நாச்சியார் திருமொழி: 80
நாச்சியார் திருமொழி: 80 ( பாசுரம் 10.6, 10.7)
ஆண்டாள் மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். வைகுண்ட ஏகாதசி கொண்டாட அந்த மார்கழியில் மக்களெல்லாம் காத்திருந்தனர், அவளோ கடும் குழப்பத்தில் இருந்தாள், அவளைக் கண்ணன் தன்னோடு சேர்ப்பதுமில்லை, அதே நேரம் விலகவிடுவதுமில்லை.
அவளுக்குள்ளோ அச்சம் மிகுந்துகொண்டே வந்தது, அவள் எப்போதும் அவன் நினைவில் அவன் ஏக்கத்திலே நிறைந்திருக்க, அவனோ அவளை ஒரு விளையாட்டு பொருளாகக் கருதுகின்றானோ எனும் பெரும் கலக்கம் அவளுள் வந்தது.
அந்தக் கலக்கம் கொஞ்சம் கொஞ்சம் வெறுப்பாயிற்று. இனி அவனிடம் பேசவே கூடாது என முடிவெடுத்தாள். இதெல்லாம் அவள் வாழ்வில் அடிக்கடி நடக்கக் கூடியது, இனி அவனைப் பற்றிய எண்ணமே கூடாது என முடிவெடுத்திருப்பாள். ஆனால், சூரியனைக் கண்ட தாமரையாக, நிலவினைக் கண்ட அல்லியாக அவனை அல்லது அவன் நினைவினைக் கொடுப்பவற்றை கண்டவுடன் அவனுள் அவன் பூத்துவிடுவான்.
ஆனால், இம்முறை அப்படி அன்று, இனி என்ன ஆனாலும் அவனை நினைக்கவே கூடாது, அது முல்லைப்பூ, கோவைக் கனி, குயில்பாட்டு என எதுவானாலும் அவன் நினைவே வரக்கூடாது என முடிவெடுத்தவள் மாடிக்குச் சென்றாள்.
குளிர்ந்த அழகான காற்று சலசலக்க அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்தவள் வீட்டின் பின்னால் நந்தவனத்தில் இரு நாகங்கள் ஆடிமகிழ்ந்து கொண்டிருந்தன, பிணைந்து ஆடிக் கொண்டிருந்தன, அவைளின் நடனம் ஒருவித லயத்தில் இருந்தது, அதை மாடியில் இருந்து கண்டுகொண்டிருந்தாள் ஆண்டாள்.
அந்நேரம் சில மயில்கள் வந்தன, அந்த மயில்களைக் கண்டதும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த நாகங்கள் ஓடி மறைந்தன, இடியோசை கேட்டது போல் அவை ஓடி மறைந்தன, அப்படியான மயில்களின் வருகை அவளுக்குள் கண்ணனைக் காட்டின. அவற்றின் கருநீல நிறமும், வளைந்த கொண்டையும் அவளுக்குள் ஒருவித கிறக்கத்தைக் கொடுத்து கண்ணன் முகத்தை காட்டின.
மெல்லிய மார்கழி மாத மேகங்கள் கூரையிட்டபோது அவை ஆடத் தயாராயின.
அவற்றின் இறகுகளை அவை அசைத்தபோது மயிலிறகு சூடிய கண்ணனின் நினைவு வந்தது, இனியும் பொறுப்பதில்லை என்றவள் அவசரமாக மாடியிலிருந்து ஓடிச் சென்று அவற்றிடம் சென்று பாடினாள், கெஞ்சிப் பாடினாள்.
“கணமா மயில்காள்! கண்ண பிரான் திருக்கோலம் போன்று
அணிமா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு அடி வீழ்கின்றேன்
பணமாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்
மணவாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே”
நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்காள்! உம்
நடமாட்டம் காணப் பாவியேன் நான் ஓர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
உடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே?”
எனப் பாடியவள் அப்படியே அமர்ந்திருந்தாள், அவள் பாடியபின்னரும் மயில்கள் ஆடிக்கொண்டிருந்தன, அவள் அவற்றை இயலாமையுடன் கன்டாள். அவையோ அவளை இன்னும் வெறுப்பாக்கும்படி ஆடத் தொடங்கின.
அவள் அவைகளை எச்சரித்தாள், கத்தினள், அழுதாள் ஆனாலும் அவை ஆடத் தொடங்கின, அப்படியே கைகளால் முகத்தை பொத்திக் கொண்டவள் ஏங்கி அழுதாள், ஒருவித அவமானத்தில் அழுதாள், அப்படியே மயங்கியும் போனாள்.
கண்கள் திறந்தபோது மயிலாடும் சோலையில் அமர்ந்திருந்தாள், இப்போதும் அவை ஆடிக் கொண்டிருக்க “கண்ணா” என இயலாமையில கத்தினாள். அப்போது ஆடிக்கொண்டிருந்த மயிலின் இறகு ஒன்று தனியே எழுந்து வந்தது.
அதனை அப்படியே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த மயிலிறகு மேலேழுந்து அழகிய உருவமுமாயிற்று, அது கண்ணன் என அறிந்தவள் ஓடிச் சென்று தழுவிக் கொண்டாள், அவன் முகத்தை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டவள் மீண்டும் தழுவிக் கொண்டு
அந்த மயில்களை ஒருவித ஏளனத்தோடு நோக்கினாள், அவை இப்போது நாணத்துடன் ஓடிவிட்டன.
அவை ஓடியதைக் கண்ட கண்ணன் அவளை வியப்பாக நோக்கினான். அவள் புன்னகைத்தபடி அவன் மார்பில் சாய்ந்திருந்தாள், அப்படியே அந்தப் பசுந்தரையில் அமர்ந்தான் கண்ணன்.
மான்கள் சில கிட்டவந்து அவர்களைக் கண்டு உரசி நின்றன, சில முயல்கள் எங்கிருந்தோ வந்து துள்ளி துள்ளி விளையாடின, சற்றுத் தள்ளி ஓடிக்கொண்டிருந்த அமைதியான நதி அவர்களை நோக்கி தன் அலைகரங்களை வீசிக் கொண்டிருந்தது.
நதியின் குளிர்ச்சியினை எடுத்து புத்தம் புது காற்றாய் அவர்கள் மேல் வீசிக்கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று அது கண்ணன் கீழே வைத்த புல்லாங்குழலில் புகுந்து மெல்லிய இன்னிசையாக ஒலிக்கத் தொடங்கிற்று, தொலைவில் எங்கோ இடித்த இடி மிருதங்க சத்தம்போல் கேட்டது.
குயில்கள் மரக்கிளையில் அழகான பூக்கள் அருகே இருந்து கூவிக்கொண்டிருந்தன.
கண்ணன் அவற்றை எல்லாம் உற்றுப் பார்த்தான். அழகான ஜதிபோல் நதியோசை; இனிமையான குழலோசை; மேக கூட்டமெழுப்பும் மிருதங்க ஓசையில் மானும் முயலும் ஏன் நதியில் மீன்களுமே ஆடும்போது இந்த மயில்கள் ஏன் ஓடிபோயிற்று?
இந்த இனிய ஏகாந்த சூழலில் மயில்கள் ஏன் ஆடவில்லை என யோசித்தவன், ஆண்டாளிடமே கேட்டான், “கண்ணே மயில்களிடம் அப்படி என்ன பாடினாய்? அவை ஏன் நான் வந்ததும் தோற்று ஓடின?”
அவள் அவன் கரங்களைப் பற்றித் தன் தோளில் போட்டபடியே சொன்னாள், கொஞ்சம் நாணமாய்ச் சொன்னாள்.
‘கண்ணா, நானே உன் நினைவினால் கடுமையாகப் பாதிக்கபட்டிருக்கின்றேன், உன் நினைவும் ஏக்கமும் என்னைக் கடுமையாக ஆட்கொணட நிலையில் உன்னைப் போல் கருநீல நிறமுடைய இந்த மயில்கள் உன் நினைவினை இன்னும் இன்னும் அதிகமாக்கி என்னை சீண்டுவது போல் நகைத்தன.
நான் அவைகள் காலை பிடித்துச் சொன்னேன். அழகான நடனம் பயின்ற மயில்களே பாம்பணை மேல் பள்ளி கொண்டிருப்பவன் நினைவால் நான் ஏற்கனவே வருந்தி கிடக்கின்றேன், மயில் பீலி அணிந்த அவன் முகத்தை அவனின் நடனத்தை என்னிடம் காட்டாதீர்கள் எனக் கெஞ்சினேன். அவை இன்னும் ஆடத் தயாராயின, நான் அவைகள் காலை பிடித்து ஆடாதீர்கள் எனக் கெஞ்சினேன், அவைகள் இன்னும் என்னைச் சீண்டின, இந்த நிலைமைக்கு என்னை ஆளாக்கிவிட்டானே எனக கதறினேன். ஆனாலும், அவை ஆடின.
நான் இன்னும் கதற, அவை மீண்டும் ஆடின, நான் இதனால் உறுதியாகச் சொன்னேன்.
நீங்கள் என்ன ஆடுவது? குடமெடுத்து ஆடுபவனை விட நீங்கள் பெரிதாக ஆடிவிட்டீர்களா? அவன் என்னை முழுமையாக ஆட்கொண்டதால் என் மனம் அவனிடமே இருக்கின்றது, என் கண்கள் அவனை மட்டுமே காண்கின்றன, இப்படியான நிலையில் நீங்கள் நடனமாடினால் எனக்கு என்ன ஆகப்போகின்றது, இதனால் உங்கள் நடனம் என்னைப் பாதிக்காது, அவசியமில்லாமல் ஆடாதீர்கள்” எனச் சொன்னேன்.
“அவைகள் உடனே ஆடலை நிறுத்திவிட்டதா?” என்றான்.
“இல்லை கண்ணா, அவைகள் இன்னும் ஆடின. நான் அவைகளிடம் கெஞ்சுவதை அவை ஏளனமாகக் கருதி இன்னும் ஆடின, எனக்குக் கோபம் வந்துவிட்டது. ஏ மயில்களே நீங்கள் இஷ்டத்துக்கு ஆடுங்கள். ஆனால், அந்தக் குடமாடும் கூத்தன் என்னில் முழுக்க வந்து என் கண் நிறைந்து மனம் நிறைந்து நிற்பதால் என் கண்களெல்லாம் அவனே நிறைந்திருக்கின்றான், என் கண் என்னிடமில்லை என்பதால் நீங்கள் ஆடினால் என்ன ஆடாவிட்டால் என்ன? எனச் சொல்லிவிட்டேன்.
அப்போது நீயும் வந்துவிட்டதால் அவை நாணத்தில் ஓடிவிட்டன” என்றவள் அவன் முகத்தை ஏறேடுத்து பார்த்துவிட்டு தோளில் மறுபடியும் குழந்தையாய்ச் சாய்ந்து கொண்டாள்.
“மயிலிடமுமா என்னைக் காண்பாய், அவைகளிடம் ஏன் கால்பிடித்தாய்” என்ற கண்ணன் அவளை உச்சியில் முகர்ந்து கொண்டான், அவள் அவன் விரல்களைப் பற்றியபடி சொன்னாள்.
“மயிலின் நடனம் அழகல்லவா கண்ணா, பரத முனிவர் மானிடர்க்குச் சொல்லிக் கொடுத்த அந்தக் கலை யாரும் சொல்லாமலே அவைகளுக்கு வந்துவிட்டது, அதுவும் தோகை விரித்தபடி காலை மாற்றி மாற்றி அவை அசைந்தாடும்போது தோகை சிலிர்க்க அவை சுழன்றாடும்போது எவ்வளவு அழகு.
நான் அந்த அழகில் மட்டும் பாடவில்லை கண்ணா, அவைகள் அப்படி ஜதியிட்டு ஆடும்போது காளிங்கன் மேல் நீ ஆடிய அந்த நடனமே கண்ணுக்குள் வந்தது, மயில்களின் நடனமே இப்படி என்றால் அதுவும் மயில்கள் பாம்பினை விரட்டி ஆடும் நடனமே இப்படி என்றால் அந்தக் காளிங்கன் மேல் நீ ஆடிய நடனம் எப்படி இருந்திருக்கும், அதுவும் நடனம் எனும் பெயரில் காளிங்னை நீ அடக்கிய காட்சி உச்சமாக அவன் தலைமீது ஏறி அவன் வாலை பிடித்து நின்ற காட்சி எப்படி இருந்திருக்கும்.
அந்தக் காட்சியெல்லாம் கண்ணுக்குள் வந்தன, தோகை விரித்து நின்ற மயிலின் நடனம் நீ காளிங்கன் மேல் செய்த நர்த்தனம் போலிருந்தது, நீ அந்த காளிங்கனின் வாலினைப் பிடித்து நின்ற காட்சி என் கண்முன் வந்தது” என்றவள் மெல்ல நிறுத்தினாள்.
அந்தக் கரங்கள் இரண்டையும் பற்றிக்கொண்டு சொன்னாள், “இந்தக் கரங்கள்தானே கண்ணா அவன் வாலை பிடித்தது? இதே கரங்கள்தானே கண்ணா என் பாதங்களை மணமேடையில் நான் கண்ட கனவில் பிடித்தது, அந்தக் கைகள் எப்படிப்பட்ட கைகள்.
நான் அங்கே மயில் நடனமிடும்போது நான் மயிலை காணவில்லை, அங்கே அதன் உருவமோ அழகோ காணவில்லை. நான் என்னை மறந்து உன் பாதங்களைக் கண்டேன், காளிங்கன் மேல் ஆடும் அந்தக் கால்களையும் வாலை பிடித்த கைகளையுமே கண்டேன், அதனால் ஓடிச் சென்று அவற்றின் பாதம்பற்றினேன்.
ஆனால், அவைகளோ நான் அவற்றின் அழகில் மயங்கி சரணடைவதாக நினைத்தன, அதனால் மீண்டும் தயாராகி என்னைப் பார்த்துச் சிரித்தன.
நான் அப்போதும் சொன்னேன், ஏ மயிலே பாம்பின்மேல் படுத்திருக்கும் அந்த மாயவன் உன் பாதத்தை பிடிக்கும்படி செய்தான் என்றால் அது அவனைக் கண்டே, இங்கு அவன் உருவைக கண்டே எனச் சொன்னேன். அவையோ பரிகசித்து மீண்டும் ஆடத் தயாராயின” என்றாள்.
“அத்தோடு விட்டுவிட வேண்டியதுதானே கண்ணே, அவைகள் அறிந்தா செய்கின்றன?” என்ற கண்ணன் அவள் தலையினைக் கோதி விட்டான்.
அவள் சொன்னாள், “அப்படி எல்லாம் விடமுடியாது கண்ணா, அவைகள் நடனம் என்ன உன்னைவிட சிறந்தவையா? அதனால் அவை என்னைச் சீண்டும்படி மீண்டும் மீண்டும் ஆடமுனைந்தபோது சொன்னேன், கோவர்த்தன மலையினையே சுமந்து ஆடியவன் என் கண்ணன், குடங்களைக் கொண்டு கூத்தாடிக் காண்போர் கண்களை எல்லாம் ஈர்த்தவன் என் கண்ணன், நீங்கள் என்ன ஆடினாலும் அவனைப்போல் வராது. என் கண்ணே அவனிடம் சென்றபின் என் சிந்தையும் கண்ணும் எங்கும் அவனையே காணும்போது நீங்கள் என்ன ஆடினால் என்ன? எனச் சொன்னேன்.
அப்போது நீயும் வந்துவிட்டாய் அல்லவா? அதனால் அவை நாணி ஓடிவிட்டன” என்றாள், அவன் பதிலேதும் பேசவில்லை, அமைதியாக அவளை அணைத்துக் கொண்டான்.
“கண்ணே, மயிலை கண்டபோதும் நானா உன் கண்ணில் தெரிந்தேன்” என்றான் கண்ணன்.
“ஆம், நீ இல்லாதபோதெல்லாம் நானும் தசரதன் போல் ஆகிவிட்டேன் கண்ணா, ராமனை பிரிந்த அவன் என் கண் ராமனோடு போயிற்று என்பான் அல்லவா? அப்படி என் மனம் உன்னோடு செல்ல அதனோடு என் கண்ணும் போயிற்று, கண்ணன் என்றால் நீ என் கண்ணுமானவன் அல்லவா?” என்றாள்.
“அதற்காக மயில்களிடமுமா பேசுவாய், முன்பு குயில்களோடு பேசினாய், என் மேல் நம்பிக்கை இல்லையா?” என்றான்.
“உன் மேலான நம்பிக்கை ஒன்றில்தானே நான் வாழ்கின்றேன் கண்ணா, ஆனால் மானுடரிடம் என் நிலைமையினை சொல்ல முடியுமா? எல்லோரும் நகைப்பார்கள், உன்னைத் தேடினால் நீ வருவதுமில்லை.
இதனால் என் துயரத்தை நான் மயிலிடமும் குயிலிடமும் சொல்லி ஆறுதலைடைகின்றேன், இன்று மயில்களிடம் சொல்லி அவை பதிலுக்கு என்னைச் சீண்டும்போது நீ வந்துவிட்டாய்.
கண்ணா, நடனம் என்பது கூத்து என்பது என்ன? பார்ப்போரை அப்படியே தன்னில் இழுத்துக் கண்களை விலக்காமல் பார்க்கவைத்து இழுத்துக் கொள்வது, அந்த மயில்களை விட நீ அதில் தேர்ந்தவன் அல்லவா?
உன்னைக் கண்டவர் கண்களை விலக்கிவிடமுடியுமா? எல்லாக் கண்களையும் உன்னில் ஈர்ப்பதால்தானே நீ கண்ணன்? , எதையும் செய்யாமலே காண்போரை ஈர்க்கும் நீ, நடனமாடி ஈர்த்த இடம் காளிங்கன் நர்த்தனமும், குடமாடி ஈர்த்த இடமும், அதைத்தான் நான் மயில்களிடம் சொன்னேன்.
நர்த்தன கிருஷ்ணனாக நீ நிற்கும் தலங்கள் பல உண்டு, குடமாடி கூத்தனாக நிற்கும் விண்ணகரம் போன்ற ஆலயங்கள் உண்டு. அவற்றையெல்லாம் சொல்லி எண்ணிப் பாடினேன்” என்றவள் அவனை இறுகப் பிடித்துக் கொண்டு பேச்சினை நிறுத்தினாள்.
அவன் அவளின் காதோரம் அசைந்த கூந்தலை ஒதுக்கி அவள் முன் தலையில் முத்தமிட்டான், அவள் முகம் மாறியிருந்ததை அறிந்து என்ன கண்ணே என்றான்?
“கண்ணா, நடனம் என்பது என்ன? சீரான அசைவு, முறையான் லயமான அசைவு. இந்த உலகம் அப்படியான லயத்தில் இயங்குகின்றது, இங்கு அணுக்கள் அப்படி இயங்குகின்றது, கோள்கள் இயங்குகின்றது, இந்தப் பிரபஞ்சம் இயங்குகின்றது… மானிட உடலும் அப்படியான இயக்கத்தில் இயங்குகின்றது.
இந்த இயக்கமே உன் ஆனந்த நடனம், குடத்தை வைத்து நீ ஆடுவது என்பது இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் லௌகீக தார்மீக நடனம், காளிங்கனை நீ நடனமாடி அடக்கினாய் என்பது அகங்காரம் நீக்கிய நெஞ்சில் நீ ஆனந்தநடனமிடுகின்றாய் என்பதைச் சொல்லும், கண்களும் மனமும் உன்னைவிட்டு அகலாத நிலையில் எல்லாமே உன்னோடு ஐக்கியமாயிற்று, ஆத்மா உன்னோடு கலந்துவிட்டது என்பதைச் சொல்லும்.
எல்லா இயக்கம் எனும் நடனமும் நீ. அது கொடுக்கும் ஈர்ப்பினால் ஆத்மாவரை ஈர்த்து முக்தி கொடுப்பவனும் நீ. இந்த மகா பிரபஞ்சத்தை ஒருவித நடன லயத்தில் இயக்கும் நீயே மானுடரையும் எல்லா உயிரையும் படைப்பையும் இயக்குகின்றாய்.
அந்த நடனத்தை உன் பிரபஞ்ச நடனத்தை அறிந்தோர் உன்னிலே மோகித்து உன்னிலே ஈர்படைந்து உன்னோடு கரைந்துவிடுவர், அதைத்தான் பாடினேன் கண்ணா.
பாற்கடலில் பாம்பின் மேல் சயனம் கொள்பவன் நீ, அப்படி ஒரு பாம்புமேல் நடனமிடுபவனும் நீ, நடனமாடியே எல்லாவற்றையும் இயக்கி ஈர்ப்பவனும் நீ” என்றவள் அவனோடு ஒட்டிக் கொண்டாள்.
அவன் பெருமூச்சோடு அவளை அணைத்துக் கொண்டான், இனிய நதிகாற்று இருவரையும் தழுவிச் சென்றது, தொலைவில் குயில்கள் பாடிக்கொண்டிருந்தன.
“மயிலிலும் குயிலிலும் என்னைக் காணும் என் உயிரே, உன்னை நான் இருக்கும்டமெல்லாம் உடலும் உயிருமாகக் கொண்டிருப்பேன்” என்றான் கண்ணன்.
அவன் வார்த்தைளில் மயங்கி சிலிர்த்த ஆண்டாள், அவனைக் கொடிபோல் தழுவிக் கொண்டாள், அவள் அந்த ஆனந்தப் பரவசத்தில் சொன்னாள்.
“கண்ணா, இந்த உலகில் எல்லாமே ஒலி ஒளி வடிவம். அதாவது. நாத பிந்து வடிவில் உண்டு. ஒலியும் நீ, ஒளியும் நீ இவை இணைந்த படைப்பின் அடிப்படை தாத்பரியமே நீ , அதைத்தான் குயில் மயில் எனப் பாடினேன்.
நாகம் என்பது குண்டலினி சக்தியின் வடிவமல்லவா? குண்டலினி சக்தி எழும்பி இந்தப் பிரபஞ்சத்தோடு ஒருவன் ஆத்மரீதியாக கலந்துவிட்டால் அவனும் யோகியாகிவிடுவான், உன்னோடு கலந்துவிடுவான் அல்லவா?
பாற்கடலில் நீ பாம்பணை மேல் அது குடைபிடிக்க படுத்திருப்பதும், காளிங்கன் மேல் ஆடுவதும் யோகத்தால் உன்னை அடையலாம் என்பதல்லவா?
எனக்கு அதெல்லாம் தெரியாது, நான் வேதாந்தி அல்ல, யோக முறை அறிந்தவளுமல்ல. ஆனால், எனக்கு உன்னைத தெரியும் உன்னை மட்டும்தெரியும், கீதையில் ஒருவன் எப்படி என்னை வழிபட்டாலும் என்னையே அடைவான் எனச் சொன்னவன் நீ, சரணடைந்தால் முழுக்கக் காப்பேன் என உரைத்தவனும் நீ.
நான் ஏதேதோ புலம்புகின்றேன், கலங்கிய நீரில் தவிக்கும் மீன் போல் அல்லாடுகின்றேன், மானுட சுபாவத்துக்கும் உன் தெய்வ சுபாவத்துக்கும் இடையில் போராடுகின்றேன்.
இந்த மனதில் ஆயிரம் நாகங்கள் ஆடுகின்றது. அவற்றை நீயே அடக்கி என் மனதில் ஆனந்த நடனமிடு, எல்லா நாகங்களையும் சுருட்டி நீயே என்மனதில் சயனம் கொள்.
கண்ணா, எனக்கு உன்னைத் தவிர யாரும் மனதால் தெரியாது, உன் உருவம் தவிர வேறு உருவம் கண்ணிலும் தெரியாது, உன் புகழ் தவிர வேறு வார்த்தை என் வாய் அறியாது, உனக்கான சேகவம் தவிர வேறு எதுவும் என் கால்கள் அறியாது.
நீயே என்னை ஏற்றுக்கொள் கண்ணா, நடனமாக இவ்வுலகை இயக்கும் நீ உன் வைகுண்டத்தில் என்னைச் சேர்த்துங் கொள், உன் அருகே இருக்க வாய்ப்பு கொடு, காலமெல்லாம் உன்னோடு என்னை வைத்துக்கொள், என்னை கைவிட்டுவிடாதே, மயில்கால்களை எல்லாம் பிடித்து நிற்கும் அளவு என்னைத் தள்ளிவிடாதே” என்றவள் கண்கள் கலங்கிப் போயிற்று.
“ஆண்டாளே, மயிலாகவும் குயிலாகவும் நீ பல தத்துவங்களைச் சொன்னாய், என் பிந்துவடிவமாக நான் இருக்கும் இடமெல்லாம் நீ இருப்பாய், என் நாத வடிவாக உன் பாடலும் எப்போதும் இருக்கும், நானும் நீயும் எக்காலமும் பிரிக்கமுடியா பந்தமாய் கலந்திருப்போம்” என்றான்.
“அப்படியானால் என்னை உன்னோடு அழைத்துச் செல்” என்றாள்.
கண்ணன் புன்னகைத்தான். அங்கேபெரிய மயில் கூட்டம் வந்தது, அதில் பொன்னிறமாக மின்னும் பெரிய அழகு மயில் அவள் முன்னே வந்து நின்றது, கண்ணன் அவளை அதன் முதுகில் ஏறச் சொன்னான்.
அவள் ஏறமுடியாமல் தயங்கியபோது அவள் கால்களைத் தன் கையால் தாங்கிப் பிடித்து ஏற்றிவைத்தான், அவள் ஏறி அமர்ந்ததும் மயில் பறந்தது , அதன் மேல் அமர்ந்திருந்தவள் அஞ்சி நடுங்கி அலறினாள், அந்த வேகம் அவளுக்கு அச்சம் கொடுத்தது.
“கண்ணா…” என அவள் கத்தியபோது இரு கரங்கள் இருபக்கமும் அவளைப் பிடித்துக் கொண்டன, தான் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தவள் மேகக் கூட்டமெல்லாம் பஞ்சு மூட்டையாக மிதப்பதைக் கண்டாள்.
மயில் இன்னும் இன்னும் உயர்ந்தது, அவள் கோள்கள் மண்டலம் சூரிய மண்டலம் பெரிய வான் மண்டலமெல்லாம் கடந்து செல்வதை உணர்ந்தாள்.
மயில் அப்படியே அவளை ஒளிமிக்க ஒரு இடத்தில் சேர்த்தது, அவள் இறங்க முடியாமல் தவித்தபோது அதே கரம் அவள் தாள்பற்றி தாங்கி இறங்க வைத்தது.
நித்ய சூரிகள், அடியார்கள், இன்னும் இன்னும் பெரிய தேவர்களெல்லாம் பகவானைப போற்றி துதிக்க அவளும் அந்தக் கூட்டத்தின் ஓரத்தில் நின்றாள், எல்லோரும் மூடிய கதவினை நோக்கியபடியே இருந்தனர், பாடல்களும் துதிகளும் பெரிதாகப் பாடப்பட்டு பகவான் நாமம் சொல்லி துதித்துக் கொண்டிருந்தார்கள்.
திடீரென பெரிய மணியோசை கேட்டது, பிரமாண்டமான சங்கொலிகளெல்லாம் எழும்பின, இரு பெரிய துவாரபாலகர்கள் கதவினைத் திறந்தார்கள், எல்லாரும் ஒருசேர உள்ளே புகுந்தார்கள், அந்தக் கூட்டத்தில் ஆண்டாள் திணறினாள், தடுமாறினாள்.
அப்போது அதே கரம் அவள் கரத்தை பற்றி முன்னே இழுத்துச் சென்றது. வாசல் அருகே வந்ததும் அவள் காலை அதே கரங்கள் பிடித்து வாசலை தாண்டி உள்ளே வைத்து அவளை அழைத்தன, அவள் எதிர்கொண்டு பார்த்தாள். அங்கே பரந்தாமன் புன்னகைத்தபடி வா ஆண்டாளே என்றான், ஆண்டாள் தன் மாபெரும் பாக்கியமும் ஏக்கமும் கண்முன் நடப்பதை கண்டு ஓடிப் போனாள்.
அத்தோடு அவள் கண் திறக்கும்போது தன் வீட்டு நந்தவனத்தில் இருப்பதை அறிந்தாள், மயில் எதிரே இல்லை. மாறாக, அழகான பூக்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.
அவள் நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்துப் புன்னகைத்தாள், அவளுக்குள் இப்போது பெரும் நம்பிக்கையும் உற்சாகமும் வந்திருந்தது, எல்லோரையும் போல அவளும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புக்குத் தயாராகி ஆலயம் சென்றாள்.
அங்கே எல்லோரும் கூடியிருக்கும் போது சொர்க்கவாசல் கதவில் கண்ணன் காளிங்கன் மேல் ஆடும் நர்த்தன நடனம் அவளுக்கு மட்டும் தெரிந்தது.