நவதுர்கா
சித்திதாத்ரி – 01
நவதுர்கா தேவியரின் தாத்பரியத்தில் கடைசி படிநிலை அன்னை சித்திதாத்ரி. சித்தி என்றால் பரிபூரண கடைசி நிலை வெற்றி, தாத்ரி என்றால் வழங்குபவர் என பொருள், ஆக பெரும் சித்திநிலை, இனி அடைய எதுவுமில்லை எனும் அந்த பரிபூரண நிலையினை அருள்பவள் அன்னை சித்தி தாத்ரி
இது எந்த நிலை என்றால் ஏழு சக்கரம் துலங்கி, அதை அடுத்து சூட்சும உடலின் சக்கரம் துலங்கி அதனை அடுத்து பிரபஞ்சத்த்துடன் இரண்டற கலந்துவிடும் நிலை
இதுதான் சமாதி நிலை இர்ண்டற கலந்துவிடும் நிலை, இந்த நிலை என்பது மகா சக்தி மிக்க நிலை அஷ்ட்மா சித்துக்களும் பெரும் வல்லமையும் கொண்ட நிலை, எல்லாமே சாத்தியம் எல்லாமே முடியும் எனும் அந்த மகா சக்திவாய்ந்த நிலை
இந்த நிலையினை அன்னை அருள்வாள், அதற்கு முன் இந்த நிலை என்றால் என்ன என்பதை காணலாம்
இந்துமதன் தன் ஆன்மீக படிநிலையில் மனிதன் இறைவனை அந்த மகா சக்தியினை அறிய ஆறு தரிசனங்களை சொன்னது
சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என்பவையே அந்த ஆறு தரிசனங்கள்.
இவற்றில் யோகம் என்பது என்ன என அறிய நாம் பதஞ்சலி முனிவர் இயற்றிய ‘யோக சாஸ்திரம்’ என்னும் நூலைப் படிக்கலாம். மகாகவி பாரதியார் உள்ளிட்ட பலர் இந்த நூலைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்
அதாவது இந்த தத்துவமும் பயிற்சியும் இந்துக்களின் வாழ்வியலாக இருந்திருக்கின்றன, அன்றாட நடபடியாக வழிபாடாக இருந்திருக்கின்றது, அதில் அதிகம் தேடியோர் மகான்கள் என்றானார்கள்
இங்கு எதுவும் விசித்திரம் அல்ல, எதுவும் புதுமை அல்ல, எதுவும் ஆச்சரியம் அல்ல, காலகாலமாக எல்லோரும் எளிதாக அறிந்திருந்த விஷயமே, இடையில் தொடர்பற்று போய் இப்பொழுது ஆங்காங்கு யோகம் அது இது என பொய்யும் உண்மையும் கலந்து நமக்கே காசுக்கு விற்கபடுகின்றது
இதெல்லாம் இந்த மாபெரும் ஞான சமூகம் தன்னை சிதைத்து கொண்டதின் வலி மிகுந்த சாட்சிகள், தன் பொருளையே விலை கொடுத்து வாங்கும் விசித்திரங்கள்
யோக சாஸ்திரம் என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்த விதமாய் இருந்தது, அது இப்படிபட்ட நிலைகளை விளக்குகின்றது
யோகசாஸ்திரம் என்பது யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு அங்கங்களைக் கொண்ட இந்த யோகம், ஒரு மனிதனின் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கவனித்து சொல்கின்றது
யமம் என்பது நடுநிலையுடன் இருத்தல், பேராசை இல்லாமல் மாயையில் இருந்து ஒதுங்கி இருத்தல் எந்த மாயையிலும் சிக்கா விவேகம் எனும் தன்மை
நியமம் என்பது தெய்வ குணமும், திருப்தி, எளிமை, கற்றல் மற்றும் கடவுளிடம் சரணாகதியாகும் மனதை கொண்ட தன்மை
ஆசனம் அதாவது இதன் பொருள் சக்கரங்களை இயக்கும் படி அமர்தல் அல்லது அசைத்து அவைகளை தயார் நிலைக்கு கொண்டு செல்லுதல்
பிராணாயாமம் எனும் மூச்சு பயிற்சி என்பது ப்ராணா , மூச்சு, அயமா, அடக்குதல் அல்லது நிறுத்துதல்.மேலும் வாழ்க்கை ஓட்டத்தைக் கட்டுபடுத்துதல் எனவும் பொருள்படும்.
ப்ரத்யாஹரம் என்பது புற உலக பொருள்களில் இருந்து ஐம்புலன்களையும் விலக்குதல்.
தாரானை என்பது ஒரே பொருளின் மீது கவனத்தை நிலைப் படுத்துதல்.
தியானம் என்பது சிந்திக்க மூழ்கும் விஷயத்தின் உண்மைத்தன்மையை ஆழ்ந்து சிந்தித்தல்.
சமாதி என்பது மரணம் அல்ல, உலக இன்பங்களை விட்டுவிட்டு, இறைவனுடன் வாழ்ந்து கொண்டே மனதால் இணைத்துவிடுதல்.
இவைதான் யோக சாஸ்திரத்தின் அடிப்படை தத்துவங்கள். இந்த சமாதி நிலை எனும் பெரும் நிலை, இரண்டற கலத்தல் எனும் நிலையினை வழங்குபவள் அன்னை
இந்த நிலையினை எட்டியவர்களுக்கு அஷ்டமா சக்திகள் எனும் மிக மிக சூட்சுமமான சக்திகள் கைகூடும், இது கொஞ்சம் ஆழமானது, யோக சாஸ்திரத்தில் முக்கியமானது
கீதையின் 3 யோகங்களும், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் சொல்வது இதுவே, இந்த நிலைகளையே
யோக சாஸ்திரம் என்பது கீதையின் ஒரு பிரிவே அன்றி வேறல்ல.
இதில் பின்னாளில் ஹட யோகம், தாந்த்ரீகம் என பல பல வகைகளில் பிரிந்தாலும் அதன் மூலமும் அது சேருமிடமும் ஒன்றே
அது மனிதன் மனிதனாய் வாழ்ந்து பிரபஞ்சத்துடன் இணைந்து நல்வாழ்வு வாழ்ந்து இறைவனை அடைவதே
இதெல்லாம் எங்கோ இமயமலையில் இருந்து பதஞ்சலி முனிவர் மட்டும் சொன்ன விஷயம் அல்ல, அது பாரத கண்டம்முழுக்க தெரிந்ததாய் இருந்தது
தமிழகத்தில் சித்தர்களும் இன்னும் பல மகான்களும் ரிஷிகளும் இவற்றை சொன்னார்கள்
அவர்களில் சித்தர்களும், திருமூலரும் அவ்வையாரும் மகா முக்கியமானவர்கள்
திருமூலரின் போதனைகளும் வழிகாட்டுதலும் பதஞ்சலிக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. உடலையும் நலமாக்கி நோய் நொடி நீக்க வைத்து மனிதனின் மனதை அவனை இயக்கும் சக்தியினை பிரபஞ்ச மூலபரம்பொருளுடன் சேர்த்து இயங்க வைக்கும் கலையே யோகம்
இந்த நவீன உலகில் ரேடியோ டிவி இணையம் போன் என என்னவெல்லாமோ இயங்குகின்றது அல்லவா? அவை எல்லாம் எப்படி இயங்குகின்றது?
அதில் பலவித விஞ்ஞான சூட்சுமம் உண்டு, பண்பலை சிற்றலை இணைய முகவரி ஆண்டனா, ரவுட்டர், உள்ளிட்ட எவ்வளவோ விஷயங்கள் உண்டு
மனிதனால் உருவாக்கபட்ட இந்த விஞ்ஞான கருவிகளே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு மனிதனை எளிதில் தொடர்பு கொள்ளவும் பார்க்கவும் பேசவும் உதவுகின்றன
இவை மனிதனின் புறகண்களும் பூதஉடலும் மட்டும் அறியும் விஷயங்கள்
ஆனால் மனதால் தெய்வ சக்தியினை பெருக்கி ஆறு சக்கரங்களான ஆதார மையங்களளை இயங்க வைத்து அதாவது மூலாதாரம், சுவாதிஷ்டானம்(நிராகுலம்), மனிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை என்பன. துரியம் எனும் அச்சக்கரங்களை இயக்கி அவற்றின் மூலம் மானிட உடலின் உயிர்சக்தியினை கொண்டு பிரபஞ்ச சக்தியினை தொடர்பு கொள்வதே யோகா
ஆம் டிஜிட்டல் உலகில் விஞ்ஞான கருவிகள் செய்யும் தொடர்பினை மின்சாரம் கொண்டு அவை செய்யும் அதிசயங்களை, மானிட உடலின் உயிர்சக்தி கொண்டு பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள செய்கின்றன அந்த யோக பயிற்சிகள்.
இதற்கு மூச்சு பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அவசியம்
சரி அஷ்டமா சக்திகளுக்கும் இன்றைய விஞ்ஞானத்துக்கும் என்ன தொடர்பு? விஞ்ஞானம் எவ்வளவுக்கு சில உண்மைகளை புரிந்திருக்கின்றது, கடவுளின் எல்லா வடிவும் அணுக்களில் நிரம்பியுள்ளது, பிரபஞ்சமும் அதன் பொருளும் அணுவினால் ஆனது, காற்றும் நீரும் உலோகமும் அணுவினால் ஆனது. மானிட உடலும் உயிரும் செல்களால் ஆனது
இதில் அணுமுதல் அண்டவெளிவரை இயக்கம் ஒன்றே என்பதையும், அந்த இயக்கம் மானிட உடலிலும் உண்டு கண்ணுக்கு தெரியாத மானிட சூட்சும் உடலிலும் உண்டு என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக விஞ்ஞானம் உணர்வது எப்படி?
இதையும் யோக சித்துக்களையும் இணைத்து பார்த்தால் பல விஷயங்களுக்கு விடை கிடைக்கும்
ஆம், உலக பொருளெல்லாம் அணுவாலும் உயிர்களெல்லாம் செல்களாலும் ஆனது என்கின்றது விஞ்ஞானம். அணுவின் அமைப்பு எல்லோரும் அறிந்தது, ஒரு கரு இருக்க அதை சுற்றி சில துகள்கள் சுற்றி கொண்டிருக்கின்றது
பிரபஞ்சத்தில் சூரியனை கோள்கள் சுற்றுவது போல அணுவுக்குள்ளும் ஒரு சுழற்சி உண்டு, கோள்களுக்குள் இருக்கும் இடைவெளி சிறிதெனில் அண்ட வெளியில் இருக்கும் இடைவெளி மிக அதிகம், இந்த இடைவெளிகளை குறைத்தால் ஒரு பொருள் சிறியதாகும், இடைவெளியினை அதிகரித்தால் ஒரு பொருள் பெரியதாகும், இது விஞ்ஞானமே சொல்லும் உண்மை
உலோகங்கள் கல் மண் என எல்லாவற்றுக்கும் இயக்கம் உண்டு அதாவது இயக்கம் உண்டு, காற்று போல் நீர் போல் அவைகளுக்குள்ளும் ஒரு சக்தி இயங்குகின்றது
இதைத்தான் கண்ணன் கீதையில் எல்லா பொருளிலும் நான் இருக்கின்றேன் என தெளிவாக சொன்னான், அணுவின் இடைவெளி அதிகமானால் அது பெரிதாகும், அணுவின் இடைவெளி குறைந்தால் உருவம் சிறுக்கும்
இன்னும் தெளிவாக சொல்லலாம்..அரைகிலோ பஞ்சு பெரிய பொதியாக வரும், அதே நேரம் அரைகிலோ யுரேனியம் பாதி தேக்கரண்டி கூட வராது. எடை ஒன்றே ஆனால் அணுவின் ஆட்டத்தால் உருவம் மாறுதல்
இப்படி ஒரு மனிதனின் செல் பெரிதானால் அவன் பேருருவம் கொள்வான், மிக சிறிதனால் பாக்டீரியா போல் காட்சியளிப்பான்
அணுவினை பிளந்தால் அது அணுக்களாக பலுகி கொண்டே செல்லும், வானில் கோள்களை உடைத்தால் கூட அவையும் சுற்று பாதையில் சுற்றித்தான் வரும் என்கின்றது விஞ்ஞானம்
அணு பெருகுவது போல மானிட இனமும் பெருகி கொண்டே இருக்கும், மானிடம் என்றல்ல எல்லா உயிரும் பொருளும் இங்கு மடிய மடிய பெருகி கொண்டேதான் செல்லும்
ஆம் கல் முதல் மானிடன் வரை ஏன் பிரபஞ்சம் வரை இயக்கம் ஒரே ஒரு இழையில்தான் பின்னபட்டு இணைக்க பட்டிருக்கின்றது
யோக சித்து விஷயம் இதுதான், அணுவோ செல் உயிரினமோ விண்வெளியோ கோள்களோ எல்லாவற்றையும் இயக்கும் ஒரு பொது சக்தி உண்டு அதுதான் இறைசக்தி, மனிதன் தன் யோகத்தால் இறைசக்தியுடன் கலக்கும் பொழுது அந்த ஆற்றலில் பிரபஞ்ச சக்தியினை அவனால் கட்டுபடுத்த முடிகின்றது, இதுதான் யோக சூட்சுமம்
இந்த யோகம் முன்பு சொன்ன பலவகை விஷயங்களை சரியான குரு மூலம் பின்பற்றுதல் மூலம் அடையலாம், மூச்சு பயிற்சி மூலம் ஏழு சக்கரம் எனப்படும் நாடி சக்கரங்களின் ஆதாரத்தை தூண்டுதல் மூலம் அதை பெறலாம்
இதை குண்டலினி என்பார்கள்
குண்டலம் என்றால் கவிழ்ந்திருத்தல் என பொருள், குவிந்திருக்கும் வடிவினை அப்படி சொல்வார்கள், மூலாதாரத்தில் கவிழ்ந்திருக்கும் அந்த சக்தியினை விழித்தெழ செய்வதே அந்த யோகம்
பாம்பு போல் சுருண்டிருக்கும் சக்தி எழுப்பட வேண்டும் என்பதுதான் அத்தத்துவம்
இந்துக்களின் தெய்வமெல்லாம் பெரும்பாலும் தியான வடிவிலே இருக்கும், சிவனோ இன்னும் பல வடிவங்களை அப்படி காணமுடியும், பாம்பும் அப்படி எல்லா இடங்களிலும்காட்சி தருவது அப்படியே
குவிந்திருக்கும் அச்சக்தி எழும்பி தலையில் விரிய வேண்டும் என்பதைத்தான் படமெடுக்கும் பாம்பு தத்துவமாக சொல்கின்றது, இந்த யோகத்தை செய்ய தொடங்கும் முன் சில அடிப்படை பயிற்சிகளையும் ஒருவன் செய்ய வேண்டும்
யோகம் என்பது மனம், ஆத்மா, புத்தி, பிராணம் , ஞானம், பிரபஞ்சம் என எல்லாம் இணையும் வழி என முன்பே பார்த்தோம், அதற்கு சில அடிப்படை விஷயங்கள் தெரிந்திருத்தல் அவசியம்
ஒவ்வொருவனும் தான் யார் என்பதை புரிதல் அவசியம்., இதற்கு கோசம் வழியாக விளக்குவார்கள் ஞானிகள், 5 கோஷாக்கள் உண்டு
அன்னமய கோசம் என்றால் அன்னத்தால் உருவாகும் உடல் ஒரு கட்டத்தில் மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாகும் இதனால் ஒருவன் அவன் உடல் அல்ல இது மண் தத்துவம்
பிராணமய கோசம் என்றால் ஒருவன் மூச்சு விடும்வரைதான் அவன் வாழ்வு, ஒருவன் சிந்தனையும் நிலைப்பாடும் செயலும் மூச்சிலே வெளிபடும், அது முடிந்தால் எல்லாம் முடியும் இதுவும் அவன் அல்ல இது வாய்வு தத்துவம்
மனோமய கோசம் என்பது ஒருவன் புத்தி அதுதான் செயல்களை செய்ய சொல்கின்றது, உடலையும் மூச்சையும் அதுதான் செய்யவைக்கின்றது, அதுதான் ஒருவனை நடத்துகின்றது ஆனால் அது நொடிக்கொரு வடிவம் எடுக்கின்றது, அதுவும் அவன் அல்ல, இது நீர் தத்துவம்
விஞ்ஞானமய கோசம், இது மேற்சொன்ன மூன்று நிலைகளையும் கட்டுபடுத்தும் அறிவு அல்லது ஞானம், இது நெருப்பு தத்துவம்
கடைசியாக ஆனந்த கோசம், இது ஆகாய தத்துவம் இது பேரின்ப நிலை இறைவனில் கலந்தால் மட்டும் கிடைக்கும் நித்திய பேரின்பம்
ஆம் ஐம்பெரும் பூதங்களும் சிவனில் அடக்கம், சிவனை நோக்கி தவமிருத்தல் யோகாவில் அடக்கம்
ஒவ்வொரு படிநிலையாக கடந்து, உடலை உதறி, பிராணனை கட்டுபடுத்தி, ஆசை துறந்து, புலன்களை அடக்கி சிந்தையினை சிவனில் கலப்பது மனதால் யோகம்
உடலில் அதற்கான சக்கரங்களை இயங்க செய்ய செய்யபடும் ஆசனங்கள் யோக ஆசனம், இவை குருவின் உதவியால் சரியாக செய்யபட்டு செய்யபட்டு கடைசியில் பெறுவதே அஷ்ட்டமா சித்து
அது, மஹிமா,லஹிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம் மற்றும் வசித்துவம் எட்டு வகை சித்திகளாகும்
இதில் அனிமா என்பது ஒரு பெரிய பொருளின் தோற்றத்தை மிக குறுக்கி காட்டும் ஒரு சக்தி , அனுமார் தன்னை குறுக்குவதும் , பிருங்கி முனிவர் போன்றோர் வண்டாக மாறியதும் , அனுசுயா தன் சக்தியால் முனிவர்களை குழந்தையாக்கியதும் இந்த வகையே
மஹிமா என்பது இயல்பில் இருந்து ஒரு பொருளை பெரிய பொருளாக்குவது.வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டியதும், அனுமன் மாபெரும் உருவாய் வளர்ந்ததும் இப்படியே
லஹிமா என்பது கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்ததும், அனுமன் காற்றில் பறந்ததும் இந்த வகை சித்தி.
கரிமா என்பது இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்ததும், மகாபாரதத்தில் அனுமன் தன் வாலை மிக கனமாக்கி பீமனை தடுமாற செய்ததும் இவ்வகையே
பிராத்தி என்பது எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது, எங்கும் எந்த வடிவிலும் செல்ல கூடியது இதற்கு கிருஷ்ணபரமாத்மா கதை தொடங்கி திருவண்ணாமலை ரமண மகரிஷி வரை ஏகபட்ட எடுத்துகாட்டுகளை சொல்லமுடியும்
ரமணரும் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றிய பெரும் நிகழ்வினையெல்லாம் காட்டினார்.
பிரகாமியம் என்பது நினைத்த உடல் அல்லது வேடம் எடுத்து தோன்றுதல் ஏகபட்ட அவதாரங்களையும் மகான்களையும் இப்படி சொல்லமுடியும் அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய
பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.
கூடுவிட்டு கூடுபாய்தல் என்பது இந்த வகையே.
இது நினைத்த வேடம் மட்டுமல்ல நினைத்த பொருளை எல்லாம் அடையும் ஆற்றலை கொடுக்கும்
ஈசத்துவம் என்பது ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்தல். அகத்திய முனியும் விசுவாமித்திரரும் இதற்கு மிகபெரும் எடுத்துகாட்டுகள்.
விசுவாமித்திரர் திரிசங்கு சொர்க்கம் என்றே ஒன்றை படைத்தவர், பெரும் தெய்வங்களுக்கும் ஆணையிடும் ஒரு சக்தி, திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் என்பதே.
வசித்துவம் என்பது ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப்படுத்துதுதல், அவைகளுடன் பேசுதல் பழகுதல் உத்தரவிடுதல் என பெரும் சக்தி அது
கழறிற்றரிவார் நாயானருக்கு இந்த சித்தி வாய்த்திருந்தது
திருநாவுக்கரசர் தம்மை கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும்,ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் என்பதே
இந்த அஷ்டமா சித்துக்கள் எளிதில் வராதவை, கால காலமாக தவமும் பெரும் யாகமும் வழிபாடும் செய்தால் அன்றி வராது, இந்த எட்டுக்கும் அனுமனை உதாரணமாக சொல்லமுடியும், இன்னும் பலரையும் சொல்லமுடியும், மிகபெரிய உதாரணமாக திருமூலரை சொல்லலாம்
இந்த பரிபூரண நிலையினை தருபவள் அன்னை, சமாதி என பிரபஞ்சத்தில் இரணடற கலந்து அஷ்டமா சித்துக்களயும் தருபவள் இந்த சித்திதாத்ரி
ஸ்ரீசக்கர தத்வத்தில் இது ஒன்பதாவது ஆவரணம், அங்கேதான் புள்ளிவடிவில் ஸ்ரீபுரம் அமைந்திருக்கும் அதுதான் பிந்து ஸ்தானம், இதுதான் “சர்வானந்த மயசக்ரம்” . இந்த பிந்துவில்தான் ஸ்ரீதேவியானவள் காமேஸ்வரி எனும் பெயரில் பிந்துவாக, சிவ-காமேசுவரியாக, காமேஸ்வரன் எனும் சிவனுடன் ஒன்றியவளாக எழுந்தருளியிருக்கிறாள்.
லலிதாம்பிகை இங்கேதான் வாசம் செய்கின்றாள் இங்குள்ள லலிதாம்பிகை பாசம், அங்குசம், கரும்புவில், ஐம்மலர் அம்புகள் என்பன நான்கு கரங்களில் தாங்கியவளாக, பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன் ஆகியோர் அவளது சிம்மாசனத்தின் கால்களாக விளங்கும் சிம்மாசனத்தில் காமேசுவரனாகிய ஈசனின் மடியில் அமர்ந்து இருக்க, இரு பக்கங்களிலும் லக்ஷ்மியும் சரஸ்வதியும் கவரி வீச காட்சி அளிக்கிறாள்.
தேவியின் மாளிகையின் வாயிலில் அணிமா, கரிமா, லஹிமா, மஹிமா, பிராப்தி, ப்ரகாம்யம், வசித்தவம் மற்றும் ஈசித்தவம் போன்ற எட்டு சித்திகள் துவாரகாபாலர்களாக நிற்கின்றார்கள்
இங்குதான் சிவ – சக்தி ஐக்கியம் எனப்படும் படைப்புத் தொழில் நிகழ்கிறது. இங்கு சிவனின் இடது பக்க மடியில் சக்தி அமர்ந்து அவர்களிருவரும் சேர்ந்து தங்களை நாடி வருபவர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். இங்கு பிறப்பு இறப்பு என்னும் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு, பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, முக்தி பெற ஞானம் ஏற்படுகிறது.
ஆத்மா பிரம்மத்துடன் இணைகின்றது. அனைத்து ஆனந்தங்களுக்கும் உறைவிடமாய் திகழும் பேரின்பம் எனும் பரப்ரும்ம நிலையில் ஒன்ற வைக்கும் நிர்விகல்ப சமாதி நிலை இதுவே ஆகும்.
நிர்விகல்ப சமாதி என்பது எந்தவிதமான மானிட உணர்ச்சிகளும், எண்ணங்களும், யோசனைகளும் இல்லாத ஒரு பேரின்ப நிலை, சூன்ய நிலை ஆகும். அதற்கும் மேலே தொடர்ந்து தியானிக்க ஒன்றுமே கிடையாது என்பதின் காரணம் அந்த நிலையை எட்டியவன் பிரும்மத்துடன் தன் ஆத்மாவை இணைத்துக் கொண்டு மனித உணர்வுகள் அனைத்தையும் துறந்து, தானே பிரும்மன், தானே தெய்வம் எனும் நிலையை எட்டி விடுகின்றான்
ஆம் ஸ்ரீசக்கர தத்துவத்தின் ஒன்பதாம் படிநிலையும் அந்த சமாதி நிலையினைத்தான் சொல்கின்றது
இந்த தத்துவத்தை சிதம்பரம் ஆலயத்தின் தாத்பரியத்தினின்று எளிதில் விளக்கலாம், அதை அந்த கனகசபையில் இருந்துதான் புரிந்துகொள்ளவும் முடியும்
அங்கிருந்து காணலாம்
சிதம்பரம் ஆலயம் ஆகாய தத்துவமாய், இன்றும் அங்கு சன்னதியில் ஒரு வெளி மட்டும் இருப்பதாய் இருப்பதன் தத்துவத்திலே முழு உண்மையும் அடங்கிவிடுகின்றது.
ஆகாய தத்துவத்தை அறிந்துகொள்ளுமிடம் அதை உணருமிடம் என்பது பொருள், அதனாலே அதற்கு அம்பரம், சிதம்பரம் என பெயரிட்டார்கள்.
அண்டவெளியின் ஆகாயம் எனும் வெளி மானிட உடலிலும் உண்டு என்பதையும் அங்கேதான் ஆத்மா உணர்வாக வசிக்கின்றது சூரிய பிம்பமாக வசிக்கின்றது என்பதை சொன்னார்கள்.
சிதம்பர சன்னதியில் வெளி என்பது ஆகாய தத்துவமாக காட்டப்படுவது, மானிட மனதினுள் ஒரு வெளி உண்டு அங்கேதான் ஆத்ம வடிவமாக இறைவன் உண்டு என்பது.
சூரியன் போல அந்த ஆத்மா சுடர்விடக் கூடியது. அதை ஞானத்தால் அடையலாம் தெளியலாம் என்பது ஞானியர் போதனை.
ஆத்ம தெளிவு என்பது எது நிஜம், எது மாயை என்பதை உணர்த்துவது, எது நிலையானது எனும் தெளிவினைக் கொடுப்பது.
இது ஏன் தங்கசபை என அழைக்கப்பட்டது என்றால் அங்கேதான் சிவனின் ஒரு தொழிலைச் சொல்லி அதனை குறித்தார்கள்.
இத்தலத்தில் அவர் அருளல் தொழிலை செய்கின்றார், அது அவரின் ஈசான முகம் என அழைக்கப்படுகின்றது.
இங்கு சூரியனாக அக்னி வடிவமாக இருக்கும் சிவனே, அருளல் அதாவது முக்தி அருளும் குருவாகவும் விளங்குகின்றார்.
இந்த தலம் சூரியனும் குருவும் சேர்ந்த மங்கலத் தலம், அதாவது தெய்வீக ஞானம், உயர்நிலை ஞானம் இங்கு அருளப்படும்.
அருளல் தொழிலை செய்யும் சிவபெருமான் இங்கே குருவாக, ஞான குருவாக நின்று முக்தி அருள்கின்றார், ஞானத்தின் கடை நிலையினை அருள்கின்றார்.
இந்த நிலையினைத்தான் இந்த ஞானக் கடைநிலையினைத்தான் ஈசான முகம் அருளும் என்பார்கள். ஈஷா என்பது அந்த பொருளை சொல்வது.
பரந்த வெளியில் ஆத்மா கலந்துவிடும் மாபெரும் கடை நிலை அது. இதற்கு மேல் எதுவுமில்லை. எல்லாம் கடந்த நிலை. எல்லாமே ஒன்றான நிலை என்பதில் ஆத்மா கரைந்து போவது.
இந்த ஈஷா அல்லது ஈசா எனும் தெய்வீக நிலை, பிரபஞ்ச வெளியில் ஆத்மா கலந்துவிடும் அருளை பாக்கியத்தை தருவது இந்த சபை.
குருவின் உலோகம் தங்கம். குரு நிலையில் இன்றும் என்றும் அழியாத என்றும் மங்காத ஞானமுக்தியினை சிவன் அருள்வதால் இச்சபை தங்க சபை என்றாயிற்று.
புடமிடப் புடமிட பொன் துலங்கும். அப்படி சிவபக்தியிலும் தேடலிலும் இறங்கும் ஆன்மா பொன்போல் சுடர ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட வரம் தரும் இடத்தையே பொன் அம்பலம் என்றார்கள், பொற் கூரையிட்டு காத்தார்கள்.
சிவனில் கலக்கும் ஆன்மா சிவன் போல் ஜொலிக்கும் அதனாலே பொன்னார் மேனியனே எனப் பாடினார் சம்பந்தர்.
சிதம்பரம் ஆலயம் ஞானம் தருமிடம். ஞான முக்தி தருமிடம். மாணிகவாசகர் நந்தனார் போன்றோர் அப்படி முக்தி பெற்றார்கள்.
வெளி எனும் பரவெளியில் ஆத்மா கரைவதே ஞானக் கடைநிலை என்பதைச் சொல்லி அம்பல வெளி வைத்த ஞானியர், தங்கம் எப்போதும் தங்கமாக இருப்பது போல் உயர்நிலை ஞானம் அடைந்த ஆன்மா அதுவாகவே நிலைக்கும் என்பதைச் சொன்னார்கள்.
சிதம்பர ரகசியம் புரிந்துகொள்ள முடியாதது என்பதெல்லாம் விஷயம் அல்ல, அது உண்மையில் ரகசியமும் அல்ல, புரிந்துகொள்ள வேண்டும். அந்த புரிதல்தான் முக்கியம். அதைத்தான் ரகசியம் என்றார்கள்.
மனதில் இருக்கும் வெளியில் அதாவது இதயம் அருகே இருக்கும் சக்கர வெளியில் ஆகாய தத்துவமாக ஒரு வெளி இருக்கின்றது, அங்கே ஆத்மா சூரியன் தத்துவத்தில் இருக்கின்றது.
மனதை ஒருமுகப்படுத்தி இந்த வெளியினை பரவெளியுடன் கலந்தால், யோகத்தில் பக்தியில் இறங்கி மிக வைராக்கியமாய் சாதித்தால் மனிதன் தெய்வ நிலை அடைவான்.
அதுதான் சமாதி நிலை. அதுதான் எல்லாம் கடந்த ஞானயோக நிலை.
இதைச் சொல்வதுதான், எல்லாம் கடந்த நிலையில் அந்த சமாதி நிலை எனும் பரவெளி நிலைக்கு ஆத்மாவினை அழைத்து செல்வதுதான் அந்த ரகசியம்.
எல்லாம் கரைந்த நிலை அது, தான் எனும் அகந்தை நினைவு எல்லாம் கரைந்து, தானும் இறையும் ஒன்று என்பதை உணரும் நிலை அது.
அப்படி பரவெளியில் இறைசக்தியுடன் கலந்து விடுவதைத்தான் அதுதான் நித்தியம் அதுதான் நிலையானது என்பதைத்தான் சிதம்பர ஆலயம் போதிக்கின்றது.
எல்லாம் கடந்துவிடு, அப்படிக் கடந்துவிட்டால் “தான்” இல்லா நிலை வரும். அந்த நிலைதான் இறைநிலை ஞானநிலை அதுதான் நிஜம். மற்ற எல்லாம் மாயை என போதிப்பதே அந்த ஆலய தத்துவம்.
இந்த நிலையினை இறண்டற இறைவனில் கலந்துவிடும் அந்த ஞான நிலையினை எல்லாம் கடந்த பரிபூரண அமைதி நிலையினை குறிப்பாக சொன்னால் தானும் இறை நிலை அடைந்ததை சொல்லும் நிலை அது
பிருஹதாரண்யக உபநிஷம் சொல்கின்றது.
“ஸகல தேவதைகளும் எதில் தோன்றியிருக்கின்றனவோ, அந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகி விடுகிற ஞானிக்கு அந்தத் தேவதைகளும் அந்நியமில்லை.
அந்த சித்தி எனும் சமாதி நிலையினை அருள்பவள் அன்னை
அன்னைக்கு “மருத்யு தாரு குடாரிகா” என்றொரு நாமம் லலிதா சஹஸ்கரநாமத்தில் உண்டு, அதற்கு யமன் எனும் மரத்தை வெட்டும் கோடாரி என பொருள்
அன்னை ரம்பையும் அரிவைகளும் புடைசூழ வருபவள் என்பதால் அவளுக்கு “ரம்பாதி வந்திதா” என்றொரு பெயரும் உண்டு
அவள் “மூலப்ரக்ருதி” பிரபஞ்சத்தின் மூலப்பொருளானவள் தோற்ற-நிலையின் சாரம்.
அவள் “வியாபினீ”, அனைத்திலும் வியாபித்திருப்பவள் எங்கும் நிறைந்தவள்.
அவள் “விவிதாகாரா”, பல்வேறு தோற்ற-நிலைகள், வடிவங்கள் தாங்கியிருப்பவள்
அவள் “வேத ஜனனி” வேதங்களைப் படைத்தவள்.
அவள் “சிருஷ்டி கர்த்ரீ” அதாவது பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பவள்.
அவள் “ஆபிரம்ம கீட ஜனனீ” பிரம்மதேவன் முதல் கிருமிகள் வரை அனைத்தையும் சிருஷ்டித்த மாதா என்கின்றது.
அவள் வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால்’மந்திரிணீ’ என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.
ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி என கொண்டாபடும் அவள் அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,(முத்திரை மோதிரம் தரித்தவளாக) இருப்பவள்.
அதனால் லலிதா ஸஹஸ்ரநாமம் அவளை “மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதுரே நம” என்று போற்றுகிறது.
லலிதா ஸஹஸ்ரநாமம் இதனையே சொல்கின்றது “தேவர்ஷிகண ஸங்காத ஸ்தூயமானாத்ம வைபவா” என்கின்றது, அதாவது அன்னை தேவர்கள், ரிஷிகள் இவர்களுடைய கூட்டங்களால் ஸ்தோத்ரம் செய்யப்பட்ட வைபவத்தோடு கூடியவள் என்கின்றது
இன்னும் “ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா” என அவளை சொல்கின்றது, அதாவது விஷ்ணு, ப்ரம்மா, இந்திரன் ஆகியோரால் வணங்கபடுபவள் என்கின்றது
அன்னையின் புகழ்பாடும் “ஸ்ரீ லலிதா த்ரீசதி” எனும் நூல் அன்னையினை “ஹராராத்யா” சிவனால் ஆராதிக்கப்படுபவள் என்கின்றது
அதே நூல் “ஹரிப்ரமேந்த்ர வந்திதா” என அன்னை ஹரியாலும் பிரம்மா வினாலும், இந்திரனாலும் பூஜிக்கபடுபவள் என்பதையும் சொல்கின்றது
அன்னையில் கலந்து முழு சமாதி நிலை அடைந்த மனம் எல்லாம் கடந்த ஞானத்தில் இருக்கும், வான்வெளியில் எப்படி நிசப்தமான அமைதி நிலவுமோ அந்த அமைதி எல்லாம் கடந்த அந்த ஞான நிலையில் இருக்கும், முழுக்க அன்னையோடு கலந்த நிலையில் இருக்கும்
அபிராமிபட்டர், ஆதிசங்கரர் என பலரை அந்த நிலைக்கு உதாரணம் சொல்லமுடியும், அவர்கள் எல்லா சித்துக்களும் பெற்றிருந்ததும் எல்லா அதிசயங்களும் செய்ய முடிந்ததும் அப்படியேதான்
இவர்கள் அன்னையுடன் கலந்து அப்படியே பிறப்பற்ற நிலை அடைந்து முக்திபேறு அடைந்தார்கள், இரண்டற கலந்துவிட்டார்கள்
இந்த நிலையினை அருள்பவள் அன்னை, ச்மாதி நிலை என எல்லாம் கடந்த நிலை கொடுத்து அப்படியே தன்னில் சேர்த்துகொள்வாள் அந்த ஆதிபராசக்தி
இந்த பிரபஞ்சத்தின் நிறமான ஊதா நிற மேடை அமைத்து, வெள்ளை கொண்டை கடலையும் அக்கார அடிசில் எனும் பால்சோறும் படைத்து அவளை இன்று வழிபடுதல் நன்று
குலபெண்கள் இன்று அன்னையிடம் எல்லா கடமையும் முடித்து, கர்மாவினை நல்லபடியாக முடித்து வாழ்வின் எல்லா பருவத்தையும் இனிதே கடந்து, வாழ்ந்து முடித்த தென்னையாக, குலை தள்ளிவிட்ட வாழையாக அந்திம காலத்தில் எந்த ஏக்கமும் கலக்கமும் அச்சமும் பயமுமில்லாமல் முழு திருப்தியோடு முழு நிறைவோடு புளியம்பழம் ஓட்டைவிட்டு பிரிவது போல் வாழ்வு பற்றற்ற நிலையில் முடியவேண்டும் என பிரார்திப்பார்கள்
ஆம், ந்வாராத்திரி என்பது வாலை குமரி தொடங்கி முதுமையில் ஒரு பெண் எப்படி நிறைவாக வாழ்ந்து முடிக்க அன்னையிடம் அருள் வேண்டும் காலகட்டம், அந்த பருவத்திற்குரிய பலன்களை கேட்கும் நாட்கள் இது
அப்படி எங்கிருந்து ஆத்மா வந்ததோ அந்த மகா சக்தியிடம் நிறைவாழ்வு வாழ்ந்து பக்குபவட்ட ஆத்மாவாக திரும்பி சென்று கலந்திட வரம் வேண்டும் நாள் இது
அந்த வரத்தை சித்திதாத்ரி எனும் வரருளும் மாதா , ஆதிபராசக்தி அருள்வாள். நவ ராத்த்ரிக்குமான மொத்த பலனை அவள் அருள்வாள், அவளை வேண்டுவோம்
சரி, இந்த குலபெண்களுக்கு அஷ்டமா சித்திகள், இந்த யோகம் எல்லாம் அவசியமா இவர்களுக்கு அந்த வரம் ஏன் என கேட்டால் பதில் உண்டு
தன் கர்மத்தை சரியாக செய்யும் பெண்ணுக்கு அன்னை எல்லா வரமும் சக்தியும் அவள் கேட்காமலே கொடுப்பாள், தன் தர்மத்தை உணர்ந்தவளுக்கு எல்லாம் தானே வாய்க்கும்
“கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா” என வாசுகி கேட்டு சர்வ வரம் பெற்ற முனிவரையே திணற வைத்தாள், அதாவது தவம் செய்து முனிவர் பெற்ற வரத்தைவிட தன் கடமையினை கர்மத்தை சரியாக செய்து வரம்பெற்றாள் வாசுகி
மூன்று பெரும் முனிவர்களையே தன் ச்கதியால் குழந்தைகளாக்கினாள் அனுசுயை அவர்களின் சக்தியினை விட அவள் கடமையினை செய்ததால் பெற்ற வரம் பெரிதாயிருந்தது
இந்த சக்திகளை வழங்கியவள் அன்னை, தன் கடமையினை தன் சுதர்மத்தை சரியாக செய்யும் பெண்ணுக்கு தவ்மிருந்து முனிவர் பெரும் சித்துக்களைவிட பெரிய சக்தியினை அன்னை தருகின்றாள்
இதுதான் இன்றைய நாளின் தாத்பரியம், நவராத்தியில் பெண்கள் வழிபட்டு பெறும் பலனும் இதுதான்
அந்த மகா சக்தி, நாதவடிவில் இந்த பிரபஞ்சத்தை இயக்குகின்றாள், அந்த நாதத்தையே வீணையாக கொண்டு சரஸ்வதியாக காட்சியளிக்கின்றாள், எல்லா சக்தியும் சித்துக்களும் சிறப்பு வரங்களும் ஆற்றலும் அவளிடமிருந்தே வருகின்றன, அவளே தன் சக்தியினை எல்லா வகையிலும் தன் அடியார்க்கு அளித்து இயக்குகின்றாள் பின் அவர்களை தன்னோடு சேர்த்தும் கொள்கின்றாள் எனும் ஞானதாத்பரியத்தை சொல்லும் நாள் இது
அந்த அன்னையினை போற்றி பாடலாம், அவளுக்கான ஸ்லோகம் இதோ
சித்த, கந்தர்வ், யக்யாதிர்,சூர்ஆர் மரைரபி, சேவயாமணா சதா போயாத் சித்திதா சித்தி தாயினீ”
அதாவது “சித்தர், கந்தர்வர், தேவர், முனிவர், மனிதர், யட்சர் என அனைவராலும் வணங்கப்படுபவளும், என்றும் வெற்றி ஒன்றையே பெறும் தேவி சித்திதாத்ரி என்னுடைய அனைத்து செயல்களிலும் ஜெயத்தை தர வேண்டும்
இந்த ஸ்லோகத்தை அபிராமி பட்டரும் பாடியிருக்கின்றார், அதையும் சொல்லி பாடலாம்
“”வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே..”
அதையே கம்பனும் பாடியிருக்கின்றான் அதை சொல்லி பாடினால் அன்னையின் எல்லா பலனும் அருளும் கிடைக்கும்
“”வேதமும் வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போத உருவாகி எங்கும் பொதிந்த விந்து
நாதமும் நாத வண் டார்க்கும் வெண்டாமரை நாயகியே”

நவதுர்கா 02 : பிரம்மசாரிணி
நவராத்திரியின் இரண்டாம் நாள் பிரம்மசாரிணி எனும் துர்க்கைக்கானது, நவதுர்கையில் இவள் இரண்டாம் வடிவம்.
இவள் வாலை எனும் பாலகியினை விடக் கொஞ்சம் முதிர்ந்த குமரி எனும் நிலைக்கு வருபவள்.
எப்படி ஒரு மனிதன் பிறந்து பாலகன், சிறுவன், வாலிபன், கிரகஸ்தன், முதியவன் எனும் நிலைக்கு கட்டம் கட்டமாக செல்வானோ, எப்படி ஒரு மரம் முளைவிட்டு கன்றாகி மரமாகி பூத்து காய்த்து கனிகொடுக்குமோ அப்படி ஒருவன் ஆன்மீகம், யோகம், லௌகீகம் என எல்லாவற்றிலும் அன்னையின் அருளை எப்படிப் படிப்படியாக பெறமுடியும், என்னென்ன படிநிலையில் என்னென்ன நிலையில் அடுத்தடுத்து அன்னை அருள்வாள் என்பதைச் சொல்லும் தத்துவம்.
அவ்வகையில் இது இரண்டாம் நிலையில் நின்று அருள் வழங்கும் வடிவம், குமரி வடிவம்.
இந்த நிலைதான் பிரம்மசாரிணி நிலை.
‘பிரம்மம்’ என்றால் உயர்ந்தது. ‘சாரி’ அல்லது ‘ஆச்சாரி’ என்றால் அந்த வழியில் செல்பவர் எனப் பொருள். மிக உயர்ந்த இலக்கை நோக்கிச் செல்வோர், எளிதில் எல்லோராலும் செல்லமுடியாத பெரும் இலக்கை நோக்கிக் கர்மமே கண்ணாகி அதுவே மூச்சாகி அதுவே இலக்காகி ஒருவன் கொஞ்சமும் அசையாமல் தவமிருந்து போராடும் நிலைதான் பிரம்மச்சாரி நிலை.
நோக்கம் உயர்ந்தது. இலக்கு எல்லாவற்றிலும் மேலானது எனும் நிலையில் அந்த ஒன்றைத் தவிர வேறு நோக்கமில்லாமல் அந்த ஒன்றிலே நிலைத்து அந்த வழிநடந்து, எந்நிலையிலும் கலங்காமல் இலக்கை அடைவது.
பிரம்மச்சரியம் என்றால் திருமணமாகாதவன் எனப் பின்னாளில் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுவிட்டது. பிரம்மச்சரியம் என்றால் தன் இலக்கு தவிர தன் பெரிய நோக்கம் தவிர எதையும் தேடாதவன் என்பது பொருள்.
அந்த வரத்தை பலத்தை தருபவள் பிரம்மச்சாரிணி தேவி.
சுருக்கமாகச் சொன்னால் எது ஒருவன் கர்மமோ அந்தக் கர்மத்தில் சரியாக அவனை நிறுத்தி கர்மத்தைச் செய்யவைத்து அதிலே துணை நின்று. அந்த கர்மத்தாலே முக்தியும் ஞானமும் பிறப்பற்ற நிலையும் அடைய செய்யும் வரம் தருபவள் இவளே.
இவளை ஏன் எல்லோரும் இன்று வழிபடவேண்டும் என்றால் அவள்தான் அலையாடும் கடல்போல் ஆசைகளும் பிரச்சினைகளும் அடித்து ஆடும் வாழ்க்கை கடலில் நம்மைப் படகாகச் சுமந்து செல்வாள், இருளில் ஒளியினைக் காட்டி கரம்பிடித்து இதுதான் பாதை, இதுதான் கர்மா, இதற்காகத்தான் நீ படைக்கப்பட்டாய் எனும் தெளிவினைத் தருவாள்.
மாணவர்கள் கல்வி ஒன்றே இலக்கு, தொழில் செய்வோர் தொழிலே இலக்கு இன்னும் அவரவர் கடமையே அவரவர்க்கு முக்கியம் எனக் கர்மாவினைச் செய்யவைப்பவள் அவளே.
துறவியருக்கு பரம்பொருளை அடைவதே முக்கியம், அங்கே என்ன சிக்கல்கள் தடைகள் தடுமாற்றம் வந்தாலும் அவர்கள் கடந்து செல்லல் அவசியம். அங்கே துணைவருபவள் இவளே.
அப்படியே குடும்பத்தவர்க்கு குறிப்பாக குலபெண்களுக்கு குடும்பம் முக்கியம். குடும்பத்தார் முக்கியம். இவர்களைக் காப்பதே கடமை, கர்மா என்ற தெளிவையும் அதிலிருந்து கொஞ்சமும் தடுமாறாமல் காத்துச் செல்லும் வரம் தருபவள் இவளே.
இவளே ஒவ்வொருவரையும் பொறுப்பான கட்டத்துக்கு அழைத்துச் செல்வாள். இவள் துணை இருந்தால் ஏற்ற கர்மம் ஏற்ற தொழில் ஏற்ற குடும்பம் என எல்லாமும் வாய்க்கும்.
அதனாலே இவளை இரண்டாம் நாளில் வணங்கச் சொன்னார்கள் ஞானியர்.
இவள் கிட்டதட்ட சிவனை வரமிருந்து அடைந்த மலைமகளின் சாயல். ஆனால், அந்த உறுதி, வைராக்கியம், விடாபிடியான தவம், தீராத் தவம், முழுக்கவனம் கொண்ட தவம் என எல்லாமும் வழங்குபவள் இவளே.
இந்தப் பிரபஞ்சம் ஒரு ஒழுங்கில் கட்டமைக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம், அங்கே கோள்கள் அதனதன் பாதையில் சரியாக இயங்குகின்றன, அதனதன் வழியில் அதனதன் கடமையினைச் சரியாகச் சீராகச் செய்கின்றன.
இங்கே ஒன்று குழம்பினாலும் மாபெரும் பிரபஞ்சத்தின் இயக்கம் குலையும், அந்தப் பெரும் இயக்கத்தைப் பிரம்மத்தனமான இயக்கமாக, ஒரே இயக்கமாக செய்பவள் இவளே.
சூரியன் ஏன் காய்கின்றது, பூமி ஏன் சுற்றுகின்றது, நட்சத்திரங்கள் ஏன் எரிகின்றன எதற்காக இவை இயங்கவேண்டும், எதற்காக இந்த கோள்கள் சுற்றவேண்டும் என்பதெல்லாம் யாருமறியா ரகசியங்கள்.
ஆனால், அவை கடமை ஒன்றே, கர்மா ஒன்றே தங்கள் செயலாக பலன் எதிர்பாராது உறுதியாக சரியாக இயங்குகின்றன அல்லவா? அந்த இயக்கம் தருபவள் அன்னை.
ஆம். பிரபஞ்ச இயக்கத்தை உறுதி செய்யும் அந்தப் “பிரம்ம சாரிணி”, மானிட உணர்வுகளையும் இயக்குகின்றாள்.
அவளிடம் வேண்டி அவள் அருள் பெற்றால் உணர்வுகள் கட்டுக்குள் வரும். சிந்தனைகள் தெளிவாகும், முழு அமைதி வரும்.
ஆம். இவள் சுவாதிஷ்டானத்தின் அதிபதி, அங்கே நின்று அருள் தருபவள், சுவாதிஷ்டான சக்கரம்
மூலாதாரத்தில் இருந்து அவரவர் கைவிரல் அளவில் நான்கு விரல் அளவு மேலே உள்ளது இந்த சுவாதிஷ்டானம்.
இதனைக் குறித்து தெளிவாகப் பாடுகின்றார் போகர்.
“துதிசெய் மூலத்தை தாண்டி அப்பால்
துடியான நாலங் குலமே தாண்ட
பதிசெய்த பிரம்மனுட வீடுமாகும்
பகர்ந்த சுவாதிஷ்டானம் மென்றுபேரு
அதிசெய நால்வட்டாக வலயஞ்சுத்தல்
ஆறிதழ் தானச்சரத்தை யறியகேழு
பதிசெய்த பாமபுராமா யாக வந்தால்
பாங்கான நாடு பீசம் லங்நங் ஆமே”
இதனை நான்கு கோணம் கொண்ட ஆறு இதழ் சக்கரம் என யோக சாஸ்திரம் சொல்கின்றது, இது பொன்னிறமானது என்பதும் ரிஷிகள் சொன்னது.
இந்தச் சக்கரம் ஒருவனின் வாழ்வை நிர்ணயிப்பது என்றார்கள் ஞானியர். எப்படி நிர்ணயிக்கும் என்பதை சூட்சுமத் தத்துவங்களோடும் உடல் அமைப்போடும் காணலாம்.
இது இரண்டுக்கும் பொருந்திவருவதுதான் இந்துக்களின் ஞானம் எவ்வளவு பெரியது என்பதைச் சொல்லி வியக்க வைக்கும் விஷயம்.
இந்தச் சுவாதிஷ்டானம் என்பது அடிவயிற்றில் அமைந்துள்ளது. இது நீர் தத்துவம் கொண்ட சக்கரம். அப்படியே உடலின் நீர் சக்திகள் அதாவது சிறுநீரகம், சுக்கிலம் என நீர் சக்திகள் கொண்ட இடத்தில் இது அமைந்து கட்டுப்படுத்துகின்றது.
இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் நீர் சம்பந்தமான நோய்கள் உடலில் வராது. இந்தச் சக்கரம் சரியாக துலங்கவில்லை என்றால் சிறுநீரக சிக்கல் முதல் எல்லாச் சிக்கலும் உருவாகும்.
குழந்தையின்மை, பெண்களுக்கு மாதாந்திர சிக்கல் எனப் பல விஷயங்களின் காரணம் இந்த சக்கரத்தின் தன்மைதான்.
இரத்த சோகை, மலச்சிக்கல், இடுப்புப் பிரச்சினைகள், மூட்டுப் பிரச்சினைகள், மண்ணீரல் கோளாறுகள், பித்தப்பை பிரச்சினைகள் எல்லாம் இங்கிருந்தான் உருவாகும்.
இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் உடலின் நீர் சம்பந்தமான இயக்கமெல்லாம் மிகச் சரியாக நடக்கும், அட்ரீனல் சுரப்பி இங்கேதான் உண்டு.
இது சரியில்லை என்றால் மனோரீதியாகவும் சிக்கல் வரும், இந்தச் சக்கரத்தின் வீச்சு அப்படியானது.
இச்சக்கரமே சுயத்தை அறியவைக்கும். இச்சக்கரம் ஆழ்மனதோடு தொடர்புடையது. பிறருடன் ஒருவர் வைத்திருக்கும் சமூக உறவு, வாழ்க்கையை அனுபவித்து வாழ்தல், தன் பலம் மற்றும் பலவீனங்களை அறிதல் ஆகிய பண்புகள் சுவாதிஷ்டான சக்கரத்தின் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன.
எப்படிப்பட்ட எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது சுவாதிஷ்டானத்தின் கட்டுப்பாட்டில்ததான் இருக்கிறது. உணர்ச்சி, சிற்றின்பம், மகிழ்ச்சி, நெருக்கம், உள்ளுணர்ந்து அறிதல் ஆகியவையெல்லாம் இதனால் வருவதே.
பயம், அச்ச உணர்வு, தன்னபிக்கையின்மை, பொறாமை, மூர்க்கத்தனம், கவனமின்மை, மன அழுத்தம், சமூக உறவின்மை, மிகுந்த உணர்ச்சிவசம் இதெல்லாம் இந்தச் சக்கரத்தின் குறைந்த செயல்பாட்டால் வருபவை.
இங்கேதான் இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும், உணர்வுகள் என்பது இங்கிருந்துதான் உருவாகின்றது, உணர்வுகளின் மையம் இதுதான்.
காமம் முதல் பல உணர்வுகள் இன்னும் பல்வேறு வகையான சுகங்கள் இங்கிருந்துதான் உருவாகும், அது பசியாக இருக்கலாம், காமமாக இருக்கலாம், இன்னும் பலவான சுகங்களாக இருக்கலாம்.
சுகத்தைத் தேடிச் செல்லும் வாழ்வு மானுடனுடையது. அதற்கு இன்பம், மகிழ்ச்சி, ஆனந்தம், நிம்மதி, முழுமை எனப் பல பெயர்களைச் சொன்னாலும் அடிப்படையில் அவன் விரும்புவது ஒரு திருப்தி.
இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் மனதுக்கும் உடலுக்குமான ஒரு முழு திருப்தி கிடைக்கும், நிறைவு கிடைக்கும்.
மானுடரின் குழப்பமான சிந்தனைப்படி சக்தியினை இந்தச் சக்கரத்தில் இருந்து கீழே இறக்கினால் அது மனித நிலையில் இருந்து மிருக நிலைக்கு அழைத்துச் செல்லும்.
இந்தச் சக்கரத்துக்கு கீழ்தான் சுகங்களுக்கான இந்திரியங்கள் உண்டு, அந்தச் சுகங்களை நோக்கி சக்தியினைக் கீழே இறக்கினால் அவன் போகி.
இதுதான் இன்ப போகம். இந்த சக்கரத்தில் இருந்து சுக்கிலம் முதல் எல்லாவற்றையும் கீழே இறக்க இறக்க அவன் போகத்தில் வீழ்ந்து அதற்கு அடிமையாகி விலங்குபோல் வாழ்ந்து மடிவான்.
இந்தச் சக்தியினை அந்த இடத்தில் இருந்து மேலே ஏற்றிச் சென்றால் அவன் யோகி, அவன் ஞானத்தால் இறை நிலை அடைவான்.
ஒருவன் போகி என உணர்ச்சிக்கு அடிமையாகி அங்கே வீழ்ந்து கிடப்பதும், அவன் யோகியாகி ஞானம் அடைவதும் தெளிவு அடைவதும் இந்தச் சக்கர சக்தியினைப் பொறுத்தே.
ஆம். இந்தச் சக்கரத்தின் உணர்ச்சிதான் ஒருவனை நடத்தும், அந்த உணர்ச்சி கர்ம வினைப்படி வரும்.
அன்னை இங்கே நின்று ஒருவனின் உணர்வுகளைக் கட்டுபடுத்தி ஒரே நோக்கில் செலுத்துவாள். சுவாதிஷ்டானத்தில் அவள் நின்று அருள்வழங்குகின்றாள் என்பது அதைத்தான் சொல்கின்றது.
ஆம். உணர்வுகளின் தடுமாற்றத்தில் மானுடன் சிக்கிக் கொள்ளாமல் தன் கர்மா ஒன்றைச் சரியாகச் செய்ய அவள் அருள் செய்வாள்.
மாட்டுக்கு கடிவாளம், குதிரைக்கு சேனை, யானைக்கு அங்குசம் போன்றவை அதனைக் கண்டபடி அலையவிடாமல் சரியான இலக்கு நோக்கி அழைத்துச் செல்லும், கப்பலின் திசைகாட்டும் கருவி அப்படியே.
அவ்வாறே குழப்பமும் ஆசைபோராட்டமும் மாய மயக்கமும் நிறைந்த உணர்வுகளை ஒடுக்கி அவனைச் சரியாக நடத்துவாள் அன்னை.
உடலியல் தத்துவப்படி உணர்வுகள் எல்லாமே ஹார்மோன்கள் எனும் நிணநீர் என்பார்கள் நவீன மருத்துவர்கள், இந்த நிணநீர்தான் ஒவ்வொரு வகை உணர்வையும் தோற்றுவிப்பது.
இந்த நீரை ஒவ்வொரு சுரப்பியும் சுரக்கும், அந்தச் சுரப்பிகளின் மூலம் சுவாதிஷ்டானம் எனும் அந்த இடத்தில் இருக்கும்.
இந்த நிணநீர்தான் ஒவ்வொரு உணர்வையும் நிர்மாணிக்கும், யானைக்கு மதம் பிடிப்பது ஒரு நிணரீர் என்றால் மானிட குழப்பத்துக்கும் உணர்வுக்கும் இந்த ஹார்மோன்கள் பெரும் காரணம்.
இவை ஒழுங்குபடுத்தப்பட்டால் ஆரோக்கியமான மனமும் உடலும் வாய்க்கும், இவை சரியில்லை என்றால் தாறுமாறாக இருந்தால் உடலும் மனமும் சிந்தனையும் கெடும்.
அன்னை பிரம்மசாரிணி இவற்றை ஒழுங்குப்படுத்தி தருவாள்.
இந்த ஒழுங்கு என்பது ஒருவனைத் தவக்கோலத்தில் தன் கடமையினைச் செய்யவைப்பது, தன் கர்மாவினைச் செய்யவைப்பது.
ஸ்ரீ சக்கர வழிபாட்டில் இந்த பிரம்ம சாரிணி தேவி என்பவள் “தேவி புரேசி” என அழைக்கப்படுகின்றாள். இந்த இரண்டாம் ஆவணம் பதினாறு இதழ் தாமரை தளங்களைக் கொண்டது.
இந்த ஆவணத்தின் ஒவ்வொரு தாமரை இதழ் போன்ற தளத்திலும் ஒவ்வொரு ஆகர்ஷண சக்தி தேவதைகள் அமர்ந்து உள்ளார்கள். அந்த சக்தி தேவதைகளில் பிரிதிவி, அப்பு, ஆகாசம், வாயு, மனம் போன்ற சில சக்திகள் உள்ளன.
இந்தக் கோட்டையினை “சர்வாசா பரிபூரக சக்ரம்’ என்பார்கள். அதாவது, அனைத்து நம்பிக்கைகளும் எண்ணங்களும் நிறைவேறும் என்பது பொருள்.
அன்னை தவமிருப்போர் தவம் நிறைவேற துணையிருப்பாள் என்பது ஸ்ரீ சக்கரத்தில் இரண்டாவதாக சொல்லப்படும் தத்துவம்.
அந்தத் தத்துவத்தின் காட்சிவடிவமே அந்தப் பாறையும் அங்கே அவள் பதித்த பாதமும்.
இந்தத் தவக்கோலத்தில் கன்னியாகுமரி பாறையில் அன்னை நின்றாள், அந்தத் தென்முனையில் பகவதி அம்மன் ஆலயம் வாலைக்கானது.
அந்தப் பாறைதான் ” ஸ்ரீபாத பாறை” என அன்னை தவமிருந்த பாறைதான் இந்த “பிரம்மசாரிணி” ஆலயம் இருக்குமிடம்.
அங்குதான் அன்னை தவமிருந்தாள், அந்தத் தவத்தை எப்படி இருந்தாள் என்பதைத்தான அங்கே தன் பாதம் பதித்துச் சொன்னாள்.
அதாவது, அங்கே ஒரு பாதம் மட்டும்தான் பதிந்திருக்கும். ஆம். அப்படித் தவத்தை ஒரு காலில் செய்தாள்.
அந்த அளவு தன் தவமே பிராதனமாக, தன் இலக்கு ஒன்றே முக்கியமாக, அதுவே வாழ்வாக, அதுவே சுதர்மமாக நின்று செய்து சிவனை அடைந்தாள்.
அப்படிச் சிவனை அடைந்தவள் நம் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டிச் சென்றாள்.
அந்த “ஒற்றைப் பாதம்” என்பது அவள் தவமிருந்த காட்சி மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரையும் நம் தர்மத்தில் நம் கடமையில் காக்க அவள் ஓடி வருவாள் என்பது.
ஓடிவரும் போது இருபாதமும் ஒன்றாக பதிய முடியாது, ஒரு பாதமேதான் பதியும். அந்தக் குமரி ஸ்ரீபாத பாறையில் பதிந்திருக்கும் பாதம், நம் கர்மத்தில் நம் கடமையில் நம் இலக்கில் நம்மை காக்க அன்னை ஓடிவருவாள் என்பதைக் காட்டுகின்றது.
அன்னை அங்கே சொல்லும் போதனை அதுதான்.
ஆம். தேவி பிரம்மசாரிணி நம்மை அடுத்த படிநிலைக்கு நகர்த்துவாள், இலக்கு எது அதை எப்படி அடையவேண்டும் எனக் காட்டுவாள், இலக்கை அடைய எல்லா உணர்வுகளையும் கட்டுப்படுத்தி சுக இன்ப மயக்கங்கள் மாய ஆசைகளை அகற்றி ஒருமுகம் செய்வாள்.
இன்னும் ஆழ கவனியுங்கள், கன்னியாகுமரி பாறையில் அவள் செய்த தவம் திருமணத்துக்கு முந்தையது. அதாவது, தன் இலக்கில் அவள் வெல்ல செய்த தவம்.
அந்தத் தவத்தை அவளைச் செய்ய சொன்னவர் மகரிஷி நாரதர்.
அவள் செய்த தவம் கடுமையானது, சிவனை அடைய சில ஆயிரம் வருடங்கள் வெறும் வில்வ இலைகளையே உணவாகக் கொண்ட தவம் அது.
அப்படி எல்லாம் தியாகம் செய்தாள் அவள் “அபர்ணா” என்றானாள், “ப்ர்ண” என்றால் இலை. ‘அபர்ணா’ என்றால் விரதத்தை அனுஷ்டிக்கும்போது இலைகளை உண்பதையும் தியாகம் செய்தவள் என்று பொருள்.
அந்தத் தவமே சித்தியாயிற்று. இதுதான் கன்னியாகுமரி “ஸ்ரீபாத பாறை” சொல்லும் தத்துவம்.
இந்தத் தேவியினை வழிபட அமைதி வரும், கவனம் ஒரு இடத்தில் இலக்கில் குவியும். அவள் அருளில் கர்மமே கண்ணாகி காரியத்தில் முழுக் கவனமாகச் செயலாற்றும் பெரும் வலிமை கிடைக்கும்.
அர்ஜூனன் கண்ணுக்குக் கிளியின் கண் மட்டும் தெரிந்தது போல் அன்னையின் அருள் பெற்றால் தன் கடமை, தன் கர்மா ஒன்றே தெரியும்.
இவளின் வடிவம் துறவியர், தவசிகள் வடிவம். இவளின் கரங்களில் பிரார்த்தனை மாலையும், கமண்டலமும் இருக்கும். இவளுக்கு வாகனம் ஏதும் இல்லை.
பூமியில் காலால் நடப்பவளாக இவள் காட்சிபடுத்தப்படுகிறாள். அதன் பொருள் அவரவர் கர்மாவினை அவரவரே செய்தல் வேண்டும், தனியாக தவம்போல் கர்மத்தை ஏற்றுச் செய்யவேண்டும். இன்னொரு கர்மாவினைத் தன்னோடு இணைக்கக் கூடாது என்பதற்காக.
தனித்திரு, தவமிரு, எதிலும் ஒட்டிக்கொள்ளாதே, எதையும் சார்ந்திராதே, எது உன் இலக்கோ அதை நோக்கி தவமிருந்து, எந்தச் சோதனையிலும் கலங்காமல் இரு, அதற்குரிய பலத்தை சக்தியினை நான் தருவேன் என்பதே அவள் தோற்றம் சொல்லும் தாத்பரியம்.
நவராத்திரி இரண்டாம் நாளான இன்று அவளுக்கு பச்சை நிற மேடையிட்டு ஆடையிட்டு வணங்குதல் வேண்டும், கடலை சுண்டலும், தேங்காய் பாயாசமும் நல்லது.
பருப்பு சாதம் நல்ல பலனைத் தரும்.
இந்த அன்னைதான் கன்னியாகுமரி பாறையில் நின்று தத்துவம் போதிப்பவள். இந்துமதத்தில் ஆழக்கரைந்த சுவாமி விவேகானந்தர் அந்த மகத்துவம் அறிந்துதான் அந்த பாறைக்கு ஓடிவந்து தவமிருந்தார்.
அவர் தன் கர்மத்தை செய்ய, தன் கர்மாவினைச் செய்ய முழு வரமும் அங்கே பெற்றுக்கொண்டார், அதன் பின்புதான் மேற்குலகில் அமெரிக்காவில் இந்து தர்மத்தை அவர் விதைத்தார். இன்று அது பெரும் பலன் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
விவேகானந்தர் என்றல்ல இராமானுஜர் உள்ளிட்ட மகான்கள் அங்கேதான் தங்கள் தவத்தின் வலிமை எல்லாம் அடைந்தனர், தவவலிமை தருபவள் அன்னை.
ஆம். அந்தத் தென்முனை பாறை சாதாரணம் அல்ல, அங்கு அன்னை எக்காலமும் உண்டு, அங்கே நின்று ஒவ்வொருவர் உணர்வுகளை அடக்கி அவர்கள் எந்த உயர்ந்த நோக்கத்தை அடைய தவமிருக்கின்றார்களோ அவர்கள் தவம் சித்தியடைய அதன் பலனை உலகம் அடைய அவள் அருள் புரிவாள்.
இங்கே நுணுக்கமாக அவள் போதிக்கும் தத்துவம் தியாகம்.
அன்னை அப்பாறையில் “அபர்ணா” எனும் தியாகியாக நின்றார் என்பது தன் கர்மாவினை, தன் கடமையினைச் செய்ய,பெரும் இலக்கை அடைய ஒருவன் பல தியாகங்களைச் செய்யவேண்டும் என்பது.
ஆம். தியாகம் இன்றி கர்மத்தை கடமையினை முழுக்க செய்யமுடியாது. தொழிலோ, துறவோ தியாகம் மகா முக்கியம் என்பதைக் காட்டினாள்.
அந்த வழிகாட்டல்தான் நவராத்திரியில் குலப்பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாடம், குடும்பம் என்பது தியாகத்தால் இயங்கக் கூடியது, அங்கே ஒரு பெண் தன்னை தியாகம் செய்து பாடுபடும் போது தன்னலம், தன் சுகம், தன் ஆசைகள் என எல்லாவற்றையும் குடும்பத்துக்காய் இழந்து அந்தக் குடும்பம் வாழ தவமிருந்து அன்னையினை வேண்டும் போது அவள் பெரும் ஆசிவழங்குவாள்.
எந்தக் குடும்பத்தில் ஒரு பெண் தவமிருந்து அக்குடும்பத்துக்காய் வாழ்வாளோ, தன்னைத் துறந்து முழு அர்பணிப்பினை செய்து அக்குலத்துக்காய் நிற்பாளோ அந்தக் குலம் பெரும் வாழ்வு வாழும்.
அவளுக்கு அன்னை பிரம்மசாரிணி துணைவருவாள், இந்தப் பெரும் தத்துவத்தை போதித்தபடி நவராத்திரியின் இரண்டாம் நாளில் பிரார்த்திக்கின்றார்கள் இந்துக்கள்.
மோடி ஒவ்வொரு நவராத்திரி அன்றும் சொல்லும் முக்கிய வார்த்தை “அன்னை பிரம்மசாரிணி” எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும் என்பது, அவரின் நவராத்திரி உரைகளைக் கவனித்தால் அது புரியும்.
ஆம். தன் பிரம்ம நோக்கத்தை அடைய தன் உயரிய நோக்கத்தை அடைய யார் தியாகம் செய்யத் தயாராவார்களோ, யார் தியாகம் பல செய்தார்களோ அவர்களை அன்னை பிரம்மசாரிணி வழிநடத்துகின்றாள்.
விவேகானந்தர் போலவே மோடியினையும் அவளே நடத்துகின்றாள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு தியாகியால் அக்குடும்பம் அன்னை அருள்பெற்று வாழட்டும். அவர்களால் தேசம் பலம் பெற்று, மோடியால் நடத்தப்படும் தேசம். இன்னும் பெரும் இடம் பெறட்டும்.
எல்லோரின் மகா உயர்ந்த நோக்கமும் நிறைவேற, நாடு பொருளாதாரம், இராணுவம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் , ஆன்மீகம் என எல்லா வகையிலும் பெரும் இடம் அடைய அந்த அன்னை ஒவ்வொருவரையும் வழிநடத்தி வரட்டும்.
அவளுக்கான ஸ்லோகம் இதோ.
“ததானா கரபத்மாப்யாமக்ஷமாலா கமண்டலு |
தேவி ப்ரஸீதது மயி பிரம்மசாரிண்யனுத்தமா || “
“யார் தன் இரு கரகமலங்களிலும் ருத்ராக்ஷ மாலை மற்றும் கமண்டலுவைத் தரித்துக் கொண்டிருக்கிறார்களோ அத்தகைய உன்னதமான தேவி பிரம்மசாரிணி தாயே, என் மீது கருணைக் காட்டு”
நவதுர்கா 03 : சந்திர காண்டா
வடமொழியில் சந்திர காண்டா என அழைக்கப்படும் அந்தத் தேவி தமிழில் சந்திர காந்தா என அழைக்கப்படுகின்றாள். இதற்குக் குளிர்ந்த நிலவை தலையில் சூடியுள்ளவள் எனப் பொருள்.
இது சிவனோடு கலந்த தேவி வடிவம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆம். வாலையாக வந்து குமரியாகி பின் சிவனை அடையும் தேவியானவள் சிவனின் அடையாளமெல்லாம் பெறுகின்றாள்.
அவ்வகையில் சிவன் தலையில் சூடியிருக்கும் நிலவில் அவளுக்கும் பாகம் வருகின்றது, அவளும் அதனைச் சூடி சந்திரகாந்தா என்றாகின்றாள்.
இது மூன்றாம் படிநிலை. அதாவது, ஒரு சக்தி குழந்தையாக உருவாகி குமரியாகி இப்போது மணக்கோலம் அடையும் தத்துவம்.
இந்த மூன்றாம் படிநிலை என்பது பூரணம் அல்ல, ஆனால், பூரணத்தின் தொடக்கம்.
இறைவனை அடையும் ஆத்மா, தவம்பல புரிந்து பெரும் வைரக்கியமாக நின்று இறைவனை அடையும் ஆத்மா இறைத்தன்மை பெறும் என்பது இதன் தாத்பரியம்.
இதனாலே காசியில் இந்தச் சந்திர காந்தாவுக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. ஆம். அவள் சிவனை அடைந்த தத்துவப்படி அது ஸ்தாபிக்கபட்டுள்ளது.
இங்கே சந்திரன் சிவன் தலைக்கு வந்த வரலாற்றையும் காணுதல் வேண்டும். தட்சனின் சாபத்தால் தேய்ந்த சந்திரனைச் சிவன் தன் தலையில் சூடினார், அந்தச் சந்திரனே அன்னைக்கும் பாத்தியமாயிற்று.
அப்படியே சிவனின் முக்கண்ணும் அன்னைக்குச் சாத்தியமாயிற்று.
முக்கண் என்றால் ஞானக்கண், அகக்கண், மனதினால் காணும் கண்.
இந்தத் தத்துவத்தில்தான் இந்தச் சந்திரகாந்தாவினைப் புரிந்து கொள்ளல் வேண்டும், அதற்குச் சிவன் தலையில் சந்திரன் இருக்கும் தத்துவம் அவசியம்.
பிரபஞ்ச ரீதியாக வானியல் ரீதியாக சந்திரன் மகா முக்கிய கிரகம்.
காலத்தின் அதிபதி யாராக இருந்தாலும் காலத்தின் அளவை சொல்பவன் சந்திரனே. அவ்வகையில் சந்திரனை முன்னிட்டே நாள், திதி,மாதம் என எல்லாமும் நிர்ணயிக்கப்படுகின்றது.
கால பைரவராகக் காலத்தின் அதிபதி சிவன் என்றால் சூரியன் சிவன் அம்சம் என்றால், சந்திரன் காலத்தை அளந்து காட்டும் சக்தி தேவியின் அம்சம்.
பௌதீக ரீதியாக சந்திர சுழற்சியாலே மழை பொழிகின்றது, பருவம் மாறுகின்றது, பூமியோடு சேர்ந்து சூரியனை சுற்றும் நிலவு இல்லையேல் பூமி இல்லை, அது இயங்காது.
சந்திரனின் ஈர்ப்பு விசையே பூமியில் பல மாறுதல்களைச் செய்து இயக்குகின்றது, அதுதான் பருவகாலமாகின்றது.
ஜாதகரீதியாகவும் இன்னும் பல தொடர்புகள் ரீதியாகவும் சந்திரனுக்கும் மானுட மனதுக்குமான தொடர்பு மிக மிக நெருக்கமானது.
அதற்கு முன் சிவன் தலையில் சந்திரன் அமர்ந்த கதையும் அதில் இருக்கும் உண்மையினையும் காண வேண்டும்.
சந்திரனுக்கு 27 மனைவியர் அதாவது 27 நட்சத்திரங்களும் மனைவியர் என்பதும் ஒரு சாபத்தால் சந்திரன் பிறை நிலவாய் சிவனிடம் அடைக்கலமாகி அவரின் சிரசில் அமர்ந்து சிவன் கண்காணிப்பில் கடமையாற்றுகின்றான் என்பதும் புராணச் செய்தி.
இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், 27 நட்சத்திரக்காரர்களுக்கும் சந்திரன் தொடர்பு உண்டு, சந்திரன் இல்லாமல் ஜாகதகமே இல்லை.
சந்திரன் இருக்குமிடமே தாயின் ஸ்தானத்தை குறிப்பதாக ஜோதிட நுணுக்கங்கள் சொல்லும், அவ்வகையில் தாய் எனும் சக்தி அருளைப் பெற சந்திரன் அருள அவசியம்.
தேவியின் அருளைப் பெற சந்திரன் அவசியம்.
இன்னும் சந்திரனாலே மனதின் உணர்ச்சிகள் எண்ணங்கள் எழுகின்றன, சந்திரனே மனதிடம் மனோபலத்துக்கான அதிபதி என்பதும் ஜோதிடம் சொல்லும் உண்மை.
சந்திரன் மனதுக்கான கிரஹம், பௌர்ணமி அமாவாசையில் கடல்மட்டம் எழுவதும் குறைவதும் கண் காணும் உண்மைகள்.
அதாவது, நீரானது பௌர்ணமி அன்று பொங்குகின்றது, அப்படி நீரால் இயங்கும் உடலிலும் நீரில் மிதக்கும் மூளையிலும் சில மாறுபாடுகள் வரும்.
அதனாலே சிலருக்குப் பௌர்ணமி அன்று ஒருவித அதீத எழுச்சிகள் வரும் நிலையற்ற தன்மை வரும், அமாவாசையில் அது தலைகீழாகும்.
இதெல்லாம் மனம் சம்பந்தபட்டது. சந்திரன் என்பதற்கான பெரும் சான்றுகள், அதனாலே ஜாதகத்தில் சந்திரன் இருக்குமிடம் முக்கியமானது
மனம் சரியாக இருந்தாலே புத்தியும் செய்யும் தொழிலும் சரியாகும். செல்வம் வாய்க்கும். இதனாலே சந்திரன் செல்வத்துக்கும் அடையாளமான கிரஹமானார்.
திருப்பதி ஸ்தலம் சந்திரனின் தலம் என அழைக்கப்படுவது அப்படித்தான்.
சந்திரன் கால நேரத்தை அளந்து தரும் கிரஹம், உணர்ச்சிகளின் அதிபதி, இன்னும் தெளிவாக சொல்லப்போனால் ஈர்ப்பு விசைகளைக் கட்டுப்படுத்துபவர்.
பூமியின் ஈர்ப்பு விசை எப்படி சந்திர கிரஹணம், அமாவாசை, பௌர்ணமியில் மாறுமோ இன்னும் வளர்பிறை தேய்பிறையில் மாறுமோ அப்படி மனம் கொள்ளும் பற்றுக்களில் இருந்தும் அதனை விடுவிக்கவும் கட்டிவைக்கவுமான சக்தி சந்திரனுக்கு உண்டு.
சந்திரனின் பார்வையே ஒரு பொருளை பற்றவும் செய்யும், மனம் விரும்பும் ஒன்றைத் துறக்கவும் செய்யும்.
இதனாலே பற்றற்றக் கோலத்துக்கு செல்ல சந்திரன் அருள் அவசியம், இறைவனைப் பற்றி நிற்க அந்த அருள் அவசியம்.
மனமே சந்திரன், அந்த மனதில்தான் சந்திரனின் உணர்ச்சிகள் பிரதிபலிக்கும்.
சந்தோஷம், அழுகை, மகிழ்ச்சி சோகம் என எது என்றாலும் இதயம் பக்கம் உணரும், தேவி சிவனுக்கு இடபாகம் எனும் தத்துவம் இதுதான்.
சந்திரன் என்பது தாய்ஸ்தானத்தில் இருப்பது, சிவன் சந்திரனைச் சூடினார் என்பது தேவியின் அம்சத்தை ஏற்றுக்கொண்டார் என்பது.
தேவியின் அருளே மனோபலம் அருளும், அதை அருள்பவள் இந்தச் சந்திரகாந்தா.
இந்த அன்னைதான் மணிப்பூரக சக்கரத்தைத் துலங்க வைக்கின்றாள், மணிபூரக சக்கரம் பற்றி அறிதல் அவசியம்.
“மாலினுட வீடதுதான் நறுவிரல்லின் மேலே
மாசற்ற பிறைபோலே கோட்டையாகும்
மாலினுட வளையம்போல் பத்திதழதான்
பத்தமு னச்சரத்தின் பயனைகேளு
தாலினுட ஜனகமா முனியின்தாகந்
தயங்காத நரபர்ப்பர் தண்மையாகும்
ஆலினுட மங்நடுவில் பூதம் அப்பு
அதன் பீசம் வங்கென்று அறியலாமே”
என இந்த சக்கரத்தைப் போகர் பாடுகின்றார்.
இந்த சக்கரம் சுவாதிஷ்டான சக்கரத்தில் இருந்து ஆறு விரற்கடை உயரத்தில் அமைந்துள்ளது, இச்சக்கரம் மணிபோல் ஒளிரும் தன்மையுடையது என்பதால் இதனை மணிப்பூரகம் என்றார்கள் சித்தர்கள்.
நடுவில் சதுரம், அதைச் சுற்றி சக்கரம் என்ற வட்டம், சக்கரத்துள் மூன்றாம் பிறை வடிவில் கோட்டை, வட்டத்தைச் சுற்றி பத்து தாமரை இதழ்கள் வடிவம் கொண்டது இது என்பது சித்தர்கள் சொன்னது.
அதை ஒரு ஸ்லோகமும் சொல்கின்றது,
“தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயா
ஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம்”
தாயே, நீலமேக ரூபமான,மணிபூரகச் சக்கரத்தை இருப்பிடமாகக் கொண்ட உனது சதாசிவத் தத்துவத்தை வணங்குகிறேன். அந்த மேகமானது, மணிப்பூரகச் சக்கரத்தில் உள்ள இருளை அகற்றும் மின்னல்களை உடையது. பற்பலவிதமான ரத்னாபரணங்களுடைய ஒளியினால் அது இந்திரனுடைய வில்லைப் போல் இருக்கிறது. காலாக்னி ருத்ரனால் தகிக்கப்படும் லோகங்களை தன் அம்ருத வர்ஷத்தால் குளிரச் செய்வது என தன் சௌந்தர்ய லஹரியில் பாடுகின்றார் ஆதிசங்கரர்.
இந்த மணிப்பூரக சக்கரம்தான் மானிட சுபாவ உணர்ச்சிகளுக்கு ஆதாரமானது. அதாவது பந்தபாசம், நியா அநியாயம், சுயநலம், பொதுநலம் என எல்லா உணர்வுகளும் இங்குதான் தீர்மானிக்கப்படும். அதாவது, மாயைகள் இருக்குமிடம் உதித்து ஆடும் இடம் இதுதான். ஆத்மாவினைச் சிறைபிடிக்கும் உணர்ச்சிகள் வரும் இடமும் இதுதான்.
இந்த மணிப்பூரகம் சரியாக இருந்தால் மன உறுதி, விடா முயற்சி, தைரியம், புது புது படைப்புச் சிந்தனைகள், புத்தாக்கச் சிந்தனைகள் , எதற்கும் கலங்காத நிலை ஆகியது இங்கேதான் உதிக்கும்.
இந்தச் சக்கரம் சரியில்லை என்றால் மனக்குழப்பம், தீராக் கவலை, மன உறுதியில்லாமை, புதிய முயற்சி இல்லாமை, தெளிவு இல்லாமை, மூர்க்கம், பதட்டம், முரட்டு வாதம் என எல்லா குழப்பமும் வரும். இந்தச் சக்கரம் சரியில்லை என்றால் உடல்சார்ந்த கோளாறுகளும் வரும். சீரணக் கோளாறு, மூச்சுக் கோளாறுகள்,
அல்சர், வயிற்று வலி, கீல்வாதம், நீரிழிவு, மண்ணீரல் சார்ந்த கோளாறுகள், கணையம் சார்ந்த பிரச்சினைகள் என எல்லாமும் இங்கிருந்தான் வரும்.
இந்தச் சக்கரத்தை சூரிய மையம் எனவும் அழைப்பார்கள், சூரியனுக்குரியது என்றால் அக்னி தத்துவம் என்றாகும்.
இந்தச் சக்கரம் வயிற்றில் இருப்பதை அவதானிக்கலாம், அவ்வகையில் ஒரு நெருப்புத்தான் உணவை செரிக்கவைக்கும், உணர்வுகளில் வயிறு எரிவதை சொல்லும். அவ்வகையில் இது வெப்பம் சார்ந்த சக்கரம்.
வயிற்றிலிருந்துதான் உணவு செரிக்கப்பட்டு சக்தி உடலெல்லாம் செல்வது என்பது உடலியல் அமைப்பு, அதேபோல இங்கிருந்துதான் நல்ல சக்திகள் உருவாகி நல்ல நாடிகள் உருவாகி சிந்தனைகளை வலுப்படுத்துகின்றன என்பது யோக சூட்சுமம்.
இதுதான் தன் கர்மத்தை தன் விதியினை நிர்ணயிக்கும் சக்கரம். இந்த சக்கரம் துலங்கியோர் தங்கள் கர்மத்தை உணர்வார்கள், விதியினை உணர்வார்கள்.
இந்தச் சக்கரம் துலங்கியவருக்கு கர்மம் துலங்கும், அந்தப் பிறப்பின் நோக்கத்துக்கு செல்லும் வழிகள் துலங்கும். அதை நோக்கி இழுத்துச் செல்லும்.
ஆழ கவனித்தால் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது தொப்புள் கொடிதான் குழந்தையின் தொடர்பாகின்றது. இந்தத் தொப்புள் கொடி இருக்குமிடம்தான் இந்தச் சக்கரமும் அமையும்.
அவ்வகையில் கர்ம வினை, குலவழி கர்மம் எல்லாம் இங்கேதான் பதிவு செய்யப்படுகின்றன.
“உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை” எனத் திருமூலர் இதனைத்தான் பாடுகின்றார்.
இந்தச் சக்கரம்தான் இருவகை சக்திகளைக் கொடுக்கின்றது, ஒன்று உணவு செரிக்கப்பட்டு எரிக்கப்பட்டு அந்த வெப்பத்தில் உடலுக்கு தேவையான சக்தியினைக் கொடுப்பது.
அதே பகுதியில் இருக்கும் சக்தி மையம்தான் மனதுக்குத் தேவையான எல்லாப் பலங்களையும் கர்ம வினைக்கான காரியங்களையும் கொடுப்பது.
இந்தச் சக்கரம் சரியாக துலங்கினால் அதிகம் உண்ணவேண்டி இராது. ஒருபொழுது உணவிலே சக்தி பெற முடியும், அதுவும் இல்லை என்றால் உணவு இல்லாமல் நீரில், காற்றிலே சக்திப்பெற்று வாழமுடியும். யோகியர், ஞானியர் உணவில்லாமல் வாழும் இரகசியம் இதுதான். இந்தச் சக்கரம் துலங்கினால் எல்லாம் சரியாகும்.
சூரிய தத்துவம் என ஏன் சொல்வார்கள் என்றால் இதுதான். உடலுக்கு முக்கிய ஆதாரம், சூட்சும சக்திகளின் நாடி இயக்கத்தின் இரகசியம் இதுதான்.
இச்சக்கரம் துலங்கினால் எல்லாம் ஒருவனுக்குச் சரியாகும், அவனது கர்மா துலங்கும், துலங்குவதோடு மட்டுமல்ல அதனைச் செய்யும் வைராக்கியமும் வரும்.
கவனியுங்கள், தாய்க்கும் குழந்தைக்குமான தொப்புள் கொடி பந்தம் தரும் சக்கரம் இது. அன்னை தாயாக நின்று காப்பாள் என்பதும், மனோபலம் தருவாள் என்பதும் இங்கே எளிதில் விளங்கும்.
தாயினை விட பெரிய மனோபலம் யார் ஒருவனுக்குத் தரமுடியும்?
ஸ்ரீ சக்கரத்தின் மூன்றாம் கோட்டை அல்லது ஆவரணம் இந்த “சந்திர காந்தா” தத்துவமே, அது அந்த மூன்றாம் கோட்டைப் பற்றி சொல்கின்றது.
அது எட்டு தாமரை இதழ்களைக் போன்ற தளத்தைக் கொண்டது. வசு எனப்படும் அந்த எட்டு தளத்தின் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு சக்தி தேவதை அமர்ந்து இருக்கின்றாள். இந்த ஆவரணம் “சர்வ சம்க்ஷோபனச் சக்கரம்” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.
இந்தத் தளத்தில் உள்ள யோகினி தேவதையின் பெயர் குப்த தரயோகினி என்பது ஆகும். இந்த ஆவணத்தில் குஸுமா, மேகலா, மதன, மடநாதுரா, ரேகா, அனங்கவேகினி, அனங்காகுசா மற்றும் அனங்காமாலினி எனும் எட்டு மஹா உக்ர தேவதைகள் உள்ளார்கள். இந்த ஆவரணத்தில் உள்ள தேவதைகள் சாத்விகர்களது மனதை ஸ்திரப்படுத்தி அவர்களுக்கு தியானம், பூஜை இவற்றில் பரிபூரண ஈடுபாட்டை எட்ட அருள் புரிகிறார்கள்.
ஆம். ஸ்ரீ சக்கரத்தின் மூன்றாம் நிலை மனதை ஸ்திரப்படுத்தும், அந்த மனோபலம் தருபவள் சந்திர காந்தா.
இன்னும் அன்னையின் சிறப்புக்கள் உண்டு, அன்னைதான் நல்ல தோற்றப் பொலிவினை அருள்வாள், சந்திரன் எப்படி பார்ப்பதற்கு வசீகரமானதோ அப்படி வசீகர தோற்றமும் ஈர்ப்பும் ஒருவருக்கு அன்னை அருளால் கிடைக்கும்.
அழகு என்பது உடலை மூடியிருக்கும் உறுப்பால் கிடைக்கின்றது, உடலின் காவலும் அதுதான்.
ஆம். மானிட உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல், உடலை போர்த்தியிருக்கும் கவசம் அதுதான் தோல்தான் ஒரு உடலுக்கு அழகும் அழகான தோற்றமும் தருகின்றது, தோல் இல்லையென்றால் மானிடர் எலும்பும் சதையுமாக எல்லோரும் ஒரு பிண்டம் போல் காட்சியளிப்பார்கள்.
தோல்தான் உடலை மறைத்து ஒரு அழகு கொடுத்து வடிவம் கொடுத்து முறையான ஒரு வடிவம் கொடுப்பது இந்தத் தோல்தான்.
வெறும் அழகை மட்டும் கொடுப்பது அல்ல, அதுதான் கழிவுகளை வெளியேற்றும். அதுதான் பருவகால மாறுபாட்டுக்கு ஏற்ப உடலை வெப்பமாகவும் குளிராகவும் வைத்திருக்கும்.
நோய்கிருமிகள் இன்னும் சூரியக் கதிர்கள் வெப்பம், குளிர் என எல்லாவற்றில் இருந்தும் அதுதான் காவல் காக்கும், உடலுக்கு ஆபத்து என்றால் அது தோலைத்தாண்டித்தான் வரமுடியும்.
அப்படி மிக மிக முக்கியமானதும் மகாபெரிய உறுப்புமானது மானிடரின் தோல், அதுதான் காவல் அரண். அதுதான் முன் அடுக்கில் நின்று எல்லாக் கவலையும் செய்யும்.
இந்த வடிவ அமைப்பு பிரபஞ்சத்தின் எல்லாப் படைப்பிலும் உண்டு, ஒவ்வொரு படைப்புக்கும் பல அடுக்கு காவல்கள் உணடு, அது பிரபஞ்சத்தில் எல்லாப் படைக்கும் உண்டு.
கோள்களுக்கு உண்டு, மரம் செடி கொடிகளுக்கு உண்டு, இன்னும் ஆமை, நத்தை வரை எல்லாவற்றுக்குமே ஒரு கவசம் உண்டு.
இந்த வரத்தை தருபவள் அன்னை.
அன்னைக்கு சாம்பல் நிற மேடை கட்டி வழிபடல் வேண்டும், சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண்பொங்கல் விசேஷம்.
அன்னைக்கான ஸ்லோகம் இதோ.
“ப்ரிடிஞ்சபர வரூதா சந்திரகோபஸ்த கரியுதா,
பிரசாதம் தந்துனே மகாயும் சந்திரகண்டெதி விஸ்ருதா”
அதாவது, “சிம்மத்தின் மீது ஏறி வருபவளும், சந்திரகாண்டா என்னும் பெயர் கொண்டவளும், கடும் கோபமும் ஆக்ரோஷமும் கொண்டவளுமாகிய தேவி சந்திரகாண்டா என் மீது கருணை பொழிய வேண்டும்”
இந்த ஸ்லோகத்தை சொல்லி அன்னையினை வணங்குதல் அவசியம்.
அன்னை சந்திரகாந்தா எல்லோருக்கும் நல்ல மனோபலமும் வசீகரமும் அருள்வாள்.
குடும்பப் பெண்கள் இவளை ஏன் வழிபட வேண்டும் என்றால், குடும்பத்தின் பெண்களுக்கு தைரியமும் காவல் காக்கும் வைராக்கியமும் வேண்டும், எதிர்ப்புகளை ஆபத்துக்களை கண்டால் களைந்து போடும் பெரும் சக்தி வேண்டும்.
பெண்ணுக்கு தைரியம் முக்கியம், ஆபத்தைக் கண்டால் துச்சமென போராடி விரட்டி அழித்தல் முக்கியம். ஒரு தாய்கோழி எப்படி குஞ்சுகளைப் போராடிக் காக்குமோ, ஒரு தாய்புலி எப்படி குட்டிகளைக் காக்குமோ, கழுகு தன் குஞ்சுகளைத் தொட்டால் எப்படி விடாமல் அடித்துக் காக்குமோ அப்படி ஒரு வரமும் அருளும் போராடும் குணமும் அவசியம்.
அந்த வரத்தை தருபவள், பெரும் தைரியத்தோடு காவல் இருக்கும் தைரியத்தைப் போராடி காக்கும் குணத்தைத் தருபவள் இந்த அன்னை சந்திரகாந்தா..
குலப்பெண்கள் சந்திரன் குளிர்ந்த ஒளி கொண்டிருப்பதை போல் இனிய முகமும் குளிர்ந்த வார்த்தைகளும் கொண்டிருக்க வேண்டும், குடும்பத்தின் அழகாய்த் திகழவேண்டும், காண்போர் மதிக்கும் அளவு நல்ல தோற்ற பொலிவுடன் இருத்தல் வேண்டும்.
அதே நேரம் குடும்பத்துக்கு ஆபத்து வராமல் கவசமாய் நிற்றல் வேண்டும், ஏதும் குலத்துக்குச் சவால் என்றால் பெரும் தைரியத்தோடு சீறிக் காக்கவேண்டும்.
பெண்ணுக்கு சந்திரன் போல் இனிய சாந்தமான குணம் அவசியம், தேவைப்பட்டால் அவள் நெருப்பாக எரியும் குணமும் வேண்டும்.
இத்தகைய மனோபலம் தருபவள் அன்னை என்பதால் குலப்பெண்கள் அவளை மனமார வழிபடுதல் அவசியம், குலம் காக்கும் வரம் அவளே தருவாள்.
நவ துர்கா 04 : கூஷ்மாண்டா
நவ துர்கா எனும் ஒன்பது சக்தி நிலைகளில் கூஷ்மாண்டா என்பது நான்காம் படிநிலை. “கூ” என்றால் சிறிய எனப் பொருள், “உஷ்மா” என்றால் வெப்பம், “அண்டா” என்றால் பெரிய அகண்ட வட்டமான எனப் (அண்டா பாத்திரம் என்பது) பொருள்.
இநத அண்ட சராசரத்தை படைத்தவள் அன்னை என்பது பொருள். அவளே இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் வெப்பமாக ஒளியாக இருக்கின்றாள் என்பது அந்தப் பெயரின் பொருள்.
அதாவது வாலை, குமரி, மணமான பெண் என்பதை தாண்டி இப்போது கர்ப்பம்தாங்கும் பெண் எனும் நிலையினைச் சொல்லி தேவி தத்துவத்தைவிளக்கும் நான்காம் நிலை கூஷ்மண்டா தேவி.
“கூஷ்மா” என்றால் புன்னகை என்றொரு பொருளும் உண்டு. அவ்வகையில் தன் புன்னகையால் இந்த உலகை சிருஷ்டித்தவள் என்பதும் அவளுக்குப் பொருந்தும்.
அதாவது, அவளே ஆதிபராசக்தி, அவளில் இருந்தே எல்லாமும் தோன்றுகின்றன, அவளே மூலம். அன்னையில் இருந்தே எல்லாமும் வருகின்றது, இந்த அண்டவெளி எல்லாமே அவளில் இருந்து அவளால் உருவாக்கப்பட்டது.
அகிலாண்டேஸ்வரி என்றும் ஜெகன்மாதா என்றும் அவள் ஏன் அழைக்கப்படுகின்றாள் என்றால் இந்தப் பெரும் தனி தன்மைக்காகததான்.
அவள் தனியே இந்த மாபெரும் பிரபஞ்சத்தைப் படைக்கும் அளவு சக்தி மிக்கவள், அந்த மகா சக்தியினைத்தான் நான்காம் நாள் தியானிக்கின்றோம்.
அன்னை எல்லா உலகங்களுக்கு மட்டுமல்ல எல்லா அண்டங்களுக்கும் தாய், எல்லா அண்டங்களும் அவற்றின் உயிர்களும் அன்னையிடம் இருந்தே தோன்றியதால் அவள் லோகநாயகி மட்டுமல்ல அகிலாண்டேஸ்வரி .
லலிதா சஹஸ்ரநாமம் அன்னையினை “உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவலீ” என்கின்றது.
அதாவது கண் சிமிட்டுவதால் பேரண்டங்களைத் தோன்றி மறையச் செய்பவள் என அவள் ஆற்றலைச் சொல்கின்றது.
உந்மேஷம் என்றால் கண்களைத் திறத்தல், நிமிஷம் என்றால் கண்களை மூடுதல்.
அதாவது, அன்னை தனது கண்களைத் திறந்து மூடுவதன் மூலம் உலகங்களைப் படைத்தும் அழித்தும் வருகிறாள் என்பது பொருள்.
படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலையும் செய்பவள் அன்னை.
மொத்தம் 1008 அண்டங்கள் உண்டு என்பது புராண செய்தி, அந்த ஆயிரத்து எட்டு அண்டங்களும் அவள் கண் மூடித் திறப்பதால் தோன்றி மறைகின்றன. அதனால் அவள் அகிலத்தின் தாய், அவளில் இருந்தே எல்லாம் தோன்றி மறைவதால் அவளே அகில அண்ட ஈஸ்வரி, அகிலாண்டேஸ்வரி என வணங்கபடுகின்றாள்.
அன்னை “சஹஸ்ர சீர்ஷ வதனா”, “”சஹஸ்ராக்ஷீ” “சஹஸ்ர பாத்” என்கின்றது, அதாவது அன்னை ஆயிரக்கணக்கான (எண்ணற்ற) தலைகளும்/ முகங்களும், ஆயிரக்கணக்கான கண்களும், பாதங்களும் கொண்டு எங்கும் வியாபித்திருக்கின்றாள்.
அவள் “லீலா-க்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலா” அதாவது பிரம்மாண்ட மண்டலங்களை விளையாட்டாகச் சிருஷ்டிப்பவள்.
அன்னை பஞ்சபூதம் மட்டுமல்ல, சூரியன் சந்திரன் உயிர் என எட்டு வகை சக்தியாய் நிற்பவள், அதனால் அவள் “அஷ்டமூர்த்தி” என்றானாள்.
இந்த அன்னை வானத்தில் சுடராக நிற்கின்றாள். அதனால் அவளுக்கு “பானுமண்டல மத்தியஸ்தா” “சந்திர மண்டல மத்தியஸ்தா” என அவளுக்கு நாமம் லலிதாசஹஸ்ர நாமத்தில் உண்டு.
புவனத்தைப் படைத்து ஆள்வதால் அவள் புவனேஸ்வரி.
அதனை அபிராமி பட்டர் பாடுவார்.
“பூத்தவளே புவனம் பதினான் கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே”
“பூத்தவளே புவனம் பதினான் கையும்” அதாவது பூத்தல் என்றால் மலர்தல். ஒரு மலர் ஆகாயம் நோக்கி விரிவதைப் போல இந்த உலகினை அபிராமி படைத்தாள்.
புவி வேறு, புவனம் வேறா என்றால் வேறுதான். ஏழு புவிகளும் 12 உலகங்களும் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
புவி ஏழு என்று கூறக்கூடிய ஸப்ததீபங்கள் ஜம்பு, பிலக்ஷ, குந, கிரளெஞ்ச, சாக, சான்மல மற்றும் புஷ்கர எனும் ஏழு தீவுகளாகும்.
(இன்றைய பூமியின் கண்டங்கள் 7 என்பதும் குறிப்பிடத்தக்கது.)
புவனம் பதினான்கு யாதெனில் கீழ் ஏழு லோகங்களாகிய அதலம், விதலம், சுதலம், தாராதலம், மஹாதலம், ரசாதலம் மற்றும் பாதாளம் ஆகியவையும், மேல் ஏழு லோகங்களாகிய பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், ஜனலோகம், தபோலோகம், மஹர்லோகம் மற்றும் சத்திய லோகம் ஆகியன ஆகும்.
திருமூலரும் திருமந்திரத்தில் “தானே தலைவியென நின்ற தற்பரை” என்ற பாடலில் அன்னையே பதினான்கு உலகங்களையும் படைத்தவள் என்பார்.
புவியினையும் புவனத்தையும் படைப்பதால் அவள் “பிரம்மஹ்ரூபா” , “ஸ்ருஷ்டி கர்த்ரி” என்கின்றது லலிதா சகஸ்ரநாமம்.
புவியும் புவனமும் மட்டுமன்றி அதன் உயிர்களையும் அவளே ஜனிக்க வைப்பதால் “ஜனனி” என்றும் அவள் போற்றப்படுகின்றாள்.
லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும், அவள் “மூலப்ரக்ருதி” பிரபஞ்சத்தின் மூலப்பொருளானவள்; தோற்ற-நிலையின் சாரம்.
அவள் “வியாபினீ”, அனைத்திலும் வியாபித்திருப்பவள் எங்கும் நிறைந்தவள்.
அவள் “விவிதாகாரா”, பல்வேறு தோற்ற-நிலைகள், வடிவங்கள் தாங்கியிருப்பவள்.
அவள் “வேத ஜனனி” வேதங்களைப் படைத்தவள்.
அவள் “சிருஷ்டி கர்த்ரீ” அதாவது பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பவள்.
அவள் “ஆபிரம்ம கீட ஜனனீ” பிரம்மதேவன் முதல் கிருமிகள் வரை அனைத்தையும் சிருஷ்டித்த மாதா என்கின்றது.
இந்த பெயர்கள்தான், இப்படி லலிதா சகஸ்ரநாமமும், அகிலாண்டேஸ்வரி, ஜெகன்மாதா எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் அன்னைதான் கூஷ்மாண்டா என்றும் அழைக்கப்படுகின்றாள்.
யோக தத்துவத்தில் இந்த அன்னை “அனாகதம்” சக்கரத்தினைத் துலக்குவாள் .
அனாகதம் என்றால் உருவமற்ற அல்லது உருவகிக்க இயலாத ஒலி என்பதாகும், அதாவது காற்று தத்துவம் இந்த சக்கரத்தின் அம்சமாகும், இதன் அமைவிடம் நுரையீரல் பக்கம் அமைந்திருப்பது அதனைச் சரியாகச் சொல்கின்றது.
மூலாதாரம் நில தத்துவம், அடுத்த இரு சக்கரங்கள் நீர் தத்துவம் எனும் வகையில் நான்காம் சக்கரமான அனாகதம் காற்று தத்துவம்
இந்தச் சக்கரம் சரியாகத் துலங்கினால் பிரபஞ்சத்தின் அதிர்வுகளை அலைகளைச் சரியாக ஈர்க்கலாம், வேதங்கள் ஒலிவடிவானவை, உலகம் ஒரு சப்தத்தில் இயங்குகின்றது என்பதால் பல உலக இயக்கங்களைப் பிரபஞ்ச இரகசியங்களை இந்தச் சக்கரத்தால் உணரமுடியும்.
இந்தச் சக்கரம் இருதயம் மற்றும் நுரையீரலுக்கு அருகில் அமைந்திருக்கும் சக்தி மையம், சுழுமுனை நாடி இங்கிருந்துதான் உருவாகும்.
இந்தச் சக்கரம் சரியாக இல்லாவிட்டால் உடல் ரீதியாக இருதய கோளாறு, நுரையீரல் கோளாறு போன்றவை ஏற்படும். இதனால் மேல் முதுகு வலிகள் உள்ளிட்ட பல சிக்கல்களைப் பிணியினை ஏற்படுத்தும், இன்னும் இரத்த ஓட்டத்தில் சிக்கல் வரும், அப்படி வரும்போது சிந்தை குழப்பம், சோர்வு எனப் பலவகையான முடக்கங்களைக் கொடுக்கும்.
கண்களும் இந்த சக்கரமும் சூட்சுமத்தால் தொடர்புபட்டவை. இது சிக்கலானால் கண்பார்வையும் மங்கும்.
இப்படியான சக்கரம் சரியாகச் செயல்படாவிட்டால் பிறர்நலம், அன்பு , கருணை, இரக்கம் இன்னும் பல குணங்கள் இராது.
மாறாக வஞ்சகம், கோபம், ஆத்திரம்,பேராசை, சுயநலம், பழிவாங்கும், குணம், கவலை, ஆத்திரம் குழப்பம் ஆகியன எழுந்து ஆட்சி செய்யும்.
அதாவது கவலையும், பொறாமையும், வஞ்சகமும் அவர்களை அந்த நிலையில் ஆழ்த்தும்.
இந்தச் சக்கரம் துலங்கினால் அது எல்லையற்ற வகையில் அதன் சக்தியினை வெளிப்படுத்தும், அது பிரபஞ்சம் போல் எல்லையே இல்லாத அளவு நல்ல சக்தியினை வீசும்.
ஆம். இந்தச் சக்கரம் துலங்கினால் அன்பு, கருணை, தெய்வீகம் என எல்லாமும் எல்லை கடந்து பரவும், நிபந்தனை அற்ற அன்பும் கருணையும் யாரையும் வசப்படுத்தும் பெரும் கருணையும் சாத்வீகமும் தெய்வீகமும் அங்கே குடியேறும்.
எல்லையற்ற மகிழ்ச்சி, நித்திய சந்தோஷம் அவர்களிடத்தில் பெருகிக் கொண்டே இருக்கும், முடிவில்லாமல் வந்து கொண்டே இருக்கும்.
அப்படியான மகா சக்தியினை இந்தச் சக்கரம் வழங்கும்.
பெரும் கவலை பெரும் சோகம், தீரா வேதனை என்றால் இந்தச் சக்கரம் சரியாகத் துலங்கவில்லை எனப் பொருள். எப்போதும் மகிழ்ச்சி, எல்லையற்ற அன்பு, முழு தெய்வீக திருநிலை என்றால் இந்தச் சக்கரம் சரியாகத் துலங்கி ஒளிவிசுகின்றது எனப் பொருள்.
பொதுவாக மனமகிழ்ச்சி, மனக்கவலை, மனவேதனை, மன நிறைவு என மனம் பற்றி சொல்வதெல்லாம் இந்தச் சக்கரத்தின் தன்மையன்றி வேறல்ல.
இந்தச் சக்கரத்தின் தன்மைதான் பிரபஞ்சத்திலும் உண்டு, எல்லாமே அதன் அதன் கடமையினை உற்சாகமாகக் கொஞ்சமும் தவறாமல் செய்கின்றன.
இந்தப் பிரபஞ்சம் ஓசைபடாத ஒரு ஆனந்தத்தில் இயங்குகின்றது, அந்த ஆனந்தம் பூலோகப் பிறப்பில் ஒவ்வொரு உயிரிலும் தேடலாக உண்டு.
எல்லா மானுடர்க்கும் தேவை ஒரு ஆனந்தமே, ஒரு மகிழ்ச்சியான நிறைவான ஆனந்தமே.
அதனைப் பெற்றோர் ஞானியர், அவர்கள் நித்திய ஆனந்தத்தில் இருப்பதை அவதானிக்கலாம். அது அனாகத சக்கரம் துலங்கியதால் ஏற்பட்ட ஆனந்தம்.
அந்த ஆனந்ததை தருபவள் அந்த “ஆனந்தி”
ஸ்ரீ சக்ரத்தில் இவள் நான்காம் ஆவரணத்தில் இருப்பவள், அது பதினான்கு (14) சிறு முக்கோணங்களால் சூழப்பட்ட தளம், இந்தத் தளத்தில் உள்ள சக்கரேஸ்வரியின் பெயர் திரிபுரவாஸினி.
பதினான்கு நாடி தேவதைகளான வாசனா, ஹஸ்தி, விஸ்வோதாரி, பயஸ்வினி, பசோதி, காந்தாரி, ப்யூஷா, சங்கினி, சரஸ்வதி (மூன்று பிரதான தேவிகளின் ஒருவரான தேவி அல்ல) , இடை, பிங்கலை மற்றும் ஸுஷும்னை என்பவர்கள் இந்த ஆவரணத்தில் உண்டு.
இவர்களைத் தவிர ரஞ்சனி, வசங்கரி, சம்மோஹினி, வித்ராவினி, தர்ஷினி, வாஃஹ்லாதினி, ஸ்தம்பினி, ஜம்பிரீணி, மந்ரமயி, சம்பத்திபூரணி , ஷயங்கரி, மாதினி , சாதினி மற்றும் ஷம்ஷோபினி எனும் வேறு பதினான்கு கோண தேவதைகளும் உண்டு.
இந்த ஆவரணத்தை ‘ச்ர்வ சௌபாக்ய தாயக சக்ரம்’ என்பார்கள். இந்த ஆவரண யோகினியின் பெயர் சம்ப்ரதாய யோகினீ என்பதாகும். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.
ஆம். ஸ்ரீ சக்ரத்திலும் இவள் எல்லாப் படைப்பின் தாயாக நிற்கின்றாள், எல்லாச் சௌபாக்கியமும் அருள்பவளாக அருள் புரிகின்றாள்.
இவள் எட்டுக்கரம் கொண்டு இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து இயக்கும் அஷ்டபுஜ சக்தி என்றும் அழைக்கப்படுவாள்.
இவரின் வாகனம் புலி ஆகும். இந்தப் புலியின் தாத்பரியம் அவள் தர்மத்தின் படி மட்டும் வருவாள் என்பது.
இவரின் எட்டுக்கரங்களில் முறையே பாசம், அங்குசம், வில், சூலம் இருக்கும். இவரின் எட்டாவது கரத்தில் கலசம் உண்டு. இக்கலசம் அஷ்ட சித்தியையும், நவ நிதியையும் பக்தர்களுக்குத் தர வல்லது.
(கூஷ்மாண்டம் எனும் அந்தப் பெரிய அண்ட உருளையின் சிறிய வடிவம் அந்தக் கைகளில் கலசமாகக் கொடுக்கப்பட்டிருக்கும்)
இந்தக் கூஷ்மாண்டா தமிழகத்தில் அகிலாண்டேஸ்வரி, ஜனனி என அறியப்படுபவள். இவள் எல்லா உயிர்களின் தாயாக நிற்கின்றாள்.
இன்று இந்த அன்னையினை நினைத்து வழிபடுதல் அவசியம், இந்த அன்னைக்கான தியான மந்திரம் மந்திரம் இதோ.
“வந்தே வாஞ்சித் காமர்தேசந்த்ரார்ககிருதசேகரராம்ண்
சிங்கரூடா அஷ்டபூஜா குஷ்மாண்டயசஸ்வநீம்॥
சூரசம்பூர்ணகலசம் ருதிராப்லுதமேவ சண்
ததானா ஹஸ்தபத்மாப்யாம் கூஷ்மாண்டா சுபதாஸ்து நான் வந்தே வாஞ்சித் காமர்தே चन्द्रागकृत சேகரம்
சிங்கரூடா அஷ்டபூஜா கூஷ்மாண்டா யசஸ்வநீம்॥ த்ரி துர்கதிநாசினி त्वंहि தாரித்ராதி வினாசினிம்ண்
ஜெயந்தா தனதாம் கூஷ்மாண்டே ப்ரணமாம்யஹம்॥ த்ரி ஜகன்மாதா ஜகத்கத்ரி ஜகதாதார் ரூபாணிம்ண்
சராசரேஸ்வரி கூஷ்மாண்டே ப்ரணமாம்யஹம்॥”
அவளுக்கான துதி ஒன்று உண்டு அதை கொண்டும் பிரார்த்திக்கலாம்.
கூஷ்மாண்டா தத்துவம் இன்றைய விஞ்ஞானத்தோடு மிக அழகாக பொருந்தும், அதாவது இந்த பிரபஞ்சம் பெரு வெடிப்பில் தொடங்கியிருக்கலாம் என்பதும், எல்லாமே ஒரே சக்தியில் இருந்து உருவானது என்பதும், அதுவும் ஒரு வெப்ப சக்தியால் இயங்குகின்றது, ஒருவித சக்தி லயத்தால் இயங்குகின்றது என்பதையும் விஞ்ஞானம் சொல்கின்றது.
மானுட உடலிலும் இது உண்டு, வெப்பம் இருக்கும் வரைதான் உடல், அப்படி ஒளிதான் வெப்பம்தான் இந்த உலகை பிரபஞ்சத்தை இயக்குகின்றது என்பதைச் சொல்கின்றது.
அன்னை நவக்கிரகங்களில் ஒளியாய் இருக்கின்றாள் என்கின்றது புராணம், அவ்வகையில் அன்னை சூரியனின் மூல ஒளி என்பதும் சரியாகின்றது.
இந்த அன்னை தாய்மையின் வடிவம், இந்தப் பிரபஞ்சத்தின் அதன் எல்லா உயிர்களின் தாயாக இருப்பவள் அன்னை என்பதை இந்த கூஷ்மாண்டா வடிவம் சொல்கின்றது.
அப்படியே அவள் ஒளிவடிவமானவள், ஒளியால் பிரபஞ்சத்தைக் காப்பவள். அந்த ஒளியாக மானுடர்க்கு ஆத்ம தெளிவு ஆத்ம மகிழ்ச்சி தருபவள் என்பதையும் சொல்கின்றது.
குலப்பெண்கள் இவளிடம் வேண்டி பெறவேண்டிய வரங்கள் உண்டு. நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவியின் அருள் ஒவ்வொரு குலப்பெண்களுக்கும் கிடைத்தல் வேண்டும்.
ஆம். ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை உணர்வு அவசியம், பெண்மையின் தனிப்பெரும் ஒரே அடையாளம் தாய்மை.
தாய்மை என்றால் அன்பு, நிபந்தனையில்லாத கட்டற்ற அன்பு, அதுவும் ஆனந்தம் கொடுக்கும் அன்பு.
ஒரு குழந்தை தன் தாயிடம் மட்டும்தான் முழு ஆனந்தம் பெறமுடியும், அப்படி எல்லாருக்கும் ஆனந்தமான அன்பைக் கொடுக்க வேண்டியது குலப் பெண்களின் கடமை.
நல்ல குலப்பெண் சக மனிதர்களைத் தாய்போல் நேசிக்கவேண்டும். தாய்மை உணர்வில் அவள் எல்லா உயிர்க்கும் தாயாக நிற்றல் வேண்டும், அந்த வரத்தை அன்னை அருள்வாள்.
ஒரு இல்லத்தில் தாய்மை உணர்வு கொண்ட பெண் அவசியம், அவள் தன்னை மறந்து தன் குடும்பத்தாரை இன்னும் தன்னைச் சார்ந்தவரை அடுத்திருப்பவரையெல்லாம் தன்னைச் சுற்றிய உயிர்களை எல்லாம் தாயாக நின்று காத்தல் வேண்டும்.
அப்படி ஒரு பெண் இருக்கும் வீடு பெருவாழ்வு வாழும், தெய்வம் அங்கே இறங்கிவந்து அருளும்.
அந்த வரத்தை ஒவ்வொரு குலப்பெண்களும் கேட்டுப் பெற வேண்டிய நாள் இது.
அன்னையின் சிரிப்பில் ஒரு புன்னகையில் உலகம் தோன்றிற்று என்பது அவளின் சக்தியினை மகா ஆற்றலை சொல்லும் காட்சி, அதுதான் குலப்பெண்களின் புன்னகை சிரிப்பில் குடும்பம் உருவாகி வாழும் எனும் லௌகீக தத்துவத்தையும் சொல்கின்றது.
குலப்பெண்களுக்குப் புன்னகை மகா அவசியம், அதுதான் குடும்பத்தை உருவாக்கும். அந்தக் குடும்பமேதான் உலகுக்கு அன்பின் ஒளி, இரக்கத்தின் கருணையின் ஒளி கொடுக்கும் குடும்பமாக ஒளிவீசும்.
அந்த வரத்தை குலப்பெண்கள் அந்தக் கூஷ்மாண்டா தேவியிடம் பெற்றுக்கொள்ளும் நாள் இது.
அன்னைக்கு இன்று ஆரஞ்சு வண்ண மேடையிட்டு போளி வகைகள் செய்து வணங்குவது நல்லது, புளியோதரை சரியான பிரசாதம்.
அல்வா வகைகளும் பிரசித்தம்.
அன்னைக்குப் பிடித்தமான பிரசாதமாக வெண் பூசணியில் செய்யும் சில பதார்த்தங்கள் வட இந்தியாவில் உண்டு, வெண் பூசணி பழச்சாற்றில் நெய் சர்க்கரை கலந்து குஷ்மாண்டா போக் பேதா எனத் தயாரிப்பார்கள்.
உண்மையில் வெண்பூசணி இந்த நவராத்திரி காலத்தில் முக்கியமானது, வெண் பூசணி இந்துக்களின் தனிப்பெரும் காய்கறியில் ஒன்றாய் இருந்தது. அதன் மருத்துவ குணம் விசேஷம்.
அது மூளை நலத்தை மேம்படுத்தும், கண் பார்வையினைச் சரிசெய்யும், மலட்டுத்தன்மையினை நீக்கி உயிர் உருவாக வழி செய்யும், உடல் சூடு குறையும், சிறுநீர்கத்தைக் காக்கும், இரத்தவோட்டத்தைச் சரி செய்யும்.
முக்கியமாக மன அழுத்தத்தைப் போக்கும்.
இந்தக் கனி அன்னையின் வரம்பெற்றதாகக் கருதப்பட்டது, இது எல்லாவகை நலன்களையும் தருவதால் இது இந்நாளில் முக்கியமானது.
அப்படியாக நவராத்திரியில் மிக முக்கியமான இந்த வெண்பூசணி வீதியில் வெடிக்கப்படுவது ஒரு குறியீடாக அதாவது அன்னை இந்த பெரும் பிரபஞ்சத்தை தோற்றுவித்தாள், அண்டமெல்லாம் அவளிடமிருந்தே தோன்றின என்பதைச் சொல்லும்படி, விஞ்ஞானம் சொல்லும் பெரு வெடிப்புத் தத்துவத்தை சொல்வதாக மாறிவிட்டது.
நவராத்திரி காலங்களிலும் இன்னும் விசேஷங்களிலும் வெண் பூசணி உடைக்கப்படும் தத்துவம் இங்கிருந்துதான் வந்தது.
வீட்டு வாசலில் வெண்பூசணி கட்டுவது அன்னை இந்த வீட்டுக்குக் காவல் என்பதன்றி வேறல்ல.
வெண்பூசணி அன்னையின் தத்துவத்தை சொல்வது, அதனிலே ஆரோக்கியத்தையும் இந்துமதம் காத்தது.
அதை உடைத்து இந்தப் பிரபஞ்சம் உருவான நுணுக்கத்தை, இன்றைய பிங்பாங்க் தியரியினை அது சொன்னது.
இந்தப் பிரபஞ்சத்தின் தாய் கூஷ்மாண்டா என்பதையே இந்தத் தத்துவங்கள் சொல்லிவைத்தன, சொல்கின்றன.
இந்த நாள் அந்த அகிலாண்டேஸ்வரி, புவனேஸ்வரி என வணங்கபடுபவளின் நாள், எல்லாக் குலப்பெண்களுக்கும் அவள் தாய்மை, தாய் எனும் பெரும் அன்பும் கருணையுமிக்க மனதை வழங்கி வீடும் நாடும் செழிக்க வரம் அருளட்டும்.
ஞானியரின் அன்பும் கருணையுமாக இருக்கும் அந்த அன்னை எல்லோருக்கும் தாய்மையின் மகத்துவத்தை தரட்டும், தாய் நாடு அவளால் சிறக்கட்டும்.
அந்தக் கூஷ்மாண்டா தேவியினை இந்த ஸ்லோகத்தால் போற்றி வணங்குவோம்.
“சூரா சம்பூர்ண கலசம் ருத்ரபலு தவமேவச்சா ததான ஹஸ்த பத்மப்யாம் கூஷ்மாண்டா சுபதாஸ்து மே”
“தன் தாமரை போன்ற கரங்களில் இரு கலசம் ஏந்தியவளும், தன் சிரிப்பால் உலகை சிருஷ்டித்து , அதைப் பரிபாலனம் செய்பவராகிய தேவி கூஷ்மாண்டா என் மீது கருணைப் பொழிவாளாக”
நவதுர்கா 05 : ஸ்கந்த மாதா
நவராத்திரியின் ஐந்தாம் நாள் ஸ்கந்த மாதாவிற்கானது. ‘ஸ்கந்த’ என்றால் துடிப்புடன் வெளிப்படுவது எனப் பொருள், இந்த அன்னை தாய்மையின் பலனை வெளிபடுத்தும் நிலையினைச் சொல்பவள்.
வாலையாகி குமரியாகி மணக்கோலம் அடைந்து கருசுமந்து அடுத்து அதனை புறம்தருவித்து வளர்க்கும் ஐந்தாம் படிநிலை இது.
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு எனும்போது பிண்டத்திலும் அதன் வாழ்விலும் உள்ளதெல்லாம் அண்டத்திலும் உண்டு, அவ்வகையில் பிரபஞ்சத்தை சிவசக்தி தத்துவம் அல்லது நிலையான சக்தி இயக்கு சக்தி படைத்து காத்து வரும் தத்துவம் இது.
இங்கே ஸ்கந்தன் அன்னையில் இருந்து உதித்த நிலை, அதாவது முருகப்பெருமானை அன்னை பெற்றெடுத்து உலகை காத்த நிலையினைச் சொல்லும் நிலை.
இது கொஞ்சம் ஆழமாக நோக்க வேண்டிய படிநிலை.
ஸ்கந்தன் எனும் முருகனின் பிறப்பினைக் கந்தபுராணம் உள்ளிட்ட புராணங்கள் தெளிவாகச் சொல்கின்றன, காளிதாசன் அதனைக் “குமார சம்பவம்” எனக் காவியமாக்கினான்.
அதன்படி முருகப்பெருமானுக்குரிய ஆறு முகங்களில் ஒருமுகம் அன்னையின் முகம், முருகப்பெருமான் முழுக்க சிவனில் இருந்து உருவானவர் அல்ல, அவரில் அன்னையின் பங்கும் உண்டு, அவரைக் கார்த்திகை பெண்களாக வந்து வளர்த்தவள் அன்னையே.
அந்த ஆறுகுழந்தைகளைத் தன் சக்தியால் ஒரே குழந்தையாக்கி ஞானமும் அறிவும் ஊட்டி வளர்த்ததும் அன்னையே.
அன்னை கொடுத்த அந்த ஞானத்தில்தான் பிரம்மனுக்கே படைப்பின் தத்துவமும், சிவனுக்கே போதனையும் முருகப்பெருமான் செய்தார்.
அன்னை கொடுத்த ஞானவேல் கொண்டே, அன்னை கொடுத்த அந்த சக்திவேல் கொண்டே சூரபத்மன் எனும் பெரும் அசுரக் கூட்டத்தை முருகப் பெருமானால் சங்காரம் செய்யமுடிந்தது.
ஆம். அன்னை தன் சக்தியில் ஸ்கந்தனை உருவாக்கி அவனைத் தன் ஞானத்திலும் அறிவிலும் வளர்த்து தன் சக்தியினை அவனுக்கு அளித்து இந்த உலகில் தர்மம் நிலைபெற வழிசெய்தார்.
அபிராமி பட்டரின் 65ஆம் பாடல் இதனைச் சொல்லும்.
“ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம்
முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும்உண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே.”
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள்தரும்
“ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோவல்லி நீசெய்த வல்லபமே”
இந்தப் பாடலைப் புரிந்துகொள்ளும் முன் ஒரு திருவிளையாடலைக் காண வேண்டும், அப்பொழுது இப்பாடல் எளிதாகப் புரியும்.
கந்தபுராணத்தின் தொடக்க நிகழ்வு அது.
அந்தத் தட்சன் யாகம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் இமயவன் மகளாக பிறக்கின்றாள் அன்னை சக்தி, அவளுக்குப் பார்வதி எனப் பெயர்.
இங்கே இன்னொரு காட்சி நடந்து கொண்டிருந்தது, சிவன் மகனால் அன்றி தனக்கு மரணமில்லை என வரம் வாங்கிய சூரபத்மன் பெரும் இன்னலை விளைவித்துக் கொண்டிருந்தான், சிவனோ ஆழ்ந்த தவத்தில் இருந்தார், தவத்தில் இருக்கும் சிவன் எங்கிருந்து இல்லறம் நடத்தி குழந்தை பெறுவது?
இதனால் தேவர்களும் விஷ்ணுவும் மன்மதனை சிவனின் தவம் கலைக்க ஏவினார்கள், மன்மதனும் தன் மனைவி ரதியோடு சென்று தன் அஸ்திரங்களை ஏவினான்.
தன் தவம் லேசாக அசைவதை உணர்ந்த சிவன் கோபத்தில் கண்களைத் திறந்தபொழுது மன்மதன் சாம்பலானான், அவன் இல்லா உலகில் உயிர்கள் பெருகாது.
இதனால் உலகில் புதிய உயிர்கள் பிறக்காமல் பெரும் குழப்பம் ஏற்பட தேவர்கள் பார்வதியிடம் சரணடைந்தனர். பின், சிவன் பார்வதி திருமணத்தில் ரதியின் வேண்டுதலுக்கு இணங்க மன்மதனை உயிர்பித்த சிவன் அவன் ரதி கண்ணைத் தவிர யார் கண்ணுக்கும் தெரியமாட்டான் என நிபந்தனை விதித்தார்.
அதன் பின் முருகப்பெருமான் உருவாகி சூரபத்மன் வதம் நடந்தது எல்லோரும் அறிந்தது.
இந்தக் “காம தகனம்” அதாவது மன்மதனை சிவன் எரித்த விஷயத்தில் இருந்து பாடலைத் தொடங்குகின்றார் பட்டர்.
பாடலின் சுருக்கமான பொருள் இதுதான், “அண்டமும் வானமும் பூமியும் காணும் வண்ணம் கரும்பு வில் ஏந்திய மன்மதனை எரித்த அந்த சிவபெருமானுக்கும் கூட அறிவில் சிறந்த, 12 கைகளும், 6 முகங்களும் கொண்ட அழகிய முருகனை மகனாகப் பெற சக்தியினை அம்பாள் கொடுத்தாள் அப்படியான வல்லமை கொண்டவள் அன்னை”
அதாவது, சிவன் மன்மதனை எரிக்கும் பொழுது அவர் தனிமையான நிலையில் இருந்தார், அதாவது அவர் அன்னையினை விட்டு பிரிந்திருந்தார், அன்னை பார்வதியாக அவதரித்திருந்தார்.
சிவன் மன்மதனை உயிர்ப்பித்தது, பார்வதியுடனான மணக்கோலத்தில் என்றாகும் பொழுது சிவன் பார்வதியினை மனைவியாக ஏற்றுக்கொண்ட நிகழ்வாகின்றது.
அவளை ” காமதாயினி, காமரூபினி” என லலிதா சகஸ்ரநாமம் சொல்கின்றது.
அன்னை எல்லா உயிர்களின் தொடக்கமுமானவள், அதனால் ஆதிபரம்பொருளான சிவனைத் தன்னகத்தே இழுத்துக் கொண்டு எல்லா உயிர்களின் தொடக்கத்தையும் ஏற்படுத்தினாள்.
இதைச் சொல்லும் பட்டர் முருகப்பெருமான் அவதாரத்தை அன்னை ஸ்கந்தமாதா என்றானதை சொல்கின்றார்.
முருகப்பெருமான் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்த நெருப்பு பொறிகளால் உருவானவர் என்பது புராணச் செய்தி. ஆனால், முழுக்கச் சிவன் எனச் சொல்லமுடியாதபடி அன்னை அவரில் பாதியாகின்றாள்.
அன்னையினை மணந்தபின்புதான் சிவனில் இருந்து முருகன் பிறந்தான். அன்னை சிவனில் பாதியாக உண்டு என்பதால் அது இருவரும் கலந்து பெற்ற குழந்தையாகின்றது.
அந்த முருகன் சிவனின் ஐந்துமுகமும் அன்னையின் ஒருமுகமும் கொண்டு ஆறுமுகமாகவும், சிவனின் பத்து கரங்கள் மற்றும் அன்னையின் இரு கரங்கள் சாயல் கொண்டு 12 கரங்களோடும் பிறந்தான் என்கின்றார் பட்டர்.
சிவனுக்கு ஐந்து முகமும் 10 கரமும் உண்டு என்கின்றது புராணம்.
முருகன் இந்தப் 10 கரம் கூடுதலாக அன்னையின் இரு கரம் கொண்டும், ஐந்து முகம் கூடுதலாக அன்னையின் முகமும் கொண்டு பிறந்தவன் எனும் பட்டர் இன்னும் சொல்கின்றாரர், புராணம் சொல்வதும் அதுதான்.
அதுவும் முருகன் எப்படியான குழந்தை?
அது ஞானக் குழந்தை, பிரம்மனுக்கே வேதமும் தகப்பனுக்கே ஞானமும் சொன்ன தெய்வம், யாராலும் அழிக்க முடியாத சூரனை வீழ்த்தி அவனுக்கும் அருள்பாலித்து அகந்தை அழித்து அந்தச் சூரனுக்கும் ஞானம் கொடுத்து வேலும் மயிலுமாக தன்னோடுச் சேர்த்துக் கொண்ட அதி உன்னத குழந்தை.
அப்படியான குழந்தையினை ஒரு சன்னியாச கோல யோகி பெற்றெடுக்க முடியுமா? ஆனால் அன்னையின் அருளால் அவளின் கடாட்சத்தால் மட்டுமே சிவனுக்கு அந்த ஞானபண்டிதனின் தகப்பன் எனும் தகுதி கிடைத்தது.
உலகறிய அண்டமும் லோகமும் அறிய மன்மதனை எரித்தவர் சிவன், அந்த சன்னியாச கோல சிவன் எப்படி தந்தையாகி ஞானமான அழகான குழந்தையினை பெற்றெடுக்க முடியும்?
அந்த அதிசயத்தை செய்தவள் அன்னை, அவள் அதிசயமான சக்தி கொண்ட நாயகி.
முருகன் எனும் குஹனுக்கு அன்னையானதால் அவள் குஹாம்பா குஹஜன்மபூ என்றெல்லாம் அழைக்கப்படுகின்றாள்.
சிவன் எனும் யோகிக்கு மகா சக்தியுள்ள மகனை உருவாக காரணமானவளும், உலகம் மறுபடி இயங்கவும் அசுரக்கூட்டம் ஒழியவும் தொடக்கமானவள் அன்னை.
லலிதா சஹஸ்ரநாமம் ஒரு ஸ்லோகத்தைச் சொல்லும்.
“ஹர நேத்ராக்னி சந்தக்த காம சஞ்சீவ நௌஷதி
ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா
கண்டாத கடிபர்யந்த மத்ய கூட ஸ்வரூபிணி
ஷக்தி கூடைகதாபன்ன கட்யதோ பாக தாரிணீ”
சிவன் நெற்றிக்கண் நெருப்பினால் எரித்த மன்மதனை உயிர்த்தெழுப்பியவள் என இதன் பொருள் அமையும், மேற்கொண்டு அன்னையின் புகழையெல்லாம் கூறும் ஸ்லோகம் இது.
“காம சஞ்சீவ நௌஷதி” என அன்னை புகழப்படுபவள், அந்த அன்னையின் பெருமை அப்படியானது, உலக உயிர்களின் தொடக்கமாகவும் அது தடைபடாமல் நடக்க அன்னை எல்லா வழியும் செய்து உலக உயிர்களின் தாயாக லோக மாதாவாக கனிந்த அன்போடு உலகை இயக்கி கொண்டிருக்கின்றாள் என்பதைச் ஸ்லோகம் சொல்லும்.
இப்படி அன்னை நல்ல மனைவியாக வாய்த்து நல்ல குழந்தையினைப் பெற்று வளர்த்து லோகம் காத்தாள் என லௌகீகமாகச் சொன்னாலும் இந்த நாளின் தாத்பரியம் அன்னை மானிட பெண்களுக்கு வழிகாட்டினாள் என்பது.
தன்னைப் போல் ஒரு சக்தியினை உருவாக்கி, தான் மட்டும் என்று இல்லாமல் தன்னில் இருந்து உதித்த சக்தியினைக் கொண்டு உலகத்தில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும், தர்மம் வாழ உலகம் வாழ தன் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என ஸ்கந்த மாதாவாகப் போதிக்கின்றாள்.
தன்னில் இருந்து எழும் சக்தி நல்லவையாக இருத்தல் அவசியம். நல்ல பலன்களைத் தருதல் அவசியம். அதற்கு அன்னை அருள் வேண்டும் என்பதே இந்த நாளின் போதனை, ஸ்கந்தமாதா சொல்லும் தத்துவம்.
அன்னை யோக சக்கரத்தில் “விசுத்தி” எனும் சக்கரத்தின் இயங்கு சக்தியாகின்றாள்.
இது அனாதக தளத்தில் இருந்து மேலே 12 விரல்கடை உயரத்தில் இந்தச் சக்கரம் அமைந்துள்ளது, கழுத்தின் அடிபாகத்தில் அமைந்துள்ளது.
கழுத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் காற்று தத்துவத்தின் உச்ச சக்கரமாகும், இதன் தாத்பரியம் முக்கியமானது.
இதுதான் தலைக்கும் உடலுக்குமான இணைப்பினைக் கொடுக்கும். அதாவது, தலை என்பது கட்டுப்பாடு கொண்ட இடம், மூளை உள்ளிட்ட கட்டளைகள் உருவாகும் இடம், முழுக்கட்டுப்பாடு இருக்கும் இடம் அதுதான்
தலைக்கு ஒன்று என்றால் உடல் இயங்காமல் போவதும் அப்படித்தான், உடல் என்பது செயல்படும் எந்திரம், எல்லா இயக்கமும் இங்கிருந்துதான் நடக்கும்.
ஆக, இயக்கும் இடத்தையும் இயங்கும் சக்தியும் ஒன்றாகச் சேரும் இடம் கழுத்து, இதுதான் இயக்குச் சக்தியினை இயங்கு சக்தியாக மாற்ற எல்லா வேலைகளையும் செய்து இணைக்கின்றது.
இந்த இணைப்பை கொடுப்பதுதான் விசுத்தி.
இந்த விசுத்தி இருக்குமிடத்தில்தான் குரல்வளை, மூச்சுக் குழாய், தைராய்டு சுரப்பிகள் எனப் பல முக்கிய பாகங்கள் வரும்.
இந்தச் சக்கரம் சரியாகத் துலங்கினால் கழுத்துச் சார்பான உடலியல் நோய் வராது, குரல் சிக்கல் தைராய்டு பிரச்சினை, மூச்சுக்குழாய் சிக்கல், உணவுக் குழாய் என இன்னும் பல நுணுக்கமான சிக்கலெல்லாம் வராது. எல்லா இயக்கமும் சரியாக நடக்கும்.
இந்தச் சக்கரம் மங்கிவிட்டால் மேற்சொன்ன நோய்களெல்லாம் வரும், இன்னும் கழுத்து வலி மற்றும் இறுக்கம்
தொண்டை வலி மற்றும் இறுக்கம், தொண்டை சார்ந்த பிரச்சினைகள், சீரற்ற தைராய்டு செயல்பாடு
இரத்த சோகை, பல் சார்ந்த பிரச்சினைகள், காது சார்ந்த கோளாறுகள், வாய்ப் புண், உடல் சோர்வு, தலைவலி, முதுகுத்தண்டு கோளாறுகள்.
இதனால் இந்த இணைப்புச் சக்கரம், எல்லாப் பாகங்களையும் இணைக்கும். இந்தச் சக்கரம் அதிமுக்கியம்.
இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் மனநலம் சரியாக இருக்கும். அப்போது நேர்மையான, வெளிப்படையாகப் பேசும் தன்மை, பிறரின் பேச்சை கவனமுடன் கேட்கும் தன்மை, பிறருடன் இயல்பாகக் கலந்து பழகும் தன்மை நன்றாகப் பாடுதல், கலைபடைப்புக்களைக் கொடுத்தல் போன்ற கலைத் திறன்கள்,படைப்பாற்றல்
தன்னம்பிக்கை, அமைதியான மனநிலை ஆகியன வரும்.
கலைஞர்கள், பாடகர்கள் இன்னும் ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள், இசை அமைப்பாளர்கள் எனப் பெரும் பெரும் கலைஞர்களுக்கெல்லாம் இச்சக்கரம் சரியாகத் துலங்கியிருக்கும்.
உண்மையில் இந்துக்களின் ஏழு ஸ்வரங்களும் ஏழு சக்கரங்களைத் துலக்கும் உத்திகள்.
அவ்வகையில் ஐந்தாம் ஸ்வரம் தாண்டி யாரும் அதிகம் பாடுவதில்லை, ஐந்தாம் ஸ்வரத்துகான பலன் இச்சக்கரம் துலங்குவது, மேற்கொண்டு பாடிக்கொண்டே இருந்தால் அவர்களுக்கு ஏழு சக்கரமும் துலங்கும்.
நாயன்மார் பாடினார்கள், ஆழ்வார்கள் பாடினார்கள், சங்கீத மும்மூர்த்திகள் பாடினார்கள், எல்லோரும் பாடி இறைவனை அடைந்தார்கள் என்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஏழு ஸ்வரங்களைப் பாட பாட ஏழு சக்கரமும் சரியாகும் அந்நிலையில் இறைநிலை எளிதில் வாய்க்கும்.
இசை இறைவனையே வசப்படுத்தும் என்பது இந்தச் சூட்சுமமே.
இந்தச் சக்கரம் சரியில்லை என்றால் கூச்சம், படைப்புத் திறன் முடங்கியிருத்தல், பிறருடன் பேச, பழக அச்சப்படுதல் அல்லது அளவுக்கு அதிகமாகப் பேசுதல், கேலிக்கு ஆளாவோம் என்ற பயத்தில் மனதில் இருப்பதைப் பேசாதிருத்தல், உபயோகமற்ற பேச்சு பேசுதல், பிறர் பேசுவதைச் சரியாக கவனிக்காதிருத்தல்
பொது மேடைகளில் பேசத் தயங்குதல், சமூக தொடர்புகளைத் தவிர்த்தல், நினைப்பதை வெளிப்படுத்த இயலாமை,பொய் பேசுதல், பதட்டம், பிடிவாதம், பாதுகாப்பற்று இருப்பதாக உணர்தல், கவனக் குறைபாடு ஆகிய குறைகள் வரும். இது ஒரு மனிதனை முழுக்க முடக்கும்.
ஒரு மனிதன் எவ்வளவு பெரும் திறமையானவனாக அறிவாளியாக பெரும் ஞானம் கொண்டவனாக இருந்தாலும் சரியாக அதை வெளிபடுத்தாவிட்டால் பலனில்லை.
அந்த வெளிபடுத்தும் கலை, அது பேச்சு, பாடல், எழுத்து, ஓவியம் என எவ்வகையிலாவது ஒருவன் தன்னை வெளிப்படுத்தும் அந்த நல்ல தன்மையினை இந்தச் சக்கரம் தரும்.
விசுத்தி என்றால் சுத்தமான எனப் பொருள், யாரால் தன்னை அச்சமின்றி கொஞ்சமும் தயக்கமுமின்றி வெளிப்படுத்தமுடியும் என்றால் தன்னிடம் உண்மையும் சத்தியமும் இருப்பவன் அதனை வெளிப்படுத்துவான்.
யார் தன்னை வெளிப்படுத்தமுடியும் என்றால் மனம் முழுக்க நல்ல விஷயம் கொண்டவன், யாரும் குற்றம் சொல்லமுடியாதவன் தன்னை வெளிப்படுத்துவான்.
அந்த நல்லமுறையில் ஒருவன் தன்னை உலகுக்குக் காட்டிப் பல நல்ல விஷயங்களைச் சொல்ல இந்தச் சக்கரம் துலங்குதல் அவசியம்.
இந்தச் சக்கரம்தான் ஒருவனுக்கும் உலகுக்கும் தொடர்பைக் கொடுக்கும், உலகுக்கு அவனால் பல நல்ல விஷயங்களைக் கொடுக்கும்.
அது பேச்சு, எழுத்து, போதனை, பாடல் என ஏதோ ஒருவழியில் அவனை இயங்கவைக்கும்.
இந்தச் சக்கரத்தால்தான் நமக்கு வேதங்கள், உபநிடதங்கள், புராணம், கீதை, அழியா நூல்கள், பாடல்கள், இசைகோர்வைகள் என எல்லாமும் கிடைத்தன.
இந்தச் சக்கரமே ஒருவனுக்கு அடையாளமும் அங்கீகாரமும் கொடுக்கும், அழியா புகழ்பெற்றவர்கள் பெரும் அடையாளம் பெற்றவர்களெல்லாம் இச்சக்கரம் துலங்கியவர்களே.
யாரின் குரலுக்கு ஒரு மதிப்பு உண்டோ, யார் குரலுக்கு உலகம் செவிமடுக்குமோ, எந்தக் குரல் சமூகத்தை உலுக்குமோ, யார் குரலுக்குச் சமூகம் மகுடிக்குட்பட்ட பாம்பாக மயங்கி கிடக்குமோ அவர்களெல்லாம் இச்சக்கரம் தூண்டப்பெற்றவர்கள்.
அச்சக்கரமில்லாமல் தலையும் உடலும் இணையாது என்பது போல பிரபஞ்சத்தினை ஆளும் ஈர்க்கும் ஒரு சக்தி ஒருவனுக்கு கிடைக்கும். அது அவன் திறனை ஆற்றலை பிறர் வசீகரிக்கும் அளவில் வெளிப்படுத்தும்.
வியாபாரம் மட்டுமல்ல ஒவ்வொருவனின் வார்த்தையிலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விஷயத்திலும் அழகுணர்ச்சி வசீகர தன்மை உண்மை அழகு என எல்லாமே அவசியம்.
ஒரு ஈர்ப்பினை அது கொடுத்தல் வேண்டும்.
எல்லோரும் பேசுவார்கள், எழுதுவார்கள், பாடுவார்கள் ஆனால் எல்லோரும் உச்சம் தொடமுடியுமா பெரும் மக்களை ஈர்க்கமுடியுமா என்றால் முடியாது.
அதற்கு ஒரு பிரபஞ்ச சக்தி அவனில் இயங்கவேண்டும். அதுதான் அவனை இந்த உலகில் தனித்துக் காட்டும் சக்திவாய்ந்தவனாக காட்டும். பெரும் பெரும் ஆற்றலை அழியா இடத்தை அவனுக்கு கொடுக்கும்.
வியாசர் முதல் தேவாரம் பாடியவர்கள் வரை, சங்கீத மும்மூர்த்திகள் வரை, காஞ்சி மகாபெரியவர் வரை இப்படித்தான் பெரும் இடம் பெற்றார்கள்.
முருகப்பெருமான் மதுரை தமிழ்சங்கத்துக்கு தலைவராய் இருந்த இரகசியம் இதுதான், ஸ்கந்தன் போல ஒவ்வொருவருக்கும் அன்னை அருள் கிடைக்கும் என்பது.
முருகப்பெருமானை வணங்கினால் அன்னையின் அருளும் உண்டு என்பது, அங்கே கலைகள் செழிக்கும் என்பது தமிழ்சங்கத்தின் அடிநாத தத்துவம்.
அன்னை மீனாட்சி ஆலயத்தில் முருகப்பெருமான் தலைமையில் தமிழ்ச்சங்கம் நடந்ததும், ஒளவை முதல் ஏகப்பட்ட புலவர்களுக்கு முருகப்பெருமான் அருளாசிக் கொடுத்து வந்ததும் அவர்கள் அன்று முதல் கிருபானந்தவாரியார் வரை தனி சொல்வாக்கு கொண்டு நின்றதும் இந்தத் தத்துவமே.
அன்னை சொல்வாக்கை செல்வாக்கை கலைகளை அருள்வாள் என்பது, குமரகுருபரர் வாழ்வில் நடந்த எல்லாமும் ஸ்கந்தமாதா அருளே.
ஸ்ரீ சக்கரத்தில் ஐந்தாவது ஆவரணத்தின் பெயர் ‘சர்வார்த்த சாதக சக்கரம்’ என்பது. இதில் மேலும் கீழும் நோக்கிய நிலையில் பத்து முக்கோணங்கள் உள்ளன, இங்குள்ள பத்து சக்தி தேவதைகள் சர்வசித்திப்ரதா, சர்வசம்பத்ப்ரதா, சர்வப்ரியங்கரி, சர்வமங்கள காரிணி, சர்வகாமப்ரதா, சர்வதுக்க விமோசனி, சர்வம்ருத்யுப்ரசமனீ , சர்வவிக்ன நிவாரணி, சர்வாங்கசுந்தரி, சர்வ சௌபாக்யதாயினி என்பவர்கள்.
மையப் பகுதியில் இருந்து கீழ் நோக்கி உள்ள ஐந்து கோணங்கள் சரஸ்வதி, லஷ்மி, கெளரி, மகேஸ்வரி மற்றும் மனோன்மணி போன்ற தெய்வங்களையும், மேல் நோக்கி காணப்படும் நான்கு கோணங்கள் சிவ பெருமானின் நான்கு முகங்களான தத்புருஷம், சத்யோஜாதம், அகோரம், வாம தேவம் மற்றும் மறைந்திருக்கும் ஈசானம் எனும் சக்தியையும் சேர்த்து ஐந்து சக்திகளையும் நான்கு கோணங்களில் குறிப்பிடுவதாகச் சொல்லப்படுகின்றது.
“சர்வார்த்த சாதக சக்கரம்” என இதற்குப் பெயர்.
இந்தச் சக்கர தத்துவம் இந்த யந்திரபடி சிவனும் சக்தியும் சேர்ந்து ஆறுமுகம் கொண்ட சக்தி ஒன்றை உருவாக்கும் என்பது, அதுதான் ஸ்கந்த மாதா தத்துவம்.
ஆளும் தன்மை, கீர்த்தி, செல்வம், வைராக்கியம், மோக்ஷம், ஐஸ்வர்யம் எனும் ஆறு பகங்களுக்கு இவளே அதிபதி எனவே இவள் பகவதி என்றும் வணங்கப்படுகிறாள்.
சாருரூபா, மஹாலாவண்ய சேவதி, கோமளாகாரா, காந்திமதி, சோபனா, திவ்யவிக்ரஹா, கோமளாங்கீ போன்ற நாமங்கள் தேவியின் தோற்றப் பொலிவை எடுத்துக் கூறுகின்றன.
கோமளாகாரா எனில் பேரழகே வடிவெடுத்தவள் என்று பொருள்.
தச மகாவித்தியா இந்த ஸ்ரீ புவனேஸ்வரி மகாவித்யாவாகப் போற்றுவர்.
விச்வஸ்ய பீஜம் பரமாஸி மாயா என்று, இந்த தேவியை உலகின் விதையாகப் போற்றுகிறது விமகாத்மியம்.
“வாஞ்சிதார்த்த ப்ரதாயினீ க்ஷிப்ர ப்ரஸாதினீ’ என்றபடி, வேண்டி யவற்றை வேண்டியபடி அளிக்கவும், குறிப்பிட்ட காலத்தில் அருளவும் ஆற்றல் பெற்றவள் தேவி ஒருவளே. அந்த அன்னையை வழிபடுபவர்கள் சொற்செல்வம், கவித்துவம், ஸர்வ வசியம், இராஜ்ய லாபம், சூரியனைப் போன்ற காந்தி பெற்றவர்களாகவும் விளங்குவர் என்பது பொருள்.
“சப்தாத்மிகா” அதாவது, நாம் சொல்லும் அனைத்து சொற்களும் அவளே என்கின்றன சாக்த தந்திரங்கள். இன்னும் ஆழமாக ஒரு தத்துவத்தைப் பார்க்கலாம், அதுதான் முருகப்பெருமானின் தாத்பரியம்.
அன்னையில் இருந்து உதித்தவள் கௌமாரி, அவள்தான் கௌமாரன் எனும் முருகப்பெருமானின் மகா சக்தி.
அந்தக் கௌமாரி அழகு, அறிவு, வீரம் போன்றவற்றின் உறைவிடமான குமரக்கடவுளின் அம்சம். பக்தர்களின் விருப்பங்களைத் தட்டாமல் நிறைவேற்றுபவள். இந்த அம்பிகை ஆறுமுகங்கள் கொண்டவள். பன்னிரு கண்களும், கரங்களும் கொண்டவள்.
மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பவள். வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம், அபயம், வரதம் தரித்தவள். அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரங்களைக் கொண்டவள்.
விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூலில் இந்த அன்னையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆம். வானலோக சேனாதிபதியாக விளங்கும் முருகப்பெருமானின் வீரத்திற்குக் காரணமே கௌமாரிதான்.
ஸ்கந்தனுக்கு எல்லா வகையிலும் அவளே பலம், இந்த அன்னையினை வழிபட வேண்டிய நாள் இது(ஐந்தாம் நாள்). இந்த நவராத்திரியின் பஞ்சமி நாளில் அவளை நினைந்து வழிபட்டால் செல்வாக்கு சொல்வாக்கு நிறைந்த கலைகள் என எல்லா ஞானமும் ஆற்றலும் அவள் தருவாள்.
அன்னையினை வெண்ணிற மேடை அமைத்து வழிபடுதல் நன்று, பட்டாணி சுண்டல் பருப்பு பாயாசம் அவளுக்கு ஏற்றது, கதம்ப சாதம் அவளுக்கான பிரசாதம்.
இன்றைய நாளில் குலப்பெண்கள் அவளிடம் பெற வேண்டிய வரமும் கற்கவேண்டிய பாடமும் ஒன்றுதான், அது ஸ்கந்தனை அன்னை பெற்று வளர்த்தாள் என்பதிலும் விசுத்தி சக்கர தத்துவத்திலுமே அடங்கிவிடுகின்றது.
“வாகீஸ்வரி” என வாக்குக்கு அதிபதியாக அன்னையினைச் சொல்வதில் தெளிவாகின்றது.
ஆம். ஒவ்வொரு குலப்பெண்ணுக்கும் தாய்மை உணர்வும் அன்பும் கருணையும் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு அவற்றை இனிமையாக வெளிப்படுத்தவும் தெரிதல் வேண்டும்.
நல்ல சொல்லும் நல்ல தெளிவான இனிமையான சொற்களும், இனிமையாக பேசும் குணமும் குலப் பெண்ணுக்கு அவசியம்.
எந்த விஷயத்தையும் கடுமையாக அல்லாமல் இனிமையாகப் பொறுமையாகச் சொல்லும் விதத்தில் அழகாகச் சொல்ல வேண்டும்.
தன்னை அவள் சொல்லாலும் செயலாலும் மிக அழகாய் யாரையும் காயபடுத்தாமல் தன் வசம் ஈர்க்குமாறு வெளிபடுத்துதல் வேண்டும், அவள் குடும்பம் அதனால் நிம்மதியாய் நிறைவாய் வாழும்.
முருகனை அன்னை பெற்றெடுத்தாள். அவன் அழகும் வீரமும் செல்வாக்கும் சொல்வாக்கும் கொண்ட, ஞானமும் தெளிவும் கொண்ட பெரும் தெய்வமாயிருந்தான் என்பது தான் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அழகும் ஈர்ப்பும் கொண்டதாக இருத்தல் வேண்டும் என்பதை சொல்வது.
தன்னில் இருந்து வெளிப்படும் விஷயம் ஞானமாக எல்லோருக்கும் பயனுள்ளதாக இருத்தல் அவசியம் என்பது அன்னை ஸ்கந்த மாதாவின் தாத்பரியம், அந்த வரத்தை அவளிடம் நாடி வாங்கும் நாள் இது.
முருகப்பெருமானை எப்படி அன்னை ஞானமும் அறிவும் தெளிவும் கொண்டவனாக வளர்த்து உலகம் காத்தாளோ அப்படி ஒவ்வொரு தாயும் தன் மகனை ஞானத்தில் வளர்த்து அறிவில் சிறக்கவைத்து வளர்க்க வேண்டும் என்பது குடும்பப் பெண்கள் இன்று அடையவேண்டிய வரம், அவர்களின் வேண்டுதல் அதுவாக இருத்தல் அவசியம்.
அன்னை தன்னை அண்டியவர்களைத் தன் அருளால் தனக்குரிய மகன்களாக்கினாள், முருகனை அவள் பெற்று வளர்த்தாள் என்பது மட்டுமல்ல விஷயம்.
அவள் காளிதாசன், கம்பன், இன்னும் எத்தனையோ பேரை குமரகுருபரர் வரை தன் ஞானமகன்களாக்கி அருள் கொடுத்து அழியாக் காவியமாக்கினாள்.
அபிராமி பட்டர் முதல் எவ்வளவோ பேரைச் சொல்லமுடியும்.
எத்தனையோ மகான்களை அவள் ஆட்கொண்டு தன் மகன்கள் என அடையாளமிட்டாள். சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் அவ்வகை.
விஞ்ஞான காலத்தில் சீனிவாச ராமானுஜம் அவளின் மகனாக நின்றார்.
அவள் அன்று முருகப்பெருமானை மட்டுமல்ல அன்று ஜடாவர்ம சுந்தரபாண்டியன் என உருவாக்கியவள், பின்னாளில் நாயக்க மன்னர்கள், வீரசிவாஜி எனும் மாவீரனை உருவாக்கி இந்துதேசம் காத்தாள்.
யார் தன்னை முழுக்க அண்டினாலும் அவர்களைத் தாயன்போடு வாரியெடுத்து அவர்களை தன் மகனாக்கி தன் மகளாக்கி அவர்களுக்கு எல்லாச் சக்தியும் அள்ளிக்கொடுக்க அவள் காத்துக் கொண்டிருக்கின்றாள்.
ஒவ்வொருவரையும் தன் பிள்ளைகளாக அருள் வழங்க அவள் துடித்துக் கொண்டிருக்கின்றாள்.
அவளை நாடி அவரின் பிள்ளைகாக அவள் கரங்களில் ஒடுங்குவோருக்கு, அவளிடம் அடைக்கலமாகி கைஏந்தி நிற்போருக்கு அவள் எல்லா வரத்தையும் தாயாக நின்று தருகின்றாள், இந்த ஜென்மத்தில் இல்லாவிட்டால் அடுத்த ஜென்மத்தில் தேடிவந்து தராமல் அவள் செல்வதில்லை.
அந்த ஸ்கந்தமதா முருகனுக்கு மட்டும் அன்னை அல்ல, எல்லா உயிர்க்கும் அவளே தாய், அவளை வேண்டி எல்லா வரங்களையும் அடையலாம், அன்பும் கருணையும் கொண்ட அவள் அதை நிரம்ப தருவாள்.
அதை பெற்றுகொள்ளும் நாள் இது.
அவளுக்கான மந்திரம் இதோ
“சின்ஹாசன் கட நித்யம் பத்மஸ்ரித் கர்தவ்ய
சுபதஸ்து சதா தேவி ஸ்கந்த மாதா யஷஷ்வினி”
”தன் இருகரங்களில் தாமரை மலர் ஏந்தியவளும், சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும், ஸ்கந்தனின் தாயாகவும் இருக்கும் தேவி துர்க்கையை நான் வணங்குகின்றேன்.”
நவதுர்கா : 06 காத்யாயனி
நவதுர்கா எனும் ஒன்பது நிலைகளில் மகா முக்கியமான தத்துவத்தை, லௌகீக தத்துவத்தை போதிப்பவள் காத்யாயினி தேவி.
இந்த அன்னைதான் “அறம் வளர்த்த நாயகி” என அபிராமி அந்தாதியிலும், “நித்தியான்ன தானேஸ்வரி” என ஆதிசங்கரராலும் கொண்டாடப்படும் நாயகி அவள்தான்.
காத்யாயனி தேவிதான் குலபெண்களின் வாழ்வுக்கு மாபெரும் போதனை, திருப்பாவையில் ஆண்டாளுடன் அக்கால பெண்கள் வாழ்வு வேண்டி மார்கழியில் வழிபடும் பாவை இவள்தான், இவளாலேதான் திருப்பாவை கிடைத்தது.
அந்த காத்யாயினி தேவியினை வழிபடும் நாள் இன்று, அவளின் வரலாற்றையும் அவளின் தாத்பரியத்தையும் தெரிந்து கொண்டால் ஏகப்பட்ட பாடங்களை படிக்க முடியும், அவள் வரமும் குவியும்.
அக்காலத்தில் காத்யா எனும் முனிவர் அம்பிகையே தனக்கு மகளாக பிறக்க கடும் தவம் புரிந்தார். அதை அறிந்த அன்னை மானுடர்க்கு பல விஷயம் போதிக்கவும், அப்போது பூமியில் அட்டகாசம் செய்த அசுரர்களை அழிக்கவும் ஒரு நாடகம் ஆடினாள்.
அதன்படி அவள் சிவனின் கண்களை அவர் அறியாதவாறு விளையாட்டாய் மூடினார். வானலோகத்தில் ஒரு நொடி என்பது பூலோகத்தில் ஒரு ஆண்டுக்கு சமம்.
இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. உயிர்கள் தடுமாறின. ஒரு நொடிக் கூட தவறாமல் உலகை இயக்கும் சிவன் இதனால் ஆத்திரமாகி தேவிக்கு ஒரு சாபம் கொடுத்தார், பூமியில் பிறந்து தவமிருந்து தன்னை தேடிவரும்படி அனுப்பினார்.
தேவியும் அதை ஏற்றுக்கொண்டு காத்யா முனிவருக்கு மகளாய் பிறந்தாள். அவள் தேவி அம்சம் என்பதால் இயல்பாகவே அவள் மனம் சிவன்பால் பக்தி கொண்டிருந்தது. எப்போதும் பூஜை, தவம் என்றிருந்தாள். அவளில் தெய்வீக சக்தி குடிகொண்டிருந்தது.
சிவனின் கண்களை மூடி, அதனால் உலக இயக்கம் பாதிக்கப்பட்டு உயிர்கள் பசியால் வருந்தி அதனால் அறக்காரியங்கள் பாதிக்கப்பட்ட சாபம் பெற்றதால் அவள் இயல்பிலே பசிப்பிணி போக்குவதிலும், அறக்காரியம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாள்.
அவள் தெய்வீகப் பெண் என்பது காசியில் ஏற்பட்ட பஞ்சத்தில் தெரிந்தது. அந்த கொடிய பஞ்சத்தில் எல்லா உயிர்களும் பாதிக்கப்பட்டது, அன்னை அங்கு சென்று ஒரு அட்சய பாத்திரம் கொடுத்தாள், அள்ள அள்ளக் குறையாத பாத்திரம் ஒன்றை கொடுத்து எல்லா மக்களும் பசியாற வழி செய்தாள்.
மன்னன் அதை கேட்டு அவளை அட்சயபாத்திரம் எடுத்து அரண்மனைக்கு வரச்சொன்னான். அவள் மறுத்தாள். மன்னன் ஆத்திரமடைந்தான். ஆனால், கனவில் அவள் தெய்வாம்சம் கொண்டவள் என உணர்ந்து அவனே மாறுவேடத்தில் அன்னசாலை சென்று பசியாறினான்.
அப்படி பசிபஞ்சம் போக்கியதால் அவள் “அன்ன பூரணி” என்றானாள், காசியில் இந்த ஆலயம் இன்றும் உண்டு.
அதன் பின் காசியில் எக்காலமும் உணவுக்கு பஞ்சமில்லை. எக்காலமும் அங்கே உணவு எல்லா உயிர்க்கும் உண்டு, அன்னை அப்படி நின்று பசியாற்றுகின்றாள்.
(இங்கே பார்வதியாக வந்தபோது அன்னை செய்த பசியாற்றிய அறத்தையும் சொல்லுதல் அவசியம்.
இமயவன் மகளான பார்வதி தேவி அவதிரித்திருந்தாள், முன்பு கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளப்பான் ஈசன் எனும் தத்துவம் விளங்க சிவனை சோதித்தற்காக அப்பிறப்பை எடுத்திருந்தாள்.
அப்போது பெரும் பஞ்சம் வந்தது. அன்னை சிவனை நோக்கி தவமிருந்தாள். சிவன் இருநாழி நெல் மட்டும் கொடுத்து உயிர்களை காத்துக்கொள் என சொல்லிவிட்டு சென்றார்.
அன்னை மிக சாதுர்யமாக ஒரு பங்கு நெல்லை தற்காலிக பசிக்கும், மீதி நெல்லை விதை நெல்லாக்கிளாள்.
அந்த நெல்லை வைத்து, உலகத்தை வயலாக்கி, கடலை ஏரியாக்கி, ஈசனின் காளையை உழவுமாடாக்கி, பலராமனின் கலப்பையால் நிலத்தை உழுது விதைதாள், அது விளைந்து கொட்டியது, அதை கொண்டு அறம் வளர்த்தாள், அப்போதும் பசி போக்கினாள்)
காசியில் இப்படி பசி போக்கி அறம் வளர்த்த அன்னை தெற்கு நோக்கி வந்தாள். கன்னியாகுமரியில் தவமிருந்தாள். அப்போதுதான் பாணாசுரனை அழித்தாள். இன்னும் பல அசுரர்களை அழித்துப் போட்டாள்.
பின் காஞ்சிபுரம் வந்தவள் மணலால் ஒரு லிங்கம் செய்து சிவன் மேல் கொண்ட ஏக்கத்தால் ஆரத் தழுவினாள். அப்போது அவளின் உடல் பாகங்கள் அந்த லிங்கத்தில் பதிந்தன. அதைத்தான் “கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி” என்பார் அபிராமி பட்டர்.
(சும்ப, நிசும்பன் என்ற இரண்டு அசுரர்கள் பிரம்மாவை குறித்து தவமிருந்தனர், ஐந்து அக்னி ஏற்றி நடுவில் அமர்ந்து கடும் தவமிருந்து பிரம்மனை வரவழைத்தனர். அதனால் வந்த பிரம்மனிடம் சாகா வரம் கேட்டனர். எல்லாம் அழிய கூடிய ஒன்று சாகாதது என எதுவுமில்லை என பிரம்மன் சொன்னதால் உமையவளிடம் இருந்து தோன்றும் கன்னியால் மட்டுமே தங்களுக்கு அழிவு வரவேண்டும் எனக் கேட்டனர். பிரம்மனும் அருளினார்.
அப்படி ஒரு கன்னி வாய்ப்பில்லை எனக் கருதி ஆட்டம் போட்டனர் அசுரர்கள். அந்த அட்டகாசம் சிவனை எட்டிற்று. எல்லா உயிர்களும் அந்த அசுரர்களால் படும் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்க விருப்பம் கொண்ட சிவன் அன்னையினை அவதாரமாக்கினார்.
பூலோகத்தில் பிறந்த அன்னை சிவன் நினைவாகவே வாழ்ந்துவந்தாள். அப்படி கம்பை நதியோரம் மண்ணால் லிங்கம்செய்து அதனை பூஜித்து வந்தாள். ஒருமுறை ஆற்றில் பெரும் வெள்ளம் வந்து அந்த லிங்கத்தை சூழ்ந்தபொழுது அன்னை ஓடிச் சென்று அதனை கட்டி அணைத்து காத்தாள்.
அப்பொழுது அவளின் தனங்களும் வளையல் அணிந்த கரங்களும் அந்த லிங்கத்தில் ஆழப்பதிந்தன, அந்த அடையாளம் லிங்கத்தில் உண்டாயிற்று.
இதனாலே அந்த சிவனுக்கு “முலை தழும்பர், வளை தழும்பர்” எனும் பெயரும் உண்டு.
இதைத்தான் “கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி” என்கின்றார் அபிராமி பட்டர். தென்னையின் குரும்பலை போன்ற அன்னையின் தனங்கள் அந்த லிங்கத்தில் பதிந்ததால் அந்த வரி வந்தது.
இந்த நிகழ்வு அந்த அவதாரத்தில் உண்டு. பின், அன்னை அந்த சும்ப, நிசும்ப அசுரர்களின் ஆணவத்தை ஒழித்ததெல்லாம் நடந்தது)
பின், நிம்ப, சுதும்ப அசுரர்களை எல்லாம அழித்து போட்டவள் தன் அவதார நோக்கம் நிறைவேறியதும் திருவண்ணாமலையில் “உண்ணாமுலை அம்மன்” என சிவனோடு ஐக்கியமானார்.
இந்த அம்மனைத்தான் காத்யாயினி தேவி என இந்நாளில் கொண்டாடுகின்றோம்.
இந்த அன்னை யோக நிலையில் ஆக்ஞா சக்கரமாகும்.
இந்த சக்கரம் ஆறாம் சக்கரம். இது ஆகாய தத்துவத்தை குறிப்பது. இந்த நெற்றி சக்கரம் புருவ மத்தியில் இருக்கும் சக்கரம் துலங்கும் பட்சத்தில் ஒருவன் முழு ஞான நிலையினை அடைவான்.
உலக பந்தங்களை ஆசாபாசங்களை மீறிய பெரும் ஞானநிலையினை அடைவான். ரிஷிகள் ஞானியரெல்லாம் இந்நிலை அடைந்தவர்களே.
எல்லோரையும் நேசிக்கும் எல்லா உயிரையும் நேசிக்கும் மாபெரும் தாய்மை அங்கே வாய்க்கும்; இறைதன்மை வாய்க்கும்; அறம் செய்யும் அத்தனை தன்மையும் வாய்க்கும்.
இந்த ஆக்ஞா சக்கரத்தை துலக்கினால் பெரும் நித்திய பரவசம், பேரின்ப நிலை வாய்க்கும்.
இதையே கீதையில் கண்ணபிரானும் சொல்கின்றார்.
“ஸ்பர்சான்-க்ருத்வா பஹிர்-பாஹ்யான்-(ஶ்)சக்ஷுஶ்-சைவான்தரே ப்ருவோ: |
ப்ராணா-(அ)பானௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்யன்தர-சாரிணௌ ||
யதேன்த்ரிய-மனோ-புத்திர்-முனிர்-மோக்ஷ-பராயண: |
விகதேச்சா-பய-க்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ: || “
அதாவது புற இன்பம் பற்றிய எண்ணங்கள் அனைத்தையும் அடைத்து, புருவங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் பார்வையை நிலைநிறுத்தி, மூக்கின் உள்வரும் மற்றும் வெளியேறும் மூச்சின் ஓட்டத்தை சமப்படுத்தி, புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, ஆசை மற்றும் பயத்திலிருந்து விடுபடும் ஞானி சுதந்திரமாக வாழ்கிறார் என்பது பொருள்.
ஆக்ஞா சக்கரம் அங்கே துலங்கும்; ஞானக்கண் திறக்கும்; அந்நிலையில் முக்காலமும் உணரும் பரிபூரண ஞான நிலை வாய்க்கும்; இறைதன்மை வாய்க்கும்; அங்கே அன்பு பெருகும்; அன்பு பெருகினால் அறம் பெருகும்.
ஆக்ஞா சக்கரம் துலங்கும் போது முதலில் அந்த நீல சுடர்தான் ஒளிரும், வானம் கடல் போல நிர்மலமான நீல நிறம்தான் தெரியும்.
எல்லையில்லா ஞானத்தை வழங்குவது என்றால் உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நம்பிக்கை, ஒரு வரையறை, ஒரு எல்லைக்குள்ளான சில அசைக்கமுடியா பிடிவாதம் இருக்கும்.
அதை உடைத்து ஆகாயம் போல் மிகப்பரந்த மனதை, சிந்தனையினை இன்னும் ஆழமாகச் சொன்னால் ஒரு பெரிய ஒன்றுமில்லா மனநிலைக்கு கொண்டு செல்லும் நிலை.
அந்நிலையில் ஒருவனுக்கு பூலோக மானிட குணமெல்லாம் அற்றுப்போகும். உலகம் நிலையற்றது, உலகம் ஒரு மாயை என்பது தெரியவரும். அதுவரை தான் நம்பியதெல்லாம் அர்த்தமற்றது எனும் ஞானம் உருவாகும்.
அந்த ஞானம் மோட்சம் நோக்கி, பிறவா நிலை நோக்கி, பேரின்ப நிலை நோக்கி, ஒளி நோக்கி அழைத்துச் செல்லும்.
ஒளி என்றால் அறிவு, ஒளி என்றால் ஞானம். ஆத்ம ஞானம், ஆத்ம சுடர் எனும் தெய்வீக ஞான நிலையினை அருளும் தலம் இது என்பதை குறிப்பால் சொன்னார்கள்.
அஷ்ட பைரவர்கள் என்பது இங்கு அஷ்டமா சித்துக்களை வழங்குபவர்கள்.
ருத்திரர் என்றால் அழிவுக்குரிய கடவுள்கள் அல்ல, நம்மிடமுள்ள ஆகாத குணங்களை, மாய மயக்கங்களை, உண்மையினை அறியாத தன்மையினை அழிப்பவர்கள் ருத்திரர்கள்.
மும்மலங்கள் உள்ளிட்டவற்றை துர்குணங்களை அழித்து உயிர்கள் உண்மையினை அறிய வழி செய்பவர்கள் ருத்திரர்கள், மானிட ஆன்மா மேல் அவர்கள் கொண்ட அன்பு அப்படி.
ருத்திரவடிவம் என்பது அதுதான், தீமையினை தீயகுணங்களை அழிப்பது ருத்திரவடிவம்.
பைரவ வடிவம் என்பது இன்னொரு படிநிலைக்கு நம்மை அழைத்துச் செல்வது. துறவிகளில் பைராகி அல்லது பைரவ கோலம் என்பது ஆன்மா இன்னொரு படிநிலைக்கு உயர்ந்துவிட்டதை சொல்லும் வடிவம்.
அவர்கள் மானிடரிலிருந்து மேம்பட்ட ஞானவடிவில் தெளிவில் இருப்பார்கள். எது உண்மை, எது மாயை என்பதை அறிந்து மாயையில் இருந்து விலகி நிற்பார்கள்.
இப்படிப்பட்டவர்கள் சுடுகாட்டில் இருப்பதை அவதானிக்கலாம், அது அங்கே மானிட உடல் அழிந்து ஆத்மா அடுத்த நிலைக்கு செல்லுமிடம்.
அந்த உருமாற்றமே, அந்த உருமாற்ற இன்னொரு படிநிலைக்கு ஒருவனை உயர்த்துபவர்களே பைரவர்கள்.
இந்த ஆலயத்தில் எட்டு பைரவர்கள் உண்டு, இந்த எட்டு பைர்வார்களும் காசிவாழ் பைரவர்கள் போல் எட்டுவிதமான சக்தியில் ஒருவனை அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்வார்கள்.
காசியில் மயானம் பிரசித்தியானது, அங்கே ஆத்மா இன்னொரு படிநிலை அடைகின்றது, உடலை விடுத்த ஆன்மா இன்னொரு வடிவம் எடுக்கின்றது, இறைதன்மை அடைகின்றது.
அன்னை காசியில் ஏன் அன்னபூரணியாய் அருள்பாலித்தாள் என்பது இப்போது விளங்கலாம், அன்னை அங்கே ருத்ரனின் அம்சமாக நின்றாள்.
காத்யாயினி தேவி, ஆக்ஞா சக்கர தன்மை, ருத்திர அம்சம், இறைசக்தியில் நிறைந்து எல்லாம் கடந்த அன்பில் தர்மத்தில் அறத்தில் நிறைந்து நிற்பது இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
ஸ்ரீ சக்கர வடிவில் இந்த காத்யாயினி தேவி ஆறாவது கோட்டையில் இருப்பாள்.
அது பத்து முக்கோணங்களைக் கொண்டதளம் ஆகும். இந்த ஆவரணத்தில் பத்து ஆவரண தேவியர்கள் குடிகொண்டிருக்கின்றனர். இந்த ஆவரணம் ‘சர்வ ரக்சா கரச் சக்கரம்’ என்று கூறப்படும்.
இந்த ஆவரணத்தின் அன்னை திரிபுரமாலினி, இங்குள்ள சக்தி தேவதைகள் சர்வக்ஞா, சர்வ சக்தி, சர்வைஸ்வர்ய ப்ரதா, சர்வ ஞானமயீ, சர்வ வியாதி வினாசினி, சர்வா தார ஸ்வரூபா, சர்வ பாவஹரா, சர்வானந்தமயீ, சர்வரக்ஷா ஸ்வரூபினி, ஸர்வேப்ஸித பலப்ரதா போன்றவர்கள்.
இந்த ஆறாவது ஆவரண பூஜையினால் காம, குரோத, மத மாச்சரியம் நீங்கும். பொறாமை குணம் விலகும். அன்பும் தாய்மையும் கொண்ட குணம் பெருகும்.
அறம் செய்யும் பெரும் நோக்கமும் அன்பும் உருவாகும்.
ஆக, ஆஞ்சா சக்கர தத்துவப்படி ஸ்ரீ சக்கர தத்துவப்படி அன்னை அறம் வளர்ப்பவள். இந்த அறம் வளர்க்கும் நாயகிபெருமையினை அபிராமிபட்டரின் பாடலினை கொண்டே காணலாம். அன்னை சிவன் கொடுத்த இருநாழி நெல்லை கொண்டே உலக பசிபோக்கி அறம் காத்ததை பட்டர் பாடுகின்றார்.
57ம் பாடலில் பாடுகின்றார்.
“ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே”
“ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி” எனத் தொடங்குகின்றார் பட்டர்.
அன்னை அன்று இருநாழி நெல்பெற்று உலகப் பசிபோக்கி அறம் காத்த வகையினை அந்த அம்மனுக்கு காஞ்சியில் மட்டும் ஆலயம் உண்டு என்பதை சொல்லி பாடுகின்றார் பட்டர்.
ஆம். அப்படி “அறம் வளர்த்த நாயகிக்கு” காஞ்சியில் மட்டும்தான் கோவில் உண்டு.
ஆம். இந்த “இருநாழி கொண்டு” எனும் வரி காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனை பற்றிய பிரசித்தியான வரி..
காஞ்சியிலுள்ள எந்தச் சிவாலயத்திலும் அம்மன் சந்நிதி இல்லை. அங்கு காமாட்சி அம்மன் ஆலயத்தில் மட்டும் அவள் வீற்றிருப்பாள், அதற்கு இல்லறத்திற்குரிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அதாவது வீட்டின் அதிபதி மனைவி, ஒருவன் நாட்டுக்கே அதிபதியாக இருந்தாலும் அவன் வீட்டில் அவன் மனைவிதான் ஆட்சி செய்வாள், அதனால் ராணி என்றானாள்.
மனைக்கு அதிபதி மனைவியே, எங்கும் மனையன் என சொல்வதில்லை, இல்லத்தரசி எனச் சொல்வார்களே தவிர இல்லத்து அரசன் என யாரும் சொல்வதில்லை, இல்லாள் என மனைவியினை சொல்வார்களே தவிர இல்லான் என கணவனை சொல்வதில்லை.
காரணம், மனைவியின் பெருமை அது. கணவன் எவ்வளவு பெரிய சக்கரவர்த்தி என்றாலும் வீட்டை நடத்துபவள் அவளே.
கணவன் வருமானம் அறிந்து அவன் பொருளில் எல்லா இல்லற கடமையும் நிறைவேற்றுபவளே நல்ல மனைவி
இதனை “இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை” என சுருக்கமாக சொன்னாள் ஒளவை, இத்னையே “மனைதக்க மாண்புடையாள்” என்றான் வள்ளுவன்.
அப்படிப்பட்ட மனைவி, கணவன் கொடுக்கும் பொருளை கொண்டு குடும்பம் நடத்தி ஊருக்கான அறக்காரியங்களையும் செய்வாள்.
ஆம். அக்காலத்தில் பெண்களே அறக்காரியங்கள் ஊருக்கும் சமூகத்துக்கும் தேவையான நல்ல செயல்களை செய்தார்கள். அதனாலே பிச்சைக்காரன் கூட “அம்மா தாயே” என்றுதான் அழைத்தானே அன்றி யாரும் “ஐயா” என அழைக்கவில்லை.
அக்கால சமூகம் 32 அறங்களை வளர்க்கச் சொன்னது.
1) ஆதுலர்க்கு சாலை அமைத்தல்.
2) ஓதுவார்க்கு உணவு.
3) மாந்தர்க்கு உணவு.
4) பசுவுக்கு உணவு.
5) சிறையில் இருப்போருக்கு உணவு.
6) இல்லாதோருக்கு ஈகை.
7) வழிப்போக்கர்க்கு உதவுவதல்.
8) அறவைச் சோறு எனும் ஆதரவற்ற அனாதைகளுக்கு உணவளித்தல்.
9) மகப்பேறுவித்தல் எனும் பெண்கள் பிரசவிக்கும் நேரத்தில் அவர்கள் உடனிருந்து தேவையான உதவிகளை செய்தல்.
10) மகவு வளர்த்தல் குழந்தைகளை பராமரித்து அவர்களை வளர்ப்பதில் உதவுதல்.
11) மகப்பால் வார்த்தல் எனும் தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்குப் பாலளித்தல்.
12) அறிவைப் பிணம் எனும் அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்களின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்து தகனம் செய்ய உதவுதல்.
13) அறவைத் தூரியம் எனும் ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காத்தல்.
14) சுண்ணம் எனும் தாம்பூலம் தரிப்பவர்களுக்கு சுண்ணாம்பு கொடுத்து உதவுதல்.
15) நோய்மருந்து எனும் நோயில் தவிப்பவர்களுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுதல்.
16) வண்ணார் எனும் ஏழை எளியோருக்கு துணி துவைக்க உதவுதல் அதாவது கூலி கொடுத்தல்.
17) நாவிதர் அதாவது ஏழை எளியோருக்கு முடிவெட்டிக்கொள்ள, முகச்சவரம் செய்ய உதவுதல் (நாவிதர்களின் கூலியையும் உடனே தந்துவிடவேண்டும். தாமதிப்பது பாபம்.)
18) கண்ணாடி எனும் உதவி. ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்தி சரி செய்துகொள்ள கண்ணாடி கொடுத்து உதவுதல்
19) காதோலை : பெண்கள் காதணியில்லாது (தோடு) இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுதல்.
20) கண்மருந்து எனும் பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக்கொள்ள கண்மை அளித்தல்,
21) தலைக்கு எண்ணை எனும் பரட்டை தலையோடு இருக்கும் ஏழை எளியோருக்கு தலைக்கு எண்ணை வாங்கி கொடுத்தல்.
22) பெண் போகம் எனும் தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லா ஏழைகளுக்கு உரிய தனியிடம் அமைத்து தருதல்.
23) பிறர் துயர் தீர்த்தல் எனும் காயமோ நோயோ ஏற்பட்டு துன்பப்படுபவர்களுக்கு உதவுதல். 24) தண்ணீர் பந்தலெனும் தாகத்தால் தவிப்பவர்களுக்கு தண்ணீர் தந்து உதவுதல்.
25) மடம் அமைத்தல். அதாவது வழிப்போக்கர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, குளிக்க, இயற்கை உபாதையை தணித்துக்கொள்ள சாலையோரங்களில், விடுதி அமைத்தல்.
26) தடம் எனும் தடாகம், வழிப்போக்கர்கள் நீர் அருந்தி இளைப்பாற குளம் தோண்டுதல், அவற்றை பராமரித்தல்.
27) சோலை எனும் நிழல் தரும் மரங்கள் மற்றும் பூஞ்சோலை அமைத்து அவர்கள் தங்கி இளைப்பாற உதவுதல்.
28) உராய்ஞ்சிக்கல் நிறுவுதல் எனும் பசுக்கள் மேயும் இடங்களிலும், பசு கொட்டில்களிலும் அவை தங்கள் உடலை தேய்த்துக்கொள்ள பசு உராய்ஞ்சிக்கல் நிறுவதல்.
29) ஏறு விடுதல் எனும் பசுக்களை சினைப்படுத்த தரமான எருதுகளை கொடுத்து உதவுதல் மற்றும் எருதுகளை பேணுதல்.
30) விலங்கிற்கு உணவு உம்பல்வேறு விலங்கினங்கள் பசியாற உணவை கொடுத்து உதவுதல்.
31) விலை கொடுத்து உயிர் காத்தல் அதாவது கொலைக்குச் செல்லும் உயிர்களை வாங்கிக் காத்தல்
32) கன்னிகா தானம் அதாவது வரன் தேடிக் கொடுத்து உதவுதல். ஏழைப் பெண்களின் திருமணத்திலும் திருமண வயது நெருங்கியும் திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்கும் திருமணம் செய்து வைத்து உதவுதல்.
என இப்படிப்பட்ட அறங்கள் உண்டு, அவற்றையும் அக்கால பெண்கள் வளர்த்தார்கள்.
இப்படி சிவனும் அன்னையும் குடும்பம் நடத்தி அறம் வளர்த்த காட்சி ஒன்று காஞ்சியில் உண்டு, அன்னையிடம் சிவன் இருநாழி நெல் மட்டும் கொடுத்தாராம், அன்னை அந்த இருநாழி நெல்லை பலவாறு பெருக்கி உலக உயிர்களுக்கெல்லாம் படியளந்து அறக்கடமையும் செய்தாராம்.
அதாவது ஒரு வருடத்துக்கே இருபடி நெல்லை கொடுத்து அதையும் உலகத்தையே காக்க கொடுத்தாராம் சிவன்,மிக மிக குறைந்த நெல் அது ஒரு நாள் அல்ல ஒரு பொழுதுக்கு கூட வராது.
ஆனால், அந்த நெல்லை மறுப்பேதும் சொல்லாமல் குறைபட்டு கொள்ளாமல் வாங்கி கொண்டு தன் சக்தியால் உலகுக்கு படியளந்து அறக்காரியங்களை செய்தாளாம் நல்ல மனைவியாகிய அன்னை.
இதனை காஞ்சிபுராணத்தில் வரும் இப்பாடல் சொல்கின்றது.
“‘தொல்லே மறைதேர் துணைவன்பால் யாண்டுவரை
எல்லே இருநாழி நெற்கொண்டோர்
மெல்லியலாள் ஒங்குலகில் வாழும் உயிரனைத்தும் ஊட்டுமால்
ஏங்கொலிநீர் காஞ்சி யிடை”
எனும்பாடல் இந்த கதையினை சொல்லும்.
(பழைய வேதம் ஆராய்ந்து காண முயலும் சிவபெருமானுமாகிய தன்னுடைய கணவனிடம் ஒராண்டாகிய கால அளவுக்கும் இரண்டு படி நெல்லேக்கொண்டு ஒரு மெல்லியலாகிய பெண், உயர்ந்த உலகத்தில் வாழும் எல்லா உயிர்களையும், ஒலிக்கின்ற நீரையுடைய காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு உண்ணுவித்துக் காப்பாற்றினாள்)
இதனை “இருநாழிபடி கொடரங்காத்த மாபரச்சி” என்கின்றார் அருணகிரியார். இங்கு மாபரச்சி என்பது பரம்பொருளை ஆட்சி செய்பவள் எனும் பெயரில் வரும்.
சுந்தரரும் இதுபற்றி பாடியிருக்கின்றார்.
அப்படி இல்லறத்தில் சிறந்து பெரும் வழிகாட்டியாக நிற்கும் காஞ்சி காமாட்சியினை அவளின் பெருமையுடன் பாட தொடங்கும் பட்டர் தொடர்ந்து பாடுகின்றார்.
“ஒருவர் தம் பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே” என்கின்றார்.
அதாவது இருபடி நெல்லில் உலகுக்கே உணவும் அறமும் கொடுத்தவள் நீ, அப்படிப்பட்ட உன்னை நான் பாடிவிட்டு பின் இன்னொருவரிடம் சென்று யாசகம் பெற பொய்யும் உண்மையும் கலந்து பாடுவது தகுமோ? அது உன் அருளாக இருக்குமோ? இருக்காது. உன்னை அண்டினால் எல்லாம் அடையமுடியும் இன்னொரு இடத்துக்கு சென்று கை ஏந்தும் நிலை வராது எனப் பாடி முடிக்கின்றார்.
ஆக, இந்தப் பாடலே காத்யாயினி அன்னையின் தாத்பரியத்தை சொல்கின்றது, அவள் அன்ன பூரணியாக, இருபடி நெல்லில் அறம் காக்கும் சக்தி கொண்டவளாக, அறம் செய்பவளாக நிற்பதை சொல்கின்றது.
இங்கிருந்துதான் இன்றைய குலமங்கையர் பாடம் கற்றல் அவசியம்.
ஒர் பெண் எப்படி குடும்பம் நடத்தவேண்டும் எனும் போதனையினை காத்யாயினி தேவி அருள்வாள் என்பதையும், ஒரு நல்ல குலப்பெண் எப்படி இல்லறம் நடத்தவேண்டும் என்பதையும் இங்குதான் இவளை கொண்டுதான் இந்துமதம் போதித்தது.
முதலில் கணவனின் கடமையில் வேலையில் பெண்கள் குறுக்கிடுவது தவறு என்பதை சிவனின் கண்களை மூடி அன்னை தவறிழைத்தாள் என்பது.
ஆம். விளையாட்டாய் கூட கணவனின் தொழில் மற்றும் கடமைகளில் மனைவி தலையிடுதல் கூடாது என்பது.
இரண்டாவது, மனைவி என்பவள் கணவன் வருமானத்தில் குடும்பம் நடத்துபவளாகவும் , அந்த வருமானத்தின் ஒரு பகுதியினை பெருக்கி குடும்பத்தை காப்பவளாகவும் இருத்தல் அவசியம் என்பதை போதித்தது.
மூன்றாவது, ஒரு இல்லத்து பெண் எல்லா அறங்களையும் செய்யவேண்டும், உணவு விஷயத்தில் அவள் தாயாக நின்று எல்லோரையும் தன் குடும்பம் குலம் தாண்டி அரவணைக்க வேண்டும், ந்லல குலப்பெண் எல்லோரின் பசிபோக்கும் தாயாக வேண்டும் என்றது.
அப்படியே குலப்பெண் தன் குடும்பத்தின் காரியங்களை கவனித்துக் கொண்டே 32 அறங்களையும் செய்யச் சொன்னது.
அக்கால குலப்பெண்கள்தான் இந்த 32 அறங்களையும் செய்தார்கள்.
எல்லா வீடுகளிலும் அன்று திண்ணைகள் இருந்தன, பசியென வருவோர்க்கு குலப்பெண்கள்தான் உணவிட்டார்கள், இரவில் திண்ணையில் தங்க அனுமதித்தார்கள்.
வஸ்திர தானம், நகை தானம் என வரலட்சுமி காலம், நவராத்திரி என அள்ளி அள்ளி இறைத்தார்கள்.
திருமண சம்பந்தம், இன்னும் சுபகாரியம், பிரசவம் என எல்லாவற்றுக்கும் பெண்கள் சமூகமே தங்களை காத்து கொண்டது.
ஆக, குலப்பெண்கள் தன் கணவன் தொழில் செய்ய கடமை செய்ய துணை இருந்து, அவனை புன்முறுவலால் வழிநடத்தி, புன்னகையால் அரவணைத்து சென்று அவன் வருமானத்தை திட்டமிட்டு குடும்பத்துக்கும் எடுத்து ஒரு பங்கை முதலீட்டாக பெருக்கி அறக்காரியம் அனைத்தும் செய்ய துணை நிற்றல் அவசியம் என்பதை போதித்த மதம் இந்துமதம்.
இதனாலே இப்படியான பெண்கள் எல்லா அறத்தையும் செய்ததாலே அன்று எல்லாருக்கும் எல்லாம் கிடைத்தது, எல்லாரும் இன்புற்றிருந்தார், பிச்சைக்காரர் இல்லா சமூகமாக பாரதம் இருந்தது.
இன்று தங்கும் விடுதிகள் பணம், உணவு பணம், குடிதண்ணீர் பணம், மண விவாக தொடர்புகள் பணம், மருத்துவம் பணம் என எல்லாமே பணம் பணம் என்றாகி அறம் இழந்த சமூகமாகிவிட்டது.
இது இன்றைய நாகரீக சமூகம் எனச் சொல்லும் அறமற்ற சமூகம்.
ஆனால், இந்துக்கள் கண்ட சமூகத்தில் இவை எல்லாம் காசுக்கு அப்பாற்பட்ட அறம் என்பதாக இருந்தது, அந்த அறம் மிகுந்த சமூகமே எல்லோரும் எல்லாம் பெற்ற சமத்துவ சமதர்ம சமூகமாக இருந்தது.
ஆம். காத்யாயினி எனும் தேவியினை சொல்லி என்றோ எல்லாரும் எல்லாம் பெற்று வாழும் சமத்துவ உலகத்தை காட்டி அதன் ஆதாரம் பெண்கள், அதற்கு வரம் அருள்பவள் தேவி எனச் சொல்லிற்று இந்துமதம்.
ஒவ்வொரு குலப்பெண்ணும் அன்னையிடம் வேண்டும் வரம் அருள்தான், நல்ல குலப்பெண் எல்லா உயிர்க்கும் தாயாக நின்று பசிபோக்குவாள், கணவனின் வருமனாத்தில் குலம் காப்பாள், பொருள் காப்பாள் அப்படியே அறம்வளர்ப்பாள், சுற்றமும் குலமும் வாழ தானும் வாழ்ந்து எல்லாரையும் வாழவைப்பாள்.
இந்த வரத்தை கேட்டுத்தான் அன்று ஆண்டாள் காத்யாயினி தேவியினை வழிபட்டாள், அந்த வரத்தை ஒவ்வொரு இந்துகுலப்பெண்ணும் குடும்ப பெண்ணும் வேண்டி பெறும் நாள் இது.
அன்னைக்கு சிகப்பு மேடை அமைத்து, புட்டு தயிர்சாதம் என நைவேத்தியம் செய்தல் நன்று.
அன்னபூர்ணா ஸ்தோத்திரம் பிரசித்தியானது அதில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வேண்டலாம்.
“அன்ன பூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராண வல்லபே|
ஞான வைராக்யஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹிச பார்வதி ||”
“உணவு நிறைந்தவளே, எல்லாவற்றிலும் எப்போதும் நிறைந்தவளே, உயிருக்கு இனியவளே,பார்வதி தேவியே, ஞானமும் வைராக்கியமும் பெற பிக்ஷையிட்டு – உணவு தந்து அருள்வாயாக”
அதனைச் சொல்லி வேண்டி அவளின் தியான மந்திரத்தை சொல்லலாம்.
காத்யாயினி
“சந்திர ஹசூஜ் வல்கார லவர் வாஹன் காத்யாயனி சுப் தத்யா தேவி தவன் தாதினி ”
ஒளி வீசும் ஹசூஜ் (வாள்) கொண்டவளும், கம்பீரமான சிம்மத்தில் ஏறி தீய சக்திகளை அழிப்பவளாம் அன்னை காத்யாயனி எனக்கு அருள் செய்ய வேண்டும்.
அபிராமி அந்தாதியின் இரு பாடல்கள் இந்நாளில் முக்கியமானவை.
“ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே”
“தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன், மெய் அடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே”
எனப் பாடி துதிக்கலாம்.
காசியின் அன்னபூரணி, காஞ்சி காமாட்சி, திருவண்ணாமலையின் உண்ணாமுலை அம்மன் என மூவரும் அந்த காத்யாயினி வடிவமே, அவளிடம் இன்று வேண்டினால் குலப்பெண்கள் தங்கள் குலம் காக்கவும், எதிரிகளை அழிக்கவும், எல்லா எதிர்ப்புகளையும் பொசுக்கவும், பொருள் பெருக்கவும் அறம் செய்து பெரும் வாழ்வு வாழவுமான எல்லா வரங்களையும் தருவாள், அவளிடம் வேண்டியன கிடைக்கும்.
நவ துர்கா : 07 காளராத்ரி தேவி.
நவராத்திரியின் ஏழாம் நாள் காளராத்ரி அல்லது காலத்ரீ தேவிக்குரியது, இதே ஏழாம் நாள்தான் சரஸ்வதி என்னும் சாம்பவி என இருவருக்கானது.
காள என்றால் பலவகை அர்த்தங்கள் உண்டு. கருமையானது, சக்திமிக்கது என எத்தனையோ அர்த்தங்கள் அதற்கு உண்டு என்றாலும் முக்கியமான பொருள் காலம்.
காலத்தை உள்ளடக்கியதால் அவள் காளி, அவளே காலநேரத்தை இரவு பகலை கடந்தவள் என்பதால் காலராத்திரி தேவி, எல்லா காலத்துக்கும் தேவி, காலத்தின் மூல அதிபதி என அறியப்படுகின்றாள்.
இந்தத் தத்துவம் அறிய கொஞ்சம் சிரமமானது, விஞ்ஞானத்துடன் பொருந்தி செல்லக்கூடியது.
இங்கு எல்லாமே ஒரு காலத்துக்கு உட்பட்டது. இந்த பிரபஞ்சம், அதில் உள்ள படைப்புக்கள், சூரிய சந்திரன், இந்த பூமி என எல்லாமே ஒரு கால வரம்புக்கு உட்பட்டவை.
அவற்றின் ஆயுளில் கால அளவு வித்தியாசம் கூடுதல் குறைவாக இருக்கலாமே தவிர எல்லாமும் ஒரு நாள் முடியகூடியவை, அக்காலம் முடியும் போது அவை நிச்சயம் அழியும்.
இந்தக் காலத்தை தாண்டி நிற்பது எதுவுமில்லை, அந்த மகா மூல சக்தியினைத் தவிர ஆதிபராசக்தியினைத் தவிர, தோற்றமும் முடிவுமில்லா அந்த மகா சக்தி காலத்துக்கு அப்பாற்பட்டது.
ஆம். காலத்துக்குள் சிக்கிய எல்லாம் அழியும், காலத்தை தாண்டியது நிலைக்கும்.
இதனைத்தான் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தன் ஆய்வு முடிவில் விளக்கினான்.
காலத்தில் இருந்து விடுபடும் எதுவும் அழியாது. அதன் ஆயுள் மகா நீண்டது. ஆனால், அதற்கு சில விஷயங்களில் இருந்து விலக்களிக்கும் வேகமான சாதனம் ஒளியின் திசைவேகத்தில் ஓளியோடு பயணிக்கும் வேகத்தில் வேண்டும் என அதிர வைத்தான் ஐன்ஸ்டீன்.
அவன் சொன்னதை இன்னும் கொஞ்சம் எளிமையாக காணலாம்.
அதாவது இங்கு ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு கால அளவு நிர்ணயிக்கப்படுகின்றது, அதை மீறமுடியாது.
பூமி சூரியனை சுற்றிவருவது ஒரு வருடம், அதனால் பூமியில் இருக்கும் மனிதனுக்கும் அந்த ஒருவருடம் எனும் கால அளவு உண்டு.
இது வயதாகின்றது, வயது மூப்பாகின்றது, மூப்பு இறப்பாகின்றது, இதற்கு எந்த பொருளும் பூமியில் தப்பமுடியாது.
அதாவது இங்கு காலமே ஆட்சி செய்கின்றது.
ஐன்ஸ்டீன் காலத்தை மீறி சென்றால் இந்நிலை வராது என்றான். காலத்தை கடப்பது சாத்தியம் அதாவது ஒளியின் திசைவேகத்தில் ஒரு ராக்கெட் செய்து அதனில் மனிதனை ஏற்றி எங்காவது அனுப்பிவிட்டால், அந்த வேகத்தில் அதாவது காலத்தை மீறி அவனை பயணிக்கவைத்து பிரபஞ்சத்தின் எல்லைக்கோ, இல்லை வெளியேவோ அனுப்பிவிடவேண்டும்.
அவன் அந்த வேகத்தில் எங்கெல்லாமோ சென்று திரும்பிவருமுன் பூமி பல்லாயிரம் சுற்றுக்களை சூரியனை சுற்றி முடித்திருக்கலாம், அவனோ எந்த கோலத்தில் எந்த வயதில் சென்றானோ அதே வயதில் அதே கோலத்தில திரும்பி வருவான்.
உதாரணமாக அவன் 35 வயதில் ஒரு குழந்தையின் தகப்பனாக சென்றிருந்தால் அவன் ஆயிரம் ஆண்டு கழித்து அதே 35 வயதுவாலிபனாகவே வருவான். ஆனால், அவனின் 100ம் தலைமுறை இங்கே வாழும்.
இதைத்தான் ஐன்ஸ்டீன் சொன்னான். இதையே இந்து புராணங்கள் சிலவும் சொல்கின்றன.
அதாவது காலத்தை, இந்த பூமியினை கட்டுப்படுத்தும் காலத்தை ஒருவன் கடந்துவிட்டால் அவனுக்கு அழிவில்லை என்பது பொருள்.
அதுதான், அந்த விஞ்ஞான தத்துவம்தான் திருக்கடையூரில் மார்கண்டேயனுக்காக சிவன் செய்த காலசம்ஹாரமாக கருதப்படுகின்றது.
இந்துமதம் அவ்வளவுக்கு ஆச்சரியமான விஞ்ஞான மதம். இன்றைய நாளைய விஞ்ஞானிகள் சொல்லும் பிரபஞ்ச ரகசியங்களை என்றோ சொன்னமதம் இந்துமதம்.
காலத்தின் பிடியில் இருந்து என்றால் விதியின் பிடியில் இருந்து எனப் பொருள். காலனை சிவன் உதைத்து அவனை காத்தார் என்றால் மார்கண்டேயன் கால நேரத்தை கடந்த நிலைக்குச் சென்றான் என்பது பொருள். அதாவது விதியின் பிடியில் இருந்து விடுபட்டார் என்று பொருள்.
கால பைரவர் தத்துவம் அதுதான். அவர் கால நேரங்களை கடந்தவர், காலத்தை கடந்து நின்று காவல் இருப்பர், எல்லோரையும் குறித்த நேரம் வைத்து ஆடவிட்டு மைதானத்தினை கண்காணித்து காவல் இருப்பவர் எனப் பொருள்.
இந்த கால பைரவ தத்துவத்தில் வருபவள்தான் காலராத்திரி.
அன்னை யுகங்களை கடந்தவள், அவளை லலிதா சகஸ்ர நாமம் “யுகாந்தரா” அதாவது யுகங்களை ஆள்பவள் என்கின்றது.
அது அவளை “தேச கால அபரிச்சின்னா” என்கின்றது. அதாவது (வெளிக்கும்) இடத்திற்கும், காலத்திற்கும் உட்படாதவள் எனக் கொண்டாடுகின்றது.
அவள் நித்தியமானவள் என்பதால் “நித்யா”, எப்போதும் நிரந்தரம் என்பதால் “நிர்நாசா”.
அவள் பருவகால எல்லைகளை கடந்ததால் “வயோவஸ்தா” அல்லது “விவர்ஜிதா”.
அவள் “பாவா பாவ விவர்ஜிதா” அதாவது இருத்தலுக்கும் இல்லாமைக்கும் அப்பாற்பட்டவள்.
ஆம். காலத்துக்கு அப்பாற்பட்டவள் அன்னை.
சரி, இந்துக்கள் சொல்லும் காலக்கணக்கு என்ன?
360 நாள் கொண்டது ஒரு மானிட ஆண்டு (சந்திரனின் சுழற்சியின் படி) எனக் கணக்கு. அது சாந்த்ரமான ஆண்டு எனவும் சொல்லப்படும். (365 நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி கொண்டது சௌர மானிட ஆண்டு (சூரிய சுழற்சியின் படி)
இப்படி ஒரு மானிட ஆண்டு தேவர்களின் ஒரு நாள்.
360 மானிட (சாந்த்ரமான) ஆண்டுகள் என்பது ஒரு தேவ வருடம்.
1200 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு கலியுகம். கலியின் இரு மடங்கு.
அதாவது, 2400 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு துவாபர யுகம். கலியின் மூன்று மடங்கு, அதாவது
3600 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு திரேதாயுகம். கலியின் நான்கு மடங்கு, அதாவது
4800 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு கிருத யுகம்.
ஆக, மொத்தம் 12000 தேவ வருடங்கள், அடுத்தடுத்து வரும் இந்த நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர் யுகம்.
இப்படி ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது பிரம்மனின் ஒரு பகல் பொழுது, ஆயிரம் சதுர் யுகங்களைக் கொண்டது பிரம்மனின் ஒரு இரவு.
ஆக, மொத்தம் இரண்டாயிரம் சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள். இதனை கீதையும் இன்னும் பல நூல்களும் சொல்கின்றன.
அது போல நூறு வருடங்கள் பிரம்மனின் ஆயுட்காலம்.
(ஒரு சதுர்யுகம் என்பது 43, 20, 000 மானிட வருடங்கள்).
இந்த யுகங்கள், அதாவது மானிடர் கணக்கில் மிகப் பெரிய எண்ணிக்கையில் வரும் வருடங்கள் அன்னைக்கு கண்சிமிட்டுவது போல் வந்து மறைகின்றன என்றால் அவளின் சக்தி என்ன.
அன்னை கால நேரங்களைக் கடந்தவள். நித்தியமானவள் என்பது அவர் சொல்ல வரும் தத்துவம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் கால நேரங்களுக்கு கட்டுப்பட்டது. ஆனால், இந்த பிரபஞ்சத்தை தாண்டி நிற்கும் சக்திக்கு அந்த கால நேரம் இல்லை.
அந்த மகா சக்திதான் அன்னை. அவள் காலவிதிகளுக்கு கட்டுப்பட மாட்டாள். அதனைக் கடந்தவள் என்பதைச் சொல்லி, அவளால் அவள் அடியார்களும் அந்நிலையினை எட்டலாம். கால நேரம் கட்டுப்படுத்தாத பெரும் சித்தர்கள் நிலையினை அடையலாம் .
அதாவது பிரம்மன் உட்பட மும்மூர்த்திகள் மறைவார்கள். தேவர் உலகம் மறைந்து தோன்றும். இப்படி எல்லாமே அழிந்து மறுபடி தோன்றும்.
ஆனால், அன்னை நித்தியமானவள். அவளே பரம்பொருள்; அவளே மூலம். எல்லாமே அவளில் இருந்து தோன்றி அவளிலே முடிகின்றன. அந்த அன்னையே இந்த உலகம், தேவர் உலகம் என எல்லாம் படைத்து உயிர்களை, தேவர்களைப் படைத்து, அவர்களின் தலைவர்களையும் படைக்கின்றாள்.
அப்படியான அன்னை தன்னை இடையறாது வணங்கும் பூமியில் இருப்போரை கால நேரம் தாண்டி தன்னோடு சேர்த்துக் கொள்கின்றாள்.
தன் அடியார்களை இந்தப் படைப்புச் சுழலில் இருந்து விடுவித்து, இந்தத் தோன்றி மறைதல் எனும் காலச் சுழலில் சிக்கவிடாமல் அதைத் தாண்டிய நிலைக்கு அழைத்துச் செல்கின்றாள் என்பது கம்பன் மறைமுகமாக சொல்லும் போதனை.
அன்னையை “பவநாசினி” அதாவது பிறவிச்சுழலை அறுப்பவள் என சகஸ்ர நாமம் போற்றும்.
இங்கேதான் இந்த காலராத்திரி அன்னையின் தாத்பரியத்தை புரிந்துகொள்ள முடியும். அவள் காலங்களை கடந்தவள், யார் தன்னை அண்டி நிற்பார்களோ அவர்களை காலம் கடந்தும் அழியாமல் தன் அருளால் நிலைக்கச் செய்வாள், அவர்களோடு அவர்களாக அவர்கள் பலமாக எக்காலமும் நிற்பாள் என்பது.
யோக சாஸ்திரம் அன்னை சகஸ்கரம் எனும் உச்சந்தலை சக்கரத்தில் சக்தி என்கின்றது. லலிதா சஹஸ்ரநாமம் அவளை “சஹஸ்ரதள பத்மஸ்தா” அதாவது ஆயிரம் இதழ் தாமரையில் வீற்றிருப்பவள் என்கின்றது.
அதுதான் துரிய சக்கரம் என அழைக்கப்படும், இதுதான் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை எனவும் அழைக்கப்படும்.
இந்த சக்கரம்தான் இறைசக்தியுடன் சலனமற்ற நிலையில் கடலில் நதிபோல் கலக்கச் செய்கின்றது, எல்லாம் கடந்த எல்லா உணர்வு சுகதுக்கம் பாசபந்தம் விருப்பு வெறுப்பு கடந்த சமாதி நிலை எனும் அந்தக் கடைசி நிலை இங்கேதான் உருவாகும்.
இந்தச் சக்கரம் துலங்கும் ஒளிதான் ஞான ஒளி, பெரும் மகான்கள் ஞானியர் தலையினை சுற்றி ஒளிரும் ஞானவட்டம் இதுதான்.
இந்த ஞானப்பெரும் நிலையில்தான் அதி உன்னத ஞானம் வாய்க்கும், எல்லாம் கடந்த அந்தப் பெருஞான வெளியில்தான், வார்த்தைகளற்ற வாதங்களற்ற அந்த ஞான நிலையில்தான், துரிய சக்கரம் துலங்கிய அந்த நிலையில்தான் எல்லையில்லா பெரும் அன்பு எல்லா உயிர்மேலும் ஊற்றெடுக்கும்.
ஆன்மீகத்தின் கடைசி உச்ச நிலை இது.
இந்நிலையில்தான் எல்லா வடிவமும் தெய்வவடிமாக தோன்றும், காண்பவை காணாதவை எல்லாமே இறைவடிவம் என்பதும், மகா உயர்ந்த ஞான தத்துவங்களும் அப்போதுதான் புரியும்.
அந்நிலையில் பிறபில்லா பெரு நிலையினை, பெரு ஞான நிலையினை அடையமுடியும்.
அத்வைதம் என சங்கரர் போதித்த தத்துவம் அதுதான். தான் வேறு இறைவன் வேறு என எண்ணாமல் அந்த பெரும் சக்தியுடன் ஒன்றாக கலந்துவிடும் பெரும் தத்துவம்.
எல்லையில்லா அன்பை , எல்லையில்லா பேரன்பை எல்லோர்மேலும், எல்லா உயிர்கள் மேலும் கொட்டும் பெரும்ஞான நிலை, தெய்வீக நிலை.
ஆதிசங்கரர் தன் பிரசித்தியான
க்ஷிதௌ ஷட்பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாஸ-துதகே
ஹுதாஸே த்வாசஷ்டிஹி சதுரதிக பஞ்சாஸ-தநிலே |
திவி த்விஹி ஷட்த்ரிம்ஸந்-மநஸிச சதுஷ்சஷ்டிரிதி யே
மயூகாஸ்-தேஷா-மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம் ||
அதாவது தேவியே, தாயே, ப்ருதிவீ தத்துவமான மூலாதாரத்தில் 56 கிரணங்களும், ஜல தத்துவமாகிய மணிபூரகத்தில் 52 கிரணங்களும், அக்னி தத்துவமாகிய ஸ்வாதிஷ்டானத்தில் 62 கிரணங்களும், வாயு தத்துவமாகிய அநாஹதத்தில் 54 கிரணங்களும், ஆகாச தத்துவமாகிய விசுத்தி சக்கரத்தில் 72 கிரணங்களும், மனஸ் தத்துவமாகிய ஆஜ்ஞா சக்கரத்தில் 64 கிரணங்களும் இருப்பதாக (யோக) சாஸ்திரம் சொல்கிறது என்பது பொருள்.
இந்த சக்கரங்களுக்கு கிரணங்களுக்கு மேலே உள்ள ஸஹஸ்ரார கமலத்தின் மத்தியில் உன் திருவடிகள் விளங்குகின்றது.
இந்த கிரண கால அளவுகள் நுணுக்கமான கணக்கீடுகள், பூமியில் ஒருவன் வாழும் காலத்தை குறிப்பவை. அதன் மேல் உள்ள சஹஸ்ரார சக்கரம் என்பதுதான் அந்த சக்கரம் விரியப்பெற்றவன் கால நேரத்தை கடந்து நிற்பான் என்பதைச் சொல்கின்றது.
ஸ்ரீ சக்கர தத்துவத்தில் இந்த காலராத்திரி என்பவள் ஏழாம் ஆவர்ணத்தில் அமர்ந்திருப்பாள் இது . எட்டு முக்கோண தளங்களைக் கொண்டது.
ஏழாவது ஆவரணத்திற்கு “சர்வ ரோஹ சக்கரம்’” என்று பெயர். இங்கு வாசினீ, காமேச்வரி, மோதினி, விமலா, அருணா, ஜயிநீ, சர்வேச்வரி, கௌலினி போன்ற எட்டு வாக் தேவிகள் குடி கொண்டுள்ளார்கள்.
இந்த வாக் தேவிகள் தான் லலிதா சஹஸ்ரநாமத்தை இயற்றியவர்கள். இவர்கள்தான் கல்வி, அறிவு, வாக்கு வன்மை, கவி என எல்லா வரமும் அருள்வார்கள். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.
ஆக, காலராத்திரி தத்துவமும் யோக சாஸ்திரமும் இந்த ஸ்ரீ சக்கர தத்துவமும் சொல்வது காலத்தை வென்று நிற்பவள் அன்னை. காலத்தை வெல்லும் ஞானமும் அறிவும் தந்து காப்பவள் அன்னை.
ஆம். இந்த காலராத்திரி தேவியும் அன்னை சரஸ்வதியும் ஒன்றே. அப்படியே சிவனில் கலந்த சாம்பவியும் ஒன்றே.
அன்னை அசுரர்களை அழிப்பவள். அப்படியே ஒரு மனிதனின் துர்குணம் எல்லாம் அழித்து அறியாமை அழித்து அவனுக்கு ஞானமும் அறிவும் பலமும் பெருகவைத்து அவனைப் பெரிய இடத்துக்கு உயர்த்துவாள்.
அன்னை காளிதான் ஞானம் அருளும் சரஸ்வதி என்பதை எவ்வளவோ புராணங்கள் ஸ்லோகங்கள் சொல்லி வைத்தன.
அன்னை கலைகளின் தாய், எல்லா கலைகளும் அழகும் ரசனையும் நுணுக்கமும் அவளிடமிருந்தே வருகின்றன, “தசமஹா வித்யா” என கொண்டாடப்படுபவள் அவள்.
அவள் கலைகளை மாலையாக சூடியவள், இடையிலே அவற்றை அந்த கலைகளை வைரம் போல் மேகலையாக இடுப்பில் அணிந்தவள் என்பதால் அவளை “கலா வயிரவி” என்பார்கள்.
“கலா மாலா” என அவளுக்கு ஒரு நாமம் உண்டு.
சௌந்தரிய லஹரி அவளை வைரங்களை இடுப்பில் அணிந்தவளும், சூரிய சந்திர மண்டலங்களை மார்பகமாக கொண்டவள் அதனால் மண்டலி எனவும் சொல்கின்றது.
ஒளிமிகுந்த மாலைகளை அணிந்ததால் அவள் மாலினி, எழுத்தாகவும் எண்ணாகவும் இசையாகவும் விளங்கும் மாத்ருகா மாலையினை கொண்டவளாதலால் மாலினி என்றும் அவளுக்கு பெயர்.
“பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே”
என எல்லாம் ஒரே அன்னை என அபிராமி பட்டர் இந்த தத்துவத்தையே பாடினார்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் உஜ்ஜைனி மகா காளி, அடிப்டையில் அந்த ஆலயம் காளகாளேஸ்வரர் சிவனுக்கானது, அவர் காலநேரம் கடந்தவர் என்பதை சொல்லும் ஆலயம் அது, அந்த ஆலயத்தின் தேவிதான் மகா காளி.
அவள்தான் காளிதாசன் எனும் மகா கவிஞனை தன் அருளில் உருவாக்கினாள்.
ஆம். அவளே கலைகளை அருள்வாள், தூய அறிவினை அருள்வாள், அவளே காளிதாசனை உருவாக்கினாள். கம்பனை தொட்டதும் அவளே.
அவளே வித்யாரண்யரை ஆட்கொண்டாள், அவளே கம்பண்ணனுக்கு வாள் கொடுத்தாள், அவளே சிவாஜிக்கு பவானியாக வந்தாள்.
அவள்தான் ராமகிருஷ்ண பரமஹம்சரையும், விவேகானந்தரையும் ஆட்கொண்டாள்.
ஆம். ஆழ கவனித்தால் அந்த அருள்தன்மை அவளின் வரம் புரியும். அவள் ஒரு மனிதனை தூய நோக்கமும், தூய அறிவும், சொல்வாக்கும், செல்வாக்கும், தைரியமும், ஞானமும், கீர்த்தியும், பெரும் ஆற்றலும், பெரும் சிறப்பும் கொடுக்கின்றாள்.
அதனால் அவர்கள் காலத்தை வென்று நிற்கின்றார்கள்.
அன்னை கொடுக்கும் வரம் காலத்தால் அழியாது, அவர்கள் கால காலமாக நிலைத்திருப்பார்கள், அப்படியான அருளை அருள்பவளே காலராத்திரி.
இதனாலே சரஸ்வதி தேவி வழிபாடு அன்று அவளுக்கானது என்றார்கள்.
ச்கஸ்கர சக்கரத்தின் அதிபதி காலத்ரி என்பதிலே அவளே சரஸ்வதி என்பது தெளிவாகின்றது.
சரஸ்வதியின் வாகனம் அன்னப்பறவை, அது அதி சுத்தமானது, நல்ல நீரில் மட்டும் வாழக்கூடியது, பாலும் நீரும் தனிதனியே பகுக்க கூடியது, இன்னும் அதிமுக்கியம் அது நீந்தும் போதோ, பறக்கும் போதோ துளி சத்தம் சலனம் வராது.
அவ்வளவு அமைதி.
இந்த சக்கரம் துலங்கி ஒருவன் சமாதி நிலை எனும் முழு ஞான நிலைக்கு, வாக்கும் செயலுமற்ற பெருஞான நிலைக்கு செல்லும்போது அவன் இயக்கம் அன்னப்பறவை போலாகிவிடும்.
அதாவது நன்மை தீமை பகுத்தறியமுடியும், சுத்தமானதை மட்டும் ஏற்றுக்கொள்ளமுடியும்.
இன்னும் சலனமற்ற இயக்கத்தை, சத்தமே இல்லாத மனவோட்டத்தை அவனால் தொடரமுடியும், அந்த ஆரவாரமாற்ற அதே நேரம் புனிதமான தெய்வீக நிலையினைத்தான் அன்னப்பறவைக்கு ஒப்பீட்டார்கள்.
ஆம். சஹஸ்ரசக்கரம், சரஸ்வதி, காலத்திரி என எல்லாமும் ஒரே புள்ளியில் வருவதை இங்கே கவனிக்கலாம்.
இந்த காலத்திரி தேவியின் வாகனம் கழுதை, கழுதை என்றவுடன் அது மூதேவி வாகனம் எனக் கருதி ஒதுக்கிவிடக்கூடாது.
இங்கே கழுதையின் பல நுணுக்கமான குணங்களை கொண்டு தத்துவரீதியாக அன்னையினை புரிந்துகொள்ளல் வேண்டும்.
கழுதையில் பல வகை உண்டு. இங்கே அவளின் வாகனமாக சொல்லப்படுவது அத்தரி என அக்காலத்தில் இருந்த கழுதை, கோவேறு கழுதை சாயல்.
இதனை சிலப்பதிகாரத்தில் இன்னும் பல இடங்களில் காணலாம்.
உண்மையில் வயல்களிலும், வண்டி இழுக்கவும் காளைகள் பயன்பட்டன. வேகப் பயணத்துக்கு குதிரைகள் பயன்பட்டன. ஆனால், பொதி சுமக்கவும், தொழிலாளர் வியாபாரிகளின் பெரும் ஆதாரமாகவும் கழுதைகள்தான் இருந்தன.
கழுதைகள்தான் உழைக்கும். கடுமையாக செல்வத்தை கொண்டுவரும் என்பதால் அவை மதிப்பு மிக்கதாக கருதப்பட்டன.
கழுதைகளின் பெரும் பலம் சோர்வில்லாமல் உழைப்பது, அதுவும் மலைசரிவோ பள்ளதாக்கோ எங்கும் அது மிக கவனமாக அழகாக சோர்வின்றி பயணிக்கும்.
வறண்ட பகுதியில் கூட சோர்வாகாமல் வேலை செய்யும், எந்த சூழலையும் தாங்கும் இயல்பு அதனுடையது, அதனால்தான் வியாபாரிகள் அதன்மேல் பொதி சுமத்தி சென்றார்கள்.
அது கடும் உழைப்பாளி என்றாலும் குறைவாகத்தான் உண்ணும், குறைந்த உணவில் அதனால் நிறைவு கொள்ள முடியும்.
கழுதையின் ஆக சிறந்த பலம் அதன் நினைவாற்றல், ஒருமுறை ஒரு நபரையோ பாதையினையோ பார்த்துவிட்டால் எத்தனை வருடமானாலும் மறக்காது, சரியாக அடையாளம் காணும்.
கழுதையால் 60 மைலுக்கு அப்பால் வரும் ஒலியினையும் கேட்க முடியும், காதுகள் அவ்வளவு உணர்திறன் மிக்கவை. அதனால் மழைவருவதை அவதானிக்க முடியும், பூகம்பத்தை அறியும்.
கழுதைகள் எந்த விஷயத்தை செய்தாலும் அதை யோசித்து தான் செய்யும், ஒரு அடி எடுத்து வைத்தாலும் பாதுகாப்பாக உணர்ந்தால்தான் வைக்கும், பாதுகாப்பு இல்லை என அது உணர்ந்தால் அந்த விஷயத்தை செய்யாது.
இன்னொரு விசேஷகுணம் தனக்கு பிடிக்காத வழியில் செல்லாது, தனக்கு பிடிக்காத செயலை செய்ய சொன்னால் ஒரு அடி நகராது திருப்பி உதைக்கும்.
கழுதை சாந்தபிராணி. ஆனால், ஆபத்தென்றால் சிங்கத்தையும் விரட்டி அடிக்கும் தைரியமும் போராட்டமும் அதற்கு உண்டு.
அதே நேரம் பாசம் காட்டுவதில் தனி சிறப்பானது கழுதை, தனக்கு பிடித்தமானவன் என ஒருவனை கண்டுவிட்டால் அவனோடு உறவாடும், மிக நெருங்கும் ஏங்கும், உணவு இல்லாவிட்டால் கூட அவனுக்காய் உழைக்கும்.
அதன் உடல் எப்போதும் குளிர்ந்த நிலையில் இருக்கும், எந்த கடும் வெப்பமும் அதனை நிலைகுலைய செய்யாது, அதன் இயல்பு எப்பொதும் ஒரே போன்றிருக்கும்.
கழுதைகள் தனிமை விரும்பிகள், தனிமையில்தான் அவை உற்சாகமாக வேலை செய்யும். கூடி இருந்தாலும் சாத்வீகமான இனங்களோடுதான் ஆடுகள் போன்ற இனத்தோடுதான் கூடியிருக்கும்.
அக்காலத்தில் எதிரிகள் கோட்டையினை பகைமன்னன் பிடித்தால் அதை இடித்து கழுதையினை கொண்டு ஏரோட்டி எள்ளு விதைப்பது வழமை, அதாவது இனி இவை தங்கள் நிலம் அங்கே பழையன அழிந்து புதியன புகுதல் கழுதையினை முன்னிறுத்தியே செய்யப்பட்டிருகின்றது.
தண்டனை குற்றவாளியினை கழுதைமேல் ஏற்றுவது கழுதையே சாட்சி என்பதாகும் அதன் நினைவாற்றலுக்கு சாட்சி.
ஆக, கழுதை என்பது அன்று துரதிருஷ்டமோ, மந்தமோ, ஏழ்மையோ, அவமானமோ கொண்ட அடையாளம் அல்ல.
அது செல்வம், அறிவுடமை, செழுமை என கருதப்பட்டது. கழுதைதான் வியாபாரிகளுக்கு எல்லா பாதைகளிலும் கைகொடுத்து செல்வத்தை பெரும் புகழை கொடுத்தது.
அந்த கழுதையினை காளத்திரி தேவிக்கு கொடுத்து அவளால் அறிவு வரும், செல்வம் வரும், புகழ் வரும் என சொன்னார்கள்.
காளராத்திரி தேவி எல்லா செல்வமும் கீர்த்தியும் தருவாள், கழுதை போல் சுமப்பாள், கழுதை போல் ஆபத்துக்களை அறிவிப்பாள், எல்லா பாதையிலும் எல்லா சூழலிலும் உடனிருப்பாள், தன்னை அண்டியோர் மேல் பெரும் அன்பும் பாசமும் கருணையும் கொண்டிருப்பாள் என்பதை சொன்னார்கள்.
கழுதை என்பது பெரும் பயணத்தின் அடையாளம், சோர்வின்றி செல்லும் தன்மைக்கும் எல்லா வகை பாதைக்கும் நம்பகமான அடையாளம், எச்சுமையும் சுமக்கும் பெரும் அடையாளம்.
அந்த வரத்தை, அந்த ஞானத்தை, அந்த அறிவை ஆற்றலை தருபவள் அன்னை.
எதிர்ப்புக்களை சமாளிக்க வீரமும் தைரியமும் மட்டும் போதாது, அறிவும் விவேகமும் வேண்டும் விவேகத்துடன் கூடிய வீரமே வெற்றி தரும் இல்லையேல் அது முரட்டுதனமாகிவிடும்.
காளராத்திரி எனும் அன்னையினை குலப்பெண்கள் வணங்கும் நாள் இது.
ஒரு குலப்பெண்ணுக்கு குடும்பம் நடத்த பெரும் ஞானமும் அறிவும் அவசியம், அதோடு தைரியமும் அவசியம், அந்த ஞானத்தை அறிவினை அன்னை அருள்வாள்.
ஒரு குடும்பபெண் எதிர்கொள்ளும் பயணம் பெரிது, அவள் கணவன் குழந்தைகள் அவர்கள் வளர்ந்து திருமணம் பேரபிள்ளைகள் சொந்தபந்தம் என நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும்.
அந்த பயணத்தில் சுமை அதிகம், ஆபத்து அதிகம், ஓயாத உழைப்பு அதிகம், அதுவும் முன்னெச்செரிக்கையுடன் கூடியதும் எதிர்காலத்தை அறிவால் அணுகி பெரும் நினைவாற்றலுடன் செல்லும் பெரும் பொறுப்பு உண்டு.
பெண்ணே குடும்ப சுமையினை தாங்கி செல்பவள். நீண்டகாலம் நடத்துபவள்.
அதனாலே அவள் கழுதையின் சாயலில் உழைக்க பலம் பெற்றாக வேண்டும். அந்த பொறுமை, சாந்தம், பலம், கடும் உழைப்பு சோர்வின்மை நினைவாற்றல் ஆபத்து களைதல் எப்போதும் புன்னகையாய் இயல்பாய் இருத்தல், ஆகிய இயல்புகள் குணங்கள் அவசியம்.
அந்த வரத்தை தருபவள் அன்னை, அவளிடம் இன்று குலமாந்தர் வேண்டும் வரம் அதுதான்.
காளராத்திரி என்பவள் காலம் கடந்து நிற்கும் அருளை தருவாள், அதனை செல்வம் மட்டும் தராது, அதிகாரம் தராது, அறிவுடன் கூடிய ஞானநிலையே தரும்.
காளராத்திரி எனும் காளி அருளை பெற்றவர்களே வியாசர் காலமுதல் சீனிவாச ராமானுஜம் வரை காலத்தை வென்று நிற்கின்றார்கள், ஒரு காலமும் அவர்களுக்கு அழிவில்லை.
காலம் அவர்களிடம் தோற்றிருக்கின்றது.
பெண்களில் அறிவுடை பெண்களான அருந்ததி, பாஞ்சாலி, சீதை, தாரா முதல் ஜீஜாபாய் அகல்யாய், மங்கம்மாள் எனக் காலம் கடந்து நிற்பதும் அப்படியே.
இந்த வரத்தை காலத்தை வெல்லும் அறிவுடை வரத்தை தருபவளே, அதனை தூய வரமாக தருபவளே அன்னை.
அஞ்ஞானம் நீங்கினால் அறியாமை நீங்கினால் எல்லா அறிவும் தெளிவும் ஞானமும் வாய்க்கும், அது எல்லா சிறப்பும் கீர்த்தியும் புகழும் செல்வமும் அருளும், காலம் தாண்டி நிலைப்பார்கள்.
அன்னை காளராத்திரிக்கு இன்று கருநீல மேடை அமைத்து காராமணி சுண்டல், திரட்டி பால் பாயசம், தேங்காய் சாதம் என படைத்து வழிபடுதல் நன்று.
அவளுக்கான ஸ்லொகம் இதோ,
“வாம படொள்ள சல்லோஹலட கந்தக பூஷணா,
வர்தான முர்தா திவ்ய கிருஷ்ண காளராத்திரி பயங்கரி”
“நீளமான நாக்கு கொண்டு, கழுதை மீது ஏறி வருபவளும், ஆக்ரோஷமாக இருப்பவளும், பல வண்ணங்களில் ஆபரணம் அணிந்து இருப்பவளுமாகிய பயங்கரியாம் அன்னை காளராத்திரி என்னுடைய அஞ்ஞானம் என்னும் இருளை போக்கி அருள வேண்டும்”
அந்த அன்னை இந்நாளில் எல்லோருக்கும் நல்ல சிந்தனையும், நல்ல அறிவும், நல்ல ஞானமும் கொடுக்கட்டும், அதனால் எல்லா நலன்களும் எல்லாருக்கும் கிடைக்கட்டும்.
சோர்வின்றி உழைக்கும் ஆற்றலும், எல்லா சுமையினையும் சுமக்கும் ஆற்றலும், எல்லா காலத்திலும் தன் இயல்பில் தன் கடமையினை செய்யும் பலமும் அதை செய்ய தேர்ந்த அறிவும் பெரும் ஞானமும் அன்னை எல்லோருக்கும் கொடுக்கட்டும்.
நவதுர்கா : 08 மகா கௌரி
நவராத்திரியில் எட்டாம் நாள், அந்த அஷ்டமி நாள் மகா கௌரிக்கானது. இந்த மகா கௌரிதான் பூமியில் ஒவ்வொரு பெயரில் வந்து அசுரர்களையெல்லாம் அழித்தாள்; அவள் தூய்மையானவள்; வெண்ணிறமானவள்; எல்லா வரமும் தருபவள்; எல்லா தெய்வங்களையும் வழிபடுவதும் இவளை வழிபடுவதும் ஒன்றே என புராணங்கள், வேதங்கள் சொல்கின்றன.
இந்தத் தேவியினை பற்றிய குறிப்புகள் பல இடங்களில் உண்டு. சதி நெருப்பில் வீழ்ந்து கருமையான அன்னையினை சிவன் வெண் நிறமாக மாற்றினார் என்கின்றது புராணம்.
தேவி மஹாத்மியம் இவளைப் பற்றி நிம்ப சுதும்ப வதத்தில் தெளிவாக சொல்கின்றது. அவளின் தோற்றம் அவளின் ஆற்றல் அங்கேதான் சொல்லப்படுகிறது.
நிம்ப சுதும்பனை அழிக்கும் போரில் அன்னை வெண் நிறத்தில் ஜொலிக்கின்றாள். அப்போது ரத்த பீஜன் உள்ளிட்ட அசுரர்களின் ஆட்டம் அதிகமாகும் போது கருமை நிற காளி அவளில் இருந்து வெளிப்பட்டு அவனை சங்காரம் செய்கின்றாள்.
இன்னும் பல இடங்களில் அன்னையிடமிருந்தே சப்த கன்னியர் தோன்றிவருவதும் பின் அவளில் ஒடுங்குவதும் தெரிகின்றது.
இந்த அன்னைதான் மகா கௌரி என்றாகின்றாள். பொதுவாக ஒவ்வொரு திதியிலும் அன்னை வரங்களை அருள்வது உண்டு. அட்சய திரிதியை, ரம்பா திரிதியை, சூரிய சப்தமி என்பதெல்லாம் அதுதான்.
அந்த வரங்களை எல்லாம் அருளும் மொத்த தேவி இவள்.
யோக சாஸ்திரத்தில் அன்னை உடலை தாண்டிய சக்கரத்தின் அதிபதியாக அறியப்படுகின்றாள். மானுட உடலில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளன. அதை தாண்டிய எட்டாம் சக்கரம் ஒன்று உண்டு, அது ஸ்தூல உடலும் சூட்சும உடலும் சந்திக்கும் இடத்தில் உண்டு.
உடலின் ஆறு சக்கரம் தாண்டி இன்னொரு சக்கரம் பூத உடலை தாண்டி ஸ்தூல உடலில் தலைக்கு மேல் சில அங்குல உயரத்தில் உண்டு, ஒவ்வொரு உடலிலும் இந்த அமைப்பு உண்டு.
யோகத்திலும் தவத்திலும் மிக சிறந்து உச்சம் தொட்டவருக்கு மானிட தலையினை தாண்டி மேலே இருக்கும் அந்தச் சக்கரம் துலங்கும், அப்பொழுது மிகச் சிறந்த ஞான நிலை ஏற்படும்.
(கபாலத்துக்கு மேல் இருக்கும் அந்தச் சக்கரத்தை மானிட உடலோடு இணைக்கத்தான் ரிஷிகள் பெரிய கொண்டையினை தலையில் வைப்பார்கள், இன்னும் அரசன் கிரீடத்தின் தத்துவமே அதுதான்.
அரசனின் ஸ்தூல உடல் அளவு, அவன் உச்சந்தலைக்கும் இந்த மேல் நிற்கும் சக்கரத்திற்குமான இடைவெளி பொறுத்துத்தான் கிரீடம் அமைக்கப்படும், ராஜகுருதான் அதை செய்வார்)
இந்தச் சக்கரத்தை நிராதார தலம் என்றும் சொல்வார்கள். இது உடலையும் பிரபஞ்சத்தையும் இணைப்பது. உடலை சுற்றி பிரபை என்ற ஒளி உருவை இது ஏற்படுத்துகிறது .
ஆங்கிலத்தில் “aura” ஆரா என்று அழைக்கப்படுவதும் இதுவே.
ஆம். அந்த ஞானப்பெரு வெளிச்சத்தை, சூட்சும உடலை ஒளிரச்செய்பவள் இவள்தான். ஞானியர் தலையினை சுற்றிய ஒளிவட்டம், அவர்களின் சூட்சும உடலின் பிரகாசமெல்லாம் அன்னையின் அருளால் வருவது.
ஸ்ரீ சக்கர தத்துத்தில் எட்டாம் ஆவரணம் எனும் இடம் ஒரு முக்கோண வடிவமான தளத்தைக் கொண்டது. இந்த ஆவரணத்தின் சக்கரேஸ்வரி திரிபுராம்பா என்பவள் ஆகும். “சர்வசித்தி ப்ரத சக்கரம்” எனப்படும் இந்த ஆவரணத்தில் காமேசி, வச்சிரேசி, பகமாலினி என்ற மூன்று தேவதைகளும் முக்கோணத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நின்று காவலில் உள்ளார்கள்.
இதில் மேலும் சில சக்தி தேவியர்களும், அதிரஹஸ்ய யோகினீ தேவதையும் உள்ளார்கள். ஆணவம், கர்மா, மாயை என்ற மும்மலங்களும் இச்சக்கரத்தை பூஜிப்பதினால் எரிந்து சாம்பலாகி விடுகிறது என்பது தத்துவம்.
இனி இந்த மூன்று வகைகளையும் பொருத்தி பார்த்தால் அன்னையின் தத்துவம் புரியும்.
அதாவது யோக தத்துவப்படி அன்னை நிராதர சக்கரம் எனும் சூட்சும உடலின் சக்தி, அங்கே அவளே பிரகாசமான வெள்ளை நிறத்தை கொடுக்கின்றாள்.
ஸ்ரீ சக்கர தத்துவத்தில் மும்மலத்தை அழிப்பவள் அவளே. இந்த மும்மலமும் அழியுமிடத்தில் வெண்மை எனும் தூய்மை தானே வரும்.
ஆக, அன்னை மகா தூய்மையானவள்; மகா பரிசுத்தமானவள்; அவளே எல்லாவற்றின் தொடக்கமும் முடிவுமாக இருக்கின்றாள்; எல்லா சக்தியும் அவளில் தொடங்கி அவளிலே முடிகின்றன.
சரி, அன்னையினை ஏன் அஷ்டமியில் அதுவும் புரட்டாசி அஷ்டமியில் கொண்டாட வைத்தார்கள்?
12 மாதங்களில் நடுவில் வரும் மாதம் புரட்டாசி, ஒரு அமாமாசை முதல் மறு அமாவாசை வரை ஒரு மாதம் எனும் நிலையில் நடுவில் வரும் திதி அஷ்டமி.
இந்த அஷ்டமி என்பது நடுவில் வரும் நாள், பொதுவில் வரும் நாள். ஆம். அன்னை எல்லோருக்கும் பொதுவானவள்; நடுநிலையானவள்; எல்லோரையும் ஒன்றாக கருதுபவள். அதனால் எது நியாயம், எது தர்மம், எது சரி, எது தவறு எனப் பாரபட்சம் பார்க்காமல் தீர்ப்பளிப்பவள், அப்படியே அன்பும் காட்டுபவள் என்பது அதன் தாத்பரியம்.
( கோகுலாஷ்டமி, கால பைரவர் அஷ்டமியெல்லாம் இதே தாத்பரியமே)
இதை இன்னும் அழுத்தி சொல்லவேண்டுமானால் நிம்ப சுதும்ப வதத்தில் சொல்லலாம், அன்னையின் தாத்பரியம் அங்கேதான் இருக்கின்றது
அன்னை மஹாமாயா, அதாவது சுத்தமாயை அசுத்தமாயை எல்லாம் கலந்தவள், உலக பிரபஞ்ச இயக்கத்துக்காய் எல்லாம் தன்னுள் கொண்டிருப்பவள்.
அவளுக்கு தேவர்கள், அசுரர்கள் மானுடர்கள் என எல்லா உயிர்களும் படைப்பும் ஒன்றுதான், அபப்டியானவள் நிம்ப சுதும்பர்கள் சிவனிடம் வரம்பெற்று தேவர்களை துன்புறுத்துவதை காண்கின்றாள்.
அங்கே கவனிக்கவேண்டிய விஷயம் சிவனிடம் வரம்பெற்றாவ்ர்கள் அந்த அசுரர்கள். அந்த வரம் சாதாரணமாக வரவில்லை, சிவனுக்காய் கடும் வழிபாடும் தவமும் இருந்து அசுரர் வாங்கிய வரம் அது, பெரும் சிவபக்தர்கள் அந்த அசுரர்கள்.
அவர்கள் தேவர்களுடன் சண்டையிட்டு தேவலோகைத்தை கைப்பற்றும் போதும் அன்னைக்கு அவர்களிடம் குறையேதுமில்லை, அவர்கள் வழிபாட்டிலும் சிவன் கொடுத்த வரத்திலும் தவத்திலும் சரியாக இருந்தார்கள்.
சிவன் கொடுத்த வரத்தின்படியேதான் வெற்றி மேல் வெற்றி பெற்றார்கள்.
அப்படியானவர்கள் அவர்கள் அகம்பாவத்தில் ஆடும் போது, அகங்காரத்தில் அட்டகாசம் செய்தபோது அவர்கள் திருந்த சிவனையே தேவி தூது அனுப்பினாள்.
இதனால் அவளை “சிவ தூதி” எனப் பெயர் பெற்றதை லலிதா சஹஸ்ரநாமம் சொல்கின்றது.
சிவனையே அன்னை அனுப்பியும் அசுரர்கள் அடங்கவில்லை, தங்களுக்கு அழிவே இல்லா வரம் இருப்பதாக பெரும் அட்டகாசம் செய்தனர்.
ஆனால், அந்த வரத்தில் பெண்ணால் கொல்லப்படும் ஆபத்து இருந்தது, அதுவும் அவர்கள் நெறிதவறி செல்லும் போதுதான் அழியும் வழி இருந்தது.
அதை அசுரரும் அறிந்திருந்தார்கள்.
அன்னை அங்கே தன் மஹாமாயையின் ஒரு பங்கான மாயையினை அழகான பெண்ணாக அதுவும் பேரழகான பெண்ணாக உருவாக்கி அவர்களை நெறி பிறழவைத்தார். அவள் மேல் ஆசைகொண்டுதான் நிம்ப சுதும்ப அசுரர்கள் அவளை அடையவேண்டி போர் தொடுத்து அந்த போரில்தான் தன் உடலில் இருந்து கருமை நிற காளியினை அனுப்பி அவர்களை ஒழித்து தேவர்களுக்கு நீதி செய்தாள்.
ஆக, இந்த நடுநிலையான அஷ்டமி தத்துவம் என்ன சொல்கின்றது என்றால், அன்னை எல்லாருக்கும் பொதுவானவள். ஆனால், யாரிடம் தவறு உண்டோ, யாரிடம் அகம்பாவம் உண்டோ அவர்களை அவர்களுக்கு தெரியமாலே வீழவைத்து அழித்துவிடுவாள், தர்மத்தை காப்பாள் என்பது.
(அஷ்டமியில் அவதரித்த கண்ணன் செய்ததும் அதுவேதான், பாண்டவருக்கும், கௌரவர்க்கும் நடுவில் நின்றவன் யாரிடம் தர்மம் இருந்ததோ அந்த கர்மத்தை மீட்டுக் கொடுத்தான்)
இந்நாளில் யார் நியாயத்தை கொண்டிருந்து, யார் அநியாயத்தால் பாதிக்கப்பட்டு, யாருக்கு நீதி வேண்டுமோ, யாருக்கு காவல் வேண்டுமோ அவர்களுக்கு அந்த வரத்தை அன்னை கொடுப்பாள்.
“கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக்
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
கெளரிகா மாஷிசைவ
சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற் றிருக்கை வேலே.”
எனப் பாடுவார் அருணகிரி நாதர், இத்தனை தேவியரின் மொத்த வடிவமே அன்னை.
“கங்காளி” என்றால் அந்தப் பெயரை இருவகையில் சொல்வார்கள். கரும்+காளி என்பது கங்காளியாயிற்று என்பது முதல்வகை, இரண்டாம் காரணம் உடுக்குபோன்ற இன்னொரு இசைகருவிக்கு கங்காளி எனப் பெயர், இதை கையில் ஏந்திய சிவன் கங்காளன் அவர்துணையானவர் கங்காளி, எப்படியாயினும் காளியினை குறிக்கும் சொல்லே கங்காளி, ரத்த பீஜன் போன்ற அரக்கர்களை அழிக்க வந்த காளியினை குறிப்பது, எலும்பு கூட்டை மாலையாக கொண்டவள்.
“சாமுண்டி” என்பவள் மகிஷாசூரனை அழிக்க வந்த அவதாரம்.
“வராஹி” என்பவள் நிம்ப சுதும்பனை அழிக்க அவதரித்த சப்த கன்னியரில் ஒரு அம்சம், ஆபத்துக்களை வராமல் காப்பவள் வராஹி, வராஹ மூர்த்தியின் சக்தி.
“இந்திராணி” என்பவள் சப்த கன்னியரில் ஒருத்தி. இந்திரனுக்கு துணையாகி பெரும் சக்தி கொடுப்பவள்.
“கெளமாரி” என்பவள் முருகனுக்கு பெரும் சக்தியானவள், சஷ்டி தேவி என்றும் அவளுக்கொரு பெயர் உண்டு.
“கமலாசனக் கன்னி” என்றால் தாமரையில் வீற்றிருக்கும் இளமையானவள் எனப் பொருள்.
அடுத்தும் தொடர்ந்து அன்னை நாமம் சொல்கின்றார் அருணகிரியார்.
“நா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
கெளரிகா மாஷி”
“நாரணி” என்றால் நாராயணனின் சக்தியானவள் எனப் பொருள்.
“குமரி” என்றால் எக்காலமும் தவமிருப்பவள் இறைவனுக்கு காத்திருப்பவள்.
“திரிபுரை” என்றால் மூன்று உலகங்களுக்கும் நாயகியான திரிபுர சுந்தரி.
“பைரவி” என்றால் பைரவரின் சக்தி.
“அமலை” இது அமலம் எனும் வார்த்தையின் மருவு ஆகும், மலம் எனும் வார்த்தைக்கு எதிர்ப்பதம் அமலம், அதாவது குற்றமற்றவள் எனப் பொருள்.
“கெளரி” என்றால் பொன்னிறமானவள், கயிலாயத்தின் பார்வதி கௌரி என அழைக்கப்படுவார்.
“காமாட்சி” என்றால் தன் அடியார்களை மிக அன்பாக ஆட்சி செய்பவள்.
அடுத்த வரியில் மேலும் அம்மன் பெயர்கள் வருகின்றது.
“சைவ சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்”
“சைவ சிங்காரி”, சைவ வழி என்றால் சிவன், சிவனின் தேவியானவள்.
“யாமளை” என்றால் நீல நிறத்தவள், சிவன் விஷத்தை உண்டு நீலகண்டனான பொழுது அவர் கழுத்தை பிடித்ததால் அன்னைக்கும் மேனி நீல நிறமாயிற்றாம். அவளை நீலி என்பார்கள்.
“பவானி” என்றால் பிறவி பந்தத்தை வேறறுப்பவள். எல்லாவற்றுக்கும் மூலமானவள்.
“கார்த்திகை” என்றால் முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களாக வந்தவள்.
” கொற்றி” என்றால் கொற்றவை அதாவது யுத்தகளத்திற்கு அதிபதி.
இத்தனை பெயர்களும் “மகா கௌரி” எனும் ஒரே வடிவத்தில் அடக்கம், அதுதான் கவனிக்கதக்கது. இந்த தேவியர் அருள் அனைத்தும் மகா கௌரி எனும் அந்த ஆதிசக்தி தருவாள்.
இங்கு ஆழ கவனிக்க வேண்டிய விஷயம் அவளின் வெண்மை நிறமும் அவளிடமிருந்து தோன்றும் கரிய நிறமும் பற்றியது.
இந்த தாத்பரிய ஆதாரம் ஆழமானது, பிரபஞ்சம் விஞ்ஞானம் என எல்லாமும் இங்கேதான் கலந்திருக்கின்றது.
அந்த மகா சக்தி பரிபூரணமானது, அது நன்மை தீமை, பகல் இரவு, வெளிச்சம் இருட்டு , குளிர் வெயில் என எல்லாம் கடந்தது, அதே நேரம் இது எல்லாமே அந்த சக்தியின் மாயைகளில் ஒன்று.
இவை இரண்டையும் கொண்டுதான் அவள் இந்த பிரபஞ்சத்தையும் இந்த மானுடரையும் எல்லா உயிர்களையும் இயக்குகின்றாள்.
அதாவது இருளை தருபவள் அவளே அங்கே வெளிச்சமாக வருபவளும் அவளே, இருளும் அவளே. இருளை நீக்கும் ஒளியும் அவளே, அஞ்ஞானமும் அவளே அந்த அஞ்ஞானத்தை நீக்கும் ஞானமும் அவளே.
அசுரரின் இயக்கம் அவளே, தேவரின் இயக்கம் அவளே.
இதெல்லாம் அவள் நடத்தும் நாடகம். அவளின் விளையாட்டு. ஒன்றைக் காட்டி ஒன்றை தேடவைத்து அதைக் காட்டி இதனைச் சமப்படுத்தி ஒரு சமநிலையுடன் இந்த பிரபஞ்ச பேரியக்கத்தை இயக்கும் ஆனந்த விளையாட்டு.
குழந்தையினை தாய் அச்சுறுத்தி உண்ணச்செய்து அவர்களை வழிக்கு கொண்டுவருவது போல ஒவ்வொரு இடத்திலும் விளையாடும் விளையாட்டு.
அதனை வானில் கருந்துளை என்றும், இருள் என்றும் செய்து, அங்கே ஒளி என்றும், வெளிச்சம் என்றும் வந்து அவளே சமபப்படுத்துகின்றாள்.
மானுடர் புரிந்துகொள்ள முடியா வகையில் அதனை இயக்குகின்றாள்.
பூமியில் மழை என்றும், வெயில் என்றும் குளிர் என்றும் கோடை என்றும் அவளே காட்சிகளை செய்கின்றாள். மானுடர்க்கு அஞ்ஞானமும் அதன் தீர்வாக ஞானமுமாக அவளே வருகின்றாள்.
மூதேவியும் அவளே; சீதேவியும் அவளே. இல்லையென்றால் சமநிலை பாதிக்கப்படும் என்பதை அறிந்திருக்கின்றாள்.
இதெல்லாம் ஒவ்வொருவர் கர்மாவினை சரியாகச் செய்ய அவள் ஆடும் நாடகங்கள். இந்த கர்மா மானுடர்க்கு உண்டு. எல்லா உயிர்க்கும் உண்டு. வானுக்கும் உண்டு, கோள்கள், அண்டம், பிரபஞ்சம் என எல்லாவற்றுக்கும் உண்டு.
அவரவர் கர்மாவினை செய்ய அன்னை பல மாயைகளை செய்கின்றாள். மானுட தர்மம், தேவர் தர்மம், சூரியன் பூமி போன்ற கோள்களின் தர்மம் என எல்லாமும் செய்ய, மழை, காற்று என எல்லாம் அதனதன் கர்மாவினை செய்ய அன்னை மாயையாக அதை ஞானமாக செய்து இயக்குகின்றாள்.
இதை அறிந்துதான் அவளுக்கு வெண்ணிறம் கொடுத்தார்கள் இந்துக்கள். வெள்ளை நிறமென்பது தூயதர்மத்தை அதே நேரம் கர்மத்தை குறிப்பது.
அரசனுக்கு வெண்கொற்ற குடை முதல் வெண்முரசு என என்னவெல்லாமோ கொடுத்து அவன் ஒருசார்பு இல்லாமல் தன்னலம் இல்லாமல் பொதுவாக நடுநிமையாக நின்று தர்மம் காப்பான் என அவனுக்கு வெண்மையினை அடையாளமாக கொடுத்தார்கள்.
நல்லோர்க்கும், நியாய தர்மம் அறிந்தவர்க்கும் வெண்ணிற ஆடையினை அடையாளமாக்கினார்கள். தீர்ப்பு சொல்லும் இடம், சபைகளெல்லாம் வெண்நிற ஆடை அப்படி வந்தது.
கோவிலுக்கு செல்லும் போது வெள்ளை ஆடையினை சொன்ன காரணம் தன் கர்மத்தை, தர்மத்தை ஒருவன் நினைக்க வேண்டும் என்பதே.
இதனை இந்துக்கள் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தில் இருந்தே எடுத்தார்கள்.
ஆம். இங்கு எதெல்லாம் காக்குமோ, எதெல்லாம் வாழவைக்குமோ, எதெல்லாம் உயிர்நிலையின் தொடக்கமோ அதெல்லாம் வெண்ணிறம் என்பதை அறிந்தார்கள்.
அது வெண் மேகம், வெள்ளை நிறமான அருவி, வெள்ளை நிறமான உப்பு, வெண்பருத்தி, தாயின் பால், உயிர்கள் முதலில் அருந்தும் பால் எனத் தொடங்கி எல்லாம் கவனித்தார்கள்.
பனியின் நிறம் வெண்மை, இன்னும் நுரை வெண்மை என எங்கும் வெண்மை நிறம் தூய்மையினை சொல்வதை கணித்தார்கள்.
பூமியில் எந்த விதை முளைத்தாலும் வெண்மை நிற முளை இருப்பதை அனுமானித்தார்கள், சூரியனின் புத்தொளி வெண்மை என்பதையும் அறிந்தார்கள்.
நெல், கோதுமை எனத் தானியங்களின் முதல் நிலை பால், அதுதான் கட்டியாகி தானியமாகின்றது. வெண்மை நிறமே அதன் மூலம் என்பதை அறிந்தார்கள்.
உயிர்களின் தொடக்கம் வெண்மை நிற விந்து என்பதையும் மானுடன் குடிக்கும் முதல் உணவு பால் என்பதையும், கடைசியில் அவன் வெந்து தணியும்போது எஞ்சுவது வெண்சாம்பல் என்பதையும் உணர்ந்தார்கள்.
இதனாலே விபூதியினை அவன் நெற்றியில் இட்டு இந்த நிறமே கர்மம், இதுவே உன் தர்மம் அதனால் கர்மத்தை செய் என்பதைச் சொன்னார்கள் .
இந்துமதம் இன்னும் இயற்கையினை கூர்மையாக பார்த்தது. எல்லாவற்றிலும் வெண்மை நிறமும், கருநிறமும் இருப்பதை கவனித்தது. அந்த கருமையும் ஏதோ ஒன்றை அழித்து நன்மை தருவதை அவதானித்தது.
வெண்மையாக எழும் மேகம் கருமையாய் மாறி இடி இடித்து ஆவேசமாய் பொழிவதில் வறட்சி அழிக்கப்பட்டு, வறுமை அழிக்கப்பட்டு, பெரும் வெம்மை ஒழிக்கப்பட்டு, எல்லாம் குளிவிப்பதை உணர்ந்து கருமேகமும் அன்னையின் இன்னொரு வடிவம் என்றது.
வெண்மையான ஒரு துளி விந்து இருட்டு கருவறைக்குள் உயிராக வளர்ந்து பின் தாயும் சேயும் கத்தி ஆர்ப்பரித்து வருவதை அவதானித்து அதுவும் அன்னையின் இயக்கம் என்றது.
இதனையே வான்வெளியில் கண்டது, இன்னும் அகம் எனும் மனதிலும் கண்டது.
சுருக்கமாகச் சொன்னால் அன்னையின் ரகசிய முகம் அல்லது தீமையினை கொடுமையினை அழிக்கும் சக்தி கருப்பு என்பதையும், அவள் தெளிவும், வாழ்வும், தர்மமும் கொடுக்கும் நிறம் வெண்மை என்பதையும் அறிந்தது.
அந்த வெண்மையே அவளின் தர்ம சக்தி. அதுவே அவள் எல்லா உயிரின் கர்மத்தை செய்ய வைக்கும் சக்தி என்பதையும் அவதானித்தது.
இந்தக் கர்மத்தை எப்படி செய்ய சொன்னது என்பதைத்தான் துர்காஷ்டமி நாள் சொல்கின்றது. இன்று கர்பா அல்லது கர்ப்ப நடனம் என ஒன்றை ஆடுவார்கள்.
வட இந்தியாவில் ஒரு கும்பத்தை நடுவில் வைத்து “கர்ப்ப” நடனம் என ஒன்றை ஆடுவார்கள். அதை ஒரே ரிதமாக ஆடுவார்கள். அதாவது பிரபஞ்ச இயக்கத்தை போல ஒன்றாக ஒரே ரிதத்தில் ஆடுவார்கள்.
அது பார்ப்பதற்கு வெறும் நடனமாக இருந்தாலும் பெரும் தத்துவத்தை போதிக்கும .
நடுவில் இருக்கும் கும்பம் பெரும் படைக்கும் சக்தியினை குறிக்கின்றது. அங்கிருந்துதான் எல்லாம் வருகின்றது என்பதை “கர்ப்பம்” எனச் சொல்கின்றது. அதைச் சுற்றி ஒரே லயமாக, ஒரே நடனமாக ஆடும் நடனம் நாம் இந்த பிரபஞ்சத்தோடு இணைந்து செல்லவேண்டுமே தவிர தனியாக ஆடினாலோ இல்லை ஆட்டத்துக்கு முரணாக ஆடினாலோ அர்த்தமில்லாதது என்பதை காட்டுகின்றது.
(இந்த கர்ப்ப நடனத்தின் மையத்தில் இருக்கும் கும்பமேதான் நவராத்திரியிலும், இதர விசேஷ நாட்களிலும் சக்தி உருவாக்கும் கும்பமாக ஆலயங்களிலும் வீடுகளிலும் வைக்கப்படுகின்றது. அதுவும் அம்மனுக்கு அது வைக்கப்படும் தத்துவமே அவளே எல்லாமும் உருவாக்கும் சக்தி என்பதன்றி வேறல்ல.
அங்கு தத்துவமும் இருக்கின்றது, செப்பு கலசத்தில் வைக்கப்படும் சில பொருட்களால் பிரபஞ்சத்தின் நல்ல ஈர்ப்புகளையும் பெறமுடிகின்றது )
இதே தத்துவத்தை மார்கழி திருவாதிரை அன்று மலையாளத்தில் ஆடுவார்கள்.
அதன் பொருள் இங்கு எல்லாமே ஒரே மகா சக்தி, அந்த மகா சக்திதான் எல்லாவற்றுக்கும் மையம். அதைச் சுற்றியே பிரபஞ்சமும் எல்லா உயிர்களும் இயங்குகின்றன. அந்த படைப்புக்கள் அதனதன் கர்மத்தில் அதனதன் பாதையில் சரியாக கர்மாவினை செய்தல் வேண்டும்.
அது தன்னிலை குழம்பினாலோ தன் இயல்பில் தன் கர்மத்தில் இருந்து மாறி வேறு குழப்பத்தை செய்தால் அந்த மகா சக்தியே வந்து சரிசெய்யும் என்பது.
தேவலோகத்தை அசுரர் பிடித்து ஆட்டிவைத்தனர் என்பது சந்திர சூரியர்களின் கர்மத்தை, மழை காற்று பகவானின் தர்மத்தை அசுரர்கள் தடுத்தனர். இயற்கையினை இயற்கை தர்மத்தை மாற்ற விரும்பினர். அதை அந்த மகா சக்தியே வந்து அழித்தாள், தர்மததை காத்தாள் என்பது.
தர்மம் இப்படி அவரவர் அவரவர் கடமையினை தொடர்ந்து செய்தலில்தான் இருக்கின்றது. இதை தானும் செய்து மக்களின் தர்மத்தை செய்பவன் மன்னன், அந்த தர்ம சக்கரத்தை காப்பதால் அவன் சக்கரவர்த்தி என்றது இந்துமதம்.
அன்னை “அகிலலோக சக்கர்வர்த்தினி” என்பது இதனால்தான்.
இந்த உலகினை இயக்கும் அன்னை .
ஆம். அனைவரும் அவரவர் கடமையினை கர்மத்தை, தர்மத்தை செய்ய இந்த மகா கௌரி அருளும் வரமும் தருவாள் என்பதுதான் துர்காஷ்டமியின் தாத்பரியம். இன்றைய நாளின் சிறப்பும் அதுவே.
இந்த தர்மத்தை செய்யும் அறிவும், கர்மம் செய்யும் ஞானமும் அன்னையால் வழங்கப்படும். மானுடர் அங்கே குழம்பும் போது ஞானமும் அறிவும் கொண்டு அவர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.
அதனால் ஒளிவடிவில், வெண்ணிற ஒளிவடிவில் அன்னை வந்து வரமருள வேண்டினார்கள். அதுதான் காயத்ரி வடிவமாயிற்று.
எங்களுக்கு தூய வெளிச்சம், எங்கும் வெண்மை எனும் தூய்மை பரவ அருள் வேண்டும் என ஒளியினை அழைத்துப் பாடினார்கள்.
லலிதா சஹஸ்ர நாமம் அன்னைக்கு பல பெயர்களைச் சொல்கின்றது..
அவளை “த்ரிகண்டேஷி” என்கின்றது. அதாவது அன்னை சந்திர, சூரிய, அக்னி என்ற மூன்று கண்டங்களுக்கும் ஈஸ்வரி என்கின்றது.
“பக்த ஹார்த தமோ பேத பானுமத் பானு சந்ததி” எனச் சொல்கின்றது. அதாவது பக்தர்களிடத்தில் கொண்ட அளப்பரிய பரிவினால், அவர்கள் மனத்தில் படிந்திருக்கும் அறியாமை எனும் இருளை தனது சூரியக்கதிர் போன்ற பிரகாசத்தால் அகலச்செய்பவள் எனப் பொருள்.
அவளை “மித்ர ரூபிணி” என்கின்றது. அதாவது சூரிய வடிவானவள் அன்னை எனச் சொல்கின்றது.
அவளை “பகாராத்யா” என்கின்றது. அதாவது சூரிய மண்டலத்தில் ஆராதிக்கத்தக்கவள் எனப் பொருள்.
அந்த லலிதா சஹஸ்ர நாமம் இன்னும் சொல்கின்றது. அவளை “ரவிப்ரக்யா” என்கின்றது. அதாவது சூரியனைப் போன்ற பிரகாசமுள்ளவள் எனப் பொருள்.
இன்னும் அவள் சூரிய மண்டலம், சந்திரமண்டலத்தின் நடுவில் இருப்பவள் என்பதைச் சொல்ல “பானுமண்டல மத்யஸ்தா”, “சந்த்ர மண்டல மத்யகா” என இரு பெயர்கள் உண்டு.
சவுந்தர்ய லஹரியில் ஒரு அழகான, ஆழமான பாடல் உண்டு.
“தடில்லேகாதந்வீம் தபன சசி வைச்வாநர மயீம்
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலானாம் தவ கலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மலமாயேன மனஸா
மஹாந்த: பச்யன்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்”
என்பது அப்பாடல். இதன் பொருள் இப்படி வரும்.
அதாவது, மின்னல் கொடி போல் நீண்ட உருவமும், சூக்ஷ்மமான ஜ்யோதிர்மயமாயும், நொடிப்பொழுது பக்தனுக்கு ப்ரகாசித்து மறைபவளாயும், சூரியன், சந்திரன், அக்னி வடிவமாயும், ஆறு ஆதார சக்கரங்களுக்கும் மேலே ஆயிரம் தளங்களுடைய தாமரையில் நிலை பெறுவதுமான, உன்னுடைய இந்த ‘சாதா’ என்ற கலையை, காமக்ரோதாதி மலங்களை மனதால் நாசம் செய்யப்பட்ட ஞானிகள் அலை அலையாக வரும் அளவுகடந்த ஆனந்தத்தை பார்ப்பவர்களாக அனுபவிக்கிறார்கள் எனப் பொருள்.
இன்னும் ஆழமாகச் சொல்லவேண்டும் என்றால், அன்னை ஒளியாக இருக்கின்றாள். அது ஞானத்தின் ஒளி, அந்த ஒளிதான் எல்லா உலக லௌகீக ஒளியாகவும், ஞான ஒளியாகவும் பிரகாசிக்கின்றது.
அந்த ஒளிதான் உடலின் சக்கரங்களின் ஒளியாக மறைந்திருக்கின்றது. அதை தியானத்தில் துலக்கினால், ஆறு சக்கரங்களும் துலங்கி, உச்ச சக்கரம் துலங்கும். அப்போது தலையினைச் சுற்றி ஒளிவட்டம் வருவது போல் பெரும் ஞானம் வாய்க்கும்.
அன்னை எல்லா ஒளிக்கும் அதிபதி. ஞானம் எனும் பேரொளி, ஞானச்சுடருக்கும், அறிவுச்சுடருக்கும் அவளே அதிபதி. அவளை வேண்டினால் ஒளி துலங்கும், ஆன்ம ஒளி பிரகாசிக்கும். அது எல்லா நலன்களையும் தரும்.
இந்தப் பாடல் கொஞ்சம் ஆழமான கருத்தைச் சொல்லும் பாடல். இந்துக்களின் பிரசித்தியான காயத்ரி மந்திரம் என்பது எல்லோரும் அறிந்தது.
காயத்ரி என்பது ஒரு அமைப்பே. பாடல் அமைப்பே தவிர முழு மந்திரம் அல்ல. உண்மையில் நாம் சொல்லும் காயத்ரி மந்திரத்தின் உண்மையான பெயர் “சாவித்ரி”.
அதாவது பிரம்மனின் துணையாக இருந்து உலகை ஆளும் ஒளியின் தெய்வமான சாவித்ரி.
அந்த மந்திரம் இதோ.
“ஓம் பூர் புவ ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்”
இதன் பொருள் இதுதான்.
“பூர் புவ ஸுவர்” என்றால் மூன்று உலகம் அனைத்திலும் வ்யாபித்துள்ள (பரவியுள்ள), தத் என்றால் அது அல்லது அவர், ஸவிதுர் என்றால் ஒளி பொருந்திய சூரியனாகவும் எல்லா ஒளிமயமானதாகவும், வரேண்யம் என்றால் வணங்கதக்கவராயும்,
“பர்கோ” என்றால் அறியாமை மற்றும் குழப்பத்தை பஸ்மமாக்குபவரும், தேவஸ்ய என்றால் தெய்வம், “யோ ந” என்றால் அவர் நம், “தீமஹி” என்றால் த்யானிக்கிறேன், ‘தியோ” என்றால் முடிவெடுக்கும் திறனை, “ப்ரசோதயாத்” என்றால் பிரகாசப்படுத்தட்டும்.
அதாவது, மூன்று உலகம் அனைத்திலும் வ்யாபித்துள்ள, ஒளி பொருந்திய, வணங்கத்தக்க அந்தத் தெய்வத்தை த்யானிக்கிறேன். அவர் நம் எல்லோருடைய அறியாமையை அகற்றி, அறிவைத் தூண்டி, முடிவெடுக்கும் திறனை பிரகாசப்படுத்தட்டும் என்பதுதான் சாவித்ரி மந்திரத்தின் பொருள்.
ஆம். மகா கௌரி, அவள் உருவான காயத்ரி தேவி, அந்த அம்சமான சரஸ்வதி என எல்லாம் ஒன்றே, ஒரே வடிவமே.
அதனாலேதான் தூய வெண்மையானவள், வெண்ணிற காளையில் வருகின்றவள் என மஹா கௌரிக்கான இந்த துர்காஷ்டமி நாளில் சரஸ்வதிக்கான நாளையும் சொன்னார்கள்.
அவளுக்கும் வெண்ணிற ஆடை, வெண்ணிற அன்னம், வெள்ளாடை எனக் கொடுத்தார்கள்.
நவராத்திரியில் சரஸ்வதி என அந்த மகா கௌரியினைத்தான் கொண்டாடி வழிபட சொன்னார்கள், எட்டாம் நாள் சரஸ்வதிக்கான காலம் என்பது இதுதான்.
அதனால் அந்த மகா கௌரியின் சரஸ்வதியினை கம்பனின் சரஸ்வதி அந்தாதி பாடலில் இருந்து பார்க்கலாம்.
“பெருந்திரு வும்சய மங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில்
இருந்தரு ளும்செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல் லாவுயிர்க்கும்
பொருந்திய ஞானம் தரும்இன்ப வேதப் பொருளருளும்
திருந்திய செல்வம் தரும் அழியாப்பெரும் சீர்தருமே”
அதாவது அன்னை இந்த உலகாளும் மகாலஷ்மி எல்லா ஞானமும் அறிவும் செல்வமும் தைரியமும் அவளிடமிருந்தே வருகின்றன. அப்படியான அன்னை என் மனதில் இருந்து கவியும் பாடலும் நல்ல சொல்லும் தைரியமும் தருகின்றாள்.
அவள் எல்லா உயிர்களையும் அதனதன் ஞானத்தில் இயக்குவது போல அதனதன் தனித்தன்மையில் இயக்குவது போல என்னை அவள் ஞானத்தில் இயக்குகின்றாள்.
அவள்தான் எனக்கு அழியாத ஞானமும் மோட்ச பாக்கியமும் தருவாள். அவளே இந்த பூமியில் எனக்கு செல்வாக்கும் செல்வமும் தந்து வாழ வைக்கின்றாள் என்பது பொருள்.
அன்னை மகாலக்ஷ்மி, அவளே ஜய லக்ஷ்மி. அதாவது எல்லா வகை செல்வமும் ஞானமும் அறிவும் அதைக் காக்கும் வழியும் தைரியமும் அவளே கொடுப்பாள்.
அவள் எல்லா உயிர்க்கும் அதைக் கொடுப்பாள்.
தேனீக்களின் ஞானம், எறும்பின் ஞானம், சிங்கத்தின் பலம், சிப்பியின் முத்து, புலியின் பாய்ச்சல், குயிலின் கானம், மயிலின் நடனம், மானின் மருட்சி என எல்லாமும் அவள் கொடுத்த ஞானமே.
செடிகளின் மலர், மணம், கொடிகளின் அழகு, கனிகளின் வடிவம், சுவை என எல்லாமும் அவள் கொடுத்ததே.
அவளே எல்லா உயிர்களையும் அதனதன் ஞானமாக இயக்குகின்றாள். எந்த அளவுக்கு ஞானம் ஒவ்வொரு உயிருக்கும் உண்டோ அவ்வகையில் தைரியமும் தன்னைக் காக்கப் போராடும் ஞானமும் பலமும் அவளே கொடுக்கின்றாள்.
தேனீக்கு கொடுக்கு, மலருக்கு முள் என எல்லா காவலும் அவள் கொடுப்பதே. அவள் முக்தியும் தருவாள்.
ஒரு வகையில் இப்பாடல் பிரசித்தியான சமஸ்கிருத ஸ்லோகத்தின் தழுவலே. அன்னைக்கு போற்றப்படும் பிரசித்தியான துதியினைத் தழுவி இயற்றப்பட்ட பாடல்.
அந்தப் பாடல் இதோ.
“ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே”
இதன் பொருள் என்னவென்றால் எல்லா மங்களங்களுக்கும் மங்களமாகத் திகழ்பவளே, சிவபெருமானின் நாயகியே, பக்தர்களின் எல்லா ஆசைகளையும் (இச்சைகள்) பூர்த்தி செய்யக்கூடியவளே, எல்லோருக்கும் புகலிடமாக இருப்பவளே, மூன்று கண்களை உடையவளே, குறைவில்லாத மேனி நிறமுடையவளே, தேவி உன்னை வணங்குகிறேன் என்பது.
இது பெரும்பாலும் எல்லா அம்மன் ஆலயங்களிலும் அர்ச்சனையின் பொழுது சொல்லி வணங்கும் துதி. இன்னும் எல்லா வழிபாட்டிலும் சொல்லப்படும் முக்கியமான ஸ்லோகம்.
இந்தப் பாடலின் பொருளைத்தான் அன்னை எல்லா மங்களங்களுக்கும் மங்களமாக எல்லா செல்வதுக்கும் செல்வமாக திகழ்பவள், பக்தரின் எல்லா ஆசைகளையும் தீர்த்து வைப்பவள் என்பதைத்தான் மையமாகக் கொண்டு இந்த ஸ்லோகத்தை தமிழாக்கி இந்தப் பாடலை கொடுத்திருக்கின்றான் கம்பன்.
ஆம். இன்று அந்த மகா கௌரிகான மந்திரத்தை சொல்லி வேண்ட வேண்டிய நாள்.
“ஸ்வேத விருஷப சமாருத ஷ்வேதாம்பர தாரா ஷுச்சின்
மகாகௌரி சுபம் தத்யான் மகாதேவ பிரமோததா”
அதாவது “வெண்மையான காளையின் மீது ஏறி வருபவளும், தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்தவளும், தூய்மையானவளும், மகாதேவரின் நாயகியாம் அன்னை மகா கௌரி எனக்கு அனைத்து நலன்களையும், வளங்களையும் தர பிரார்த்தனை செய்கிறேன்” என்பது அது.
அதோடு கூட கம்பனின் பாடல், ஆதிசங்கரரின் பாடலோடு “சர்வ மங்கள மாங்கல்யே” எனும் அந்த ஸ்லோகத்தையும் சொல்லி வணங்கலாம்.
இன்று இளம்சிகப்பு மேடையிட்டு கடலைபருப்பு சுண்டல், வெண்மையான பாயாசம், எலுமிச்சை சாதம் படைத்தல் நன்று.
இன்றைய நாளில் குலப்பெண்கள் படிக்கவேண்டிய பாடம், அன்னை எல்லா உயிருக்கும் பொதுவானவள். அதே நேரம் எது தர்மமோ அதைச் செய்பவள், அதே நேரம் ஒவ்வொருவரையும் அவரவர் கர்மத்தை செய்யவைத்து கரையேற்றுபவள்.
அப்படி குலப்பெண்கள் தங்கள் தர்மம் உணர்ந்திருக்க வேண்டும், குடும்பத்தில் எல்லோரையும் ஒன்றுபோலே கருத வேண்டும், அதே நேரம் எது நியாயமோ எது தர்மமோ அதை செய்தல் வேண்டும்.
முக்கியமாக குடும்பத்தில் ஒவ்வொருவரையும் கரையேற்றுதல் அவசியம், அவரவர் கர்மப்படி அவர் வாழ அவருக்கு துணையிருந்து வழிகாட்டி கரையேற்றுதல் அவசியம். அதுதான் குலப்பெண்ணின் முதல் தர்மம். அந்த வரத்தை அன்னை அருள்வாள் என்பதே.
அன்னை எல்லாருக்கும் அவரவர் கர்மம் செய்ய ஞானமும் அருளும் பலமும் தரட்டும். அங்கே அசுரகுணம் எழும்பினால் அசுர குணத்தோடு எதிரிகள் வந்தால் அவரவர் கர்மம் பாதிக்காதபடி தர்மம் பாதிக்காதபடி அவளே அதை தடுத்து ஒவ்வொருவரும் கர்மம் செய்து கரையேற வழி செய்யட்டும்.
அவளால் ஒவ்வொரு வீடும் இந்த பாரத நாடும் செழிக்கட்டும். வாழட்டும். உயரட்டும். உலகுக்கு தன் தர்மத்தை பாரதம் சரியாக செய்ய அன்னை துணையிருந்து வரம் அருளி காவல் இருக்கட்டும்.
நவதுர்கா 09 : சித்திதாத்ரி
நவதுர்கா தேவியரின் தாத்பரியத்தில் கடைசி படிநிலை அன்னை சித்திதாத்ரி. ‘சித்தி’ என்றால் பரிபூரண கடைசி நிலை வெற்றி, ‘தாத்ரி’ என்றால் வழங்குபவர் எனப் பொருள். ஆக, பெரும் சித்திநிலை, இனி அடைய எதுவுமில்லை எனும் அந்த பரிபூரண நிலையினை அருள்பவள் அன்னை சித்தி தாத்ரி.
இது எந்த நிலை என்றால் ஏழு சக்கரம் துலங்கி, அதை அடுத்து சூட்சும உடலின் சக்கரம் துலங்கி, அதனை அடுத்து பிரபஞ்சத்த்துடன் இரண்டற கலந்துவிடும் நிலை.
இதுதான் சமாதி நிலை இரண்டற கலந்துவிடும் நிலை, இந்த நிலை என்பது மகா சக்தி மிக்க நிலை அஷ்டமா சித்துக்களும் பெரும் வல்லமையும் கொண்ட நிலை, எல்லாமே சாத்தியம் எல்லாமே முடியும் எனும் அந்த மகா சக்திவாய்ந்த நிலை.
இந்த நிலையினை அன்னை அருள்வாள், அதற்கு முன் இந்த நிலை என்றால் என்ன என்பதை காணலாம்.
இந்துமதம் தன் ஆன்மீக படிநிலையில் மனிதன் இறைவனை அந்த மகா சக்தியினை அறிய ஆறு தரிசனங்களை சொன்னது.
சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என்பவையே அந்த ஆறு தரிசனங்கள்.
இவற்றில் யோகம் என்பது என்ன என அறிய நாம் பதஞ்சலி முனிவர் இயற்றிய ‘யோக சாஸ்திரம்’ என்னும் நூலைப் படிக்கலாம். மகாகவி பாரதியார் உள்ளிட்ட பலர் இந்த நூலைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
அதாவது இந்த தத்துவமும் பயிற்சியும் இந்துக்களின் வாழ்வியலாக இருந்திருக்கின்றன. அன்றாட வழிபாடாக இருந்திருக்கின்றது, அதில் அதிகம் தேடியோர் மகான்கள் என்றானார்கள்.
இங்கு எதுவும் விசித்திரம் அல்ல, எதுவும் புதுமை அல்ல, எதுவும் ஆச்சரியம் அல்ல, காலகாலமாக எல்லோரும் எளிதாக அறிந்திருந்த விஷயமே, இடையில் தொடர்பற்று போய் இப்பொழுது ஆங்காங்கு யோகம் அது இது எனப் பொய்யும் உண்மையும் கலந்து நமக்கே காசுக்கு விற்கப்படுகின்றது.
இதெல்லாம் இந்த மாபெரும் ஞான சமூகம் தன்னை சிதைத்து கொண்டதன் வலி மிகுந்த சாட்சிகள், தன் பொருளையே விலை கொடுத்து வாங்கும் விசித்திரங்கள்.
யோக சாஸ்திரம் என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்த விதமாய் இருந்தது, அது இப்படிப்பட்ட நிலைகளை விளக்குகின்றது.
யோகசாஸ்திரம் என்பது யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு அங்கங்களைக் கொண்ட இந்த யோகம், ஒரு மனிதனின் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கவனித்துச் சொல்கின்றது.
“யமம்” என்பது நடுநிலையுடன் இருத்தல், பேராசை இல்லாமல் மாயையில் இருந்து ஒதுங்கி இருத்தல், எந்த மாயையிலும் சிக்கா விவேகம் எனும் தன்மை.
“நியமம்” என்பது தெய்வ குணமும், திருப்தி, எளிமை, கற்றல் மற்றும் கடவுளிடம் சரணாகதியாகும் மனதை கொண்ட தன்மை.
“ஆசனம்” அதாவது இதன் பொருள் சக்கரங்களை இயக்கும் படி அமர்தல் அல்லது அசைத்து அவைகளை தயார் நிலைக்கு கொண்டு செல்லுதல்.
“பிராணாயாமம்” எனும் மூச்சு பயிற்சி என்பது ப்ராணா, மூச்சு, அயமா, அடக்குதல் அல்லது நிறுத்துதல். மேலும் வாழ்க்கை ஓட்டத்தைக் கட்டுப்படுத்துதல் எனவும் பொருள்படும்.”
“ப்ரத்யாஹரம்” என்பது புற உலக பொருள்களில் இருந்து ஐம்புலன்களையும் விலக்குதல்.
“தாரணை” என்பது ஒரே பொருளின் மீது கவனத்தை நிலைப் படுத்துதல்.
“தியானம்” என்பது சிந்திக்க மூழ்கும் விஷயத்தின் உண்மைத்தன்மையை ஆழ்ந்து சிந்தித்தல்.
“சமாதி” என்பது மரணம் அல்ல, உலக இன்பங்களை விட்டுவிட்டு, இறைவனுடன் வாழ்ந்து கொண்டே மனதால் இணைத்துவிடுதல்.
இவைதான் யோக சாஸ்திரத்தின் அடிப்படை தத்துவங்கள். இந்த சமாதி நிலை எனும் பெரும் நிலை, இரண்டற கலத்தல் எனும் நிலையினை வழங்குபவள் அன்னை.
இந்த நிலையினை எட்டியவர்களுக்கு அஷ்டமா சக்திகள் எனும் மிக மிக சூட்சுமமான சக்திகள் கைகூடும், இது கொஞ்சம் ஆழமானது, யோக சாஸ்திரத்தில் முக்கியமானது.
கீதையின் மூன்று யோகங்களும், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் சொல்வது இதுவே, இந்த நிலைகளையே.
யோக சாஸ்திரம் என்பது கீதையின் ஒரு பிரிவே அன்றி வேறல்ல.
இதில் பின்னாளில் ஹட யோகம், தாந்த்ரீகம் எனப் பல பல வகைகளில் பிரிந்தாலும் அதன் மூலமும் அது சேருமிடமும் ஒன்றே.
அது மனிதன் மனிதனாய் வாழ்ந்து பிரபஞ்சத்துடன் இணைந்து நல்வாழ்வு வாழ்ந்து இறைவனை அடைவதே.
இதெல்லாம் எங்கோ இமயமலையில் இருந்து பதஞ்சலி முனிவர் மட்டும் சொன்ன விஷயம் அல்ல, அது பாரத கண்டம் முழுக்க தெரிந்ததாய் இருந்தது.
தமிழகத்தில் சித்தர்களும் இன்னும் பல மகான்களும் ரிஷிகளும் இவற்றை சொன்னார்கள்.
அவர்களில் சித்தர்களும், திருமூலரும் ஔவையாரும் மகா முக்கியமானவர்கள்.
திருமூலரின் போதனைகளும், வழிகாட்டுதலும் பதஞ்சலிக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. உடலையும் நலமாக்கி நோய் நொடி நீக்க வைத்து மனிதனின் மனதை அவனை இயக்கும் சக்தியினை பிரபஞ்ச மூலபரம்பொருளுடன் சேர்த்து இயங்க வைக்கும் கலையே யோகம்.
இந்த நவீன உலகில் ரேடியோ, டிவி இணையம், போன் என என்னவெல்லாமோ இயங்குகின்றது அல்லவா? அவை எல்லாம் எப்படி இயங்குகின்றது?
அதில் பலவித விஞ்ஞான சூட்சுமம் உண்டு, பண்பலை சிற்றலை இணைய முகவரி ஆண்டனா, ரவுட்டர், உள்ளிட்ட எவ்வளவோ விஷயங்கள் உண்டு.
மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த விஞ்ஞான கருவிகளே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு மனிதனை எளிதில் தொடர்பு கொள்ளவும் பார்க்கவும் பேசவும் உதவுகின்றன.
இவை மனிதனின் புறக்கண்களும் பூதஉடலும் மட்டும் அறியும் விஷயங்கள்.
ஆனால், மனதால் தெய்வ சக்தியினை பெருக்கி ஆறு சக்கரங்களான ஆதார மையங்களளை இயங்க வைத்து அதாவது மூலாதாரம், சுவாதிஷ்டானம்(நிராகுலம்), மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை என்பன. துரியம் எனும் அச்சக்கரங்களை இயக்கி அவற்றின் மூலம் மானிட உடலின் உயிர்சக்தியினை கொண்டு பிரபஞ்ச சக்தியினை தொடர்பு கொள்வதே யோகா.
ஆம். டிஜிட்டல் உலகில் விஞ்ஞான கருவிகள் செய்யும் தொடர்பினை மின்சாரம் கொண்டு அவை செய்யும் அதிசயங்களை, மானிட உடலின் உயிர்சக்தி கொண்டு பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள செய்கின்றன அந்த யோக பயிற்சிகள்.
இதற்கு மூச்சு பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அவசியம்.
சரி அஷ்டமா சக்திகளுக்கும் இன்றைய விஞ்ஞானத்துக்கும் என்ன தொடர்பு? விஞ்ஞானம் எவ்வளவுக்கு சில உண்மைகளை புரிந்திருக்கின்றது. கடவுளின் எல்லா வடிவும் அணுக்களில் நிரம்பியுள்ளது, பிரபஞ்சமும் அதன் பொருளும் அணுவினால் ஆனது, காற்றும் நீரும் உலோகமும் அணுவினால் ஆனது. மானிட உடலும் உயிரும் செல்களால் ஆனது.
இதில் அணுமுதல் அண்டவெளிவரை இயக்கம் ஒன்றே என்பதையும், அந்த இயக்கம் மானிட உடலிலும் உண்டு கண்ணுக்கு தெரியாத மானிட சூட்சும் உடலிலும் உண்டு என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக விஞ்ஞானம் உணர்வது எப்படி?
இதையும் யோக சித்துக்களையும் இணைத்து பார்த்தால் பல விஷயங்களுக்கு விடை கிடைக்கும்.
ஆம். உலக பொருளெல்லாம் அணுவாலும் உயிர்களெல்லாம் செல்களாலும் ஆனது என்கின்றது விஞ்ஞானம். அணுவின் அமைப்பு எல்லோரும் அறிந்தது, ஒரு கரு இருக்க அதை சுற்றி சில துகள்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றது.
பிரபஞ்சத்தில் சூரியனை கோள்கள் சுற்றுவது போல அணுவுக்குள்ளும் ஒரு சுழற்சி உண்டு. கோள்களுக்குள் இருக்கும் இடைவெளி சிறிதெனில் அண்ட வெளியில் இருக்கும் இடைவெளி மிக அதிகம். இந்த இடைவெளிகளை குறைத்தால் ஒரு பொருள் சிறியதாகும், இடைவெளியினை அதிகரித்தால் ஒரு பொருள் பெரியதாகும், இது விஞ்ஞானமே சொல்லும் உண்மை.
உலோகங்கள் கல், மண் என எல்லாவற்றுக்கும் இயக்கம் உண்டு. அதாவது சக்தி உண்டு, காற்று போல் நீர் போல் அவைகளுக்குள்ளும் ஒரு சக்தி இயங்குகின்றது.
இதைத்தான் கண்ணன் கீதையில் எல்லா பொருளிலும் நான் இருக்கின்றேன் எனத் தெளிவாக சொன்னான், அணுவின் இடைவெளி அதிகமானால் அது பெரிதாகும், அணுவின் இடைவெளி குறைந்தால் உருவம் சிறுக்கும்.
இன்னும் தெளிவாக சொல்லலாம். அரைகிலோ பஞ்சு பெரிய பொதியாக வரும், அதே நேரம் அரைகிலோ யுரேனியம் பாதி தேக்கரண்டி கூட வராது. எடை ஒன்றே ஆனால் அணுவின் ஆட்டத்தால் உருவம் மாறுதல்.
இப்படி ஒரு மனிதனின் செல் பெரிதானால் அவன் பேருருவம் கொள்வான், மிக சிறிதனால் பாக்டீரியா போல் காட்சியளிப்பான்.
அணுவினை பிளந்தால் அது அணுக்களாக பலுகி கொண்டே செல்லும், வானில் கோள்களை உடைத்தால் கூட அவையும் சுற்றுப் பாதையில் சுற்றித்தான் வரும் என்கின்றது விஞ்ஞானம்.
அணு பெருகுவது போல மானிட இனமும் பெருகிக் கொண்டே இருக்கும், மானிடம் என்றல்ல எல்லா உயிரும் பொருளும் இங்கு மடிய மடிய பெருகி கொண்டேதான் செல்லும்.
ஆம். கல் முதல் மானிடன் வரை ஏன் பிரபஞ்சம் வரை இயக்கம் ஒரே ஒரு இழையில்தான் பின்னப்பட்டு இணைக்கப்பட்டிருக்கின்றது.
யோக சித்து விஷயம் இதுதான். அணுவோ செல் உயிரினமோ விண்வெளியோ கோள்களோ எல்லாவற்றையும் இயக்கும் ஒரு பொது சக்தி உண்டு அதுதான் இறைசக்தி, மனிதன் தன் யோகத்தால் இறைசக்தியுடன் கலக்கும் பொழுது அந்த ஆற்றலில் பிரபஞ்ச சக்தியினை அவனால் கட்டுப்படுத்த முடிகின்றது, இதுதான் யோக சூட்சுமம்.
இந்த யோகம் முன்பு சொன்ன பலவகை விஷயங்களை சரியான குரு மூலம் பின்பற்றுதல் மூலம் அடையலாம், மூச்சுப்பயிற்சி மூலம் ஏழு சக்கரம் எனப்படும் நாடி சக்கரங்களின் ஆதாரத்தை தூண்டுதல் மூலம் அதை பெறலாம்.
இதை குண்டலினி என்பார்கள்.
குண்டலம் என்றால் கவிழ்ந்திருத்தல் எனப் பொருள், குவிந்திருக்கும் வடிவினை அப்படி சொல்வார்கள், மூலாதாரத்தில் கவிழ்ந்திருக்கும் அந்த சக்தியினை விழித்தெழ செய்வதே அந்த யோகம்.
பாம்பு போல் சுருண்டிருக்கும் சக்தி எழுப்பட வேண்டும் என்பதுதான் அத்தத்துவம்.
இந்துக்களின் தெய்வமெல்லாம் பெரும்பாலும் தியான வடிவிலே இருக்கும், சிவனோ இன்னும் பல வடிவங்களை அப்படி காணமுடியும், பாம்பும் அப்படி எல்லா இடங்களிலும்காட்சி தருவது அப்படியே.
குவிந்திருக்கும் அச்சக்தி எழும்பி தலையில் விரிய வேண்டும் என்பதைத்தான் படமெடுக்கும் பாம்பு தத்துவமாக சொல்கின்றது. இந்த யோகத்தை செய்ய தொடங்கும் முன் சில அடிப்படை பயிற்சிகளையும் ஒருவன் செய்ய வேண்டும்.
யோகம் என்பது மனம், ஆத்மா, புத்தி, பிராணம், ஞானம், பிரபஞ்சம் என எல்லாம் இணையும் வழி என முன்பே பார்த்தோம். அதற்கு சில அடிப்படை விஷயங்கள் தெரிந்திருத்தல் அவசியம்.
ஒவ்வொருவனும் தான் யார் என்பதை புரிதல் அவசியம். இதற்கு கோசம் வழியாக விளக்குவார்கள் ஞானிகள். 5 கோஷாக்கள் உண்டு.
‘அன்னமய கோசம்’ என்றால் அன்னத்தால் உருவாகும் உடல் ஒரு கட்டத்தில் மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாகும் இதனால் ஒருவன் அவன் உடல் அல்ல. இது மண் தத்துவம்.
‘பிராணமய கோசம்’ என்றால் ஒருவன் மூச்சு விடும்வரைதான் அவன் வாழ்வு, ஒருவன் சிந்தனையும் நிலைப்பாடும் செயலும் மூச்சிலே வெளிப்படும். அது முடிந்தால் எல்லாம் முடியும் இதுவும் அவன் அல்ல. இது வாய்வு தத்துவம்.
மனோமய கோசம் என்பது ஒருவன் புத்தி அதுதான் செயல்களை செய்ய சொல்கின்றது. உடலையும் மூச்சையும் அதுதான் செய்யவைக்கின்றது. அதுதான் ஒருவனை நடத்துகின்றது. ஆனால், அது நொடிக்கொரு வடிவம் எடுக்கின்றது, அதுவும் அவன் அல்ல, இது நீர் தத்துவம்.
விஞ்ஞானமய கோசம், இது மேற்சொன்ன மூன்று நிலைகளையும் கட்டுப்படுத்தும் அறிவு அல்லது ஞானம். இது நெருப்பு தத்துவம்.
கடைசியாக, ஆனந்த கோசம். இது ஆகாய தத்துவம். இது பேரின்ப நிலை இறைவனில் கலந்தால் மட்டும் கிடைக்கும் நித்திய பேரின்பம்.
ஆம். ஐம்பெரும் பூதங்களும் சிவனில் அடக்கம், சிவனை நோக்கி தவமிருத்தல் யோகாவில் அடக்கம்.
ஒவ்வொரு படிநிலையாக கடந்து, உடலை உதறி, பிராணனை கட்டுப்படுத்தி, ஆசை துறந்து, புலன்களை அடக்கி சிந்தையினை சிவனில் கலப்பது மனதால் யோகம்.
உடலில் அதற்கான சக்கரங்களை இயங்க செய்ய செய்யப்படும் ஆசனங்கள் யோக ஆசனம், இவை குருவின் உதவியால் சரியாக செய்யப்பட்டு செய்யப்பட்டு கடைசியில் பெறுவதே அஷ்டமா சித்து.
அது அணிமா, மஹிமா, லஹிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம் மற்றும் வசித்துவம் எட்டு வகை சித்திகளாகும்.
இதில் ‘அணிமா’ என்பது ஒரு பெரிய பொருளின் தோற்றத்தை மிக குறுக்கி காட்டும் ஒரு சக்தி. அனுமார் தன்னை குறுக்குவதும் , பிருங்கி முனிவர் போன்றோர் வண்டாக மாறியதும, அனுசுயா தன் சக்தியால் முனிவர்களை குழந்தையாக்கியதும் இந்த வகையே.
‘மஹிமா’ என்பது இயல்பில் இருந்து ஒரு பொருளை பெரிய பொருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டியதும், அனுமன் மாபெரும் உருவாய் வளர்ந்ததும் இப்படியே.
‘லஹிமா’ என்பது கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது. திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது, கல் மிதவையாகி கடலில் மிதந்ததும், அனுமன் காற்றில் பறந்ததும் இந்த வகை சித்தி.
‘கரிமா’ என்பது இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்ததும், மகாபாரதத்தில் அனுமன் தன் வாலை மிக கனமாக்கி பீமனை தடுமாற செய்ததும் இவ்வகையே.
‘பிராத்தி’ என்பது எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது, எங்கும் எந்த வடிவிலும் செல்ல கூடியது இதற்கு கிருஷ்ணபரமாத்மா கதை தொடங்கி திருவண்ணாமலை ரமண மகரிஷி வரை ஏகப்பட்ட எடுத்துகாட்டுகளை சொல்லமுடியும்.
ரமணரும் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றிய பெரும் நிகழ்வினையெல்லாம் காட்டினார்.
‘பிரகாமியம்’ என்பது நினைத்த உடல் அல்லது வேடம் எடுத்து தோன்றுதல். ஏகப்பட்ட அவதாரங்களையும் மகான்களையும் இப்படி சொல்லமுடியும். ஔவையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய
பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.
கூடுவிட்டு கூடுபாய்தல் என்பது இந்த வகையே.
இது நினைத்த வேடம் மட்டுமல்ல நினைத்த பொருளை எல்லாம் அடையும் ஆற்றலைக் கொடுக்கும்.
‘ஈசத்துவம்’ என்பது ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்தல். அகத்திய முனியும் விசுவாமித்திரரும் இதற்கு மிகப்பெரும் எடுத்துகாட்டுகள்.
விசுவாமித்திரர் திரிசங்கு சொர்க்கம் என்ற ஒன்றை படைத்தவர், பெரும் தெய்வங்களுக்கும் ஆணையிடும் ஒரு சக்தி, திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் என்பதே.
‘வசித்துவம்’ என்பது ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப்படுத்துதுதல், அவைகளுடன் பேசுதல் பழகுதல் உத்தரவிடுதல் எனப் பெரும் சக்தி அது.
கழறிற்றரிவார் நாயானருக்கு இந்த சித்தி வாய்த்திருந்தது.
திருநாவுக்கரசர் தம்மை கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் என்பதே.
இந்த அஷ்டமா சித்துக்கள் எளிதில் வராதவை, கால காலமாக தவமும் பெரும் யாகமும் வழிபாடும் செய்தால் அன்றி வராது. இந்த எட்டுக்கும் அனுமனை உதாரணமாக சொல்லமுடியும், இன்னும் பலரையும் சொல்லமுடியும், மிகப்பெரிய உதாரணமாக திருமூலரை சொல்லலாம்.
இந்த பரிபூரண நிலையினை தருபவள் அன்னை, சமாதி என பிரபஞ்சத்தில் இரண்டற கலந்து அஷ்டமா சித்துக்களயும் தருபவள் இந்த சித்திதாத்ரி.
ஸ்ரீசக்கர தத்வத்தில் இது ஒன்பதாவது ஆவரணம், அங்கேதான் புள்ளிவடிவில் ஸ்ரீபுரம் அமைந்திருக்கும். அதுதான் பிந்து ஸ்தானம், இதுதான் “சர்வானந்த மயசக்ரம்” . இந்த பிந்துவில்தான் ஸ்ரீதேவியானவள் காமேஸ்வரி எனும் பெயரில் பிந்துவாக, சிவ-காமேசுவரியாக, காமேஸ்வரன் எனும் சிவனுடன் ஒன்றியவளாக எழுந்தருளியிருக்கிறாள்.
லலிதாம்பிகை இங்கேதான் வாசம் செய்கின்றாள். இங்குள்ள லலிதாம்பிகை பாசம், அங்குசம், கரும்புவில், ஐம்மலர் அம்புகள் என்பன நான்கு கரங்களில் தாங்கியவளாக, பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன் ஆகியோர் அவளது சிம்மாசனத்தின் கால்களாக விளங்கும் சிம்மாசனத்தில் காமேசுவரனாகிய ஈசனின் மடியில் அமர்ந்து இருக்க, இரு பக்கங்களிலும் லக்ஷ்மியும் சரஸ்வதியும் கவரி வீச காட்சி அளிக்கிறாள்.
தேவியின் மாளிகையின் வாயிலில் அணிமா, கரிமா, லஹிமா, மஹிமா, பிராப்தி, ப்ரகாம்யம், வசித்தவம் மற்றும் ஈசித்தவம் போன்ற எட்டு சித்திகள் துவாரகாபாலர்களாக நிற்கின்றார்கள்.
இங்குதான் சிவ – சக்தி ஐக்கியம் எனப்படும் படைப்புத் தொழில் நிகழ்கிறது. இங்கு சிவனின் இடது பக்க மடியில் சக்தி அமர்ந்து அவர்களிருவரும் சேர்ந்து தங்களை நாடி வருபவர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். இங்கு பிறப்பு இறப்பு என்னும் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு, பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, முக்தி பெற ஞானம் ஏற்படுகிறது.
ஆத்மா பிரம்மத்துடன் இணைகின்றது. அனைத்து ஆனந்தங்களுக்கும் உறைவிடமாய் திகழும் பேரின்பம் எனும் பரப்ரும்ம நிலையில் ஒன்ற வைக்கும் நிர்விகல்ப சமாதி நிலை இதுவே ஆகும்.
நிர்விகல்ப சமாதி என்பது எந்தவிதமான மானிட உணர்ச்சிகளும், எண்ணங்களும், யோசனைகளும் இல்லாத ஒரு பேரின்ப நிலை, சூன்ய நிலை ஆகும். அதற்கும் மேலே தொடர்ந்து தியானிக்க ஒன்றுமே கிடையாது என்பதின் காரணம் அந்த நிலையை எட்டியவன் பிரும்மத்துடன் தன் ஆத்மாவை இணைத்துக் கொண்டு மனித உணர்வுகள் அனைத்தையும் துறந்து, தானே பிரும்மன், தானே தெய்வம் எனும் நிலையை எட்டி விடுகின்றான்.
ஆம். ஸ்ரீசக்கர தத்துவத்தின் ஒன்பதாம் படிநிலையும் அந்த சமாதி நிலையினைத்தான் சொல்கின்றது.
இந்த தத்துவத்தை சிதம்பரம் ஆலயத்தின் தாத்பரியத்தினின்று எளிதில் விளக்கலாம், அதை அந்த கனகசபையில் இருந்துதான் புரிந்துகொள்ளவும் முடியும்.
சிதம்பரம் ஆலயம் ஆகாய தத்துவமாய், இன்றும் அங்கு சன்னதியில் ஒரு வெளி மட்டும் இருப்பதாய் இருப்பதன் தத்துவத்திலே முழு உண்மையும் அடங்கிவிடுகின்றது.
ஆகாய தத்துவத்தை அறிந்துகொள்ளுமிடம் அதை உணருமிடம் என்பது பொருள், அதனாலே அதற்கு அம்பரம், சிதம்பரம் எனப் பெயரிட்டார்கள்.
அண்டவெளியின் ஆகாயம் எனும் வெளி மானிட உடலிலும் உண்டு என்பதையும் அங்கேதான் ஆத்மா உணர்வாக வசிக்கின்றது. சூரிய பிம்பமாக வசிக்கின்றது என்பதை சொன்னார்கள்.
சிதம்பர சன்னதியில் வெளி என்பது ஆகாய தத்துவமாக காட்டப்படுவது, மானிட மனதினுள் ஒரு வெளி உண்டு. அங்கேதான் ஆத்ம வடிவமாக இறைவன் உண்டு என்பது.
சூரியன் போல அந்த ஆத்மா சுடர்விடக் கூடியது. அதை ஞானத்தால் அடையலாம் தெளியலாம் என்பது ஞானியர் போதனை.
ஆத்ம தெளிவு என்பது எது நிஜம், எது மாயை என்பதை உணர்த்துவது, எது நிலையானது எனும் தெளிவினைக் கொடுப்பது.
இது ஏன் தங்கசபை என அழைக்கப்பட்டது என்றால் அங்கேதான் சிவனின் ஒரு தொழிலைச் சொல்லி அதனை குறித்தார்கள்.
இத்தலத்தில் அவர் அருளல் தொழிலை செய்கின்றார், அது அவரின் ஈசான முகம் என அழைக்கப்படுகின்றது.
இங்கு சூரியனாக அக்னி வடிவமாக இருக்கும் சிவனே, அருளல் அதாவது முக்தி அருளும் குருவாகவும் விளங்குகின்றார்.
இந்த தலம் சூரியனும் குருவும் சேர்ந்த மங்கலத் தலம், அதாவது தெய்வீக ஞானம், உயர்நிலை ஞானம் இங்கு அருளப்படும்.
அருளல் தொழிலை செய்யும் சிவபெருமான் இங்கே குருவாக, ஞான குருவாக நின்று முக்தி அருள்கின்றார், ஞானத்தின் கடை நிலையினை அருள்கின்றார்.
இந்த நிலையினைத்தான் இந்த ஞானக் கடைநிலையினைத்தான் ஈசான முகம் அருளும் என்பார்கள். ஈஷா என்பது அந்தப் பொருளை சொல்வது.
பரந்த வெளியில் ஆத்மா கலந்துவிடும் மாபெரும் கடை நிலை அது. இதற்கு மேல் எதுவுமில்லை. எல்லாம் கடந்த நிலை. எல்லாமே ஒன்றான நிலை என்பதில் ஆத்மா கரைந்து போவது.
இந்த ஈஷா அல்லது ஈசா எனும் தெய்வீக நிலை, பிரபஞ்ச வெளியில் ஆத்மா கலந்துவிடும் அருளை பாக்கியத்தை தருவது இந்த சபை.
குருவின் உலோகம் தங்கம். குரு நிலையில் இன்றும் என்றும் அழியாத என்றும் மங்காத ஞானமுக்தியினை சிவன் அருள்வதால் இச்சபை தங்க சபை என்றாயிற்று.
புடமிடப் புடமிட பொன் துலங்கும். அப்படி சிவபக்தியிலும் தேடலிலும் இறங்கும் ஆன்மா பொன்போல் சுடர ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட வரம் தரும் இடத்தையே பொன் அம்பலம் என்றார்கள், பொற் கூரையிட்டு காத்தார்கள்.
சிவனில் கலக்கும் ஆன்மா சிவன் போல் ஜொலிக்கும் அதனாலே பொன்னார் மேனியனே எனப் பாடினார் சம்பந்தர்.
சிதம்பரம் ஆலயம் ஞானம் தருமிடம். ஞான முக்தி தருமிடம். மாணிகவாசகர் நந்தனார் போன்றோர் அப்படி முக்தி பெற்றார்கள்.
வெளி எனும் பரவெளியில் ஆத்மா கரைவதே ஞானக் கடைநிலை என்பதைச் சொல்லி அம்பல வெளி வைத்த ஞானியர், தங்கம் எப்போதும் தங்கமாக இருப்பது போல் உயர்நிலை ஞானம் அடைந்த ஆன்மா அதுவாகவே நிலைக்கும் என்பதைச் சொன்னார்கள்.
சிதம்பர ரகசியம் புரிந்துகொள்ள முடியாதது என்பதெல்லாம் விஷயம் அல்ல, அது உண்மையில் ரகசியமும் அல்ல, புரிந்துகொள்ள வேண்டும். அந்த புரிதல்தான் முக்கியம். அதைத்தான் ரகசியம் என்றார்கள்.
மனதில் இருக்கும் வெளியில் அதாவது இதயம் அருகே இருக்கும் சக்கர வெளியில் ஆகாய தத்துவமாக ஒரு வெளி இருக்கின்றது, அங்கே ஆத்மா சூரியன் தத்துவத்தில் இருக்கின்றது.
மனதை ஒருமுகப்படுத்தி இந்த வெளியினை பரவெளியுடன் கலந்தால், யோகத்தில் பக்தியில் இறங்கி மிக வைராக்கியமாய் சாதித்தால் மனிதன் தெய்வ நிலை அடைவான்.
அதுதான் சமாதி நிலை. அதுதான் எல்லாம் கடந்த ஞானயோக நிலை.
இதைச் சொல்வதுதான், எல்லாம் கடந்த நிலையில் அந்த சமாதி நிலை எனும் பரவெளி நிலைக்கு ஆத்மாவினை அழைத்து செல்வதுதான் அந்த ரகசியம்.
எல்லாம் கரைந்த நிலை அது, தான் எனும் அகந்தை நினைவு எல்லாம் கரைந்து, தானும் இறையும் ஒன்று என்பதை உணரும் நிலை அது.
அப்படி பரவெளியில் இறைசக்தியுடன் கலந்து விடுவதைத்தான் அதுதான் நித்தியம் அதுதான் நிலையானது என்பதைத்தான் சிதம்பர ஆலயம் போதிக்கின்றது.
எல்லாம் கடந்துவிடு, அப்படிக் கடந்துவிட்டால் “தான்” இல்லா நிலை வரும். அந்த நிலைதான் இறைநிலை ஞானநிலை அதுதான் நிஜம். மற்ற எல்லாம் மாயை என போதிப்பதே அந்த ஆலய தத்துவம்.
இந்த நிலையினை இரண்டற இறைவனில் கலந்துவிடும் அந்த ஞான நிலையினை எல்லாம் கடந்த பரிபூரண அமைதி நிலையினை குறிப்பாக சொன்னால் தானும் இறை நிலை அடைந்ததை சொல்லும் நிலை அது
பிருஹதாரண்யக உபநிஷம் சொல்கின்றது.
“ஸகல தேவதைகளும் எதில் தோன்றியிருக்கின்றனவோ, அந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகி விடுகிற ஞானிக்கு அந்தத் தேவதைகளும் அந்நியமில்லை.
அந்த சித்தி எனும் சமாதி நிலையினை அருள்பவள் அன்னை.
அன்னைக்கு “மருத்யு தாரு குடாரிகா” என்றொரு நாமம் லலிதா சஹஸ்கரநாமத்தில் உண்டு, அதற்கு யமன் எனும் மரத்தை வெட்டும் கோடாரி எனப் பொருள்.
அன்னை ரம்பையும் அரிவைகளும் புடைசூழ வருபவள் என்பதால் அவளுக்கு “ரம்பாதி வந்திதா” என்றொரு பெயரும் உண்டு.
அவள் “மூலப்ரக்ருதி” பிரபஞ்சத்தின் மூலப்பொருளானவள் தோற்ற நிலையின் சாரம்.
அவள் “வியாபினீ”, அனைத்திலும் வியாபித்திருப்பவள் எங்கும் நிறைந்தவள்.
அவள் “விவிதாகாரா”, பல்வேறு தோற்ற நிலைகள், வடிவங்கள் தாங்கியிருப்பவள்.
அவள் “வேத ஜனனி” வேதங்களைப் படைத்தவள்.
அவள் “சிருஷ்டி கர்த்ரீ” அதாவது பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பவள்.
அவள் “ஆபிரம்ம கீட ஜனனீ” பிரம்மதேவன் முதல் கிருமிகள் வரை அனைத்தையும் சிருஷ்டித்த மாதா என்கின்றது.
அவள் வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் ‘மந்திரிணீ’ என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.
ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி எனக் கொண்டாடப்படும் அவள் அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,(முத்திரை மோதிரம் தரித்தவளாக) இருப்பவள்.
அதனால் லலிதா ஸஹஸ்ரநாமம் அவளை “மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதுரே நம” என்று போற்றுகிறது.
லலிதா ஸஹஸ்ரநாமம் இதனையே சொல்கின்றது “தேவர்ஷிகண ஸங்காத ஸ்தூயமானாத்ம வைபவா” என்கின்றது, அதாவது அன்னை தேவர்கள், ரிஷிகள் இவர்களுடைய கூட்டங்களால் ஸ்தோத்ரம் செய்யப்பட்ட வைபவத்தோடு கூடியவள் என்கின்றது.
இன்னும் “ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா” என அவளை சொல்கின்றது, அதாவது விஷ்ணு, ப்ரம்மா, இந்திரன் ஆகியோரால் வணங்கப்படுபவள் என்கின்றது.
அன்னையின் புகழ்பாடும் “ஸ்ரீ லலிதா த்ரீசதி” எனும் நூல் அன்னையினை “ஹராராத்யா” சிவனால் ஆராதிக்கப்படுபவள் என்கின்றது.
அதே நூல் “ஹரிப்ரமேந்த்ர வந்திதா” என அன்னை ஹரியாலும் பிரம்மாவினாலும், இந்திரனாலும் பூஜிக்கப்படுபவள் என்பதையும் சொல்கின்றது.
அன்னையில் கலந்து முழு சமாதி நிலை அடைந்த மனம் எல்லாம் கடந்த ஞானத்தில் இருக்கும், வான்வெளியில் எப்படி நிசப்தமான அமைதி நிலவுமோ அந்த அமைதி எல்லாம் கடந்த அந்த ஞான நிலையில் இருக்கும், முழுக்க அன்னையோடு கலந்த நிலையில் இருக்கும்.