நாச்சியார் திருமொழி : 74

நாச்சியார் திருமொழி : 74 ( பாசுரம் 9.8, 9.9)

காதல் கொண்ட மனம் கடல் போன்றது அங்கு அலைகள் ஓயாமல் வீசிக்கொண்டே இருக்கும், அந்த அலையில் ஆடும் படகுபோல் ஆண்டாளின் எண்ணங்கள் ஆடிக்கொண்டிருந்தன‌.

அவளுக்கு உண்ண பிடிக்கவில்லை, உறக்கம் சுத்தமாக வரவில்லை, எப்போதும் கண்ணனின் நினைவாக ஏங்கி கொண்டிருந்தவளுக்கு அதிகாலையிலே விழிப்பு வந்தது. ஆனால், அந்த நிசப்தமான அமைதியில் என்ன பொழுது அது என அவளால் அறியமுடியவில்லை.

அப்போது செம்போத்து பறகை “க்கும்ம் க்கும்ம்” என கத்தியது. அதனால் அது சேவல் கூவுவதற்கு முந்தைய பொழுது என அறிந்து கொண்டாள், அதிகாலை விழிக்கும் முதல் பறவை செம்போத்து பறவைதான்.

கருப்பும் சிகப்புமான செம்போத்து பறவையின் உருவம் அவள் கண்ணுக்குள் வந்தபோது கண்ணன் மேனி நிறமும், வாய் நிறமும் வந்துபோனது. அவள் புன்னகைத்தாள். பின் கருங்குருவி ஓசை கேட்டதும் இன்னும் புன்னகைத்தாள்.

கருப்பும் சிகப்புமான சேவல் செந்நிற கொண்டையுடன் கூவ அந்த இருளான அறையில் தனிமையில் அவள் புன்னகைத்து அவன் நினைவாய் சுருண்டு கிடந்தாள்.

பின் எல்லோரும் எழுந்து தயாராக அவளும் எழுந்தாள், பூஜைக்குத் தயாராகும் முன்னால் விடிகாலையில் கொஞ்சநேரம் மாடியின் வெளியில் சென்று அமர்ந்தாள், அதிகாலை குளிர்க்காற்று மெல்ல தழுவிச் செல்ல கீழ்வானம் மெல்ல சிவக்க வானம் நோக்கினாள், அங்கு நட்சதிரமெல்லாம் மறைந்து கொண்டிருந்தன‌.

கன்றுகள் பசுவினை அழைக்கும் ஓசையும், கறவை மாடுகளில் பால் கறக்கும் ஒசையும், ஆச்சியர் குரல்களும், பறவைகளின் குரல்களும் மாறி மாறி ஒலித்தன, தொலைவில் ஆலமரத்தில் குழுமியிருந்த பறவைகளின் ஆரவாரம் மிக அதிகமாய் இருந்தது.

பறவைகள் குரலை மனதில் கண்ணன் நினைவோடு ரசித்தாள் ஆண்டாள், பறவைகள் விலங்குகளைப் போல் ஒரே தொணியில் குரல் எழுப்புவதில்லை, அவைகளின் குரல் அவ்வப்போது பலவிதமாக மாறும், குயில் போன்றவைகளே இராகங்களை பல விதமாக இசைக்கும்.

அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. மகிழ்ச்சி, ஏக்கம், தனிமை, ஆபத்து என அவை மனதின் உணர்வுக்கு குரலின் தொணியினை மாற்றும்.

அப்படி கருங்குருவிகள் தங்களை மறந்து ஆலமரத்தில் இருந்து பாடிக் கொண்டிருந்தன, ஆண்டாள் அந்த அழகான சூழலைக் கண்டாள், சிவந்த கீழ்வானம் மெல்லியதாக கருத்த மேல் வானம், குளிர்க்காற்று, ஆலமரத்தின் பறவைகளின் குரல்கள் எல்லாம் கண்டவள் மனதால் கண்ணனை நினைந்து பாடினாள்.

“காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ?
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே

கோங்கலரும் பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சார்ங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ”

பாடி முடித்தவள் அப்படியே தன்னை மறந்தாள். கண் விழித்தபோது ஆயர்பாடியில் அமர்ந்திருந்தாள். வசுதேவர் மாளிகையில் அவள் நின்றிருந்தாள், கோபியரெல்லாம் இசைக்கருவிகளுடன் அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

கண்ணனின் வருகைக்காக அந்த விஸ்தாரமான கூடத்தில் எல்லோரும் காத்திருந்தார்கள். திடீரென சங்கொலி கேட்டதும் கண்ணண் வருகின்றான் என்பதால் அப்பெண்கள் அவனின் பெருமைகளெல்லாம் சொல்லிப் பாட ஆரம்பித்தார்கள்.

கண்ணன் வழமையான அந்தப் பீதாம்பர ஆடையுடன் கையில் புல்லாங்குழலும் தலையில் மயிலிறகு சூடிய கிரீடத்துடன் அதே புன்னகையுடன் கண்களில் அதே அருளுடன் கம்பீரமாக நடந்து வந்தான்.

அவன் பெருமைகளைப் பாடிக்கொண்டிருந்த கோபியர் அவனை அருகில் கண்டவுடன் ஆனந்தத்தில் மூழ்கினார்கள். அந்த ஆனந்தமே அவர்களுக்கு மயக்கமுமாயிற்று.

அவனை அருகில் கண்டவுடன் அவர்களுக்கு ஆனந்தமும் மயக்கமும் ஒருசேர வந்தது. அந்த பரவசமான நிலையில் என்ன பாடுகின்றோம் எனத் தெரியாமலே பாடினார்கள், உளறினார்கள், ஏதேதோ பிதற்றினார்கள்.

ஆண்டாள் அதைப் பார்த்துக் கொண்டே புன்னகைத்தாள், அப்படியே நடந்து வந்த கண்ணனை நோக்கினாள், அவனும் புன்னகை பூக்க அவளை நோக்கி கைநீட்டினான்.

மறுநொடி யமுனையின் குளிர்ந்த காற்று மோத அந்த மாளிகையின் மாடத்தில் அவள் கண்ணனோடு அமர்ந்திருந்தாள்.

காற்றில் திரைச்சீலைகள் சலசலக்க, ஆங்காங்கே தொங்கவிடப்பட்ட மணிகள் ஒலிக்க, அழகு மலர்களின் வாசனை அக்காற்றில் பெருகி வர அவன் அருகில் அமர்ந்திருந்தாள்.

கண்ணன் மெல்லக் கேட்டான் “என்ன பாடினாய் கண்ணே…”

காற்றில் மயிலிறகு அழகுற அசையும் அவன் முகத்தை கண்களில் காதல் பொங்க பார்த்த ஆண்டாள், அவன் மேனியினைக் கண்டாள், பின் முகத்தை கண்டாள், புன்னகைத்துக் கொண்டாள்.

கொஞ்சம் நாணத்துடன் புன்னகைத்த அவளை நோக்கி கண்ணன் கேட்டான், “என்ன சிரிப்பு கண்ணே?”

மெல்லத் தலையாட்டிச் சொன்னாள் ஆண்டாள், “ஒன்றுமில்லை கண்ணா, அதிகாலையில் செம்போத்து பறவையும் கருங்குருவியும், சேவலும் கூவும் போது அவற்றின் கருநிறமும் கருப்பும் சிவப்பும் கலந்த நிறமும் உன்னை நினைவுப்படுத்திற்று.

அதனால் அந்தப் பறவைகளில் உன்னைக் கண்டேன், அவை ஆலமரத்தில் அமர்ந்திருந்தன. ஆலிழையில் துயில் கொண்ட கோலத்தில் அடியார்க்கு காட்சி அளித்தவன் அல்லவா? அதுவும் நினைவுக்கு வந்தது.

மாமன்னனாக மதுராவில் இருந்து உலகாண்ட நீ, மகா விஸ்வரூபமாக மகாபலி முன் நின்ற நீ, அங்கு ஆலிலையில் அடங்கிக் குழந்தையாய் கிடந்தாய் அல்லவா? அதையெல்லாம் சேர்த்துப் பாடினேன்.

அழகர்மலை எனும் மலையில் நீ அழகராய் நிற்கின்றாய், கடல் நடுவே நிலம் அமைத்துத் துவாரகை அரசனாய் நிற்கின்றாய், ஆற்று நீரில் ஆலிழைமேல் அசைந்தாடுகின்றாய், எல்லா இடத்திலும் எல்லாமும் நீயே இருப்பதை பாடினேன்” என்றாள்.

அவன் அவள் தலையினை மெல்ல தட்டிச் சொன்னான், “எல்லா இடத்திலுமா என்னை காண்கின்றாய்?”

அவள் அவன் கையினைப் பற்றி சொன்னாள், “எனக்கு எல்லாமுமாகவும் உன்னைத்தான் காண்கின்றேன், நீயின்றி எனக்கு என்ன உண்டு?”

அவள் கரங்களை பற்றிக் கொண்டே கேட்டான் கண்ணன் “மருள் பாடுதல்” என்றாயே என்ன ஆண்டாளே.

அவள் முகத்தை திருப்பியபடி மெல்ல அவனைப் பார்த்து மீண்டும் திருப்பியபடி சொன்னாள்.

“மனதுக்கு மிகப் பிடித்தவர், நாம் ஏங்கித் தவிக்கும் ஒருவரை நினைத்தால் வரும் மயக்கத்தில் பாடுவது கண்ணா.

உன்னை என் மனதால் நினைந்து அந்த உன்மத்த நிலையில் பித்து நிலையில் நான் மருள் செய்கின்றேன், அதாவது என் மனதுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லை, என் மனம் நிலையாக உன்னை மட்டும் பற்றிக்கொண்டிருக்க நான் உன்னோடு அங்கு கலந்திருக்க, என் கைகள் என்ன செய்கின்றது வாய் என்ன பேசுகின்றது, என் கால்கள் எங்கே நடக்கின்றது, என் விரல்கள் என்ன செய்கின்றது என்பதே எனக்குத் தெரியவில்லை.

மனதால் ஒருவனுடன் முழுக்கக் கலந்து எண்ணத்துக்கும் சொல்லுக்கும் சம்பந்தமில்லாமல் தன் மனம் மட்டும் அறியும் ஒன்றை பிறர் அறியாமல் பாடுவது மருள் பாடுதல், அனுதினமும் நான் அதனைத்தான் செய்கின்றேன்.

அதிகாலை பறவைகள் உன் கோவில் கோபுரம் கண்டு என்னைப்போல் பாடுகின்றதோ என அவற்றின் புரியாக் குரலை கேட்டு அப்படிப் பாடினேன் கண்ணா”

அவளைத் தோளோடு சேர்த்துக் கொண்டான் கண்ணன். அவள் தொடர்ந்தாள்.

“கண்ணா சிறிய ஆலிலையில் வருபவன் நீ, பெரிய துவாரகையினை ஆள்பவனும் நீ, சாபங்களைப் போக்கும் அழகர்மலை அழகனும் நீ, வாமனனாய் வந்து உலகளந்தவனும் நீ.

இங்கு நீ எல்லாப் பொருளிலும் எல்லாப் படைப்பிலும் இருக்கின்றாய், சிறிய அணுவில் இருந்து இந்த பிரபஞ்சம் வரை இருக்கின்றாய்.

படைப்பி நீ, படைப்புகளின் இயக்கம் நீ, ஞானியரின் ஞானம், மன்னரின் வீரம், அரசனின் ஆட்சி என எல்லாமும் நீ, எல்லாமே உன் வடிவம்.

ஆலிழையில் இந்தப் பிரபஞ்சமே உன்னில் அடக்கம் என்பதை சொன்னாய், மகாபலி முன் விண்ணும் மண்ணும் நான் எனக் காலை தூக்கிச் சொன்னதுபோல் அந்த ஆலிலையிலும் சொன்னாய், எல்லாமும் உன்னில் தொடங்கி உன்னில்தான் முடிகின்றன, எல்லாவற்றுக்கும் தொடக்கமும் முடிவும் நீ.

அப்படியான உன்னுடன் நான் எப்போதும் கலந்திருக்க வேண்டும். இந்தப் பிரபஞ்சம் தோன்றி மறையும் வரை ஒவ்வொரு கணமும் நான் உன்னோடு இருக்கவேண்டும், பிரபஞ்சமே இல்லை என்றாலும் நீ இருப்பாய், உன்னோடு நானும் இருக்க வேண்டும், உன்னில் நானும் எல்லாமுமாக இருக்க வேண்டும் கண்ணா, அதைத்தான் பாடினேன்.

நீயே உலகுக்கு ஆதியும் அந்தமுமானவன், உனக்கு நீ தொடக்கமும் முடிவும் இல்லாதவன். உன்னோடு நான் கலந்தது உன்னோடும் நீயாக இருக்கும் எல்லாவற்றிலும் எக்காலமும் நான் இருக்க வேண்டும் கண்ணா”

சொன்னவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டான் கண்ணன், அவள் சிலிர்த்துக் கொண்டாள், அவன் கேட்டான், “ஏதோ கொன்றை சரம் எனப் பாடினாயே?” என்ன கண்ணே.

அவள் அவன் கையினைத் தன் தோளில் இட்டுகொண்டு சொன்னாள்.

‘கண்ணா, மரத்தில் பூக்கும் எல்லா மலரும் பகவானுக்கு வருவதில்லை, உருக்கப்படும் எல்லா நெய்யும் கோவில் சந்நிதானத்தில் எரிவதில்லை, எல்லாவற்றுக்கும் உன் அனுகிரகம் வேண்டும்.

மானிடர் கைக்கு எட்டும் கொன்றைமலர் அர்ச்சனைக்கு செல்லும், உயர பூத்தமலர் அப்படியே இருந்து சில நாட்களில் வீழ்ந்து வீணாகும்

அப்படி நான் இப்பிறப்பில் உன்னை அடைவேனோ இல்லை வீணாக பிறவி கழிப்பேனோ என கலங்கினேன்” என்றவள் அவன் முகத்தை ஏக்கத்துடன் பார்த்து கொண்டாள்

“கண்ணே அதில் என்ன சங்கின் ஒலி, வில்லின் ஒலி எல்லாம் கேட்டு ஏங்கினாய், புரியவில்லையே?” என்றான் கண்ணன்.

அவனைச் சில நொடிகள் அசையாமல் கண்டவள் அவன் மடியில் ஒரு குழந்தைபோல் பணிந்து சொன்னாள், மீண்டும் ஒரு முறை அவன் முகம் பார்த்துவிட்டுச் சொன்னாள்.

“கண்ணா, அந்த ருக்மணி பிராட்டியாரை சிசுபாலன் திருமணம் செய்வதாக இருந்தது, அவனும் மிரட்டலில் இறங்கி அவரைக் கடத்தத் துணிந்தான், அதனால் அஞ்சிய பிராட்டியார் மனமுடைந்து சாகத் துணிந்தபோது அவர்களை மீட்க வந்த நீ சங்கெடுத்து ஊதினாய், உன் சங்கநாதம் கேட்டதுமே ருக்மணி பிராட்டியார் மனம் உற்சாகமாகி ஓடி வந்தார்கள், நீயும் சிசுபாலனை விரட்டி அவர்களை ஏற்றுக்கொண்டாய்.

சீதையினை ராவணன் கடத்திச் சென்றபோது தேவி மனம் ஒடிந்து போனார், உன் வில்லின் ஓசை கேட்டபோதுதான் உயிர்க்கொண்டார், நீயும் அவரை மீட்டுச் சென்றாய்.

ருக்மணிக்காக ஒலித்த பாஞ்ஜசன்யம் எனக்காக ஒலிக்காதா, சீதைக்காக ஒலித்த அந்த வில் எனக்காக ஒலிக்காதா?

சொன்னவள் அவனைத் தலை நிமிர்ந்து பார்த்தாள், அவள் முகம் இறுகியிருந்தது , அவள் தொடர்ந்தாள்.

“கண்ணா, நான் மாயச்சிறையில் அடைபட்டிருக்கின்றேன், மாயை என்னை இப்பிறவியில் பிடித்து வைத்திருகின்றது, அந்தச் சிறையில் இருந்து என்னை மீட்டெடுத்து உன்னோடு சேர்த்துக் கொள்.

சிசுபாலன், ராவணன் என லௌகீக அரக்க ஆசையில் இருந்து என்னை மீட்டெடுத்துக் காத்துக் கொள். மாயப்பிறப்பில் சிக்கிவிட்ட நான் வேறு என்ன சொல்லி உன்னிடம் அழமுடியும், கதறமுடியும் என்னை ஏற்றுக்கொள்.

கண்ணா, நான் பேசுவதும் கேட்பதும் இந்த உலகுக்கு மருள் பாடுதல் போல் இருக்கலாம், உன்மத்த நிலைபோல் தெரியலாம், உலகுக்கெல்லாம் நான் அப்படித்தான் தெரிகின்றேன்.

நான் உன்மேல் பித்தாகிப் பிதற்றித் திரிவது அவர்களின் லௌகீகக் கண்ணுக்குத் தெரியாது, நான் உன்னில் மயங்கி மருள்பாடுவது அவர்களுக்குப் பைத்தியகார நிலை போல் தோன்றலாம், என்னைப் பரிகசிக்கலாம்.

ஆனால், எல்லாம் அறிந்த உனக்கு என் மனம் தெரியுமல்லவா? நான் உன்னையே எண்ணி எல்லாவற்றிலும் உன்னையே கண்டு, பறவை மரம் இலை செடி கொடி ஆகாயம் கடல் மேகம் என எல்லாவற்றிலும் உன்னையே கண்டு, காணும் காணாதவை என எல்லாவற்றிலும் உன்னையே எண்ணி உன்னில் வாழ்ந்து உன்னில் இயங்கும் என்னை உனக்குப் புரியாதா?

என்னை உயர்ந்த மரத்தின் மலர்போல் வாடவிடாதே, என்னை இப்பிறப்பில் கைவிட்டுவிடாதே என்னை உன்னோடு சேர்த்துக்கொள்.

எல்லா உயிர்க்கும் எல்லாமும் தொடக்கமும் முடிவும் அடைக்கலமான கண்ணா என்னை உன்னோடு சேர்த்துக்கொள், இந்தப் பிரபஞ்சத்தையே இயக்கும் உனக்கு நான் ஒரு சுமையாவேனா சொல்?

நீ எல்லோர்க்கும் எல்லாம் கொடுத்தாய், ஆயர்பாடி மக்களுக்கு துவாரகை எனும் நகரைக் கொடுத்தாய், மார்கண்டேய முனிவர்க்கு யாருக்கும் காட்டாத உன் ரகசிய கோலத்தை ஆலிலையில் காட்டினாய், இன்னும் எவ்வளவோ பேர்க்கு எவ்வளவோ கொடுத்தாய்.

எனக்கு நீ செய்ததென்ன சொல், ஒவ்வொரு நொடியும் நொடிக்கு இடைபட்ட அந்த நேரம் கூட உன்நினைவு ஒன்றிலே உனக்காக வாழும் எனக்கு நீ செய்ததென்ன?

நான் இந்த உலகை கேட்டேனா? அதிலுள்ள சுகங்களைச் செல்வத்தை அதிகாரத்தை கேட்டேனா? எதுவுமில்லை நான் கேட்டது உன் காலடியில் ஒரு இடம், எப்போதும் உன்னோடு கலந்திருக்கும் ஒரு பாக்கியம், அதைத் தருவதில் உனக்கென்ன கண்ணா தடை?”

சொன்னவள் அவன் மேல் சாய்ந்து அழுதாள், அவன் அவள் கண்ணீரைத் துடைத்துச் சொன்னான் “விரைவில் ஒரு நாள் நீ மருள்பாடும்போது அந்தச் சங்கொலியும் சாரங்க ஒலியும் உனக்குக் கேட்கும், உயர இருக்கும் மலர் போல் உன் பிறப்பு வீணாகாது”

“தியானத்தில் தன்னை மறந்த நிலையினை யோகியர் அடையும் போது காதில் சங்கொலி கேட்கும், ரிஷிகள் சொல்லியிருக்கின்றார்கள், ஆனால் அதில் நான் இறங்கித் தவத்தில் என்னை மறந்தால் என்னில் கலந்த உன்னையும் மறக்கவேண்டும் என்பதற்காய் அதைத் தவிர்த்தேன்.

உன்னை மறந்து கிடைப்பது பெரும் நிலை என்றாலும் எனக்கு வேண்டாம் கண்ணா, நான் இப்படி பித்துநிலையில் உன்னை நினைந்து இப்படி வாழ்வேனே அன்றி உன்னை மறந்த ஒரு நிலைக்குச் செல்லமாட்டேன், அது சொர்க்கம் எனினும் எனக்கு வேண்டாம்”

கண்ணனிடம் பேச்சு இல்லை, யமுனை நதி சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது, அதன் அலைகள் எழுப்பிய குளிர்க்காற்று மாடத்தின் சாளரங்கள் வழியாகப் பாய்ந்து இருவரையும் கழுவிச் சென்றது.

நிசப்தமான அந்நேரம் இறுக அவளை அணைத்துக் கொண்டு சொன்னான் கண்ணன், “ஆலிலையில் என்னை மார்கண்டேயர் கண்ட காட்சி எப்படி நிலைபெற்றதோ அப்படி நீயும் என்னோடு காலமெல்லாம் ஏன் அதையும் தாண்டி நிலைத்திருப்பாய்”

ஆண்டாள் மூடிய கண்களை ஆனந்தமாய்த் திறந்தபோது வீட்டின் மாடத்தில் அமர்ந்திருந்தாள், நடந்ததை அறிந்து புன்னகைத்தவள் சூரியன் மேலே வந்திருப்பதை கண்டு அவசரமாய் ஆலயம் சென்றாள்.

பகவானின் சந்நிதியில் உளமுருகி நின்றாள், கண்ணன் தந்த வாக்கு பொய்க்காது எனும் நம்பிக்கையில் புன்னகைத்துக் கொண்டாள்.

தன் முன் வந்த தீபத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டவள், கன்றிடம் குனியும் பசுவினைப் போல் குனிந்து தலைத்தாழ்த்தி பவ்யமாய் ஏற்றுக் கொண்டாள்.

அவளுக்குத் துளசி பிரசாதம் கொடுக்கப்பட்டது, அதை உள்ளங்கையில் வைத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டவள் ஏதோ அந்த இலையில் அசைவதை கண்டு, “கண்ணா…” என்றாள்.

அந்தத் துளசியின் சிறிய இலையில் கண்ணன் குழந்தையாக கையும் காலும் ஆட்டிச் சிரித்துக் கொண்டிருந்தான், ஆண்டாள் அளவே இல்லாத பெருமகிழ்ச்சியுடன் அந்தத் துளசியினைப் பொக்கிஷமாகப் பொத்திக் கொண்டாள், மார்கண்டேய மகரிஷி தவமிருந்து பெற்றக் காட்சியினைத் தன் பக்திக்குக் கட்டுப்பட்டு கண்ணன் காட்டியதில் அவளுக்குள் சொல்லமுடியாப் பெரும் ஆனந்தம் பொங்கிக் கொண்டிருந்தது.