நாச்சியார் திருமொழி : 70

நாச்சியார் திருமொழி : 70( பாசுரம் 9.1)

ஆண்டாள் கண்ணன் நினைவில் மூழ்கிக் கிடந்தாள், அவன் நினைவு எனும் பெருங்கடலில் நீந்தி தத்தளித்துக் கொண்டிருந்தாள், அவனின் ஆசை முகம் ஒன்றே அவள் மனமெங்கும் வியாபித்திருந்தது.

வழக்கம்போல் அதிகாலை பூஜை முடித்து குங்குமம் சூட எடுத்தவள் அதனையே உற்றுப் பார்த்துப் புன்னகைத்தாள், “எனக்கு இதனை திலகமாய் இட எப்போது வருவாய் கண்ணா?” எனக் கேட்டுக்கொண்டவள் வழக்கம் போல் குங்குமத்தைக் கண்ணன் காலடியில் இட்டு பின் தன் நெற்றியால் ஒற்றித் தலையினைக் கீழ் இழுத்துக் கோவில் வடிவில் நீண்ட கோடாக இட்டுக் கொண்டாள்.

அவன் நினைவிலே எழுந்து வந்தவள் ஆச்சியர் தயிர்க்கடைந்து வெண்ணெய் எடுப்பதைகா கண்டாள், அதனையும் புன்னகையாகக் கடந்தவள் தன் வீட்டின் பின் பக்கமாய்க் கட்டபாபட்டிருந்த பசுக்களைக் காணச் சென்றாள்.

செந்நிறமாக ஒரு கன்று ஓடிவந்து அவளுடன் விளையாடியது. அதனைத் தழுவிக் கொண்டவள், செந்நிற சிறகுள்ள செம்போத்துப் பறவையினைக் கண்டாள், அது அங்கே படர்ந்திருந்த கோவைகாகொடியின் சிவந்த கனியினைக் கொத்திக் கொண்டிருந்தது.

செந்நிற செம்பருத்தி பூக்கள் அழகாய் அவளை நோக்கிப் புன்னகைத்தது, இன்னும் தொலைவில் அழகான இளஞ்சிவப்பு பூக்கள் தலையாட்டின, கிழக்கே செவ்வானம் அழகாய்த் தெரிந்தது. செந்நிற சிறகுகளைக் கொண்ட பொன்வண்டுகள் ஆங்காங்கே ரீங்காரமிட்டுப் பறந்து கொண்டிருந்தன‌.

அதிகாலை புதுபூக்களின் மணம் சுமந்து வந்த காற்று இன்னும் ஏகாந்தத்தைக் கொடுத்தது, ஆங்காங்கே கத்தும் பசுக்களும் ஆர்ப்பரிக்கும் பறவைகளும் அவளுக்குக் “கண்ணா, கண்ணா” என்பதாகவே கேட்டது, அவன் நினைவு அவளுக்குள் மிக மிக கனத்தது, கனத்த நெஞ்சத்து வார்த்தைகள் வாயில் பாடலாய்க் கசிந்தன‌.

“சிந்துரச் செம்பொடிப் போல் திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திரகோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோள் உடையான் சுழலையில் நின்று உய்துங்கொலோ”

பாடியவள் அவன் நினைவினிலே மயங்கிப் போனாள், கண் திறந்தபோது மலை உச்சியில் நின்று கொண்டிருந்தாள், அழகான மலைசாசரிவுகளில் எல்லா வண்ணத்திலும் பூக்கள் பூத்திருந்தன, பெரிய மேகங்கள் அந்த மலைச் சிகரங்களை வருடியபடி கடந்துகொண்டிருந்தன‌.

செவ்வானம் கிழக்கே மிளிரத்தொடங்கிற்று, சூரிய கதிர்கள் பட்டு மலைமுகடுகள் நிறம் மாறி மின்னத் தொடங்கின, மலைமுகட்டிலே வானவில் தெரிந்ததுபோல் இருந்தது.

ஆண்டாள் குளிர்ந்த காற்று மேனியில்பட சிலிர்த்துக் கொண்டாள், அந்நேரம் மலைசாசரிவில் இருந்து ஒரு மயிலிறகு தென்பட்டது. ஆண்டாள் அதனை உற்றுப்பார்க்க அது மெல்ல மேல் எழுந்தது.

கண்ணா.. என ஓங்கிக் கத்தினாள் ஆண்டாள். அந்தக் குரல் மலை முகடெங்கும் எதிரொலித்தது, அவன் முகத்தைக் கண்டதும் அப்படியே உறைந்தவள் பின் மெல்ல கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அழுகை, கொஞ்சம் விசும்பல், நிறைய புன்னகை என மாறி மாறி பல முகம் காட்டி பின் ஓடிச் சென்று கட்டிக்கொண்டாள்.

ஏதும் பேசாத அவளின் வார்த்தைகளை அவளின் கண்ணீர் பேசிற்று, அதன் பொருள் அறிந்து கேட்டான் கண்ணன்.

அதற்குப் பார்வையிலே பதில் சொன்னாள் ஆண்டாள், ஏக்கமிக்க மனதை வார்த்தைகளை விட கணகள்தான் அழுத்தமாகக் காட்டும்.

செந்தாழம்பூ செடியின் அருகில் அவன் அமர அவளும் அமர்ந்துகொண்டாள், அந்தப் புத்தம் புது செந்தாழம்பூவின் மணம் இனிய உற்சாகத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.

கண்ணன் மெல்லக் கேட்டான் “என்ன பாடினாய் ஆண்டாளே?”

தொலைவில் இளம் வெயிலில் சிவந்து மின்னிய மலைமுகட்டை பார்த்தபடிச் சொன்னாள் ஆண்டாள், “திருமால் இரும் சோலை என நீ இருக்கும் அழகர்மலையினைப் பாடினேன் கண்ணா.

செந்தூரத்தை மலை எங்கும் தூவிவிட்டதைப் போல இந்திரகோபம் எனும் பூச்சிகள் எங்கும் பரவியிருக்கும் திருமால் இரும் சோலையில் அருள்பாலிப்பவனும், மந்தார மலை கொண்டு பாற்கடலை கடைந்து மதுர கொழுஞ்சாறு எடுத்தவனுமான அந்த அழகான தோளை உடைய சுந்தரனின் வலையில் இருந்து தப்புவோமா” என்றேன்.

“அழகர்மலையினை அவ்வளவுக்குக் கவனித்திரக்கின்றாயா ஆண்டாளே?

பாண்டிய நாட்டுக்காரிக்கு அதைவிட என்ன உண்டு கண்ணா, பாண்டிய நாட்டின் பதிகளில் முதன்மையானதும் பழமையானதும் அது அல்லவா?

அதென்ன கண்ணே இந்திர கோபம்?

கண்ணா உனக்குத் தெரியாததா? அது பட்டுப்பூச்சி, மழைக்காலத்தில் வரும் மிருதுவான அழகான மேனி கொண்ட பூச்சி கண்ணா, அது அம்மலையில் உண்டு அல்லவா? அதைப் பாடினேன்.

ம்ம்.. கண்ணே அதென்ன மதுர கொழுஞ்சாறு?

அமிர்தம் கண்ணா, பாற்கடலை நீ இன்றி கடைந்திருக்க முடியுமா? இல்லை கடைந்து அமுதமெடுத்துத்தான் நீ இல்லாமல் அது தேவர்களுக்குக் கிடைத்திருக்குமா சொல்?, அதைத்தான் பாடினேன்”

சொன்னவள் ஏக்கமாக கண்ணனைக் கண்டாள். அவன் அவளைக் கண்டதும் பார்வையினை நிலம் நோக்கித் திருப்பிக் கொண்டாள்.

அதை அறிந்தும் அறியாதவன் போல் கண்ணன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொன்னான், மெல்ல அவளை அணைத்தபடி சொன்னான்.

“அழகர்கோவில் என்கின்றாய் அமுதம் என்கின்றாய் , ஒன்றும் புரியவில்லையே ஆண்டாளே”

அவள் அவன் தோளில் சாய்ந்து சொன்னாள் “மதுராபுரி என வடக்கேயும் தெற்கேயும் உள்ள நகரம் இரண்டும் உன்னுடையது அல்லவா கண்ணா?

இந்த கூடல்நகரில் நீ கூடலழகர், திருமோகூர், அழகர் மலை என எத்தனை இடங்களில் எழுந்தருளியிருக்கின்றாய், மீனாட்சி திருமணத்தின்போதே நீ இங்கே அமர்ந்திருந்தாய் என்றால் வேறு என்ன நினைக்க முடியும் சொல்?

மதுரை என்றவுடன் உன் நினைவுதான் எனக்கு வரும், அது வடமதுரையா தென் மதுரையா என்பது பின்னர்தான் யோசனைக்கே வரும் கண்ணா..”

மலை உச்சியில் காற்று வேகமாக வீசிற்று, கிழக்கே இருந்து சூரியன் மெல்ல மேல் எழுந்து வந்துகொண்டிருந்தது.

கண்ணன் ஏதோ யோசனையில் இருந்தான், அவள் மெல்லச் சிரித்துச் சொன்னாள், “அமுதம் கிடைத்தவுடன் தேவர்கள் வம்புக்கு வர, அவர்களை அடக்க‌ மோகினி வடிவில் நின்ற கோலம் தானே திருமோகனூர், அதுதானே திருமோகூர் என்றாயிற்று.

அந்த ஆலயத்தில் நீ எவ்வளவு அழகு, அதைவிட சுந்தராஜ பெருமாளாக அழகர்மலையில் அழகு, அப்படியே இவைகளுக்குச் சவால்விடும் படி கூடலழகர் ஆலயத்தில் எவ்வளவு அழகு, தென்மதுரைக்கு அழகு சேர்ப்பதில் உன் அழகுக்கும் தனி இடம் உண்டல்லவா?, அதை விட சொல்ல என்ன உண்டு” என்றவள் அவனுக்கு கைவிரகளை மடக்கி திருஷ்டி கழித்துக் கொண்டாள்.

“இவ்வளவுக்கு என்னைக் கவனித்திருக்கின்றாயா கண்ணே” என்றான் கண்ணன்.

“கண்கள் இருப்பதே உன்னைக் கவனிக்கத்தானே கண்ணா, கண்ணனை ரசிக்காத கண்கள் இருந்தென்ன லாபம்? அவை வெறும் காட்சிதுவாரமாகாதா?

என்னை விட யார் உன்னை மிகுந்து ரசித்துவிடமுடியும், நான் பிறந்து கண் விழித்ததே உன்னைக் கண்டு கண்டு மகிழ்த்தானே”

பெருமூச்சு விட்டபடி கேட்டான் கண்ணன், “அழகர்மலை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?”

“நீ இருக்குமிடம் எது என்றாலும் பிடிக்கும், அதுவும் அழகான கோலம் கொண்ட அந்தத் திருக்கோலம் யாருக்குத்தான் பிடிக்காது.

“அந்த அழகர்மலை வரலாறு என்ன கண்ணா? சுதபமுனிவர் எனும் தெளிந்த ஞானம் கொண்டவர் துர்வாசரிடம் பெற்ற சாபத்தின்படி கோரமான தவளையாகி உன்னை நினைந்து தவமிருந்து தன் சாபம் நீங்கித் தன் வடிவம் பெற்ற இடமல்லவா?

இன்னும் தர்மதேவன் ஒருமுறை கோரவடிவம் பெற்றபொழுது மிக மிக அழகான வடிவாக நின்றிருந்தவனான உன்னைச் சுந்தரராஜன் எனப் புகழப்படும் உன்னை வணங்கி தன் அழகிய வடிவம் பெற்ற இடமல்லவா?

கண்ணா ஒளியில் இருந்துதான் ஒளி தோன்றும், நீரில் இருந்துதான் நீர் தோன்றும், நெருப்பில் இருந்துதான் நெருப்பு வரும், அப்படி அந்தத் தர்மதேவனுக்கு அழகு கொடுத்த அழகனும் நீ, அந்த மண்டூக முனிக்கு அழகும் வடிவமும் கொடுத்த அழகின் மொத்த சொரூபமும் நீ கண்ணா..”

ஏதோ யோசனையில் இருந்த கண்ணன் கேட்டான் “அங்கு ஏன் அமிர்தம் கடைந்த காட்சி கண்ணே?”

அவள் சற்று விலகி தன் தலைமுடியினைச் சரி செய்து அவனைத் தன் சரிந்த விழிகளால் பார்த்தபடிச் சொன்னாள்.

“கண்ணா, பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தது புராணச் சம்பவம், அங்கே நீதான் மலையினைத் தாங்கும் மச்சமாக வந்தாய், எல்லாம் உன்னால்தான் நடந்தது, மந்தார மலையினை ஆமை வடிவில் வந்து நீதான் தாங்கினாய், நீ இல்லாவிட்டால் ஏது அமிர்தம்?

அது வெறும் புராணமல்ல, பெரும் தத்துவம் அங்கேதான் உண்டு. ஆமைபோல் மனதினை ஐம்புலனை உன்னில் அடக்கி , உன்னை ஆதாரமாகக் கொண்டு மனதை அடக்கிக் கடைந்தால், மனமெனும் கடலைக் கடைந்தால் யோகநிலை எனும் பெரும் அமிர்தம் கிடைக்குமல்லவா? யோகியர் சொன்ன அமிர்ந்த நிலை கிடைக்குமல்லவா?

அந்த அமிர்தம் ஆத்ம அழகை கொடுக்கும், அந்த ஆத்ம அழகை உன்னில் நீ காட்டும் தலம் அழகர் மலை, ஆத்மாவின் பரிபூரண அழகைச் சொல்லும் காட்சி அது.

மானிட ஆத்மா உன் அழகைப் பெறும். அதாவது இருளடைந்து கிடக்கும் ஜீவாத்மா, பரமாத்மா அருளைக் கண்டால் அதே ஜொலிப்பினைப் பெறும் அல்லவா?

சூரியனின் ஒளிபட்ட எல்லாமும் ஒளிர்தல் போல உன் கருணைபட்ட எல்லாமும் ஞானத்தால் பூரணமாக ஜொலிக்கும் அல்லவா? அதைத்தான் பாடினேன் கண்ணா..” என்றாள்.

“கண்ணே, அங்கே நான் வலை பின்னினேன் என்றாயே? என்ன வலை?” என்றான் கண்ணன்.

அவள் தன் சிறிய உதடுகளால் மெல்லச் சிரித்துச் சொன்னாள். “கண்ணா, அந்த மலை வேடுவர்கள் வாழும் மலை, வலைவிரித்து விலங்குகளைப் பிடிப்பவர் வாழும் மலை, நீ ஆத்மாக்களைப் பிடிக்க வலையோடு வந்தவன் அல்லவா?, ஆனால் உன் கருணை இருந்தால்தான் அதில் விழமுடியும், அதைத்தான் சொன்னேன்” என்றாள்.

கண்ணன் அவள் கைகளைப் பற்றி தன்னோடு வைத்துக் கொண்டு மெல்ல அவன் முகம் பார்த்தாள் அதில் மெல்லிய நாணம் நாணல் போல் அசைந்தது.

கண்ணன் அவள் விரல்களை மெல்ல வருடியபடி புன்னகைத்தான், “ஏன் கண்ணா?” என்றாள் ஆண்டாள்.

“ஆண்டாளே, நீ சொன்ன பட்டுப்பூச்சி இதனைவிடவா மென்மையானது, ஆனாலும் எத்தனையோ பூச்சிகள் அங்கிருக்க அதை ஏன் பாடினாய் கண்ணே?”

அவள் நாணத்தால் முகத்தைத் திருப்பிச் சொன்னாள்.

‘இந்தப் பூச்சி பற்றி நிறைய செய்தி உண்டு கண்ணா, இதனை மாந்திரீகத்தில் சேர்த்துச் செய்யப்படும் பொருளுக்குக் கணவன் மனைவி இடையே பெரும் பந்தம் ஏற்படுத்தும் சக்தி உண்டாம், அவர்கள் அதன்பின் பிரியவே மாட்டார்களாம்.

சைவர்கள் ஒரு கதை சொல்வார்கள், சிவனும் பார்வதியும் மகிழ்ந்திருந்தபோது பார்வதி மடித்துக் கொடுத்த தாம்பூலத்தினைச் சிவன் துப்பும்போது வந்த பூச்சிகளாம் இவை, அதாவது இன்ப வாழ்வின் அன்பின் பிணைப்பின் அடையாளமாம்.

நானும் உன்னோடு பின்னிப் பிணைந்திருக்க வேண்டும், எப்போதும் உன்னைவிட்டு அகலாதிருக்க வேண்டும், பிரிக்கவே முடியாத ஒரு பந்தத்தை நமக்குள் கொண்டிருக்க வேண்டும், அசைக்கமுடியாத அன்பின் கட்டு நமக்குள் இருக்கவேண்டும், அதைத்தான் சொல்லி சூசகமாகப் பாடினேன் கண்ணா”

கண்ணன் அவளை மார்போடு அணைத்துக் கொண்டான், அந்த அரவணைப்பில் அவள் சொன்னாள்.

“கண்ணா, நீ பாலுக்குள் நெய் போல் மனதில் மறைந்திருக்கின்றாய், பாற்கடலில் அமுதம் போல் ஒளிந்திருகின்றாய், பால் பாடுகள் பல பட்டு தயிராக்கிக் கடையப்பட்டு வெண்ணெயாகி பின் நெய்யாகி வருதல் போல மனம் பெரும் பெரும் பக்குவங்களைத் தாண்டி வரும்போது உன்னை உணரலாம்.

பால் என்பது நெய்யாக மாறி தீபமாவது போல, உன்னை அடையும் மனமும் உடலும் ஜோதி பிழம்பாக எரியும். பக்தியின் உச்சியில் ஆன்மா பக்குவம்பெற்று ஒளிரும்போது உடலே ஒளிரும்.

அந்த ஜோதி வடிவ அழகு தான் சுந்தரராஜபெருமாளாய் அழகர் மலையில் தெரியும். உன் உருவில் தெரியும், அலங்கோலமான ஆன்மா உன் கருணையால் அழகாகும், இருளடைந்த ஆன்மா உன் அருளால் ஜோதியாக ஒளிரும்.

ஆன்மாவுக்கு அழகும் ஜோதியும் தருபவன் நீ, கண்ணா என் ஆன்மா உனக்காக ஏங்குகின்றது.

மானிட சாதியில் சிக்கிவிட்ட இந்த ஆத்மா தேவலோக அழகுக்கும் ஜோதிக்கும் ஏங்குகின்றது, அதை எனக்குக் கொடு, தர்ம தேவனுக்கும் மாண்டூக முனிக்கும் அருளியதைப் போல எனக்கும் அருள் செய்.

அமுதம் கொடுத்துத் தேவரைக் காத்தது போல் இந்த ஆத்துமத்தையும் மாயைகளிடம் இருந்து காத்துவா, மோஹினி வடிவில் அழகுற நின்று எல்லோரையும் காத்தவனே, இந்த ஆத்துமத்தையும் உன்னோடு சேர்த்துக் கொள்.

மோகனம் என்பது என்ன கண்ணா, அப்படியே காண்போரை ஒருமனப்பட்ட நிலைக்கு வேறேதும் சிந்திக்காத மனநிலைக்கு, கண்டதை அப்படியே பார்த்து மலைத்து நிற்கும் ஒரு மோனநிலைக்கு, மனம் ஒன்றையே பற்றி நிற்கும் நிலைக்குக் கொண்டு செல்வது, செயலற்று நினைவற்று நிற்பது.

அதுதான் மோகினி அவதாரமாய் நீ திருமோகூரில் செய்தாய், சுந்தரராஜ பெருமாளாய் நீ அழகர்கோவிலில் செய்தாய்.

நான் எப்போதும் உன் நினைவில் உன் மயக்கத்தில்தான் வாழ்கின்றேன், என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் உன் நினைவில்தான் மயங்கிக் கிடக்கின்றேன், செயலற்று நினைவற்று சிந்தையற்று உன் ஒருவன் நினைப்பிலேதான் வாழ்கின்றேன்.

கண்ணா, அசுரர்களுக்கு மோஹினி அவதாரம் காட்டி ஏமாற்றியதை போல் என்னை ஏமாற்றிவிடாதே, அவர்களை வஞ்சித்தது போல் என்னை வஞ்சித்துவிடாதே.

நான் உன் வசீகரத்திலும் அழகிலும் கட்டுப்பட்டு கிடப்பவள், அப்படியே உருகி மயங்கிகிடப்பவள், காரணமே தெரியாமல் உன்னைக் கண்டு சொக்கி நிற்பவள், என்னை வஞ்சித்துவிடாதே, உன் நினைவால் செயலற்று, பேச்சற்று, சிந்தனையற்று நிற்கும் என்னை ஏமாற்றிவிடாதே.

கண்ணா, நான் ஒரு சிலையாக ஆவது உன் கோவிலில் இருந்துவிட்டு போகின்றேன், உயிரற்ற சிலை போலவாவது என்னை உன் கண்முன் நிறுத்து.

நீ பேசவேண்டாம், பழகவேண்டாம் உன் அருகே என்னை இருத்தவேண்டாம், ஆனால் உன் கண்பார்வை ஒன்றுபோதும் அது என் மேல் விழுந்தால் போதும்.

கண்ணா, நீ எனக்கு அந்த வரத்தைக் கொடு, உன் நினைவாய் நிற்கும் என்னை, மோஹினி கோலத்தைக் கண்டவர் போல் மயங்கி அறிவற்று உணர்வற்று நிற்கும் என்னை உன்னோடு சேர்த்துக்கொள், என்னை ஏமாற்றிவிடாதே, கல்லென கடந்து சென்றுவிடாதே, புல் என மிதித்துக் கடந்தும் விடாதே”

அவள் ஓங்கி கதறினாள், பெரிதாகக் கதறினாள்.

அந்நேரம் பெரும் வெளிச்சம் உருவாயிற்று, அந்த உருவின் நடுவே அந்தச் சுந்தரராஜ பெருமாளின் முழு அழகு கோலம் தங்கமென ஜொலித்தது.

பூமியின் எந்த அழகுக்கும் ஒப்பிடமுடியாதபடி, புராணங்களில் கேள்விப்பட்ட வானலோக அழகையும் தாண்டியபடி, எந்தமொழியின் வார்த்தைகளிலும் விளங்காதபடி, வானம் பூமி என எங்கும் காணமுடியா அற்புத அழகுடன், மின்னும் ஜொலிப்புடன் வசீகர சிரிப்புடன் தோளில் மாலை, தலையில் கிரீடம் உடலெல்லாம் நகைகள் என மின்னும் தெய்வீக கோலத்தில் அந்த உருவம் அவளை நோக்கிச் சிரித்தது.

அவள் அந்தத் திருக்கோலத்தை கண்டு மெய்மறந்து, செயல் மறந்து, இமைக்க மறந்து, மூச்சுவிடவும் மறந்தவளாய் நின்றிருந்தாள்.

அந்நேரம் “ஆண்டாளே.. வா” எனக் குரல் ஒலித்தது, அவளுக்கு அந்த அழகான உருவம் தன்னை அழைப்பது தெரிந்தது, ஆனால் அவளால் கால் எடுத்து வைக்க முடியவில்லை.

சிரித்தபடி “ஆண்டாளே வா” என அக்குரல் மீண்டும் ஒலித்தது, அந்த உருவம் கைகளை நீட்டி அழைத்தது, ஆனால் ஆண்டாளோ மந்திரத்தால் கட்டுண்டவள் போல் தடுமாறினாள். அவளால் செல்ல முடியவில்லை.

“கண்ணா…” என அவள் தன் இயலாமையில் கத்த, அந்த உருவம் அவளை நோக்கி வந்தது.

அவள் மகிழ்ச்சியில் கண்ணா எனக் கைநீட்டினாள், அந்த உருவம் நெருங்கிற்று.

பிரகாசமான ஜோதியில் வசீகர மந்தகாச புன்னனையுடன் அந்த உருவம் அவளை இன்னும் நெருங்கிற்று.

கண்ணா என அவள் கைகளை நீட்டினாள், ஆனந்தமாய் நீட்டினாள் அத்தோடு அந்த உருவம் மறைந்தது.

கண்விழித்தபோது அவள் வீட்டில் கண்ணன் சிலைமுன் அமர்ந்திருந்தாள், ஆண்டாள் நடந்ததை எல்லாம் நினைத்துப் புன்னகைத்தாள், நேரமானதால் கோவிலுக்குச் செல்லத் தயாரானாள்.

கோவிலுக்குக் கொண்டு செல்லப் பூக்களை பறிக்கக் கிளம்பினாள், நந்தவனத்தை அடைந்தபோது தரையில் சில பட்டுப்பூச்சிகள் ஊர்ந்து செல்லக் கண்டு புன்னகைத்தாள், அந்நேரம் ஒரு மாயக்கரம் அவள் கரங்களை மெல்ல வருடிச் சென்றது.

அவள் சிலிர்த்து சிரித்தபடி பூக்களைப் பறிக்கத் தொடங்கினாள், வீட்டில் தயிர்க்கடையும் ஒலியும் வெண்ணை திரளும் போது வரும் அந்த மாறுபட்ட ஒலியும் மாறி மாறி கேட்கத் தொடங்கியிருந்தன.