நாச்சியார் திருமொழி : 69

நாச்சியார் திருமொழி : 69 ( பாசுரம் 8.7, 8.8, 8.9)

ஆண்டாள் எப்போதும் போல் கண்ணன் நினைவில் வாடிக் கொண்டிருந்தாள். ஒரு செடி நீருக்கு ஏங்குதல் போல் தரை வந்த மீன் நீருக்குத் துடிப்பதைப் போல் தவித்துக் கொண்டிருந்தாள், வேறு எந்தச் சிந்தனையுமே இல்லாதபடி ஒரே நினைவாய் அவன் அவளை முழுக்க ஆட்கொண்டிருந்தான்.

அவன் நினைவால் உருகிக்கொண்டிருந்த அவளுக்குக் காண்பவை எல்லாமே அவனை நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தன. வீட்டின் வெண்ணெய் பானை, பசுக்கூட்டம் முதல் உரல் வரை ஒவ்வொன்றும் அவனைக் கண்முன் காட்டிக் கொண்டே இருந்தது.

எதை நோக்கினாலும் அது அவன் நினைவெனும் நெருப்பினை எண்ணெயிட்டு வளர்ப்பதைப் போலிருப்பதாள். மனம் கனத்தவள் மாடத்துக்கு வந்து வானம் நோக்கி அமர்ந்தாள்.

பெரிய யானைகள் போன்ற கரிய மேகங்கள் அங்கே திரண்டன, அந்தக் கருமை அவளுக்குக் கண்ணனை நினைவுப்படுத்திற்று, தன் மனதில் கலந்துவிட்ட கண்ணனிடமிருந்து எங்குச் சென்றாலும் தப்பமுடியாது என உணர்ந்தவள் தோல்வியினை ஒப்புக்கொண்டாள்.

எல்லா அரக்கரரும் அசுரரும் இன்னும் அவனை எதிர்த்தவரெல்லாம் தோற்ற நிலையில் தான் மட்டும் எப்படி அவன் நினைவுகளை வெல்லமுடியும் என மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

ஆனாலும் அவன் தன்னைக் குழப்பத்திலே வைத்திருப்பதை எண்ணிக் குழம்பினாள், அவனைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவும் அவளால் முடியவில்லை.

கண்களில் நீர் தழும்ப மழை கொட்டத் தயாராகும் மேகத்தை நோக்கினாள், அவளுக்கு அதனிடம் மனம் விட்டு பேசத் தோன்றிற்று.

தொலைவில் விழுந்த மழையின் ஈரம் மண் வாசமும் சில மலர்களின் வாசத்தையும் ஈரக்காற்றில் இழுத்து வந்தது, அது மதயானையின் மதநீரின் வாசத்தை நினைவூட்டிற்று.

மெல்லத் தூவ ஆரம்பித்து அவளுக்கு மதநீர் வடியும் யானைப்போலவே தோன்றிற்று, இனி அது மதம் கொண்ட யானைப்போல் அதகளம் செய்யும் என்பதை உருவகித்து கொண்டவள் மேகத்திடம் பேச ஆரம்பித்தாள்.

காதல் கொண்ட மனம் தன் காதலை யாரிடமாவது சொல்லும்படிச் சுழலும், எவ்வளவு மறைத்தாலும் அணையில் கசியும் நீர்போல் மனம் வார்த்தைகளில் கசியும், யாரும் அருகிருந்தால் தன் காதலைக் கொட்டச் சொல்லும்.

யாரும் இல்லா நேரம் தனிமையிலே பேசிச் சிரிக்கவும் வழி செய்யும், அந்தக் காதல் மனம் தனித்திருந்த அவளை மேகத்திடம் பேசச் சொல்லிற்று.
அவள் பேசினாள்.

“மதம்கொண்ட யானை போல் எழுந்த மேகங்களே, நீங்கள் அந்த வேங்கட மலையினைத்தானே வசிப்பிடமாகக் கொண்டவர்கள் அல்லவா?

அங்கே பாம்பின் மேல் படுத்திருக்கும் எம்பெருமானிடம் ஒரு வார்த்தை சொல்வீர்களோ, அவனையே கதி என நம்பியிருக்கும் என்னை அவன் கண்டுகொள்ளாது அவளைக் கைவிட்டுக் கொன்றான், அவன் நினைவால் அவள் இறந்தே போனாள் எனும் சொல்லை உலகத்தார் சொல்வார்களே, அது அவனுக்கு மகிழ்வானதோ ஏற்றுக்கொள்வானோ என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள்.

மேகங்களே, வெண்மையான சங்குகளைக் கொண்ட கடலைக் கடைந்தவனும் சிவந்த கண்களைக் கொண்டவனுமான அந்த வேங்கடவன் கால்பாதத்தில் நான் வைக்கும் விண்ணபத்தைச் சொல்லுங்கள்.

அவன் ஒரு நாளாவது என்னிடம் வந்து என் கொங்கை மேலிருக்கும் குங்குமச்சாந்து அழியும்படி என்னோடு கூடுவனாகில் நான் உயிர்பிழைப்பேன், அதனால் அவனுக்குப் பழி நீங்கும் என்பதைச் சொல்லுங்கள்.

கார்க்காலத்தில் எழும் பெரும் மேகங்களே, மழை துளிப்பட்டு முறியும் எருக்க இலைபோல் என் மனம் பலவீனப்பட்டு இருக்கும் நிலையிலாவது அவன் ஒருவார்த்தை சொல்லமாட்டானா?

மேகங்களே… என் வேதனையெல்லாம் அவனுக்குத் தெரிவியுங்கள், நான் சாகும் முன் வரச் சொல்லுங்கள்”

சொன்னவள் கண்களைத் துடைத்துக் கொண்டு மேகங்களையே நோக்கிக் கொண்டிருந்தாள், தான் ஒரு பறவையாகப் பிறந்திருந்தாலும் பறந்தே வேங்கடம் சென்றிருக்கலாம், மேகமாக இருந்திருந்தால் நீந்திச் சென்றிருக்கலாம், மானுடத்தியாக பிறந்து இப்படிச் சிக்கிகொண்டோமே எனகா கவலையில் ஆழ்ந்திருந்தாள்.

தன் வேதனை எல்லாம் மேகங்களிடம் கொட்டியவள் அப்படியே சோர்ந்திருந்தாள் , அது நெய் ஊற்றிய நெருப்பினைப் போல் பெரும் சோகம் மனதில் வளர்த்தது.

அவள் பார்த்துக் கொண்டிருக்கையிலே ஒரு மேகம் அசைந்து வந்தது. வந்தது ஒரு யானைபோல் உருமாறி அவளைத் தன் மேல் அமரச் சொன்னது, ஆண்டாள் அமர்ந்தாள்.

யானை மீண்டும் மேகமாகி மெல்ல மிதந்தது, நீரிலே செல்லும் தெப்பம் போல் அது மெல்ல அவளைக் கொண்டு சென்றது, சற்று நேரத்தில் பெரிய மேக கூட்டம் தனில் அவள் நுழைந்தாள்.

மேகம் அவளை ஒரு இடத்தில் இறக்கிவிட்டது, அவள் இறங்கிக் கொண்டாள், சுற்றிலும் மேகமூட்டம் என்பதால் எதையும் அவளால் காணமுடியவில்லை.

எங்கே வந்துவிட்டோம் எனக் குழம்பினாள், அப்படியே அமர்ந்தும் கொண்டவள் கண்ணனை மனதுக்குள் நினைந்து வாய்விட்டு அவன் பெயரைச் சொன்னாள்.

அப்போது திடீரென அந்த மேகக் கூட்டம் கலைந்தது, பெரும் ஒளி வீசிற்று, அவள் கண்கள் கூசிற்று, ஆண்டாள் கண்களை மூடியபடி மெல்ல திறந்தபோது அந்த அதிசயம் கண்டாள்.

அவள் வேங்கடவன் சந்நிதியில் திருப்பதி மலையில் நின்று கொண்டிருந்தாள்.

“ஆண்டாளே, மேகத்திடம் நீ புலம்பியதையெல்லாம் பாடு” என்ற குரல் கேட்டது.

மகிழ்ச்சியும் சிலிர்ப்பும் பெரும் ஆனந்தமும் கொண்டவள் வெயிலோடு கலந்த மழைபோல் கொஞ்சம் அழுகையுடன் கூடிய மகிழ்வில் பாடினாள்.

“மத யானை போல் எழுந்த மாமுகில்காள்! வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்! பாம்பணையான் வார்த்தை என்னே!
கதி என்றும் தான் ஆவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே.

சங்கமா கடல் கடைந்தான் தண் முகில்காள்! வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒரு நாள்
தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே”

கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள்! வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்தருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கில் அம் பழவிலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒரு நாள் தம் வாசகம் தந்தருளாரே”

பாடியவளை நோக்கிக் கைவிரித்து நின்றான் கண்ணன், “கண்ணா” என ஓடியவள் அவன் முகத்தைக் கண்டாள்.

ஒரு மனதில் கண்ணீர், அழுகை, ஏக்கம் ,பெருமிதம் ,பிரிவு, முழு ஆனந்தம், முழு நிறைவு என எல்லாமும் ஒரு சேர கொடுப்பது காதலன்றி ஏதுமில்லை, அதுவும் மனதார பதியும் ஆழமான காதல் அதை நிறைந்து கொடுக்கும்.

அவன் மேல் அவள் கொண்டிருந்த கோபமெல்லாம் பனிபோல் மறைய அவனிடம் ஒட்டிக்கொண்டாள், அவளை அணைத்துக்கொண்டவன் முகம் உயர்த்திக் கொண்டான்.

“மேகத்திடம் சென்று சொல்லுமளவு உனக்கு யாருமில்லாமலா சென்றுவிட்டாய் கண்ணே” என்றான், அவள் மெல்லச் சொன்னாள்.

“நான் சொல்லவில்லை கண்ணா, புலம்பினேன், வேறு என்னதான் செய்யமுடியும்?”

என்ன சொன்னாய் ஆண்டாளே, நானா பெண்களை வதைப்பவன்?

உனக்குப் பிடிக்காதவள் என்றால் வதைப்பாய் அல்லவா?

அப்படி யாரை வதைத்தேன்?

ராமனாக வந்தபோது சூர்ப்பனகையினை நீ வதம் செய்யவில்லையா சொல்?

அவளும் நீயும் ஒன்றா கண்ணே?”

அவளிடம் பதில் இல்லை, அவள் தலைக்குனிந்தாள், கண்ணன் அவள் முகம் உற்றுப் பார்த்தான், அவள் மெல்லச் சொன்னாள்.

“வாளெடுத்து மூக்கினை அறுப்பதுதான் ஒருபெண்ணை வதைப்பது அல்ல, ஊர் அறிய அவளை ஏற்றுக்கொள்ளாமல் காத்திருக்க வைத்து, அவளைக் குழப்பத்தில் வைத்து அழவைப்பதும் வதம் அல்லவா? அதை எனக்கு யார் செய்கின்றார்கள் என்பது உனக்குத் தெரியாதா?”

கண்ணன் அவள் கரம்பிடித்துச் சொன்னான் “உனக்கு மகுடம் சூட்டி உலகறிய பெருமைப்படுத்தும் நான் அதைச் செய்வதாக நினைப்பாயா ஆண்டாளே, உனக்கான இடம் எது என உனக்குத் தெரியாதா கண்ணே”

ஆண்டாள் அவன் கண்களை நோக்கி சிலநொடி பார்த்தவள் புன்னகைத்துச் சொன்னாள், “உன்னைக் காணும் போதெல்லாம் நம்புகின்றேன், காணாத பொழுதெல்லாம் குழம்புகின்றேன்”

கண்ணன் புன்னகைத்து அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான், ஒரு தேம்பலோடு அவள் சாய்ந்து கொண்டாள், அவன் தொடர்ந்தான்.

“மதம் கொண்ட யானை என மேகத்தை அழகாய்ச் சொன்னாய் கண்ணே.

அது அழகு அல்ல, என் மனதின் அலங்கோலம் கண்ணா, உன் மேல் கொண்ட பித்து நிலையால் என் மனம் எனக்கு அடங்கா நிலை, என் மனம் அந்த மத நிலையில் கட்டுக்கடங்காமல் ஆடும் ஆட்டம்.

எத்தனையோ மத யானைகளை அடக்கிய நீ என் மனத்தை அடக்க வரமாட்டாயா எனும் ஏக்கம் இன்னும் வலிக்கும் கண்ணா”

சில நொடி அமைதிக்குப் பின் கண்ணன் கேட்டான்.

“கண்ணே, என் பாதத்தில் என்ன விண்ணப்பம் வைத்தாய்? உன் கொங்கையின் குங்குமக்குழம்பு அழியும்படி நான் உன்னோடு ஒரு நாள் கலந்திருக்க வேண்டுமா?”

அவள் பதிலேதும் பேசாமல் நாணத்தால் குனிந்து கொண்டாள், அவனும் அதற்கு மேல் ஏதும் கேட்கவில்லை, அவள் தலையினை மட்டும் வருடிக் கொடுத்தான்.

அவள் தொடர்ந்தாள்.

“கண்ணா, கொங்கை என்றால் நெற்றிமேடும் கொங்கைதான். என் நெற்றியில் இடும் குங்குமம் உன் பாதத்தில் வைத்து வணங்கும்படி, என் தலையால் உன் காலைத் தொட்டால், திருவடிப் பணிந்தால் போதும், அதற்கு மேல் அடைய என்ன உண்டு கண்ணா?

ஏன் கண்ணே..

உன் திருவடியினை அடைந்த வரமன்றி வேறு என்ன வேண்டும் சொல், அதனைவிட இந்த மானுட அபலைக்கு என்ன வேண்டும்?”

சொன்னவள் அவனை ஏறிட்டுப் பார்த்து அவன் கைகளைத் தன் தோளில் போட்டுக் கொண்டு சொல்லத் தொடங்கினாள்.

‘கண்ணா, சிகப்பு என்றால் இயக்கம், சிகப்பு என்றால் வளமை, இந்த உலகில் கனிந்த முதிர்ந்த நிலை சிகப்பு, ஆற்றலான நெருப்பு முதல் சக்தி சிகப்பு, அதிகாலை சூரியன் சிகப்பு, உடலை இயக்கும் சக்தியான குருதி சிகப்பு.

உடலை இயக்கும் செங்குருதி சிகப்பு, அந்தத் தத்துவத்தைச் சிகப்பு நிறமாக சக்தி உடலை இயக்குகின்றது, இந்த உலகை இயக்குகின்றது என்பதைச் சொல்லத்தான் குங்குமம் சூடிக் கொள்கின்றோம்.

உன்னிடம் அடைக்கலமான பின் , உன்னோடு கலந்தபின், நீ வேறு நான் வேறு இல்லை என்றானபின் அந்தச் சக்தி நீயானபின் இது எதற்கு.

கண்ணா! குங்குமச்சாந்து என்பது சந்தனமும் குங்குமமும் கொண்டதல்லவா? சந்தனம் என்பது மண் தத்துவம் இந்த உடலைக் குறிப்பது, குங்குமம் அதன் இயக்கமான குருதியினைக் குறிப்பது.

உன்னுடன் நான் கலக்கும் போது, இந்த ஜீவாத்மா பரமாத்மாவோடு கலக்கும் போது அந்த உடலை உதறிவிட வேண்டும், அழியக்கூடிய உடல் அழிந்து அழியா ஆத்மா உன்னோடு கலக்கும் அல்லவா?

அந்த நாளைத்தான் சொன்னேன் கண்ணா, என்னை உன்னோடு கலந்துவிடு. இந்த ஆத்மாவினை இந்தக் கூட்டில் இருந்து விடுதலை செய்து உன்னோடு சேர்த்துவிடு, அதைத்தான் கேட்கின்றேன் கண்ணா”

அவன் அவள் காதோரம் சொன்னான், “நீ இதை எளிதாகக் கேட்டுவிட்டாய். அதை என்னால் எளிதாகத் தரமுடியாது , உரியகாலம் வராமல் நான் என்ன செய்துவிடமுடியும், நானும் காலத்துக்குக் கட்டுப்பட்டவன்.

இருக்கட்டும், நான் உனக்குக் கட்டுப்பட்டவள் என்பதை மறந்துவிடாதே கண்ணா”

அவள் கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்து அவள் கூந்தலை சரி செய்தபடி கேட்டான் கண்ணன் .

“ஆண்டாளே, ஏன் மழைக்கால எருக்கை இலையினைச் சொன்னாய்?

அப்படி நான் உன்னை அடையாமல் வீணாகப் போய்விடுவேனோ என அஞ்சி சொன்னேன், விதி எனும் மழை என்னை அப்படி அடித்துச் செல்லுமோ என அஞ்சினேன்.

சொன்னவள் அவனை ஏறிட்டு பார்த்துப் புன்னகைத்தாள், அவன் என்ன என்பது போல் கண்டான்.

ஒரு மெல்லிய சிரிப்புடன் சொன்னாள், “மகாபாரத போரில் பீஷ்மர் அவர் செய்த தவறுக்காக கண்கள், கால் கைகளெல்லாம் எருக்கை இலை வைத்து மன்னிப்புப் பெற்றார் அல்லவா?, சூரிய வெளிச்சத்தில் ஒருவன் செய்த பாவத்தை எல்லாம் எருக்கை போக்கும் அல்லவா?

அப்படி என் பாவத்தைக் கடைசி காலத்தில் மன்னிக்கமாட்டாயா? பாவமெல்லாம் தீர்ந்து நான் உன்னை அடையமாட்டேனா?, அதைத்தான் பாடினேன்.

நீ அப்படி என்ன பாவம் செய்தாய் ஆண்டாளே?

கர்மபாவம் இல்லாமலா நான் பிறந்தேன், சாபம் இல்லாமலா இப்படி உன்னை நினைந்து கதறிக்கொண்டிருக்கின்றேன், மானிடப் பிறப்பே சாபம் அல்லவா கண்ணா, அந்தச் சாபம் தீரத்தானே இந்த அவல வாழ்வு.

அந்தச் சாபத்தை தீர்த்து என்னை ஏற்றுக்கொள் கண்ணா, என் கர்மமெல்லாம் தீர்த்து என்னை உன்னோடு ஏற்றுக்கொள் கண்ணா.

அந்த மேகம் தன் கடமை முடித்து விண்ணோடு கலந்துவிடுதல் போல் சாபம் தீர்ந்த நானும் உன்னோடு கலந்துவிடுகின்றேன், இந்த உடல் வேண்டாம் இந்தச் சாபமிக்க வாழ்வு வேண்டாம், இந்த உலகம் வேண்டாம் நீ போதும் நீ மட்டும் போதும், உன் காலடி போதும்.

என் நிம்மதி, என் வாழ்வு, என் ஏக்கம், என் எதிர்காலம் நான் தேடும் பூரணம் என எல்லாமும் அதுதான், அதை எனக்குக் கொடுத்துவிடு.

அதைத்தான் கேட்டேன் கண்ணா, இதைத்தான் இந்த வரத்தைத்தான் இப்படிக் கேட்டேன் கண்ணா, இதை அருள்வதில் உனக்கேன் தாமதம் சொல்”

சொன்னவள் ‘ஓ’ என அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.

கண்ணன் சொன்னான் “காத்திரு கண்ணே, இதே போல ஒரு ஆலய சந்நிதியில் நான் உன்னை ஏற்றுக்கொள்வேன்.

அது என் அறிவுக்குத் தெரிகின்றது, பாழும் மனதிற்குத்தான் தெரியவில்லை கண்ணா.

உன் மனமே நான் என்றானபின் கலக்கம் ஏன் ஆண்டாளே”

அவள் புரியாமல் அவனைக் கண்டாள் “என் மனமெல்லாம் நீ என்றால் உன் மனமெல்லாம் நானல்லவா இருத்தல் வேண்டும், பின் ஏன் குழப்பம்?” என்றான்.

அவள் அவனைத் ஆசைதீரக் கட்டிக்கொண்டாள், அவன் அவள் மடியில் தலைசாய்ந்து கொண்டான், அந்தச் சிலிர்ப்பில் அப்படியே தன்னை மறந்து போனாள், பெரிய மேகம் அவர்களை மூடிற்று.

கண் திறக்கும் போது அவள் மடியில் ஒரு ஓலை கிடந்தது, ஆண்டாள் அதைக் கவனமாய்ப் படித்தாள்.

“நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்துரை செய்
மேகத்தை வேங்கடக்கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவரடியார் ஆகுவரே”

ஆண்டாள் அப்படியே உருகிப் போனாள், கண்களில் அந்த ஒலையினை ஒற்றிக்கொண்டு நெகிழ்ந்து போனாள், “கண்ணா..” என்றபடி அவன் சிலையினை நோக்கினாள்.

“எல்லோர்க்கு பொழியும் மேகம் போல், நீ விடுத்த மேகதூது பாடகளைப் பாடுவோர் எல்லார்க்கும் நாம் நலம் அருள்வோம்” என அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான் கண்ணன்.

ஆண்டாள் பூஜைக்குத் தயாராகி பூக்கூடையுடன் ஆலயம் நோக்கிச் சென்றாள், அப்போது கருமேகம் ஒன்று அவள் மேல் மெல்லிய தூறல் இட்டது, அந்த மேகம் எது என அறிந்தவள் சிலிர்ப்பும் சிரிப்புமாக ஆலயம் நோக்கி விரைந்தாள்.