நாச்சியார் திருமொழி : 71

நாச்சியார் திருமொழி : 71 ( பாசுரம் 9.2)

அடைமழையாய் ஆண்டாள் மனதில் கண்ணன் நினைவு கொட்டிக் கொண்டிருந்தது. உள்ளூர அது சிலிர்ப்பைக் கொடுத்தது. சிலிர்ப்பு ஏக்கமுமானது, அந்த ஏக்கத்தில் பெரும் மழையில் ஒடுங்கும் சிறு பறவையென அவள் அவன் நினைவால் ஒடுங்கியவள் அந்த நந்தவனத்தில் அமர்ந்திருந்தாள்.

பூஜைக்காக மலர்பறிக்க வந்தவள் வேலியோரம் கொடியில் கிடந்த முல்லை கொடியினைக் கண்டாள், மெல்ல வரிசையாக மெல்ல விரிந்த முல்லைகளைக் கண்டாள். அது அவளை நோக்கிப் புன்னகைத்தன, இன்னும் சில அழகான பூக்கள் மலர்ந்திருந்தன‌.

புத்தம் புதிய அப்பூக்கள் காலை நேர மெல்லிய காற்றில் இலைகளோடு ஆடியது, அது கரம் அசைத்து அவளை நோக்கிச் சிரிப்பது போல் இருந்தது.

சற்றுத் தள்ளி இரு பெரிய எருதுகள் ஒன்றுக்கொன்று வாலை உயர்த்தியபடி மோதிக் கொண்டிருந்தன, அவற்றைக் கண்ட ஆண்டாள் தன்னை மறந்து பாடினாள்.

நறுமணமிக்க மல்லிகையிகையின் கொத்து ஒன்றை எடுத்து கையில் வைத்துக் கொண்டவள், அந்த நறுமணத்தில் பெருமூச்செடுத்தவள் அப்படியே அவன் நினைவில் அமர்ந்தும் கொண்டாள்.

“போர்க் களிறு பொரும் மாலிருஞ்சோலையம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கிடுகோ? தோழீ! அவன் தார் செய்த பூசலையே”

கண்விழித்தபோது அவள் ஒரு மாடத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்தாள், பெரிய நதி ஒன்று வளைந்தும் நெளிந்தும் ஓடிக்கொண்டிருந்தது, அதன் கரையின் நகரில் பெரும் ஆலயங்கள் இருந்தன, ஆங்காங்கே மலைகள் நாக வடிவம், பசுவடிவம், காளை வடிவில் இருந்தன‌.

ஆண்டாள் அந்தக் காளை வடிவ மலையினை நோக்கி நின்று கொண்டு புன்னகைத்தாள், மனதுக்குள் அவள் ஏதோ நினைந்த நேரம் அவள் தலையில் யாரோ எதையோ சூட்டுவதைப் போல் இருந்தது.

பின் தலையினைத் தொட்டுப் பார்த்தவள், அந்தக் கரத்தைப் பிடித்துத் கொண்டு “என்ன செய்கின்றாய் கண்ணா?” எனச் சிரித்தபடி கேட்டாள்.

“எப்படிக் கண்ணே, திரும்பிப் பார்க்காமலே நான் எனச் சொல்கின்றாய் ” எனப் புன்னகைத்தான் கண்ணன்.

அவன் புன்னகையினைக் கண்டவள் உற்றுப் புன்னகைத்துச் சொன்னாள், “வேறு யார் எனக்கு மலர்சூட்ட முடியும்?” என்றவள் தன் காதோரம் கம்மல் ஆடத் திரும்பிக் கேட்டாள்.

“என்ன இன்று மலரெல்லாம் சூட்டுகின்றாய் கண்ணா..”

“நீதான் முல்லை மலர் என்றாய், படா கொடி மலர் எனப் பாடினாய், அதனால்தான்….” என இழுத்தான் கண்ணன்.

அவன் கைகளைப் பிடித்துத் தலையில் வைத்து அழுத்தமாக அந்த மலரை சூட்டச் சொன்னாள் ஆண்டாள், சூட்டிய கண்ணன் அவள் முகத்தை திரும்பிப் பார்த்தான், பின் பக்கவாட்டில் கண்டான், மறுபடி தலையினைத் திருப்பி பின்னால் பார்த்தான், சிறிய அலங்காரம் செய்தான் மறுபடி அவள் முகத்தைக் கண்டான்.

இலைகளுடன் கூடிய மலர்களைப் பின் தலையில் சூடிய அவள் முகம் மூச்சுவிடும் மலர் போலவே இருந்தது. கண்ணன் மகிழ்ந்து கொண்டான்.

அப்படியே அவளோடு அந்த நகரத்தை நோக்கினான், அவளும் அவனோடு நோக்கிக் கொண்டிருந்தாள், அவள் தீவிரமாக அந்த நகரை நோக்குவதையும் பின் அவனைக் காண்பதையும் அவன் தோளில் சாய்ந்தபடி சிந்திப்பதையும் கண்டவன் கேட்டான்.

“ஆண்டாளே., என்ன யோசிக்கின்றாய்?”

அவள் சொன்னாள், “கண்ணா, உனக்குப் பிடித்த இடங்களில் வடமதுரையும் இந்தத் தென்மதுரையும் முக்கியமானதல்லவா? இங்கு நீ எப்போதோ வந்து குடிகொண்டாய் அல்லவா?

அந்த அழகர்மலையின் வரலாற்றினைப் புராணங்கள் சொல்கின்றன, வராக புராணம் முதல் எல்லாமும் சொல்கின்றன. வியாசரின் சீடர் சூத முனி சொல்கின்றார், இந்த மதுராபுரியின் மன்னன் நீ, இந்த மதுராபுரிக்கு காவலாகவும் தொடக்கமாகவும் இருப்பது அந்த மலை.

அதனை “விருஷாபாத்ரி மஹாத்மியம்” என சூத முனி எழுதி வைத்தார், அதில் உன் பெருமை எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன”
என்றவள் பெருமூச்சு விட்டுக் கொண்டாள், பின் தொடர்ந்தாள்.

“அந்த மலை சக்திவாய்ந்தது. சிப்பியில் இருக்கும் முத்து போலவும் வடிவம் கொண்டது, மதுரைக்கு முத்து எக்காலமும் பெருமை என்பது அதன் வடிவில் இருந்துதான் வந்தது.

அந்த அழகான மலையில் வீற்றிருப்பதால் நீ அழகர் என்றானாய், உனக்குக் கூடல் எனும் மதுராபுரியிலும் கோவில் கட்டி கூடல் அழகர் என்றானாய், எல்லார் மனதையும் களவாடியதால் கள்ளழகர் என்றுமானாய்.

அந்த மலையில் நீ செய்த அதிசயம்தான் என்ன? ஒன்றா இரண்டா கண்ணா..

அங்கேதான் நீ தர்மதேவன் சாபம் போக்கினாய், மண்டூக முனிவர்க்கு நலம் கொடுத்தாய், வாமனனாய் வந்து விண்ணதிர நீ எழும்பி கால் தூக்கி நின்றபோது உன் காலை அந்த மகாபலி கழுவினான், அந்தத் துளிகளில் உருவான ஆறு, உன் பாத சிலம்பில் உருவான ஆறு அங்குச் சிலம்பாறாய் ஓடுகின்றது.

அது எல்லாச் சாபத்தையும் நீக்குமே கண்ணா.

அப்படித்தானே கங்கைக்குப் பறந்து அலைந்த மலையத்துவஜ பாண்டியனை, புருவரஸ் வழி வந்த அந்த மலையத்துவஜ பாண்டியன் அனுதினமும் கங்கைக்குச் சென்ற நிலையில் அவனை ஈர்த்து இந்த நதியும் மலையும் இருக்க ஏன் கங்கைக்குச் செல்கின்றாய் எனக் கேட்டாயே நினைவிருக்கின்றதா?

உன்னிடம் வாரிசுக்கு அழுத பாண்டியனே மீனாட்சிக்குத் தந்தையானான், அவள் சிவனை மணமுடித்து இந்த ஊரை ஆளத்தொடங்கினாள், எல்லாவற்றுக்கும் ஆதிகாரணம் நீ அல்லவா”

சொன்னவள் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள், கண்ணன் சொன்னான்.

“ஆம், சந்திரகுல மன்னன் புருவரஸ் இங்கு தன் ஆட்சியினை நிறுவி தன் மகன் இந்திரதுய்மனனுக்கு அரசைக் கொடுத்தான், அந்த இந்திரதுய்மனின் மகன் மலைஜத்துவ பாண்டியனாக இங்கு ஆட்சி செய்யும் போது அகத்தியன் கொடுத்த தேரில் அனுதினமும் கங்கைக்குச் சென்று நீராடி வந்தான்.

ஒருமுறை இந்த மலையினை கடக்கும் போது நான் அவன் விமானத்தை இழுத்து இங்கே வழிபடு போதுமென்றேன், இதையெல்லாம் விருஷாபாத்ரி மஹாமித்யத்தில் முனிவர் எழுதிக் கொண்டார்” எனச் சொல்லிக் கொண்டான்.

அந்த நினைவுகளில் மூழ்கியவள் கேட்டாள், “அப்படியானால் பாண்டியரெல்லாம் உன் பக்தர்களா?”

“அதில் என்ன சந்தேகம், சந்திரகுல பிதாமகன் புருவரஸ் என் பக்தன், அவன் வழி வந்த வம்சம் இது அதனால்தானே இவர்களுக்கும் பாண்டவர்க்குமே ஒரு பந்தம் இருந்தது, அரியும் சிவனும் ஒன்று என உணர்ந்ததால் சிவனில் என்னையும் என்னில் சிவனையும் கண்டவர் பாண்டியர்” என்றான்.

“அதனால்தான் பாண்டிநாட்டவளான எனக்கு உன்மேல் இவ்வளவு காதலா?” என்றாள் ஆண்டாள், கண்ணன் புன்னகைத்து அவளை அணைத்துக் கொண்டான்.

வைகை நதியின் குளிர்க்காற்று அவர்கள் மேல் மோத அவன் கேட்டான் “என்ன பாடினாய் ஆண்டாளே, இரு யானைகள் சண்டை என்றாய் முல்லை கொடி என்றாய்..” என்றான்.

அவள் அந்த மாடத்தில் இருந்து அந்த மலையினைக் காட்டினாள். அது ஒரு பசுவினை எதிர்கொண்ட காளை போல் தெரிந்தது, இன்னொரு பக்கம் பெரும் மலை யானை வடிவில் சரிந்து கிடந்தது.

கண்ணா, எனக்கு யானை காணும் இடமெல்லாம் உன் நினைவு வரும், குவலாயபீடம் எனும் யானையினைக் கொன்றவனும் நீ, ஆதிமூலமே எனக் கதறிய யானையினைக் காத்தவனும் நீ.

இரண்டுமே யானைகள், ஆனால் அகம்பாவம் பிடித்த யானையினை நீ வீழ்த்தியிருகின்றாய், உன்னை நோக்கிக் கதறிய யானையினைக் காப்பாற்றியிருக்கின்றாய்.

அப்படியான நீ அந்த அழகர் மலையில் குடியிருக்கின்றாய், அந்நேரம் அந்த மலை எனக்கும் யானை போல் தெரிந்தது, அந்த மலையில் யானைகள் அடிக்கடி மோதும் என்பார்கள், அந்த மலையில்தான் ராமனாக வந்த நீ அகத்தியனைச் சந்தித்து சில வரங்களைப் பெற்றாய், அதன் பின் ராவணனை வதம் செய்யக் கிளம்பினாய். அங்கே இரு யானைகள் போல் இருவரும் மோதிக்கொண்டீர்கள்.

அதையெல்லாம் நினைந்துதான் பாடினேன், இரு யானைகளுடனும் சண்டையிட்டவன் இருக்கும் அந்த மலையினை நினைந்து பாடினேன்”

கண்ணன் அவளை இடை இறுக்கி அணைத்துக் கொண்டான், அவள் சிலிர்த்துக் கொண்டு நிசப்தமானாள், பின் தொடர்ந்தாள்.

அந்த மலையடிவாரத்தில் முல்லை பூக்கள் நிரம்ப கிடக்கும் கண்ணா, அவைகளை நோக்கும் போது உன் கரியமேனியின் செம்பவள வாய் புன்னகைக்கும் போது தெரியும் அந்த அழகான பற்கள் போலிருக்கும்.

அந்தத் தோற்றத்தைப் பாடினேன் கண்ணா, அந்த மலை அழகு அங்குக் குடியிருகும் நீ அழகன், உன் புன்னகை அதை விட அழகல்லவா?” என்றவள் அவனை நோக்கினாள்.

அவன் அற்புதமான அந்தப் புன்னகையினை வீசினான், அவள் வசீகரிக்கப்பட்டு நாணினாள், அந்த அழகுக்கோலம் தாங்கமுடியாமல் தலைகுனிந்து கொண்டாள், பின் மெல்ல எங்கோ பார்த்தபடி சொன்னாள்.

“அங்குப் படா கொடி படர்ந்திருக்கும், அந்த அழகான பூக்களைக் காணும்போது உன் கழுத்தில் இருக்கும் தார் நினைவுக்கு வரும், அந்தப் படா கொடியின் மலர்களை நான் காணும் போது அவை நீ எங்கே சென்றுவிடுவாய் நிச்சயம் கண்ணன் உன்னை ஆட்கொள்வான், அவனிடமிருந்து தப்பமுடியாது எனச் சொல்லி சிரிப்பது போல் இருக்கும் கண்ணா” என்றாள்.

“படா கொடி என்றால் என்ன கண்ணே” என்றான் கண்ணன்.

“அதனை மருக்காரை என்பார்கள், வெண்ணிற பூக்கள் கொண்ட கொடி அது. மணமிக்கது அந்த மலையோரம் அது அதிகம் படர்ந்திருக்கும்” என்றாள்.

எதையோ யோசித்த கண்ணன் அவள் தலையினைத் தடவிக் கேட்டான் “ஆண்டாளே, இன்னும் பாடினாய் அல்லவா?”

அதுவரை அந்த ஊரின் பெருமையும் கண்ணன் சிறப்பையும் சொல்லிக் கொண்டிருந்தவள் பின் மெல்ல முகம் இறுகினாள்.

அவள் மாற்றம் கண்டு அவன் ‘என்ன ஆண்டாளே?” எனக் கொஞ்சம் பதற்றமானான்.

அவள் வானம் நோக்கினாள், அங்கே சக்கரவாகப் பறவைகள் பறந்து கொண்டிருந்தன , அவற்றை நோக்கியவள் சொன்னாள்.

“இந்தச் சக்கரவாகம் மழையில்தான் நீர் அருந்துமாம், அப்படி உன்னால் மட்டும் உன்னைக் காணும்போது மட்டும் வாழ்பவள் நான், நீ இல்லா நேரமெல்லாம் உன் நினைவுடன் எவ்வளவு போராடுவேன் என்பதை நீ அறியமாட்டாய்.

ஒரு குழந்தைக்கு அதன் வீட்டில் எல்லாமே தாயும் அவளோடு தொடர்புடையதாகவே தோன்றும், எல்லாமும் அவளையே நினைவில் கொண்டுவரும், நீ எனக்கு அதையெல்லாம் விட உயிரானவன்.

உன்னை நான் ஒவொன்றிலும் தேடுகின்றேன் கண்ணா, குயிலின் குரலில், மேகத்தின் கருமையில், சங்கின் ஓசையில் என ஒவ்வொன்றும் எனக்கு உன்னை நினைவுப்படுத்தும்.

காணும் எல்லாவற்றிலும் உன்னைக் காண்கின்றேன், கேட்கும் ஒலியிலெல்லாம் உன் குரல் கேட்கின்றேன், நுகரும் மணத்தில் எல்லாம் கண்ணா என உன் பெயரைச் சொல்கின்றேன்.

இங்கு எல்லாமே உன் நினைவினைக் கூட்டுகின்றன, சந்திரகாந்த கல் சந்திரனைக் கண்டதும் குளிர்ந்து துளிர்ப்பது போல் நான் உன் நினைவால் எதைக் கண்டாலும் குளிர்ந்து போகின்றேன், சூரிய காந்தகல் சூரிய ஒளிபட்டு எரிவதை போல் உன் நினைவில் கொதித்தும் போகின்றேன்.

மயிலிறகைக் காணும் போதெல்லாம் உன் நினைவு மனதில் வருடுகின்றது, எங்கேனும் வாழ்வில் விரக்தியுற்றவன் தத்துவம் பேசினால் கூட உன் கீதை நினைவுக்கு வந்து உன் முகத்தைக் காட்டுகின்றது.

இந்த முல்லை பூக்கள் உன் சிரிப்பை நினைவுபடுத்துகின்றன, அந்தப் படா கொடிகள் காற்றில் ஆடுவது கூட உன் நினைவால் இருக்கும் என்னைக் கேலி செய்வது போல் தெரிகின்றது, இந்த நினைவில் இருந்து நீ எப்படித் தப்புவாய், கண்ணன் நினைவில் இருந்து தப்பவே முடியாது என அவை சொல்வது போல் உள்ளது”

சொன்னவள் அதற்கு மேல் தாளாமல் அவன் தோளில் சாய்ந்து அவனைக் கட்டிக்கொண்டாள், அவன் தோள்களெல்லாம் அவள் கண்ணீரால் ஈரமாயின‌.

அவன் அவள் முகத்தை கையில் ஏந்தி அவள் கண்ணீரைத் துடைத்துக் கேட்டான். “என்னாயிற்று என்று அழுகின்றாய், நான் இருக்க நீ அழலாமா?”

“நீ இருந்தும் உன்னோடு சேரமுடியவில்லை என்றுதானே அழுகின்றேன் கண்ணா, அந்த மலர் மாலை உன் கழுத்துக்கு வருகின்றது, மலராக பிறந்தால் நானும் உன்னை அப்படி அடைந்திருப்பேன். ஆனால் மங்கையாக பிறந்துவிட்டேன், ஒரு மலர் செய்த புண்ணியம் நான் செய்யவில்லையா கண்ணா”

சொன்னவளுக்கு கேவல் இன்னும் அதிகரித்தது கண்ணன் அவளைத் தேற்றினான், “கண்ணே அது பூக்களின் தார்மாலை, ஒரு நாளைக்குத் தாங்காது, அதனுடனா உனக்குப் போட்டி”

அவள் அந்த அழுகையிலும் விரக்தியாய்ச் சொன்னாள், “பூவாக அன்று, அந்த ஆலயத்து கல்லாக நீராக கூரையாக உன்னைச் சுற்றி எல்லாமுமாக ஏன் அந்தச் சிலையின் கல்லாக நானே இருக்கத்தான் ஆசை கண்ணா..
ஆனால் எதுவுமாகவும் இல்லாமல் ஓரமாக நின்று அழமட்டும் முடியுமென்றால் வலிக்கத்தானே செய்யும்” என்றவள் உடைந்து போனாள்.

கண்ணனிடம் பதில் இல்லை, அவள் தொடர்ந்தாள்.

“கண்ணா! அழகர் மலையில் நீ நிற்கும் கோலம் என்ன. கள்வன் என உன்னைச் சொல்வதென்ன, நீ ஆத்மாவினைக் களவாடும் தெய்வம் என்பதால் கள்ளழகர் என்றானாய்.

இந்தப் பூக்கள் போல நானும் உன்னை அடையவேண்டும், மணத்தை உனக்குத் தந்து சருகாகும் மலர்போல் நான் ஆத்மாவினை உனக்குத் தந்து சருகாக வேண்டும்.

கண்ணா! இரு பக்கமும் தொங்கலான தார் எனும் மாலை அணிந்திருப்பாய் நீ, அது வட்டமல்ல அதாவது பிறப்பு தொடரா தத்துவம் அது.

தார் மாலை என்பது உன்னை அடைந்த ஆத்மாவுக்குப் பிறப்பில்லை என்பதைத் தெளிவாகச் சொல்வது, அந்தப் பிறப்பில்லா நிலை எனக்கு நீ தருவாயா. உன்னை அடையும் வரம் தருவாயா?

கூடல் அழகாராய் இருக்கும் உன்னோடு கூடிவிடமாட்டேனா, கள்ளழகராய் நிற்கும் நீ என்னைக் களவாட மாட்டாயா?

கண்ணா! தர்ம தேவனுக்கு ஒளிகொடுத்தது போல் எனக்கும் ஒளி தருவாயா, தவளை முனிக்கு வரம் அருளியது போல் என் மனம் எனும் அறியாத் தவளைக்கு ஞானம் தருவாயா”

என்றவள் அந்த மலையினை உற்றுப் பார்த்துச் சொன்னாள். “கண்ணா! அந்த மலையத்துவஜன் எங்கோ கங்கைக்கு அலையும் போது ஈர்த்துக் கொண்டாயே, அப்படி என்னையும் ஈர்த்துக் கொள்வாயா….ஆதிமூலமே எனக் கதறிய யானைக்கு வந்தது போல் என்னைக் காக்க வருவாயா?

ஒரு நாள் ஒரு பொழுது உன் கழுத்தில் மலராக இருந்துவிடமாட்டேனா….”

சொன்னவள் ‘ஓ’ என அழுதாள், அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள், ஏங்கி ஏங்கி அழுதாள், வைகைக்குப் போட்டியாக கண்ணில் நீர் விட்டு அழுதாள்.

“ஆண்டாளே, இந்த அழகர்மலை இருக்குமட்டும் நீயும் உன் பெயரும் என்னோடு கலந்தே இருக்கும்…” என்றான் கண்ணன்.

அவள் சட்டென நிமிர்ந்து அவன் முகத்தை நோக்கினாள், ஆனால் அவள் வீட்டு பூஜை அறையில் அமர்ந்திருந்தாள். எதிரே கண்ணன் சிலையாகப் புன்னகைத்தான்.

அவள் ஏதோ பாரமாக உணர்ந்து தோளைக் கண்டாள், அங்கே தார் எனும் மாலை சூட்டப்பட்டிருந்தது, அந்த மாலையின் மணம் மிக மிக இனிமையாய் வீரியமாய் இருந்தது.

தன் கழுத்தில் இருந்த தார்மாலையினை கழற்றிக் கண்ணனுக்குச் சூட்டினாள், அந்நேரம் அவனுக்கு அவள் சூட்டிய சிறிய மலர்மாலையினை ஒரு மாயக்கரம் எடுத்து அவளுக்குச் சூட்டிற்று.

தூரத்தில் கோவில் மணி ஓங்கி ஒலிக்கக் கேட்டாள் ஆண்டாள், காய்ந்த பெரும் நிலம் நீரால் நிரம்பியது போல் பெரும் அமைதி அவளுக்குள் வந்தது, “கண்ணா” என மகிழ்ந்து சொன்ளாள் பதிலுக்கு “ஆண்டாளே..” என அவன் சொன்னது அவளுக்கு மட்டும் கேட்டது.