, இந்திரன் முதலியவர்களின் சக்திகள் பலமும் வீரியமும் மிக்கவர்களாய் அவர்கள் சரீரங்களினின்று வெளிப்போந்து அவரவர்கள் வடிவில் சண்டி கையையடைந்தனர்.
எந்த தேவனுக்கு எந்த வடிவமோ, எவ்வகை பூஷணமோ, வாகனமோ அதேமாதிரி அந்த சக்தி அசுரர்களுடன் போருக்குச் சென்றாள்.
ஹம்ஸத்துடன் கூடிய விமானத்தின் மேல் அக்ஷமாலையும் கமண்டுலுவும் ஏந்தி எழுந்தருளிய பிரம்ம சக்தி பிரம்மாணீ எனப்படுகின்றாள்.
விருஷபத்தின் மேல் வீற்றுச் சிறந்த திரிசூலமேந்தி, சிறந்த ஸர்ப்பங்களைத் தோள்வளைகளாய்க் கொண்டு சந்திர கலையால் அலங்கரிக்கப் பெற்று மாஹேசுவரி எழுந்தருளினாள்.
தைத்தியர்களுடன் போர் புரிவதற்குச் சக்தியைக் கையிலேந்தி, மயில் வாகனத்தில் குக வடிவினளான அம்பிகை கௌமாரீ எழுந்தருளினாள்
அவ்வாறே வைஷ்ணவீ சக்தியும் கருடன்மேல் வீற்றுச் சங்கம், சக்கரம், கதை, சார்ங்கம், வாள் ஆகியவற்றைக் கைக்கொண்டு தோன்றினாள்.
ஹரியின் ஒப்புயர்வற்ற யஜ்ஞவாராஹ வடிவத்தை எடுத்துக்கொண்ட சக்தி எவளோ அவளும் அங்கு வாராஹீ வடிவு தாங்கி வந்து சேர்ந்தாள்.
நரசிம்மத்திற்கொப்பான உடல் தாங்கிக்கொண்டு பிடரியின் சிலிர்ப்பால் நக்ஷத்திரக் கூட்டங்களை உலுக்கிக் கொண்டு அங்கு நாரசிம்மீ வந்தாள்.
யானையரசின்மேல் வீற்று இந்திரன் எவ்வண்ணமோ அவ்வண்ணமே ஆயிரங்கண்ணுடன் வஜ்ராயுதமேந்தி ஐந்ந்ரீ தேவி வந்தாள்.
பின்னர் ஈசானன் அந்த தேவ சக்திகளால் சூழப் பெற்றவராய் “என் பிரீதிக்காக விரைவில் அசுரர்கள் கொல்லப்படட்டும்” என்று சண்டிகையை நோக்கிக் கூறினார்.
அதன் பின் தேவியின் சரீரத்தினின்று மிக்க பயங்கரமானவளும், நூறு நரிகளைப் போல் சப்திப்பவளும், மிகவும் உக்கிரமானவளும் ஆகிய சண்டிகா (கெளசிகீ) தேவியின் சக்தி (சிவதூதீ) தோன்றினாள்.
அந்த ஜயிக்கமுடியாத சக்தியானவள் செஞ்சடைச் சிவனிடம் “ஈசனே! சும்ப நிசும்பர்களிடம் தாங்கள் தூதுவராய்ச் செல்ல வேண்டும்.
கர்வம் மிக்க அசுரர்களாகிய சும்பனிடமும் நிசும்பனிடமும், அங்கு யுத்தத்திற்காகக் கூடியிருக்கும் மற்ற அசுரர்கள் எவர்களோ அவர்களிடமும் (இதை) சொல்ல வேண்டும்.
இந்திரன் மூவுலக ஆட்சியை (மீண்டும்) பெற வேண்டும். தேவர்கள் யஜ்ஞபாகங்களைப் புசிப்பவர்களாக வேண்டும். நீங்கள் உயிருடனிருக்க விரும்பினால் பாதாளம் செல்ல வேண்டும்.
ஆனால் பலத்தின் கொழுப்பால் நீங்கள் யுத்தத்தை விரும்புவீர்களெனின், அப்போது வரலாம். என்னுடைய நரிகள் உங்களுடைய மாமிசத்தால் திருப்தியடையட்டும்”
கௌசிகி தேவியால் சிவனே தூது செல்லுதலில் ஏவப்பட்டமையால் அதுமுதல் இவ்வுலகில் அவள் சிவதூதீ எனப் பிரக்கியாதி யடைந்தாள்.
அம்மகா அசுரர்களோ சிவன் கூறிய தேவியின் மொழிகளைக் கேட்டுக் கோபமூண்டு காத்யாயனீ (கௌசிகீ) இருந்த இடத்தை நாடிச் சென்றனர்.
அத்தேவ சத்ருக்கள் கோபமேலீட்டால் ஆரம்பத்திலேயே முதன் முதலாக அந்த தேவியை நோக்கி அம்பு, ஈட்டி, வாள் இவற்றை மழைபோல் பொழிந்தனர்.
அவளோ அங்ஙனம் எறியப்பட்ட அம்புகளையும் சூலங்களையும், ஈட்டிகளையும் பரசுகளையும் தன் வில்லினின்று விளையாட்டுப்போல் விட்ட சிறந்த அம்புகளால் பிளந்து வீழ்த்தினாள்.
அவ்வாறே காளிதேவி அவன் (அந்தச் சும்பன்) முன்னிலையிலேயே சூலத்தால் பிளக்கப்பட்ட எதிரிகளைக் கட்வாங்கத்தால் நசுக்கிக்கொண்டு உலவி வந்தாள்.
பிரம்மாணியானவள் எங்கெங்கு சென்றாலும் அங்கங்கு தன் கமண்டலு ஜலத்தைத் தெளித்துச் சத்துருக்களை வீரியமற்றவர்களாகவும் களையற்றவர்களாகவும் செய்தாள்.
மிகவும் கோபங்கொண்ட மாஹேசுவரி திரிசூலத்தாலும், அவ்வாறே வைஷ்ணவீ சக்கரத்தாலும், கௌமாரீ ஈட்டியாலும் அசுரர்களை வதைத்தனர்.
ஐந்திரியின் வஜ்ராயுதத்தின் தாக்குதலால் பிளவுண்டு ரத்த வெள்ளத்தைப் பெருக்கிக்கொண்டு நூற்றுக் கணக்கான தைத்தியர்களும் தானவர்களும் வீழ்ந்தனர்.
வாராஹமூர்த்தியின் மூக்கால் தாக்கப்பட்டும் தெற்றிப் பல்லால் மார்பு கிழிக்கப்பட்டும் சக்கரத்தால் பிளக்கப் பட்டும் (அசுரர்கள்) வீழ்ந்தனர்.
நாரசிம்மியானவள் நகங்களால் ஏனையோரைக் கிழித்துக்கொண்டும், பெரிய அசுரர்களைப் பக்ஷித்துக்கொண்டும், தனது கர்ஜனையால் ஆகாயத்தையும் திசைகளையும் நிரப்பிக்கொண்டும் யுத்த பூமியில் உலவினாள்.
சிவதூதியின் பிரசண்டமான அட்டஹாஸத்தால் பயந்து அசுரர்கள் பூமியில் வீழ்ந்தார்கள் ; வீழ்ந்த அவர்களை அப்போதே அவள் தின்று ஒழித்தாள்.
கோபமூண்ட மாத்ரு கணங்கள் மகா அசுரர்களை பலமுறைகளில் வதைப்பதைக் கண்டு தேவ சத்துருக்களின் சைனியத்தைச் சார்ந்தவர்கள் ஓடி ஒளிந்தார்கள்.
மாத்ரு கணங்களால் பீடிக்கப்பட்டு ஓடுவதில் முனைந்த அசுரர்களைக் கண்டு ரக்தபீஜன் என்ற. மகா அசுரன் கோபத்துடன் யுத்தஞ்செய்ய வந்து சேர்ந்தான்.
அவனுடைய சரீரத்திலிருந்து ஒரு துளி ரத்தம் பூமியில் விழுந்தால் அப்போது பூமியிலிருந்து அவனைப்போல் உருக்கொண்ட ஒரு அசுரன் உதித்தான்.
அம்மகா அசுரன் கதை ஏந்தி இந்திரசக்தியுடன் யுத்தம் செய்தான். அப்போது இந்திரசக்தி தனது வஜ்ரத்தால் ரக்தபீஜனை அடித்தாள்.
வஜ்ரத்தாலடியுற்ற அவனிடமிருந்து வெகுவாக ரத்தம் விரைந்து பெருகிற்று. அதினின்று அவனைப்போலவே வடிவமும் வலிமையும் வாய்ந்த யுத்த வீரர்கள் கிளம்பினார்கள்.
அவன் சரீரத்திலிருந்து எத்தனை ரத்தத்துளிகள் விழுந்தனவோ அத்தனை புருஷர்கள் அவனைப்போல் வீரியமும் பலமும் உடையவர்களாய்த் தோன்றினர்.
ரத்தத்தில் தோன்றிய அப்புருஷர்களும் அங்கு மாத்ரு தேவதைகளுக்குச் சமமாக சஸ்திரங்களை எய்தி மிகவும் உக்கிரமாகவும் பயங்கரமாகவும் யுத்தம் செய்தனர்.
மற்றொரு முறை அந்த ரக்த பீஜனுடைய தலை வஜ்ராயுதத்தின் தாக்குதலால் காயமடைந்தபோது, ரத்தம் பெருகிற்று. அதனின்று ஆயிரக்கணக்கான புருஷர்கள் உண்டாயினர்.
வைஷ்ணவீ தேவி போரில் சக்ராயுதத்தால் அந்த ரக்தபீஜனை அடித்தாள். ஐந்த்ரீ அவ்வசுரராஜனைக் கதை யால் அடித்தாள்.
வைஷ்ணவீ சக்ரத்தால் பிளவுண்ட அவனிடமிருந்து பெருகிய ரத்தத்தில் தோன்றியவர்களும் அவன் போன்ற வடிவுடையவர்களுமான ஆயிரக்கணக்கானவர்களால் உலகமே வியாபிக்கப்பட்டது.
கௌமாரீ தேவி சக்தி ஆயுதத்தாலும் வாராஹீ அவ்வாறே வாளாலும், மாஹேசுவரீ திரிசூலத்தாலும் மகா அசுரனாகிய ரக்தபீஜனை அடித்தனர்.
கோபாவேசங்கொண்ட தைத்தியனும் மகா அசுரனுமான அந்த ரக்தபீஜனும் கதையால் மாத்ருதேவதைகள் ஒவ்வொருவரையும் அடித்தான்.
சக்தி, சூலம் முதலியவற்றால் பலவாறாக அடிக்கப்பட்ட அவனிடமிருந்து பூமியில் வீழ்ந்த ரத்த வெள்ளம் எதுவோ அதினின்று நூற்றுக்கணக்கில் அசுரர்கள் உண்டாயினர்.
அவ்வசுரனுடைய ரத்தத்திலிருந்து தோன்றின அப்பேர்ப்பட்ட அசுரர்களால் உலகு முழுதும் வியாபிக்கப்பட்டது. அதனால் தேவர்கள் மிகவும் அதிகமாக பயத்தையடைந்தனர்.
யுத்தத்தில் ஆவேசத்துடன் கூடிய சண்டிகை கவலைகொண்ட அந்த தேவர்களைக் கண்ணுற்றுக் காளியிடம் கூறியதாவது: ”சாமுண்டே! உன் வாயை அகலத் திறந்து கொள். ரத்த பிந்துக்களினின்றுண்டான மகா அசுரர்களையும் எனது சஸ்திரங்களின் தாக்குதலால் உண்டாகும் ரத்த பிந்துக்களையும் விரைவில் இந்த வாயால் ஏற்றுக் கொள்வாய்”
“அவனிடமிருந்து (ரக்தபீஜனிடமிருந்து)தோன்றிய மகா அசுரர்களை விழுங்குபவளாய் நீ ரணகளத்தில் சஞ்சரிக்க வேண்டும். அதனால் இந்த தைத்தியன் ரத்தத்தையெல்லா மிழந்து நாசமடைவான்.
(இங்ஙனம்) உன்னால் விழுங்கப்பட்டால் வேறு அசுரர்கள் உண்டாக மாட்டார்கள்” என அவளிடம் கூறி தேவியானவள் சூலத்தால் அவனை (ரக்தபீஜனை) அடித்தாள்.
ரக்தபீஜனுடைய ரத்தத்தைக் காளியானவள் வாயில் ஏந்தினாள். அப்போது அங்கே அவன் சண்டிகையைக் கதையால் அடித்தான்.
அந்தக் கதையின் தாக்குதல் அவளுக்கு ஒரு சிறிதும் வேதனை செய்யவில்லை. அடிபட்ட அவனுடைய உடலினின்று ரத்தம் வெகுவாக எங்கெங்கு பெருகியதோ அங்கெல்லாம் அதைச் சாமுண்டாதேவி வாயில் ஏற்றுக் கொள்ளுகிறாள். இந்த யுத்தத்தின் முதலில் ரத்த வீழ்ச்சியால் தோன்றிய மகா அசுரர்கள் எவர்களோ அவர்களைத் தின்று விட்டு சாமுண்டா அந்த ரக்தபீஜனுடைய ரத்தத்தைக் குடித்தாள்.
சாமுண்டா தேவி ரத்தத்தைக் குடிக்கையில், (கௌசிகீ) தேவியானவள் ரக்தபீஜனை சூலத்தாலும் வஜ்ரத்தாலும் பாணங்களாலும், கத்திகளாலும், ஈட்டிகளாலும் அடித்தாள்.
ஆயுதக் கூட்டங்களால் அடிபட்ட அந்த மகா அசுரனாகிய ரக்தபீஜன் ரத்தமே இல்லாதவனாய்ப் பூதலத்தில் வீழ்ந்தான்.
அப்போது தேவர்கள் நிகரற்ற மகிழ்ச்சியடைந்தனர்.
பரதேவதையிடம் தோன்றிய மாத்ரு கணங்கள் ரத்தத்தால் மதோன் மத்தர்களாய் அவர்களிடை கூத்தாடினார்கள்
தேவி மாஹாத்மியம் : 10
(சும்ப நிசும்ப வதம்)
தேவி துதி
“ஓம் முக்கண் உடையவளும், சாம்பல் நிறமான பந்தூக புஷ்பத்தின் நிறத்துடன், உருக்கிய தங்கமாய் ஜொலிப்பவளும், கைகளில் பாசம், அங்குசம், புஷ்பபானம் கொண்டு அபய முத்திரையுடன், அந்த அர்த்தநாரீஸ்வரரின் பாதியாகவும், மூன்று கண்களுடன் பிறை சந்திரனையே தன் ஆபரணமாக்கி கொண்ட என் தாயை இரவு பகலுமாக எந்நேரமும் போற்றி வணங்குகிறேன்
ஓம். தீயில் சுடப்பட்ட பசும்பொன்னாய் மிளிர்ந்து, சூரியன், சந்திரன், அக்னி ஆகிய தேவர்களையே தன் முக்கண்களாய் கொண்டு, அழகிய கரங்களில் பாசம், அங்குசம், வில், மலர், அம்புகளுடன், தனது சிரசில் பிறை சந்திரனை சூடி அந்த பரம சிவனிற்கே சக்தியாக, சிவசக்தி சொரூபமாய் நிற்கும் அந்த காமேஸ்வரியை என் இதயத்தில் தியானிக்கிறேன்”
ரக்தபீஜன் வீழ்ச்சியுற்று மற்றவர்களும் யுத்தத்தில் கொல்லப்பட்டபின் சும்பாஸுரனும் நிசும்பனும் நிகரற்ற கோபத்தை யடைந்தனர்.
பெருத்த சைனியம் அழிக்கப்பட்டதைக் கண்ணுற்றுக் கோபாவேசத்துடன் நிசும்பன் முக்கியமான அரசு சேனைகளுடன் முனைந்து சென்றான்.
அவனுக்கு முன்னும் பின்னும் பக்கங்களிலும் கோபத்தால் உதடுகளைக் கடித்துக்கொண்டு தேவியைக் கொல்லும் பொருட்டுக் கொடிய அசுரர்கள் சென்றனர்.
மகாவீரியவானான சும்பனும் தனது சேனாபலத்தால் சூழப்பட்டு மாத்ரு தேவதைகளுடன் யுத்தம் செய்துவிட்டுச் சண்டிகையைக் கொல்ல எண்ணி முற்பட்டான்.
மேகத்திடையிருந்து மழை பொழிவது போல் மிகவுங் கடுமையாக அம்புகளைப் பொழியும் சும்ப நிசும்பர்களுக்கும் தேவிக்கும் கொடிய யுத்தம் ஆரம்பமாயிற்று.
அவர்களால் விடப்பட்ட அம்புகளைச் சண்டிகை தன் அம்புக் கூட்டங்களால் பிளந்தாள்; அவ்வசுரபதிகளைத் தனது ஆயுதக் கூட்டங்களால் அங்கங்களில் அடித்தாள்.
நிசும்பன் கூரிய வாளையும் பிரகாசமான கேடயத்தையும் எடுத்துக்கொண்டு தேவியின் உத்தம வாகன மாகிய சிங்கத்தைத் தலையில் அடித்தான்.
வாகனம் அடிக்கப்பட்டதும் தேவியானவள் கூரிய பாணத்தால் நிசும்பனுடைய சிறந்த வாளையும் அஷ்ட சந்திரப் பிரபையுடன் கூடிய கேடயத்தையும் துண்டித்தாள்.
கேடயமும் கத்தியும் துண்டிக்கப்பட்டதும், அவ்வசுரன் ஈட்டியை எய்தினான். தன்னை நோக்கிவந்த அதையும் சக்கரத்தால் (தேவி) இரண்டு துண்டாக்கினாள்.
பின்னர் கோபங்கொண்டு நிசும்பாசுரன் சூலத்தை எடுத்தான். அது வரும்போதே தேவியானவள் முஷ்டியால் குத்திப் பொடியாக்கினாள்.
அதன்மேல் அவன் கதையைச் சுழற்றிச் சண்டிகையை நோக்கி எறிந்தான். அது தேவியின் திரிசூலத்தால் உடைப்பட்டுச் சாம்பலாயிற்று.
பின்பு பரசுவைக் கைக்கொண்டு எதிர்த்த அந்த அசுர சிரேஷ்டனைப் பாணக் கூட்டங்களால் அடித்துப் பூமியில் வீழ்த்தினாள்.
பயங்கரமான பராக்கிரமம் படைத்த சகோதரனாகிய நிசும்பன் தரையில் சாய்ந்ததும், மிகவும் அதிகமாய்க் கோபங்கொண்டு சும்பன் அம்பிகையைக் கொல்லுவதற்கு முற்போந்தான்.
தேரின்மேல் நின்றுகொண்டு மிகவும் உயரத்தூக்கிய நிகரற்ற எட்டுக் கைகளிலும் சிறந்த ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டு ஆகாயத்தையே மிச்சமில்லாமல் வியாபித்தவன் போல் தோன்றினான்.
அவன் வருவதைக் கண்டு தேவி சங்கநாதம் செய்தாள்; சகிக்கொணாத வில்லின் நாணொலியையுங் கிளப்பினாள்.
எல்லா தைத்திய சைனியங்களின் வீரியத்தையுமழிக்கும் வகையில் தன் மணியின் ஓசையால் தேவி திசைகளை நிரப்பினாள்.
பின்பு சிங்கம் தனது உரத்த கர்ஜனையால் யானைகள் பயந்து மத ஜலத்தைப் பெருக்கும்படி செய்துகொண்டு பூமியையும் ஆகாயத்தையும் பத்துத் திசைகளையும் நிரப்பிற்று.
பின்பு காளி கிளம்பி ஆகாயத்தையும் பூமியையும் கைகளால் அறைந்தாள். அந்த நாதத்தில் முன்னிருந்த ஒலிகள் மறைந்தன.
சிவதூதீ அமங்களமான கொடிய அட்டஹாஸம் செய்தாள். அந்த சப்தத்தால் அசுரர்கள் நடுங்கினர். சும்பன் கடுமையான கோபத்தை யடைந்தான்.
அம்பிகையானவள் சும்பனைப் பார்த்து ‘தீமையே உருக்கொண்டவனே! நில்! நில்!’ என்று எப்போது கூறினாளோ அப்போது வான வெளியில் நின்ற தேவர்களால் ‘ஜய’ எனும் முழக்கத்துடன் போற்றப்பட்டாள்.
அங்கு வந்து நெருப்புக் குவிந்தாற்போல் கடுமையாய் ஜ்வலிக்கும் எந்த சக்தி ஆயுதம் சும்பனால் விடப்பட்டதோ அது வருகையில் பெரிய வால்நக்ஷத்திரம் போன்றதொரு அஸ்திரத்தால் தேவியால் அழிக்கப்பட்டது.
சும்பனுடைய சிங்கநாதத்தால் மூவுலகங்களின் இடைவெளி நிறைந்தது; ஆனால் தேவியின் கோரமான இடிமுழக்கம் அதை மீறி நின்றது.
நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் சும்பன் விட்ட அம்புகளை தேவியும், தேவி விட்ட அம்புகளைச் சும்பனும் சேதித்தனர்.
அதன் பின் சண்டிகை கோபங்கொண்டு சூலத்தால் அவனை அடித்தாள். அங்ஙனம் அடிக்கப்பட்ட அவன் மூர்ச்சித்து பூமியில் சாய்ந்தான்.
பின்னர் நிசும்பன் மூர்ச்சை தெளிந்து வில்லை எடுத்துக்கொண்டு, அம்புகளால் சண்டிகா தேவியையும், காளி தேவியையும், சிங்கத்தையும் அடித்தான்.
திதி புத்திரனான அசுரராஜன் ஆயிரங்கைகளைத் தோற்றுவித்துக் கொண்டு ஆயிரம் சக்ராயுதங்களால் சண்டிகையை மறைத்தான்.
பின்னர் கடக்க முடியாத கஷ்டத்தைப் போக்குவிக்கும் பகவதீ துர்க்காதேவி கோபங்கொண்டு அச்சக்கரங்களையும் அவன் விட்ட பாணங்களையும் தனது பாணங்களால் சேதித்தாள்.
அதன்பின் நிசும்பன் கதையை எடுத்துக்கொண்டு தைத்தியசேனைகள் சூழ வேகமாகச் சண்டிகையைக் கொல்வதற்குப் பாய்ந்தான்.
பாயும்போதே விரைவில் சண்டிகை அவனுடைய கதையைக் கூரிய முனையுள்ள வாளால் பிளந்தாள்; அவன் சூலத்தை எடுத்துக் கொண்டான்.
சூலத்தைக் கையிற்கொண்டு எதிர்த்த தேவர்களின் பீடையாகிய நிசும்பனைச் சண்டிகை வேகமாய் எய்யப்பட்ட தனது சூலத்தால் இருதயத்தில் பிளந்தாள்.
சூலத்தால் பிளக்கப்பட்ட அவனுடைய இருதயத்திலிருந்து மகாபலசாலியும் மகாவீரியவானுமான மற்றொரு புருஷன் ‘நில்’ என்று சொல்லிக்கொண்டு வெளிப் போந்தான்.
தேவியானவள் அப்போது உரக்கச் சிரித்துக் கொண்டு அவ்வாறு வெளிப் போந்தவனுடைய தலையைக் கத்தியால் வெட்டினாள். அதனால் அவன் பூமியில் விழுந்தான்.
பின்னர் சிங்கமும் பற்களால் பிளவுண்ட கழுத்தினரான அவ்வசுரர்களை உக்கிரமாகத் தின்றது. அவ்வாறே காளியும் சிவதூதியும் பிறரைத் தின்றனர்.
கௌமாரியின் சக்தி ஆயுதத்தால் பிளவுண்டு சில பெரிய அசுரர்கள் நாசமடைந்தனர். பிரம்மாணியின் மந்திர பாவனமான கமண்டுலு ஜலத்தால் மற்றும் சிலர் நிராகரிக்கப்பட்டனர்.
மகேசுவரியின் திரிசூலத்தால் பிளவுண்டு அவ்வாறே சிலர் வீழ்ந்தனர். வாராஹியின் நாசி முனையால் தாக்கப்பட்டுச் சிலர் பூமியில் தள்ளிப் பொடியாக்கப்பட்டனர்.
வைஷ்ணவியின் சக்கரத்தால் சில. தானவர்கள் துண்டந் துண்டமாக வெட்டப்பட்டனர். மற்றுஞ் சிலர் அவ்வாறே ஐந்த்ரியின் நுனிக்கையினின்று வஜ்ராயுதத்தால் வெட்டப்பட்டனர்.
மீதியிருந்தவர்களில் தாங்களாகவே பயத்தால் சில அசுரர்கள் மாண்டனர் ; சிலர் மகாயுத்தத்தினின்று காணாமற் போயினர்; பிறர் காளியாலும் சிவதூதியாலும் சிங்கத்தாலும் பக்ஷிக்கப்பட்டனர்.
பிராணனுக்கு நிகரான சகோதரன் நிசும்பன் கொல்லப்பட்டதையும் சைனியம் அழிக்கப்பட்டதையும் கண்டு சும்பன் கோபங்கொண்டு துர்க்கா தேவியைப் பார்த்துப் பின் வரும் வார்த்தையைச் சொன்னான்.
“பலத்தினால் கொழுப்புப்பிடித்து மதிகெட்ட துர்க்கையே! நீ கர்வத்தை இங்கு என்னிடம் கொண்டு வராதே. நீ மிகவும் கர்வம் கொண்டுள்ளாய் எனினும் பிறருடைய பலத்தைக் கொண்டே யுத்தம் செய்கின்றாய்”
தேவி கூறினாள்
“இங்கு உலகில் உள்ளவள் நான் ஒருத்தியே. என்னைத்தவிர இரண்டாவதாக என்ன உளது? புத்தி கெட்டவனே! இவர்களெல்லாம் எனது அம்சாவதாரமானவர்கள் என்னைத்தவிர வேறல்லர். என்னிடமே புகுவதைக் காண்பாய்”
பின்னர் பிரம்மாணீ முதலான அந்த தேவிகளெல்லாம் அந்த கௌசிகீ தேவியின் உடலில் புகுந்தனர். அம்பிகை ஒருத்தி மட்டுந்தான் அப்போது இருந்தாள்.
என்னுடைய ஐசுவரிய சக்தியால் எந்தப் பல வடிவங்களைத் தோற்றுவித்தேனோ அவை என்னால் மீண்டும் கவரப் பட்டன; ஒருத்தியாகவே நிற்கிறேன்; யுத்தத்தில் ஸ்திரங் கொள்வாய்.
பின்னர் எல்லா தேவர்களும் அசுரர்களும் பார்த்துக் கொண்டிருக்கச் சும்பனுக்கும் தேவிக்கும் இருவருக்கு மிடையில் யுத்தம் தொடங்கிற்று.
பாண வர்ஷத்துடனும் கூரிய சஸ்திரங்களுடனும், அவ்வாறே கொடிய அஸ்திரங்களுடனும் உலகனைத்தையும் நடுங்கச் செய்யும் போர் அவர்களிடை மீண்டும் மூண்டது.
அம்பிகை நூற்றுக் கணக்கில் விட்ட திவ்யாஸ்திரங்கள் எவையோ அவற்றை அசுர ராஜன் எதிர்த்து வெட்டும் அஸ்திரங்களால் வெட்டினான்.
மேலும் அவன் விடுத்த திவ்யாஸ்திரங்களைப் பரமேசுவரி உக்கிரமான ஹுங்காரம். உச்சாரணம் முதலிய வற்றால் விளையாட்டாக அழித்தாள்.
பின்னர் அவ்வசுரன் நூற்றுக்கணக்கான பாணங்களால் தேவியை மறைத்தான். அந்த தேவியும் கோபித்து அவனுடைய வில்லை அம்புகளால் ஒடித்தாள்.
வில்லொடிக்கப்பட்டதும் அசுரராஜன் சக்தி ஆயுதத்தை எடுத்துக்கொண்டான். அதையும் தேவி தன் கையிலிருந்த சக்கராயுதத்தால் வெட்டினாள்.
பின்பு அசுர ராஜாதிராஜன் வாளையும் பிரகாசம் பொருந்திய சத சந்திரம் எனும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு தேவியை அப்போது எதிர்த்துப் பாய்ந்தான்.
அவன் பாயும்போதே விரைவில் சண்டிகை அவன் வாளையும் சூரியன் போல் ஒளி பொருந்திய கேடயத்தையும் தனது வில்லினின்று விடுத்த பாணங்களால் சேதித்தாள்.
அப்போது குதிரையுங் கொல்லப்பட்டு ஸாரதியுமின்றி வில்லும் ஒடிக்கப்பட்டு அவ்வசுரன் அம்பிகையைக் கொல்ல முயல்பவனாய் முத்கர ஆயுதத்தை எடுத்துக்கொண்டான்.
கூரிய பாணங்களால் தேவி எதிர்த்து வரும் அவனுடைய முத்கரத்தைப் பிளந்தாள். அப்படியும் அவன் முஷ்டியை உயர்த்திக்கொண்டு வேகமாக அவளை நோக்கிப் பாய்ந்தான்.
அசுரசிரேஷ்டன் தேவியின் இருதயத்தில் முஷ்டியால் குத்தினான். தேவியும் அவன் மார்பில் உள்ளங் கையால் அறைந்தாள்.
கைத்தலத்தால் அறையுண்ட அவ்வசுர ராஜன் பூதலத்தில் வீழ்ந்தான்; விரைவில் மீண்டும் எழுந்தான்.
தேவியை எடுத்துக்கொண்டு ஆகாயத்தில் கிளம்பி நின்றான். அங்கும் ஆதாரமின்றியே அந்தச் சண்டிகா தேவி அவனுடன் போர் புரிந்தாள்.
சண்டிகையும் அசுரனும் ஆகாய வெளியில் அப்போது ஒருவருடனொருவர் புது முறையில் ஸித்தர்களும் முனிவர்களும் அதிசயிக்கும்படி நெருங்கி யுத்தம் செய்தனர்.
அம்பிகை நெடுநேரம் அவனுடன் நெருங்கி அவ்வாறு யுத்தம் செய்த பின் அவனைத் தூக்கிச் சுழற்றிப் பூதலத்தில் எறிந்தாள்.
எறியப்பட்ட அந்த துஷ்டாத்மா பூமியையடைந்து முஷ்டியை உயர்த்திக்கொண்டு சண்டிகையைக் கொல்ல விரும்பி வேகமாகப் பாய்ந்தான்.
தைத்திய மக்களின் அதிபனாகிய அவன் அங்ஙனம் வரும்போதே தேவியானவள் அவன் மார்பில் சூலத்தால் குத்திப் பிளந்து பூமியில் வீழ்த்தினாள்.
தேவியின் சூலத்தின் நுனியால் பிளவுண்ட அவன் கடல்களுடனும் துவீபங்களுடனும் மலைகளுடனும் கூடிய பூமி முழுவதையும் நடுங்க வைத்துக்கொண்டு பிராணனை விட்டுத் தரையில் வீழ்ந்தான்.
அந்த துராத்மா கொல்லப்பட்டதும் உலகனைத்தும் ஆனந்தத்தில் மெய்மறந்தது. ஆகாயமும் நிர்மலமாய் விளங்கிற்று.
வால் நக்ஷத்திரங்களுடன் கூடிய துர்நிமித்தங்கள் எவை முன் காணப்பட்டனவோ அவை சாந்தமடைந்தன. அவன் அங்கு வீழ்ச்சியுற்றதும் நதிகள் தம் வழியில் அடங்கிச் சென்றன.
அவன் கொல்லப்பட்ட பின்னர் எல்லா தேவகணங்களும் ஆனந்தம் பொங்கும் மனத்தினராயினர். கந்தர்வர்கள் இனிமையாய்ப் பாடினர்.
சிலர் அப்ஸர வாத்தியங்களை முழங்கினர். கணங்கள் நர்த்தனம் செய்தனர். காற்றுச் சுபமாய் வீசிற்று. சூரியன் அழகிய பிரபையுடன் விளங்கினான். அக்கினிகள் சாந்தமாக ஜ்வலித்தன. திக்குகளில் எழுந்த ஒலிகளும் சாந்தமடைந்தன

தேவி மஹாத்மியம் : 11
(அசுர கூட்டம் ஒழிக்கபட்டு தேவி பெரும் வெற்றிபெற்ற அந்த நாள், அந்த பத்தாம் நாள் விஜய தசமி, தேவியின் மஹாத்மியம் அந்த விஜயதசமி காட்சிகளையும் சொல்கின்றது
தேவர்கள் தேவியினை போற்றியது போல நாமும் போற்றி இந்நாளில் வழிபடலாம்)
“ஸர்வமங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த்த-ஸாதிகே | சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே”
எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய் விளங்குபவளே! எல்லா நன்மைகளையும் அளிப்பவளே ! எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்விப்பவளே! சரணடைதற் குரியவளே! மூன்று கண்களை யுடையவளே! நாராயணீ ‘தேவியே, உனக்கு நமஸ்காரம்.
தேவி தியானம்
“உதிக்கின்ற உதய சூரியனின் ப்ரகாசமாய் மிளிர்ந்து நிறைந்த மார்பகத்துடன், அனைவருக்கும் வரமளிக்கும் அபய முத்திரையுடன், கைகளில் அங்குசத்தையும், பாசத்தையும் ஏந்தி, மூன்று கண்களுடன், அனைவருக்கும் பரவசமூட்டும் சந்திரனைப் போல புன்னகைக்கும் முகத்துடன் விளங்கும் அந்த புவனேஸ்வரி தேவியை நான் ஆராதிக்கிறேன்”
அப்பெரிய அசுர ராஜன் தேவியால் கொல்லப்பட்டதும் அக்கினி தேவனை முன்னிட்டுக்கொண்டு இந்திரனுடன் எல்லா தேவர்களும் மலர்ந்த முகத்தாமரைகளால் திசைகளைப் பிரகாசிப்பித்துக்கொண்டு அங்கு கூடித் தங்கள் ஆசையின் பூர்த்தி எய்தியவர்களாய்க் காத்தியாயனியைத் துதித்தனர்.
தேவி ! சரண் புகுந்தவர்களின் துன்பத்தைத் துடைப்பவளே! அருள்வாய் அருள்வாய். உலகனைத்திற்கும் அன்னையே! அருள்வாய். உலகின் ஈசுவரி! உலகைக் காப்பாய். தேவி ! நீயே சராசரமனைத்தையுமாள்பவள்.
பிருதிவி வடிவில் இருப்பதால், உலகிற்கு நீ ஒருத்தியே ஆதாரமாகின்றாய். கடத்தற்கரிய வீரியம் வாய்ந்தவளே! அப்பு வடிவிலிருக்கும் உன்னாலேயே இது முழுதும் திருப்தி செய்விக்கப் படுகின்றது.
அளவற்ற வீரியம் படைத்த விஷ்ணுவின் சக்தி நீயே. உலகிற்கு வித்தாகிய மகாமாயையும் ஆகின்றாய், தேவி! உன்னால் இது எல்லாம் மயக்கத்திலாழ்த்தப் பட்டுளது. உலகில் நீ அருள் புரிந்தால் அது முக்திக்குக் காரணம்.
எல்லா வித்தைகளும் உனது அம்சங்களே. கலைகளுடன் கூடிய எல்லா ஸ்திரீகளும் உலகில் அவ்வாறே உனது வெவ்வேறு வடிவங்களேயாவர். ஒரே தாயாகிய உன்னாலேயே இவ்வுலகு நிறைந்துள்ளது. துதிக்குரியதின் பரமும் அபரமுமான வாக்கே நீயாயிருக்க உனக்குத் துதி எங்ஙனம்?
எல்லாம் நீயேயாகவும், போகத்தையும் மோக்ஷத்தையும் அளிக்கும் பரதேவதையாகவும் நீ போற்றப்படும்போது எவ்வளவு சிறந்த சொற்களேயாயினும் எங்ஙனம் அவை உன்னைத் துதிக்கப் பயன்படும்?
எல்லா ஜீவர்களுடைய இருதயத்திலும் புத்தி வடிவில் உறைபவளும், சுவர்க்கத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பவளும் ஆகிய நாராயணீ தேவியே, உனக்கு நமஸ்காரம்.
காலத்தின் அளவாகிய கலைவடிவிலும் காஷ்டை முதலிய வடிவுகளிலும் இருந்துகொண்டு மாறுதல்களை உண்டாக்கி உலகின் ஒடுக்கத்திற்குக் காரண சக்தியாய் விளங்கும் நாராயணியே, உனக்கு நமஸ்காரம்.
சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் எனும் முத்தொழிலுக்கும் காரண சக்தியாய் விளங்குபவளே! என்றும் உள்ளவளே! எல்லா குணங்களுக்கும் இருப்பிடமாக விளங்குபவளே ! குணங்களையே வடிவாய்க் கொண்டவளே! நாராயணீ உனக்கு நமஸ்காரம்.
தன்னைச் சரணடைந்த தீனர்களையும் துன்புற்றோரையும் காப்பாற்றுவதையே தொழிலாய்க் கொண்டவளே! எல்லோருடைய துன்பத்தையும் துடைப்பவளே ! நாராயணீ தேவியே! உனக்கு நமஸ்காரம்.
ஹம்ஸம் பூட்டிய விமானத்திலுறைபவளே! பிரம்மாணீ வடிவெடுத்தவளே ! கூர்ச்சத்தால் தீர்த்தத்தைப் புரோக்ஷிப்பவளே! நாராயணீ தேவியே ! உனக்கு நமஸ்காரம்.
மாஹேசுவரீ உருவத்தில் முச்சூலத்தையும், சந்திரனையும், பாம்பையும் தரிப்பவளே! விருஷபத்தை வாகனமாய்க் கொண்டவளே! நாராயணீ உனக்கு நமஸ்காரம்.
மயிலுஞ் சேவலுஞ் சூழப் பெரிய வேலாயுதத்தைத் தரித்துக் கௌமாரீ வடிவு கொண்டவளே ! பாவமற்றவளே! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.
சங்கு, சக்கரம், கதை, வில் ஆகிய சிறந்த ஆயுதங்களை ஏந்தி வைஷ்ணவீ வடிவுகொண்ட நாராயணீ ! அருள்வாய். உனக்கு நமஸ்காரம்.
பயங்கரமான பெரிய சக்கரந்தாங்கித் தெற்றிப் பல்லில் பூமியைத் தூக்கிக்கொண்டு வராஹ ரூபந்தரித்த மங்கள வடிவினளே ! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.
முவ்வுலகையும் ரக்ஷிக்கும் நல்லெண்ணத்துடன் உக்கிரமான நரசிம்ம வடிவுடன் அசுரர்களைக் கொல்ல முற்பட்டவளே! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.
கிரீடந்தரித்துப் பெரிய வஜ்ராயுதந் தாங்கி ஆயிரங் கண்களுடன் ஜ்வலிக்கும் இந்திர சக்தியே ! விருத்திராசுரன் பிராணனைப் போக்கியவளே! நாராயணீ! உனக்கு நமஸ்கராம்.
கோர ரூபமும் பயங்கரமான சப்தமும் உடையவளே! மிகுந்த பலம் பொருந்திய சிவதூதீ வடிவில் அசுரர்களை அழித்தவளே ! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.
தெற்றிப்பல் கொண்ட வாயும், தலைமாலை ஆபரணமும் உடைய சாமுண்டா தேவியே! முண்டாசுரனை வதைத்தவளே! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.
லக்ஷ்மியாகவும், லஜ்ஜையாகவும், மஹாவித்தையாகவும், சிரத்தையாகவும், புஷ்டியளிக்கும் ஸ்வதாதேவியாகவும், நிலைபெற்றவளாகவும், மஹாராத்திரியாகவும், மஹாமாயையாகவும் உள்ளவளே! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.
சிறந்த மேதா தேவியாகவும், ஸரஸ்வதியாகவும், ஐசுவரியமாகவும், விஷ்ணு சக்தியாகவும், தாமஸ வடிவினளாகவும், இயற்கை வடிவினளாகவும் விளங்கும் ஈசுவரியே, நீ அருள் புரிவாய்! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.
அனைத்தின் வடிவமாகவும், அனைத்தையும் ஆள்பவளாகவும், சக்தியனைத்தும் பொருந்தியவளாகவும் விளங்கும் தேவியே, பயங்கரமானவற்றினின்று எங்களைக் காப்பாய். துர்க்கா தேவியே ! உனக்கு நமஸ்காரம்.
இந்த அழகு மிகுந்ததும் மூன்று கண்களால் அலங்கரிக்கப் பெற்றதுமான உனது முகம் எங்களை எல்லா பயங்களினின்றும் காப்பாற்ற வேண்டும். காத்யாயனீ ! உனக்கு நமஸ்காரம்.
பயங்கரமான ஜ்வாலையுடனும் மிகுந்த கூர்மையுடனும் அசுரர்களை மிச்சமின்றி அழிக்கும் உனது திரிசூலம் எங்களைப் பயத்தினின்று காக்க வேண்டும். பத்ரகாளியே! உனக்கு நமஸ்காரம்.
தேவி ! எது தன் நாதத்தால் உலகை நிரப்பி தைத்தியர்களின் வீரியத்தை அழிக்கின்றதோ அந்த மணியானது சகடத்திடையில் விழுவதினின்று புத்திரர்களை தாய் காப்பது போல் பாவங்களினின்று எங்களைக் காக்கட்டும்.
அசுரர்களின் ரத்தமும் கொழுப்புங் கலந்த சேற்றால் பூசப்பட்டதும் கிரணம் விடும் ஒளிபொருந்தியதுமான உனது வாள் நன்மை பயப்பதாகட்டும். சண்டிகையே ! உன்னை நாங்கள் வணங்குகிறோம்.
நீ ஸந்தோஷ மடைந்தால் எல்லா நோய்களையும் அறவே போக்குகிறாய். கோபத்தாலோ வேண்டப்படும் காமங்களை எல்லாம் அறவே அழிக்கின்றாய். உன்னை அண்டிய மனிதர்க்கு விபத்துக் கிடையாது. உன்னை அண்டியவர் பிறர் அண்டுதற்குரியவராகின்றனரன்றோ ?
தேவி! தருமத்தைப் பகைக்கும் கொடிய அசுரர்களின் வதமாகிய இது’ உன் மூர்த்தியையே பலவாக்கிப் பல வடிவங்கொண்டு எங்ஙனம் உன்னால் செய்யப்பட்டதோ அங்ஙனம், அம்பிகையே, வேறு யார் செய்ய இயலும்?
வித்தைகளிலும் சாஸ்திரங்களிலும் விவேகத்திற்கு முதல் விளக்காகிய வேதத்தின் வாக்கியங்களிலும் கூறப்படுவது உன்னை யல்லாது வேறு யாரை ? உன்னையல்லாது வேறு யார்தான் இவ்வுலகை மமதையால் கவ்வப்பட்ட கொடிய அஞ்ஞான இருளில் வெகுவாய்ச் சுழலவைப்பது?
ராக்ஷஸர்கள் உள்ளவிடத்தும், கொடிய விஷப் பாம்புகள் உள்ளவிடத்தும், சத்துருக்கள் உள்ளவிடத்தும், திருடர் கூட்டம் உள்ளவிடத்தும், காட்டுத்தீ பரவிய விடத்தும், அவ்வாறே நடுக்கடலிலும் அங்கங்கு இருந்துகொண்டு உலகையெல்லாம் நீயே காக்கிறாய்.
உலக நாயகியாகிய நீ உலகைப் பாலிக்கின்றாய். உலக வடிவினளாகிய நீ உலகைத் தாங்குகின்றாய். உலக நாயகர்களால் நீ பூஜிக்கப் படுபவளாகின்றாய். உன்னை உள்ளன்புடன் வணங்குவோர் எவரோ அவரே உலகிற்குப் புகலிடமாய் விளங்குவோர்.
தேவி! அருள் புரிவாய். இப்போது விரைவில் அசுரர்களைக் கொன்று எங்களைக் காத்தாற்போல் எப்போதும் சத்துரு பயத்தினின்று காக்க வேண்டும். உலகனைத்திலுமுள்ள பாவங்களையும் தீச்செயலின் பயனாய்த் தோன்றும் பெருங் கொடுமைகளையும் விரைவில் நாசம் செய்ய வேண்டும்.
தேவி! முவ்வுலக வாசிகளாலும் போற்றப் பெறுபவளே! உலகனைத்தின் இன்னல்களைப் போக்குபவளே! நீ உலகங்களுக்குச் சிறந்த நன்மைகளை அளிப்பவளாய் விளங்கி, உன்னை வணங்குவோர்க்கு அருள் புரிவாய்.
தேவி கூறினாள்
“தேவகணங்களே ! உலகிற்கு உபகாரமாக எந்த வரத்தை நீங்கள் மனதால் விரும்பினாலும் அதைக் கேட்கலாம். வரமளிப்பவளாகிய நான் அதைக் கொடுக்கிறேன்”
தேவர்கள் கூறினார்கள்
“அகில நாயகியே! இவ்வாறே முவ்வுலகின் துன்பங்கள் முழுவதும் நாசம் செய்யப்படவேண்டும். உன்னால் எங்கள் சத்துருக்கள் அழிக்கப்படவேண்டும்”
தேவி கூறினாள்
“வைவஸ்த மன்வந்தரத்தில் இருபத்தெட்டாவது சதுர்யுகம் நிகழும்போது சும்பன் நிசும்பன் என்ற வேறு இரண்டு கொடிய அசுரர்கள் தோன்றப் போகிறார்கள்.
யசோதையின் கருவில் தோன்றி நந்தகோபர் வீட் டில் பிறந்து விந்தியாசலத்தில் வசிக்கப் போகும் நான் அப்போது அவர்களை நாசம் செய்யப் போகிறேன்.
மீண்டும் பூதலத்தில் மிகவும் பயங்கரமான வடிவில் அவதரித்து வைப்ரசித்தர்கள் எனும் அசுரர்களை நாசம் செய்யப் போகிறேன்.
மிகவும் கொடிய அசுரர்களாகிய அந்த வைப்ரசித்தர்களை நான் பக்ஷிக்கும்போது எனது பற்கள் மாதுளம் பூப் போல் சிவந்து போகும்.
அதனால் ஸ்வர்க்கத்தில் தேவதைகளும், மனித உலகில் மானிடர்களும் என்னைத் துதிக்கும்போது எப்போதும் ‘ரக்த தந்திகா’ என்று குறிப்பிடப் போகிறார்கள்.
மறுபடியும் நூறு வருஷங்கள் மழை பெய்யாமலிருக்க, அப்போது முனிவர்களால் துதிக்கப்பெற்று நீரின்றி வறண்ட பூமியில் கர்ப்ப வாசம் செய்யாமல் தோன்றுவேன்.
அப்போது முனிவர்களை நான் நூறு கண் கொண்டு பார்க்கப் போவதால் என்னை மனிதர் சதாக்ஷி எனப் போற்றுவர்.
தேவர்களே ! பின்னர் மழை பெய்யும் வரை உயிரைக் காப்பாற்றும் ஓஷதிகளை என் உடலிலிருந்தே தோற்றுவித்து அவற்றால் உலகனைத்தையும் போஷிக்கப் போகிறேன்.
அப்போது பூமியில் நான் சாகம்பரீ எனப் பிரசித்தியடையப் போகிறேன். அதே காலத்தில் துர்க்கமன் எனும் கொடிய அசுரனையும் வதைக்கப் போகிறேன்.
அதனால் எனக்கு துர்க்கா தேவி என்ற சிறப்புப் பெயர் ஏற்படப் போகிறது. மீண்டும் இமயமலையில் முனிவர்களைக் காப்பதற்காக எப்போது பயங்கரமான ரூபத்தை யெடுத்துக்கொண்டு ராக்ஷஸர்களை அழிப்பேனோ அப்போது முனிவர்களெல்லாம் தலை வணங்கி என்னைத் துதிக்கப் போகிறார்கள்.
அச்சமயம் பீமா தேவி என்ற சிறப்புப் பெயர் எனக்கு ஏற்படப் போகிறது. அருணன் என்ற அசுரன் எப்போது முவ்வுலகிற்கும் பெரிய கொடுமை விளைவிக்கப் போகின்றானோ அப்போது நான் ஆறு பாதங்களுடன் எண்ணிறந்த வண்டுக் கூட்டமாய்த் தோன்றி முவ்வுலகிற்கும் நன்மையை நாடி அக்கொடிய அசுரனை வதைக்கப் போகிறேன்.
அப்போது உலக மக்களெல்லாம் எங்கும் என்னை ப்ராமரீ எனத் துதிக்கப் போகின்றனர். இவ்வாறு எப்பெப்போது அசுரர்களின் எழுச்சியால் துன்பம் ஏற்படுமோ அப்பப்போது நான் அவதரித்துச் சத்துருக்களை நாசம் செய்வேன்”

தேவி மஹாத்மியம் : 12 (இறுதி பகுதி)
(தேவி மஹாத்மியத்தை படித்து அதில் சொல்லபட்ட துதிகளால் அதாவது வானோரும் தேவர்களும் எப்படி தன்னை கொண்டாடி துதித்தார்களோ அப்படி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும், என்னென்ன ஐஸ்வர்யமெல்லாம் கைகூடும் என்பதை அன்னை தானே சொல்கின்றாள்
விஜயதசமியில் இந்த வார்த்தைகளை, அன்னை தேவியே நமக்கு தந்த வார்த்தைகளை தியானித்து வழிபட்டு அவளிடம் வரம்பெற்றுகொள்ளுதல் அவசியம்)
“கத்தி, கேடயம் ஏந்தி சேவை செய்யும் எண்ணற்ற பெண்களால் சூழப்பட்டு, சக்கரம், கதை, கத்தி, கேடயம், அம்பு, வில், பாசம் போன்ற பல ஆயுதங்களை ஏந்தி, மூன்று கண்களுடன் எதிரிகளை அச்சுறுத்தும் வண்ணம் ஆள்காட்டி விரலால் காட்டப்பட்ட முத்திரையுடன் ஸிம்ம வாகனத்தில் ஆக்ரோசமாய் அமர்ந்து, மின்னல் போல் மின்னும் அந்த துர்கா தேவியை ப்ரார்த்திக்கிறேன்”
தேவி சொல்கின்றாள்
“இந்த ஸ்துதிகளால் என்னை நாள் தோறும் மனதையடக்கி எவன் துதிக்கின்றானோ அவனுடைய துன்பங்களை யெல்லாம் நான் நிச்சயம் போக்குவிப்பேன்.
மதுகைடப வதத்தையும், மஹிஷாசுரவதத்தையும் சும்ப நிசும்பர்களின் வதத்தையும் பற்றிய வரலாற்றை எவர்கள் கீர்த்தனம் செய்கின்றார்களோ, அல்லது எனது சிறந்த மாஹாத்மியத்தை ஒருமைப்பட்ட மனத்துடன் அஷ்டமியிலும், சதுர்த்தசியிலும் நவமியிலும் பக்தியுடன் கேட்கின்றார்களோ அவர்களுக்குச் சிறிதும் கெடுதி வராது; கெடுதியால் விளையும் ஆபத்தும் வராது,ஏழ்மை வராது, பிரியத்தின் பிரிவும் வராது.
சத்துருக்களிடமிருந்தோ, திருடர்களிடமிருந்தோ, அரசர்களிடமிருந்தோ, ஆயுதங்களாலோ, நெருப்பாலோ, வெள்ளத்தாலோ,ஒருபோதும் இதைப் படிக்கும் அவனுக்குப் பயம் ஏற்படாது.
ஆகையால் இந்த என் மாஹாத்மியம் ஒருமைப் பட்ட மனத்துடன் படிக்கப்படவேண்டும். எப்போதும் பக்தியுடன் கேட்கப்படவும் வேண்டும். அதுவே நன்மைக்குச் சிறந்த வழி.
பெருவாரி மரணத்தை விளைவிக்கும் விபத்துக்களையும் அவ்வாறே மூன்று வகையான துன்பங்களையும் எனது மாஹாத்மியம் போக்குவதாயிருக்கட்டும்.
எனது ஆலயத்தில் எங்கு இது நன்றாக நித்யம் படிக் கப்படுகிறதோ அங்கு விட்டு நான் விலகுவதில்லை. அங்கு எனது ஸாந்நித்யம் நிலைபெறுகின்றது.
பலிப்பிரதானத்திலும், பூஜையிலும் அக்னி காரியத் திலும், மஹோத்ஸவத்திலும், இந்த என் சரிதம் முழுவதும் வாசிக்கவும் கேட்கவும் படவேண்டும்.
அவ்வாறு செய்யப்பட்ட பலிதானத்தையும் பூஜையையும், அவ்வாறு செய்யப்பட்ட அக்கினி ஹோமத்தையும் ஞானத்துடன் செய்யப்பட்டாலும் ஞானமின்றிச் செய்யப் பட்டாலும் நான் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன்.
சரத் ருதுவில் வருஷந்தோறும் செய்யப்படும் மஹாபூஜை எதுவோ அதில் இந்த எனது மாஹாத்மியத்தைப் பக்தியுடன் கேட்கும் மனிதன் என்னருளால் எல்லாத் துன்பங் களினின்றும் விடுபட்டுத் தனமும் தானியமும் மக்களும் உடையவனாய் ஆவான். இதில் ஐயமில்லை.
என்னுடைய இந்த மாஹாத்மியத்தையும் அவ்வாறே மங்களமான உத்பத்தி வரலாறுகளையும், யுத்தங்களில் பராக்கிரமத்தையும் கேட்ட மனிதன் பயமற்றவனாவான்.
எனது மாஹாத்மியத்தைக் கேட்கும் மனிதர்க்குச் சத்துருக்கள் நசிக்கின்றனர்; மங்களம் உண்டாகிறது; குலம் சந்தோஷமடைகிறது.
சாந்திக் கிரியைகளிலும், கெட்ட கனவு கண்டபோ தும், உக்கிரமான கிரக பீடை ஏற்பட்டபோதும் எல்லா விடங்களிலும் எனது மாஹாத்மியத்தைக் கேட்கட்டும்.
உத்பாதங்களும் கொடிய கிரக பீடைகளும் கெட்ட கனவும் ஒழிந்துபோம். நல்ல கனவு தோன்றும்.
பாலக்கிரகங்களினால் பீடிக்கப்பட்ட பாலர்களுக்கு இது சாந்தியளிப்பது. மனிதர்களின் கூட்டுறவில் பிளவு ஏற்பட்டால் மீண்டும் நட்பை உண்டாக்குவது.
கெட்ட நடத்தையுடையவர்கள் எல்லோருடைய பலத்தையும் அழிப்பதில் சிறந்தது; ரக்ஷோ கணங்களும் பூதங்களும் பிசாசங்களும் இதைப் படிப்பதினாலேயே நாசமடைகின்றன.
இந்த எனது மாஹாத்மியம் முழுதும் எனது ஸாந்நித்தியத்தை யளிக்கவல்லது. சிறந்த பலி, புஷ்பம். அர்க்கியம், தூபம், கந்தம், தீபம், பிராம்மண போஜனம், ஹோமம், புரோக்ஷணம் இன்னும் பல விதமான போக்கிய வஸ்துக்களை யளித்தல் முதலியனவற்றால் இரவும் பகலும் ஒரு வருஷம் விரதமனுஷ்டித்தால் எனக்கு எந்தப் பிரீதி ஏற்படுமோ அது இந்த நற்சரிதத்தை ஒரு முறை கேட்டால் உண்டாகும். கேட்பது பாபங்களைப் போக்கும், ஆரோக்கியத்தை யளிக்கும்.
எனது பிறப்பைப் பற்றிக் கீர்த்தனம் செய்தல் பூதங்களினின்று ரக்ஷையளிக்கும். துஷ்ட தைத்தியர்களை நாசம் செய்த எனது யுத்த சரித்திரம் எதுவோ அது கேட்கப் பட்டால் மனிதனுக்குச் சத்துரு பயம் உண்டாகாது. நீங்கள் செய்த ஸ்தோத்திரங்கள் எவையோ, பிரம்மரிஷிகள் செய்தவை எவையோ, பிரம்மா செய்தவை எவையோ அவை மங்களமான மதியைத் தருவனவாம்.
அரணியத்தின் நடுவிலோ, காட்டுத்தீயின் இடை யிலோ, தனிமையான இடத்தில் திருடர்களால் சூழப்பட்ட போதோ, சத்துருக்களிடம் பிடிபட்டபோதோ,சிங்கத்தாலும், புலியாலும் காட்டுயானையாலும் காட்டில் துரத்தப்பட்ட போதோ, கோபங்கொண்ட அரசனால் மரண தண்டனையோ, சிறைவாசமோ விதிக்கப்பட்டபோதோ,
பெருங்கடலில் காற்றினாலலைக்கப்பட்ட படகிலிருக்கும் போதோ. மிகவும் கொடிய யுத்தத்தில் ஆயுதங்கள் மேல் விழும்போதோ, எல்லா விதமான கொடிய சங்கடங்களிலும், வேதனைகளால் பீடிக்கப்பட்ட நிலையிலும், எனது இச்சரிதத்தை ஸ்மரித்தால் மனிதன் சங்கடத்தினின்று விடுபடுவான். எனது மகிமையால் சிங்கம் முதலியவைகளும் திருடர்களும் சத்துருக்களும் எனது சரிதத்தை நினைத்த மாத்திரத்தில் தூர ஓடிவிடுவர்”.
இப்படி மார்க்கண்டேய புராணத்தை அந்த முனிவர் போதித்துவிட்டு அந்த அரசனுக்கும் வைசியனுக்கும் சொல்லிகொண்டிருந்த தன் உரையினை முடிக்கின்றார்
“அந்த தேவர்களும் எதிரிகள் நாசம் செய்யப்பட்டுக் கவலை நீங்கியவர்களாய் யஜ்ஞபாகங்களைப் புசிப்பவர்களாய் முன்போல் தங்கள் அதிகாரங்களைச் செலுத்தலாயினர்.
உலகை யழிப்பவர்களும், மிகக் கொடியவர்களும், ஒப்பற்ற பராக்கிரமம் பொருந்தியவர்களும், மகா வீரியம் படைத்தவர்களும், தேவ சத்துருக்களுமான சும்பனும் நிசும்பனும் யுத்தத்தில் தேவியால் கொல்லப்பட்டபின் எஞ்சியிருந்த தைத்தியர்கள் பாதாளம் சென்றனர்.
அரசே ! இங்ஙனம் அந்த பகவதி தேவியானவள் பிறப்பிறப்பற்றவளாயினும் மீண்டும் மீண்டும் தோன்றி உலகின் பரிபாலனத்தைச் செய்கின்றாள்.
அவளாலேயே இவ்வுலகம் மயக்கப்படுகிறது. அவளே உலகைச் சிருஷ்டிக்கின்றாள். அவளைப் பிரார்த்தித் தால் விசேஷமான ஞானத்தையும், பிரீதி செய்விக்கப்பட்டால் குறைவற்ற ஐசுவரியத்தையும் அளிப்பாள்.
அரசே! பிரளய காலத்தில் மகா ஸம்ஹாரிணியாய்த் தோன்றும் அந்த மஹா காளியால் இந்த பிரம்மாண்டம் முழுதும் வியாபிக்கப்பட்டுள்ளது.
பிரளயகாலத்தில் மகாமாரியாய் விளங்குபவள் அவளே. பிறப்பற்ற அவளே சிருஷ்டியாகவும் ஆகின்றாள்.
அனாதியான அவளே ஸ்திதி காலத்தில் பிராணிகளை வைத்துக் காப்பாற்றுகின்றாள்.
ஆகுங்காலத்தில் மக்கள் வீட்டில் செல்வத்தைச் செழிக்கச்செய்யும் லக்ஷ்மீ தேவி அவளே. போகுங்காலத்தில் செல்வத்தை யழிப்பதற்கு அலக்ஷ்மியாகவும் அவளே தோன்றுவாள்.
புஷ்பம் தூபம் கந்தம் முதலியவற்றால் பூஜித்துத் துதிக்கப்பட்டால் செல்வத்தையும் புத்திரர்களையும் தர்மத்தில் மதியையும் நல்ல கதியையும் அளிப்பாள்.
ஓம் சக்தி ஓம்”
