பஞ்சவன சிவதலங்கள்.
பஞ்சவன சிவதலங்கள் – முன்னுரை.
தென்னாடு கொண்ட சிவனே போற்றி என்பது கயிலாயத்துக்கு தெற்கே உள்ள நிலத்தினைச் சொன்னாலும் தென் பகுதியான தமிழகத்தில் சிவனுக்கான ஆலயங்கள் மிக அதிகம். அவை வகைபடுத்தப்பட்ட முறையும் அதிகம்.
பஞ்ச ஆரண்ய தலம், நவ கைலாயம், அட்ட வீராட்டானம், சப்த விடங்கர், நவபுலியூர், பஞ்ச சபைகள் என எத்தனையோ வகைகளில் சிவாலயங்கள் வகைபடுத்தப்பட்டன. ஒவ்வொன்றும் ஆயிரம் ஆயிரம் தத்துவங்களைக் கொண்டவை, சிவன் ஒவ்வொரு வடிவிலும் வந்து போதித்து நின்ற திருத்தலங்கள் அவை.
அவ்வரிசையில் “பஞ்ச வன சிவதலங்கள்” என ஐந்து தலங்கள் உண்டு. இது போகவும் எஞ்சிய வன தலங்கள் எனும் சிவதலங்கள் நிறைய உண்டு. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
வனம், ஆரண்யம், காடு என்பவையெல்லாம் ஒரே பொருளைத் தருவதாகத் தோன்றினாலும் மெல்லிய வித்தியாசம் உண்டு. ஆரண்யம் என்றால் காவல் நிறைந்த சோலை போன்ற இடம், அங்கே விலங்குகள் முதல் ஆசிரமம் வரை எல்லாமே முறையாக அரசனால் காவல் செய்யப்படும், அதாவது எவ்வித ஆபத்துமின்றி முனிவர்கள் ஆசிரமம் வைக்க தவமிருக்க ஏற்பாடு செய்யப்படும். யாரும் அச்சமின்றி செல்லலாம், வாழலாம்.
காடு என்பதும். வனம் என்பதும் ஒரே மாதிரியானது என்றாலும் காடு என்பது எல்லா வித விஷயமும் கலந்திருப்பது. ஆபத்தும் வளமும் கலந்திருப்பது. அது மலைகளில் என்றல்ல நாடுகள் இடையில் ஊர்களின் இடையில் கூட அமைந்திருக்கும், சில விஷயங்களுக்கு இவை காவலானது, அதனால் காடு என்றானது.
வனம் என்றால் அடர்த்தி, வனப்பு வனஸ்பதி என்பதெல்லாம் அந்த வார்த்தையின் சாயல்கள். அதாவது மிக மிக அடந்த காடு அங்கே நுழைவதும் வெளிவருவதும் கடினம்.
இப்படியாக ஆரண்யம் என்பது வேறு, காடு மற்றும் வனம் என்பது ஒன்று என்றாலும் தன்மையால் மெல்லிய வேறுபாடு உண்டு.
இந்தப் பஞ்ச வனம் என்பது அப்படி அடர்ந்த கானங்களில் முனிவர்கள் தவமிருந்து சிவனைக் கண்ட இடங்கள், அதாவது அவை வியாசரின் ஆஸ்ரமம், அகத்தியர், விசுவாமித்திரர், கௌதமர் போன்ற முனிவர்களின் காவல் மிகுந்த ஆரண்யம் அல்ல.
மாறாக, எல்லா ஆபத்துக்களும் நிறைந்த வனங்கள், மரங்களும் செடிகொடிகளும் இன்னும் விலங்குகளும் நாகங்களும் எல்லாமும் நிறைந்திருந்த வனங்கள், அங்கே தனித்திருந்து முனிவர்கள் தவமிருந்து சிவனைக் கண்ட இடங்கள்.
அந்த வனங்கள் இந்த ரிஷிகளாலும் தேவர்களாலும் சிவலிங்கம் பெற்றன. அப்படியே அவை கோவில்களுமாயிற்று, அந்த ஐந்து கோவில்களை முதலிலிலும் அடுத்தடுத்த வன ஆலயங்களை அதன் பின்னரும் காணலாம்.
பஞ்ச வன ஆலயங்களில் தாருகாவனம் எனும் வழுவூர், பத்ரிவனம் எனும் கீழ்வேளூர், தில்லைவனம் எனும் சிதம்பரம், பாரிஜாத வனம் எனும் திருக்களர், சாயா வனம் எனும் திருசாய்க்காடு என ஐந்து ஆலயங்கள் முக்கியமானவை.
அப்படியே கடம்பவனம் எனும் மதுரை, வேணுவனம் எனும் திருநெல்வேலி போன்றவை அடுத்து வருபவை. நாம் பஞ்ச வன ஆலயங்களை முதலில் காணலாம். அதில் சிதம்பரம், வழுவூர் போன்ற ஆலயங்களை நிரம்ப பார்த்துவிட்டோம். அவை எல்லோரும் அறிந்தது என்பதால் அடுத்த மூன்று ஆலயங்களைப் பார்த்துவிட்டு பின் இதர வன தலங்களுக்குச் செல்லலாம்.
அவ்வப்போது இந்த வன தலங்களைத் தருவோம், “ஆயிரம் வருடம் காடு ஆயிரம் வருடம் நாடு” என்பது இந்துக்களின் மொழி, அதாவது காடாய் கிடக்குமிட்ம் நாடாகும், நாடாகி இருக்குமிடம் ஒரு காலத்தில் மீண்டும் காடாகும் இந்த சுழற்சி உலகில் வழமை.
இந்த வழமையில் காடு நாடாகும் போது சிவனருளுடனே இங்கு நாடாகும், பின் சிவனிடமே எல்லாம் ஒடுங்கும், அவ்வகையில் இந்த வனங்களில் சிவலிங்கம் தோன்றி அதனால் சிவதலங்கள் தோன்றி அவை நாடான வரலாற்றை அதனை ஒவ்வொரு முனிவரும் தவமிருந்து துவங்கிய சிவபணியினை அவ்வப்போது காணலாம்.
பஞ்ச வன சிவதலங்கள் 01 : திருச்சாய்க்காடு எனும் சாயாவனம்.
“ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீ மாயூரம் மார்ஜுனம்
சாயாவனம்ச ஸ்ரீ வாஞ்சியம் காசீ க்ஷேத்ர ஸமாநிஷட் “
என்பது ஸ்லோகம். அதாவது காசிக்குச் சமானமாகக் கூறப்படும் ஸ்தலங்கள் ஆறு. அவை, திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், சாயாவனம் என்கிற திருச்சாய்க்காடு, திருவாஞ்சியம் என இந்த ஸ்லோகம் சொல்கின்றது.
அதில் இந்தச் சாயாவனம் எனும் திருச்சாய்க்காடும் ஒன்று, அது தேவாரம் பாடப்பட்ட தெய்வீகத் தலம், சம்பந்த பெருமான் அங்கு நின்று பாடுகின்றார்.
“நித்தலுந் நியமஞ்செய்து நீர் மலர்தூவிச்
சித்தமொன் றவல்லார்க் கருளுஞ் சிவன்கோயில்
மத்தயா னையின்கோடும் வண்பீ லியும்வாரி
தத்துநீர்ப் பொன்னி சாகரமேவு சாய்க்காடே.”
ஆம், அப்படியான அந்த ஆலயம் பஞ்ச வன ஆலயங்களில் முக்கியமானது. அந்தத் திருச்சாய்க்காடு எனும் அற்புதமானதும் மகா தொன்மையானதுமான சிவாலயம் காசிக்கு இணையானது.
இன்று காவேரியின் வடகரையில் பூம்புகார் எனக் காவேரி கடலோரம் கலக்கும் இடத்தில் அந்த ஆலயம் அமைந்திருந்தாலும் துவக்கம் இப்படி அல்ல.
அன்று கடல் மிகத் தொலைவில் இருந்தது. சிலப்பதிகாரம் சொல்லும் பழைய பூம்புகார் எனும் அந்த பிரமாண்ட பூம்புகார் அன்று மிகப் பொலிவோடு விளங்கியது. பின் காலத்தால் அது கடலில் மூழ்கி இன்று அந்தப் பிரமாண்ட நகரின் இச்சிறு கரை பூம்புகார் எனும் பெயரைக் கொண்டிருக்கின்றதே அன்றி அன்று அப்படி அன்று . எல்லாமே நிலமாக இருந்தது, காவேரி இதன் வழியே ஓடிக் கொண்டிருந்தது.
அன்று இந்தச் சாயாவனம் பழைய பூம்புகாருக்கு முன்னதாக இருந்தது. இது கோரைபுற்கள் உள்பட மரங்கள் மிகுந்த பகுதியாக இருந்தது, இங்கு முதலில் வழிபட்டது வியாக்ரபாரதரின் மகனான உபமன்யு மகரிஷி.
வியாக்ரபாரதரைப் பற்றி எல்லோரும் அறிவோம். தில்லையில் சிவனை வழிபட பூக்கள் பறிக்க வேண்டி அதுவும் தேனீக்கள் வாய் வைக்காத அதிகாலை பூக்களைப் பறிக்க வேண்டி புலியின் பார்வையும் அதன் கால்களும் பெற்றவர். அப்படிப் பாதி புலியாக மாறி மலர் பறித்துச் சிவனைப் பூக்களால் தொழுதவர், தில்லை வனத்தின் சிவனை சிதம்பரம் நடராஜராக உலகறியச் செய்தவர் இவரே.
அவரின் மகனான உபமன்யு மகரிஷி சிவனை நோக்கி தவமிருந்த இடம் இது, அவர் சிவனால் ஆட்கொள்ளப்பட்டார். அதனால் இந்தத் தலமும் சக்தி மிக்கதாயிற்று.
சிவன் இவருக்கு ஞானப்பாலை கொடுத்து வழிநடத்தினார், அந்தப் பால் பாற்கடலில் இருந்து எடுத்துவரப்பட்டது, அதனால்தான் பாற்கடலின் பரந்தாமன் அம்சமான கிருஷ்ணன் வாழ்வில் உபமன்யு முனிவர் முக்கியமானவர், “சிவாஷ்டகம்” எனச் சிவனை பாடிய அவர்தான் சிவபுராணத்தை கிருஷ்ணனுக்குப் போதித்து பெரும் ஞான போதனை செய்தார்.
அந்த சிவாஷ்டம் அதழுவலே மாணிக்கவாசகர் பாடிய சிவபுராணமாகும், கீதையில் கண்ணன் மொழிந்த ஞானத் தொகுப்பின் மூலம் இதுவே. அதை போதித்தவர் உபமன்யு முனிவர் என்றால் அவரின் பரந்த ஞானமும் சிவனிடம் அவர் கலந்து நின்ற அருள் கோலமும் என்ன என்பதை உணரலாம், அவரால் உருவான ஆலயம் இது.
இந்த ஆலயத்தில் ஆதிசேஷனும் வழிபட்டான், பாற்கடலில் இருந்து பெற்ற பாலை பருகிய உபமன்யு முனிவருக்கும் கிருஷ்ணருக்குமான பந்தத்தில் ஆதிசேஷனும் பங்குபெற்று பேறு அடைந்தான், அப்போது அவனின் நாக ஒளி பெரிதாக பிரகாசித்தது.
சாய் என்றால் ஒளி என்றும் பொருள் உண்டு, அதனால் இது சாயாவனம் என்றாயிற்று. அதனால் திருச்சாய்க்காடு எனவும் இத்தலத்துக்குப் பெயர், அங்கு எழுந்த சிவன் சாயவன ஈஸ்வரர் பின்னாளில் அவர் சாயாவனேஸ்வரர் எனப் பெயர் பெற்றார்.
இந்தத் தலத்தின் மிக முக்கிய சாட்சி இந்திரனின் தாயார் அதிதி.
இந்திரன் காசிப முனிவர்க்கும் அதிதி தாய்க்கும் பிறந்த மகன், அதிதி மிகச் சிறந்த சிவபக்தை என்பதால் இந்த சாயவனேஸ்வரர் சிவனை மிகத் தீர்க்கமாக வணங்கினாள். அதனால் எல்லா வகை நலனும் பெற்றுக்கொண்டாள், அவள் மகன் இந்திரப் பதவியும் அடைந்தான்.
இதனால் அனுதினமும் அவள் இங்கு வந்து சிவனைத் தொழுது கொண்டிருந்தாள். முதலில் விரைவாக தேவலோகம் திரும்புபவள் நாளாக நாளாக சிவனிடமே உருகிக் கொண்டிருந்தாள்.
இதைக் கண்ட இந்திரன் ஒரு யோசனை சொன்னான், பூலோகம் வந்து செல்வது தேவலோக வாசிகளுக்கு எளிது என்றாலும் அவன் இந்தச் சிவலிங்கத்தைத் தன் தாய் இருக்குமிடத்துக்கே கொண்டு செல்ல விரும்பி அதனை பெயர்த்தெடுக்க முனைந்தான், அவன் யானை ஐராவதம் அதை முயன்றது.
ஆனால், எவ்வளவோ முயற்சித்தும் அவனால் முடியவில்லை. கடைசியில் தன் தேரில் சிவலிங்கத்தைக் கட்டி அவன் இழுக்க நினைத்தபோது அது நடவாது என்பதுபோல் அன்னை குயில் மொழியில் கூவினாள், அந்தக் குயில் மொழிக்கு அர்த்தம் புரிந்த இந்திரன் தன் முயற்சியினை கைவிட்டான்.
(பிரசித்தியான பாகுபலி படத்தின் துவக்க காட்சி இந்தப் புராண கதையில் இருந்துதான் எடுக்கப்பட்டது)
அதாவது, குயிலுக்குச் சொந்தமாக எதுவும் கிடையாது. அது தன் கூடு, தன் இனம் என ஒட்டுவதுமில்லை. ஒருமாதிரியான தவவாழ்க்கை அதனுடையது, அப்படி ஈசனை பற்றற்ற கோலத்தில் வழிபடவேண்டும். இப்படிப் பாசபந்தத்தில் சிக்கி ஒட்டக்கூடாது எனக் குயில் மொழியில் அன்னை போதிக்க அவன் உண்மை உணர்ந்தான்.
இன்றும் அந்த ஐராவதம் யானை கீறிய கோடுகள் அங்கே உண்டு, அந்த லிங்கத்தைப் பாதாளத்தோடு தூக்க வேண்டி இந்திரனின் யானை மண்ணை கீறி உருவாக்கிய குளமே ஐராவத தீர்த்தம் என அங்கு உண்டு.
அம்மை குயிலினும் இனிய மொழியில் அதாவது அவள் கோபம் கொள்ளாமல் சபிக்காமல் மிக மிக மெல்லிய மொழியில் தாயாக நின்று தத்துவத்தை உணர்த்தியதால் அவள் “குயிலினும் இனிமொழியம்மை” என இங்குப் பெயர் பெற்று நிற்கின்றாள்.
பல்லவ மன்னராக இருந்து பின் துறவறம் புகுந்து நாயன்மார் எனும் நிலைபெற்ற ஐயடிகள் காடவர்கோன் எனும் நாயனார் இங்கு வழிபட்டு நின்றார், அவரின் வாழ்வில் முக்கியமான தலம் இது.
சம்பந்தர், அப்பர் சுவாமிகள் என எல்லோரும் வந்து பணிந்து பாடிய தொன்மையான ஆலயம் இது.
வள்ளல் பெருமான் தன் கலிவெண்பாவில், ” வலிக்காலில் பாய்க்காடுகின்ற ஒரு பச்சை முகில் பரவும் சாய்க்காடு மேவிம் தடங் கடலே” என இந்தச் சிவனை உருகிப் பாடுகின்றார்.
இந்த ஆலய சிவன் தன்னிடம் வேண்டுவோர்க்கு ஞானமும் அருளும் தருவார், இன்னும் அவரைப் பற்றி அணைத்துக் கொள்ள அவரிடம் சரண்டைந்தோரை தன் உருவமாகமே தன் இயல்பில் மாற்றுவார்.
ஆம், சாய் என்றால் ஒளி, பேரோளி எனப் பொருள், இந்துக்களின் நான்வகை ஆன்மீக நிலைகளில் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சம் என நான்கு உண்டு.
கடைசி நிலையான சாய் உச்சம் என்பது இறைவடிவமாக இறை குணத்தோடு மாறிப்போவது, சாய் என்றால் இறைவடிவம், இறை ஒளி எனப் பெயர் உண்டு, அப்படி இறைநிலையில் மகா ஞான நிலையில் பாசபந்தங்களைத் தாண்டிய நிலையில் பற்றற்ற நிலையில் சிவநிலையில் இருப்பது.
அந்த வரத்தை இந்த ஆலயம் வழங்கும், தாய்மேல் இந்திரன் கொண்டிருந்த பாசத்தை அவன் இங்கு நிரூபிக்க முயன்றபோது பக்தி என்பது பாசத்துக்கு அப்பாற்பட்டது என அவனுக்கு போதித்து ஞானம் கொடுத்த தலம் இது.
உபமன்ய முனிவர் சிவபுராணத்தை உணர்ந்து சிவநிலையில் நின்று கிருஷ்ணனுக்கே போதிக்கும் அளவு சிவநிலையினை அவருக்குள் கொடுத்த தலம் இது. அவர் முழுக்க சிவ அம்சமாகவே மாறி இருந்தார்.
அப்படி ஐயடிகள் காடவர்கோன் எனும் நாயனாருக்கு, அரச பதவி துறந்து சிவனடியார் வாழ்வே சிறந்தது என அடியாராய் வாழ்ந்த அவருக்கு , வாழ்ந்து முக்தி அடைந்த அவருக்குப் பெரும் ஞானத்தை கொடுத்த இந்த ஆலயம் இது.
அந்த மகா புண்ணியத் தலம் காசியாக மின்னும் தலம் அழியா முத்திரைபடைத்த இன்னொரு நாயனாரைத் தன் தாத்பரியத்தில் உருவாக்கியது, அவர் இயற்பகை நாயனார்.
அந்த நாயனார் இங்குதான் பிறந்து வளர்ந்து முக்தியும் அடைந்தார், மானிட பண்பினை விட உயர்ந்த பண்பை பெற்றிருந்ததால் மானிட சுவாபவத்துக்கே எதிரான பகையான பண்பை பெற்றிருந்ததால் அவர் இயற்பகை நாயனார் என்றானார்.
அவரின் வாழ்வு எல்லோரும் அறிந்தது எனினும் சுருக்கம் இதுதான்.
அவர் அங்கு வாழ்ந்த சிவனடியார். அவரின் மனைவி அவரைப்போல் பெரும் சிவபக்தை, அடியார் பணியே தங்கள் சிவவாழ்வு எனச் சிவனடியார்க்கு இருவரும் தம்பதியராய்ப் பணிசெய்து வந்தார்கள், அவர்கள் பக்தியினை உலகுக்குச் சொல்ல விரும்பிய சிவன் ஒரு நாடகம் செய்தார்.
அதன்படி அவரே ஒரு முதிய சிவனடியாராக வந்தார், ஆச்சாரம் மிகுந்தவராக கூரிய அறிவுடைய முதியவராக வந்தார், அவரைக் கண்ட தம்பதியியினர் மிகுந்த மகிழ்வுடன் உபசரித்தனர். அவர்களின் உபசரிப்பில் குறிப்பாக அந்தப் பெண் அவருக்குச் செய்த பணிவிடைகளில் மகிழ்ந்தவர் அப்பெண்ணிடம் சில கேள்விகளைக் கேட்டார், அவளும் சரியான ஞானமாக பதிலுரைத்தாள்.
இயற்பகை நாயனாரை சோதிக்கும் விதமாக “சிவனைடியார்கள் என்ன கேட்டாலும் கொடுப்பவனே, இந்தப் பெண்ணை எனக்குச் சேவகம் செய்யவும், முதிர்வயதில் பராமரிக்கும்படியும் என்னுடன் அனுப்பு” எனக் கேட்டார்.
சிவனடியார்க்கு எதுவும் மறுப்பதற்கில்லை என்ற வாழ்வினைக் கொண்டிருந்தவர் சிறிதும் கலங்காமல் சம்மதித்தார், மனைவி என்றால் அந்தஸ்து கௌரவம் வாழ்வின் அடையாளம் எனும் நிலையில் மனைவியினை இழந்தவன் மானத்தை வாழ்வை இழக்கின்றான் எனும் நிலையிலும் சிவனுக்காய்ச் சம்மதித்தார்.
அவரின் மனம் அறிந்த அப்பெண்ணும் சம்மதித்தாள்.
அதோடு அடியார் விடவில்லை, இப்பெண்ணை நான் அழைத்துச் செல்வதை அறிந்தால் உன் உறவினர்களெல்லாம் என்னைத் தாக்குவார்கள், அதனால் நீயும் என்னோடு ஊர் முடிவுவரை வரவேண்டும் என்றார், அடியாரும் சம்மதித்தார்.
மூவரும் வீதிவழி நடந்தார்கள். “கட்டிய மனைவியினையே அடியார்க்கு தரும் பக்தனே நீ வாழ்க” என உரக்கச் சொல்லிச் சிரித்தபடி அடியார் நடக்க விஷயம் ஊருக்குள் பரவிற்று.
இயற்பகை நாயனார் சித்தம் கெட்டு இதை செய்கின்றார் எனக் கொதித்த உறவினர்கள் ஆயுதங்களுடன் அப்பெண்ணை மீட்க வந்தனர், அவர்களால் அடியார்க்குப் பாதிப்பு வரக்கூடாது என அஞ்சிய நாயனார் தன் உறவினர்கள் எனப் பாராமல் அவர்களை வெட்டிச் சாய்த்துவிட்டு அடியாரையும் தன் மனைவியினையும் ஊருக்கு வெளியே பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.
அப்போது ஈசன் வானில் விடைமேல் அமர்ந்தபடி காட்சி தந்து “நாம் வைத்த சோதனையில் நீர் வென்றுவிட்டீர், நாமே அடியார் வேடத்தில் வந்தோம், உன் மனைவி எமது ஆலயத்தில் இருக்கின்றாள், அழைத்துச் சென்று பணியினைத் தொடர்வீர், நாம் கயிலாயத்தில் உங்களுக்காய்க் காத்திருப்போம்” எனச் சொல்லி மறைந்தார்.
அப்படியே இந்த ஆலயம் வந்தவர் சாயவனேஸ்வரரை மனமாரப் பணிந்து மகிழ்ந்து நன்றி சொல்லி மருவினார், கணவனும் மனைவியும் சிவனைத் தொழுது சிவபணியினைத் தொடர்ந்தார்கள், அந்த மோதலில் இறந்தோர்களையும் சிவன் உயிரோடு எழுப்பிக் கொடுத்ததால் அடியார் பெருமை அகிலமெங்கும் விளங்கிற்று.
ஆம், இயற்பகை நாயனார் எனும் மகா முக்கிய நாயனாரின் வாழ்வும் சோதனையும் இங்குதான் நடந்தது, அவர் வாழ்வுக்கு இவ்வாலயமே சாட்சி.
இப்போது காணும் ஆலய கருவறையும் பண்டைய ஆலயமும் சோழமன்ன கோச்செங்கண் சோழமால் கட்டபட்டது, மாடக் கோவிலாக அமைக்கப்பட்டது, அவ்வளவு தொன்மையானது.
கிழக்கிலும், தெற்கிலும் முகப்பு வாயில்களுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கிழக்கு முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் மூன்று நிலை கோபுரம் வழியாக செல்ல வேண்டும். கோபுரத்திற்கு வெளியே இடதுபுறம் இந்திரன் உருவாக்கிய ஐராவத தீர்த்தம் உள்ளது.
இங்குக் கோபுர வாயிலைக் கடந்ததும் கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார்.
வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன் சந்நதிகள் உண்டு, சூரியன் எப்போதும் பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டு தன் கடமையினை, கர்மத்தை மட்டும் செய்வதால் எல்லா ஆலயங்களிலும் அவருக்கான இடம் உண்டு, அது இங்கும் உண்டு.
அப்படியே இந்தக் கோவிலின் முக்கிய அடையாளமான இயற்பகை நாயனார்க்கு துணைவியாருடன் சந்நதிகள் உண்டு.
விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சந்நிதி முதலிய சந்நிதிகளை தரிசித்து படிகளேறி வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலது புறம் பள்ளியறையும் பக்கத்தில் அம்மன் சந்நிதியும் உள்ளன.
மூலவர் சாயவனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. இங்குச் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சதுர வடிவான ஆவுடையில் அவர் உண்டு, இது நான்கு வேதங்களும் அவரில் அடக்கம் என்பதைச் சொல்லும் தாத்பரியம்.
உட்பிரகாரத்தில் மூலவர் சந்நிதிக்கு அருகிலேயே தெற்கு நோக்கிய இறைவியின் குயிலினும் நன்மொழியம்மை சந்நிதி உண்டு.
இதன் அருகே இந்திரனின் தேர் நிற்கும் காட்சி உண்டு, விமானத்தில் சக்கரம் அமைந்த அந்தக் காட்சி அன்று தன் தேர் சக்கரத்தில் லிங்கத்தை இழுக்க முயன்ற கோலத்தின் சாட்சி.
இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு வில்லேந்திய முருகர்.
இந்த முருகப்பெருமான் சிலை இந்த ஆலயத்துக்கு உரியது அல்ல, அது திருச்செந்தூர் ஆலயத்தில் இருந்த சிலை. அதனை முன்பு அந்நிய படையெடுப்பு காலங்களில் அந்நிய கும்பல் கடத்திச் செல்ல முயன்றபோது இங்கு வந்தது.
ஆம், இந்தக் கொடுமை திருச்செந்தூரில் நடந்தது. இன்று நினைத்தாலும் குலை நடுங்கும் அக்கொடுமை மிக இயல்பாக நடந்த காலங்களும் உண்டு.
டச்சுக்காரர் காலத்தில் திருச்செந்தூர் ஆலயம் அவர்களால் கைப்பற்றபட்டு ஆயுத குடோன் என்றானது, அப்போது மூலவர் சிலையே கப்பலில் கடத்தப்பட்டது, ஆனால் முருகப்பெருமானின் ஆத்திரத்தால் அக்கப்பல் மூழ்கி அந்தச் சிலை மட்டும் கரை ஒதுங்கி மூழ்கிக் கிடந்தது, சில காலம் கருவறையில் முருகப்பெருமான் சிலையே இல்லை, அப்படியும் கொடும்காலம் இருந்தது.
அந்நேரம் திருமலைநாயக்கர் கனவில் முருகப்பெருமான் தோன்றி தன் சிலை இருக்குமிடம் சொல்லி அது கரையோரமாக மீட்கப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டது. இது வரலாறு.
இப்படியான காலங்களில் இந்தச் சிலையும் கடத்தப்பட்டது. அது இந்தக் கடல் பக்கம் செல்லும்போது கப்பல் மூழ்கி இச்சிலை கடலுக்குள் வீழ்ந்து பின் மீனவர்களால் மீட்டெடுக்கப்பட்டு இங்கு ஸ்தாபிக்கபட்டது.
அதாவது சிவன் தன் மகனின் சிலையினை தன் ஆலயத்திற்கு ஈர்த்து நிறுத்திக் கொண்டார், சிலிர்க்க வைக்கும் இந்தச் சம்பவம் அங்கு இயல்பானது.
அந்த முருகப்பெருமான் அம்பாள் சந்நிதிக்கு வெளியே உள்ள மண்டபத்தில் வலது புறம் இக்கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தியாக வில்லேந்தி அபூர்வ வடிவில் காட்சி தருகிறார். ஒரு முகமும் நான்கு திருக்கரஙளும் கொண்டு அருகில் மயிலுடன் காட்சி தருகிறார்.
ஒரு கரத்தில் கோதண்டம், ஒரு கரத்தில் அம்பு, ஒரு கரத்தில் வில், மற்றெரு கரத்தில் கொடி ஆகியவற்றுடன் அருட்காட்சி தருகின்றார். இத்திருமேனியின் கீழ் திருசெந்திலாண்டவர் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இங்கு எந்த முருகப்பெருமான் சிலையிலும் இல்லாத ஒரு அம்சம் உண்டு. அது முருகப்பெருமான் காலில் அணிந்திருக்கும் வீரகண்டமணி.
முருகப்பெருமான் போருக்குச் செல்லும் போது, சிக்கலில் அம்பாள் எதிரிகளை அழிக்க முருகனுக்குக் கொடுத்த வேல் போன்று சிவபெருமான் வீரகண்டமணி எனும் போர்க்கழலை காலில் கட்டிவிட்டார், அது பெரும் பாதுகாப்பு கொடுத்தது. அக்கோலத்தில் முருகப்பெருமான் தெற்கு நோக்கி அருள்பாலிகின்றார்.
இந்த ஆலயம் மகா சிறப்பானது, சூட்சும சக்தி நிரம்பியது, உங்கள் குறை எல்லாம் போக்கி சோதனை எல்லாம் போக்கி அறிவும் ஞானமும் தரக்கூடியது.
இங்கு வழிபட்ட உபமன்யு மகரிஷி முதல் இயற்பகை நாயனார், இந்திரன் என எல்லோருமே பெரும் ஞானம் பெற்றார்கள் சிவநிலையும் அடைந்தார்கள்.
சாயுஜ்யம் தரும் ஆலயம் இந்த சாயவானேஸ்வரரின் சாயாவனம் ஆலயம், அது பூலோகத்திற்குரிய எல்லா வரமும் தரும், அது இந்திர போகமும் தரும், நல்ல மனைவியோடு சோதனைகளைத் தாண்டி வாழும் வரமும் தரும்.
இங்கு அன்று கடலில் மூழ்கிய அந்தப் பூம்புகாரில் நடந்த இந்திர விழா இப்போதும் உண்டு, நவராத்திரி காலங்களை ஒட்டி வரும் அந்த விழா பண்டைய வழிபாட்டின் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக இன்றும் உண்டு.
தை அமாவாசை காசியில் முக்கியமானது என்பது போல் இங்கும் அந்நாள் முக்கியமானது, தை அமாவாசையில் இக்கடலில் நீராடி இந்தச் சிவனை தொழுதால் காசியில் வணங்கிய பலன் சத்தியமாய் உண்டு.
சாயுஜ்யம் எனும் முழு முக்தி தரும் ஆலயம் இது.
வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த ஆலயத்துக்கு செல்ல மறவாதீர்கள், நாகப்பட்டினம் செல்லும் போது மறவாமல் இங்குத் தரிசியுங்கள், முடிந்தால் தை அமாவாசைக்குச் செல்லுங்கள், இந்திர விழாவுக்கும் செல்லுங்கள். அப்போது உபமன்யு முனிவர் நினைவோடும், இயற்பகை நாயனார் இந்திரன் நினைவோடும் இங்குத் தரிசியுங்கள். எல்லா வரமும் அருளும் இந்திர யோகமும் இல்லற பாக்கியமும் உங்களுக்குக் கிடைக்கும். இது சத்தியம்.
வாழ்வினைத் தன் பக்தனுக்கு ஏற்றபடி சாய்த்து தருவார் இந்தச் சாயவனேஸ்வரர், காலம் இங்கே அவர் பக்தனுக்காக சாயும். வழிபட்டு பாருங்கள். காலம் உங்களுக்கும் நிச்சயம் சிவனருளில் சாயும்.
அதனை அப்பர் சுவாமிகளே இங்கிருந்து பாடுகின்றார்.
“வானத்து இளமதியும் பாம்பும் தம்மில்
வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்,
தேனைத் திளைத்துஉண்டு வண்டு பாடும்
தில்லை நடமாடும் தேவர் போலும்,
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்,
நன்மையும் தீமையும் ஆனார் போலும்,
தேன்ஒத்து அடியார்க்கு இனியார் போலும்,
திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்,
அமர்உலகம் தம்அடைந்தார்க்கு ஆட்சி போலும்,
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்,
நள்ளாறு நாளும் பிரியார் போலும்,
முல்லை முகைநகையாள் பாகர் போலும்,
முன்னமே தோன்றி முளைத்தார் போலும்,
தில்லை நடமாடும் தேவர் போலும்,
திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே”
பஞ்ச வன சிவதலங்கள் 02 : திருக்களர் பாரிஜாதனேஸ்வரர் ஆலயம்.
“நீருள் ஆர்கயல் வாவி சூழ்பொழில்
நீண்ட மாவயல் ஈண்டு மாமதில்
தேரின்ஆர் மறுகில் விழாமல்கு திருக்களருள்
ஊரு ளார்இடு பிச்சை பேணும் ஒருவ
னே, ஒளிர் செஞ்ச டைம்மதி
ஆரநின் றவனே, அடைந்தார்க்கு அருளாயே”
சோழநாட்டின் திருதுறைபூண்டி மன்னார்குடி சாலையில் அமைந்துள்ள இந்த ஆலயம் பஞ்ச வன தலங்களில் சிறப்பு வாய்ந்தது, இதற்கென தனி வரலாறும் தனி தத்துவ பரிபாலனும் தனித்துவமான தாத்பரியமும் உண்டு.
“ஓங்கு புத்தி மான் களரில் ஓட்டி மகிழ்வோடு இருந்து ஏத்தும் வான் களரில் வாழும் மறை முடிபே” என வள்ளலார் போற்றிய தலம் இது.
இந்தத் தலத்தின் வரலாறு பிரசித்தியான துர்வாச முனிவரிடம் இருந்து துவங்குகின்றது, துர்வாச முனிவர் வாழ்வு எல்லோரும் அறிந்த ஒன்று. அவர் அத்திரி மகரிஷிக்கும் அனுசுயைக்கும் மகனாகப் பிறந்தவர், பொறுமையின் அடையாளமான அந்தத் தவசிகளுக்குப் பிறந்திருந்தாலும் இந்தத் துர்வாசரிடம் மிகப்பெரிய பலவீனம் உண்டு, அது முன்கோபம்.
இந்த முன்கோபத்தால் செல்லுமிடமெல்லாம் அவர் பெரிய சாபங்களை இட்டார். அதே நேரம் அவரும் சிக்கலை சந்தித்தார், அவரின் கோபமும் சாபமும் புராணங்களில் பிரசித்தி, இந்திரன் முதல் எல்லோரும் அவரிடம் சாபம் பெற்று மீண்டவர்கள், சாகுந்தலை வாழ்வில் முக்கியமான திருப்பம் இவரின் சாபத்தால் வந்தது.
மகாபாரதம் வரை இவரின் கோபமும் கொடும் சாபமும் பிரசித்தி. கடுமையான முன்கோபியே தவிர சடுதியில் அக்கோபம் அவருக்கு மறைந்துவிடும், அதன்பின் கருணையே உருவானவர் அந்தச் சாபம் தீர வழிமுறையும் சொல்லிவிட்டே செல்வார், யாரையும் அவர் கைவிட்டதுமில்லை.
உள்ளே அன்பும் வெளியே கரடுமுரனான தோற்றமும் கொண்ட பலாப்பழம் போல தன்மை கொண்ட இவர் தன் கோபம் குறித்து வருந்தினார். அதுதீர என்ன வழி என அவர் யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் வியாக்ரபாரதரும் பதஞ்சலி முனிவரும் சிதம்பரத்தில் சிவநடனம் கண்டார்கள்.
இதைக் கேள்விப்பட்டவர் இன்னும் அதே சிவநடனம் மதுரையில் சிவன் மீனாட்சி திருமணத்தில் நடந்தது என்றெல்லாம் தெரிந்து கொண்டவர் தனக்கும் அக்காட்சி கிடைக்கவேண்டும் என விரும்பினார், அதாவது தான் எதையோ தேடிச் செல்வதையும் அதில் இன்னும் நிறைவடையாமல் இருப்பதையும் உணர்ந்திருந்தவர் அதுவே தன் கோபத்துக்குக் காரணம் என்பதையும் அறிந்தே இருந்தார்.
முழுமை இல்லா மனம் ஒரு தேடலில் இருக்கும், அந்த நிறைவின்மை இல்லா இடத்தில் அமைதி இருக்காது, அந்த மனம் சிம்மம் தன் பாதையில் குறுக்கிடுவோரை நோக்கிச் சீறுவது போல் சீறும், தன் மனம் எதையோ தேடி அலைகின்றது நிறைவடையவில்லை அது சிவநடனத்தைக் கண்டால் முழுமை அடையும் எனச் சிந்தித்தவர் இந்த வனத்துக்கு வந்தார்.
அங்கே சிவபூஜைக்காக தன் தவவலிமையால் தேவலோக பாரிஜாத மரத்தைகொண்டு வந்து அந்தப் பூக்களினால் சிவனுக்கும் அன்னைக்கும் பூஜைகள் செய்து பெரிய தவமிருந்தார், தனக்கும் நடராஜ கோலம் காட்ட வேண்டும் எனும் வேண்டுதலுடன் தவமிருந்தார்.
ஈசனின் நடனங்கள் ஐந்து சபைகளில் பிரசித்தி என்றாலும் அது அடிப்படையில் எட்டுத் தத்துவ வடிவங்களைக் கொண்ட நடனம்.
அது ஆனந்த தாண்டவம் என சிவபெருமான் ஆனந்தத்துடன் நடனமாடும் பொதுவான முழு நிறைவான நடனம்,
உமா தாண்டவம் எனும் பார்வதி தேவியுடன்இணைந்து ஆடும் தாண்டவம், சந்தியா தாண்டவம் என மாலை நேர சந்தியாகாலத்தில் சிவனார் ஆடும் நடனம்.
சங்கார தாண்டவம் என பிரபஞ்சத்தை அழிக்கும் அதி தீவிரமான தாண்டவ நடனம், ஊர்த்துவ தாண்டவம் சிவனார் ஒரு காலை உயர்த்தி ஆடும் தாண்டவம், திரிபுர தாண்டவம் என திரிபுர அசுரர்களை அழித்தபோது ஆடிய தாண்டவ வடிவம்.
கால தாண்டவம் எனக் காலத்தை வென்று ஆடும் தாண்டவம். முனி தாண்டவம் என முனிவர்கள் தவம் புரியும்போதும், அவர்களுக்கு அருள்புரியும்போதும் ஆடும் தாண்டவம் என எட்டு உண்டு.
இந்த எட்டும் ஈசனின் எட்டுக் குணத்தினைச் சொல்லும் நடனங்கள், ஈசனின் எட்டு குணங்கள் எல்லோரும் அறிந்தது.
சிவபெருமான் தனக்கு மேல் யாருமில்லா தலைவன், மிகக் கருணை கொண்டவன். மகா தூய்மையானவன், தன் இயல்பிலே ஞானம் கொண்டவன், பாசங்களில் இருந்து நீங்கியவன், முடிவிலா ஆற்றல் உடையவன், முற்றும் உணர்ந்தவன், வரம்பில் இன்பம் உடையவன் என எட்டுக் குணங்கள் உண்டு.
இதனை மாணிக்க வாசகர் தன் பிரசித்தியான பாடலில் சொல்வார்.
“ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி”
இதன் பொருள் ஈசன் என்றால் அரசன், தலைவன். எந்தை என்றதனால் அருள் உடையவன். தேசன் என்றதனால் தூய உடம்பைக் கொண்டவன், சிவன் என்றதனால் இயற்கை உணர்வின் தன்மை கொண்டவன், நிமலன் என்றதனால் இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன், பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால் முடிவிலா ஆற்றல் உடையவன், தேவன் என்றதனால் முற்றும் உணர்ந்தவன்,
ஆராத இன்பம் அருளுமலை என்றதனால் வரம்பில் இன்பம் உடையவன் என எட்டுக் குணங்களை என அர்த்தமாய்ப் பாடுகின்றார்.
“கோளில் பொறியில் குணம் இலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை”
என இந்துஞானி வள்ளுவன் சொன்னதும் இதுதான்.
இந்த எட்டுவகை குணமும் ஈசனின் எட்டுவகை நடனங்களோடு பொருந்தி வரும், அதில் ஒன்று தனக்கான நிறைவினைத் தரும் என துர்வாச முனிவர் இங்குத் தவமிருந்தார்.
அவரின் தவத்துக்கு இறங்கிய ஈசன் அவருக்குத் தன் பிரம்ம நடனம் எனும் ஆனந்த நடனத்தை காட்டினார், அவரின் ஆனந்த நடனத்தில் துர்வாச முனி மிகப்பெரிய நிறைவினை அடைந்தார். அவரின் தேடல் முழுமையானதை உணர்ந்தார், தேடிய எல்லாமும் அவர் மனதில் நிறைந்தது, நிறைந்த மனம் கனிவானது, கனிந்த மனம் கோபத்தைத் துறந்தது.
எந்த மனதில் எல்லாம் கிடைத்த நிறைவு உண்டோ, எது தன்னில் எந்தக் குறைவுமில்லை எனக் கருதுமோ, எந்த மனம் முழு நிறைவில் ஆசாபாசங்களை மாய மயக்கங்களை இன்ப துன்பங்களைக் கடந்து நிற்குமோ அங்கே கோபம் வராது.
கோபம் என்பது ஒரு குறைவின் வெளிப்பாடு, கோபம் என்பது இயலாமையின் வெடிப்பு, எங்கு எல்லாமும் நிறைந்து எல்லாமும் முழுமையோ அங்குக் கோபம் வராது.
ஆம், துர்வாசன் ஈசனின் நடனம் கண்டு தன் சினம் எனும் பெரும் குறையினைப் போக்கும் தலம் இது.
சித்திரை மாத சித்திரை நட்சத்திரம் அன்று இந்த காட்சியினை சிவன் அருளினார் அதனால் அந்த ஆலயத்தில் இன்றும் அந்த நாளில் விழா உண்டு.
இதிலிருந்து இந்தத் தலத்தின் வரலாறு துவங்குகின்றது, சிவனின் நடனத்தைக் கண்டு முழு நிறைவடைந்த துர்வாசர் தேவலோக தச்சன் விஸ்வகர்மாவினை அழைத்து இந்தக் கோவிலை நிர்மாணித்தார், இது யுகங்களைத் தாண்டி உருவான ஆலயம்.
இங்கே துர்வாசர் தங்கி இருந்து திருப்பணிகள் பல செய்து வழிபட்டார். அப்போது முருகப்பெருமான் 6000 முனிவர்க்கும் துர்வாசருக்குமாக பஞ்சாட்ச உபதேசம் செய்தார், அது மார்கழி மாதம் சுக்லபட்ச சஷ்டியும் சதய நட்சத்திரம் கூடிய நாளுமாக இருந்தது.
பராசர முனிவர் இங்கு வந்து பணிந்து வழிபட்டார், பராசரர்தான் வியாச மாமுனியின் தந்தை.
இன்னும் மாலாதாரகன் எனும் மன்னன் இங்கு முக்தி அடைந்தான், மகாரதன் எனும் பாண்டிய மன்னன் இங்கு தன் வாரிசு இல்லாக் குறை நீங்க இங்கு வழிபட்டு வாரிசை அடைந்தான்.
காசியில் இறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலை நினைத்தால் முக்தி என்பது படி இங்குப் பிறந்தாலும் இறந்தாலும் இந்த மண்ணை மிதித்தாலும் மனதால் நிலைத்தாலும் முக்தி என்பது சிவன் வாக்கு, இங்குள்ள மரம்சொடி கொடிகளுக்கும் புழுக்களுக்கும் பூச்சிகளுகுமே மறுபிறப்பு இல்லை.
இவை எல்லாம் திருக்களர் புராணம் எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது, அனுகூல சருக்கம், பாரிஜாத வனசருக்கம், நிருத்த சருக்கம், பஞ்சாட்சர சருக்கம், மாலாதாரகர் சருக்கம், மகாரதன் புத்திர சருக்கம், தீர்த்தமான்மிய சருக்கம் என ஏழு சருக்கம் உண்டு.
இவை முழுக்க இந்த ஆலய பெருமைகளைச் சொல்கின்றது. ஒருவகையில் இது சிதம்பரம் ஆலயத்துக்கு ஈடானது, ஆனால் ஏன் அந்த அளவு பெரிதாகவில்லை என்றால் காரணம் களபன் எனும் குறுநில மன்னன்.
இவன் சோழ வம்சம் அல்ல. மாறாக, களர்பூமி எனும் இந்த இடத்தை ஆண்ட குறுநில மன்னன், சிவபக்தன் பெரும் வீரன். இவன் சோழமன்னனோடு பெரும் போரிட்டு அவனை வென்று அவன் மகுடத்தை பிடுங்கி வந்து தனக்கு முடிசூட்டும்படி தில்லைவாழ் அந்தணர்களிடம் கோரினான்.
அவர்களோ சோழ வம்சம் அலலாதவர்க்கு நாங்கள் முடிசூட்டுவதில்லை என்றார்கள், அவன் மிகுந்த ஆத்திரத்தோடு அம்முடியினைத் தானே சூட்டி கொள்ள முடிவு செய்து இந்தத் தலத்துக்கு வந்து அதைச் செய்து கொண்டான், ஆனால் அதன் பின் அவனின் ஆத்திரமெல்லாம் அடங்கிக் கோபமெல்லாம் அடங்கி, துறவிபோல் பின்னாளில் மாறிப்போனான்.
ஆனால் அவனுக்கும் தில்லைவாழ் அந்தணர்க்குமான இடைவெளி அப்படியே இருந்தது. தில்லை பெரிய ஆலயமாயிற்று, இந்த ஆலயம் தன் வழியே தனித்து நின்றது எனினும் சிவனருள் மிகுந்த ஆலயம்.
குலோத்துங்க சோழன் முதல் ராஜராஜசோழன் என எல்லா சோழ அரசர்களும் இங்குவழிபட்டார்கள், பாண்டியர்களும் பெரிய திருப்பணியினை இங்குச் செய்தார்கள்.
அப்பர் சுவாமிகளும் திருஞான சம்பந்தரும் தேவாரம் பாடிய தென்கரை தலம் இது.
இங்கு சிவபெருமான் பாரிஜாதவனேஸ்வரர், களர்முளைநாதர் அன்னையார் பெயர் அமுதவல்லி.
கோவில் முன்னே துர்வாச தீர்த்தம் உண்டு, அது துர்வாச முனியால் ஏற்படுத்தப்பட்டது.
ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. உள்ளே நந்தியும் கொடிமரமும் உள்ளன. ஆலயத்தின் தென்மேற்கு முனையில் விநாயகர் கோயிலும், வடக்கில் வசந்த மண்டபமும் யாகசாலையும் உள்ளன. இதையடுத்து சுவாமிக்கும் அம்பாளக்கும் கோபுர வரிசையில் இரண்டு கோபுரவாயில்கள் உள்ளன.
நவக்கிரகங்கள் சந்நிதியினைக் கடந்து உள்வாயிலைக் கடந்து சென்றால் சந்திரன், பிரம்மா, விஸ்வகர்மா போன்றோர்க்குச் சந்நதிகள் உண்டு.
விஸ்வகர்மா இந்த ஆலயத்தை நிர்மாணித்ததால் இங்கு அவனுக்கு சந்நிதி மறக்கமல் இடப்பட்டிருக்கின்றது.
சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளுக்கு நடுவில் பாரிஜாத மரம் எனும் பவள மல்லிகை மரம் தலமரமாக உள்ளது. அம்மன் சந்நிதி கருவறைச் சுற்றில் சிம்ம வாகனத்தில் அமர்ந்துள்ள அஷ்டபுஜ துர்க்கை சந்நிதி உண்டு.
வலம்புரி விநாயகர் சந்நிதியும், , விஸ்வநாதர், கஜலட்சுமி, 63 நாயன்மார்கள் சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. துர்வாச தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ருத்ர தீர்த்தம் என முக்கிய தீர்த்தமும் உண்டு.
இத்தலத்தில் உள்ள முருகப் பெருமான் மிக்க அழகுடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானை உடன் இல்லாமல் தனியே குரு மூர்த்தமாக அருள் புரிகிறார். முருகப் பெருமான் 60000 முனிவர்களுக்கும், துர்வாசருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில் என்பதால் இங்கு வழிபட்டால் கல்வி மேன்மையும் ஞான மேம்பாடும் கிடைக்கும்.
இங்கே துர்வாச முனிவருக்கு இறைவன் நடராஜர் பிரமதாண்டவ தரிசனம் கொடுத்தருளியதால் துர்வாசர் இத்தலத்தில் எப்போதும் நடராஜ பெருமானின் பிரம்மதாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறார் அதனால் இவ்வாலயத்தில் துர்வாசர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் எதிரெதிரே அமைந்துள்ளது. நடராஜ பெருமானின் 8 தாண்டவ தலங்களுள் இரண்டாவது தலம் இது.
இந்தக் கோவில் பக்தர்களால் மிகுந்த பொருட்செலவில் பராமரிக்கப்பட்டு கொண்டாடபாபடுகின்றது, இங்குள்ள அன்னைக்கு தங்கக் கவசம் உண்டு. விசேஷ நாட்களில் அந்தத் தங்க கவசத்தில் அன்னை ஜொலிப்பது அற்புதமான அழகு.
இந்தக் கோவிலின் மடாதிபதியாக இருந்த வீரசேகர ஞான தேசிக சுவாமிகளின் திருப்பணி கொஞ்சமல்ல. திருக்களர் ஆண்டவர் எனும் அளவு அவர் பெரும் பணி செய்திருந்தார்.
அவர் மடத்தில் இன்றும் துறவியர் உண்டு. அவர் உருவாக்கிய வேதபாடசாலையும், பசுமடமும், வேதாந்த மடமும், அறுபத்துமூவர் குருபூஜை மடமும் இன்றும் நன்முறையில் இயங்குகின்றது, அவரின் சமாதி இதன் அருகேதான் அமைந்துள்ளது அவரையும் பக்தர்கள் தவறாமல் வழிபடுவார்கள்.
சோழ நாட்டுக்கு செல்லும் போது இந்தத் தலத்தைத் தரிசிக்க மறவாதீர்கள், இந்தத் தலத்தின் சிறப்பு இங்கு வழிபடுவோர்க்கு மட்டுமல்ல அவர் குலத்துக்கே பெரும் நன்மைகள் வாய்க்கும், கர்ம வினைகளெல்லாம் தீரும்.
ஜாதகத்தில் கேது பகவானால் தொல்லை இருந்தால் இங்கு வந்து வழிபடுதல் சிறப்பு, கேதுவின் அருள் இங்கு பிரசித்தம்.
பஞ்ச வன ஆலயங்கள் மனிதனிடம் இருக்கும் ஐந்து முக்கியமான துர்குணங்களை அகற்றும், அவ்வகையில் இது கோபம் எனும் பெரும் துர்குணத்தை ஒரு மனிதனிடம் இருக்கவே கூடாத குணத்தை அகற்றி அவனுக்கு ஞானமும் அறிவும் பொறுமையும் தரும். தவறாமல் முக்தியும் தரும்.
இத்தலம் நிச்சயம் தில்லை சிதம்பரம் கோவிலுக்கு ஈடானது, அதனால் சோழநாட்டின் திருத்துறைபூண்டி பக்கம் செல்லும் போது மிக மிக பழமையானதும் துர்வாசருக்கே ஞானம் கொடுத்து நிறைவினைக் கொடுத்த இந்த ஆலயத்தை மறவாமல் தரிசியுங்கள்.
அங்கு வழிபட வழிபட உங்கள் மனம் முழுக்க நிறைவடையும், நிறைவடைந்த மனம் எதையும் தேடாது. எதையும் தேடா நிலையில் கோபமோ இதர குணங்களோ அண்டாது, அந்த நிறைவு உங்களுக்கு முக்தியினைத் தரும, அந்தச் சிவனின் பிரம்ம நடனக்கோலத்தை அங்குக் கைகூப்பி நின்று வணங்கும் துர்வாச முனிவரோடு வணங்குங்கள் அக்கணம் உங்கள் வாழ்வே மாறும்
“அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன்
ஆட வர்பயில் மாட மாளிகை
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்துஅழகாய திருக்களருள்,
என்பு பூண்டது ஓர் மேனி எம், இறை
வா, இணையடி போற்றி நின்றவர்க்கு”
அன்பு செய்தவனே, அடைந்தார்க்கு அருளாயே.
பஞ்ச வன சிவதலங்கள் 03 : கீழ்வேளூர் கேடிலியப்பர் ஆலயம்.
“கழிக்கானல் மருங்குஅணையும் கடல்நாகை
அதுநீங்கி, கங்கை ஆற்றுச்
சுழிக்கானல் வேணியர்தம் பதிபலவும்
பரவிப்போய், தோகை மார்தம்
விழிக்காவி மலர்பழனக் கீழ்வேளூர்
விமலர்கழல் வணங்கி ஏத்தி,
மொழிக்காதல் தமிழ்மாலை புனைந்துஅருளி,
அங்குஅகன்றார் மூதூர் நின்றும்”
எனச் சம்பந்த பெருமானால் பாடப்பட்ட தலம் இது. தேவாரம் பாடப்பெற்ற 84ஆம் ஆலயமான இந்தத் தொன்மையான சிவாலயம், நாகப்பட்டினம் அருகே காவேரியின் தென்கரை ஆலயமாக அமைந்துள்ளது, இதன் தொன்மையானது புராணக்காலத்தில் இருந்து வருவது.
பாற்கடலை அமிர்தத்துக்காக தேவரும் அசுரரும் கடைந்த காலத்தில் உருவான அமிர்தத்தின் துளி ஒன்று பூமியில் விழுந்தது, அது இரண்டாக உடைந்து ஒன்று வடக்கேயும் இன்னொன்று தெற்கேயும் விழுந்தது, அந்த இடங்கள் இலந்தை மரங்கள் நிறைந்த வனங்களாயின.
பத்ரி என்றால் இலந்தை மரம், வடக்கே அது விழுந்த இடம் “வட பத்ரி ஆரண்யம்” என்றாயிற்று. பின்னாளில் அது பத்ரிநாத் என்றாயிற்று, தெற்கே விழுந்த இடம் இந்த கேடிலியப்பர் ஆலயத் தலமாயிற்று.
ஆம், பத்ரிநாத் தலத்தோடு தொடர்புப்பட்ட தலம் இது, அங்கு என்னெல்லாம் சிறப்பும் வரமும் அருளும் உண்டோ அதெல்லாம் இந்த ஆலயத்திலும் அப்படியே அருளப்படும்.
கேடுகளை நீக்கித் தருவதால், கேடு இல்லாத வாழ்க்கையினைத் தருவதால் அவர் கேடிலியப்பர்.
இந்த ஆலயம் ரிஷிகளாலும் தவமுனிவர்களாலும் வழங்கப்பட்டது என்றாலும் எங்குமில்லாச் சிறப்பாக இங்கு வழிபட்டவர் முருகப்பெருமான். ஆம். முருகப்பெருமானே இங்கு வழிபட்டார்.
சூரபத்மனை திருச்செந்தூரிலே சம்ஹாரம் செய்த முருகனுக்கு வீரஹத்தி தோஷமும் ஏற்பட்டது, வேதம் அறிந்த பண்டிதரைக் கொன்றால் வருவது பிரம்மஹத்தி, பெரும் வீரர்களை அழித்தால் வருவது வீரஹத்தி, கருவில் இருக்கும் அப்பாவியான களங்கமற்ற உயிரினை அழித்தால் வருவது ப்ரூணஹத்தி தோஷம்.
‘ஹத்தி’ என்றால் சாபம் அல்லது பாவம்.
இதற்கு அவதாரங்களும் தெய்வங்களுமே தப்பமுடியாது, ராவணன் எனும் பெரும் சிவபக்தனை வேதம் ஓதுபவனை அழித்ததற்காக ராமபிரானே அந்தப் பிரம்மஹத்தி தோஷம் கொண்டார், ராமேஸ்வரத்தில் அதனைக் கழித்தார்.
அப்படி முருகப்பெருமானுக்கு வீரஹத்தி தோஷம் ஒட்டிக்கொண்டது, அதைப் போக்க இந்தத் தலத்தில் அவர் வந்து வழிபாடுகளை மேற்கொண்டார், அப்போது அவரால் உருவான தீர்த்தமே இந்த ஆலயத்தின் தீர்த்தம், அது சரவணப் பொய்கை என்றானது.
முருகப்பெருமான் தன் தோஷம் தீரப் பெரும் வழிபாட்டை மேற்கொள்ளும் போது இந்த ஆலயத்தை சுற்றி எட்டுத் திசைகளிலும் பல ஆலயங்களை ஸ்தாபித்தார், எட்டுத் திசைகளிலும் உள்ள கோயில் கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் என அவை அறியப்படுகின்றன.
இவற்றில் ஆழிக்கடம்பனூர் (ஆழியூர்), அகரக் கடம்பனூர் , கடம்பர வாழ்க்கை, இளங் கடம்பனூர், பெருங் கடம்பனூர் ஆகிய தலங்களைப் பஞ்ச(ஐந்து) கடம்ப ஷேத்திரம் என்பார்கள். இவை மிக விசேஷம்.
அவ்வாறு முருகப்பெருமான் இங்கு வழிபட்டு தன் கேடுகளை நீக்கிக் கொண்டார், அப்போது இருந்து இது கேடிலியப்பர் தலமாயிற்று.
அவ்வாறு முருகப்பெருமானே தன் சாபத்தை நீக்கி மக்களுக்கு வழிகாட்டிய தலம் இது, இங்கு வழிபடுவோர்க்கு எவ்வித பெரிய சாபமாக இருந்தாலும், அறியாமையில் வந்த சாபமாக இருந்தாலும் அது நீங்கும்.
அறவழி வாழ்விலும் சாபம் ராமனுக்கும், முருகனுக்குமே வந்தது என்றால் நம் ஒவ்வொருவருக்கும் நம்மை அறியாமல் வரும், பூலோக வாழ்வு கர்மம் செய்ய அந்தச் சாபங்களைப் போக்கி நல்வாழ்வு தரும் ஆலயம் இது.
முருகப்பெருமான் இங்கு வழிபாடுகளைச் செய்யும்போது அசுரக்குலத்தின் எஞ்சிய சக்திகள் அவருக்குப் பெரும் தொல்லை கொடுத்தன, அவரின் வேள்விக்கு இடைஞ்சல் பல செய்தன. அப்போது அன்னை மகாசக்தி ஆங்கார ரூபிணியாய் ஐந்து அடுக்கு காவலைக் கொடுத்தாள்.
நான்கு திசை ஆகாயம் என ஐந்து வழிகளிலும், பஞ்சபூத வடிவில் வரும் ஆபத்துக்களை அழிக்கும்படி ஐந்து நிலையிலும் அவள் காவல் கொடுத்தாள், இதனால் “அஞ்சு வட்ட அம்மன்” என்றானாள். அவளும் இங்குப் பெரும் சக்தி படைத்த அம்மன்.
பிரம்மன் தன் சாபம் தீர இங்கு வழிபட்டார், அவர் உருவாக்கிய தீர்த்தம் இன்றும் “பிரம்ம தீர்த்தம்” என வடக்கு கோபுரம் அருகே உண்டு.
இந்த ஆலயத்தின் இன்னொரு பெரும் சாட்சி அகத்தியர், வலது கால் தூக்கி நடராஜ கோலத்தில் சிவன் அருள்பாலிக்கும் தலம் இது.
சிவபெருமானின் நடனக்கோலத்தை காணும் ஆவல் அகத்திய முனிக்கும் ஏற்பட்டது, பல முனிவர்கள் கண்ட அந்தத் திருக்கோலத்தை அகத்திய முனியும் காண விரும்பினார், அவரை இந்தத் தலத்துக்கு வரவழைத்து தன் நடனத்தைக் காட்டி வலதுகாலை தூக்கிச் சிவன் காட்சி அளித்த தலம் இது.
இந்தக் காட்சியினை இதற்கு முன் பாண்டிய மன்னன் ராஜசேகரன் என்பவன் வாழ்வில் காணலாம், திருவிளையாடலில் இந்தக் காட்சி வரும், இன்று மதுரையின் வெள்ளி அம்பலத்தில் இடதுகாலை ஊன்றி வலது காலை உயர்த்தி சிவன் நடனக்கோலத்தில் இருப்பதைக் காணலாம்.
அதே காட்சியினை இங்கும் அகத்தியர்க்கு அருளினார் எம்பெருமான், அதனால் அதே நடராஜர் கோலம் இப்போதும் உண்டு.
ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று அகத்திய முனிவருக்குக் கால் மாறி ஆடி தன் வலது பாத தரிசனத்தைக் காட்டி சிவபெருமான் அருளினார். இதனால் இத்தல நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று திருமஞ்சன விழா கொண்டாடப்படும்.
பொதுவாக வலதுகாலை ஊன்றி இடதுகாலை உயர்த்தி ஆடும் நடராஜ கோலம் எல்லாக் கோவில்களிலும் உண்டு. சிதம்பரமும் அபபடியே, ஆனால் வலது காலை உயர்த்தி இடது காலை ஊன்றி ஆடுவது வெகு அபூர்வம்.
இரண்டுக்குமான வேறுபாடு சிவசக்தி தத்துவத்தில் இருக்கின்றது, சிவனின் இடப்பாகம் அம்பிகைகுரியது, வலப்பாகம் சிவனுக்குரியது.
அங்கே இடது கால் உயர்ந்திருந்தால் அது இயக்கும் சக்தி நிலை எனப் பொருள், வலது கால் உயர்ந்திருந்தால் படைக்கும் நிலை துவக்க நிலை எனப் பொருள்.
அதனால் இத்தலம் ஒரு மனிதனின் தலைவிதியினைப் புதிதாக படைக்கும் தத்துவத்தை குறிப்பது, புதுவாழ்வினைக் குறிப்பது. ஆம், இந்த ஆலயம் பழையன எல்லாம் கழிந்து புதுவாழ்வினைத் தரும்.
முருகப்பெருமானே அதைப் பெற்று வழிகாட்டினார். பின் பிரம்மனும் அகத்தியரும் பெற்று வழிகாட்டினார்கள். ஏகப்பட்ட அடியார்கள் அப்படி இந்த ஆலயத்தினைப் பணிந்து கர்மவினை, பழையவினை எல்லாம் அகற்றித் தோஷங்கள் நீங்கிப் புதுவாழ்வு அடைந்தார்கள்.
இந்திரன் தன் சாபம் போக்க வழிபட்ட தலம் இது.
மிகத் தொன்மையான இவ்வாலயம் பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதானது, கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.
ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலய இராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. கோபுரத்திற்கு எதிரில் முருகப்பெருமான் உண்டாக்கிய சரவண தீர்த்தம் உண்டு. கோயிலின் உள்ளே வசந்த மண்டபம் அமைந்திருக்கின்றது.
இத்தலத்தின் மூலவரான கேடிலியப்பர் சுயம்புத் திருமேனியுடன் பெரிய ஆவுடையார், மெல்லிய பாணத்துடன் லிங்க உருவில் காட்சித் தருகிறார்.
ஆலயத்தின் விமானத்தில் தென்புறம் இருப்பது சோமாஸ்கந்த விமானம், வலப்புறமிருப்பது கேடிலியப்பர் விமானம். தலவிநாயகர் பத்ரி விநாயகர். அத்துடன் சுந்தர விநாயகரும் உள்ளார்.
மேல் சந்நிதியில் வலது பாத நடராஜர் தரிசனம் தருகிறார். அகத்திய பெருமான் கண்ட திருக்கோலம் இதுதான்.
அடுத்து சோமஸ்கந்தர் திருச்சந்நிதி. தட்சிணாமூர்த்தி, பதரி விநாயகர், அறுபத்துமூவர், ஜுரதேவர், அகத்தியர் என எல்லோருக்கும் சந்நிதிகள் உண்டு.
மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவரும், மகாலட்சுமி, சிவ ஆஞ்சநேயர் ஆகியோர் உண்டு. அம்பிகை சுந்தரகுஜாம்பிகையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.
குபேரனுக்கும் இத்தலத்தில் ஒரு தனிச் சந்நிதி உண்டு, பொதுவாக பிரம்மன் வழிபட்ட தலங்களில் குபேரனும் வழிபடுவது இயல்பு. அவ்வகையில் இங்குப் குபேரன் வழிபடடான் என்பதால் சந்நிதி உண்டு.
சிதம்பரத்தில் தில்லை காளிபோல இங்கு அந்த “அஞ்சுவட்ட அம்மன்” சக்திவாய்ந்தவளாக அருள் பாலிக்கின்றாள். துர்க்கையின் அம்சமாகக் காவல் புரிந்த அஞ்சு வட்டத்து அம்மையின் சந்நிதி முதல் பிராகாரத்தில் முருகன் சந்நிதிக்கு முன்னால் தனியே வட பக்கத்தில் உண்டு.
இவற்றைத் தவிர பஞ்சபூத லிங்கங்களும் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். இத்தல விநாயகப் பெருமான், சுந்தர விநாயகராக மிகவும் சக்தி வாய்ந்தவர். தட்சிணாமூர்த்தி மிகப் பழமையான திருமேனி. இத்தலத்திலுள்ள ஏகபாதமூர்த்தி திருஉருவம் தனிச்சிறப்புடையது.
இங்குக் காளி உருவம் சுதையாலானது. சுதையால் ஆன இத்திருமேனிக்குப் புனுகுச்சட்டம் சாம்பிராணித் தைலம் சார்த்தப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
இங்குள்ள முருகப்பெருமான் பாலசுப்பிரமணியராய் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வடக்கு நோக்கி பிரம்மச்சாரி கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இங்கு வழிபட்டு தோஷம் நீங்கிய பின்பே தெய்வானையினை முருகன் திருமணம் செய்தார் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.
இன்னும் விசேஷமாகத் திருச்செந்தூர் முருகன் இத்தல முருகன் இருவரின் திருமேனிகளும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டது என்பது ஆலயக் குறிப்பு.
இந்த ஆலயம் மகா விஷேசமானது, சம்பந்தரும் அப்பர் பெருமானும் தேடி வந்து பணிந்த ஆலயம் இது.
இங்கு வழிபட்டால் அறியாமையாலோ இல்லை கர்மம் நிமித்தமோ கடமை நிமித்தமோ செய்த எல்லாப் பாவங்களும் சாபங்களும் தீரும், பூமியின் ஒவ்வொரு மனிதனும் தன்னை அறியாமல் சொல்லாலும் சிந்தையாலும் மனதாலும் பாவத்தைச் செய்கின்றான், பாவமில்லா மனிதன் என உலகில் எவனுமில்லை.
அந்தச் சாபம் பாவமெல்லாம் தீர்த்துப் புதுவாழ்வினை இந்த ஆலயம் தரும். உங்கள் கர்மத்தின் நிமித்தம் வரும் தோஷங்களை, கடமையின் நிமித்தம் வரும் தோஷாங்களை இது நீக்கும்.
சில கடமைகள் சிக்கலானவை, காவல்துறை, மருத்துவம், நீதிபதிகள், ராணுவம் எனச் சிலரின் கடமைகளில் அவர்களை அறியாமல் சில குழப்பம் வரலாம். அவர்களின் கர்மம் அவர்களுக்குச் சில கெடுதல்களை கொண்டுவரலாம், அந்தக் கேட்டினை எல்லாம் இந்தக் கேடிலியப்பர் நீக்கி வைப்பார்.
அப்படியே அன்னை அஞ்சுவட்ட நாயகியும் எல்லாக் காவலையும் கொடுப்பாள், ஆகாயக் காவலைகொடுப்பதில் அவள் சக்திவாய்ந்தவள் என்பதால் விமானம் செலுத்தும் தொழில் சம்பந்தபட்டோர் அடிக்கடி விமானப்பயணம் மேற்கொள்வோர் வழிபட வேண்டிய தலம் இது.
நாகப்பட்டினம் செல்லும்போது இந்தத் தலத்தைத் தரிசிக்க மறவாதீர்கள், இது வடக்கே பத்ரிநாத்துக்குச் செல்லும் பலனைத் தரும், அப்படியே உங்கள் கர்மவினை எல்லாம் போக்கி சாபமும் தோஷமும் நீக்கிப் புதுவாழ்வும் தரும். இது சத்தியம்.
“மிக்க மினார் வாள் ஊர் தடம் கண் காட்டி ஓங்கும் கீழ்வேளூரில் செங்கண் விடையானே” என வள்ளல்பெருமான் போற்றிய இத்தலத்தினை அப்பர் பெருமானும் பாடுகின்றார்.
“நீர்ஆரும் சடைமுடியார் நிலவுதிரு
வலிவலமும் நினைந்து சென்று,
வார்ஆரும் முலைமங்கை உமைபங்கர்
கழல்பணிந்து, மகிழ்ந்து பாடி,
கார்ஆரும் கறைக்கண்டர் கீழ்வேளூர்,
கன்றாப்பூர் கலந்து பாடி,
ஆராத காதலினால் திருவாரூர்
தனில், மீண்டும் அணைந்தார் அன்றே”
சிவபெருமானின் வன சிவதலங்கள் 04 : வேணுவனம் நெல்லையப்பர் ஆலயம்.
பஞ்ச வன தலங்களில் தில்லை வனம் எனும் சிதம்பரம், தாருகாவனம் எனும் வழுவூர் பற்றி முன்பே பார்த்துவிட்டதால், மீதமிருக்கும் வனத்தில் எழுந்த ஆலயங்களைக் காணலாம்.
அதில் முக்கியமானது வேணுவனம் எனும் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம். சிவாலயங்களில் மகா புனிதமானது. அதன் பெருமை புராணங்களில் உண்டு, தாமிரபரணி மஹாத்மியம் போன்ற நூல்களில் உண்டு, கயிலாயத்துக்கு சற்றும் குறையாத பெருமை அதற்கு உண்டு, அது தென்னக கயிலாயம் எனப் பெயர்பெற்ற ஆலயம்.
இதன் பெருமையினைச் சூதமாமுனிவர் தன் சீடர்களுக்கு உரைத்தார்.
அந்த ஆலயம் எந்தப் பிரளயத்திலும் அழிவதில்லை, எல்லா யுகமும் அதனிடமிருந்தே பிறக்கின்றன, அதனாலே அது திருமூலநாதர் ஆலயம் என்றாயிற்று, அதன் வரலாறு வேதங்கள் வழிபட்ட கணத்தில் இருந்து துவங்குகின்றது.
உலகைப் படைத்து இயக்க வேதங்கள் அவசியம், ஒவ்வொரு பிரளய காலம் முடியும் போதும் புது உலகம் துவங்கப்படும். அப்படி ஒரு புது யுகம் துவங்கும்போது தாங்கள் எங்கே இறைவனை வழிபடுவது என அவை ஈசனிடம் கேட்டன, ஈசனே தான் ஆதிலிங்கமாக எழுந்திருக்கும் இந்தத் தலத்தில் வழிபடச் சொன்னார், அப்போது மூங்கில் நிறைந்த வேணுவனமாக இது இருந்தது.
அதிலிருந்து இந்த வேணுவனம் ஆதிமூலநாதர் தலம் உருவாயிற்று, வேதங்கள் வழிபட்டது இதன் துவக்கமாக இருந்தது.
இந்தத் தலத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு உலகறியச் செய்தவர் அகத்திய பெருமான், அவரே சிவன் பார்வதியின் கயிலாய திருமணத்தை முன்னிட்டு தென்னகம் உயர்ந்தபோது அதைச் சரி செய்ய இப்பக்கம் வந்தார், தாமிரபரணியினை உருவாக்கிய அந்தக் குறுமுனி, ஒருமுறை தாமிரபரணியில் வழிபட்டு தவம் செய்யும்போது ஈசனின் தரிசனம் பெற்று மகிழ்ந்தார், ஈசன் தான் இங்குக் குடியிருக்கும் விஷயத்தைச் சொல்லி அவருக்கு அடையாளமும் காட்டிக் கொடுத்தார்.
இந்தத் தலத்தில்தான் அகத்தியருக்குக் கயிலாயத்தில் நடந்த திருமண காட்சியினைச் சிவபெருமான் காட்டினார், அப்போது சிவன் கேட்ட வரத்தின்படி “எம்பெருமானே, நீர் எக்காலமும் இங்குத் தங்கியிருந்து பக்தர்களுக்கு வரமருள வேண்டும்” என அகத்தியர் வேண்ட அதை ஏற்றுக்கொண்டார் எம்பெருமான்.
அகத்தியரைத் தொடர்ந்து ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் 18 முக்கிய ரிஷிகள் இங்கு வழிபட்டார்கள், இப்போதும் ஒவ்வொரு யுக முடிவிலும் இது உண்டு.
அத்திரி, வசிஷ்டர், காசிபர், பரத்துவாஜர், கௌதமர், ஜமதக்கினி, ஆங்கீரசு ஆகிய ஏழு வகை முனிவர்களும், பிருகு, புலத்தியர், கௌசிகன், அகத்தியர், கன்வர், புலகர், கிருது ஆகிய இன்னொரு ஏழு வகை முனிவர்களும், சனகாதி முனிவர்கள் நால்வரும் ஆகப் பதினெட்டு முனிவர்களும் வழிபட்ட தலம் இது.
அசுரக் குருவான சுக்கிராச்சாரியார் அங்குச் சென்று தான் இறைவனை வணங்கி வழிபாடு செய்து, சஞ்சீவினி மந்திரத்தை பெற்றுச் சென்ற தலமும் இதுவே.
ஈசனின் ஜோதிலிங்கம் 12க்கும் முந்தியது நவலிங்கங்கள், அந்த ஒன்பது லிங்கத்தில் இந்த நெல்லை பதியே முதல் லிங்கம்.
இரண்டாம் லிங்கம் கயிலையிலும், மூன்றாம் லிங்கம் காசியிலும், நான்காம் லிங்கம் கேதாரத்திலும், ஐந்தாம் லிங்கம் லட்சுமி மலையிலும், ஆறாம் லிங்கம் காளத்தியிலும், ஏழாம் லிங்கம் சிதம்பரத்திலும், எட்டாம் லிங்கம் காஞ்சியிலும், ஒன்பதாம் லிங்கம் மதுரையிலும் உண்டு, அவ்வகையில் முதல் லிங்கமான மூலலிங்கத்தை வணங்கினால், மற்ற அனைத்து லிங்கங்களையும் வணங்கிய பலன் உண்டு.
ஆதிலிங்கம், வேதலிங்கம், விஷ்ணு லிங்கம், திரிகண்டலிங்கம், தருமலிங்கம், தானலிங்கம், கற்பகலிங்கம், கௌரிலிங்கம், பரமலிங்கம், பராபரலிங்கம், நிர்க்குண லிங்கம், சற்குணலிங்கம் என்னும் பல பெயர்கள் உள்ளன என்கின்றார் சூதமா முனிவர்.
உலகிற்கு நன்மை செய்ய இறைவன் தோன்றும் போதெல்லாம் லிங்க வடிவில் தான் தோன்றுவார். அந்த லிங்கங்கள் எல்லாம் திரிமூர்த்தி வடிவமாகும். நெல்லையில் ஆவுடையோடு தோன்றியதால், அந்த நெல்லை கயிலைக்கு இணையாகும். ஆவுடையோடு தோன்றியதால் அது சக்தி ஸ்தலமாகும்.
திருமால் வணங்குவதற்காக காசியில் தோன்றியது விஸ்வநாத லிங்கம். திருமால் காக்கும் தொழில் செய்ய உதவுவதற்காக காஞ்சியில் தோன்றியது ஏகாம்பர லிங்கம். படைப்புத் தொழிலை மறந்த பிரமனுக்கு உதவ முதுகுன்றத்தில் தோன்றியது பூரணலிங்கம்.
திருமால், அசுரர்களை அழிக்க உதவும் பொருட்டு வேண்ட, சிதம்பரத்தில் தோன்றியது கருணை லிங்கம். திருமகளுக்கு வரம் கொடுக்கத் திருவாரூரில் தோன்றியது தியாக லிங்கம். பதினான்கு உலக உயிர்களுக்கும் நற்கதி நல்க மதுரையில் தோன்றியது சொக்கலிங்கம்.
இவை எல்லாவற்றுக்கும் மூலமானது இந்தத் திருமூல லிங்கம், அதன் அருகிலே பொற்றாமரை குளமும் உண்டு, மதுரையம்பதியில் இருப்பது போல் இங்கும் அப்படி ஒரு தீர்த்தம் உண்டு. அது இப்போதும் உண்டு.
திருமாலுக்கு சிவன் வரம்பல அருளிய ஆலயம் இது, திருமாலுக்கும் பிரம்மனுகும் தன் சிவநடனத்தை ஈசன் காட்டிய தலமும் இதுதான்.
திருகுற்றாலத்துக்குக் கிழக்காக, மதுரைக்குத் தெற்காக, சுசீந்திரத்துக்கு வடக்காக, திருசெந்தூருக்கு மேற்காக ஆக இவைகளுக்கு நடுவில் மிக முக்கியத் தலமாக திருமூலநாதர் அமர்ந்து அன்னை காந்திமதியுடன் அரசாட்சி செய்யும் தலம் இது.
இப்படி யுகம் யுகமாக வணங்கப்பட்ட திருமூல நாதர் ஆலயம் ஏதோ ஒரு காலத்தில் மண்ணால் மூடப்பட்டு போனது, அந்தப் பெரும் அழிவு தென்னகம் முழுக்க நடந்திருந்தது, ஆதிச்சநல்லூர் மூழ்கியது இன்னும் தேரிக்காடு பெரும் மண்ணால் மூடப்பட்டது, ஏதோ பிரளயம் நடந்திருக்கின்றது.
மண்டைக்காடு பகவதி மண் மூடப்பட்டு கிடந்தது போல் இந்த ஆலயமும் மண் மூடப்பட்ட காலம் இருந்தது, அப்போது அப்பக்கம் பால் கொண்டு செல்லும் ராம கோனார் என்பவரின் காலில் அடிக்கடி அந்த மூங்கில் தட்டி அவரின் பால் சிதறியதால் அலுத்துக் கொண்ட ராமகோனார் அந்த மூங்கிலை வெட்ட முயன்றார், அப்போது ரத்தம் பீறிட்டது.
அதிர்ந்த ராமக்கோனார் விஷயத்தை அப்போது ஆட்சி செய்த பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார், அப்போது நெல்லைக்குக் கிழக்கே இருக்கும் மணவை எனும் இடமும் பாண்டியரின் தலைநகராய் இருந்தது.
அந்த மன்னன் பெயர் ராம பாண்டியன், ராமபாண்டியனே ஓடி வந்து பலவகை பூஜைகளைச் செய்து சிவனைக் குளிர்வித்து அந்த மணலைத் தோண்டி ஆலயத்தை மீட்டெடுத்தான், அவன் யாகம் பல செய்தது சிவனை அதிகம் அதிகம் தேடியபோது சிவனே திருமூலநாதராக அமர்ந்து கொண்டார், ஆலயம் மீண்டும் வந்தது.
திருக்கடையூரில் எப்படி மார்கண்டேயனுக்காக சிவன் எமனை எட்டி உதைத்தாரோ அப்படிச் சுவேத முனிக்காக தன்னைப் பற்றிக் கொண்ட சுவேதமுனிக்காக சிவபெருமான் யமனை மிதித்த தலம் இது.
அதாவது ஆயுளை நீடித்து தரும் அற்புத தலம் இது.
துர்வாச முனியால் யானையாக மாறிய பாண்டிய மன்னன் இங்கு வழிபட்டு நீராடி கரி உருவினை மாற்றி மானிட உரு பெற்றான், அவன் சாபம் நீங்கிய தலம் இதுதான்.
முப்பத்திரண்டு தீர்த்தம் இங்கு இருந்தாலும் சிந்துபூந்துறை, பொற்றாமரை, பாதலங்கம்பை, கருமாரி, கூவம், தெப்பக்குளம், குறுக்குத்துறை, துர்க்கா தீர்த்தம், சர்வ தீர்த்தம் ஆகிய ஒன்பதும் மிக முக்கியமான தலங்கள்.
திருநெல்வேலிப் பதியில் ஒரு பிடி சோறு தானம் தந்தால், அது நூறு அசுவ மேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும். இப்பதியில் சிவனடியார்களுக்கு இலை போட்டு அன்னமிட்டால், அவர்களுடைய சந்ததியர் ஓராயிரம் ஆண்டுகள் அன்னக் கவலையின்றி வாழ்வர். அன்னச்சத்திரம் கட்டி அனைவருக்கும் தானம் செய்தால் ஆதிசிவன் அருகில் இருக்கும் பேற்றினைப் பெறுவர் என்பது ஈசனின் வாக்கு.
அப்படி நீலவண்ணன் எனும் திருடன் தான் திருடிய அன்னத்தில் ஒரு பங்கை இங்கு எளியவர்க்கு கொடுத்த காரணம் ஒன்றாலே பாவம் நீங்கிச் சிவனை அடைந்தான்.
இந்த ஆலயம் திருமூலநாதர் ஆலயம் எனக் கயிலாய வடிவாகவே வணங்கபட்டது, அது நெல்லையப்பர் எனப் பெயர்பெற காரணமான சம்பவம் சிவன் நடத்திய திருவிளையாடல். அதற்கு அவர் பயன்படுத்திய பக்தன் வேத சர்மா எனும் அந்தணன்.
அப்போது பெரும் பஞ்சம் பாண்டிய நாட்டில் நிலவிற்று, அப்போதும் அந்தப் பக்தன் வீடு வீடாக நெல்லை யாசித்துப் பெருமானுக்கு நைவேத்தியம் வைத்து வழிபட்டு வந்தார், அப்போது கிடைத்த கொஞ்சம் நெல்லை காயவைத்திருந்தார்.
அப்படிக் காயவைத்துவிட்டு அவர் சில காரணங்களுக்காக தூரமாக வனத்துக்குச் சென்றுவிட்டார், அப்போது பெரும் மழை கொட்டிற்று, அப்போது அந்தப் பக்தன் “சிவனே உனக்கான நெல் நனைந்துபோகுமே” எனக் கதறினார்.
அப்படி மிகுந்த அச்சத்துடன் பதற்றத்துடன் அவன் ஓடி வந்துபார்த்தபோது அந்த நெல் நனையவில்லை, அதற்கு மட்டும் வேலியிட்டு சிவன் காத்திருந்தார்.
இந்தத் திருவிளையாடலால் சிவன் இங்கு “நெல்லுக்கு வேலியிட்ட நெல்வேலி நாதர்” என்றானார், அதுதான் நெல்லையபப்ர் என்றும் அந்த இடம் “திருநெல்வேலி” என்றாயிற்று.
மதுரையினைப் போல திருவாரூரைப் போல இது மகா முக்கிய தலம், அகத்தியர் சூதமுனிவர் துவங்கி எல்லா ரிஷிகளும் எல்லாத் தேவர்களும் வந்து வணங்கிய தலம் இது.
பாண்டிய மன்னர்கள் இந்தத் தலத்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தார்கள். இங்குத் திருமூலநாதர் எனும் சிவனுக்கு நெல்லையப்பர் என ஆலயமும், காந்திமதி அன்னைக்கு தனி ஆலயமுமாக இரு பெரும் சந்நதிகளைக் கொண்டது.
தமிழக ஆலயங்களில் 17 ஏக்கரில் நிலை கொண்ட ஆலயம் இது, அப்படியே திருவாரூரில் உள்ளதுபோல் இந்தத் தேரும் பிரசித்தி.
மதுரை போல மாபெரும் ஆலயம் இது, அதன் சிற்பங்களெல்லாம் அற்புதமானவை, பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்த முக்கிய ஆலயம் இது, சேர மன்னர்களும் பாண்டியர்களும் நாயக்கர்களும் திருப்பணி செய்தார்கள் , அற்புதமான சிற்பங்கள் நிரம்பிய தலம் இது.
உலகின் பிரம்மாண்ட பிரகாரங்களும் மிக நுணுக்கமான சிலைகளும் இசைபாடும் தூண்களும் உண்டு, தாமிரபரணி கரையில் இருக்கும் தாமிரசபையும் இதுதான்.
நெல்லையில் இங்கு அந்த நாதனை வழிபட்டால் எல்லா நலமும் சூழும், நெய்விளக்கேற்றி வில்வம் சார்த்தி அர்ச்சனை செய்தால்
நல்வாழ்வு நிச்சயம்.
சிவபூஜை எப்போதுமே மிகுந்த பலனளிப்பது. திருமால் சிவபூஜை செய்து தான் காக்கும் தொழிலைச் செய்து வருகிறார். திருமகளையும் மனைவியாகப் பெற்றார்.
பிரம்மன் இங்குச் சிவபூஜை செய்து தான் படைப்புத் தொழிலைச் செய்து வருகிறான். கலைமகளை மனைவியாகப் பெற்றான். இந்திரன், குபேரன், எமன், வாயு, வருணன், அக்னி முதலிய தேவர்களும் சிவ வழிபாடு செய்து தான், தத்தமது தொழில்களைச் செய்து வருகின்றனர்.
சூரியனும், சந்திரனும் சிவ வழிபாடு செய்து தான், பகலும் இரவும் ஒளி வழங்கி கொண்டிருக்கின்றனர். அலைமகளும், கலைமகளும் சிவபூஜை செய்து தான், செல்வத்திற்கு அதிபதியாகவும், கல்விக்கு அதிபதியாகவும் விளங்குகின்றனர். அகத்தியர், வசிஷ்டர், வியாசர் முதலிய முனிவர்கள் பெற்ற சிறப்புகள் எல்லாம் சிவபூஜையால் பெற்றவையே.
மனு, அரிச்சந்திரன், நளன், இராமன் முதலிய சூரிய குளத்து மன்னர்களும், யயாதி, தருமன் முதலிய சந்திர குலத்து மன்னர்களும், சிவ பக்தர்களாக இருந்து சிவா வழிபாடு செய்ததாலேயே சிறப்பைப் பெற்றார்கள்.
எல்லாச் சிறப்பும் குணமும் சிவன் அருளால் கிடைக்கக் கூடியவை. சிவன் அருள் இல்லையெனில், இவற்றில் ஒன்று கூட கிடைக்காது. முப்பொழுதும் முக்கண்ணரை வணங்க வேண்டும். சிவ வழிபாடு இன்றி எதுவுமில்லை.
பிரதோஷம் அதில் முக்கியமானது.
இங்கு நந்தியின் பின்புறம் இருந்து, சோம சூத்திரம் வரை, உடலை அலட்டிக் கொள்ளாமல், கைகளைக் கட்டிக் கொண்டு, ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிற்குள் ஓதிக் கொண்டே நெல்லையப்பரை வலமாக ஒரு பிரதட்சணம் வந்தால், நூறு பிரதட்சணம் வந்த பலன் கிடைக்கும்.
பிரதோஷ காலத்தில் திருநீறு அணிந்து, உருத்திராட்ச மாலை போட்டு ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, கோவிலை வலம் வந்தால், பில்லி, சூனியம், பிசாசு, வறுமை, பிணி ஆகிய தொல்லைகள் இல்லை என்று அகலும்.
மாங்கல்யம், மகப்பேறு பாக்கியம் கிடைக்கும்.
இந்த ஆலயம் சேரர் பாண்டியர் கைகளில் மாறி மாறி இருந்தது, சுந்தரபாண்டியன் இங்குப் பெரும் ஆலயம் எழுப்பினான். பின்னாளில் சம்பந்தரால் குணமாக்கபட்டு சைவம் திரும்பிய கூன்பாண்டியன் எனும் நின்றசீர் நெடுமாற நாயனார் இங்கு மண்டபம் கட்டி வழிபட்டார்
இன்றும் சிவன் சந்நதிக்கு முன்னால் இருக்கும் மண்டபம் அவர் பெயரால் வழங்கப்படுகின்றது, உள்ளே சிவனுக்கு எதிரே அவரும் அவர் மனைவி மங்கையர்க்கரசி நாயனாரும் சிவனை வழிபட்டு சிலையாய் நிற்கின்றார்கள்.
ஜடாவர்ம சுந்தரபாண்டியன் இந்த ஆலயத்தை மிக முக்கியமானதாக கொண்டாடினான். மொகமதியர்கள் மதுரையினைத் தாண்டி வரவில்லை என்பதால் அவர்களிடம் சிக்காத ஆலயங்களில் இதுவும் ஒன்று.
( ஆனால் பின்னாளில் பிரிட்டிசாரிடமும் திராவிட கும்பலிடமும் சிக்கி நிறைய இழந்தது. அதன் முக்கியமான தெப்பகுளம் தீர்த்தமெல்லாம் சாலைகளால் பிரிக்கபட்டு இன்று நாசமாகிக் கிடக்கின்றது. )
அகத்தியர் முதல் அமாவாசை சித்தர் வரை எத்தனையோ சித்தர்கள் வழிபட்ட தலம் இது, வல்லநாடு சுவாமிகளின் பிரியமான தவக்கோல இடமும் இதுதான், மகா சக்திவாய்ந்தது.
நெல்லையின் அடையாளம் அல்வா என மாறிப்போய் இந்துக்கள் தலைகுனிந்து நிற்கும் காலமிது, நெல்லையின் முக்கிய அடையாளமே அகத்தியர் உருவாக்கிய தாமிரபரணியும் அவர் சிவனின் மணக்கோலம் கண்ட இந்த ஆலயமுமே ஆகும்.
வாய்ப்பு கிடைக்கும்போது இந்த ஈசனைக் காண தவறாதீர்கள், கயிலாயத்துக்கு ஈடான அந்த மூலலிங்கம் உங்களுக்கு எல்லா வரமும் தருவார், இன்னும் இங்கிருக்கும் குபேரலிங்கம் , சஹஸ்ர லிங்கம் என எல்லாமும் பிரசித்தியானவை.
அன்னை காந்திமதி சந்நிதி தனித்துவமானது, ஆறும்முக நயினார் சந்நகதி சக்திவாய்ந்தது.
கயிலாயத்தில் வழிபட்டால் என்னென்ன பலன் உண்டோ அதெல்லாம் இங்கும் உண்டு, இங்கு இன்றும் தேவர்களும் ரிஷிகளும் வந்து வழிபட்டு சிவனுக்குப் பூஜை செய்துகொண்டேதான் இருக்கின்றார்கள், மானிட கண்களால் அவைகளை காணமுடியாது என்பதால் அது இல்லை என்றாகிவிடாது.
தாமிரபரணி கரையோர ஆலயங்களில் மிக மிக முக்கியமானதும், சக்திவாய்ந்ததும், மகா தொன்மையானதுமானது இந்த ஆலயம்.
மகா ரிஷிகளும், தேவர்களும் வழிபடும் அந்த வேணுவனம் எனும் நெல்லையப்பர் கோவிலில் நீங்களும் வழிபடுங்கள், எல்லா வரமும் ஞானமும் செல்வமும் உங்களைத் தேடிவரும், கயிலாயப் பாக்கியமும் கிட்டும். இது சத்தியம்.