நாச்சியார் திருமொழி : 72

நாச்சியார் திருமொழி : 72 ( பாசுரம் 9.3, 9.4)

காதல் கொண்ட நெஞ்சம் எப்போதும் அதே கனவிலும் தேடலிலும் இருக்கும், ஆண்டாளும் அப்படி சிக்கிக் கொண்டாள். கடலில் நீந்தும் ஓடத்தைக் காற்று இன்னும் அதிகப்படுத்துதல் போல, யாகத்தின் நெருப்பினை நெய் இன்னும் வளர்த்தல் போல கண்ணில் படும் காட்சி காதில் விழும் ஓசைகள் என எல்லாமும் அந்த நினைவினை இன்னும் பெரிதாக்கும்.

ஆண்டாள் அவன் நினைவிலே ஏங்கிக் கொண்டிருந்தாள், கற்பூரம் போல் அவள் மனம் அவனில் கரைந்திருந்தது, எப்போதும் அவன் நினைவில் இருந்தவள் நீர் நிரம்பிய குளத்தருகே சென்று அமர்ந்தாள்.

அங்கே அழகான மலர்கள் பல பூத்துக் குலுங்கின; புத்தம் புது வகை வகையான மலர்கள் அங்கே அழகாக ஆடிக்கொண்டிருந்தன; குளிர்ந்த காற்றில் அவற்றின் நறுமணம் கமழ்ந்திருந்தது, தொலைவில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன; அவற்றிடை கன்றுகள் துள்ளிக் கொண்டிருந்தன‌.

பறவை கூட்டங்கள் மரங்களில் அமர்வதும் எழுவதுமாய் இருந்து வானில் கோலமிட்டுக் கொண்டிருந்தன‌.

தொலைவில் குயில் கூவிக் கொண்டிருந்தது, மயில்கள் அழகான காட்டுப்பூக்கள் இடையே அழகான கொண்டையினை ஆட்டியபடி நீண்ட தோகையுடன் அசைந்து நடந்து கொண்டிருந்தன‌.

ஆண்டாள் அவற்றையெல்லாம் கண்டாள், நீலவானத்தையும் அதிலோடும் கார்மேகத்தையும் கண்டவள் மனதில் விளக்கில் நெய் ஏற்றியது போல் கண்ணன் நினைவுப் பெருகிற்று.

கருவிளை மலர்களும், காயாம்பூக்களும் அவற்றின் கருநீலமும் அவள் மனதில் கண்ணனின் விளக்கை ஏற்றின, உடைந்த குளமாக அவன் நினைவு பெருகி வர பாடினாள், அவற்றைக் கண்டபடி பாடினாள், கண்ணனில் நிறைந்து பாடினாள்.

“கருவிளை ஒண் மலர்காள்! காயா மலர்காள்! திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்கு உய்வழக்கொன்று உரையீர்
திருவிளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே

பைம்பொழில் வாழ் குயில்காள்! மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்! வண்ணப் பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்! அணி மாலிருஞ்சோலை நின்ற
எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே?”

பாடி முடித்தபோது ஒரு அழகான நந்தவனத்தில் அவள் அமர்ந்திருந்தாள், சுற்றிலும் கருவிளை மலர்களும் காயம்பூக்க்களும் நிறைந்திருந்தன, களங்கனிகளும் நிரம்பியிருந்தன‌.

அவற்றினைச் சுற்றி பார்த்தபடியே அவள் அமர்ந்திருக்க, அழகிய மயிலொன்று அவள் அருகே வந்து நின்றது, அவள் அதன் கருநீலக் கழுத்தினைக் கண்டு புன்னகைத்தாள், அது கண்ணின் நிறம் என்பதால் அவளுக்கு ஏகாந்தம் கூடியிருந்தது.

அவள் பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்த மயில் அப்படியே உருமாறியது, அதன் தோகை உயர்ந்து ஒரே ஒரு இறகு மட்டும் உயர நின்று உடல் முழுக்க மாறிற்று

மாறிய உருவம் கண்ணனாய்ப் புன்னகைத்தது.

ஆண்டாள் அதை எதிபார்க்கவில்லை என்பதால் ஒருகணம் திகைத்துப் போனாள், நாணமும் மகிழ்வும் ஒருசேர அவள் முகத்தில் மின்னலாய் வெட்டிற்று., அவன் கண்களை ஏறிட்டு பார்த்தவள் மேற்கொண்டு காணமுடியாமல் முகத்தைத் திருப்பிக் கைகளால் பொத்தியபடி அமர்ந்து கொண்டாள்.

அப்படி அமர்ந்துகொண்டாளே தவிர அவன் தன்னைத் தொட்டு பேசமாட்டானா எனும் ஏக்கம் இருந்தது.

கண்ணன் அவள் தோள் தொட்டு கேட்டான் “ஆண்டாளே”

அந்தக் குரலில் அவள் சொக்கிப்போனாள், அவன் மனம் கிறங்கிப்போனது, பிரபஞ்சத்தின் ஆனந்த ஊற்றுக்கள் அத்தனையும் அவள் காதில் பாய்ந்தது போல் உணர்ந்து மகிழ்ந்தாள்.

அவள் மனதில் ஒரு ஆசை எழுந்தது, அந்த ஆசையினை மனதோடு வழக்கம் போல் மறைத்துக் கொண்டாள், ஆனால் கண்ணன் புன்னகைத்தான், அவன் கையில் ஒரு மலர்க்கட்டு வந்தது.

அப்படியே அவள் தலையில் சூடிவிட்டான், ஆண்டாள் அந்தக் கரத்தைப் பிடித்தபடி திரும்பினாள், மனம் நிரம்பிய மகிழ்ச்சி அவள் கண்ணில் தெரிந்தது, அவள் தன் கரத்தைப் பிடித்த விதத்தில் அந்த அன்பும் அவளின் எதிர்பார்ப்பும் கண்ணனுக்குத் தெரிந்தது.

அவள் கைகளின் மெல்ல கை வைத்தபடி பற்றிக் கொண்டு அவள் அருகில் அமர்ந்த கண்ணன் மெல்லக் கேட்டான்.

“என்ன பாடினாய் கண்ணே?”

அவள் அவன் முகம் கண்டாள். பின் கண்களைத் தாழ்த்தி அவன் மேனி நிறம் கண்டாள், நாணினாள். தொலைவில் தெரியும் நீல மலையினைக் கண்டாள், தலைகுனிந்தபடி அவன் மேல் சாய்ந்து கொண்டு சொன்னாள்.

“எப்போதும் உன் நினைவில் இருக்கும் என்னைச் சில காட்சிகள் அதிகம் நினைக்க வைக்கின்றன, விறகுக்குள் நெருப்பு உண்டு, அது இன்னொரு நெருப்பு பட்டால் வெளிவருவது போல் இவை என்னுள் இருக்கும் உன் நினைவுகளை எரியச் செய்கின்றன கண்ணா.

இந்தக் கருநீல நிறக் காயாம்பூ, கருவிளை மலர் அவற்றில் முக்கியமானது, அந்தக் கருவிளை மலரின் சங்கு வடிவமும் கருநீல நிறமும் உன் நினைவினை அப்படியே மேலெழுப்புகின்றது கண்ணா, அதனால் பாடினேன்” என்றாள்.

கண்ணன் குறும்புச் சிரிப்போடு கேட்டான் “ஆண்டாளே, திரு விளையாடும் மார்பன் என்றாய்..” என இழுத்தான்.

மணமிக்க அழகான மாலை ஆடிக்கொண்டிருந்த அந்த மாலையினைக் கண்டு சொன்னாள்.

“ம்ம்… உனக்குப் பிரியமானவளும் உன் மேல் பிரியமானவளும் விளையாடும் மார்பு இது அல்லவா? அவள் இங்கேதான் வாசம் செய்கின்றாள், நீ அவளை அங்கேதான் வைத்திருக்கின்றாய், அது யாருக்கும் கிடைக்கா இடமல்லவா? பெரும் பாக்கியமல்லவா? அந்த மார்பினை அவளைச் சொல்லாமல் எப்படிச் சொல்வது”

“ஆண்டாளே, என் மேல் அன்புகொண்ட எல்லோரையும் என் நெஞ்சில்தான் வைத்திருக்கின்றேன், அவள் என் ஆதார சக்தி என்பதால் அவளை மட்டும் நீ காண்கின்றாய்” என்றான்.

“நானோ ராமனை அனுமன் சுமந்தது போல் உன்னை மட்டுமே நெஞ்சில் வைத்திருக்கின்றேன் அது உனக்குத் தெரியாதா?” என்றவள் கண்கள் கலங்குவதை அறிந்தவன் பதறி, மெல்ல அவள் தலை கோதியபடிக் கேட்டான் “என்னமோ வழக்கு உள்ளதே? எனப் பாடினாய் என்ன வழக்கு கண்ணே”

அவள் தன் மெலிந்த கைகளைக் காட்டியபடிச் சொன்னாள், “இதோ இந்த வழக்குத்தான், நீ என் மனதில் புகுந்து ஆக்கிரமித்து வாழ்கின்றாய், என் சிந்தையெல்லாம் உன்னைச் சுற்றி சுற்றி வருகின்றது, மனதில் வந்துவிட்ட உன் நினைவால் நான் தேகம் வாடி மெலிந்துபோனேன், அந்த நலிவில் என் கை வளையல் எங்கோ விழுந்துவிட்டது.

அந்த வளையல் விழக் காரணம் யார்? என் மனதில் இருக்கும் நீ அல்லவா? என் மனதை நீ திருடியதால் இது நிகழ்ந்தது என்பதால் நீ தானே திருட்டின் மூலம், அந்த வழக்கைத்தான் உன் நினைவினைக் காட்டிய காயாம்பூக்களிடம் சொன்னேன்” என்றாள்.

கண்ணன் அவள் தலையின் மேல் கைவைத்து மெல்ல ஆட்டினான், அவள் சிரித்தபடி ஆடினாள். அவன் அவளின் மெலிந்த கைகளைப் பிடித்தபடி கேட்டான்.

“ஆண்டாளே, காயாம்பூக்களும் இந்தச் சங்கு பூக்களும் கருநீல நிறத்தில் இருப்பதால்தான் என்னை நினைக்கின்றாய், அவற்றைக் காணும்போதுதான் என்னை நினைக்கின்றாய் இல்லையா?”

அவள் தனக்குள் சிரித்துச் சொன்னாள் “மலர்களில் நான் மல்லிகை என்றவன் நீ, கலைகளில் ஓவியம் என்றவனும் நீ, காலங்களில் நான் வசந்தம் என்றவனும் நீ, கோடி சூரியனுக்கு ஓப்பானவன் நான் என்றவனும் நீ.

வானில் பறக்கும் கருடனிலும் நீ, கடலில் கிடக்கும் மச்சத்திலும் சங்கிலும் நீ, தரையில் ஊரும் நாகத்திலும் நீ, எல்லாமும் நீ.

கண்ணா, பால் கண்டால் பாற்கடல் நினைவு, வெண்ணெய் கண்டால் உன் நினைவு, அவல் முதல் மண் வரை எல்லாமும் உன் நினைவல்லவா? போர் முதல் தத்துவம் வரை நீ இல்லா இடம் ஏது? இந்த வாழ்வில் எதிலிருந்து உன்னைப் பிரித்துப் பார்க்கமுடியும் சொல்?

இந்த வானம், கடல், மலை, மலர், கலை, காலம் என எங்கும் நீ கலந்திருக்கும் போது எல்லாமும் உன்னை நினைவுப்படுத்தும், கண்ணா என் மூச்சிலே கலந்தவனை இவைதான் நினைவுப்படுத்துமா என்ன?

எங்கும் நீ நிறைந்திருந்தாலும் கோவிலில் மனம் உருகுவது போல் உன் அடையாளம் கொண்ட இவைகள் என்னை உருக்குகின்றன”

சொன்னவள் கண்ணை மூடி அவனை இறுகப் பற்றிக்கொண்டாள், அவளை அணைத்துக் களித்த கண்ணன் சில நிமிட மௌனங்களைக் கடந்தான், அந்த நிமிடங்கள் மனம் பேசிக்கொண்ட தருணங்கள், அன்பான இரு இதயங்களிடை மௌனத்தினைப் போல் அன்பினைப் பேசும்மொழி எதுவுமில்லை.

குளிர்ந்த காற்று நறுமணங்கள் சூழ வீசிக் கொண்டிருந்தது, அந்தக் காற்றின் இனிமை தெரியும்படி சூரியன் எழுந்து கொண்டிருந்தது.

குயில் எங்கிருந்தோ தன் இனிய ஓசையில் பாடத் தொடங்கியது.

ஆண் புறாவினைக் கழுத்தோடு தழுவும் பெண்புறா போல் தன் மார்போரம் சரிந்து கிடந்தவளிடம் கேட்டான், “கண்ணே, மயிலே குயிலே என்றாய், ஐம்பெரும் பாதக‌ங்காள் என்றாய் என்ன பாடினாய்”?

அவன் குரலில் கரைந்தவள் அவன் முகத்தை ஆசையாய் தடவிக் கொண்டு அவன் சூடியிருந்த மலர்மாலையின் நறுமணத்தினை உணர்ந்தபடிச் சொன்னாள்.

“குயிலின் கருமை, மயிலின் நிறம் கார்மேகம், கருள்விளம்பூ கார்நீலம், களங்கனி அதே கருநீலம், வண்ணம் பல உடைய பூக்கள் என ஐந்தும் உன்னை நினைவுபடுத்துமல்லவா?” என்றாள்.

அவன் அர்த்தம் புரியாதது போல் அவளைக் கண்களைச் சுருக்கிக் கண்டான்.

“கண்ணா, குயிலின் குரல் இனிது, மயிலின் தோற்றம் இனிது, பூவின் மணம் இனிது, கனியின் சுவை இனிது, செடிமறைத்து நிற்கும் பூக்களின் கதம்ப தோற்றம் இனிது.

செவி, வாய், மூக்கு, கண், மெய் என எல்லாவற்றிலும் எனக்குக் கலந்தவன் நீ, நான் உன் பெருமைகளைக் காதார கேட்கின்றேன், உன் புராணங்களைக் கேட்டு மகிழ்கின்றேன், வாயால் உன் புகழ் பாடுகின்றேன், நான் விடும் மூச்சிலே நீ கலந்திருக்கின்றாய், அந்த மூச்சினை உனக்காக வைத்திருக்கின்றேன்.

நான் கண்ணால் காணும் எல்லாமுமாக இருப்பவன் நீ, இந்த உடலால் நான் செய்யும் திருப்பணி எல்லாம் உனக்காக‌.

கண்ணா, ஐம்புலன்களையும் அடக்கி உன்னை அடையவேண்டும் எனக் கீதையில் போதித்தவன் நீ, நானோ உன்னை அடைய ஐம்புலன்களையும் நீயாகவே மாற்றிவிட்டேன்”

கண்ணனிடம் வார்த்தை இல்லை, பெருமூச்சு ஒன்றே பதிலாக வந்தது, அவனின் கண்களின் நீர் அந்த அமைதிக்கான அர்த்தம் சொன்னது, அவன் கையிலிருந்த புல்லாங்குழலை நழுவவிட்டான்.

அதைப் பதறி எடுத்து அவன் கையில் கொடுத்த ஆண்டாளை கண்டு தன் கண்ணீரை அவன் மறைத்துக் கொண்டான் ஆனாலும் அவளுக்கு அந்தத் துளிர்ப்பு தெரிந்தது.

அவள் அவனுக்கு ஆறுதலாகச் சொன்னாள் “கண்ணா, என்ன சொல்லிவிட்டேன் எனக் கலங்கினாய், கருமை என்பது கர்மத்தின் நிறம் தன் கர்மாவினை விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் கடமையின் நிறம் கருமை.

அதை எமதர்மன் கொண்டிருப்பான், அவன் சகோதரி யமுனா தேவி கொண்டிருப்பாள், வேத பண்டிதர்கள் தங்கள் வேதமே கர்மம் என வாழும் இடம் யம்முபுரம் (ஜம்மு)

தன் கடமையினைச் செய்யும் கார் மேகம் கருமை, செழிப்பான மண் கருமை, பலமான கல்லின் நிறம் கருமை.

கண்ணா! எதெல்லாம் தன் கர்மமோ, எது கர்மத்தைத் தன் தர்மமென்று தாங்குமோ அதெல்லாம் கருமை, மானுடர் தலைமுடி வெப்பத்தை தாங்குவதால் அதுவும் கருமை.

கருப்பு என்பது கர்மத்தின் நிறம், நீ கர்மம் ஒன்றையே போதிப்பவன், அதை ஒவ்வொரு அவதாரத்திலும் போதிப்பவன், கர்மத்தின் உதாரணமாய் வாழ்ந்தும் காட்டியவன்.

யமுனா நதி உனக்குப் பிடித்தமானது என்றால் என்ன அர்த்தம்? அது கர்மத்தின் அடையாளம் நீ கர்மம் செய்ய வந்தவன் என்பதையல்லவா அப்படிக் காட்டினாய்.

கர்மவானான உன் அம்சம் உலகில் எல்லா உயிரிலும் படைப்பிலும் உண்டு, என்னதான் பிரம்மன் உலகைப் படைக்கின்றான் என்றாலும் அவன் உன் நாபியின் தாமரையில் இருந்து வந்தவன் அல்லவா? அப்படியானால் படைப்பின் மூலம் நீதான் அல்லவா?

அந்த மூல கர்மம் நீ என்பது இங்குப் பல இடங்களில் வெளிக் காட்டப்படும், அது நீலவானம் நீலக் கடல், கார் மேகம், கருங்குயில், அழகான மயில் , கருவிளம்பூ, களங்கனி என ஒவ்வொன்றைக் காணும்போது உன் நினைவும் உன் கர்ம தத்துவமும் நினைவுக்கு வரும்.

இதைத்தான் பாடினேன், கண்ணா உன்னை முழுக்க எண்ணி ஐம்புலனை அடக்கி தியானித்தால், அந்த முழு அர்ப்பணிப்பான வாழ்வை உனக்கான கர்மமாகக் கருதி வாழ்ந்தால், கையில் இருந்து கழன்ற வளையல் போல் இந்த உலகில் பிடித்திருக்கும் அனைத்தையும் கைவிட்டு வாழ்ந்தால், உன் நினைவில் வாழ்ந்தால் உன்னை அடையலாம்.

எல்லாவற்றையும் உனக்காக விட்டுவிடும் ஆத்மாவினை, ஐம்புலன் அடக்கிக் கர்மமே நீ என அடைக்கலமாகும் ஆன்மாவினை நீ சேர்த்துக் கொள்வாய், கையில் இருப்பதை உனக்காக இழந்துவிடும் பக்தனை நீ அணைத்துக் கொள்வாய் என்பதைத்தான் பாடினேன்”

அவள் சொல்லிப் புன்னகைத்தாள், அவன் விரக்தியாய்ப் புன்னகைத்துச் சொன்னான், “என்னைப் புரிந்து கொள்ளவும் ஒரு கர்மம் வேண்டும், உனக்கு அது வாய்த்திருக்கின்றது”

அதைக் கேட்டவுடன் ஆண்டாள் முகம் வெயில் கண்ட மலர்போல் மெல்ல வாடிற்று, கண்ணன் அவளை உற்றுப்பார்த்தான் எனினும் அந்த வாட்டத்தை மறைத்துச் சொன்னாள்.

“கண்ணா! உன் வாழ்விலும் அவதாரங்களிலும் எத்தனையோ பெண்கள் வந்தார்கள் அவர்களுக்கெல்லாம் அவரவர் கர்மாவினைச் சரியாகச் செய்தார்கள்.

அதைத் தேவகி, யசோதை கோபியர், பாமா, ருக்மணி, நப்பினை, சீதை, என எல்லாரும் செய்தார்கள், உன்னை நம்பிய பாஞ்சாலியும் அதனால் தன் கர்மாவினைச் செய்தாள்.

ஆனால் நான் மட்டும்… என்னை மட்டும்” என்றவள் மெல்லக் கேவினாள்.

அவன் அவளைப் புரியாமலும் அதற்குப் பதிலுமில்லாமல் அவள் கரங்களைக் கோர்த்துக்கொண்டான்.

அவள் தொடர்ந்தாள் “கண்ணா! நான் உனக்காக மலர் தொடுக்கும் போதெல்லாம் கோபியராகின்றேன், உனக்குப் பிடித்தமானதை எல்லாம் சமைத்துப் படைக்கும் போது யசோதையாகின்றேன்.

யசோதையின் மனநிலையில்தான் உனக்கு ஊட்டி அழகு பார்க்கின்றேன், கோபியர் மனநிலையில் உன்னைப் பாடிப் போற்றுகின்றேன், அந்த நப்பின்னையின் மனம்போல் உன்னை என் அடையாளமாய் பார்க்கின்றேன், பாமா ருக்மணி மனதினைப் போல் எனக்கான ஒருவனாய் உன்னைக் கருதுகின்றேன்.

அசோக வனத்தில் இருந்த சீதை போல் உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன், அந்தப் பாஞ்சாலி போல் உன்னை நம்பிக்கொண்டிருக்கின்றேன்.
ஆனால், நீ என்னை ராதையினைப் போல் ஏங்க வைத்து உன் போக்கில் சென்றுவிடுகின்றாய், நான் அவளைப் போல் காத்துக் கொண்டே இருக்கின்றேன், அவளுடனாவது கோகுலத்தில் சில காலம் பழகிவிட்டுச் சென்றாய், அவள் காத்திருந்ததில் அர்த்தம் இருந்தது, ஆனால் நான்..

நான் என் கர்மம் என அதை நினைந்து காத்தே இருக்கின்றேன், ஆனால் நீ உன் கர்மம் அறிந்தாயே அன்றி என் கர்மம் பற்றி கொஞ்சமும் யோசிப்பதில்லை.

நான் இந்த உலகில் எல்லாவற்றையும் விட்டு உனக்காய்க் காத்திருக்கின்றேன், ஐம்புலனும் நீயாக, மனமும் சிந்தையும் வாழ்வும் கர்மமும் எல்லாமும் நீயாக நானே நீயாகக் காத்திருக்கின்றேன். ஆனால் யசோதைக்குப் பெரும் பெருமை தேடித் தந்தாய், கோபியரை வாழவைத்தான், இன்னும் உன்னை நம்பிய எல்லாப் பெண்களுக்கும் கை கொடுத்து அவர்கள் நம்பிக்கையினை மெய்பித்தாய்.

என்னை மட்டும் ஏன் கண்ணா இப்படித் தள்ளிவைத்து வதைக்கின்றாய், உனக்காக ஏங்கி உனக்காக வாழ்ந்து உன்னையே சுவாசித்து நீயே சகலமுமென வாழும் என்னை ஏன் தள்ளிவைக்கின்றாய்.

கோகுலத்தில் ராதை காத்தே இருந்தாலும் அவளுக்கு இனிமையான பல நினைவுகளைக் கொடுத்துச் சென்றாய், ஒரு அரசனாய் தொலைவில் நின்றாய், இங்கோ எனக்கு நீ பெரிய நினைவுகளும் கொடுத்ததில்லை, எந்த நம்பிக்கையும் தருவதுமில்லை.
ஆனால், யமுனா நதி தன் கர்மத்துக்காய் ஓடுதல் போல் நான் என் வாழ்வில் உன்னைச் சுமந்து ஓடிகொண்டிருக்கின்றேன், எதுவரை வாழ்வேனோ அதுவரை என் வாழ்வு உனக்காகத்தான் இருக்கும், அதன் முடிவிலாவது என் கர்மம் முடியும் போதாவது உன்னோடு சேர்த்துக் கொள்.

மானுட வாழ்வில் இருந்து ,மானுட சமூகத்தில் இருந்து நான் வெகுதூரம் விலகிவிட்டேன், இனி என்னால் அந்த வாழ்வுக்குள் திரும்பிச் செல்லமுடியாது, என்னை கைவிட்டு விடாதே, வசுதேவர் மாளிகையின் பணிபெண்களில் ஒருத்திப் போலாவது என்னை உன்னோடு சேர்த்துக் கொள்”

சொன்னவள் அவன் மார்பில் சாய்ந்து அழுதாள், அவன் வானத்தைப் பார்த்தபடி பெருமூச்சு விட்டு அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டான்.

அவள் இன்னும் ஓங்கி அழுதாள், அவன் அவள் தலையினைக் கோதிவிட்டு காதோரம் ஏதோ சொன்னான்.

அவள் கண்விழித்தபோது திருவில்லிபுத்தூர் ஆலயத் தூணில் சாய்ந்திருந்தாள், இங்கேதான் இருந்தோமா எனக் குழம்பினாள், சுற்றிப் பார்த்தாள் நந்தவனமில்லை, செடிகளில்லை குயில் மயில் காயாம்பூ, கருவிளம்பூ என எதுவுமில்லை.

குழம்பியவள் ஏதோ கனவு என்பது போல் நினைந்து கொண்டாள், அந்நேரம் பூஜைக்கான மணி ஒலித்தது, அவள் ஓடிச் சென்று நாதனைத் தரிசித்தாள்.

காதில் மந்திரம் ஒலிக்க, நாசியில் இனிய நறுமணமும் துளசி வாசனையும் வீச, அவள் உடலெல்லாம் ஆலய சந்நதியின் நல் அதிர்வு சூழ கண்ணா என வாய்விட்டுச் சொன்னாள்.

தீபாரதனையில் பகவானின் முகம் ஜோதியாய் ஜொலிக்க “கண்ணா…” என உருக்கமாய்ச் சொன்னாள்.

ஒரு மாயக்கரம் ஒன்று அப்போது அவளைத் தொட்டது, நெற்றியில் எதையோ அது பூசுவது போலிருந்தது, அது என்ன என நெற்றியினைத் தொட்டுபார்த்தவள் அது குங்குமம் என உணர்ந்தாள்.

காதோரம் ஒரு குரல் “உலகறிய என் சந்நிதியில் இதனை உனக்கு இடுவேன்” என்றது .

மிகுந்த பூரிப்புடன் அந்தச் சந்நிதியில் வணங்கிவிட்டு ஆலயத்தை வலம் வந்து வீடு திரும்பினாள், வழியோரம் சங்குபூக்கள் எனும் காயாம்பூக்கள் அவளை நோக்கிச் சிரித்தன, வானில் கார்மேகங்கள் கூடத் தொடங்கின, அதன் அருகில் கருடன் ஒன்று பறந்து கொண்டிருந்தது.