நாச்சியார் திருமொழி : 83

நாச்சியார் திருமொழி : 83 ( பாசுரம் 11.1, 11.2)

கண்ணன் மேல் கொண்ட காதலால் முழுக்க ஏங்கிப்போனாள் ஆண்டாள், அந்த ஏக்கம் உடலைப் பாதித்தது, தன் நீண்ட நாள் காதலில் அவன் இன்னும் தன்னை அவனோடு சேர்க்காதது அவளை மிகுந்த ஏக்கத்துக்குள்ளாக்கிற்று.

வாழவும் விடாமல், சாகவும் விடாமல் அந்தக் காதலுடன் கண்ணன் காட்டும் பூச்சாண்டி அவளுக்குள் பெரும் சோகத்தைத் தந்தது, இனியும் தாங்கமுடியாது என்றபடி அவள் கவலையில் வீழ்ந்து அது அவள் உடலைப் பாதித்து, அதனால் நோயுற்று மெலிந்து போனாள்.

அப்படி வாடிய கொடியாக கிடந்தவளைக் காண வந்தனர் தோழியர், கண்ணன் மேலான சாத்தியமில்லாக் காதலை அவர்கள் அறிந்திருப்பதால் அவள் மேல் எப்போதும் பரிதாபம் கொண்டிருந்தனர், பொருத்தமில்லாப் பெரும் காதல் எப்போதும் பரிதாபமாக நோக்கப்படும் என்பது அங்கே உண்மையாயிற்று.

அவர்களைக் கண்டதும் விசும்ப தொடங்கிய ஆண்டாள், வளையல் அணிந்த அப்பெண்கள் அவள் தலைதொட்டு ஆறுதல் சொல்லும் போது அவள் கையின் வளைகள் தானாக கழன்றன, அந்த அளவு மெலிந்து போனாள்.

பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்தது போல் வலிமிக்க படுக்கையில் கிடந்தவள் மனம் விட்டுப் பாடினாள்.

“தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ?
யாமுகக்குமெங்கையில் சங்கமு மேந்திழையீர்
தீமுகத்துநாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே

எழில் உடைய அம்மனைமீர்! என்னரங்கத்துஇன்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே”

பாடியவள் அப்படியே அவர்கள் மடியில் விழுந்து கண்சிவந்து அழுது பேச்சற்றுப் போனாள், கண்ணன் தன்னை இப்படிக் கைவிட்டான் எனக் கலங்கிப்போனவள் அப்படியே மூர்ச்சற்றுப் போனாள்.

கண்விழித்தபோது அவள் ஒரு கடற்கரையில் அமர்ந்திருந்தாள், அவளின் மனதில் எழும் கண்ணனின் நினைவுப் போலவே அலைகள் மீண்டும் மீண்டும் மோதிக் கொண்டிருந்தன‌.

அவள் அக்கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். நீல நிற அந்தக் கடல் அவளுக்குக் கண்ணனின் நினைவினைக் கொடுத்தது, கொஞ்சம் விரக்திப் புன்னகையுடன் அவள் கடலை நோக்க அங்கு வெண்ணிற சந்திர உதயம் போல் வெண்சங்கு ஒன்று மெல்ல எழுந்தது.

அதை அவள் பார்த்துக் கொண்டிருந்தபோதே நீல நிற கை ஒன்று அதைத் தாங்கியபடி எழுந்தது, தொடர்ந்து மயிலிறகு ஒன்று பாய்மர கப்பல் மயிலிறகால் செய்யப்பட்டது போன்ற ஜொலிப்பில் எழுந்தது.

அதைக் கண்டதும் “கண்ணா” என்றாள் ஆண்டாள், அந்த உருவம் மெல்ல எழுந்து கரை நோக்கி வந்தது, உருவம் சுருங்கியதால் சங்கின் உருவமும் சுருங்கி இருந்தது.

கரையில் கால் வைத்த அவ்வுருவம் கண்ணனாய் மாறிற்று, அவனைக் கண்டதும் எழவும் சக்தியற்றவள் ஒரு படகின் ஓரமாய் சரிந்தபடி புன்னகைத்தாள்.

கண்ணன் அவள் அருகே வந்து அமர்ந்து கொண்டான், கடல்காற்றால் கலையத்துவங்கிய அவள் கூந்தலை சரி செய்து மெல்ல அவள் தலையில் முத்தமிட்டான், அந்த அன்பு முத்தத்தில் சோர்ந்திருந்த அவள் உயிர் ஆயிரம் ஆண்டுக்கான பலம் பெற்றது போல் அவளுக்குள் பலம் கொடுத்தது.

“என்ன பாடினாய் ஆண்டாளே?” என்றான் கண்ணன்.

அவன் கையினைப் பிடித்தபடி அந்தச் சங்கினை மெல்லத் தொட்டுப் பார்த்தபடி மீண்டும் அவன் கண்களை நோக்கிவிட்டு சொன்னாள் ஆண்டாள்.

‘வளை அணிந்த பெண்களே, நான் விரும்பி அணிந்த இந்தச் சங்கு வளையல்கள் அவன் கையில் இருக்கும் சங்கிற்கு ஈடாகாது. என்றோ கொடிய முகம் கொண்ட ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் திருவரங்கன் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அழகிய பெண்களே, திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கிற என்னுடைய இனிய அமுதம் போன்றவராய் அழகிய திருக்குழற்கற்றையை உடையவராய், அழகிய திருவதரத்தை உடையவராய், அழகிய திருக்கண்களை உடையவராய், திருநாபியில் உண்டான தாமரைப்பூவாலே அழகு பெற்றவராய், என் அழகிய மணவாளராலே இந்த வளையல் வீழ்ந்தது, அவரே என்னிடமிருந்து பறித்துக்கொண்டார்”

சொன்னவள் அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள், இதைத்தான் பாடினேன். என்னை திருவரங்க நாதன் ஏன் இன்னும் தேடிவரவில்லை, என் மேல் என்ன குறை எனத் தேடினேன், அப்படி என்மேலான குறை எது என எண்ணி மெலிந்துபோனதில் கைவளை தானே வீழ்ந்தது, அதற்குக் காரணம் என் காதல் உன் மேல் நான் கொண்ட காதல் என்பதால் அதை நினைந்து பாடினேன்.

நான் எங்கே கண்ணா உன்னை வெறுத்தேன், நீயாக அப்படி உணர்ந்தால் நான் என்ன செய்வேன்? எனச் சொல்லி அவளை அணைத்துக் கொண்டான் கண்ணன்.

கண்ணீருடன் சொன்னாள் ஆண்டாள்.

‘கண்ணா, இன்னும் என்னை ஏன் நீ அழைத்துச் செல்லவில்லை, என்னை ஊர் அறிய அழைக்கவில்லை என்பதை எண்ணி எண்ணி ஏங்குகின்றேன், அபலை நான் என்ன செய்ய முடியும்.

உன்னை பிடிப்பதற்கு எனக்குக் காரணம் ஏதுமில்லை, ஆனால் என்னைத் தவிர்ப்பதற்கு உன்னிடம் ஆயிரம் காரணம் இருக்கலாம், அவைகளை எண்ணி எண்ணி கங்குகின்றேன்.

நீ இந்தப் பிரபஞ்சத்தின் தெய்வம் நானோ மானுடப் பிறப்பு. நீ அழிவில்லாதவன், ஆனால் ஆமைக்கு உள்ள ஆயுள் கூட எனக்கில்லை, உன் முன்னால் நான் வெறும் தூசு. நாடாளும் மன்னனே சாமானிய பெண்ணைப் பொருட்டாக கருதா நிலையில் பிரபஞ்ச கடவுளான நீ என்னை எப்படி ஏற்பாய்?

ஆனாலும் என் மனம் உன் மேல் உள்ள காதலால் அடிக்கடி கேள்வி எழுப்பும், என் மனம் கேட்கும். நீ என்னைக் கைவிடமாட்டாய் என ஒருகுரல் சொன்னாலும் அதை மறைக்கும்படி இன்னொரு குரல் என்ன குறை இருப்பதால் இன்னும் இவன் தாமதிக்கின்றான் என எண்ண வைக்கும்.

கண்ணா, இந்த அபலை வேறு என்ன செய்யமுடியும் அதனால் நான் என் குறை எது என எண்ணி கலங்கினேன், அப்படிக் கலங்கும் போது ஒருவேளை நாம் சங்கு அணிந்த வளையல் அணிந்தவள், அவனோ சங்கையே கையில் வைத்திருப்பவன் அதனால் என்னை விலக்கி வைப்பானோ எனக் குழம்புகின்றேன்”

சொன்னவள் அவன் தலையினை அவளை நோக்கித் திருப்பி வைத்துச் சொன்னாள்.

“கண்ணா, உன் கூந்தல் அழகு, உன் சிரிப்பு அழகு, உன் உதடும் கன்னமும் அழகு, நீ தாமரை போன்ற நாபியில் இந்த உலகை படைக்கும் பிரம்மனையே சுமப்பவன் அப்படியான நீ என்னைத் தள்ளிவைப்பதில் ஆச்சரியமில்லை.

ஆனாலும் உன் நினைவால் உடல் இளைத்து என் வளை கழன்று விழுந்து நானோ அந்த வளையலை உனக்குத் தந்ததாகவே கருதுகின்றேன், நீ எடுத்துக் கொண்டதாகவே முழு மனதோடு கருதுகின்றேன், அதைத் தவிர என்ன ஆறுதலை நான் தேடமுடியும்”

சொன்னவள் அவன் மேல் சாய்ந்து கொண்டாள், அவளின் இதயத்தில் இருந்து எழுந்த வலி கண்களின் நீர் தாரைகளாய் அவன் மார்பில் விழுந்தது.

அவன் பதிலேதும் பேசவில்லை, ஆனால் அவனின் விசும்பல் சத்தமும் அவளை அணைத்த இறுக்கமும் அவனின் அன்பை காட்டிற்று.

அவள் ஒரு மாலையாய் அவன் மார்பின் மேல் கிடந்தாள், நிசப்தத்தின் நடுவே கடல் அலை மட்டும் இரைந்து கொண்டிருந்தது.

வார்த்தைகளற்ற நிலையில் ஆண்டாள் அவன் முகத்தை மெல்ல நோக்கினாள், அவன் மெல்லிய புன்னகையில் சொன்னான்.

“நான் என் மேல் அன்புகொண்டவரிடம் குறைகளை எங்கே கண்டேன்? எக்காலமும் அவர்களின் நிறைகளையே கண்டேன், நதியின் வெள்ளம் அதன் தரையின் பள்ளங்களை எல்லாம் மறைப்பதை போல என்மேல் கொண்ட அவர்களின் பெரும் அன்பு அவர்களின் குறை எல்லாம் என் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துவிடுகின்றது.

நான் உன் குறைகள் என எதையுமே காணவில்லையே ஆண்டாளே, பின்னும் ஏன் அப்படி நினைக்கின்றாய்? காலம் வரும்போது உன்னை அணைப்பேன் எனத் தெரியாதா?”

சொன்னவன் அவளை இன்னும் அணைத்துக் கொண்டான், அந்த அன்பான ஸ்பரிசத்தில் அவளின் எல்லாத் துயரமும் மறைந்தது, அவன் மேலான காதல் மட்டும் பெருகிற்று.

அந்தக் காதலில் உச்சத்தில் சொன்னாள், “கண்ணா, நான் சங்கு வளையல் அணிந்தவள், நீ சங்கை கையில் கொண்டிருப்பவன் என்பதன் பொருள் வேறேதும் அன்று, நான் அறுகப்பட்ட சங்கின் வளையினை ஒரு பாகமாகக் கொண்டிருக்கின்றேன், நீ முழுசா சங்கை கையில் வைத்திருக்கின்றாய்.

நீ முழுமை அடைந்தவன் குறை இல்லாதவன், நானோ குறைவான அறிவும் வெட்டப்பட்ட சிறிய ஞானமும் கொண்டவள், நீ பூரணமானவன், அந்தப் பூரணமானவன் இந்தச் சிறுமதி படைத்தவளை எப்படி ஏற்பான் என்றே பாடினேன், இரும்புச் சட்டிக்கும் மண் பானைக்கும் என்ன உறவு இருக்க முடியும்? தகரத்துக்கும் தங்கத்துக்கும் எப்படிப் பொருத்தம்வர முடியும்?

அப்படி உடைந்த கர்மா கொண்ட நான் எங்கே முழுமையான நிலையான பூரணமான நீ எங்கே? அதைத்தான் புலம்பினேன்.

எப்போது ஒரு ஆத்மா பரிபூரண ஞானம் அடையுமோ, எப்போது ஒரு ஆத்மா ஞானத்தால் முழுமை அடையுமோ அப்போது நீ அதனை ஏற்றுக்கொள்வாய் என்பதையே சொன்னேன் கண்ணா…

உன் கூந்தல் அசைவில் உலகை இயக்குபவன் நீ, உன் வார்த்தையால் ஞானம் தருபவன் நீ, உன் நாபியின் தாமரையில் பிரம்மனைத் தாங்கி உலகை இயக்குபவனும் நீ.

உன்னை அடைய மனம் முழுத் தியானத்தில் மூழ்க வேண்டும், மாய ஆசைகளை வெல்ல வேண்டும்.

இப்பூமி மாயவசப்பட்டது இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புவது, அப்படி இம்மாந்தரும் மாய வசத்தால் உன்னைப் பெரிய கோவிலைக் கட்டி அடையலாம், பெரிய வழிபாடுகளை அலங்காரங்களைச் செய்து அடையலாம் என நம்புகின்றார்கள்.

பட்டாடை கட்டி பெரிய நகைகளிட்டு உடலெல்லாம் அலங்காரம் செய்து உன்னைப் பகட்டாக பார்க்க வந்தால் உன் அருள் கிடைக்கும் எனக் கருதுகின்றார்கள்.

நீ பகட்டுக்கும் அலங்காரத்துக்கும் மயங்குபவன் அன்று, அலங்கார நகைகளில் மனம் கரைபவனும் அன்று, நீ உண்மையான அன்பு ஒன்றுக்கே கட்டுப்படுவாய், அந்த அன்புக்கும் பக்திக்குமே வரமருள்வாய்.

உன்னிடம் கொடுக்க வேண்டியது நகை அன்று, பெரும் காணிக்கை அன்று, உனக்கான அலங்காரம் அன்று. மாறாக, மனதை உனக்குக் கொடுத்தால் நீ அவர்களை உன்னோடு ஏற்றுக்கொள்வாய்.

நான் என் வளையலைக் கொடுத்தேன் என்பது எனக்கான எல்லாமும் உன்னிடம் கொடுத்தேன் என்பதே, காப்பு என்பதும் வளையலுக்குச் சமம், என்னைக் காக்கும் முழுப் பொறுப்பையும் உன்னிடம் நான் கொடுத்தேன், இனி நீயே எனக்குப் பொறுப்பு.

என் வாழ்வின் எல்லாமும் இனி உன்னை பொறுத்தது கண்ணா, இனி நான் உன் கைபொருள், உன் இஷ்டப்படி என்னை நடத்து, இந்த அபலை வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்”

சொன்னவளை உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டான் கண்ணன், காதல் சரணாகதி என்றால் என்ன என்பதை அவளின் இதயத்துடிப்பு அவனுக்குச் சொன்னது.

“காலம் வரும்போது நீ மிகுந்த அலங்காரத்துடன் என்னிடம் வருவாய், உன்னை உலகம் முன் வெட்கப்பட நான் விடமாட்டேன், உன்னை கைவிடவும் மாட்டேன்” என்றான் கண்ணன்.

அவனின் உறுதிமொழியில் மனம் கரைந்த ஆண்டாள் அப்படியே கரைந்து போனாள், அவள் “கண்ணா” எனக் கண் திறந்தபோது அவள் தோழியர் நடுவில் இருந்தாள்.

இவள் திருந்தமாட்டாள் என அலுத்துக்கொண்டு அகன்றனர் தோழியர், அவளோ கண்ணன் வந்த மகிழ்வில் எழுந்து பூஜைக்குத் தயாரானபோது தன் கைகளில் புதிய வளையல்கள் இருப்பதை அறிந்தாள், அவை கைக்குப் பொருத்தமானபடி தன் கைகள் பழைய பொலிவினை அடைந்ததையும் கண்டு புன்னகைத்தாள்.

உற்சாகமாக பூஜைக்குக் கிளம்பிக் கோவிலை நோக்கிச் சென்றாள். அவள் கைகளில் வளையல் ஓசை எழுப்பிய ஒலி “கண்ணா, கண்ணா” என்பது போல் அவளுக்குக் கேட்டது, கோவிலில் சங்கொலி அவளை வரவேற்றபோது ஒரு சிலிர்ப்புடன் வானத்தைப் பார்த்தாள், அங்கே கருடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.