நாச்சியார் திருமொழி : 78
நாச்சியார் திருமொழி : 78 ( பாசுரம் 10.4)
எப்போதும் கண்ணன் நினைவிலே இருக்கும் ஆண்டாள் கார்த்திகை மாத மழைக்காலத்தில் சிக்கிக்கொண்டாள், பொழியும் மழையும் சூரியன் காணா இதமான பொழுதுகளும், நட்சத்திரமும் நிலவும் காணா இருளில் மழையோடு வரும் குளிர்க்காற்றும் எல்லா உயிர்களையும் சிலிர்க்க செய்வது போல் ஆண்டாளையும் ஒரு ஏகாந்த மனநிலைக்குள் தள்ளியிருந்தது.
எல்லா உயிர்களும் அதனதன் துணையுடன் இன்புற்றிருக்கும் அந்தக் கார்க்காலத்தில் மானும் மயிலும் எல்லா உயிரும் இணைந்திருக்கும் காலத்தில் தவளை செய்த பாக்கியம் கூட தனக்கில்லையே அந்தக் கண்ணன் இன்னும் தன்னைத் தன்னோடு சேர்க்கவில்லையே எனும் தீராக் காதலில் தவித்துப்போனவள் அப்படியே உறங்கிப் போனாள்.
அதிகாலை அவளுக்கோர் கனவு வந்தது, அவள் அயோத்தி நகரின் வாசலில் நின்று கொண்டிருந்தாள், அந்நகர மக்களெல்லாம் 14 ஆண்டுகாலம் நாட்டைவிட்டு தங்களைவிட்டு சென்ற ராமன் சீதையோடு வருவதை காண ஆர்வமாய் இருந்தார்கள்.
கோசலை முதல் எல்லோரும் கண்களில் ஏக்கமிக நின்றிருந்தார்கள், பரதன் ராமபிரானின் செருப்போடு காவல் நின்றான், லட்சுமணன் மனைவி ஊர்மிளா மிகுந்த ஏக்கத்தோடு கண்களில் நீரோடு நின்றிருந்தாள்.
பெரும் மக்கள் கூடி நிற்க ஆண்டாளும் அதில் ஒருவராக நின்றாள், தீடீரென பெரும் இசை ஒலிக்கப்பட்டது , மேளதாள சத்தம் கேட்டது, கோட்டையின் பெரும் கதவு திறக்கப்பட “அதோ ராமபிரான் வருகின்றார், நம் கருணாமூர்த்தி வருகின்றார் நம் துன்பமெல்லாம் தீர்ந்தது” என்ற பெரும் கோஷத்துடன் மக்களெல்லாம் அவரைக் கண்டு உருகினார்கள்.
கருணையே உருவான அன்னல் ஒரு கையில் வில் மறுகையில் சீதை என பிடித்து நடந்து வந்தார், அவர் கழுத்தில் முல்லைமலர் மாலை அழகாய் துலங்கிற்று, அவரின் பின்னால் லட்சுமணனும் அனுமனும் பணிவாய் வந்தார்கள், புதிதாய் அயோத்திக்குள் வந்த அனுமன், ராமனின் காலடி சுவடில் கூட தன் கால் படக் கூடாது எனக் கவனமாய்ப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தான்.
ராமன் காலடி பட்ட மண்ணை எடுத்துப் பூச்கிக்கொள்ள மக்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள், ராமன் ஆண்டாளை கடந்து செல்லும் போது கைகளைக் குவித்தபடி கண்களில் நீர்மல்க அவனைக் கண்டாள், அவனின் போதனையெல்லாம் யாரோ அவள் காதில் மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.
மாடத்தில் இருந்து பூக்கள் இறைக்கப்பட்டன அவற்றை அவன் கைகளால் தட்டியபோது ஒரு பூ ஆண்டாள் கைகளில் விழுந்தது, அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டவள் நன்றியோடு அவனை நோக்கினாள், அவன் அழகாய்ப் புன்னகைத்தபடி கடந்து சென்றான்.
அருகில் இருந்த முதிய பெண்கள் பேசிக்கொண்டார்கள் “அவன் குழந்தையாய் இருந்தபோது இந்த அழகான புன்னகை கண்டுதான் மந்தாரை வயிறு எரிந்தாள் தனக்கோர் குழந்தை அப்படி இல்லையே எனும் கோபம் இருந்தது”
அடுத்தவள் சொன்னாள் “இதே புன்னகைதான் சூர்ப்பனகையினையும் ஈர்த்தது, மனமெல்லாம் அன்பும் எல்லா உயிர்மேல் பாசமும் கருணையும் கொண்ட அவன் மனதால் அந்தப் புன்னகை இன்னும் இன்னும் அழகாகின்றது, இந்தப் புன்னகைதான் சூர்ப்பனகையால் அவனுக்குப் பெரும் துயரமுமானது”
அவள் கேட்டுக் கொண்டே நின்றாள். ராமபிரான் பெரும் ஆரவாரமாகக் கோசலையினை நோக்கிச் செல்லும் போது கனவு கலைந்தது, அவள் தீபமேற்றி என்ன பொழுது என யோசிக்கும் போதே கோழி கூவுவதும் கன்றுகளின் ஓசையும் தாய்ப்பசுவின் பதில் ஓசையும் ஒவ்வொன்றாய்க் கேட்கத் தொடங்கிற்று.
அவள் அந்தக் கனவோடே எழுந்தாள், எப்போதும் அவளை அழுத்தும் அந்தப் பகவானின் நினைவு அந்தக் கனவுக்குப் பின் அழுத்தமாயிற்று, அவள் குளித்து முடித்து அன்றாட பணிகளைத் தொடங்குமுன் கண்ணனுக்கு நைவேத்தியம் செய்ய அரிசி பானையினைத் திறந்தாள், அந்தப் பச்சரிசி அந்தக் கனவில் கண்ட புன்னகையினை மீண்டும் காட்டிற்று.
அவள் கன்றை அவிழ்த்து விட்டு பால் கறக்கத் தயாரானாள், கன்று பால் அருந்தும் போது அவள் அடிவானத்தைக் கண்டாள். அங்கே மின்னிய நட்சத்திரங்கள் அதே புன்னகையினைக் காட்ட, கறந்த பாலின் வெண்நிறமும் அதையே காட்டிற்று.
நினைவுகள் இன்னும் இன்னும அழுத்தின, அவள் பூ பறிக்க நந்தவனம் சென்றபோது செந்நிற கனிகளிடை அழகுறப் பூத்திருந்த புத்தம் புது முல்லை பூக்களைக் கண்டாள், அந்தப் பாலின் வெண்மை அதே புன்னகையினைக் காட்டிற்று, அவள் அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கார்மேகம் தாளாமல் வெடித்துக் கொட்டுவது போல் பாடினாள்.
“முல்லைப் பிராட்டி நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழிநங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய் ஆனால் நானும் பிறந்தமை பொய் அன்றே”
பாடியவள் அப்படியே அந்தச் செங்கனியோடு கிடந்த முல்லை பூக்களைப் பகவவானின் சிரிப்பு போல் பார்த்துக் கொண்டே இருந்தாள், அந்நேரம் அந்த முல்லை கொடி அப்படியே எழும்பிற்று, பெரிதாக எழும்பிய அக்கொடி அவளை அப்படியே மலைப்பாம்பு போல் சுற்றி எங்கோ இழுத்தது, அக்கொடி அவள் கண்களையும் மூடிக் கொண்டதால் அவளுக்கு என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லை.
அக்கொடி அவளை விட்டு இறங்கியபோது அவள் சோலை ஒன்றில் நின்றிருந்தாள், தொலைவில் ஒரு மாளிகை தெரிந்தது, அங்கே பறந்த கருடக் கொடி அது கண்ணனின் மாளிகை என்பதைக் காட்டிற்று.
தான் பிருந்தவனத்தில் இருப்பதை துளசி செடிகள் நிரம்ப இருப்பதாலும், மான்கள் அச்சபடாமல் அங்கே உலவுவதாலும் அறிந்து கொண்டாள், எல்லாம் கண்ணனின் விளையாட்டு என்பதை அவள் உணரும்போது முல்லைகொடி தன்மேல் கொடி நீண்டு படர்ந்தது அனுமனின் வால் நீண்டது போல் இருந்ததை எண்ணி புன்னகைத்துக் கொண்டாள்.
அப்போது குளிர்ந்த தென்றல் அவள் மேல் வீச இனிய நறுமணம் அவளைச் சூழ்ந்தது, ஒருவிதமான சக்தி தன்னை ஆட்கொள்வதை அறிந்தவள் கண்ணன் வருகையினை உணர்ந்தாள்.
அந்த மாய உருவம் தன் அருகே வந்ததை அவளின் உள்ளமே சொன்னது, கண்ணைத் திருப்பி பார்த்தால் அவன் ஒன்றுமே அறியாதவன் போல் நின்று கொண்டிருந்தான்.
அவனைத் தீராக் கண்களுடன் மகிழ்ச்சியும் ஏக்கமும் காதலும் கொண்டு கண்டவள் கண்டு கொண்டே இருந்தாள், அதுவும் அவன் இதழோரம் வழிந்தோடும் புன்னகையினை எவ்வளவு மழைபெய்தாலும் ஈர்க்கும் வறண்ட பூமியினைப் போல் உள்வாங்கிக் கொண்டே இருந்தாள்.
அவன் அவள் கையினை மெல்லப் பற்றினான், அவள் மழைத்துளிபட்ட பறவையாய்ச் சிலிர்த்துக் கொண்டாள், அப்படியே அந்தப் பசுந்தரையில் அவளோடு அமர்ந்தவன் அவளைத் தன்னோடு சாய்த்துக் கொண்டான், அவன் கைகளை இறுக அவள் பற்றிக்கொண்டாள் அந்தப் பற்றுதலில் அவளின் ஏக்கமும் நம்பிக்கையும் காதலும் பெரிதாய் தெரிந்தது.
கண்ணன் மெல்லக் கேட்டான், என்ன பாடினாய் கண்ணே, ஏதோ அரக்கியின் மூக்கு எல்லாம் பாடினாய்? சூர்ப்பனகை மேல் உனக்கென்ன கோபம் என்றான்.
அவள் மெல்லப் புன்னகைத்து சொன்னாள் “எனக்கு ஏன் அவள்மேல் கோபம்? அழகு சிகப்பான கனிகள் இடையே கிடந்த அழகான முல்லை பூ உன் புன்னகையினைக் காட்டிற்று, அதிகாலை கனவில் ராமபிரானின் புன்னகையினையும் கண்டேன், அதனால் பாடினேன்.
ஏ முல்லை பெண்ணே, ஆழியெனும் கம்பீரத்தைப் பெருமையினை உடையவளே இந்த அழகான சிரிப்பினைக் காட்டி அவன் நினைவினை அதிகரித்து என்னை வதைக்காதே, அரக்கியின் மூக்கு வெட்டப்பட காரணமானன் சொல்வது பொய்யாகுமா? அப்படியானால் நானும் பெரியாழ்வார் மகள் என்பதும் பொய்யாகுமா எனும்படி நானே குழம்பிக் கிடக்கின்றேன், நீயும் என்னை அவன் நினைவால் வதைக்காதே” எனப் பாடினேன் என்றாள்.
அவளை மெல்ல அணைத்துக் கொண்டவன் கேட்டான், “ராமனாக வந்தபோது நான் என்ன பொய் சொன்னேன், பெரியாழ்வார் மகள் நீ என்பது எப்படிப் பொய்யாகும்” எனக் கேட்டான்.
“கண்ணா, ராமனாக வந்து நீ சொன்னதை யார் மறந்தாலும் காலம் மறக்காது, அங்கே நீ ஒரு சொல் ஒரு வில் என நின்றாய், சொன்ன சொல்லை எங்கும் எப்போதும் நீ காப்பாற்றிவந்தாய் அதைத் தவறவிட்டதில்லை ஆனால் என் விஷயத்தில் மட்டும்…” என இழுத்தவள் அவனைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவள் முகத்தைப் பிடித்துத் திருப்பிக் கேட்டான் கண்ணன், “அப்படி நான் என்ன என் வாக்கு பொய்த்துவிட்டது கண்ணே, வானும் மண்ணும் இந்தப் பிரபஞ்சமே ஒழிந்தாலும் என் வாக்கும் போதனையும் ஒழியாது, சொல் என்ன அப்படிப் பொய்த்தது” என்றான்.
அவள் சொன்னாள் ” நீ ராமனாக வந்தபோது சொன்னாய், நான் படித்திருக்கின்றேன் “மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந” எனச் சொன்னாய் அல்லவா?” என்றாள்.
“ஆமாம், ஒருவன் முழுக்க என்னை நம்பி வராவிட்டால் கூட அந்தப் பாவனையில் நண்பனைப் போல் என்னிடம் வந்தாலும் நான் அவனை ஏற்றுக்கொள்வேன், என்னை நோக்கி வந்தவர்களைக் கைவிடமாட்டேன்” எனச் சொன்னேன்.
“ஆமாம், அதேதான். ஆனால், என்னை மட்டும் ஏன் ஏமாற்றுகின்றாய், உன்னை நம்பிய எல்லாரையும் அணைத்து வரம்ருளிய நீ, நான் கேட்கும் வரத்தை மட்டும் ஏன் தரமறுக்கின்றாய், அதுவும் ராமன் சொன்ன சொல் தவறமாட்டான் என எனக்கும் ஊருக்கும் சொல்லி சொல்லி கொடுத்தாரே பெரியாழ்வார் அவரின் மகள் இப்படி உன் சொல்கேட்டு ஏமாந்துவிட்டால் எவ்வளவு பெரிய பழி. அது எனக்கும் பழி. அதைவிட உனக்கும் பழி அல்லவா? அதைத்தான் அந்த முல்லை கொடியிடம் சொல்லி அழுதேன்” என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“அப்படியெல்லாம் உன்னை விடமாட்டேன் கண்ணே, காலமிருக்கின்றது கலங்காதே” என்றான், அவள் அவன் தோளில் இறுக சாய்ந்து கொண்டாள். அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான் கண்ணன்.
“சொன்ன சொல் தவறாதவன் நீ என்பது எனக்கும் தெரியும், ஆனால் …” என்றவள் அவனின் புன்னகையினைக் கண்டு மீண்டும் வார்த்தையின்றி போனாள்.
“என்ன கண்ணே, ஏதோ சொல்லவந்தாய் ஆனால் சொல்லவில்லை” என மீண்டும் கேட்டான் கண்ணன்.
“இல்லை, நீ உன்னைத் தேடி வந்தவர் முழு அன்பில்லை என்றாலும் உன்மேல் அன்பாக இருப்பது போல் கருதி வந்தாலும் ஏற்றுக்கொள்வேன் எனச் சொன்னாய், ஆனால் அந்தச் சூர்ப்பனகையினை ஏன் மூக்கறுத்தாய்?” சொன்னவள் மெல்லச் சிரித்துக் கொண்டு ஒன்றும் தெரியாதவள் போல் இருந்து கொண்டாள்.
அவன் என்ன எனத் திரும்பக் கேட்டான் “அவளும் உன்னை நம்பித்தானே வந்தாள் விரும்பி வந்தாள் அவள் யாராகவும் இருக்கட்டும் அவள் உன்னை நம்பி வரும்போது மூக்கை அறுத்துபோட்டாய் அல்லவா?
அப்படித்தானே உன்னை நம்பியிருக்கும் என் நிலைமையும் ஆகும், என்னை நீ ஊர்முன் அவமானப்படுத்தினால் சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியது போல் என்னையும் அவமானப்படுத்தினால் நான் என்ன செய்வேன்?
அவளுக்கும் உனக்கும் என்ன பகை? உன்னைக் கண்டாள் விரும்பினாள், நான் உன்னைக் காணாமலே விரும்பினேன், அவளை ஏற்றுக்கொள்ளா நீ, என்னை மட்டும் ஏற்பாயா? உன் வாக்கு அங்குப் பொய்த்தது போல் என் வாழ்விலும் பொய்த்துவிட்டால் என்னாகும்? ” என்றவள் கேவி அழுதாள்.
அவளின் அழுகை பெரிதாய் இருந்தது, ஏங்கிக் கேவி அழுதாள்.
மெல்லக் கண்களை மூடினான் கண்ணன், கையின் விரல்களால் கண்ணை அழுத்தி சுருக்கிக் கொண்டான், மெல்லப் புன்னகைத்தவன் ஆண்டாளின் இடது கையினைப் பிடித்து அவள் உள்ளங்கையினைப் பார்க்கச் சொன்னான்.
கண்களைத் துடைத்தபடி என்ன என்றாள் ஆண்டாள் “ம்ம் பார்” என்றான்.
அவள் கை அப்படியே பெரிதானது, பெரிதான கையில் காட்சிகள் கண்ணாடியில் பார்ப்பது போல் இருந்தன, அது பஞ்சவடி எனும் அழகிய வனம், மலர்கள் சூழ்ந்த அந்த வனம் இனிய நறுமணத்தினைக் கொடுக்கின்றது, வண்டுகள் ரீங்காரமிட்டு அங்கும் இங்கும் பறக்கின்றன், பழமரங்களில் பறவைகள் பாடிக் கொண்டிருந்தன, அழகான புல்வெளியில் நுனிப்புல்லை முயல் மேய, அடிபுல் வரை மான்கள் கடித்துக் கொண்டிருந்தன.
அந்த வனத்தில் ஒரு சிறிய ஓடைக்கு அப்பக்கம் சிறிய குடில் வாசலில் ராமன் அமர்ந்திருக்கின்றான், சற்றுத் தள்ளி அமர்ந்த லட்சுமனண் வில்லை சரிபார்த்துக் கொண்டிருக்கின்றான், சீதை உள்ளே ஏதோ செய்து கொண்டிருக்கின்றாள்.
அந்நேரம் சற்றுத் தள்ளி ஒரு பறக்கும் தேர் ஒன்று வந்து இறங்குகின்றது, அதிலிருந்து ஒரு பெண் இறங்கி அந்த மலர்களைப் பறித்தபடியே நடக்கின்றாள், அந்தக் குடிலை பார்க்கின்றாள், இது நமது காடு அல்லவா? இவர்கள் யார் அந்நியர்கள் என்றபடி வேகமாக வந்தவள் அங்கே அமர்ந்திருக்கும் ராமனைக் கண்டதும் அப்படியே சிலையாய் நின்றாள்.
மலை உச்சியில் இருந்து விழும் நதி வேகமாய் வீழ்வது போல் வந்தவள் அவனைக் கண்டதும் அந்நதி நிலத்தில் தயங்கிச் செல்வதைப் போல் மெல்ல மெல்ல அவனை நோக்கி நடந்தாள், அவன் அழகில் அப்படி மயங்கியிருந்தாள்.
ராமன் தன் வழக்கமான புன்னகையினைச் சிந்த அவள் சொக்கிப்போனாள், தான் யார் என்பதைத் தன் குலம் என்ன என்பதை இன்னும் எல்லாவற்றையும் மறந்தவள் அவனைப் பசிக்கும் கண்களுடன் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
ராமன் அவளிடம் யாரம்மா நீ இங்கு என்ன செய்கின்றாய் என மெல்ல வினவினான்.
அவனின் இனிய மொழிகளைக் கேட்டவள் நான் இந்த வனத்துகுரியவள், என் தாய் கேசி என் தந்தை விஸ்ரவ முனி, என் பெயர் காமவல்லி என்றாள்.
அவளை உற்று நோக்கினான் ராமன், ஆண்டாளும் அதனை உன்னிப்பாகக் கண்டாள்.
மிகுந்த அழகான தோற்றத்துடன் யட்சகுல பெண்களின் சாயலில் அவள் இருந்தாள், அவள் வம்சம் யட்சரும் பிராமணரும் கலந்த குலம் என்பதால் தெய்வீக அழகோடு இருந்தாள், பெண்மைக்குரிய எல்லாமும் மிகச் கச்சிதமாக பொருந்தியவளாய் புத்தம் புது மலராய் மிகுந்த எழிலாய் ஓளிவீசும் பொன்னிலவாய் நின்றாள்.
ஆனால், கொஞ்சமும் சலனில்லா ராமன் சொன்னான் “நல்ல குலத்தில் பிறந்திருக்கின்றாய் மணமாகிவிட்டதா?”
அந்த வாய்ப்புக்குக் காத்திருந்தவள் தான் விதவை என்பதை மறைத்து “இல்லை, நான் விரும்பும் ஒருவனுக்குக் காத்திருக்கின்றேன்” என்றாள்.
“அவனை விரைவில் சந்திக்க வாழ்த்துகின்றேன்” என்றான் ராமன், “அவனைக் கண்முன் காண்கின்றேன்” என்றாள், அவன் மெல்லப் புன்னகைத்தான், அந்த புன்னகை அவளின் ஆசை தீயினை இன்னும் அதிகரித்தது, யார் இவன் என மனதினில் எண்ணியவள் தன் வம்ச வரத்தின்படி மனதால் அவனை ராமன் அயோத்தி அரசன் என எல்லாமும் உணர்ந்து கொண்டாள் அவள் ஆசை இன்னும் அதிகமாயிற்று.
ஆண்டாள் தன் கையில் அக்காட்சியினை ஆச்சரியமாக கண்டுகொண்டிருந்தாள், அருகில் கண்ணன் புன்னகைத்தபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அம்மா, நான் மணமானவன்” என்றான், அவள் விடாமல் சொன்னாள் ” உங்கள் தந்தை தசரதன் அல்லவா? அவருக்கு 60 ஆயிரம் மனைவி உண்டெனும் போது நான் உங்களை மணப்பதில் என்ன தவறு”
“இல்லையம்மா, நான் ஏகபத்தினி விரதன். அதுவும் நீ பெரிய குலத்துக்காரி, உன் அண்ணன் ராவணன், உன் உறவினரான குபேரன் என எல்லோரும் கன்னிகாதானம் செய்யும்படி நீ முறையாக ஒருவரைத் திருமணம் செய்வதே சரி.
அன்றியும் நான் ஷத்திரியன். நீ பிராமண குலம், எனக்கு என் ராஜ்ஜியத்தை ஆள ஷத்திரிய வம்ச வாரிசுதான் வேண்டும். அதுவே நியதி அதனால் இந்த ஆசையினைக் களைவாய்” என்றான்.
“கன்னிகாதானத்தை விட கந்தர்வ மணம் சிறந்தது அல்லவா? பெற்றோர் அறிந்து கொடுக்கும் முன்பின் தெரியாத மணவாளனை விட தனக்குப் பிடித்தவனை மனதைக் கொண்டவனை ஒரு பெண் அடைவது சிறந்ததல்லவா, என்னை ஏற்றுக்கொள்” என்றாள் அவள்.
“பெண்ணே, இது பொருந்தாது, நான் ஏகபத்தினி விரதன், அதுவுமன்றி உன் பாட்டி தாடகையினையெல்லாம் கொன்றவன் நான், அந்நிலையில் காலத்துக்கும் இது பொருந்தாது, நீ வந்த வேலை எதுவோ அதைச் செய்துவிட்டு செல்” என்றான்.
“அவள் இப்போது இருந்திருந்தால் உனக்காக நானே அவளைக் கொன்றிருப்பேன் தெரியுமா? உனக்காக எதையும் செய்வேன், என்னை ஏற்றுக்கொள்” என்றாள்.
முடியாது என ராமன் மறுக்கின்றான், உன்னை அடையாமல் விடமாட்டேன் நீயே என் கனவு என்கின்றாள் சூர்ப்பனகை வாதம் சத்தமாகி சீதை வெளிவருகின்றாள், லட்சுமணனும் அருகில் வருகின்றான்.
“நீ சொன்னதெல்லாம் வெறும் வெற்றுக் காரணம், ஷத்திரியன் பல மணம் செய்யக் கூடாது என்பது எங்கே உண்டு? உனக்குப் பல தாரம் வரலாம் அதில் ஒன்றாக என்னைச் சேர்த்துக்கொள்” என்றவள் இன்னும் உக்கிரமானாள்.
ராமன் மறுத்தான்.
“ஒரு காரணம் உருப்படியாக சொல், நம்பும்படி சொல்” என்றாள் சூர்ப்பநகை.
“இதோ என் மனைவி சீதை, இவளையன்றி என்னால் யாரையும் மனைவியாக கருதமுடியாது நான் ஏகபத்தினி விரதன்” என்றான் ராமன்.
“அப்படியா, ஆக ஒரே ஒரு மனைவியுடன் மட்டும் வாழ்வாய் அல்லவா?
ஆமாம்.
அது இந்த சீதை?
ஆம், இவளே மனைவி அந்த ஒரு மனைவியுடன் மட்டுமே வாழ்வேன்.
ஒரு மன்னன் மனைவி இன்றி இருக்கக் கூடாது என்பது விதி என்பதை நீ அறிவாய்.
ஆம்.
அப்படியானால் இவள் இல்லாவிட்டால் நீ இன்னொரு திருமணம் செய்தாக வேண்டும்.
என்ன உளறுகின்றாய்?
உளறவில்லை உள்ளதை சொல்கின்றேன், உன்னை அடைய இவள் தடை என்றால் அதனை அகற்றத்தான் வேண்டும் என்றவள் தன் கையினை உயர்த்தி சீதையினை நோக்கிச் சென்றாள், அவள் கைவிரல் நகத்தின் கூர்மை அவள் உண்மையிலே கூர்நகத்துக்காரி அதாவது சூர்ப்பனகை என்பதைச் சரியாகச் சொன்னது.
அவளின் தோற்றம் அப்போது தாடகை பாட்டியின் ஆவேசத்தை எட்டியது, அவள் சீதையினை நெருங்கும் போது முந்திகொண்ட லட்சுமணன் அவள் வாளை வீசினான். அது அவள் நுனி மூக்கை வெட்டி வீழ்த்தி அவள் மார்பில் விழுந்து அங்கும் வெட்டி வீழ்த்தியது.
அவள் அலறினாள், ஆர்ப்பரித்தாள். அதுவரை ராவணனின் தங்கையாக மகா சக்தியாக வலம் வந்தவள் அங்குப் பெரும் அவமானப்பட்டாள், லட்சுமணனின் ஆத்திரம் இன்னும் அடங்காததை கண்டவள் தன் தேரில் ஏறி ஓடினாள்”
அக்காட்சியினைக் கண்டு அப்படியே உறைந்துபோனாள், கண்ணன் இன்னும் பார் என்றான்.
அங்கே ராவணன் மாளிகை தெரிந்தது, மண்டோதரி அருகில் நிற்கின்றாள், சற்றுத் தள்ளி அறையில் கும்பகர்ணன் உறங்கிக் கொண்டிருக்கின்றான், தங்கையின் நிலைகண்டு கொதிக்கின்றான் ராவணன்.
அப்போதும் சூர்ப்பனகை அசையவில்லை. மெதுவாகச் சொன்னாள், அங்கே ஒரு மிக சிறந்த அழகான பெண் இருக்கின்றாள், உலகில் அவளைப்போல் அழகி யாருமில்லை அவளின் ஆட்கள்தான் என்னை வெட்டிவிட்டார்கள், அவர்களும் மிக்க அழகானவர்கள்”
காட்சி அத்தோடு முடிந்தது.
“இதுதான் ஆண்டாளே நடந்தது, அவளை நான் வேண்டுமென்று மூக்கினை வெட்டவில்லை, அவள் என்னிடம் வாதம் செய்தாள் நடக்கமுடியா ஒன்றை கோரினாள், அத்தோடு சீதையினைக் கொல்ல முயன்றாள்.
கவனித்தாயா கண்ணே, ராவணனிடம் அவள் சொன்னபோதும் சீதையினைத்தான் குறிவைத்தாள், சீதையினை இல்லாமல் செய்துவிட்டால் அவள் இடம் காலியாகிவிட்டால் அங்கே தான் அமர்ந்து கொள்ளலாம் என்பதே அவள் திட்டமாய் இருந்தது.
இந்த உள்நோக்கமெல்லாமே அவளின் இன்னலுக்குக் காரணமானதே தவிர நான் அல்ல, அவள் சீதையினைக் கொல்ல முயன்றாள். அடாதன அத்தனையும் செய்தாள்.
அவள் என்மேல் கொண்ட ஆசை அன்பல்ல, பக்தியல்ல அது அவர்கள் குலம் அழியும்படி அவள் செய்த கர்மவிதி. சீதையால் ராவணன் அழிய அவள் ஒரு கர்மத்தின் கருவி, அவளை அகற்றிவிட்டால் என்னை அடையலாம் எனும் குறுகிய சிந்தனையால் விதி செய்த கர்மத்தின் வடிவம் அவள். அவளாலேதான் அதர்மம் அழிந்து போனது. தர்மம் தழைத்தது.
வாலியினை நான் வதம் செய்தது போல் சூர்ப்பனகை மூக்கினை வெட்டியதும் என்மேல் உள்ள பழி என்பதை அறிவேன் ஆனால் அதை அவளின் கர்மமே செய்யவைத்தது, சீதைமேல் கொண்ட வெறுப்பால் அவள் அந்த முடிவினை தேடிக் கொண்டாள்.
ஆண்டாளே, லட்சுமணன் அவள் மூக்கை வெட்டியது அவமானப்படுத்த அல்ல, சூர்ப்பனகை யட்சகுலம் தொடர்புடையவள் அவளின் மூக்கு மிக மிக சூட்சுமமானது.
மூக்கு என்பது வெறுமனே சுவாச உறுப்பு அல்ல, அங்கு லட்சணக்கான நரம்புகளின் சூட்சும சங்கமம் உண்டு, அதுதான் மணத்தினை உணரவைக்கும், மூக்கு சொல்லும் மணத்தின் குணம் ஒருவனை இயக்கும்.
நல்ல மணம் கோவிலில் சாந்தம் தரும், உணவின் வாசனை பசியினைத் தூண்டும், இன்னும் பலவித வாசனைகள் பலவித உணர்வுகளைக் கொடுக்கும், இதனாலேதான் எப்போதும் நல்ல வாசனை இருப்பது நல்லது என மலர்களும் தூபங்களும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள ரிஷிகள் சொன்னார்கள்.
யட்சிகளுக்கு இது இன்னும் கூடுதல். அவள் சீதையின் பெருமையினைத் தனக்கே உரித்தான வாசனையால் உணர்ந்தாள், அதனால் பெரும் பொறாமையுற்று அவளைக் கொல்லவும் துணிந்தாள், அங்கே அவள் மூக்கை லட்சுமணன் வெட்டினான் என்பது அவளின் மூல கர்மத்தை முடித்ததாகின்றது, அவளின் கர்மா சீதை பற்றி ராவணனிடம் சொல்வதோடு ஒரு அதர்மத்துக்கு எதிரான போரைத் தொடங்குவதோடு முடிகின்றது.
ராவணன் அவளைச் சிறை எடுத்தபின் இதே சூர்ப்பனகை அவளைக் கொன்றிருக்க முடியும். ஆனால், சீதை தெய்வாம்சமுள்ள பெண் என்பதை திரிசடை கண்ட கனவு முதல் பல சகுனங்கள் சொன்னது ஒரு பக்கம் என்றாலும் மூக்கினை இழந்த சூர்ப்பனகை தன் பெரிய பலத்தை இழந்தாள், அந்தப் பலமிழப்பால் அவள் தவக்கோலம் போல் திசைமாறினாளே தவிர சீதையினைக் கொல்வதோ என்னை அடைவதோ பற்றி யோசிக்கவில்லை, அவள் மூக்குமட்டும் அறுபடாமல் இருந்திருந்தால் அவள் பலம் இழந்திருக்கமாட்டாள், யுத்தத்தில் அவளும் தாடகை கோலத்தில் வந்திருக்கலாம்.
அங்கே லட்சுமணன் அவள் கர்மம் முடித்து அவளை ஆற்றுப்படுத்தி திசைமாற்றினான், அதோடு அவள் கர்மம் முடிந்து அமைதியனாள், காரணமின்றி காரியமில்லை ” என்றான்.
ஆண்டாள் தெளிந்தாள் “ஆனாலும் நீ இங்கும் சொன்னதைக் கவனித்தேன்” எனச் சொல்லித் தலைகுனிந்தாள், என்ன எனக் கேட்டான் கண்ணன்.
“சூர்ப்பனகையிடம் நீ வேறு குலம் நான் வேறுகுலம் என்றாய், அப்படித்தானே நீ தேவகுலம் நான் மானுடக் குலம் என என்னையும் எண்ணுவாய், அப்படி என்னை ஒதுக்கிவிட்டால் நான் என்ன செய்வேன்?
கண்ணா, நான் சீதை போன்ற பெரிய இடத்துக்கெல்லாம் ஆசைபடவில்லை, அரியணையில் சரிக்குச் சமம் அமரும் எண்ணமெல்லாம் இல்லை, வைகுண்டத்தில் பாற்கடலில் உன் பக்கம் அமரும் பெரும் ஆர்வமெல்லாம் இல்லை.
எனக்கு உன் காலடி நிழல் போதும், அந்த நிழலில் ஒரு ஓரம் போதும் உன்னைப் பார்த்தபடி உன் அருகில் நிற்கும் அந்த வரம்போதும், நான் அனுமார் போல் பலசாலி அல்ல, உன்னைக் காவல் காக்கும் வலிமையுமில்லை, ஆனால் உன் காலை ஒட்டிய தூசியிலும் புணணியம் உண்டு என்பதால் அந்தத் தூசுகளில் ஒன்றாக இருந்துவிட்டு போகின்றேன்.
என்னைச் சூர்ப்பனகை போல் அவமானப்படுத்திவிடாதே, கண்ணா நான் ஆசைக்கும் அச்சத்துக்கும் இடையே போராடுகின்றேன், மானுட உலகின் லௌகீக அடையாளங்களிலும் சிக்குகின்றேன், அதே நேரம் மாயை கடந்து உன்னிடம் வரவும் துடிக்கின்றேன்.
அதனால் குழம்புகின்றேன், என்னை அவமானப்பட விடாதே, எனக்குச் சீதையின் இடம் வேண்டாம், எனக்கு என் இடமான ஒரத்தில் ஒரு அடி போதும், உன் நிழல்பட்டால் போதும் அதை மட்டும் கொடுத்துவிடு”
சொன்னவள் அவன் மேல் சாய்ந்து கொண்டாள், அவளைத் தேற்றி சொன்னான் கண்ணன், “ஆண்டாளே, நீ பெரியாழ்வார் மகள் என்பதும் மாயை, நீ யார் என்பதும் உரிய காலம் தெரியவரும், ஆனால் நான் இருக்குமிடமெல்லாம் என் அருகில் நீயும் இருப்பாய், எக்காலமும் இருப்பாய் உனக்கு அந்த வரத்தை எப்போதோ தந்துவிட்டேன்” என்றான்.
அவள் மிகுந்த ஆனந்தத்துடன் அவன் முகத்தை இரு கைகளாலும் ஏந்திப் பார்த்தாள், அந்தப் புன்னகையினைச் சிந்தினான் கண்ணன், கண்கள் விரிய மிகுந்த ஏகாந்த ஆனந்தமாய் அவன் புன்னகையினைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அவள் நினைவுக்கு வந்தபோது முல்லை மலர்க்கொடி முன்னால் நின்று கொண்டிருந்தாள். காற்றில் அது மெல்ல ஆடியபோது நாணத்துடன் புன்னகைத்தாள், வேகமாக மலர்களைப் பறிததுத் தொடுத்தவள் அதோடு அபப்டியே கோவிலுக்குச் செல்லத் தயாரானாள்.
கோவிலில் மந்திரங்கள் ஓத கண்ணனுக்குப் பூஜைகள் நடந்துகொண்டிருந்தன, அவள் கண்ணனை உற்றுப்பார்த்தாள், அப்போது புல்லாங்குழலை கொஞ்சம் விலக்கி அவளுக்காய், அவளுக்காய் மட்டும் கண்ணன் புன்னகைத்ததை அறிந்து மனதுக்குள் குதூகலம் கொண்டாள்.
அவளுக்குக் கண்ணனுக்குச் சாற்றிய முல்லை மலர் மாலை பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது, மிகுந்த ஆனந்தத்துடன் அதை வாங்கியவள் கண்களில் ஒற்றிக்கொண்டு நோக்கினாள், அங்கே ஆயிரம் புன்னகையினைக் கண்ணன் சிந்திக்கொண்டிருந்தான்.