நவபுலியூர்

நவபுலியூர் : 01 சிதம்பரம் நடராஜர் ஆலயம்

நவபுலியூர் கோவிலில் முதல் கோவிலாக வருவது சிதம்பரம் நடராஜர் ஆலயம், நவபுலியூர் ஆலயங்களில் அது பெரும்பற்றபுலியூர் என அழைக்கபடுகின்றது

இந்த ஆலயத்தின் சிறப்பினை அதன் மாபெரும் வரலாற்றினை எடுத்து சொல்லவேண்டுமென்றால் ஏடுகள் போதாது, அதனால் அதன் தாத்பரிய சிறப்புக்களை மட்டும் சுருக்கமாக பார்க்கலாம்

அந்த ஆலயம் சங்க காலம் அல்ல வேத காலத்திலே தொடங்கிற்று, எந்த அளவு மிக மிக தொன்மையான ஆலயம் என்றால் புராணங்களிலும் இன்னும் வேத உபநிஷங்களிலும் சொல்லபட்ட வெகு சில ஆலங்களில் அதுவும் ஒன்று

“சாந்தோக்ய உபநிஷதம், கைவல்ய உபநிஷதம், ஸ்காந்த, ஜாபால் தரிசனம், வராஹ உபநிஷதங்களில் அது சொல்லபடுகின்றது

அப்படியே ஸ்கந்த புராணம், ப்ரஹ்மநாரதீயம், சைவம், லிங்கபுராணம் என்றும், உபபுராணங்களில் தேவி பாகவதம், வசிஷ்டலிங்கம், பவிஷ்யோத்தரம் போன்றவற்றிலும் அது குறிப்பிடபடுகின்றது

ஸ்தல புராணங்களில் சிதம்பர மகாத்மியம், புண்டரீகபுர மகாத்மியம், திலவன மகாத்மியம், வ்யாக்ரபுர மகாத்மியம் மற்றும் ஹேம சபாநந்த மகாத்மியத்திலிருந்தும் அதன் குறிப்புகளை பெறமுடியும்

நடேச விஜயம், பதஞ்சலி சரித்திரம், சங்கர திக்விஜயம், சிவலீலார்ணவம், மதுரா விஜயம் போன்றவற்றில் இருந்தும், சபாபதி விலாச நாடகம் போன்றவற்றில் இருந்தும் அதன் தொன்மையினை அறியலாம்

இப்படியெல்லாம் எந்த ஆலயத்துக்குமில்லா பெரும் சிறப்புகளை கொண்ட அந்த ஞான ஆலயம் வஷிஷ்ட்டர் காலத்தில் இருந்தே வழிபாடுகள் கொண்ட ஆலயமாக அறியபடுகின்றது

அவரை தொடர்ந்துதான் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் வந்தார்கள் பின் திருமூலர் வந்தார், பெரும் பெரும் ஞானியர் வந்து வணங்கினார்கள்

அது பின்னாளில் கணக்கற்று பெருகி வானத்து நட்சத்திர கூட்டம் போல எண்ணமுடியாத அளவு அதிசயங்களும் அவதாரங்களும் நிரம்பிய ஆலயமாயிற்று

இன்று 51 ஏக்கர் பரப்பில் பெரும் கோபுரத்துடன் நிற்கும் அந்த அலயம் சுயம்பு லிங்கமக தில்லை மரங்களிடை தொடங்கி இன்று பரந்து நிற்கின்றது

ஹிரண்ய வர்மன் எனும் மன்னன் முதல் முற்கால சோழர்கள் பாண்டியர்கள் தொடங்கி நாயக்க மன்னர்கள் மராட்டியர்கள் வரை அங்கு திருப்பணி செய்த நீண்ட வரலாற்றை கொண்டது

நடராஜ கோலத்தில் சிவபெருமான் நிற்கும் ஒரே ஒரு ஆலயம் உலகில் அதுதான், நடன கோலத்தினை முனிவர்களுக்கு காட்டி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கும் சிலையாய் காட்சியளிக்கும் கோலமும் அந்த ஆலயம்தான்

தென்னக கயிலாயம் என அதற்கு பெயர், அந்த அளவு அது அதி உன்னதமானது

வசிஷ்டர் தொடங்கி மாணிக்கவாசகர் வரை, நந்தனார் வரை பெரும் பெரும் அவதாரங்கள் வந்து வணங்கி முக்திபெற்ற தலம் அது

அதன் அருமையும் பெருமையும் பற்றி எழுதினால் எழுதிகொண்டே இருக்கலாம் அவ்வளவு நீளமானது

சிவனின் நடராஜகோலத்தை தாங்கி நிற்கும் அந்த ஆலயமே பராந்தக சோழன் அமைத்த பொற்கூரையினை தாங்கி நின்றது, பின் மாலிக்காபூர் காலத்தில் அந்த பொற்கூடை கொள்ளை போனாலும் சாம்பாஜி மன்னன் காலத்தில் அவ்வாலயம் தன் பொற்கூரையினை திரும்ப‌ பெற்றுகொண்டது

ஏன் எந்த ஆலயத்திலும் இல்லா அளவு அந்த சபையினை மட்டும் பொன்னால் மூடினார்கள்?

ஏன் எந்த ஆலயத்திலும் இல்லா அளவு அங்கு மட்டும் ஆகாய தத்துவம் விளக்கபடுகின்றது? சிதம்பர் ரகசியம் என ஒன்றுமில்லாத ஒரு வெளி மட்டும் காட்டபடுகின்றது?

நவபுலியூர் என்பது நவகிரகங்களின் ஆதிக்கம் கொண்ட கோவில் எனும் வகையில் அது ஏன் சூரியனின் தலமாக அறியபடுகின்றது?

நடராஜ கோலத்தில் அதாவது இடையறா நடனம் என சிவன் ஏன் அங்கு ஆடிய கோலத்தில் காட்சியருள வேண்டும்?

இந்த கேள்விகளோடு சிந்தித்தால் அந்த ஆலயத்தின் பெருமையும் அருமையும் தெரியும், அதை விஞ்ஞானத்தோடு பொருத்தினால் இன்னும் பல அதிசயமான ரகசியங்களும் புரியும்

அதனை சூரியனின் தலம் என சொன்னார்களே ஏன்?

சூரியனே உலகுக்கும் அதன் உயிருக்கும் மையம், பூமி முதலான கோள்கள் அதை சுற்றித்தான் வருகின்றன, அது இல்லாமல் உலகம் இல்லை எதுவுமில்லை, அது இல்லாவிட்டால் எல்லாமே இருள்

அதுதான் ஜாதக கட்டம் முதல் எல்லா இயக்கத்துக்கும் பிரதானம்

இந்துக்கள் அண்டத்தில் இருப்பதையெல்லாம் பிண்டத்திலும் கண்டவர்கள், அதனால் ஆத்மாவினை சூரியனின் வடிவமாக கண்டார்கள்

மானுட ஆத்மாவினை சூரியனின் சாயலாக கண்டார்கள், சுருக்கமாக சொன்னால் உயிர்சக்தி ஆத்ம சக்தி என சரியாக சொன்னார்கள்

சூரியனை ஆத்மகாரன் என அவர்கள் சொன்னதிலே எல்லா ரகசியமும் அடங்கி போயிற்று, அதுவும் அந்த் தலம் சூரியனுக்கானது என்பதிலே ஆத்மபலம் தரும் ஆலயம் அது என்பது இன்னும் தெளிவாயிற்று

சிவனுக்குரிய அந்த தலத்தில் ஆத்மபலம் அதிகரிப்பதும், சூரிய ஒளியில் உண்மை தெரிவதை போல இருள் நீங்கி எல்லாம் சரியாக பார்க்கமுடிவதை போல அந்த தலத்தில் கிடைக்கும் சக்தியால் ஆத்மஞானம் ஒளிரும் என்பதை ரிஷிகள் உணர்ந்தார்கள்

ரிஷிகளுக்கு அதனை தெரியபடுத்திய சிவன், தன் அடியார்கள் ஞானியர் மூலமாக எல்லா மக்களுக்கும் அதை தெரியபடுத்தவே புலிக்கால் முனிவர், பதஞ்சலி இன்னும் பலரை அழைத்து தன்னை வெளிபடுத்தினார்

இந்த பிரபஞ்சத்தின் இயக்கு சக்தியினை அண்டவெளிமுதல் அணுசக்திவரை இயங்கும் சூட்சுமத்தை தன் தாண்டவம் எனும் ஆடலில் தெரியபடுத்தினார்

அது நடராஜ கோலமாயிற்று

அந்த கோலத்தை கண்ட ரிஷிகள் அதனை ஒவவொருவரும் ஆத்மத்தால் உணர உண்மையினை கண்டு தெளிய அங்கே ஒரு ஆலயம் எப்படி வடிவமைக்கபட வேன்டும் என்பதை சொன்னார்கள்

அது ஆத்ம ரகசியத்தை, ஆத்ம இயக்க தத்துவத்தை, உடலில் உயிர் ஆடும் தத்துவத்தை அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு, ஆகாய தத்துவம் உடலிலும் உண்டு என்பதை சொன்னார்கள்

சிதம்பரம் ஆலயம் ஆகாய தத்துவமாய், இன்றும் அங்கு சன்னதியில் ஒரு வெளி மட்டும் இருப்பதாய் இருப்பதன் தத்துவத்திலே முழு உண்மையும் அடங்கிவிடுகின்றது

சித் + அம்பரம் என்பதே சிதம்பரம் என்றாயிற்று

அம்பரம் என்றால் ஆகாயம் என பொருள், சித் என்றால் மனம் அல்லது அறிவு

ஆகாய தத்துவத்தை அறிந்துகொள்ளுமிடம் அதை உணருமிடம் என்பது பொருள், அதனாலே அதற்கு அம்பரம், சிதம்பரம் என பெயரிட்டார்கள்

அண்டவெளியின் ஆகாயம் எனும் வெளி மானிட உடலிலும் உண்டு என்பதையும் அங்கேதான் ஆத்மா உணர்வாக வசிக்கின்றது சூரிய பிம்பமாக வசிக்கின்றது என்பதை சொன்னார்கள்

அந்த சிதம்பரம் ஆலயத்தின் அமைப்பே உடலின் அமைப்பினை ஒத்திருக்கும்

ஐந்து சபைகள் கொண்ட அந்த ஆலயத்தில் கனகசபை எனும் பொன்னம்பல சபை பிரசித்தியானது

இக்கோவிலின் சிறப்பே மானிட உடல் இயக்கத்தை பின்பற்றி அமைக்கப்பட்டது.

அந்த தங்க கூரையில் 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள் உண்டு. அவை மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாச மூச்சுகளின் எண்ணிக்கையைக் குறித்தது.

அங்கே 72 ஆயிரம் ஆணிகள் தங்கத்தில் உண்டு. அவை மனிதனின் நாடி நரம்புகளைக் குறிப்பது.

கோவிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கும். இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச(5) பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது.

மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், ப்ராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

இங்கு எல்லாமே ஒரு கணக்கு, மானிட உடல் முதல் இறைவனின் ஆகமங்களை சொல்லும் கணக்கு. அன்றே ரிஷிகளும் ஞானியரும் மானிட உடலை பிரபஞ்சத்தை இணைத்து உருவாக்கிய கோவில் இது.

அன்றே எல்லாவற்றையும் ஞானத்தால் உணர்ந்த இந்து ரிஷிகள் அந்த தத்துவபடியே அதனை அமைத்தார்கள்

மானிட உடலில் இதயம் அருகே ஒரு வெளி இருப்பதையும் ஆகாய வெளியோடு அது பொருந்துவதையும் அங்கேதான் ஆத்ம உணர்ச்சி இருப்பதையும் அறிந்து இந்த கோவிலில் அதை உருவமாக வைத்தார்கள்

சிதம்பர சன்னதியில் வெளி என்பது ஆகாய தத்துவமாக காட்டபடுவது, மானிட மனதினுள் ஒரு வெளி உண்டு அங்க்தான் ஆத்ம வடிவமாக இறைவன் உண்டு என்பது

சூரியன் போல அந்த ஆத்மா சுடர்விட கூடியது அதை ஞானத்தால் அடையலாம் தெளியலாம் என்பது ஞானியர் போதனை

சூரியன் இருளை அகற்றுவது போல இந்த ஆலயத்தில் வழிபடுவோர்க்கு ஆத்ம தெளிவு எற்படும் என்பது நம்பிக்கை

ஆத்ம தெளிவு என்பது எது நிஜம் , எது மாயை என்பதை உணர்த்துவது எது நிலையானது எனும் தெளிவினை கொடுப்பது

அதைத்தன வசிஷ்டர் பெற்றார், புலிக்கால் முனிவர் பெற்றார், பதஞ்சலி பெற்றார்

இன்னும் மாணிக்கவாசகரும் நந்தனாரும் இதுதான் இந்த சிவம்தான் நிலையானது அதுதான் வேண்டும், வேறு எதுவும் வேண்டாம், நிலையற்றது எதுவும் வேண்டாம் என அங்கேயே கலந்து போனார்கள்

சூரியனில் பனி மறைவது போல் மறைந்து கரைந்தே போனார்கள்

தாங்கள் கண்ட பாக்கியத்தை எல்லோரும் பெறவேண்டும் என்றே புலிக்கால் முனிவரும், பதஞ்சலியும், திருமூலரும் யோக ரகசியங்களை எழுதி வைத்தார்கள்

முக்தி அடையும் வழி எது என போதித்தார்கள்

நவபுலியூர் என ஆலய தரிசனம் செய்து அவர்களே வழிகாட்டினார்கள் அதை இந்த ஆலயத்தில்தான் தொடங்கி வைத்தார்கள்

யோகத்தில் ஆனந்த தாண்டவத்தை காண்பது எப்படி என்பதை திருமூலரும் பதஞ்சலியும் மூச்சுகலை முதல் பல வகைகளில் போதித்துதந்துவிட்டு மறைந்தார்கள்

அங்கே கண்ட உண்மையினைத்தான் மாணிக்கவாசகர் பல அழியா பாடல்களாக பாடினார்

ஆம், ஞானதெளிவினை ஆத்மாவிற்கு தரும் ஆலயம் அது, சூரியனின் அம்சத்தை அதிகரிக்கும் ஆலயம் அது

அதை பொற்சபை என்றாகளே ஏன்?

புடமிட புடமிட பொன் துலங்கும், அப்படி சிவபக்தியிலும் தேடலிலும் இறங்கும் ஆன்மா பொன்போல் சுடர ஆரம்பிக்கும், அப்படிபட்ட வரம் தரும் இடத்தையே பொன் அம்பலம் என்றார்கள், பொற் கூரையிட்டு காத்தார்கள்

சிதம்பரம் ஆலயம் ஞானம் தருமிடம், அதனாலே ஞானம் தேடி அலைந்த புலிக்கால் முனிவரை வசிஷ்டர் தில்லைக்கு அனுப்பினார், பதஞ்சலியும் அதை தேடியே வந்தார்

வந்தவர்கள் எது உண்மை என உணர்ந்து பின் மக்களுக்கும் போதித்து முக்தி அடைந்தனர்

நவபுலியூர் தலங்களில் மகா முக்கியமானதும் தலையானதும் தென் கயிலாயம் என வணங்கபடும் சிதம்பரம் ஆலயம்

சித்தசபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை என ஐந்து சபைகளை கொண்ட இந்த பெரும் ஆலயம் ஏகபட்ட சூட்சுமங்களையும் இன்னும் விளங்கமுடியாத சக்திகளையும் கொண்டது

இங்கு வணங்கினால் ஜாதகத்தில் சூரியனால் ஏற்படும் பாதிப்புகள் தீரும், சூரியனின் பலம் இன்னும் அதிகரிக்கும் என்பது ஜாதகரீதியான உண்மை

அப்படியே மனமொத்து வணங்கினால் ஆத்ம தெளிவினை சிவன் வழங்குவார் என்பதும நிஜம்

சிதம்பர ரகசியம் புரிந்துகொள்ள முடியாதது என்பதெல்லாம் விஷயம் அல்ல, அது உண்மையில் ரகசியமும் அல்ல, புரிந்துகொள்ள வேண்டும் அந்த புரிதல்தான் முக்கியம் அதைத்தான் ரகசியம் என்றார்கள்

மனதில் இருக்கும் வெளியில் அதாவது இதயம் அருகே இருக்கும் சக்கர வெளியில் ஆகாய தத்துவமாக ஒரு வெளி இருக்கின்றது, அங்கே ஆத்மா சூரியன் தத்துவத்தில் இருக்கின்றது

மனதை ஒருமுகபடுத்தி இந்த வெளியினை பரவெளியுடன் கலந்தால் , யோகத்தில் பக்தியில் இறங்கி மிக வைராக்கியமாய் சாதித்தால் இந்த வெளியுடன் பரவெளியினை கலந்தால் மனிதன் தெய்வ நிலை அடைவான்

அதுதான் சமாதி நிலை அதுதான் எல்லாம் கடந்த ஞானயோக நிலை

இதை சொல்வதுதான், எல்லாம் கடந்த நிலையில் அந்த சமாதி நிலை எனும் பரவெளி நிலைக்கு ஆத்மாவினை அழைத்து செல்வதுதான் அந்த ரகசியம்

எல்லாம் கரைந்த நிலை அது, தான் எனும் அகந்தை நினைவு எல்லாம் கரைந்து, தானும் இறையும் ஒன்று என்பதை உணரும் நிலை அது

அப்படி பரவெளியில் இறைசக்தியுடன் கலந்துவிடுவதைத்தான் அதுதான் நித்தியம் அதுதான் நிலையானது என்பதைத்தான் சிதம்பர ஆலயம் போதிக்கின்றது

எல்லாம் கடந்துவிடு, அப்படி கடந்துவிட்டால் ஒன்றுமில்லா நிலை வரும் அந்த ஒன்றுமில்லா நிலைதான் இறைநிலை ஞானநிலை அதுதான் நிஜம் மற்ற எல்லாம் மாயை என போதிப்பதே அந்த ஆலய தத்துவம்

அந்த ஆலயம் பாரத தனி பெருமை, பாரத தனி ஞான அடையாளம் இந்துக்களின் தனிபெரும் சொத்து, தத்துவ குவியல்

பொன் வடிவில் ஆத்மா சுடர்விடும்போது அது சிவநிலை அடைகின்றது என்பதைத்தான் பொனனம்பலமாக சொன்னார்கள்

அதனாலே அந்த அலயம் பொற்சபை என்றாயிற்று

இன்றும் வடமொழியில் அதற்கு “ருக்மா தீப்” அதாவது பொன் சபை என்றே பெயர், அனைத்து இந்து மக்களும் தேடிவரும் ஆலயம் அது

அங்கே நடராஜ கோலத்தில் சிவன் நிற்பதும் இந்த ஆகாய தத்துவமும் இன்றைய விஞ்ஞானத்தையும் போதிக்கின்றன‌

ஐன்ஸ்டீன் அதைத்தான் போதித்தான் அவன் தன் இயற்பியலில் புது பாதையினை ஆராய்ச்சிக்காக் திறந்தான், இன்றைய உலகம் அந்த வழியில்தான் விஞ்ஞானத்தை தேடுகின்றது

அவன் காலம், வெளி, பொருள் என மூவகையினை அடிப்படையாக கொண்ட இயற்பியலை பிரபஞ்ச விதியாக சொன்னான்

காலம் வெளி பருபொருள் மூன்றுக்குமான தொடர்பை வரையறுத்தான், நவீன பவுதியியல் இதனை ஏற்று ஆய்வினை தொடர்கின்றது

இந்த ஆலயமும் அதற்கான தொடர்பை சொல்கின்றது, இன்றைய இயற்பியல் சொல்வதை என்றோ சொன்ன ஆலயம்தான் சிதம்பர ஆலயம்

அது காலத்தை சிவன், வெளி எனும் ஆகாயத்தை விஷ்ணு, பருபொருளை பிரம்மன் என பிரதிபலித்து நிற்கின்றது

இங்கே பிரம்மனும் விஷ்ணுவும் வருவார்களா என்றால் வருவார்கள், தொடக்கத்தில் அபப்டித்தான் இருந்திருக்கின்றது

விஷ்ணுவுக்கு இங்கே சன்னதியெல்லாம் இருந்து பின் அறியாமை குழப்பத்தால் அகற்றபட்டு பின் மீண்டும் ஸ்தாபிக்கபட்டிருக்கின்றது

புலிக்கால் முனிவரிடமும் பதஞ்சலியிடமும் சிவனே திருவரங்கம் சென்று உண்மையினை உணருமாறுதான் நவபுலியூர் யாத்திரையினை தொடங்கி வைக்கின்றார்

கடைசியில் பிரம்மனின் ஆலயத்தில்தான் அவர்கள் ஜீவசமாதி அடைகின்றார்கள்

இந்த ஆலயம் காலம், வெளி, பொருள் எனும் மூன்று தத்துவங்களை நடராஜ கோலத்திலும் , ஆகாய சபையிலும் இன்னும் பிரம்மனுக்குரிய தனமையிலும் போதிக்கும் ஆலயம்

படைப்பு காத்தல் அழித்தல் என எல்லாமும் மறுபடி மறுபடி வரும் என்பதை போதிக்கும் ஆலயம் , பரம்பொருளின் தன்மையினை இயல்பை அழகாய் சொல்லும் ஆலயம்

அதாவது எல்லாமே மூல சக்தி ஒரே சக்தி அது வேறு வேறு வடிவில் இயங்குகின்றதே தவிர மூலம் ஒன்றே என சொல்லும் ஆலயம்

அந்த மூல சக்தி காலம் வெளி படைக்கபட்ட பொருள் என மூன்றிலும் இருப்பது போல் மூன்றிலும் ஒரு தொடர்பாய் இருப்பது போல் ஆத்மாவிலும் உண்டு, இதயம் அருகே இருக்கும் வெளியின் ஒளியில் உண்டு

அந்த ஒளியினை துலங்கவைத்து அதை உணர்ந்துகொள் என்பதே சிதம்பர ஆலய தத்துவம் அல்லது ரகசியம்

யோகத்தால் ஆத்மாவினை பொன்போல் சுடர்விட செய்தால் அந்நிலையினை யோகத்திலும் தியானத்திலும் எட்டினால் மனதிலே இறைவனை காணலாம் , இறை நிலை அடையலாம் என்பதே பொன் அம்பலம் என்பதன் பொருள்

இதனாலே பொன்வண்ண கயிலாயம் போல இதனை தென்னக கயிலாயம் என்றார்கள்

பொன்னார் மேனியனே என்பது சிவனின் சிவந்த ஜொலிப்பான வடிவினை சொல்லும் வரி, அந்த பொன்சுடரை ஆத்ம தரிசனத்தினிலே காணலாம், யோக வழிபாட்டில் காணலாம் என்பதை போதிப்பதே அந்த சபை கொண்ட ஆலயம்

எவ்வளவோ வேதாந்தம், ரகசியம், சூட்சமம் ஏகபட்ட விழாக்கள் கொண்டாட்டங்கள் மகா பிரமாண்டமான அதிசயிக்க வைக்கும் வரலாறுகள் என ஏகபட்டது அந்த ஆலயத்தில் உண்டு எனினும் அதன் சுருக்கமான தாதபரியம் இதுதான்

அங்கு சென்று வணங்கினால் தெளிவுவரும் ஞானம் வரும்

அது வந்தால் எது மாயை எது உண்மை எனும் பக்குவம் வரும், எதை செய்யவேண்டும் எதை செய்ய கூடாது எனும் நல்லறிவு வரும்

சூரியனின் தலமான அந்த ஆலயம் ஆத்ம சுடரை துலங்க செய்யும் அதனால் நல்ல பலன்கள் உன்டாகும்

வாழ்க்கைக்கும் பூலோக இயக்கத்துக்கும் அடிப்படையானது சக்தி, அதை தருவது சூரியன். பூமியில் நேரத்தை காலத்தை வயதை இன்னும் பலவற்றை நிர்ணயம் செய்வதும் சூரியன்

சூரியன் என்பது சிவனின் அம்சங்களில் ஒன்று, அதன் ஒளி, வெப்பம், காலநேர நிர்ணயமெல்லாம் அதை அழகாக சொல்லும்

அந்த சூரியனின் ஆதிக்க தலமே சிதம்பரம் அது பல உண்மைகளை போதிக்கின்றது, ஜாதக ரீதியாகவும் இந்த ஆலயம் தனி பலன்களை சூரிய அம்சமாக தருகின்றது.

ஆன்மீகத்தில் நாட்டமிருந்தால் அது யோக சூத்திரத்தை கற்றுதரும், பல ஞானங்களை தரும், அதனை நன்முறையில் பழகினால் அந்த ஆனந்த நடன கோலத்தையும் காட்டும்

லவுகீக சிக்கலில் இருந்து நீங்கள் அந்த ஆலயம் சென்று வேண்டினால் மனம் தெளியும் ஆத்மா தெளியும் எது கர்மாவோ எது அவசியமோ அதை மட்டும் செய்வீர்கள், வீண் கவலையும் குழப்பமும் பயமும் அகலும்

அதன்பின் நீங்கள் தொட்டதெல்லாம் வாய்க்கும்

புலி ஒரே தாவலில் 16 அடி தூரம் பாயும், நவபுலியூரை வழிபட்டால் 16 வகை செல்வமும் தெளிவும் ஒருவனுக்கு கிடைக்கும் ஞானமும் கைகூடும்

அதனாலே இத்தலங்களை புலியூர் என்றார்கள்

அதன் முதல் தலம் சிதம்பரம் எனும் பெருபெற்றபுலியூர், அங்கு சென்று வணங்கி தெளிவினை பெற்று யாத்திரையினை தொடங்கினால் எல்லா நலமும் கைகூடும்

நவபுலியூர் : 02 திருப்பாதிரிபுலியூர

இந்திய தமிழகத்தின் இந்து ஆலயங்களெல்லாம் மிக மிக தொன்மையானவை, ஒவ்வொன்றும் எக்காலத்தில் உருவானதென அறியமுடியாதபடி பழமையானவை, ஒவ்வொரு ஆலயத்துக்கும் தனி சிறப்பும் தத்துவமும் தனித்துவமான ஆற்றலும் உண்டு

அப்படி ஒரு அபூர்வமான ச்கதி நிலையமே நவபுலியூரின் இரண்டாம் ஆலயமான திருப்பாதிரிபுலியூர

அன்று “கடை ஞாழலூர்” என்றும் இன்று கடலூர் என்றும் அழைக்கபடும் அந்த ஊரில்தான் இந்த சக்தியான ஆலயம் ஸ்தாபிக்கபட்டிருக்கின்றது

சோழ மன்னர்களும் பல்லவர்களும் பாண்டியர்களும் நாயக்கர்களும் மராட்டிய மன்னர்களும் கண்போல் காத்துவந்த தலம் இது

இது தேவாரம் பாடபட்ட தலம், சம்பந்தபெருமான் பாடுகின்றார்

“போதினானும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம்

போதினாலே வழிபாடு செய்யப் புலியூர் தனுள்

ஆதிநாலும் அவலம் இல்லாத அடிகள் மறை

ஓதிநாளும் இடும் பிச்சை ஏற்றுண்டுணப் பாலதே”.

அப்படியே அப்பர் பெருமானும் பாடுகின்றார்

“கருவாய்க் கிடந்து உன்கழலே நினையுங் கருத்துடையேன்

உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனதருளால்

திருவாய் பொலியச் சிவாய நம என்று நீறணிந்தேன்

தருவாய் சிவகதி பாதிரிப் புலியூர் அரனே.”

பாதிரி மரங்கள் நிறைந்திருந்த இந்த பகுதியில் யார் இந்த ஆலயத்தை தொடங்கிவைத்தார்கள் என்றால் அதை அன்னை சக்தியே சிவனின் திருவுளத்துக்க்கு ஏற்ப ஸ்தாபித்து கொடுத்தார்

அவ்வளவுக்கு பெரும் பெருமை கொண்ட ஆலயம் இது

இந்த ஆலயம் சிவாலயமாக கருதபட்டாலும் அன்னைக்கான தலமாக இருக்கவேண்டும் என திருவுளம் கொண்ட பெருமான், ஒரு நாடகம் நடத்தினார்

அதன்படி அவரும் தேவியும் அமர்ந்திருந்த நேரம், சிவனின் கண்களை விளையாட்டாக பொத்தினார் தேவி, தேவர்களே உலகை காக்க இமையா கண்களை பெற்றவர்கள், அவர்கள் கண் இமைக்கும் நொடியில் கூட உலகம் மாறிவிடும் கடமை தவறிவிடும் என்பதால் ஒரு நொடி கூட கண்ணை மூடாதபடி திறந்த கண்ணோடு இருப்பார்கள், அவர்கள் கண் இமைக்காது

தேவர்களுக்கே அப்படி என்றால் சிவபெருமான் எப்படி இருக்கவேண்டும்? அவர் கண்ணை மறைத்தால் என்னாகும்?

எங்கும் இருள் உண்டாயிற்று, அன்னை சட்டென அஞ்சி கைகளை எடுத்தாலும் பெரும் குழப்பம் வந்தது

இந்த குழப்பத்துக்கு காரணமான நீ பூலோகம் செல் என சாபமிட்டார் சிவன், தேவி தவறை உணர்ந்து மன்றாடினாள்

அவள் மேல் இரக்கம் கொண்ட சிவபெருமான் , நீ போய் எல்லா ஆலயங்களையும் வணங்கு, எங்கே உன் இடது கண்ணும் இடது தோளும் துடிக்குமோ அங்கே நீ இழந்த நிலையினை மீட்பாய், என்னை அடைவாய் என பரிகாரமும் சொன்னார்

தேவி பூலோகம் வந்து தானாக உருவாகிய எல்லா லிங்கங்களையும் தரிசித்து வழிபட்டாள், இந்த லிங்கத்தை அதாவது பாதிரி மரங்கள் நிரம்பிய இந்த இடத்தில் இருந்த லிங்கத்தை வணங்கியபோது அவளின் இடது கண்ணும் தோளும் துடித்தது, அன்னை அங்கே சாபம் நீங்கி சிவனை அடைந்தாள்

எந்த பாதிரி மரத்தடியில் அவள் தவமிருந்தாளோ அந்த மரத்தின் பெயராலே அவ்வூர் திருப்பாதிரிபுலியூர் என்றாயிற்று

அந்த மரம் அதாவது அன்னை எந்த மரத்தடியில் தவமிருந்தாளோ அது இன்றும் உண்டு.

அங்கிருந்துதான் தொடங்குகின்றது இந்த ஆலய வரலாறு, இது சிவனை அன்னை மீண்டும் அடைந்த இடம் என்பதால் பிரிந்தவர் சேரவும், இழந்ததை கொடுக்கும் தலமாகவும் விளங்குகின்றது

கடைஞாழல், கன்னிவனம், பாடலவுரம், ஆதிமாநகர், உத்தாரபுரம், பாதிரிப்பதி, புலிசை என இதற்கு பல பெயர்கள் உண்டு

அப்படியான இந்த தலத்தில்தான் புலிக்கால் முனிவர் புலிபோல் விடாபிடியாக தவமிருந்த காரணத்தால் புலியூர் எனும் பெயரும் சேர்ந்துகொண்டது

அன்னை சிவனை வேண்டி தவமிருந்தபோது சில காட்சிகளை அரூபமாய் கண்டாள், பெரும் பெரும் ஞானியரும் ரிஷிகளும் தெய்வீக பாடகர்களும் வந்து சிவனை பாடுவதையும் அதிலே அவர் மகிழ்வதையும் கண்டாள்

அதனால் பாடலை ஏற்று மகிழும் சிவனை பாடலீஸ்வரர் என அவளே பெயரிட்டாள், அந்த பாடலீஸ்வரரை நோக்கி தவமிருந்ததால் அவள் அருந்தவ நாயகி என்றுமனாள்

இந்த தலத்தின் பெருமை இன்னும் நீண்டது, புலிக்கால் முனிவரும் பதஞ்சலி முனிவரும் சிவனின் உத்தரவுக்கு ஏற்ப இங்கு வந்து வணங்கி பலன் பெற்றார்கள்

அப்படியே வியாக்ரபாதரரின் மகன் உபமன்யு இங்கு தவமிருந்தார், சில சாபம் காரணமாக முயல் வடிவம் பெற்ற அவர் இங்கேதான் தவமிருந்து தன் இழந்த வடிவினை மீட்டெடுத்தார்

அகத்தியர், கங்காதேவி, அக்னிபகவான் என பலர் வந்து சிவனை பணிந்து இழந்ததை எல்லாம் மீட்டார்கள்

காலம் காலமாக இப்படி பலர் வந்து வழிபட்டு இழந்ததை மீட்ட ஆலயத்தில், பிரிந்தவர் இங்கு வந்து முறையிட்டு வழிபட்டு மறுபடி சேர்ந்த ஆலாய்த்தில்தான் அப்பர் பெருமானுக்கு பெரும் அதிசயம் செய்தார் சிவ‌

பெருமான்

அப்பர் பெருமான் வாழ்வில் எல்லோரும் அதிசயிக்குமிடம் அல்லது பெரும் அற்புதமான இடம் அவரை கல்லை கட்டி கடலில் இட்டபோது அவர் கம்பீரமாய் கட்டுமரமாய் மிதந்து கரையேறிய காட்சி

அந்த அதிசயமே அப்பர் பெருமானை பணிந்து சமண மன்னன் மகேந்திர வர்மனை சைவத்தை ஏற்றுகொள்ள செய்தது

அப்பர் சுவாமிகள் முதலில் மதம் மாறிமருணீக்கினியார் என சமணராக மதம் மாறி பெரும் சமண பண்டிதராக அவர் வலம் வந்ததும் இந்த திருபாதிரிபுலியூரில்தான்

அங்கேதான் அவருக்கு நஞ்சூட்டி கொல்வது, அதிவெப்பமான சுண்ணாம்பு காளவாயில் அவரை தள்ளியும் அவர் பிழைத்தது என பல கொடுமைகள் நடந்தன‌

கடைசியாக அவரை கல்லைகட்டி கடலில் இட்டதும் அங்கேதான், ஆனால் அவர் கல்லோடு மூழ்கவில்லை. அந்த கல் கட்டுமரம்போல் மிதந்து அவரை கரையேற்றியது

அந்த இடம் இன்றும் “கரையேறிய குப்பம்” என அழைக்கபடுகின்றது, “சோற்றுனை வேதியன் சோதியில் வானவன்” என்ற பதிகத்தை பாடியபடியே கரை ஏறினார் அப்பர் சுவாமிகள்

கரையேறி அவர் பாடிய தலம் இதுதான், அந்த பாடல்தான் ” ‘ஈன்றாளுமாய் எனத் தொடங்கும் பாடல்

அதாவது இந்த ஆலயத்து சிவனேதான் தன்னை காப்பாற்றி தன்னோடு சேர்த்துகொண்டான், கடலில் மடிய இருந்த தன்னை இந்த சிவன் மீண்டும் தன்னோடு சேர்த்துகொண்டார், இழந்த பாக்கியத்தை கொடுத்தான் என அவர் பணிந்தது இந்த ஆலயம்தான்

சிவன் தனக்கு தாயாய் வந்தான், சக்திவடிவாய் அன்னையாய் வந்தான் என, தாயினை பாடுவது போல் ” ‘ஈன்றாளுமாய்” என பாடினார் அப்பர் சுவாமிகள்

இந்த ஆலயம் பிரிந்தோரை சேர்க்கும் இழந்ததை கொடுக்கும் என அன்னையாலும் ரிஷிகளாலும் வணங்கபட்ட ஆலயம், இங்கிருக்கும் முருகபெருமான் சன்னதிக்கு அருணகிரி நாதரும் வந்து பாடியிருகின்றார்

இந்த தலம் சந்திரன் ஆதிக்கம் கொண்ட தலம், இதனால் இங்கு சந்திரனுக்கு தனி சன்னதி உண்டு

நாம் முன்பே பார்த்தபடி நவபுலியூரும் நவகிரகங்களின் அருளை அருள்பவை, சிதம்பரம் சூரியனுக்கு என்பது போல சந்திரனுக்கானது இந்த திருப்பாதிரிபுலியூர்

பிரபஞ்ச ரீதியாக வானியல் ரீதியாக சந்திரன் மகா முக்கிய கிரகம்

காலத்தின் அதிபதி யாராக இருந்தாலும் காலத்தின் அளவை சொல்பவன் சந்திரனே, அவ்வகையில் சந்திரனை முன்னிட்டே நாள், திதி,மாதம் என எல்லாமும் நிர்ணயிக்கபடுகின்றது

கால பைரவராக கால்த்தின் அதிபதி சிவன் என்றால் சூரியன் சிவன் அம்சம் என்றால், சந்திரன் காலத்தை அளந்து காட்டும் சக்தி தேவியின் அம்சம்

பவுதீக ரீதியாக சந்திர சுழற்சியாலே மழை பொழிகின்றது, பருவம் மாறுகின்றது, பூமியோடு சேர்ந்து சூரியனை சுற்றும் நிலவு இல்லையேல் பூமி இல்லை, அது இயங்காது

சந்திரனின் ஈர்ப்பு விசையே பூமியில் பல மாறுதல்களை செய்து இயக்குகின்றது, அதுதான் பருவகாலமாகின்றது

ஜாதகரீதியாகவும் இன்னும் பல தொடர்புகள் ரீதியாகவும் சந்திரனுக்கும் மானுட மனதுக்காமன் தொடர்பு மிக மிக நெருக்கமானது

அதற்கு முன் சிவன் தலையில் சந்திரன் அமர்ந்த கதையும் அதில் இருக்கும் உண்மையினையும் காண வேண்டும்

சந்திரனுக்கு 27 மனைவியர் அதாவ்து 27 நட்சத்திரங்களும் மனைவியர் என்பதும் ஒரு சாபத்தால் சந்திரன் பிறை நிலவாய் சிவனிடம் அடைக்கலாகி அவரின் சிரசில் அமர்ந்து சிவன் கண்காணிப்பில் கடமையாற்றுகின்றான் என்பதும் புராண செய்தி

இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், 27 நட்சத்திரகாரர்களுக்கும் சந்திரன் தொடர்பு உண்டு, சந்திரன் இல்லாமல் ஜாகதகமே இல்லை

சந்திரன் இருக்குமிடமே தாயின் ஸ்தானத்தை குறிப்பதாக ஜோதிட நுணுக்கங்கள் சொல்லும், அவ்வகையில் தாய் எனும் சக்தி அருளை பெற சந்திரன் அருள அவ்சியம்

தேவியின் அருளை பெற சந்திரன் அவசியம்

இன்னும் சந்திரனாலே மனதின் உணர்ச்சிகள் எண்ணங்கள் எழுகின்றன, சந்திரனே மனதிடம் மனோபலத்துக்கான அதிபதி என்பதும் ஜோதிடம் சொல்லும் உண்மை

சந்திரன் மனதுக்கான கிரஹம், பவுர்னமி அமாவாசையில் கடல்மட்டம் எழுவதும் குறைவதும் கண் காணும் உண்மைகள்

அதாவது நீரானது பவுர்னமி அன்று பொங்குகின்றது,அப்படி நீரால் இயங்கும் உடலிலும் நீரில் மிதக்கும் மூளையிலும் சில மாறுபாடுகள் வரும்

அதனாலே சிலருக்கு பவுர்னமி அன்று ஒருவித அதீத எழுச்சிகள் வரும் நிலையற்ற தன்மை வரும், அமாவாசையில் அது தலைகீழாகும்

இதெல்லாம் மனம் சம்பந்தபட்டது சந்திரன் என்பதற்கான பெரும் சான்றுகள், அதனாலே ஜாதகத்தில் சந்திரன் இருக்குமிடம் முக்கியமானது

மனம் சரியாக இருந்தாலே புத்தியும் செய்யும் தொழிலும் சரியாகும் செல்வம் வாய்க்கும், இதனாலே சந்திரன் செல்வத்துக்கும் அடையாளமான கிரஹமானார்

திருப்பதி ஸ்தலம் சந்திரனின் தலம் என அழைக்கபடுவது அப்படித்தான்

சந்திரன் கால நேரத்தை அளந்து தரும் கிரஹம், உணர்ச்சிகளின் அதிபதி, இன்னும் தெளிவாக சொல்லபோனால் ஈர்ப்பு விசைகளை கட்டுபடுத்துபவர்

பூமியின் ஈர்ப்பு விசை எப்படி சந்திர கிரஹணம், அமாவாசை, பவுர்ணமியில் மாறுமோ இன்னும் வள்ர்பிறை தேய்பிறையில் மாறுமோ அப்படி மனம் கொள்ளும் பற்றுகளில் இருந்தும் அதனை விடுவிக்கவும் கட்டிவைக்கவுமான சக்தி சந்திரனுக்கு உண்டு

சந்திரனின் பார்வையே ஒரு பொருளை பற்றவும் செய்யும், மனம் விரும்பும் ஒன்றை துறக்கவும் செய்யும்

இதனாலே பற்றற்ற கோலத்துக்கு செல்ல சந்திரன் அருள் அவசியம், இறைவனை பற்றி நிற்க அந்த அருள் அவசியம்

அப்பர் கடல்நீரில் மிதந்தார் என்பது சிவனருளில் நடந்த ஒரு அதிசயம் மட்டும் அல்ல, அங்கும் விஞ்ஞான ரீதியாக சந்திரனின் கரங்கள் உண்டு

பூமி எல்லா பொருளையும் ஈர்க்கும் ஆனால் சந்திரனின் சக்தியால் அந்த ஈர்ப்பில் மாறுபாடு காட்டமுடியும், பவுர்ணமியில் கடல் பொங்குவது அப்படித்தான்

அப்பர் க்டலில் வீசபட்டபோது சிவன் சந்திரனை நோக்க சந்திரன் தன் ஈர்ப்பு சக்தியால் அவரை மிதக்கவைத்தார், அந்த இடத்தில் புவியின் ஈர்ப்பு சக்தி மீறி சந்திரனின் சக்தி பெருகி நின்றதால் அவர் மிதந்தார்

அதுதான் அங்கு நடந்த அதிச்யம், அதனால்தான் அங்கிருக்கும் சந்திரனுக்கு சக்தியும் அதிகம்

இதைத்தான் சிவன் நடத்திய திருவிளையாடலில் காணமுடியும், தேவிக்கு என்ன சொல்லி அனுப்பினார் சிவன்?

எங்கே இடது கண்ணும் இடது தோளும் துடிக்குமோ அங்கே உன் சாபம் தீரும் என்றார், அது கவனிக்கதக்கது

ஏன் அப்படி சொன்னார் சிவன்?

மானிட உடலின் இடபாகத்தில்தான் இதயம் உண்டு அதன் அருகே சிதம்பர தத்துவம் சொன்ன மனம் உண்டு, அந்த மனதில்தான் சந்திரனின் உணர்ச்சிகள் பிரதிபதிக்கும்

சந்தோஷம், அழுகை, மகிழ்ச்சி சோகம் என எது என்றாலு இதயம் பக்கம் உணர்வதும் அதனால்தான்

மனம் அங்கேதான் இருக்கின்றது, மனதுக்கு சக்தி கொடுப்பவன் சந்திரன் எங்கே மனோபலம் பெறுகின்றாயோ அங்கே உன் சாபம் தீரும் என சொல்லி அனுப்பினார் சிவன்

இறைவனும் இறைவியும் விளையாடும் நாடகங்கள், திருவிளையாடல்கள் அவர்களுக்கானது அல்ல அது மக்கள் பின்பற்றி நடந்து அந்த பாடத்தை கற்று ந்ன்மைகளை அடையவேண்டும் என்பதற்காக‌

அப்படி இந்த தலம் சந்திரனுக்கானது, சந்திரனால் மனம் பலம் பெறும், ஜாதகத்தில் சந்திரனாஓ இல்லை இதரரீதியாக‌ மனோபலம் குறைந்தவர்களாக இருந்தால் இங்கு வந்து மனபலம் பெற்று செல்லலாம்

இது மனோபலம் அருளும் ஆலயம்

முன்பே பார்த்தபடி சந்திரன் என்பது தாய்ஸ்தானத்தில் இருப்பது, அதனாலே சந்திரனாலே பூமியில் அழை பெய்யும், சந்திரனாலே நேரம், திதி என எல்லாம் வகுக்கபடும், மாதம் வரை காட்டுவது சந்திரனே

சந்திரனே பாச உணர்ச்சிகளுக்கு அதிபதி, தாயினை விட அன்பினை கொட்டுவார் யாருமில்லை

இங்கே சிவனை விட சக்தி பலமாக இருக்கின்றாள், சந்திரனின் அம்சத்தில் அள்ளி கொடுக்க தயாராக இருக்கின்றாள், சூரியன் சிவனின் அம்சம் என்றால் சந்திரன் அன்னையின் அம்சம்

அதனால் இங்கு வழிபட்டால் அன்னையின் அருளோடு சந்திரனின் அருளும் பூரணமாகும், அதனால் மனோபலமும் இதர பலங்களும் வாய்க்கும், தெளிவான தைரியமான மனம் வாய்க்கும் என்பது இந்த ஆலயத்தின் தத்துவம்

புலிக்கால் முனிவர் அதற்கு விளக்கமாக வழிகாட்டுகின்றார்

குட்டிபுலியினை தாய் தொலைவில் இருந்தே கண்காணிக்கும், குட்டி தனியாக விளையாடுவது போல தோன்றினாலும் தாய் தள்ளி இருந்து தன் கண்காணிப்பிலே வைத்திருக்கும்

அப்படி அன்னை தன் பக்தர்களை எப்போதும் கண்காணிக்கின்றாள், புலிபோல் தள்ளி இருந்து ஆனால் பாசமாக காக்கின்றாள், தன் பக்தர்களுக்கு எந்த சோதனையும் அவள் வரவிடமாட்டாள், ஆபத்தில் அவளே வந்து காப்பாள் என்பதை திருபாதிரிபுலிபூர் சொல்கின்றது

லவ்கீக வாழ்வில் தாய்போல் நின்று எல்லா நலமும் தைரியமும் மன அமைதியும் பலமும் தரும் அந்த ஆலயத்தின் அன்னை துறவிகளுக்கும் ரிஷிகளுக்கும் பற்றற்ற மனமும் தரும் அன்னை அதனை சந்திரன் மூலம் தருவாள் என்பதை சொல்கின்றது அந்த ஆலயம்

கடலூரில் இருக்கும் அந்த திருப்பாதிரிபுலியூர் ஆலயம், இழந்ததை தரும் ஆலயம், அப்படித்தான் தேவி நீங்கிய கையாலத்தை கொடுத்தது, சாபம்பெற்ற உபமன்யு முனியின் தோற்றத்தை கொடுத்தது

புலிக்கால் முனிவருக்கும் பதஞ்சலிக்கும் ஞானத்தை கொடுத்தது, அப்பர் சுவாமிகளுக்கு மீண்டும் சைவத்தில் பெரும் இடம் கொடுத்தது

பிரிந்தவர்களை சேர்த்துவைக்கும் தலமும் அதுதான், மனதால் மாற்றமும் தெளிவும் கொடுத்து நல்வாழ்வு அருளும் ஆலயமும் அதுதான்

சந்திர பரிகாரம், சந்திரனுக்கான குறைகள் இருப்பினும், பிரிந்தவர் கூட தடை இன்னும் பல்வேறு மனசிக்கல்களால் பாதிக்கபட்டு இருப்பினும் அங்கே உடனே நலம் கிடைக்கும், அன்னை அருந்தவ நாயகி அதனை அருள்வாள்

பாதிரிமரம் பூக்கும் ஆனால் காய்க்காது, அப்படி அங்கு வழிபடுவோர்க்கு பிறவி இல்லை என்பதும் இன்னொரு ஐதீகம்

கர்மம் கழிக்க வந்த வாழ்வினை நன்முறையில் வாழ, சரியாக வாழ்ந்து செல்ல மனபலம் அவசியம், மனோபலமே ஒருவனை வழிநடத்தும், சந்திரன் அதை அருள்வார். அது கொடுக்கும் பலமே மனோசக்தி, தாயாய் நின்று காக்கும்பெரும் சக்தி

சிதம்பரத்தில் ஆத்ம பலம் பெற்று இங்கே மனோபலம் பெற்று அந்த இருமுனிவர்களும் அடுத்த மூன்றாம் தலத்துக்கு சென்றார்கள், அதை அடுத்து காணலாம்

நவபுலியூர் 03 : திருஎருக்கத்தம் புலியூர்

நவபுலியூரின் மூன்றாம் ஆலயம் திருஎருக்கத்தம் புலியூர், விருத்தாச்சலம் அருகே ஸ்ரீமுஷ்ணம் அடுத்து அமைந்துள்ளது இந்த அதி முக்கியமான சிவாலயம்

இது தேவாரம் பாடபட்ட தலம், அதுவும் திருநீலகண்ட யாழ்பாணர் எனும் ஒரு நாயனாரை தேடி சம்பந்த பெருமானே வரும்போது வந்து பாடிய தலம், நாயன்மார்கள் வாழ்ந்த அற்புத சிவபூமி

“படையார் தருபூதப் பகடுஆர் உரிபோர்வை
உடையான் உமையோடும் உடன் ஆயிடு,கங்கைச்
சடையான் எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
விடையான் அடிஏத்த மேவா வினைதானே”

என பாடுகின்றார் சம்பந்த பெருமான்

இந்த தலத்தின் பெருமை அறிந்துதான் அன்றே சிவபெருமான் புலிக்கால் முனிவரையும் பதஞ்சலி முனிவரையும் முற்காலத்திலே சென்றுவழிபட சொன்னார், புலிக்கால் முனிவரால் அடையாளமிட்டபட்ட இந்த தலம் திருஎருக்கத்தம்புலியூர் என்றாயிற்று

எருக்க+அத்தம்+புலியூர் என அப்பெயர் வரும், வெள் எருக்கசெடிகளை எல்லையாக கொண்ட பகுதியாக அது இருந்ததால் அப்பெயர் வந்தது

அக்கோவில் மூலவர் மேல் சிவராத்திரி காலங்களில் சூரிய ஒளிவிடும்படி அமைப்பு உண்டு, அவ்வளவு நுணுக்கமாக கட்டபட்ட ஆலயம் அது

இந்த தலத்தின் வரலாறு முருகபெருமானோடு தொடங்குகின்றது, தேர்ந்த ஞானம் ஒன்றை போதிக்க சிவானால் நடத்தபட்ட நாடகத்தோடு தொடங்குகின்றது

கயிலாயத்தில் மிக முக்கிய வேதபொருளை சிவபெருமான் உபதேசித்தபோது பார்வதி அதனை கவனியாமல் இருந்தாள், அவள் மனம் எங்கோ அலைபாய்ந்தது

வேதத்தை கவனியாது அலையாயும் மனதை கொண்ட நீ, மீனாடும் கரையில் அலைகள் கரையில் வசிக்ககடவாய் என சிவன் சபித்துவிட பார்வதி மீணவபெண்ணாய் பிறக்க சென்றாள்

தாய்க்கு இப்படி ஒரு சாபமிட்ட சிவனை சில வார்த்தைகளால் கடிந்துகொண்டார் முருகப்பெருமான், தன்னையே எதிர்த்தவனுக்கு சில ஞானம் வரவேண்டி அவரையும் மானிடனாய் பிறக்க உத்தரவிட்டார் சிவன்

முருகபெருமான் உத்திரசர்மா என்பவராய் மதுரையில் தனபதி என்பவருக்கு மகனாக பிறந்தார், சாபம் காரணமாக பேச்சு வரவில்லை, சிவாலய தோறும் வேண்டிகொண்ட உத்திரசர்மர்க்கு இந்த கோவிலில்தான் பேச்சு வந்து சாபம் தீர்ந்தது

அந்த முருகபெருமானின் சாபம் தீர்ந்த இடமே இந்த ஆலயம், குமரன் வழிபட்டதால் இந்த சிவனுக்கு திருகுமாரசாமி எனும் பெயரும் உண்டு

அந்த உத்திரசர்மரின் சன்னதி இன்றும் அந்த ஆலயத்தில் உண்டு

இந்த ஆலயத்தின் தலவிருட்சம் எருக்கு, அந்த எருக்கு எபப்டி தலமரமானது என்பதற்கு ஒரு வரலாறும் உண்டு

இந்த தலத்தின் பெருமை கருதி தேவர்கள் மரங்களாகவும் பறவைகளாவும் சாபம் காரணமாக வந்து நின்றபோது வெடுவர்களாலும் இதர வகை மக்களாலும் துன்புறுத்தபட்டனர்

இதனால் அவர்கள் வெள்ளெருக்காய் மாறட்டும் என சிவன் விரும்ப அங்கே வெள்ளெருக்கு வந்தது அதுவே தலவிருட்சமுமாயிற்று என்பது ஐதீகம்

சேக்கிழாரும் சம்பந்தரும் மட்டும் பாடவில்லை, முருகபெருமானே வந்து சாபம் நீக்கி சென்ற் இடம் என்பதால் அருணகிரியாரும் இங்கு வந்து தரிசித்து திருபுகழ் பாடினார்

இந்த ஆலயம் பெரும் சக்திவாய்ந்தது சொல்லில் விளக்கமுடியா சூட்சுமம் நிறைந்தது, ஏகபட்ட தத்துவ விசாரங்கள கொண்டது

முதலில் கவனிக்கவேண்டியது அந்த வெள்ளெருக்கு எனும் தலவிருட்சம்

வெள்ளெருக்கு எல்லோரும் அறிந்தது, நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்கு இருந்தாலும் வெள்ளெருக்கு விஷேஷமானது

இந்த வெள்ளெருக்குவின் பெருமை மகாபாரதத்திலே உண்டு, பீஷ்மர் வாழ்வில் உண்டு

சிகண்டியால் வீழ்த்தபட்டு அம்புபடுக்கையில் வீழும் பீஷ்மர் தான் பெற்ற் வரத்தின் படி உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் விட வேண்டி காத்திருந்தார். அந்த காலம் வந்தாலும் அவரால் உயிரை விடமுடியவில்லை

ஏதோ தன் பாவகணக்கு இன்னும் தீராமல் இருக்கின்றது என உணர்ந்த அவர் வியாசரை மனதால் அழைத்தார்

வியாசரும் வந்து அவரின் சந்தேகத்தை உணர்ந்து சொன்னார்” பீஷ்மா, நீ குறைசொல்ல மடியா தியாக பிரம்மாச்சாரி எங்கும் எதற்கும் நீ ஆசைபட்டதில்லை ஆனால் உன்னையும் மீறி ஒரு பாவம் செய்தாய்,பாஞ்சாலி அவமானட்டபோது நீ அமைதியாக இருந்து அமைதிகாத்தாய் , அது பெரும்பாவம்

குலமுதுவனான நீ அந்நேரம் துரியோதனனை கண்டித்திருக்கவேண்டும், அந்நேரம் உன் கண், வாய், செவி, கை என எல்லாமும் அமைதி காத்தன, அதுதான் பெரும் பாவம், அநியாயத்தை கண்டும் உன் கண்கள் அமைதியாக இருந்தது, உன் வாய் பேசவில்லை அவள் கதறலை கேட்டும் உன் செவி இரங்கவில்லை, உன் கைகள் அவளை காக்க எழவில்லை அதுதான் பெரும் பாவம்” என்றார்

பீஷ்மர் தவற்றை உணர்ந்து கதறினார், தன் கண், வாய், செவி எல்லாம், தோள் கைகளை எல்லாம் நெருப்பால் சுட்டுவிட கோரினார்

வியாசர் சொன்னார், “நீ தவற்றை உணர்ந்ததால் உன் பாவம் மன்னிக்க்பட்டது, உன் பாவத்துக்கு பிராய்சித்தமாக அக்னிபகவான் வடிவ சூரியன் அம்சமான எருக்க இலையால் உன் அவயங்களை மூடி உன் பாவத்தை எடுத்துவிடு நீ சுத்தமாவாய்

அருக்கு சூரியன் அம்சம், சூரியனை எந்த மாசும் அண்டமுடியாது என்பது போல எருக்கு இருக்குமிடம் பாவம் இராது அதனை செய் என்றார்

அப்படியே செய்து தன் பாவம் தீர்த்தார் பீஷ்மர், அது இன்றும் ரதசப்தமி காலத்தில் இந்துக்களின் மரபாக உண்டு

அன்று உடலின் பாகங்கள் மேல் எருக்கு இலை வைத்து பின் குளிக்கும் வழமை உண்டு, அது பாவங்களை போக்கும் செயல், உடல் அவயங்களின் பாவத்தால் கர்மத்தால் வந்த வினைகளை போக்கும் காரியம்

அப்படிபட்டது எருக்கு, சிவபெருமான் தலையில் அணியும் இலைகளில் இதுவும் ஒன்று, இதன் மருத்துவகுணம் உலகறிந்தது என்றாலு சூட்சும பலன் ஏராளம்

அதன் ஏழு நரம்புகள் சூரியனின் ஏழு குதிரை போன்றது, 12 ஆண்டுகள் என்றாலும் துளிநீர் இல்லாவிட்டாலும் சூரிய கதிரில் இருந்து நீரெடுத்து வாழும் அசாத்திய வல்லமை அந்த எருக்குக்கு உண்டு

பிரபஞ்ச ஈர்ப்புசக்தி அதற்கு அதிகம், இதனாலே அதனை பிள்ளையார்க்கு உகந்தது என என்றார்கள், அந்த வேரில் செய்யபடும் விநாயகர் முதல், விநாயகருக்கு சாற்றபடும் எருக்கமாலை வரை விசேஷம்

இங்கே ஒரு கேள்வி எழும் அல்லது எழவேண்டும், இப்படியான சிறப்பை கொண்ட எருக்கினை ஒளவயார் ஏன் “வேதாளம் சேருமே வெள்ளெருக்கு பூக்குமே” என பாழான இடங்களை நோக்கி பாடினார் என்பது

வெள்ளெருக்கு ஈர்ப்பு சக்தி அதிகம் கொண்டது, அதுதெய்வ சன்னதியில் நல்ல சக்திகளை ஈக்க்கும், அதேநேரம் பாழான இடங்களில் துர்சக்திமிக்க இடங்களில் வளர்ந்தால் அந்த கெட்டதையும் ஈர்க்கும்

இதனால் தெய்வ சன்னிதான இடங்களில் இருக்கும் எருக்குகள்தான் பூஜைக்கும் வழிபாட்டுக்கும் உகந்தவை

அப்படி இந்த சிவலிங்க சன்னதியில் முருகபெருமானும், ரிஷிகளும், அவதாரங்களும் புலிக்கால் முனிவர் பதஞ்சலி போன்ற மாமுனிகளும் வணங்கிய இத்தலத்தில் உள்ள எருக்கு மகா விஷேஷமானது

அதனாலே இதனை தலவிருட்சமாக கொண்டார்கள், அந்த ஆலயமே எருக்கத்தம்புலியூர் என்றானது

சூட்சும சக்தி, பிரபஞ்ச சக்தி, மருத்துவ சக்தியெல்லாம் தன்னகத்தே கொண்டிருக்கும் எருக்கு பல நோய்களை உடலாலும் மனதாலும் தீர்க்கும் சக்தி கொண்டது

அந்நாளில் சுவேதன் என்ற மன்னன் முன் வினைப் பயனால் வெண் குஷ்டத்திற்கு ஆளானான். அவன் இந்த எருக்கத்தம் புலியூர்த் தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்து நோய் நீங்கப் பெற்றான்.

எருக்கிற்கு வெண்குஷ்டத்தைப் போக்கும் சக்தி உண்டு என்பது அன்றே உலகிற்கு இந்த ஆலயம் மூலம் தெரிந்த ஒன்று

எருக்க இலையும் அது கலந்த நீரும் மருத்துவ மற்றும் பிரபஞ்ச சக்தி கொண்டது , அதனாலே ரச சப்தமி போன்ற நாட்களில் அது இந்துக்களின் குளியல் வழமையாயிற்று

இந்த ஆலயத்தின் இன்னொரு சூட்சுமமான சூசகமான பலன் இந்த ஆலயம் கேதுபகவானுக்கு உரியது, கேது கிரஹ குறை இருப்பின் இங்கே அது தீரும்

கேது பகவானுக்கு பல விஷேஷ குணங்கள் உண்டு, இருக்கும் இடம் பொறுத்து அவர் வேண்டியன அருள்வார் அல்லது விலக்கிவிட்டு தடுப்பார்

எப்படி எருக்க இலை ஆலயத்தில் நல்ல சக்திகளை ஈர்த்தும், பாழடைந்த இடத்தில் துர்சக்திகளை ஈக்குமோ அப்படி கிரகங்களின் சேர்கையினை பொறுத்து அவர் நல்லதும் சில மறைத்தல்களையும் கர்ம வினைபடி செய்வார்

இதனாலே எருக்கு விருட்சமான இந்த ஆலயம் மிக சரியாக பொருந்திற்று

இதெல்லாம் தாண்டி கேது ஞானத்தின் கிரஹம், ஞானமும் அறிவும் அவரிடம் இருந்தேதான் வரும் குறிப்பாக ஆன்மீக ஞானமும் தெளிவும் அவரின் தனி வரம்

அவரின் சக்திகள் கொஞ்சமல்ல எதை செய்யவேண்டும் எதை செய்ய கூடாது எனும் பெரும் ஞானமும், எது நிலையானது எது நிலையற்றது என்பதை சொல்லும் தனி ஞானமும் அவரின் வரம்

இதனாலே அவரை விநாயகபெருமானின் அம்சத்தோடு சொன்னார்கள், மகா லட்சுமியோடும் பொருத்தி சொன்னார்கள்

யானை சக்தி மிக்கது அது நினைத்தால் காட்டையே அழிக்கும் ஆனால் அதை செய்யாமல் எதை செய்யவேண்டுமோ அதை மட்டும் செய்து தன் வழியில் நடக்கும் அதைத்தான் கேதுவுக்கும் சொல்லி விநாயகர் அம்சம் என்றார்கள்

லட்சமி தேவியின் அருளோடும் கேதுவின் அருள் அவசியம் என்றார்கள், அதுதான் எது தேவையான செலவு எது தேவையற்ற வீண் செலவு? எது நல்வழி செல்வம் எது தீவழி செல்வம்? செல்வத்தால் புண்ணியம் தேடுவது எப்படி எனும் பெரும் நுணுக்கமான அறிவையும் கொடுக்கும்

இதனாலே ஆன்மீகமோ லவுகீகமோ கேதுவின் ஞானம் அவசியம், ஆன்மீகத்தில் அது பெரும் பற்றற்ற ஞானத்தை கொடுக்கும் நேரம், லவுகீகத்தில் மிக மிக தெளிவான ஞானத்தையும் கொடுக்கும்

கேதுவின் பலம் ஜாதகத்தில் முக்கியமானது, அது அமைந்திருக்கும் கட்டங்கள் கவனமானது

ஞானகாரகன் என கேதுவுக்கு பெயர், மோட்சகாரகன் எனவும் அவர் அழைக்கபடுவார், ஞானமின்றி மோட்சமில்லை என்பதால் எல்லா ஞானத்துக்கும் அவரே மூலம்

இதனால் ஒவ்வொருவருக்கும் கேது பகவானின் அருள் வேண்டும், அவர் அருளின்றி ஞான தெளிவு வராது

கேதுவின் மிக முக்கிய குணமே ஞானம் வழங்குவது, உண்மையினை அறியவைப்பது, அதற்கு பலவித சோதனைகளோ இல்லை சூழலையோ உருவாக்கி புடமிட்டு ஞானம் வழங்குவது

ஒருவவன் முக்தி அடைய எது தடையோ அதை உடைப்பதும், எது முக்தி அடைய தடையாய் வருமோ அதனை தடுத்து காப்பதும் அவரின் தனி பிரசித்தம்

எடுக்க வேண்டியதை எடுப்பார், கொடுக்க வேண்டியதை கொடுப்பார், தடுக்க வேண்டியதை தடுத்து ஞானம் கொடுத்து வழிநடத்துவார்

கர்மா உணரவைப்பவரும், கார்மத்தை கடக்க வழி செய்பவரும் ஞான காரணனாகிய கேதுபகவான், அவராலே பிறப்பற்ற நிலையினை ஒருவன் அடையமுடியும்

பிறப்பற்ற நிலை அடைய உண்மையினை உணர்தல் வேண்டும், பிறபபு சுழலை அகற்ற ஞானம் அடைதல் வேண்டும், அது கேதுவினால் மட்டுமே அருளபடும், இதனாலே எல்லா ஆன்மீகவாதியின் ஜாதகங்களில் கேது முக்கிய இடத்தில் இருப்பதை காணமுடியும்

அந்த முருகபெருமான் உருத்திரசர்மாமாக ஊமையாக வந்ததை கவனியுங்கள், அது பூர்வ ஜென்ம வினை இன்னும் உண்மை பொருளை அறியாமல் பந்தபாசத்தில் தாய் என சிக்கி முருகபெருமான் தேடிய சாபம்

அந்த சாபம் இங்கே தீர்ந்தது என்பதும், அதுவரை பேச்சுவராமல் இருந்தவருக்கு பேச்சு வந்தது என்பதும் ,சிவன் சன்னதியில் ஞானம் கிடைத்து உண்மை புரிந்தது என்பதும் இங்கே கவனிக்கதக்கது

இது எல்லாமே கேதுபகவானின் அருள்

எது இல்லையோ அது கொடுக்கபட்டது, எது பூர்வ ஜென்ம சாபமோ அது களையபட்டது, எது உண்மையோ அது தெரிவிக்கபட்டது, பாச பந்தம் அகற்றபட்டது

இதுதான் இந்த காட்சிதான் அந்த தலம் கேதுவின் அருள் பெற்ற தலம் என்பதை காட்டி நிற்கின்றது

எது தடுக்கபட்டதோ அதை கொடுப்பதும், எது பூர்வஜென்மாவோ அதை அருள்வதும், மீண்டும் பிறப்பற்ற நிலை கொடுத்து பரம்பொருளிடம் ஜீவாத்மாவினை மறுபடி கொடுப்பதும் அந்த கேதுவின் அருள்

விநாயக பெருமான் வில்லங்களை தீர்ப்பவர், வினை அருள்பவர், ஞானம் தருபவர் என கேதுவின் தெய்வமாக் கொண்டாடபடுவதும் இதனாலே

இப்போது விநாயகர், எருக்கம் செடி, கேதுபகவான் எல்லாம் கவனித்து பாருங்கள் இந்த தலத்தின் பெரும் ஆச்சரியமும் சூட்சுமமும் துலங்கும்

இந்த ஆலயம் எப்படியான அருளை வழங்கும், உண்மையிலே தன்னை பணிவோர்க்கு எப்படியான பெரும் ஞானத்தை தந்து உயர்த்தும், எப்படி விலக்க வேண்டியதை விலக்கி கொடுக்கவேண்டியதை ஞானமாக கொடுத்து பெரும் புகழ் மங்காமல் தரும் என்பதற்கு ஒரு பக்தனின் உன்னத வாழ்வு எக்காலமும் உண்டு

அவன் நாயன்மார்களில் ஒருவனாக வரகூடியவன் என தகுதிகொண்ட ராஜராஜ சோழன்

அவன் வாழ்வு ஆச்சரியமானது, மாபெரும் அற்புதங்களை கொண்டது

அவன் அரசகுலம் என்றாலும் அந்த ராஜ்ஜியம் அவனுடையது அல்ல, ஏன் அவன் தகப்பனுடையதே அல்ல அது அவன் பெரிய்ப்பனுடையது

ஒருவேளை அது இவன் தந்தைக்கு கிடைத்தால் கூட இவனின் மூத்தமகன் ஆதித்ய கரிகாலனுககு செல்லுமே தவிர இவனுக்கு வராது

ஆனால் சிவன் அருள் பெற்றவனுக்கு எல்லாமே சாத்தியம், அப்படித்தான் அவனுக்கு ராஜ்யம் அமையும் காலத்துக்கான வழிகள் வந்தன‌

அந்த வழிகள் வரும்போது பெரும் குழப்பமும் வந்தன

அவனுக்கு சோதனைகள் அதிகம் வந்தன அவன் குலமும் ராஜ்ஜியமும் குழம்பி தவித்தன அவன் தனிமனிதனாக போராட ஆரம்பித்தபோது சிவனைத்தான் அழைத்தான்

சிவன அவனோடு இருந்து கருவூர் சித்தர் வழியாக அவனை காத்தார், வழிநடத்தினார்

அப்படி வந்தவனுக்கு ஆண்மகவு இல்லை எனும் வருத்தம் இருந்தது, அதுவும் அரச குலத்தில் ஆண்மகவு இல்லாதது பெரும்குறை என கருதபட்ட காலம் அது

சாபம்பெற்ற அரசனுக்கே ஆண்மகவு இராது என்பது அக்கால ந்மபிக்கை

தனக்கொரு ஆன்மகன் இல்லாதது அவனுக்கு பெரும் வருத்தமாய் இருந்தது, சிவனிடம் மன்றாடி அழுதான், நேரம் கிடைக்கும்போதெல்லாம் கதறினான்

தெய்வம் முன்னால் கதறும் பக்தனின் எல்லா குறையும் தீர ஒரு காலமுண்டு ஒரு இடமும் உண்டு, நேரமும் இடமும் மகா அவசியம்

அப்படி அவனை இந்த கோவிலுக்கு போக சொன்னவர் கருவூர் சித்தர்

தன் ஞான்சக்தியால் இது கேதுபகவானின் அருள் குறைபாடு, இந்த அருள்மொழி தேவனுக்கு கேது அருள் வேண்டும், அதனால் இவனுக்கு லவுகீக ஞானமும் ஆட்சி ஞானமும் ஆன்மீக ஞானமும் கிடைக்க சிவன் செய்யும் நாட்கம் என்பதை ஆறிந்தார்

அப்படியே தன் மனைவி வானமாதேவியினை அழைத்து அந்த ஆலயம் சென்றான் ராஜராஜன், அந்த அரசி வயிற்றில் எருக்க இலை வைத்து வழிபட சொன்னார் கருவூரார்

மனமார சிவனை வேண்டி, அந்த கோவிலில் தனக்கான அற்புதம் வேண்டி ஆண்மகவு வேண்டி அப்படியெ வழிபட்டான் அருள்மொழி தேவன்

அந்த அருளாலே அவனுக்கொரு மகன் பிறந்தான், அதுவும் சிவனுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தான்

அவனே ராஜேந்திர சோழன்,கிழக்காசியா முழுக்க ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் கட்டுபடுத்தி ஆண்டவனும் பெரும் இந்து ஆலயமும் இந்து எழுச்சியும் கொடுத்த சிவனடியாரான ராஜேந்திர சோழன்

ராஜேந்திர சோழன் பிறந்தபின்பே ராஜராஜனுக்கு வெற்றிகள் குவிந்தன, அவன் வளர வளர சோழர்குல பெரும் சக்கர்வர்த்தி எனும் பெரும் இடத்தை அடைந்தான் அருண்மொழி தேவன், அப்படியே ராஜராஜசோழன் என்றானான்

சிவன் தனக்கு செய்த பெரும் அற்புதத்துக்காகவே எல்லா வளமும் ஆட்சியும் அறிவும் நல்ல ஆண்மகனும் தந்ததற்காகவே பெரும் ஆலயத்தை கட்டிவைத்தான், தஞ்சையில் மாபெரும் கலை கூடமாக கட்டிவைத்தான் ராஜராஜன்

ராஜராஜசோழன் வாழ்வில் பெரும் திருப்புமுனை கொடுத்தது அந்த ஆலயம்தான், இந்த திருஎருக்கம்புலியூர் ஆலயமேதான்

இதனாலேதான் அந்த ஊருக்கு தன் மகன் நினைவாக “ராஜேந்திர பட்டினம்” என பெயருமிட்டான் சோழன்

ராஜேந்திர சோழனும் பெரும் சிவனடியாராக எண்ணற்ற கோவில்களை கட்டினான், கடல் தாண்டியும் கட்டினான், கடாரம் வரை கட்டினான்

கங்கை கொண்ட சோழபுரம், திருகாளத்தி என அவன் கட்டிய கோவில்கள் காலத்தை வென்றவை

இப்படியான பெரும் ஆச்சரியமான ரகசியங்களை பெரும் வல்லமையினை கொண்ட ஆலயம் திருஎருக்கத்தம்புலியூர்

நீங்கள் யாராகவும் இருங்கள், எந்த குறையோடும் இருங்கள்., இந்த தலத்துக்கு வந்து எருக்கம் இலை வைத்து வழிபட்டால் உங்கள் குறை தீரும்

அங்கத்தில் எது பாதிப்போ அங்கே எருக்க இலை வைத்து இங்கே வழிபட்டால் அந்த நோய் தீரும்

பெரும்குறையான குழந்தையில்லா பெண்கள் தங்கள் வயிற்றி எருக்க இலை வைத்து வழிபட்டால் அந்த சாபம் தீர்ந்து நல்ல கனி உருவாகி ராஜேந்திரனை போல கிடைக்கும்

அந்த ஆலயம் அபூர்வமான சக்திகளை கொண்டது, கேது பகவான் உங்கள் ஜாதகத்தில் பலவீனமாகவோ அல்லது சிக்கலாகவோ இருப்பின் அங்கு சென்று வழிபடுங்கள் எல்லா ஞானமும் தெளிவும் கிடைக்கும்

அவர் எதனை உங்களிடம் இருந்து அகற்றவேண்டுமோ அதை அகற்றுவார் எதை தரவேண்டுமோ அதை தருவார்

ஒவ்வொரு மனிதனும் அறிவானனும் திறமையானவனுமாக இருந்தாலும் பூர்வ ஜென்ம வினையால் ஏதோ ஒன்றில் சிக்கி இருப்பான் அடிமையாக கிடப்பா ஒரு கட்டு அவனை கட்டி வைத்து ஆட்டும்

அவனால் அக்கட்டில் இருந்து வெளிவரமுடியாது வெளிவரும் ஞானமும் தெளிவும் அவனிடம் இராது

அது போதையாக இருக்கலாம், இதர வழக்கமாக இருக்கலாம் ஏன் பந்தபாச மயக்கமுமாக கூட இருக்கலாம் அதிலிருந்து வெளிவரும் எல்லா வழிகளையும் கேது பகவான் அருள்வார்

உங்களுக்கு எது குறையோ எது தீரும், எது வேண்டுமோ அது தேடிவரும், எந்த ஞானம் வேண்டுமோ அது கூடிவரும், எல்லாம் நலமாகும், எது பூர்வ ஜென்ம சாபமோ அது உடனே தீரும்

சிதம்பரம் ஆலயம் ஆத்மகாரன் எனும் சூரியனுக்கு, திருபாதிரிபுலியூர் ஆலயம் மனோசக்தி வழங்கும் சந்திரனுக்கு எனும் வரிசையில் இந்த ஆலயம் ஞானகாரஹன் என வழங்கபடும் கேதுவுக்குரியது

அந்த ஆலயம் சென்று எது வேண்டாமோ அதை அகற்றி எது வேண்டுமோ அதைபெற்று எல்லா நன்மையும் அடையலாம், ராஜராஜனுக்கு வாழ்வ அருளிய அந்த ராஜேந்திர பட்டினம் ஆலயத்து கதவுகள் உங்களுக்காகவும் உங்கள் சந்ததிக்காகவும் திறந்தே இருக்கின்றது, அங்கே சென்று எருக்கை இலையால் முத்தெடுக்க அந்த சிவன் உங்களை அழைத்துகொண்டே இருக்கின்றார்

ஆத்மத்தால் யார் அதை உணர்கின்றார்களோ அவர்கள் பாக்க்கியம் செய்தவர்கள்

நவபுலியூர் 04 : திருஓமம்புலியூர்

சிதம்பரம் அருகே கொள்ளிடடத்தினை அன்மித்து நிற்கும் இந்த ஆலயம் நவபுலியூரில் நான்காம் தலமாகும். இதன் சிறப்பும் பெருமையும் மிக அதிகம்.

அந்த ஊர் வேதங்களும் ஹோமங்களும் இடையறாது முழங்கிய ஊர், எப்போதும் ஹோம குண்டமும் யாகமும் நிறைந்து செழித்து யாகப் புகையால் நிறைந்த ஊர்.

அதனாலே ஹோமம் என்பது ஓமம் என்றாகி திருஓமப்புலியூர் என புலிக்கால் முனிவர் வந்து வழிபட்டதால் அழைக்கப்படுகின்றது.

இங்கே சிவன் வியாக்ரபாதர் வழிபட்டதால் வியாக்ரபுரீஸ்வரர் என்றும், இன்னும் பலரின் துயர் தீர்த்ததால் துயர்தீர்த்தநாதர் என்றும், பிரணவ மந்திரத்தை உரைத்ததால் பிரணவபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டு, வணங்கப்படுகின்றார்.

இந்த ஆலயம் தேவாரம் பாடப்பட்ட ஆலயம், “வட தளி” என அழைக்கப்பட்ட ஆலயமும் அதுதான்.

“ஆங்குஅணி சொல்மலர் மாலை சாத்தி,அப்

பாங்குபந் தணைநலூர் பணிந்து பாடிப்போய்,

தீங்குதீர் மாமறைச் செம்மை அந்தணர்

ஓங்கும்ஓ மாம்புலி யூர்வந்து உற்றனர்”

என்று பெரியபுராண பாடலும்,

“சம்பரற்கு அருளிச் சலந்தரன் வீயத்

தழல்உமிழ் சக்கரம் படைத்த

எம்பெரு மானார், இமையவர் ஏத்த

இனிதின்அங்கு உறைவிடம் வினவில்,

அம்பரம் ஆகி அழல்உமிழ் புகையின்

ஆகுதி யால்மழை பொழியும்,

உம்பர்கள் ஏத்தும் ஓமமாம் புலியூர்

உடையவர் வடதளி அதுவே”

என ஒரு முழு பதிகம் இத்தல்த்திற்காக பாடுகின்றார் சம்பந்த பெருமான்.

இந்த தலத்தின் வரலாறு தெட்சனா மூர்த்தி வேதம் உரைத்த கதையில் இருந்து தொடங்குகின்றது. தெட்சனா மூர்த்தி பெருமை எல்லோரும் அறிந்தது.

சனகாதி முனிவர்கள் எனும் பிரஜாபதிகளுக்கு தட்சனை போலே சிவன் என்றாலே ஒரு ஏளனம் உண்டு. ஆனால் அந்நேரம் அவர்களுக்கு வேதங்களின் உட்பொருளை, பிரணவ மந்திரப் பொருளை விளக்கிப் படிக்கும் அவசியம் இருந்தது.

அப்போது பிரம்மனும் விஷ்ணுவும் வேறு வேறு வேலைகளில் பரபரப்பாக இருந்ததால் சிவனிடமே வந்தார்கள். வேறு வழியின்றி தலைகுனிந்து நின்றார்கள்.

சிவன் தெற்கு பார்த்து அமர்ந்த மூர்த்தியாக, தெட்சன மூர்த்தியாக அமர்ந்து அவர்களுக்கு போதித்தார். சனகாதி முனிவர்களுக்கு சிவன் தட்சனமூர்த்தியாக வேதங்கள், அவற்றின் பொருளை போதித்தபின் அந்த வடிவம் பிரசித்தியாயிற்று.

அறியமை அரக்கனை காலில் மிதித்தபடி சின் முத்திரை கொண்டு சுவாமி அதை போதித்தார்.

இந்த தட்சனாமூர்த்திதான் எல்லா ஆலயத்திலும் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார், இவருக்கும் குருபகவானுக்கும் வித்தியாசம் உண்டு.

இந்த தட்சனாமூர்த்தி எப்படி இந்த ஓமம்புலியூர் தலத்துக்கு வந்தார் என்றால் அது வழக்கம் போல ஒரு திருவிளையாடல்.

தேவி சில விளையாட்டுக்களை செய்ய, வேதத்தை கற்கும் போது சில விளையாட்டுக்களை செய்ய ஆத்திரமடைந்த சிவன், இனி முழு வேதமும் அறிந்தபின்பே கயிலாயம் வரக்கடவாய், அதுவரை பூமியில் தவிக்கக் கடவாய் என சாபமிட்டார்.

சரஸ்வதி தேவி வழிகாட்ட ஓமங்களும் வேதங்களும் பெரும் முழக்கத்துடன் நடக்கும் இந்த தலத்துக்கு வந்த அன்னை இலந்தை மரத்தடியில் தவமிருந்தாள்.

அன்னைமேல் இரக்கம் கொண்ட சிவன் தட்சினாமூர்த்தியாய் தோன்றி அவளுக்கு சாபம் தீரும் பொருட்டு வேதங்களை உபதேசித்தார். அப்போது இடையூறு வராமல் இருக்க நந்தி காவலுக்கு வைக்கப்பட்டார்.

(சுவாமிமலையில் முருகப் பெருமான் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தது ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு உபதேசம் செய்யும் போது ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டதால் தான் என்றும் ஒரு செய்தி உண்டு.)

இப்படி அன்னையே சிவனிடம் வேதம் கற்று, பிரணவ அர்த்தம் கற்று பின் கயிலாயம் அடைந்த தலம் இது.

புலிக்கால் முனிவரும் பதஞ்சலியும் ஓடி ஓடி வந்து வணங்கிய தலம் இது.

இந்த தலத்தில்தான் அன்னைக்கு குருவாக, முருகனுக்கும் குருவாக தட்சினாமூர்த்தியாக சிவன் வேதத்தின் பொருள் சொன்ன இடம் இது.

இந்த கோவிலை சோழர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள் என எல்லோரும் மிக நன்றாய் பராமரித்தார்கள். கருவூர் சித்தரின் விருப்ப கோவில்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.

இத்திருத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சிறப்பு. இறைவன் சந்நிதியில் வலதுபுறம் தெற்கு நோக்கி உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி உயர்ந்த பீடத்தில், சிலாரூபத்தில் காட்சி தருகின்றார்.

ஓமாம்புலியூர் தலத்தில் சிவாகம ரீதியாக கருவறை தெற்கு சன்னதியில் ஒரு தட்சிணாமூர்த்தியும், இறைவன் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருள் பாலிப்பது இத்திருத்தலத்தில் மட்டும் தான்.

இரண்டு தட்சிணாமூர்த்தி இருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சம். பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமானுக்கும் தனி சந்நிதி உள்ளது.

இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் கருவறை சன்னிதானத்தில் காணப்படும் நடராசரின் சிலாரூபம். இது வியாக்ர பாதருக்குக் காட்சி தந்த வடிவம், அவ்வளவு அழகானது.

ஏனைய மூர்த்தங்களாக விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை முதலியோர் உள்ளனர். அம்பாள் சந்நிதி அழகாகவுள்ளது.

வேதங்களே உலகை இயக்குபவை. பிரணவம் எனும் மந்திரமே உலகை இயக்கும் மந்திரம்., அந்த சப்த ஒலிகளிலேதான் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது.

வேதங்கள் என்பவை வெறும் நூல் எழுத்து அல்ல, அவை பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியின் ஒலிகள். அண்டமும் பிண்டமும் ஒன்றே.

வேதங்கள் அறிந்தால் உடல் இயக்கமும், அங்கிருக்கும் இயக்கமும் அறியலாம். சுருங்கிப் பிரியும் பிரபஞ்சம் போல, இந்த சுருங்கி விரியும் இதயத்தால் இயங்குவது பிண்டம்.

இதனாலேயே அதை இயக்கும் அந்த பிரபஞ்சத்தை இயக்கும் மந்திரங்களை அந்த ஒலிகளை ஓதி பிரபஞ்சத்தில் இருந்து சக்தியினை பெற்று, இறை சக்தியினை அடையவேண்டும் என்றார்கள்.

இது இந்துக்களின் சூட்சுமமான வழிபாடு, ஹோமம் யாகம் என்பதெல்லாம் அதுதான்.

வேதங்களின் பொருள் உணர வரம் செய்யும் ஆலயம் மட்டுமல்ல இது. குருவின் அருள் நிறைந்த தலமாகும்.

சிதம்பரத்தில் சூரியன், திரு எருக்கம்புலியூரில் கேது, திருப்பாதிரிபுலியூரில் சந்திரன் என்ற வரிசையில் இது குருவுக்கான தலம்.

அதனால் குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

குருவருள் என்பது ஒருவனுக்கு மிக மிக முக்கியம். குரு என்றால் அறியாமை நீக்குபவர், போதிப்பவர், நல்ல விஷயங்களை காட்டித்தரும் ஆசான் மட்டுமல்ல‌

குரு என்பது ஒரு தன்மை, குருத்தன்மை இருக்கும் இடத்தில்தான் இயக்கம் இருக்கும்.

குருதான் உயிர்ப்பு நிலை தரும், உயிர்ப்பு நிலைதான் இயங்க வைக்கும்.

குரு என்பது இயங்க வைப்பவர், உயிர்த்தன்மை எனும் தன்மையில் உயிர்ப்பாய் விழிப்பாய் இருக்க வைப்பவர். அந்த விழிப்பு நிலை உயிர்ப்பு நிலை மிக மிக அவசியம்.

குரு என்பவர் எல்லா கிரகங்களையும் தாங்கி நிற்கும் ஒரு இணைப்பாளர். அவராலேதான் இங்கே எல்லாம் சரியாக இயங்க முடியும், உயிர்ப்பு நிலைக்கும்.

மானிடனுக்கோ இந்த பிரபஞ்சத்துக்கோ ஏகப்பட்ட கிரகங்களும், அவற்றின் பலன்களும் இருந்தாலும், இயக்குவதற்கு ஒரு ஆதார சக்தி தேவை. அவற்றை உயிர்ப்புடன் இயங்க வைக்க ஒரு சக்தி தேவை

அதுதான் குரு. குரு என்றால் இயங்க வைப்பவர், பயன்படும் வடிவுக்கு ஒருவனை சக்திமாற்ற வைப்பவர்.

எது சரியோ, எது நிலையானதோ அதை நோக்கி இயக்க வைப்பவர்.

இந்த தலத்தில் விஷ்ணுவுக்கு ஜலந்திரனை அழிக்க சக்கரம் கொடுக்கப்பட்ட சிலை ஏன் உண்டு என்றால் விஷயம் இல்லாமல் இல்லை.

சக்கரம் என்றால் இயக்கம். இயக்குபவர் குரு. நானே குருவாய் நின்று இயக்குகின்றேன் என இயங்கும் சக்தி ஒன்றை, முழு அளவில் சுழன்று இயங்கும் சக்தியினை அங்கே ஏற்படுத்தி கொடுக்கின்றார்.

இந்த தத்துவமேதான் குரு தத்துவம். ஒருவனை செயல்பட வைப்பவர் குரு. அவனை இயக்குபவர் குரு, அடுத்தடுத்த ஞான வழிக்கு நகர்த்துபவர் குரு.

குரு இல்லையே இயக்கமில்லை. எதுவும் உருவாவதில்லை. எதுவுமே அடுத்த நிலைக்கு உயர்வதில்லை.

இதனாலேதான் செடிகள் உயரும்போது மரம் உயரும் போது “குருத்து” வந்தது என்றார்கள். அதாவது மரமோ செடியோ அடுத்த கட்டத்துக்கு மேலே செல்கின்றது எனப் பொருள்.

குருவின் செயல் எல்லா இடத்திலும் உண்டு. ஒரு புல் முளைத்து மேல் எழக்கூட குரு தன்மை அவசியம். சிறிய விதை செடியாக, மரமாக மாற குரு தன்மை அவசியம். ஒரு உணவு தானியத்தில் இருந்து பக்குவப்பட்ட நிலைக்கு, உண்ண தக்க நிலைக்கு மாற குருவின் சக்தி அவசியம்.

உணவு என்பதும் உயிர்ப்பு நிலை கொண்டது. அதாவது உண்ணும் பக்குவம் என்பதே உயிர்ப்பு நிலை. செல்வம் வருவதும் வந்த செல்வம் நிலைப்பதும் உயிர்ப்பு நிலை.

விழிப்பாய் இருந்து கற்பதும், அதை மனதால் சிந்திப்பதும், மனதை உயிர்ப்பாய் விழிப்பாய் வைத்திருப்பதும் குரு நிலை.

குரு மாறாதவர். அவர் அசைவதில்லை. ஆனால் எல்லோரையும் இயக்குவார், எல்லோரையும் உயர்த்துவார்.

குருவினை ஏன் ஆசான் என்றார்கள் என்றால் மானிடனின் சிந்தனையினை இயக்கத் தொடங்குவார். அவன் சிந்தனையினை அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்வார். அவர்களுக்குள் நின்று இயக்குவார். அவர்தான் உயிர் துடிப்பினை கொடுப்பார்.

இந்த ஆதார இயக்க நிலைதான் குருத்துவம். பிரணவ மந்திரம் என்பது இயக்கும் மந்திரம், அதை போதிப்பவர் குரு.

பிரணவமே எல்லாவற்றையும் இயக்கும், எல்லாவற்றையும் சரியாக சேர்க்கும், சரியாகத் தாங்கி சங்கிலியாய் தொடர்ச்சியாய் நிலைக்க வைக்கும், இயக்கும்.

பிரணவமே உயிர்சக்தி. அந்த சக்தியினை வழங்குபவர் குரு.

அதனாலே இங்கு பிர‌ணவநாதர் என சிவன் அழைக்கபடுகின்றார். அவரே இயக்கும் சக்தி, அவரே ஆதாரம்.

குருவுக்குள் எல்லாமே அடக்கம் என்பதாலே இங்கு வேறு நவகிரகம் இல்லை, குரு மட்டுமே கம்பீரமாக அமர்ந்திருக்கின்றார்.

குரு என்பவர் புத்திரகாரகன்.

புத்திரகாரகன் என்றால் குழந்தை வரம் மட்டும் அல்ல, நல்ல அறிவார்ந்த தலைமுறையினை, சிந்திக்கத் தெரிந்த உயர்ந்த தலைமுறையினை உருவாக்குபவர் எனப் பொருள்.

நல்ல புத்திரர்களை உருவாக்கி இயக்கும் சக்திக்கு கொண்டு வருபவர் எனப் பொருள், அந்த வரமே குரு அருள்வார்.

சிலருக்கு எல்லாமும் இருக்கும். எல்லா வசதியும் வாய்ப்பும் இருக்கும். ஆனால் இயக்கத் தெரியாது. பயன்படுத்தத் தெரியாது அங்கே குருவருள் இல்லை.

குரு அருளாலே ஒருவன் தன்னை உணர்கின்றான். தான் யார் என உணர்கின்றான். தனக்குள்ளே குருவின் குரலை கேட்டு எழுகின்றான்.

நல்ல குரு தன் சீடனை இயக்குவார், வெறும் போதனையும் பாடமும் மட்டுமல்ல. அவனுள் இருக்கும் இயக்க சக்தியினை தூண்டிவிட்டு இயக்குவதே குருவின் பணி.

அந்த குருவுக்கான பணி அது.

வேதங்களை கற்றுக்கொடுத்த இடம், பிரணவ மந்திரத்தை உரைத்த இடம் என்றால் அது உயிர்ப்பு சக்தியினைக் கொடுத்த இடம் எனப் பொருள், அந்த அருளைக் கொடுத்த இடம் எனப் பொருள்.

எது நிலையானதோ, எது மாயை இல்லையோ, எது சரியானதோ அந்த வகையில் உங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பார் குரு.

அந்த உயிர்ப்பு நிலைதான், அந்த இயங்கு சக்தி நிலைதான், இயங்க வைக்கும் நிலைதான் குரு.

நீங்கள் யாராகவும் இருங்கள், உங்களுக்கு உள்ளே விழிப்பு நிலையும், உயிர்ப்பு நிலையும் இல்லை என்றால் தொட்ட எதுவும் துலங்காது.

எங்குமே தோல்வியும் குழப்பமும் அவமானமுமே மிஞ்சும்.

இந்த தலபுராணத்தை கவனியுங்கள். வேதம் என்பது மகா முக்கியமானது. பிரணவம் என்பது அதி முக்கியமானது. ஆனால் அதனை கற்காமல் அசட்டை செய்தார் தேவி.

அதாவது எது முக்கியம் என்பது அவருக்குத் தெரியவில்லை. மனதை அலைபாயவிட்டார். அதனால் சாபம் பெற்றார்.

இதே ஹோமப்புலியூரில் தவமிருந்து நோன்பிரிந்து இலந்தை மரத்தடியில் தன் தவறை உணர்ந்து நின்றபோது குருகடாட்சம் கிடைத்தது. அந்த விழிப்பு நிலையில், இயக்க நிலையில் அவள் வேதத்தின் பொருளை கற்று கயிலாயம் ஏகினாள்.

எல்லா ஆத்மாவும் பரமாத்மாவிடம் இருந்து வந்ததே. விழிப்பு நிலை உயிர்ப்பு நிலை இல்லாமல் அது தவிக்கின்றது.

எது சரி, எது தவறு, எது மாயை, எது நித்தியம் என்பது தெரியாது, பணமோ படிப்போ தொழிலோ குடும்பமோ எதுவோ அதற்குத் தெரியவில்லை.

அதனுள் தெளிவான உயிர்ப்பு சக்தி இல்லை.

உயிர்ப்பு சக்தி இல்லாத நீரில் புழுக்கள் வராது. அப்படி உயிர் இல்லாத விதைகள் முளைக்காது. அந்த விழிப்பும் உயிர்ப்பும் இல்லாத ஆன்மாவும் மனமும் சரியான திசைக்குச் செல்லாது.

குழம்பித் தவிக்கும். போராடிப் போராடி வீழும். திசை தெரியா பறவைபோல் அல்லாடும்.

அப்படியானவர்களாக நீங்கள் இருந்தால், வழிகாட்ட ஆளில்லாமலோ இல்லை சரியான தெளிவு இல்லாமலோ, ஜாதகரீதியாக குரு ஸ்தானம் பலவீனமாக இருந்தாலோ இவ்வாலயம் செல்ல, அது தீரும்.

உங்களுக்கு எந்த தெளிவு வேண்டுமோ அது கிடைக்கும், என்ன குழப்பம் இருந்ததோ அதுவும் தீரும்.

உங்களுக்குள் ஒரு சக்தி குருவாக வந்து உங்களை உயிர்ப்பு நிலையில் வைக்கும். அது உங்களை வழிநடத்தும் பிரவணமே உயிர்ப்பு நிலை, இயக்கு நிலை. அதை தருபவர, குருவாக இருந்து தருபவர் இங்கிருக்கும் சிவன்.

திட்டமிட்ட யாத்திரையோ, இல்லை வேண்டுதலோ, இல்லை வாய்ப்பு கிடைத்தாலோ இங்கு சென்று வணங்குங்கள். உங்களுக்குள் ஒரு உயிர்த்தன்மை வந்து இயக்கும். குருவாக நின்று அச்சக்தி உங்களை இயக்கும்.

அந்த அருளை சிவன் தருவார்.

அந்த இலந்தை மரம் தலவிருட்சம் என்பதும் சாதாரணம் அல்ல. இலந்தைக்கு சூட்சும சக்தி அதிகம், உயிர்ப்பு சக்தி அதிகம். அதனாலேயே மாணிக்கவாசகர் முதல் பலர் அந்த மரத்தடியில் அமர்ந்திருந்து பெரும் தெளிவும் இயக்கமும் பெற்றார்கள்.

அந்த ஆலயத்தில் அந்த இலந்தைமரம் அருகே அமர்ந்து வழிபட்டு பின் இரு தட்சினா மூர்த்திகளையும் வணங்குங்கள். மனத்தெளிவும் உயிர்ப்புத் தன்மையும் உங்களுக்கு கிடைக்கும். அதன் பின் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். இது சத்தியம்.

அந்த துயர்நீக்கும் நாதர் உங்கள் துயரையெல்லாம் தீர்ப்பார். அது முக்கால உண்மை..

நவ புலியூர் : 05 திருகானாட்டாம்புலியூர்

நவபுலியூர் வரிசையில் ஐந்தாவதாக இடம்பெறும் ஆலயம் திருகானாட்டாம்புலியூர், இது சிதம்பரத்துக்கு தென் மேற்கே அமைந்துள்ளது, திருஓமம் புலியியூரிலிருந்தும் இந்த தலத்தை அடையலாம்

கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள இக்கோயிலுக்கு மதூகவனம் என்றும் பெயருண்டு.

இந்த ஆலயத்தின் வரலாறு மற்ற சிவாலயங்கள் போலவே மிக மிக பழமையானது, தாண்டராண்ய ரிஷிகள் இப்பக்கம் வந்தபோது இந்த ஆலத்தின் மணல் எல்லாமே சிற்பமாக தெரிந்ததால் கோவிலுக்குள் வராமலே தொலைவில் இருந்தே சிவனை தரிசித்து சென்றார்களாம் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது

இக்கோவிலின் தனிபெரும் சிறப்பு பதஞ்சலி முனிவர், முன்பே பார்த்தபடி ஆதிஷேஷனாக திருமாலை பாற்கடலில் தாங்கும் அவர், சிவனின் ஆனந்த தாண்டவம் கண்டு பகவான் மெய்மறந்த நிலையினை அறிந்து தானும் அக்காட்சியினை காணவேண்டி, பதஞ்சலி முனியாய் அவதரித்து மனிதனும் நாகமுமான உடலினை கொண்டு சிதம்பரத்தில் தீரா தவத்தில் புலிக்கால் முனிவருடன் நடராஜ கோலத்தை கண்டு மகிழந்த வரலாறு எல்லோரும் அறிந்தது

அந்த பதஞ்சலி மீண்டும் சிவநடனம் காண விரும்பி, அதற்கு சிவன் வழிசெய்த இடமே இந்த திருகானாட்டு புலியூர் எனும் திருகானாட்டுமுள்ளூர்.

இந்த தலம் பிரசித்தியானது என்பதால் சுந்தரர் உள்ளிட்ட மாபெரும் அடியார்கள் வந்து தேவாரம் பாடினார்கள்

சுந்தரர் பாடுகின்றார்

“வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை,

மறையவனை, வாய்மொழியை, வானவர்தம் கோனை,

புள்வாயைக் கீண்டுஉலகம் விழுங்கிஉமிழ்ந் தானை,

பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை,

முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று

மொட்டுஅலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்

கள்வாய கருங்குவளை கண்வளரும் கழனிக்

கானாட்டு முள்ளூரில் கண்டுதொழு தேனே”

இன்னும் வள்ளலார் கலிவெண்பாவில் பாடுகின்றார்

” “நேம் ஆர்ந்த வான் நாட்டும் உள் ஊர் மருவுகின்றோர் போற்று திருக் கானாட்டுமுள்ளூர்க் கலைக் கடலே”

மிகவும் தொன்மையான இந்த ஆலயம் விக்ரம சோழன் காலத்திற்கும் முந்தையது, அது செப்பேட்டிலே சொல்லபட்டிருக்கின்றது

“விருதராச பயங்கர வளநாட்டு கீழ்க்கானாட்டுமுள்ளூராகிய திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலம்” என்று குறிக்கப்பட்டுள்ளது

மூன்று அடுக்கு ராஜகோபுரத்துடன் விளங்குகிறது இந்த அலயம், அதன் எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலை கடந்து உள்ளே சென்றால் முன்னுள்ள மண்டபத்தில் பலிபீடமும் நந்தியும் உண்டு

வலதுபுறம் அம்பாள் கானார்குழலி அம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.

கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கஜலட்சுமிக்கும் தனி சந்நிதி உள்ளது. கருவறைச் சுற்றில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர் ஆகியோரும் தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர

நடராஜர் சந்நிதிக்கு எதிரே நால்வருடன் விநாயகரும் பதஞ்சலி முனிவரும் உள்ளனர்.

கோயில் அமைப்பு கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகனும் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இதில் வள்ளி காதில் மூதாட்டிகள் அணியும் பாம்படம் அணிந்த கோலத்தில் இருக்கிறார்.

பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர், கஜலட்சுமிக்கு சன்னதிகள் உள்ளது. முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும் அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.

இங்குள்ள நடராஜர் தனது இடது காலை முன்புறமாக தள்ளி தூக்கி நிறுத்தி உடலை பின்புறமாக சாய்த்தபடி இருக்கிறார். பதஞ்சலிக்காக சிவன் மகிழ்ந்து நடனமாடியதால் இவ்வாறு காட்சியளிக்கிறார்.

அதவது புலிக்கால் முனிவரும், பதஞ்சலியும் வழிபட்ட தலமாயினும் இங்கும் நடராஜ கோலத்தை விரும்பியது பதஞ்சலி என்பதால் அவருக்காக தன் அடியானின் விருப்பத்துக்காக சிவன் நடனமாடிய இடம், மகிழ்ந்து ஆடிய இடம்

அதனாலே அவர் பதஞ்சலீஸ்வரர் என்றும் அழைக்கபடுகின்றார் , பக்தன் பெயரை சிவன் ஏற்ற இடங்களில் இதுவும் ஒன்று

இந்த ஆலயத்தின் தல விருட்டமும் வெள்ளெருக்கு என்பதே.

இந்த ஆலயம் அடியார்களின் விருபத்தை நிறைவேற்றி தரும், என்ன வேண்டுதலை கேட்கின்றோமோ அதை அடியார்களுக்கு சிவன் தயக்கமின்றி மகிழ்வோடு தரும் ஆலயம் இது

இந்த ஆலயம் நாகதோஷத்துக்கு பிரசித்தியானது. நாகதோஷம் என்றால் குழந்தையின்மை உள்ளிட்ட சிக்கல்கள் என்பதால் குழந்தை வரம் அருளும் ஆலயமாக இது வணங்கபடுகின்றது

ராகு பரிகார தலமாக கருதபடுகின்றது, அதுதான் இதன் மஹா சிறப்பு

இந்துக்கள் பாம்பின் வடிவத்துக்கும் உடலின் முக்கிய நுணுக்கத்துக்கான தொடர்பை கண்டார்கள், அந்த பெரும் சக்தி பாம்பு வடிவில் உடலில் ஆடுவதை தங்கள் ஞானத்தால் உணர்ந்தார்கள்.

ஒரு உயிர் உருவாகக் காரணமான விந்துவின் உயிரணு பாம்பு வடிவில் இருப்பதை இன்றைய விஞ்ஞானம் சொல்கின்றது. அதனை இந்துக்கள் என்றோ உணர்ந்திருந்தார்கள்.

பாம்பு சுருண்டிருப்பதை போல கருவில் உயிர் சுருண்டே இருக்கின்றது என்பதை சொன்னார்கள், பாம்பு தவழ்வதை போலவே மானிடனும் தவழ்ந்து வளர்கின்றான் என்பதை அனுமானத்தால் சொன்னார்கள்.

இன்று டி.என்.ஏ எனும் மரபணு பாம்பின் வடிவத்தில் நாகவடிவத்தில் இருப்பதை விஞ்ஞானம் சொல்கின்றது, இரு பாம்புகள் வடிவில் இருப்பதை விஞ்ஞானம் சொல்கின்றது.

அந்த மரபணுவின் சக்தி இன்னொரு பெரும் சக்தியால் இயக்கப்படுகின்றது. அதுதான் நாகசக்தி என்பதை உணர்ந்து இரு நாகங்களை வணங்க சொன்னார்கள் இந்துக்கள்.

நாகம் என்பது உயிரை எடுக்கமட்டுமல்ல, உயிரைக் கொடுக்கவும் செய்யும். உயிரைக் கொடுக்கும் சக்தி அதற்கு உண்டு என்பதால் வணங்கப்பட்டது.

குறிப்பாக சந்ததிகள் பெருக, நோய் நீங்க அது வணங்கப்பட்டது.

மனித உடல் சூட்சுமமானது. அதன் நோய்களும் பிணியும் மருந்தினால் மட்டும் குணமாவதில்லை. அதாவது வாய்வழி உள்ளே செல்லும் மருந்துகள் மட்டும் நோயினை குணமாக்குவதில்லை.

உடலின் விஷமானது உள்ளே செல்லும் உணவினால் மட்டும் ஏற்படுவதில்லை. அது காற்று, கதிர்வீச்சு, சுற்றுப்புறம், பார்க்கும் விஷயத்தின் அதிர்வு என எல்லாவற்றிலும் உருவாகும்.

அதாவது ஒருவனை அவன் சுற்றுபுறமும், அதிர்வுகளும், காற்றும், பார்வையும் கூட நோயுற்றவனாக்கும்.

அப்படியே சில அதிர்வுகளாலும், பார்க்கும் விஷயங்களாலும் நோயினை குணப்படுத்தவும் முடியும்.

பாம்பின் வடிவங்கள் நோயினை தீர்க்கும் என்பது நம்பிக்கை, பாம்பின் வடிவம் மரபணு மற்றும் உடலை இயக்கும் செல்களின் வடிவினை ஒத்திருக்கும்.

நாக வழிபாட்டின் சக்தி அசாத்தியமானது, அதனால்தான் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவழியில் நாக தரிசனம் பெற வேண்டும் என்ற ஏற்பாட்டை செய்தது இந்துமதம்.

சிவனின் கழுத்திலோ, விஷ்ணுவின் படுக்கையிலோ, அம்மனின் தலையிலோ, முருகனின் காலடியிலோ, விநாயகன் பூனூலாகவோ , சூரியனின் குதிரையின் கயிறாகவோ பாம்பினை வைத்தார்கள் இந்துக்கள்.

அது போல எல்லா ஆலயங்களிலும் வழிபாட்டிலும் தனி இடம் கொடுத்தார்கள்.

ஜோதிடத்திலும் இரு நாகங்களை வைத்து குறியீடாய் சொன்னார்கள். அந்த இரு நாகங்களில் ஒன்று ராகு இன்னொன்று கேது

கேது பகவான் வால்பகுதி, இவர் தலைபகுதி

கேது பகவானுக்குரிய தலமாக திருஎருக்கத்தம்புலியூரை கண்டோம், இத்தலம் ராகு பகவானுக்குரிய திருகானாட்டம்புலியூர்

ராகு பகவான் நிழல் கிரகம் எனும் சர்ப்ப கிரகத்தில் வலுவானவர், இவரின் ஆற்றல் கொஞ்சமல்ல எல்லா வலையிலும் வலுவானவர் என்றாலும் இதுதான் இவர் என கணிக்க மிகவும் சிரமாமனவர்

இவரின் போக்கு கேதுவுக்கு எதிரானதாக இருக்கும், ஆனால் இரண்டுமே ஒரே பலன்களைத்தான் கொடுக்கும் என்றாலும் கொஞ்சம் எதிரும் புதிருமாக குழப்பி கொடுப்பார்கள்

அவர் தடுத்தால் இவர் கொடுப்பார், அவர் கொடுத்தால் இவர் தடுப்பார்.

அவர் பூட்டினால் இவர் சாவியாவார், இவர் பூட்டினால் அவர் அதை உடைத்து கொடுப்பார்

இதன் பொதுவான தத்துவம் எதை கொடுக்கவேண்டுமோ அதை மட்டும் கொடுத்து ஞானம் கொடுப்பவர் கேது, இது அது என்ற வரையறை இல்லாமல் எல்லாமும் அள்ளி கொட்டி கொடுத்து போகத்திலே ஒரு அறிவை கொடுப்பார் அல்லது நல்லது கெட்டது என அள்ளி அள்ளி கொடுத்து தெளியவைப்பவர் ராகு பகவான்

அதே நேரம் பெரும் தடைகளை செய்து பல விஷயங்களை கிடைக்காமல் செய்தும் குழப்பி விடுபவர் ராகு

ஜாதகத்தில் அவர் போகங்களுக்குரிய போக காரகன் என்றாலும், முன்னோர்கள் தொடர்பான இடம், முன் கர்ம வினையினை சரியாக குறிப்பவரும் அவரே

கேதுவினை கொண்டுதான் ராகுவினை கணிக்க முடியும், அதனாலே “பாம்பின் கால் பாம்பறியும்” என்றார்கள்.

ராகு தான் முன்னோர்களை குறிக்கும் கிரகம், அப்படியே சந்ததியினை குழந்தை பிறப்பை நிர்ணயம் செய்யும் சக்திக்கும் அவரேதான் பொறுப்பு, எனவேதான் நாகதோஷம் தீர நாக வழிபாடு அதுவும் ராகு வழிபாடு மிகவும் அவசியம்

இத்தலம் அதற்கு பலன் கொடுக்கின்றது, கர்மவினையினை தீர்க்கின்றது

ஆம ஒருவரின் லக்ன புள்ளி ராகுவின் தொடர்பே இல்லாமல் முழுக்க அமையமுடியாது என்பதிலும், *ராகு முன்னோக்கி செல்பவர்” என்பதிலுமே நுணுக்கமான அர்த்தங்கள் உண்டு

நம் கர்மவினையினை சுட்டிகாட்டுபவர் ராகு பகவான், பூர்வ ஜென்ம வினையினை தொட்டு காட்டுபவரும் அவரே

ராகு என்றால் பெருக்குதல் விரிவாக்குதல் என்பது பூர்வ சொல்லின் பொருள். அதனாலே ராகு காலத்தில் கடன் வாங்க கூடாது, மருந்து எடுக்க கூடாது அப்படியான காரியம் எதுவும் செய்ய கூடாது அது பெருகிகொண்டே செல்லும் என்பார்கள்

ராகு கூடியுள்ள இடத்தை பொறுத்து ராகுகாலம் நல்ல அதிஷ்டத்தையும் தரும்

ராகு பகவானே முன்னேறி செல்லும் ஆசையினை உந்துதலை தருவார், பொருளோ பதவியோ தொழிலோ எதுவோ சோம்பலான மனநிலை நீங்கி அடுத்தகட்டத்துக்கு செல்லவேண்டிய உந்துசக்தி அவரிடம் இருந்தே வரும்

அதனாலே அவர் தவிரக்கமுடியா கிரஹமாகின்றார், அவர் அவசியம்

ஆனால் சில இடங்களில் இந்த எண்ணம் அளவுக்கு மீறி செல்லவும் அவரே தன் போக குணத்தால் காரணமாகிவிடுவார் அதுதான் பேராசை பொல்லாத ஆசையாக பரிணமிக்கும்

ராகு அருளை பொறுத்தே ஒருவன் தன் முயற்சியில் வெற்றிபெற முடியும் அது கலைஞர்களோ, ஆட்சியோ, தொழில் செய்பவர்களோ யாராயினும் ராகுவின் அருள் முக்கியம்

வாழ்வின் மிக உயர்ந்த மரியாதை, பெயர், புகழ், செல்வாக்கு அனைத்தையும் கொடுப்பவர் ராகுவே.

ராகு என்றால் விழிப்பு நிலை, இது அமிர்தம் பங்குவைக்கும் இடத்தில் மிக விழிப்பாக ராகு இருந்து அசுரர்கள் ஏமாற்றபடுவதை கண்காணித்து இவர் ரகசியமாய் சென்று அமிர்தம் பெற்ற காட்சியிலே தெரியும்

அது புராணம் என்றாலும் ராகு எவ்வளவுக்கு சுதாரிப்பான முன் ஜாக்கிரதையான கிரஹகம் என்பதை அறிந்துகொள்ள அது முக்கிய காட்சி. அந்த சுதாரிப்பு எனும் முன் எச்சரிக்கை உணர்வினை ராகு கொடுக்கும்

ராகு கேள்விகளின் நாயகன், விஞ்ஞானிகள் மற்றும் பெரும் புரட்சி செய்தோர் ஜாதகங்களில் ராகுவின் அம்சம் இருப்பதை காணமுடியும், கேள்விகளாய் எழுப்பி பதிலை தேட சொல்லி உண்மையினை அறிய வைப்பவர் ராகு, அதைத்தான் தடைகளை ஏற்படுத்துபவர் அவர் என்கின்றது ஜோதிட சாஸ்திரம்

எல்லாவற்றையும் அறிந்து கொள்ள ஆர்வமும் கேள்வியும் அவசியம் அதை தரும் பகவான் ராகு. மொத்தத்தில் வீரியமாக ஒருவன் மனமும் உடலும் இயங்க ராகு அருள் அவசியம்

இத்தலம் அதனை தருகின்றது, ராகுவால் ஏற்படும் எல்லா தடைகளையும் நீக்கி ஒருவேளை ராகுவின் பாதிப்புக்கள் இருந்தாலும் சரி செய்யும் ஆலயம் இது

கேது பகவானின் திருஎருக்கத்தம்புலியூர் ஆலயத்தினை போலவே இங்கும் வெள்ளெருக்குத்தான் தல விருட்சம்

இருக்கும் இடத்தினை பொறுத்து நல்ல ஈர்ப்பினை தரும் வெள்ளெருக்கு இங்கு ராகுவின் நல்ல பலன்களை தருமாறு அமைக்கபட்டுள்ளது

நாகதோஷம் பித்ரு தோஷம், ராகுவின் கட்ட அமைப்பில் சிக்கல், இன்னும் பல வகைபட்ட கால சர்ப்பம் மற்றும் ராகு பாதிப்புக்களை இந்த ஆலயத்தின் அருள் சரி செய்யும்

பதஞ்சலி என்பவர் வெறும் அவதாரமாக மட்டும் வந்து செல்லவில்லை, ராகு கேது பாதிப்புகளால் மக்கள் துன்பமடையும் போது என்னென்ன செய்யவேண்டும் என தானே வழிகாட்டிவிட்டுசென்றார்

அப்படி அவர் வழிகாட்டிய தலங்கள்தான் இவை, அங்கே சிவனருகே நாகமாய் நின்று எல்லா பாதிப்புக்களையும் சரி செய்து தருவார்

இங்கு நாக தோஷங்களை, நாகங்களுக்கான நிவர்த்திகளை, ராகு எனும் கணிக்கமுடியா கிரகத்தின் பாதிப்பை சிவன் எப்படி தான் ஏற்று பக்தனை காப்பார் என்பதை சூசகமாக பாடுகின்றார் சம்பந்தர்

“இழைதழுவு வெண்நூலும் மேவுதிரு மார்பின்

ஈசன்தன் எண்தோள்கள் வீசிஎரி யாடக்

குழைதழுவு திருக்காதில் கோள்அரவம் அசைத்துக்

கோவணம்கொள் குழகனைக் குளிர்சடையி னானை,

தழைதழுவு தண்நிறத்த செந்நெல் அதன் அயலே

தடம்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கின் அருகே

கழைதழுவித் தேன்தொடுக்கும் கழனிசூழ் பழனக்

கானாட்டு முள்ளூரில் கண்டுதொழு தேனே”

அதாவது பாம்பாகிய அணிகலமும் , அதனோடு சேர்ந்த வெண்மையான முப்புரிநூலும் பொருந்திய அழகிய மார்பினை யுடைய கடவுளும் , தனது எட்டுத் தோள்களையும் வீசி நடனம் ஆடுதற் பொருட்டு , குழைபொருந்திய காதில் கொடிய பாம்பையும் இட்டு , உடையைக் கோவணமாக உடுத்த அழகனும் , கங்கை நீராற் குளிர்ந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை , அடியேன் தழைத்தலை யுடைய பசுமையான நிறத்தையுடைய செந்நெற் பயிரின் பக்கத்தில் , பெரிய முத்துக்களையுடைய மென்மையான கரும்பின் ஆழ்ந்த கிடங்குகளின் அருகே வண்டுகள் அக்கரும்பைப் பொருந்தித் தேன் கூட்டை அமைக்கின்ற வயல்கள் சூழ்ந்த பண்ணைகளையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப் பயன் என்கின்றார்

அதவாது இங்கே சிவனின் கழுத்திலும் காதிலும் பாம்பு ஆடுகின்றது என்கின்றார், ராகு எனும் பாம்பின் பாதிப்பினை அவர் ஏற்றுகொண்டு நம்மை காக்கின்றார் என்பதை சொல்லாமல் சொல்கின்றார் சுந்தர பெருமான்

உங்களுக்கு ராகுவினால் பாதிப்பு ஜாகத ரீதியாக இருக்கலாம், அது சந்ததியின்மை பித்ருசாபம் என இருக்கலாம் அல்லது போககாரன் எனும் ராகுவினால் பல அழிவுகள் அவமானங்கள் வரலாம், காட்டாற்று வெள்ளம் போல் எல்லாவற்றையும் அள்ளிபோடும் ராகு குழப்பங்களையும் தரலாம்

அப்படியே பல கேள்விகளுக்கு அவர் கேள்வி மட்டும் தந்துவிட்டு விடையினை தேடி அலையவிடலாம், தீர்வினை தேடி ஓடவைக்கலாம்

எல்லாவற்றுக்கும் இந்த திருகானாட்டாம்புலியூர் சிவன் சன்னதியில் பதில் உண்டு, நல்ல அருள் உண்டு, நாக தோஷமோ ராகு தோஷமோ எல்லாவற்றையும் சிவன் ஏற்று உங்கள் வாழ்வினை சரி செய்து அனுப்புவார் இது சத்தியம்

அங்கே பதஞ்சலி முனிவர் என பேரானந்தம் நிலையில் இருக்கும் ஆதிஷேஷனும் தன் நாகலோக ஆசிகளை உங்களுக்கு வழங்க காத்துகொண்டிருக்கின்றார், அங்கு சென்றுவந்தால் திருப்பம் நேர்வதை நீங்களே உணர்வீர்கள்

நவ புலியூர் 06 : சிறுபுலியூர்

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் அரசலாற்றங்கரையில் அமைந்திருக்கின்றது இந்த சிறுபுலியூர் ஆலயம்

இது மற்ற நவபுலியூர் தலங்களில் இருந்து சற்று வேறுபட்டது, சிவனும் விஷ்ணுவும் ஒருசேர வந்து புலிக்கால் முனிவரையும் பதஞ்சலி முனிவரையும் அவர்கள் தளர்ச்சி நீங்கவும் இன்னும் பயணம் செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு வந்ததால் இங்கு சிவனும் விஷேஷம், பெருமாளும் விஷேஷம்

இரண்டுமே அருகருகே அமைந்துள்ள ஆலயங்கள்

தலவரலாற்றின் படி சிதம்பரத்தில் இருந்து யாத்திரையினை தொடங்கிய, அதாவது சிவநடனத்தை கண்டு கழித்தபின் மோட்சம் செல்ல தயாராக பல தலங்களை சுற்றிவந்த போது அரசலாற்றங்கரையில் இந்த தலத்துக்கு வந்து இதுதான் திருவரங்கமோ என நம்பி பெருமாளை தேடினார்கள்

(அப்போது திருவரங்கள் பெரிய ஆலயமாக இல்லை, அக்காலங்களில் எல்லா ஆலயங்களுமே கர்ப்பகிரகம் மட்டும் கொண்ட சிறிய ஆலயங்களாகவே இருந்தன‌

இதனால் இதுதான் திருவரங்கம் என அவர்கள் நினைத்ததில் ஆச்சரியமேதுமில்லை)

பெருமாளும் சிறிய அயன கோலத்தில் அங்கு கோவில் கொண்டிருந்தார், அதாவது சயன கோல பெருமாள் சன்னதி அங்கு இருந்தது, அதற்கோர் வரலாறும் இருந்தது

கருடனுக்கும் ஆதிஷேஷனுக்குமான யார் பெரியவர் எனும் கர்வம் வந்தது அது போட்டியுமானது, இருவருமே பகவானை சுமப்பாதால் யார் மிகபெரியவர் எனும் கர்வத்தினால் போட்டி வந்தது

ஆதிஷேஷன் பகவானே அதனை முடிவுசெய்யட்டும் என்ற நோக்கில் இங்கு தவமிருக்க தொடங்கினார்

அப்போது அவரின் பக்திக்கு மெச்சிய விஷ்ணு சிறிய பெருமாள் வடிவில் வந்து , பாலகனாக வந்து அந்த நாகத்தின் மேல் துயில் கொண்டார், ஆதிஷேஷன் அகமகிழ்ந்தார்

அப்படியே கருடனுக்கும் அபயமளித்தார் விஷ்ணு, இருவருமே தாங்கள் இறைவனுக்கு கட்டுபட்டவர்கள், இறைவன் இருவரையும் கடந்த பெரும் சக்தி, தங்களை ஆட்கொண்ட சக்தி என்பதை உணர்ந்து கர்வம் தவிர்த்தார்கள்

இப்படி கருடனுக்கும் ஆதிஷேஷனுக்கும் கர்வம் தவிர்த்து எல்லாமே இறைசித்தம், இறைசக்தி எல்லாம் கடந்த ஞானபெருநிலை, அந்த இறைவனை சுமப்பது கடமை அதில் பெருமை ஏதுமில்லை என உணரசெய்த தலம் அது

அந்த தலத்தின் பெருமாளை , பால சயன கோலத்து பெருமானை திருவரங்க பெருமாளாக நினைத்து அவர்கள் தவறுதலாக தங்கள் பயணம் ஈடேறிவிட்டது, இனி மோட்சம் அடைந்துவிடலாம் என மோட்சத்துக்கான மந்திரங்களை சொல்ல தொடங்கினார்கள்

இந்த மந்திரா உபதேசத்தை திருஓமம் புலியூர் தலத்தில் பெற்றிருந்தார்கள்

அந்த மந்திரங்களை சொல்லி முக்தி அடையலாம் என எண்ணியபோதுதான் சிவன் கங்காள மூர்த்தியாய் வந்து ,இது திருவரங்கம் அல்ல என்றும் அங்கு செல்ல வழி சொல்லியும் இன்னும் இத்தலத்தில் வழிபட்டு மேற்கொண்டு பயணத்தை தொடரவேண்டியும் சொல்லி வாழ்த்தி ஆசிவழங்கி சென்றார்

இதனால் சிவனுக்கு வழிதுணைநாதர் என பெயராயிற்று

இப்படி பெருமாளை அவர்கள் வணங்கிய இடம் “தலசயனப்பெருமாள் கோயில்” என்றும், கங்காளராய் சிவன் வந்து அவர்களுக்கு வழிசொன்ன இடம் “மார்க்கபந்தீஸ்வரர்” அதாவது வழிகாட்டும் சிவன் என அழைக்கபடலாயிற்று

இரண்டும் வெகுவாக ஒட்டி இருக்கும் ஆலயங்கள்

கங்காளம் என்றால் எலும்பு என பொருள், சிவன் ஏன் எலும்புகளை ஏந்திய அந்தவடிவில் வந்தார் என்றால் அதற்கு கங்காமூர்த்தியின் தாத்பரியம் தெரித்திருத்தல் வேண்டும்

உலகை காக்க ஒவ்வொரு முறை நாராயணன் அவதரித்து முடிக்கும் போதும் அவரின் எலும்புகளை சிவனே ஏந்தி செல்வார், அதனால் அவருக்கு கங்காளநாதர் என பெயர்

இதன் தாத்பரியம் எங்கிருந்து பகவான் நாராயணன் வந்தாரோ அங்கே அவர் திரும்பி செல்கின்றார்

இன்னும் எளிமையாக சொன்னால் “ஹரியும் சிவனும் ஒன்று” எனும் அந்த தத்துவம், நவபுலியூர் யாத்திரையினை சிதம்பரத்தில் தொடங்க சொன்ன சிவன், அவர்கள் மோட்சகதி அடைய திருவரங்கத்தில் வணங்க சொன்ன சிவன் போதித்த தத்துவமும் அதுதான்

அதைத்தான் இங்கு மீண்டும் ஒருமுறை போதித்து அவர்களை வழிநடத்தினார் சிவன்

நவபுலியூர் யாத்திரையின் கடைசியில் அல்ல , பாதியிலே பெருமாளையும் கண்டு பணிவது தவிர்க்கமுடியாதாகின்றது இது சிவன் செய்த ஏற்பாடு

இன்னும் சில தெளிவுகளை பெறுவதற்காக‌

எதுவரை வந்திருக்கின்றோம் இனி எதை நோக்கி செல்ல வேண்டும் எப்படி செல்லவேண்டும் , எந்த வழியில் செல்லவேண்டும் எதை விலக்க வேண்டும் என்ற தெளிவினை பெறுவதற்காக‌

முழு தலங்களும் சுற்றி அவர்கள் முறையாக திருவரங்கம் சென்று தரிசித்து மோட்ச மந்திரத்தை உச்சரித்து முடிக்காமல், பாதியிலே குழம்பி அவசரபட்டபோது அவர்களுக்கான முழு காலத்தையும் வழியினையும் தெளிவினையும் கொடுத்து சென்றார் சிவன்

எது சரி, எது உண்மையானது, எது மூலமானது? அதை அடையும் வழியில் எங்கிருக்கின்றோம்? இன்னும் காலமும் தொலைவும் எவ்வளவு கணக்கு உண்டு என்பதை சொல்லிபோதித்த தலம் அது

கங்காளராக சிவன் வந்து எலும்பு தாங்கிய கோலத்தில் நின்று எல்லாம் தன்னிடமிருந்தே வருகின்றன எல்லாம் ஒன்றே என்பதை குறிப்பால் சொல்லி, எல்லாம் காலமே நடத்தும் காலமே வழங்கும், காலமே கொடுக்கும், காலமே கற்பிக்கும் என்பதையும் போதித்த தலம் அது

இந்த பின்னணியில் அந்த தலத்துகுரிய கிரஹமான புதனை நோக்கினால் பல விஷயம் எளிதாக புரியும்

புதன் கிரஹம் கல்விக்கு அதிபதி, கலைகளுக்கும் வித்தைக்கும் அதிபதி அதனாலே அவன் வித்யாகாரன்

அந்த புதனின் அருளில்தான் இங்கு பல பிரபஞ்ச ரகசியங்கள் புரியும், இந்த பிரபஞ்சமும் படைப்பும் ஒரு கணித சூட்சுமத்தில் இயங்குவது புரியும்

இங்கு எல்லாமே கணிதம் பிரபஞ்ச விதி முதல் மலர்களின் இதழ்களின் சுற்றுவட்டம் வரை, விதைகள் முளைத்து பலனளிக்கும் காலமுதல் மானிட வாழ்வு வரை எல்லாமே ஒரு கணித விதிக்கு உட்பட்டது

இந்த விதிகளை இந்த ரகசியங்களை இதன் இயக்கத்தை புரிந்துகொள்வதுதான் கல்வி

நீங்கள் எவ்வகையான கல்வியினை எடுத்தாலும் இந்த பொதுவிதிக்கு தப்ப முடியாது, அடிப்படை என்பது ஒருவகை காலக்கணக்கீடே அன்றி வேறல்ல‌

இந்த நுணுக்கமான பிரபஞ்ச ரகசித்தை தருபவர்தான் புதன் பகவான், புதன் கிரகம் வலுபெற்றிருந்தால் கல்வி எளிதில் வரும், கலைகள் வரும், பேச்சுவன்மை கூடும் என்பதெல்லாம் இந்த அடிப்படையே

பல சூட்சும ரகசியங்களை , பல கணக்குகளை, பல கால அளவின் பலன்களை உணர்த்தி அருள்பவர் புதன் பகவான, அதனாலே அவர் கல்விக்கு அதிபதி, கல்வி வரம் வழங்கும் கிரஹம்

இந்த அடிப்படையில்தான் இந்த தலம் அருள்பாலிகின்றது , புதன் என்பவர் சிந்திக்க கற்றுதரும் கிரகம், சிந்தனையினை தூண்டி துலங்க வைக்கும் அருளை தரும் பகவான், பிரபஞ்ச ரகசிங்களை பிரபஞ்ச தத்துவங்களை அள்ளி அள்ளி தரும் அற்புதமான கிரஹம்

புதன் ஜாதகத்தில் வலுவாக இருந்தால்தான் கல்வி வரும், தெளிவு வரும், நாலு விஷயங்களை நயம்பட விளக்கும் புரியும்படி விளக்கும் சக்தி வரும், செல்வாக்கும் சொல்வாக்கும் வரும்

அழகுற புரிதலும் புரிந்தததை தெளிவுற சொல்வதும் புதனின் கருணையே

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் தெளிவும் நல்ல சிந்தனையும் தொழிலில் பாண்டித்யம் அதாவது நல்ல தேர்ச்சி நிலையும் இருத்தல் வேண்டும்

தொழில் பலம் சிறக்க மனமும் சிந்தனையும் அவசியம், புதன் புத்திகாரகன்

வாழ்வில் எது அவசியம் என்றால் இரு விஷயம் மகா முக்கியம்

முதலில் தனக்கு எது பொருந்தும் எது பொருந்தாது என்பதை தெளியவைப்பது, இன்னொன்று எந்த இடத்தில் எப்படி நடந்துகொண்டு காலம்பார்த்து இடம்பார்த்து நபர் பார்த்து சூழல் பார்த்து தன்னை வெளிபடுத்த வேண்டும் என்பது

இதை அருள்வது புதன் பகவான்

எது மிக சரியாக ஒருவனுக்கு பொருந்துமோ?, எந்த கர்மாவுக்காக அவன் படைக்கபட்டிருக்கின்றானோ அதை தெளிவாக உணர செய்து அதை நோக்கி அவன் செல்லவும், தன் கர்மாவினை சரியாக செய்ய என்னென்ன அவன் கற்க வேண்டுமோ எல்லாம் கற்க வழி செய்வார் புதன் பகவான்

இரண்டாம் விஷயம், எதையும் உடனே ஏற்றுகொள்ளாமலும் உடனே புறக்கணிக்காமலும் இரண்டையும் நடுநிலையாய் அலசி பார்த்து, எது சரி எது தவறு எது உண்மை எது மாயை என அறிந்து முடிவெடுப்பது

இந்த நடுநிலையான தன்மையினை தருபவர் புதன்

சிலர் புதனை அலிகிரகம், அதாவது ஆணுமற்ற பெண்ணுமற்ற கிரஹம் என்பார்கள், அது அறியாமை உண்மையில் நடுநிலை வகிக்கும் கிரஹம்

நடுநிலை என்றால் கண்ணை மூடிகொண்டு நான் நடுநிலை என சொல்லும் அந்த நீதிபதி நிலை அல்ல, இது இரு தேர்வுகளையும் ஆராய்ந்து இன்னும் பலவற்றை ஆராய்ந்து எது சரியோ எது நிஜமோ அதை புரிந்து கொள்வது

சிவனும் விஷ்ணுவும் ஒருசேர வந்த தலம் ஏன் புதனுக்கு தலமாயிற்று என்பதை இப்போது விளங்கி கொள்வது கடினமாய் இராது

ஆம் இருவரும் ஒரே சக்தி என்பதையும், புதன் போல இரு பக்கமும் கலந்த தலம் என்பதையும் தெளிவாக உணரலாம்

பரம்பொருள் என்பது ஒன்றே அது பல வடிவாக விளங்குகின்றது என்பதை போதிக்கும் தலம் அது, புதன் கிரகத்தின் தத்துவமும் அதுதான்

சீரான விதிகளின் படி இயங்கும் இந்த பிரபஞ்சம் முதல் உயிர்கள் வளர்ச்சி செடிகள் பூக்கள் மரம் கொடி மனிதன் அணு கடல் மலை என எல்லாவற்றுக்கும் விதி உண்டு

அந்த விதியின் ரகசியம் கணிதம், கல்வி என இயற்கையில் உண்டு, நாம் அந்த பிரபஞ்ச ரகசியத்தின் துளியினைத்தான் கல்வி என விழுந்து விழுந்து படிக்கின்றோம்

உண்மையில் எல்லாமே இங்கு பிரபஞ்சத்தில் உண்டு, கல்வி என நாம் நூல்களில் கற்கும் எல்லா விஷயமும் மவுனமாக ரகசியமாக பெரும் பிரமாண்டமாக பிரபஞ்சத்தில் உண்டு

(இந்த பிரபஞ்ச ஞானத்தைத்தான் தவம் தியானம் என மனதால் உணர்ந்தவர்கள் ரிஷிகள்

அதுவும் இந்த பதஞ்சலி அப்படித்தான் யோக சூத்திர நூலை வழங்கினார், வியாக்ரபாதரரின் பங்களிப்பும் கொஞ்சம் அல்ல‌)

இந்த ஞானத்தை இந்த தெளிவினை அருள்வது புதன் கிரஹம்

வாழ்க்கையினை வழிநடத்த அறிவும் தெளிவும் செல்வாக்கும் பேச்சும் தொழிலும் நடவடிக்கையும் பழக்கவழக்கமும் மிக சரியாக அமைய வேண்டும்

அந்த வர்ம தருபவர் புதன் பகவான், இந்த தலம் அதை தருகின்றது

புலிக்கால் முனிவர் பதஞ்சலி என பெரும் ஞானியர் அதுவும் சிவனின் நடனத்தை கண்ட இருவருக்கே எது உண்மையான திருவரங்கம் என தெரியாமல் அவசரமாக மோட்ச மந்திரம் சொல்லி மோட்சமடையும் அளவு குழப்பம் வந்தது எனில் சாதாரண மனிதர் நிலை என்ன?

அவர்கள் குழப்பத்தை தீர்த்த இடம் அது, அங்கே சிவனே வழிதுணை நாதராக வந்து வழிகாட்டி சென்ற ஸ்தலம் அது

அந்த சிவன் உங்களுக்கும் வழிகாட்ட காத்திருக்கின்றார், புதன் பகவான் உங்களுக்கும் அருள் செய்ய தயாராக இருக்கின்றார்

வாழ்வில் குழப்பம், அடுத்து செய்யவேண்டியது தெரியாத நிலை, முடிவெடுக்க முடியா குழப்பம், இதுவா அதுவா என குழம்பி, இத்தோடு முடிக்கலாமா இல்லை கர்மா தொடருமா என பலர் திசை தெரியாமல் தடுமாறும் கட்டம் உண்டு

எல்லோருக்கும் அப்படி ஒரு கட்டம் வரும், குழப்பம் வரும் இதற்கு யாரும் தப்பமுடியாது

அப்படியான நிலையில் இருப்போர் அது குடும்பம், கல்வி , தொழில் என எதுவுமாகவும் இருக்கலாம், கர்மாவும் அடுத்த இடம் எது என தெரியாத நிலை இருந்தால் ஒரு தெளிவும் சரியான முடிவும் வேண்டும் என்றால் இங்கு வழிபடுதல் நலம்

மாணவர்கள் கல்வியில் சிறக்கவும், தொழில் செய்வோர் வெலையில் தொழிலில் சிறக்கவும் அருள் செய்யும் தலம் இது

இத்தலம் வியாக்ரபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் மட்டுமல்ல ஆழ்வார்களில் ஒருவரான மணவாள மாமுனிக்கும் வழிகாட்டிய தலம்

அவரும் திருவரங்கம் தேடி அலைந்து இதுதான் திருவரங்கம் என நினைந்து பால பெருமாளை கண்டு தன் குறையினை சொல்லி பின் திருவரங்கம் அடைந்து பகவானை சேவிக்கும் வரம் பெற்றார்

அவருக்கும் இங்கிருந்துதான் தெளிவு கிடைத்தது

அப்படி தெளிவும் வரமும் வழியும் அறிவும் திடமும் நல்ல புத்தி கூர்மையும் அருளும் தலமிது

இங்கே சிவாலயமும் விஷ்ணு ஆலயமும் அருகருகே அமைந்திருக்கின்றன, இரண்டையும் தரிசித்தல் அவசியம்

சிவாலயம் கங்காள கோலத்தில் வழிதுணை நாதரை தாங்கி நிற்கும் ஆலயம், விஷ்ணுவின் அவதாரம் முடிந்த எலும்புகளை கொண்டு எல்லாம் என்னுள் அடக்கம் என அவர் சொல்லி நிற்கும் கோலத்தின் ஆலயம்

தான் வேறு விஷ்ணுவேறு அல்ல என சொல்லி நிற்கும் ஆலயம்

அடுத்து பெருமாளுக்கான ஆலயம் தலைசயன பெருமாள் என அமைந்திருக்கும், அங்கே விஷ்ணு சன்னதி அருகே வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் வணங்கும் காட்சி அமைக்கபட்டிருக்கும்

இன்னும் கருடனுக்கும் ஆதிஷேசனுக்கும் தனி சன்னதி அமைக்கபட்டிருக்கும்

சிவனையும் விஷ்ணுவினையும் ஒன்றாக, கருடனையும் நாகத்தையும் ஒன்றாக காட்டும் அந்த ஆலயம், அர்த்த நாரீஸ்வர கிரகமஹமான புதனின் தன்மையினை இப்படி குறிப்பாலே காட்டிவிடுகின்றது

அங்கு சென்று பணிந்தால் புத்தியும் சிந்தையும் தெளிவாகும், கல்விஞானம் வாய்க்கும், எதையும் பகுத்து உணரும் சக்தி கிடைக்கும், மற்றவரோடு எளிதில் தொடர்புகொள்ளும் மொழிவளம், பேச்சுக்கலை வாய்க்கும், எது அவசியமோ அதெல்லாம் கர்மத்தை செய்யும் பொருட்டு வழங்கபடும்

முக்கியமாக எது கர்மமோ எதை நோக்கி செல்லவேண்டுமோ, எதை செய்யவேண்டுமோ அந்த தெளிவு சரியாக கிடைக்கும்

அங்கே வழிபட்டுத்தான் பெரும் முனிவர்கள் இருவரும், மணவாள மாமுனிகளும் பயணத்தை தொடர்ந்து பின் திருவரங்கத்தில் பகவானை சந்தித்து முறையாக முக்தி அடைந்தார்கள்

108 திவ்ய தேசங்களில் கிருபா சமுத்திர பெருமாள் ஆலயம் என அதுவும் முக்கியமான அலயம்

அப்படி எது சரியான வழியோ அதை அந்த ஆலயம் உங்களுக்கு தரும், புதனின் பலம் பெறவும் எதனை இந்த வாழ்வில் எப்படி செய்யவேண்டும் எனும் தெளிவும் வழியும் இலக்கும் பாதுகாப்பும் எல்லாமும் அந்த ஆலயமே தரும்

அந்த சிவன் உங்கள் காலமட்டும் உங்களுக்கு வழிதுணைநாதனாக இருந்துவருவார் இது சத்தியம்

நவபுலியூர் 07 : அத்திபுலியூர்

நவபுலியூரின் ஏழாம் தலம் அத்திபுலியூர், நாகபட்டினத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அந்த அத்திபுலியூர், கடுகை ஆற்றின் வடகரையில் நாகபட்டினத்துக்கு மேற்கே 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது அந்த ஆலயம்

இங்கே சிவபெருமான் சிதம்பரேஸவரர் என அழைக்கபடுகின்றார், இந்த ஆலயம் காலத்தால் மிக மிக மூத்தது, எவ்வளவுக்கு மூத்தது என்றால் அகத்தியர் காலத்துக்கும் பழமையானது

சத்ய யுகத்தில் ரோமசனாம ரிஷி என்றொருவர் இருந்தார் அவருக்கு கேதரர், பேரளர் என இரு மகன்கள் உண்டு

பாடலிபுத்திரம் அருகே பேராளர் தங்கிவிட, கேதரர் சில சாதுக்களோடு தெற்கு நோக்கி வந்தார்

குருந்தமரம் நிரம்பிய இந்த பக்கம் அவர்கள் வந்தபோது கேதரர் அங்கே தவமிருக்க தொடங்கினார், அப்போது அவர் கண்டெடுத்த லிங்கமே இந்த சுயம்புலிங்கம்

இதனால் இந்த தலத்துக்கு கேதாரம் என்றும் பெயர், தென்னக கேதாரம் என அழைப்பாரும் உண்டு, அந்த சிவனுக்கு கேதாரீஸ்வரர் எனும் பெயரும் உண்டு

இப்படி மிக மிக பழமையான ஆலயம் அகத்தியரால் மீண்டும் அடையாளம் காட்டபட்டது, அகத்திய மாமுனி காலத்தால் மிக தொன்மையானவர், அவர தென்னகத்துக்கு வந்து ஏகபட்ட ஆலயங்களுக்கு அடிதளமிட்டார், பல ஆலயங்களை அடையாளம் காட்டினார்

சுமார் 170க்கும் மேற்பட்ட ஆலயங்கள் அவரால் ஸ்தாபிக்கபட்டன அதற்கு மேல் அடையாளமிட்டு காட்டபட்டன‌

கேதர முனிவர் கண்டெடுத்து பிரதிர்ஷ்டை செய்த லிங்கத்தை பலகாலம் கழித்து உலகறிய செய்தவர் அகத்திய பெருமான்

அந்த ஆலயத்தில்தான் சிவபெருமான் அகத்தியருக்கு மணக்கோலகாட்சியுடன் சிவன் காட்சியளித்தார், அந்த கல்யாணசுந்தர கோலத்தில்தான் அந்த ஆலயம் இன்றும் விளங்குகின்றது

அப்படி அகத்திய பெருமானால் அடையாளம் பெற்ற இந்த ஆலயம் , மாண்டவிய முனிவரால் இன்னும் பிரசித்தியாயிற்று

மாண்டவிய முனிவர் பிரசித்தியான முனிவர்களில் ஒருவர், அந்த முனிவர் தன்னை அவமானபடுத்திய கேசேரித்துவஜ பாண்டியன் எனும் மன்னனை யானையாக போகும்படி சபித்தார், அப்படியே அவன் யானை வடிவம் அடைந்தான்

அவன் சாபம் தீர இந்த சிவனை வணங்க சொல்லி அனுப்பினார் முனிவர், அந்த யானையும் இந்த தலத்துக்கு வந்து கடுகை ஆற்றின் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்து தன் சாபம் தீர்த்தது, சாபம் நீங்கிய மன்னன் மீண்டும் ராஜ்ஜியத்தை அடைந்தான்

அப்படி சாபம் தீர்த்து வைத்த தலம் அது, எவ்வகை சாபம் என்றாலும் இங்கு தீரும்

அத்தி அல்லது ஹஸ்தி என்றால் யானை என்றொரு பொருள் உண்டு, யானை வடிவ பாண்டிய மன்னன் வணங்கிய ஆலயம் என்பதால் இது அத்தி வணங்கிய ஆலயமானது

பின்னாளில் புலிக்கால் முனிவர் வணங்கியதால் புலியூர் என்றானது , அதுவே அத்தி புலியூர் என்றானது

இப்படி தொடங்குகின்றது இந்த ஆலயத்தின் வரலாறு

இன்னும் விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற தவமிருந்த இடம் என்றும், அமிர்த குடத்தின் துளி விழுந்த இடம் என்றும் பெரும் வரலாறு இத்தலத்துக்கு உண்டு

மிக மிக தொன்மையும் மாபெரும் பழமையும் “தட்சன கேதாரம்”, “தட்சன கயிலாயம்” என்றெல்லாம் கொண்டாடபடும் அந்த ஆலயமும் அந்த கல்யாணசுந்தரர் கோல சிவனும், சிதம்பரேஸ்வரர் எனும் சுயம்பு லிங்கமும் பெரும் பிரசித்தி

சோழ மன்னர்கள் இந்த ஆலயத்தை கொண்டாடினார்கள், சம்பந்தபெருமான் இங்கே வந்து வழிபட்டிருக்கின்றார்

இது தேவார வைப்பு தலமாகவும் இருந்திருக்கின்றது, அப்படி வெகு சிறப்பான ஆலயம் இது

இந்த ஆலயம், இந்த தட்சன கேதார ஆலயம்தான் வியாக்ரபாதரரால் வணங்கபட்டது, சிவன் உத்தரவுபடி பதஞ்சலியும் அவரும் வந்து வணங்கினார்கள்

ஆலயத்தின் தீர்த்தம் இன்றும் வியாகரபாதரர் தீர்த்தம் என்றே வழங்கபடுகின்றது

இந்த ஆலயத்தின் பிரசித்தி அல்லது மகா சிறப்பு தெற்கு நோக்கி அமைந்திருப்பது, வேறு எந்த ஆலயமும் இப்படி அமைந்திருந்து யாரும் பார்த்திருக்க முடியாது

ஏன் தெற்கு நோக்கி அமைந்திருக்கின்றது என்றால், வடக்கே கேதாரம், கயிலாயம் இருப்பதை சொல்லி அந்த திசை நோக்கி இந்த தட்சன கேதாரத்தில் இருந்து வணங்க வேண்டும், இது அந்த கயிலாய சாயல் ஆலயம் என்பதை சொல்லும் ஆலயம் இது

தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார் சிவபெருமான்

கயிலாயத்தை நோக்கி வணங்க வேண்டும் என்பது ஒரு தத்துவமாகவும், தெற்கு என்பது எமதிசை என்பதால் எமனை விரட்டி பலமும் காவலும் ஆரோக்கியமும் சிவன் தருகின்றார் என்பது இன்னொரு தத்துவமாகவும் சொல்லபடுகின்றது

இந்த ஆலயத்தின் சிறப்பு சாபம் தீரும், முன் ஜென்ம வினை அகலும், மிக முக்கியமாக வாழ்விற்கு எதெல்லாம் அவசியமோ அது வழங்கபடும் , வாழ்வில் எது தடையோ அது அகலும்

மணகோலத்தில் சிவன் நிற்பதன் தத்துவம் அதுதான், மணவாழ்வு என்பது ஒருவனின் குடும்ப வாழ்வு பூலோக வாழ்வை குறிப்பது, அந்த வாழ்வுக்கான எல்லா வரங்களையும் அருளும் ஆலயம் இது

நவகிரகங்களில் இது சுக்கிரனின் தலமாகும்

சுக்கிரன் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வாய்பளிக்கும் கிரஹம், உண்மையில் இந்த பூமியில் மனிதன் இன்பம் துய்த்து வாழ்ந்து செல்லத்தான் ஆனந்தமாக வாழ்ந்து செல்லத்தான் வருகின்றான் ஆனால் மாய மயக்கமும் முன் ஜென்ம வினையும் இன்னும் பலவும் அவனை அப்படி இருககவிடுவதில்லை

சுகங்களுக்கு அதிபதி சுக்கிரன், எல்லா வகை சுகங்களும் செல்வாக்கும் தன்பெரும் மரியாதையும் அந்த கிரகத்தின் அருளாலேதான் கிட்டும்

சுக்கிரன் அருள் இருந்தாலே உடல் நலம் முதல் எல்லா நலமும் சேர்ந்து இன்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பை தரும், இல்லையேல் எல்லாம் இருந்தும் அனுபவிக்கும் யோகம் இராது அல்லது எதுவுமே இராது ஆசைமட்டும் எஞ்சியிருக்கும்

சுக்கிரன் எல்லா இன்பங்களையும் ஆனந்தங்களையும் அனுபவித்து கடக்கும் பெரும் யோகம் அருள்வார்

சுக்கிரன் கலை உணர்வின் அதிபதி, அறிவுக்கும் ஞானத்துக்கும் புதனும் குருவுமே காரஹர்கள் என்றாலும் கலைவடிவத்துக்கும் ரசனைக்கும் சுக்கிரனே காரணகர்த்தா

சுக்கிரன் அருள் இருந்தால் தனி கலை உணர்ச்சி பெருகும், அது அவர்களுக்கு தனி அங்கீகாரம் கொடுக்கும், பெரும் ஈர்ப்பும் செல்வாக்கும் கூட்டமும் சேர்த்து கொடுக்கும்

புகழ்பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் சுக்கிரனின் பரிபூரண அனுக்கிரஹம் இருப்பதை உணரமுடியும்

அதே கூர்மையினை பலருக்கு பொருளீட்டும் அறிவுக்கும் கொடுப்பார் சுக்கிரபகவான், இதனாலேதான் அந்த தொழிலதிபர்களிடம் தனிபெரும் அறிவும் ஈர்ப்பும் இருப்பதை காணலாம்

சுக்கிரன் அருள் இருந்தாலே பலரை ஈர்க்கமுடியும், பலரை வசபடுத்த முடியும், சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வெற்றிபெற வைக்க முடியும்

அதனாலேதான் பூலோக லவுகீக வாழ்வில் சுக்கிரனின் அருள் அவசியம், அது இன்றி மானிட வாழ்வு பூர்த்தியாவதில்லை

வாழ்வில் மிக மிக முக்கிய விஷயம் நல்ல துணை அமைவது, அந்த துணையினை அருள்வது சுக்கிர பகவான்

சுக்கிரனின் அருளாலே நல்ல துணை அமையும், அந்த அருள் மிக மிக முக்கியம்.

இதனாலேதான் சிவன் மணக்கோலத்தில் இந்த ஆலயத்தில் காட்சியளிக்கின்றார், அந்த வரம் இங்கே அருளபடும் என்பதை சொல்கின்றார்

சுக்கிரன் எனும் கிரகமே ஒருவனுக்கு நல்ல சுகங்களை வழங்கும், சுகங்களை நிம்மதியாக தடையின்றி அனுபவிக்கும் வரத்தை அருளும்

நல்ல சூழலை குடும்பம் முதல் தொழில் வரை அதுதான் அருளும்

ஒவ்வொருவர் கர்மாவின் மூலம் என்ன என்பதையும் எது ஒருவனின் பலம் மற்றும் பலவீனம் என்பதையும் சரியாக அடையாளம் காட்டி தருவதும் சுக்கிரனே

வாழ்வில் ரசனை, மகிழ்ச்சி , ஆனந்தம், சுகம், தனவரவு என எல்லாவற்றுக்கும் சுக்கிரபகவானின் தனி அருள்தான் மூலதனம், சுக்கிரன் சரியாக அமையாத அல்லது அதற்கு பரிகாரம் செய்யாத வாழ்வு சிறக்காது

எவ்வளவுக்கு சுக்கிரன் பலமோ அவ்வளவுக்கு ஆபத்தும் அதிகம்

மழை இல்லாவிட்டாலும் சிக்கல் பெரிதாக பெய்து வெள்ளமாக வந்து அடித்து சென்றாலும் சிக்கல் என்பது போல, நெருப்பு இல்லாவிட்டால் குளிர் அதிக நெருப்பு கடும் வெப்பம் என்பது போல சுக்கிரன் அருளும் ஒரு கட்டுபாட்டுக்குள் இருந்தாக வேண்டும்

இல்லையேல் அது மனிதனை வீழ்ச்சிக்கு இழுத்து செல்லும்

இதனால் சுக்கிரன் அருள் இல்லாவிட்டாலும் அதிகமாக இருந்தாலும் மூல தெய்வமான சிவபெருமானை சரணடைதல் நன்று, அவரை வழிபட்டு நிற்றல் சால சிறந்தது

அதைத்தான் இந்த ஆலய தத்துவம் சொல்கின்றது

புதிய புதிய சிந்தனைகள், காலத்துக்கு ஏற்ற சிந்தனைகள், எல்லோரும் ஏற்கும் ரசனைகள், ஈர்ப்பான விஷயங்கள் அது கலையோ தொழிலோ எதுவோ என்றாலும் அந்த சிந்தனைகளை கொடுத்து நல்ல பலன்களை கொடுப்பது சுக்கிரபகவானே

இந்த பூமியில் வாழ சில விஷயங்கள் அவசியம், மானுடன் தனித்து சிந்திக்க வேண்டும் தன்னை நிலை நிறுத்த வேண்டும், தன்னால் பிறருக்கு பயன்படும்படி வாழவேண்டும்

யார் ஏராளமான மக்களுக்கு பயனுள்ள காரியங்களை ஏதோ ஒரு வகையில் செய்கின்றானோ, ஏராளமான மக்களால் கவனிக்கபட்டு ஈர்க்கபட்டு கொண்டாடபடுவானோ அவன் தனிவெற்றி பெறுவான்

அந்த சக்தியினை ஆற்றலை வழங்குபவர் சுக்கிரன்

நல்ல குடும்ப சூழலை, நல்ல வாய்ப்பை வசதிகளை நிம்மதியினை ஆனந்தத்தை தருபவரும் அவரே

போகத்துகுரியவன் என அவரை எளிதில் தள்ளிவிட முடியாது, சுக்கிரன் என்றால் உற்சாகம், சுக்கிரன் என்றால் விடாத உழைப்பு, சுக்கிரன் என்றால் புதிய புதிய சிந்தனை, சுக்கிரன் என்றால் எல்லாவற்றையும் நிறைவாக கடந்து செல்ல உதவும் நிலை

வாழ்வின் முடிவில் தன் ஒவ்வொரு பக்கத்தையும் திரும்பிபார்க்கும் மனிதன் எல்லாம் நிறைவாய் உணர்ந்தான் என்றால் அதுதான் சுக்கிரனின் ஆசி

ஒருவன் முழுமையான வாழ்வு வாழ சுக்கிரனின் அருள் மிக அவசியம்

இந்த முழுமைதான் இந்த நிறைவுதான் வாழ்வின் அடுத்தகட்டத்தில் இறைவனை நோக்கி மனதை திருப்ப சொல்லும், அந்த நிறைவுதான் கடைசியில் இறை ஞானத்துக்கு சாவியாகி வாசலை திறக்கும்

எதையும் அனுபவிக்காமல் எல்லாவற்றின் மேல் ஏக்கம் கொண்டிருப்பவனுக்கு ஞானம் வாய்க்காது, அப்படியே மனதை அடக்கி ஞானத்தை தொடமுயன்றாலும் இறைவனை அறிய முயன்றாலும் அடக்கி வைத்த ஆசைகள் பிரமாண்டமாய் எழுந்து மிரட்டி வீழ்த்தும்

பலர் பாதியிலிலே திசைமாறி செல்வது இப்படித்தான்

அவித்த நெல் முளைக்காது என்பதுபோல் ஆசைதீர அனுபவித்துவிட்டபின் அந்த எண்ணம் எழாது வெறுமையே மிஞ்சும்

இதனாலே எல்லாம் அனுபவித்து கடந்தபின் வரும் ஞானம் நிலைக்கும், கெட்டபின்பு ஞானி என்பது அதனாலேதான்

பட்டினத்தாரும், பத்ருஹரியாரும் அதற்கு பெரும் சான்றுகளாய் நின்றார்கள், ரிஷிமூலம் பார்க்காதே என இந்துக்கள் சொன்னதன் காரணமும் அதுவே

ஆம், சுக்கிரன் வாழ்வினை மகிழ்வாய் ரசனையாய் நிறைவாய் ஆனந்தமாய் சுகமாய் வாழசெய்யும் கிரஹம், அதன் பலன் மிக அவசியம்

நிறைவான வாழ்வே பின் நிலையான ஞானத்தையும் வீட்டுபேற்றையும் கொடுக்கும்

அந்த சுக்கிரனின் அருள் ஒவ்வொருருக்கும் அவசியம், அதை தருவதற்குத்தான் திருஅத்திபுலியூர் ஆலயம் காத்துகொண்டிருக்கின்றது

உங்கள் ஜாகதகத்திலோ இல்லை வாழ்வின் விதி அமைப்பிலோ சுக்கிரனின் சம்பத்து சரியாய் நிறைவாய் முழுமையாய் அமைய அங்கு வழிபட்டால் நல்லது

பாண்டிய மன்னன் சாபம் தீர்த்து விலங்கு நிலையில் இருந்து இழந்த ராஜபோகத்தை மீட்டது போல நீங்களும் இழந்த ஆனந்த நிலையினை அடைவீர்கள்

ஆத்மா ஆனந்தமானது ஆனால் மாயைகளினால் அது அலைகழிக்கபட்டு தன் மகிழ்ச்சியினை இழந்து தவிக்கின்றது

அதை மீட்டெடுத்தவர்கள் ரிஷிகள், அந்த மயக்கத்தில் சிக்காமல் இருப்பவர்கள் குழந்தைகள். இந்த இருவரிடமும் அந்த ஆத்மத்தின் தெயவீக முழுமையினை உற்சாகத்தை காணமுடியும்

சுக்கிரனின் பலம் உங்களுக்கு வாய்த்தால் அது கொடுக்கும் நிறைவால் காலத்தால் இதே கனிந்த உற்சாகத்தை, முழுமையான உற்சாகத்தை எல்லாம் கடந்து வந்த உற்சாகத்தை ஞானத்தை நீங்களும் பெறமுடியும்

கர்மம் ஆற்றவும், காரியம் முடிக்கவும், கடமையினை செய்து வந்தவேலையினை நிறைவாய் செய்யவும் சுக்கிரனின் பலம் அவசியம்

இதனை மகாபாரத காட்சியில் சொன்னவன் அர்ஜூனன், அவனுக்கு சுக்கிரபலம் இருந்தது தொட்டதெல்லாம் துலங்கியது அந்த நிறைவில் கடைசியில் கீதை கேட்டு ஞானியாகி கடைசியில் ஆட்சியினை விடுத்து இமாலயம் செல்லும் அளவு அவனுக்கு நிறைவு வந்தது

இதுதான் சுக்கிரனின் பூரண பலம், இதுதான் பட்டினத்தார் வாழ்விலும் நடந்தது இன்னும் பல ஞானியர் வாழ்விலும் நடந்தது

சுக்கிரன் உங்களுக்கு நீங்கள் யாரென புரிய வைப்பார், எதற்காக படைக்கபட்டீர்கள், கர்மா என்ன கடமை என்ன? அதை செய்ய என்ன வழி, செய்யும் நோக்கமென்ன என எல்லாமும் புரியவைத்து வழிநடத்துவார்

இந்த ஆலயம் சுக்கிரனின் தனி அருளை தரும் ஆலயம், சிவபெருமான் சன்னதியில் அந்த கல்யான சுந்தரர் கோலத்தில் , வாழ்வு தொடங்கும் அந்த கோலத்தில் நின்று சிவன் உங்களுக்கும் பெரும் அதிசயங்களை செய்வார்

கல்யாண சுந்தரர் கோலம் என்பது சுக்கிரனின் இன்னொரு அம்சத்தை தன்மையினை போதிக்கும் கோலம்

இந்துமதம் பெண்களுக்கு தனி இடம் கொடுத்தமதம், பெண்களை கொண்டாட சொன்ன மதம், பெண்களை போற்றி பெரும் இடத்தில் வைக்க சொன்னமதம்

பெண்ணே இயங்கு சக்தி, என்பதால் எதெல்லாம் இயக்குமோ எதெல்லாம் உருவாக்குமோ அதற்கெல்லாம் பிரபஞ்சம் முதல் நீர், மண் என எல்லாவற்றுக்கும் பெண் பெயரை இட்ட மதம் இந்துமதம்

இயக்கு சக்தியினை பெண் என கொண்டாடிய மதம் இந்துமதம், அந்த ஞானமதம் எங்கும் நிம்மதியும் மகிழ்வும் சந்தோஷமும் பெருக, தனிபெரும் சந்தோஷமும் நிம்மதியும் நிறைவும் அமைதியும் சூழ பெண்களை நன்முறையில் நடத்துதல் அவசியம் , அவர்களை மகிழ்ச்சியாய் வைத்திருந்தல் அவசியம் என்பதை சொன்னது

இந்துமதம் அப்படித்தான் பெண்ணை வைத்திருந்தது, ஆண் ஞானமடைய ஆயிரம் வழிகளை சிரமங்களை சொன்ன இந்துமதம் பெண் தன் கணவனை போற்றினால் போதும் எனும் ஒரே வரியில் அறிவுரை சொன்னது

அதன் பொருள் போற்றபடும்படி கணவன் தன் மனைவியினை நடத்தவேண்டும் என்பது

அக்கால இந்துஸ்தானில் பெண்கள் கொண்டாடபட்டனர், கோவிலும் இலக்கியமும் அக்கால சமூகமுகம் பண்டிகையும் அதனை காட்டுகின்றன‌

ஆனால் அந்நியபடையெடுப்பின் குழப்பங்களில் எல்லாம் மாறிற்று, அதே நேரம் இன்றும் உலகின் முன்னணி நாடுகளை செழுமையான நிறைவான நிம்மதியான நாடுகளை பாருங்கள், அங்கே பெண்கள் மகிழ்வோடும் முழு உரிமையோடும் நடத்தபடுவதை காணமுடியும்

இதுதான் பிரபஞ்ச சக்தி

இதன் பொருள் என்னவென்றால் பெண்கள் மதிக்கபடுமிடம் சுக்கிரனின் அருள் பிரதானமாகும் என்பது, இதனாலே சுக்கிரனின் அருள் பெற்ற கலைஞர்கள், கலையில் கரை கண்டவர்கள், இதர தனி திறமையால் வென்றவர்கள், ஏன் அதிசயிக்கதக்க விஞ்ஞானிகளிடம் கூட பெண்கள் மேல் ஒரு பரிவினை காணமுடியும்

அது மயக்கம் என பல இடங்களில் சொல்லபட்டாலும் உண்மையில் அதன் பெயர் பரிவு

இந்த பரிவு இருக்குமிடத்தில் சுக்கிரனின் அருள் தானாக துலங்கும், எல்லா நிறைவும் ஆனந்தமும் அங்கு வாய்க்கும்

இதைத்தான் தன் துணைவியான பார்வதியோடு நின்றபடி கல்யாண கோலத்தில் நின்றபடி கல்யாணா சுந்தரபெருமானாக போதிக்கின்றார் சிவபெருமான்

இந்த தத்துவ போதனையினை எல்லோருக்கும் தெரிவிக்கும் பொருட்டு எல்லா மக்களும் வந்து சுக்கிர பலம் பெற்று செல்லும்பொருட்டே கேதார முனிவர், அகத்தியர், மண்டவி முனி, புலிக்கால் முனிவர் என எல்லோரையும் அழைத்து நிறைவும் முழுமையும் கொடுத்து நிறைவாய் மகிழ்வாய் அனுப்பிவைத்தார்

அந்த முழுமை, அந்த நிறைவு, அந்த ஏகாந்த ஆனந்தம் உங்களுக்கும் கிடைக்கும், அங்கே சுக்கிரனின் அருள் , அந்த சுக்கிர தன்மை பரிபூரணமாகும்

அத்திபுலியூர் சென்று வணங்குங்கள், சுக்கிர தன்மை சுக்கிர அம்சம் குறைபாடால் இதுவரை அரைகுறையாக ஏதோ பெயருக்கு உருவற்று இருந்த உங்கள் வாழ்வு , கவலையும் கலக்கமும் குழப்பமும் நிறைந்திருந்த வாழ்வு அப்படியே மாறும்

ஆனந்தமும் மகிழ்வும், சரியான உணர்வும் தெளிவும் செய்யவேண்டிய காரியமும் கடமையும் கர்மமும் அதற்கான பாதையும் உங்களுக்கு சரியாக தெரியும்

அதன் பின் நீங்க்ள் தொட்டதெல்லாம் துலங்கும், உங்கள் வாழ்வே மாறும் , முழுமையும் பூரணமும் நிறைவினை நோக்கி அது உங்களை அழைத்து சென்று ஞானத்தின் சாவியினை கொடுக்கும்

கடமைகளும் கர்மாவும் முடிக்க வழிசெய்தபின் முழு ஞானமும் நிம்மதியும் உங்களை தேடிவரும்

மன்னன் இழந்ததை மீட்டான், கேதரர் கர்மாவினை உணர்ந்தர், விஸ்வாமித்திரர் பிரம்மரிஷியானார் என எல்லாவற்றையும் கவனியுங்கள்

எல்லோரும் அங்கு முழுமை அடைந்த ரகசியத்தை சொல்லும், அகத்தியரும் சிவனின் மணக்கோலம் கண்டு ஜென்மபுண்ணியம் அடைந்த , முழு நிறைவினை அடைந்த தலம் இது

அந்த வரத்தை பெற உங்கள் வாழ்வை நீங்களே சரிசெய்து கொள்ள தெற்கு நோக்கி வீற்றிருக்கும் அந்த சிதம்பரேஸ்வரரை தரிசிக்க அத்திபுலியூர் செல்லுக்கள், வியாக்ரதீர்த்தத்தில் நீராடி கல்யாண சுந்தர கோலத்து சிவனை வணங்கி சுக்கிரனின் பரிபூரண அருளை பெற்று நல்வாழ்வினை தொடங்குங்கள்

ஒருமுறை சென்று தரிசித்துவந்தால் அந்த மகா சிறப்பினை நீங்களே உணர்வீர்கள், வாழ்வு அதன்பின் எப்படி மாறுகின்றது என்பதை உணர்ந்து நவபுலியூர் மகிமைகளையும், புலிக்கால் முனி பதஞ்சலி முனி வழியாக சிவன் காட்டிய அதிசய வழிமுறைகளையும் உணர்ந்து சாட்சியாய் நிற்பீர்கள் இது சத்தியம்

நவபுலியூர் 08 : தப்பளாம் புலியூர்

திருவாரூருக்கு தென்கிழக்கே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தப்பளாம் புலியூர் எனும் எட்டாம் ஸ்தலம், நவபுலியூர் தலங்களிலும் சிவாலய மற்றும் அம்மன் தலங்களில் மிக முக்கியமானதும் தனித்துவமானதுமானது இந்த ஆலயம்

இந்த ஆலயம் மிக மமிக தொன்மைவாய்ந்தது யுகங்களை கடந்தது, அது கிருதயுகத்தில் தற்பர மகரிஷி காலத்திலே உருவானது

பின் த்ரேதா யுகத்தில் மதுவனம என்றும் துவாபர யுகத்தில் தேவவனம் என்றும் வழங்கபட்ட அந்த ஆலயம் கலியுகத்தில் வியாக்ரபுரம் என்றானது

மண்டூக முனிவர் வழிபட்ட தலம் என்பதால் இது மண்டூக வியாக்ரபுரம் எனும் பெயரும் பெற்றது

மண்டூக முனிவர் தவளை வடிவம் கொண்டவர் என்பதால் இதற்கு தவளை, தப்பளை புலியூர் என பெயர் வந்ததாக சொல்வதெல்லாம் அர்த்தமற்றது, மண்டூக வியாக்ரபுரம் எனும் பெயரே அதை தெளிவாக சொல்கின்றது

தப்பளாம் புலியூர் என பெயர் வர காரணம் அந்த தற்பர முனிவர், அவர்தான் வன்னிமர காடாக இந்த பிரதேசம் இருந்த காலங்களிலே இங்கு தங்கி அந்த ஆலயத்தின் சிறப்பினை சொல்பராக இருந்தார்

தற்பரன் என்றால் பரம்பொருள் என பொருள், பரம்பொருளை அறிந்த பெரும் ஞானி என்பதால், பரனை அறிந்த, பரனை தன்னுள் அறிந்தவர் என்பதால் தற்பரன் என்றானார்

அவரின் தற்பரன் எனும் பெயரே காலவோட்டத்தில் திரிந்து தற்பரம் தப்பலம் தப்பளம் என மருவிற்று என்பார்கள், அது சரியாக இருக்கலாம்

இந்த ஆலயத்திற்கு புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் வந்து பணிந்தனர், வியாக்ரபாதரர் வந்து வழிபட்டதால் அந்த சிவனுக்கு வியாக்ரபுரீஸ்வரர் எனும் பெயர் வந்தது

இந்தியாவின் மிக மிக தொன்மையான ஆலயங்களில் இதுவும் ஒன்று, வியாக்ரபுரீஸ்வரராக வீற்றிருக்கும் சிவனை போலவே அந்த அம்மன் நித்திய கல்யாணியும் அங்கு பெரும் விஷேஷம்

இந்த நித்திய கல்யாணி அம்மன் ஒருபக்தன் நித்தியகாலமும் நிலைக்குமாறு அருள்வழங்குவாள், அதனாலே அவள் நித்திய கல்யாணி அம்மன்

வடக்கே உஜ்ஜைனியில் இருக்கும் மகாகாளி, நெல்லை மாவட்டம் கடையத்தில் இருக்கும் காளி, இந்த ஆலயத்து அம்மன் ஆகிய மூவருமே நித்திய வரம் அருளும் ஒரே வகை தெய்வங்கள்

வடக்கே உஜ்ஜைனியிலும் தெற்கே தாமிரபரணி கரையில் கடையத்திலும் குடிகொண்டிருக்கும் இந்த மகா சக்தி, தன் அடியார் ஒருவருக்காக இந்த ஆலயத்தில் எழுந்தருளினார் என்பது வரலாறு

சித்தர் ஒருவரின் அன்புக்கு கட்டுபட்டு கடையத்தில் இருந்து தன் அம்சத்தை அவள் இங்கே நிறுத்தினாள் என்பது தல வரலாற்றின் செய்தி

மகா சக்தியாய், அரூபியாய் கேட்ட வரம் தருபவளாய் அவள் அங்கு உண்டு, அதனாலே இந்த ஆலயத்தின் நித்திய கல்யாணியினை “போக மோட்ச பிரதாயினி” என சொல்கின்றார் காஞ்சி மகா பெரியவர்

கல்யாண குணம் என்றால் நல்ல குணம், வாழவைக்கும் குணம் என பொருள். கல்யாண குணம் அனைத்தும் நிலையாக வழங்குபவள் என்பதாலே அவள் நித்திய கல்யாணி என்றானாள்

இங்கு கோஷ்டத்தில் வழமையான மரபின்படி தட்சனாமூர்த்தி, லிங்கோத்பவர் பிரம்மா போன்றோர்க்கு பதிலாக நடராஜ உருவம் மூர்த்தமாக செதுக்கபட்டு அவர் பதஞ்சலி முனி, வியாக்ரபாதரர் மற்றும் மண்டூக முனிவருக்கு ஆனந்த நடன தரிசனம் கொடுத்த காட்சி செதுக்கபட்டுள்ளது

தேவர்களும் ரிஷிகளும் அப்படியே காரைக்கால் அம்மையாரும் அதனை கண்டுகளிக்கும் அற்புத காட்சியும் செதுக்கபட்டுள்ளது, இது இந்த ஆலயத்தின் தாத்பரியத்தையே மிக நுணுக்கமாக உணர்த்துகின்றது

“ஜ்வர தேவர்” என எல்லா நோய்களையும் போக்கும் சக்தியான தேவரும் இங்கே இன்னொரு சன்னதியில் வீற்றிருக்கின்றார், அந்த சன்னதியில் எல்லா நோய்களும் தீர்கின்றன‌

இந்த ஆலயத்தின் ஏகபாதருத்திரர் இன்னும் விஷேஷம், நடராஜ கோலத்தில் ஒற்றைகாலில் நிற்கும் அவருள் விஷ்ணுவும் பிரம்மனும் அடக்கம் என காட்டபடுகின்றது

அந்த ஏகபாத ருத்திரர் வடிவம் கொண்ட கோவில் காசி விஸ்வநாதர் ஆலயம் ஒன்றுதான், அந்த அளவு இது மகா சூட்சுமமானது

இங்கு இந்த ஏகபாதபைரவரை தவிர வீரபத்திரருக்கு தனி சன்னதி உண்டு, அப்படியே இன்னொரு தனி சன்னதி கொண்ட தேவி சப்தமாதா ஜேஷ்டா தேவி

இந்த ஜேஷ்டா தேவி என்பவள் பற்றி இருவிதமான கருத்துக்கள் உண்டு, ஜேஷ்ட என்றால் மூத்த என பொருள், அவ்வகையில் இவள் சீதேவியின் சகோதரி மூதேவி, தவ்வை என சொல்வாரும் உண்டு

ஆனால் மூதேவி என்றால் முப்பெரும் தேவி வடிவம் அது மூதேவி என திரிந்தது என்ற கருத்தும் உண்டு

பொதுவாக ஜேஷ்டா தேவி மூதேவி மூத்தவள் என்றே கருதபடுகின்றாள்

கையில் காகக் கொடியும், துடைப்பமும், காலுக்கு கீழே கழுதை வாகனமும் இருக்கும். உடன் இரண்டு பிள்ளைகள் இருப்பர். அவளின் அடையாளம் இதுதான்

மூதேவிக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. வயிறு பெருத்த தாய்மை தெய்வங்களுல் அவளும் ஒருத்தி. இவளது மகன் மாட்டு முகம் உள்ளவன் . மாந்தன் அல்லது குளிகன் என பெயர். குளிகன் சோதிடத்தில் நல்ல காலத்திற்கு அதிபதி. மகள் பெயர் மாந்தி.

இந்த ஜேஷ்டா தேவி வழிபாடு முன்பு எல்லா இடத்திலும் இருந்தது , இப்போது வெகுசில இடங்களில் சுருங்கிவிட்டது அதில் ஒன்று இந்த ஆலயம்

மூதேவி தரித்திரம் தருபவள், சாபம் தருபவள், ஏழ்மையின் அறியாமையின் வடிவம் என்றெல்லாம் ஒரு நம்பிக்கை உண்டு, உண்மை அது அல்ல‌

சனீஸ்வரனை வணங்குவது போல சில காரணங்களுக்காக அவளையும் வணங்குதல் அவசியம்

அவள் தரித்திரம் அருள்பவள் அல்ல, அவள் மூத்தவள் என்பதால் மிக மிக கண்டிப்பான தெய்வம், சனிகிரகம் போல நேர்மையானவள்

யார் சரியாக உழைக்கின்றார்களோ யார் சுத்தபத்தமாக தன்னையும் தன் சுற்றுபுறத்தையும் வைக்கின்றார்களோ, யார் கூடிவாழ்ந்து எல்லோரையும் உயர்த்துவார்களோ யார் சுறுசுறுப்பானவர்களோ அவர்களை அவள் ஆசீர்வதிக்கின்றாள்

மாறாக மந்த புத்தி, தாம்ச குணம், சோம்பேறிதனம், அழுக்கு ஆகியவற்றை அவள் அறவே வெறுக்கின்றாள்

அவள் ஒருவனை ஆசீர்வதித்தால் அவன் எல்லா நல்லா அடையாளமும் பெற்றுவாழ்வான், ஒருவனை அவள் சபித்துவிட்டால் அவன் அழுக்கடைந்தவனாக, உடைந்த வறுமையான சூழலில் சோம்பி திரிபவனாக அறியாமை மிக்கவனாக அலைவான்

சனிக்கும் அவளுக்கும் ஒரே குணம்

நல்ல விழிப்பாக, சுத்தமாக, கடுமையாக உழைப்பவர்கள் அவள் அருளுக்கு பாத்திரமானவர்கள் அதனாலே காகமும், துடைப்பமும், கழுதையும் அவள் அடையாளமாயின‌

அவள் தரித்திரம் கொடுப்பவள் அல்ல, அவளை மறந்தால் தாம்ஸ குணமும்தரித்திரமும் வரும் என்பதுதான் தாத்பரியம்

இவளை வழிபட்டால் எதிரிகள் நாசமாவார்கள் என்பதும் நம்பிக்கை, இதனாலே அந்நாளில் எதிரி மன்னன் சோம்பலடைய வேண்டும் எதிரி படைகள் மயங்கி குழம்பி மந்தநிலை அடையவேண்டும் என இவளுக்கு பூஜையெல்லாம் செய்யபட்ட சான்றுகள் உண்டு

மிக மிக நேர்மையானவள் இந்த மூத்ததேவி, ஆபத்தில் எப்போதும் உழைப்பாளர்களுக்கும் நேர்மையாளர்களுக்கும் அவள் உதவுவாள்

கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்தால் மழை என்பதும், வானத்தை நோக்கி துடைப்பத்தை காட்டினால் மழை பெய்யும் என்பதும் இதனாலே

உலகில் எந்த இனத்திலும் இல்லாதபடி அவமானடைந்த ஒருவனை அல்லது குற்றம் சாட்டபட்ட ஒருவனை துடைப்பத்தால் அடிக்கும் வழக்கம் இந்துக்களிடம் மட்டுமே உண்டு

அதன் அர்த்தம் ஆழமானது, எல்லா வித குற்றமும் அறியாமை அல்லது மந்த புத்தியில்தான் நடக்கும், விழிப்பானவனும் நல்ல தெளிவான புத்தி கொண்டவனும் குற்றமிழைப்பதில்லை

அந்த மந்தபுத்தி விலகவும், நல்ல தெளிவும் சுறுசுறுப்பும் வர மூதேவி அருள் பெற துடைப்பத்தால் அர்ச்சிக்கும் வழக்கமே பின்னாளில் அவமானபடுத்ததலாய் மாறிற்று

நம்மை அறியாமல் இந்த ஜேஷ்டா தேவி எனும் மூத்தவள் வழிபாடு இந்துக்களிடையே ஆழ பதிந்துள்ளது

அதுதான் கழுதை கத்தினால் நல்ல சகுனம், காக்கை கத்தினால் நல்லது, துடைப்பத்தை தாண்டி தீயசக்திகள் வராது என பல வகைகளில் இன்றும் இந்துக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றது

ஏன் அவளை மூத்தவள் என்றார்கள் என்றால் செல்வமும் இதர பெருமைகளும் வர அடிப்படை மூத்த அம்சங்கள் முக்கியம்

தூக்கமற்ற விழிப்பு நிலை, எல்லா வகையிலும் சுத்தம் அதுதான் நல்ல சிந்தனையினை தரும், கடும் உழைப்பு, சுறுசுறுப்பு என அடிப்படை நியதிகள் அவசியம்

அப்படியே நல்ல தூக்கம் தருபவள், நல்ல ஓய்வை புத்துணர்ச்சியினை தருபவளும் அவளே, அவளாலே மன இறுக்கம் குறையும், மனம் அமைதிபடும், நல்ல உற்சாகத்தோடு புதிய சிந்தனைகள் தோன்றும்

இதை அருள்பவள் மூத்தவள், அதனாலே அவள் ஜேஷ்டா தேவி

இந்த ஜேஷ்டா தேவி இங்கு மிக மிக தொன்மையான இந்துமரபு படி இந்து நம்பிக்கைபடி வழிபடபடுகின்றாள், அவளுக்கு தனி சன்னதி உண்டு அவளோடு விநாயக பெருமானும் வீற்றிருக்கின்றார்

வழக்கமாக சீதேவி எனும் திருமகளோடு வீற்றிருக்கும் விநாயகபெருமானை எல்லோரும் அறிவர், அவள் திருமகளோடும் மட்டும் இல்லை அவளின் மூத்த அம்சமும் அடிப்படை தெளிவினை தருபவளுமான மூத்தவளுடனும் அருள்பாலிப்பார்

அதுதான் அந்த ஆலயத்தில் நடக்கின்றது

இந்த தப்பாளம் புலியூர் ஆலயத்தில்தான் தற்பர முனிவர் சிவனை தரிசித்தார், இன்னும் பல ஞானியர் ரிஷிய அன்னையின் காட்சியினை வரங்களை பெற்றனர்

மண்டூக முனிவர் சிவனின் நடனத்தை கண்டதும் இங்குதான்

சிவனுக்காக சிவபூஜைக்காக புலியின் காலும் கையும் பெற்ற வியாகரபாதரர் தன் புலிகாலும் புலிகையும் நீங்கி இயல்பான வடிவம் பெற்றதும் இங்குதான்

அதாவது புலியின் கால் கைகோடு அவர்பட்ட சிரமம் கொஞ்சமல்ல, மனித உடலும் புலியின் காலும் கையுமாக அவர் மிக மிக பாடுபட்டார்

அந்த பாடுகளையெல்லாம் அவர் களைந்து தன் பழைய வடிவம் பெற்று மகிழ்ந்த இடம் இது, அவ்வளவு சிறப்பானது, எந்த பெரும் சிக்கல் என்றாலும் அகலும் சக்தி உடையது இந்த ஆலயம்

இழந்ததை தருவதும், நாம் பாவபுண்ணியத்துக்கு ஏற்ற பலன்களை தருவதும் இந்த ஆலயத்தின் சிறப்பு

நவகிரகங்களில் இந்த ஆலயம் சனீஸ்வரபகவானுக்குரியது

பொதுவாக நவகிரகம் என மேற்கு நோக்கி இருக்கும் சனி பகவான், தான் நல்லது செய்யும் ஆலயம் பரிகார ஆலயங்களில் மட்டும் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பார்

சனி என்றால் இருள் அல்லது யாராய் இருந்தாலும் கண்ணைமூடி காரியம் செய்யும் கிரகம் என்பதால் மேற்கு நோக்கி அதவாது வெளிச்சத்துக்கு எதிராகத்தான் அமர்ந்திருக்கும்

தான் பரிகாரம் கொடுக்கும் இடங்களில் மட்டும் அவர் கிழக்கு நோக்கி இருப்பார், ஒளி தன்மையுடன் இருப்பார்

திருநள்ளாறு அப்படியான இடம், அப்படியே இங்கும் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றார்

நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி ஒருவர்தான், ஈஸ்வரன் என்றால் எல்லாம் அறிந்து உணர்ந்தவர் என பொருள்

சனியும் அப்படியான தன்மை கொண்டவரே, கிரகங்களில் அவர் கரமகாரகன், கர்மத்தினை செய்யவைப்பவர் கர்மத்துக்கு பலனளிப்பவர்

அவருக்கு மந்தன் என்றொரு பெயர் உண்டு அதாவது மெதுவாக சுழல்பவர் அல்லது நகர்பவர்

அதன் பொருள் அவர் மந்தமானவர் அல்ல மாறாக ஒவ்வொருவரையும் ஒவ்வொருவர் அசைவையும் ஒன்றுவிடாமல் பின்பற்றி பதிந்து வைத்துகொண்டே வருபவர் என்பது

கர்மகாரகர் என்றால் அவர்தான் கர்மாவின் அதிகாரி, இதனால் நம் கர்மவினைபடி அவர் காட்சிகளை நடத்துவார், கர்மவினைப்படி ஒருவனை நடத்துவதில் அவர் பாரபட்சமே பார்ப்பதில்லை

யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் கர்மவினைக்கேற்ற பலன்களை தந்தே தீருவார், அவர் மிக மிக நேர்மையான அதிகாரி சாயல் கொண்டவர் , இதனால் பக்திமிக்கோர், நேர்மையாளர்கள் அவருக்கு அஞ்சவேண்டிய அவசியமில்லை

கர்மத்தின் காரகன் என்பதால் மேலதிகாரி போல் வந்து தேர்வுகளை வைப்பார், பல சோதனைகளை செய்வார், அந்த சோதனைகளிலும் தேர்வுகளிலும் அவனவன் கர்மாவினை கர்மவினைகளை கடக்க வைப்பார்

அது அழுகையா, கண்ணீரா, அவமானமா, துன்பமா என்றெல்லாம் அவர் கவலைபடுவதில்லை, பொங்கு சனி என பெரும் செல்வமா, புகழா என அவர் யோசிப்பதுமில்லை

சரியான ஆசிரியர் வைக்கும் தேர்வுபோல, நல்ல நீதிபதி வழங்கும் தீர்ப்புபோல அவர் தன் கடமையினை சரியாக செய்வார்

உண்மையில் எல்லா கிரகம் போல சனீஸ்வரனும் பகவானின் கைபாவையே அவரின் சித்தபடி மானிடரை வழிநடத்தவே அவர் கடமையாற்றுகின்றார்

வறண்ட நிலத்து பயிர் வானை எதிர்பார்க்கும், ஆம் வறடசியே நீரின் அருமையினை உணர செய்யும்

அப்படி சங்கடமும் துயரமும் வரும்பொழுதே மனிதமனம் கடவுளை நாடும் அப்படி மானிட வாழ்வில் சங்கடம் கொடுத்து ஞானம் கொடுக்க ஒரு சக்தியினை பரம்பொருள் உருவாக்கினார் அவர்தான் சனிபகவான்

ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் சனியிடம் அகப்படும் காலம் உண்டு, அக்காலத்தில் கஷ்டம் வரும் நஷ்டம் வரும் அதில் ஞானம் வரும் என தெளிவாக சொன்னது இந்துமதம்

சனிக்கு யாரும் தப்பமுடியாது ஆனால் கடவுளை நோக்கி ஓடினால் அதன் பாதிப்பு குறையும் என அறுதியிட்டு சொன்னது அம்மத‌

மனிதனுக்கு அவனை சோதனையில் புடம்போட்டு ஞானத்தை வழங்குவதால் அவனை சனீஸ்வரர் என தெளிவாக சொன்னது

சனிக்கு ஆலயம் அமைத்தாலும் சிவனை வழிபட்டு சனியிடம் அடைக்கலம் கேள் என தெளிவாக சொன்னது, ஆம் கடவ்ளுக்கு சனி கட்டுபட்டவன் என உணர்த்தியது

கூடவே விநாயகர் எனும் முழுமுதல் கடவுளுக்கு சனி பிடிக்கவில்லை என்றும், அந்த ஞானபிம்பம் சனியிடமிருந்து நம்மை பாதுகாக்கும் என நம்பிக்கை ஊட்டியது, விநாயகர் என்பது அறிவின் அடையாளம்

ஆம் மானிட வாழ்வு என வரும்பொழுது ஒவ்வொரு மனிதனும் சனியின் கரங்களில் விழ கடவுள் ஏற்பாடு செய்திருகின்றார், சோதனை காலம் என்பது அதுவே.

அந்த சோதனை எதற்காக என்றால் அப்பொழுது மனிதன் உலகின் நிலையற்ற தன்மையினை உணர்ந்து தன்னைதேடுகின்றானா, ஞானத்தை அடைகின்றானா என பார்ப்பதற்காக?

அப்பொழுது தேடும் மனிதனை தெய்வம் அரவணைக்கின்றது, குறிப்பிட்ட காலம் முடிந்து அவன் எல்லா வளமும் திரும்ப பெறுவது அப்படியே

தேடாத மனிதனை மறுபடியும் ஞானம் பெற அந்த பரம்பொருள் மறுபடி பிறக்கவைத்து மறுபடியும் சனியின் கரங்களில் ஒப்படைத்து உண்மை உணர வைக்க வாய்ப்பு அருளுகின்றான்

சனியின் காலங்களில் ஒரு மனிதனுக்கு பதற்றமான மனம் இருக்கும், அந்த பதற்றமும் குழப்பமுமே அவனை கஷ்டத்தில் தள்ளும்

இதனால் பதற்றமான உடலை குளிர்விக்க நல்லெண்ணெய் குளியலை சொன்னார்கள், எள் உணவு இன்னபிற விஷயங்களை சொன்னார்கள். அதில் அறிவியலும் கலந்திருந்தது

மேற்குலகம் சோதிப்பவனை அய்யோ பேய் பிசாசு என ஒதுக்கிய காலங்களில் , உண்மையில் சனி என்பவன் ஞானத்தை அருளும் ஆண்டவன் என அவனை சனீஸவரன் என கொண்டாடிய மதம் இந்துதம்

அது யாருக்கும் எதிரானது அல்ல, அதன் தன்மை அப்படி

“ஏ சனீஸ்வரனே, நீ பகவான் அல்ல, முழு முதல் கடவுள் அல ஆனால் இது உனக்கான காலம். வா வந்து என் வாழ்வில் இறை சிந்தனையினை கொடுக்க இறை ஞானத்தை கொடுக்கும் காலத்துக்காக நீ வந்திருக்கின்றாய், வா வந்து உனக்கு இடபட்ட கட்டளை படி எம்மை ஆட்டு” என தம்மை ஒப்புகொடுத்த மதம் இந்துமதம்

அது சனிக்கு விளக்கும் இட்டது, வணங்கியது வாழ்வின் சோதனை காலத்தை மங்கு சனி என்றது, அதேசனி ஞானம் கொடுத்தபின் அள்ளி கொடுப்பதை பொங்கு சனி என்றும் சொன்னது

சனி என்பவர் சோதிப்பவர், அவரின் சோதனைக்கு தெய்வ அவதாரங்களே தப்பமுடியாது

ராமனும் கண்ணனுமே அவனின் சோதனைக்கு தப்பமுடியாது எனும்பொழுது மானிடர் எப்படி தப்பமுடியும்?

ஆனால் இந்துமதம் வழி சொன்னது, நிச்சயம் சனி இருட்டு ஆனால் கடவுளை தேடி விளக்கினை வை வழிபிறக்கும், நிச்சயம் சனி சூறைகாற்று தெய்வத்தை தேடு அது உன்னை காக்கும்

நிச்சயம் சனி பொருள் இழக்க வைக்கும், மனதை அலையாய வைக்கும், மதிப்பிழக்க வைக்கும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும், நீ கடவுளை தேடு ஆறுதல் கிடைக்கும்

அந்த காட்டாற்றுவெள்ளம் ஓய்ந்தபின் உனக்கானது பன்மடங்காய் திரும்பும்

சனி இல்லையேல் சோதிப்பவன் யார்? அந்த சோதனையும் துன்பமும் இன்றி கடவுளை தேடுபவன் யார்?

குந்திக்கு சனி பிடிக்காமல் இருந்தால் கண்ணனின் அருள் தேவைபட்டிருக்குமா? பாரத போர்தான் நடந்திருக்குமா?

அரிசந்திரனுக்கு சனி பிடிக்காமல் இருந்தால் அந்த ஞான எடுத்துகாட்டு கிடைத்திருக்குமா?

புராணங்களில் சனியின் கதையினை சொல்லிவைத்தார்களே ஏன், அதை கவனியுங்கள் அதெல்லாம் சோதனையினை கடந்து கடவுளின் அருளை பெற்றவர்களின் கதை

பரம்பொருளே எல்லோருக்கும் பொறுப்பு, எல்லோரின் வாழ்வுக்கும் காவலுக்கும் பொறுப்பு

சனி என்பவர் குறிப்பிட்ட காலத்தில் மானிடரை புடம்போட நியமிக்கபட்ட வேலையாள், அதை தெளிவாக சொல்லி இன்றும் மக்களுக்கு நல்வழியும் தத்துவமும் சொல்வது இந்துமதம்

அது சனியினை காட்டி சோதிப்பவன் உன்னை சோதிக்க வருகின்றான், இது கடவுளை உணரும் ஒரு தருணம் உன்னை தயார்படுத்திகொள் என தைரியம் கொடுக்கும்

சனியிடமே என்னை அதிகம் சோதிக்காதே என அவனுக்கு விளக்கேற்றி நண்பனாக்க சொல்லும்

எதிரி என்றோ, இந்துக்கு எதிரானவன் என்றோ யாரையும் காட்டாது, மாறாக ஞானத்தை அடையும் வழி இது என்றுமட்டும் பொறுமையாய் எடுத்து சொல்லும்

மூன்றாயிரம் ஆண்டுக்கு முன்பு உலகம் இப்படித்தான் இருந்தது, அதை அந்த நல்வழியினை இன்று இந்துமதம் மட்டும் தொடர்ந்து வருகின்றது

சோதனை காலமே சனியின் காலம், அப்பொழுது மனம் சோதிக்கபடும் வண்ணம் நிகழ்வுகள் நிகழும், வாழ்வு தலைகீழாக புரட்டி போட்டு அடிக்கும், வாழ்வே இருட்டாகும்

ஆனால் அந்நிலையிலும் கடவுளில் நிலைத்திருந்தால் ஞானம் பெருகும், ஒளி கிடைக்கும், வழி கிடைக்கும் காலம் மாறும்பொழுது எல்லாமும் மாறும்

அதனால்தான் இந்துக்கள் சனியின் கதைகளை, புராணத்தில் ஒவ்வொருவனையும் அவர் படுத்திய பாடுகளை படிக்க சொல்கின்றார்கள்

அதை எல்லாம் படிக்கும் பொழுது நமக்கு வந்த கஷ்டம் சாதாரணம் எனும் நம்பிக்கை வரும், தனி உற்சாகம் வரும் , சோதனை காலத்தை மிக எளிதாக தாண்ட தோன்றும்

வாழ்வின் முற்காலமோ பிற்காலமோ இல்லை அவ்வப்போதோ சோதனை காணா மனிதன் எவனுமில்லை, அதெல்லாம் சனி சோதிக்கும் காலமே

கடவுளின் ஆணைபடி அவன் சோதிக்க, அந்த கட்வுளின் திருவடி பணிபவருக்கு ஒரு சிக்கலும் வரபோவதில்லை வந்தாலும் பனிபோல் நீங்கும் இல்லையேல் மலையாய் அழுத்தும்

இந்துமதம் மானிட வாழ்வின் யதார்த்ததை சனி கிரககம் கொண்டு விளக்கிற்று சனியினை காட்டி ஞானம் போதித்தது

பரம்பொருள் நன்மை தீமையினை கடந்தவர், மனிதனும் சில ஞானங்களை பெறும்பொருட்டு கொஞ்ச காலங்களை அவனுக்கு சோதனையில் தள்ளுகின்றார்

அதில் தேவை பொறுமையும் நிதானமும் அமைதியுமான வழிபாடே, காட்டாற்று வெள்ளம் வரும்பொழுது ஒதுங்கியும், சூறைகாற்று அடிக்கும் பொழுது அமைதியாக தள்ளி நிற்பதும் அறிவுடமை

அக்காலம் முடிந்தபின் பெரும் நன்மை கிடைக்கும், மாறாக அந்த காட்டாற்றில் இறங்கினால் கரையேற முடியாது

இந்துமதம் சனி எனும் காட்டாற்றின் பொழுது கடவுளை கைக்கொள்ள சொல்கின்றது ஆதிகால உலக தர்மத்தை, மானிட வாழ்வுக்கும் அமைதியான மனதுக்கும் அக்காலத்தில் தொடங்கி இக்காலம் வரை நல்வழி காட்டி வருகின்றது

அதன் ஒவ்வொரு வடிவமும் புராணமும் தத்துவமும் யாரும் தப்பமுடியா உலக நியதியினையும், அமைதியான வாழ்வுக்கும், ஞானம் பெறுவதற்கும் ஏதுவாகவே இருக்குமன்றி வேறல்ல

இதுதான் சனியின் தத்துவம், உண்மையில் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் இறைவனை தேடிய காலங்களில் சோதிக்கபட்டார்கள், இவர்கள் பக்தி உண்மையா இல்லையா , மோட்சம் பெற தகுதியானர்களா இல்லையா எனும் சோதனை நடந்தது

அந்த சோதனைதான் நவபுலியூர் யாத்திரை

புலியின் காலும் கையுமாக வியாக்ரபாதர முனி அவ்வளவுபாடுபட்டார் ஆனால் சோதனையில் வென்றார், அவரின் துன்பமெல்லாம் தீர்ந்த இடம் இந்த ஆலயம்

அப்படியே ஒவ்வொரு மக்களுக்கும் சனியால் ஏற்பட்ட துன்பம் , சோதனை தீரும் என சொல்லி தீர்த்துவைக்கும் ஆலயமும் இதுதான்

அங்கே இருக்கும் ஜேஷ்டா தேவி சன்னதியினையும் சனி சன்னதியினையும் ஒருசேர இப்போது காணுங்கள் அந்த தலத்தின் அதி அற்புதமான அமைப்பு புரியும்

சனியினை ஏன் வேண்டுகின்றோமோ அதே காரணத்துக்குத்தான் ஜேஷ்டா தேவியினையும் வேண்டுகின்றோம்

சனியிடம் என்னை சோதிக்காதே என்றும், அளவுக்குமீறி வாட்டாதே என மன்றாடுகின்றோம், நல்லோரும் நேர்மையானாரும், நல்லது செய்வோரும், நல்ல கர்மா கொண்டோரும் சனியிடம் அஞ்சவேண்டியதில்லை

நேர்மையும் உண்மையும் கொண்டோர் காவல்துறைக்கும் நீதிமன்றத்துக்கும் அஞ்சவேண்டியதில்லை, ஆரோக்கியமான உடலும் உணவும் கொண்டிருப்போர் மருததுவருக்கு அஞ்சவேண்டியதில்லை

ஆனாலும் அவர்கள் ஆலோசனை அறிவுரை கேட்க பணிவோம் அல்லவா? இன்னும் விழிப்பாக இருக்க சோதனைகளில் சிக்கல்களில் வீழாமால் இருக்க ஆலோசனை கேட்போம் அல்லவா?

அப்படி அஞ்சும் நிலையில் இல்லாதோரும் சனியினை பணிதல்வேண்டும், மேற்கொண்டு தனக்கு விழிப்பு நிலையும் உழைக்கும் மனமும் வேண்டி சோர்வும் தளர்ச்சியும் மயக்கமும் அறியாமையும் வராத வரம் வேண்டி ஜேஷ்டா தேவியினையும் பணிதல் வேண்டும்

தவறுகள் செய்தோர், மயக்கத்தில் வீழ்ந்தோர், தாம்சம் எனும் மந்த நிலையும் அறியாமையும் கொண்டோர் அதிலிருந்து விடுபட்டு அறிவும் தெளிவும் அடைய இவர்களை வழிபடுதல் அவசியம்

சனிகிரகமும் மூதேவி எனும் ஜேஷ்டா தேவியும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தெய்வங்கள், விநாயகர் இவர்கள் மூலமாகவும் செயலாற்றும் ஞான கிரஹம்

சரியாக படிக்கும் மாணவனுக்கு நல்ல ஆசிரியரும், அடங்காதவனுக்கு கொஞ்சம் கடுமையான ஆசிரியரும் கொண்டு பாடத்தை புரியவைத்தல் போல பிரபஞ்சம் செய்யும் இயக்கம் இது

அதைத்தான் இப்படி ஜேஷ்டா தேவியாக சனிபகவனாக நிறுத்தி வைத்து வழிபட சொன்னார்கள் இந்துக்கள்

உங்கள் ஜாதகத்தில் சனி தொடர்பான சிக்கல் இருந்தாலோ அல்லது மனதில் தெளிவின்மை , மறதி, தூக்கம், மந்த நிலை, எல்லாவற்றிலும் ஒரு சுணக்கம், தரித்திரம் என சில முடக்கம் இருந்தாலோ இந்த ஆலயத்துக்கு செல்லது சால சிறந்தது

எல்லாமும் உடனே மாறும், பாதிப்புகள் குறையும்

சனி தசை என்பதும், ஜேஷ்டா தேவியின் கோபம் என்பதும் ஏறகுறைய ஒன்றேதான் அது இங்கே வழிபட்டால் பாதிப்பினை காட்டாது, தெளிவும் அறிவும் கிடைக்கும்

கர்மம் துலங்கும், கர்மத்தை செய்ய முழு சக்தியும் பலமும் தெளிவும் உற்சாகமும் வரும், தொட்டது துலங்கும்

வாழ்வில் சிக்கல் இருந்தால் இங்கு வந்து வழிபட்டால் எல்லா சிக்கலும் தீரும், சீரான வாழ்வு இன்னும் உற்சாகமாக நலமாக செல்ல இந்த ஆலயம் அருள் வழங்கும்

வியாக்ரபாதரின் துயர் தீர்த்த சிவன், உங்கள் சிக்கலையும் ஏற்று இழந்ததை எல்லாம் தர தயாராக இருக்கின்றாள்

நித்திய கல்யாணி என உஜ்ஜையினியில் காளிதாசம், கடையத்தில் பாரதியார் என பலருக்கு நித்திய அழியா அடையாளங்களை அருளியவள் உங்களுக்கும் நிலையான பெயரை செல்வத்தை தர காத்திருக்கின்றாள்

தற்பர முனிவர் அருளோடு உங்கள் சிக்கல்கள் பிரச்சினைகள் யாவும்மாற்றி தர சனிபகவான் காத்திருக்கின்றார், எவவகை சனி பாதிப்பு என்றாலும் அங்கே தீரும்

அப்படியே நல்ல அறிவு, விழிப்பு நிலை, உழைக்கும் ஆற்றல் சக்தி என எல்லாம் தந்து வாழ்வில் வளம் சேர்க்க ஜேஷ்டா தேவியும் காத்துகொண்டிருக்கின்றாள்

அந்த ஆலயம் சென்று வணங்குங்கள், அந்த வியாகரபுரீஸ்வரரும் நித்திய கல்யாணி அம்மனும், ஏகபாத ருத்திரரும், சனீஸ்வரனும், ஜேஷ்டா தேவியும் எல்லா நலனும் பலமும் வளமும் உங்கள் வில்லங்கம் விக்கினம் என அனைத்தும் அகற்றி தந்து பெரும் தெளிவும் அறிவும் செல்வாக்குமாய் தந்து வாழவைப்பார்கள் அது சத்தியம்

நவபுலியூர் 09 : திருபெரும்புலியூர்

திருவையாற்றில் இருந்து கல்லணை செல்லும் பாதையில் அமைந்திருக்கின்றது அந்த திருபெரும்புலியூர், நவபுலியூர் தலத்தின் கடைசி தலம் இது

தில்லையில் சிவபெருமானின் உத்தரவுபடி நவபுலியூர் தலங்களையும் தரிசித்து பின் திருவரங்கத்தில் தொழுது திருப்பட்டூரில் மோட்சமடைய சென்ற அந்த புலிக்கால் முனிவரும், பதஞ்சலி எனும் பெரும் முனியும் தங்கள் யாத்திரையின் கடைசி சிவதலமாக இங்கு வணங்கிவிட்டு அந்த நிறைவோடு திருவரங்கம் சென்றார்கள்

இந்த ஆலயம் ஒரு நிறைவினை முழுமையினை கொடுக்கும் ஆலயம்

வள்ளலார்ம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “மைத்த கரும்புலி ஊர்க் காளையொடும் கண்ணோட்டம் கொள்ளும் பெரும்புலியூர் வாழ் கருணைப் பேறே” என போற்றுகின்றார்

“‘பெரும்புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்பது ஞானியர் சொன்ன வரி

இந்த ஆலயம் தேவாரம் பாடபட்ட தலம், சம்பந்த பெருமான் இங்கு பதிகமே பாடியுள்ளார், அது சைவதிருமுறையில் தேவாரமாக உண்டு

“தோடுஉடை யார்குழைக் காதில்,

சுடுபொடி ஆர்அனல் ஆடக்

காடுஉடை யார்,எரி வீசும்

கைஉடை யார்,கடல் சூழ்ந்த

நாடுஉடை யார்,பொருள் இன்பம்

நல்லவை நாளும் நயந்த

பீடுஉடை யார்பெரு மானார்,

பெரும்புலி யூர்பிரி யாரே.”

என இதுபோன்ற 10 பாடல்களை பாடி, பெரும்புலியூர் சிவனை அவர் மிக மிக உருக்கமாக போற்றி நின்றார்

சம்பந்தர் இந்த தலத்தை மிகவும் ஸ்லாகித்து பாடினார் “‘மண்ணுமோர் பாகமுடையார்” என தொடங்கும் பதிகத்தில் ஈசனின் சகல உயர்நிலைகளையும் காட்டி, இந்தப் பெரும்புலியூரானைப் பிரியாதவர்கள் சிவத்திற்கு சமமாவார் என்கிறார். அ

இன்னும் இந்தப் பெரும்புலியூர் பெருமானை வழிபடுவோர் “தந்துயர் நீங்கி நிறைவளர் நெஞ்சினராய் நீடுலகத்திருப்பாரே” என்று நம்பிக்கையோடு ஆசி கூறுகிறார்.

சோழமன்னர்கள் காலத்திற்கும் முந்தைய இந்த ஆலயம் காலம் தோறும் மாறி வந்தாலும் அதன் அடிப்படை சிறப்புக்கள் மாறவில்லை

பல ஆலயங்களில் இல்லாத சிறப்புக்களுடன் இன்றும் அது கம்பீரமாக நிற்கின்றது

இந்த ஆலயத்தின் இராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது.

வெளிப் பிரகாரத்தில் சூரியன், விநாயகர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளது. அடுத்து உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

எங்குமே காணபடமுடியா வகையில் அதிசயமாக நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி சுதையாலும் ஆனது.

வேறெங்கும் காணமுடியாத ஒரு அற்புதமாக வெளிப்பிராகாரத்திலுள்ள கருவறை பீடம் இது, தாமரையின் மீது அமைந்திருக்கிறது. சிற்ப நுட்பங்கள் வாய்ந்த அந்த கமலபீடம் பார்ப்பதற்கு அரிதானது, அழகானது.

தாமரையின் மீது அமைந்துள்ள இந்த பீடம், மகாலட்சுமியை நினைவுபடுத்தும் காட்சி

கோஷ்ட மூர்த்தங்களாக தென் சுற்றில் தட்சிணாமூர்த்தியும், மேற்குச் சுற்றில் வழாக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார். வடக்குச் சுற்றில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.

நடராஜர் சந்நிதியில் ஒருபுறம் வியாக்ரபாதரும், மற்றொரு புறம் பதஞ்சலி முனிவரும் உள்ளனர்.

இன்னொரு சிறப்பாக இங்குமட்டும் நவகிரகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்கின்றார்கள், வழமையாக நவகிரகங்கள் எதிரெதிர் திசையில்தான் அமர்ந்திருப்பார்கள், இங்குதான் ஒருவர் முகம்பார்க்க ஒருவர் அமர்ந்திருக்கின்றார்கள்

எங்குமே காணபடாத விசித்திர அமைப்பு இது

இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு அன்னையின் சன்னதி

கருவறையில் இறைவி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னையின் மேல் இரண்டு கரங்களில் பத்மமும், ெஜபமாலையும், கீழே ஒரு கரத்தில் அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சி தரும் அன்னை, தனது இன்னொரு கரத்தை பூமியை நோக்கி தொங்க விட்ட நிலையில் காட்சி தருகிறாள்.

அன்னை இங்கு சதுரபீடத்தில் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு. இங்கு மூலவராய் நின்று அருள்புரியும் அன்னையும் இவளே.

துர்க்கையாய் நின்று மங்கையரைக் காப்பவளும் இவளே. அளப்பரிய சக்தி கொண்ட அன்னை இவள். எனவே இந்த ஆலயத்தில் துர்க்கை பிரதிஷ்டை செய்யப்படவில்லை. அன்னைதான் சகலமும்

இந்த ஆலயம் ஒருவித நிறைவை தரும், ஆலயத்தில் நுழைந்தாலே ஒரு ஏகாந்த உணர்வும் நிம்மதியும் கைகூடும்

மிக மிக முக்கியமாக பெரும் பாதுகாப்பில் இருப்பது போல் உணர்வு வரும், இந்த ஆலயத்தின் சக்தி அது

இங்கு நடராஜர் பிரசித்தம், அன்னை பிரசித்தம், அந்த நடராஜ கோலத்தினை கண்டபடி நிற்கும் பதஞ்சலி முனியும், வியாக்ரபாதரரும் விஷேஷம்

யோகம் கைகூடும் தலமிது, உச்ச சக்கரமான சகஸ்ர சக்கரம் விரியவும் , உன்னதமான யோக நிலை கூடவும் பதஞ்சலி முனிவர் தனி அருள் வழங்கும் ஆலயம் இது

இந்த ஆலயத்தில் சுப்பிரமணியமாக இருக்கும் முருகபெருமானும் பெரும் விஷேஷம், அவரின் சக்தி பெரிது

இதனாலே அருணகிரிநாதர் இந்த தலத்தை தேடிவந்து பாடினார், திருபுகழில் “சதங்கை மணி” பதிகத்தில் அவர் பாடுவது இந்த ஆலயம்தான்

“பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்

பெரும்புலியுர் வாழ்பொற் …… பெருமாளே”

என அவர் பாடுவது இந்த ஆலயத்தை பற்றித்தான், இந்த ஆலயத்து முருகனைத்தான் மிக மிக உருகி பாடினார்

இந்த தலத்தின் பெருமையினை ஞானியர் அனைவரும் அறிந்திருந்தனர், அதனாலே ஓடி ஓடி வந்து வணங்கி அருள்பெற்று மருகி உருகி பாடி பாடி தொழுதனர்

அப்படி ஒரு ஆகர்ஷன சக்தி நிரம்பிய ஆலயம் இது

வியாக்ரபாதரர் முதல் அருணகிரி நாதர் வரை மட்டுமல்ல, மதுரை சுந்தர்சுவாமிகள் எனும் மகான் இந்த ஆலயத்தின் சிறப்பை வெளி உலகிற்கு பிற்காலத்தில் சொன்னார், அந்த ஆலயத்துக்கு பழைய ரிஷிகள் வரிசையில் வாழும் சாட்சியாக இருந்தார்

அவரின் சிலை அந்த ஆலயத்தின் உள்ளே நிறுவபட்டுள்ளது

மிக மிக அருள் வாய்ந்த இந்த தலம், நவபுலியூர் தரிசனத்தின் ஒன்பதாம் தலம், கடைசி தலம் என்பதால் எல்லா நிறைவினையும் கொடுக்கும் ஆலயம், எல்லா காவலும் மனபூர்வமன நிம்மதியும் அருளும் ஆலயம்

நவகிரக ஆலயங்களில் இந்த ஆலயம் செவ்வாய் கிரகத்துக்கானது

நவகிரகங்களில் தனித்துவமானவர் செவ்வாய், இவர் பூமிகாரகன் என‌ சொல்லபடும் கிரஹம்

செவ்வாயினை ஏன் பூமி காரகன் என சொல்கின்றார்கள் என்றால் இரு காரணங்களை அதன் இயல்போடு பொருத்தி சொல்வார்கள்

செவ்வாய் கிரகம் பூமிபோல உறுதியானது, பூமிபோல வாழவைப்பது என்பதால் அதை பூமிகாரகன் என்றார்கள், பூமியின் மேல் உள்ள அதிகாரத்தை ஒருவனுக்கு நிலை நிறுத்தும் கிரகம் அது

செவ்வாய் கிரகமே நிலபுலன்களுக்கும் இன்னும் பல விஷயங்களுக்கும் அதிபதி

இரண்டாவது பூமி எல்லா உயிரையும் காப்பது போல எல்லா உயிரையும் காக்கும் சக்தி, குணம் கொடுக்கும் கிரகம் செவ்வாய்

இதனாலே காவல் வீரர்கள், ராணுவம் போன்ற துறைகளில் இருப்போர் இந்த செவ்வாயின் ஆதிக்கம் பெற்றிருப்பர்

செவ்வாய் தன்னை இழந்து மற்றவரை காக்கும் ஒரு தியாக வீரத்தை தருவார், தன்னலம் அதிகம் கருதாமல் பிறருக்காக பெரும் காவலை செய்யும் அந்த தியாக வீரகுணத்தை தருவார்

ஷத்திரிய குணம் என்பது அவரின் வரம்

செவ்வாய்தான் வீரத்துக்கு அதிபதி, செவ்வாய்தான் வைராக்கியமும் தைரியமும் தருவார், இன்னும் பல பலமும் தருபவர் அவர்தான்

தலமைபதவி, பலருக்கு மேல் இருந்து உத்தரவிட்டு வழிநடத்தும் அதிகாரம் கொண்ட நிலையெல்லாம் செவ்வாய் அருளால்தான் வாய்க்கும்

வாழ்வில் முக்கிய குணம் தைரியம், எல்லா சூழலையும் எதிர்த்து நின்று கடக்கும் தைரியமும் வீரமும் மனோபலமும் கொடுக்கும் கிரகம் இது

எல்லாம் இருந்தும் தைரியமும் காவலும் இல்லாவிட்டால் எல்லாம் பாழாகும், எது இல்லை என்றாலும் தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் எல்லாமும் கூடிவரும்

அவ்வளவு முக்கியமான கிரஹம் இந்த செவ்வாய், காவலையும் பெரும் உறுதியினையும் அது வழங்கும்

உறுதியும் நிலைதன்மையும் கொடுக்கும் கிரகம் அது, அந்த அருள் ஒவ்வொருக்கும் அவசியம்

அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு எனும் வகையில் இந்த செவ்வாய் கிரகம்தான் உடலின் ரத்த ஓட்டத்துக்கு காரணகர்த்தா

உடலின் மிக மிக முக்கியமான விஷயம் ரத்த ஓட்டம், அந்த ரத்தம் சுத்தமானதாகவும் சரியான அளவில் ஓடுபதாகவும் இருத்தல் வேண்டும், ரத்தம் கெட்டால் உடல் கெடும்

தேக ஆரோக்கியமே இந்த ரத்த ஓட்ட சூட்சுமத்தில்தான் இருக்கின்றது, உடலை இயக்குவதே அதுதான்

செவ்வாய் கிரகம் நிறத்தால் மட்டுமல்ல தன் சக்தியாலும் உடலின் ரத்தத்தின் சக்தியினை நிர்ணயிக்கும் கிரஹம், செவ்வாயின் அருளே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், ரத்த துடிப்பினினை தரும்

இதனாலேதான் விளையாட்டு வீரர்கள், பெரிய காவலர்களிடமெல்லாம் இந்த செவ்வாயின் ஆதிக்கத்தை காணமுடியும்

உடலுக்கு இயக்கமும் மனதுக்கு தைரியமும் வீரமும் தருபவர் செவ்வாய். போர்கிரஹம் என சொன்னாலும் உண்மையில் அவர் காவல் கிரஹம்

முருகபெருமான் செவ்வாய் கிரகத்தோடு தொடர்புடையவர் அதனாலே அவர் வானலோக சேனாதிபதியாக அறியபடுகின்றார்

இந்த திருபெரும்புலியூர் ஆலயத்திலும் அவருக்கு தனி சன்னதி உண்டு என்பது கவனிக்கதக்கது

போர் தெய்வம் என கருதபடும் காளி, துர்க்கை போன்ற தெய்வங்களும் செவ்வாயின் அனுகிரகத்தை கொண்டவை , காவலை தனி தைரியத்தை வழங்கும் தெய்வங்கள் அவை

அந்த அன்னைதான் இங்கும் தனி சன்னதியில் சவுந்தர்ய நாயகியாக அமர்ந்திருகின்றாள், செவ்வாயின் எல்லா அருளையும் அவள் அருள செவ்வாயின் அம்சமாக இருக்கின்றாள்

இன்னும் போர் தெய்வமான வராஹியின் சன்னதியும் இருக்கின்றது

ஆக முருஜபெருமான், உக்கிரமான அன்னை, வராஹி என எல்லா காவல் தெய்வங்களும் குடியிருந்து வரமருளும் ஆலயம் இது

உக்கிர தெய்வங்களுக்கான செவ்வரளி பூக்கள்,செம்பூக்களை தூவி வழிபடும் இடம் இந்த அலயம்

செவ்வாய் கிரகம் எவ்வளவுக்கு காவலும் பலமும் தருமோ அது எல்லை மீறி செல்லும்போதுதான் ரவுடியிசம், அடாவடி , இன்னும் பல அதர்மமான குணங்களும் வளரும், அதை ஒழிக்க எப்போதும் பலத்தை கட்டுக்குள் வைக்க செவ்வாய் வழிபாடும் தெய்வவழிபாடும் அவசியம்

செவ்வாய் நல்ல துணைகளை தரும், நம்பிக்கையான ஆட்களை தரும், செவ்வாய் அருள் பெற்றவர் நம்பிக்கையும் ஆறுதலுமான ஆட்களை பெற்று பெரும் இடத்தில் இருப்பார்

சிவபெருமானால் புலிக்கால் முனிவரால் அடையாளம் காட்டபட்ட இந்த தலம் எல்லா வகை காவலையும் அருளும்

குறிப்பாக மனதைரியம் , வைராக்கியம், போராட்டகுணம், எந்த சூழலையும் எதிர்த்து நின்று வெல்லும் குணம் என எல்லாமும் தரும்

இந்த ஆலயம் பலவகையான காவல் வரங்களை தரும், ஒரு மனைவிக்கு கணவனை விட நல்ல காவல் இல்லை என்பதால் கணவன் மனைவியினை சேர்த்து வைக்கும் அற்புத தலம் இது

கணவன் பழக்க வழக்கங்கள் பிடிக்காமல் பிரிய நினைக்கும் பெண்கள் இத்திருத்தலத்திற்கு வந்து உமா சகித மூர்த்தியின் முன் நின்று மனமாற பிரார்த்தனை செய்து பூஜித்தால் மனைவியின் பிரார்த்தனை கேட்ப கணவன் திருந்தி மீண்டும் மனைவியுடன் அன்பாக இணைந்து வாழ்வான்

பிரிந்த கணவனை வேண்டி அவன் தனக்கு காவலாய் வரவேண்டி நின்றால் அந்த வரத்தை இந்த ஆலயம் வழங்கும்

புதிய வாகனம் வாங்கி இங்கே வழிபட்டு சென்றால் வாகனத்துக்கு எல்லா காவலும் அந்த ஆலய அன்னை வழங்குவாள், விபத்து உயிராபத்து எல்லாம் காக்கபடும்

ரத்த சம்பந்தமான நோய்கள் இருந்தால், அவர்கள் இங்கே வழிபட்டால் முழு நலம் கிடைக்கும்

இந்த ஆலயம் எதிரிகளை ஒழிக்கும், முழு காவலை அருளும், எல்லா விதமான எதிரிகளையும் எதிர்ப்புகளையும் ஒழித்து முழு காவலை இந்த ஆலயம் தரும்

இன்னும் பூமிசம்பந்தமான சிக்கல் , நில சிக்கல் ஆகியவற்றை தீர்க்கும் ஆலயம் இது, இன்னும் நிலம் சம்பந்தமான எல்லா ஆசிகளையும் அள்ளிதரும் ஆலயமும் இதுதான்

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சிக்கலாக இருந்தாலோ இல்லை செவ்வாயின் பலம் குறைந்திருந்தாலோ இங்கு வந்து வழிபட்டு செல்லுங்கள், செவ்வாய் கிரக நிலைப்பாடு காரணமாக வம்பு வழக்குகள் இன்னும் பல சிக்கல்கள் தானாக வந்து தொல்லை செய்தாலும் இங்கு வழிபட்டால் குறையும்

செவ்வாய் அம்சம் எல்லாவற்றையும் சரிசெய்து உங்களை நிறைவாக அனுப்பும் ஆலயம் இது

ஆம், இது நிறைவினை தரும் ஆலயம். எப்போது ஒருவனுக்கு நிறைவு வரும் என்றால் எல்லாம் இருந்தால் மட்டுமலல் நல்ல காவலில் இருக்கின்றோம், ஆபத்தின்றி இருக்கின்றோம், எந்த அச்சுறுத்தலும் கவலையுமின்றி இருக்கின்றோம் என்பதே நிறைவு

சரியான இடத்தில் அடைக்கலமாகிவிட்டோம் இனி நமக்கு எந்த அச்சமும் இல்லை என எங்கே அச்சமும் கலக்கமும் மறையுமோ அங்குதான் நிறைவு வரும்

எங்கு மனம் வெற்றிபெற்றதாய் கருதுமோ அங்குதான் நிறைவு வரும்

இந்த ஆலயம் செவ்வாய் பலம் கொண்டதும், காவலும் வெற்றியும் அதனால் நிறைவும் கொடுக்கும் ஆலயம்

இதனாலே அங்கு எல்லாம் பெற்ற உணர்வினை முனிவர்கள் பெற்றனர், நிறைவும் ஆனந்தமும் அவர்களுக்குள் பொங்கி வழிந்தது

செவ்வாய்க்கு மங்களன் என்றொரு பெயரும் உண்டு, மங்களம் என்றால் எல்லா நலங்களையும் காவலோடு உறுதியாக தருபவர் என பொருள், மங்கள வாழ்வு என்றால் அதுதான்

அந்த மங்களம் எனும் எல்லா நலமும் வளமும் கைகூடிய நிலையினை அடைய இந்த தலத்தில் வழிபடுதல் அவசியம், எல்லா நலமும் கூடிவரும்

திருபெரும்புலியூர் ஆலயத்தில் நவகிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்படி அமைக்கபட்டிருப்பதுதான் இந்த ஆலயத்தின் தாத்பரியத்தை காட்டுகின்றது

நவகிரகங்கள் இங்கு கூடி முழுமையான அருளை தருகின்றன, அதனால் எல்லாமும் கூடிய நிறைவு , முழுமையான பூரணமான நிறைவு இங்கு சிவன் அருளில் எல்லா தடைகளையும் உடைத்து வழங்கபடும், வாழ்வும் மனமும் பூரணத்துவமாகும் என்பது அதன் பொருள்

அப்படி பூரணத்துவம் வழங்கும் ஆலயம் இது

வாய்ப்பிருந்தால் குடும்பமாய் தரிசித்தல் நன்று, குடும்பமாய் வாழவைக்கும் எல்லா நலத்தையும் அது அருளும்

வாழ்வில் தடுமாறிகொண்டிருப்போர், உறுதியான முடிவின்றி தவிப்போர், உரிய காவலும் அடைக்கலமுமில்லாமல் தடுமாறுவோர், யாருமே இல்லை என கலங்கி நிற்போர் இங்கே வழிபட்டால் நிலமை செல்வாக்காய் மாறும்

பிரிந்த குடும்பம் இங்கே சேரும், வாழ்விற்கு தேவையான எல்லா காவலும் நிலம் முதல் தொழில் வரை கைகூடும், எதிரிகள் ஒழிவார்கள்

வீணான வம்பு வழக்குகள், வீண் சண்டைகளெல்லாம் ஒழியும், வழக்குகள் வெற்றியாகும்

ரத்த சம்பந்தமான நோய்கள் தீரும், உடல் நலமாகும்

அப்படியான வரம் அருளும் ஆலயம் இது, ஒவ்வொருவரும் தவறாமல் சென்று நிறைவை கண்டடைய வேண்டிய தலம் இது, சென்று எல்லா நலனும் பெறவேண்டிய தலம்

நவபுலியூர் என ஒன்பது ஆலயங்களுக்கு யாத்திரை சென்ற புலிக்கால் முனிவரும், பதஞ்சலியும் இந்த தலத்தில் முழுமை உணர்ந்தார்கள், பெரும் நிறைவினை அடைந்தார்கள்

பூரணத்துவம் எய்தினார்கள்

எல்லாம் பெற்ற திருப்தியில் நிறைவில், முழுமையானதை அடைந்த நிலையில் , பூரணத்துவம் அடைந்த மகிழ்வில் திருவரங்கம் நோக்கி செல்ல தொடங்கினார்கள்

அதாவது பூமியில் தங்கள் பிறப்பின் காரணம் உணர்ந்து, அதை நன்முறையில் நிறைவேற்றிய தர்மம் உணர்ந்து, பூமியில் பிறப்பதே கர்மம் தொலைத்து இறைவனை அறிந்துகொள்ள என்பதை உணர்ந்து, எள் முனையும் உலக கர்மாவில் பாக்கி இல்லாமல் கழிந்ததை உணர்ந்து இனி எதுவுமில்லை எல்லாம் உணர்ந்தாகிவிட்டது , முழு நிலை அடைந்தாகிவிட்டது இனி மோட்சமே இடம் என மோட்சம் அடைய திருவரங்கம் நோக்கி சென்றார்கள்

அதை அடுத்து காணலாம்

நவபுலியூர் நிறைவு பகுதி

சிவபெருமானின் உத்தரவுபடி நவபுலியூர் தலங்களை தரிசித்து எல்லா கிரகங்களின் அருளையும் பெற்று, அந்த தலங்களில் இருக்கும் சிவனின் தனி அருளையும் பெற்றபின் அந்த புலிக்கால் முனிவரும், பதஞ்சலியும் பூலோக வைகுண்டம் என அழைக்கபடும் ஸ்ரீரங்கம் ஆலயம் நோக்கி சென்றார்கள்

நாம் தொடரின் தொடக்கத்தில் பார்த்தபடி புலிக்கால் முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் சிவநடனத்தை தரிசித்தால் போதும், சிவனை பார்த்துவிட்டால் போதும் மோட்சம் உறுதி எனும் எண்ணம் இருந்தது அதனால் அந்த நடனத்தை காண சிதம்பரம் வந்தார்கள்

ஒரு தைபூச நாளில் அந்த நடனத்தை அவர்களுக்கு காட்டினார் சிவன், அவர்கள் பக்தியின் பரிசு அது

ஆனால் அதுவே மோட்சம் அடைய தகுதி என சிவன் கருதவில்லை, மோட்சம் அடைதல் என்பது பெரும் ஞானத்துடன் பல உண்மைகளை அறிந்தபின் வரவேண்டியது, பக்தி என்பது ஞானத்தில்தான் முடியவேண்டும் பல உண்மைகளை அறியவேண்டும் என்பதே சிவனின் சித்தமாய் இருந்தது

அதனால் அவர்களை நவபுலியூர் தங்களை தரிசித்து ஸ்ரீரங்கத்துக்கும் சென்றுவழிபட சொன்னார், விஷ்ணுவும் சிவனும் ஒன்றே என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும், அது முக்கால உண்மை என்பதை உணர்த்த விரும்பினார்

அதுவரை சிவனை தரிசித்தால் முக்தி, சிவன் மட்டுமே போதும் என்றிருந்த முனிவர்கள் இந்த உண்மையினை உணர்ந்து நவபுலியூர் தலங்களை சுற்றிவிட்டு ஸ்ரீரங்கம் வந்தனர்

அன்று ஸ்ரீரங்கம் பெரும் ஆலயமாக இல்லை, மூல கர்ப்பகிரஹம் கொண்ட சிறிய சன்னதியாக இருந்தது

ஸ்ரீரங்க ஆலயம் எல்லோரும் அறிந்தது, காவேரியின் இரு கிளைகளுக்கு நடுவில் தீவுபோல் அமைந்திருக்கும் இடத்தில் இருக்கும் ஆலயம் அது

பொதுவாக இரு ஆறுகளின் நடுவில் இருக்கும் தீவுபகுதிக்கு பிரபஞ்ச சக்தி அதிகம், வாரனாசி எனும் காசியே அப்படித்தான் அமைந்திருக்கின்றது, அப்படி காவேரி நடுவே அமைந்த தலங்கள் சக்திமிக்கவை

ஸ்ரீரங்கபட்டினம் முதல் பல ஆலயங்கள் அப்படி காவேரியில் உண்டு, அதனில் முக்கியமானது இந்த ஸ்ரீரங்கம்

புராணத்தின்படி அந்த அரங்கன் ராமபிரானின் குலதெய்வமாக இஷவாகு மன்னர் காலத்திலே வணங்கபட்டவர், பின் விபீஷ்ணன் அதை இலங்கைக்கு கொண்டு செல்ல முயலும் போது விநாயகபெருமான் அதனை தடுத்து அரங்கனை அந்த ஸ்ரீரங்கத்திலே தங்கும்படி செய்தார்

அதிலிருந்து அந்த ஆலய புராணம் தொடங்குகின்றது

வைஷ்ணவ திவ்யதேசங்களில் முதலாவதும் பெரும் பெரும் அதிசமும் அற்புதமும் கொண்ட தலம் அது, பூலோக வைகுண்டம் என அதற்கு பெயர், அங்கு எல்லா ஆழ்வார்களும் அடியார்களும் பாடியிருக்கின்றார்கள்

ராமபிராம்னின் குலதெய்வம் என்பதால் எப்போதுமே அந்த ஆலயம் பயபக்தியால் வழிபடபட்டது, திருப்பதி இப்போதுதான் பிரசித்தி ஆனால் காலம் காலமாக பெரும் பணக்கார தெய்வமாக ஸ்ரீரங்க அரங்கனே கொண்டாடபட்டார்

அவ்வளவுக்கு செலவம் கொட்டிகொடுக்கும் தெய்வமாக அவர் கருதபட்டார், இன்றும் ஸ்ரீரங்க ஆலயத்தின் பெருமை நிலைத்து நிற்கின்றது, வணங்கி நிற்கும் பக்தர்கள் ஏராளம்

அந்த செல்வம்தான் மாலிக்காபூர் துக்ளக் என பலரை ஈர்த்து கொள்ளையிட வைத்தது, இப்போது அந்த கொள்ளை எப்படி நடக்கின்றது என்பதெல்லாம் எல்லோரும் அறிந்தது

இந்த தலம் சைவர்களுக்கு சிதம்பரம் போல வைஷ்ணவர்களுக்கு அதி முக்கியமானது

அங்கே மாணிக்கவாசகரும் நந்தனாரும் கரைந்தே போனார்கள் என்றால் இங்கே ஆண்டாள் நாச்சியார் அப்படியே மறைந்தார்

ஆலயம் வேறு என்றாலும் ஒரே பக்தி, ஒரே காட்சிகள்

ஸ்ரீரங்க ஆலயத்தை பற்றி எழுதினால் எழுதிகொண்டே இருக்கலாம் அதன் சிறப்பும் சக்தியும் தாத்பரியமும் எத்தனை ஏடுகள் எழுதினாலும் தீராது

அந்த ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சயன கோலத்தில் இருப்பார், அதனை “அறிதுயில்” என்பார்கள்

அதாவது எல்லாம் அறிந்து எல்லாம் இயக்கிகொண்டே ஒன்றும் அறியாதவர்போல் பெருமாள் துயில் கொள்கின்றார் என பொருள்

இந்த பிரபஞ்சம் அமைதியாக இயங்குகின்றது, ஒருவகையில் ஓசையின்றி புரிந்துகொள்ள சூட்சுமத்துடன் இயங்குகின்றது

ஆகாய கோள்களின் சஞ்சாரம் முதல் விதை முளைத்து வருவது, மொட்டு மலர்ந்து பூவாகி கனியாவது வரை எல்லாமே அமைதி, பெரும் அமைதி

இந்த அமைதியான இயக்கத்தில் இறைவன் உண்டு, அவன் எல்லாம் அறிந்தும் எல்லாம் இயக்கிகொண்டும் இருந்தாலும் அமைதியாக கண்காணிக்கின்றான், இந்த பிரபஞ்ச அமைதியான இயக்கமே அறிதுயில் என தாத்பரியம் கொண்ட ஆலயம் அது

எப்படி பிரபஞ்சத்தை பெரும் சக்தி இயக்குகின்றதோ, ஓசைபடாமல் இயக்குகின்றதோ, அப்படி மானிட வாழ்வையும் அதுவே இயக்குகின்றது என்பதை சொல்லும் ஆலயம் அது

அந்த ஆலயத்துக்கு வந்த இருவரும் ரங்கனை பணிந்தார்கள், ரங்கனை போற்றி பணிந்து வணங்கி அவர் காலடியில் தியானமிருந்தார்கள்

பல உண்மைகள் அவர்களுக்கு தெரிய தொடங்கின‌

பரம்பொருள் என்பது ஒன்றே ஒன்று என்பதும், உலக இயக்கத்துக்காக அது சிவன், பிரம்மா, விஷ்ணு என தனித்திருப்பதையும் இதெல்லாம் உலகவாழ்வுக்கானது கர்மத்துக்கானது இதை அடுத்து ஞானம் உண்டு, எல்லாம் ஒன்றே எனும் ஞானம் உண்டு என்பதை உணர்ந்தார்கள்

சிதம்பரத்தில் நடனமாடும் நடராஜர் கோலமும், இங்கே அறிதுயிலில் சயனம் கொண்டிருக்கும் இருவரும் ஒரே சக்தி என்பதை உணர்ந்தார்கள்

இன்னும் ஆழமாக சிந்தித்தார்கள் புராணம் சொல்லும் வேதமும் வேதாந்தமும் அவர்களுக்கு விளங்கிற்று

அதாவது யாகம், வழிபாடு, பூஜைகளெல்லாம் வேதவழி அதை கர்மகாண்டம் என்பார்கள், அதன் அடுத்த நிலை ஞானகாண்டம் அதாவது பூரண ஞானம்

படிபடியாக இறைவனை நோக்கி செல்லும் நிலை கர்மகாண்டம், சிகரத்தில் நிற்கும் நிலை ஞானகாண்டம்

சிவநடனம், நவகிரகங்கள் கொண்ட நவபுலியூர் இப்போது ஸ்ரீரங்க அரங்கன் கோலம் என எல்லாம் கண்டவர்களுக்கு உண்மை விளங்கிற்று

கர்மகாண்டம் என்பது ஆன்மீகத்தின் தொடக்கம் அதே நேரம் உலகம் இயங்கவும் மானிடர் வாழவும் சில சக்திகள் அவசியம் அதை வழங்க மூலபரம்பொருள் மூன்று பெரும் வடிவாய் நிற்கின்றது

அதற்கு துணையாக நவகிரகங்களும் இதர தேவர்களும் தேவதைகளும் நிற்கின்றார்கள் என்பதை உணர்ந்தார்கள்

பூலோக வாழ்வுக்காக இவர்கள் வரமருள படைக்கபட்டார்கள், இவர்கள் அருள் இன்றி பூலோக வாழ்வு சாத்தியமில்ல்லை என்பதை உணர்ந்தார்கள்

சிவனருள், விஷ்ணு அருள், நவகிரகங்களின் அருளெல்லாம் பூலோக மானிடனுக்கு வேண்டும் ஆனால் அந்த வாழ்வின் முடிவில் அவன் ஞானகாண்டம் அனுபவம்பெற்று எல்லா சக்தியும் ஒன்றே மானிடன் வாழவும் பூலோகம் இயங்கவும் முடிவில் ஆத்மா ஞானம் அடையவும் செய்யபட்ட ஏற்பாடு இது என்பதை உணர்ந்தார்கள்

கர்மத்துக்கும் ஞானத்துக்குமான பொருளை உணர்ந்தார்கள் , வேதங்களுக்கும் வேதாந்த உபநிஷங்களுக்கான பொருளையும் உணர்ந்தார்கள்

அதுவரை சிவன் மட்டும் போதும் சிவனருள் மட்டும்போதும் என்றவர்களுக்கு பூமியில் மானுடர் வாழ எல்லா தெய்வங்களின் அனுகிரகமும் வேண்டும் அதை ஒவ்வொரு வடிவில் இறைவன் அருள்கின்றான் என்பது புரிந்தது

அந்த மகா சக்தி இந்த பூலோக வாழ்வுக்கும் அதனை அருளும் இந்த தெய்வங்களுக்கும் மேலானது,அது ஒரே சக்தி அதுதான் நித்திய பரம்பொருள் எனும் ஞானம் கிடைத்தது

ஸ்ரீரங்கம் அவர்களுக்கு முழு ஞானம் கொடுத்தது

அந்த ஞானத்துடன் திருபட்டூர் நோக்கி சென்றார்கள், அது பிரம்மபுரீஸ்வரர் தலம்

அது பிரம்மனின் சாபம் தீர்ந்த இடம், பிரம்மன் சிவலிங்கத்தை வழிபட்ட இடம் என சொன்னாலும் அது பிரம்மனுக்குரிய தலம்

பிரம்மனுக்கு அங்கு பெரும் சன்னதி உண்டு

திருபட்டூர் என்பது விஷேஷமான ஆலயம், சுந்தரரும் சேரமான் பெருமானும் கயிலாயம் ஏகும் போது சேரமான் பெருமான் நாயனார் கயிலாயத்தில் இருந்து பாடிய “திருகயிலை உலா” இங்கே இருந்த சுந்தரரின் சீடரால் மக்களுக்கு தரபட்டது

அவ்வளவு சக்திவாய்ந்த தலம் அது, இன்னும் எண்ணற்ற சிறப்புக்களை கொண்டது

அங்கு வந்த ரிஷிகள் இருவரும் சிவனை பணிந்து பிரம்மனையும் பணிந்தார்கள்

சிவன் பிரம்மா விஷ்ணு எனும் மூன்று சக்தியும் ஒன்றே, பூமியினை வழிநடத்த அவை இப்படி பிரிந்திருக்கின்றன, இவைகளும் எல்லைகுட்பட்டவை, இதனை ஒரு மூல சக்தி நடத்துகின்றது அதுதான் நித்தியமானது அதை உணர்வதே ஞானம் என்பதை உணர்ந்தார்கள்

இந்த உண்மையினை உணர்ந்த இடத்திலே ஜீவசமாதி அடைய நினைத்தார்கள், அதாவது மோட்சம் அடையும் தகுதி அவர்களுக்கு அங்கே கிடைத்தபின் இனி தடையேதுமில்லை

மும்மூர்த்திகளும், நவகிரகங்களும், தேவர்களும், தேவதைகளும் மூல சக்தியின் வடிவங்கள் இவை விதிக்கு உட்பட்டு மாந்தரின் வாழ்வை நிர்ணயிக்கின்றார்கள் என்பதை உணர்ந்தார்கள்

திருபட்டூர் ஆலயம் பிரம்மன் சாபம் நீங்கிய இடம் என்பதால் அதற்கு தலையெழுத்தை மாற்றும் ஆலயம் என்றொரு பெயர் உண்டு

இங்கே மோட்சம் அடைய விரும்பிய ரிஷிகள், மானுடரின் ஒவ்வொரு துயரத்தையும் உணர்ந்தார்கள்

மானிடர் கர்ம காண்டத்தை தாண்டி ஞான காண்டம் அடைய , கர்மத்தை நல்லபடியாக செய்ய நல்வாழ்வு அவசியம் என்பதை உணர்ந்தார்கள்

இந்த வரம் எல்லா தெய்வங்களும் கூடி அருள்வது என்பதையும் சிவனும் விஷ்ணுவும் பிரம்மனும் அருள்வது, நவகிரகங்கள் அருளோடு அருள்வது என்பதையும் உணர்ந்து வழிகாட்ட சித்தமானார்கள்

யாரெல்லாம் சிதம்பரத்தில் வணங்கி நவபுலியூரையும் தொழுது ஸ்ரீரங்கம் வந்து பணிந்து திருபட்டூர் வந்து பிர்ம்மனையும் தொழுவார்களோ அவர்களுக்கு வாழ்வில் எல்லா நலமும் கைகூடும் என்பதை தங்கள் அனுபவத்தால் சொல்லி தாங்களே சாட்சியாகி திருப்பட்டூரில் ஜீவசமாதியாக நிலைத்திருக்கின்றார்கள்

வாழ்வில் நீங்கள் யாராகவும் இருக்கலாம், எப்படியான சிக்கலிலும் இருக்கலாம், ஆனால் இந்த யாத்திரை உங்கள் தலைவிதியினை மாற்றும்

சிதம்பரத்தில் தொடங்கி நவபுலியூர் சுற்றிவந்து ஸ்ரீரங்க நாதனை வணங்கி திருபட்டூரில் சரணடைந்தால் உங்கள் விதிமாறும் வாழ்வே மாறும்

சிதம்பரத்தில் சிவனருளும் நவபுலியூர் எங்கும் நவகிரக அருளும், திருவரங்கத்தில் பெருமாளின் பெரும் அருளும் திருபட்டூரில் பிரம்மனின் அருளும் பெற்றுவிட்டால் போதும், வாழ்வு நிறைவடையும்

அவர்களோடு சேர்ந்து உங்களை வாழ்த்த பதஞ்சலி முனியும், புலிக்கால் முனிவரும் அங்கே காத்திருக்கின்றார்கள்

மிக மிக பயனுள்ள, பெரும் சக்திமிக்க யாத்திரையினை செய்துகாட்டி உலக மாந்தருக்குவழிகாட்டிய அந்த ரிஷிகள் உங்களுக்கு வரமருள அங்கே காத்திருக்கின்றார்கள், உரிய யாத்திரை செய்து அவர்கள் அருளை பாக்கியமுள்ளவர்கள் அடைவார்கள்

இது சத்தியம், முக்கால ச்த்தியம், அந்த ரிஷிகள் அங்கு எக்காலமும் உண்டு முக்காலமும் உண்டு, அவர்கள் காட்டிய வழியில் ஆலயங்களை வணங்கி அவர்களிடம் வந்தால் முழு பலன் உண்டு, முழு ஞானமும் நிச்சயம் உண்டு