நாச்சியார் திருமொழி : 51
அன்றுல கம்மளந் தானையுகந்தடி…
ஆண்டாளுக்கு கண்ணன் நினைவு மிகுந்து பெருகிற்று, அவன் நினைவிலே வாடிக் கிடந்தவள் அவனைத் தேடிக் கொண்டே இருந்தாள்; அவன் வரவில்லை.
அவளுக்கு தூக்கம் வரவில்லை, அதிகாலை எழுந்தவள் வீட்டின் மாடத்தில் நின்று கொண்டிருந்தாள், மெல்லிய குளிர்காற்று பனியுடன் கலந்து வீசிக்கொண்டிருந்தது, சேலை முந்தானையினை கழுத்தை சுற்றி போர்த்திக் கொண்டே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் நினைவெல்லாம் கண்ணனாய் இருந்தான்.
தூரத்தில் குயில் கூவத் தொடங்கிற்று, அது கூவமும் தொலைவில் அதன் ஜோடிக் குயில் இசைப்பாடி பதில் சொல்லத் தொடங்கிற்று.
ஆண்டாள் மெல்லிய புன்னகையுடன் பாடத் துவங்கினாள்.
“அன்றுல கம்மளந் தானையுகந்தடி மைக்கண வன்வலி செய்ய
தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை நலியும் முறைமை யறியேன்
என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத் தகர்த்தாதே நீயும் குயிலே
இன்றுநா ராயண னைவரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்”
பாடி முடித்தவள் குயில் பாடிய திசையினையே பார்த்துக் கொண்டிருந்தாள், இளம் வெயில் வர வர அதனை ரசித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென அவள் மேல் மேகம் நீர் தெளிப்பதை உணர்ந்தாள், மேலே தலை உயர்த்தி பார்த்தாள் கருடன் ஒன்று பறந்து கொண்டிருந்தது, கண்ணா என ஏக்கமும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் சொன்னாள்.
கருடனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு யாரோ தன் தோளில் கை வைப்பது தெரிந்து திடுக்கிட்டுத் திரும்பினாள். அங்கே கண்ணன் நின்றுகொண்டிருந்தான்.
புத்தம் புது பூக்கள் அணிந்தபடி, வழமையான புன்னகையினைச் சிந்தியபடி மெல்ல சிரித்தான், கண்ணா என ஒட்டிக்கொண்டாள் ஆண்டாள்.
நீ குயிலிடம் சொல்லியபடி வந்துவிட்டேன் என்றான் கண்ணன், புன்னகைத்தாள் ஆண்டாள், அப்படியே அவன் தோளில் சரிந்து கொண்டாள்.
இளம் வெயில் ஏறிக் கொண்டிருந்ததால் அவளோடு மாடத்தின் உள்ளே சென்று அமர்ந்தான் கண்ணன், அழகான தரையில் அமர்ந்து கொண்டான். அவனோடு அமர்ந்துகொண்டு அவனையே நோக்கிக் கொண்டிருந்தாள் ஆண்டாள்.
என்ன பாடினாய் ஆண்டாளே என்றான் கண்ணன்
கண்கள் அசைய , காதோரம் கண்கள் அசைய பழச்சுளைகள் போல் உதடு பிரியச் சொன்னாள் ஆண்டாள்.
“அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமைக்கண் அவன் செய்ய
தென்றலும் திங்களும் ஊடு அறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்து என்னைத் தகர்த்தாதே நீயும் குயிலே என்னை
இன்று நாராயணனை வரக் கூவாயேல்”
கண்ணன் அவளை காதலோடு நோக்கி தன் புல்லாங்குழலை இன்னொரு கைக்கு மாற்றி அவள் கரம் பற்றிக் கேட்டான், “என்ன பொருள் ஆண்டாளே?”
அவன் கரத்தை இரு கைகளாலும் பற்றி அவன் விரல்களை நீவியபடியே சொன்னாள் ஆண்டாள்.
“அன்று உலகம் அளந்தானை உகந்து” என்றால் நீ மகாபலியினை அடக்க வானத்தையும் பூமியினையும் ஒரே அடியில் அளந்தாய் அல்லவா?
அதை ஏன் குயிலிடம் சொன்னாய் ஆண்டாளே?
மனதுக்கு பிடித்தவனை இன்னொருவரிடம் சொல்லும் போது அவன் பெருமையெல்லாம் சொல்லி சொல்லுதல் பெண்கள் வழமை அல்லவா? அப்படி சொன்னால்தானே என்னுடையவன் சிறப்பு இத்தகையது என ஊருக்கே உரக்க சொல்லமுடியும் கண்ணா, அந்த குயிலுக்கு ஒரு கர்வம் உண்டு தெரியுமா?
என்ன ஆண்டாளே?
அது இந்த வீதியினை பறந்து அளக்கின்றதாம், அந்த சோலையினை , வயலை, காடுகளை எல்லாம் பறந்து அளக்கின்றதாம், அதனால்தான் சொன்னேன் என்னவன் இந்த வானம் பூமி இரண்டையுமே ஒரே அடியில் அளந்தவன் என்றேன்”
கண்ணன் புன்னகைத்தான், ஆண்டாளும் புன்னகைத்து கொண்டாள். பின் பார்வையினை திருப்பியபடி ஆண்டாள் தொடர்ந்தாள்
“அப்படியான என் மன்னனிடம் அடிமையாய் இருந்து அவனுக்கு சேவகம் செய்ய எண்ணினேன், அதையே வாழ்வாக்கி காத்திருக்கின்றேன் ஆனால் அவனை காணவில்லை என்றேன்
என்ன சேவை ஆண்டாளே
மன்னன் என்றால் அவனுக்கு எல்லாவித சேவைகளும் செய்ய ஆட்கள் இருப்பார்கள் அல்லவா? நானும் அவனுக்கு ஏதோ ஒருவகையில் சேவை செய்துவிட்டு போகின்றேன் ஆனால் அவனை காணவில்லை அல்லவா அதை சொன்னேன்
அப்புறம்
அவனோ வரவில்லை ஆனால் தென்றலும் திங்களும் மாறி மாறி வந்து என் வேதனையினை அதிகபடுத்தியது, அந்த வேதனையில் நான் மிக மிக துன்புற்றேன்
சொல் ஆண்டாளே
அப்படி அவன்ன் வராமல் இந்த தென்றலிலும் நிலவொ:ளியிலும் என்னை தவிக்க வதைபட விட்டுவிட்டான், ஏய் குயிலே நானே அவன் நினைவில் வாடிகொண்டிருக்கும் போது நீ ஜோடி குயிலோடு பாடுவது சரியா? அதனால் அவனை அழைத்து வா , இல்லையேல் உன்னை இப்பக்கம் வரவிடாமல் விரட்டிவிடுவேன் என்றேன் கண்ணா”
கொஞ்சம் அமைதிக்கு பின் கண்ணன் கேட்டான், “அந்த குயில் என்ன செய்யும் ஆண்டாளே, அது என்ன செய்யும்?
அது ஒன்றும் செய்யாதுதான் ஆனால் என் மனதின் ஏமாற்றத்தை வேறு எங்கே காட்டுவது? அதனால் சொல்லிவிட்டேன, எதிர்பார்ப்பு நடக்கவில்லை என்றால் மனம் ஒரு வெறுப்புக்கு உள்ளேதான் விழும் , நான் என்ன செய்வேன் கண்ணா..
என்னை எதிர்பார்த்து ஏமாந்துபோவிடுவோம் என்றா கலங்குகின்றாய்
நீ ஏமாற்றமாட்டாய் என தெரியும் ஆனால் நீ வரும் நாள் இந்த நாளா இல்லையா என அனுதினமும் ஏமாந்துகொண்டே இருக்கின்றேன் கண்ணா”
அங்கே அமைதி நிலவியது , காலைநேர காற்று திரைசீலைகளை அசைத்தபடி மாடத்துள் மோதி, மான்களை தழுவி செல்லும் மெல்லிய நீரோடை போல அவர்களை தழுவி சென்றது
சற்று மவுனத்துக்கு பின் தோளில் சாய்ந்திருந்த ஆண்டாளிடம் கேட்டான் கண்ணன் ,
‘தென்றல் நிலவெல்லா உன்னை வருத்துகின்றதா ஆண்டாளே?”
மாலை நேரம் அந்த சுகமான தென்றல் வீசும் கண்ணா, பொதிகை மலையில் இருந்து கிளம்பும் அந்த தென்றல் மிக மிக சுகமானது, ஆயிரம் மயிலறகை எடுத்து வீசுவதுபோல் சுகந்தமானது, அதுவும் அந்த தென்றல் பொதிகை மலையின் குளிர்ச்சி நறுமண மலர்களின் வாசம் என எல்லாம் கலந்து வந்து உரசி செல்லும்போது மனம் சிலிர்க்கும்
மானிட மனம் அழகான தருணங்களை சுகமான நேரங்களில் இனிமையான பொழுதுகளில் தன் மனதுக்கு பிடித்த துணையோடு இருக்க ஏங்கும் கண்ணா, எனக்கு உன்னை தவிர யார் மனதாலும் நினைவாலும் பிடித்தமானவர்கள்? அதனால் அந்த தென்றலை உன்னோடு சேர்ந்து சிலாகிக்க விரும்பினேன்
நிலவு எப்போதுமே அழகானது அல்லவா கண்ணா, மூன்றாம் பிறை முதல் பவுர்ணமி வரை அந்த முன்னிரவு காலம் எவ்வளவு ரம்மியமானது, நிலவு வளர வளர மானிட மனமும் ஒரு எழுச்சி கொள்ளும் அல்லவா? அந்த நிலவின் நாளில் நிலவின் ஒளியில் மனதுக்கு பிடித்தவருடன் மகிழ்ந்திருப்பதை விட மானுடர்க்கு மகிழ்ச்சி ஏது? அதனால் பாடினேன்
என்ன பாடி என்ன கண்ணா நீ நான் அழைத்தவுடன் வரவா செய்வாய், வந்தாலும் என்னை அழைத்தா செல்வாய்? ஏதோ வந்து விளையாடிவிட்டு என்னை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் வைத்து கொண்டிருக்கின்றாய்”
கண்ணன் குறுக்கிட்டான் “ஆண்டாளே ஏன் இப்படியெல்லாம் பேசுகின்றாய்?”
மெல்ல புன்னகைத்து சொன்னாள் ஆண்டாள் “நம் கையில் இருந்து ஒரு பொருள் தவறினால் பூமியில் விழும், இந்த பூமியே தவறினால் எங்கே விழும்?
அப்படி நான் இறந்தாலும் உன் ஆதாரத்தில் வீழ்ந்து கிடப்பேனே தவிர வேறு எங்கு செல்வேன்? வாழ்ந்தாலும் இறந்தாலும் உன்னோடுதானே கண்ணா வேறு ஏன் நான் அஞ்ச வேண்டும்?”
கண்ணன் அவளை தன் தோளோடு சாய்த்து கொண்டான், அவன் சூடியிருந்த மலரின் வாசம் அவளுக்கு சுகந்தத்தை கொடுத்தது
தொலைவில் குயில் மறுபடி கூவ தொடங்கிற்று, அதன் ஜோடி குயில் கூவ தொடங்கிற்று
கண்ணன் தொடர்ந்தான்.
“ஆண்டாளே ஏன் என்னிடம் அடிமையாக வேண்டும் என்றாய் , உன் அன்புக்கு நான் உன்னை என் நெஞ்சில் தாங்கமாட்டேனா?
அது உன் பெருந்தன்மை கண்ணா, ஆனால் என் நிலை எனக்கு தெரியுமல்லவா? நான் அடிமையாய் இருந்து விடுகின்றேன்
மாவலியினை ஏன் சொன்னாய் ஆண்டாளே?
வானை, பூமியினை ஒரே அடியில் அளந்தவனுக்கு என் மனதை அளக்க தெரியவில்லை அல்லவா? அவன் மறந்துவிட்டான் அல்லவா? அந்த வலியினை எப்படி சொல்வேன் கண்ணா
மாவலி அவனுக்கு தலைகொடுத்து காத்திருந்தது போலத்தானே, அவன் உன்முன் அடிமையாக நின்றது போலத்தானே நானும் நின்றிருக்கின்றேன்
அது உனக்கு புரியாதா கன்ணா”
சொன்னவள் கண்கள் கலங்கின குரல் கம்மிற்று
“ஆண்டாளே அவன் பக்திக்கு மெச்சிதானே அவனுக்கு நித்திய சிரஞ்சீவி வரம் கொடுத்தேன், இன்றும் திருவோண பண்டிகைதோறும் அவன் நினைவுகூறபடுகின்றான் அல்லவா?
அவனை காலமெல்லாம் வாழவைத்த நீ என்னை ஒரு நாளாவது ஊர் அறிய வாழவைத்தாயா கண்ணா?
காலம் வரும்போது உலகம் அறியும் கண்ணே”
சொன்னவனிடம் அதற்கு மேல் பதில் இல்லை , ஆண்டாள் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள், தோளில் நீர் சொட்டுவதை உணர்ந்தான் கண்ணன், அது அவள் கண்ணீர் என்பது அவனுக்கு புரிந்தது
அவள் முகம் உயர்த்தி அவள் கண்ணீரை துடைத்து சொன்னான் கண்ணன் “ஏன் அழுகின்றாய் ஆண்டாளே, உன் கண்ணீரை கடந்து செல்லும் சக்தி எனக்கு உண்டா?”
ஆண்டாள் கலங்கிய குரலில் சொன்னாள் “நேரிலும் நீ வரவில்லை, நான் உன்னையே தியானித்தும் நீ வரவில்லை, பின் நான் என்ன செய்வது?
தியானமா என்ன சொல்கின்றாய் ஆண்டாளே?
ஆம் கண்ணா வானமும் வையகமும் எங்கும் நிறைந்திருப்பவன் நீ, அந்த மாவலி கதையில் ஓரடியில் நீ உலகை வானை அளந்தாய் என்பது எல்லா இடமும் நீ பரவி நிற்கின்றாய் என்பதை சொன்னது
அப்படிபட்ட உன்னை என் மனதில் காணா தேடினேன், அதைத்தான் பாடினேன்
அப்படியா கண்ணே..
கண்ணா உலகெல்லாம் அளந்த நீ என் உள்ளமும் அளக்க வருவாய் என தெரியாதா, வாமணன் வானமும் மண்ணும் தன்னுடையது என சொல்லித்தானே உனக்கு அனுமதி தந்தான் மாவலி
நீ அதையெல்லாம் அளந்துதானே அவன் தலையில் கால்வைத்து அடிமை செய்தாய்
எனக்கு வானமில்லை இந்த மண்ணில் எதுவும் சொந்தமுமில்லை, அந்த குயிலைபோல நான் ஒன்றுமில்லாதவள், உனக்கு தர நீ வந்து அளந்துகொள் என சொல்ல எனக்கு என்ன உண்டு? அதனால் என் மனதில் வந்து அதன் அகல ஆழமெல்லாம் அளந்து எடுத்துகொள், இந்த மனம் உனக்கு அடிமை என சொல்லி தவமிருந்தேன்
ஆண்டாளே, அங்கே தென்றலும் நிலவும் வந்ததா?
விளையாடாதே கண்ணா, தென்றல் நிலவு என சொன்னது உனக்கு புரியவில்லையா?
இல்லை
கீதையில் என்ன சொன்னாய்? தியானத்தால் உன்னை காணலாம் அடையலாம் என சொன்னாய் அல்லவா?
ஆம் புருவ மத்தியில் எண்ணங்களை நிறுத்தி தியானிக்கவேண்டும் என்றேன்
அதைத்தான் நான் மனதால் செய்தேன் கண்ணா, தென்றல் என்றால் சுகமான காற்று அல்ல அது முச்சுகாற்று, பிராணாயம் செய்வதை சொன்னேன், தென்றல் பகலில் வருமல்லவா அதனால் சூரிய நாடியினை அதோடு சேர்த்து கொன்டேன்
நிலவு என நான் சொன்னது இடகலை நாடி அதனை சந்திர நாடி என்றும் சொல்வார்கள் இது குளுமையானது, வலது நாசிவழியே ஓடுவது சூரிய நாடி இது கொஞ்சம் வெம்மையானது
கண்ணா சூரியகலை சந்திரகலை எனும் இரு நாடிகளையும் அடக்கி அதனை முறையே தியானத்தில் இணைக்கும் போது சுழுமுனை நாடி தோன்றி எழும்
அந்த சுழுமுனை நாடி உச்சிக்கு செல்ல செல்ல பரவசம் ஏற்படும், அதுதான் ஆகசிறந்த பரவசம், உலகில் சுகம் என கொண்டால் பரமசுகம், போதை என கொண்டால் பெரும்போதை, அதனை நிறைவு என கொண்டால் பெரும் நினைவு
அதனால்தான் அதில் திளைத்துவிட்ட யோகிகளும் ரிஷிகளும் மானுட இன்பத்தின் பக்கமே வருவதில்லை
நான் ஆரம்பகட்டத்தில் நிற்கின்றேன் கண்ணா, உன்னை காணவேண்டி தியானமெல்லாம் செய்கின்றேன், அனால் மூச்சு இன்னும் கட்டுபாட்டில் வரவில்லை தடுமாறுகின்றேன்
ஆண்டாளே குயில் எங்கிருந்து வந்தது?
கண்ணா குயிலின் ராகத்தி “ஓம் நமோ நாராயணா” என சொல்லிபார்த்தால் உனக்கு விளங்கும், குயில் ஓசை குக்கூ என கேட்கும் போதெல்லாம் நான் அதைத்தான் நினைப்பேன்
கண்ணா, ஓம்..ந..ம…சி..வா..ய என்பது எப்படி சக்கரங்களை துலக்கும் மந்திரமோ அப்படி “ஓம் ந..மோ.. நா.ரா.ய..ணா” என்பதும் சக்கரங்களை துலக்கும் அதிர்வுகளை கொடுக்கும்.
கண்ணா , நான் அதைத்தான் நான் சொல்லும் மந்திரத்தைத்தான் குயிலாக சொல்லிபாடினேன், இந்த மந்திரம் உன்னை என் மனகண் முன் அழைத்துவரும் என நம்பி தியானத்தில் சொல்லி அமர்வதை பாடினேன்” என சொல்லிகொண்டே சென்றாள்
அவளை ஆச்சரியம் தாளமால் பார்த்து கொண்டே இருந்தான் கண்ணன்
அவன் புல்லாங்குழலை வாங்கி அதை சுட்டிகாட்டி சொன்னாள் ஆண்டாள் “கண்ணா நீ வைத்திருக்கும் புல்லாங்குழல் தத்துவமென்ன சொல்?
இந்த குழலில் ஆறு துளைகள் உண்டல்லவா?? இந்த ஆறு துளைகளும் மானிட ஆதார ஆறுசக்கரங்களை குறிப்பதல்லவா?
உன்னை தியானிக்க தியானிக்க ஆறு சக்கரங்களும் துலங்கி இனிய ஏகாந்த நிலையினை அடையலாம் , பேரானந்த நிலையினை அடையலாம் என்பதல்லவா?
அதைத்தானே புல்லாங்குழலோடு உலகுக்கு சொல்கின்றாய், குழலில் மூச்சு எப்படி இசையாக வருமோ அப்படி மானிட மூச்சு ஏழு சக்கரம் வழியாக இனிமையான தன்மையினை ஆனந்த தன்மையினை எட்டும் என்பதைத்தானே போதிக்கின்றாய்
நான் அதைத்தான் முயற்சித்தேன், என் மனகண்ணில் உன்னை காண முயன்றேன், ப்ரயாணம் செய்து இருநாசி நாடிகளை அடக்கி சக்கரங்களை துலக்கி உன்னை காண உன் ஆனந்தத்தில் திளைக்க முயன்றேன்
ஆனால் முடியவில்லை கண்ணா, அதைத்தான் பாடினேன்” என்றாள்
கண்ணன் புன்னகைத்தான், தன் கட்டை விரலை அவள் நெற்றிபொட்டில் வைத்தான், ஆண்டாளுக்குள் சிலிர்ப்பு வந்தது, மயில் தோகைவிரித்து ஆடுவதை போல அவள் மேனி சிலிர்த்தது
முழு பரவசம் அவளுக்குள் குடிகொண்டது, அங்கே அவள் மண்டியிட்டு நிற்கின்றாள் முன்னே கண்னன் பாலகனாய் நிற்கின்றான், பின் மெல்ல மெல்ல வளர்கின்றான்
ஆனந்த பரவசத்தில் கண்ணா கண்ணா என கத்தினாள் ஆண்டாள்
அந்த உருவம் வளர்ந்து வானையும் பூமியினையும் அளந்து நிற்கின்றது, ஆண்டாள் மலையினை பார்க்கும் மான்போல் அவன் விஸ்வரூபத்தை காண்கின்றாள்
ஒரு குரல் உரத்து கேட்கின்றது “ஆண்டாளே என்னை ஏற்றுகொள்கின்றாயா?”
காத்திருக்கின்றேன் என சொல்லி தலை தாழ்த்தினாள் ஆண்டாள்
அந்த விஸ்வரூபம் மெல்ல சுருங்கி சுருங்கி ஒரு குழந்தையாய் அணில்குஞ்சு வடிவில் வந்து அவள் முன் நின்றது
ஆண்டாள் அதனை வியப்பாய் பார்த்தாள், அது ஒரு ஆல் இலைமேல் அமர்ந்துகொண்டது
ஆண்டாள் பார்த்துகொண்டே இருந்தாள் அந்த இலை மெல்ல பறந்து அவளை நோக்கி வந்து சட்டென அவளுள் புகுந்து கொண்டது
கண்ணா.. என கத்தியவள் கண்ணை திறந்தாள், அங்கே எதுவுமில்லை யாருமில்லை அவள் மட்டும் இருந்தாள்
ஒரு பெரிய காட்சிக்குள் சென்று கண்ணனை தரித்து வந்ததை அறிந்தவள் அப்படியே அமர்ந்தாள் அவள் கண்ட தரிசனம் அவள் கண்முன்னே நின்றது
முகத்தை இரு கைகளாலும் தேய்த்தவள் பூஜைக்கு நேரமாக எழுந்து நடந்தாள், அவள் காலோரம் ஏதோ தட்டுபட்டது
ஆண்டாள் அது என்ன என கவனித்தாள் அது புல்லாங்குழல், கண்ணன் கையில் அவள் கண்ட அதே புல்லாங்குழல்
அதை தொட்டு எடுத்தாள் அழகான தங்கபூண் பூட்டபட்டு முனையில் முத்துமாலை தொங்கவிடபட்ட அந்த குழலை கையில் ஏந்தினாள், கண்ணன் வாய்பட்ட புல்லாங்குழல் என்பதால் அவளுக்குள் மயக்கமும் நாணமும் மாறி மாறி வந்தது
அவளுக்கு புல்லாங்குழலை இசைக்க தெரியாது, ராகம்பாட தெரியாது
ஆனாலும் அதை உதட்டருகே கொண்டு வந்து “கண்ணா” என்றாள்.
அந்த ஆறு துளைகள் வழியாக ஒவ்வொரு சுவரத்திலும் “ஓம் நமோ நாராயணா” எனும் மந்திரம் அழகாக ஒலிக்கத் தொடங்கியது.
கண்ணா கண்ணா என்றபடி அதனை கன்னத்தோடு அணைத்து அமர்ந்துகொண்டாள், அவள் தவம் முழு வெற்றி என்பதைச் சொல்ல கோவிலில் கோவில்மணி .ஒலித்துக் கொண்டிருந்தது.