தை அமாவாசை
இன்று தை அமாவாசை.
அமாவாசைகளில் தர்ப்பணம் என்பது இந்துக்களுக்கு முக்கியம். அதுவும் தை அமாவாசை என்பது முன்னோர்களுக்கான வழிபாடுகளைச் செய்யும் மகத்தான நாள்.
அவ்வகையில் இன்று இந்துக்களுக்கு கடமைகள் உண்டு. காலை காகத்துக்கு எள்சோறு வைத்தல், பசுவுக்கு உணவிடுதல் , மீன்களுக்கு இரையிடுதல் எனச் சில கடமைகள் கட்டாயம் உண்டு.
இன்றைய நாள் கடலோரம், ஆற்றங்கரையோரம் முன்னோர் வழிபாடுகளைச் செய்து வழிபடுதல் நலம். அது மூதாதையர் ஆசீர்வாதங்களையெல்லாம் பெற்றுத்தரும்.
மூதாதையர் சொத்துக்களை மட்டும் பெற்றுக்கொள்வதல்ல வாழ்வு. அவர்களுக்கு முறையான வழிபாடுகளைச் செய்து அவர்கள் செய்த காரியங்களுக்கு நன்றி சொல்லி, பாவங்களை செய்திருந்தால் பரிகார பிரார்த்தனைகளைச் செய்து அவர்கள் ஆத்மா ஈடேற வழி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு இந்துவும் அந்தக் கடமையினைச் சரியாக செய்யட்டும்.
முன்னோர்கள் நினைவாக ஒவ்வொருவரும் இந்து முன்னோர்கள் காட்டிய வழியில் வழிபாடுகளைச் செய்து தீபங்களை ஏற்றட்டும்.
இந்துக்களின் ஒவ்வொரு ஏற்பாடும் தான தர்மங்களை முன்னிறுத்தியது. அவ்வகையில் இன்று தான தர்மங்களும் மிக அவசியம்.
இல்லாதவர் வறியவருக்கு வஸ்திரமோ ஒருவேளை உணவோ வாங்கித் தருதல் பெரும் நலம் பயக்கும்.
எந்தக் கரம் உங்களிடம் இன்று ஏந்தி நிற்குமோ, எந்த ஜீவன் உங்களை கண்டு வாடி நிற்குமோ அதற்கெல்லாம் அள்ளிக் கொடுங்கள். அர்ச்சகர்கள் கை உள்பட.
அப்படிச் செய்தால் முன்னோர்கள் உங்களுக்கு சேர்த்த புண்ணியம் போல் உங்கள் சந்ததிக்கும் சேர்த்து வைத்துச் செல்வீர்கள். முன்னோர்கள் பாவம் செய்திருந்தால் அப்பாவத்தை கரைக்கும் காரியம் செய்தவராவீர்கள்.
இந்துக்களை போல பரிகாரமும் புண்ணியமும் தேடிக்கொள்ள வாய்ப்பு யாருக்குமில்லை. அவ்வகையில் இந்நாள் பரிகாரத்துக்கானது, புன்ணியம் சேர்ப்பதற்கானது.
அப்படியே முன்னோர்களை நினைந்து வணங்குவதற்கானது.
முன்னோர்கள் வாழ்ந்த தேசம் எனும் வகையில் இந்நாட்டுக்கு பாடுபட்ட ஒவ்வொருவருக்கும், இந்த தேசம் சுதந்திர பூமியாக வாழவும், எல்லா சிறப்புக்களையும் பெற்று வாழவும் அரும்பாடுபட்ட ஒவ்வொருவரையும் நினைத்து விளக்கு ஏற்றிவைத்தல் நன்று.
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள் ஈந்ததும் இந்நாடே – எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே – பின்னர்
அங்கவர் மாய அவருடல் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே “
என இத்தேசம் வாழ வாழ்ந்த ஒவ்வொரு ஆத்மாவினையும் வணங்கிப் பிரார்த்திப்போம்.
எரியும் தீபங்களின் பேரோளி தேசத்துக்கு பெரும் வெளிச்சம் கொடுக்கட்டும், தேசம் ஒளிரட்டும்.
அமாவாசை காலத்து தர்ப்பணங்கள் எப்போதும் சிந்திக்கதக்கவை, ஏன் அமாவாசை திதியில் முன்னோர்களை வேண்டி நிற்கவேண்டும்? என்றோ வாழ்ந்து சென்றவர்களை ஏன் தேடவேண்டும்? வாய்ப்பு முடிந்தவர்களை மறுபடி நினைக்க அவசியமென்ன என்றால் அதற்கு ஆயிரமாயிரம் காரணம் உண்டு.
பிரபஞ்ச இயக்கத்தின் தாத்பரியத்தை மானுடன் புரிந்து கொள்ள வேண்டி இந்துக்கள் விதித்த விதிகள் அவை.
அமாவாசை எனும் சூனிய நாளில் ஏன் தர்ப்பணம் செய்யச் சொன்னார்கள் என்றால் ஒன்றுமில்லா இடத்தில் இருந்து, ஒன்றுமே இல்லா வெளியில் இருந்து எல்லாம் தொடங்கி ஒன்றுமே இல்லா சூனியத்தில் முடிகின்றது வாழ்க்கை என்பதை அறிய சொன்னார்கள்.
அப்படியே இறை ரகசியங்களை, இறை தத்துவங்களை பிரபஞ்சப் பெரும் சக்தியினை அறிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து கவனிக்கச் சொன்னார்கள்.
ஆம், முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது என்பது இந்துக்களின் வழக்கமான ஒன்று, வேறு எந்த மதத்திலும் இல்லாத இந்த சிறப்பு இந்துக்களுக்குத் தான் உண்டு.
தர்ப்பணம் என்றால் திருப்தி செய்வது எனப் பொருள்.
இறந்த முன்னோர்களின் ஆத்மாவினை திருப்தி செய்து அவர்களுக்கு வேண்டியன செய்தல் என்பது இந்துக்களுக்கு ரிஷிகள், முனிவர்கள் போதித்த வழிமுறை.
இங்கு ஏகப்பட்ட சூட்சுமங்கள் உண்டு. நுணுக்கமான அறிவியல் உண்டு, மிக அபாரமான ஆன்மீக தத்துவமும் உண்டு.
இறந்த முன்னோர்களுக்கு ஏன் தர்ப்பணம் கொடுத்து திருப்தி செய்யவேண்டும் என்றால் அங்கே தான் இந்துமதத்தின் அபாரமான ஞானமும் மறைபொருளும் தெரியும்.
ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் என ஐந்து சரீரங்கள் உண்டு. இதில் ஸ்தூல சரீரம் தவிர நாம் எதையும் பார்க்க முடியாது. இது போக, நான்கு வகையான சரீரங்களைக் கொண்டது தான் மானிட ஆத்ம அமைப்பு.
இதையே இன்னுமோர் வகையில் சொல்வார்கள்.
உடலில் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் என்பார்கள்.
அதாவது காணும் உடலைத் தாண்டி நான்கு நிலைகள் உண்டு. கடைசி நிலைதான் பரம்பொருளில் கூடியிருக்கும் பெரும் ஆனந்தமான நிலை.
அந்தக் கடைசி நிலைக்கு ஒரு உயிர் செல்வதற்கு, இந்த முந்தைய நான்கு உடல்களையும் கடக்க வேண்டும். இந்த ஐந்து கட்டங்களிலும் ஒவ்வொரு வகையான தேவை அவர்களுக்கு அவசியம்.
மானிட உடல் அதாவது ஸ்தூல உடலுக்கு அன்னம் எனும் உணவு அவசியம். அதன் தாக்கம் இதர நிலைகளிலும் உண்டு. இந்த சூட்சும உடல் பிரபஞ்சத்தில் இருந்து சக்தியினை பெறுகின்றது.
சந்திரனில் இருந்து இந்த உடல் சக்திபெறுவதாக ஐதீகம். இதனாலே சந்திரன் இல்லா அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய வைத்தார்கள் இந்துக்கள்.
கிரகண காலத்தில் தர்ப்பணங்களின் முக்கியத்துவம் அதுதான், காற்று இன்றி ஸ்தூல உடல் வாழமுடியாது என்பது போல, சந்திர ஒளியின்றி ஆத்மாக்கள் நிம்மதி பெறமுடியாது.
அன்று அவர்களுக்கு மானிடர் கொடுக்கும் தர்ப்பணமே சக்தி கொடுக்கின்றது. இது ரிஷிகள் சொன்ன உண்மை.
இந்துக்களின் நாள்காட்டி சூரியனை அடிப்படையாகக் கொண்டு இருக்கலாம். ஆனால் ஆன்ம தத்துவம் திதிகளைக் கொண்டது. அதன் அடிப்படை சந்திரன்.
இதனாலே ஒருவர் இறந்த திதி முக்கியத்துவம் பெறுமே அன்றி, அந்த நாள் முக்கியத்துவம் பெறாது. சந்திரன் ஒரு ஆன்மாவோடு எப்படி தொடர்பு பட்டது என்பதை இப்படி சூட்சுமமாக போதித்தார்கள் இந்துக்கள்.
முன்னோர்கள் ஸ்தூல உடலை விட்டு இதர உடல்களில் கண்ணுக்குத் தெரியா நிலையில், ஆனால் சில தேவைகள் உள்ள நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து சக்தியூட்டி திருப்தி படுத்தவேண்டும் என்றார்கள்.
ஏன் எள்ளும், தண்ணீரும், காய்கறியும் சொன்னார்கள்?
இவை ஏன் குறிப்பிடப்பட்டது என்றால் புராண ரீதியாக ஒரு செய்தியினையும் இந்துமதம் சொன்னது.
“எள் விஷ்ணுவின் வியர்வையில் இருந்து வந்ததால் புனிதமானது” என்றது. எல்லா ஆத்மாக்களும் பரம்பொருளிடம் இருந்து வந்ததே, பரம்பொருளிடம் திரும்பி செல்கின்றது என்பதை குறிப்பால் உணர்த்த எள்ளை வைத்தார்கள். எள் எளிதில் முளைக்காது. அதுவும் நீரோடு மூழ்கி இருந்தால் எளிதில் முளைக்காது. அப்படி முந்தைய ஆத்மாக்கள் பிறப்பில்லா நிலையினை எட்ட வழிபடச் சொன்னார்கள்.
அதாவது, அந்த ஆத்மாக்கள் முக்தி அடைய, நற்கதி அடைய பிரார்த்திக்கச் சொன்னார்கள். எள் முக்கிய இடம் பெறுவது சூட்சும ரீதியாக நிறைய காரணங்கள் உண்டு. எனினும் தத்துவரீதியாக இதுதான். எள்முனை அளவு அவர்கள் பாவத்தால் வருந்தினாலும் நற்கதி அடைய பிரார்த்திக்கச் சொன்னதன் அடையாளம். எள் சூட்சும ரீதியாக சக்தி வாய்ந்தது.
ஆலயங்களில் அதன் தீபங்கள் எள் எண்ணெயில்தான் ஏற்றப்பட வேண்டும் எனும் வகையில், அதன் பிரபஞ்ச ஈர்ப்புசக்தி அதிகம். இதனால் அதை முன் நிறுத்தினார்கள் எள்ளும், நீரும், பூவும் வைக்கச் சொன்னார்கள்.
இந்த தர்ப்பணம் நாள்தோறும் கொடுக்கச் சொன்னார்கள். அதிலும் சந்திரன் இல்லா அமாவாசையில் முக்கியம் என்றவர்கள், ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை என மூன்று அமாவாசைகளை முக்கியம் என்றார்கள்.
தை அமாவாசையில் வட மூலையிலும், ஆடி அமாவாசையில் தென் மூலையிலும் நிற்கும் சூரியன், புரட்டாசி மாதத்தில் சூரியனின் தென்பாகம் நடுப்பகுதிக்கும் பூமிக்கும் நேராக நிற்கிறது. அப்போது சந்திரனின் தென்பாகமும் நேராக நிற்கும்.
இந்த தருணத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணம் முன்னோரை எளிதில் அடையும் என்பது ரிஷிகள் சொன்ன சாஸ்திரம்.
இங்கே ஏன் மூன்று அல்லது ஏழுதலைமுறை வரை நினைவில் வைக்கச் சொன்னார்கள். அதுவும் ஆண்கள்தான் செய்யவேண்டும் எனச் சொன்னார்கள் என்றால் அங்கேதான் இருக்கின்றது ரிஷிகளின் ஞானம்.
மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன. அதில் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகக் கொடுப்பது உண்டு. சில அம்சங்கள் ஆதியில் இருந்து வருவதும் உண்டு.
முன்னோர்களிடம் இருந்து பெற்ற இந்த மரபணுக்களை அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்ல வேண்டியது, அதை வருங்கால சந்ததிக்கு கொண்டு செல்லுவது ஆண்கள் கடமை என்பதால் அவர்களாலே தான் அது முடியும் என்பதால் ஆண்களை முன்னிறுத்தினார்கள்.
அதே நேரம் பெண்கள் குறிப்பிட்ட நிலையில் குறிப்பிட்ட, இடங்களில் தர்ப்பணம் செய்யவும் இந்துமதம் அனுமதித்தது.
ஏன் சில தலைமுறை பெயர்களை சொல்லச் சொன்னார்கள்?
ஒரு மனிதன் தன் எல்லா தலைமுறையும் அறிந்திருக்க முடியாது. அது சாத்தியமுமில்லை. ஆனால் சில தலைமுறையினை அறிந்திருந்தால் வந்த வழி தெரியும். பூர்வீகம் தெரியும். இச்சமூகத்துக்கு அவர்கள் என்னென்ன கடமைகள் செய்தார்கள் என்பதும் தெரியும்.
அப்படியே நாம் என்ன செய்யவேண்டும் என்பதும் தெரிய வரும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பதாவது தெரிய வரும்.
இதனாலே சில தலைமுறைகளை நினைத்துப் பார்க்கச் சொன்னவர்கள், இன்னும் ஆழமாகச் சிந்திக்கச் சொன்னார்கள்.
மூன்று அல்லது ஏழு தலைமுறைக்கு முன் யார் மூலம், அதன் முன்னோர்கள் யார், அவர்கள் முன்னோர்கள் யார் என்பதை சிந்திக்கச் சொன்னார்கள்.
அப்படி சிந்திக்கும் போது மூல மரபணு ஒன்றே என்பதும், எல்லோரும் அங்கிருந்துதான் உருவானோம் என்பதும் தெரிய வரும்.
விஞ்ஞானம் இதனை மிகத் தெளிவாகச் சொல்கின்றது. அதன் பரிணாம விதிப்படி தொடக்கத்தில் இருந்த ஒரு உயிரில் இருந்து தான் இங்கு எல்லாமும் தோன்றிற்று. மானிடனும் அதனில் இருந்து வந்தவனே என்கின்றது.
இதைத்தான் தர்ப்பணம் செய்யும் போதும் இந்துமதம் போதித்தது.
எல்லா மானிடரும் ஒரு மூலத்தில், அதாவது பரம்பொருளிடமிருந்து வந்தவர்கள் என்பதை அது சிந்திக்கச் சொன்னது, இந்த லோக மானிடர்கள் எல்லாரும் ஒரே மூலம் என்பதை யோசிக்கச் சொன்னது.
இந்த உலகமே, வாழ்ந்தவர்கள், இருப்பவர்கள், வரப் போகின்றவர்கள் எல்லோருமே ஒரே சக்தியில் இருந்து வந்தவர்கள் எனச் சொல்லிக் கொடுத்தது.
“அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்தில் உண்டு” என்பதை திதி தர்ப்பணங்களில் காட்டி நின்றது.
இதை ஔவையாரின் ஞானக்குறள் தெளிவாகக் காட்டும். பின் வரும் குறள்களின் தத்துவமே இந்த தர்ப்பண ஏற்பாடு.
“மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணகமே யாகுஞ் சிவம்”
பூமியில் பிறந்திருக்கும் உயிர்களுக்கெல்லாம், சிவம் தானே சீவனாகி விண்ணகத்தில் அதாவது இந்த உலகெங்கும் வியாபித்து இருந்து அவற்றைக் காக்கிறான்.
“வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்
ஆயுமிடந் தானே சிவம்”
காற்றாகவும், இப்புவியில் வாழும் அனைத்து ஜீவராசிகளாகவும் ஏனைய சடப்பொருட்களின் உட்பொருளாகவும் சிவமே விளங்குகிறதென்பதை ஆராய்ந்து தெளிக. உயிர்களின் உணர்வும் அவனே, உயிரும் அவனே, புணர்வும் அவனே, புலப்பும் அவனே.
“எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்”
இப்புவியிலுள்ள எண்ணிலடங்காத ஆண், பெண், அலியென்ற பேதமுள்ள அனைத்து உயிரினங்களிலும் எங்கும் பரவி, உடலில் நிறைந்து நிற்கும் சிவம்.
இதையே திருமூலர் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றார்.
ஆம், நாம் எல்லொரும் ஒரே குலம் என்றும், நாம் எல்லோருக்குள்ளும் இருக்கின்றோம், எல்லோரும் எல்லா ஆத்மாக்களும் எல்லா உயிர்களும் நம்முள்ளும் இருக்கின்றது என்பதையும் சொன்னார்கள்.
பரம்பொருளில் இருந்து வந்தவர்கள் நாமெல்லாம், அந்த பரம்பொருள் நம் எல்லோர் உள்ளும் இருக்கின்றது “அகம் பிரம்மாஸ்மி” எனபதைத்தான் தர்ப்பணத்தில் சொன்னார்கள்.
அந்த மூலத்தையும், அது 84 அம்சமாக நம்முள் இருப்பதையும், நாம் எதிர்கால சந்ததிகளுக்கு அதை, இறந்த முன்னோர்க்கு நன்றி சொல்லி, உலக இயக்கத்துக்காய் விட்டுவிட்டுச் செல்ல உறுதி ஏற்கச் சொன்னதுதான் தர்ப்பணம்.
அந்த நாளில் எல்லோரும் தங்கள் இறந்த முன்னோருக்காக தர்ப்பணம் கொடுத்தல் அவசியம். அது அவர்கள் ஆன்மாவினை வாழவைக்கும். அது எங்காவது, எந்த உயிராகவாவது பிறந்திருந்தாலும் இந்த பலன் அவர்களுக்கு கிடைக்கும்.
சூரியன் முன்னால் செய்யப்படும் தர்ப்பணத்தில் அர்த்தம் உண்டு. சூரியனே எல்லா தலைமுறைகளையும் அவர்கள் வாழ்வையும் கண்டவர், யார் எங்கே என்ன வடிவில் இருக்கின்றார்கள் என்பதை அறிந்தவரும் அவரே.
உலக உயிர்க்கெல்லாம் உணவுக்கும் வாழ்வுக்கும் அடிப்படை சூரியனே.
அந்தச் சூரியனை நோக்கி செய்யப்படும் தர்ப்பணம் சரியான இடத்தில் ஆத்மாக்களுக்கு பயன்படும்.
அது ஐந்து வகை கோஷங்களையும் கடந்து ஆன்மா பேரின்ப நிலைக்கு செல்ல உதவி செய்யும்.
இந்துக்கள் ஞனம் பெரிது, அவர்கள் தாத்பரியம் பெரிது, அவர்கள் கண்டறிந்த உண்மை மிகப் பெரிது.
ஒவ்வொரு இந்துவும் “வசுதைவ குடும்பகம், லோகா சமஸ்தா சுகினோ பவந்து” என பிரார்த்தனையினை முடிப்பது உண்டு.
இது ஒரு ஸ்லோகத்தில் இருந்து வருவது.
“அயம் நிஜ பரோ வேதி கணனா லகுசேதஸாம்
உதாரசரிதானாம் து வசுதைவ குடும்பகம்”
அதாவது இந்த உலகில் யாரும் வேறு வேறு ஆட்கள் அல்ல, இங்கு வெறுப்பு விருப்பினை தாண்டி எல்லோரும் ஒரே குடும்பம், இங்கு எல்லோரும் ஒரே குலத்தவர் என்ற உண்மையினை உணர்தல் வேண்டும் என்பது அதன் பொருள்.
“லோகா சமஸ்தா சுகினோ பவந்து” என்றால் “எல்லா உலக ஜீவராசிகளும் நன்றாக இருக்கட்டும்” எனப் பொருள். “சர்வே ஜனா சுகினோ பவந்து” என்றால் “எல்லா மக்களும் நன்றாக இருக்கட்டும்” எனப் பொருள்.
இதுதான் தர்ப்பணத்தின் அடிப்படை, திதி வழிபாட்டுக்கு எல்லாவற்றுக்கும் அடிப்படை.
ஆம், நாம் எல்லோரும் ஒரே பரம்பொருளில் இருந்து வந்தவர்கள், ஒரே குலம் எனும் பெரும் தத்துவத்தை சொல்லும் ஏற்பாடுதான் தர்ப்பணம்.
இதனாலே தர்ப்பணத்தில் தன் இறந்த முன்னோர்கள் மட்டுமல்ல, தன் குலம் மட்டுமல்ல, எல்லோருக்கும் வேண்டச் சொன்னார்கள்.
தர்ப்பணத்தில் சொல்லப்படும் அந்த வரி முக்கியமானது.
“எனது உறவினர் என்ற எந்த வகையான பந்தத்திற்கும் உள்ளாகாத, எனது கோத்ரப் பிரிவிற்கு உள்ளாகவும் வராத, எனக்கு முகம் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்த பூமியை விட்டுப் போயிருக்கின்றன.
அந்த ஆத்மாக்கள் அனைத்தும் சாந்தியடைய, மேல் உலகில் எந்த விதமான துன்பமும் அனுபவிக்காமல் இருக்க, மேலும் அவை புதிதாகப் பிறப்பெடுத்தாலும் அந்தப் புதிய வாழ்க்கையிலும் அனைத்து விதமான நன்மைகளையும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன்.
அந்த அனைத்து ஆத்மாக்களும் எள்ளும் தண்ணீரும் இறைத்து நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால்
திருப்தி அடையட்டும்.
திருப்தி அடையட்டும்.
திருப்தி அடையட்டும்.”
ஆம், தன் மூதாதையருக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களுக்காகவும் வேண்டி அவர்களுக்கும் எள்ளும் நீரும் இறைத்து எல்லோரும் ஒரே குலம் எனச் சொன்ன மதம் இந்துமதம்.
அந்த ஞான ஏற்பாட்டின் முக்கிய நாள் மகாளய பட்சம், அந்த திதியும் தர்ப்பணமும் மகா முக்கியம்.
அன்று ஒரு இந்து, குடும்பத்து முன்னோர்களுக்காகவும், அப்படியே உலகின் எல்லா ஆன்மாக்களுக்காகவும் வேண்டிக் கொள்கின்றான். அவனின் வேண்டுதலாலே உலகம் நன்முறையில் இயங்குகின்றது.
ஒரு தலைமுறை பட்ட துயரத்தை அடுத்த தலைமுறை படாமல், அது கொஞ்சம் மேம்பட்டு வாழ்கின்றது என்றால், இந்த திதியும் தர்ப்பணமும் முக்கிய காரணம்.
இந்துக்கள் பலர் நாள் தவறாது, திதி தவறாது, முக்கிய நாட்கள் தவறாது கொடுக்கும் தர்ப்பணம் முக்கிய காரணம்.
இந்துக்களின் வழிபாடும் தர்ப்பணமும் அவர்களுக்கானது அல்ல, அது உலகத்து எல்லா மாந்தர்க்கும் எல்லா ஆத்துமாக்களுக்குமானது.
அந்த “வசுதைவ குடும்பகத்தின்” மகனாக உலக மாந்தருக்காக ஒவ்வொரு இந்துவும் தர்ப்பணம் கொடுப்பது கடமையாகின்றது. அதைத் தவறாமல் செய்தால் பெரும் பலன் வீட்டுக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் வரக் காண்பீர்கள்.
இந்தக் கால கட்டத்தில் இந்துக்கள் ஒரு பாரம்பரியத்தை பின்பற்றுவார்கள்.
அதாவது இந்துக்கள் நம்பிக்கைப்படி இந்த உலகில் ஆத்மாக்கள் பல பிறப்பெடுப்பார்கள், எல்லா உயிர்கள் வடிவிலும் வருவார்கள்.
அவர்கள் எந்த மனிதன் வடிவிலும் வரலாம், எந்த நிலையிலும் வரலாம். ஆணாக பெண்ணாக எந்த வடிவிலும் அந்த ஆத்மா வரலாம்.
இந்துக்கள் மரபுப்படி தானமும் தர்மமும் இதனால் அவசியம் என்றார்கள், அந்த ஆத்மாக்கள் எந்த வடிவாகவும் வரலாம், யாராகவும் இருக்கலாம். பலரில் ஒருவராகவும் இருக்கலாம் என்பதால் தான தர்மம் அவசியம்.
அன்னதானம், வஸ்திர தானம் அவசியம். இது முன்னோர்களின் ஆத்மாக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும், நம் கர்மவினைத் தீரும், கடமையும் தீரும்.
இந்த முன்னோர் ஆத்மாக்கள் மனிதர்களாக வரவேண்டிய அவசியமல்ல, அவர்கள் எந்த உடலிலும் பிறப்பெடுத்து வரலாம்.
அவர்கள் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்ற வடிவிலும் பிறப்பெடுத்திருப்பார்கள். இதனாலே தர்ப்பண காலங்களில் பறவைகள் விலங்குகளுக்கு உணவிடச் சொன்னார்கள் இந்துக்கள்.
பெரும்பாலும் இந்த ஆத்மாக்கள் மானிடரை அண்டி வாழும் விலங்கு, பறவைகள் உருவில் வரலாம் என்பதால் பசுக்கள், காகங்கள், நாய்கள் போன்றவற்றுக்கு உணவளித்தல் பெரும் புண்ணியம்.
தைமாத அமாவாசை மகா முக்கியமானது.
இந்த காலகட்டத்தில் முடிந்த வரைக்கும் எல்லா மானிடருக்கும், எல்லா உயிர்க்கும் முடிந்த உதவிகளை உணவாகவும், வஸ்திரமாகவும் கொடுத்தல் வேண்டும், நம் முன்னோரின் ஆத்மாக்கள் அதில் ஒரு வடிவமாக இருக்கலாம். அதைத் தவற விடக் கூடாது.
இந்துமதம் எனும் ஞானமதம் உலக மாந்தரையெல்லாம் சிவவடிவாக, தன் வடிவாக, தன் குடும்பமாக, கண்ட உன்னதமான மதம். அந்த மதத்தின் மகனாய் நின்று தர்ப்பணம் செய்தல் உலகில் யாருக்குமில்லா பெருமை.
நல்ல இந்து அதனை மறப்பதில்லை. அதனைச் சரியாகச் செய்பவனை முன்னோர் ஆத்மாவும், பிரபஞ்சமும் ஒரு காலமும் கைவிடுவதுமில்லை. எங்கோ, ஏதோ ஒரு வகையில் அதற்கான பலனை அவன் பெற்றுக் கொண்டே இருப்பான், இது சத்தியம்.