நாச்சியார் திருமொழி : 81
நாச்சியார் திருமொழி : 81 (பாசுரம் 10.8)
அந்த மழைக்காலப் பொழுதில் ஆண்டாள் வழக்கம் போல் மனதில் குழப்பத்துடன் கண்ணனை நினைத்தபடி அமர்ந்திருந்தாள், எல்லா உயிரும் மயங்கி தன் துணையுடன் மகிழும் அந்தக் கார் காலத்தில் கண்ணனின் நினைவு அவளுக்குள் அதிகம் வந்தது.
அது அனலாய் அவளுக்குள் கொதித்தது, கொதித்த மனதுடனும் குழம்பிய சிந்தையுடனும் அவள் வானம் நோக்கினாள்.
சக்கரவாக பறவைகள் மழைநீர் அருந்த உற்சாகமாய்ப் பறந்து கொண்டிருந்தன, வானத்தில் கரிய மேகங்கள் யானைகளை போல் நகர்ந்து கொண்டிருந்தன, தூரத்தில் இடியோசை கேட்டுக் கொண்டிருந்தது, இதமான குளிர்க்காற்று மழையின் முன்னறிவிப்பாக வீசிக் கொண்டிருந்தது.
ஆண்டாள் வானம் பார்த்தாள். அந்த மேகங்கள் வித விதமான வடிவம் காட்டிற்று. பெரிய பெரிய மலைகளாய், அழகான பஞ்சு, வெண் பருத்தி காடுகளாய் , கடலுக்குச் சவால்விடும் வெண்ணிற நுரைகளின் அழகாய்க் காட்டிற்று, திடீரென கருத்து கருப்பும் வெண்மையுமான கலவையாய் அது பல வடிவங்களைக் காட்டிற்று.
பெரிய யானைபோலும், பெரிய கருப்பு பானை போலும் அது பிரமாண்ட வடிவங்கள் பல காட்டிற்று, ஆண்டாள் அதன் வடிவ மாற்றங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். வழக்கம் போல் கண்ணனின் நினைவும் அதில் கலந்து கொள்ள அந்தப் பல வடிவங்களை ரசித்துக் கொண்டே இருந்தாள்.
திடீரென அந்தக் கார்மேகம் சரசரவென மழையாய்க் கொட்ட ஆரம்பித்தது, அந்தச் சிலிர்ப்பில் நனைந்தபடி அவள் சுற்றிப் பார்த்தாள்.
பறவைகள் ஜோடி ஜோடியாக நனைந்தபடி ஓடின. மான்களும் இதர விலங்குகளும் ஜோடி ஜோடியாக ஓடினார்கள். தவளை கூட தன் இணையுடன் கத்தி மகிழ்ந்து கொண்டிருந்தது, மரங்கள் தங்களை சுற்றியிருந்த கொடிகளுடன் நனைந்து கொண்டிருந்தன.
அதே நேரம் பூமி தன் வெப்பம் தணிந்த அடையாளமாக ஆவியினை வெளியேற்றி குளிர்ந்தது, அது குளிர்ந்ததின் அடையாளமாக மண் வாசனை எங்கும் பரவிற்று.
அவை எல்லாம் கண்ட ஆண்டாள் பாடினாள்.
“மழையே! மழையே! மண்புறம் பூசி உள்ளாய் நின்று
மெழுகு ஊற்றினாற் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப் பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்படத்
தழுவ நின்று என்னைத் ததர்த்திக் கொண்டு ஊற்றவும் வல்லையே?”
சக்கரவாக பறவை மழையில் நனைந்தபடி நீர் அருந்துவதைப் போல், மழையில் நனைந்த நிலையிலும் கண்ணா, கண்ணா என அவள் சொல்லி சிலிர்த்துக் கொண்டு மழையிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
திடீரென அவள் மேல் மழைத்துளி படுவது நின்றுவிட்டது, ஆனால் அவளைச் சுற்றி மழை பெய்து கொண்டிருந்தது, ஏன் தன் மேல் மட்டும் மழைதுளி விழவில்லை என வியந்தவள் ஆச்சரியமடைந்தாள். வானிலிருந்து வரும் மழைத்துளி அவளிடம் இருந்து விலகித் தரையில் வீழ்ந்தது.
அவள் ஆச்சரியமாய் அதனை நோக்கிக் கொண்டிருக்கும் போதே காலடி பக்கமாய் யாரோ நீரில் கால்வைக்கும் சத்தம் கேட்டது, நீர் வேகமாக தெரித்து விழுந்ததில் அதை அறிந்தவள் “கண்ணா” என்றாள்.
ஒரு கரம் அவள் தோளை தொட்டது, அவள் மழைத்துளி பட்டதை விட இப்போது அதிகம் சிலிரித்துக் கொண்டாள், அவர்கள் தலைக்கு மேல் வில் போல் தோன்றிய வளைவு நீரை தடுத்தது, அழகான ஊஞ்சல் ஒன்று அங்கு வந்தது.
அதில் ஆண்டாள் அமர அருகில் கண்ணனும் அமர்ந்து கொண்டான், அவள் நாணத்துடன் அவன் தோளில் கைபோட்டபடி அவன் நெஞ்சில் ஒட்டிக் கொண்டாள், மழை தொடர்ந்து பெய்ய சாரல் அவர்கள் மேல் அடித்தது, மழை சத்தத்தின் நடுவில் மெல்லிய அமைதி நீடித்தது.
அந்த அமைதியில் ஆடும் ஊஞ்சலில் இருந்தபடி தன் நெஞ்சில் சாய்ந்து கிடந்த ஆண்டாளிடம் கண்ணன் கேட்டான், “என்ன பாடினாய் ஆண்டாளே?”
அவள் சிரித்தபடி சொன்னாள், “மேகம் மழையினை பூமிமேல் ஊற்றத் தொடங்கியதும் என்னைச் சுற்றி எல்லாமும் ஜோடியுடன் நனைந்து கொண்டிருந்தது, நான் மட்டும் தனியே நனைந்து கொண்டிருந்தேன் கண்ணா.
இந்தப் பூமியின் வெப்பமெல்லாம் அந்த மழையால் அடங்கிற்று, தவித்த மரம் செடி கொடிகளின் தாக நெருப்பும் அடங்கிற்று, உயிர்களின் தாகத்துக்கும் வழி கிடைத்தது, ஆனால் எனக்குள் எழும் கொதிப்புக்கும் வெப்பத்துக்க்குமான தீர்வு வரவே இல்லையே? அதனால் என் உளக் கொதிப்பைச் சொல்லி நானும் என் கண்ணனும் சேர்ந்திருக்கும் போது வந்து இப்படிப் பொழிந்து என் மனக்கொதிப்பை தீர்ப்பாய் எனச் சொல்லி பாடினேன், நீயும் வந்துவிட்டாய் என்றவள் கட்டிக் கொண்டாள்.
அவன் மெல்ல புன்னகைத்து அவள் தலை கோதிவிட்டான், அவள் அவனை ஏறேடுத்துப் பார்த்ததாள். பின் பார்வையினை விலக்கியவள் மீண்டும் அவனைப் பார்த்தாள், அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் முன் நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னான் கண்ணன், “கண்ணே மழையினை வா என்றால் வரப்போகின்றது, அதற்கு ஏன் மெழுகு என்றாய்? வெளிப்புறம் மண் பூசவேண்டும் என்றாய்? ஒன்றுமே புரியவில்லை” என்றான்.
உனக்காப் புரியாது என்பது போல் அவனை மீண்டும் எழுந்து கண்டவள், “அதெல்லாம் உனக்குப் புரியும்” எனச் சொல்லி மீண்டும் சாய்ந்து கொண்டாள்.
“இல்லை கண்ணே எனக்குப் புரியவில்லை” என அவன் சொல்லி அவளைப் பற்றிக் கொண்டான், கொட்டும் மழைக்கு நடுவில் நனையாத ஊஞ்சலில் இருவரும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
அவள் மெல்ல சொல்ல ஆரம்பித்தாள், “கண்ணா, நீ எல்லா இடத்திலும் எல்லாமுமாக இருப்பவன். பாற்கடலில் இருப்பாய், வைகுண்டத்திலும் இருப்பாய், அதே நேரம் கோகுலத்திலும் இருப்பாய், எங்கும் வியாபித்துமிருப்பாய் என்றெல்லாம் தத்வார்த்தமாக சொன்னாலும் என்னைப் பொறுத்தவரை நீ ஒன்று என் அருகில் இருப்பாய், இல்லை என் மனதில் இருப்பாய்.
இப்போது நீ அருகிருப்பதால் நான் நெகிழ்கின்றேன், ஆனால் மற்றநேரமெல்லாம் நீ என் மனதுள்ளே இருக்கின்றாய், நானோ உன்னை எப்போதும் என் அருகில் வைத்துப் பார்த்திருக்க விரும்புகின்றேன். அதனால் மழையிடம் சொன்னேன், சிலைகள் செய்யும்போது மெழுகு உள்ளிருந்து வெளிவருவது போல் என்னில் இருக்கும் திருவேங்கட நாதனை என் அருகில் வைத்து நான் கண்டு மகிழும் நாளில் நீ என்னை இப்படி நீராட்டு, அப்போதுதான் என் மனக்கொதிப்பும் ஏக்கமும் அடங்கும். மற்றபடி என் கொதிப்பு தனிமையில் அணையாது. மண்ணின் வெப்பம் போக்கும் நீ என் வெப்பத்தை போக்க முடியாது எனச் சொன்னேன் கண்ணா” என்றாள்.
“இப்போதும் புரியவில்லை கண்ணே, வர வர நீ வேதாந்தி ஆகிவிட்டாய்” எனச சொல்லி நெற்றி சுருக்கினான் கண்ணன். அவள் எழுந்து அவனை நோக்கி அமர்ந்து காலை மடக்கி அமர்ந்து அவன் தோளைப் பிடித்து அவனைத் திருப்பி வைத்து அவன் கையில் இருக்கும் புல்லாங்குழலை பறித்து தன் மடியில் வைத்துக் கொண்டு இரு கைகளாலும் அவன் காதுகளைப் பிடித்தபடி சொன்னாள்.
“கண்ணா, இந்தப் பூமிக்குள் எல்லாமே மறைந்திருக்கின்றது அல்லது சுருக்கப்பட்டு மறைந்திருக்கின்றது, இதோ இந்த மழை வந்து அவற்றை வெளிக் கொண்டு வருகின்றது.
இந்த மழையாலே மண்ணில் இருந்து செடி கொடி பயிர்கள் என எல்லாம் வருகின்றன; அவை உணவுத தருகின்றன; கனி தருகின்றன; அழகான பூக்கள் தருகின்றன. இன்னும் என்னவெல்லாமோ தருகின்றன. இந்த மழை மண்ணில் விழுந்து இப்படி மாறுகின்றதா? இல்லை மழை மண்ணுக்குள் சென்றதும் இவை எல்லாம் வெளிவருகின்றதா என்பதே இன்னும் புரியவிலலை.
ஆனால் மண்ணுக்குள் மழை விழுந்து எல்லாமும் வெளிவருகின்றதல்லவா? அங்கே ஒரு படைப்பு நடக்கின்றதல்லவா? அப்படி என்னுள் இருக்கும் உன்னை வெளிக்கொணரும் சக்தி மழைக்கு இல்லை, அதனை இந்த மழை கொண்டுவர முடியாது, இதனால் சிலை செய்யமுடியுமா? அந்தப் பொம்மை மண்ணில் மழை விழுந்தால் சிலையாகுமா? ஆகாது.
அதற்கென உள்ள உலோக மழை நீராக கொட்டினால் அந்த பொம்மை மண் சிலையாகும் அல்லவா? அதைத்தான் சொன்னேன்” என்றாள்.
அவள் கைகளை உலுக்கியபடி கேட்டான் கண்ணன், “அது என்ன பொம்மை மண்? அது என்ன உலோக மழை?”
அவன் கன்னங்களை இரு கைகளாலும் பிடித்து ஆட்டியபடி கொஞ்சும் மொழியில் சொன்னாள் ஆண்டாள், “கண்ணா, உலோக சிலை அல்லது பாத்திரம் போன்றவை செய்யும் போது முதலில் மெழுகினால் மாதிரியினை செய்வார்கள், பின் உள்ளேயும் வெளியேயும் மண்ணால் பூசி பொம்மை போல் செய்து வைப்பார்கள்.
மேலே ஒரு சிறிய துளை எடுத்து கொதிக்கும் உலோகத்தை நீர் போல் உள்ளே செலுத்துவார்கள் அப்போது மெழுகு எல்லாம் உருகி இன்னொரு துவாரம் வழியே வெளியேறிவிடும், உலோகக் கலவை நீர் மட்டும் மண் அச்சுக்குள் அப்படியே கட்டுப்பட்டு நின்று கெட்டியாகும், பின் அப்படியே அதனைச் சில காலம் வைத்திருந்து நன்றாக குளிர்ந்தபின் நீரூற்றி மண்ணை அகற்றுவார்கள். உள்ளே சிலையோ பாத்திரமோ வெளிவரும்.
ஆக மண்ணுக்குள் இருந்துதான் இந்த உலோகக் கலை பொருட்களும் வெளிவரும் கண்ணா, இதைத்தான் பாடினேன், இப்போது புரிகின்றதா?” எனக் குழந்தையாய்க் கேட்டாள்.
அவன் குறும்பாக பாதி புரிகின்றது என்றான்.
அவள் கொஞ்சம் இதழ் விரித்து புன்னகைத்தாள். அவள் அருகில் நெருக்கமாக சென்று கண்களைப் பார்த்தபடி இருந்தவள் மெல்ல அவனை இறுக்கியபடி அவன் மடியில் தஞ்சமடைந்தது போல் கிடந்து சொன்னாள்.
“கண்ணா, இந்த மழை மண்ணில் மறைந்திருப்பதை வெளிவர செய்து அதற்கோர் வடிவம் கொடுக்கும், அந்த வார்ப்பு பட்டறையில் கொதிக்கும் உலோகம் உள்ளே மறைந்திருக்கும் மெழுகின் வடிவம் படி அங்கோர் வடிவத்தை சிலையாகக் கொடுக்கும்.
அப்படி என் மனதில் இருக்கும் உன்னை நானும் ஒருவடிவமாக என்னருகே வைக்க விருப்பம் கொண்டே மழையிடம் பாடினேன் கண்ணா”
எனச் சொன்னவள் மெல்ல எழுந்து தலையினை முடிந்து கொண்டாள், முகத்தை துடைத்துக் கொண்டு சொல்லத் துவங்கினாள்.
“கண்ணா, நீ எல்லார் மனதிலும் உண்டு, மண்ணுக்குள் மறைந்திருக்கும் உயிர் சக்தி போல் நீ மானிட மனதில் மறைந்திருக்கின்றாய், மழை மண்ணில் புகுந்து அந்த உயிர்சக்திக்கு உருவம் கொடுப்பது போல் ஞான ஊற்று எனும் தூய்மையான ஞானம் மனதில் எழும்போது அந்த மாய மெழுகு வெளியேறி நீயே ஒரு வடிவில் ஞானக் கண்ணுக்குத் தெரிகின்றாய்.
கண்ணா, நீ வடிவமற்றவன். பாத்திரத்தில் வைக்கப்படும் நீர் அந்த வடிவினை பெறுவது போல் உன்னை எந்த வடிவில் வணங்குவோமோ அந்த வடிவில் பக்தரை ஆட்கொள்பவன், இதனை நீயே கீதையில் எங்களுக்கு உரைத்தாய்.
உன்னை ஏதோ ஒரு வடிவில் வணங்கி உன் அனுகிரகத்தால் மனதில் ஞானம் வரும்போது மாயை நீங்கும் போது உன்னைக் காணமுடியும். உன் அருள்மழையில் நனையமுடியும், இதைத்தான் அப்பாடலில் பாடினேன்” என்றவள் இன்னும் தீர்க்கமாக அவனைக் கண்டாள்.
“என்ன கண்ணே?” எனக் கேட்டான் கண்ணன்.
“கண்ணா, மனதில் உன்னைச் சுமந்துகொண்டே உனக்கான உருவினை வெளியில் தந்தவர்கள் அழியாத் தெய்வநிலை அடைந்தார்கள், வெறும் மெழுகும் மண்ணும் உலோகக் குழம்பால் சிலையாகி இறுகித் தெய்வநிலையினை அடைவது போல் இந்த உடலிலும் அதை இயக்கும் உயிரிலும் உன் ஞானச் சுடரை பெற்றவர்கள் உன் ஞான அக்னியினைப் பெற்றவர்கள் அழியா இடம் அடைந்தார்கள்.
ஆழ்வார்களும் உன் அடியார்களும் அப்படித் தெய்வநிலைக்கு உயர்ந்தவர்கள்.
வெறும் மண்ணும் மெழுகும் வார்ப்பு கலவையினைத் தன்னில் ஏற்றுச் சிலையினைத் தருகின்றது, அந்த மண்ணும் மெழுகும் நீங்கினாலும் அந்தச் சிலை தெய்வதன்மையாய் நிற்கின்றது, அப்படியே உன்னில் தெளிந்த ஞானம் கொண்டவர்கள் உன்னால் உன் அனுகிரஹத்தால் முக்தி ஞானம் வாய்க்கப்பட்டவர்கள் உயிரும் உடலும் அழிந்தாலும் நிலைபெற்று நிற்பார்கள்.
அதைத்தான் நான்பாடினேன் கண்ணா. உடலும் உயிரும் இருக்கும்போதே மனதால் உன்னைத் தொழுது உன் ஞானத்தால் உன்னை அடைதலே உன்னை உணர்ந்து பற்றிக் கொள்ளுதலே வாழ்வின் பொருள், பிறப்பின் நோக்கம், அதைத்தான் இப்பாடலில் பாடினேன் கண்ணா.
மண்ணுக்குள் இருப்பதெல்லாம் மழையால் வெளிவரும், மானிட மனதில் இருப்பதெல்லாம் அவரவர் செயலால் வெளிவரும், அங்கே உன் ஞானத்தை உன் அனுகிரஹத்தை பெற்றோர்க்குத் தெய்வ தன்மையே ஓங்கி அவர்கள் செய்யும் காரியமெல்லாம் தெய்வீகக் காரியமாகும் கண்ணா”
அவன் அவளைப் பெருமையுடன் பார்த்தான், அவள் வெட்கமும் சிலிர்ப்பும் குழந்தைத்தனமும் கொண்ட பார்வை பார்த்தாள், வெளியே கொட்டும் மழையின் குளிர்க்காற்று வீச இருவரும் ஆடும அந்த ஊசலில் அமர்ந்திருந்தார்கள்.
அவள் தொடர்ந்தாள், “கண்ணா என் மனதிலும் ஞானம் தருவாயா, உன்னை முழுக்க ஏற்று நானும் தெய்வத்தன்மை அடைந்து என்னில் இருக்கும் உன்னை உலகெல்லாம் காண வழி செய்வாயா?
என் மனதில் நீ இருக்கின்றாய், நீ மட்டுமே இருக்கின்றாய். அது உனக்கும் தெரியும், எனக்கு அது மட்டும்தான் தெரியும், இந்த உலகுக்கு அது தெரியாது. அது என்னை ஏளனமும் அவமானமும் கொண்ட பார்வை பார்க்கின்றது.
நான்படும் அவமானம் நினைந்து நான் அஞ்சவில்லை. ஆனால், உன்னை நம்பிய நான் இப்படி கைவிடப்பட்டேன், உன்னையே மனதில் சுமந்த நான் ஒன்றுமில்லாதவளானேன். கண்ணன் என்னைக் கைவிட்டான் எனும் அவமானம் உன்னைச் சாரும் அல்லவா? அதற்கே அஞ்சுகின்றேன்.
என் மனதில் உள்ள நீ வெளியே என் கண்ணனாக வருவாயா? என் செயல்களில் வார்த்தைகளில் நான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் உன் தெய்வீகத்தை தருவாயா? காலமெல்லாம் நானும் உன் அருளில் தெய்வச்சிலை போல காலத்துக்கும் நிலைத்திருப்பேனா? உன்னையே நினைத்து ஏங்கும் இந்த மனதுக்கு அந்த வரத்தைத் தருவாயா?
நான் வெறும் மானுடத்தி, நீயோ தெய்வம், நாங்கள் உன்னை வேண்டத்தான் முடியும். ஆனால், தான் விரும்பும் இடத்தில் பெய்யும் மழைபோல நீ விரும்பும் மானுடர்க்கே உன் அருளைத் தருவாய், என்னையும் அதில் சேர்ப்பாயா? எனக்கும் உன் அருள்மழை கிடைக்குமா? என் மனதில் இருக்கும் நீ வெளிவந்து நிற்பாயா? என்னையும் உன்னோடு சேர்த்துக் கொள்வாயா?
இந்த உடலும் உயிரும் நீங்கியபின்னும் உன் உருவில் நான் நிலைத்திருப்பேனா? அந்த வரத்தைத் தருவாயா? எனக்கு அது போதும், அது மட்டும் போதும், இந்த மண்ணில் பிறந்த அபலைக்கு மனதால் அந்த வரத்தை தருவாயா?” எனச் சொல்லி அவன் பாதம் பணிந்தாள்.
கண்ணன் அவளைத் தூக்கி நிறுத்திச் சொன்னான், ” என் கண்ணே, உன் மனதில் நான் இருக்கும்போது என் மனதில் நீ இருக்கமாட்டாயா? உன்னில் இருந்து நான் வெளிவந்து நிற்பதை விட என் மனதில் இருந்து வெளிவந்து நின்றால் உனக்குப் பெருமை அல்லவா?”
ஆண்டாள் அவனை வியப்பாக பார்த்தாள், ஆச்சரியமாக தலை தூக்கிப் பார்த்தாள், சந்தோஷமாய்ப் பார்த்தாள்.
அவன் புன்னகைத்தபடி சொன்னான், “எங்கெல்லாம் நான் இருப்பேனோ அங்கு என் மனதின் வடிவமாய், என் மனதில் இருந்து. வெளிவந்த வடிவமாய் என் அருகில் சந்நிதி கொண்டிருப்பாய், என் மனமும் நீயும் வேறல்ல, நீயும் நானும் வேறல்ல என்பதை அகிலமே அறிந்து கொள்ளும்”
கண்ணா, இதைவிட என்ன வேண்டும் என ஆரவாரமாய்ச் சொன்ன ஆண்டாள் அவன் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றி முத்தம் செய்து அவனைத் தழுவி கொண்டாள்.
மெய்மறந்திருந்த அவள் கண்களைத் திறக்கும் போது அவனைக் காணவில்லை. ஊஞ்சலுமில்லை மழையுமில்லை. எல்லாம் மறைந்திருந்தது. அவள் கண்ணா, எங்கே சென்றாய் எனச் சுற்றி சுற்றி தேடினாள்.
அப்போது யாரோ நிலத்தின் ஈரமணலை எடுப்பது தெரிந்தது, அவள் அதனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அது ஒரு சிறிய சிலைபோல் அச்சுவடிவில் வந்தது, பெரிய இடியுடன் பிரகாசமான மின்னல் ஒன்று அதில் இறங்கியது.
அவள் அஞ்சி கண்களை மூடிக் கொண்டாள், சற்று நேரம் கழித்து அஞ்சியபடி அவள் கண்களைத் திறந்தபோது ஒரு மாய கரம் அந்த மணல் பொம்மையினை அவள் கரத்தில் கொடுத்தது.
ஆண்டாள் அதைப் பெற்றுக்கொண்டாள். அது கனமாக இருந்தது, என்ன இது எனக் குழம்பியவள் அந்த மணல் பொம்மையினை அருகில் தேங்கியிருந்த மழைநீரில் இட்டுக் கரைத்தாள்.
உள்ளே அழகான திருவேங்கட நாதனும் ஆண்டாளும் சிறிய சிலையாக இருந்தார்கள், அவள் அளவில்லா மகிழ்ச்சியுடன் “கண்ணா” எனக் கத்தினாள்.
“இந்தக் கோலத்தை நாளை உலகமே காணும் ஆண்டாளே, என்னில் இருந்த உன் உருவமும் உன்னில் இருந்த என் உருவமும் இது, என்மனதில் நான் உன்னைச் சுமந்தேன் உன் மனதில் நீ என்னைச் சுமந்தாய் என உலகமே காணும் சாட்சி இது’ என அசரீரி சொல்லிற்று.
ஆண்டாள் மிக்க மகிழ்ச்சியுடன் அச்சிலையுடன் வீடு திரும்பினாள். பூஜை அறையில் கண்ணன் அருகில் வைத்தாள், இப்போது கண்ணன் அர்த்தமுள்ள புன்னகை செய்து கொண்டிருந்தான், பதிலுக்கு அவளும் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில் காதலும் அன்பும் நன்றியும் மிகப் பெருகியிருந்தது.