நாச்சியார் திருமொழி : 82
நாச்சியார் திருமொழி : 82 (பாசுரம் 10(9))
ஆண்டாளுக்கு மனமெல்லாம் கண்ணன் நினைவாக இருந்தது. அவள் உயிரோடும் உணர்வோடும் கலந்த கண்ணனின் நினைவு அவளுள் அலை அலையாய் அடித்துக்கொண்டிருந்தது. இதயம் துடிக்கும் போதெல்லாம் அவன் நினைவும் சேர்ந்து சேர்ந்து அலையடித்துக் கொண்டே இருந்தது, கண்ணன் அவள் சுவாசமாய் இருந்ததால் அடிக்கடி பெருமூச்சு பெரும் காற்றாக வந்து கொண்டே இருந்தது.
அவள் அதிகாலையில் வழக்கம் போல் எழுந்தாள். அதுவரை கனவில் இருந்த கண்ணனின் நினைவு இப்போது அவளோடு கண் விழித்தபோதும் தொடர்ந்தது. புத்தம் புதிய அதிகாலைக்குரிய சூழலில் அவள் அமர்ந்திருந்தாள், அதிகாலை குளிர்க்காற்று தடாகங்களில் பூத்தத் தாமரையின் இனிய மணத்தினை அள்ளி எல்லா மலர்களின் வாசனையுடன் கலந்து வந்து அவளைச் சூழ்ந்தது.
வானில் பறவைகள் விடியலில் அறிகுறியாய் சப்தமிட்டபடி பறக்கத் துவங்கின, கறவை மாடுகள் கன்றுகளை அழைத்துக் கொண்டிருந்தன, கன்றுகள் பதிலுக்குத் தங்கள் தாய் அறிந்துகொள்ளும்படி பதில் கொடுத்துக் கொண்டிருந்தன.
புது மலர்களின் தேனைத் தேடி வண்டினங்கள் பறந்து கொண்டிருந்தன, அவைகளின் ரீங்காரம் இனிய சங்கீதமாய் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.
ஆண்டாள் இவை எல்லாம் பார்த்தபடி கண்ணனின் நினைவோடு அமர்ந்திருந்தாள், அந்நேரம் ஆச்சியர் பால் கறப்பதும் தயிரைக் கடைவதுமாக வேலைகளில் இறங்கினார்கள்.
எப்போதும் புது வெண்ணையினைக் கண்ணனுக்குப் படைத்து மகிழும் ஆண்டாள், அந்த வெண்ணெய்க்காய் காத்திருந்தாள், மத்தொலி முழங்க, ஆச்சியரின் கையில் கிடக்கும் வளையல்கள் ஒலி முழங்க அந்த வெண்ணிற தயிர் கடைவதை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அப்போது கண்ணனுக்கு வெண்ணெய் பிடிக்கும் என்பதைத் தாண்டி அவள் நினைவு பாற்கடலுக்குச் சென்றது, இப்படித்தான் பாற்கடலை கடைந்திருப்பார்கள் என்பதை நினைத்தபடி கடையும் தயிரைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
மாறி மாறி இடம் வலமாக மத்து சுழல தயிர் கலங்கி கலங்கி ஆட, அதைக் கண்டவள் மெல்லப் பாடினாள். அந்தத் தயிர்ப்பானை அவளுக்குப் பாற்கடலாய்த் தோன்றப் பாடினாள்.
“கடலே! கடலே! உன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகள் எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே”
அந்த மத்தினால் கடையப்படும் போது சில துளிகள் சட்டென அவள் முகத்தில் விழுந்தன, அவள் சட்டென கண்ணை மூடினாள், அப்படியே மூடிய கண்களுக்குள் காட்சிகள் தெரிந்தன, அவள் தன்னை மறந்தாள்.
மெல்லிய குழலோசை காதோரம் கேட்டது. அப்படியே சூழலைக் கண்டவள் அலையாடும் பாற்கடல் நடுவே தான் ஒரு பாறையில் அமர்ந்திருப்பதை அவதானித்தாள், யாருமற்ற பாறையில் அவள் தனித்து இருப்பதை உணர்ந்தவள் அப்படியே அமர்ந்து கொண்டாள்.
மெல்ல ஒரு குரல் கேட்டது. “ஆண்டாளே உனக்கு இப்படிக் கடல் நடுவே தனித்திருக்க அச்சமாக இல்லையா?”
அவள் இயல்பாய்ச் சொன்னாள், “நான் எங்கே தனியாய் இருக்கின்றேன், எப்போதும் கண்ணன் நினைவுடனே இருக்கின்றேன், அவன் நினைவு இருக்குமிடமெல்லாம் அவனும் இருப்பான், அதனால் அவனோடேதான் இருக்கின்றேன்”
அவள் சொன்னதும் வார்த்தை மானிட உருவில் வந்தது, கண்ணன் வழமையான கோலத்தில் தலையில் மயிலிறகு ஆடை, தன் அழகான புன்னகையினைச் சிந்தியபடி அவள் அருகே நின்றான்.
அவள் நாணத்துடன் அவன் கரம் பற்றிக் கொண்டாள். அவன் மெல்லக் கேட்டான், என்ன பாடினாய் கண்ணே?
உன்னைப் பற்றித்தான் பாடினேன், நீ இருக்குமிடமெல்லாம் அமைதியாகவா இருக்கும்? முதலில் பெரிய பெரிய கலக்கம் வரும், பெரிய துன்பமும் இக்கட்டும் சூழ்ந்ததுபோல் மிரட்டல் வரும், காலமும்விதியும் சுழன்று சுழன்று அடிக்கும், நீயோ ஒன்றுமறியாதவன் போல் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பாய். எல்லாம் நீயே நடத்தினாலும் அப்பாவியாய் அமர்ந்திருப்பாய்.
ஆனால், முடிவில் தர்மத்தை நிலைநாட்டுவாய், எது நித்தியமோ அதைச் சரியாகத் தருவாய். உனக்கு அவதாரம் தோறும் இதுவிளையாட்டு, அவதாரம் அல்லாத காலங்களிலும் அதுவே விளையாட்டு. எங்கே இருந்தாலும் அந்த இடத்தையே பெரிய களபேரம் செய்து பூகம்பம் வந்தது போல் புயலடித்தது போல் ஆக்கிவிடுவாய், படாதபாடுபடுத்தியே கடைசியில் நன்மையானதாய் தருவாய் அல்லவா அதைத்தான் பாடினேன்”
நெற்றிச் சுருக்கி அப்படியென்ன? என்பதுபோல் கேட்டான் கண்ணன், காதோரம் காதணிகள் அசைந்தாட குறுகுறு பார்வையால் அவனைப் பார்த்தபடி அவன் தோளில் சாய்ந்து சொன்னாள்.
“நீ அவதாரம் தோறும் அதைத்தானே செய்வாய், அமைதியாக வருவாய். ஒவ்வொருவரையும் பெரிய பெரிய கலக்கத்தில் தள்ளுவாய், எல்லோரையும் கதறவைப்பாய், மீளாத் துயரில் இட்டது போல் அச்சுறுத்துவாய், சக்கரத்தில் இட்டுச் சுழற்றுவது போல் சுழற்றுவாய்.
அப்படித்தான் பரசுராமனாய் வந்து பெரிய போர்களைச் செய்தாய், வாமனனாய் வந்து அசுரக்குலத்தையே குலைத்துப்போட்டாய், கண்ணனாய் வந்தபோதும், ராமனாய் வந்தபோதும் அப்படி இருக்குமிடம் அத்தனையும் பெரிய பெரிய குழப்பத்தை, பெரிய அழுகையினைக் கண்ணீரை அலைகழிப்பை கொடுத்தே பெரிய ஆரவார யுத்தத்திலே எல்லாவற்றையும் புரட்டி அலசிப்போட்டு கடைசியில் நல்லன அத்தனையும் தருவாய்” எனச் சொன்னவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவன் மெல்லப் புன்னகைத்து அவள் தலையினை வருடினான், அந்தச் சிலிர்ப்பில் அவள் தொடர்ந்தாள்.
“அப்படித்தான் உன்னைச் சுமக்கும் பாற்கடலை நீ கடைந்தாய், அதுவும் சும்மாவா கடைந்தாய்? உன்னைத் தாலாட்டும் கடல் என்றும் பாராமல் அதில் பெரிய பாறையினை இட்டு அதை உன்னை வழிபடும் நாகத்தைக் கயிறாக்கி உன்னையே நம்பிய தேவர்களை அசுரர்களை ஆட்களாக்கி எவ்வளவு நுணுக்கமாகக் கடைந்தாய்.
அதுவும் அது கடையப்படும் போது கரையில் இருந்து அந்ஞத கடல் படும்பாட்டை ரசித்தாய், அது கலங்கி கலங்கி குழம்பிப் படாத பாடுபட்டபோது உன் போக்கில் இருந்தாய், அந்தக் கடல் அவ்வளவுக்குக் கடையப்பட்டு நலிக்கப்பட்ட பின் அமிர்தம் கொடுத்தபோது எடுத்துக் கொண்டாய்.
இப்படி இருக்கும் இடமெல்லாம் பெரும் களபேரம் செய்து புரட்டிப்போட்டு உழலவைக்கும் நீ …” எனச் சொல்லி நிறுத்தினாள்.
ம்ம்ம்… என அவள் கரங்களைப் பற்றிக் கொண்டான் கண்ணன்.
தயங்கிச் சொன்னாள் ஆண்டாள். “அப்படியான நீ என் நெஞ்சிலும் இருக்கின்றாய், அங்கேயும் வழமையான அதே காரியத்தைச் செய்கின்றாய்” என்றவள் சற்று உடைந்த குரலில் அவன் தோள்சாய்ந்து கழுத்தினை மாலைபோல் தன் கரங்களால் வளைத்தபடி சொன்னாள்.
“கண்ணா, எந்தப் பாற்கடலில் நீ பள்ளிகொண்டபடி இருந்தாலும் அந்தப் பாற்கடலை கடைந்தாயோ, அப்படி என் மனதில் பள்ளி கொண்டிருக்கும் நீ என் மனதையும் கடைகின்றாய்” என்றவள் அவன் கரங்களை இன்னும் அழுத்தியபடிச் சொன்னாள்.
“கண்ணா, என் மனம் பாற்கடலை விடப் பெரிய அளவு என்னில் நிறைந்துள்ளாய் , அந்தப் பெரும் கடலில் உன் நினைவு எனும் அலை அடித்துக் கொண்டே இருக்கின்றது, ஆனால் உன்னை அடையவேண்டும் உன்னோடு ஒன்றாக வேண்டும் என்ற ஆசையில் அந்தப் பெரும் மனக்கடல் கடையப்படுகின்றது.
மூச்சே வடமாக உன் நினைவே மலையாக கொண்டு என் மனமும் கடையப்படுகின்றது, உன்னை அடையவேண்டும் என்ற ஆசையிலும் ஏக்கத்திலும் வேகமாக கடையப்படுகின்றது கண்ணா, என் மனமும் பாற்கடலைப் போலத்தான் பெரும் பாடு படுகின்றது.
அதைத்தான் பாடிச் சொன்னேன்.
என் மனதையும் நீ அப்படிப் புரட்டிப்போட்டு பெரும்பாடுபடுத்தி கடைகின்றாய் கண்ணா, என் ஆத்மா எனும் அமிர்தம் உனக்குக் கிடைக்கதான் கடைகின்றாய், அதை விரைவில் எடுத்துக்கொள், என் ஆத்மாவினை உன்னோடு சேர்த்துக்கொள்” எனச் சொல்லி அவனை அணைத்துக் கொண்டாள்.
கண்ணன் பெருமூச்சுடன் அவளை அணைத்துக் கொண்டு சொன்னான், “மறைந்திருப்பதை வெளிக்கொணர இதையெல்லாம் செய்யவேண்டித்தானே இருக்கின்றது, படைப்பின் தத்துவத்தை நான் மீறமுடியுமா கண்ணே.
இங்கு எல்லாமே போராடித்தானே வெளிக்கொணர வேண்டியிருக்கின்றது, அந்தப் போராட்டத்தில்தானே தீமை அழிந்து நன்மை செழிக்க உண்மை விளங்க வழி செய்யப்படுகின்றது, அதைத்தான் உலகை காக்க நானும் ஒவ்வொரு இடத்திலும் செய்யவேண்டியதாயிற்று”
அவள் சொன்னாள் “ஆம் கண்ணா, நீ எல்லா இடத்திலும் பரவியிருக்கின்றாய், எள்ளில் எண்ணெயாய், மலர்களில் தேனாய், விறகில் நெருப்பாய், பாலில் நெய்யாய், மண்ணுக்குள் பொன்னாய் எல்லா இடமும் நீ மறைந்திருக்கின்றாய், அப்படி எங்கள் மனதிலும் நீ மறைந்திருக்கின்றாய்.
உன்னைத் தேடி தேடி அடைவதில் பல கட்டங்களைக் கடக்க வேண்டும், பாற்கடலை நீ கடைந்து அமிர்தம் பெற்றதும், பாவக்கடலான எங்கள் மனதை நாங்கள் கடைந்து உன்னை அடைவதும் ஒரே தத்துவமன்றோ? என்றாள்.
அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் தொடர்ந்தாள், “கண்ணா பாலுக்குள் நெய்போல் என்னுள் மறைந்திருப்பவன் நீ, உன்னை தன்னில் தேடி ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும் கண்ணா. நானும் என் மனதில் உன்னைத் தேடி தேடி அடைய முயல்கின்றேன், ஆனால் தோற்கின்றேன். ஒவ்வொரு நாளும் நான் முயன்று தோற்க தோற்க தான் எனக்கோர் உண்மை புரிந்தது”
என்ன ஆண்டாளே என்றான் கண்ணன்.
“நீ ஏன் கூர்ம அவதாரம் எடுத்தாய் என்பது அப்போதுதான் புரியும் கண்ணா, கூர்மமாய் வந்து நீ மந்தார மலையினைத் தாங்கினாய் என்பது வெறும் லௌகீக அடையாளம் அல்ல, ஐம்புலன்களையும் ஆமைபோல் அடக்கி உன்னிடம் அடைக்கலமாக வேண்டும், புலனைந்தும் அடக்கி உன்னைச் சரணடைந்தால் நீ வந்து எமது பிறப்பை தாங்கிக் கொள்வாய்.
கண்ணா, ஆமை என்பது வழிகாட்டக் கூடியது, எந்தக் கடலினையும் அது எளிதாகக் தாங்கும், ஐம்புலன் அடக்கி உன்னைச் சரணடைந்தால் நீ பிறவிக்கடலை கடக்க வழிசெய்வாய் என்பதைக் கூர்மம் என்றார்கள், கூர்ம அவதார தத்துவம் அதுதான் கண்ணா.. அங்கே மனதை அடக்கி முதுகெலும்பினை நேராக வைத்து மூச்சு எனும் கயிற்றால் சிந்தை எனும் மந்தார மலையினைக் கொண்டு மனம் எனும் பாற்கடலை கடைந்தால் அமிர்தம் எனும் ஞான முக்தி கிடைக்கும்” என்றாள்.
“கண்ணே நீ யோக தத்துவமெல்லாம் பேசுகின்றாய்?” என்றான் கண்ணன்,. அவள் அவனில் சரிந்து கொண்டு சொன்னாள்.
“யோகம் என்பது என்ன கண்ணா? எல்லாம் ஒன்று கூடுதலே யோகம், மனம் சிந்தை, எண்ணம் என எல்லாமும் நீயே. ஆனால், அதுதான் யோகம். யோகியர் என்றால் அப்படி மனம், சிந்தை, அறிவு, புத்தி, எண்ணம் என எல்லாவற்றிலும் உன்னைக் கண்டு உன்னோடு கூடியவர்கள்.
அப்படி உன்னைத் தன்னில் தேடி அடைந்தவர் யோகியர் கண்ணா, தன்னில் உன்னைக் காண ஐம்புலனையும் அடக்கி உன்னைச் சரணடைந்தால் மூச்சினைக் கொண்டு மனதை ஒருமுக எண்ணத்தால் அடக்கினால் அங்கே ஆமை போல் வந்து எம்மைத் தாங்கி பிறவிக்கடலை கடக்க உதவுவாய், உன்மேல் உன் அடித்தளத்தில் நின்று நாங்கள் மனதைக் கடையும் போது எல்லா ஞானமும் பெறுவோம்” என்றாள்.
அப்படியா கண்ணே எனப் புரியாதது போல் கேட்டான் கண்ணன்.
“கண்ணா, பாற்கடலை கடையும் போது முதலில் விஷம் எல்லாம் வந்துவெளியேறி பின் எல்லாவகை செல்வமும் வந்தது. கடைசியாக, அமிர்தம் வந்தது. அப்படி ஒருவன் மூச்சை அடக்கி மனதைக் கடையும் போது உன்னில் நின்று தவமிருக்கும் போது மனதின் எல்லா அழுக்கும் முதலில் வெளியேறும். பின் அந்த மனதில் இருந்து மகான்களுக்குரிய அற்புதச் செல்வம் ஒவ்வொன்றாய் வரும், கடைசியில் எல்லாச் செல்வத்திலும் பெரிய செல்வமான முக்தி எனும் ஞானம் உன்னோடு கலக்கும்படி வரும்.
உன்னோடு கலந்துவிடும் அந்தப் பெரும் ஞானமே அமிர்தம் சுரக்கும் நிலையாகும்” என்றவள் சொல்லிவிட்டு அவனை நோக்கினாள்.
“என்னைத் தேடி தேடி யோகியர் நிலை அத்தனையும் கற்றுக்கொண்டாய்” எனச் சொல்லி அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான் கண்ணன்.
“உன்னைத் தேடிச் செல்ல செல்ல அதுதானே கிடைக்கும் கண்ணா” மெல்லிய குரலில் கேட்டாள்.
“கண்ணா, இதெல்லாம் நான் கேள்விப்பட்டதே தவிர அனுபவத்தில் பெற்றவள் அல்ல, ஆனால் எனக்குத் தெரிந்ததெல்லாம் நீ மட்டுமே, உனக்கு எல்லாம் தெரியும், எனக்கு உன்னை மட்டுமே தெரியும். கண்ணா, நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்” என்றவள் அவன் கண்களை நோக்கி பின் திருப்பிக் கொண்டாள்.
“சொல் ஆண்டாளே” என்றான் கண்ணன்.
“உன் அவதாரங்களில் செல்வமெல்லாம் பெற்றுக்கொடுத்த அவதாரம் கூர்ம அவதாரம், அங்கேதான் எல்லா வகை செல்வமும் நீ உலகுக்குக் கொடுத்தாய். கற்பக மரம் முதலானவை தேவர்களுக்கும், பசு முதலானவை மனிதர்க்கும், இன்னும் எல்லா உலகுக்கும் எல்லாச் செல்வத்தையும் நீ அந்த அவதாரத்தில் கொடுத்தாய்.
உனக்கான பெரும் செல்வமான மஹாலஷ்மியினையும் நீ பெற்றுக்கொண்டாய். செல்வத்தை அள்ளிக் கொடுக்க வந்த அந்த அவதாரத்தில் கடைசியாய் நிறைவாய் கிடைத்ததுதான் அமிர்தம்.
கண்ணா, மனம் எனும் பாற்கடலில் எல்லாச் செல்வமும் மறைந்து கிடக்கின்றது, உன்னில் அர்ப்பனமானால் உன்னைச் சிந்தையில் ஐம்புலன் ஒடுக்கித் தாங்கினால் உன் சிந்தையால் அதைக் கடைந்து தேடினால் மனதின் அழுக்கெல்லாம் விஷமெல்லாம் வெளியேறி ஒவ்வொரு நல்ல விஷயமாகக் கிடைக்கும், மறைந்திருக்கும் செல்வமெல்லாம் துலங்கும். கடைசியில் அமிர்ந்த நிலை எனும் மகா ஞான நிலை வரும், அது சாகா நிலை எனும் உயர் ஞான நிலையினைத் தரும்”
சொன்னவள் உடைந்து மெல்லிய குரலில் கேவிச் சொன்னாள், “கண்ணா, எனக்குப் பெரிய தத்துவம் தெரியாது, எனக்கு எல்லாச் செல்வமும்வேண்டும் எனும் ஆசையும் கிடையாது, நான் விரும்புவதெல்லாம் நீ மட்டுமே, செல்வத்துள் எனக்குப் பெரிய செல்வம் நீ கண்ணா.
பாற்கடலில் எந்தச் செல்வத்துக்கும் ஆசையின்றி இருந்த உனக்குத் தேவி மாலையிட்டாள், அப்படி இவ்வுலகில் எந்த ஆசையுமற்ற எனக்கு ஒரே ஒரு ஆசை நீ, எனக்கு வேறு எந்தச் செல்வமும் வேண்டாம். பெரிய பெரிய வாழ்வு வேண்டாம், பெரிய ஞானி, யோகி எனும் பட்டமும் வேண்டாம், நான் உன்னை அடைந்து உன்னில் கரைந்துவிட வேண்டும், எனக்கு அமிர்தம் வேண்டுமா அழிவற்ற வாழ்வு வேண்டுமா என்றால் எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு நீ போதும். நீ மட்டும் போதும். உன்னைவிடப் பெரிய செல்வமுமில்லை, பெரிய ஞானமுமில்லை. எனக்கு அந்த வரத்தை மட்டும் கொடு, அந்த ஒன்றை மட்டும் கொடுத்துவிடு” என்றாள்.
“ஆண்டாளே, அமிர்தம் என்பது என்னை உணரும் பெரும் ஞானநிலை, எல்லாவற்றிலும் நான் உண்டு, எல்லாப் படைப்பிலும் என் இயக்கம் உண்டு என்பதை அறிந்து எல்லாமே நான் என்பதை அறிந்து என்னில் கலந்துவிடும் நிலை, உன் பக்தியால் நீ அதை எப்போதோ அடைந்துவிட்டாய்.
என்மேல் கொண்ட பக்தியால் உனக்கும் அந்தப் பெருஞான நிலை வாய்த்தாயிற்று, எக்காலமும் நீ நிலைபெற்றிருப்பாய், நான் எங்கெல்லாம் நிலை கொணடிருப்பேனோ அங்கெல்லாம் நீயும் நிலைபெற்றிருப்பாய், நீ வேறு நான் வேறு அல்ல என்பதை உலகம் எப்போதும் சொல்லும். உளமார்ந்த பக்தியினை விட பெரிய யோகம் இல்லை, அதைவிட பெரிய தவமுயற்சி எதுவுமில்லை, என்மேல் கொண்ட அன்பால் நீயும் யோகியானாய் நீயும் அமிர்தம் பெற்ற தேவர்களில் ஒருத்தியானாய்” என்றான்.
பாற்கடலின் அலைகளை விட வேகமாக ஆர்பரித்தவள் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டாள், அப்போது பாற்கடலில் அவர்கள் நின்றிருந்த பாறை மெல்ல அசைந்தது, அவள் அஞ்சியபடியே “கண்ணா..” எனச் சொல்லித் தடுமாறினாள்.
அவன் புன்னகைத்தபடியே “நம்மைத் தாங்கி நிற்கும் கூர்மம் அசைகின்றது” என்றான், அப்போதுதான் தான் கூர்மத்தின் மேல் அமர்ந்திருப்பதையே அவள் உணர்ந்தாள்.
கூர்மம் மெல்ல அசைந்து அசைந்து இருவருடன் பாற்கடலில் தோணி போல் சென்றது, அவன் கரங்களைப் பிடித்து யானை அம்பாரி மேல் அமர்ந்து பவனிவருவது போல் அவள் அவனுடன் கடற்பவனி வந்தாள்.
அவளைச் சுற்றிலும் பாற்கடலை கடையும் போது வந்த ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருந்தன, அதையெல்லாம் பார்த்தபடி அவள் அவன் கையினைப் பற்றியபடி மகிழ்ந்தபடி வந்து கொண்டிருந்தாள்.
பொன்னிறத்தில் அமிர்த குடம் ஒன்று வெளிபட்டது, அதை எங்கிருந்தோ வந்த கருடன் காலால் பற்றி எடுத்து வந்து கண்ணன் கையில் கொடுத்தது, கண்ணன் அவளுக்கு அந்த அமிர்தத்தினைக் கையில் எடுத்து ஊட்டினான், அதன் இனிமையில் கரைந்தவள் கண்களை மூடினாள்.
கண்களை திறக்கும் போது ஆச்சியர் முன்னால் அமர்ந்திருந்தாள், தயிர்ப்பானையில் வெண்ணெய் திரண்டு வந்ததிருந்தது, அதை அள்ளி ஆண்டாளிடம் கொடுத்தார்கள், அவள் கண்ணனுக்குப் படைப்பதற்காக மனம் நிறைந்த மகிழ்வுடன் பூஜை அறை நோக்கிச் சென்றாள்.
கண்ணனுக்குப் பூக்களிட்டு மலர்களிட்டு தூபங்களெல்லாம் இட்டு அந்த வெண்ணையினை அவன் முன் வைத்து அவனை நோக்கினாள், அவன் அவளை நோக்கி மெல்லிய புன்னகை ஒன்றைச் செலுத்தினான், காதோரம் பாற்கடலின் அலையோசை முழங்க அவனையே நோக்கிக் கொண்டிருந்தாள் ஆண்டாள், அப்போது தேவலோக பாரிஜாத மலரின் வாசம் அந்த அறை முழுக்க நிரம்பியிருந்தது.