நாச்சியார் திருமொழி : 77
நாச்சியார் திருமொழி : 77 ( பாசுரம் 10.3)
ஆண்டாளுக்கு மீண்டும் மீண்டும் கண்ணனின் நினைவு அலைமோதிற்று. அவளின் உடலின் ஒவ்வொரு அணுவிலும் குடிகொண்டிருக்கும் அந்தக் கண்ணனின் நினைவுகளும், அவளின் சிந்தை முழுக்க நிரம்பிய அந்த மாயவனின் எண்ணங்களும் அவளுக்குள் மீண்டும் மீண்டும் அலைமோதிக் கொண்டே இருந்தன.
காதல் கொண்ட மனம் கொண்டவனைத் தவிர வேறேதும் நினைப்பதில்லை, முட்டைகளை அடைகாக்கும் பறவைபோல் அவன் நினைவுகளை அவள் நெஞ்சுக்குள் வைத்து காத்துக் கொண்டிருந்தாள்.
அவன் இனி எப்போது வருவான் என்ற ஏக்கம் இருந்தாலும் மழைக்கு உத்தரவிடும் சக்தி மண்ணுக்கு இல்லை என்பதை நினைந்து கொஞ்சம் தன்னை அமைதிப்படுத்தினாள். ஆனால், வான்மழை நிச்சயம் மண்ணைத் தேடி வரும், அது விதி என்பதில் நிம்மதிக் கொண்டிருந்தாள்.
ஆனாலும் ஊசலாடும் மனம் அவளுக்குள் அடிக்கடி குழப்பத்தையும் சந்தேகங்களையும் மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.
அவன் நினைவு எல்லை மீறும் போதெல்லாம் கண்களை மூடிக் கொண்டு மூச்சை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக முயற்சிப்பாள். ஆனால், காதில் ஆண்டாளே என அவன் குரல் ஒலிப்பதைத் தடுக்க முடியாமல் தவிப்பாள்.
தாயுடன் விளையாடும் கன்று, கார்மேகம், கார்கோடக பூக்கள், சங்கொலி , தாமரைப் பூ , கருடன், நீலவானம் என எதைக் கண்டாலும் அவள் கண்ணனையே காண்பதால் கண்ணன் அவள் நினைவில் நீங்காதவனாய் இருந்தான். அதே நேரம் தன் நிலை என்னாகுமோ? ஊரும் உலகமும் பழிக்க பெரும் அவமானம் சூழுமோ, தன் நிலை பைத்தியகார கோலமாகிவிடுவோ என அவள் அஞ்சினாள்.
அவள் மனம் இப்படி அடிக்கடி சஞ்சலிக்கும், போதும் இவன் சகவாசம் என அவனை முழுக்க துண்டிக்கச் சொல்லும், இனி அவன் உறவே வேண்டாம் எனவும் சொல்லிவிடும். ஆனால், காய்ந்த நிலம் ஒரு துளி மழையில் பசுமையாவதைப் போல அவன் வந்துநின்ற மறுநொடி அவளுக்குள் மாபெரும் மகிழ்ச்சியுடன் அந்தக் காதல் துளிர்த்து விடும். அவள் மனம் பெரிய நம்பிக்கை பெறும்.
இப்படியான சூழலில் சிக்கிக் கொண்டவள் அப்போது மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். அந்த வேதனையில் அவள் தனிமையினை விரும்பினாள், யாருமற்ற இடத்தில் சென்று அமர விரும்பியவள் தனியே குளத்துக்கரை பக்கம் செல்ல நடந்தாள்.
கார்க்காலம் என்பதால் பெய்த மழையில் பூக்களெல்லாம் பூத்திருந்தன. புதிய செடிகள் கொடிகள் வளர்ந்து வேலிகளில் படர்ந்திருந்தன.
புதுமழை காலத்தில் பசுக்களுக்குப் புத்தம் புது புல், தேனீக்களுக்குப் புதுமலரின் தேன், பறவைகளுக்குக் கனிவகைகள் என எல்லா உயிர்களும் உற்சாகம் கொண்டிருக்கும்.
அந்த மழைக்காலத்தில் தவளைகள் ஆர்ப்பரிக்க்கும். இதனால் பாம்புகளும் மகிழ்ச்சிக் கொள்ளும், எலிகள் கூட மண்ணை உற்சாகமாகத் தோண்டி மகிழும், எறும்புகள் ஆழமாகப் புற்று அமைக்கும், புதுப்புல்லின் தளிர்நுனியினைக் கடிக்கும் முயல் கூட்டம் மகிழ்ச்சிக் கொள்ளும், முகில் கண்டு மயிலாடும் கனிகண்டு குயில்பாடும், கிளியினங்கள் மானினங்கள் மகிழ்ந்தாடும்.
எல்லா உயிர்களும் மகிழும் அந்தக் காலத்தில் மாடும் மனிதரும் உள்ளம் நிறைந்த அந்த நேரத்தில் அவள்மட்டும் மனம் நொந்திருந்தாள், அப்படியே காட்டுவழி செல்லும் போது கொடியில் கிடந்த கோவைக்கனிகளைக் காண்கின்றாள்.
அவளைக் கண்டதும் அங்கு வெயிலுக்குப் படுத்திருந்த நாகமொன்று தலை தூக்கிப் பார்த்தது. அதன் இரு நாவுகளை நீட்டிபயடி நோக்கிவிட்டு பின் சர்ரென ஒடிச் சென்றது.
இரு கனிகள் ஒட்டிக் கிடக்கும் அக்கோலமும், நகர்ந்துவிட்ட நாகமும் அவளுக்குள் ஏதோ சொல்கின்றது. கண்ணில் கண்ட கோவைப்பழக் காட்சி மனதில் இறங்கி நிற்கின்றது. அது அவள் சிந்தனையினைத் தொட தன் நிலையினை அதனோடு சொல்லிப் பாடுகின்றாள்.
‘கோவை மணாட்டி நீ உன் கொழுங்கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாயழகர் தம்மை அஞ்சுதும்
பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்
நாவும் இரண்டுள ஆயிற்று நாணிலியேனுக்கே”
பாடியவள் அப்படியே கண்ணை மூடி அவன் நினைவில் நிறைந்தவள் தன்னை மறக்க ஆரம்பித்தாள், அந்த ஒட்டிக்கிடந்த கோவைக்கனிகள் அவள் கண்முன் மாறி மாறி வந்தன.
அவள் மெல்ல கண்திறந்தபோது அந்தக் கனிகள் அவள் கண்முன் நின்றன, அவள் ஆச்சரியத்தோடு அதனை நோக்கும் போதே அங்குக் கண் வாய் காது மூக்கு எல்லாம் தோன்றத் தொடங்கிற்று. அவள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தலையில் மயிலிறகுடன் அந்த முகம் தோன்றிற்று.
அந்தக் கோவைப்பழங்கள் வாயின் உதடுகளாக அசைந்து புன்னகைத்தன, அவை மெல்லப் பிரிந்து “ஆண்டாளே” எனும் குரல் வந்தபோது “கண்ணா” என அவனோடு ஒட்டிக்கொண்டாள் ஆண்டாள், பின்னால் பெருக்கெடுத்து ஓடிய நதி அவள் கோகுலத்தில் இருப்பதைச் சொன்னது.
அவளை அணைத்தபடி தலைக்கோதி விட்டான் கண்ணன், அவள் குழந்தைபோல் அவனுடன் ஒட்டிக் கிடந்தாள், அவள் மனம் அவனில் கரைந்தே போயிருந்ததால் தன்னில் சிந்தையேதும் இல்லாதவளாக இருந்தாள்.
அவன் மெல்லக் கேட்டான் “என்ன பாடினாய் கண்ணே? அதுவும் கோவைக்கனியெல்லாமுமா கண்டு பாடினாய்?”
அவள் நாணமாய்ச் சொன்னாள், “கண்ணா, அந்தச் செக்கச் சிவந்த கோவைகாகனிகள் உன் இதழகளைப் போலவே இருந்தன, உன்னில் சிவந்திருக்கும் ஒரே பாகமான உதடுகளைப் போல் அவை அப்படியே சிவக்கக் கனிந்திருந்தன, அவற்றைக் காணும்போது உன் நினைவு பொங்கியதால் பாடினேன்” என்றவள் தொடர்ந்தாள்.
“எ கோவைக்கொடி பெண்ணே, உன்னுடைய செழித்த கனிகளால் என்னை வதைக்காதே, உன்னைப் போன்ற அழகான இதழ்களைக் கொண்ட பகவானிடம் செல்லமுடியாத பாவியாக என்னைக் கண்டு இகழாதே, நான் எவ்வளவுதான் போராடினாலும் அவன் தான் படுத்திருக்கும் ஆதிசேஷன் போல என் விஷயத்தில் மட்டும் இரட்டை நாக்கு உடையவனாய் இருக்கின்றான்”
கண்ணன் புன்னகைத்துக் கேட்டான், “கோவை கனியிலுமா என்னைத் தேடினாய்? அதனை ஏன் பெண் என்றாய்?”
“கொடியாய் நீண்டு தன்னில் பூத்து. காய்த்து, கனி கொடுக்கும் அந்தக் கொடியினை வேறு என்ன சொல்வது கண்ணா? அதனைப் பெண் என்றுதான் சொல்லமுடியும், அந்தக் கனிகளைக் கண்டதும் எனக்கு உன் வாயிதழ் நினைவுதான் வந்தது, பாடிவிட்டேன்.
அதுவும் பாம்புபோல நீண்டிருக்கும் அக்கொடியில் கிடந்த கனிகள் நாகத்தின் மேல் பள்ளிகொள்ளும் உன் இதழ்களை அப்படியே காட்டியதால் நெகிழ்ந்துபோனேன்” என்றவள் இன்னும் அவனுடன் ஒட்டிக் கொண்டாள்.
அவள் நெற்றியில் முத்தமிட்ட கண்ணன் ஏதும் பேசவில்லை, நிசப்தமிக்க அந்த நிமிடங்களில் யமுனை ஓடும் மெல்லிய ஒலி கேட்டது. தொலைவில் கன்றுகள் பசுவினைத் தேடும் ஒலியும் கேட்டது, சில குயில்கள் ஏக்கமாக பாடிக்கொண்டிருந்தன.
“ஆண்டாளே கோவை பழ இதழ்கள் என்றாய், பின் நீ பாவி என்றாய், நீ என்ன பாவம் செய்தாய்? அன்பே, ஒன்றுமே புரியவில்லையே” என்றான் கண்ணன்.
அவனின் சிவந்த உதடுகளைக் கொஞ்சநேரம் உற்று நோக்கியவள் மெல்லச் சொன்னாள்.
“இந்த வாய்தானே கண்ணா எல்லோருகக்கும் வாழ்வு கொடுத்தது, யசோதைக்கு இந்த மண்டலமெல்லாம் காட்டியது முதல் எல்லோர்க்கும் நல்வார்த்தை சொன்னது இந்த வாய்தானே கண்ணா.
ஒன்றா இரண்டா? எத்தனை அவதாரங்களில் எத்தனை எத்தனை வார்த்தைகளை உறுதிகளை கொடுத்ததும் இதுதானே. நரசிம்மனாய் வந்து இரண்யனைக் கிழிக்க உறுமியதும் இந்த வாய்தானே.
இராமனாக வந்து சொன்ன சொல் அத்தனையும் காத்தது, எல்லோரையும் வாழவைத்ததும் இந்தவாய்தானே, பொல்லாத இராவணனுக்கும் அவகாசம் கொடுத்து அனுப்பியதும் இந்த வாய்தானே.
கண்ணணாக வந்து நம்பிய எல்லோருக்கும் நல்வார்த்தை சொன்ன வாய் இது, கீதை எனும் மாபெரும் தத்துவத்தைக் கொடுத்த வாய் இது, நம்பியவர் அனைவருக்கும் நல்வாழ்வு கொடுத்து, கொடுத்த வார்த்தைகளெல்லாம் இங்கிருந்து தானே வந்தது.
எல்லோரிடமும் நீ சொன்ன சொல் பலித்தது என்றால் என்னிடம் மட்டும் அது இன்னும் பலிக்கவில்லை என்றால் நானேதான் பாவி இல்லையா கண்ணா” சொன்னவள் கண்களில் நீர் துளிர்த்தது.
அவன் அதை தடுத்து “அப்படி அல்ல என் உயிரே” எனும் போது அவள் கேவிச் சொன்னாள்.
“அசோகவனத்தில் சீதை சொன்னாள் கண்ணா, அவள் பெற்ற சிக்கலுக்கெல்லாம் ஏதோ முன் ஜென்மத்தில் அவள் செய்த பாவமே காரணம் என்பாள், இதனையே தர்மனும் சில இடத்தில் சொல்வான், அப்படி உன்னின் அருள் இன்னும் பூரணமாகாத எனக்கு ஏதோ பழைய பாவ கணக்கு இல்லாமலா இருக்கும்” சொன்னவள் தலைகுனிந்து கொண்டாள்.
அவள் நாடி பிடித்து மேலே முகத்தினைத் திருப்பினான் கண்ணன், அவன் கண்களைக் கண்டவள் அவன் உதட்டினைக் கண்டவள் வார்த்தையின்றி மௌனமானாள்.
“என் ஆத்மாவின் துடிப்பான கண்ணே, இப்படியெல்லாமா சிந்திப்பாய் சொல்?” என்றான்.
“பின் என்ன கண்ணா? எல்லோருக்கும் உன்னை அண்டிய எல்லோருக்கும் உன் அன்பும் அரவணைப்பும் கிடைக்கின்றது, காவலும் கிடைக்கின்றது, அவர்களால் எளிதில் உன் அருகில் வரமுடிகின்றது, என்னால் இன்னும் உன்னை அடையமுடியாவிட்டால் அது என் பாவமன்றி என்ன? என் கர்மவினை அன்றி என்ன?
நானே உன்னிடம் இன்னும் வரவில்லையே அதற்கு என் கர்மவினை காரணமோ எனக் கலங்கிக் கொண்டிருக்க இந்தக் கோவைக்கனி உன் இதழ்போன்ற கனியினைக் காட்டி என்னை வதைத்தால் என்ன செய்வேன்? ஆனாலும்..” என்றாள்.
“என்ன ஆனாலும்.. என இழுக்கின்றாய் அன்பே” என்றான் கண்ணன்.
ஈரம் கொண்ட தன் விழிகள் கலங்க, மெல்லிய குரலில் சொன்னாள் “எல்லா உயிரின் பாவத்தையும் மன்னித்து உன்னில் ஏற்றுக் கொள்பவன் நீ, நான் என்னதான் பாவம் செய்திருந்தாலும் நீ மன்னிக்க கூடாதா, நான் இப்பிறப்பில் செய்த பெரும்பாவம் என எதுவுமில்லை, ஒருவேளை முற்பிறப்பு பாவமாயின் அதை மன்னித்தருள கூடாதா கண்ணா?
உன்னையன்றி நான் யாரிடம் கேட்க முடியும்? என் வாழ்க்கையின் ஒரே ஆதாரம் நீ, என் அன்பும் நம்பிக்கையும் கடந்த காலமும் இக்காலமும் எதிர்காலமும் எக்காலமும் நீ, உன்னையன்றி நான் என்ன அறிவேன், என் பாவமேதும் இருந்தால் என்னை மன்னித்து உன்னில் ஏற்றுக்கொள் கண்ணா”
கண்ணன் அவளிடம் வார்த்தைகள் இன்றி அமைதியானான், அவள் அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தாள், ஏக்கத்தோடு பார்த்தாள்.
“கண்ணே, நான் சொன்ன வாக்கு பொய்க்குமா சொல்? உனக்கு நான் கொடுத்த வாக்குப்படி நீ என்னை நிச்சயம் அடைவாய்”
அசையும் விழிகள் அப்படியே கீழே சரிய, மெல்ல அவன் கை பிடித்தபடி சொன்னாள் ஆண்டாள்.
“கண்ணா, அது என் அறிவுக்குப் புரிகின்றது, ஆனால் மனமோ சஞ்சலப்படுகின்றது, நான் என்னசெய்வேன்” என்றாள்.
“அதற்காக கோவை பழமிடமெல்லாமா கோபப்படுவாய் கண்மணியே” என்றான் கண்ணன்.
“கண்ணா, இந்த உலகில் எல்லாமே உன் அம்சம், அது கோவைக்கொடி பிறந்து வளர்ந்து தன் கர்மத்தைச் சரியாக செய்து உன் இதழ் சாயலில் கனிகளைப் பெற்றிருக்கின்றது, ஆனால் நான் என்ன பெற்றேன் சொல்? என் பிறப்பிலே உன் அடையாளத்தை தாங்க வேண்டாமா? ஒரு கொடி பெற்ற வரம் நான் பெறக் கூடாதா? அதனால்தான் அப்படிப் பாடினேன்” என்றாள்.
கண்ணன் அவள் முகத்தை மெல்ல நோக்கினான். அவள் மெல்லப் புன்னகைத்தபடி அவனை நோக்கி நாணமாக பார்த்தாள். சட்டென முகம் திருப்பிக் கொண்டாள். ஆனால் அவள் கரம் அவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டது.
அவள் மெல்ல மீண்டும் அவன் முகம் நோக்கினாள். காற்றில் அசைந்தாடும் மயிலிறகு அசைய கண்ணன் முகம் அவளுக்குப் பெரும் சிலிர்ப்பையும் மகிழ்ச்சியினையும் கொடுத்தது.
அவளை நோக்கியபடியே தன் நாக்கினால் தன் உதடுகளை ஈரமாக்கிக் கொண்டான் கண்ணன், அதனை விசித்திரமாகக் கண்ட ஆண்டாள் நெற்றிச் சுருக்கினாள்.
“என்ன பார்க்கின்றாய் எனக்கு ஆதிசேஷனைப் போல் இரட்டை நாக்கெல்லாம் இல்லை, ஒரே நாக்குத்தான்” என்றதும் அவள் சட்டென சிரித்தாள்.
“ஏன் அப்படி பாடினாய்? நான் என்ன இரண்டு நாக்கு கொண்டவனா?” என்றான் கண்ணன், அவள் பதில் சொல்லுமுன் மறைந்தே போனான்.
“கண்ணா..” என அவள் கத்தினாள், அவன் வரவில்லை.
“கண்ணா வந்துவிடு” என அவள் உரக்கக் கூவினாள், அவன் வரவில்லை, அவளுக்கு அச்சமும் பயமும் அதிகரித்தது.
அவன் எப்போதும் அவளுடன் பேசிவிட்டு மறைந்து போய்விடுபவன், ஆனால் இம்முறை அவன் சற்று கோபத்தில் சென்றது போல் சென்றதால் அவள் தவித்துப் போனாள்.
“கண்ணா, வா நான் உன்னை இரட்டை நாக்கு எனப் பொய்யன் எனச் சொல்லவில்லை, இங்கே வா நான் சொல்வதைக் கேள்” என உரக்கச் சொல்லி சொல்லி தேடினாள்.
அவன் வரவில்லை, அவள் முடிந்தவரை கத்தி “கண்ணா” என உரக்கச் சொல்லித் தேடினாள். அவன் வரவில்லை. அவள் கண்ணீர் பெருக்கெடுத்தது, குரல் உடைந்து அழுததாள், அப்போதும் அவன் வரவில்லை.
அவள் மண்டியிட்டு அழுது சொன்னாள், “கண்ணா, உன்னைப் பொய்யன் என நான் சொல்லவில்லை. மாற்றி பேசுபவன் எனப் பழிக்கவுமில்லை, உன்னை அப்படி என்னால் சொல்லவும் முடியாது.
உன் வாக்கு மானிடர்க்கு இருவகையிலும் பயனளிக்கும், அது இம்மையில் வாழவைக்கும். அப்படியே மறுமையிலும் வாழ்வைக்கும், உன் வாக்கு இம்மையிலும் மறுமையிலும் வாழ்வு தரும் எனும் பொருளில் சொன்னேன்.
உன் வார்த்தைகள் இந்த லௌகீக வாழ்வினையும் தரும், அங்கும் பொய்க்காது, மறுமையில் வைகுண்ட வாழ்வினையும் தரும், அங்கும் பொய்க்காது.
நீ அவதாரமாய் வந்து உன் செவ்வாயால் தந்த மொழிகளும் பொய்க்கவில்லை. அப்படியே நீ வானுலகில் தேவர்களுக்கு மொழிந்த மொழியும் பொய்க்கவில்லை என்பதையே பாடினேன்.
பாம்பின் மேல் நீ படுத்திருப்பதால் பாம்பு குணம் வந்ததாக பாடவில்லை, பாம்பு போல் சட்டையினை உரித்தால் உன்னை அடையலாம், இந்தப் பிறவி நீங்கினால் உன்னை அடையலாம் என்பதைத்தான் பாடினேன்.
நீ மானுடரின் பூலோக வாழ்க்கைக்கும் பொய்யா மொழிகளைத் தந்தாய், வானலோக வாழ்க்கைக்கும் தோற்கா மொழிகளைத் தந்தாய், இரு உலகுக்கும் நல்மொழிகளைத் தருபவன் நீ.
அந்த வார்த்தைகளைத் தரும் திருவாய் உன்னுடையதல்லவா? அந்தச் சிவந்த வாயினைப் பற்றித்தான் பாடினேன், அதை வேறு எப்படித்தான் பாடுவது.
இப்படி மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் பொய்யா மொழிகளைத் தரும் நீ, என்னை மட்டும் ஏன் தவிக்க வைக்கின்றாய்? இந்தச் சிவந்த கோவை கனிபோல் என் மனம் கனியும்படி எப்போது வார்த்தைகளை மெய்ப்பிப்பாய்?
அதைக் கேட்டது தவறா? அதற்காக என்னை அழவைத்துச் செல்வாயா? உன்னைவிட்டால் எனக்கு யார் உண்டு? நான் யாரிடம் செல்வேன்.
கண்ணா, மானிடர் வாய் ஆயிரம் பேசும். ஆனால் வாழ்வுதரும் வார்த்தை உன்னிடமன்றி யாரிடம் உண்டு? உன் வார்த்தையில்தான் எல்லோருக்கும் இவ்வுலக வாழ்வும் அவ்வுலக வாழ்வும் உண்டு, அதைக் கேட்டது தவறா?”
சொன்னவள் கதறி அழுதாள், அந்நேரம் ஒரு கிளி ஒன்று பறந்து வந்து அவள் அருகில் அமர்ந்தது. அதன் சிவந்த அலகுகள் மீண்டும் கண்ணனை நினைவுப்படுத்த கிளியினைக் கையில் ஏந்தி அழுதாள்.
அவள் பார்த்துக் கொண்டிருந்தபோதே கண்ணெதிரே கிடந்த கோவை கொடி நாகமாயிற்று, அந்த நாகம் மகா பிரமாண்டமாக ஓங்கி நீண்டு திடீரென சுருண்டு மெத்தை போலானது, நாகம் விரிந்து குடைபிடிக்க அழகான வீடு போல் அது மாறிற்று.
அவள் அதைக்கண்டு திகைத்து நிற்கும் போதே மாயக் கரம் அவளை உள்ளே இழுத்தது, அங்குப் பரந்தாமன் புன்னகைத்தபடி படுத்திருந்தார், கருணைமிக்க அந்த முகத்துடன் தன் செவ்வாய் புன்னகைக்க அவளை வரவேற்றார்.
ஆண்டாள் உடலெல்லாம் சிலிர்த்தபடி அவள் கால்பக்கம் அமர்ந்துகொண்டாள், நம்பமுடியா அதிசயமாக தன் வாழ்வின் நோக்கமே நிறைவேறியதாக அவள் மாபெரும் நிறைவினைக் கொண்டாள், அவள் வாயில் இருந்து “கண்ணா” எனும் வார்த்தை வந்தது.
“என் வார்த்தைகள் பொய்க்காது கண்மணியே, இப்போது நீ பார்க்கும் எல்லாம் விரைவில் நடக்கும்” என அக்குரல் உறுதியாகச் சொன்னது. அவள் கையெடுத்து வணங்கி விழுந்து கும்பிட்டாள்.
எழுந்தபோது அவள் அந்த ஆலமரத்தின் அடியில் இருந்தாள். அந்தக் கிளிமட்டும் அவள் கையில் இருந்து “கண்ணா கண்ணா” எனச் சொல்லிக்கொண்டே இருந்தது.
அவள் மிக்க மகிழ்ச்சியுடன் பூஜைக்குத் தயாராகும்படி வீடு திரும்பினாள், திரும்பும் வழியில் வேலியில் கிடந்த கோவை கனிகளை நோக்கி அவள் புன்னகைத்தாள், அவை நாணி திரும்பிக் கொண்டன, அவள் மகிழ்ச்சியுடன் பூஜைக்குத் தயாரானாள்.