நாச்சியார் திருமொழி : 76

நாச்சியார் திருமொழி : 76 ( பாசுரம் 10.2)

ஆண்டாள் அதிகாலை கண்விழித்தாள். கனவெல்லாம் கண்ணன் நினைவாக நிறைந்திருந்த அவளின் தூக்கம் கலைந்திருந்தது. இப்போது நினைவெல்லாம் கண்ணன் எனும் நிலைக்குள் வழமையான நிலைக்குள் வந்தாள்.

வீட்டின் மாடக்குழியில் இருந்த தீபம் அணைந்திருந்தது. எங்கும் சூழ்ந்திருந்த காரிருளின் கருமை அவளுக்குக் கண்ணனையே நினைவுப்படுத்தியது. புன்னகைத்தபடி வீட்டின் பின்பக்கம் இருந்த நெருப்புக் குழியில் இருந்து நெருப்பெடுத்து விளக்கேற்றும்படி எழுந்தவள் வழமை போல் முதல் பெயராக வாய் திறந்து “கண்ணா” என உச்சரித்தாள்.

தட்டுத் தடுமாறி பின்பக்கம் சென்றவள், அங்கு நெருப்புக் குழியில் இருந்த நெருப்பை ஊதி பனை ஓலையில் பற்றவைத்து அதனை தீபந்தம் ஒன்றுக்கு மாற்ற முயன்றாள், அப்போது ஓலைக் கருகி அவள் கைவிரலைச் சுட்டது.

விரலை ஊதி ஊதி சூட்டை ஆற்றியவள் பின் கவனமாக நெருப்பேற்றி, பின் தீபமேற்றி வைத்தாள். ஆனால், விரலில் அந்த நெருப்பு பட்ட வலி இருந்தது. அதோடு கண்ணனுக்குமான விளக்கை அவள் ஏற்றிவைக்க அவன் முகம் விளக்கின் ஜூவாலையில் அழகாகப் பிரகாசித்தது.

அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே தன் விரலில் நெருப்புப் பட்ட வலியினை உணர்ந்து சிரித்துக் கொண்டாள் ஆண்டாள். தன் விரலில் நெருப்புப்பட்ட காயமே இப்படி இருக்கும் போது ஜொலிக்கும் சக்கரம் ஏந்திய பகவானின் கை பற்றி நினைத்துக் கொண்டாள், புன்னகைத்துக் கொண்டாள். அவள் நினைவும் சிந்தையும் எண்ணமும் எல்லாமும் கண்ணனாகவே இருந்தாள்.

தான் செய்யும் ஒவ்வொன்றையும் அவனோடு பொருத்தி நினைத்துப் பார்ப்பதில் அவளுக்கோர் நிறைவு, அவன் மேல் அவள் கொண்ட தீராப் பெரும்காதல் அதனைச் செய்யவைத்தது.

காலைக்கான பல பணிகளைச் செய்து முடித்தவள் குளித்து முடித்து கோவிலுக்குச் சென்றாள். அது மழைக்கால தொடக்கம் என்பதால் பல வகையான பூக்கள் பூத்துக் குலுங்கின, அப்படி இப்போது தோன்றி பூ எனும் ஒருவகை வெண் காந்தள் பூ உயர மலர்ந்திருந்தது.

ஏற்கனவே கைவிரலில் நெருப்பு பட்ட வகையில் பகவானின் சுதர்சன சக்கர சிந்தனையில் இருந்தவளுக்கு அந்த வெண்மை நிற வெண் காந்தள் பூ அப்படியே அந்தத் திருவாழி எனும் சுதர்சன சக்கரமாகவே தோன்றிற்று.

அந்த மலரை பார்த்துக் கொண்டே இருந்தவள் அதன் மேலே இருந்த வானத்தைக் கண்டாள், மீண்டும் மலரினைக் கண்டாள், தன்னைக் கண்டாள், தன்னைச் சுற்றி சுற்றி கண்டாள், மீண்டும் வானம் கண்டவள் அப்படியே உருகிப் பாடினாள்.

“மேல் தோன்றிப் பூக்காள்! மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றிரே”

பாடி முடித்தவளுக்கு அழுகை வந்தது. அவனைக் கண்டும் வெகுநாளாயிற்று, எட்டமுடியா வைகுண்டம் தவிர அவன் இருக்கும் இடம் என எதும் பெரிதாக இல்லை. ஆனால், அவன் இல்லாத இடம் எனவும் எதுவுமில்லை, அவன் எல்லாமுமாக எல்லாவற்றிலும் இருப்பவன், அவனை எப்படித் தேடுவது என்பது எப்படிக் கண்டறிவது என்பதும் அவளுக்குத் தெரியவில்லை.

அவன் நினைவில் பாடியவள் அப்படியே அமர்ந்த்துவிட்டாள். அவன் மாயன் இங்குப் பல மாய உருவில் அவன் நிறைந்திருப்பான். ஆனால், அவன் இருப்பிடம் என்பது வைகுண்டம், அங்குச் செல்வது என்பது அவன் விரும்பினால் அன்றி நடவாது, அதனால் அவன் நினைவாக சோர்ந்து அமர்ந்தே விட்டாள்.

அந்நேரம் அந்த மலர் மிகப் பெரிதாய் எழுந்து இருந்தது, பெரிய குடை போல் விரிந்தது. பின் அப்படியே குனிந்து அவளை அள்ளிக் கொண்டது. எங்கோ இழுத்துச் சென்றது. அவள் மலருக்குள் வண்டு போல் சிக்கிக் கொண்டாள், பின் மலர் விரிந்தபோது வெளியில் நடந்தாள், அது யமுனா நதியோரமாய் இருந்தது.

அவள் இது என்ன எனச் சிந்தித்துக் கொண்டிருந்தவள் கரத்தை ஒரு மாயக்கரம் தொட்டது, அது வெண்ணையினை அவளின் நெருப்பு காயம்பட்ட இடத்தில் தடவிவிட்டது, அவளின் விரல் நோவு காணாமல் போனது.

“கண்ணா” என்றபடி அவள் அக்கரத்தை பற்றிக்கொள்ள, அங்கே மெல்ல மெல்ல கண்ணன் உருவம் வந்தது, அவள் உள்ளம் பூரித்துப் போனாள், அவன் கைகளை இறுகப் பிடித்து மகிழ்ந்து உருகிப் போனாள், அவள் மனதின் நிறைவும் ஆனந்தக் கோலமும் அவள் கண்களில் தெரிந்தன‌.

அவள் கரம்பற்றி பசும்புல் தரையில் அமரவைத்தான் கண்ணன். அந்தக் கரிய யமுனா நதி சலசலத்தபடி ஓடிக் கொண்டிருந்தது, இதமான குளிருடன் காற்று மெல்ல வீசிற்று.

அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் நாணத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் அவன் அறியாதபடி அவனைப் பார்த்து மனதுக்குள் புன்னகைத்தாள், அவன் கரத்தை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டாள்.

கண்ணன் அவளிடம் மெல்லக் கேட்டான், “என்ன பாடினாய் கண்ணே”

அவள் நாணத்துடன் தலையினைக் காதின் கம்மல்கள் குலுங்க திருப்பிக் கொண்டாள், காற்றில் கலகலத்து ஆடிய அவள் கேசம் தொட்டு ‘சொல் கண்ணே’ என்றான் கண்ணன்.

அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டே அவள் குழந்தை மொழியில் கிளிபிள்ளை போல் சொன்னாள். தனக்குப் பிடித்தவனிடம் குழந்தையாகிவிடும் பெண்களின் இயல்புக்கு அவளும் விதிவிலக்காகிவிட முடியாது.

“அந்தப் பூக்களை நோக்கிச் சொன்னேன், “ஏ பூக்களே! உலகங்களை எல்லாம் கடந்து நிற்கும் வேத முதல்வனானவன் கையில், சோதி வடிவானவன் கையில் இருக்கும் அந்தத் திருவாழி எனும் சுதர்சன சக்கரம் ஒளிமிக்கது என்றாலும், அவனைச் சுடாது, அவன் அடியார்களையும் சுடாது.

ஆனால், அவன் யாரை நோக்கி ஏவுகின்றானோ அவர்களை அறுத்துச் சுட்டெரித்துவிடும், அவ்வளவு உக்கிரமான வெப்பம் கொண்டது, அதனைப் போல் உங்களைக் கண்டதும் என் மனம் கண்ணன்பால் காதலால் எரிகின்றது, இப்படி நீங்கள் என்னைச் சுடாமல் அந்தக் கண்ணனிடம் சொல்லி அவன் கூடவே இருக்கும் அழைப்புப் பெற்ற அடியார் கூட்டத்தில் ஒருவராக என்னைச் சேர்த்துக் கொள்ள சொல்லுங்களேன்” என்றேன் கண்ணா.

“பூ விடம் கூடவா என்னைப் பற்றி பேசுவாய்” என்றவன், அவளை அணைத்துக் கொண்டான். “பூமியில் நான் பார்க்கும் எல்லாவற்றிடம்தான் சொல்வேன், வேறு நான் என்னதான் செய்வேன்” என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“ஏன் கண்ணே” என்றவன் அவள் உச்சியினை முகர்ந்து கொண்டான், “காரணம் தெரியாமல் வருவதுதானே கண்ணா காதல், காரணம் தெரிந்தால் அது சுயநலம் அல்லவா?

அதுவும் பூக்களின் உருவமற்ற மணம் தானே உன்னை அடையும், அதன் உருவமா உன்னை அடையும். அப்படி மானுட ஆத்மாதானே, அருவமான உருவமற்ற ஆத்மாதானே உன்னை அடையும், அதனால்தான் அவைகளின் இயல்புப்படி பாடினேன். மணம் வீசி மணம் எனும் மொழியால் பேசும் பூக்களே, உங்கள் மொழியிலாவது அவனிடம் என் மனதைப் புரியவைக்க கூடாதா எனக் கேட்டேன்” என்றாள்.

அவளை இறுக அணைத்துக் கொண்டான் கண்ணன். அவள் இன்னும் சொன்னாள், “எங்கிருந்தாலும் மலர்ச் சூடி நிற்பவன் நீ, மலருக்கும் உனக்குமான பந்தம் பிரிக்கமுடியாதது, அதனால்தான் அவைகளிடம் சொன்னேன், அவைகள் பெற்ற பாக்கியத்தைப் பெறாத நான் வேறு என்ன செய்யமுடியும்? என்றவள் அவன் கரங்களை இறுகப் பிடித்தாள்.

அவன் பெருமூச்சுடன் அவளை அன்பாய் நோக்கினான், அவள் தன் உயிர்வரை சிலிர்த்துக் கொண்டாள்.

“ஆண்டாளே, என் திருவாழி எனும் சக்கரத்தை அவ்வளவுக்கு கவனித்திருகின்றாயா கண்ணே” என்றான், அந்தச் சக்கரம் சுழலும் அவன் ஆட்காட்டி விரலை பிடித்தபடி சொன்னாள் ஆண்டாள்.

“அதுதானே கண்ணா உன் காவலின் அடையாளம், அந்தச் சக்தியினைத்தானே நாங்கள் சக்கரத்தாழ்வார் என உன் வடிவமாகவே கொண்டாடுகின்றோம், சக்கரம் என்றால் தீராச் சக்தி தொடர்ந்து இயங்கிக் கொண்டே காக்கும் சக்தி என்றுதானே பொருள், அதுவும் இந்தச் சக்கரம்தானே பொல்லாதவரை அழித்து உன் அடியாரைக் காக்கும்.

திருவாழி என்பதற்கு மங்களம் என்றொரு பெயரும் உண்டல்லவா? இராமனுடன் பரதன் எனும் சக்கர அவதாரமாக அந்தச் சக்தி வந்தது, மகாபாரதத்தில் உன் கையில் ஆயுதமாகவே வந்தது.

கண்ணா, கஜேந்திரன் காலை பற்றிய முதலையினை வெட்டியது முதல் பெரிய பெரிய அரக்கர்கர்களை அழித்ததெல்லாம் அந்த ஆயுதமல்லவா? அம்பரீஷனைக் காத்தது முதல் எவ்வளவு பேரை அது காத்தது? சிசுபாலனை அழித்தது போல் எவ்வளவு பேரை அழித்தது, போரில் அர்ஜுனனுக்காக சூரியனையே மறைத்ததும் அச்சக்கரம் அல்லவா?

ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வாராக வந்ததும், அவரின் திருவாழி நாடாக வந்து திருவாழி கோவிலாக அமைந்திருப்பதும் அதே சக்கரம் கண்ணா.

உன் அடையாளத்தில் சங்குடன் அது முக்கியமல்லவா?

கண்ணா, அந்தச் சக்கரம் அசுரர்களை மட்டுமல்ல, உன்னை வணங்கும் அடியார்களின் ஆசையினை அறுக்கும், அகங்கார மாய குணங்களை அறுக்கும், அச்சம் அறுக்கும். எல்லாம் அறுத்துத் தைரியமும் மங்கலமான வாழ்வும் காவலும் தரும், அந்தச் சக்கரமும் நீயும் வேறில்லை கண்ணா” என்றாள்.

“கண்ணே, நான் ஒன்று கேட்கலாமா என்றான்?”, “நீயன்றி வேறு யார் கேட்பார், நானும் உன்னையன்றி யாரிடம் சொல்வேன்” என்றாள், அவன் புன்னகைத்துக் கேட்டான்.

“கண்ணே, நான் உலகை எல்லாம் கடந்து ஜோதிவடிவாக இருக்கின்றேன் என்பதையும் அங்கேதான் என் கையில் சக்கரம் உண்டு என்பதையும் எப்படி அறிந்தாய்? இதையெல்லாம் உனக்குச் சொன்னவர் யார் அன்பே”

ஆண்டாள் மெல்ல புன்னகைத்துச் சொன்னாள். அவன் தோளில் சாய்ந்து சொன்னாள், “சதா காலமும் உன்னையே தேடுபவளுக்கு இது தெரியாதா?, நீ தானே மூல ஜோதி வடிவம். வேதங்களின் தொடக்கம் உன்னில் இருந்துதானே எல்லாம் தொடங்கும். எல்லாமே உன்னால் காக்கப்பட்டு உன்னில்தான் முடியும்.

எல்லாமே உன்னிடமிருந்து வந்து உன்னிடமே சேரும், அந்தத் திருவாழியும் அப்படி உன்னிடம் இருந்து வந்து பக்தர்களைக் காத்து உன்னிடமே வரும், அப்படியே உன்னால் காக்கப்படும் ஆன்மாவும் சுடர்மிகுந்து ஒளிமிகுந்து உன்னிடம்தானே வரும்”

கன்ணன் சிரித்துக் கொண்டு சொன்னான், “வேதாந்தமெல்லாம் பேசுகின்றாய் கண்ணே”

அவள் சொன்னாள், “வேதாந்தம் என்றால் வேதத்தின் முடிவினை அடைவது, உன்னை அறிவதை விடப் பெரிய வேதாந்தம் எது கண்ணா?” சொன்னவள் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

காற்றினில் கலைந்த அவ்ள் கூந்தலை காதோரம் ஒதுக்கியபடி கேட்டான் கண்ணன். “கண்ணே அதென்ன மாற்றோலை பெற்றவர் கூட்டம்?”

ஆண்டாள் அவனை நோக்கிப் புன்னகைத்தாள். தலையினை வானம் நோக்கிப் பார்த்தாள். சுற்றிலும் பார்த்தாள். பின், அவன் கரங்களைப் பிடித்தபடி சிறிய புன்னகையுடன் சொல்லத் தொடங்கினாள்.

“கண்ணா, இந்த உலகில் ஒவ்வொரு மானுடரின் கர்மாவும் அவர்கள் விதி எனும் ஓலையாக எழுதப்பட்டுள்ளது, அதுதான் முதல் ஓலை. அதே நேரம் ஒவ்வொரு படைப்பும் உன்னை நோக்கி ஈர்த்துவரும்படியே மிக நுணுக்கமாகவும் படைக்கவும்பட்டிருக்கின்றது.

இங்குக் காணும் மண், மரம், செடி,கொடி, கல், கடல் இன்னும் எல்லாப் படைப்பும் இயக்கமுமாக நீயே இருக்கின்றாய். அவற்றை உணர்ந்து அவைகள் வழியே உன்னைத் தேடுவோர்க்கு நீ விதியின் ஓலையினை மாற்றி உன்னிடம் வரும் ஒலையினைக் கொடுக்கின்றாய், அவர்கள் அந்த ஓலையின் அழைப்பில் உன்னை அடைகின்றார்கள்.

கண்ணா! இங்குப் பிறப்பு என்பது கர்மம் கழிக்கும் ஓலை, அங்கே உன்னைத் தேடி நிற்போர்க்கு உன் பாதம் பணிந்தோர்க்கு நீ மாற்றுவோலை அனுப்பி உன்னோடு அழைத்துக் கொள்கின்றாய், அது அல்லாதவர் மீண்டும் மீண்டும் பிறப்பு எனும் பயண ஓலையில் சிக்கித் தொடர்வார்கள்.

எனக்கு இந்தப் பிறப்பு எனும் அந்த ஓலை வேண்டாம், வாழ்க்கை சுழற்சி எனும் இந்தப் பிறப்பு வேண்டாம், இந்த விதி எனும் ஓலையினை மாற்றி எனக்கு உன் அடியார்களைப் போல உன்னை அடையும் மாற்றுவழிக்கான ஓலையினை, மாற்று ஓலையாகக் கொடு எனக் கேட்டேன்” என்றாள்.

“என் அடியார்களில் ஒருத்தியாகவா கண்ணே” என்றான் கண்ணன்.

அவள் வருத்தமான குரலில் சொன்னாள், “உன்னை அண்டி உன் பாதம் பணிந்தவரெல்லாம் கைவல்ய நிஷ்டர் என உன் வைகுண்ட சந்நதியில் அமர்ந்திருக்கின்றார்கள், எக்காலமும் உன்னைப் பிரியாது உன்னைக் கண்டு துதிக்கும் நித்திய நிஷ்டர்களாக அங்கு அமர்ந்திருக்கின்றார்கள்.

கண்ணா! நான் இருக்க வேண்டிய இடம் இந்த மாந்தர் கூட்டம் அல்ல, இங்கு ஆடுமாடுகளுடன் விலங்குகளுடன் இந்த மண்ணின் மாயைகளுடன் இருக்கும் இக்கூட்டம் உண்மை அறியாதது, இது முழுக்க முழுக்க மாயையில் சிக்கி இவ்வுலக வாழ்வே நிலையானது, அங்கு அகங்காரமும் சுகபோகமும் அதிகாரமுமே முக்கியமானது, செல்வமே பிரதானமானது, அதுதான் ஒரு மனிதனின் அளவுகோல் எனச் சிக்கிக் கிடக்கின்றது.

எனக்கான இனமும் இடமும் இது அல்ல, நான் இந்த மாயையினைக் கடந்து பரிசுத்தமான ஒன்றைத் தேடுகின்றேன், மறையக் கூடியதும், அழியக் கூடியதுமான இவைகளைத் தாண்டி அழியாத உன்னைத் தேடுகின்றேன்.

ஒரு பெண்ணாக எனக்குக் குறைந்தபட்ச தேவை நிம்மதி. அந்த நிம்மதி எப்போது வரும் கண்ணா? முழுச் சக்திமிக்க ஒருவன் காவலில், எப்போதும் முழு நம்பிக்கையானவன் காவலில், என்ன ஆனாலும் இவன் தோற்கடிக்கப்படமுடியாதவன் நிலையானவன் எனும் ஒரு நம்பிக்கை, அவனிடமே ஒருத்தி நிம்மதியாக இருக்க முடியும்.

அதனால் நான் உன்னைத் தேடுகின்றேன், உன்னிடம் அடைக்கலமாகி நித்திய நிம்மதியினைத் தேடுகின்றேன், ஒரு பெண்ணுக்கு” என்றவள் மேற்கொண்டு சொல்லமுடியாமல் நாணினாள்.

கண்ணன் ஒன்றும் தெரியாதவன் போல் முகத்தை வைத்துக் கொண்டான். அவன் இன்னும் ஏதோ கேட்பான் என அவன் முகத்தை ஆசையாய் எதிர்பார்ப்புடன் நோக்கினாள்.

அவனோ வழக்கமான விளையாட்டில் முகத்தை அப்படியே வைத்திருக்க அவளுக்கு மெல்லிய கோபமும் பெரிய ஏமாற்றமும் வந்தது. அதைக் கண்ட கண்ணன் மெதுவாக அவள் அறியாமல் புன்னகைக்க அவளோ முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தாள்.

“ம்ம். ஒரு பெண்ணுக்கு..” என இழுத்தான் கண்ணன், “அவ்வளவுதான் நிம்மதி முக்கியம்” என முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டாள்.

அவன் சிரிப்போடு சொன்னான், “ஒரு பெண்ணுக்கு மாற்றோலை என்றால் மணவோலை அல்லவா? அது உனக்கு நிச்சயம் உண்டு என் கண்ணே” என்றான்.

துள்ளி வந்து அவனை அணைத்துக் கொண்டாள் ஆண்டாள், அவள் முகத்தை கையில் ஏந்தியபடி பார்த்திருந்த கண்ணனிடம் கேட்டாள், “அதை எப்போது அனுப்புவாய் கண்ணா?”

“காலம் வரும்வரை காத்திரு” என்றான்.

“காலத்தை எனக்கான நீ கட்டுப்படுத்த கூடாதா? பாண்டவருக்காக அமாவாசையினை மாற்றியவன் நீ, இரவு பகலை மாற்றியவனும் நீ, எனக்காக இந்தக் காலத்தை சுருக்கமாட்டாயா?” என ஏக்கமாய்க் கேட்டாள்.

“நான் காலத்தை மாற்றவும் உனக்கான காலம் கூடிவரவேண்டுமே” என்றவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான், பின் மெல்ல அவள் காதோரம் கேட்டான்,.

“கண்ணே, என்னையன்றி நீ எதையும் நினைப்பதுமில்லை விரும்புவதுமில்லை, உரிய நேரத்தில் நீ என்னை அடைவாய், ஆனாலும் அதற்கு முன் ஏதும் உனக்கு பெரிய விருப்பம் உண்டா?”

அவள் சொன்னாள். “கண்ணா, நான் உன்னை மச்சமாக, கூர்மமாக, நரசிம்மமாக, மானுடனாக எல்லா வடிவிலும் பார்த்துவிட்டேன், ஆனால் அந்த ஒளிவடிவம் மட்டும் காணவே இல்லை.

நானும் வேதாந்திகளிடம் விவாதித்திருக்கின்றேன், சமைக்கத் தெரிந்த பெண் அதைச் சுவையூட்ட பலரிடம் ஆலோசனைக் கேட்பது போல உன்னை அடையும் வழி தெரிந்த நான் அதை இன்னும் இன்னும் தேடி விவாதித்தபோது விஷயம் அறிந்திருக்கின்றேன்.

கண்ணா, மானிட ஆத்மா உன்னைத் தேட தேட ஒளிபெருகும், உன் நினைவில் எழும் அந்த ஆத்மா,உன்னை அறிந்து உன்னில் கலந்து தானும் இறைவனும் வேறல்ல என உணரும். ஆத்மா பொன்போல் ஒளிரும்.

அப்படி ஒளிரும் ஜோதி உரிய காலத்தில் மூலப்பரம்பொருளுடன் கலந்துவிடும், அதுதான் கண்ணா உன் கையில் இருந்து ஒளிரும் சக்கரம் வரும் தத்துவம்.

உன்னில் இருந்து வரும் ஆத்மா மறுபடி ஒளிவடிவமான உன்னையே அடைவதைத்தான் அந்தச் சக்கரம் சொல்லும், அதுவும் அச்சக்கரத்தின் சக்தியும் இயக்கமுமாய் நீயே இருக்கின்றாய், பிறப்பினை அறுத்து அந்த ஆத்மாவினை தன்னோடு சேர்த்துக் கொள்கின்றாய்.

அதுதாண் கண்ணா நான் பாடினேன், என் ஆத்மாவினை உன்னோடு சேர்த்துக் கொள், அதனை ஒளிமிக்கதாக்கி பிறப்பை அறுத்து இந்த உலக பந்தத்தை அறுத்து உன்னோடு சேர்த்துக் கொள்.

எனக்கு இந்த உலகம் வேண்டாம், ஊர் வேண்டாம், இந்த மண்ணும் மக்களும் வேண்டாம், இது எனக்கான இடம் அல்ல, எனக்கான இடம் உன் உலகில்தான் உண்டு, எனக்குத் தேவி போல் உன் மார்பில் இடம் வேண்டாம், அனுமன் போல் உன் காலடியில் கூட இடம் வேண்டாம்.

கோடான கோடி அடியார்கள் யுகம் யுகமாய் உன்னை அடைந்து நித்திய நிஷ்டர்களாக அங்கு உண்டல்லவா? அந்தக் கூட்டத்தின் ஒரு மூலையில் எனக்கோர் இடம் கொடு, காலமெல்லாம் உன்னையன்றி எதும் அறியாமல் வாழும் எனக்கு, உன்னையே முழுக்க நம்பி உன் நினைவினையே உயிராக கொண்ட எனக்கு அங்கு ஒரே ஒரு இடம் கொடு, ஓரு அடி இடமாவது கொடு. எனக்கு அது போதும்.

எனக்குக் குறைந்தபட்ச தேவை நிம்மதி கண்ணா, ஒரு முழு நித்ய பாதுகாப்பு உணர்வு, உன்னைத் தடையின்றி சிந்திக்க முழுக்க உத்திரவாதமான ஒரு ஏற்பாடு, அது போதும், அது ஒன்று போதும். அதைத் தருவதில் உனக்கு என்ன சிக்கல்? எவ்வளவு பேருக்கோ அந்த வரம் அருளிய நீ, யானைக்கும் குருவிக்கும் மரங்களுக்கும் ஏன் அசுரர்க்கே அவ்வரம் வழங்கிய நீ எனக்குத் தருவதில் என்ன சிக்கல்?

நான் பாவிதான், இம்மண்ணில் பிறப்பெடுத்த பாவிதான். ஆனால், இந்த வரம் கூடக் கிடைக்காத அளவு நான் செய்த கர்மவினை என்ன? அதையாவது தீர்த்து என்னை உன் அடியார் கூட்டத்தில் ஒரு மூலையிலாவது வைத்துவிடு” என்றவள் ஓங்கி அழுதாள்.

சொன்னவள் தலைமுடியினை வாரிகட்டி அழுத கண்களைத் துடைத்தவள் மீண்டும் சொன்னாள்.

“இதைத் தவிர நான் என்ன கேட்க முடியும், வலிபட்ட பசு ஒரே குரலில் கதறுவதை போல நான் இதைத்தான் சொல்லமுடியும், இதைத் தாண்டி என்னைக் கொன்றுபோடு என்றா சொல்லமுடியும்? கொன்றாலும் இந்த ஆத்மா மீளப் பிறந்து இதைத்தானே கண்ணா சொல்லிக் கதறும்”

சொன்னவள் அதற்கு மேல் வார்த்தையின்றி அவன் மேல் சரிந்து கொண்டாள், அவள் நாடி தொட்டு முகம் நிமிர்த்திய கண்ணன் சொன்னான்.

“என் கண்ணே, ஒரு நாள் நீயும் என்னை நீ விரும்பிய வடிவில் வந்தடைவாய், என்னோடு கலந்துவிடுவாய், உன்னை நான் எக்காலத்திலும் ஊர்பழிக்க, உலகத்தார் சிரிக்க கைவிடமாட்டேன்.

ஒளிமிக்க வடிவாய் நீ என்னோடு கலப்பாய்” சொன்னவன் அவள் கண்ணீரை துடைத்துவிட்டான், அவள் அவன் கரங்களைப் பிடித்து அது நனையும்படி ஆனந்தமாய் அழுதாள்.

கண்ணன் யமுனை நோக்கி கைநீட்டினான், அவன் கையில் அந்த மேல் தோன்றி பூ வந்தது, அதனை அப்படியே ஆண்டாள் முன்னால் காட்டினான், அவள் புன்னகைத்துத் தன் தலையில் சூட்டுவிடுவான் என எதிர்பார்த்தாள்.

அவன் அந்தப் பூவினை அந்தரத்தில் நிறுத்தினான், அப்படியே கைகளை அசைக்க அதன் காம்பு நீண்டு அனுமன் வால் போல் சுருண்டது, அவன் மீண்டும் விரலை அசைக்க அந்தப் பூ ஆதிசேஷன் தலைபோல் தன் இதழ்களை மகா பிரமாண்டமாய் விரித்து அவர்கள் முன் பணிந்தது.

ஆண்டாள் நடப்பதைக் கண்டு அஞ்சி அவன் கையினைப் பற்றிக் கொண்டாள்.

“கண்ணே, உள்ளே வா” என அவளை அழைத்தான் கண்ணன், அவள் அஞ்சியபடியே உள்ளே அவனோடு கால் வைத்தாள்.

அந்த மலர் சட்டென உயர்ந்தது, அது மலைகளைத் தாண்டி மேகங்களைத் தாண்டி இன்னும் இன்னும் உயர்ந்தது, ஆண்டாள் அசந்து போனாள்.

பின் ஒவ்வொரு உலகமாக அது கடந்தது. நட்சத்திர உலகைக் கடந்து முனிவர்கள் வாழும் சுவர்க்கலோகம் வந்தது. முனிவர்களெல்லாம் அவர்களை வணங்கினார்கள். அதன் பின் அது தேவர்கள் வாழும் மஹர் உலகை அடைந்தது, இந்திரன் முதலான தேவர்கள் வந்து பணிந்தார்கள்.

பின், ஜனலோகம் எனும் பித்ருக்கள் உலகை அடைந்தார்கள். முன்னோர்களெல்லாம் வந்து இருவரையும் கண்டு பணிந்தார்கள், ஆண்டாளை வாழ்த்தினார்கள்.

அடுத்து அப்பூ அவர்களைத் தேவதைகள் வாழும் தபோலோகம் அழைத்துச் சென்றது, அங்கு வாழும் எல்லாப் பெரிய தேவதைகளும் அவர்களை வாழ்த்தினார்கள்.

பின் சத்யலோகத்தில் பிரம்மன் அவர்களை எதிர்கொண்டான், அவன் ஆண்டாளுக்கு மாற்றோலை ஒன்றைக் கொடுத்தான், அந்த ஓலையில் அவள் பகவானின் அருளில் நித்யகாலமும் இருக்கக்கடவாள் என எழுதியிருந்தது.

அதனைப் படித்தவள் ஆனந்தத்துடன் பிரம்மனிடம் ஆசிபெற்றுக் கொண்டாள், கண்ணனை இறுகத் தழுவிக் கண்களை மூடிக் கொண்டாள்.

பின் மெல்ல கண்களைத் திறந்தபோது அந்தப் பிரகாசமான பெரும் ஒளியினைக் கண்டாள், அவள் கண்களால் அதைக் காணமுடியவில்லை. பல்லாயிரம் கோடி மின்னல் போல கோடான கோடி சூரியன்களைப் போல அவ்வொளி பிரகாசமாயிருந்தது.

அவள் அதனைக் காணமுடியாமல் கண்களைப பொத்திக் கொண்டு அவன் மேல்சாய்ந்துவிட்டாள், புன்னகைத்த கண்ணன் “ஆண்டாளே இப்போது பார்” என்றான்.

அவளால் இப்போது பார்க்கமுடிந்தது, அந்தப் பேரோளி பகவானின் முழுவடிவமாக தோன்றி நான்கு கரங்களுடன் நின்றது, அதன் காலடியில் இருந்து வேதங்கள் பாடிக்கொண்டிருந்தன.

மகா பிரகாசமான அந்த ஜோதிவடிவின் கரங்களில்தான் அந்தச் சக்கரம் இருந்தது, ஆண்டாள் பேச்சு மூச்சின்றி கண்களில் வடிக்க நீருமின்றி முழு ஆனந்தத்தில் முழு நிறைவில் திளைத்தபடி, இனியும் தனக்கு எதுவும் அவசியமில்லை என்றபடி முழு மனமும் கரைந்த நிலையில் அப்படியே கரைந்துபோனபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அச்சக்கரம் தனியே வந்து கண்ணன் முன்னால் நின்றது, கண்ணன் அதனைத தன் கையில் எடுத்து ஆண்டாள் விரலில் இட்டான்.

கொஞ்சமும் சுடாமல் அவள் விரலில் அது பம்பரம் போல் சுழன்றது, யாருக்கும் கிடைக்காத பெரும் பேறாய் அவள் பெரும் மகிழ்ச்சியும் நிறைவும் கொண்டாள், கண்ணன் அந்தச் சக்கரத்தில் தன் விரலையும் இணைத்துக் கொண்டான்.

இருவர் கைவிரல் மேலும் அச்சக்கரம் சுழன்று கொண்டிருந்தது, “கண்ணா, இது போதும், இது மட்டும் போதும், போதும்…” எனச சொல்லிக் கொண்டிருந்தவள், சட்டென கண் திறந்தாள்.

அப்போது அவள் கோவிலுக்குச் செல்லும் வழியில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தாள், கண்ணன் மறுபடியும் மாயமாக விளையாடிவிட்டதை உணர்ந்தவள் மெல்ல சிரித்தபடி வானம் நோக்கினாள், அங்கு ஒரு பிரமாண்டமான கருடன் அவளை வட்டமிட்டது. அதற்கு மேல் சூரியன் வட்டவடிவில் அந்தத் திருவாழி போல் மின்னியது.

ஆண்டாள் சிரித்துக் கொண்டே ஆலயம் சென்றாள், ஆறு விளக்குகளை வட்டவடிமாக ஒரு தட்டில் இட்டு அதில் பசுநெய்யிட்டு பஞ்சின் திரியிட்டு தீபமேற்றினாள்.

தட்டில் அவ்விளக்குகள் எரியத் தொடங்கின. அதனை அப்படியே கையில் எடுத்தாள், கண்ணன் சந்நதி முன்னால் வைத்துக் கண்ணனுடன் சற்று முன்பு நடந்த காட்சியினை நினைந்து கொண்டாள்.

அந்நேரம் அந்தத் தட்டு அப்படியே விளக்கோடு சுழன்றது, ஆனால் தீபம் அணையவில்லை. மெல்ல மெல்ல அதன் வேகம் அதிகரித்து அப்படியே திருவாழியாய் மாறி எழுந்து பகவான் கரங்களில் சரணடைந்து ஜொலித்தது.

“கண்ணா, கண்ணா” என அக்காட்சியினைக் கண்டவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகளைக் குவித்து வணங்கினாள், கைகளை விரிக்கும் போது அழகான மேல்தோன்றி மலர் அவள் கரங்களில் இருந்தது, மிகுந்த ஆசையாய் அதனைத் தன் தலையில் சூடியவள் வீடு நோக்கி நடந்தபோது மாயக்கரம் ஒன்று அவள் கையினைக் பற்றிக் கொண்டது.